Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, December 25, 2015

குழந்தைகளுக்கான குறுந்தொடர் - 20

                                             
 அச்சுப்பிச்சு அப்புமணி !
"தம்பி" என்று அழைக்கும் குரல் கேட்டு பழைய நினைவுகளில் இருந்து தன்னை சுய நினைவுக்குக் கொண்டு வந்தான் சேகர்.
"நீ இன்னும் கிளம்பலையா ?" என்று கேட்ட சேகருக்கு அசட்டு சிரிப்பொன்றை பதிலாகத் தந்த தனம், "தம்பி, நாளைக்கு நான் வேலைக்கு வர மாட்டேன்." என்றாள்.
"என்ன விஷயம் ?" 
"கோவிலுக்கு மாவிளக்குப் போடப் போகணும் தம்பி "
"அதுக்குக் காசு பணம் எதாச்சும் வேணுமா ?"
"வேணாம் ... வேணாம் ... சொல்லாமக் கொள்ளாமே வேலைக்கு வராமே இருந்திட்டா நீ கோவிச்சுக்குவே ... அதான் முன்னாடியே சொல்றேன் .."
'"சரி ... சரி ... நிதானமா போயிட்டு நல்லா சாமி கும்பிட்டுட்டு வா. நாளைக்கு நானே வீட்டில் இருந்து இவரை கவனிச்சுக்கிறேன். நீ இப்போ கிளம்பு. அவர் தூங்கட்டும். நான் போய் வெளி வேலையை முடிச்சிட்டு வந்துடறேன் " என்று சொல்லி அங்கிருந்த கிளம்பிய சேகர், ராஜுவின் வீட்டுக்கு வந்தான். 
"என்னப்பா ... உன்னோட உடன் பிறவா சகோதரனைப் பார்த்தாச்சா ? என்ன சொன்னார் ?" என்று சிரித்துக் கொண்டே கேட்டான் ராஜு 
"என்ன நக்கலா ?" என்று கேட்டு கடுகடுத்தான் சேகர்.
"அந்த ஆள் விஷயத்தில் நீ ஏன் இவ்வளவு அக்கறை காட்டுறே ? அவரைப் பத்தி எதாச்சும் சொன்னா நீ டென்ஷன் ஆயிடறே ?" என்று சமாதானம் பேசும் குரலில் கேட்டான் ராஜு.
"நீ கேட்கிற இதே கேள்வியை என்னை நானே பல முறை கேட்டுப் பார்த்துட்டேன். எவனாவது காசை வீசினால் போதும், வாங்கின காசுக்கு வஞ்சகம் பண்ணாமே  அடிதடியில் இறங்கிற நான், ஊர் பேர் தெரியாத இவர் மேலே ஏன் இவ்வளவு அக்கறை வச்சிருக்கிறேன்... இந்தப் பாரத்தை ஏன் தூக்கி சுமக்கிறேன்னு எனக்கே தெரியலே.. ஒரு வேளை இது போன ஜென்ம பந்தமோ என்னவோ !" என்று விரக்தியான குரலில் கூறினான் சேகர் 
"கல்லுக்குள் ஈரம் இருக்கும்னு சொல்வாங்க.அடியாள் வேலை பார்க்கிற உனக்குள்ளே அது இருக்குங்கிறதை என்னாலே ஏத்துக்க முடியலே. "
"நாமே எல்லாரும் பிறக்கிறப்போ குழந்தையாகத்தானே பிறந்தோம். நம்மள இப்படி மாத்தினது இந்த சமுதாயந்தானே. ஆனாலும்  நமக்கு இந்த சமுதாயத்தோட எந்த பகையும் கிடையாது.வயித்தைப் பசி கிள்ளும் போது, கையும் காலும் ஆட்டோமாடிக்கா அடிதடியில் இறங்கிடுது. இந்தப் பொழைப்புக்காக நான் வருத்தப் பட்டாலும் வெட்கப் படலே. ஏன்னா இந்த வேலையை எனக்குக் குடுத்தது இந்த சொஸைட்டி தானே ?" 
"நீயாவது யாருமில்லா அநாதையா வளர்ந்து எங்கெங்கோ போய்த் திரிஞ்சு இந்த தொழிலுக்கு வந்திருக்கிறே. எனக்கு அம்மா அப்பா அக்கா தங்கைன்னு ஒரு பெரிய குடும்பம் இருக்குது. படிச்சேன். பர்ஸ்ட் கிளாசில் பாஸ்பண்ணினேன்.வேலை கிடைக்கலே.வேலைக்காக நாயா அலைஞ்சு பேயாய் திரிஞ்சு கடைசியா ஒருத்தட்டே வேலை  கேட்டுப் போனப்போ  என் தலை எழுத்தையே அது மாத்திட்டுது."
"என்ன சொல்றே ?"
"அட ஆமாம்ப்பா ... வேலை கேட்டுப் போன இடத்திலே , அங்கே இருந்த ஒருத்தன், 'உனக்கு நான் வேலை தர்றேன். உன் நேர்மையை டெஸ்ட் பண்ணனும். இந்த பார்சலை இந்த அட்ரஸ்ஸில் குடுத்துட்டு வா'ன்னு சொன்னான். சந்தோசமா கிளம்பினேன். வாசலை விட்டு இறங்கும் முன்னாடியே போலீஸ் என்னைப் பிடிச்சிட்டுது. பிறகுதான் தெரிஞ்சுது அது கஞ்சா விக்கிற கும்பல்னு. எந்தத் தப்புமே பண்ணாமே தண்டனை அனுபவிச்சேன். ஜெயிலுக்குப் போயிட்டு வந்தவன்னு சொல்லி எவனும் எனக்கு வேலை தரலே. நேர்மையா இருந்தப்போ கையில் சல்லிக் காசு கூட இருந்ததில்லே. பாவ புண்ணியத்தைப் பத்திக் கவலைப் படாமே என்னென்னவோ செய்றோம். கையில் காசு புரளுது. இதுதான் உலகம். என் வீட்டு ஜனங்க நான் என்னவோ ரொம்பவும் மதிப்பான வேலையில் இருக்கிறதா நினைச்சிட்டு இருக்காங்க. இந்த சமுதாயம் நல்லவங்களை உருவாக்குதோ இல்லையோ நிறைய கிரிமினல்களை உற்பத்தி செய்து கிட்டே இருக்குது.வறுமை ஒளிஞ்சா  குற்றங்களும் ஒளிஞ்சிடும் . அதை செய்ய எவனும் முன்வரலே. அவனவன் பாக்கெட்டை நிரப்புறதில் தான் குறியா இருக்காங்க. எது எதுக்கோ சர்வே எடுக்கிறாங்களே, எத்தனை பேர் விரும்பி இந்தமாதிரி தொழிலுக்கு வந்தாங்கனு ஒரு சர்வே எடுத்துப் பார்க்கட்டுமே "
"இப்போ இந்த மழை வேறே வந்து நிறைய பேர் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுட்டே  " என்று கவலையுடன் சொன்னான் சேகர் .
"நாட்டில் எத்தனையோ பணக்காரங்க, எத்தனை எத்தனையோ கோடீஸ் வரங்க. அவங்களைக் கம்பைர் பண்றப்போ பாதிக்கப்பட்டவங்க ரொம்ப குறைவுதான். ஒவ்வொரு பணக்காரனும் ஒவ்வொரு குடும்பத்துக்கு உதவிக் கரம் நீட்டினால் இவங்க மேலே ஏறி வந்துடுவாங்க தானே. ஐயா .. நீ அவங்களை சும்மா உட்கார வச்சு சாப்பாடு போட வேணாம். எந்தெந்தக் குடும்பத்துக்கு எது தேவைன்னு அதைக் குடுத்து உதவினா போதுமே. அவங்க ஆயுளுக்கும் இவங்களுக்கு நன்றிக் கடன் பட்டிருப்பாங்க தானே  " என்று வருத்தம் தோய்ந்த குரலில் சொன்னான் ராஜு.
"நான் செய்ற தொழில் தப்புன்னு அப்பப்போ என்னோட மனசாட்சி சொல்லும். என்னைப் பத்திக் கவலைப் படாத நாட்டைப் பத்தி நான் ஏன் கவலைப் படணும்னு சொல்லிச்சொல்லியே அதை தூங்க வச்சிடுவேன். நம்ம மனசிலும் வேதனை இருக்குங்கிறதை யாரும் புரிஞ்சுக்க மாட்டாங்க . நாம பேசறதைக் கேட்கிறவங்க, குட்டிச்சாத்தான் வேதம் ஓதுதுன்னு சொல்வாங்களே தவிர நம்ம பீலிங்கைப் புரிஞ்சுக்க மாட்டாங்க."
"அட .. விட்டுத் தள்ளு... இவனுக நம்மைப் புரிஞ்சுகிட்டா என்ன.. புரியாமே நடந்துகிட்டா என்ன ! நமக்குப் பசின்னு வயித்தில் மணி அடிக்கிறப்போ நாம யாரையாவது அடிப்போம். " என்று சிரித்துக் கொண்டே சொன்னான் ராஜு. 
இதற்கிடையில் ....
ரயில் வே ஸ்டேஷனை விட்டு வெளியில் வந்த அப்புமணி, ஸ்டேஷன் வாசலில் நிறைய பள்ளிக் குழந்தைகள் நிற்பது கண்டு அவர்களருகில் சென்றான். தன்னுடைய வயதை ஒத்தக் குழந்தைகளைப் பார்த்ததில் அவனுக்கு இனம் புரியாத சந்தோசம் வந்தது. அப்போது அங்கு வந்த பஸ் ஒன்றிலிருந்து இறங்கிய கண்டக்டர், "எல்லாரும் ஏறி உள்ளே வாங்க " என்று சொல்ல, " எங்க மிஸ் இன்னும் வரலியே " என்று கோரஸான குரலில் சொன்னார்கள் மாணவர்கள். "அவங்க உங்களுக்கான டிபன் வாங்கப் போன இடத்தில்  அங்கே எதுவும் ரெடியாகலையாம். அதனாலே உங்களை அழைச்சுகிட்டு எங்களை அங்கே வர சொல்லிட்டாங்க.  ஏறுங்க .. ஏறுங்க !" என்று சொல்லி கண்டக்டர் அவசரப்படுத்த எல்லாக் குழந்தைகளும் பஸ்ஸில் ஏறினார்கள். அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அப்புமணி அருகில் வந்த டிரைவர், "உனக்கு தனியா சொல்லணுமா ? ஏறிப் போய் உட்காரு " என்று சொல்லி பஸ்ஸில் ஏற்றி விட பதிலேதும் சொல்லாமல் அப்புமணி பஸ்ஸில் ஏறி, கடைசி இருக்கையில் அமர்ந்து கொண்டான். அருகிலிருந்த சிறுவனிடம், "நாம இப்போ எங்கே போகிறோம் ?" என்று அப்புமணி கேட்க, "அது தெரியாமே பஸ்ஸில் ஏறினாயா ? மகாபலிபுரத்தில் நடக்கிற சித்திரப் போட்டியில் கலந்து கொள்ள சென்னையில் இருக்கிற கார்ப்பொரேசன் ஸ்கூல் ஸ்டூடெண்ட்ஸ், ஒவ்வொரு ஸ்கூலிலிருந்தும் தலா  ஐந்து  பேர்னு மொத்தம் 50 பேர்  போறோம். ஆமா ...நீ எந்த ஏரியா ?" என்று அவன் கேட்கும்போதே,"பஸ் கிளம்பும் முன்னே பிரேயர் பண்ணனும். எல்லாரும் அமைதியா கண்ணை மூடி உட்காருங்க" என்ற அதட்டலான குரல் கேட்டு அந்த சிறுவன் வாயையும் கண்களையும் மூடிக் கொண்டான். 
----------------------------------------------------------  தொடரும் --------------------------------------------------- 

Friday, December 18, 2015

குழந்தைகளுக்கான குறுந்தொடர் .. 19

                                            
  அச்சுப்பிச்சு அப்புமணி !
இரவு முழுக்க தூங்காமல் வீட்டு வாசலிலேயே தவம் கிடந்தாள் அம்மா. ஏதோ விளையாட்டாகத்தான்  சொல்கிறான், அங்கே இங்கே சுற்றி விட்டு வீட்டுக்கு வருவான் என்று நினைத்திருந்த அம்மாவின் நம்பிக்கை வீண் போனது. இதற்குள் அக்கம் பக்கத்து வீட்டினர் அங்கே வந்து விட்டார்கள்.
"என்னம்மா நீங்க .. வாசல் கதவை திறந்து வச்சிட்டு தெருவை வெறிச்சுப் பார்த்துட்டு நிக்கீங்க.  தெரு வாசல் தெளிச்சு கோலம் கூட போடலியே  ? உங்களுக்கு உடம்புக்கு முடியலியா ? நாங்க எது வேணும்னாலும் செஞ்சு தர்றோம். என்ன வேணும் சொல்லுங்க ?" என்றார்கள்.
இதைக் கேட்டு வாய் விட்டு "ஓ" என்று  பெரிய சத்தத்துடன் அழுத அம்மா, "எனக்கு என் பிள்ளை வேணும் " என்றாள் 
அப்போதுதான் அப்புமணி அங்கே இல்லாததைக் கவனித்த அவர்கள், "உங்க  பிள்ளை எங்கேம்மா? ஆளையே காணும்.ஒரு நிமிஷம் கூட சும்மா இராமே சுத்தி சுத்தி வருவானே " என்று கேட்டார்கள்.
அவர்களிடம் நடந்த விஷயத்தை சொன்னாள் அம்மா.
"நல்ல ஆளும்மா நீ. அவன் ஒரு ரெண்டுங் கெட்டான். உலகத்தை சுத்திப் பார்க்கப் போறேன்னு அவன் கிளம்பினால், நீ அவனைக் கண்டிக்கிறதை விட்டுட்டு கையில் காசு குடுத்து அனுப்பினாயாக்கும். இப்போ அழுது என்ன பிரயோஜனம்  ? " என்று கேட்ட வயதான பெரியவர் ஒருவர், "டேய் . ஆளுக்கொரு பக்கம் போய்த் தேடுங்கடா .. பக்கத்து டவுனுக்கு ரெண்டு பேர் போய்த் தேடுங்க" என்று உத்தரவு போட, சைக்கிளிலும், வண்டியைக் கட்டிக் கொண்டும் அப்புமணியை தேடி ஆளுக்கொரு பக்கம் ஓடினார்கள் . அப்புமணி 'உலகத்தைச் சுற்றிப் பார்க்க'ப் போவதாக சொல்லி  வீட்டை விட்டுப் போன விஷயம் அந்த கிராமம் முழுக்கப் பரவியது. 
சென்னையில் உள்ள மயிலாப்பூரின் ஒரு பகுதியில் ..... 
வீட்டுக்குள் நுழையும் போதே,"தனம் ... அண்ணன் சாப்பிட்டாரா ?" என்று கேட்டான் சேகர்.
"ஆமாம் தம்பி .. சாப்பிட்டுட்டு கொஞ்ச நேரம் உட்கார்ந்திருந்தார். இப்ப கொஞ்சம் முன்னாடிதான் தூங்கப் போனார்" 
"தூங்கட்டும் .. எழுப்பாதே .. செலவுக்குப் பணம் ஏதாது வேணுமா ?"
"வேண்டாம் தம்பி ... போன வாரம் நீ குடுத்த காசில் வீட்டு சாமான் வாங்கினது போக மீதி பணம் கையில் இருக்குது. அது இன்னும் ஒரு பத்து நாளைக்குத் தாக்குப் பிடிக்கும்.. தம்பி..நான் ஒண்ணு கேட்டால் நீ கோபப் பட மாட்டேதானே  ?" என்று கேட்டாள் தனம்.
"கோபம் வராதபடி கேள்வியைக் கேளு "
"நான் இங்கே வேலைக்கு சேர்ந்து முழுசா ஒரு மாசம் கூட முடியலே. நீ இந்த போர்ஷனுக்குக் குடி வந்து ரெண்டு மாசந்தான் ஆகுதுன்னு சொல்றாங்க. எனக்கு உன்னைப் பத்தி அதிகம் தெரியாது. அக்கம்பக்கத்து வீட்டு மனுஷங்க சொல்றதை வச்சு நான் தெரிஞ்சுகிட்ட விஷயம் , இவரு உன்னோட சொந்த அண்ணன் இல்லேங்கிறது. கூடப் பிறந்தவங்களை, அவ்வளவு ஏன் .. பெத்தவங்களைக் கூட பிள்ளைங்க கவனிக்காத இந்தக் காலத்திலே உனக்கு சொந்தபந்தமில்லாத, சுய நினைவு இல்லாத யாரோ ஒருத்தரை உன்கூடவே வச்சு   கவனிக்கிறியே  அது ஏன் தம்பி ?"
"அதுதான் எனக்கும் தெரியலே. காசுக்காக எந்த வேலையும் செய்றவன் நான். ஆனால் இவரை இவர் போக்கில் விட்டுட மனசு வரலே " என்று விரக்தியுடன் சொன்னான் சேகர்  
"கடைசிவரை இவருக்கு பழைய ஞாபகமே வராமே போயிட்டா ?" என்று தனம் கேட்க, "கடைசிவரை இவர் என் கூட இருப்பார்" என்று கொஞ்சம் கூட தயக்கம் இல்லாத குரலில் சொன்னான் சேகர். 
"பண்றது அடாவடி வேலை.. அதுக்கு பரிகாரமா இவரை வச்சுப் பாது காக்கிறியா ? " என்று கேட்டாள் தனம். 
"இதோ பாரு.... இதுதான் உன் லிமிட். வந்தோமா, வந்த வேலையைப் பார்த்தோமா, கிளம்பிப் போனோமான்னு இருக்கணும் ... கேள்வி கேட்கிற வேலை எல்லாம் என்கிட்டே வேண்டாம்" என்று கோபமாக சேகர் சொல்ல, " நீ எப்படியோ போ .. என் வேலை முடிஞ்சிட்டுது. நான் கிளம்பிப் போறேன்" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து போனாள்  தனம் .
எதோ ஒரு வேகத்தில் சேகர் பேசி விட்டாலும் அவன் நினைவு கடந்த காலத்தையே சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தது. 'ஆந்திரா ஜெயிலில் இருந்து நான் தப்பி ஓடி வரும்போது எனக்கு பதினெட்டு வயசு இருக்குமா ' என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்ட சேகர், 'இருக்கும் ' என்று பதிலும் சொல்லிக் கொண்டான். போலீஸ் கண்ணில் படாமல் ஒரு மறை விடத்தில் ஒளிந்திருந்த நான், யார் கண்ணிலும் படக்கூடாது என்ற நினைப்பில் ஓடும்போதுதானே இவர் மீது வேகமாக மோதினேன். "கங்கு  " என்று அலறிக் கொண்டே கீழே விழுந்தார் இவர். அதைக் கூட பெரிதாக நினைக்காமல் அங்கிருந்து ஓடிய நான் அன்று இரவு முழுதும் இவரைப் பற்றித் தானே நினைத்தேன். என்னோட சின்ன வயசில் என்னை வளர்த்து என்னைப் பிச்சை எடுக்கப் பழக்கிய தாத்தா   என்னை "கங்கு"னு தானே கூப்பிடுவார்.'நான் கும்பிடற கங்காதரன் நீ 'னு அடிக்கடி சொல்வார். தாத்தா செத்த பிறகு  நான் திருட்டுத் தொழிலுக்கு வந்தேன் .. நான் எங்கே வந்தேன் ? மற்றவங்க என்னை அந்தத் தொழிலுக்குப் பழக்கினாங்க. இவர் "கங்கு" என்று சொல்லி கீழே விழுந்த போது தாத்தாவே விழுந்தது போலப் பதறிப் போன நான் அவரை அங்கேயே விட்டு விட்டு வந்து விட்டேனேனு நினைச்சு பழையபடி அதே இடத்துக்கு ஓடினேன். மயக்க நிலையிலேயே இவர் இருந்தார். அவரை செக் பண்ணினபோது அவர் பையில் நிறைய பணம் இருப்பது தெரிந்தது. அந்தப் பணத்தில்தானே அவருக்கு நான் வைத்தியம் பார்த்தேன். அவருக்கு நினைவு திரும்ப பல நாட்கள் ஆகும்னு டாக்டர்கள் சொன்னார்கள்.  பத்து வருடங்கள் ஆகியும் இவருக்கு நினைவு திரும்பலியே.பேசும் சக்தியையும் இழந்து நிற்கிறாரே. அன்றைக்கு இருந்த சூழ்நிலையில் எல்லாத் தெலுங்கு பேப்பர்லேயும் விளம்பரம் குடுத்தும் இவரைத் தேடி யாரும் வரலியே. கைக்கூலி வாங்கி கிட்டு எத்தனையோ பேரை அடிச்சு துவைச்சிருக்கிறேன். இவர் மீது நான் தெரியாமல்தான் வந்து மோதினேன். ஆனாலும்  இவரை அப்படியே விட மனமில்லாமல் இன்று வரை நான் போகும் இடங்களுக்கெல்லாம் இவரை சேர்த்து சுமக்கிறேனே, அது ஏன் ? என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டிருந்தான் சேகர். 
------------------------------------------------- தொடரும் -----------------------------------------------

Saturday, December 12, 2015

குழந்தைகளுக்கான குறுந்தொடர் - 18

                                           
    அச்சுப்பிச்சு அப்புமணி !
"அம்மா, நான் உலகத்தைச் சுத்திப் பார்த்துட்டு வந்துடுதேன் " என்று கைகளில் பையைப் பிடித்தபடி அப்புமணி சொன்னபோது, ஒருபுறம் அழுகையும் மறுபுறம் ஆற்றாமையும் அம்மாவுக்குள் எழுந்தது, 'இப்படி ஒரு அசடாக இருக்கிறானே என்பதை நினைத்து.
"அப்புமணி , கையில் ஒரு குடை வச்சுக்கோயேன். மழை வரும்போல இருக்குதே !" என்று கவலையுடன் சொன்னாள் அம்மா.
"அம்மா , இன்னிக்கு டீவீயில் ரமணன் வந்தாரா ?" என்று அப்புமணி கேட்க, "ஏன் கண்ணா ? அம்மா இன்னும் டீவீ ஸ்விட்சை 'ஆன்' பண்ணவே இல்லையே. ஏன் கேட்கிறே? எந்த ரமணன் ?" என்று கேட்டாள் அம்மா.
"அதான்ம்மா .... மழையைப் பத்தி சொல்வாரே அவர். அவர் டீவீயில் வந்தால் மழை வரும். அவர் வராட்டா மழையும் வராது" என்றான் அப்புமணி.
"எதுக்கும் கையில் இருக்கட்டும்"என்று சொல்லி  குடையைக் கொண்டு வந்து கொடுத்தாள் அம்மா. அப்புமணி வீட்டை விட்டுக் கிளம்பிய அதே நேரம் .... சென்னையில் உள்ள ஒரு வீட்டில் ;;;;
"தலைவா .... இன்னிக்கு எந்த ஏரியா போகணும் ?" என்று ஒருவன் கேட்க , "இந்த ஏரியாதான்னு கணக்கு வழக்கெல்லாம் கிடையாது. ஜனங்க அதிகமா நடமாடற இடத்தில் ஏதாவது ஒரு கலகம் , கலாட்டா பண்ணனும். இல்லே ராத்திரி நேரத்தில் ஏதோ ஒரு ஏரியாக்குப் போய் அங்குள்ள ஏதாது சிலையை உடைக்கணும். இல்லாட்டா கோயில் உண்டியலை உடைச்சு திருடணும். அவ்வளவுதான் " என்றான் மற்றவன் .
"தலைவா ... எனக்கு ஒண்ணே ஒண்ணு மட்டும் புரியலே தலைவா "
"ஒண்ணே ஒண்ணு மட்டும் தானே  புரியலே. மத்ததெல்லாம் புரியுது தானே. அது போதும். கம்முனு வா "
"தலைவா "
"அட .... கம்முனு வா கசுமாலம். சும்மா தொனதொனணு பேசிட்டு இராதே . சொல்றதை மட்டும் செய்"
"தலைவா ... நான் தொழிலுக்குப் புதுசு தலைவா "
"அட ... ஒண்ணு விட்டேன்னா கன்னம் வீங்கிப் போயிடும். ஒரு வெங்காயத்தை எடு. அதோ அங்கே கொஞ்சம் கும்பலா ஜனக் கூட்டம் தெரியுது பாரு. அங்கே வீசு " என்று தலைவன் சொல்ல, தொண்டன் அப்படியே செய்தான். அங்கே நின்று கொண்டு  இருந்த அத்தனை பேரும் தலை தெறிக்க அந்த இடத்தை விட்டு ஓடினார்கள். ஒரே கூச்சல் . குழப்பம். அன்றைய மாலைப் பத்திரிக்கைகளில் "சென்னை,சைதாப் பேட்டையருகே குண்டுவீச்சு..அதன் பின்னணி என்ன? குற்றவாளிகளைப் போலீஸ் தேடுகிறது " என்று விரிவான செய்தி  வெளியாகி இருந்தது.
அன்று இரவு.....
"இன்னாடா போட்டிருக்கு பேப்பர்லே ?"
" காலைலே வெங்காயம் வீசினோம் தானே ! நம்மள போலீஸ் தேடுதாம் தலைவா "
"எங்கெல்லாம் தேடுதாங்கனு போட்டிருப்பாங்களே !"
"அட ... ஆமாம் தலைவா "
"எந்தெந்த இடம்னு நோட் பண்ணு. நாம அந்தப் பக்கமே தலை காட்டக் கூடாது "
"நாமதான் வீசினதுன்னு அவங்களுக்குத் தெரியாதே தலைவா. அப்புறமாட்டி இன்னாத்தை வச்சு நம்மள தேடுதானுக ?"
"சரி .. அவனுக டூட்டியை அவனுக பார்க்கட்டும். நாம மத்த வேலையைக் கவனிக்கலாம். "
"நமக்கு யாரிட்டேயும் பகை கிடையாது. பிறகு இன்னாத்துக்கு நாம வெங்காயம் வீசினோம்.?"
"கசுமாலம்.  புறம்போக்கு.... நமக்கு என்ன உத்தரவோ அதை செய்யணும். கேள்வி கேட்கிற வேலை எதுவும் எங்கிட்டே வச்சுக்காதே. ஒருவாட்டி வெங்காயம் வீசினா நம்ம கைமேலே ஆயிரம் தருவானுக. அதை கை நீட்டி  வாங்கினோமா .. அனுபவிச்சோமானு இருக்கணும். "
"சரி தலைவா "
சென்னையின் வேறொரு பகுதியில் .... ஒரு மாடி வீட்டில் ...
"நம்ம பசங்க விளையாடினது இன்னிக்குப் பேப்பர்லே வந்துட்டுது. நாளைக்கு சிலைகளை சேதம் பண்ண அதே பார்ட்டியை அனுப்பவா ராஜு?  இல்லாட்டா நீ வேறே யாரையாவது செட் பண்ணி இருக்கியா ?"
"வேண்டாம் சேகர் .. கையில் காசு வந்ததும் அந்தப் பார்ட்டி இந்தப் பக்கம் வராது. வேறே ஆளுங்களைத்தான் அனுப்பணும்... நவீன்.. பிரவீன் ரெண்டு பேரும் இப்போ எந்த ஏரியா ?"
"சவுத் சைட் அனுப்பினேன் .. தகவல் எதுவும் வரலே.  ஒருவேளை மாட்டிக் கிட்டானுகளோ என்னவோ ! அப்படி எதுவும் நடந்திருந்தால் கூட இந்நேரம் தகவல் வந்திருக்கும்.  பிரவீன் ரொம்பவும் சின்ஸியர் .. அவன் என்ன ஆனான்னு தெரியலையே .. பசங்க வந்தால் கையில் காசைக் குடுத்து அனுப்பு. பேரம் பேசிட்டு இருக்காதே. சரி ... நான் வெளியில் போயிட்டு வர்றேன் ராஜு... "
"எங்கே போறே ? உடன்பிறவா சகோதரனைப் பார்க்கவா ?"
"இந்தக் கிண்டல்தானே வேண்டாங்கிறேன்." என்று சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியேறினான் சேகர்.
மறுநாள் ரயில் டிக்கெட் இல்லாமலே சென்னை வந்து சேர்ந்தான் அப்புமணி.அப்படி ஒன்று உண்டு என்பதுகூட அப்புமணியின் கவனத்துக்கு வரவில்லை. அவனது நல்ல நேரமா அல்லது ரயில்வே ஊழியரின் கவனக் குறைவா .... சரி ... எதோ ஒன்று. அப்புமணியிடம் யாரும் பயண சீட்டு செக் பண்ண வரவே இல்லை. 
ரயில்வே  காண்டீனைப் பார்த்ததும் காபி குடிக்க ட்ரவுசர் பைக்குள் கையை விட்டு பணத்தை எடுத்தான். அப்போது அப்புமணியின் அம்மா, காவல்துறை அதிகாரியின் கவனத்துக்கு என்று முகவரியிட்டுக் கொடுத்த கடிதம் கீழே விழுந்து காற்றில் பறந்து போனது.. அதை அப்புமணி கவனிக்கவில்லை .
------------------------------------------- தொடரும் -------------------------------------------------------

Thursday, December 10, 2015

Dear Viewers,

                                                         மாமழை போற்றுதும் !!
எனது கருத்துக்களை இங்கு பதிவு செய்கிறேன். எந்தவொரு விஷயத்துக்குமே எதிர்மறையான ஒரு கருத்து உண்டு. ஒவ்வொரு பொருளுக்கும் மறுபக்கம் உண்டு. எனக்கு சரி என்று  தோன்றுவது உங்களுக்குத் தப்பான ஒன்றாக தோன்றலாம். எனது கருத்துக்களை ஏற்றுக் கொள்வதும் மறுப்பதும் உங்கள் இஷ்டம்.
மழை நிலவரத்தை 2015, நவம்பர் 30க்கு முன், நவம்பர் 30க்குப் பின் என்று இரண்டு பகுதிகளாகப் பிரிக்கலாம். 18.11.2015 ல் இதே ப்ளாக்கில் என்னுடைய மழை நாள் அனுபவங்களைப் பதிவு செய்திருந்தேன். அதன் ஒரு தொகுப்பு 15.12.2015 அவள் விகடனிலும் வெளியாகியுள்ளது. டிசெம்பர் மாத மழையில் எங்கள் பிழைப்பு நாய்ப் பிழைப்பாக இருந்தது. அதைக் compare பண்ணும்போது 18.11.2015ல் பதிவான விஷயங்கள் அனைத்துமே ஒரு தூசிக்கு சமம்.
கீழே வருவது எனது எண்ணங்கள் : 
1. இதே ப்ளாக்கில் 07.12.2015 அன்று ஒரு புகைப்படத்துடன் எனது நன்றியைப் பகிர்ந்திருக்கிறேன். அந்தப் படம் எடுக்கப் படுவதற்கு சுமார் ஒரு மணி நேரம் முன்பாக தாம்பரம் சானடோரியத்திலிருந்து எங்களைத் தேடி வந்த எனது தம்பியும், எனது மூத்த சகோதரியின் பையனும் சிரித்துக் கொண்டே சொன்ன ஒரு விஷயம். "அக்கா, நானும் சிவாவும் டூ வீலரில் வந்தோம். உங்க ஏரியாவுக்குள் வர முடியலே. வண்டியை ஒரு ஓரமா போட்டுட்டு படகுக்கு காத்திருந்தோம். படகு வந்ததும் கையில் காமிரா வச்சிட்டு நின்னுட்டு இருந்த ஒருத்தன் முதலில் ஏறினான். அவன் பத்திரிக்கைக்காரனா இல்லாட்டா ஏதாவது சேனல் ஆளா என்பது தெரியலே. அவன்   ஏறினதும், கீழே நின்னுட்டு இருந்த ஒருத்தன் , 'நாங்க இங்கே சாகிறோம். உனக்கு படந்தான் முக்கியம்மா போச்சான்னு கேட்டு அவனை அடிக்கவே போயிட்டான். உடனே மற்ற கூட்டமும் கத்த ஆரம்பிச்சதும் அவனும் பயந்து போய் கீழே இறங்கிட்டான். "
அந்தப் பேச்சு நடந்து கொண்டிருக்கும்போதே பரிசல் கொண்டு வந்து முஸ்லிம் முன்னேற்றக் கழக சகோதரர்கள் எங்களைப் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்து சென்றார்கள். கிட்டத் தட்ட ஒரு கிலோ மீட்டர் தூரம். நாங்கள் பரிசலில் உட்கார்ந்து வர, 10 பேருக்கும் மேலாக பரிசலைத் தள்ளியபடி வந்தார்கள். நாங்கள் கீழே இறங்கி வரும்போது எடுக்கப்பட்டதுதான் 07.12.2015 அன்று நான் பதிவு செய்திருந்த படம். அந்தப் படம்தான் நாங்கள் உயிரோடு இருப்பதை எங்கள் உறவுகளுக்கு அடையாளம் காட்டி இருக்கிறது .
(ஒருத்தரைக் காணும்னு தேடும்போது அவர் கிடைத்து விட்டால் கிடைப்பது ஒருவித சந்தோசம்.  ஏதாவது விபரிதம் நடந்து முடிந்து  விட்டது என்கிற விஷயம் தெரியவந்து விட்டால் அது ஒருவித சோகம். இருக்கிறார்களா இல்லையா என்பது தெரியாமல் மனம் அலை பாய்வதை வெறும் வார்த்தைகளால்  விவரிக்க முடியாது. போனில் யாருடனும் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் எனது தங்கையும் எனது மூத்த சகோதரியும் இரவு முழுக்க பரிதவித்துப் போயிருக்கிறாங்க . மறுநாள் காலையில் எனது அக்கா வீட்டுக்குப் போய் "நாங்கள் இருக்கிறோம்"னு அட்டெண்டென்ஸ் கொடுத்துட்டோம். தினமலரில் வெளியான இந்தப் படத்தைப் பார்த்த பின்புதான் எனது தங்கை நிம்மதி அடைந்திருக்கிறாள்.
இதனால் நான் சொல்ல வருவது என்னவென்றால் , "அறிவு ஜீவிகளே, உங்கள் பகுதி சம்பவங்களை ஒருவன் படம் பிடிக்க வருகிறான் என்றால், அது அவர்களுக்கு லாபமோ நஷ்டமோ அதை விட்டுத் தள்ளுங்கள் . பொது மக்களாகிய நமக்கும் அது பலவிதத்தில் நன்மை செய்கிறது என்பதை மறந்து விடாதீர்கள்.  
2. அனைத்து மத கடவுளர்களும் சேர்ந்து ஒரு மீட்டிங் போட்டார்கள். அந்த மீட்டிங்கில் ஒவ்வொரு கடவுளும் சொன்னவொரு விஷயம், கவலைப் பட்டவொரு விஷயம் என்னவென்றால் : இந்த மனிதர்கள் எல்லோரும் நம்மை  நம்புகிறார்கள் . வழிபடுகிறார்கள். நம்முடைய பெயரை சொல்லி ஏன் இப்படி அடித்துக் கொள்கிறார்கள் என்பது தெரியவில்லையே என்பதுதான். கடவுளர்கள் மனிதர்களுக்காக கண்ணீர் விட்டார்கள். அந்தக் கண்ணீர், மாமழையாகப் பொழிந்து அனைத்து மனித இதயங்களையும் ஒன்று சேர்த்து விட்டது. மழையைக் கண்டு மனிதர்கள் அழுதார்கள். ஆனால் மனிதர்களுக்கு ஏற்பட்ட நேசத்தை நினைத்து கடவுளர்கள் சந்தோசப் பட்டார்கள். யார் யார் எந்த மதம் எந்த ஜாதி என்றெல்லாம் கவலைப் படவில்லை. அழுகிற விழிகளைத் துடைத்து விட வேண்டும் என்பதுதான் அத்தனை பேரின் மனதிலும் எழுந்தது. இயற்கை, தனது வலிய கரங்களால் மனிதர்களை அடிக்கும் போதுதான் மனிதர்கள் ஒன்று படுவார்கள் என்றால்  "ஏ மாமழையே  நீ அவ்வப்போது வந்து உன் வேகத்தைக் காட்டி விட்டுப் போ. மாமழை போற்றுதும் யாம் !!"
3.இந்த மழை நிறைய விஷயங்களை நமக்குப் புரிய வைத்துள்ளது. விவசாயிகள் ஏழை பாழைகள் வயிற்றில் நெருப்பைக் கொட்டிய மழை, கூலித் தொழிலாளிகள் வாகன ரிபைர் செய்கிறவர்கள் வயிற்றில் பாலை வார்த்து விட்டுப் போயிருக்கிறது.  எங்களை பரிசலில் கொண்டு வந்து சேர்த்தவர்களிடம் (முஸ்லிம் முன்னேற்றக் கழக சகோதரர்கள்) 500 ரூபாயைக் கொடுத்தபோது அதை வாங்க மறுத்து விட்டார்கள்."தப்பாக நினைக்காதீங்க. நீங்க என் பிள்ளை மாதிரி. மழைத் தண்ணீரில் நிக்கிறீங்க. சூடா ஒரு வாய் காபி குடிக்க வச்சுக்கோங்க " என்றேன். "இல்லேம்மா. எங்களுக்கான சாப்பாடு தனியாக தயாராகிறது . வேண்டாம் " என்று சொல்லி வாங்க மறுத்து விட்டார்கள்.  அவர்கள் எங்களை இறக்கி விட்ட இடத்திலிருந்து எனது சகோதரியின் வீடு 3 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. "இங்கேயே இருங்க. வீட்டில் போய்க் காரை எடுத்துட்டு வந்துடறேன்" என்று சொல்லிவிட்டு எனது தம்பி அங்கிருந்து சென்று விட்டார். தாம்பரம் பஸ் நிலையம் அருகில் உள்ள கோவில் முன் நின்றோம். கோவிலுக்கு இருபுறமும் பழக்கடை . நாங்கள் தள்ளாடி வருவதைப் பார்த்த ஒரு பழக்கடைக்காரர், பழம் வைக்கும் பிளாஸ்டிக் கூடையைக் கவிழ்த்துப் போட்டு எனது அம்மாவை அதில் உட்கார சொன்னார். சிறிது நேரத்தில் மழை ஆரம்பித்து விட்டது. அம்மா குளிரில் நடுங்க ஆரம்பித்து விட்டாள். அருகிலிருந்து மற்றொரு கடையில் கூடாரம் இருந்தது. அங்கு மழைத்தூறல் விழவில்லை. நான் அவனிடம் போய் " இந்த அம்மாவை கொஞ்சநேரம் இங்கு உட்கார வைக்கிறேன் .இப்போ கார் வந்துடும். நாங்க போயிடுவோம் " என்றேன். "வியாபாரத்துக்கு இடைஞ்சலாக இருக்கும் " என்று சொல்லி மறுத்து விட்டான். தம்பி வருவதற்குள் அம்மா போய்ச்சேர்ந்துவிடக் கூடாதே என்ற பயத்தில்  ஒரு ஆட்டோ பிடித்து வீட்டுக்கு வந்தோம். 3 கிலோ மீட்டர் தூர பயணத்துக்கு நான் கொடுத்த பணம் 500 ரூபாய். (ப்ளைட் செர்விஸ் இருந்திருந்தால் அதில் போயிருந்திருக்கலாம்).ஒரு சில நிமிட நேரங்களுக்குள்ளாக இருவேறு மாறுபட்ட குணமுடைய மனிதர்களை சந்திக்கும் வாய்ப்பை மாமழை தந்தது
வீட்டை சரியாகப் பூட்டினோமா இல்லையா என்பதுகூட தெரியாமல் பரிசலில் ஏறிவிட்டதால்  (நான் எங்கே ஏறினேன். சிறுகுழந்தையை தூக்குவது போல எங்களைத் தூக்கி பரிசலில் வைத்தார்கள். என் காலில் இருந்த செருப்பு கழண்டு ஓடியது. அதை எடுக்கக் குனிந்தேன். "இருங்க." என்று சொல்லி கொஞ்சமும் கூச்சப்படாமல் அதைக் கைகளால் எடுத்துக் கொடுத்தார்கள். என்னுடைய அம்மா செருப்பைக் கைகளில் தூக்கக் கூட நான் அறுவெறுப்பு அடைவேன். நமக்கு கொஞ்சம் கூட ரத்த சம்பந்தம் இல்லாத யாரோ ஒருவர் இப்படி செய்கிறார்களே என்று நினைக்கும் போது  மனதில் ஒரு பாரம் ஏறியது.) மறுநாள் வீட்டைப் பார்ப்பதற்காக வந்தோம். சிறிது நேரம் சுத்தம் செய்யும்போதே, ஏரித் தண்ணீர் திறக்கப் பட்டுள்ளது. எல்லாரும் இந்த இடத்தை விட்டு ஓடுங்க என்ற அறிவிப்பு வந்ததும்  ஒரே ஓட்டமாக பஸ் ஸ்டாப் வந்தோம். எல்லா ஆட்டோவும் full  லோடு. அந்த வழியாக வந்த ஒரு "குட்டி யானை " எங்களுக்கு இடம் கொடுத்தது. தாம்பரம் வந்ததும் பணம் கொடுத்தோம். வாங்க மறுத்து விட்டார்கள்.
இன்று காலையில் முஸ்லிம் நண்பர்கள் சிலர் வந்து ஒவ்வொரு வீட்டுக்கும் போர்வை கொடுத்தார்கள். அவர்களிடம் "நீங்கள் எந்த அமைப்பை சேர்ந்தவர்கள் என்று கேட்டேன். "ஏன் ?" என்ற கேள்வி வந்தது.  என்னுடைய ப்ளாக்கில் இதை பிரசுரித்து நன்றி சொல்வேன் என்றேன். உங்கள் நன்றி எங்களுக்கு தேவையில்லை என்று சொன்னார்கள். நான் ரொம்பவும் வற்புறுத்தியபோது,"மீனம்பாக்கத்தில் இருந்து வருகிறோம்"என்றார்கள்.கோவிலுக்கு  ஒருtube light வாங்கிப் போட்டால் கூட  அந்த லைட்டின் ஒளியே தெரியாதபடி அதை வழங்கிய வரின் முகவரி அங்கு பதிவு செய்யப்பட்டிருக்கும். வீடு தேடி வந்து உதவி விட்டு பேரைக் கூட சொல்லாமல் ஓடுகிறார்கள். இப்படியும் சில மனிதர்கள்.  இந்த இரண்டு நாட்களில் ஆட்டோவுக்கு 12 கிலோ மீட்டர் தூர பயணத்துக்கு நான் செலவு செய்தது 1250 ரூபாய். 
வீட்டுக்கு அருகிலேயே உள்ள கிறிஸ்தவ அமைப்பும் token கொடுத்து அங்கிருந்த பொருட்களை  எல்லோருக்கும் வழங்கிக் கொண்டிருக்கிறது. நிவாரணப் பொருட்கள் கிடைக்காமல் சிலர் தவிக்க, (குறிப்பாக பால் பாக்கெட்) வீட்டுக்குள் யாராவது இருக்கிறார்களா இல்லையா என்பது தெரியாமல்  வீட்டு வாசலில் பால் பாக்கெட்டைப் போட்டு விடுகிறார்கள். எனது சகோதரியின் வீட்டிலிருந்து எங்கள் வீட்டுக்கு நான் வரும்போது எனது வீட்டு வாசலில் 3 பாக்கெட் பால் கிடந்தது. ஆனால் எதையும் use பண்ண முடியாமல் இருந்தது.  அந்தந்த ஏரியாவுக்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாதவர்கள் கூட பாதிக்கப்பட்ட இடங்களில் நின்று கொண்டு   பொருட்களை வாங்கி செல்லும் கொடுமையும் நடக்கிறது.  
4.அரசு ஊழியர்களை அனைவரும் குறை சொல்வதை டீவீயில் பார்த்தேன். ஒருசில இடங்களில் அவர்கள் இருந்திருக்கிறார்கள். பலருக்கு அது தெரிய வரவில்லை. எங்கள் குடும்ப நண்பர் ஒருவரிடம் முன்பின் தெரியாத ஒரு முஸ்லிம் அமைப்பு உதவிக்கு வருகிறது. இந்த பகுதி   government officials  யாரும் கண்ணிலேயே படவில்லையே என்றேன். அதற்க்கு அவர், உங்களை பரிசல் இறக்கிவிட்ட இடத்தில் நின்று கொண்டு இருந்தது ஒரு I.A.S. OFFICER. பக்கத்திலேயே ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் மப்டியில் நின்று கொண்டிருந்தார். அவங்க யாரும், அவங்க யாருங்கிறதை காட்டிக்கலே, அவ்வளவுதான்   என்றார். 
ஒரு சிலர், அவங்களுக்கு சம்பந்தமே இல்லாத இடத்தை   ஆக்கிரமிப்பு செய்தபோது,  இவர்களுக்கு சாதகமாக எல்லாம் செய்து கொடுத்த அரசு ஊழியர்கள் அப்போது இவர்களுக்கு கடவுளாகத் தெரிந்தார்கள். ஒரு சிலரின் பேராசையால் ஒட்டு மொத்த ஊரும் பாதிக்கப் படுகிறதே அதைப் பற்றி யாருக்கும் கவலை இல்லை. சென்னையில் எத்தனையோ ஏரிகள் இருந்ததாக கணக்கெடுப்பு சொல்கிறது. அதையெல்லாம் திரும்பவும் கொண்டு வருவோம் என்று களத்தில் இறங்கினால் அதற்க்கு எத்தனை பொது மக்கள் ஆதரவு தருவார்கள். எத்தனை கட்சிகள் ஆதரவு தரும் என்பதை யாராவது கேட்டு சொல்லுங்களேன். 
ஆறுமாதத்தில் வீணாகி விடும் லேப்டாப் , அடுப்பு லொட்டு லொசுக்கு எல்லாத்துக்கும் சாலை மறியல் பண்ணின ஜனங்களில்  எத்தனை பேர் உங்கள் பகுதியின் சுத்தம் சுகாதாரம் பற்றி கவலைப் பட்டீர்கள்? என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்.  
இளைய சமுதாயமே, மனித நேயம் உள்ளவர்களே,
இனிமேலாவது ஒருத்தர் மேலே ஒருத்தர் குறை சொல்லி, தான் மட்டும் தப்பிக்கிற பொழைப்பை மறந்துவிட்டு இனி வரும் காலங்களில் என்ன செய்யலாம் என்பதை யோசிப்போம்.  
பிளாஸ்டிக் பைகள் மழைநீர் தேக்கத்துக்கு ஒரு காரணமாக சொல்லப் படுகிறது. அந்த மாதிரி பைகளில் பேக் செய்யப் படும் பொருள்கள்தான் சிந்தாமல் சிதறாமல் பாதிக்கப்பட்டோர் கைகளுக்குப்போய்ச் சேருகிறது. வீடுகள் மட்டுமல்ல. வணிக வளாகங்கள், சிறு கடைகளும் பாதிக்கப் பட்டுள்ளது. அந்த இடங்களில் பிளாஸ்டிக் பைகளில் உள்ள பொருட்கள் தப்பி விட்டன. மற்றவை அழிந்து விட்டன. அதனால் பிளாஸ்டிக் பை பிரச்சினைக்கு மாற்று வழி கண்டு பிடியுங்கள்.
பால் இல்லாமல் தவித்தோர் பல ஆயிரம் பேர் . மூலாதாரமான பசு என்ன ஆச்சு என்பது பற்றி எத்தனை பேர் யோசித்தோம். பசுவை லட்சுமி என்போம். நம் உயிர் காக்க நாம் முனைந்த வேளையில் லட்சுமி பற்றி கவலைப் பட்டோர் எத்தனை பேர். பருவ நிலை மாற்றத்தால் இதே கதை மீண்டும் தொடரும் என்கிறார்கள் . அதற்க்கு முன்பாக லட்சுமியைக் காப்பது எப்படி என்று யோசனை செய்து வையுங்கள்.  
உதவிப் பொருட்கள் வழங்கப் படும்போது "வலுத்தவர்கள்", தங்கள் கையில் கிடைப்பதை சுருட்டிபங்கு போட்டுக் கொள்கிறார்கள். "இளைத்தவர்கள்"  மீதும் கருணை காட்டுங்கள். ஒரு பறவையிடம் உள்ள பண்பு கூட மனிதர்களிடம் இல்லை என்று நினைக்கும்போது வேதனையாக இருக்கிறது. 
எனக்கு நிறைய காக்கா தான் ப்ரெண்ட்ஸ். அதுங்களுக்காக snacks வாங்கி வருவேன். எங்கள் ஆபீஸ் காஷியர் பேங்க் போகும்போதெல்லாம்  பேங்க் அருகிலுள்ள அடையார் ஆனந்த் பவனில் snacks வாங்கி வர சொல்லுவேன். ஒருமுறை அவர், "இவ்வளவு ஆயில் item சாப்பிடாதீங்க. உடம்புக்கு கேடு "என்றார். அதைக் கேட்டு சிரித்த எனது தோழி, "அவங்க வாங்கி வர சொன்னது அவங்க வீட்டுக்கு வரும் காக்கா கூட்டத்துக்கு " என்றாள். அதன்பிறகு அவர்  "காக்கா கூட்டத்துக்கு பெட்டிக்கடை மிக்சேர் போதும். நான் வாங்கிட்டு வர மாட்டேன் "என்பார். இப்போதும் எங்கள் வீட்டில் காக்காவுக்கு தினமும் snacks உண்டு. மழை என்பதால் காக்கா பசியாக இருக்கும் என்று நினைத்து வீட்டிலிருந்த தீபாவளி பலகாரம் அனைத்தையும் எடுத்து வைத்தேன். ஒரு பெரிய கூட்டமே வந்தது. ஆனால் ஒரே ஒரு பெரிய காக்கா வரவும் மற்ற காகம் பயந்து போய் ஒதுங்கி விட்டன."சனியன் , இதுவே எல்லாத்தையும் தின்னுடும் போல. மற்ற காக்கைக்கு எதுவும் கிடைக்காதே" என்று நான் நினைக்கும்போதே , முதலில் வந்த பெரிய காகம், பண்டங்களை இருமுறை கொத்திவிட்டு தள்ளி நின்று கொண்டது. அடுத்தாற்போல ஒரு காகம் வந்தது. அதுவும் இரண்டு வாய் கொத்திவிட்டு ஒதுங்கிக் கொண்டது. இப்படியே எல்லா காகமும் செய்ததைக் கண்டு மலைத்துப் போய்விட்டேன்.  இப்பவும் கேட்கிறேன்: " காக்கா கூட்டத்தை பாருங்க !. அதுக்கு இந்தப் பழக்கத்தைக் கத்துக் கொடுத்தது யாருங்க? அது நம்ம கிட்டே இல்லாமே போனது ஏனுங்க  ?"
அடுத்த மழைக்கு முன்பாக, அது வரும் முன் நம்மை நாமே காக்க, ஏதாவது செய்வோமே. அதற்க்கு இப்போதிருந்தே யோசிக்க ஆரம்பிப்போம்.

Monday, December 07, 2015

வாழும் போது வருவோர்க்கெல்லாம் வார்த்தையாலே நன்றி சொல்வோம். வாழ்வா சாவா என்பது தெரியாமல் தவிக்கும்போது உதவிக்கரம் நீட்டி காப்பாற்றியவர்களுக்கு எந்த விதத்தில் நன்றி சொல்வது என்பது தெரியவில்லை. தமிழில் ஏகப்பட்ட அகராதிகள் வார்த்தைகள் இருந்தாலும் "நன்றி " என்ற வார்த்தைக்கு ஈடாக எங்கள் கண்ணீரையே காணிக்கை ஆக்க வேண்டும். சென்னை, முடிச்சூர் ரோட்டில் உள்ள பாரதிநகரில் எங்கள் வீட்டின் முன் ஓடிய  வெள்ளத்தின் அளவு 12 அடியைத் தாண்டி விட்டது. BOAT, BOAT என்று கத்தினோம். வீட்டின் முன்பாக பல போட்ஸ் போன போதும் எங்கள் வீட்டுக்குள் வர முடியாத நிலைமை. மறுநாள் முஸ்லிம் முன்னேற்றக் கழக சகோதரர்கள் எங்களை பரிசலில் ஏற்றி பாதுகாப்பான இடத்துக் கொண்டு வந்து சேர்த்து காபி பிஸ்கட் சாப்பாடு என்று கொடுத்து எங்களைத் திணற வைத்தார்கள். அம்மாவின் உடல் நலனைக் கருத்தில் கொண்டு ஆம்புலன்சில் ஏற்றி தாம்பரம் வரை அனுப்பி வைத்தார்கள். அதன் பின் எனது சகோதரியின் வீட்டுக்கு பத்திரமாக வந்து சேர்ந்தோம். நாங்கள் எங்கே எப்படி இருக்கிறோம் என்பது தெரியாத எங்களது குடும்ப உறவுகள் தினமலரில் வெளியான இந்தப் படத்தைப் பார்த்த பின்புதான் நிம்மதிப் பெருமூச்சு விட்டுருக்கிறார்கள்.இந்தப் படத்தை எடுத்த போட்டோக்ராபருக்கும், அதை வெளியிட்ட தினமலர் (04.12.2015) நாளிதழுக்கும் கோடானு கோடி நன்றி.
(நீங்களெல்லாம் போதும் போதும் என்று சொல்லும் அளவுக்கு விரிவான தகவல்கள்  பிறகு வெளியாகும்.)