Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Thursday, September 19, 2013

தேவை - கொஞ்சம் கருணை ! கொஞ்சம் மனித நேயம் !!

நேற்றும் இன்றும் அனைத்து தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பான, நெஞ்சை நெருட வைத்த ஒரு காட்சி, கண் பார்வையற்ற மாணவர்களின் சாலை மறியல். " இவங்க ஒருத்தங்கதான் பாக்கி. இவங்களும் மறியலுக்கு வந்தாச்சா ? " என்ற அற்பத்தனமான கேள்வி மனதில் தோன்றி மறைந்தாலும், இவர்களுக்காக மனதில் ஒரு வலி தோன்றியது உண்மைதான். இதே வலி இந்தக் காட்சியைப் பார்த்த பலருக்கும் இருந்திருக்கும் என்று நம்புகிறேன்.
உலகிலேயே ரொம்பவும் கொடுமையான விஷயம் பார்வையற்றவர் களாக வாழ்வதுதான். இன்றைய தினத்தில் எனக்கு வயது 60. பொதுவாக இந்த வயதைத் தொட்டுக்கொண்டிருக்கிற , மனுஷங்களாகப் பிறந்த எல்லோருக்குமே மனதில் தோன்றுவது அவரவர் " கடைசிக் காலத்தை" ப் பற்றிய ஒரு பய உணர்வுதான். நான் மட்டும் அதற்கு விதிவிலக்காக இருக்க முடியாது. அந்திமக் காலத்தைக் குறிப்பிடும் கவிஞர்கள் " கை நடுங்கிக் கண் மறைந்து காலம் வந்து சேரும் " என்றுதான் சொல்கிறார்கள். என்னுடைய  சிறுவயது முதலே, கண் பார்வையற்ற மனிதர்கள் மீது எனக்கு தனியொரு பாசம், பரிதாப உணர்ச்சியுண்டு. கோவிலுக்குப் போகும் போதெல்லாம் " இந்தவொரு விஷயத்தில் நீ ஏன் கண்ணற்ற குருடனாக இருக்கிறாய் ? " என்று கேட்டு கடவுளிடம் சண்டை போடுவேன். " கடவுளே, நீ எனக்கு எவ்வளவு கஷ்டத்தை வேண்டுமானாலும் கொடு. அதை நான் தாங்கிக் கொள்வேன். ஆனால் கடைசிவரை கண் பார்வையில் மட்டும் எந்தக் குறைவும் வரக் கூடாது. அப்படியொரு நிலைமை வந்துதான் ஆக வேண்டுமென்றால் அந்த நிமிடமே என் உயிர் போய் விடவேண்டும்  " என்றுதான்  பிரார்த்தனை செய்வேன். இந்த அறுபது வயதிலும் கண்ணாடி இல்லாமல் என்னால் படிக்க எழுத முடியும். என்னுடைய நெருங்கிய நட்பு வட்டத்தினர்  இதைப் பார்த்து ஆச்சரியப் படுவார்கள் . கண்ணில் தூசி விழாமல் இருக்க டூ வீலர் ஓட்டும்போது மட்டும் கண்ணாடி போட்டுக் கொள்வேன் .
இப்போதெல்லாம் இது விஷயமாகத் தான் நான் கடவுளிடம் அதிகம் மன்றாடுகிறேன். "  கண் பார்வை போகுமென்றால். அடுத்த நொடியே என் உயிரும் போயிடணும். மற்றவர்களை depend பண்ணி வாழும் நிலையை எனக்குக் கொடுத்து விடாதே " என்றுதான் வேண்டிக் கொள்கிறேன்.
பார்வையற்றவர்களைப் பார்த்து நான் ஆச்சரியப் படும் ஒரு விஷயம் : இவர்களில் 99 % பேர் உழைத்து வாழவே ஆசைப்படுகிறார்கள். உழைக்க முடியாத நிலையில் இருப்பவர்கள் கூட , ஏதாவது ஒரு பாடலைப் பாடிய படியே தான் கையேந்துகிறார்கள். பெரிய பெரிய வித்வான்கள், பாடத் தெரிந்தவர்கள்  சங்கீதத்தை ஒரு   தொழிலாக வைத்திருப்பது போல, இவர்களும் பாடுவதை ஒரு தொழிலாக நினைக்கிறார்கள் என்றுதான் நான் நினைக்கிறேன்.
Eletric train ல் நான் ஆபீஸ் போய்க் கொண்டிருந்த காலத்தில், நான் அடிக்கடி கவனித்த விஷயம் ஒன்று : லேடீஸ் கம்பார்ட்மெண்டில் கண் பார்வையற்ற ஒருவர் ஏறுவார். பொதுவாக லேடீஸ் கம்பார்ட்மெண்டில் கும்மாளம்  கூச்சலுக்கு அளவே கிடையாது. திடீரென்று கம்பார்ட்மெண்ட் முழுவதும் அமைதி நிலவுமென்றால் அதற்கு ஒரே ஒரு காரணம்  அந்த பார்வையற்ற மனிதர் புல்லாங்குழல் வாசிக்கப் போகிறார்  என்பதுதான். அவர் flute வாசிப்பதைக் கேட்க அத்தனை பேரும் ஆவலாக இருப்பார்கள் . ஒரு ஊசி கீழே விழுந்தால் கூட அந்த ஓசை மற்றவர்களுக்குக் கேட்கும் அளவுக்கு அப்படியொரு ஆழ்ந்த அமைதி இருக்கும். ஏதாவது ஒரு ஸ்டேசனில் ட்ரைன் நின்று அந்த மனிதர் இறங்கிப் போகும் வரை அந்த அமைதி நிலவும். அதுவும் " அழைக்காதே, நினைக்காதே " என்ற பாடலை அவர் flute ல் வாசிப்பதை இன்றைக்கெல்லாம் நாம்  கேட்டுக் கொண்டிருக்கலாம். ரயில் பயணிப்பதை நிறுத்தி விட்டு நான் " டூ வீலரில் " போக ஆரம்பித்தபோது, " அந்த ஆளை " ரொம்பவும் மிஸ் பண்றேன்னு நான் வருத்தப் பட்ட நாட்கள் உண்டு .
என் தங்கையின் குடும்பத்தினருடன் சேர்ந்து சங்கரன் கோவிலுக்குள் போய்  விட்டு வெளியில் வருகிறோம். அங்குள்ள நடைப்படி தடுக்கி ஒரு மனிதர் விழுந்து விட்டதைக் கவனித்த நான் ஓடிச்சென்று தூக்கி விட்டேன். அப்போதுதான் அவர் பார்வையற்றவர் என்பது புரிந்தது. அவர் கையிலிருந்த வாசனை ஊதுவத்தி பாக்கெட்டுகள் சிதறிக் கிடந்தன. அவற்றை சேகரித்து கொண்டிருந்தேன். இதைப் பார்த்த என் தங்கையின் கணவரும்   கீழே விழுந்தவற்றை எடுத்துக் கொடுத்தார். என் தங்கையின் கணவர் இது போன்ற விஷயங்களில் ரொம்பவும் உதவுவார். கூலிக்காரர்கள், வேலையாட்களிடம் அதிகம் பேரம் பேச மாட்டார். அவர்கள் கேட்பதைக் கொடுத்து விடுவார். இந்த மனிதருக்கு பணம் கொடுப்போம் என்று நான் சொல்ல, இருவருமாக ஒரு தொகையைக் கொடுத்தோம். ஆனால் அந்த மனிதர் அதை வாங்க மறுத்து விட்டார். " இந்த பத்தி பாக்கெட் ஒன்று வாங்கிக்கோங்க. எனக்கு ஒரு பாக்கெட்டுக்கு ஒரு ரூபாய் லாபம் கிடைக்கும் " என்றார். உடனே அவர் கையிலிருந்த எல்லா ஊதுவத்திகளையும் நாங்களே வாங்கிக் கொண்டு பணம் கொடுத்தோம். சென்னைக்கு வந்ததும் பிரெண்ட்ஸ்க்கு  ஆளுக்கொரு ஊதுவத்தி பாக்கெட்   கொடுத்த போது " என்னடி, திருநெல்வேலி famous for அல்வா. எப்போதிருந்து உங்க ஊர் ஊதுவத்திக்கு famous ஆச்சு ? வழக்கமா ஊருக்குப் போயிட்டு வந்தால் எல்லாருக்கும் அல்வா குடுப்பே. இப்போ ஆளுக்கொரு வாசனை ஊதுவத்தி பாக்கெட்டும்  சேர்த்துக் குடுக்கிறே  " என்று கிண்டலடித்தார்கள்.
உலகிலுள்ள ஜனத் தொகை கோடானுகோடி. அதில் மிகவும் வசதியாக, செல்வச்செழிப்பில் இருப்பவர்கள்  பல லட்சம் பேர். உடல் ஊனமுற்று, குறிப்பாக கண்பார்வையற்ற மனிதர்கள்  ஒரு சில ஆயிரம் பேர்  என்ற எண்ணிக்கையில் தான் இருப்பார்கள்.இவர்களுக்கு உதவ அரசாங்கமும் செல்வச்செழிப்பில் இருப்பவர்களும் தாராளமாக முன் வரவேண்டும் . பணத்தைக் கொடுத்து அவர்களை சோம்பேறிகளாக்க வேண்டாம். உழைக்கத் தயாராக இருக்கிற அவர்களுக்கு, அவர்கள் திறமையறிந்து வேண்டிய வசதிகளை செய்து கொடுக்கலாமே. இதுதான் உங்கள் முன்பாக நான் வைக்கும் கோரிக்கை.
தொலைக்காட்சியில் காட்டப் பட்ட பதிவில் நெஞ்சை நெகிழ வைத்த ஒரு  விஷயம், சாலை மறியல் செய்வதாக நினைத்துக் கொண்டு பெண்கள் சிலர், சாலையோரமாக உட்கார்ந்திருக்க, வாகன ஓட்டிகள் வண்டிச் சத்தமே வராதபடி இவர்களைக் கடந்து வாகனங்களைத் தள்ளிக் கொண்டும் ஓடிக் கொண்டு மிருந்தார்கள். காவலர் ஒருவர் சில பெண்களை கைகளைப் பிடித்து தரதரவென்று இழுத்துக் கொண்டு போனார்.   
புறம்போக்கு நிலத்தில் பட்டா இல்லாமல் வீடு கட்டி கொண்டு, மின்சார வசதி இல்லை; சாக்கடைத் தண்ணீர் போக இடமில்லை என்று சிலர் சாலை மறியல் செய்யும் போதெல்லாம் " அமைதிப் பேச்சு வார்த்தை  " நடத்தும் அரசு அதிகாரிகள், இந்த பார்வையற்ற மாணவர்கள் விஷயத்தில் சிறிது கனிவாக நடந்து கொண்டிருக்கலாம் என்பது எனது ஆதங்கம்.
ஆதங்கப் படுவதைத் தவிர வேறு எதுவும் என்னால் செய்ய முடியாதே. ஏழை சொல் அம்பலம் ஏறாதே. 
உங்கள் எல்லோரையும் கைகூப்பிக் கேட்டுக் கொள்கிறேன். கண்பார்வை அற்றவர்களிடம் சிறிது கருணையுடன் நடந்து கொள்ளுங்கள். கைப்பிடி இல்லாத கூஜாவை இரண்டு பக்கமும் பிடித்து கவனமாகத் தூக்குவோமே, அது போல.



  

No comments:

Post a Comment