Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Saturday, April 30, 2016

ரோபோக்களின் உலகம் ?!

குழந்தைகளின் உலகம் தனி உலகம். அங்கு வசிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும்.கள்ளங்கபடமில்லாத மனதில் பட்டதை பளிச்சென்று சொல்லும் அவர்களது மழலை எனக்குப் பிடித்தமான ஒன்று.
இப்போது நாங்கள் இருப்பது தனிவீடு. பெரியவர்களை, அக்கம்பக்கத்தில் உள்ளவர்களைப் பார்ப்பதே அரிதான ஒன்று.பிறகு எங்கே குழந்தைகளை   பார்ப்பது?
எனது பள்ளிக்கூட நாட்களிலும்  சரி ( லைப்ரரியில் இருந்த நேரம் தவிர ), வேலைக்காக வெளியில் சென்று வந்த நாட்களிலும் சரி, எங்கள் வீட்டில் குழந்தைகள் பட்டாளமே இருக்கும். சில பெரிய குழந்தைகளும் இதில் உண்டு. ரொம்ப ரொம்ப சின்னக் குழந்தைகளோடு பொம்மை வைத்து விளையாடுவேன். கொஞ்சம் பெரிய குழந்தைகளோடு சீட்டுக் கச்சேரி, இன்னும் கொஞ்சம் வளர்ந்தவர்களோடு, அன்று பேப்பரில் படித்த விஷயம், ரேடியோவில் கேட்ட பாடல், பார்த்த சினிமா என்று எங்கள் அரட்டைக் கச்சேரி தொடங்கும்.
இதற்காக அம்மா அடிக்கடி திட்டுவாள். ‘எருமைக்கடா வயசு ஆகுது. பச்சப் புள்ளைகளைக் கூட்டி வச்சுகிட்டு விளையாடுதே. வெட்கமாயில்லே? உனக்கு வேறே வேலை வெட்டி இல்லை. அதுங்க படிக்க வேண்டாமா? வீட்டுப்பாடம் எழுத வேண்டாமா? நீ விளையாடிட்டு இருக்கிறே. அக்கம் பக்கத்தில் உள்ளவங்க ஏசுதாங்களே. அதுகூடவா அறிவில்லே? அதுங்கள வீட்டுக்கு அனுப்பு. நேரத்தோடு போய்ப் படிச்சிட்டு தூங்கட்டும்’ என்பாள்.
’இதோ பாரு... நான் யாரையும் கூப்பிடலே. அவங்கதான் வந்தாங்க’ என்பேன்.
சிலசமயம் ‘அதோ அந்த வீட்டில் நேத்து பிள்ளை பிறந்திருக்குதாம்.. பொம்மை வச்சு  விளையாட உன்னைக் கூப்பிட்டாங்க போயிட்டு வா’ என்பாள் அம்மா.
‘அதை இவ்வளவு லேட்டாவா சொல்றது? நான் ஆபீசிலிருந்து வந்ததுமே சொல்லியிருக்க வேண்டாமா?’என்பேன். தலையில் அடித்துக் கொள்வாள் அம்மா.
இப்போதெல்லாம் லீவு நாட்களில் கூட குழந்தைகள் ஏதோ ஒரு கோர்ஸில் சேர்ந்துடறாங்க. வீட்டில் இருக்கும்போது கூட சோட்டா பீம், டோரா, நிஞ்சா என்று எதோ ஒன்றில் லயித்து விடுகிறார்கள். அதுவும் இல்லாவிட்டால் கம்ப்யூட்டர் கேம். இதுதான் அவங்க உலகம்.
என் அக்காவின் பேத்தி அவ்வப்போது எங்க  வீட்டுக்கும் வரும். அதோடு சேர்ந்து பொம்மை வைத்து விளையாடுவேன். டீவியில் பழைய பாடல்களைக் கேட்டபிடி இருவரும் மணிக்கணக்கில் ஊஞ்சலில் படுத்துக் கொண்டு ஆடியபடியே பாட்டு கேட்போம். வீட்டுக்குள் ஓடிப்பிடித்து விளையாடுவோம்.
இதெல்லாம் ஒரு ஆறு மாதத்துக்கு முன்பான கதை. (இப்போ அதுக்கு போன மாதம் இரண்டு வயசு முடிஞ்சு போச்சு) நான் பழைய ஞாபகத்தில் அதை மடியில் வைத்துக் கொண்டு ஊஞ்சலில் உட்கார, மடியிலிருந்து குதித்து டீவீ முன்பாக உட்கார்ந்து கொண்டு ரிமோட்டைக் கையில் எடுத்து கொண்டு சோட்டா பீமை தேட ஆரம்பித்து விட்டது.
இப்போது என் கவலையெல்லாம், இனி வரும் காலங்களில், பிறக்கும் குழந்தைகள் எல்லாம் நேராக கம்ப்யூட்டர் அல்லது டீவி முன்பாக உட்கார்ந்து விடுவார்களோ என்பதுதான் ( ஒரு விளம்பரத்தில் வருவது போல).
அதிலே உனக்கு என்ன பிரச்னைனு கேட்கிறீங்களா? அதுங்க முன்னாடி பால் டம்ளரையோ அல்லது சாப்பாட்டுத் தட்டையோ நீட்டினால், மிஷின் மாதிரி கை நீட்டி வாங்குதுங்க. கையில் இருக்கிறது என்னனு தெரியாமே மிஷின் மாதிரி சாப்பிடுதுங்க. ஒருமுறைக்குப் பத்து முறை கூப்பிட்டா தான் நம்மை ஏறிட்டே பார்க்குதுங்க.
இப்படியே போனால் இதுங்க ஒரு ரோபோ மாதிரியே ஆகிவிடுங்க. எல்லாரும் எங்க வீட்டிலே குழந்தை பிறந்திருக்குதுனு சொல்றதுக்குப் பதிலா எங்க வீட்டிலும் ஒரு ரோபோ வந்துட்டுதுனு சொல்லிக் கொண்டு திரிய வேண்டியதுதான்.
அட.. எஞ்சாமி பகவானே.. வீட்டில் குழந்தைகள் ஓடிவிளையாடி சிரித்துப் பேசுவது கூட ‘அந்தக்காலத்திலே......’ என்கிற லிஸ்டில் சேர்ந்துடுமோனு பயமா இருக்குதுங்க. ப்ளீஸ்  யாராவது ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்து குழந்தைகளை குழந்தைகளாக இருக்க விடுங்களேன்.

Thursday, April 28, 2016

அவனவன் மனசிலே ஆயிரம் கவலைகள் !!


‘என்னங்க...’
’சொல்லுங்க ஸார்... என்ன வேணும்?’
‘ஒரு புக் வேணும்?’
’இந்தாங்க... கேட் லாக்.. எந்த புக் வேணும்னு சொல்லுங்க?’
‘தேர்தல் வாக்குறுதி பத்தியெல்லாம் புக் இருக்காங்க?’
‘அட.. அதுக்குத் தனி புக் தேவையா என்ன?அதான் ஒவ்வொரு பத்திரிக்கை யிலும் சுடச்சுட, சூடான செய்தியா பக்கம் பக்கமா போட்டுத் தள்ளிட்டு இருக்காங்களே. வாட்ஸ்-அப், ஃபேஸ்புக், டுவிட்டர்னு எல்லாத்திலும் கமென்ட்ஸ் வருது. போதாக்குறைக்கு சில டீவி சேனல்ஸ் தேர்தல் செய்தி சொல்றத முழுநேர சேவையா செஞ்சிட்டு இருக்குதே. இன்னும் ஒரு மாசம் பொழுது போறதே தெரியாது... தேர்தலுக்கு முன்னால ஒரு அமர்க்களம்... தேர்தலுக்கு பின்னால ஒரு அமர்க்களம்னு ஜனங்களுக்குப் பொழுது போக்குக்குப் பஞ்சமே இல்லை.’
‘அதை நினச்சாதான் பயமா இருக்குது’
‘என்ன ஸார் சொல்றீங்க?’
’எல்லாக் கட்சியும் சகட்டுமேனிக்கு வாக்குறுதியை அள்ளி வீசிகிட்டு இருக்குது’
’அது வாஸ்தவந்தானே. அவனவன் பிழைக்கிற வழியை, நாற்காலியப் பிடிக்கிற வழியைப் பார்க்கிறான்.’
‘இந்த எலெக்க்ஷன்னு இல்லே. எந்த இடத்திலே எலெக்க்ஷன் வந்தாலும் எதிர்க்கட்சிக்காரங்க, ஆளுங்கட்சிக்காரங்க செய்யாத ஒண்ணை, செய்ய முடியாத  ஒண்ணை செஞ்சு காட்டுவோம்னு சொல்றாங்களே’
‘மக்கள் நம்பறாங்க.. இவங்க சொல்றாங்க’
‘சரி எதோ ஒன்னு.. ஆட்சியில இல்லாதவங்களே அதை  இதையெல்லாம் செய்வோம்னு சொல்றப்ப, ஏற்கனவே ஆட்சியில இருக்கிறவங்க இதை யெல்லாம் செய்ய முயற்சி பண்ணாமலா இருப்பாங்க.?’
‘வாஸ்தவமான பேச்சு! ஆனா இதை சிந்திச்சுப் பார்க்க வேண்டியது நம்ம ஆட்டு மந்தை... அதுக்கு சிந்திக்கத் தெரியாது.’
‘நாற்காலியப் பிடிச்சு உக்காந்த பிறகு, மத்த இடங்களை ஒப்பிட்டுப் பார்க்கையிலே நம்ம மாநிலத்தில்தான் சும்மாவே எல்லாம் கெடைக்குது அப்படினு சொல்லப்போறாங்க. மத்திய அரசு போதிய நிதி உதவி தராத தாலே தேர்தல் வாக்குறுதிபடி எதையும் எல்லாருக்கும் இலவசமா குடுக்க முடியலேனு சொல்லப் போறாங்க. அறிவிப்பு குடுக்கறதுக்கு முன்னாடி பண உதவி செய்வியானு மத்திய அரசைக் கேட்டு நீ உறுதிபடுத்திட்டுதான் வாக்குறுதி குடுத்தியானு நம்மள்ல  யாரும் அவங்கள கேள்வி  கேட்கப் போறதில்லே. எல்லாத்துக்கும் பூம்பூம் மாடு மாதிரி தலை ஆட்டப் போறோம்’
’தலைய ஆட்டறதில் உங்களுக்கு அப்படி என்ன ஸார் பிரச்னை?’
‘சகட்டுமேனிக்கு அதை செய்வேன், இதை செய்வேன்னு அடுக்கிக்கிட்டே போவாங்க. நம்ம ஆட்டுமந்தையும் அதை நம்பி ஓட்டுப் போட்டுட்டு, மே மாசம் கடைசிக்குள்ள எல்லாம் வீடு தேடி வந்துரும்னு ஒரு கணக்குப் போட்டு வச்சுகிட்டு, அது கைக்கு வராட்டா ஜூன் ஒண்ணாந் தேதியில் இருந்தே அங்கே இங்கேனு சாலை மறியலில் இறங்கிடுவாங்களே. நல்ல நாள்லயே ஒரு இடத்துக்குப் போய்ட்டு வீட்டுக்குத் திரும்பறதுக்குள் நாய்படாத பாடுபடுவோம். மறியல்னா கேக்கவா வேணும். எவனோ ஒருத்தனோட தனிப்பட்ட பிரச்னைக்காக ரோட்டில் போகிற வர்ற அத்தனை பேரும் சேர்ந்து தெருவில் நிக்க வேண்டி இருக்குமே. அதை நினச்சுதான் பயப்பட வேண்டியிருக்குது. சாலை மறியல் போராட்டத்தை சமாளிக்கவே போலீஷுக்கு நேரம் பத்தலே. திருடனுங்க இதுதான் சமயம்னு எங்கேபார்த்தாலும் கைவரிசையைக் காட்டிட்டு இருக்கிறாங்க.. நாட்டுக்குள்ள இருக்கிற மிருகங்கள் பத்தாதுனு காட்டு மிருகங்க வேறே அப்பப்போ வந்து விசிட் குடுத்துட்டு போகுது.. எது எதையோ நினச்சுப் பயப்பட வேண்டியிருக்குது.. கவலைப்பட வேண்டி இருக்குது!’’
‘குடுத்து வச்ச மனுஷன் ஸார் நீங்க.. சொந்தக் கதை பத்திக் கவலைப் படாமே எப்பவோ நடக்கப் போற சோக சம்பவங்களைப் பத்தி கவலைப் படறீங்க! கவலைப்பட வேறே விஷயமே இல்லியா? ஜனங்க எல்லாருமே எலெக்க்ஷன் திருவிழாவை அங்கங்கே நடக்கிற கூத்தை வேடிக்கைப் பார்க்கிறதில் மும்முரமாயிட்டதாலே, யாரும் புக்-ஷாப் பக்கமே வர்றது இல்லே.  எந்த புக்கும் விக்கலியே.. இன்னிக்குப் பொழைப்புக்கு என்ன செய்றதுன்னு நான் யோசனை பண்ணிட்டு இருக்கிறேன். நீங்க என்னடான்னா நாளைக்கு நடக்கப் போறதப் பத்தி கவலைப்படறீங்க.!.. அட எஞ்சாமி பகவானே.. எனக்கு இன்னிக்குப் பொழுது இப்படியா விடியணும்?’’

Sunday, April 24, 2016

குழந்தைகளுக்கான குறுந்தொடர் - 35

                                
அச்சுப்பிச்சு  அப்புமணி !
நிவேதிதா அருகில் வந்த அப்புமணி, "ராஜகுமாரி  .... நீ அழறியா ?" என்று கேட்டான்.
"ச்சே.... ச்சே... இல்லை...." என்று சிரித்துக் கொண்டே சொன்ன நிவேதிதா, "அப்பு நீ இங்கே வந்து எத்தனை நாளாகுது?" என்று கேட்டாள் 
"நான் வீட்டை விட்டு வர்றப்ப காலண்டரில் 28ந் தேதி இருந்துச்சு. இப்போ 10னு இருக்குது ... அப்படின்னா ....." என்று சொல்லிக் கொண்டே கைவிரல்களை எண்ண ஆரம்பித்தான் அப்புமணி.
"கையில் பத்து விரல்தான் இருக்குது .... மீதியை எண்ண என்ன செய்வே ?" என்று கேட்டாள் நிவேதிதா 
"கால் விரலை எண்ணுவேன் "
"அதுவும் பத்தலைன்னா ?"
"பக்கத்தில் கடன் வாங்குவேன் "
"என்னது! பக்கத்தில் கடன் வாங்குவியா? எதை? எப்படி வாங்குவே?" என்று நிவேதிதா கேட்க "வேறே எதை ! கைவிரலை" என்று கேஷுவலாக பதில் சொன்னான் அப்புமணி 
"நீ அந்த அளவுக்கு சிரமப்பட வேண்டாம். நீ வந்து 13நாளாகுது .. உனக்கு அம்மாவைத் தேடலியா" என்று நிவேதிதா கேட்கும்போதே அப்புமணி யின் முகம் வாடிப் போனது.
"ஏய் ... என்ன இது ! நீதானே வீட்டை விட்டு வந்தே ! உன்னை யாரும் கடத்திட்டு வரலே... நாடு கடத்தலே... பிறகு ஏன் இத்தனை சோகம் ?"
"எனக்கு அம்மாவைத் தேடுது "
"அப்படின்னா வீட்டுக்குப் போ "
"உலகத்தைச் சுத்திப் பார்க்காமே எப்படி வீட்டுக்குப் போறது ?"
"மண்டு...மண்டு... உலகத்தை சுத்தி வர்றது அவ்வளவு ஒண்ணும் ஈசியான விஷயம் இல்லே.. உன் நாட்டை விட்டு நீ வெளியே போகணும்னா உன் கையில் பாஸ்போர்ட் இருக்கணும் .. விசா இருக்கணும்  "
"அப்படின்னா ...."
"அதுகூடத் தெரியாமே உலகத்தை சுத்திப் பார்க்கக் கிளம்பி வந்துட்டே .. பாஸ்போர்ட் இந்த நாட்டை விட்டு நீ வெளியே போறதுக்கான அனுமதி .. விசா என்கிறது வேறொரு நாட்டுகுள்ளே நீ போறதுக்கான பெர்மிஷன் .. இது ரெண்டும் இல்லாமே நீ எங்கேயும் போக முடியாது "
"இதெல்லாம் இல்லாமலே ஞானப்பழத்தை அப்பாகிட்டே இருந்து வாங்கிறதுக்காக முருகக்கடவுள் மயில் மேலே ஏறி உலகத்தை சுத்தி வந்தாரே "
"நீயும் அதுமாதிரி மயில் மேலே ஏறிப் போகமுடியுமா ?" என்று வியந்து போய்க் கேட்டாள் நிவேதிதா.
"அப்ப மயிலா இருந்ததுதான் இப்ப ஏரோப்ளேனா மாறிடுச்சா ?" என்று அப்பாவித்தனமாக அப்புமணி கேட்க,அதைக்கேட்டு வாய் விட்டுக் கலகல வென்று சிரித்தாள் நிவேதிதா.
"என்னைப் பார்த்தா உனக்கு சிரிப்பா இருக்குதா ?" என்று கோபமாகக் கேட்டான் அப்புமணி 
"இல்லே அப்பு .. இவ்வளவு அப்பாவியா இருக்கிறியேனு நினைச்சு வேதனையா இருக்குது... அப்பு .... கதை வேறு.. நடைமுறை வாழ்க்கை வேறு. ரெண்டையுமே  நீ ஒண்ணா  நினைக்கிறதாலேதான் பிரச்சினையே வருது  "
"என்ன பிரச்சினை ? யாருக்கு ?"
"உனக்குத்தான் .... அதிலே சந்தேகமா என்ன ? எந்த ஒண்ணைப் பத்தியும் சரியா தெரிஞ்சுக்காமே யோசிக்காமே நீ பேசப் போய்த்தானே உன்னை உன்னோட பிரெண்ட்ஸ் கிண்டல் பண்ணினாங்க ... உங்க அம்மா அதைப் பார்த்து அழறாங்க.. இதை நீயே எங்கிட்டே சொல்லியிருக்கிறேதானே ? ஆனா ஒண்ணு அப்பு..உன்னை நான் முதலில் மகாபலிபுரத்தில் பார்த்தது க்கும் இப்போ பார்க்கிறதுக்கும் ஒரு வித்தியாசம் இருக்குது. சில விஷயங்களில் நான் சொல்றதக் கேட்டு நீ நடந்துக்கிறே .. அதுவே பெரிய மாற்றம் தான்  "  என்று நிவேதிதா சொல்லும்போது வெளியில் காலடி சத்தம் கேட்க, உதட்டின் மீது விரலை வைத்து  "உஷ் " என்று எச்சரிக்கை செய்த நிவேதிதா ஓடிப்போய் மூலையில் முடங்கிக் கொண்டாள். அப்புமணி வாசலுக்கு வந்தான் 
"என்ன அப்பு ... எப்படி இருக்கிறே ? சாப்பிட்டியா ?" என்று அக்கறையுடன் கேட்ட சேகர் , "அந்தப் பொண்ணு என்ன பண்ணுது ?" என்று கேட்டான்.
"அது எப்பவும் தூங்குது " என்று அப்புமணி சொல்வது நிவேதிதா காதிலும் விழுந்தது. "சபாஷ்...அப்புமணி தேறிடுவான்" என்று மனதுக்குள் சொல்லி க் கொண்டாள்.
சேகர் வீட்டுக்குள் நுழையும்போது அப்போதுதான் எழும்புவது போல சோம்பல் முறித்தாள் நிவேதிதா 
"என்ன பொண்ணு ? எப்படி இருக்கிறே ?" என்று சேகர் ஹிந்தியில் கேட்க 
அதைப் புரிந்து கொள்ளாததுபோல அசட்டுச் சிரிப்பு சிரித்தாள் நிவேதிதா 
"சேகர் அண்ணா ... எனக்கு போரடிக்குது .... வெளியில் கூட்டிட்டுப் போங்க " என்று கேட்டான் அப்புமணி
"இந்த வெயிலிலா ! வேண்டாம் .... கதை புக் ஏதாது படிக்கிறியா ?"
"எனக்கு அதெல்லாம் புரியாது "
"குழந்தைங்களுக்கான புக் அப்புமணி.. முன்னே ஒருக்க நான் ரயிலில் போறப்ப ஒரு சின்னப்பையன் கை நிறைய குழந்தைகளுங்கான கதை புக்கை வச்சுகிட்டு வாங்கச் சொல்லி ஒவ்வொருத்தரையும் கெஞ்சிக் கிட்டிருந்தான். அதைப் பார்க்கிறப்ப மனசுக்குள்ளே ஒரு பீலிங்க். அவன் கிட்டே இருந்த எல்லா புக்கையும் நானே வாங்கிட்டேன். தனம் கிட்டே கொடுத்தேன். அதை அவ பரண் மேலே தூக்கிப் போட்டுட்டா. அது மட்டுமில்லே.. குப்பை இடத்தைஅடைக்குது. அதை பேப்பர்காரங்கிட்டே போட்டுடுவேன்னு சொல்லிட்டு இருந்தா. வா .. உள் ரூமில்  பரண் மேலே இருக்குது" என்று சொல்லி அவனை அழைத்துக் கொண்டு உள் ரூமுக்குச் சென்ற சேகர், "அடடா....அண்ணன் இன்னும் எழும்பலையா? சாப்பிட லையா ?" என்று கவலையுடன் கேட்டான்.
"அண்ணா..அவர் சாப்பிடுவார்...தூங்குவார்.....தூங்குவார்.. சாப்பிடுவார் .. ஏதாது கேட்டா 'கங்கு..கங்கு'னு சொல்வார்" என்று ஆக்சனில் சொன்ன அப்புமணி, "எங்க அம்மா பேரு கங்காதேவி. எங்கபாட்டி எங்கம்மாவை கங்குனுதான் கூப்பிடுவாங்க " என்றான். 
"என் அண்ணனை கிண்டலா பண்றே? படவா ராஸ்கல். அவரை அப்படி யெல்லாம்  சொல்லாதேடா" என்ற சேகர், "நான் உன்னைத் தூக்கிப் பிடிக்கிறேன். நீ அந்தப் பெட்டியைத் திற " என்று சொல்லி அப்புமணியைத் தலைக்கு மேலாகத் தூக்கிப் பிடிக்க, சேகர் பேலன்ஸ் பண்ணி நிற்கும் முன்பாகவே அப்புமணி பெட்டியைப் பிடித்து இழுக்க .. இழுத்த வேகத்தில் பெட்டியின் கைப்பிடி உடைந்து பெட்டி கீழே படுத்திருந்தவரின் தலைமீது விழுந்தது.  அதைத் தொடர்ந்து "ஐயோ .... அம்மா " என்ற அலறலும் கேட்க அங்கிருந்த மூவரும் திகைத்துப் போனார்கள்.
-------------------------------------------------------- தொடரும் --------------------------------------------- 


Saturday, April 23, 2016

தூங்காத கண்ணென்று ஒன்று !

"என்னங்க .."
"ம்.... சொல்லு ..."
"தூக்கமே வரலே "
"அதுக்குத்தான் பகலில் தூங்கக்கூடாதுங்கிறது "
"பகலில் தூக்கமா ?"
"ஆங்க் .....ஆபீஸில் ?"
"உங்களை அப்படியே......."
"சரி .... சரி விடு .... மனசுக்குள்ளே ஒண்ணு ரெண்டு சொல்லிட்டே இரு. நூறு எண்ணி முடியறதுக்குள் தூக்கம் வந்துடும்."
"ஏற்கனவே ஆயிரம் வரை எண்ணி முடிச்சாச்சு "
"அப்படின்னா ... பிள்ளையார் ஸ்லோகம் சொல்லிட்டு இரு .... மனசுக்குள்ளேயே "
"சொல்லி முடிச்சிட்டேன்"
"முருகன் ஸ்துதி "
"அதுவும் முடிஞ்சுது ... விஷ்ணு ஸ்துதி, லிங்காஷ்டகம் எல்லாமே சொல்லி முடிச்சாச்சு "
"உடம்புக்கு எதாச்சும் பண்ணுதா ?"
"அதெல்லாம் இல்லே. தூக்கந்தான் வரலே "
"சரி .. தூக்கம் வர்ற வரை ஏதாது பினாத்திட்டு ... ஸாரி .. ஸாரி .. பேசிட்டு இரு "
"நான் பேச ஆரம்பிச்சாதான் உங்களுக்கு உடனே கொட்டாவி வந்துடுமே "
"நீ தூங்கறவரை அதெல்லாம் வராமே நான் பார்த்துக்கறேன் "
"என் தம்பி பொண்ணுக்கு அடுத்த மாசம் காதுகுத்து விசேஷம் ... ஞாபகம் இருக்குதுதானே "
"அதை நான் மறந்தா என்னை நீ குத்திடமாட்டே.. சரி.. அதுக்கு இப்போ என்ன ?"
"சீர் செய்யறது செய்றோம். அதை கொஞ்சம் நாலு பேர் பார்த்து மூக்கு மேலே விரலை வைக்கிறாப்லே பண்ணிடணும் "
"என்ன செய்யணும் ?"
"நல்ல கெட்டியா .. அடர்த்தியா இருக்கிறாப்லே கம்மல் ஜிமிக்கி "
"பச்சைக் குழந்தைக்கு .... அது பாரமா தோணாதா ?"
"சபை மரியாதைக்கு செய்வோம். அப்புறம் அவங்க கழட்டி வச்சுக்கட்டுமே "
"சரி "
"பட்டுப் பாவாடை ரவிக்கை ..."
"சின்னதா கொலுசு "
"அது அவசியம்கிறே ?"
"வெள்ளியிலே தானே போடப் போறோம் "
"சரி "
"தம்பிக்கு இப்போ பிஸினஸ் கொஞ்சம் டல்லடிக்குது... சாப்பாட்டு செலவை நாம ஏத்துக்குவோம்.... இருந்திருந்து சாப்பாட்டு விஷயத்திலே ஏன் கணக்குப் பார்க்கணும்  "
"சரி .... அடுத்தது ?"
"அடுத்ததென்ன ... சீர் வரிசை தட்டு...  என்னோட பொண்ணுக்கு  அத்தை சீர்னு சொல்லி என் தம்பி பொண்டாட்டி ஊர் முழுக்க டமாரம் அடிக்கிறாப்லே இருக்கணும் "
"போகவர டாக்ஸி ஏற்பாடு பண்ணிடுங்க.. இந்த வெயிலில் பஸ்ஸில் பிரயாணம் பண்ண முடியாது"
"சரி... உன் தம்பி வீட்டுக்குப் போயிட்டு வர்ற வழியில்தானே என் அக்கா வீடு இருக்குது. அவ பொண்ணு பெரியவளாகி ஆறு மாசம் ஆகுது... இப்போ வசதி பத்தாதுன்னு அவ விசேஷம் எதுவும் வைக்கலே. இருந்தாலும் நாம் ஒருமுறை  எட்டிப் பார்த்துட்டு வந்துடலாமே "
"ஆஆ ......வ்வ் .... எனக்குத் தூக்கம் வருது. சும்மா பினாத்தாமே மனுஷியைத் தூங்க விடுங்க "
"....................!!"

Sunday, April 17, 2016

குழந்தைகளுக்கான குறுந்தொடர் - 34

               
         அச்சுப்பிச்சு அப்புமணி !
சேகர் அங்கிருந்து வெளியேறியதும், நிவேதி தாவின் அருகில் வந்த அப்புமணி, "ஏய் .. ராஜகுமாரி .... நிஜமாவே உனக்கு பயமே இல்லியா ?" என்று கேட்டான்.
அதைக் கேட்ட நிவேதிதா, "பயப்படறதாலே ஏதாது நடக்கும்னா பயப்படலாம். வாட்ஸ் த யூஸ் ? அடுத்தது என்ன...அடுத்தது என்னனு யோசிக்கணுமே தவிர மூலையில் உட்கார்ந்து அழவா முடியும்? எங்க தாத்தா அடிக்கடி சொல்வார்,  'பிக்கிறதும் இறக்கிறதும் ஒரேஒரு முறை தான். ஆனால் பயப்படறவன் தினமும் செத்துச்செத்துப் பிழைப்பா'னு. அவங்க நோக்கம் என்னனு தெரிஞ்சு அதுக்குத் தக்கபடி போராட நான் தயாரா இருந்தேன். அவங்க பேசினதை வச்சு இவங்க என்னை ஆள் மாறிக் கடத்திட்டாங்கனு நல்லாவே தெரிஞ்சு போச்சு. அடுத்தாப்லே அவங்க நோக்கம் என்னை வச்சு எங்க வீட்டில் பணம் வாங்க முடியுமாங்கிறது தான். நான் மெண்டல் மாதிரி ஆக்ட் பண்ணவும், என்கிட்டே இருந்து அவங்களாலே எந்த இன்பர்மேஷனும் கலெக்ட் பண்ணமுடியலே. இதைவிட ஒரு ப்ராஞ்ச் ஸ்டோரி .. ஏற்கனவே இவங்க சென்னையில் ஒரு வெளிநாட்டுப் பொண்ணைக் கடத்த ப்ளான் பண்ணி அது சொதப்பிட்டு போலிருக்குது. ஒருவேளை அது நானா இருக்குமோனு இவங்களுக்கு ஒரு டௌட். ஆனா அதை கன்பார்ம் பண்ண முடியாதபடி அவங்க மாதிரி பேசி அவங்களைக் குழப்பி விட்டுட்டேன். என்னாலே அவங்களுக்கு எந்த யூஸும் இல்லேங்கிற முடிவுக்கு வந்தாங்க. என்னைத் தெருவோரமா விட்டுட்டுப் போகாம இவங்க கிட்டே கைமாத்தி விட்டுட் டாங்க. அவ்வளவுதான் " என்று சொன்னாள் 
"என்ன நீ கதைமாதிரி எதையோ சொல்றே?" என்று கேட்டான் அப்புமணி .
"அப்பு ... சில சமயங்களில் நடக்கிற சில சம்பவங்கள் சினிமாக் கதையை மிஞ்சும்படி இருக்கும்..."
"எனக்கு ஒண்ணுமே புரியலே "
"இரு ... உனக்குப் புரியும்படி சொல்றேன் ... முன்னே உங்க ப்ரைம் மினிஸ்டர் இந்திரா காந்தியை அவங்க வீட்டிலே இருந்த ஒரு செக்யூரிட்டி சுட்டுக் கொன்னான் தானே ?"
"ஆமாம் .. எங்க அம்மா அடிக்கடி சொல்வாங்க..... அந்தம்மா தைரியமான பொம்பளைன்னு "
"சரி ... ஓகே .. அந்த சம்பவம் நடக்கும் முன்னாலே அதே பாணியிலே ஒரு சினிமா வந்திருந்தால் என்ன நடந்திருக்கும் தெரியுமா?"
"என்ன நடந்திருக்கும் ?"
"நாட்டில் உளவுத்துறைன்னு ஒண்ணுஇருக்கிறது டைரக்டருக்குத் தெரியா தா? ஒரு நாட்டோட ப்ரைம் மினிஸ்டரை அவர் வீட்டு  செக்யூரிட்டி சுட்டுக் கொல்றதா டைரக்டர் கதை விட்டுருக்கிறார். வழக்கமா எல்லாரும் மத்தவங்க காதில் பூ சுத்துவாங்க. இந்த டைரக்டர் நம்ம காதில் பெரிய பூந்தோட்டமே வளர்க்கிறார்னு விமரிசனம் பண்ணி இருப்பாங்க.அப்பு ... கற்பனையை மீறிய சில சம்பவங்களும் நடைமுறையில் இருக்கத்தான் செய்யுது. அதைப் போல ஒரு இன்சிடெண்ட்தான் நான் கடத்தப்பட்டதும். நான் யாருன்னு தெரியாமலே என்னைக் கடத்திட்டு, என்னாலே எந்த யூஸும் இல்லேன்னுதெரிஞ்சதும்,'எங்களுக்குத்தேவையில்லை... உனக்கு தேவைனா வச்சுக்கோ'னு சொல்ற மாதிரி என்னை இங்கே கொண்டாந்து சேர்த்துட்டு அந்த பார்ட்டி  கழண்டுக்கிச்சு. உங்க அண்ணன் ஒரு லூஸு ... " என்று நிவேதிதா சொல்லும்போதே , "அண்ணனை தப்பா சொல்றியா?" என்று கோபமாகக் கேட்டான் அப்புமணி 
"ஏய் ... என்ன இது ? கூல் .... கூல்  டௌன் .. உங்க அண்ணா மாதிரி ஒரு புத்திசாலியை இந்த உலகம் முழுக்க தேடினாலும் கிடைக்க மாட்டான். ஆனா உங்க அண்ணா கூட சுத்துதே ஒரு அரை லூஸு .. அது என்னவோ என்னை அவன் கஸ்டடியிலே வச்சிருந்தா பணம் கிடைக்கும்னு நினைச்சு இங்கே கொண்டு வந்து வச்சிருக்குது. பணம் கிடைக்குமோ இல்லையோ ஆனா களி நிச்சயம் " என்றாள் நிவேதிதா 
"நீ பேசறது எதுவுமே புரியலே " என்றான் அப்புமணி.
"சரி.. சரி .... இந்தப் பேச்சை இதோடு விட்டுடுவோம் " என்று அவனை சமாதானப் படுத்தினாள் நிவேதிதா.   
"எல்லாத்தையும் யோசிக்கணும்னு நீ அடிக்கடி சொல்வியே . அப்படின்னா நீ யோசிக்கவே தெரியாமேதான் அங்கேருந்து இங்கே வரைக்கும் இவங்க பின்னாடி வந்தியா ?"
"நிறையவே யோசிச்சேன் அப்பு. இந்தியா எனக்குப் புதுசு. இங்கே உள்ளவங்க பேசற மொழியிலே எனக்கு தமிழ் தெரியும். இந்தி கொஞ்சங் கொஞ்சம் தெரியும். நான் எந்த இடத்திலே இருக்கிறேன் .. அந்த இடத்தில் இருந்தவங்க பேசற மொழி என்னனு தெரியாத சூழ்நிலையில்தான் நான் இருந்தேன். உன்னை மீட் பண்ணுவேன்னு கனவுலே கூட நான் நினைக்கலே. " என்று உணர்ச்சிப் பெருக்குடன் சொன்னாள் நிவேதிதா.
---------------------------------------------------- தொடரும்------------------------------------------------ 

Sunday, April 10, 2016

குழந்தைகளுக்கான குறுந்தொடர் - 33

                                
அச்சுப்பிச்சு அப்புமணி !
"அப்பு, நான் சீரியஸா கேட்கிறேன். நீ எப்படி இங்கு வந்து சேர்ந்தே ?" என்று நிவேதிதா கேட்க, "நான் தான் சொன்னேனே, நான் உலகத்தை சுத்திப்  பார்க்க வந்தேன்" என்றான் அப்புமணி. 
"நான்சென்ஸ் " என்றாள் நிவேதிதா கோபமாக 
"நீ என்னைத் திட்டறியா ?"
"ஆமாம் "
"என்னன்னு ?"
"மூளையில்லாதவன்னு "
"இதை எத்தனையோ பேர் ஏற்கனவே நிறைய தடவை சொல்லியாச்சு" என்றான் அப்புமணி ரொம்பவும் சர்வ சாதாரண மாக. 
"அப்புமணி, உலகத்தைப் பத்தி தெரிஞ்சு நீ என்ன செய்யப்போறே ?"
"உலகம் தெரிஞ்சவனா இருந்தாதான் எல்லாரும் என்னை மதிப்பாங்க. அப்பத்தான் எங்க அம்மா சந்தோசமா இருப்பாங்க.... சரி ... நீ ஏரோப் பிளேன்னில் ஏறிப் போகப் போறேன்னு சொல்லிட்டு போனியே. உங்க வீட்டுக்கு நீ போகவே இல்லையா   " 
"போகணும். எனக்கு எங்க டாடிமம்மியைப் பார்க்கணும் போல இருக்கு ."
"உங்க தாத்தா உன்னைத் தேடவே இல்லையா ? "
"தேடலைங்கிறது உனக்குத் தெரியுமா .. அவர் ஒரு விதமா யோசிச்சு ஒரு ஆங்கிளில் தேடிட்டுருப்பார்.போலீசும் என்னை கார்,பஸ்னு ஒவ்வொரு இடமா செக் பண்ணிட்டு இருப்பாங்க. ஆனால் இவங்க என்னை ஆடு மேய்க்கிற பொண்ணுமாதிரி நடத்தியே கூட்டிட்டு வந்தாங்க."
"அடேயப்பா... அங்கேருந்து இங்கே வரையா !உனக்கு கால் வலிக்கலே ?"
"காரில்தான் கொண்டாந்தாங்க . எங்கெங்கே செக் போஸ்ட் இருக்குமோ அங்கேயெல்லாம் அந்தந்த இடத்துக்குத் தகுந்தமாதிரி,நாடோடிக் கும்பல், ஆடு மேய்க்கிறவங்க மாதிரி நடத்தியே கூட்டிட்டு வந்தாங்க. செக் போஸ்ட் தாண்டினதும், அந்த கார் நான் இருந்த இடத்துக்குப் பக்கத்தில் வந்ததும் திரும்பவும் காரில் ஏத்திக்குவாங்க. அது எந்த இடம் என்கிற தெல்லாம் எனக்குத்தெரியாது. ஒவ்வொரு இடத்திலும் என்னைக் கூட்டி வர்றவங்க  அடுத்த இடத்தில் வேறொரு ஆள் கிட்டே என்னை ஹான்ட் ஓவர் பண்ணிட்டுப் போவாங்க. ஆனா ஒண்ணு .. அவங்க எல்லாருமே டீசெண்ட் பீப்பிள் ..."
"உன்னை ஏன் கடத்தினாங்கன்னு நீ கேட்கவே இல்லையா ?"
"சிச்சுவேஷனைப் புரிஞ்சுகிட்டு நான் மெண்டல் மாதிரி ஆக்ட் பண்ணினேனே. அதனால் ரொம்பவும் விவரமா பேசினா அவங்களுக்கு சந்தேகம் வந்துடுமே.  நான் புரிஞ்சுகிட்ட ஒரு விஷயம் என்னன்னா, இவங்க டார்கெட் வேறே யாரோ ஒரு பொண்ணு. தவறுதலா என்னைத் தூக்கிட்டாங்க. இதுக்குள் எங்க தாத்தா ஏதோ ப்ளான் பண்ணி வேறொரு கேம் ஆடிட்டார். இவங்க குழம்பிப் போயிட்டாங்க. இந்த கும்பலுக்கு இந்த விஷயமே நான் ஆந்திரா பார்டர் வரை வந்தபிறகுதான் தெரிஞ்சிருக்குது . என்னாலே அவங்களுக்கு ஒரு யூஷும் இல்லேன்னு தெரிஞ்சு இவங்க தலையிலே கட்டிட்டுப் போயிட்டாங்க. என்னை இவங்க கஸ்டடியில் வச்சிருந்தால் இவங்களுக்குக் காசுவரும்னு நெனச்சு இந்த லூசுங்க என்னை   இங்கே வச்சிருக்குங்க " என்று விளக்கினாள் நிவேதிதா.
"உனக்கு ஒரு பயமும் இல்லையா ?"
"பயம் இல்லேனு சொல்லமுடியாது...பயந்து.....அதனாலே...ஆகப் போறது என்ன?... இங்கிருந்து வெளியில் போயிட்டா போதும். அப்பு உனக்கு இங்கிருந்து வெளியில் போக ரூட் தெரியுமா  ?" 
"ரூட் ன்னா என்ன ?"
"வழி .... பாதை....."
"எங்கே போறதுக்கு?"
"ஏதாவதொரு போலீஸ்ஸ்டேஷன் போயிட்டாபோதும்"என்று நிவேதிதா சொல்லிக் கொண்டிருக்கும்போதே வாசலில் காலடி சத்தம் கேட்டது. நிவேதிதா ஒரு மூலையில் போய் முடங்கிக் கொள்ள அப்புமணி வாசலுக்கு வந்தான். சேகர் வருவது தெரிந்து, "ஹாய் ... அண்ணா " என்று சொல்லியபடி ஓடி சென்று அவன் கழுத்தைக் கட்டிக் கொள்ள, சேகர் அவனை வாரியணைத்துக் கொண்டான். சேகரின் பின்னாலேயே தனமும் வந்தாள்.
"என்ன தனம் .... பொண்ணு என்ன சொல்லுது ?" என்று கேட்டான் சேகர் 
"அது எதுவும் சொல்லலே. பேசாமே குந்திகிட்டு இருக்குது. இன்னும் எத்தனை நாள் இது இங்கே இருக்கும் ?' அக்கம்பக்கம் உள்ளவங்க எல்லாரும் இந்தப் பொண்ணு யாருன்னு விசாரிக்க ஆரம்பிச்சிட்டாங்க. எனக்கு சொந்தக்காரப் பொண்ணுனு சொன்னால் யாரும் நம்ப மாட்டாங்க . அதான் உனக்குத் தெரிஞ்ச சிநேகிதனோட தங்கச்சி. அவங்க எல்லாரும் எதோ கோவில் குளம்னு போயிருக்காங்ககளாம். இது மூளை சரியில்லா பொண்ணுன்னு கூடக்கூட்டிட்டுப் போகலே. இங்கே விட்டுட்டு போயிருக் காங்க. ஊர் திரும்பினதும் இதை அழைச்சிட்டுப் போயிருவாங்கனு சொல்லி வச்சிருக்கிறேன். நான் தெரியாமத் தான் கேட்கிறேன். யாருப்பா இது ?" என்று கேட்டாள் தனம்.
"அதெல்லாம் உனக்குத் தேவையில்லாத விஷயம் ?ஆளைப் பார்த்துக் கிறியா? துட்டு வாங்கிக்கிறியா, அதோடு நிறுத்திக்கோ " என்றவன், "ஏய் பொண்ணு, எப்படி இருக்கிறே?" என்று இந்தியில் கேட்க, அவன் சொல்வதைப் புரிந்து கொள்ளாத மாதிரி தலையை சொரிந்து கொண்டு  "ஹிஹி" என்று சிரித்தாள்  நிவேதிதா.
"இதுக்கு நான் கேட்காமலே இருந்திருக்கலாம்" என்று தனக்குள் சொல்லி  கொண்டான் சேகர்.
"அப்பு வெளியில்  எங்காவது போயிட்டு வரலாம் வர்றியா ?" என்று சேகர் கேட்க, "நான் ரெடி.... அண்ணா ... அந்தப் பொண்ணு ....?" என்று கேட்டான் அப்புமணி.
"அதை வெளியில் கூட்டிட்டுப் போக முடியாது. பிரச்சினை ஆயிடும் " என்று சேகர் சொல்ல,"அப்படின்னா....நானும் வரலே" என்றான் அப்புமணி "அடேயப்பா.... அதற்குள் அவ்வளவு ப்ரெண்ட் ஆயாச்சா ? அவ இல்லாமே சார் வெளியில் வரமாட்டாரா ?" என்று கேட்டு சிரித்த சேகர், "ஒரு முக்கிய வேலை இருக்குது. நான்தான் மறந்துட்டேன். இப்பத்தான் ஞாபகம் வருது. அப்பு.....இப்போ நான் கிளம்பறேன். இன்னொரு நாள் உங்க ரெண்டு பேரையும் நான் வெளியில் அழைச்சிட்டுப் போறேன் " என்று சேகர் உறுதி மொழி சொல்ல, "அப்ப ... டாட்டா " என்று சொல்லி கை அசைத்து விடை கொடுத்தான் அப்புமணி.      
-------------------------------------------------------------தொடரும்------------------------------------------------------- 

Monday, April 04, 2016

நாட்டோரே,நல்லோரே,பழங்கால இந்தியாவுக்குப் பயணிப்போம்

                 
   வாருங்கள் ! கை கோர்த்துச் செல்வோம் !!

பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்ததும் எங்களுடைய வீட்டில் நான் இருந்த நேரத்தைவிட, எங்கள் வீட்டுக்கு அருகிலிருந்த ஒரு லைப்ரரியில்  இருந்த நேரந்தான் அதிகம்.
சிறுவயதில் நான் படித்த ஒரு புத்தகத்தில் எனது மனதில் பதிந்த .... பதிந்த என்று சொல்வதைவிட "பதியம்" போடப்பட்ட வரிகள் என்று சொன்னால் அது பொருத்தமாக இருக்கும். அந்த வரிகள் :-
"இந்தியாவும் சரி ; இந்துமதமும் சரி ; ஒரு ஆலமரம் மாதிரி ! அந்த ஆலமர நிழலில் யார் வேண்டுமானாலும் வந்து தங்கலாம்! இளைப்பாறலாம் ! தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ளலாம். இன்னார்தான் வந்து தங்க வேண்டுமென்று ஆலமரம் ஒருபோதும் சொல்வதில்லை! வேர்கள், விழுதுகள் தாங்கி நிற்க ஆலமரம் காலாகாலத்துக்கும் நிலைத்து நிற்கும். தன்  நிழல்தேடி வருபவர்களை இருகரம் நீட்டி அரவணைத்துக் கொண்டு இளைப்பாறுதல் தரும். நிழல் தேடி வருகிற உயிரினங்கள் ஏற்படுத்தும் அசுத்தங்களினால் அந்த இடம் வேண்டுமானால் சிறிது மாசுபடுமே தவிர, ஆலமரத்துக்கு எந்த இழுக்கும் வந்து விடாது!!"
இந்த வரிகளை எனது நட்பு வட்டங்களோடு பகிர்ந்து சந்தோஷப்பட்டிருக் கிறேன். நான் ஒரு இந்திய பிரஜை என்று சொல்வதில் பெருமைப்பட்டிரு க்கிறேன். ஆனால் இந்துமதத்தை, இந்தியாவைக் காப்பாற்றுகிறோம் என்று  சொல்லிக்கொண்டு ஒரு சிலர் தங்கள் அபாயகரமான கற்பனை களால் எதை எதையோ செய்வதைப் பார்க்கும்போது, சிறுவயதில் பதியம் போடப்பட்ட இந்த வரிகள் எனது நினைவிலிருந்து கொஞ்சங்கொஞ்சமாக அழிந்து கொண்டு வருகிறது.
தொழில் நுட்பத்தில் நாகரிக வளர்ச்சியில் வேண்டுமானால் நாம் நவீன இந்தியாவில் இருப்போம். ஆனால் மனித நேயம், உயர்ந்த சிந்தனையில் பழங்கால இந்தியாவுக்கே நாம் போய்விடலாம். வாருங்கள் தோழர்களே !

DEAR VIEWERS,

                               
என்னை நினைச்சே நானும் சிரிச்சேன் !

நம்மோட சின்ன வயசிலே, நம்ம வீட்டுப்பெரியவங்க (கல்வி, பொது அறிவு, வெளியுலக அனுபவம் இல்லாதவர்கள்) செய்யும், சொல்லும் விஷயங்களை கிண்டல் கேலி பண்ணி ரசித்திருப்போம். அதே போன்ற செயல்களை பிற்காலத்தில் நாம் செய்யும்போது ..... அப்படி ஒன்றை செய்துவிட்டு என்னை நினைச்சே நானும் சிரிச்சேன். அதை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். 
1965-ம் வருடம்....அப்போது நாங்கள் பாளையங்கோட்டையில் இருந்தோம். நான் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். நெல்லையிலிருந்து திருச்செந்தூர் சென்று கொண்டிருந்தோம், ரயிலில். ஒரு பிச்சைக்காரன் அந்த ரயிலில் ஏறி, அங்குள்ள ஒவ்வொருவரிடமும் கை நீட்டிப் பிச்சை கேட்டுக் கொண்டிருந்தான். கிழிந்த ஆடை, அழுக்கு மேனி என்று பரதேசி கோலத்தில் இருந்தான் (அப்படி இருந்தால்தான் அவனைப் பிச்சைக்காரன் என்று சொல்லுவோம் ஒருகாலத்தில்!. இப்போதெல்லாம்வெள்ளையும் சொள்ளையுமா டிப்டாப் கோலத்தில் அலுவலகங்களில் உட்கார்ந்து கொண்டு "என்னைக் கவனியுங்க" என்று வாய் விட்டுக் கேட்கிறார்கள். இவர்களை எந்த லிஸ்டில் சேர்ப்பதென்று தெரியவில்லை). அவனுக்கு யாரும் எதுவும் கொடுக்கவில்லை. நாயை விரட்டுவது போல விரட்டிக் கொண்டிருந்தார்கள்.
சிறிது நேரத்தில் டிக்கெட் செக் பண்ணும் T.T.R  வண்டிக்குள் வந்து ஒருவர் முன்னே கை நீட்டவும் எல்லோரும் பரபரப்புடன் அவரவர் பைக்குள் கை விட்டுக் கொண்டிருந்தார்கள் தங்கள் டிக்கெட்டை வெளியில் எடுத்துக் காட்டுவதற்காக. அவர்   T.T.R என்பது எங்கள் வீட்டுப் பாட்டியம்மாவுக்குத் தெரியாது. அவர் ரொம்ப கேஷுவலாக , "பரட்டை கோலத்தில் ஒருத்தன் வந்து பிச்சை கேட்டால் அவனுக்கு ஒருத்தரும் ஒண்ணும் குடுக்க மாட்டீங்க. ஆனா எவனாவது ஒருத்தன்  வெளுப்புத்துணி மாட்டிட்டு வந்து டிப்டாப்பா கை ஏந்தினால் அத்தனை பேரும் பிச்சை போடுவீங்களா ?" என்று சத்தமாகக் கேட்டுவிட்டார். T.T.R சிரித்துக் கொண்டே "என் நிலைமையைப் பார்த்தீங்களா" என்றபடி  அங்கிருந்து போய் விட்டார். அதன்பிறகு ட்ரைன் பற்றிய பேச்சு வரும்போதெல்லாம் இந்த சம்பவத்தை சொல்லிச் சிரிப்போம். 
1982 ல் வீட்டிலிருந்து அலுவலகத்துக்கு நான் எலெக்ரிக் ட்ரைன்ல் போய்வருவேன். டூ வீலர் ஓட்ட ஆரம்பித்தபின் எலெக்ரிக் ட்ரைனில் பயணிப்பது முற்றிலுமாக நின்று போனது. அதன் பிறகு எப்போதாவது வெளியூர் போனால் உண்டு. அதுவும் ரொம்பவும் அபூர்வமாகத்தான் ரயில் பயணம். hire taxi, bus என்று மாற்றிக்கொண்டோம். ரயில்வே சர்வீஸில் பெண்கள் ஸ்டேஷன் மாஸ்டர், மற்றும் டிக்கெட் செக்கிங் வேலையில் இருப்பது  எனக்குத்  தெரியாது, போன மாதம் வரை. After retirement வீட்டில் போரடிக்கிறதென்று மல்லிகை மகள் பத்திரிக்கை ஆபீஸில் வேலையில் சேர்ந்ததும் மறுபடியும் என்னுடைய ரயில் பயணம் ஆரம்பித்தது. கோடம்பாக்கம் ஸ்டேஷனில் இறங்கி staircase நோக்கி நடந்து கொண்டிருந்தபோது ஒரு பெண் என் எதிரே வந்து நின்று கொண்டு கை நீட்டினார். அந்தப் பெண்ணைப் பார்த்ததும், "கைகால் நல்லாத் தானே இருக்குது. உழைச்சுப் பிழைக்க என்ன கேடு ?" என்று கேட்க நினைத்து வார்த்தை தொண்டை வரை வந்து அங்கேயே நின்றுவிட்டது. எனக்குப் பின்னால் வந்து கொண்டிருந்தவர்கள் கைப்பைக்குள் கைவிட்டு டிக்கெட்டை எடுத்துக் காட்டவும், நான் சுதாரித்துக் கொண்டு  "ஓஹோ. இந்த லேடி டிக்கெட் செக் பண்றவங்க போலிருக்குது" என்று நினைத்துக் கொண்டு என்னுடைய சீசன் டிக்கெட்டை எடுத்துக் காட்டினேன்.   
இதை நினைத்து என்னால் சிரிப்பை கண்ட்ரோல் பண்ணவே முடிய வில்லை. வீட்டுக்குப் போனதும் இந்த சம்பவத்தை எங்கள் வீட்டுப் பையனிடம் சொன்னதும், "நீ கேட்க நினைச்சதை உடனே கேட்டுட்டு அந்த லேடியோட ரியாக்ஸன் என்னனு பார்த்திருக்கணும். அதை செய்யாமே விட்டுட்டியே " என்று சொன்னதும்  "அட .. ஆமாம்லே " என்று நினைத்துக் கொண்டேன். இந்த நிமிடம்கூட இதை நினைத்துச் சிரிக்கிறேன். 
(இந்த மேட்டருக்கு மேலே உள்ள படம் ஓகே தானே ?! தற்போது எனது ப்ளாக்கில் வெளியாகும் படங்கள் அனைத்தும் face book லிருந்து திருடப்பட்டவை ஆகும். )

Sunday, April 03, 2016

DEAR VIEWERS,

.



KINDLY STEP INTO :
chennai.1colony.com  TO VIEW COMPUTER DESIGNED   KOLAMS                                                                                                   and     
ARUNA S.SHANMUGAM.BLOGGER  to solve  on-line puzzles in English                                                                                                                                                                                                                                       
                                                                                                       

குழந்தைகளுக்கான குறுந்தொடர் - 32

                   
   அச்சுப்பிச்சு அப்புமணி !  
"அக்கா உனக்கு இந்தி தெரியுமா? நீ இந்தி பேசுறியே?" என்று வியப்புடன் கேட்டான் அப்புமணி 
"இந்தின்னா என்னன்னே தெரியாத தமிழ்க் காரங்க நான் இந்தி பேசறதைப் பார்த்து, 'அட... இது  இந்தியெல்லாம் கூட தெரிஞ்சு வச்சிருக்குதே'னு நினைப்பாங்க. நான் பேசற இந்தியைக்கேட்டா,இந்திதெரிஞ்ச மனுஷங்க  சிரிப்பா  சிரிப்பா ங்க " என்றாள் தனம்.
"சிரிக்கட்டும்....சிரிக்கட்டும்..சிரிக்கிறது நல்ல விஷயந்தானே ?.. நான் வாயைத் திறந்தாக்கூட எல்லாரும் சிரிக்கிறாங்க. அதுக்காக நான் வாயை மூடிட்டா இருக்க முடியும்?" என்று பெரிய மனிதத் தோரணையில் கேட்டான் அப்புமணி.
"பிள்ளைங்களா... சாப்பிட்டுட்டு விளையாடிட்டு இருங்க.  நான் சேட்டு வீட்டுக்குப் போய்த் துணி துவைச்சுப் போட்டுட்டு வந்துடறேன் " என்று கிளம்பிப் போனாள் தனம்.
"அக்கா ...இந்தப் பொண்ணு ...?" என்று அப்புமணி கேட்க, " அதுக்கு இந்த ஊரிலே ஒரு மண்ணும் தெரியாது. அது எங்கேயும் போகாது " என்று சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்பினாள் தனம்.
அவள் கிளம்பிப்போன அடுத்த வினாடியே கதவை சாத்திவிட்டு வந்த நிவேதிதா, "இப்போ சொல்லு... நீ எப்படி இவங்க கிட்டே வந்து மாட்டினே ?" என்று கேட்டாள் 
"நான் ஒண்ணும் மாட்டலே. சேகர் அண்ணாவை எனக்குத் தெரியும். உலகத்தை சுத்திப் பார்க்கிறவரை அண்ணா கூட இருக்கலாமேனு இருக்கிறேன். அவ்ளோதான் " என்றான் அப்புமணி 
"உனக்கு அம்மாவைத் தேடவே இல்லையா ?"
"அம்மாவைப் பத்தி பேசினா எனக்கு அழுகை வருது. அம்மா மடிலே போய்த் தொப்புன்னு விழனும் போலிருக்குது. அதுக்காக உலகத்தை சுத்தி பார்க்காம இருக்க முடியுமா ? சரி... நீ எப்படி இங்கே வந்தே ?"
"யாரோ ஒரு மினிஸ்டர் பொண்ணைக் கடத்தறதா நினைச்சு என்னைக் கூட்டிட்டு  வந்துட்டாங்க."
"நீ சொல்றதுதானே "
"என்னை வாயைத் திறக்கவே விடலையே "
"உன்கூட துப்பாக்கி வச்சுகிட்டு ரெண்டு தடியனுக இருப்பானுகளே" என்று அப்புமணி சொல்ல அதைக் கேட்டு சிரித்தாள் நிவேதிதா 
"ஏன் சிரிக்கிறே ?"
"அவங்களை ஒரு ரூமில் அடைச்சு வச்சுட்டாங்க. உண்மையில் அவங்க செக்யூரிட்டி கார்ட்ஸ் கிடையாது. அவங்க என் அப்பாவோட பிரெண்ட்ஸ். நான் இங்கே வர்றேன்னு ப்ளான் முடிவானதும், எங்க அப்பா அவங்க பிரெண்ட்ஸ்க்கு போன் பண்ணி, "என் பொண்ணு அங்கே வர்றா. அவளைப் பத்திரமா பார்த்துக்கோங்க"னு சொல்லியிருந்தார். "எப்படிக் கவனிக்கிறோம்னு உங்கபொண்ணு அங்கே வந்தபிறகு கேட்டுத் தெரிஞ்சு க்கோங்க"னு சொல்லியிருந்தாங்க. இப்படி தமாஷ் பண்ணு வாங்கனு நான்கூட எதிர்பார்க்கலே. அவங்க சந்தோஷத்தைக் கெடுக்க வேண்டாம் னு அவங்க சொல்றபடி கேட்டேன். உண்மையிலே அவங்க ஒரு ஐ.டி. கம்பெனியில் வேலை பார்க்கிறாங்க"
"வேஷம் போடறது தப்புதானே ?"
"அவங்க யாரையும் ஏமாத்த வேஷம் போடலியே ..சும்மா தமாஷ்தானே . அப்படியே ஏதாவது பிரச்சினை வந்தாக்கூட சினிமா ஷூட்டிங் அது இது ன்னு சொல்லி சமாளிச்சுக்குவாங்க"
"எனக்கு ஒண்ணுமே புரியலே..இவங்க எல்லாரும் தீவிரவாதிங்களா?" என்று பயத்துடன்  கேட்டான் அப்புமணி.
"இதுங்களா ?!" என்று கேட்டு கலகலன்னு சிரித்தாள் நிவேதிதா 
"ஏன் சிரிக்கிறே ?"
"இதுங்க லோக்கல் பிக் பாக்கெட் கேஸுங்க .. கண்ட கண்ட சினிமாவைப்   பார்த்துட்டு இதுங்களை இதுகளே ஒரு பெரிய தாதா மாதிரி பில்ட் அப் குடுக்குதுங்க. யாராவது காசை வீசினால் அவங்க சொல்ற வேலையை செய்ற எடுபிடிங்க இதுங்க "
"உனக்கு எப்படித் தெரியும் ?"
"நான் காஷ்மீருக்குப் போனப்ப மினிஸ்டர் பொண்ணைக் கடத்தறதா நினைச்சு என்னைத்  தூக்குச்சுங்க. விஷயம் தெரிஞ்சதும் ..."
"என்ன விஷயம் ?"
"நான் அமெரிக்காவிலிருந்து என்னோட தாத்தாவோட வந்திருக்கிற விஷயம் தெரிஞ்சு பணம் பறிக்க பிளான் பண்ணுச்சுங்க .. இடையிலே எங்க தாத்தா ஒரு கேம் ஆடிட்டார்னு நினைக்கிறேன்  "
"என்ன கேமா ?"
"எங்க தாத்தா பெரிய ராஜதந்திரினு எல்லாரும் சொல்லுவாங்க... அவர் புத்திசாலித்தனமா என்னோட பேத்தி அமெரிக்காவில் ரொம்ப ஷேப் ஆக இருக்கிறா.  இங்கே  கடத்தப்பட்டது யாருன்னு எனக்குத் தெரியாதுன்னு சொல்லியிருக்கிறார்"   
"அது எப்படி உனக்குத் தெரியும் ?"
"எல்லாம் இந்த லூசுங்க பேசினதை வச்சுதான் சொல்றேன்."
"நீ யாருன்னு உன்னைக் கேட்கலியா ?"
"கேட்டாங்க.. நான் மனநிலை சரியில்லாத மாதிரி ஆக்ட் குடுத்தேன். ஆனால் அவங்களுக்கு நம்பிக்கை வரலே. என்னைப் பார்த்து நான் நல்ல வசதியான வீட்டுப்பொண்ணுன்னு தெரிஞ்சுக்கிட்டாங்க. ஏதாவது விவரம் கிடைச்சா அதை வச்சு எங்க வீட்டில் பணம் வாங்கிறதுதான் இவங்க ப்ளான். எனக்கு இன்னொரு டவுட்டும் உண்டு. இவங்க நான் மகாபலிபுரம் வந்திருக்கிறப்பவே காசுக்காக என்னை கிட்நாப் பண்ண ப்ளான் போட்டா ங்களோனு. ஏன்னா என்னை சென்னையில் பார்த்ததுமே, என்னைக் கூட்டிட்டு வந்து இங்கே விட்டுட்டு போனானே அவன்  "இது ஏற்கனவே நாம மிஸ் பண்ணின சாக்லெட்னு சொன்னான்.ஓகே. லீவ் இட்."
"உங்க தாத்தா உன்னைத் தேடலியா ?"
"தேடாமே இருப்பாரா? சீக்ரெட்டா ஏதாவது ப்ளான் பண்ணி இருப்பார். கடத்தின இடத்தில்தான் போலீஸ் தேடும்னு தெரிஞ்சு இந்த கிரிமினல்ஸ் என்னை சென்னைக்குக் கொண்டுவந்துட்டாங்க. மினிஸ்டரும் தாத்தா வும் அந்தப்பொண்ணு எங்க வீட்டுப் பொண்ணு இல்லேன்னு சொல்லிட்ட தாலே மீடியாகாரங்க பரபரப்பு செய்தியை பரப்புறதை விட்டுட்டு அவங்க வேறே வேலையைப் பார்க்கப் போயிட்டாங்கன்னு நினைக்கிறேன்.  ஒரு போன் கிடைச்சா போதும், எங்க தாத்தாவுக்கு நான் இன்பர்மேஷன் கொடுத்துடுவேன்". 
"தனம் அக்கா கையில் போன் இருக்குது"
"நானும் கவனிச்சேன் ..."
"போன் பண்ணி உங்க தாத்தாவுக்கு சொன்னா, போலீஸ் வந்து அண்ணா வைப் பிடிக்கும்தானே?" என்று கேட்டான் அப்புமணி கவலையுடன்.
"ஆமாம்... தப்பு பண்ணினா பிடிக்கத் தானே செய்யும் "
"அண்ணா ரொம்ப நல்லவர்...அவரை நீ போலீசில் மாட்டிவிட்டா நான் உன்னை இவங்க கிட்டே மாட்டி விட்டுடுவேன் " என்றான் அப்புமணி 
இதைக் கேட்டதும் திகைத்துப் போனாள் நிவேதிதா. 'இவனை ரொம்பவும் கேர்-புல்லா ஹேண்டில் பண்ணனும்'னு தனக்குள்சொல்லிக் கொண்டாள்.
"உனக்கு பயமே இல்லையா ?" என்று திடீரென்று கேட்டான் அப்புமணி 
"எதைப் பத்தி ?"
"உங்க வீட்டுக்குப் போக முடியாததை நினைச்சு !"
"பயந்து ஆகப்போறது ஒன்னும் இல்லேடா. ஒரு பிரச்சினையில் மாட்டி யாச்சு. அதை விட்டு வெளியில் வர்றது எப்படின்னு யோசிக்கணும். அதை விட்டுட்டு பயந்தாலோ அழுதாலோ எந்த பிரயோசனமும் இல்லை. எந்த சூழ்நிலையையும் சமாளிக்கிற மாதிரிதான் எங்க வீட்டிலேயும், நான் படிக்கிற ஸ்கூலிலேயும் என்னை ரெடி பண்ணி இருக்கிறாங்க. பிறந்த அத்தனை பேரும் ஒருநாள் செத்துத்தானே போகணும். பிரச்னைன்னு வரும் போது அதில் போராடிப் பார்த்துட்டு உயிரை விடலாம். தட்ஸ் ஆல் " என்று சொன்னாள் நிவேதிதா 
அவளை ஆச்சரியமாகப் பார்த்தான் அப்புமணி 'என்ன அப்படிப் பார்க்கிறே ?" என்று கேட்டாள் நிவேதிதா 
"நீ எப்படிப் பேசறே ? உன்னை மாதிரி எனக்கு எதுவும் செய்யத் தெரியாது "
"அட .. இதுக்கா இவ்வளவு கவலை ? நீந்தும் நேரம் வந்தால் நீச்சல் தானே வரும்னு சொல்வாங்க.. உன்னையே எடுத்துக்கோ அப்பு. மகாபலிபுரத்தில் உன்னைப் பார்த்தப்போ நீ ரொம்பவும் இன்னொசென்ட் பையனா இருந்தே. இப்போ உனக்குள்ளே ஒரு மெச்சூரிட்டி வந்திருக்குது. என்னைப் பார்த்த தும் என்னைத் தெரியும்கிற மாதிரி கத்த இருந்த நீ, என்னோட கண் ஜாடையைப் புரிஞ்சுகிட்டு சந்தர்ப்பத்துக்கு ஏத்தமாதிரி நடந்துகிட்டே. ரியலி ஐ அப்ரிசியேட் யூ. ஆனால் ஒன்னு அப்பு.. நாம் ரெண்டு பேரும் இவங்க யாருமே இல்லாத நேரத்தில்தான் பேசணும் ?"
"இருக்கும்போது பேசினால்....?"
"பேசினால் என்ன ஆகும்.... என்னை வேறொரு இடத்தில் அடைச்சு வைப்பாங்க.. அவ்வளவுதான் " என்றாள் நிவேதிதா அமைதியாக.
"ஐயோ ... மாட்டேன்... நீயா வந்து என்னோட பேசினா மட்டுந்தான் நான் பேசுவேன்" என்று அப்புமணி சொல்ல, "குட் " என்று அவன் தோளில் தட்டிக் கொடுத்தாள்  நிவேதிதா.  
----------------------------------------------------    தொடரும் ---------------------------------------------