Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Thursday, August 27, 2020

திரும்பி வா.. ஒலியே திரும்பி வா

பின்னணி பாடகர் SPB கொரோனாவிலிருந்து மீண்டுவர எல்லாம் வல்ல இறைவனை வணங்குகிறேன். அவர் குறித்த ஒரு சம்பவத்தையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
சில / பல வருடங்களுக்கு முன் நாங்கள் பாரதிதாசன் குடியிருப்பில் இருந்த போது நடந்த சம்பவம் ஒன்று.
ஆபீஸிலிருந்து வீடு திரும்பிய நான், எங்கள் பிளாக் வாசலில் படகு கார் ஒன்று நிற்பதைப் பார்த்துவிட்டு, எனது டூ வீலரை எப்படி உள்ளே கொண்டு வருவது என்பது தெரியாமல் நின்று கொண்டிருந்தேன். ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த என் சகோதரியின் மகளிடம் " கார், யார் வீட்டுக்கு ? எப்போ கிளம்பும் ?" என்றேன்.
"அம்மா, அது   SPB கார். சினிமா ஷூட்டிங்  நடக்குது. அவர்  இவ்வளவு நேரம் இங்கேதான் இருந்தார். இப்பதான் பார்க் உள்ளே போனார்" என்றாள். 
என் டூ வீலரை வாசலில் ஓரங்கட்டிவிட்டு வீட்டுக்குள்ளே போய் ஜன்னல் வழியாக பார்த்தேன். எங்கள் வீட்டு ஜன்னலில் நின்று பார்த்தால் பார்க்கின் FULL VIEW கிடைக்கும்.  அங்கிருப்பவர்களும் எங்கள் வீட்டினர் நடமாட்டத்தை பார்க்க முடியும். அப்படி ஒரு அமைப்பு.
எங்கள் போர்ஷனில் குடியிருந்த ஒரு பையனிடம் (6 வயது சிறுவன்) காலண்டர் பேப்பர் ஒன்றைக் கிழித்துக் கொடுத்து "   SPB கிட்டே போய் இந்த பேப்பரில் கையெழுத்து வாங்கிட்டு வா " என்று அனுப்பினோம்.
(பையன் ரொம்பவும் களையாக NORTH INDIAN (CHILD) மாதிரி இருப்பான்.)
பையன் ஓடிப்போய் அவரிடம் பேப்பரை நீட்ட, SPB பேப்பரில் ஸைன் பண்ணி அவன் முதுகில் தட்டிக்கொடுத்து அனுப்பினார். பையன் அந்த பேப்பரை எங்களிடம் கொண்டு வந்து தர, இன்னொரு பேப்பரை கிழித்துக் கொடுத்து "இதிலே வாங்கிட்டு வா " என்று அனுப்பினோம்.
பையனும் ஓடினான். கையெழுத்தோடு திரும்பி வந்தான். திரும்பவும் அனுப்பினோம். "இப்பதானே வாங்கிட்டு வந்தேன் " என்றான். " அது அவளுக்கு.. இது எனக்கு... இன்னொன்னு பிரபுக்கு " என்று சொன்னோம்.
பையன் திரும்பவும் பார்க் பக்கம் போனான்.   SPB அருகில் நின்று கொண்டு பேப்பரை அவரிடம் நீட்டியபடி எங்களைப் பார்த்தான்.
"எதுக்கு இத்தனை ?" என்று அவர் கேட்க, இவன் ஜன்னலை பார்த்தபடியே "இது அண்ணாவுக்கு " என்று சொல்லும் போதே, இவன் பார்வை முழுக்க எங்கள் வீட்டு ஜன்னல் மீது இருக்க ,  SPB ஜன்னலைப் பார்த்தார். அங்கே எங்கள் தலை தெரியவும், சிரித்துக் கொண்டே, " தம்பி .. நீ இப்படி ஓடி ஓடி போய் வராதே.. மூச்சு வாங்குது பார். மெதுவாக வா. அந்த வீட்டில் இருக்கிறவங்களுக்கு  எத்தனை கையெழுத்து வேணுமோ அத்தனை யையும் போட்டுக் கொடுத்து விட்டுத்தான் நான் இந்த இடத்தை விட்டு போவேன். நீ போய் மொத்த காலண்டரையும் வாங்கிட்டு வந்துடு " என்று சொல்ல, பையன் அதை அப்படியே எங்களிடம் சொல்ல, அதோடு  நாங்கள் விளையாட்டை நிறுத்தி விட்டோம்.
சற்று நேரத்தில் ஷூட்டிங் ஆரம்பமானது. கொட்டும் மழையில், கையில் டார்ச் லைட்டை பிடித்தபடி மகனைத் தேடி  SPB போகும் காட்சி படமாக்கப்பட்டது. (எங்கள் பிளாக்கிலிருந்து மூன்றாவது பிளாக்கில்  SPB  வீடு -  கதைப்படி. படம் காதலன்.  SPB ன் மகன் பிரபு தேவா.)
செயற்கை மழையை சினிமாவுக்காக வர செய்வதை அப்போதுதான் நேரில் பார்த்தோம்.
எந்தவொரு பந்தாவும் இல்லாமல், ஒரு சிறு பையனிடம் அவர் நடந்து கொண்ட பக்குவம் எங்களுக்கு மிகவும் பிடிக்கும். மனிதர் மீண்டு வர வேண்டும்.
எங்கள் வீட்டு அருகிலும், அலுவலகம் அருகிலும் அடிக்கடி ஷூட்டிங் நடக்கும்.  அதை வேடிக்கை பார்க்க போகும் நாங்கள், வாயை மூடிக் கொண்டு சும்மா இராமல் அவர்களிடமே ஏதாவது கமெண்ட் அடிப்போம்.
ஒரு சிலர் சண்டைக்கு வருவார்கள். "ஓஹோ.. ஷூட்டிங் பார்க்க நிற்க கூடாது. படம் பார்க்க மட்டும் வரணுமாக்கும்? இந்த படம் பெட்டியை விட்டே வெளியே வராது " என்போம்.
இப்படி கமென்ட் அடிப்பது, சண்டை  போடுவது எல்லாமே எங்களைப் பொறுத்தவரை ஒரு ஜாலியான விளையாட்டு.
ஒரு ஷூட்டிங்கின் போது ஒருவர், "இது எங்களுக்கு பொழைப்பு, தெருவில் நிற்கிறோம்.. வெயிலில் காய்கிறோம். இது எங்களோட  தலை யெழுத்து. உங்களுக்கு இது தேவையா?" என்றார்.  
அந்த சமயம் அதையும் ஒரு விளையாட்டாகத்தான் நினைத்தோம். ரிலாக்ஸ்ட்டாக உட்கார்ந்து யோசித்தபோது அந்த வார்த்தைகளில் இருந்த வலி , வேதனை தெரிந்தது. அதன் பிறகு, ஷூட்டிங் நடப்பது தெரிந்தால், யார் வந்திருக்கிறார்கள் என்று எட்டிப்பார்ப்பதோடு சரி. எங்களை நாங்கள் திருத்திக் கொண்டோம்.
(இன்னொரு விஷயம் : கொரோனாவா என்ன ஏது என்பது தெரியாமலே மிக நெருங்கிய உறவில் இருவரை இழந்து விட்டோம். 10 நாட்கள் ட்ரீட்மெண்ட் எடுத்து (ரூபாய் 60,000/- ஆஸ்பத்திரிக்கு மொய்  எழுதிய பிறகு) என்னுடைய தம்பி வீடு திரும்பி, தற்போது தனிமையில் இருக்கிறார். அவர் வீடு வந்து சேரும்வரை எங்கள் மனஅழுத்தம் எப்படி இருந்தது என்பதை இறைவன் மட்டுமே அறிவான். எதோ பேருக்கு நடமாடிக் கொண்டிருந்தோம்.   SPB மட்டுமல்ல. இந்த கிருமியின் கோரப்பிடியில் சிக்கிய அனைவரும் நல்லபடியாக திரும்பி வர ஒவ்வொரு நொடியும் இறைவனை வேண்டிக்கொண்டே இருக்கிறோம்.

Saturday, August 15, 2020

வாழ்க சுதந்திரம்..வாழ்க பாரத மணித்திருநாடு ..


அய்யா பாரதி, 
வீர சுதந்திரம் வேண்டி நின்றார் பின்னர் வேறொன்றை நாடுவாரோ என்று சொன்னாய்.
முழங்கிவரும் பீரங்கிகளைக் கண்டு நடுங்காமல் அந்நிய ஆதிக்கத்தை எதிர்த்து நெஞ்சை நிமிர்த்தி போராடிப் பெற்ற சுதந்திரத்தை, சுதந்திரமாக கொண்டாட இன்று வழியில்லை. வாழ்க சுதந்திரம் ..
வீட்டை விட்டு வெளியேற சுதந்திரம் இல்லை. வாழ்க சுதந்திரம் ..
நல்லது கெட்டதில் கலந்து கொள்ள சுதந்திரம் இல்லை .. வாழ்க சுதந்திரம் ..
முகத்தை மூடிக்கொண்டு அடைபட்டுக் கிடக்கிறோம்.  வாழ்க சுதந்திரம் ..
எதிர்த்து நிற்கும் பகைவனைவிட ஒளிந்து நிற்கும் எதிரி என்றுமே ஆபத்தானவன் என்பார்கள் 
கண்ணுக்குத் தெரியாத எதிரி மட்டுமல்ல, கிருமியும் ஆபத்தானது என்பதை இன்றைய உலகம் புரிந்து கொண்டுள்ளது.
நேற்றைய தினம் வரை தேசம்விட்டு தேசம் போக, இருநாட்டின் அனுமதி தேவை.  இன்றோ ஒரு தேசத்திற்குள்ளேயே ஊர் விட்டு ஊர் போக "மால் " வெட்ட வேண்டும். ஒரு மாவட்டம் போக அனுமதிக்கும். போக நினைக்கிற மாவட்டமோ அனுமதி மறுக்கும். அருமையான அதிகாரிகள். அருமையான நிர்வாகம். வாழ்க சுதந்திரம் ..
எல்லாம் வல்ல இறைவா ... என்று தணியும் எங்கள் சுதந்திர தாகம்.
வாழ்க பாரத மணித்திருநாடு .. வாழ்க சுதந்திரம்... வாழிய வாழிய வாழிய வாழியவே 

Thursday, August 13, 2020

புதிர் கேளு.. புதிர் கேளு.. புதிருக்கு பதில் சொல்லு....

DEAR VIEWERS, 


E-PASS பற்றி  அனல் பறக்கும் விவாதங்கள் ஊடகங்களில் அவ்வப்போது ஓடிக்கொண்டிருக்கிறது. 
அதுபற்றி எங்கள் குடும்ப உறவினருக்கு ஏற்பட்ட அனுபவங்களை உங்கள் காதுகளிலும் போட்டு வைக்கிறேன்.
சென்ற  மாதம் எங்களது நெருங்கிய உறவு, ரத்த சம்பந்த உறவின் அகால மரணச்செய்தி வந்தது. அவளுக்கு கொரோனாவா என்று கண்டுபிடிக்கப் படவில் லை.
எந்தவொரு நோயும் இல்லாமல் மிகவும் ஆக்டிவ் ஆக இருந்த பெண், ஒருநாள் தலைவலி என்று துடிக்க, ஆஸ்பத்திரியில் அனுமதித்திருக் கிறார்கள். அங்கு எந்த மருத்துவமும் செய்யப்படவில்லை. மதுரை ஆஸ்பத்திரிக்கு கொண்டுபோக  சொல்லி விட்டார்கள். அதற்கான ஏற்பாடு நடக்கும்போதே அந்தப்பெண் இறந்து போனாள். சென்னைக்கு தகவல் வந்ததும் என் தம்பி, வேறு சில உறவுகளுடன்  காரில் பயணம் செய்தார் திண்டுக்கல்லுக்கு. 24மணி நேரத்தில் திரும்பி வர வேண்டும்  என்ற நிபந்தனையுடன் E-PASS  வழங்கப்பட்டது.
திண்டுக்கல் போய்சேர்ந்தாகிவிட்டது. அங்குள்ள செக் போஸ்டில்  உங்களை இரண்டுநாள் தனிமைப்படுத்தி வைத்திருந்த பின்பு தான்  ஊருக்குள் அனுமதிப்போம் என்று சொல்லி இருக்கிறார் ஒரு லேடி டாக்டர்.
காவல் துறையும் ரெவின்யூவும் "எங்களை பொறுத்தவரை ஓகே. டாக்டர் அனுமதித்தால் நீங்கள் ஊருக்குள் போகலாம்" என்று சொல்லி ஒதுங்கி விட, இவர்கள் டாக்டரிடம் பேசி இருக்கிறார்கள்.  அவர் சம்மதிக்க வில்லை  
24மணி நேரத்தில் திரும்பி வர வேண்டும்  என்ற நிபந்தனையுடன் E-PASS  கொடுத்திருக்கிறார்கள். என் அக்கா மகளின் முகத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆதங்கத்தில் ஓடி வந்திருக்கிறேன். இரண்டுநாள் தனிமைப்படுத்தி வைத்திருந்த பின்பு என்னை அனுமதிப்பதாக சொல்கிறீர்கள். அதுவரை இறந்தவரின் பாடி இருப்பது எப்படி சாத்தியம் ஆகும். 24மணி நேரத்தில் திரும்பி வர வேண்டும்  என்ற நிபந்தனை யுடன் E-PASS கையில் வைத்துக்கொண்டு மூன்றுநாள் கழித்து நான் சென்னை திரும்பினால் அங்கு என்னை அனுமதிப்பார்களா என்று கேட்டு எவ்வளவோ விவாதம் செய்திருக்கிறார்கள்.
அந்த டாக்டர் எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் தனக்கு தெரிந்த விதியை மட்டுமே கிளிப்பிள்ளை போல சொல்லி இருக்கிறார். 
(O.. THANK GOD...முதல்வரின் ஆலோசனைக்  கூட்டத்தில் இந்த லேடி இடம் பெறவில்லை. சமயசந்தர்ப்பம் புரியாமல், படித்ததை ஒப்புவிக்கும் ஜென்மங்களிடம் இருந்து மக்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்.)
இதெல்லாம் போகட்டும் விடுங்க.. இன்னொரு சூப்பர் ஜோக் என்ன தெரியுமா ? இந்த விவாதங்களை அருகில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஒரு டாக்சி ட்ரைவர் "சார் .. எனக்கு 2500 ரூபாய் கொடுங்கள். உங்களை கொண்டுபோய் விட்டுடறேன் " என்று பேரம் பேசி இருக்கிறார். செக் போஸ்டுக்கும், போக வேண்டிய இடத்துக்குமான தூரம் 12 கிலோ மீட்டர் .. அதற்கு சார்ஜ் 2500 ரூபாய்.
உன்னால் மட்டும் எப்படி முடியும் என்று கேட்க, "அதெல்லாம் வேண்டாம் சார். நான் கேட்கிற பணத்தை கொடுங்கள்.. உங்களை கொண்டுபோய் சேர்க்கிறேன்" என்று சொல்லி இருக்கிறார்.
இவர்கள் வேண்டாமென்று சொல்லிவிட்டு, சென்னைக்கு திரும்பி விட்டார்கள்.
அது எப்படி சாத்தியம் என்று இன்றுவரை எங்களுக்குத் தெரியவில்லை. உங்களுக்குத் தெரிந்தால் அதை எங்களுக்கும் சொல்லுங்கள் ப்ளீஸ்.
ஓ .. கடவுளே.. கொரோனாவிடம் இருந்து எங்களை நாங்கள் காத்துக் கொள்கிறோம். ஒரு மனிதனின் சந்தர்ப்ப சூழ்நிலை புரியாமல் வெட்டி வேதாந்தம் பேசும் இதுபோன்ற  மகாமேதைகள் அதிமேதாவிகளிடம் இருந்து எங்களை காப்பாற்றுவாயாக. ப்ளீஸ் ....
பணமிருந்தால் இந்த உலகத்திலே பல "கதை " நடக்குதப்பா... 

வார்த்தையில் இருக்கும் வார்த்தைகள் (001)


Dear viewers 
மின் விளக்குகள் வீடுகள் தோறும் வருவதற்கு முற்பட்ட காலத்தில்,  பெரியவர்களுக்கான பொழுது போக்கு, வீட்டு வாசலில் பாய் விரித்து உட்கார்ந்துகொண்டு அக்கம் பக்கத்தினருடன் ஊர் விவகாரங்களை, சினிமா செய்திகளை பேசி அரட்டை அடிப்பதுதான்.
குழந்தைகள்  சினிமா பாடல்களை பாடியும், சில சமயம் ஏதாவது புதிர்களை சொல்லி விடை கண்டுபிடிக்க சொல்லியும் பொழுதைக் கழிப்பார்கள். ஏதாவது  ஒரு வார்த்தையை சொல்லி,  அந்த வார்த்தைக் குள்  எத்தனை வார்த்தைகள் இருக்கிறதென்று கண்டுபிடிக்க சொல்வார்கள்.
கொரோனாவால் வீட்டுக்குள் அடைந்து கிடக்கும் குழந்தைகள் படிக்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் மொபைலில் முகம் புதைத்து இருக்க விடாமல், அதே சமயம் பொழுதும் உபயோகமாக இன்ட்ரெஸ்ட்டாக இருக்கும் விதத்தில் இது போன்ற புதிர்களை அவர்களுக்கு அறிமுகப் படுத்தலாம். அதிகப்படியான வார்த்தைகளை தமிழ் சொற்களை அவர்கள்  தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும். 
உதாரணமாக "உபாதை" என்ற வார்த்தையில் இடம்பெற்றது மூன்றே மூன்று எழுத்துக்கள் என்றாலும், இந்த ஒரு வார்த்தையில் ஐந்து   வார்த்தைகள் உள்ளன.
1      உ   (சுட்டெழுத்துக்களில் ஒன்று . (அ,     இ,    உ - இம்மூன்றும்                    
                சுட்டெழுத்துக்கள் )
2     பா -  பாட்டு 

3    தை  - மாதம், துணி தைத்தல் 

4   உதை  - இதற்கு அர்த்தம் சொல்லவேண்டிய அவசியமே இல்லை 

5   பாதை  - வழி
இதே போல ஆங்கில வார்த்தைகளிலும் புதிர் போடலாம். இதே தளத்தில் அதுபோன்ற புதிர்கள் on-line puzzle ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது .
முயற்சி செய்து பாருங்கள்.

இதே பாணியில் மேலும் சில புதிர்கள் இப்பகுதியில் வெளியாகும்.

புதிர் - 001

"வாழ்த்துக்கள்" என்ற ஒரு வார்த்தையில் ஒன்பது வார்த்தைகள் உள்ளன. அவற்றைக் கண்டுபிடியுங்கள். 

விடை அடுத்த வாரம்.


Tuesday, August 11, 2020

இதுக்குப் போய் அலட்டிக்கலாமா?


Dear viewers,
உறவினர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது தங்கத்தின் விலை உயர்வு பற்றிய பேச்சும் இடம் பெற்றது.
"அம்மாடி.. அவனவன் அன்றைய சாப்பாட்டுக்கே நொண்டி அடிச்சுகிட்டு இருக்கிறான்.ராக்கெட் வேகத்தில் ஏறுதே தங்கத்தின் விலை  ... ஒரு பவுன் விலை நாப்பதாயிரம் ரூபாயைத் தாண்டி விட்டது" என்று பெருமூச்சு விட்டேன்.
"ஏன்.. ஏதாவது நகை வாங்கணுமா ?" என்று கேட்டார் அவர்.
"எனக்கு நகை ஆசை கிடையாது.. வேலை பார்க்கிற காலத்தில் ஒரே ஒரு செயினை போட்டுக் கொண்டு போவேன். ஆபிசிலிருந்து வீடு திரும்பி, செருப்பை வாசலில் கழற்றும் போதே, கைகள்  செயினைக் கழற்றி முகம் பார்க்கும் கண்ணாடி மீது மாட்டும். மறுநாள் ஆபீஸ் போகும்போதுதான் அதை எடுத்து கழுத்தில் மாட்டுவேன்.. 
அதைப்பார்க்கும் என் அம்மா... "அது என்ன அவ்வளவு கனமாகவா இருக்குது? கழுத்தை இழுக்குதா? அது கழுத்தில் கிடந்தால் என்ன செய்யுது ?" என்பாள்.
"போம்மா.. வெளியில் போகும்போதாவது போட்டுக்கொண்டு போறேனேன்னு நினைச்சு சந்தோசப்படு.. இது மத்தவங்களுக்காக போடுற வேஷம். இது இல்லாமே போனால் நான் ரொம்பவும் வறுமையில் இருக்கிறதாக மத்தவங்க நினைச்சுக்குவாங்க.." என்பேன்.
நான் விரும்பி அணியும் ஒரே ஒரு ஆபரணம் மூக்குத்தி. மற்ற நகைகள் மீது ஆசை கிடையாது. இந்த செய்தியையும் உறவினரிடம் சொன்னேன்.
அது பற்றியே எங்கள் பேச்சு தொடர்ந்தது.
"சாப்பாடு இல்லாவிட்டால் நாம உயிர் வாழ முடியாது. பால் இல்லாமல் குழந்தைகள் உயிர் வாழ முடியாது. பெட்ரோல் இல்லாவிட்டால் எந்த வண்டியும் ஓடாது. ஆனால் வீட்டில் தங்கம் இல்லாவிட்டால் எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. யாரும் சாகப்போவது இல்லை." என்றேன்.
கீழே வருவது என்னுடைய எண்ணம். இதை நீங்கள் ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும் என்று எந்த கட்டாயமும் கிடையாது.
தங்கம் விலை ஏறுகிறதா ? ஏறட்டுமே .. அதை துரத்தி பிடிச்சு ஏன் வாங்கறீங்க?
பணத்தை போட்டு தங்கத்தை வாங்கிவிட்டு, அதை வீட்டில் வச்சாலும் பயம்.. கழுத்தில் போட்டுக்கொண்டு போவதும் பயம்... வங்கியில் பாதுகாப்பாக வைத்தால் அதற்கு பணம் கொடுக்க வேண்டும்.. இப்படி அதுக்கு அடிமையாக வாழ்வதைவிட அதை தூக்கி எறிஞ்சிட்டு நிம்மதியாக இருக்கலாமே.
திருமண ஒப்பந்தமாக இத்தனை பவுன் நகை போடுகிறோம் என்று அக்ரிமெண்ட் போடாமல், இத்தனை லட்சம் ரூபாய்  நகைக்குப் பதிலாக தருகிறோம். அதை கல்யாண தினத்தன்று பெண் - பிள்ளையின் பேரில் ஜாயிண்ட் அக்கவுண்ட்டில் போடுவோம் என்று டெர்ம்ஸ் அண்ட் கன்டிஷன்ஸ் பேசுங்க.
தாலிக்கு கூட தங்கம் தேவை இல்லை. ஆதி காலத்தில் மஞ்சள் தானே மாங்கல்யத்தின்  அடையாள சின்னமாக இருந்தது. இன்றைய நவநாகரீக காலத்தில் கூட மஞ்சள் கயிற்றில்தானே தாலி கோர்க்கப்படுகிறது. காலத்தின் கட்டாயத்தால் தங்கத்துக்குப் பதிலாக மஞ்சளையே திருமாங்கல்யமாக அணிந்து கொள்ளுங்கள். (உடை விஷயத்தில் ஆதி மனிதர்களை இன்றைய இளந்தலைமுறையில் 50 சதவிகிதம் பேர் பின்பற்றுகிறார்கள். திருமாங்கல்ய விஷயத்தில் ஆதி மனிதர்களையே  வயதில் முதிர்ச்சி பெற்ற நாமும் பின்பற்றலாமே.
விசேஷ வீடுகளுக்குப் போகும்போது தங்கம் போட்டுட்டு போனால்தான் மதிப்பாக இருக்கும்னு நினைக்கிறீங்களா ? நீங்கள் போட்டிருக்கிற நகையை வைத்துதான் உங்கள் உறவும் உங்கள்  நட்பும் உங்களை  மதிக்குமென்றால் அந்த விசேஷ வீடே எனக்கு வேண்டாம் என்று ஒதுக்கி வையுங்கள்.
எவ்வளவோ பிரச்னைகள். எல்லாவற்றிக்கும் உலகில் தீர்வு கிடைத்ததில்லை. ஆனால் இந்த தங்கம் விஷயத்தில் நாம ரொம்ப ஈஸியாக ஒரு முடிவுக்கு வரலாம். தங்கத்தின் விலை உயர்வை பற்றி தேவை இல்லாமல் அலட்டிக்காமல், அதை ஒதுக்கி வைத்துவிட்டு வாழ கற்றுக்கொள்வோமே. கொரானாவோடு சேர்ந்து வாழ பழகிக் கொண்ட நமக்கு தங்கம் இல்லாமல் வாழ்வது அப்படி என்ன இமாலய முயற்சியா? வாயைக்கட்டி வயித்தைக் கட்டி பைசா பைசாவாக சேர்த்து கால்பவுன், அரை பவுன் தங்கம் வாங்கி, அதை கஷ்டப்பட்டு பாதுகாப்பதற்குப் பதிலாக அந்த பணத்தை Fixed Deposit ல் போட்டு வைத்தால் பணம் பத்திரமாக இருக்கும். தேவைப்படும்போது எடுத்துக்கலாம். அந்த பணத்துக்கு வட்டியும் கிடைக்கும். அதுவே ஒரு சேவிங்ஸ்.
இப்படி எல்லாம் யோசிக்கிறதை விட்டுட்டு தங்கம் விலை அதிகமாயிட்டுன்னு ஏன் கூச்சல் போடறீங்க.?
இன்னொரு விஷயம் ... டீவியில் இப்போதெல்லாம் சர்வ சாதாரணமாக ஒளிபரப்பாகும் காட்சியும் செய்தியும்  தற்கொலைகள் பற்றித்தான்.
அதில்  அற்ப காரணங்களுக்காக  தற்கொலை செய்பவர்கள் தான் அதிகம். 
அந்த நினைப்பில் இருக்கிறவர்களுக்கு ஒரேயொரு வார்த்தை... உங்களை வாழ விடாமல் யாராவது துன்புறுத்த, அதனால் இந்த முடிவுக்கு வருகிறீர்களா ? ஆம் என்றால், உங்கள் பக்கம்தான் நியாயம் இருக்கிறது என்றால், யாரால் இந்த முடிவுக்கு வந்தீர்களோ, அவர்களை முதலில் அனுப்பி விட்டு, அப்புறம் நீங்கள் போங்க...All the Best.
நான் நினைச்சது கிடைக்கலே. வீட்டில் லிப்ஸ்டிக் வாங்கி தரலே.. மார்க் கொறஞ்சு போச்சு..  நான் கேட்ட படிப்புக்கு சீட் கிடைக்கலே.. காலேஜ் போய்வர வண்டி வாகனம் இல்லே... என்பது போன்ற அல்ப விஷயங்களுக்கு தற்கொலைதான் முடிவு என்று நினைப்பவர்களை யாரும் தடுக்காதீர்கள்.. இதுங்க உயிரோடு இருந்து எதையும் கிழிக்கப் போவதில்லை. அவர்களைத் தடுக்காதீர்கள். அவர்கள் மனம்போலவே விட்டு விடுங்கள்.
கைகள் நிறைய படிச்ச படிப்புக்கு செர்டிபிகேட்ஸ் வச்சுக்கிட்டு எந்த வேலையும் கிடைக்காமல் அவனவன் கூலி வேலை செஞ்சு பிழைக்கிறான். 
இயற்கை பேரிடர், மற்ற கலவரங்கள் காரணமாக உறவுகளை இழந்து விட்டு  யாரையும் குறை சொல்லாமல், அவனவன் தன்னைத்தானே தேற்றிக் கொண்டு வாழ்கிறான். அவர்களும் மனிதர்கள்தான். அப்படிப்பட்ட மனிதர்கள் உங்கள் கண்ணில் பட்டால் ஆறுதல் தேறுதல் சொல்லுங்கள்.  சீட் கிடைக்கலே, போன் இல்லே, வண்டி வாங்க பணம் இல்லே என்று "போக" நினைப்பவர்களுக்கு டாட்டா காட்டி அனுப்பி வையுங்கள்.
இதைப்படிக்கும் போது கோபம் வருதுதானே. கொஞ்சம் நிதானமாக சிந்தித்துப் பாருங்கள்.. உண்மை புரியும்.
வாழ்க்கையில் எல்லாமே எல்லாருக்கும் கிடைத்து விடாது. தேடுவது, கேட்பது எல்லாமே கிடைத்து விட்டால் வாழ்க்கை ருசிக்காது .. ரசிக்காது . உப்புசப்பில்லாமல் இருக்கும்.
தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசி இருக்கும். அதை "இன்னிசை பாடி வரும் இந்த காற்றுக்கு உருவமில்லை" என்கிற சினிமா பாடல் அழகாக கவிதை நயத்தோடு சொல்கிறது.