Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Thursday, August 08, 2019

ஏன் அழுதாய்? ஏன் அழுதாய் ? என்னுயிரே ஏன் அழுதாய் ?


Dear Viewers,
பொதுவாக அனைவருக்குமே ஏதாவது ஒரு கடவுள் மீது நம்பிக்கை இருக்கும். கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் தனது வேண்டுதல்களை, ஆசைகளை இறைவன் சன்னதியில் மனத்துக்குள்ளாகவோ வாய்விட்டோ சொல்வார்கள். சிலர் எதுவும் தோன்றாது பரமனைப் பார்த்த ஆனந்தத்தில் மெய் மறந்து நிற்பார்கள்.
நானும் அடிக்கடி கோவில் குளம் என்று சுற்றுகிற டைப் தான். ஆனால் மூலஸ்தானத்தில் இறைவனை வேண்டி நிற்கும்போது எனது மனதுக்குள் தோன்றும் உணர்வுகள் சற்று வித்தியாசமானவை.
திருச்செந்தூர் குழந்தை வேலனை, பால முருகனைப் பார்க்கும்போது, அவரை அப்படியே தூக்கி எடுத்து மடியில் வைத்து குழந்தையைக் கொஞ்சுவது போல கொஞ்ச வேண்டும் என்று மனம் பரபரக்கும்.
திருப்பதி ஏழுமலையான் முன்பாக நிற்கும் போது, "ஏன் இப்படி இருட்டுக்குள், பொந்துக்குள் அடைஞ்சு கிடக்கிறே. வெளியில் வந்து காற்றாட நில்லு" என்று அவரது கைகளைப் பிடித்து தரதரவென்று இழுத்துக் கொண்டு வந்து வெளியில் நிறுத்த மனம் ஆசைப்படும்.
அம்பாளைத் தரிசிக்கும்போது (காமாட்சி, மீனாட்சி, மற்றும் எந்த பெண் தெய்வம் சன்னதி முன் நின்றாலும்,) கால்களை மடித்தபடி அமர்ந்திருக்கும் அந்த அம்பாளின் மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டு, இடுப்பைக் கட்டி அணைத்துக் கொண்டு  மனசிலுள்ள பாரங்கள், ஆசைகளைக் கொட்டிவிட மனம் ஆசைப்படும். அதைக் கேட்கும் அன்னை, தனது  கைவிரல்களால் என் தலையை வருடி தூங்க வைக்க வேண்டும்.
விநாயகர் சிலைகளை ரோட்டோரங்களில் பார்க்கும்போது பக்திக்குப் பதில் பரிதாப உணர்ச்சி ஏற்படும்.
இன்று நேற்றல்ல. எனக்கு நினைவு தெரிந்து, கோவில்களுக்குப் போக ஆரம்பித்தபோது உண்டான உணர்வுகள் இவை. இன்றும் அதில் எந்த மாற்றமும் இல்லை.
சமீபத்தில் சயன கோலத்தில் அத்தி வரதரைப் பார்த்தபோது, "நீ ஏன்ப்பா  குளத்துக்குள்  போய் இருக்கணும். எங்கள் வீட்டுக்கு வா. உனக்கு எந்த இடம் பிடிக்குதோ அங்கே உட்கார்ந்துக்கோ. உன்னை யாரும் டிஸ்டர்ப் பண்ண மாட்டோம்"  என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டேன்.
நின்ற கோலத்தில் அத்தி வரதரைப் பார்க்க ரொம்பவும் ஆசை இருந்தது. முதன்முதலாக நின்ற கோலத்தில் அத்தி வரதரை டீவீ  சேனலில் பார்த்தபோது, அவர் கண்களில் இருந்து கண்ணீர் வழிவது போல் எனக்குத் தோன்றியது. (கண்களை மூடிக்கொண்டு மனதுக்குள் அழும்போது முகத்தில் ஒரு கவலையின் கீற்று தெரியுமே. அது போல தோன்றியது. அதன் பிறகும் தினமும் நின்ற கோலத்தில் அத்தி வரதரை டீவீ  சேனலில் காட்டும்போது அதே எண்ண அலைகள் தோன்றி என்னைக் கவலை கொள்ள வைத்தது. சயன நிலையில் பார்த்த போது பக்கவாட்டுப் பகுதி மட்டுமே தெரிந்தது. முகம் முழுமையாகத் தெரியவில்லை).
இரண்டு நாட்களுக்கு முன்பாக இதை என்னருகில் இருந்த பெண்ணிடம் வாய் விட்டே கூறினேன்.  அத்தி வரதர் அழுவது போல் என் கண்ணுக்குத் தெரிகிறது என்றேன்.
உடனே அவள், "படுத்திருந்த என்னை, எழுப்பி நிற்க வச்சுட்டாங்க. கால் வலிக்குது"னு சொல்லி அழறாரோ என்னவோ!" என்றாள் .
ஆஹா... இதுவல்லவா பதில்!
(இதுக்கு மேலே என்னத்த சொல்றது?)