Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Tuesday, September 24, 2019

Scanning of inner - heart ( Scan Report Number - 162)


என் வீடு, என் புள்ளைங்க என்று ஓய்வில்லாமல் ஓடி ஓடி உழைத்த அம்மா, இன்று எந்தவொரு சிந்தனையும் இல்லாமல் ஐஸ் பெட்டிக்குள் அடங்கி விட்டாள்.
ஐஸ் பெட்டியைத் திறந்து அம்மாவைத் தொட்டுப் பார்க்க மனசு துடித்தது. பெட்டியின் அருகில் சென்றாள்.
"சுதா .. ஒரு நிமிஷம் வா..."
"என்ன பெரியப்பா?" என்று கேட்டபடி வாசலுக்கு விரைந்தாள்.
"இதோ பாரும்மா.. பக்கத்திலேயே கோயில்ங்கிறதாலே பாடியை அதிக நேரம் வச்சிருக்க முடியாது. இப்போ கோயில் மூடி இருக்கு. இங்கிருந்து பாடி வெளியே போன பிறகுதான், கோவில் நடை திறக்க முடியும். அதனாலே ஆக வேண்டிய காரியம் எல்லாம் மளமளன்னு ஆகணும். நீராட்டுக்கு பித்தளைக்.குடம், செம்பு, பூஜை சாமான்  எல்லாம் எடுத்து வைக்கச் சொன்னேனே..."
"வச்சிட்டேன் பெரியப்பா "
"சுதா ..." என்று குரல் கேட்டதும், "அத்தை கூப்பிடறா .. என்னன்னு கேட்டுட்டு வந்துடறேன் " என்று சொல்லிவிட்டு அத்தை அருகில் ஓடிவந்த சுதாவிடம், "பங்கஜத்துக்கு கட்ட புதுப்புடவை இருக்குதானே?" என்று கேட்டாள் அத்தை.
"புதுசு இருக்காதுன்னு நினைக்கிறேன். இதோ இப்போ கடைக்கு அவரை அனுப்பறேன் "
"என்னது உன் புருஷனை அனுப்பறியா? அவனை எழவுக்கு புடவை எடுத்துட்டு வரச் சொன்னா, திவசத்துக்குத்தான் கொண்டு வந்து சேர்ப்பான்."
"இல்லே .. அத்தை "
"சுதா... ஊதுவத்தி கொண்டு வா.." என்ற குரல் கேட்டதும் அத்தையின் பிடியில் இருந்து தப்பினால் போதும் என்று அங்கிருந்து நகர்ந்தாள் சுதா.
"சுதா.. பாடி வெளியே போனதும் வீட்டை சாணம் தெளிச்சு அலம்பணும். இங்கே சாணம் கிடைக்கும்தானே?"
"சுதா .. வரவேண்டியவங்க வந்தாச்சா.. வந்தாலும் சரி.. வராட்டாலும் சரி.. செய்ய வேண்டிய சடங்கை ஆரம்பிக்கணும்"  
"இதோ பாரு சுதா.. எழவு வீட்டுக்கு வந்த யாரும் பசியோட போகக்கூடாது சுடுகாட்டுக்குப் போனவங்க குளிச்சிட்டு வீட்டுக்கு திரும்பினதும் சாப்பாடு போடணும். டிபன் காஃபிக்கு ஆர்டர் பண்ணியாச்சா?"
"ஆச்சு மாமா. நீங்க போய்த் திரும்பறதுக்குள் எல்லாம் ரெடியாகிடும்."
"சுதா "
"வர்றேன் அண்ணா "
"இதோ பார் சுதா. அந்தக்காலம் மாதிரி சடங்கு சம்பிரதாயம் எல்லாத்தையும் வாரக்கணக்கு மாசக் கணக்குக்கு நீட்டிட்டு போகக்கூடாது. அவனவன்பார்க்க வேண்டிய அவசர  வேலையை மூட்டை கட்டி வச்சிட்டு வந்திருக்காங்க. ஒவ்வொரு சடங்கு சம்பிரதாயத்துக்கும் ஒவ்வொரு நாளும் வந்து போக முடியாது. நாளைக்கு அஸ்தி கரைப்பு .. மறுநாளே சுபம் வச்சிடலாம். என்ன நான் சொல்றது புரியுதா?
"புரியுதண்ணா"
"புரியுதண்ணானு மண்டையை ஆட்டி பிரயோசனம் இல்லே. அதுக்கான வேலை மடமடனு நடந்தாகணும்."
"ஏற்பாடு பண்ணிடறேன் "
ஒருவழியாக அம்மாவின் இறுதிப் பயணத்தில் எந்தக் குறையும் வராதபடி செய்து முடித்தாள் சுதா.
காலில் சக்கரம் கட்டிக் கொள்ளாத குறையாக ஒவ்வொரு வேலையையும் பார்த்துப் பார்த்து  செய்வதற்குள் ... அப்பப்பா ...
கொஞ்ச நேரம் கீழே உட்காரேன் என்று உடம்பு கெஞ்சியது. அம்மாவின் மடி கிடைத்தால் அதில் சாய்ந்து கொண்டு ......
"சுதா .."
"வர்றேன்" என்று ஹாலுக்கு விரைந்தாள்.
"செத்த வீட்டில் சொல்லிட்டுப் போற பழக்கம் கிடையாது.. நீ தைரியமா இரு " என்று சொல்லிவிட்டு, வெளியிடங்களில் இருந்து வந்தவர்கள் கிளம்பிப் போனதும் "அப்பாடா" என்று முழங்கால்களை பிடித்தபடி வாசல் நடையில் உட்கார்ந்தாள் சுதா.
அந்த வழியாக வந்து கொண்டிருந்த கோவில் குருக்கள், "இன்னைக்கு செத்தா நாலைக்குப் பால்னு சொல்லுவாங்க. உங்க ஆத்துலே சுபமும் முடிஞ்சாச்சு. இதுதான் வாழ்க்கை. புரிஞ்சுதா?" என்றார்.
"ஒண்ணே ஒண்ணு மட்டும் புரிஞ்சுது."
"என்ன?" என்பது போல் ஆச்சரியக்குறி ஒன்றை எழுப்பினார் குருக்கள்.
"எழவு வீட்டில் செத்தவனைப் பற்றி நினைக்க நேரம் கிடைக்காதுங்கிற பழமொழிக்கு அர்த்தம் !" என்று அமைதியாக சொன்னாள் சுதா.