Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Thursday, June 29, 2017

படிக்க ஒரு நிமிடம் / ஒரு நொடி போதும். யோசிக்க ?.. (25)

Image result for cartoon image of father and son
"ஏன்டா .. கையில் பாட புக்கை வச்சுகிட்டு வாசலை பார்த்துகிட்டே எவ்வளவு நேரந்தான் உட்கார்ந்திருப்பே? அப்படி என்னதான்டா யோசனை?" என்று கேட்ட படி மகனின் தலையில் குட்டினார் அப்பா.
"முயற்சி மட்டும் இருந்தால் போதும். கடவுள் அருள் இல்லாட்டாலும் எதை யும் செஞ்சு முடிச்சிடலாம்னு ஒருத்தர் சொல்றார். 'எல்லாம் அவன் செயல்.. அவன் விளையாட்டுனு பக்கத்து வீட்டு அங்கிள் அடிக்கடி சொல்றார். அட .. சாமியாவது பூதமாவதுனு அண்ணா சொல்றார் .."
"அதுக்கு என்ன இப்போ ?"
"சாமியை நம்பாதவன் சாமி இல்லவே இல்லைனு சொல்றவங்க நிறைய பேர் இருக்காங்க. சாமி இருக்கிறரார்னு சொல்றவங்க கூட அவங்கவங்களோட  தேவைக்குதான் கும்பிடறாங்க. சாமி இல்லாமே மனுஷன் வாழ்ந்திடலாம். மனுஷங்க இல்லாமே சாமியாலே வாழ முடியுமானு யோசனை பண்ணிட்டு இருந்தேன்."
"ஏன் அப்படி ஒரு எண்ணம் வந்துச்சு ?"
"மனுஷங்களே இல்லாட்டா அவர் யாரை சோதிப்பார். யாருக்கு அவரோட அருளைக் கொடுப்பார். எல்லாம் என் திருவிளையாடல்னு யார்கிட்டே சொல்வார்.  நாம அதாவது மனுஷங்க யாருமே இல்லாட்டா கடவுளுக்கு ரொம்ப போரடிக்கும் தானே ?"
"நீயும் உன் சித்தாந்தமும் .. படிடா " என்று சொல்லி விட்டு வெளியில் கிளம்பி வந்தாலும், 'மனிதர்கள் இல்லாமல் கடவுளால் வாழமுடியுமா ? அவருக்கு போரடிக்குந்தானே!" என்ற கேள்வி அவரைக் குடைய ஆரம்பித்தது. யோசித்த படியே நடக்க ஆரம்பித்தார்.

Sunday, June 25, 2017

படிக்க ஒரு நிமிடம் / ஒரு நொடி போதும். யோசிக்க ?.. (24)

Image result for image of a indian father mother son and grandpa in cartoon
"என்னப்பா... நடக்கிறது பட்டிமன்றமா இல்லே விவாதமேடையா ?" என்று கேட்டபடி பேரனுடன் வீட்டுக்குள் நுழைந்தவரிடம், "அதெல்லாம் இல்லேப்பா  .. நம்ம அர்ஜுன்  ஃ ப்யூஷர் பத்தி பேசிட்டு இருந்தோம். சொஸைட்டியில் நாலு பேர் மதிக்கிறமாதிரி அவனை உருவாக்கி கொண்டு வரணும். அதுக்கு இப்பவே விதை போடணுமே .. ஒரு டாக்டர்..ஒரு கலெக்டர்.. ஒரு ஐ.பி.எஸ் ஆபீஸரா அவனை கொண்டுவரணும்" என்ற மகனிடம், "மூணு ரோலையும் ஒருத்தர் எப்படி பண்ண முடியும்?" என்று அப்பா கேட்க, "இதிலே ஏதாவது ஒரு ரோல் " என்றான் மகன்.
"உன் பிள்ளை ஒரு அரசியல்வாதியா வருவான்."என்று சொன்ன தந்தையை ஆச்சரியமாகப் பார்த்தான் மகன்.
"ஆமாம்டா.. நீங்க ஆசைப்படறது ஒரு பக்கம் இருக்கட்டும். விளையும் பயிர் முளையிலே தெரியும்னு சொல்வாங்க. இப்போ நாங்க கோயிலுக்குத்தானே போயிட்டு வரோம். எல்லா சன்னதி முன்னாலேயும் நின்னு  ஒரு கும்பிடு போட்டுட்டு அங்கிருந்து உடனே வெளியில் வந்த உன் பிள்ளை, ஆஞ்சநேயர் சன்னதியை விட்டு பிரிந்து வர மனமில்லாமே வந்தான். 'உனக்கு ஆஞ்சநேயர் மேலே அவ்வளவு பக்தியா'னு கேட்டதுக்கு, 'மத்த சாமியை எல்லாம் நாம்தான் கைகூப்பி கும்பிடறோம். ஆஞ்சநேயர் ஒருத்தர்தான் அவர் முன்னாடி நிக்கிற வங்களுக்கு வணக்கம் சொல்றார். அது எனக்குப் பிடிச்சிருக்கு.. நாம கும்பிடறது இருக்கட்டும். நம்மளை மத்தவங்க கும்பிடணும்னு சொல்றான். அதனால்தான் சொல்றேன் உன் பையன் ஒரு அரசியல்வாதியா வருவான் " என்று பெரியவர் சொல்ல மகனும் மருமகளும் யோசிக்க ஆரம்பித்தார்கள்.

Friday, June 23, 2017

படிக்க ஒரு நிமிடம் / ஒரு நொடி போதும். யோசிக்க ?.. (23)

Image result for watching tv pictures cartoons
"என்ன ராஜு ஸார்.. பயங்கர டல் மூடில் இருக்கிறீங்க ? என்ன பிரச்னை?"
"ஒரு பூஜைக்கு கோமியம் வேணும். அதுபத்தி பேச வழக்கமா எங்க வீட்டுக்கு பால் சப்ளை பண்றவர் வீட்டுக்குப் போனேன். அங்கே ஒரு பசுமாடு பிரசவ வழியில் துடிச்சுக்கிட்டு இருந்துச்சு. மனுஷங்கன்னா உடம்புக்கு என்ன பண்றதுனு சொல்லவாவது செய்வோம். பாவம் வாயில்லா ஜீவன். அது படற வேதனை கண் முன்னயே நிக்குது. பறவைங்க முட்டை போட்டு குஞ்சு பொரிக்கிற மாதிரி மிருகங்களுக்கும் முட்டை போடற வசதியை கடவுள் ஏன் செய்யலே? இதுதான் என் மனசுக்குள்ளே ஓடிட்டே இருக்குது?" என்றான் வருத்தமான குரலில்.
"மிருகங்கள் ஏன் முட்டை போடறதில்லேன்னு நாம யாரிட்டே கேட்க முடியும். யாரைக் கேட்டாலும் 'அது இயற்கை'னு ரெடிமேடா ஒரு பதில் சொல்வாங்க."
அதுவரை  அங்கு நடந்த உரையாடலை மட்டும் கேட்டுக் கொண்டிருந்த பியூன் "ஸார் இதெல்லாம் ஒரு மேட்டரா ? உங்க வீட்டு பசங்க கிட்டே கேளுங்க. நாம அசந்து போறமாதிரி ஒரு பதில் சொல்வாங்க" என்றான்.
அன்று இரவு வீடு திரும்பியபோது டீவி முன்பாக உட்கார்ந்து டிஸ்கவரி சேனல் பார்த்துக் கொண்டிருந்த மகனின் முதுகில் ஓங்கி ஒரு தட்டு தட்டி, "ஹோம் ஒர்க் எதுவும் இல்லியா?" என்று கேட்டவன், காலை நிகழ்ச்சி நினைவுக்கு வர, "கண்ணா.. பறவைங்க முட்டை போட்டு குஞ்சு பொரிக்கிற மாதிரி மிருகங்கள் செய்றதில்லையே அது ஏன் ?" என்று கேட்டான்.
"ஓ .. அதுவா டாடி.. குஞ்சு வெளியிலே வர முட்டை மேலே பறவைங்க உட்கார்ந்து இருக்கும்தானே. அந்த மாதிரி மிருகங்கள் உட்கார்ந்தா முட்டை உடைஞ்சிடுமே .. அதான் " என்று ரொம்பவும் கேஷுவலாக சொன்ன எல் கே ஜி படிக்கும் மகனின் பதிலைக் கேட்டு அசந்துபோய் நின்றான் ராஜு  

Sunday, June 18, 2017

Scanning of inner - heart ( Scan Report Number - 153)

     Image result for image of  meeting in cartoon               

                   பாதையை மாற்றிய பாடங்கள் ?!

"மிஸ்டர் செந்தில் .. வேறு ஏதாவது கேட்கணுமா ?" என்று நிருபரின் காதோடு மெல்லிய குரலில் கேட்டார் செக்ரெட்டரி.
"யெஸ் ஸார். இங்கு இருக்கிற நிறைய பேர் அவங்க இந்த ஹோமுக்கு வந்ததுக்கு அவங்க பிள்ளைங்கதான் காரணம்னு சொன்னாங்க. சிலர் அதுபத்தி பேசவே விரும்பலேனு சொன்னாங்க. ரெண்டு லேடீஸ் மட்டும் இந்த ஹோமுக்கு நாங்க வர காரணம் நாங்கதான்.. குழந்தைங்க விஷயத்தில் எங்களோட அணுகுமுறை, எங்க நடவடிக்கைதான் காரணம்னு சொன்னாங்க. மேற்கொண்டு அவங்க பிரச்னை பத்தி பேசுவாங்கனு எதிர்பார்த்தேன். ஆனா அவங்க வேறு எதுவும் சொல்லலே."
"ஆமாம்.. வத்சலா மாமி, ராதிகா மேடம் .. அவங்க ரெண்டு பேருந்தான் அப்படி சொன்னாங்க  ரெண்டுபேரும் இங்கு வந்தப்பறம் குட் பிரெண்ட்ஸ் "
"இந்த ஹோமில் பேட்டி .. குரூப் டிஸ்கஷனுக்கு உங்க கிட்டே பெர்மிஷன் கேக்கும்போதே "வற்புறுத்தி யாரையும் எதுவும் கேட்கக்கூடாது. அவங்க சொல்ல பிரியப்பட்டா சொல்லட்டும். நீங்க ஃ போர்ஸ் பண்ணிக் கேட்கக் கூடாதுனு எங்கிட்டே  சொல்லி இருந்ததாலே நான் அவங்க கிட்டே விவரம் கேக்கலே. அவங்க எந்த வகையில் காரணம்னு தெரிஞ்சுக்கணும். அவங்க கிட்டே தனியா பேச பெர்மிஷன் தரணும் " என்றான் செந்தில்.
"ஓகே..நோ ப்ராப்ளம் "  என்ற செக்ரெட்டரி எழும்பி நின்று  "உங்க எல்லாரோட கோஆப்ரேஷனுக்கு ரொம்ப நன்றி. நீங்க உங்க ரூமுக்குப் போகலாம்.  அப்புறம் வத்சலா மாமி, ராதிகா மேடம் .. நீங்க ரெண்டு பேரும் இங்கே இருங்க .. ஸார் உங்ககிட்டே பேசணுமாம்" என்றவர் அங்கிருந்து மற்றவர்களோடு சேர்ந்து வெளியேறினார்.
வத்சலா ராதிகா அருகில் வந்து உட்கார்ந்த செந்தில் "இந்த ஹோமுக்கு நீங்க வந்துசேர நீங்கள் எந்தவிதத்தில் காரணம்ங்கிறதை தெரிஞ்சுக்காட்டா என் தலை வெடிச்சிடும் " என்று சிரித்துக் கொண்டே சொன்னான்.
"அது ஒண்ணும் ராணுவ ரகசியம் இல்லே " என்ற அலட்சியமான பதில் வந்தது வத்சலாவிடமிருந்து.
"அப்படின்னா சொல்லலாமே .."
செந்தில் அப்படி சொன்னதுமே கொஞ்சம் கூட தயக்கமில்லாமல் "என்னோட பேரண்ட்ஸ், என்னோட தாத்தா பாட்டி எல்லாருமே என்னோட சின்ன வயசிலே  "வேண்டாம்னு எந்தவொரு  பொருளையும் தூக்கி எறியக்கூடாது. எல்லாமே எதோ ஒரு சமயத்தில் உதவும்னு சொல்லுவாங்க. மனுஷங்க ளையாகட்டும் .. ஒரு பொருளையாகட்டும் தூக்கி எறியறதுக்கு முன்னாலே ஒண்ணுக்கு நாலுமுறை நல்லா யோசனை பண்ணிப்பார்க்கணும்னு சொல்லுவாங்க.   எதையும் பாதுகாக்க சொல்லித் தந்தாங்க.. எங்க வீடுன்னு இல்லே. நிறைய வீடுகள்லே அதான் வழக்கம். கூல்ட்ரிங்க்ஸ் வாங்கிற பாட்டிலைக் கூட எங்க அம்மா நல்லா கழுவி சுத்தம் பண்ணி வெயிலில் காய வச்சு பத்திரமா எடுத்து வைப்பாங்க. நாங்க கிண்டல் பண்ணுவோம். வாசலில் வர்ற வியாபாரிங்க.. இல்லாட்டா வழியோடு போறவங்க வர்றவங்க .. பிச்சைக்காரங்க.. இப்படி யார் வந்து "குடிக்காத தண்ணி "னு கேட்டால் போதும். பத்திரப்படுத்தி வச்சிருக்கிற பாட்டிலை எடுத்து அது நிறைய தண்ணீர் ஊத்தி அவங்க கையில் கொடுத்து அனுப்புவாங்க. பழைய துணிகளை துவைச்சு இஸ்திரி போட்டு சுத்தம் பண்ணி வச்சிருப்பாங்க. எந்த வீட்டிலாவது குழந்தை  பிறந்திருக்குனு தெரிஞ்சா போதும். இந்த துணிகளைக் கொண்டு போய் கொடுப்பாங்க. பிறந்த குழந்தை அடிக்கடி யூரின் பாஸ் பண்ணும். தொட்டிலுக்குக் கீழே துணியைப் போட்டு வச்சா ஈரத்தை துணி வாங்கிக்கும்.. அதை அப்படியே  தூக்கி எறியலாம்னு சொல்வாங்க.  இப்படி ஒவ்வொண்ணும் .. ஐ மீன் .. ஒவ்வொரு பொருளும் மறுபிறவி எடுக்கும். இதை பைத்தியக்காரத் தனம்னு நாங்க கேலி பண்ணுவோம். எங்க குழந்தைகளுக்கு யூஸ் அண்ட் த்ரோ  என்று சொல்லி சொல்லியே வளர்த்தோம். இப்போ தேவை இல்லாட்டா உடனே தூக்கி எறி .. வீட்டுக்குள் குப்பையை சேர்க்காதே. அந்த பொருள் திரும்ப தேவையா இருக்கிறப்ப வாங்கிக்கலாம்னு ப்ரைன் வாஷ் பண்ணியே வளர்த்தோம். நாங்க சொல்லிக்கொடுத்த  பாடத்தை எங்க குழந்தைங்க எங்க கிட்டேயே திருப்பிட்டாங்க. குழந்தைங்க கையில் நாங்க குடுத்த அம்பு எங்களை குறிபார்த்துட்டுது. எங்களுக்கு வயசாகிடுச்சு .. எங்களால் ஒண்ணும் செய்யமுடியாதுனு நாங்க சொன்னதுமே, "எனக்கிருக்கிற டென்சனில் என்னாலே எக்ஸ்ட்ரா கேர் எடுத்து உங்களை பார்க்க முடியாது. உங்களை ஒரு நல்ல ஹோமில் சேர்க்கிறேன்னு என் புள்ளைங்க ரெண்டு பேருமே சொன்னாங்க.. உங்களுக்கு அந்த சிரமம் வேண்டாம்.. நாங்களே ஹோம் தேடிக்கிறோம்னு சொல்லி கிளம்பி வந்துட்டோம். நாங்க சொல்லிக்கொடுத்த "யூஸ் ஆகாட்டா தூக்கி எறி ஸ்லோகத்தை எங்களை வச்சு பாதுகாக்கிற விஷயத்திலேயும் குழந்தைங்க ஃ பாலோ  பண்ணிட்டாங்க.." என்று சொல்லி நிறுத்தினாள் வத்சலா. 
குறைபட்டுப் பேசும்போதுகூட அவள் குரலில் வருத்தமோ தடங்கலோ இல்லாததை நினைத்து ஆச்சரியப்பட்ட செந்தில் , "ராதிகா மேடம்.. உங்க அனுபவம்." என்று அடி எடுத்துக் கொடுத்தான்.
"நான் ஒரு ரிட யர்ட் டீச்சர்..ஸ்கூல் மாதிரியே வீட்டையும் வச்சிருந்தேன். என் ஹஸ்பேண்டும் ஸ்கூல் டீச்சர்தான்.. இறந்துபோய் மூணு வருஷம் ஆகுது. எங்க வீட்டில் ஆர்மி ரூல்ஸ்தான். என் குழந்தைங்க படிச்சு முடிச்சு வேலைக்குப் போக ஆரம்பிச்ச பிறகும்கூட என் கண்ணுக்கு அவங்க எல் கே ஜி பசங்க மாதிரிதான் தெரிஞ்சாங்க.. நான் சொல்றதை .. நான்னு மட்டும் இல்லே. வீட்டில் இருக்கிற பெரியவங்க என்ன சொன்னாலும் ஆர்க்கியூ  பண்ணாமே வாயை மூடிக்கிட்டு அவங்க சொல்றதைக் கேக்கணும் .உன் விளக்கம் எதுவும் தேவை இல்லைங்கிறதை சொல்லி சொல்லியே வளர்த்தோம். அவன் படிச்சவன். அவனுக்கும் ஒரு ஒபினியன்  இருக்கும். அதைக் காது கொடுத்து கேப்போம்னு நாங்க நினைச்சுகூடப் பார்க்கலே. அவங்களை நாங்க சுயமா எந்தவொரு முடிவையும் எந்த விஷயத்திலும் எடுக்க விடலே. யாரையும் எதுக்காகவும்  எதிர்த்துப்பேசாத வீட்டுக்கு அடங்கின பிள்ளைன்னு மத்தவங்க பாராட்டி பேசினப்போ பெருமையா இருந்துச்சு..கல்யாணம் ஆனதும் எங்க சம்பந்தி வீட்டினர் அவங்க வீட்டோடு வந்து இருக்க சொன்னப்ப சரினு சொல்லி தலையை ஆட்டிட்டு  என்னோட பெரிய பையன் கிளம்பிட்டான். ரெண்டாவது பையன் விஷயத்தில் நான் தலையிடவே இல்லை. உனக்கு எப்படி தோணுதோ எங்கே இருக்க தோணுதோ அங்கே போய் இரு. நான் ஹோம்க்கு போறேன்னு சொல்லிட்டு வந்துட்டேன் " என்றாள் ராதிகா டீச்சர்.
அவர்கள் இருவரும் பேசியதைக் கேட்ட செந்தில் " நம்மோட ஒரு சில செயல், சொல்லுக்கு இப்படியெல்லாம் பின்னாளில் ஒரு ரீயாக்க்ஷன் இருக்குமா!?" என்று தனக்குள் கேட்டுக் கொண்டான். அதே சமயம் "வச்ச செடி முள்ளானால் வளர்த்த கடா முட்ட வந்தால் போன ஜென்ம பாவம்டி அம்மாளு" என்ற பழைய சினிமா பாடல் வரிகள் நினைவுக்கு வர, அதை மனதில் அசை போட்டுக் கொண்டிருந்தான்.
ஒரு ஊசி கீழே விழுந்தால் அந்த சத்தம் கூட தெளிவாகக் கேட்கும் என்கிற அளவுக்கு  அங்கே  அமைதி சூழ்ந்திருந்தது. அதைக் கலைக்க வேண்டும் என்று யாருக்கும் தோன்றவில்லை. "வருகிறேன்" என்பதுபோல செந்தில் தலையசைக்க, "சரி" என்கிறமாதிரி இருவரும் தலையசைத்தார்கள் .    

Friday, June 16, 2017

படிக்க ஒரு நிமிடம் / ஒரு நொடி போதும். யோசிக்க ?.. (22)


Image result for image of old men in cartoon
"என்னப்பா .. செஸ்போர்டு முன்னாலே தனியா உக்காந்து சிரிச்சுக்கிட்டு இருக்கிறே. என்னனு சொன்னா நானும் சேர்ந்து சிரிப்பேனே " என்றபடியே வீட்டுக்குள் நுழைந்து தனது முன்பாக வந்து உட்கார்ந்த நண்பரிடம், "ஒண்ணுமில்லேப்பா .. இந்த ஜெனரேஷன் எதுக்கெடுத்தாலும் உங்க காலம் மாதிரின்னு நினைச்சீங்களானு ஒரு பட்டாஸைக் கொளுத்திப் போடறாங்க. நாம அப்போ மேனுவலா செஞ்ச அத்தனையையும் இன்னிக்கு மிஷின் செய்யுது. நம்ம வேலைபார்க்கிற காலத்தில் கூட்டல் கழித்தல் வேலையைப் பார்க்க கால்குலேட்டர் இருந்துச்சு. நம்ம அப்பாக்கள் காலத்தில் அதுவும் கிடையாது. எங்க தாத்தா கிராமத்து கணக்குப்பிள்ளை. எத்தனை பக்கம் கூட்டல் கணக்காக இருந்தாலும் மனசுக்குள்ளேயே எண்ணி எழுதுவார். இப்போ பிரிண்டரைத் தட்டிவிட்டு நூத்துக்கணக்கில் காப்பி எடுக்கலாம். அவர் காலத்தில் டைப் ரைட்டரில் பேப்பர் கார்பன் சொருகி மூணு மூணு காப்பியா ஒரே மேட்டரை மாறி மாறி டைப் பண்ணுவார். அதுக்குப் பின்னாலே வந்ததுதான் ஜெராக்ஸ் சமாச்சாரம். இன்னிக்கு மிஷின் பண்ற அத்தனை வேலையையும் அன்னிக்கு  தனி மனித உழைப்பு செஞ்சுது. இது தெரியாமே இந்த பசங்க பேசறதை நினைச்சா வேடிக்கையா இருக்குது. அதுக்காக இப்போ உள்ள தொழில்நுட்பம் எதையும் நான் குறை சொல்லலே. அதைக் கண்டுபிடிச்சு தந்தவங்க எல்லாருமே தெய்வப் பிறவிகள். எவனோ ஒருத்தன் தன்னை வருத்தி ரோடு போட்டு .. ஐ மீன் .. ரூட் போட்டுக் கொடுக்கிறான். டிராஃபிக் ரூல்ஸ் மட்டும் தெரிஞ்சு வச்சுக்கிட்டு அதிலே இவங்க ட்ராவல் பண்றாங்க.  பண்ணட்டும். அதுக்காக போன தலைமுறை எல்லாமே எதுவும் தெரியாதவங்கங்கிற மாதிரி பேசறாங்களே.. அதைத்தான் ஜீரணிக்க முடியலே. அதை நினைச்சு சிரிச்சேன்" என்று  விளக்கம் சொன்னார் வீட்டுக்குள் இருந்தவர்.

Monday, June 12, 2017

சாமீ எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி !

Image result for image of agitation

பிளாஸ்டிக் அரிசி விவகாரம் எங்கும் விவாதிக்கப்படுகிறது. இன்றைய எனது சந்தேகமே  அது சம்பந்தமாகத்தான் .
கொஞ்சநாளைக்கு முன்பாக டீவியில் பார்த்த ஒரு காட்சி. இந்திய மாநிலம் ஒன்றில் பிளாஸ்டிக் அரிசி விற்பது தொடர்பான ஒரு காட்சி. பிளாஸ்டிக் அரிசியில் சமைத்த சாதத்தை சிறு உருண்டையாக உருட்டி அதை கீழே போட்டால் அந்த உருண்டை பந்து போல் துள்ளும் என்ற படமும் செய்தியும் பார்த்தேன்.
தமிழக அதிகாரி ஒருவர் சொன்னதாக ஒரு தகவல் டீவியில் வெளியானது. அதில் அவர் பிளாஸ்டிக் அரிசி கொதி நீரில் கரைந்து விடும் என்று சொல்லி இருந்தார்.
இப்போ உதாரணமா ஒன்றை பார்ப்போம். எல்லாமே பிளாஸ்டிக் அரிசியாக இருந்தால் அது கரைந்து விடும். அது பற்றிய உண்மைத் தன்மையை நாம் அறிந்து கொள்ள முடியும்.
ஆனால் 100 கிராம் அரிசியில் 10 கிராம் பிளாஸ்டிக் அரிசி கலந்துள்ளது என்று வைத்துக் கொள்வோம். சமைக்கும்போது  பிளாஸ்டிக் அரிசி மட்டும் கரைந்து போயிருந்தால், தண்ணீர் சற்று அதிகமாகிவிட்டது போலும் என்று நினைத்துக் கொண்டு  அதை சாதத்தின் கஞ்சி என்றுதான் நினைப்போம். அப்படியிருக்க பிளாஸ்டிக் அரிசியைக் கண்டுபிடிப்பது எப்படி?
இரண்டு மாதம் முன்பாக எங்கள் வீட்டு குக்கர் சாதத்தில் தண்ணீர் அதிகம் கட்டி இருந்தது. அதை வடித்து எடுத்துவிட்டு சாப்பிட்டோம். அன்று கவனக் குறைவாக தண்ணீர் அதிகம் வைத்தது எனக்கு நன்கு புரிந்தது.
ஆனால் இனியொரு முறை அப்படி நடந்தால் அதை எனது கவனக்குறைவாக நினைக்க மனம் இடங்கொடுக்காது. சமைத்தது பிளாஸ்டிக் அரிசியோ என்ற பயம் ஏற்படும்.
அதனால் இது விஷயத்தில் தெளிவான தகவலை யாராவது தெரிவிக்க எனது இருகை கூப்பி உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
இந்தமாதிரி வேலை செய்கிறவர்களை தயவு தாட்சண்யம் பார்க்காமல் நடுரோட்டில் நாயை அடிப்பது போல் அடிக்க வேண்டும். 
(பழந்தமிழ்ப் பாடல் ஒன்றில் உள்ள அவலச்சுவை கொண்ட நகைச்சுவை வரிகள் : வறுமையால் வாடும் புலவர் சொல்கிறார் : 
கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான் 
குடிக்கத்தான் கற்பித்தானா?
இல்லைத்தான் பொன்னைதான் எனக்குத்தான் 
கொடுத்துதான் ரட்சித்தானா?)
நாட்டில் மழை என்பது நிறைய பேருக்கு மறந்து போய்விட்டது.
விவசாயம் பொய்த்து விட்டது. ஏழைகள் மட்டுமல்ல பணக்காரர்கள் நிலையும் அரிசி விஷயத்தில் என்ன ஆகுமோ என்ற கவலை எல்லாருக்குமே இருக்கிறது. 
இதுபற்றி தீவிரமாக சிந்தித்த யாரோ ஒரு பைத்தியக்கார பொதுநலவாதிதான் மக்கள் மண்ணை கல்லை தின்பதற்குப் பதில் பிளாஸ்டிக் அரிசியை தின்னட்டும் என்ற நல்லெண்ணத்தில் (???!!!!!)  பிளாஸ்டிக் அரிசியை உற்பத்தி செய்து கொண்டிருக்கிறானோ ? 


Sunday, June 11, 2017

படிக்க ஒரு நிமிடம் / ஒரு நொடி போதும். யோசிக்க ?.. (21)

Image result for image of indian mother and son  in cartoon
"இப்போ கார் என்னத்துக்குடா ? அதான் உங்க கம்பெனியிலே அரேஞ்ச் பண்ணித் தந்திருக்காங்களே. காருக்குப் போடற பணத்தை ஏதாவது நிலத்தில் போடுடா"
"அம்மா, ஐ.டி கம்பெனி ஜாப் அந்தரத்தில் கயிறு கட்டி ஆடற ஊஞ்சல் மாதிரிதான். அப்படியே நிரந்தரமா ஆட முடியுமா இல்லாட்டா எப்போ வேணும்னா கீழே விழுமானு யாராலயும் கணிச்சு சொல்ல முடியாது. எப்போ வெளியே போக சொல்வாங்கனு யாருக்கும் தெரியாது. இன்னிக்கு கையிலே கிடைக்கிறது பலாப்பழமா இருக்கும். நாளைக்கு இலந்தைப் பழத்துக்குக் கூட வழியில்லாமல் தெருவில் நிக்கிற நிலை வரலாம். கையிலே காசு இருக்கிறப்ப ஒரு காரை வாங்கி வச்சுட்டா நாளைக்கு வேலை போனால்கூட கால்டாக்சி ஓட்டி பிழைச்சுப்பேனே. அட்லீஸ்ட் அக்கம்பக்கத்து வீட்டு குழந்தைங்களை ஸ்கூலில் கொண்டுபோய் விடற வேலையைப் பார்த்தால் அது நமக்கு ஒரு இன்கம் தானே!" என்று ரொம்பவும் காஷுவலாக சொல்லிவிட்டு கிளம்பினான் மகன்.
அவன் சொன்ன வார்த்தைகள் தாயின் மனசுக்குள் ஒரு பாரத்தை ஏற்றி வைத்தாலும். எந்த சூழ்நிலையிலும் உழைச்சு வாழுகிற மனநிலை அவனுக்குள் இருப்பதை நினைத்து பெருமிதமும் கூடியது.

Thursday, June 08, 2017

படிக்க ஒரு நிமிடம் / ஒரு நொடி போதும். யோசிக்க ?.. (20)


Image result for image of people walking in a park in cartoon
"என்ன சிந்தனை?" என்று கேட்ட நண்பரிடம், "அநேக குடும்பங்கள்.. வீடுகளில்.. அதாவது நூத்துக்கு தொண்ணுத்திஒன்பது வீடுகளில் வசதி   இருக்கு. ஆனா சந்தோசம் .. நிம்மதி இல்லையே. அது ஏன்னு யோசிச்சிட்டு இருந்தேன்" என்றார் மற்றவர்.
"அதை யாரும் எதிர்பார்க்கலே .. வேணும்னு நினைக்கலே. வேணும்னு நினைச்சிருந்தா அதைக்கொண்டுவர முயற்சிபண்ணி இருப்பாங்கதானே ?" என்ற பதில் விரக்தியான குரலில் வந்தது மற்றவரிடமிருந்து.
"என்ன சொல்றே ?"
"எல்லாருமே வீட்டுக்குக் காட்டற அக்கறையை குடும்பத்தில் காட்டற தில்லே."
"ரெண்டும் ஒண்ணுதானே ?"
"அப்படியா ? உனக்கு பத்திரிகை ரிப்போர்ட்டர் வேலை பார்த்த அனுபவம் உண்டுதானே..இப்ப இந்த பார்க்கில் நிறையபேர் நடைப்பயிற்சி பண்ணி ட்டு  இருக்காங்க.. ஒவ்வொருத்தர் கிட்டேயும் "என்ன இருந்தால் உங்க வீடு.. குடும்பம் சந்தோஷமா இருக்கும்னு அவங்ககிட்டே கேட்டுப்பார்.. நானும் உன்னுடனே  யே வர்றேன்."
நண்பர்கள் இருவரும் அங்கிருந்தவர்களை கேள்வி கேட்டார்கள்.
அவர்களுக்கு கிடைத்த மெஜாரிட்டி பதில் : சொந்தமா வீடு இருக்கணும். கார் இருக்கணும்..வெளிநாட்டில் வேலைகிடைக்கணுங்கிற ரீதியில்தான் இருந்தது.
இருவரும் பழைய இடத்துக்கே வந்து உட்கார்ந்தார்கள்.
"இங்குள்ள எல்லாரையும் கேள்வி கேட்டோம். ஒருத்தராவது "என் பிள்ளைங்க நல்ல சிட்டிசன் ஆக வரணும். எங்க அம்மா அப்பா நல்லா இருக்கணும். நோய்நொடி இல்லாமே இருக்கணும் .. ஒளிவு மறைவு இல்லாமல் எதையும் பேசித்தீர்க்கும் பக்குவம் எங்க வீட்டினருக்கு இருக்கணும்னு சொன்னார்களா ? இல்லையே...வீட்டுக்குத் தேவையான பொருட்கள் .. வசதி வாய்ப்புகளில் காட்டற அக்கறையை யாரும் வீட்டு மனிதர்களிடம் குடும்பத்தினரிடம் காட்டறதில்லே. இன்னும் சொல்லப் போனால் அதைப்பத்தி நினைச்சு கூட பார்க்கிறதில்லே. பிறகு சந்தோசம் நிம்மதி எங்கிருந்து வரும் ? காரையும் வீட்டையும் கட்டிப்பிடிச்சுக்கிட்டு அழட்டும். நிறைய பேர் அவங்க வீட்டை அவங்க தங்குகிற இடமா மட்டுந்தான் பார்க்கிறாங்க. உறவுகள் சேர்ந்து வாழுகிற இடமா நினைச்சு பார்க்கலே ! " என்றார் விரக்தியுடன்.

Wednesday, June 07, 2017

ஓ பாட்டி நல்ல பாட்டி தான் - 06

Image result for image of angry old lady in cartoon
"என்னங்க.. உங்க அம்மா நேத்து ராத்திரியே  சாப்பிட்டலே. கேட்டதுக்கு வயிறு சரியில்லேனு சொன்னாங்க. இப்ப இன்னும் ரூமை விட்டு வெளியே வரலே.  நீங்க போய் என்ன ஏதுன்னு விசாரியுங்களேன்.எங்கிட்டே அவங்க எதையும் சொல்ல மாட்டாங்க " என்று மனைவி சொல்ல, "ஏன்.. நேத்து ஏதாவது பிரச்னையா ?" என்று கேட்டார் கணவர்.
"அதெல்லாம் ஒண்ணுமில்லே.. ரொம்ப வருஷத்துக்குப் பிறகு என் பிரென்ட் மாலினி இங்கே வந்திருந்தா.. மத்தபடி எல்லாம் ஆஸ்-யூசுவல்"
"அவங்க வந்ததை நேத்து சொல்லவே இல்லை. பார்த்து எவ்வளவு வருஷம் ஆச்சு. எப்படி இருக்காங்க. வெளிநாட்டு அனுபவம் எப்படி இருக்கிறதாம் ?"
"நேத்து நீங்க வீட்டுக்கு வர்றச்சே ராத்திரி மணி பன்னிரண்டு. அந்நேரம் இதை சொல்லிட்டு இருந்தா மத்தவங்க தூக்கம் கெட்டுடும் .. அதான் சொல்லலே.. நீங்க முதல்லே உங்க அம்மாவை விசாரியுங்க " என்று மனைவி சொன்னதும் அம்மாவின் ரூமுக்கு சென்றவன் "என்னம்மா .. உடம்புக்கு முடியலையா? வழக்கமா எங்களுக்கு முன்னாடி எழும்பி டீவி பார்த்துட்டு இருப்பே .. இன்னிக்கு இன்னமும் பெட்டை விட்டு இறங்கலியே " என்று கேட்டார்.
"ஆமா..டீவி பார்த்தால் அதை ஸ்டைல்னு சொன்னாலும் சொல்லுவாங்க "
"அப்படிக்கூட யாராவது சொல்லுவாங்களா? சும்மா கற்பனை பண்ணிக்காதே "
"ஆமாம்டா .. என்னை குறை சொல்லியே பழகிட்டீங்க.  உன் பொண்டாட்டிக்கு தெரிஞ்ச வெளிநாட்டுக்காரி ஒருத்தி நேத்து நம்ம வீட்டுக்கு வந்திருந்தாள். அவ மூச்சுக்கு முன்னூறு முறை என்னிடம் "பெரியம்மா.. ஸ்டைல் பண்ணாதீங்க."னு சொன்னாடா . வாலிப வயசிலேயே ஸ்டைல்னா என்னனு எங்களுக்குத் தெரியாது. வயசான காலத்திலா அந்தக்கழுதையை பண்ணப் போறோம். மூச்சுக்கு முன்னூறு தடவை  ஸ்டைல் பண்ணாதீங்கனு  சொன்னா .. புதுசா வந்தவ கிட்டே என்ன வம்புனு பேசாமே இருந்துட்டேன்." என்று அம்மா சொல்ல, "ஏய் என்னடி இதெல்லாம்?" என்று கணவன் போட்ட கூச்சலில் அங்கு ஓடி வந்தாள் மனைவி.
அம்மா சொன்னதை அப்படியே மனைவியிடம் சொல்லி "இதுக்கு என்னடி அர்த்தம்?" என்று கோபமாக இரைந்தார் கணவர்.
ஒரு நொடி யோசனையில் ஆழ்ந்த மனைவி பெரிதான குரலில் சிரித்தாள்.
கணவனின் முறைப்பைக் கண்டதும் "அம்மாதான் அப்படி சொன்னா, நீங்க கொஞ்சம்கூட யோசிக்காமே நம்பிடுவீங்களா? அவ எதுக்கெடுத்தாலும் "ஸ்ட்ரைன் பண்ணிக்காதே"னு என்னையே சொல்லுவா. அதைத்தான் அம்மா கிட்டேயும் சொல்லி இருப்பா.. அவ   ஸ்ட்ரைன்னு சொல்றதை உங்க அம்மா ஸ்டைல்னு புரிஞ்சுக்கிட்டாங்க." என்று சொல்லிவிட்டு மீண்டும்  சிரிக்க ஆரம்பித்தாள். அந்த சிரிப்பில் கணவனும் கலந்து கொள்ள ஒன்றும் புரியாமல் விழித்த அம்மாவிடம்  ஸ்ட்ரைன்  ஸ்டைல் இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் பற்றி பாடம் எடுக்க ஆரம்பித்தார் மகன்.

Monday, June 05, 2017

ஓ பாட்டி நல்ல பாட்டி தான் - 05

Image result for image of old lady with a young girl
பக்கத்துக்கு வீட்டுப்பெண், "ஆன்ட்டி " என்று கூப்பிட்டுக் கொண்டே உள்ளே வர படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்த பாட்டி, "அன்னிக்கு நீயும் உங்க அப்பாவும் படிப்பு விஷயமா வெளியூருக்குக் கிளம்பி போனீங்களே. என்னம்மா ஆச்சு ?" என்று கேட்க, "எனக்கு இடம் கிடைக்கலே" என்று பதில் சொன்னாள் அந்தப் பெண். 
"அடக்கடவுளே, காலைலே அம்புட்டு சீக்கிரமா கிளம்பிப்போயும் இடம் கிடைக்கலேன்னு சொல்லுதே. அப்படின்னா மத்தவங்க எல்லாரும் முந்தின நாள் ராத்திரியே வந்து இடம் பிடிச்சிட்டாங்களா? " என்று பாட்டி கேட்டாள் .
"அப்படி இல்லே பாட்டி .. ஒவ்வொரு படிப்புக்கும் இத்தனை ஸீட் , இடம்னு ஒரு கணக்கு வச்சிருப்பாங்க. அதை தாண்டி போயிட்டா யாருக்கும் படிக்க இடம் கிடையாது " என்றாள் அந்தப்பெண்.
"அட சண்டாளனுகளா .. எல்லாருமே உட்காந்து  படிக்கிறாப்லே நிறைய சீட் போடறதுதானே. இதுவே எங்க கிராமத்துப் புள்ளைங்கன்னா  பெஞ்சில் இடம் இல்லாட்டி கீழே உட்காந்து கூட படிக்குங்க. நீங்கள்லாம் பட்டணத்து புள்ளைங்க. கீழே உட்கார கூச்சப்படுவீங்க. அப்படி இருக்கக் கூடாது பாப்பா. பெஞ்சிலே உட்கார்ந்து படிக்க இடம் இல்லாட்டி கீழே உட்காந்து படிக்கேன்னு  நீ சொல்லணும். நமக்கு படிப்பு தானே முக்கியம். எங்கே உட்காந்து படிக்கோம் என்கிறதா முக்கியம்?" என்று பாட்டி சொல்ல, "ஓ... கடவுளே " என்று தலையில் கைவைத்தபடி சோபாவில் உட்கார்ந்தவள், "ஆன்ட்டி..உள்ளே என்ன வேலை செய்யறீங்க? சீக்கிரமா வந்து என்னைக் காப்பாத்துங்க " என்று ரகசிய குரல் கொடுத்தாள்.

Sunday, June 04, 2017

ஓ பாட்டி நல்ல பாட்டி தான் - 04

Image result for image of old lady of tamilnadu
மருமகள்: அத்தை .. குழந்தைகளுக்குப் பாடம் எடுத்துகிட்டு இருக்கிறேன். அந்த அடுப்பைக் கொஞ்சம் ஆஃப் பண்ணிடுங்களேன்.
சற்று நேரங்கழித்து மருமகள் : அத்தை அடுப்பை ஆஃப் பண்ணுனீங்களா.. எதோ வாசனை வருது.?’
பாட்டி: பண்ணுனேனே..நீ சொன்னதுமே எந்திரிச்சிப்போய் அணைச்சிட்டு தா வந்தேனே. வாயாலே ஊதிப்பார்த்தேன். அணையலே. கையிலே கொஞ்சூண்டு தண்ணிய எடுத்து அது தலைலே தெளிச்சேன். உடனே பட்னு அணைஞ்சுதே.. அதுக்குப்   பொறகு எரியலே. நான் நல்லா பார்த்துட்டுதானே வந்தேன்.
இதைக் கேட்டபின் ‘அடக் கடவுளே’ என்றபடி சமையலறைக்கு எழுந்து ஓடுகிறாள் மருமகள்.

Saturday, June 03, 2017

படிக்க ஒரு நிமிடம் / ஒரு நொடி போதும். யோசிக்க ?.. (19)

Image result for image of fire accident of chennai silks
"அரச மரத்து பிள்ளையாரைப் பிடிக்க வந்த "சனி", அரச மரத்தையும் சேர்த்து பிடிச்சுதுனு சொல்லுவாங்க. அது சரிதான் போலிருக்குது " என்று அம்மா சொல்ல, "என்னம்மா?!" என்று கேட்ட மகனிடம் " இந்த சென்னை சில்க்ஸ் தீப்பிடிச்சு எரிஞ்சதைத்தான் சொல்றேன். உங்க தாத்தா அடிக்கடி சொல்வார். ஆண்டவன் நொடிப்பொழுதில் எந்தவொரு கணக்கையும் மாத்தி அமைச்சிடுவான்னு. அது சரிதான். கடை எரிஞ்சது வேறே விஷயம். அதை நம்பி எத்தனை குடும்பங்கள் அங்கே வேலை பார்த்துட்டு இருந்திருப்பாங்க. நொடிப்பொழுதில் அவங்க நிலைமையே தலைகீழா மாறிப்போச்சே. ஸ்கூல் திறக்கிற நேரம் வேறே. வேலை பார்த்தவங்க மட்டுமா? எத்தனை துணி ஏஜென்சிங்க .. பாரம் தூக்கிறவங்க..வண்டி ஓட்டறவங்க...ச்சே. எத்தனைபேர் பாதிக்கப்பட்டு இருக்கிறாங்க. அக்கம் பக்கத்து கடைக்காரங்க தங்களோட பொழைப்பை பார்க்க முடியலே. தெரு வியாபாரிங்க... அதுஇதுனு ரெண்டு நாள் வியாபாரம், பொழைப்பு போச்சுதானே!" என்றவளிடம் "அம்மா ..அவங்களை நினைச்சு ரொம்ப பீல் பண்ணாதீங்க. அரசமரம் மட்டுமில்லே... நாம அத்தனை பேரும்தான் பாதிக்கப்பட்டு இருக்கிறோம்." என்ற மகனிடம் "என்னடா சொல்றே ?" என்று கேட்டவளிடம், "கட்டிடத்தை இடிக்க முன்னாடி அங்கே கொட்டறது க்காக லாரி லாரியா கல்லு மண்ணு கொண்டு வந்து இறக்கி இருக்கிறாங்க. அதற்கான விலை. வேலை செய்றவங்க கூலி லொட்டு லொசுக்கு செலவு எல்லாமே யாரோட பணம் ? அரசாங்க பணம். அதாவது நம்ம வரிப்பணம். அதை இப்படி தண்ட செலவு பண்ணிட்டு, பட்ஜெட்டில் விழுற துண்டு வேட்டி சட்டை இதை எல்லாம் சரிக்கட்ட எலெக்ட்ரிக் பில், தண்ணீர் வரி, பஸ் கட்டணம்ன்னு ஒவ்வொண்ணையும் ஏத்தி விடுவாங்க. இதுதானே காலங் காலமா நடந்துட்டு வருது. எலும்புத்துண்டை வீசினா போதும் சட்டத்துக்கு புறம்பா எந்த வேலையையும் செய்ய ஆளுங்க இருக்கிறாங்க. எலும்புத்துண்டை வீசினவன், அதைக் கவ்வி பிடிச்சவன் இவங்க ரெண்டு பேருக்கும் ஆதாயம். பின்னாடி பிரச்னைனு வரும்போது அது ஒட்டு மொத்த சமுதாயத்துக்கும் தண்டனை. அதான் சொல்றேன். அரச மரத்து பிள்ளையாரைப் பிடிக்க வர்ற சனி, அரச மரத்தை மட்டுமல்ல அத்தனை குடும்பங்களையும் சேர்த்துதான் பிடிக்குது!" என்று விவரம் சொன்னான் மகன்.

Friday, June 02, 2017

ஓ பாட்டி நல்ல பாட்டி தான் - 03

Image result for image of indian old lady
வீட்டில் எல்லோரும் டீவியில் சீரியல் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். சுவாரஸ்யமான வில்லங்கத்தனமான காட்சி ஒன்று திரையில்   ஓடிக்கொண்டிருக்கிறது. நல்லவள் வேடத்தில் அந்த வீட்டுக்குள் நுழைந்து விட்ட  வில்லியின் சுயரூபம் தெரியாமல் அவளை நம்புகிறார்கள். அவளோ கூட இருந்தே  எல்லாருக்கும்   குழி பறித்துக்கொண்டு இருக்கிறாள்.
(டீவியைப் பார்த்தபடியே)
மருமகள்: சரியான லூசு இதுங்க. அவ எப்படி பட்ட ஆளுங்றது கூட தெரியாமே எல்லாத்தையும் அவகிட்டே உளறிக்கொட்டிட்டு  மாட்டிட்டு லோல் படுதுங்க .  
மகள்: அந்த அளவுக்கு அவ நல்லவ மாதிரி ஆக்ட் குடுத்து எல்லாரையும் நம்ப வைக்கிறா.
பாட்டி: இவதான் வேண்டாத வேலை அம்புட்டையும் செய்தானு இங்கே.. டீவிக்கு வெளியிலே  இருக்கிற நமக்கே தெரியுதே. அவங்க எல்லாரும் டீவிக்கு உள்ளே  ஒரே இடத்திலதானே சேர்ந்து இருக்காங்கம்மா. அப்படி யிருக்கச்ச நம்மளுக்கே தெரிஞ்ச ஒண்ணு   அவங்களுக்கெல்லாம் எப்படிம்மா  தெரியாமே போச்சு.
(இதைக் கேட்டு அனைவரும் சிரிக்கிறார்கள்)