Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Saturday, September 28, 2013

Scanning of inner - heart ( Scan Report Number - 88 )

                                    எதிர்பார்ப்பும் ஏமாற்றமும் !!

" சாமா சார். சாப்பாடு பிரமாதம். என் ஆத்துக்காரி சொல்லிண்டே இருந்தா, கல்யாண சாப்பாட்டில் மட்டும் எந்தக் குறையும் வந்துடக் கூடாதுன்னு. அவ ஆசை பட்டபடி அமர்க்களப் படுத்திட்டீர். யாரிடமாவது அவங்க வீட்டுக் குழந்தைங்க கல்யாணம் எப்போன்னு யாரும் டைரெக்டா கேட்கிறது கிடையாது. கல்யாண சாப்பாடு எப்போ போடப் போறேள்ன்னு தானே கேட்கிறாங்க. ஒருத்தன் ஒரு கல்யாண வீட்டுக்குப் போயிட்டு வர்றான்னு தெரிஞ்சா " பொண்ணுக்கு எத்தனை பவுன் நகை போட்டா ? மாப்பிள்ளை எப்படி இருக்கிறார் ? என்ன செய்றார் "ன்னு கேட்கிறவா எத்தனை பேர் ? கல்யாண சாப்பாடெல்லாம் எப்படின்னு கேட்கிறவா தான் அதிகம் பேர். எதை கண்டும் திருப்தி அடையாத மனம், வயிறு நிறைந்த மணமான  சாப்பாட்டு விஷயத்தில் மட்டும்தான் திருப்தி அடையுது. அதனாலே சாப்பாடு பிரமாதமா இருக்கணும்னு சொல்லிண்டே இருந்தா. அவ ஆசைப்பட்டபடியே கல்யாண விருந்தை அமர்க்களப் படுத்திட்டீர். செட்டில்மென்ட்  என்னான்னு சொல்லும். செக் குடுத்திடறேன். நீர்  அட்வான்ஸ் கூட வாங்கிகலேன்னு என் பையன் சொன்னான். பிளாங்க் செக் குடுத்திடறேன். நீரே கூட அமௌன்ட் பில் பண்ணிக்கலாம் " என்று சொல்லி சாமா ஐயர் முகத்தைக் கூர்ந்து கவனித்தார் ரிடையர்ட் ஜட்ஜ் கோதண்ட ராமன்.
"சொல்றேன்னு தப்பா நினைச்சுக்கக் கூடாது. பெரியவா கிட்டே ஒரு சிறு விண்ணப்பம் "
" என்ன வேணும் ? தயங்காமே சொல்லும். நீர் கேட்கிறதை செஞ்சு தர நான் ரெடி "
"பெரியவா வீட்டு விசேஷம்தான் நான் எடுத்து நடத்துகிற நூறாவது விசேஷம். ஒரு காலத்தில் நான் ஒரு பிரைவட் கம்பெனியில் வேலை பார்த்துண்டு இருந்தேன். நிர்வாகப் பிரச்சினையால் கம்பெனியை இழுத்து மூடிட்டா. பொழைப்புக்கு வழி தேடித்தான் கரண்டியை கையில் பிடித்தேன். அனுபவமில்லேன்னு சொல்லி என்னை நம்பி சமையல் பொறுப்பை விடறதுக்கு எல்லாரும் தயங்கினா. அப்போ, நான் என்னோட குலதெய்வம் குருவாயூரப்பனிடம் " இந்த சமையல் வேலையில் நான் நல்ல படியாக காலூன்றி நின்னுட்டா, நான் எடுத்து நடத்தப்  போற நூறாவது சமையல் கான்ட்ராக்டுக்கு  என் கையால் பணத்தை வாங்க மாட்டேன். என்னை நம்பி நூறாவது சமையல்  பொறுப்பை விடறவா கையாலேயே அந்தப் பணத்தை உன்னிடமோ  இல்லாட்டா யாராவது கஷ்டப் படறவாளுக்கோ கொடுத்திட சொல்றேன்னு வேண்டிண்டேன். நீங்க கொடுக்க நினைக்கிற பணத்தை கோயிலுக்கோ இல்லாட்டா  உங்க கண்ணில் படற ஏதோவொரு  கஷ்டப் படற குடும்பத்துக்கோ குடுத்திடலாம். நான் இதை முதலிலேயே சொல்லி இருந்தா நீங்க என்னை நம்பி  பொறுப்பைக் குடுத்திருக்க மாட்டேள். அதான் எல்லா விஷேசமும் முடிஞ்ச பின்னாலே சொல்றேன். இதை நீங்க என்னோட பிரார்த்தனைன்னு   நினைச்சு கண்டிப்பா  ஏத்துக்கணும். இதைப்    பெரியதனம்ன்னு   நினைச்சு கோபப்படக் கூடாது " என்று தயங்கிய குரலில் சொன்னார் சாமா.
" உம்மோட லட்சியத்தை நான் மதிக்கிறேன். நீர் ஆசைப் பட்டபடி செஞ்சு முடிப்பேன். பணம் தான் வேண்டாம்னு சொல்லிட்டீர். வேறு  ஏதாவது உதவி தேவைப் பட்டா கேளும். செய்து தர தயாரா இருக்கிறேன் "
"தேவைப்படும் போது   கண்டிப்பா கேட்பேன். இப்போ நான் உத்தரவு வாங்கிக் கிறேன்" என்று சொல்லிவிட்டு சாமா வெளியேற, அவர் போவதைப் பார்த்துக் கொண்டிருந்த கோதண்டராமன் " இந்தக் காலத்தில் இப்படியும் ஒரு மனிதர் " என்று தனக்குள் சொல்லிக் கொண்டார்.

மயிலை அக்கிரகாரத்தில் ......  
"ஏண்டா அம்பி எத்தனை நாழிதான் ஆத்து வாசலியே  நின்னுண்டு தெரு முனையை பார்த்துண்டு இருப்பாய்? தெருமுனைவரை  நடந்து    வர்றவர் ஆத்துக்குள் வராமல் போயிடுவாரா ? "
"அம்மா என்னோட தவிப்பு உனக்குப் புரியாதும்மா . அப்பா மட்டும் ஜட்ஜ் கோதண்ட ராமன் சார் காதில் விஷயத்தைப் போட்டால் போதும். அந்த வேலை கண்டிப்பா எனக்குதான். போன மாசம் நான் ரிட்டர்ன் எக்ஸாம் எழுதிட்டு வந்தேனே, அந்தக் கம்பனியில் வொர்க் பண்ற  என்னோட ப்ரென்ட் ராகவன் மூலமா  நான் தெரிஞ்சுண்ட இன்னொரு விஷயம் செலேக்சன் கமிட்டியில் முக்கியமான ஆளு ரிடையர்ட் ஜட்ஜ் கோதண்ட ராமன் சார் என்பதும் அவர் பேச்சுக்கு அந்த கம்பனியில் அப்பீல் ஏதும் கிடையாது என்கிறதும். தெய்வாதீனமா அப்பா அவர் ஆத்துக் கல்யாணத்துக்குதான் சமையல் கான்ட்ராட்க் வேலைக்குப் போயிருக்கிறார். நம்ம நிலைமையை பக்குவமா எடுத்து சொன்னா கண்டிப்பா கேட்பார். அப்பாவோட கைமணம் தெரிஞ்சு அப்பாவைத் தேடிக் கண்டு பிடிச்சு கேட்டரிங் சான்ஸ் குடுத்த அவர், நாம கேட்கிற உதவியை செய்யாமே போயிடுவாரா ? அப்பாதான் அவரண்டே பக்குவமா எடுத்து சொல்லணும் " என்று சீனு சொல்லும்போதே அவன் குரலில் ஒரு தவிப்பு தெரிந்தது.
இந்தப் பிள்ளையும் வேலை வேலைன்னு எவ்வளவோ அலைஞ்சு பார்த்துட்டான். வேலைதான் கிடைச்ச பாடில்லே. பகவானே இந்த இடமாவது அவனுக்குக் கூடி வரணும். அதுக்கு நீதான் மனசு வைக்கணும். வெறும் தகுதியை மட்டும் வச்சு வேலைன்னா, இவன் என்னிக்கோ வேலைக்குப் போயிருப்பான். இவன் முட்டி மோதிப் பார்த்த இடத்தி லெல்லாம் ஒன்னு பணம் விளையாடுது. இல்லாட்டா யாரோ ஒரு பெரிய மனுஷன் தயவாலே யாரோ ஒருத்தன் அந்த வேலையைத் தட்டிண்டு போயிடறான். இவன் தகுதிக்குக் குறைவான  வேலையில் உட்கார இவனுக்கு விருப்பமில்லே. என்னிக்குதான் இவனுக்கு வேலைக்கான வேளை வரப் போறதோ தெரியலை  என்று மனதுக்குள் பிரார்த்தித்துக் கொண்டாள் நீலாம்பரி 
" அம்மா, அப்பா வந்துட்டார் " என்ற சீனுவின் குரலில் உள்ள சந்தோசம் அவளையும் தொற்றிக் கொண்டது  
" அவர் ஆத்துக்குள் வந்து கைகால் அலம்பி பூஜையை முடிக்கிற வரை நீ அவரண்டே எதுவும் பேசாதே. எல்லாத்தையும் முடிச்சுட்டு ஈசி சேரில்  வந்து  சாய்ந்து பேப்பரைக் கையில் எடுப்பர்ர் பாரு அப்போ போய்  அவரண்டே எது  வேணும்னாலும் கேளு " என்று நீலாம்பரி எச்சரித்தாள் 
சாமா சாய்வு நாற்காலியில் வந்து சாயும் வரை பொறுமையாகக்  காத்திருந்த சீனு, " அப்பா,  நான்  சொன்ன விஷயம் பத்தி ஜட்ஜ் கிட்டே  நீங்க பேசுனீங்களா ? என்னப்பா சொன்னார் ? " என்று ஆவலாகக் கேட்டான் சீனு.
பதிலேதும் சொல்லாமல் மௌனமாக இருந்தார் சாமா.
"பண்ண மாட்டேன்னுட்டாரா ? "
"அந்த விஷயம் பத்தி நான் பேசவே இல்லை ? "
இந்த வார்த்தையைக் கேட்டதும் " ஏன் ? கேட்டால் உங்க கௌரவம் குறைஞ்சு போயிடுமா  ? " என்று கோபமாகக் கேட்டான் சீனு 
"இதில் கௌரவப் பிரச்சினை எங்கிருந்து வந்தது ? என்னோட நூறாவது சமையல் வேலையை  குரூவாயூரப்பன்  பேராலே செய்றதா கொஞ்ச வருஷத்துக்கு முன்னமேயே  ஒரு வேண்டுதல். அந்த நூறாவது காண்ட்ராக்ட்  கோவில் பிரசாத வேலையாக இருந்தாலும் சரி, இல்லாட்டா யாராவது ஒரு ஏழை  எளியவர் வீட்டு விசேஷமாக இருந்தாலும் சரி. அதுக்கு பணம் வாங்காமே தான் செய்து குடுத்திருப்பேன். எதிர் பாராவிதமாக ஜட்ஜ் வீட்டு விசேஷம்  நூறாவதா அமைஞ்சு போச்சு. அவரண்டே சமையல் வேலைக்கு பணம் வேண்டாம்னு சொல்லிட்டு, என்னோட பையன் வேலைக்கு ரெகமென்ட் பண்னுங்கோன்னு சொன்னா, அவர் என்னைப் பத்தி என்ன நினைப்பார் ? சரி அவரை விட்டுத் தள்ளு. " ஏண்டா கில்லாடி, சமையல் வேலைக்கு பணம் வேண்டாம்னு சொல்லிட்டு, அதை விட பல மடங்கு லாபம் வர்ற மாதிரி  உன் பையனோட  வேலைக்கு ஒரு வழி பண்ணிட்டு வந்துட்டே  போலிருக்கு" ன்னு என் தெய்வம் என்னைப் பார்த்துக் கிண்டலா சிரிக்கிறமாதிரி  இருக்கும். அதைத் தாங்குகிற சக்தி எனக்கில்லே . அதான் ஜட்ஜ் கிட்டே  எதையும் கேட்கலே "
" நீங்க எல்லாம் ஒரு தகப்பனா ? " என்று கோபத்துடன் இரைந்தான் சீனு 
" வெறும் சராசரித் தகப்பனா இருந்திருந்தா, என் சுயநலம்தான் முக்கியம்னு நினைச்சு நடந்துருப்பேன். தர்ம நியாயத்துக்கு கட்டுப்படுகிற தகப்பனா வாழ்ந்து பழகிட்டேன். என்னால் அந்த வட்டத்தை விட்டு வெளியில் வர முடியாது. என்னை மன்னிச்சுடு சீனு. உனக்கு கண்டிப்பா நல்ல வேலை கிடைக்கும். எதுவுமே கிடைக்காட்டா என்னைப் போல கரண்டி பிடிக்க கத்துக்கோ. மற்றவங்களை ஏமாற்றிப் பிழைக்காத, வஞ்சனை  செய்யாத எல்லா தொழிலுமே  கௌரவமான தொழில்தான் " என்றார் சாமா பொறுமையாக.
இரண்டு நாட்கள் யாருடனும் பேசாமல் மௌனமாக இருந்தான் சீனு. காலப் போக்கில் சரியாகி விடும். விட்டுப் பிடிக்கலாம் என்று நினைத்தார் சாமா.
மூன்றாம் நாள் வெளியில் போன சீனு வீடு திரும்பவில்லை. இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால், தேட ஆரம்பித்தார்கள். " என்னை தேட வேண்டாம். வருகிறேன் " என்ற ஒற்றை வரி சுவரில் எழுதப் பட்டிருந்தது. சாமா நிலை குலைந்து போனாலும், நீலாம்பரி முன்பாக தைரியத்தைக்  கை விட்டு விடக் கூடாது என்ற நினைப்பில், " ஆம்பிளைப் பிள்ளை தானேடி. ஏன் கவலைப் படறே. கையில் படிப்பு இருக்கு. அதற்க்கான சர்டிபிகேட் இருக்கு. எங்கு போனாலும்  கௌரவமா பொழைச்சுக்குவான்.  கோபம் தணிந்ததும் போனது போலே  திரும்பி வருவான் " என்று சமாதானம் சொன்னார் சாமா.
"நீங்களும், உங்க சமரசமும் .. அவன் சர்டிபிகேட் எல்லாம் பீரோவில் அப்படியே  இருக்கு. அதைக் கவனிக்கலையா நீங்க" என்று இரைந்தாள் நீலாம்பரி. 
சீனு வீட்டை விட்டுப் போன நான்காம் நாள், எந்தக் கம்பெனி வேலையை எதிர் பார்த்துக் காத்திருந்தானோ, அந்த இடத்திலிருந்து வேலைக்கான ஆர்டர் வந்தது. ஆனால் வீட்டை விட்டுப் போன சீனுதான் வரவே இல்லை.

Friday, September 20, 2013

Scanning of inner - heart ( Scan Report Number - 87 )

உலகம் ஆயிரம் சொல்லட்டுமே. உனக்கு நீதான் நீதிபதி !

"வாயைத் திறந்து ஏதாவது சொன்னாளா ? " என்று ஆர்வமுடன் கேட்டார் பழனி சாமி 
"இல்லை" என்ற வெறும்  தலையசைப்பு மட்டுமே பதிலாக வந்தது சரசு விடமிருந்து.
" ஏண்டி, ஒரு அப்பன்காரன் ஒரு பொம்பளைப் பிள்ளையிடம் எது எது பேச முடியுமோ அதைத்தான் பேசமுடியும்.பெத்தவ நீதானே பொம்பளைப் பிள்ளைங்க மனசு என்னென்னு பேசித் தெரிஞ்சுக்கணும் " என்று எரிந்து விழுந்தார் பழனிசாமி
" அவ மனசிலே பட்ட காயம் அப்படிங்க. அது லேசிலே ஆறக்கூடிய ரணம் இல்லே. அது புண்ணாகிப் புரையோடிப் போய்க்கிடக்கு. வெளியிலே தெரியுத புண்ணுக்கு மருந்திருக்கு. ஆனா உள்ளே சீழ்ப்பட்டு கிடக்கிற இந்த புண்ணுக்கு மருந்தை இன்னும் யாரும் கண்டு பிடிக்கலையே. காலம் ஒன்றுதான் அவ மனசை மாத்த முடியும்னு நினைச்சு  நாமளும் பொறுமை காத்தோம். அது வீண் போகலே. அந்தப் பொறுமைக்குப் பலனாத்தான், பத்து   வருசத்துக்கு முன்னாலே  ஓடிப் போனவன் இப்போ திரும்பி வர்றேன்னு தெரிஞ்சவன் மூலமா தூது அனுப்பி இருக்கிறான். இத்தனை நாள் வரைக்கும் கூட  நாமளும்  கையாலாகாதவங்களாதானே இருந்திருக்கிறோம். தாலி கட்டின கையோடு ஓடிப் போனவன் திரும்பி வருவான்னு நினைச்சு, டைவேர்ஸ் அது இதுன்னு எதுக்குமே நாம போகலே. பொண்டாட்டியைப் பார்க்க வர்றேன்னு சொல்றவனைப் பார்க்க வரக்கூடாதுன்னு சொல்ற உரிமை நமக்குக் கிடையாதேங்க " என்று பொறுமையுடன் பேசினாள் சரசு.
"ஏண்டீ, ஒரு விஷயம் கவனிச்சியா ?அவன் வரப்போற விஷயத்தை அவன் சிநேகிதன் என்றைக்கு நம்ம கிட்டே சொல்லிட்டுப் போனானோ அன்னியிலேயிருந்து இவ வீட்டைப் பார்த்துப் பார்த்து சுத்தம் பண்ணுறா. நாம சொல்றப்பல்லாம் சோபா மேஜை இதெல்லாம் இடத்தை அடைக்கும். வேண்டாம்னு சொல்லிட்டு இருந்தவ சோபா அதுஇதுன்னு வாங்கி வீட்டை நிரப்புறா. பேங்க் லாக்கரிலிருந்து நகையை எடுத்துட்டு வந்திருக்கிறான்னு  நீதான் என்கிட்டே சொன்னே. இதெல்லாம் வரப் போற புருஷன் மேலே உள்ள ஆசையிலே செய்றதுதானே ? "
" எனக்கு அப்படித் தோணலே "
"எதனாலே அப்படிச் சொல்றே ? "
" முகத்திலே சந்தோசம் இல்லே. ஒரு வெறித்தனம்தான் இருக்குது "
"சரசு, நான் ஒண்ணு சொல்றேன், நல்லா நினைவில் வச்சுக்கோ. நாளைக்கு அவ எடுக்கப் போற முடிவு எதுவாக இருந்தாலும் சரி. நானோ நீயோ தலையிட வேண்டாம். படிச்சிட்டு இருந்த பொண்ணுக்கு, நல்ல இடத்துச் சம்பந்தம்னு  இந்த நாறப் பயலைக் கொண்டு வந்து சேர்த்தோம். இவ வாழ்க்கையை அவன் நாறடிச்சிட்டுப் போயிட்டான். இன்னிக்கு வரை ' அப்பா, என் வாழ்க்கை இப்படியாகிப் போச்சே'ன்னு நம்மளை ஒரே ஒரு வார்த்தைகூடக் கேட்டதில்லே. எதுவுமே நடக்காத மாதிரி படிப்பை முடிச்சா.ஊர்க்காரங்க கிண்டலையும் கேலியையும் பொறுத்துகிட்டு. இப்போ இதே ஊரிலே டீச்சரா வேலை பார்க்கிறா. அந்த வேலை மேலே உள்ள மரியாதையாலே இவளைக் கிண்டல் பண்றதை இவங்க நிறுத்திக் கிட்டாங்க. மனசளவிலே யாரும் மாறலே. எதுவும் மாறலே. அதனாலே பார்த்துப் பக்குவமா நடந்துக்கோ  " என்றார்.
" நான் நடந்துக்கிறேன். நீங்க டென்சன் ஆகி டான்ஸ் ஆடாமல் இருந்தால் சரிதான்  " என்றாள் சரசு 
மறுநாள் காலை ... வாசலில் மிகப்  பெரிதாக கலர்க் கோலம் போட்டாள் மீரா. இதுநாள் வரை இல்லாத ஒரு சந்தோசக் களை அவள் முகத்தில் தாண்டவமாடியது. அதைப் பார்த்து பழனிசாமியும் சரசுவும் பூரித்து போனார்கள். சரியாகப் 10.30க்கு, நிறைந்ததொரு ராகுகால நேரத்தில் தனது நண்பனுடன் டூ வீலரில் வந்து இறங்கினான் ரமணன். நேரம் காலம் பார்த்து வரவேண்டாமா என்று  இருவரையும் மனதுக்குள் கடிந்து கொண்டாலும் ' வாங்க , வாங்க ' என்று வரவேற்றார் பழனிசாமி
புதுப் புடவையில், உடம்பு நிறைய நகைகளுடன் அங்கு வந்தாள் மீரா.
"என்னை மன்னித்து ஏற்றுக் கொள்வீங்கனு கொஞ்சமும் எதிர்பார்க்கலே இந்த நிமிஷம் வரை நான் பயந்து கொண்டேதான் நடையேறினேன் " என்றான் ரமணன் வெகுளித்தனமாக.
"ஹலோ, உங்களுக்கு கற்பனா சக்தி ரொம்ப  ரொம்ப அதிகம்னு  நான்  நினைக்கிறேன் . உங்களை மன்னிசிட்டோம். ஏத்துக்கிட்டோம்னு உங்க கிட்டே சொன்ன அந்த புண்ணியவாளன் யாருங்க  ? " என்று இரைந்தாள் மீரா 
" மீரா, மெல்லப் பேசுடி.அக்கம் பக்கம் கேட்கப் போகுது " என்று பதறினாள் சரசு  
" அவங்க கேட்கணும். அதுதான் என் ஆசை "
" ஏங்க, உங்க மனசிலே இப்படியொரு கோபம் இருக்கும்னா. நான் வந்து கேட்கும்போது வரவேண்டாம்னு சொல்லியிருக்கலாமே?நீங்க இப்படிக் கூச்சல் போட்டுப் பேசுவது எங்களுக்கு அவமானமா இருக்குது " என்று கோபமாக சொன்னான்  ரமணனின் நண்பன் ராஜவேல்.
"இதையே அவமானம்னு நீங்க நினைச்சா, இவன் பண்ணின காரியத்துக்கு என்ன பேர் சொல்றது? தாய் தகப்பன், குடும்ப நடைமுறை தெரிஞ்சு அந்த வீட்டுக் குழந்தைங்க பொறுப்பா  ஒழுங்கா நடந்துக்கணும்.இல்லாட்டா பிள்ளையைப் பெத்தவங்களாவது  பிள்ளைங்க மனசு தெரிஞ்சு விட்டுக் கொடுத்துப் போகத் தெரிஞ்சுக்கணும் ணும். தாய் தகப்பன் பேச்சை மீற முடியாமே, அவங்களைப் பழி வாங்கிறதா நினைச்சிகிட்டு, என் கழுத்தில் தாலி கட்டிய மறுநிமிஷமே, " நீங்க சொல்ற பொண்ணு கழுத்தில்தான் தாலி கட்டணும், இல்லாட்டா குடும்பத்தோட தற்கொலை பண்ணிக் குவோம்ன்னு சொல்லி என்னை மிரட்டிக் கல்யாணம் பண்ணி வச்சீங்க. உங்க விருப்பப்படி இப்போ நான்     தாலியைக்  கட்டிட்டேன். நீங்களாச்சு. இனிமே அவளாச்சு. எனக்கு இனிமே இங்கே வேலை இல்லைன்னு சொல்லிட்டு உங்க நண்பர் ஓடிப் போனதை எல்லாரும் வேடிக்கைதான் பார்த்தாங்க. யாரும் வந்து தடுக்கலே. ஒரு குடும்பத்தில் பையனுக்கும் பெத்தவங்களுக்கும் நடந்த போட்டாபோட்டியில் பலியானது என்னோட வாழ்க்கை . அந்த நேரத்தில் எங்க குடும்பமும் நானும் எந்த அளவுக்கு அவமானப்பட்டு நின்றிருப்போம்னு இவரோ, இல்லாட்டா இவருக்கு ஓடிப் போக உதவி பண்ணின நண்பர்களோ என்றைக்காவது நினைச்சுப் பார்த்ததுண்டா ? எங்க குடும்பம் நினைச்சிருந்தா எண்ணி இருபத்து நாலு மணி நேரத்தில் இவரைக் கல்யாண வீட்டில் கொண்டு வந்து சேர்த்திருப்பாங்க.முதுகெலும்பு இல்லாத, ஓடிப் போன ஒருவன் எனக்கு வேண்டவே வேண்டாம்னு சொல்லி  எங்க வீட்டு மனிதர்களை நிறுத்தி வச்சதே நான்தான். இவர் லவ் பண்ணின பெண் மேலுள்ள மயக்கத்தில் இவர் ஊரை விட்டு ஓடினார். வேலைன்னு ஒன்னு இருப்பதையும், அதுக்கு தான் போயாகனும் என்கிறதையும் இவர் மறந்துட்டார். வேலை போச்சு.  கையிலிருந்த காசும் தீர்ந்துச்சு. காதலிச்ச பாவத்துக்காக இவரை உட்கார வச்சு சோறு போட்டா அந்த மகராசி. போன வருஷம் அவ கேன்சர் நோயில் போராடி செத்துப் போயிட்டா. சட்டப்படி ரெண்டுபேரும் கல்யாணம் பண்ணிக்காததாலே அவள் மூலமா வரவேண்டிய பணம் எதுவும் இவருக்கு கிடைக்கலே. இவருக்கு கௌரவமான வேலை குடுக்கிறவங்க யாரும் இல்லே. மூட்டைத் தூக்கி பிழைக்க உடம்பிலே வலு இல்லே. உடம்பு நோகாமே உட்கார்ந்து சாப்பிட ஒரு இடம் ஒரு சத்திரம் இவருக்குத் தேவை . அதுக்காகத் தானே இவர் இங்கே திரும்பி வந்திருக்கிறார். ... என்ன ... இந்தக் கதை எல்லாம் எனக்கு எப்படித் தெரியும்னு நினைக்கிறீங்களா? உங்க நண்பர் இங்கே வரப் போறார்னு நீங்க மொட்டையா சொல்லிட்டுப் போனதுமே ஏன் எதுக்குனு  நாங்க ரொம்ப யோசிச்சோம். அப்பத்தான் இவரோட அம்மா இங்கே வந்தாங்க, 'ஓடிப் போன என் பிள்ளை திரும்பி வர்றதா சொல்லியனுப்பி இருக்கிறான். நாங்க அவனை சேர்த்துக்கிறதா இல்லே . எங்களைப் பொறுத்தவரை அவன் செத்துப் போயிட்டான். அவனை நீங்க ஏத்துக்கிறதும் விரட்டியடிக்கிறதும் உங்க விருப்பம்னு சொல்லிட்டு இந்த விவரங்களையும் சொல்லிட்டுப்  போனாங்க. நண்பர் மூலமா வர்றேன்னு சொல்லியனுப்பின உங்களை நான் மறுத்தா , நீங்க சட்டத்தின் உதவியை நாடிப் போவீங்க . அப்படியொரு நினைப்பு இருந்தா அதை இந்த நிமிஷமே நீங்க மறந்துடணும்னு  முகத்துக்கு நேரே எச்சரிக்கை பண்ணத்தான் உங்களை வீட்டுக்குள் அனுமதித்தேன். அதையும் மீறி இந்த வீட்டுக்குள் வர முயற்சி பண்ணினா, சாப்பாட்டில் விஷம் வச்சுக் கொன்னுடுவேன் இல்லாட்டா அசந்து  தூங்கறப்ப கழுத்தை நெரிச்சுக் கொன்னே   போடுவேன். இப்போ சொல்றேன். ஒழுங்கு மரியாதையா இந்த இடத்தை விட்டு ஓடிப் போயிடு  " என்றாள் மீரா கண்களில் அனல் பறக்க . 
"ச்சே .. நீயெல்லாம் ஒரு பொண்ணாடி ? " என்றபடி   வெளியேறினான் ரமணன் தன் நண்பனுடன் 
" அந்த வார்த்தையை ஓடிப் போன ஆம்பிளை நீ சொல்லக்கூடாது " என்று கத்தினாள்  மீரா அனைவரும் கேட்கும்படி 
அந்த இடத்தில் கொஞ்சநேரம் மயான அமைதி நிலவியது. தைரியத்தை தனக்குள் வரவழைத்துக் கொண்ட  சரசு. "புதுப்  புடவை ,நகை, வீட்டு அலங்காரம் எல்லாத்தையும் நீ பார்த்துப் பார்த்து செய்றதைப் பார்த்துட்டு  அவனை நீ மன்னிச்சு ஏத்துக்குவே "ன்னு நினைச்சோம் " என்றாள் 
"இவ்வளவு அலங்காரமும் என் மனசில் உள்ள சந்தோசத்துக்குனு நீங்க தப்பா நினைச்சிட்டீங்க. ' நாம விட்டுட்டு ஓடி வந்துட்டதாலே பொண்ணு வீட்டிலே எல்லாரும் ரொம்ப நொறுக்கிப் போயிருப்பாங்க. நம்மளை வெத்திலை பாக்கு வச்சு அழைப்பாங்க'னு அந்த ராஸ்கல் தப்புக் கணக்குப் போட்டிருப்பான். அப்படியெல்லாம் எதுவும் இல்லே. இங்கே நாங்க நல்லா சந்தோசமாத்தான் இருக்கோம்னு காட்டத்தான் இது  "
"என்னடி இது ? தெருவே கூடி நின்னு வேடிக்கை பார்க்கிற மாதிரி இந்தக் கத்து கத்தியிருக்கிறே ? இதைப் பார்க்கிற உலகம் உன்னைத் தப்பா பேசுமே ? " என்றாள் சரசு 
"அது கிடக்குதுப்பா  உருண்டை. அது இதுநாள் வரை என்னைப் பத்தி என்னிக்கு சரியாப் பேசியிருக்கு. சுத்திகிட்டு வர்றதோட அது சும்மா இருந்தால் பரவாயில்லை. எல்லாரையும்  புரட்டிப் போட்டுட்டுப் போகுதே. அப்பா ... நீங்களாவது சொல்லுங்க, என்னோட கல்யாண விசயத்தில் நீங்க சொன்ன வரனுக்கு நான் கழுத்தை நீட்டினேன். அதைத் தவிர நான் எந்தத் தப்பும் செய்யலே. ஒரு பொண்ணுக்கு தாலி கட்டிட்டு கல்யாணத்தன்னிக்கே ஓடிப் போனவன் சந்தோசமா இருக்கிறான். அவனை மிரட்டித் தாலி கட்ட வச்சவங்க சந்தோசமா இருக்கிறாங்க. உன் தலைஎழுத்து இப்படியாகிப் போச்சுன்னு புலம்பறதோடே உங்க கடமை முடிஞ்சுது. எந்தவொரு தப்பும் செய்யாத நான் ஒருத்தி மட்டும்தானே தண்டனையை அனுபவிச்சுக்கிட்டு இருக்கிறேன். தாலி கட்டின புருஷன் இவளை விட்டுட்டு ஓடிட்டான்னு கைதட்டி மனசுக்குள் ஒரு வக்கிர சிரிப்பு சிரிக்குது இந்த உலகம் . பத்து வருசமா என்னைப் பார்த்து நக்கலடிக்கிற இந்த உருண்டை, இனிமேல்,  ஒண்ணு, என்னைப் பார்த்து " பொண்ணுன்னா இதுதான் பொண்ணு. எது எதுக்குதான் மன்னிப்புங்கிற வரைமுறை இருக்கு. செய்யக் கூடாத தப்பை செஞ்சுட்டு, மன்னிப்புங்கிற ஒரே ஒரு வார்த்தையில் குளிர் காய நினைக்கிறவங்களுக்கு இவ குடுத்த டோஸ் சரிதான்"னு சொல்லணும். இல்லாட்டா " அம்மாடி பொம்பளையா இவ ? தொட்டுத் தாலிகட்டின புருஷனை, வீடு தேடி வந்தவனை விரட்டி விட்டுட்டாளே. பயங்கரமான ஆளா இருப்பா போலிருக்கு" ன்னு சொல்லி என்னை விட்டு ஒதுங்கிப் போகணும். இந்த ரெண்டில் எந்த ஒன்றைப் பற்றி அந்த உருண்டை காலம் பூரா  பேசினாலும் அது எனக்கு சந்தோசந்தான். இன்னிக்கு வெள்ளிக் கிழமை. பூஜை இருக்குன்னு சொல்லி  ஸ்கூல்க்கு லேட்டா வர  பெர்மிசன் தான் கேட்டிருந்தேன். மணி இப்போ பதினொண்ணு  தான் ஆகுது. நான் கிளம்பிப் போறேன்ப்பா " என்று சொல்லிவிட்டு வீட்டை விட்டு வெளியில் வந்தாள் மீரா. தெருவில் அவள் நடந்து செல்வதை அந்தத் தெருவில் இருந்தவர்கள் பார்த்துவிட்டு தங்களுக்குள் ஏதேதோ "கிசுகிசு"த்தார்கள். அதைப் பார்த்தபோது மீராவின் மனம் நிறைந்து போயிருந்தது.
  

Thursday, September 19, 2013

தேவை - கொஞ்சம் கருணை ! கொஞ்சம் மனித நேயம் !!

நேற்றும் இன்றும் அனைத்து தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பான, நெஞ்சை நெருட வைத்த ஒரு காட்சி, கண் பார்வையற்ற மாணவர்களின் சாலை மறியல். " இவங்க ஒருத்தங்கதான் பாக்கி. இவங்களும் மறியலுக்கு வந்தாச்சா ? " என்ற அற்பத்தனமான கேள்வி மனதில் தோன்றி மறைந்தாலும், இவர்களுக்காக மனதில் ஒரு வலி தோன்றியது உண்மைதான். இதே வலி இந்தக் காட்சியைப் பார்த்த பலருக்கும் இருந்திருக்கும் என்று நம்புகிறேன்.
உலகிலேயே ரொம்பவும் கொடுமையான விஷயம் பார்வையற்றவர் களாக வாழ்வதுதான். இன்றைய தினத்தில் எனக்கு வயது 60. பொதுவாக இந்த வயதைத் தொட்டுக்கொண்டிருக்கிற , மனுஷங்களாகப் பிறந்த எல்லோருக்குமே மனதில் தோன்றுவது அவரவர் " கடைசிக் காலத்தை" ப் பற்றிய ஒரு பய உணர்வுதான். நான் மட்டும் அதற்கு விதிவிலக்காக இருக்க முடியாது. அந்திமக் காலத்தைக் குறிப்பிடும் கவிஞர்கள் " கை நடுங்கிக் கண் மறைந்து காலம் வந்து சேரும் " என்றுதான் சொல்கிறார்கள். என்னுடைய  சிறுவயது முதலே, கண் பார்வையற்ற மனிதர்கள் மீது எனக்கு தனியொரு பாசம், பரிதாப உணர்ச்சியுண்டு. கோவிலுக்குப் போகும் போதெல்லாம் " இந்தவொரு விஷயத்தில் நீ ஏன் கண்ணற்ற குருடனாக இருக்கிறாய் ? " என்று கேட்டு கடவுளிடம் சண்டை போடுவேன். " கடவுளே, நீ எனக்கு எவ்வளவு கஷ்டத்தை வேண்டுமானாலும் கொடு. அதை நான் தாங்கிக் கொள்வேன். ஆனால் கடைசிவரை கண் பார்வையில் மட்டும் எந்தக் குறைவும் வரக் கூடாது. அப்படியொரு நிலைமை வந்துதான் ஆக வேண்டுமென்றால் அந்த நிமிடமே என் உயிர் போய் விடவேண்டும்  " என்றுதான்  பிரார்த்தனை செய்வேன். இந்த அறுபது வயதிலும் கண்ணாடி இல்லாமல் என்னால் படிக்க எழுத முடியும். என்னுடைய நெருங்கிய நட்பு வட்டத்தினர்  இதைப் பார்த்து ஆச்சரியப் படுவார்கள் . கண்ணில் தூசி விழாமல் இருக்க டூ வீலர் ஓட்டும்போது மட்டும் கண்ணாடி போட்டுக் கொள்வேன் .
இப்போதெல்லாம் இது விஷயமாகத் தான் நான் கடவுளிடம் அதிகம் மன்றாடுகிறேன். "  கண் பார்வை போகுமென்றால். அடுத்த நொடியே என் உயிரும் போயிடணும். மற்றவர்களை depend பண்ணி வாழும் நிலையை எனக்குக் கொடுத்து விடாதே " என்றுதான் வேண்டிக் கொள்கிறேன்.
பார்வையற்றவர்களைப் பார்த்து நான் ஆச்சரியப் படும் ஒரு விஷயம் : இவர்களில் 99 % பேர் உழைத்து வாழவே ஆசைப்படுகிறார்கள். உழைக்க முடியாத நிலையில் இருப்பவர்கள் கூட , ஏதாவது ஒரு பாடலைப் பாடிய படியே தான் கையேந்துகிறார்கள். பெரிய பெரிய வித்வான்கள், பாடத் தெரிந்தவர்கள்  சங்கீதத்தை ஒரு   தொழிலாக வைத்திருப்பது போல, இவர்களும் பாடுவதை ஒரு தொழிலாக நினைக்கிறார்கள் என்றுதான் நான் நினைக்கிறேன்.
Eletric train ல் நான் ஆபீஸ் போய்க் கொண்டிருந்த காலத்தில், நான் அடிக்கடி கவனித்த விஷயம் ஒன்று : லேடீஸ் கம்பார்ட்மெண்டில் கண் பார்வையற்ற ஒருவர் ஏறுவார். பொதுவாக லேடீஸ் கம்பார்ட்மெண்டில் கும்மாளம்  கூச்சலுக்கு அளவே கிடையாது. திடீரென்று கம்பார்ட்மெண்ட் முழுவதும் அமைதி நிலவுமென்றால் அதற்கு ஒரே ஒரு காரணம்  அந்த பார்வையற்ற மனிதர் புல்லாங்குழல் வாசிக்கப் போகிறார்  என்பதுதான். அவர் flute வாசிப்பதைக் கேட்க அத்தனை பேரும் ஆவலாக இருப்பார்கள் . ஒரு ஊசி கீழே விழுந்தால் கூட அந்த ஓசை மற்றவர்களுக்குக் கேட்கும் அளவுக்கு அப்படியொரு ஆழ்ந்த அமைதி இருக்கும். ஏதாவது ஒரு ஸ்டேசனில் ட்ரைன் நின்று அந்த மனிதர் இறங்கிப் போகும் வரை அந்த அமைதி நிலவும். அதுவும் " அழைக்காதே, நினைக்காதே " என்ற பாடலை அவர் flute ல் வாசிப்பதை இன்றைக்கெல்லாம் நாம்  கேட்டுக் கொண்டிருக்கலாம். ரயில் பயணிப்பதை நிறுத்தி விட்டு நான் " டூ வீலரில் " போக ஆரம்பித்தபோது, " அந்த ஆளை " ரொம்பவும் மிஸ் பண்றேன்னு நான் வருத்தப் பட்ட நாட்கள் உண்டு .
என் தங்கையின் குடும்பத்தினருடன் சேர்ந்து சங்கரன் கோவிலுக்குள் போய்  விட்டு வெளியில் வருகிறோம். அங்குள்ள நடைப்படி தடுக்கி ஒரு மனிதர் விழுந்து விட்டதைக் கவனித்த நான் ஓடிச்சென்று தூக்கி விட்டேன். அப்போதுதான் அவர் பார்வையற்றவர் என்பது புரிந்தது. அவர் கையிலிருந்த வாசனை ஊதுவத்தி பாக்கெட்டுகள் சிதறிக் கிடந்தன. அவற்றை சேகரித்து கொண்டிருந்தேன். இதைப் பார்த்த என் தங்கையின் கணவரும்   கீழே விழுந்தவற்றை எடுத்துக் கொடுத்தார். என் தங்கையின் கணவர் இது போன்ற விஷயங்களில் ரொம்பவும் உதவுவார். கூலிக்காரர்கள், வேலையாட்களிடம் அதிகம் பேரம் பேச மாட்டார். அவர்கள் கேட்பதைக் கொடுத்து விடுவார். இந்த மனிதருக்கு பணம் கொடுப்போம் என்று நான் சொல்ல, இருவருமாக ஒரு தொகையைக் கொடுத்தோம். ஆனால் அந்த மனிதர் அதை வாங்க மறுத்து விட்டார். " இந்த பத்தி பாக்கெட் ஒன்று வாங்கிக்கோங்க. எனக்கு ஒரு பாக்கெட்டுக்கு ஒரு ரூபாய் லாபம் கிடைக்கும் " என்றார். உடனே அவர் கையிலிருந்த எல்லா ஊதுவத்திகளையும் நாங்களே வாங்கிக் கொண்டு பணம் கொடுத்தோம். சென்னைக்கு வந்ததும் பிரெண்ட்ஸ்க்கு  ஆளுக்கொரு ஊதுவத்தி பாக்கெட்   கொடுத்த போது " என்னடி, திருநெல்வேலி famous for அல்வா. எப்போதிருந்து உங்க ஊர் ஊதுவத்திக்கு famous ஆச்சு ? வழக்கமா ஊருக்குப் போயிட்டு வந்தால் எல்லாருக்கும் அல்வா குடுப்பே. இப்போ ஆளுக்கொரு வாசனை ஊதுவத்தி பாக்கெட்டும்  சேர்த்துக் குடுக்கிறே  " என்று கிண்டலடித்தார்கள்.
உலகிலுள்ள ஜனத் தொகை கோடானுகோடி. அதில் மிகவும் வசதியாக, செல்வச்செழிப்பில் இருப்பவர்கள்  பல லட்சம் பேர். உடல் ஊனமுற்று, குறிப்பாக கண்பார்வையற்ற மனிதர்கள்  ஒரு சில ஆயிரம் பேர்  என்ற எண்ணிக்கையில் தான் இருப்பார்கள்.இவர்களுக்கு உதவ அரசாங்கமும் செல்வச்செழிப்பில் இருப்பவர்களும் தாராளமாக முன் வரவேண்டும் . பணத்தைக் கொடுத்து அவர்களை சோம்பேறிகளாக்க வேண்டாம். உழைக்கத் தயாராக இருக்கிற அவர்களுக்கு, அவர்கள் திறமையறிந்து வேண்டிய வசதிகளை செய்து கொடுக்கலாமே. இதுதான் உங்கள் முன்பாக நான் வைக்கும் கோரிக்கை.
தொலைக்காட்சியில் காட்டப் பட்ட பதிவில் நெஞ்சை நெகிழ வைத்த ஒரு  விஷயம், சாலை மறியல் செய்வதாக நினைத்துக் கொண்டு பெண்கள் சிலர், சாலையோரமாக உட்கார்ந்திருக்க, வாகன ஓட்டிகள் வண்டிச் சத்தமே வராதபடி இவர்களைக் கடந்து வாகனங்களைத் தள்ளிக் கொண்டும் ஓடிக் கொண்டு மிருந்தார்கள். காவலர் ஒருவர் சில பெண்களை கைகளைப் பிடித்து தரதரவென்று இழுத்துக் கொண்டு போனார்.   
புறம்போக்கு நிலத்தில் பட்டா இல்லாமல் வீடு கட்டி கொண்டு, மின்சார வசதி இல்லை; சாக்கடைத் தண்ணீர் போக இடமில்லை என்று சிலர் சாலை மறியல் செய்யும் போதெல்லாம் " அமைதிப் பேச்சு வார்த்தை  " நடத்தும் அரசு அதிகாரிகள், இந்த பார்வையற்ற மாணவர்கள் விஷயத்தில் சிறிது கனிவாக நடந்து கொண்டிருக்கலாம் என்பது எனது ஆதங்கம்.
ஆதங்கப் படுவதைத் தவிர வேறு எதுவும் என்னால் செய்ய முடியாதே. ஏழை சொல் அம்பலம் ஏறாதே. 
உங்கள் எல்லோரையும் கைகூப்பிக் கேட்டுக் கொள்கிறேன். கண்பார்வை அற்றவர்களிடம் சிறிது கருணையுடன் நடந்து கொள்ளுங்கள். கைப்பிடி இல்லாத கூஜாவை இரண்டு பக்கமும் பிடித்து கவனமாகத் தூக்குவோமே, அது போல.



  

Friday, September 13, 2013

Scanning of inner - heart ( Scan Report Number - 86 )

             " வேண்டாங்க... ! விட்டுடுங்க... !! " 

" என்னடி, போன் ஏதாச்சும் வந்துச்சா ? " 
"மொதல்லே காலில் கிடக்கிற செருப்பை வாசலில் விட்டுட்டு    வீட்டுக்குள்ளே வாங்க. அப்புறமா என்னென்ன கேட்கணுமோ கேளுங்க ".
" என்ன மீனாட்சி,  என்ன கேட்டுட்டேன்னு இப்படி எரிஞ்சு விழறே ? 
" நீங்க மொதல்லே உள்ளே வாங்கோ "
" வந்துட்டேன். இப்போ சொல்லு , ஏதாச்சும் போன் வந்துச்சா ? "
" யாருட்டேருந்து வரும்னு எதிர் பார்க்கிறீங்க ? "
" அதான், பத்து நாளைக்கு முன்னே நம்ம ரமேஷுக்கு பெண் பார்த்துட்டு வந்தோமே, அவங்க வீட்டில்  பெண் பார்த்துட்டு வர்றப்போ இன்னும் ஒரு வாரத்தில் பதில் சொல்றோம்னு சொல்லிட்டு வந்தோம். பத்து நாளாகியும் போன் வரலையேன்னு நினைச்சு அவங்க போன் பண்ணிப் பேசுனாங்களானு கேட்டேன். நீயோ, உன் பிடிவாதத்தை விட்டு இறங்கி வர மாட்டேங்கிறே "
"எப்படிங்க இறங்கி வர முடியும் ? கொஞ்சம் கூட ராசியே யில்லாத பொண்ணு. பொண்ணு பார்த்துட்டு வர்றச்சேயே என் பிள்ளை காலை ஓடிச்சு வச்சுட்டா. இந்த வீட்டுக்குள் வந்துட்டா இன்னும் என்னென்ன செய்வாளோ ? "
"அட.. ச்சீ.. வாயை மூடு. நம்ம கூட சேர்ந்து காரில் வந்திருந்தா இந்தப் பிரச்சினையே வந்திருக்காது. நானும் என் ப்ரெண்ட்ம் டூ வீலரில் தான் வருவோமுன்னு அடம் பிடிச்சு வந்தான். முன்பின் பழக்கமில்லாத ஏரியா. மழை பெய்ஞ்சு பள்ளத்தைத் தண்ணி மூடியிருந்ததாலே பேலன்ஸ் தவறி கீழே விழுந்துட்டான். இதெல்லாம் ஒரு பெரிய குற்றமா ? "
" ஏன் சொல்ல மாட்டீங்க ? காலில் கட்டுப் போட்டுட்டு அங்கே இங்கே நகர முடியாதபடி படுத்த படுக்கையா இருக்கிறதைப் பார்த்துட்டு பெத்த வயிறு பத்தி எரியுது. நீங்க வியாக்கியானம் பேசறீங்க "
" என்னமோ நம்ம நேரம். அதுக்கு அந்தப் பொண்ணு என்னடி செய்வா ? "
"நம்மளோட  நேரமில்லீங்க இது. நாம  போய்ப்  பார்த்துட்டு வந்தோமே ஒரு விளங்காத  மகராசியை, அவளோட ராசி என் பிள்ளைக்கு இப்படி ஆகிப் போச்சு .  வெளங்காத குடும்பம் போலிருக்கு.  நமக்கு அந்த வரன் வேண்டவே வேண்டாம் " 
"எதுக்கும் இன்னும் ஒரு பத்து நாள் ஆறப் போட்டுட்டு அப்புறம் முடிவு எடுக்கலாம் " என்றார் சுந்தரம்.
" பத்து நாள் இல்லே , பத்து வருஷம் ஆறப் போட்டாக் கூட என் மனசு ஆறாதுங்க. உடம்புக்கு முடியாமே என்னிக்குமே படுக்காத பிள்ளை அவன். இன்னிக்கு கட்டிலே கதின்னு கிடக்கிறான். ஒரு வருஷம் ரெண்டு வருஷம் இல்லே. பன்னிரண்டு வருஷம் ஸ்கூலில் அவார்ட் வாங்கி இருக்கிறான். எதுக்காக ? ஒரு நாள் கூட ஸ்கூலுக்கு லீவு போடாமே வந்ததுக்காக. ஸ்கூல் லீவ் நாளில் கூட ஏதாவது ஒரு கோர்ஸ் படிக்கிறேன்னு ஓடிகிட்டே இருப்பான்... மத்த வீட்டுப் பிள்ளைங்க மாதிரி நம்ம பிள்ளை சினிமா, டீவீ ன்னு பார்த்துட்டு இருந்தது கிடையாது. அதைப் பார்க்கிற டைம்மில் வேறு எதையாவது கத்துக்கலாமேனு தான் சொல்வான். இன்னிக்குப் பாருங்க, என் பிள்ளைக்கு டீவீயை விட்டால் வேறு கதி கிடையாது. அப்போ கூட, " அம்மா, டீவீயில்  எனக்கு இதுதான் பார்க்கணும்ன்னு கட்டாயம் கிடையாது. எனக்காக நீ உன்னோட சீரியல் எதையும் மிஸ் பண்ண வேண்டாம்"னு சொல்லிட்டு அவன்   படுத்துக் கிடக்கிறான். அவனோட நல்ல மனசுக்கு ஏத்தபடி வேறவொரு நல்ல பெண்ணாப் பார்க்கலாம் " என்றாள் மீனாட்சி 
" நீ என்றைக்கு, எந்த விசயத்தில் ,  உன் உடும்புப் பிடியை விட்டு  இறங்கி வந்திருக்கிறே, இதில் இறங்கி வர ? " கொடிறும் பேதையும் கொண்டது விடாது"ன்னு தெரியாமலா சொல்லியிருப்பாங்க . உன் மனசு போலவே ஆகட்டும். பொண்ணு மாப்பிளைக்கு ஜாதகம் பார்க்கிறதை விட்டுட்டு இனிமே மாமியார் மருமகளுக்கு ஒத்துப் போகுமான்னு ஜாதகம் பார்க்க ஆரம்பிக்கலாம். எப்படியோ போ " என்று சொல்லிவிட்டு பேப்பரில் கண்களை ஓடவிட்டார் சுந்தரம்.
ஒரு மாதத்திற்குப் பிறகு ......
வேலைக்குக் கிளம்பி கொண்டிருந்தான் ரமேஷ்.
"ரமேஷ், ஒரு வாரமா நாங்களும்  திரும்பத் திரும்பக் கேட்டுட்டேதான்  இருக்கிறோம் . நீ எந்த பதிலும் சொல்லலியே. தரகர் இப்போ சொல்ற இடம் நல்ல இடமாத் தெரியுது. நீ வந்து பார்க்கிறதுக்கு எப்போ வசதிப் படும்னு தரகர் கிட்டே  சொல்லணுமே. உனக்குத் தோதுவான ஒரு நாளா சொல்லேன் " என்று கேட்டார் சுந்தரம்.
" அப்பா, 45 நாள் லீவுக்குப் பிறகு நான் இப்போதான் ஆபீசுக்குக் கிளம்பிப் போறேன். இந்த நிமிஷத்தில் " அதை " பேசித்தான் ஆகணுமா ? " என்று எரிச்சலுடன் கேட்டான் ரமேஷ்.
" கோபப் படாதே ரமேஷ். நாங்களும் ஒரு வாரமா உன் கிட்டே பேசித் தானே பார்க்கிறோம். நீ பிடிகொடுத்து பேசலியே . இன்றைக்கு தரகர் எப்படியும் போன் பண்ணுவார். அவருக்கு பதில் சொல்லி யாகணுமே. அதனால்தான் கேட்டேன் "
" இன்னிக்குன்னு இல்லே, இனிமே என்றைக்குமே எனக்கு கல்யாணமே வேண்டாம். எனக்குக் கல்யாணம் பண்ணிப் பார்க்கணும்கிற ஆசையை இந்த நிமிஷமே நீங்க  மறந்துடுங்க " என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பிப் போனான் ரமேஷ்.
ரமேஷ் கிளம்பிப் போய் வெகு நேரம் ஆகியிருந்தாலும், மீனாட்சியும் சுந்தரமும் இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீண்டு வரவில்லை.
"என்னங்க. இதை இப்படியே விடக்கூடாது. உடனடியா ஒரு முடிவு கட்டியே ஆகணும். உங்க அண்ணனுக்கு உடனே போன் பண்ணி வர சொல்லுங்க. ரமேஷ் வீட்டுக்கு வரும்போது அவர் இங்கே இருந்தே யாகணும், நாம கேட்டா அவன் ஒழுங்கா பதில் சொல்ல மாட்டான். அவன் மனசை மாத்த உங்க அண்ணனால் மட்டுமே முடியுமே. " பெரியப்பா. .. பெரியப்பா " ன்னு அவர்கிட்டே பிரியமா இருப்பான். அவரை வச்சே பேசி இவன் மனசிலென்ன இருக்குனு தெரிஞ்சுக்குவோம்" என்றாள் மீனாட்சி .
அன்று இரவு ரமேஷ் வீடு திரும்பும்போது கிருஷ்ணகுமார் வீட்டில் இருந்தார்.
" வாட் எ சர்ப்ரைஸ் ! என்ன பெரியப்பா இந்த நேரத்தில் ? வழக்கமா நீங்க ராத்திரி ஏழு மணிக்குப் பிறகு வெளியில் எங்கும் கிளம்பி வரவோ போகவோ  மாட்டீங்க  "
" முகம் அலம்பிட்டு காபி சாப்பிடு. உன்கிட்டே கொஞ்சம் பேசணும் "
" அம்மா காபி குடு ... பெரியப்பா நீங்க சொல்லுங்க ... காபி குடிச்சுகிட்டே  கேட்கிறேன் "
" காலையில் நீ சொன்ன விஷயம் பத்தி அப்பா அம்மா ரெண்டுபேரும் ரொம்ப வருத்தப் படறா. ஏன் ரமேஷ் இந்த திடீர் முடிவு ? ஒருவேளை உனக்கு, நீ அன்னிக்குப் பார்த்துட்டு வந்த பெண்தான் பிடிச்சிருக்கா ? "
" அதெல்லாம் ஒண்ணுமில்லே பெரியப்பா "
" அப்படின்னா ஏன் கல்யாணமே வேண்டாம்கிறே ? "
"பெரியப்பா, இந்த வீட்டில் அம்மாவைத் தவிர வேறு எந்தப் பெண்ணிடமும் பேசிப் பழக  சந்தர்ப்பம் இல்லாதபடி எனக்கு அக்கா தங்கை என்று யாருமே இல்லாமே போயிட்டாங்க. படிக்கிற காலத்திலும் சரி இப்போ வேலையில் சேர்ந்த பிறகும் சரி. பெண்களிடம் அதிகம் பேசிப் பழகும் சந்தர்ப்பம் எனக்கு கிடைச்சதே இல்லை. பெண்களைப் பத்தி நான் தெரிஞ்சு வச்சிருக்கிற தெல்லாம் ரொம்பவுமே குறைவுதான். காலில் அடி பட்டு படுத்த படுக்கையா வீட்டில் இருக்கிறப்போ தான் எனக்கு  சீரியல் பார்க்கிற சந்தர்ப்பமே கிடைச்சுது.  ஏதாவது ஒரு கதை ரெண்டு கதைனா பரவாயில்லே, வருகிற அத்தனை கதையிலுமே  பொம்பளைங்கள்லாம் , தீவிரவாதி  நக்சலைட்களைவிட மோசமானவங்களா இருக்கிறாங்க. இது பத்தி அம்மா கிட்டே கேட்டேன், " என்னம்மா, இப்படியெல்லாம் கூட பொம்பளைங்க நிஜ வாழ்க்கையில் இருப்பாங்களான்னு ". அதுக்கு அம்மா "ஊர் உலகத்தில், ஒவ்வொரு குடும்பத்தில் இருக்கிறதைத்தானே கதையா காட்டறான்"ன்னு சொன்னாங்க. ஆனானப்பட்ட அல் -கொய்தா தீவிரவாதிங்க கூட இவங்க கிட்டே ட்ரைனிங் எடுக்கணும் போலிருக்கு . அந்த அளவுக்கு   மாமியாருக்குத் தெரியாமே அந்தக் குடும்பத்தைப் பழிவாங்கத் துடிக்கிற  மருமகளும், மருமகளை விரட்ட மாமியாரும் சதி பண்றாங்க. இவங்க ரெண்டு பேருக்கு நடுவில் மாட்டிகிட்டு ஒரு ஆம்பிளை கண்ணுமுழி பிதுங்கிப் போய் நிற்கிறான். பெரியப்பா, " பொம்பளைங்க " என்ற பேச்சை எடுத்தாலே எனக்குப் பயமா இருக்கு பெரியப்பா. நான் கீழே விழுந்ததும், காலில் அடிபட்டு படுக்கையில் கிடந்ததும் ஒரு தற்செயலான சம்பவம். ஆனா இதுக்கெல்லாம்   நாங்க பார்த்துட்டு வந்த "அந்தப் பெண் "தான் காரணம்னு அம்மா சொல்றாங்க. ஒரு சாதாரண விஷயத்துக்கே  இப்படின்னா வேறொரு மோசமான விஷயம் நடந்தா இவங்க எப்படி எப்படி ரியாக்ட் பண்ணுவாங்களோ.  வருகிற பெண் கண்டிப்பா படிச்சவளா இருப்பா. ஏதாவது  வேலை பார்க்கிறவளாத்தான்  இருப்பா. வீட்டுக்குள் இருக்கிற அம்மாவுக்கே இந்த அளவு ஈகோ என்றால் , வெளிஉலகம் தெரிஞ்ச பெண்களைப் பத்தி சொல்லவே  வேண்டாம். ரெண்டு பெண்கள் இருக்கிற இடத்தில் கண்டிப்பா வாக்குவாதம் வரத்தான் செய்யும். நியாயம் கேட்டு ரெண்டு பேருமே என்னிடம்தான் வருவாங்க. இதில் யார் சொல்றது பொய். யார் சொல்றது நிஜம்னு நான் எப்படித் தெரிஞ்சுக்க முடியும். சந்தோசத்துக்காகத்தானே  எல்லோருமே   கல்யாணம் பண்ணிக்கிறோம். ஆனா அது சங்கடத்தைக் கொண்டு வரும்னா அப்படியொரு கல்யாணம் வேண்டவே வேண்டாம் பெரியப்பா  இதுக்கு மேலேநீங்க யாரும்  என்னை வற்புறுத்தாதீங்க. பெரியப்பா நீங்க உட்கார்ந்திருங்க . நான் போய் டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வர்றேன் " என்று சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தான் ரமேஷ்.
" என்னங்க .. இப்படி சொல்லிட்டுப் போறான். இப்போ என்ன செய்றது ? " என்று கேட்டு கிருஷ்ணகுமார் முகத்தைப் பார்த்தாள் மீனாட்சி. 
"செய்றதா ? மொதல்லே  அந்த டீவீயை தூக்கிப் போட்டு உடை " என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி சென்றார் கிருஷ்ணகுமார்          

Friday, September 06, 2013

Scanning of inner - heart ( Scan Report Number - 85 )

                         தேடி வந்தவொரு துணை !

" என்ன,ஒரு சத்தத்தையும் காணோம் " என்ற நினைப்பில் ராஜாராம் இருந்த அறைக்குள் எட்டிப் பார்த்த லட்சுமி, அவரருகில் வைத்த இட்லியும் தண்ணீரும் அப்படியே இருப்பதைப் பார்த்துவிட்டு, " ஏனுங்க உங்களுக்கு வேண்டாம்னா கொண்டு வந்து  வைக்கும்போதே, ' இப்போ வேண்டாம். அப்புறமா சாப்பிடுறேன்'னு சொல்றதுக்கென்ன ? சுடச்சுட கொண்டு வந்து வைத்த இட்லி, இப்போ ஈ மொய்சுட்டு இருக்கு. இனிமே இதை யார் சாப்பிடறது ? வரவர உங்க போக்கு எதுவும் சரியில்லே. என்ன வேணும்?என்னநினைக்கிறீங்கன்னு வெளியே சொல்லித் தொலைந்தால் தானே மத்தவங்களுக்குப் புரியும். எந்த நேரமும் மோட்டு வளையைப் பார்த்து கிட்டு அப்படி என்னதான் சிந்தனையோ தெரியலை. சூடா வேறே இட்லி கொண்டு வரட்டுமா ? " என்று கேட்டாள். 
' வேண்டாம் ' என்பதுபோல் கையசைத்தார் ராஜாராம்.
" ஆமா... இதை வாயைத் திறந்து சொன்னால், வாயில் இருக்கிற முத்து கொட்டி விடுமாக்கும்? " 
லட்சுமி அங்கிருந்து போனதும், நிறைய பேர், "வாயைத் திறந்து சொன்னால், வாயில் இருக்கிற முத்து கொட்டி விடுமாக்கும்"  என்று சொல்லக் கேட்டிருக்கிறேனே. இதற்கு என்ன அர்த்தம்? இதைக் கண்டு பிடித்த புண்ணியவாளன் யாராக இருக்கும்? எப்பவுமே பல்லை முத்துக்கு ஒப்பிட்டுத்தானே பேசுவாங்க! இவங்க முத்து உதிர்ந்துடுமான்னு கேட்பது பல்லை நினைத்துதானா என்ற ஆராய்ச்சியில் இறங்கினார். கொஞ்ச நேரந்தான் இந்த ஆராய்ச்சி.
திரும்பவும் விட்ட இடத்தைத் தொடர நினைத்து  மோட்டு வளையைப் பார்க்க  ஆரம்பித்தார். வீதிவரை மனைவின்னு சொல்வாங்க. வீட்டுக்குள் இந்தப் போடு போடறாளே என்று நினைத்துக் கொண்டார் . சரவணனை நம்பமுடியாது. 'குடிக்க கொஞ்சம் தண்ணீ கொண்டு வாடா'ன்னு கேட்டாக் கூட "ஏம்ப்பா, தண்ணீ இருக்கிற இடம்   உங்களுக்குத் தெரியாதா என்ன ? எழும்பிப் போய்க் குடிக்கிறதுக்கு என்ன ? " என்று கேட்டுவிட்டுப் போவானே. இவனை நம்பவே  முடியாது. பெரியவன் கொஞ்சம் தயவு தாட்சண்யம் பார்ப்பான். ஆனால் 'வேலை . வேலை'ன்னு  ஓடுவானே. தனக்கு உடம்புக்கு ஏதாவதுன்னாக் கூட அதை கொஞ்சமும் லட்சியம் பண்ணாமே ஓடுவானே. இவனை நம்ப முடியுமா ?
போகிறப்போ ஏதாவது வலி தெரியுமா? அதை நம்மால் வெளியில் சொல்ல முடியுமா ? மூச்சுத் திணறுமோ ? ஐ.சி. அது இதுன்னு போயிட்டா மத்தவங்க வந்து நினைச்ச நேரம் பார்க்க முடியாது. கூடவே இருக்க முடியாது. அந்த  நேரத்தில், 'முடிகிற ' நேரம் வந்துட்டா,  கடைசியா நினைப்பதை யார்கிட்டேயும் சொல்லவும் முடியாதே.அதை  சொல்கிற அளவுக்கு  சுயநினைவு இருக்குமா ? சுயநினைவு இருந்தால் சொல்ல நினைப்பதை சொல்லாமலே போகிறோமே என்கிற பீலிங்கில் தானே போக முடியும் ? அதுக்குப் பிறகு என்ன நடக்கும் ? இதை யாரிடம் கேட்பது . இருக்கிறவங்களுக்கு என்ன நடக்கும்னு தெரியாது. போனவங்க வந்து அவங்க அனுபவத்தைச் சொல்ல முடியாது . என்னவொரு கிரிடிகல் பொசிசன்டா சாமி.
" துணையோடல்லது நெடுவழி போகேல் "ன்னு ஒரு தமிழ்ப் பாடல் சொல்லுதே. ஆனால் இந்த " வழிப் பயணத்திற்கு " துணையாக யாரையும் கூப்பிடவும் முடியாதே. கூப்பிட்டால் கூட துணிந்து  யாரும் வரக் கூட மாட்டார்களே. தொட்டுத் தாலி கட்டின பெண்டாட்டி கூட " ஐயோ, என்னை விட்டுட்டுப் போயிட்டீங்களே. உங்களைப் பிரிஞ்சு எப்படி வாழப் போறேன்னு சொல்லித்தான் அழுவாளே தவிர நானும்  உங்களோடு  கூட இப்பவே  வந்துடுதேன்னு சொல்ல மாட்டாளே. துணைக்கு யாராவது வந்தால் பயமில்லாமல் இருக்குமே.
அவரது எண்ண ஓட்டத்தைக் கலைத்தது, லட்சுமியின் " இந்தாங்க, உங்க ப்ரெண்ட்  சாரங்க நாதன் லைனில் இருக்கிறார் " என்ற குரல்.
" சாரங்கனா ? " என்று கேட்டபடி ஆவலுடன்  அவள் கையிலிருந்த போனை வேகமாகப்  பறித்தார் ராஜாராம்.
" என்னடா எப்போ வந்தே ? எப்படி இருக்கிறே ? உன்னைப் பார்த்தே ஆறு மாசம் ஆச்சேடா ! "
"இன்னைக்குதான் வந்தேன். நான் நல்லாத்தான் இருக்கிறேன் . உனக்கு என்னடா ஆச்சு ? உன் வொய்ப் என்னென்னவோ சொல்றாங்க, நீ சரியா சாப்பிட்டு, தூங்கி நாலு மாசம் ஆச்சுன்னு . உனக்கு என்னடா பிரச்சினை ? நீ எதையும் மனசு விட்டுப் பேச மாட்டேங்கிறேனு சொல்லி அவங்க பீல் பண்ணி சொன்னாங்க. என்னடா .... என்ன ? "
" வெளியில் யார்கிட்டேயும் சொல்ல முடியாது "
" என்ன சொல்றே  ? "
" சொன்னா சிரிப்பாங்கனு, இன்னும் சொல்லவே ஆரம்பிக்கலே ! "
" புரியும்படி சொல்லுடா "
" நாம் சாகப் போகிறது நமக்குத் தெரியுமா ? "
" மனுஷன் எல்லாத்தையும் கண்டு பிடிச்சிட்டான். இதைக் கண்டுபிடிக்க முடியலே. இந்த ஒண்ணை வச்சுதானே, கடவுள் மனுஷங்க கிட்டே செப்படி வித்தை காட்டிகிட்டு இருக்கிறார். எத்தனை பேர் தற்கொலை முயற்சியில் கூட தோல்வி அடைஞ்சிருக்காங்க. இந்த ஒரு விஷயத்தை வச்சுதானே கடவுள், "நான், நான்தான் ! நீங்க நீங்கதான்டா "ன்னு  சொல்லி  மார் தட்டி மனுஷங்க கிட்டே  சவால் விட்டுட்டு இருக்கிறார். ஆமா. எப்போ எப்படி  சாகப் போகிறோம்கிறது  நமக்குத் தெரியாமல் இருக்கிறோமேங்கிறதுதான் உன்னோட பிரச்சினையா ? "
" பிரச்சினை இல்லே. அது பயம் ? அந்த கடைசி நொடி எப்படி இருக்கும் ? நமக்கு சுயநினைவு இருக்குமா ? வலியில் அவஸ்தைப் பட்டால், பணம் செலவு பண்ணி ப்ராப்பர்  ட்ரீட்மென்ட் நமக்குக் குடுப்பாங்களா ? செலவை நினைச்சு எதையும் கண்டுக்காமே இருந்துடுவாங்களா ? செத்த பிறகு நடப்பது நம்ம ஆத்மாவுக்குத் தெரியுமா ? நாம செத்த பிறகும் வலி அவஸ்தைகளை உணரவேண்டிய நிர்பந்தம் இருக்குமா ? யாரும் நம்ம பக்கத்தில் இல்லாதப்போ உயிர் போகிற நிலைமை வந்தால் அந்தக் கடைசி நொடியில் நாம சொல்ல நினைப்பதை சொல்லாமல் போயிடு வோமோ ? கதைகளில் சொல்றமாதிரி நம்மளை   போகிற வழி நெடுக சித்ரவதை  பண்ணுவாங்களா ? நம்ம கூட யாராவது துணைக்கு வந்தால் நல்லா இருக்குமே .. இந்த மாதிரி எண்ணங்கள் வந்து என்னை எந்த நேரமும் சித்ரவதை பண்ணுது ..என்னைத் தூங்க விடாமே, சாப்பிட விடாமே, யாரோடயும் மனம்விட்டுப் பேசிப் பழகி, சிரிக்க விடாமே பண்ணுதுடா ? " என்றார் ராஜாராம் பரிதாபமாக.
" இடியட் . ஏண்டா நீ படிச்சவன்தானே ? மிகப் பெரிய நிறுவனத்தில் நூறு பேருக்கு மேல் வைத்து வேலை வாங்கினவன்தானே ? நீ எப்படிடா இப்படி சில்லியா யோசிக்கிறே ? "
" போடா, புரியாமே பேசாதே. படிப்பு , பணம் , திறமைக்கும், இதுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாதுடா "
" உனக்கு என்னடா வயசு ? "
" போன மாசந்தான் அறுபத்து நாலு கம்ப்ளீட் ஆச்சு "
" உனக்கு ஏதாவது நோய் இருக்கா ? "
" இல்லேடா. ரொம்ப ஹெல்தியா இருக்கிறேன் "
" ராஜா, நீ எதையோ பார்த்து பயந்து , நீயே தேவை யில்லாமே   எதையோ கற்பனை பண்ணிட்டு இருக்கிறே . உனக்கு உடனடி தேவை ஒரு நல்ல ஆலோசனைதான். எனக்குத் தெரிந்த சைக்கியாட்ரிஸ்ட் ஒருத்தர் இங்கே இருக்கிறார். நீ உடனே கிளம்பி இங்கே வா. மத்தியானம் நாம சேர்ந்து சாப்பிடலாம். ஈவினிங் அவரை மீட் பண்ணுவோம். அவரைப் பார்த்தப்பறம்  நானே உன்னைக் கொண்டு போய் உங்க வீட்டில் விடறேன் "  
" சரி " என்ற ராஜாராம், " லட்சுமி, சாப்பாடு எடுத்து வை. நான் போய் நம்ம சாரங்கனைப் பார்த்துட்டு வந்திடறேன்" என்று  குளிக்கக் கிளம்பினார்.
"கடவுளே, காப்பாத்தினே " என்று நன்றி சொன்னாள் லட்சுமி.  
அவர் வீட்டை விட்டுக்   கிளம்பிப் போகும் போது "என்னங்க, செலவைக் கணக்குப் பார்க்காமே பேசாமே ஆட்டோவில் போங்க. அவர் இருக்கிற ஏரியாவில்  ட்ராபிக் நெருக்கடி அதிகம்னு நீங்க அடிக்கடி சொல்வீங்களே " என்ற லட்சுமியிடம் "அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்" என்று சொல்லி  விட்டு கிளம்பினார் ராஜாராம்.
ராயபுரம் பஸ் ஸ்டாப்பில் இறங்கியதுமே , " சாரங்கன் மட்டும் அப்படி என்னத்தைப் பெரிசா சொல்லிடப் போறான் ? " துணைக்கு நானும் வரட்டுமா " என்று கிண்டல் பண்ணுவான் என்ற ரீதியிலான எண்ணங்கள் மனதில் தோன்ற நடக்க ஆரம்பித்தார் ராஜாராம்  
சற்று நேரத்தில் "க்றீச் " என்று வண்டி நிற்கும் சப்தமும் அதைத் தொடர்ந்து " ஐயோ " என்ற அலறலும் கேட்டது . மொத்த ட்ராபிக்கும் ஸ்தம்பித்து நின்று போனது. லாரியைக் கூட்டம் சூழ்ந்து கொண்டு லாரி டிரைவரைப் பிடித்து இழுத்தது.
" யோவ். விடுங்கையா .. லாரிக்காரன் மேலே எந்தத் தப்பும் இல்லே. அதோ லாரி சக்கரத்துக்கு கீழே மாட்டிட்டு இருக்கானே, அவன்தான் ஏதோ யோசனையில் வந்தான். லாரிக்காரன் ஹார்ன் அடிச்சதையும் சட்டை பண்ணாமே குறுக்காலே வந்தான். அவனை அவாய்ட் பண்ணத்தான் லாரி டிரைவர், சடன் பிரேக் போட, பின்னால் வந்த டூ வீலர் லாரியில் மோதி கீழே விழுந்தான் " என்று விளக்கம் சொல்லிக் கொண்டிருந்தார், விபத்தை நேரில் பார்த்த ஒருவர்.
" பெரிசு காலி " என்று ராஜாராமின் உயிரற்ற  உடலை சுட்டிக் காட்டி ஒருவர் சொல்ல,  " டூ வீலர் என்ன ஆனான் ? " என்று கேட்டபடி சுற்றி நின்ற கூட்டம் லாரியின் பின் பக்கம் ஓடியது.
வண்டி அப்பளமாக நொறுங்கிக் கிடந்தது. பையிலிருந்த காய்கறிகள் நாலாபுறமும் சிதறிக் கிடந்தது. வண்டியில் வந்தவன் கட்டையாய் விரைத்துப் போய்க் கிடந்தான் 
" யார் பெத்த பிள்ளையோ, என்னவோ. சமையலுக்குக் காய் வாங்க வந்தவனை வீடு போய்ச்சேர விடாமே, விதி விளையாடிட்டுதே " என்று தத்துவம் பேசினார் ஒருவர்.
"விதியா? இது விதி இல்லே ஸார் , மனுஷனோட முட்டாள்தனம் .  அதோ லாரிக்கு அடியிலே மாட்டிகிட்டு   செத்துக் கிடக்கிறானே அவன் பண்ணின வேலை. முட்டாப் பயலுக. சாக நினைக்கிறவனுக   எங்காவது ஆறு குளம் கடல்னு தேடி போய் விழுந்து சாகிறதுதானே ! இப்படி ஓடுற வண்டி முன்னாலே விழுந்து சாகிறானுக . சாகிறவன் சும்மா போகாமே, துணைக்கு ஒரு வாலிபப் பையனையும் , வாழ வேண்டிய வயசில் வாழ விடாமே கூட்டிட்டுப் போயிட்டானே " என்று திட்டித் தீர்த்தார் ஒரு " திருவாளர்    பொது ஜனம்  ".
அந்த நேரத்தில், அந்த இடத்தில் யாருக்கும் தெரியாத ஒரே ஒரு விஷயம்  "டூ வீலரில் வந்து அடிபட்டு செத்தது, ராஜா ராமின் நண்பர் சாரங்கனின் இரண்டாவது மகன் என்பதும், ராஜாராமுக்கு விருந்து தயார் பண்ணத் தான்  அவன் காய்கறி வாங்கிக் கொண்டு வந்தான் என்பதும் !!

Tuesday, September 03, 2013

DEAR VIEWERS,

உங்களோடு பகிர்ந்து கொள்ள இரண்டு விஷயங்கள் :


1. இந்த வாரம் வெளியான கதையின் தலைப்பில் உள்ள " ஜோலி " என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்று சிலர் கேட்டிருந்தார்கள். அந்த வார்த்தை திருநெல்வேலி வட்டாரப் பேச்சு வழக்கில் உள்ளது. அதற்கான அர்த்தம் " வேலை " என்பது. சிலர் " சோலி " என்றும் உச்சரிப்பார்கள். 
" உனக்கு வேறே ஜோலியே இல்லையா ? "
" எனக்கு ஜோலி தலைக்கு மேலே இருக்கு. நான் வரலே " - இந்த இரண்டு வார்த்தகளிலும் உள்ள ஜோலி என்ற இடத்தில் வேலை என்று சொல்லிப் பாருங்கள். ஜோலிக்கான அர்த்தம் புரியும்.
இனிமே ஒவ்வொருத்தருக்கும் அர்த்தம் சொல்றதே எனக்கு ஜோலியாப் போயிடும் போலிருக்கே! ( சும்மா தமாஷ்தானுங்க )

2.  " ON-LINE PUZZLES " OPEN பண்ணுவதில் ஒரு சிலர் சிரமப் படுவதாக அறிகிறேன்.  GOOGLE SEARCH ல் " puzzles-timepass.blogspot.comஎன்பதில் கிளிக் செய்தால் contents சில display ஆகும். அதில் SOLVE IT என்பதில் கிளிக் செய்தால் என்னுடைய ப்ளாக் உள்ளே வரமுடியும் . இது வரை 3 PUZZLES  வெளியாகியுள்ளது. அந்த புதிர்களை நீங்கள் டைரக்ட் ஆக ON - LINE ல் நிரப்ப முடியும்.

பார்வையாளர்களின் வசதிக்காக அதை ON-LINE ல் கொண்டு வர நினைத்து கிட்டத் தட்ட இரண்டு  வருடங்களாக, COMPUTER KNOWLEDGE  உள்ளவர்களிடம் கேட்டுக் கொண்டிருந்தேன். நிறைய பேர் ட்ரை பண்ணிப் பார்த்துவிட்டு, " தெரியவில்லை " என்று சொல்லி விட்டார்கள்.முடிவில் BLOGGER - திரு.ஹரி (www.puthirmayam.com) எனக்கு இதை செய்து தந்துள்ளார். அந்த முகந் தெரியாத மனிதருக்கு எனது இதயம் கனிந்த நன்றி !