Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Thursday, August 27, 2020

திரும்பி வா.. ஒலியே திரும்பி வா

பின்னணி பாடகர் SPB கொரோனாவிலிருந்து மீண்டுவர எல்லாம் வல்ல இறைவனை வணங்குகிறேன். அவர் குறித்த ஒரு சம்பவத்தையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
சில / பல வருடங்களுக்கு முன் நாங்கள் பாரதிதாசன் குடியிருப்பில் இருந்த போது நடந்த சம்பவம் ஒன்று.
ஆபீஸிலிருந்து வீடு திரும்பிய நான், எங்கள் பிளாக் வாசலில் படகு கார் ஒன்று நிற்பதைப் பார்த்துவிட்டு, எனது டூ வீலரை எப்படி உள்ளே கொண்டு வருவது என்பது தெரியாமல் நின்று கொண்டிருந்தேன். ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த என் சகோதரியின் மகளிடம் " கார், யார் வீட்டுக்கு ? எப்போ கிளம்பும் ?" என்றேன்.
"அம்மா, அது   SPB கார். சினிமா ஷூட்டிங்  நடக்குது. அவர்  இவ்வளவு நேரம் இங்கேதான் இருந்தார். இப்பதான் பார்க் உள்ளே போனார்" என்றாள். 
என் டூ வீலரை வாசலில் ஓரங்கட்டிவிட்டு வீட்டுக்குள்ளே போய் ஜன்னல் வழியாக பார்த்தேன். எங்கள் வீட்டு ஜன்னலில் நின்று பார்த்தால் பார்க்கின் FULL VIEW கிடைக்கும்.  அங்கிருப்பவர்களும் எங்கள் வீட்டினர் நடமாட்டத்தை பார்க்க முடியும். அப்படி ஒரு அமைப்பு.
எங்கள் போர்ஷனில் குடியிருந்த ஒரு பையனிடம் (6 வயது சிறுவன்) காலண்டர் பேப்பர் ஒன்றைக் கிழித்துக் கொடுத்து "   SPB கிட்டே போய் இந்த பேப்பரில் கையெழுத்து வாங்கிட்டு வா " என்று அனுப்பினோம்.
(பையன் ரொம்பவும் களையாக NORTH INDIAN (CHILD) மாதிரி இருப்பான்.)
பையன் ஓடிப்போய் அவரிடம் பேப்பரை நீட்ட, SPB பேப்பரில் ஸைன் பண்ணி அவன் முதுகில் தட்டிக்கொடுத்து அனுப்பினார். பையன் அந்த பேப்பரை எங்களிடம் கொண்டு வந்து தர, இன்னொரு பேப்பரை கிழித்துக் கொடுத்து "இதிலே வாங்கிட்டு வா " என்று அனுப்பினோம்.
பையனும் ஓடினான். கையெழுத்தோடு திரும்பி வந்தான். திரும்பவும் அனுப்பினோம். "இப்பதானே வாங்கிட்டு வந்தேன் " என்றான். " அது அவளுக்கு.. இது எனக்கு... இன்னொன்னு பிரபுக்கு " என்று சொன்னோம்.
பையன் திரும்பவும் பார்க் பக்கம் போனான்.   SPB அருகில் நின்று கொண்டு பேப்பரை அவரிடம் நீட்டியபடி எங்களைப் பார்த்தான்.
"எதுக்கு இத்தனை ?" என்று அவர் கேட்க, இவன் ஜன்னலை பார்த்தபடியே "இது அண்ணாவுக்கு " என்று சொல்லும் போதே, இவன் பார்வை முழுக்க எங்கள் வீட்டு ஜன்னல் மீது இருக்க ,  SPB ஜன்னலைப் பார்த்தார். அங்கே எங்கள் தலை தெரியவும், சிரித்துக் கொண்டே, " தம்பி .. நீ இப்படி ஓடி ஓடி போய் வராதே.. மூச்சு வாங்குது பார். மெதுவாக வா. அந்த வீட்டில் இருக்கிறவங்களுக்கு  எத்தனை கையெழுத்து வேணுமோ அத்தனை யையும் போட்டுக் கொடுத்து விட்டுத்தான் நான் இந்த இடத்தை விட்டு போவேன். நீ போய் மொத்த காலண்டரையும் வாங்கிட்டு வந்துடு " என்று சொல்ல, பையன் அதை அப்படியே எங்களிடம் சொல்ல, அதோடு  நாங்கள் விளையாட்டை நிறுத்தி விட்டோம்.
சற்று நேரத்தில் ஷூட்டிங் ஆரம்பமானது. கொட்டும் மழையில், கையில் டார்ச் லைட்டை பிடித்தபடி மகனைத் தேடி  SPB போகும் காட்சி படமாக்கப்பட்டது. (எங்கள் பிளாக்கிலிருந்து மூன்றாவது பிளாக்கில்  SPB  வீடு -  கதைப்படி. படம் காதலன்.  SPB ன் மகன் பிரபு தேவா.)
செயற்கை மழையை சினிமாவுக்காக வர செய்வதை அப்போதுதான் நேரில் பார்த்தோம்.
எந்தவொரு பந்தாவும் இல்லாமல், ஒரு சிறு பையனிடம் அவர் நடந்து கொண்ட பக்குவம் எங்களுக்கு மிகவும் பிடிக்கும். மனிதர் மீண்டு வர வேண்டும்.
எங்கள் வீட்டு அருகிலும், அலுவலகம் அருகிலும் அடிக்கடி ஷூட்டிங் நடக்கும்.  அதை வேடிக்கை பார்க்க போகும் நாங்கள், வாயை மூடிக் கொண்டு சும்மா இராமல் அவர்களிடமே ஏதாவது கமெண்ட் அடிப்போம்.
ஒரு சிலர் சண்டைக்கு வருவார்கள். "ஓஹோ.. ஷூட்டிங் பார்க்க நிற்க கூடாது. படம் பார்க்க மட்டும் வரணுமாக்கும்? இந்த படம் பெட்டியை விட்டே வெளியே வராது " என்போம்.
இப்படி கமென்ட் அடிப்பது, சண்டை  போடுவது எல்லாமே எங்களைப் பொறுத்தவரை ஒரு ஜாலியான விளையாட்டு.
ஒரு ஷூட்டிங்கின் போது ஒருவர், "இது எங்களுக்கு பொழைப்பு, தெருவில் நிற்கிறோம்.. வெயிலில் காய்கிறோம். இது எங்களோட  தலை யெழுத்து. உங்களுக்கு இது தேவையா?" என்றார்.  
அந்த சமயம் அதையும் ஒரு விளையாட்டாகத்தான் நினைத்தோம். ரிலாக்ஸ்ட்டாக உட்கார்ந்து யோசித்தபோது அந்த வார்த்தைகளில் இருந்த வலி , வேதனை தெரிந்தது. அதன் பிறகு, ஷூட்டிங் நடப்பது தெரிந்தால், யார் வந்திருக்கிறார்கள் என்று எட்டிப்பார்ப்பதோடு சரி. எங்களை நாங்கள் திருத்திக் கொண்டோம்.
(இன்னொரு விஷயம் : கொரோனாவா என்ன ஏது என்பது தெரியாமலே மிக நெருங்கிய உறவில் இருவரை இழந்து விட்டோம். 10 நாட்கள் ட்ரீட்மெண்ட் எடுத்து (ரூபாய் 60,000/- ஆஸ்பத்திரிக்கு மொய்  எழுதிய பிறகு) என்னுடைய தம்பி வீடு திரும்பி, தற்போது தனிமையில் இருக்கிறார். அவர் வீடு வந்து சேரும்வரை எங்கள் மனஅழுத்தம் எப்படி இருந்தது என்பதை இறைவன் மட்டுமே அறிவான். எதோ பேருக்கு நடமாடிக் கொண்டிருந்தோம்.   SPB மட்டுமல்ல. இந்த கிருமியின் கோரப்பிடியில் சிக்கிய அனைவரும் நல்லபடியாக திரும்பி வர ஒவ்வொரு நொடியும் இறைவனை வேண்டிக்கொண்டே இருக்கிறோம்.

No comments:

Post a Comment