Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, March 28, 2014

Scanning of inner - heart ( Scan Report Number - 108 )

                                       காலம் மாறிப் போச்சு !!
"மம்மீ, முடிவெடுக்க வேண்டியது நீங்க. என்னடி பண்றதுங்கிற மாதிரி என் முகத்தைப் பார்த்து என்னை டென்ஷன் பண்ணாதீங்க. சாய்ஸ் இஸ் யுவர்ஸ். அஞ்சு நிமிஷம் டைம் தர்றேன் . போகலாமா வேண்டாமான்னு டிசைட் பண்ணுங்க. நீங்க ஓகே சொன்னா பங்க்ஷனுக்கு அழைச்சிட்டுப் போறேன். " நோ " சொன்னீங்கன்னா நான் வெளியே கிளம்பிப் போயிட்டே இருப்பேன். யோசனை பண்ணுங்க. நான் மெயில் செக் பண்ணிட்டு வந்துடறேன் " என்று சொல்லிவிட்டு அறைக்குள் புகுந்து கதவைத் தாளிட்டுக் கொண்டாள் ஷாலு.
ஒன்றல்ல இரண்டல்ல, இருபத்தொரு வருட தனி வாழ்க்கை.. தன்னைத் தானே சிறைக்குள் பூட்டிக் கொண்ட ஜெயில் வாழ்க்கை. தெரு முனை எப்படி இருக்கும். பக்கத்து வீட்டு முகப்பு எப்படி இருக்கும் என்பது கூட தெரியாத அளவுக்கு ஒரு " மறைமுக " வாழ்க்கை. இத்தனை வருடம் கட்டிக் காத்த இந்த வைராக்கியத்தை விட்டு விட்டு வெளியில் வந்துதான் ஆக வேண்டுமா என்று மனதுக்குள் ஓராயிரம் கேள்விக் கணைகள். எதற்குமே பதில் தெரியாத நிலையில் இருந்தாள் ரேவதி.
உறவும் நட்பு வட்டங்களும் அவளை " நவீன காந்தாரி " என்று உரிமையோடு கிண்டல் செய்த போதுகூட அதைப் பற்றியெல்லாம் கவலைப் படவே இல்லை ரேவதி. கணவனால் காண முடியாத இந்த உலகத்தை நான் மட்டும் ஏன் கண்டு கொள்ளவேண்டும் என்ற வைராக்கியத்தில் தனது கண்களை தானே மூடி மறைத்துக் கொண்ட காந்தாரி மாதிரி, என் புருஷன் மீது அநியாயமாக பழி போட்டு அவரை தற்கொலைக்குத் தூண்டிய இந்த உலகத்தோடு எனக்கென்ன உறவு வேண்டிக் கிடக்கிறது என்ற வைராக்கியத்தில் தன்னை தானே தனிமை சிறையில் பூட்டிக் கொண்டாள் ரேவதி.
கணவன் ராஜேஷ் தூக்கில் தொங்கியதை முதலில் பார்த்து அலறியது ரேவதிதான். அந்த கோலத்தை எத்தனை யுகங்கள் ஆனாலும் அவளால் மறக்க முடியாது. அவன் வேலை பார்த்த நிறுவனமே ' இந்த அளவுக்கு அவசர முடிவு எடுத்திருக்க வேண்டாம் ' என்று முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு சொன்னது இன்றுவரை கூட நினைவில் இருக்கிறது . 
அவனவன் பொதுப் பணத்தைக் கோடிகோடியாகக் கொள்ளையடிச்சிட்டு புது மாப்பிள்ளை மாதிரி போஸ் குடுத்துக்கிட்டு போலீஸ் வேனில் ஏறி உட்கார்ந்து  மீடியா ஆட்களுக்கு ' டாட்டா ' காட்டிட்டு போறான். வேலை செய்ற இடத்தில்  ஒரு பிரச்சினை. இவன் பொறுப்பில் இருந்த ஒரு லட்சம்  காணாமே போயிட்டுது. அது எப்படி நடந்திருக்கும்னு யோசனை பண்ணி கண்டு பிடிக்கிறதை விட்டுட்டு, 'உன் பொறுப்பிலுள்ள பணம் உனக்குத் தெரியாமே கால் முளைச்சா நடந்து போச்சு. ஏதாவது அவசரத் தேவைக்காக அதை நீயே  எடுத்திருந்தால் உள்ளதை சொல்லிடு. அதை வேறே வழியில் நான் ரெகவர் பண்ணிக்கிறேன். அதை விட்டுட்டு எப்படி காணாமே போச்சுன்னு தெரியலைன்னு  சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லி என்னை முட்டாளாக்காதே. 24 மணி நேரம் கெடு தர்றேன். அதற்குள் பணம் தராவிட்டால் போலீசுக்குப் போவதைத் தவிர வேறு வழியில்லை. முடிவு உன் கையில்தான்' என்று பாஸ் சொன்ன ஒரே ஒரு வார்த்தைக்காக  உயிரை விட்டவன் ராஜேஷ். அப்புறம் அந்த பணக்கட்டு டேபிள் டிரா  இடுக்கில் மாட்டிக் கொண்டிருப்பது மூன்று நாட்களுக்குப் பிறகு கண்டு பிடிக்கப்பட்டது எல்லாம் வேறு விஷயம். அந்த மூன்று நாட்களும் இறந்து போனவனை நினைத்து அழுததைவிட அக்கம்பக்கத்து வீட்டினரின்  கேலிக்கும் விமரிசனத்துக்கும் ஆளாகி அழுததுதான் அதிகம். கேலி பேசிய அதே வாய், மூன்று நாட்களுக்குப் பிறகு உண்மை தெரிந்ததும், ' இப்படி அநியாயமா ஒரு உயிர் போச்சே ' என்று ஒப்பாரி வைத்து விட்டுப் போனது. அப்போது எடுத்த முடிவுதான் இந்த தனிமை சிறை வாழ்க்கை. வீட்டுக்குள் நியூஸ் பேப்பர் வராது. டீவீ யா ? அது எப்படி  இருக்கும் என்ற கேள்வி கேட்கும் நிலையில்தான் இருந்தாள் ரேவதி. ராஜேஷ் இறக்கும் போது ஷாலுவுக்கு ஒரு வயதுகூட நிரம்பி இருக்கவில்லை. விசேஷம், பண்டிகை என்றால் என்ன என்று தெரியாத நிலையில்தான் அந்த வீடு இருந்தது . ஷாலு வளர்ந்து, விவரம் தெரியும் அளவுக்குப் பக்குவப்பட்ட நிலைக்கு வந்த பின், ' ஷாலு, நான்  இப்படி இருப்பது நானே ஏற்றுக் கொண்ட முடிவு ' என்று சொன்ன போது, 'இந்த முடிவால் யாருக்கு என்ன பிரயோஜனம் ? ' என்று ஷாலு கேட்க, ' இது லாப நஷ்ட கணக்குப்  பார்க்க  எடுத்த முடிவு இல்லை. நான் நீ நமது உண்மையான உறவுகள் நட்புகள் தவிர வேறு எந்தவொரு ஜந்துவையும் படத்தில் கூடப்   பார்க்கக் கூடாதுங்கிறதுக்காக எடுத்த முடிவு இது. உனக்கு, நம்மை சுற்றியிருப்பவர்களுக்கு முட்டாள் தனமாக இருக்கலாம் இது .  ஆனால் எனக்கு இது நிம்மதியைத் தருது.  நான் இப்படி இருக்கிறதால் நீயும் இப்படித்தான் இருக்கணும்ங்கிற அவசியம் எதுவும் கிடையாது. உன் விருப்பப்படி உனக்குப் பிடிச்ச வாழ்க்கையை வாழ  உனக்கு எல்லா உரிமையும் உண்டு' என்று ரேவதி சொன்னபோது, ' உனக்குப் பிடிக்காத எதுவும் எனக்குப் பிடிக்குங்கிற காரணத்துக்காக இந்த வீட்டுக்குள் வரவே வராது' என்றாள் ஷாலு. இப்படியே இருபத் தொரு    வருஷம் ஓடியும் விட்டது.
ஒரு வாரம் முன்பாக  சாவித்திரி,ரேவதியின் தோழி, வீடு தேடி வந்து " என் பொண்ணுக்கு கல்யாணம் வச்சிருக்கிறேன். உன் பிடிவாதம் வைராக்கியம் எல்லாம் எனக்குத் தெரியும். இருந்தாலும் நீ வந்தே ஆகணும். அப்பத்தான் எனக்கு மனசுக்கு நிறைவாக இருக்கும்" என்று கண்களில் கண்ணீர் வழிந்தோட அழைத்தபோது கூட எதுவும் சொல்லாமல் மௌனமாகத் தான் இருந்தாள் ரேவதி. கல்யாணத்துக்குப் போவதா வேண்டாமா என்ற குழப்பத்துக்குக் காரணம்  அவள் தோழி சாவித்திரிதான். ராஜேஷின் உடல் தகனம் செய்யப்பட்டு, உறவுகள் அங்கிருந்து சென்றிருக்க, " வீட்டில் ஏதாவது பணப் பிரச்சினையா ? ஏன் இந்த முடிவுக்கு வந்தான் ? " என்று ராஜேஷின் அப்பா கேட்டபோது துடித்துப் போய் விட்டாள்  ரேவதி. ஆனால் " இல்லேடி .. எங்கேயோ ஏதோ தப்பு நடந்திருக்குது. அது என்ன ஏதுன்னு கண்டு பிடிக்கிறதுக்குள் உன்னோட  'அவர்' அவசரப் பட்டுட்டார். அவர் ஆபீசிலும் செக்யூரிட்டி கெடுபிடி அதிகம். பணம் எங்கேயும் போயிருக்காது. கண்டிப்பா அங்கேதான் இருக்கணும்" என்று வாய் ஓயாமல் சொல்லிக் கொண்டி ருந்த ஒரே ஒரு ஜீவன் சாவித்திரி மட்டுந்தான். கஷ்ட வேளையில்தான் நண்பனின் யோக்கியதையை அறிய முடியும் என்பார்கள். அதை உணர்வு பூர்வமாக நிரூபித்தவள் சாவித்திரி. அந்த ஒரே ஒரு விஷயந் தான் ரேவதியை அவளது நிலையிலிருந்து நிலை தடுமாற வைத்தது.
அறைக்குள்ளிருந்து எட்டிப்பார்த்த ஷாலு "மம்மீ என்ன முடிவெடுத்தீங் க ?" என்றாள்.
"போகலாம்டி "
"வாவ் ! வாட் எ சர்ப்ரைஸ் !! சொல்றது என்னோட மம்மியா ? குட் .. நல்ல மம்மி. நீங்க ரெடியாகுங்க. அரை மணி நேரத்தில் நான் வந்திடறேன். கால் டாக்ஸி புக் பண்ணிடறேன் " என்ற ஷாலுவின் குரலிலும் நடையி லும் ஒரு துள்ளல் இருந்தது. அதை மனதுக்குள் கண்டு ரசித்தாள் ரேவதி சிறிது நேரத்தில் வாசலில் டாக்ஸியின் ஹார்ன் சத்தம் கேட்க, ' மம்மி , டாக்சி வந்தாச்சு. வாங்க போகலாம் " என்ற ஷாலுவைப்   பார்த்த ரேவதி " என்னடி இது தலை விரி கோலம் .. நாம போறது கல்யாண வரவேற்புக்கு  " என்றாள்.
" சோ வாட் ? "
" அழகா ஜடை போட்டுட்டு வா . போகிற வழியில் பூ வாங்கி வச்சுக்கோ. கையில் இன்னும் ரெண்டு வளையல் அதிகமா போட்டுக்கலாமே "
"அதெல்லாம் போதும் . நீங்க கிளம்புங்க "
"என்னடி இது தலைவிரி கோலத்தில் ? அமங்கலம் நடக்கிற இடத்தில் தான் தலைவிரி கோலமா இருப்பாங்க.கோபத்தின் உச்சியில் இருக்கிறப் போ தலையை அவிழ்த்து விட்டுக்குவாங்க "
"அப்படி சொன்னது யார் ? "
"நீ ஸ்கூலில் படிக்கிறப்போ ராமாயாண பாடம் நடத்தி இருப்பாங்களே . அதில், ராமனுக்கு முடிசூட்டு விழான்னு கேள்விப் பட்டதுமே தனது பின்னிய கூந்தலை கைகேயி கலைத்து விட்டுக் கொண்டாள்னு ஒரு லைன்  வருமே, நல்ல விஷயங்கள் நடக்கிற இடத்தில் அப்படி தலைவிரி  கோலம் கூடாது ஷாலு "
"அப்படியா .. அதைப்பத்தி வந்தபிறகு டிஸ்கஸ் பண்ணலாம். டாக்ஸி வெயிட்டிங்கில்  இருக்குது. வாங்க போகலாம் "
வீட்டு வாசலுக்கு வந்ததும், வெளியுலகைப் பார்த்ததும் கண்கள் கூசியது சூரிய ஒளியைக் கண்டதுபோல. அதை வாய் விட்டு சொன்னாள் ரேவதி .
"மம்மி, ஆப்டர் ட்வென்டி ஒன் இயர்ஸ். வீட்டு வாசலுக்கு வந்து வெளியுலகைப் பார்க்கிறீங்க. அதனால் அப்படித்தான் இருக்கும் " என்றாள் ஷாலு.
கல்யாண மண்டபத்துக்குள் கால் வைத்தபோது பூமியே நடுங்குவது போல ஒரு பிரமை. தன்னைத் தானே திடப் படுத்திக் கொண்டாள் ரேவதி "மம்மி நான் போய் சாவித்திரி ஆன்ட்டி எங்கே இருக்கிறாங்கன்னு பார்த்துட்டு வரவா  ?"
"அவ பிஸியா இருப்பா . நீ போய்த் தொந்தரவு  பண்ண வேண்டாம். நம்ம கண்ணில் அவ படறச்சே கை காட்டினால் போதும்.. ஆமா.. என்னடி இது ! இவ்வளவு பெரிய கியூ ? எங்கே போறதுக்கு ?"
"ஸ்டேஜுக்கு போய்   பொண்ணு மாப்பிள்ளைக்கு வாழ்த்து சொல்றதுக்கு  நாமளும் இந்த லைனில் ஜாயிண்ட் பண்ணிக்கலாம். ஒரு வேளை ஆன்ட்டி ஸ்டேஜில் கூட இருக்கலாம் ... வாங்க பார்க்கலாம் ... ஸ்டேஜில் பாருங்க ... ஜோடி எப்படி ! ஆன்ட்டி செலேக்சன் எப்படின்னு "
என்று ஷாலு சொல்ல, வரவேற்பு மேடையைக் கவனித்த ரேவதி, " என்னடி  இது !! கல்யாணப் பொண்ணு தலைவிரி கோலமா நிற்க்கிறா !! " என்று வியந்து கூவ, அருகில் நின்றிருந்தோர் இவர்களை ஆச்சரியமாகப் பார்த்தார்கள்.
"ஐயோ மம்மி ... மானத்தை வாங்காதீங்க " என்று கடுகடுத்தாள் ஷாலு.
அதன்பிறகு சாப்பிட மட்டுமே வாயைத் திறந்தாள் ரேவதி. இவர்களைக் கண்ட சாவித்திரி ஆனந்தத்தில் துள்ளிக் குதித்தபோதும்  அமைதியாக நின்றாள் ரேவதி 
வீட்டுக்குத் திரும்பும் வழியில், " ஸாரி மம்மீ . நான் உங்களை ஹர்ட் பண்ணிட்டேனா  ? " என்றாள் ஷாலு 
"எனக்கு என்னோட கல்யாண வரவேற்பு நினைவுக்கு வந்துச்சு "
"என்ன சொல்றீங்க மம்மீ ?"
"எங்க கல்யாணத்துக்கு வந்த பெரியவர் ஒருவர் 'பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க'ன்னு எங்களை வாழ்த்த, உன்னோட அப்பா, " ஐயோ பதினாறா ? தாங்காது. ஒன்றிரண்டு போதும் " ன்னு ஜோக் அடிச்சார். அதைக் கேட்ட உன்னோட தாத்தா .. அதான் எங்க அப்பா, "இந்தக் கால பிள்ளைகளுக்கு வாழ்த்துதலோட அர்த்தமே புரியலை .." பதினாறும் பெற்று "ன்னு சொன்னால் , அது பதினாறு வகையான செல்வங்களைக் குறிக்கும் .. அது தெரியாமே இவங்களாக ஒரு தப்புக் கணக்குப் போட்டு பதினாறு பிள்ளைகள்னு நினைச்சுக்க வேண்டியது.. எல்லார் வாழ்த்துமா பலிக்கிறதுன்னு கேள்வி கேட்க வேண்டியது. இவங்க என்னத்த படிச்சு என்ன பிரயோசனம்னு அலுத்துக் கிட்டார். அதை நினைச்சேன்"
"மம்மி, காலம் ரொம்பவும் மாறிப் போச்சு "
"நல்ல விஷயங்களுக்காக மாறினால் எல்லாருக்கும் சந்தோசந்தான். எது எது வேண்டாம் .. நல்லதில்லைன்னு சொல்லி பெரியவங்க தடுக்கிறாங்களோ  அதுக்கு ஏறுக்கு மாறாக எதையாவது செஞ்சுகிட்டு அதை மாற்றம்னு சொன்னால் அதை எப்படி ஏத்துக்க முடியும் ?" என்று ரேவதி கோபமாகக் கேட்க, "மம்மி நீங்க வீட்டிலேயே இருக்கிறதுதான் நம்ம ரெண்டு பேருக்குமே ஸேப்ன்னு நான் நினைக்கிறேன்" என்று குறும்புச் சிரிப்புடன் ஷாலு சொல்ல, " நானும் அதையேதான் நினைக்கிறேன் " என்றாள் ரேவதி சிரித்துக் கொண்டே.  

  

Friday, March 21, 2014

Scanning of inner - heart ( Scan Report Number - 107 )

                          எத்தனை கோடி பணமிருந்தாலும் ......?!
"என்ன வத்சலா, பையனுக்கு வேலை கிடைச்சிருக்குது. நீ சந்தோசத்தில்  பூரிச்சுப் போயிருப்பேனு நினைச்சேன்.  நீ ஏண்டீ இப்படி டல்லடிச்சு   அழுது வடியறே? " என்று கேஷுவலாகக் கேட்டாள்  பத்மா.
"த்சொ " என்ற வாயொலி மட்டுமே பதிலாக வந்தது வத்சலாவிடமிருந் து.
"என்ன ஆச்சு இவளுக்கு" என்ற நினைப்புடன் வத்சலா அருகில் வந்த பத்மா, வத்சலாவின் கலங்கிய கண்களைக் கண்டு பதறிப் போனாள்.
"என்னடி அசடு ? என்ன பிரச்சினை? வேலையில்  சேரும்போதே சம்பளப்  பணம் எழுபத்தைந்தாயிரம். அதை நினைச்சு சந்தோசப் படாமே, என்ன இது அசடாட்டம் .. ச்சே .. கண்ணைத் துடைச்சுக்கோ.  என்னடி ? வேலை  விஷயத்தில் ஏதாவது வில்லங்கமா ?"
"அதெல்லாம் இல்லை மாமி .. குழந்தைங்க மூணு பேரும் இந்நாள் வரை ஒருத்தரை விட்டு மத்தவங்க பிரிஞ்சதே இல்லை. காலையில் கையில் கிடைச்சதைக் கட்டிக்கிட்டு ஆளுக்கொரு திக்கு அரக்கப் பரக்க ஓடினாலு ம்  ராத்திரி எல்லோரும் ஒண்ணா  சேர்ந்து உட்கார்ந்துதான் சாப்பிடு வாங்க. எவ்வளவு பசியாயிருந்தாலும் ஒருத்தருக்காக மத்தவங்க காத்திருப்பாங்க. அந்த பாசத்தில் ஒரு இடைவெளி விழுறதை நினைச்சா மனசுக்கு வேதனையா இருக்குது மாமி ".
"சரி.. லீவு நாளில் வந்து போனா எல்லாம் சரியாகி விடும் "
"அப்படி வந்து போகும்போது யாரோ கெஸ்ட் வந்துட்டுப் போற பீலிங் தானே இருக்கும் ?"
"அப்படின்னா உன் புள்ளையை  வெளி  மாநிலத்துக்கு வேலைக்கு அனுப்பாதே. சென்னையில், நம்ம ஆத்துக்குப் பக்கத்திலே, முடிஞ்சா நம்ம ப்ளாட்டுக்கு பக்கத்திலே எப்போ வேலை கிடைக்குமோ அப்போ அனுப்புடி வேலைக்கு "
" கிண்டல் பண்றேளா மாமி ? "
"இல்லேடி. நடைமுறை வாழ்க்கையை சொன்னேன். மாவுக்கும் ஆசை, பணியாரத்துக்கும் ஆசைன்னா எப்படிடீ ? ஒன்றை இழந்தால்தானே மற்றது கிடைக்கும். பாலை இழந்தால்தான் தயிர். தயிரைக் கடைந்தால் தான் மோர் .. வெண்ணை .. வெண்ணை உருகினால்தானே நெய். அதைத் தான் சொன்னேன். உன்னைக் கிண்டல் பண்ணலே "
"மாமீ , நாம குழந்தையா இருந்த காலத்தில் நம்மள ஆறு வயசில்தான் படிக்க அனுப்பினாங்க. எங்க வீட்டில் நாங்க நாலு பேர் அக்கா தங்கைங்க. எங்க அப்பா எல்லாரையும் ஒரே ஸ்கூலில் சேர்த்துதான் படிக்க வைத்தார். சேர்ந்து போய் சேர்ந்து வருவோம். அம்மா வீட்டில்தான் இருப்பாங்க. அந்தக் காலத்தில் லேடீஸ் இந்த அளவுக்கு வேலைக்குப் போக ஆரம்பிக்கலையே. ஸ்கூல் விட்டு நாங்க வர்றச்சே வீட்டில் அம்மா இல்லைன்னா  நாங்க அழ ஆரம்பிச்சிடுவோம். இவ்வளவுக்கும் அம்மா பக்கத்திலுள்ள கடைக்குக் காய் வாங்கவோ இல்லே ரேஷன் வாங்கவோ போயிருப்பாங்க. அந்தக் கொஞ்ச நேரப் பிரிவைக் கூட எங்களால் தாங்க முடியாது. படிப்பு முடிஞ்சு ஆளுக்கொரு திக்கிலே வேலை, கல்யாணம்னு செட்டில் ஆயிட்டோம். இன்னிக்கும் எங்க உறவில் எந்தவொரு  சச்சரவும் இல்லே ... ஆனால் ஒரு விரிசல் இருக்குது. அது சரிப்பட சாத்தியமே இல்லை. இப்போ என்னோட குழந்தைகளும்  ஒரு இடைவெளியை சந்திக்கப் போறதை நினைச்சா கவலையா இருக்குது. ஒருத்தனுக்கு எத்தனை கோடி பணமிருந்தாலும், வீட்டில் உறவுகள் இல்லைன்னா  அவன் பரம ஏழை. குழந்தைங்க படிப்பு முடிஞ்சு வேலைக்காக ஆளுக்கொரு திக்கில் பிரிஞ்சு போவாங்க என்கிறது தெரிஞ்ச விஷயந்தான் என்றாலும் அதை ஏத்துக்கிட மனசு மறுக்குது மாமீ. எனக்கு ஒண்ணுவிட்ட தம்பி ஒருத்தன் மிலிட்டரியில் இருந்தான். வருஷம் ஒரு முறை பத்து பதினைந்து நாள் லீவில் வந்து போவான். வந்து போகும் ஒவ்வொரு முறையும், வருஷத்தில் பதினைந்து நாள்தான்  நாங்க மனுஷனா வாழறோம். மத்த நாட்களில் மெஷின் மாதிரி இயங்கிக் கொண்டிருப்போம். அங்கிருந்து கிளம்பி வருவதற்கு  ஒரு மாசம் முன்னாடி ஊருக்குப் போறதப் பத்தின சந்தோசத்தில் இருப்போம். லீவு முடிஞ்சு  யூனிட்டுக்குத் திரும்பி ஒரு மாதம் வரை  ஊரில் நடந்த விஷயங்களை சொல்லி சந்தோசப் பட்டுட்டு இருப்போம். மத்த நாட்களில் உலகமே ஒரு சூனியமாகத் தெரியும் என்பான். அப்பல்லாம், இந்த வயிறு ஒன்று இருந்து கொண்டு பாடாய்ப் படுத்தப் போய்த்தானே  பணத்தைத் தேடி அலைய வேண்டியிருக்குது. வயிறுன்னு ஒண்ணு  இல்லாட்டா எவ்வளவு நல்லாயிருக்கும் ! உலகத்தில் நூத்துக்குத் தொண்ணூறு பேர்  உறவுகளைப் பிரிந்து காலத்தின் கட்டாயத்தில் மனசுக்குள் பாரத்தை சுமந்து கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்களே. அந்த வரிசையில் என் புள்ளையும்   சேரப் போறதை நினைச்சா மனசே வெடிச்சிடும் போலிருக்குது. நல்லதோ கெட்டதோ, துக்கமோ சந்தோசமோ எதையும் பக்கத்திலிருந்து பகிர்ந்து கொள்ள உறவுகள் இல்லாத படிக்கு, பணம் ,,, ஒரு துண்டுக் காகிதம் மனுஷங்களைப் புரட்டிப் போட்டு என்னவொரு  வேடிக்கை காட்டுதுன்னு  பார்த்தீங்களா மாமீ "
"எத்தனை கோடி பணமிருந்தாலும் உறவுகள் வேணும் அருகிலேன்னு நீ சொல்றது சரிதான். ஆனால் கையில் பணமில்லாவிட்டால் நம்ம ரத்த சொந்தங்களே நம்மளப் பக்கத்தில் சேர்ப்பதில்லை. அதை புரிஞ்சுகிட்டு சில பிரிவுகளை சகிச்சுகிட்டுப் போகக் கத்துண்டா  வாழ்க்கை என்னிக்கும் சொர்க்கம்தான் " என்று பத்மா சொல்ல, " அதுவும் சரிதான் மாமி " என்று சொல்லி விட்டு அங்கிருந்து நகர்ந்தாள் வத்சலா 

Thursday, March 20, 2014

Scanning of inner - heart ( Scan Report Number - 092 )

 " ஊ ... லலல்லா ..ஊ ஊ ஹூ  லலல்லா ! "
ஹாலிலிருந்து ஒரே கூச்சலும் சிரிப்புச் சத்தமும் வர, அறையை விட்டு வெளியில் வந்து ஹாலை எட்டிப் பார்த்தான் குமார். டீவியில் ஏதோ ஒரு சினிமா படக்காட்சி  ஓடிக் கொண்டிருந்தது. ஆடு ஒன்று ஒரு மனிதனைத் துரத்த, அவன் பயந்து ஓடுவதைக் கண்டு குழந்தைகள் ரசித்து சிரித்துக் கொண்டிருக்க குழந்தைகளோடு குழந்தையாய் மைதிலியும் கைதட்டி சிரித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து விட்டு கேலியும் கிண்ட லு ம் நிறைந்த குரலில் " ஏய், என்னடி இது ? " என்றான்.
" அதோ பாருங்க, அந்த ஆடு அவனை என்னமாய் துரத்துது " என்றாள் மைதிலி கண்களை டீவியை விட்டு வேறு பக்கம் திருப்பாமல். 
" பயந்து ஓடுகிறவனைப் பார்க்கிறதில் அப்படியென்ன சந்தோசம் ? "
" இவ்வளவு நேரம் அவன் என்னென்ன அட்டகாசம் பண்ணிக் கொண்டி ருந்தான் தெரியுமா ? கடைசியில் இந்த ஆடு இவனை ஒரு கை பார்க்கிறது பாருங்க "
" சரிடீ . இதில் நீ குதிச்சு கும்மாளம் போட என்ன இருக்கிறது ? "
" இப்போ ஒரு அயோக்கியன் இருக்கிறான்னு வச்சுக்குவோம். அவன் பண்ற அட்டகாசம் யாராலேயும் தாங்க முடியாததாக இருக்கும். ஆனால் அவனை நம்மாலே எதுவும் செய்ய முடியாமே கையாலாகாத நிலைமை யில் நாம் இருப்போம். அதே ரௌடியை வேறொருத்தன் வந்து போட்டுத் தள்ளினால் "அப்பாடா"ன்னு ஒரு நிம்மதிப் பெருமூச்சு விடுவோமே அது மாதிரிதான் இதுவும்.  ஆமா ... நீங்க இன்னும் ரெடியாகலியா ? "
" இதோ ரெடி. நான் கிளம்பறேன். அநேகமா நாளைக்கு ஈவெனிங்க் கிளம்பி வந்துடுவேன்னு நினைக்கிறேன். இங்கிருந்து போறப்போதான் ஆளுக்கொரு திக்கிலிருந்து தனித்தனியா கிளம்பிப் போறோம். அங்கிருந்து திரும்பி வர, ஏற்கனவே வேன் அரெஞ்ச் பண்ணியாச்சு. கதவை நல்லா லாக் பண்ணிக்கோ. நான் கிளம்பறேன் "
" சரி. பார்த்துப் போங்க " என்ற மைதிலி திரும்பவும் டீவியில் மூழ்கிப் போனாள்.
ஸ்டேசன் பிளாட்பார்மில் காலடி எடுத்து வைத்த போது செல்போன் சிணுங்கியது. அதை எடுத்துக் காதில் பொருத்திக் கொண்டு பேசியபடி நடக்க ஆரம்பித்த குமார் கால் இடறி பிளாட்பார்மில் நின்று கொண்டிருந் தவர்மீது மோதி பாலன்ஸ் செய்து நின்றான். அந்த நபர் முறைப்பதைப் பார்த்துவிட்டு  " ஸாரி ..  கால் இடறி விட்டது ஸாரி " என்றான்.
"பாதையில் கவனம் இருந்தால் எப்படி ஸார் கால் இடறும். ஒண்ணு நடந்து போய்க்கிட்டே இருங்க , இல்லாட்டா ஒரு ஓரமா நின்று போன் பண்ணுங்க. இரண்டையும் ஒரே சமயத்தில் செய்தால் இப்படித்தான்  " என்றது  முறைப்புப் பார்ட்டி .
"உங்க கைடன்ஸ்க்கு தேங்க்ஸ். இனிமே அப்படி நடக்காமே பார்த்துக் கிறேன்  " என்று குமார் பணிவாக சொன்னதும் ஒரு வித வெட்கத்துடன் தலையாட்டினர் முறைப்பு .
தன்னை இடற வைத்தது எது என்ற ஆராய்ச்சியில் இறங்கினான். ஒரு லாரி லோட் சாமான்களை பிளாட்பார்ம் முழுக்க இறைத்துப் போட்டபடி போர்டருடன் பேரம் பேசிக் கொண்டிருந்தார் ஒரு நடுத்தர வயதுப் பெண் மேலோட்டமாகப் பார்க்கும் போது அவர் வட மாநிலத்தவர் போலத் தெரிந்தார். ஆனால் தமிழில் நன்றாக வார்த்தையாடிக் கொண்டிருந்தார் வயதான போர்டர் ஒருவர் கூலி அதிகம் கேட்டு கெஞ்சிக் கொண்டிருந் தார். அதைக் காதிலேயே வாங்காத மாதிரி அந்தப் பெண் எங்கோ பார்த்துக் கொண்டிருந்தாள். அவளைச்சுற்றி ஐந்து பேர். யாருமே போர்டரின் கெஞ்சலை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை தன்னைக் குமார் கவனிப்பதைக் கண்ட போர்டர் "ஸார் இது நியாயமான் னு நீங்களே சொல்லுங்க ஸார். மெயின் ரோட்டிலிருந்து இவ்வளவு லக்கேஜ் எடுத்து வந்திருக்கிறேன். கொஞ்சம் கூட மனச்சாட்சியே இல்லாமல் 50 ரூபா கூலி தர்றாங்க ஸார் " என்றான் பரிதாபமாக.
" ஏம்ப்பா நீங்க ரேட் பேசிட்டுதானே சுமையை தலையில் தூக்குவீங்க " என்றான் குமார் 
" இல்லே ஸார், காலையிலிருந்து எதுவுமே படியலே. வந்த கிராக்கியை விட்டுடக் கூடாதேன்னு எதுவும் பேசாமே தூக்கிட்டேன். இந்த ஸ்டேசனில் 300 ரூபாய்க்குக் குறைந்து இதை யாரும் தொடக் கூட மாட்டாங்க. அநியாயமா 50 ரூபா கொடுத்து ஏழைங்க வயித்தில் அடிக்கிறாங்க ஸார் "
" இதோ பார் 50 ரூபா வேண்டாட்டா அதை இப்படிக் கொடுத்திட்டு போய்க்கிட்டே இரு . அவன் என்ன ஹை கோர்ட் ஜட்ஜா ? பெரிசா நியாயம் கேட்கப் போயிட்டே ? " என்று இரைந்தாள் அந்தப் பெண் 
" இல்லே மேடம் ..." என்ற குமாரிடம் " ஸார், உங்க ஜட்ஜ் மெண்டைக் கேட்க எங்களுக்குப் பொறுமையில்லே. நேரமும் இல்லே " என்றாள் அந்தப் பெண் 
" விடுங்க ஸார். எனக்காக நீங்க ஏன் அதுகிட்டே பேச்சு வாங்கறீங்க ? " என்ற போர்டர் அந்தப் பெண்ணிடம், " இந்தாம்மா. இதையும் நீயே வச்சுக்கோ. என்னோட உடன்பிறப்புக்கு தூக்கிட்டு வந்ததா நான் நினைச் சுக்கிறேன்" என்று சொல்லி அவள் முன்பாக நோட்டை நீட்ட, கொஞ்ச மும் தயங்காமல் அந்தப் பெண்  அதை வாங்கி தனது கைப் பைக்குள் போட்டுக் கொண்டதைக் கண்ட குமார் அசந்து போனான்.
"என்ன மனுஷ ஜென்மம் இது ? இதை அப்படியே நாலு சாத்து சாத்தணும் "  என்று கைகள் துறுதுறுத்தது.
ட்ரைன் வர நேரமிருந்ததால் காப்பி குடிக்கப் போவது போல மெதுவாக நடந்து வந்து அந்த போர்டரைத் தேடினான். தூண் ஒன்றில் சாய்ந்தபடி நின்று கொண்டிருந்த போர்டரைக் கண்டதும், " எனக்கே மனசுக்கு கஷ்டமா இருக்குப்பா. அந்த 50 ரூபாயையும் நீ வேண்டாம்னுட்டு வந்து ட்டியே" என்றான்.
"விடுங்க ஸார் ஏழைங்க, கூலிக்காரங்க வயித்தில் அடிச்சு சேர்க்கிற காசு உருப்படும்னா நினைக்கிறீங்க. உழைச்சு சாப்பிடறதே உடம்பில் ஓட்ட மாட்டேங்குது. ஏமாத்தி சேர்க்கிற பணம் ஏதாவதொரு வழியில் போயிடும் " என்று ஞானி போல தத்துவம் பேசினான். ட்ரைன் வரும் அறிவிப்பைக் கேட்டதும் " வர்றேன்ப்பா " என்று விடைபெற்றான் குமார்.
இதற்குள் பிளாட்பார்மில் ட்ரைன் நுழைய, எல்லோருமே ஏறுவதில் பிசி யானார்கள். அந்தப் பெண்ணின் குடும்பம் இருந்த கம்பார்ட்மெண்டில் தான்  குமாருக்கும் சீட் அலாட் ஆகியிருந்தது. தலைவிதியே என்று நினைத்தபடி  அப்பர் பெர்த்தில்   ஏறி படுத்துக் கொண்டான். எப்போது தூங்க ஆரம்பித்தான் என்பது அவனுக்கே நினைவில் இல்லை.
திடீரென்னு " சோர் .. சோர் " என்ற அலறல், ஒட்டு மொத்தக் கம்பார்ட் மெண்ட்டையும் எழுந்து உட்கார வைத்தது. கீழே குதித்த குமார் விளக்கைப் போட்டான். கத்தியது அந்த வடமாநிலப் பெண்தான். அவளது படபடப்பைக் குறைக்க பாட்டிலைத் தேடி எடுத்து தண்ணீரைக் கொடுத்து கொண்டிருந்தார் அவளது கணவன். 
" என்ன ? " என்று கேட்ட சக பயணிகளிடம், " விழுப்புரத்தில் ட்ரைன் நின்றதும் காப்பி கிடைக்குமான்னு பார்க்க விண்டோ கதவைத் திறந்தேன். கொஞ்சம் தள்ளி ஒரு டீ வாலா போனான். கூப்பிடறதுக்கு டோர் பக்கம் வந்தேன். அப்போ சிக்னல் விழுந்து ட்ரைன் மூவாக ஆரம்பிச்சுது. அந்த சமயம் ஒருத்தன் ஓடி வந்தான். ஏற வர்றான்னு நினைச்சு நான் அங்கே நின்று அதைப் பார்த்திட்டுருந்தேன். ஆனால் அவன் சடனா என் கையில் கிடந்த நாலு வளையலையும் பறிச்சிட்டு ஓடிட்டான் " என்று விளக்கினாள் அந்தப் பெண் 
கூட்டம் " உத்சூ " கொட்டிக் கேட்டுக் கொண்டிருந்தது 
" ஒவ்வொரு வளையலும் இரண்டரைப் பவுன். மொத்தம் பத்து பவுன் போச்சு " என்று அவள் சொல்லிக் கொண்டிருக்க, " ட்ரைன்னை நிறுத்தி கம்ப்ளைன்ட் கொடுங்க " என்று சிலர் சொல்லிக் கொண்டிருந்தார்கள் 
இந்த களோபரம் எதிலும் குமாரின் மனம் ஒட்டவில்லை. போர்டரின் முகம் நினைவில் வந்து போனது. வீட்டை விட்டுக் கிளம்பும் முன், மைதிலி " இவ்வளவு நேரம் அவன் என்னென்ன அட்டகாசம் பண்ணிக் கொண்டிருந்தான் தெரியுமா ? கடைசியில் இந்த ஆடு இவனை ஒரு கை பார்க்கிறது பாருங்க " என்று சொன்ன வார்த்தைகள், சொல்லி கைதட்டி சிரித்த காட்சி நினைவில் வந்தது. குமார் தன்  மனதுக்குள்  கைதட்டி விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தான். ச்சே. ஒருவருடைய கஷ்டத்தைக் கண்டு ஆனந்தப் படுவது எந்த விதத்தில் நியாயம் என்று மனச்சாட்சி தட்டிக்  கேட்டது. அடாவடியாக ஒரு கூலிக்காரன் வயிற்றில் அடிப்பது நியாயம் என்றால், அந்த அடாவடிப் பேர்வழிகளின் அவஸ்தை யைக் கண்டு சிரிப்பதும் நியாயமே என்று சொல்லி மனச்சாட்சியைத் தட்டித் தூங்க வைத்து விட்டு மீண்டும் சிரிக்க ஆரம்பித்தான்  குமார்.  


Sunday, March 16, 2014

DEAR CHILDREN,

THIS IS A PUZZLE SPECIALLY FOR YOU.
THERE ARE TWO BOXES - A & B.
YOU MAY VIEW 10 WORDS IN BOX - A
COMPOSE ANOTHER WORD IN BOX - B, BY USING THE SAME 3 LETTERS OF BOX - A.
FOR EXAMPLE - " ABY " MAY BE COMPOSED AS " BAY ".
THIS TYPE OF PUZZLES WILL GROW YOUR VOCABULARY SKILL.

PUZZLE NUMBER - 001


Box A
Box B
A
B
Y
A
C
T
A
D
D
A
L
T
A
N
T
A
P
E
A
P
T
A
R
C
A
R
E
A
R
T


* LAT - abbreviation of latitude.

- queries / suggestions may be sent to
arunasshanmugam@gmail.com

My sincere heart felt thanks to : Shri Hari Balakrishnan
                                                  ( www.puthirmayam.com)
                                                  who have made the on-line facility

Friday, March 14, 2014

Scanning of inner - heart ( Scan Report Number - 106

                    எதையும் சரிசமமா பங்கு வைக்க சட்டம் போடணும் ! 

" மம்மீ .. கேப்ஸ்க்கு ரிமைண்ட் பண்ணுங்க. இன்னும் வண்டி வரலே " என்று சாரு இரைய " ஸாரிடா . எனக்கிருந்த டென்சனில் நான் புக் பண்ணவே மறந்துட்டேன் " என்ற கோமளாவை எரித்து விடுவதுபோலப் பார்ததாள்  சாருலதா.
" என்னை முறைச்சு என்னடி புண்ணியம் ? ஒருத்தியாலே நாலு பேர் போடற  ட்டியூ னுக்கும் ஒரே நேரத்தில் ஸ்டெப் போட முடியுமா ? உங்க டாடியைப் பாரு, காலையிலேயே எழுத உட்கார்ந்தாச்சு. அவருக்கு வர்ற போனைக் கூட நான் அட்டெண்ட் பண்ண வேண்டியிருக்கு ? "
" சரி டிபன் ரெடியா ? "
" இன்னும் சுசிலாவைக் காணோமே. உனக்கு நாழியாச்சுன்னா நான் நூடுல்ஸ்  பண்ணித் தரட்டுமா ? "
"ஐயோ மம்மீ  .. அப்புறம் எனக்கு சாப்பிடணும்கிற ஆசையே இல்லாமே போயிடும் "
 " அப்படின்னா  'உடுப்பி' க்கு போன் பண்ணி டிபன் ஆர்டர் பண்ணட்டுமா ? "
" என்னது ? இனிமே பண்ணப் போறியா ? மம்மீ ..வாட் ஹேப்பென்ட் டு யூ " என்று பொறுமையிழந்த சாருலதா அலறினாள். 
" கொஞ்சம் பொறுடீ .. இன்னிக்கு ஒரு நாள் அண்ணனோடு சேர்ந்து அவன் காரில் போயேன். உன் காலேஜைத் தாண்டி தானே அவன் ஆபீஸ் போகணும் "
" நோ .. என் கார் இருக்கும்போது நான் ஏன் அவன் காரில் போகணும். என் வண்டி மெக்கானிக் ஷாப்பில் இருந்து இன்னும் வரலே .. உன்னைக் கால் டாக்ஸி புக் பண்ண சொன்னது என்னோட தப்பு. நானே புக் பண்ணிக் கிறேன். நானே போகிற வழியில் டிபன் சாப்பிட்டுக்கறேன். நீ டீவீ முன்னாலே உட்கார்ந்து சீரியல் பாரு " என்று சொல்லிவிட்டு மொபைல் நம்பரை பிரஸ் பண்ணியபடி அங்கிருந்து நகர்ந்தாள் சாருலதா.
"மம்மீ "
" என்னப்பா ... உனக்கு என்ன வேணும் ? " 
" ஏசீ கூல் எப்பெக்ட் திடீர்னு லோ ஆயிடுச்சு ..   "
" டாடி ஸ்டடி ரூமில் உட்கார்ந்து ஏதோ எழுதிட்டு இருக்கிறார்.  அவர் ரூம் ப்ரீயா இருக்கு. அங்கே போய்  படுக்கிறது தானே  "
" நோ மம்மீ .. என் ரூமை விட்டுட்டு நான் ஏன் போகணும் ? "
" இப்போ என்னதான் பண்ணனும்கிறே ? "
" சம்மர் ஆரம்பிக்கு முன்னமே ஏசீ ப்ராப்ளம் ஆரம்பிச்சுட்டுது. இப்பவே வோல்டாஸ் ஸ்பிளிட் க்கு ஆர்டர் பண்ணுங்க  "
" ஏய் .. உன்னோட ரூம் ஏசீக்கு இன்னும் வாரண்டி பீரியட் இருக்குடா "
" உங்களாலே முடியாட்டா நான் பண்ணிக்கிறேன். லீவ் இட் " என்று சொல்லியபடி ரூமுக்குள் நுழைந்து தாளிட்டுக் கொண்ட கோபுவை என்ன சொல்லி சமாதானப் படுத்துவதென்று தெரியாமல் கோமளா சோபாவில் வந்து சாய்ந்தாள்.
"என்னடி பண்றே கோமு ? " என்று கேட்டபடி பேப்பரும் கையுமாக ஸ்டடி ரூமை விட்டு வெளியில் வந்த ரங்கநாதன் கேட்க, "காணாமப் போன மலேசிய விமானம் என்ன ஆச்சோ ஏதாச்சோன்னு விமானத்தைப் பத்திக் கவலைப் பட்டுட்டுருந்தேன். அதுக்குக் கூட டைம் கொடுக்காமே உங்க " செல்லங்கள் " கார் ரிப்பேர், ஏசீ  ரிப்பேர்ன்னு ஏகப் பட்ட கம்ப்ளைன்ட் .. என்ன ஆகியிருக்கும்னு நினைக்கிறீங்க. விமானம் கடத்தல்னு முதலில் ஒரு நியூஸ் வந்ததும்  "அப்பாடா . ப்ளைட் கடலுக்குள் விழலே. யாருக் கும் எதுவும் ஆகலே. எல்லாரும் உயிரோடுதான் இருப்பாங்க. அந்த விமானத்தைக் கடத்தினவங்களோட   "பேச்சு வார்த்தை " நடத்தினதும் இவங்களை பத்திரமா விட்டுடுவாங்கனு நம்பி இருந்தேன் . இப்போ அதுவும் இல்லேன்னு சொல்றாங்களே. நிஜமாகவே கடலுக்குள் விழுந்தி ருந்தால்  அத்தனை ஜீவன்களும் ஒவ்வொரு நொடியும்  எப்படி எப்படி யெல்லாம் துடிச்சிருக்கும்னு   கற்பனை பண்ணிக்கூட பார்க்க முடியலே ? " என்றாள் கோமளா நெகிழ்ந்த குரலில்.
"அட ..நான் கூட அதைப் பத்திதான் ஒரு ஆர்டிகிள் எழுத நினைச்சி ருந்தேன். "தேவை  சிக்கனம் " என்ற தலைப்பில் ஒரு ஆர்டிகிள் வேணும்னு வாசுபோன் பண்ணினார்.  அதான் பெட்ரோல் சிக்கனம் பற்றி  மின்சாரத்தை எப்படி சிக்கனமாக உபயோகப் படுத்தலாம் என்பது பற்றி  எழுத உட்கார்ந்தேன்.. நான் எழுதியிருக்கிற பாயிண்ட்சை படிக்கிறேன். உனக்கு ஏதாவது தோணினா சொல்லு சேர்த்துக்கலாம்..   வீடு, சினிமா, தியேட்டர், ஹோட்டல் இந்த மாதிரி இடங்களிலெல்லாம் ஏசீ உபயோகிப்பதைக் குறைத்துக் கொள்ளணும். மின்சாரம் இல்லாத ஒரே ஒரு காரணத்தால் தொழில், விவசாயம் எல்லாம் பாதிக்கப் பட்டு வேலையிழப்பு பட்டினி என்கிற நிலைமை வருவதைக் காட்டிலும் , காற்று ஏசீ இல்லாமல் நம்மால் வாழ முடியும்கிற அளவுக்கு நம்மை பக்குவப் படுத்திக்கணும் ..... "
"ஸ்டாப் ... ஸ்டாப் ... ஏசீ இல்லாட்டா உயிரே போயிடும்னு நினைக்கிற ஜனங்க இருக்கிற நாடு . அதனாலே ஒரு வீட்டில் நாலு பேர் இருந்தால், நாலு பேரும் ஒரே பானின்  கீழோ, ஒரே ஏசீ ரூமிலோ படுக்கப் பழக்கப் படுத்திக் கொண்டால்  நாட்டுக்கும் நல்லது வீட்டுக்கும் நல்லதுன்னு எழுதிக்கோங்க.. ஒரே வீட்டில் நாலு கார் இருந்தாலும், நாட்டுக்கு நல்லது செய்றதாக நினைத்து  ஒரே காரில் போய்வர பழகிக்கணும் . சிக்கனத்தை கடைப் பிடிக்கணும்ன்னு எழுதுங்க . நம்ம வீட்டில் இதை யாரும் கேட்க மாட்டாங்க. நாட்டின் மூலை முடுக்கில் இருக்கிற  ஏதாவது நல்ல உள்ளங்களாவது கேட்கட்டும்  " என்று சொல்லிவிட்டு அங்கிருந்து எழும்பிப் போன கோமளாவை  " இன்னைக்கு இவளுக்கு என்னாச்சு ? " என்ற கேள்விக் குறியுடன் பார்த்தார்  ரங்கநாதன் . 

Saturday, March 08, 2014

தோழிகளே,
உங்கள் அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள் !
யுகங்கள் பலவானாலும், காலங்காலமாக கட்டிக் காக்கப் பட்டு வரும் பெண்மையின் தன்மைகளும் பெண்மைக்குரிய இலக்கணங்களும் என்றென்றும் மாறக் கூடாது.
பாதுகாப்புக் காரணங்களுக்காக மற்றவர்கள் உங்களை அடக்கியாள நினைத்தால் வீறுகொண்டு வெகுண்டெழாதிருங்கள்.
விலையுயர்ந்த தங்கத்தை, விலைமதிப்பில்லா இரும்புப் பெட்டியில் வைத்து பாதுகாக்கிறோம் என்றால் அதன் மதிப்பை அனைவரும் உணர்ந்திருப்பதாலும் அது பாதுகாக்கப் பட வேண்டிய பொருள் என்று நினைப்பதாலுந்தான்.
அடிமைப் படுத்துவது - பாதுகாப்பது இந்த இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்து கொண்டால் தேவையற்ற சச்சரவுகளைத் தவிர்க்கலாம்   

Friday, March 07, 2014

Scanning of inner - heart ( Scan Report Number - 105

                                 இது நியமம் - OK !  நியாயமா !!??

உஷ் . அப்பாடா ... ஒரு வழியா வீடு கிளீனிங் வேலை முடிஞ்சுது. உலர்ந்த துணியை மடித்து வைக்கலாம் என்ற நினைப்பில், கம்பிக் கொடி யிலிருந்து துணிகளை எடுத்து வந்த மரகதம்,  டீவீ பார்த்துக் கொண்டு துணிகளை மடிக்கலாம் என்ற நினைப்பில் டீவீயை ஆன் பண்ணவும் கரண்ட் போகவும் சரியாக இருந்தது. ச்சே .. ஒரு அரைமணி நேரம் உட்கார்ந்து டீவீ பார்க்கலாம் என்று பார்த்தால் அதற்க்குக் கூட கொடுப்பினை இல்லையே என்று தன்னைத் தானே நொந்து கொண்டாள். ஒவ்வொருத்தர் எவ்வளவு பெரிய விஷயங்களைக் கூட என்னவொரு அசால்ட்டா செஞ்சு முடிச்சிடறாங்க. எதை எதையோ அனுபவிக்கிறாங்க. நாம நினைக்கிற சின்ன சின்ன விஷயங்கள் கூட நமக்கு " பெப்பே " காட்டுதே என்ற சுய பச்சாதாபம் எழுந்தாலும்,  அவங்க வாங்கி வந்த வரம் அப்படி ; நான் வாங்கி வந்த சாபம் இப்படி என்று தனக்குள் சமாதானம் சொல்லிக் கொண்டாள்.
"மாமி உங்காத்திலே கரெண்ட் இருக்கா ? " என்ற பத்மாவின் குரல் கேட்டு வெளியில் வந்த மரகதம், " இல்லே இன்றைக்கு மூணு ஸ்பேசுமே   போயிட்டு போலிருக்கு. கோடை ஆரம்பிக்கும் முன்னாடியே இந்த அமர்க்களம். கத்திரியை எப்படி சமாளிக்கப் போகிறோமோ தெரியலை. வா .. பத்மா .. உள்ளே வந்து உட்கார் ... வேலை பார்க்கிறதா இருந்தாலும், பொழுது போக்கிறதா இருந்தாலும் கரெண்ட் வந்தாத் தானே முடியும் " என்று சொல்ல, ஈரக் கையை புடவைத் தலைப்பில் துடைத்தபடி உள்ளே வந்து சோபாவில் உட்கார்ந்த பத்மா, "கிரைண்டரில் மாவு ஆட்டிட்டு இருந்தேன். அரிசிமாவை பாத்திரத்தில் அள்ளிப் போட்டுட்டு ருக்கறச்சே கரெண்ட் போயிட்டுது. இனி எப்போ மற்ற வேலையை முடிக்கிறது? " என்றாள்.
"இந்த மாச சீட்டுப்பணத்தை நீ எடுக்கப் போறதா ராகவன் ஸார் கிட்டே சொன்னியாமே.ரெண்டாவது பொண்ணு "பெரிய மனுஷி" லிஸ்டில்  சேர தயாரா இருக்கிறாளே. விசேஷம் பண்ண முன்னேற்பாடா பணத்தை ரெடி பண்றியா ? "
"ஐயய்யோ .. இல்லை மாமீ  .. பெரியவளுக்கு விசேஷம் பண்ணின கடனே இன்னும் அடைபடலே . கடன் குடுத்தவன்  மென்னியைப் பிடிக்கிறான். அவன் வாயை அடைக்கத்தான் இந்த மாச சீட்டுப்பணம் எனக்கு வேணும் னு முன்னாடியே சொல்லி வச்சேன். இந்தப் பொண்ணு "பெரியவ" ஆனாக் கூட விசேஷம் பண்ற ஐடியா எல்லாம் எதுவும் கிடையாது. மூத்தவளுக்கு ப்  பண்ணியாச்சு .. அது போதும் "
"என்னடி இப்படி சொல்றே ?.. அக்காவுக்கு எல்லாம் பண்ணினாங்க. எனக்கு எதுவும் செய்யலையேன்னு  உன்னோட சின்னப் பொண்ணு கோபப்பட மாட்டாளா ?"
"தலைச்சன் பிள்ளைக்கு எல்லாமே செய்யறது நம்ம வழக்கம் ஆச்சே மாமி. நமக்கு வளைகாப்பு, குழந்தை பிறந்ததும் புண்ணியா ஸ்நானம், அப்புறம் ஓராண்டு நிறைந்சதும் பிறந்தநாள் காது குத்து எல்லாமே தலைச்சன் பிள்ளைக்குத் தானே செய்றோம். அதுதானே வழக்கம்"
" வழக்கம் சரி ... அதை யார் ஏற்படுத்தினா ? நாமதானே !. நம்ம வசதிக்காக ஒரு குழந்தைக்கு எல்லாத்தையும் பண்ணிப் பார்த்துட்டு அடுத்த குழந்தைக்கு எதுவும் வேணாம்னு நாமளே முடிவு பண்ணிட்டா எப்படி பத்மா ? நம்ம குழந்தைங்க கிட்டே நாம பாரபட்சம் காட்டற மாதிரிதானே ஆயிடுது. இப்போ உங்க மூத்த பொண்ணோட முதல் வயசு பிறந்த நாள் விழா போட்டோ இருக்கும்தானே ... அதை உங்க சின்னப் பொண்ணு பார்ப்பாதானே ? "
" சண்டையே போடுவா மாமி. "என்னை ஏன் போட்டோ எடுக்கலே. சின்னக் குழந்தைன்னு ஏமாத்திட்டீ ங்க"ன்னு ஒரு மூச்சு அழுது ஓய்வா " என்று அழுகின்ற  குரலில் சொன்னாள் பத்மா 
"பத்மா .. நான் ஒண்ணு சொல்றேன் .. கேட்டுக்கோ ... எங்க வீட்டு ராமாயணத்தை சொல்றேன்.  எங்க மாமனார் மாமியார்க்கு மூன்று குழந்தைங்க. எங்காத்துக்காரர்தான் தலைச்சன். அந்தக் காலத்தில் எங்க மாமனார்கிட்டே அப்படியொன்னும் வசதி இல்லையாம். இருந்தாலும் கடனை உடனை வாங்கி  " ஆண்டு நிறைவு ", "பூணூல் "ன்னு இவருக்கு மட்டுமே பெரிசா பண்ணியிருக்கிறா .. மத்த ரெண்டு பையன்களுக்கும் கோவிலில் வச்சு ஏதோ சிம்பிளா கடமையை செஞ்சு விட்டுட்டா. இவங்க மூணு பேரும் வளர்ந்து பெரிசாகி விவரம் தெரியற பக்குவம் வந்ததும், இவரோட தம்பிங்க ரெண்டு பேரும் பெத்தவாளை மதிக்கிறதே கிடையாதாம். ஏதாவது சொன்னாக் கூட 'எங்ககிட்டே ஏன் சொல்றீங்க. உங்க மூத்த பிள்ளை கிட்டே சொல்லுங்கோ'ன்னு சண்டை பிடிப்பாங்க ளாம். அதுவே அவங்க மனசிலே ஒரு வன்மம் மாதிரி வளர்ந்து, இவரைக் கண்டாலே பிடிக்காதுங்கிற  நிலைமையில் கொண்டு போய் விட்டுட்டுது ஆனாலும்  அந்த வன்மமே  ஒரு வெறியா மாறி வாழ்க்கையில் மேலே மேலே முன்னேறணும். ஆனா பெத்தவங்க தயவாலே அது இருக்கக் கூடாதுங்கிற வைராக்கியத்தையும் தந்திருக்குது. அது நல்ல விஷயம் தான். ஆனா அவங்க ரெண்டு பேரும் எங்களையோ, என் மாமனார் மாமியாரையோ மதிக்கிறதே கிடையாது. படிச்சு நல்லா முன்னுக்கு வந்து நல்ல வேலையைத் தேடிட்டு அவங்க விருப்பபடி கல்யாணமும் பண்ணிகிட்டாங்க. கல்யாணத்துக்கு வாங்கனு பேருக்கு ஒரு வார்த்தை எங்களைக் கூப்பிட்டாங்களே தவிர, 'இது இதை' செய்யலாமா கூடாதானு ஒரு வார்த்தை கூட யாரையும் கேட்கலே . எதோ மூணாவது மனுஷங்க மாதிரி கல்யாண வீட்டில் போய் நின்னுட்டு வந்தோம். ரெண்டு வருஷம் முன்னாடி எங்க மாமியாருக்கு ஹார்ட் ஆபரேஷன் பண்ண வேண்டி வந்தது. எங்க கையில் போதுமான வசதியில்லே. அவங்க ரெண்டு பேரிடமும்  கேட்டதுக்கு ' எல்லாக் கடமையும் மூத்த பிள்ளைக்குத் தான் இருக்கு. நாங்க செய்யாமே விட்டுட்டா தர்மமோ நியாயமோ எங்களைத் தண்டிக்காது'ன்னு  அடாவடியா பேசி  எங்க மனசை ரணப் படுத்திட்டாங்க பெத்தவங்களோட  பொருளாதார வசதி தெரிஞ்சு பிள்ளைகளாக எதையும் பெரிசா எடுத்துக்காமே இருக்கப் பழகிட் டாங்கன்னா பிரச்சினை இல்லே. பேதம் பிரிச்சுப் பார்க்க ஆரம்பிச்சிட்டாங்கன்னா அப்புறம் வீடு,   வீடாக இருக்காது. சண்டை சச்சரவுன்னு நிம்மதி இல்லாமே போயிடும். இப்போக் கூட ஒரு விளம்பரம் வருதே  டீவீயிலே, "அண்ணனுக்குக் குடுத்த  பாக்கெட்டில் அத்தனை இருந்துச்சு. எனக்குக் குடுத்ததிலே குறைச்சலா இருந்துச்சு. அதனாலே நான் போறேன்னு ". அது வெறும் விளம்பரம் இல்லே. பெத்தவங்களுக்கு ஒரு எச்சரிக்கை மணி. இந்தக் கால குழந்தைங்க  மனசு எது எதை எப்படி யோசிக்கும்னு யாராலும் கண்டுபிடிக்க முடியறதில்லே. அந்தக்காலத்தில் பத்துக் குழந்தைங்களை பெத்து வளர்த்தவங்க வீட்டில்கூட    சொத்துக்காக எப்பவாவது சண்டை வரும். இப்போ ரெண்டு குழந்தைங்க இருக்கிற வீட்டில் கூட அல்ப விஷயத்துக்குக் கூட  சண்டை வருது. அது அவங்க தப்பா, இல்லாட்டி அவங்களை அந்த சூழ்நிலைக்குக் கொண்டு வந்துட்ட நம்ம தப்பான்னு தெரியலே. அப்படியிருக்கிறச்சே  இருக்கிற ரெண்டு குழந்தைகளில் இதுக்கு  இது போதும்னு நீயே ஏன் பேதம் பிரிச்சுப் பார்க்கிறே  ? ரெண்டு பேரையும் சமமா நடத்தப் பாரு. எங்க வீட்டு அனுபவத்தை வச்சு நான் சொல்றேன். கேட்டுக்கிறதும் கேட்காததும் உன் விருப்பம் " என்றாள்  மரகதம்.
"நீங்க சொல்றது சரிதான் மாமி .. என் சின்னப் பொண்ணு இருக்கிறாளே அவளுக்கு கோபம் எப்பவும் மூக்கு நுனியில்தான் இருக்கும். எங்களுக்கு வயசாகி ஏதோ ஒரு சூழ்நிலையில் அவ வீட்டில் போய் நின்றால் , "உங்க மூத்த பொண்ணுக்குத் தானே ஓடி ஓடி செஞ்சீங்க. சந்தோசத்தைக் கொண்டாட பெரிய பொண்ணு வேண்டும். சங்கடத்தைப் பங்கு போட்டுக்க ரெண்டு பொண்ணுகளும் வேணுமா? அதுக்கு வேறே ஆளைப் பாருங்க" ன்னு  நாக்கில் நரம்பில்லாமே ராட்ஷஷி மாதிரி பேசுவா " என்று நலிந்த குரலில் சொன்னாள்  பத்மா. சொல்லும்போதே குழந்தைகளின் பக்கமுள்ள நியாயத்தையும்  மனம் எடை போட்டது.