Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, August 31, 2012

Scanning of Inner- Heart ( மனதின் மறு பக்கம் ) - Scan Report No: 42

 ( 14.09.1991 ல் மாலைமுரசில் வெளியான எனது முதல் சிறுகதை )

                                              விடியலின் வாசலில் 

ஊருக்குப் புறப்படும் அவசரத்தில்,பெட்டி படுக்கைகளைத் தயார் படுத்திக் கொண்டிருந்தான் செல்வம். நாளைக்கு அவனுக்கு கடைசி இண்டர்வியூ . மிகப் 'பெரிய' இடத்திலிருந்து சிபாரிசு செய்யப்பட்டிருந்ததால் , நாளைய இறுதித் தேர்வில் வெற்றி நிச்சயம்  என்ற நம்பிக்கையில் இருந்தான். அவனது பயணத்திற்குத் தேவையான ஒத்தாசைகளை உடனிருந்து  கவனித்த தங்கை நளினி , போட்டி போட்டுக்கொண்டு பம்பரமாக சுழன்று கொண்டு இருந்தாள்.
" அண்ணா, எல்லாத்தையும் மறக்காமே எடுத்து வச்சுக்கோ. கிளம்பற    அவசரத்தில் எதையாவது மறந்துட்டு, அங்கே போய் முழிக்கப் போறே ." -
சிரித்துக் கொண்டே சொன்னாள்  நளினி.   
" எனக்குப் பிறகு பிறந்த நீ , எனக்கே பாடம் சொல்லித் தர்றியா ? " என்று  தங்கையின் தலையில் செல்லமாக ஒரு குட்டு வைத்தான் செல்வம். 
" ஆங்க் .." எனறு செல்லமாக சிணுங்கினாள் நளினி.
"டேய் .. செல்வம் , இன்னும் அங்கே என்ன பண்ணிட்டு இருக்கே? ரயிலுக்கு நேரமாச்சே .. சீக்கிரம் கிளம்பற வழியைப் பாரு. " பூஜை அறையிலிருந்து வெளியில் வந்த மங்களம் அவனை அவசரப்படுத்தி னாள் . 
'ஆளுதான் வளர்ந்துட்டானே  தவிர மனசளவிலே  இன்னும் பச்சப் புள்ளையா இருக்கிறான். படிச்சிருக்கிறானே தவிர பொறுப்பா எதையும் செய்யத் தெரியலே ' என்று தனக்குள் சொல்லிக் கொண்ட மங்களம்  செல்வத்தின் அறைக்குள் வந்தாள் .
ஒரு சூட்கேசில் நிறைய துணிமணிகளை வைத்து அடைத்துக் கொண்டிருந்த செல்வம்,  சூட் கேஸ் வாய் பிளந்து நிற்கவே அதன் மீது ஏறி உட்கார்ந்து அழுத்தி மூடிக் கொண்டிருந்தான்.
" டேய் .. என்னடா இது சின்னக் குழந்தையாட்டம் ? தங்கப்போறது ஒரே ஒரு நாள். அதுக்கு ஏன்  இவ்வளவு துணிமணி ? " என்று அங்கலாய்ப்புடன் கேட்டாள் .
" இதுவரை  நான்  போன மத்த கம்பெனி இன்டர்வியூ  மாதிரி இது கிடையாது. இன்டர் வியூ முடிச்ச கொஞ்ச நேரத்திலேயே ரிசல்ட் சொல்லிடறாங்க .ஏற்கனவே இரண்டு டெஸ்டில் பாஸ் ஆகிட்டேன்.  இந்த டெஸ்ட்க்கு ஸ்ட்ராங் ரெகமெண்டேசன்  வேறே இருக்கு. எந்த காரணம் கொண்டும் ரிசல்ட் சொல்றதை தள்ளிப் போட மாட்டாங்களாம் . என்னோட படிச்ச ரமேஷ் இப்ப அங்கேதான் வொர்க் பண்றான். அவன் சொல்லிதானே நான் இந்த பார்ட்டியை சிபாரிசுக்கு பிடிச்சேன்.  அந்த ஜாப் எனக்குதான்.அதனால் தான் எல்லா  ட்ரெஸ்ஸும் எடுத்து வைச்சி ருக்கிறேன். ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா  டிசிப்ளின்மெயின்டைன் பண்ணு வாங்களாம் . ஒன்பது மணின்னு சொன்னா, சரியா ஒன்பது மணிக்கு இருந்தாகணுமாம் .இரண்டு நிமிசம் தாமதமா வந்தாலும் தயவு தாட்சண்யம் பார்க்காமே வெளியே அனுப்பிடுவாங்களாம்" என்றான்.  
" இப்பவே மணி நாலே கால். ரயில் அஞ்சு மணிக்கு கிளம்பிடும். இப்பவே 
நாம ஆட்டோ பிடிச்சு போனாதான் அரைமணி நேரத்தில் எக்மோர் போக 
முடியும். சீக்கிரம் கிளம்பு " என்று பரபரத்தாள் மங்களம் .
சிறிது நேரத்தில் மூவரும் கிளம்பி வெளியில் வந்தனர்.
" ஆட்டோ " அந்த வழியாக வேகமாக வந்த ஒரு ஆட்டோவை கையைக் காட்டி நிறுத்தினான் செல்வம். " எக்மோர் ஸ்டேஷன் போப்பா "
"ஸார்  மீட்டருக்கு மேலே ரெண்டு ருபா போட்டுக்குடுங்க ஸார்.." --ஆட்டோ டிரைவர் வழக்கமான பல்லவியைப் பாடினான்.
" அவசரமா ஒரு இடத்துக்குப் போகணும்னு சொன்னா போதுமே . உடனே 
மேற்கொண்டு ரெண்டை குடு, மூணைக் குடுன்னு ஆரம்பிச்சிடுவீங்களே ?
சரி .. சரி .. போப்பா சீக்கிரம் "
அண்ணனுக்கு எப்படியும் இந்த தடவை வேலை கிடைச்சுடும் . அம்மா 
இத்தனை நாள் பட்ட கஷ்டத்திற்கு இப்பதான் விடிவு காலமே பிறக்கப்
போகிறது என்ற கனவில் மிதந்து கொண்டிருந்தாள் நளினி .
ஏதோ சிந்தனையில் அமர்ந்திருந்த செல்வத்தைப் பார்த்தும், பார்க்காதது போல் காட்டிக்கொண்ட மங்களத்தின் மனதிலும் ஏதேதோ எண்ண அலை கள் .
" பாவம் இந்தப் பிள்ளை. இத்தனை வருசமா வேலை வேலைன்னு அலைஞ்சி திரிஞ்சு அலுத்துபோய் உட்கார்ந்திருந்த சமயத்தில், கடவுளாப் பார்த்து இப்ப ஒரு வழியைக் காட்டி இருக்கிறான். இனி வருங்காலம் அவனுக்கு வசந்த காலந்தான் " என்ற நியாயமான உணர்வுகள்  அந்தத்  தாயின் உள்ளத்தில்  தோன்றியது.
" அம்மா பட்ட கஷ்டத்துக்கு ஒரு விமோசனம் கிடைக்கப் போகுது. இனிமே அவங்க கஷ்டப் படாமே பார்த்துக்கணும். நளினிக்கு நல்லதொரு வரன் பார்த்து அவளை நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுக்க வேண்டும் இதுதான் என்னுடைய  அடுத்த கடமை " என்று மனதுக்குள் கோட்டை கட்டி,கட்டிய கோட்டையை ரசித்துக் கொண்டிருந்தான் செல்வம்.
எக்மோர் ஸ்டேஷன் வந்தடைந்தது ஆட்டோ. ஆட்டோவிலிருந்து இறங்கி ஆளுக்கொரு சூட் கேஸ் , பெட்டி படுக்கைகளை தூக்கிக் கொண்டு பிளாட் பார்ம் வந்து சேர்ந்தபோது  " நான் ரெடி " என்பதுபோல் ' முத்து  நகர் எக்ஸ்பிரஸ் ' ஓடத் தயார் நிலையில் நின்று கொண்டிருந்தது. ப்ளாட்பார்ம் முழுக்க  மனித தலைகளே தெரிந்தன. ரிசர்வ்ட் டிக்கெட் சார்ட்டில் தனது பெயரை சரி பார்த்துக் கொண்ட செல்வம் ரயில் பெட்டிக்குள் தன்னைத் திணித்துக்கொண்டான்.வழியனுப்ப வந்தவர் களும் வண்டிக்குள் ஏறி இருந்ததால் ஒரே இடிபாடு. ஜன்னலோர சீட் செல்வத்திற்கு புக் ஆகியிருந்தது. 
" அண்ணா, பெட்டி படுக்கை பத்திரம் " என்று நளினி சொல்ல, " உனக்குப் 
பிடிக்குமேனு  'மாலாடு ' செஞ்சு ஒரு சின்ன டிபன் பாக்ஸில் போட்டு. அதை சூட் கேஸ் அடியில் வச்சிருக்கிறேன்.  மறக்காமே சாப்பிடு . உடம்பைப்  பார்த்துக்கோ. அலட்சியமா இராதே." என்று கவலையோடு கூறிக் கொண்டு  நின்றாள்  மங்களம் , மகனை எங்கோ கண் காணா  தேசத்திற்கு அனுப்புவது போல.
க்ரீன் சிக்னல் பளிச்சிட்டதும் " நான் ரெடி " என்பதுபோல் முத்துநகர் 
எக்ஸ்பிரஸ் ஹார்ன் கொடுத்துக் கிளம்பியது. நளினியின் முகத்தில்தான் 
எத்தனை பூரிப்பு.  அண்ணனுக்கு இந்த வேலை கிடைத்துவிடும் என்ற 
நம்பிக்கை.
ஆனால், தாயின் முகத்தில் மட்டும் சோகம்  இழையோடி யிருந்தது. இந்த 
வேலை அவனுக்குக் கிடைக்க வேண்டும். கை நழுவி போய் விடக் கூடாது.
எத்தனை முறை ,எத்தனை நல்ல வாய்ப்புகள் அவனுக்குக் கை நழுவி 
போயிருக்கிறது. ஒவ்வொருமுறையும் அவன் ஒடிந்துபோய் மனதுக்குள் 
அழுததைக்கண்டு,இவள் வெளிப்படையாக  அழுதிருக்கிறாள் . கணவனை 
இழந்த நிலையிலும்  இத்தனை காலமாக,  தாய்க்குத் தாயாய், தந்தைக்குத் 
தந்தையாக  இருந்து , இரு குழந்தைகளை வளர்த்து ஆளாக்க அவள் பட்ட 
கஷ்டம் அந்த கடவுளுக்குதானே தெரியும் !
ஜன்னலோரம் அமர்ந்திருந்த  செல்வம் தாயின் பரிதவிப்பையும்  , தங்கை
நளினி முகத்தையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தான் , அவர்கள் அவன் கண் பார்வையிலிருந்து மறையும் வரையிலும் ! பிறகு கையி லிருந்த புத்தகத்தில் தன் பார்வையை ஓடவிட்டான் . 
செல்வத்தை நல்லபடியாக அனுப்பி வைத்த சந்தோசத்துடன், வீட்டுக்கு
வரும் வழியில் கோவிலுக்குப் போய்  தரிசனம் செய்து விட்டு ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு வீட்டுக்கு வரும் போது இரவு மணி பத்தைத் தாண்டி இருந்தது.  
இருவரும். வீட்டுக்குள் நுழைந்ததுமே, பூஜை அறைக்கு சென்று , மகனுக்காக தாயும்,அண்ணனுக்காக தங்கையும் வேண்டிக் கொண்டார்கள்.  கண்களை மூடி மங்களம் பிரார்த்தனையில்  இருக்க, விளக்கு அருகிலிருந்த விபூதியை எடுக்கக் கையை நீட்டிய நளினி , அதன் அருகில் ஒரு கவர் இருப்பதைக் கண்டு அதை பிரித்துப் பார்த்தாள் .
அடுத்த கணம் நளினியின் " ஐயோ அம்மா " என்ற அலறல் வீட்டைக் 
குலுக்கியது.
பதறிப்போன மங்களம் " என்னம்மா ? என்னாச்சு ? என்றாள் 
" இதைப் பாரும்மா. அண்ணணுக்கு வந்த கார்ட் . நீ  சாமி அலமாரியில் நேற்று வச்ச கார்டை   கிளம்பற அவசரத்தில்  அண்ணன்  எடுக்காமலே
போயாச்சு . இன்டெர்வியூ நடக்கிற இடத்தில்  இந்த கார்டைகாட்டினால்
தான் உள்ளேயே  போக முடியும்.   இந்த கார்ட் இல்லாமே அண்ணன்  அங்கே போயும் எந்த பிரயோஜனமும் இல்லே " என்று சொல்லி அழ
ஆரம்பித்தாள். அவர்களின் கனவுக் கோட்டை கொஞ்சம் கொஞ்சமாக இடிந்து கொண்டிருந்தது.    
 

Monday, August 27, 2012

பழமொழிக்குள் இருப்பதை கண்டு பிடியுங்கள் (Puzzle No. 9)

           பள்ளியில் படிச்சதை வச்சே விளையாடலாம். 
          எதையும் விளையாட்டாவே  படிக்கலாம்
          
 (அனைத்துக் கட்டங்களும் எழுத்தால் நிரப்பப்பட வேண்டும். அடைப்புக்
  குறிக்குள் இருக்கும் எண், எழுத்துகளின் எண்ணிக்கையை   குறிக்கும்.
 முடியுமானால் இப்பகுதியை பிரிண்ட் செய்து கொண்டு பென்சிலால் விடைகளை எழுத ஆரம்பிக்கவும். சரியாக எழுதி விட்டோம் என்பது உறுதி ஆனதும் அதை ink பண்ணவும். அனைத்து புதிர்களும் முடிவடைந்ததும் விடைகள் தனியாக பிரசுரமாகும். அதை உங்கள் விடையுடன் சரி பார்க்கவும்)

       (இந்த புதிர் 10 .04 .2004  தினமணி - சிறுவர்மணியில் வெளியாகியுள்ளது )

பழமொழிக்குள் இருப்பது யார் எது என்ன என்பதை கண்டு பிடிக்கவேண்டும்
      
  01
 







  12   

    18
    02
 


 

    03

 

  

   

   

     
    04
 
   
  
  

 
    05
 
  

 
  
 

  
   
    19
 
    25
 
 
 

  
  
    
   06
 
     


   


 
 
    20 
 
   21
  
  


 


   
   
 

  
   13
 


  

  

 
  

    07
 

   

   
 
 

 

  

  

   
  
 
  
    
    08
 

   

 

   
   

    
  

      

   

 
   
  
    17
 
 
   
     14
   


   09
 

 

    

    
    22
    23
  


   15
    
 
 

   
   10
  

  
  
  

    11
  
 


   

    24
   
   
   
    
    16
  
     26

இடமிருந்து வலம்

1  " - - - -  "  ஊற கல்லும் தேயும்                                                                (4 )
2  " - - - " கொழுத்தால் வளையில் தங்காது                                        ( 3 )
3   மாமியார் உடைத்தால் " - - - - - "                                                          ( 6 )
4  " - - "க்கு வேலையுமில்லே ; நிற்க நேரமுமில்லே                      ( 2 )
5  " - - - - - - " பிள்ளை பால் குடிக்கும்                                                       (6 )
6  காசிக்கு போனாலும்  " - - - - " தொலையாது                                  ( 4 )
7  " - - - - " இட்ட வீட்டில் கன்னம் இடலாமா                                       (  4 )
8  " - - - - " வீட்டு வாழை இரண்டு குலை தள்ளும்                             ( 4 )
9  " - - - " வெட்ட பூதம் கிளம்பியது                                                           (3 ) 
10  கெட்டிக்கார " - - - " முட்டைக்குள்ளிருந்தே கூவும்                   ( 3 )
11 நாய்கள் குரைத்தாலும் ஒட்டகம் பாலைவனத்தை கடக்கும்  ( 5 )


வலமிருந்து இடம்    
                  
12   " - - " கூவியா பொழுது விடியப்போகிறது                                     (2 )
13    ' - - - - - " பிடிக்க குரங்காய் முடிந்தது                                              ( 5 )
14  " - - " புகுந்த வீடு உருப்படாதாம்                                                        ( 2 )
15  ருசி கண்ட  " - - " உறியை சுற்றிசுற்றி வரும்                               ( 2 ) 
16  " - - - - " சோறு என்றைக்கும் அகப்படாது                                        ( 4 )         

மேலிருந்து கீழ்


 1  எமன் ஏறும் வாகனம்                                                                           ( 3 )
14  " - - " ப்பட்டம்  தேடி விதை                                                                  (2 )
17   " - - " இருந்து அரசாண்ட இடத்தில் பூனை இருந்து
      புலம்பி அழுததாம்                                                                                  ( 2 )
18   " - - - " யும்    தனது  வாயால் கெடும்                                                 ( 3 )
19   "  - - - - -  " கணக்கு பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது               ( 5 )
2௦    " - - - - " வீட்டுக்கு எட்டு வக்கணை                                                  ( 4 )
21 " - - -  - " கையில் பூமாலை கிடைத்தாற் போல                              ( 4 )

கீழிருந்து மேல்
 9    சொன்னதை சொல்லுமாம்                                                                ( 6 )
21    " - - - - " பூனை செத்த எலியைத்தான் பிடிக்கும்                         (4 )
22  உயர பறந்தாலும் " - - - - - - " பருந்தாக முடியாது                    ( 6 )
23  " - - - - - - " யை சோற்றில் மறைக்க முடியுமா                           ( 6 )
24  குட்டி " - - - - " வேதம் ஓதுகிறது                                                       ( 4 )
25  பெண் என்றால் " - - " கூட இறங்கும்                                              ( 2 )
26  " - -- " தேஞ்சு கட்டெறும்பாச்சு                                                           ( 3 )
.

Friday, August 24, 2012

Scanning of Inner- Heart ( மனதின் மறு பக்கம் ) - Scan Report No: 41

 ( நான் எழுதிய இந்த சிறுகதை 10.06.1992  'தேவி 'யில் வெளியாகியுள்ளது )

                                             ராத்திரி வேளையில் ? !

" அரசு அம்மா, உள்ளே வேலையா இருக்கீகளா ? " - வாசற்படியில் இருந்தே குரல் கொடுத்தாள் கோமதி.
" உள்ளே வாங்க , கோமக்கா . சோறு வடிச்சிட்டு இருக்கேன். வெளியே போயிருக்கிற அவக வந்து கை கால் கழுவறதுக்கு மின்னாடியே தட்டுலே 
சோத்தை வச்சிரணும் . இல்லாட்டி நட்டுவாங்கம் இல்லாமலே நாட்டியம் 
ஆட ஆரமிச்சிருவாக ". என்ற பவானி, அடுக்களை வேலையை முடித்து 
விட்டு, கைகளைப் புடவைத் தலைப்பில் துடைத்தபடியே வெளியில் வந்தாள் .
" இன்னிக்கி லீவாச்சே , எங்கே போயிருக்காக ? " - கோமதி கேட்டாள் .
" அதான் .. என்ன  எழவு ....வாயிலே நுழையாத பேரு .. அது ..   ஆங்க் ...
' அச்சோசி அசன் ' கூட்டமாம். அதுக்கு போயிருக்காக. ஒன் வீட்டிலே அவக போகலியா ?   "
" எங்க வீட்டிலே டவுணுக்குப்  போயிருக்காக. ஆமா , அக்கா , ஒங்களுக்கு 
ஒரு சங்கதி தெரியுமா ? " - வாசற்படிவரை சென்று வெளியே யாராவது 
வருகிறார்களா என எட்டிப்பார்த்துவிட்டு வந்த கோமதி , பவானி காதில் 
கிசுகிசு குரலில் கேட்டாள் .
" என்ன  சங்கதி ? "
" ராத்திரி நேரத்துலே , நடு சாமத்துலே ,'ஜல் ...ஜல் ..ஜல்'ன்னு சத்தம் கேட்குது .அதைத் தொடர்ந்து யாரோ ஓடறாப்பிலே ஒரு சத்தம். ' கீச் கீச் ' ன்னு ஒரு சத்தம் விட்டு விட்டுக் கேக்குது. ஒரு வாரமா நம்ம காலனிலே இப்படி சத்தம் கேக்குதே .  நீங்க எப்பயாவது  கேட்டுருக்கீகளா ? "
" கோமக்கா .. நானும்  சொல்லலானுதான் நினைக்கிறது. ஆனா ஒரு பயம் வந்து சொல்ல முடியாமே போயிடுது.  ஆமா , அது என்ன சத்தமா இருக்கும் ?
ஓடறது யாராயிருக்கும் ? " -- பவானிக்கு வார்த்தை தடுமாறியது.
"இந்த வீட்டுக்குக் குடி வர்றதுக்கு முன்னாடியே எங்க வீட்டுக்காரக என்கிட்டே சொன்னாக. 'ஏண்டீ கோமு, நாம போகப் போறோமே அந்த இடம் ஒரு அஞ்சு வருசத்துக்கு முன்னாலே சுடுகாடா இருந்திச்சாம். சேட் ஒருத்தன் எப்பிடியோ ' தகிடு தத்தம் ' பண்ணி  அந்த இடத்தை வாங்கி பிளாட் கட்டிட்டான். ஒரு மூணு வருசமா அதை யாருமே வாங்காததாலே , அத கொறஞ்ச வாடகைக்கு விட்டுட்டான் 'ன்னு. ஒருவேளை அந்தக் கோளாறா இருக்குமோ ? " - கோமு  சொல்லும்போதே அவள் குரல் தடுமாறியது.
" இந்தக் காலனி ஓரத்துலே இருக்கிற வயக்காட்டு கிணத்துலே ஏகப்பட்ட 
பொம்பளைக வேற  விழுந்து தற்கொலை பண்ணிகிட்டதா கூட சொல்லுதாக .எதுக்கும் நம்ம வீட்டுக்காரக காதுலே போட்டு வைப்போமா ? -  பவானி சொல்லி முடிப்பதற்குள் , வாசல் படியில் அவளது கணவன் வரும் ஓசை கேட்டது. கோமதி விடை பெற்றுக்கொண்டாள் .

சாப்பிட்டுவிட்டு ஓரு அட்டாகாசமான ஏப்பத்தைவெளியில்விட்டு விட்டு 
கட்டிலில் தனது உடலைச் சாய்த்தார் செல்வராஜ்
" ஏங்க , ஒரு விஷயம் ! "
" ம் ... ம் .. சொல்லு சொல்லு "
" தினமும் நடுசாமத்தில் சலக் சலக் ன்னு சத்தம் கேட்குது. யாரோ  நடந்து 
வர்றாப்லேயும் ஓடுறாப்லேயும் இருக்கு .கவனிச்சீகளா ?  ஏதாவது பேய்
பிசாசு வேலையா  இருக்குமோ ? -- அவள் சொல்லி முடிப்பதற்குள்  ' கடகட 'என சிரித்தார் செல்வராஜ்
" சிரிச்சது போறும் .சிரிப்ப அடக்குங்க.. அரசு முழிச்சிடப்போறான் "
" அடி பைத்தியமே ! இந்தக் காலனியிலே இருக்கிற பொம்பளைகளை மீறி எந்த பேய் பிசாசாவது   உள்ளே நுழைஞ்சிட முடியுமா ? உங்களைப் பார்த்தா இருக்கிற ஒன்னு ரெண்டும் பயந்து , ஊரை விட்டு ஓடிரும். ஊருக்கு வெளியே ஒதுக்குப்புறமா வீடு பார்த்து வந்திருக்கோம். மனுஷன், விடிஞ்சதும் கிளம்பி வேலைக்குப் போனா, ராத்திரி பத்து பதினோரு மணிக்குத்தான் வீட்டுக்கு வர்றான் . தினம் முப்பது மைல் நாப்பது மைல்போயிட்டு வர்ற களைப்பில் படுத்துத் தூங்குதோம். இடி விழுந்தா கூட அது எங்களுக்கு தெரியாது.. மனுசனை கொஞ்ச நேரம் நிம்மதியா தூங்க விடு " என்ற செல்வராஜ் , வாயை அகலத் திறந்து ஒரு கொட்டாவியை வெளியேற்றி  விட்டு, மீண்டும் தூங்க ஆரம்பித்தார்
ஊருக்கு ஒதுக்குப் புறமான இடத்தில் அந்த காலனி இருந்தது. மொத்தம் 
பதினாறு வீடுகள்தான் . சகல வசதிகளுடன் இருந்த வீட்டை சேட் மிகக் 
குறைந்த வாடகைக்கு விட்டிருந்தார். வாடகை குறைவு என்பதாலும் , சேட் குடியிருப்பவர்களின் எந்தவொரு விஷயத்திலும் தலையிடாத தாலும் அங்குள்ள எல்லோருமே, தங்கள்  சொந்த வீடாகக் கருதியே அங்கு குடி இருந்தார்கள்.
ஊருக்கு ஒதுக்குப் புறத்தில்இருந்தாலும்,அந்த காலனியில் குதூகலத்தி ற்கு எப்போதும் பஞ்சமே இல்லை. எப்போதும் கலகலப்புதான். ஆனால் , கடந்த சில நாட்களாக  அங்கு கலகலப்பு மாறி மயான அமைதி குடி புகுந்திருந்தது .
ஆனால்,  அங்குள்ள ஆண்கள் யாரும் அதை கண்டு கொள்ளவே இல்லை. 
பெண்களால் அப்படி இருக்க முடியுமா ? மொட்டை மாடியில்  பெண்கள்
அனைவரும் ஒன்று கூடினர் ,
" கோமதியக்கா , அந்த சத்தத்தை நேத்து நானும் கேட்டேன் ." - இது திலகா .
" அந்த ஜல் ஜல் சத்தத்தைக் கேட்டதில் இருந்து எனக்கு தூக்கமே வரலே " -என்றாள்  பார்வதி.
ஆளுக்கொரு கதையாக  சொன்னார்கள்.
" யாராச்சும் .. கள்ளன்....கிள்ளன் ? " என்று சந்தேகத்தை கிளப்பினாள் , அஞ்சாம் நம்பர் அஞ்சுகம்.
" ஆமா ... சத்தம் குடுத்துக்கிட்டுதான் களவாணிப்பய வருவானாக்கும்."  - என்று கேட்டாள் பத்தாம் நம்பர்  வீ ட்டு பத்மா,
முகவாயை தோளில் இடித்தபடி" நம்ம வீட்டு ஆம்பளைகளை  நம்பி எந்த
பிரயோசனம் இல்லே.. இதுக்கு நாமதான் ஒரு முடிவு கட்டியாகணும் "  என்றாள் கோமதி
"என்ன செய்யலாம்?"என்ற எல்லோர் குரலிலும் குழப்பம் நிறைந்தி ருந்தது.
" நம்ம காலனிக்கு அடிக்கடி ஒரு குடுகுடுப்பைக் காரன் வருவானில்லே "
என்று கோமதி ஆரம்பிக்க,
 " ஆமாம், அவன் கையிலே ஒரு குரங்கைப் பிடிச்சிகிட்டு . ஆமா ..  அவனுக் கென்ன   என்ன?  "  என்று  படபடத்தாள் பவானி.
" அவனைக் கூப்பிட்டு மந்திரம் மாந்த்ரிகம்  செஞ்சா என்ன ? " - இது திலகாவின் யோசனை.
" நல்ல யோசனை " என்று ஒட்டு மொத்தமாக ஆமோதித்தார்கள் .
மாதக் கடைசி வார ஞாயிறன்று , ஆண்கள் எல்லோரும் அசோசியேசன்
கூட்டத்திற்கு சென்று விடுவதால், அப்போது மந்திரம் செய்வது என்றும்,
செலவை பதினாறு வீட்டுக்காரர்களும் பங்கிட்டுக் கொள்வது என்றும்
முடிவானது.  இந்த விஷயத்தை ஆண்களிடம் சொல்லக்கூடாது என்று ஏகமனதாக முடிவு செய்யப்பட்டபின் , பெண்களின் ரகசிய ஆலோசனைக் கூட்டம் அமைதியாக முடிந்தது.

அந்த குடுகுடுப்பைக் காரனுக்கு ஏகப் பட்ட மரியாதை காத்திருந்தது அந்த
குடியிருப்பிலுள்ள மொட்டை மாடியில். அவன் தோளில் உட்கார்ந்திருந்த
குரங்குக்கும் உபசரிப்புகள் .

101 முட்டைகள், 10 தேங்காய், ஒரு ஆட்டுக்குட்டி, ஒரு கோழி , வாழைப்பழ
தார் ஒன்று, பூ, கற்பூரம் , பூசணி , சாம்பிராணி, எலுமிச்சம்பழம் , இத்யாதி
பொருட்களின் நடுவில், முகம் நிறைய விபூதி குங்குமம் அள்ளிப் பூசியிருந்த குடுகுடுப்பைக் காரன், பார்க்கவே பயங்கரமான கோலத்தில் உட்கார்ந்து  இருந்தான். அவன் கையில் உடுக்கை. அவன் முன் வளர்க்கப் பட்டிருந்த ஹோமத்தீயில் இருந்து கிளம்பிய வெண்புகை அந்தப் பகுதியை மெல்ல தழுவிக் கொண்டிருந்தது.

" ஆத்தா .. காளீ .. வாடியம்மா..நீலி.. இந்த குடியிருப்பை ஆட்டி வைக்கிறது
யாரும்மா ? ஆத்தங்கரை அன்னம்மாவா ? இல்லே கால்வாக்கரை கன்னி
யம்மாவா  ? .. இல்லே ஆலமரத்து அனுசுயாவா ?  சட்டுனு வந்து புட்டு புட்டு சொல்லும்மா !.  ஏய் .. ஏய்  "

திடீரென்று கற்பூரத்தை உள்ளங்கையில் கொளுத்திய குடுகுடுப்பைக் காரன், " அடியே ,, அடியேனிடம் வாம்மா ! " என்று உடுக்கை அடித்துக் கொண்டே சொல்லி, ஏற்றிய கற்பூரத்தை தனது வாய்க்குள் போட்டுக் கொள்ள, அதைக் கண்ட பெண்கள் கன்னத்தில் போட்டுக் கொண்டார்கள். உடுக்கை சத்தம்அந்த பகுதியை உலுக்கியது.
" டேய் " .. பயங்கரமாக கத்தினான் அவன். சற்று தள்ளி நின்று கொண்டிருந்த பெண்கள், பயத்தில் ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்துக் கொண்டார்கள்.
" டேய் ,, நான் வேறு யாருமில்லேடா. வரதட்சினை கொடுமை தாங்காமே
இங்கே இருக்கிற கிணத்தில் விழுந்து செத்துப் போன  வரலட்சுமிதான்டா.
இதோ பாரு , எனக்குப் பின்னாலே ஒரு பட்டாளமே இருக்கு. குடிகாரக்
கணவனாலே கொலை செய்யப் பட்ட கோமளா, நாத்தனார் தீ வச்சுக் 
கொளுத்திய நளினி ... "
" அடுக்காதே அம்மா. நிறுத்து. காலனி ஜனங்க பயப்படுதாக. உனக்கு என்னவேணும் ? உன் ஆக்ரோசத்தை நிறுத்த உனக்கு தேவையானதை கேட்டு வாங்கிக்கோ " என்று ஆண், பெண் குரலில் மாறி மாறி குடுகுடுப் பாண்டி பேச , அவனுடன் இருந்த குரங்கும் திடீர்னு ஆடத் தொடங்கியது.
" அடேய் .. வரதட்சிணை வரலட்சுமி பேசுதேண்டா . என்  மாமியார் கேட்ட    
பத்து பவுன் நகையைக் குடுத்திடு. நான் பறந்திடுதேன்  .."
" ஏய்.. வரதட்சிணை , நிறுத்து, நாங்க குடுக்கிறத வாங்கிட்டு மருவாதியா
ஓடிப்போயிடு. இல்லே ..கால்வாய்க்கரை ஆலமரத்தில் உன்னை ஆணி அடிச்சுகட்டிப் போடுவேன். ம் "
" ம்  .. சரி .. சரி  பவுன் விக்கிற விலையில் , பத்து பவுன் கேட்கிறது சரியில்லே .
" ஒரு பவுன் குடுத்தாலும் போதும் ஓடிப்போயிடறேன். இல்லேன்னா இங்கேஇருக்கிற பொம்பளைகளை சும்மா விடமாட்டேன். ஆட்டிப் போடுவேன் ஆட்டி ".
 சிறிது நேரத்துக்குப் பின் தனது சுய குரலில் , " அம்மா , காலனிவாசிகளா,
வரலட்சுமி ஒரு பவுன் கேட்கிறா . என்ன சொல்லுதீக? " என்றான் குடுகுடுப்பை .வேறு  வழியின்றி தலை அசைத்தனர் பெண்கள்.
திடீர்னு ஆவேசமாகக் கத்தினான் குடுகுடுப்பைக் காரன்  " அடே .. நான்தான் கோமளா. என்னை மறந்திட்டியா ? என் புருஷன் என் பட்டுப் புடவையை வித்துக் குடிச்சிட்டு வந்தான் . ஏன்னு கேட்ட என்னை, அவன் கொன்னுட்டான். எனக்கொரு பட்டுப்புடவை வேணும். இல்லாட்டா ஆயிரத்தொரு ரூபா  வேணும்"
" அம்மா , ஜனங்களா, கோமளா பொல்லாதவ, பழி வாங்காமே விட மாட்டா.1001 ரூபா  கேட்கிறா."
அதற்கும் தலையாட்டினார்கள் பெண்கள். அவர்கள் உடல் பயத்தால் நடுங்கிக்கொண்டிருந்தது.
 " ஏய்   மறந்திட்டியேடா  பாவி ! நான்தான் நளினி. பகல் ஷோ சினிமா பார்க்க பக்கத்து வீட்டில் பத்து ரூபா கடன் வாங்கினேன். அதனால்தான் எனக்கும் என் புருசனுக்கும் சண்டை வந்துச்சுது . என் நாத்தனார் என் மேலே தீ வச்சா..நான்  செத்தேன் . அந்த . பத்து ரூபாயை நான் திருப்பிக் குடுக்கணும் "
" ஆயிரம் ரூபாய்க்கு கீழே கேட்கிற பேயை எல்லாம்  என்  குரங்குதான்
ஓட்டும் ! ஏய் ராமா , அந்த நளினியை ஓட்டுடா ராமா ! " என்று குடுகுடுப்பை சொல்ல, குரங்கு  ஆவேஷத்தோடு " ஆ .. ஊ .." என்று  சத்தமிட்டு ஆட ஆரம்பித்தது. தலை கீழாக தொங்கி குட்டிக் கரணம் அடித்தது. பிறகு கைகளைத் தட்டி 'கிகிய்  என்று சிரித்தது.

"சபாஷ்டா ராமா .. சபாஷ் ..! ஆ ... காளிக்கு நேரமாயிட்டுது.. காளி கேட்டதை குடுங்க .. நான் மலையேறனும் " என்றபடி தலையை நாலா பக்கமும் சுழற்றி ஆடினான் குடுகுடுப்பை. அவன் தோற்றமும், ஆட்டமும் பார்க்கவே  மிகவும் பயங்கரமாக இருந்தது.
சற்று நேரத்தில் நகையும் பணமும் கை மாறியது.
"அம்மாக்களா,நீங்க எல்லோரும் சந்தோசமா போங்க. கால்வாய்க் கரைக்குப் போய், நான்  ஆடு கோழி பலி கொடுக்கணும். ம் .. திரும்பிப் பார்க்காமே போங்க. நான் போறவரை நீங்க யாரும் வீட்டை விட்டு வெளியே வராதீங்க "என்று சொன்னதும், எல்லாரும் அவரவர் வீட்டுக்குள் போய் தாழிட்டுக்கொண்டார்கள் .
எல்லாவற்றையும் வாரி ஒரு மூட்டையாகக் கட்டிக்கொண்டு புறப்பட்டான் குடுகுடுப்பை.குரங்கு அவன் தோளில் தொற்றிக் கொண்டது  ஒரு கையில் ஆட்டுக்குட்டி, இன்னொரு கையில் கோழி சகிதம் வெளியில் வந்த அவன் ஆண்கள் வரும்முன் அந்த இடத்தை விட்டு வேகமாகப் போய்விட வேண்டும் என்ற எண்ணத்தில் வேகமாக வெளி யேற முயல, அந்த சமயத்தில் ஆண்கள் அங்கு நுழைந்தார்கள் .திருடனுக்கு தேள் கொட்டியது போல் பதட்டமானான் குடுகுடுப்பை . அவனது பதட்டம், மற்றவர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்த " டேய்,  நில்லுடா , பையில் என்ன ? " என்று கேட்டபடி கையை ஓங்கினார் செல்வ ராஜ்.
" அய்யோ .. அடிக்காதீங்க. உண்மையை சொல்லிடுதேன் "
" உண்மையை சொல்லலே அடிச்சே கொன்னுடுவோம் " என்ற ஆண்கள்
அவனை உள்ளே இழுத்துச்சென்றனர்.
சத்தம் கேட்டு வெளியில் வந்த பெண்கள் , ' இவன் பேயை ஒட்டின
குடு குடுப்பைக்காரன் " என்றார்கள்.
" நீங்கள்லாம் இருக்கும்போது, இந்த குடியிருப்புக்கு பேய்னு ஒன்னு வருமாஎன்ன ? " என்று கேட்டு படபடத்தார் சுந்தரம் , பவானியின் புருசன்.
" நல்ல வேளை , கூட்டத்தை சீக்கிரம் முடிச்சிட்டு வந்ததால் இவனைப் பிடிக்கமுடிஞ்சுது.  டேய் .. அடி பட்டு சாகாதே . உண்மையை சொல்லு. நிசமாவேபேய் இருந்துதா ? இங்கே வந்துதா ? அதை நீ ஓட்டினியா ? "
" சொல்லிடுதேன்.  இங்கே வந்து நான் பிச்சைன்னு கேட்டப்போ  யாருமே
பிச்சை போடலே. என் பொழைப்புக்கு ஒரு வழி பண்ண நினைச்சேன். ஒரு
யோசனை வந்தது, பொம்பளைங்க பேய் பிசாசுக்கு பயப்படுவாங்க. அதனாலே என் குரங்கு  காலில் சலங்கையைக் கட்டி ராத்திரி நேரத்துலே ஓட விட்டேன் .அது ஓடும் . சில வீட்டுக் கதவை தட்டும் . நான் நினைச்ச மாதிரியே  இங்கே பொம்பளைங்க பயந்தாங்க. அந்த பயத்தை நான் காசாக் கிட்டேன்  சாமீ "
" அப்படின்னா , வரலட்சுமி, கோமளா , நளினி  .. இவங்கல்லாம் ? " என்று
பெண்கள் கேட்க,  " எல்லாமே பொம்பளைங்க பேருதான் . பேயும் இல்லே ..பிசாசும் இல்லே. என்னை மன்னிச்சிடுங்க .. நான் இனிமே இந்தப் பக்கம் வரவே மாட்டேன் "  என்று கெஞ்சினான் குடுகுடுப்பை.
"இந்தப் பக்கம் வரமாட்டே. வேறு எங்காவது போய் பொம்பளைங்க தனியா இருக்கும்போது உன் கைவரிசையை காட்டுவே . பேய்  ஓட்டிக் கிட்டு இருப்பே ! இப்போ நட போலீஸ் ஸ்டேஷன்க்கு " என்று அவனை ஒட்டிச்சென்றார்கள் ஆண்கள்.
 பெண்கள் முகம் அவமானத்தால் வெளுத்துப் போயிருந்தது