Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Thursday, October 20, 2011

Stories told by GRAND-MA ( Story number - 1 )

  


       வாக்கு சாதுரியம்


புயல்  வேகத்தில்  வீட்டிற்குள் நுழைந்த பிரபு கழற்றி வீசிய வேகத்தில் செருப்புகள் இரண்டும் மூலைக்கு ஒன்றாக போய் விழுந்தன. 
"கோபத்தில்  இருக்கிறான். அவன்கிட்டே வாய் கொடுத்து வாங்கிக் கட்டிக்காதே " என்று மனோவின்  காதோரம் கிசுகிசுத்தாள் பாட்டி.
"கோபத்திலே கோபத்திலே  வந்திருக்காண்டா. மஞ்ச தண்ணி  மஞ்ச தண்ணி மொண்டு ஊத்துங்கடா" என்று பாடினாள் மனோ.
"கிண்டலாடி  ?" என்றான் பிரபு கோபமாக.
"இல்லேடா. நக்கல்" என்று பதில் வந்தது மனோவிடமிருந்து.
"இப்போ நீ ஆகப்போறே சுக்கல்" என்று பிரபு கையை ஓங்க, 'ஐயோ. பாட்டி காப்பாத்து காப்பாத்து ' என்று மனோ அலற, "நாந்தான்  அவன்கிட்டே வாய் கொடுக்காதேனு  சொன்னேனே. கேட்டியா. இப்போ வாங்கிக்கட்டிக்கோ" என்று பாட்டி சொன்னாலும், "போனாப்போகுது விடுடா.  உன்னோட தங்கச்சி உன்கிட்டே விளையாடமே. வேறே யார்கிட்டே போய் வம்பு பண்ண முடியும். விட்டு தொலை. என்னடா கோபம் உனக்கு ? '" என்றாள்.
இதற்குள் சமயலறைக்கு சென்று ஒரு தட்டில் சிறிது சர்க்கரை பொங்கலை  எடுத்து வந்த மனோ "சாப்பிடு " என்று அவன் முன்பாக நீட்டினாள்.
"கோவில்பிரசாதம்னு  பக்கத்து வீட்டிலே கொஞ்சம்தானே குடுத்தாங்க. நீ அதிலேயும் அவனுக்கு மீதி வச்சிட்டியா? என்று பாட்டி கேட்க "இல்லே பாட்டி. பிரபுக்கு சர்க்கரை பொங்கல் ரொம்ப பிடிக்கும். அதான் நான் எடுத்துக்கவே இல்லே.எல்லாத்தையும் அவனுக்கு வச்சிட்டேன்." என்றாள் மனோ.
" சரி.  நாம பிப்டி பிப்டி எடுத்துக்கலாம்" என்று சொல்லி சரி பாதி சர்க்கரை பொங்கலை மனோவிடம் நீட்டினான் பிரபு.
" ரெண்டு பெரும் ஒருத்தர் மேலே ஒருத்தர் இவ்வளவு பாசம் வச்சு கிட்டு பிறகு ஏன்தான்  சண்டை கோழி மாதிரிசண்டை   போடுறீங்களோ எனக்கு தெரியலே" என்று அலுத்துக்கொண்டாள்  பாட்டி.
"தெரியாட்டா அலட்டிக்காதே. விட்டுடு" என்றனர் இருவரும் கோரஸாக.
"வரப்போகிற பொங்கல் பண்டிகைக்காக போட்டி எல்லாம் வைத்து, பொங்கலன்னிக்கு பரிசெல்லாம் கொடுப்பாங்கன்னு சொன்னதுமே நானும் போட்டிலே  கலந்துக்க போறேன்னு சொல்லிட்டு போனே.  வரும் போது  இப்படி  சாமியாடிகிட்டு வர்றியே என்னடா விஷயம்?'
"பாட்டி. இன்னிக்கு கபடியும் திறனறியும் போட்டியும் நடத்துறதா போர்டு போட்டிருந்தாங்க. எனக்கு கபடி எல்லாம் தெரியாது. அதனாலே திறனறியும் போட்டி நடத்துகிற இடத்துக்கு போய் வரிசையிலே நின்னேன். அங்கே ஒவ்வொருத்தர் கிட்டேயும் ஒவ்வொரு மாதிரி கேள்வி கேட்டிருக்காங்க. என்கிட்டே "இந்த கிராமத்து ஜனத்தொகை எவ்வளவு. அதிலே ஆண் எத்தனை பேர்?  பெண் எத்தனை பேருன்னு ஒரு குண்டை தூக்கி போட்டா நான் என்ன பதில் சொல்ல முடியும்  பாட்டி.  நான் பட்டணத்து பையன். லீவுக்காக இந்த கிராமத்துக்கு வந்திருகோம்கிறது இங்கே எல்லாருக்கும் தெரியும்தானே. பிறகு ஏன் பாட்டி என்கிட்டே அப்படி ஒரு கேள்வி கேட்டாங்க? எனக்கு தெரியாதுன்னு  சொன்னதும் 'நீ போட்டியிலே கலந்துக்க முடியாதுன்'னு சொல்லிட்டாங்க பாட்டி"  என்றான் பிரபு சோகமாக.  
"அட அசடே போட்டி நடத்துகிற இடத்திலே, அதான் பஞ்சாயத்து ஆபீஸ்  வாசலிலே இந்தஊர் ஜனத்தொகை என்ன. ஆண் எத்தனை பேர்  பெண் எத்தனை
பேர்னு விவரம் இருக்குமே, அதை நீ கவனிச்சிருக்கியானுதெரிஞ்சிகிறதுக்கு  அப்படி ஒரு கேள்வி கேட்டிருக்கலாம். ஒரு விசயத்தை நல்லா புரிஞ்சுக்கோ. ஒரு இடத்துக்கோ ஊருக்கோ போறதுக்கு முன்னே அந்த  இடத்தை பத்தி எல்லா  விவரமும் தெரிஞ்சு வச்சுக்கணும்.  அதை பத்தி அவங்க கிட்டே பேசினா எவ்வளவு சந்தோஷ படுவாங்க தெரியுமா? உன்னை பத்தி பெருமையா நினைப்பாங்க. கிட்டத்தட்ட இதே கேள்வியை ஒரு ராஜா கேட்டப்போ ஒரு புத்திசாலி என்ன சொன்னான் தெரியுமா? " என்று பாட்டி கேட்க "ஆஹா. பாட்டி அதற்கும் ஒரு கதை வச்சிருப்பாள் " என்று சொல்லிக்கொண்டே  பாட்டியின் அருகில் வந்து அமர்ந்தனர் பிரபுவும் மனோவும்
"ஒரு ஊர்லே ஒரு ராஜா இருந்தார் ' என்று பாட்டி கதையை ஆரம்பிக்க "ஏன் பாட்டி. எல்லா கதையையும் ஒரு ஊர்லே ஒரு ராஜா இருந்தாருன்னு ஸ்டார்ட் பண்றே  ?"  என்று கேட்டாள் மனோ.
" ஒரு ஊர்லே ஒரு குப்பன் இருந்தான் ஒரு ஊர்லே ஒரு சுப்பன் இருந்தானு ஆரம்பிச்சா குப்பனுக்கும் சுப்பனுக்கும் கோபம் வரும். ராஜான்னு பொதுவா சொன்னா யாருக்கும் கோபம் வராதுதானே. அதனாலதான்." என்று பாட்டி சொல்ல, பாட்டி கதை சொல்லறப்ப குறுக்கே பேசாதே" என்றாள் மனோ.
"அந்த ராஜாவுக்கு ஏதாவது ஏடாகூடமா கேள்வி கேட்கிறதே பழக்கம்" என்று பாட்டி சொல்ல "நம்ம பிரபு மாதிரி" என்று மனோ சொல்ல 'இருடி கதை முடிஞ்சதும் உனக்கு இருக்கு" என்றான் பிரபு.
"அவர் ஏடாகூடமா கேள்வி கேட்க பதில் சொல்ல தெரியாமே மத்தவங்க முழிக்கிறத பார்த்து ரசிக்கிறது ராஜாவோட பழக்கம். ஒருநாள் தெருவில் போய்க்கொண்டிருந்த ஒருத்தனை கூப்பிட்டு 'இந்த ஊரில் எத்தனை காக்கா இருக்குனு கரெக்டா சொல்லணும். இல்லாட்டா அடிதான்'னு சொன்னார்."
"என்ன ஒரு மடத்தனம் பாட்டி. பறக்கிற காக்காவை யாரால் எண்ணிப்பார்க்க முடியும்." என்று படபடப்பாக கேட்டான் பிரபு.
"அப்படின்னா அவனுக்கு நிச்சயம் அடி கிடைத்திருக்கும்  ? என்று மனோ சொல்ல 
"அதுதான் இல்லே , அவன் ஒரு பதிலை சொல்லி பரிசு வாங்கிட்டு போனான்" என்றாள் பாட்டி. 
"எப்படி " என்று இருவரும் வியந்தனர்.
"அவன் சொன்னான்." உங்க கிட்டே ஒரு விண்ணப்பம்  ராஜா. இந்த கேள்விக்கு பதில் சொல்ல அரண்மனையில்  ஒரு மாசம் தங்கி இருக்கணும். மேல் மாடத்தில் நின்னுகிட்டு எத்தனை காக்கா வருது போகுது. இதையெல்லாம் கணக்கு எடுக்கணும். அந்த ஒரு மாசமும் நான் அரண்மனையை விட்டு எங்கேயும் போக மாட்டேன். சாப்பாடு தங்குவது எல்லாமும் அரண்மனையில் தான்' என்று அவன் சொல்ல ரொம்ப ஆச்சரியப்பட்ட ராஜா அவன் அரண்மனையில் தங்க அனுமதித்தார். வேளாவேளைக்கு  வயிறு நிறைய  நல்லா சாப்பிடுவான். வானத்தை பார்த்து எதையோ  கணக்கு போடுவது போலே  எழுதி கொள்வான். ஒரு மாசம் முடிஞ்சதும்  ராஜாகிட்டேவந்து  ." நான் கணக்கு எடுத்திட்டேன். நம்ம நாட்டிலே நாலாயிரத்து அறுபது காக்கா இருக்கு" என்றான்.
ஆச்சரியபட்ட ராஜா "நீ சொன்னதைவிட அதிகமாகவோ குறைவாகவோ இருந்தால் என்ன செய்யலாம் உன்னை"  என்று  கேட்க அவன் கொஞ்சமும் தயங்காமல் "நான் எண்ணிப்பார்த்த போது  4060  இருந்தது. நீங்க எண்ணும்போது எண்ணிக்கை அதிகம் வந்தால்  வேறே நாட்டு காக்கா நம்ம நாட்டுக்கு விருந்துக்கு வந்திருக்கணும். குறைவா   இருந்தால் நம்ம நாட்டு காக்கா எல்லாம் வெளி நாட்டுக்கு விருந்துக்கு போயிருக்கணும் " என்றான். 
அவனோட புத்தி சாதுர்யம், தைரியத்தை பார்த்து வியந்த ராஜா அவனுக்கு நிறைய பொன்னும் மணியும் பரிசா கொடுத்து அனுப்பி வைத்தாராம். "எப்படி 
இருக்கு கதை?" என்று பாட்டி கேட்க "தூள்தான் பாட்டி" என்றனர் இருவரும்.