Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Monday, February 10, 2020

படிக்க ஒரு நிமிடம் / ஒரு நொடி போதும். யோசிக்க ?.. (42)



"என்ன? எந்தக் கோட்டையைப் பிடிக்க இப்படியொரு ஆழ்ந்த சிந்தனை, பக்கத்தில் ஆள் வந்து நிக்கிறது கூட தெரியாமே ?"
"நேற்று டீவி நியூஸில் பிச்சை எடுக்கும் வேலையில்லா பட்டதாரிகள் பற்றிய நியூஸ் பார்த்தேன். அதிலிருந்து மனசே சரி இல்லை. படிச்சு பட்டம் வாங்கி உழைக்க தயாராக இருக்கிற இளைஞர் கூட்டம். ஆனால் வேலை கிடைக்காததால் வயிற்றுப் பிழைப்புக்கு பிச்சை எடுக்கிறார்களாம்"
"ஓ .. கடவுளே ...இந்த நியூஸை அரசியல்வாதிகள் பார்க்காமல் இருக்கணும் "
"ஏன்?.. பார்த்தால் என்ன?"
"எங்கள் நாட்டில் பிச்சைக்காரர்கள் கூட படித்து பட்டம் வாங்கி இருக்காங்கன்னு பெருமை பேசுவாங்க "
"ஹூம்.. யாரோ ஒரு வெள்ளைக்காரன் அந்தக்காலத்திலேயே மனிதர்களின் முதுமையை நினைத்துப் பார்த்து ஒரு ஊழியன் ரிட்டையர் மென்ட்டுக்குப் பிறகும் பசி பட்டினி இல்லாமல் இருக்கணும்னு நினைச்சுப் பார்த்து பென்ஷன் திட்டத்தைக் கொண்டு வந்ததால் நாம இன்னிக்கு வீட்டில் நிம்மதியா உட்கார்ந்து சாப்பிடறோம். அது மட்டும் இல்லைனா நாமளும் இந்த பிச்சை எடுக்கும் வேலையில்லா பட்டதாரிகள் மாதிரி எங்காவது ஒரு இடத்தில் கையேந்திக் கொண்டுதானே இருப்போம்."
"சரியாக சொன்னே.. கட்டிக்கொடுத்த சோறும் கற்றுக் கொடுத்த சொல்லும் எத்தனை நாளைக்குத்தான் தாக்குப் பிடிக்கும்னு சொல்லு வாங்க . அந்த மாதிரி பணி ஓய்வின் போது கையில் கிடைக்கிற பணம் எத்தனை நாளைக்கு வரும். அந்த பணத்தை நம்பித்தான் பிள்ளைகள் பொண்ணுங்க கல்யாண செலவை, படிப்பு செலவை கணக்குப் போட்டு வச்சிருப்பாங்க. அது கரைந்து விட்டால் பெரிசுங்க கதி அதோகதிதான்."
"..............."
"இதிலே இன்னொரு விஷயம் யோசிக்கணும். தனியொருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்னு பாரதியார் சொல்லி இருக்கிறார். தனியொருவனுக்காக ஜகத்தினை அழிக்க தயாராகும் மக்கள், தனக்கு இல்லைன்னா சும்மா இருப்பானா? ஒரு சாண் வயித்துக்காக எதையும் செய்வான். அதை நினைச்சாதான் கவலையா இருக்குது"
"நம்மாலே முடிஞ்சது அது ஒண்ணுதானே !"

Friday, February 07, 2020

OBJECTION OVER MY LORD!


சிறுவயதுக் குழந்தைகள் பற்றிய நேற்றைய பதிவைப் படித்த எனது நட்பு வட்டம் சொன்ன கமெண்ட்.: "முக்கியமான ஒன்றைச் சொல்ல மறந்துட்டீங்க அருணா. முன்னெல்லாம் குழந்தைங்க பிறந்து வளர்ந்து சூழ்நிலைக்குத் தக்கபடி நல்லவங்களாகவும் கிரிமினல்களாகவும் மாறுங்க. இப்போ பிறக்கும் போதே கிரிமினல்களாகப் பிறக்கின்றன."
அதற்கு நான் சொன்ன பதில்: "அது மரபணு கோளாறாக இருக்கலாம்."
இது ரெண்டையும் படிக்கிற நீங்கள் என்ன சொல்ல நினைக்கிறீங்க ?

Wednesday, February 05, 2020

மெல்ல வளர்ந்திடும் செல்லக் குழந்தைகள் .. நாளை உலகினை ஆளும் தலைவர்கள்..


5 மற்றும் 8 வகுப்புக்கான பொதுத் தேர்வு ரத்து என்கிற செய்தி மனதுக்கு நிம்மதி தருகிறது. இது பற்றி பேசும் முன்னால் வேறு சில விஷயங்களை பேசுவோம். பிறகு மெயின் ஸப்ஜெக்டுக்கு வருவோம்.
'ரெண்டுங் கெட்டாங்கிறது சரியாத்தான் இருக்குது "
"பாம்புன்னு தாண்டவும் முடியாது; கயிறுன்னு மிதிக்கவும் முடியாது "
"குழந்தையா அது; கிழவி மாதிரி பேசும் "
"இது எப்போ என்ன பேசும்; என்ன செய்யும்னே எடை போட முடியாது" 
- இப்படி சிறு வயதுக் குழந்தைகளைப் பற்றி பலவிதமான கமெண்ட்ஸ் பலர் பேச நாம் எல்லோருமே கேட்டிருப்போம். சில சமயம் நாமே பேசி இருப்போம்.
குழந்தைகள் பேச்சை அவர்கள் கவனியாதபடி நான் கவனிப்பேன். (இந்தப் பழக்கம் எனக்கு சிறு வயது முதலே உண்டு.) 
அவற்றில் ஒரு சில உங்கள் ரசனைக்கும்.
நிகழ்வு ஒன்று:
4 சிறுமிகள். அநேகமாக அவர்கள் 8 அல்லது 9 -ம் வகுப்பு மாணவிகளாக இருக்கலாம். எலெட்ரிக் ட்ரெயினில் எண்ட்ரன்ஸில் நின்று கொண்டு அவர்கள் கலாய்த்தது :-
 "எங்க அப்பாவுக்கு லவ் மேட்டரே பிடிக்காது."
"எந்த அப்பாவுக்குத்தான் பிடிக்கும்?"
"ஆனால் அவங்க மட்டும் ஆபீசில் ஒரு பிரெண்ட் .. அங்கே ஒண்ணு இங்கே ஒண்ணுனு வச்சிருப்பாங்க"
நிகழ்வு  இரண்டு :
"அந்த அக்காவைப் பத்தி அவன் தப்பு தப்பா பேசறாண்டி "
"அவங்க கிட்டே மூக்கு உடைஞ்ச கேஸா இருப்பான் "
"எப்படி சொல்றே"
"எங்க அம்மா அடிக்கடி சொல்வாங்க.. யாருமே பேசாத ஒரு பொண்ணைப் பத்தி ஒருத்தன் மட்டும் தப்பு தப்பா பேசறான்னா அவன், அவகிட்டே செருப்படி வாங்கின கேஸா இருப்பான் .. ஒரு சில  ஜென்மங்க அவங்க வீட்டுப்பொம்பளைங்கமாதிரியே எல்லாபொம்பளைங்களும்இருப்பாங்கனு தப்பா நினைச்சிடுவாங்கனு சொல்வாங்க. அதைத்தான் சொன்னேன்."
நிகழ்வு மூன்று:
தெருவோர நடைபாதையில் கடை போட்டிருப்பவர்கள் அவர்களிடம் உள்ள பொருளின் விலையைச் சொல்லி கூவிக்கூவி விற்றுக் கொண்டிருப் பார்கள். ஒரு சிலர் பொருளின் பெயரை சொல்லாமல் விலையை மட்டும் சொல்லி கத்திக் கொண்டிருப்பார்கள். இது அன்றாடம் நடக்கும் நிகழ்வு. இதை நானே பலமுறை பார்த்திருக்கிறேன். கேட்டிருக்கின்றேன். சில நாட்களுக்கு முன்பு கோடம்பாக்கம் ரயில் நிலையத்தில் இதே ஸீன். எனக்கு பின்னால் வந்து கொண்டிருந்த ஹைஸ் ஸ்கூல் ஸ்டூடெண்ட்டில் ஒருவன் : "பத்து, இருபதுனு கத்தறாங்க. எது பத்து? எது இருபது ?" 
மற்றொரு சிறுவன்: அவங்க வீட்டு ஆளுங்க ரேட்டோ என்னவோ? 
இப்படியொரு பதிலைக்கேட்டு நான் அசந்து விட்டேன். இவர்கள் எந்த அர்த்தத்தில் இதைச் சொன்னார்கள் என்பது எனக்குப் புரியவில்லை.
அவர்கள் வயதுக்கு தகுந்த விஷயங்கள் அவர்களுக்குப் புரியவில்லை. ஆனால் வயதுக்கு மீறிய விஷயங்களை சர்வசாதாரணமாக பேசுகிறார் கள். 
இனி மெயின் பிக்ஸருக்கு வருவோம். 
5 மற்றும் 8 வகுப்புக்கான பொதுத் தேர்வு பற்றி பிரபலங்களும் பெற்றோரும் கவலைப்பட்டார்களே தவிர 90% குழந்தைகளுக்கு அது என்னவென்றே தெரியாது.
நான் படித்த காலத்தில் 1 முதல் 11 வரை பள்ளிப் படிப்பு. அதன் பின் கல்லூரிப்படிப்பு P.U.C ஒரு வருடம், ஏதாவது ஒரு சிறப்புப் பிரிவு 3 வருடம். ஆக மொத்தம் நாலு வருடம் கல்லூரிப்படிப்பு.
11ம் வகுப்பில் காலடி எடுத்து வைத்ததுமே ஸ்கூலிலும், வீட்டிலும் "படி.. படி.." என்று நச்சரிப்பார்கள். முதல், பத்து வருடம் படித்த மாதிரிதானே இதையும் படிச்சு எழுதணும். பிறகு ஏன் இப்படி எல்லோரும் அலட்டிக் கிறாங்க என்று நாங்கள் பேசிக் கொள்வோம். அது எங்கள் தமிழ் டீச்சர் காதில் விழுந்து, அவர்கள் சொன்ன பதில்: 
"இவ்வளவு நாளும் நீங்கள் எழுதின தேர்வுகளும் இதுவும் ஒன்றல்ல. இந்த தேர்வில் நீங்கள் எடுக்கப் போகும் மதிப்பெண்கள்தான் உங்கள் வருங் காலத்தை தீர்மானிக்கும்.  நீ மேல்படிப்பு படிப்பது.. டாக்டர், இன்ஜினியர், டீச்சர் என்று உருவாகுவதை இந்த தேர்வில் நீ எடுக்கும் மார்க்ஸ் தான் முடிவு செய்யும். அனைத்து பள்ளியிலும் இதே விதிமுறை என்பதால் கடும் போட்டி இருக்கும். அதில் நீ தேறி வரணும்னுதான் எல்லாரும் இப்படி உங்களைப் போட்டு படுத்தறோம். " 
அதன்பிறகுதான் பொதுத்தேர்வில் உள்ள முக்கியத்துவம் எங்களுக்குப் புரிந்தது.  இது 5 மற்றும் 8 வகுப்பு குழந்தைகளுக்கு புரியுமா என்ன? வெறும் 5 மற்றும் 8 மட்டும் படித்து  பொதுத் தேர்வு எழுதி விட்டு யாரும் எந்த வேலைக்கும் போக முடியாது. அதனால் அந்த தேர்வு முறை ரத்து என்பதில் எனக்கு மிகுந்த சந்தோஷம் 
ஹாய் குட்டீஸ் .. என்ஜாய் !!!!!!!!!!!!!!!!!!!