Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Saturday, December 31, 2011

"பணம் என்னடா பணம் பணம் !,குணம் தானடா நிரந்தரம்", என்றும், " பாசம் மட்டும் போதும் பெண்ணே காசு பணம் என்னத்துக்கு? " என்று சினிமாவிற்கு சிலர் பாட்டெழுதியது, பாடியது, நடித்தது எல்லாமே பணத்துக்காகத்தான்.



பணக்காரனாக வேண்டுமா ? அதற்கு செல்வத்தை குவிக்க வேண்டிய அவசியமில்லை! தேவைகளைக் குறைத்துக்கொண்டாலே போதும்.


முட்டாள் மேலும் மேலும் பணத்தை தேடிக் கொண்டிருப்பான். அறிவாளி, இருக்கும் கொஞ்ச பணத்தையும் அனுபவித்துக் கொண்டிருப்பான்.

பானையில்  சோறிருக்கும்வரை, கூரையில் காக்கை கூட்டத்திற்கு குறைவில்லை. கையில் பணமிருக்கும் வரை, உறவு கூட்டத்திற்கும் பஞ்சமில்லை.



*  பணக்காரனின் ஜலதோஷம் ஊருக்கெல்லாம் தெரிய வரும். ஏழை இறந்துபோனால் கூட யாருக்கும் தெரியாது.




* பணம் என்ற பாஸ்போர்ட் உங்கள் கையில் இருக்குமானால் சொர்க்கத்துக்குகூட வெகு சுலபமாக சென்று விடலாம்.




*கண்ணில் பட்ட பொருளை எல்லாம் வாங்கும் பழக்கமானது, முடிவில் தேவையான பொருளைக் கூட விற்கும் நிலைக்கு கொண்டு போய் விட்டு விடும்.



பிறக்கும்போது மூடிய கைகளோடு பிறக்கிறோம். இறக்கும்போது திறந்த கைகளோடு போகப்போகிறோம். இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் நமக்கு கிடைப்பது எல்லாமே லாபந்தான்.






*  ஒண்ணுந்தெரியா ஆளானாலும் பணம்  இருந்தாலே, அவனை உயர்த்தி பேச மனிதர் கூட்டம் என்றும் தப்பாதே ! என்ன அறிவு இருந்திட்டாலும் பணமில்லாத ஆளை, ஒரு    மனிதனாக உலகம்   என்றும்    மதிக்க மாட்டாதே.



கருவறையிலிருந்து வெளிவருவது முதல் கல்லறைக்குள் போய் அடங்குவதுவரை, சில்லறையை வெட்டினால்தான், எந்த ஒரு காரியமும் நடக்கும் என்பது எழுதாத நீதியாகி விட்டது.!.



பணம் இருந்தால் உன்னை உனக்கு தெரியாது. பணமில்லாவிட்டால் உன்னை யாருக்குமே தெரியாது.








பணத்தை சேமிப்பதென்பது, குண்டூசியால் பள்ளம் தோண்டுவதை போன்றது. பணத்தை செலவழிப்பதென்பது, குண்டூசியால் பலூனை உடைப்பது போன்றது !

Friday, December 30, 2011

Scanning of Inner- Heart ( மனதின் மறு பக்கம் ) - Scan Report No: 5

                                                                    
            நண்பேண்டா!! 
            நம்பேண்டா !!


"டேய், கோபி நான் உன் நண்பன்தானே " என்று கேட்டான் சரவணன் கோபமாக.
"அதிலேன்னடா சந்தேகம் ?" என்று எதிர் கேள்வி கேட்டான் கோபி.
"அப்படின்னா நீயும் ராஜுவும் ரொம்ப நேரமா ரகசியமா என்ன பேசிட்டு இருந்தீங்கனு சொல்லு"
"அது உனக்கு தேவையில்லாத விசயம்டா.உனக்கு தெரியனும்னு நினச்சிருந்தா ராஜூ உன்னையும் கூட வச்சிட்டுதானே பேசியிருப்பான்.  அதை செய்யலே. அப்படின்னா அதை கண்டுக்காமே ஒதுங்கிகிறதுதான் நாகரீகம் " என்றான் கோபி.
 "ஆமாம், நாகரீகம். பொல்லாத நாகரீகம். நண்பனிடம் எதையும் மறைப்பதுதான் நாகரீகமா?"
"கோபபடாதே சரவணா. நாம என்னதான் நண்பர்களா இருந்தாலும் ஒருசில விஷயம் எல்லாருக்கும் தெரிய வேண்டாம்னு நினைப்போம்தானே? அப்படி ஒரு விசயத்தைதான் நாங்க பேசினோம்னு நினைச்சுகோயேன்."
"போடா. உன்னை எல்லாம் நண்பன்னு சொல்லிக்கவே எனக்கு வெட்கமா இருக்கு" என்றான் சரவணன் வெறுப்பாக.
"அப்படின்னா சொல்லிக்காதே " என்றான் கோபி சர்வ சாதாரணமாக.
"விளையாடாதேடா. என்னதான் சொன்னான் அவன் ?"
"எதையோ சொன்னான்"
"பார்த்தியா, இதுதானே வேண்டாங்கிறது. என்ன பேசிட்டு இருந்தீங்க ? ஸ்கூல் மேடரா ?" என்று கேட்டான் சரவணன் ஆர்வமாக.
"இருக்கலாம் "
"நம்மோட மத்த ப்ரண்ட்ஸ் பத்தின மேட்டரா ?"
"இருக்கலாம் "
"ஒருவேளை அவங்க வீட்டு விசயமா?"
"இருக்கலாம் "
"என்னடா நீ! எதை கேட்டாலும் இருக்கலாம் இருக்கலாம்னே பதில் சொல்றே. சீரியஸா கேட்கிறேன். விளையாடாமே பதில் சொல்லுடா."
"சரி சொல்றேன். நீ அதை யாரிடமும் சொல்ல மாட்டேதானே?"
"கண்டிப்பா சொல்ல மாட்டேன்"
"உனக்குன்னு தனியா ஒரு ப்ரண்ட்ஸ் சர்கிள் இருக்குமே . அவங்க கிட்டே ?"
"சொல்ல மாட்டேன்"
"நம்ம டீச்சேர்ஸ் யாராவது உன்னை அடிச்சு கேட்டா?"
"அப்பவும் சொல்லமாட்டேன்"
"உங்க வீட்டிலே இருக்கிறவங்ககிட்டே?"
" அட, உயிரே போனாலும் யாரிடமும் சொல்ல மாட்டேன். நீ பீடிகை எல்லாம் போடாமே விசயத்துக்கு வாடா " என்றான் சரவணன் எரிச்சலுடன்.
" அடேயப்பா. உயிரே போவதாயிருந்தாலுங்கூட நான் சொல்றதை நீ யாரிடமும் சொல்ல மாட்டே. அப்படிதானே?"
"ஆமாம்டா"
"அப்படி நம்பிதானே ராஜூ ஒரு விஷயத்தை, அது பைசா பெறாத விசயமாகவே இருக்கட்டும், அதை  என்கிட்டே சொல்லியிருப்பான். அதை எல்லோரிடமும் நான் சொல்லனும்னு நீ ஏன் எதிர்பார்க்கிறே?" என்று கேட்டான் கோபி அமைதியாக..
இதை கேட்டதும் சிறிது நேரம் அமைதியாக இருந்த சரவணன், " சாரிடா. நீதான் உண்மையான நண்பன். உனக்கு நண்பனா இருப்பதில் எனக்குத்தான்டா பெருமை. இனிமே நான்கூட நண்பர்களோட நம்பிக்கைக்கு ஏற்ற ஆளா இருப்பேன். " என்றான்.
"தட்ஸ் குட். அதுதான் நாம ப்ரண்ட்ஸ்க்கு குடுக்கிற மரியாதை! வா போகலாம் "

Sunday, December 25, 2011

Scanning of Inner- Heart ( மனதின் மறு பக்கம் ) - Scan Report No: 3

                                      இனி குறையொன்றும் இல்லை !

மன்னனாக முடிசூட்டிக்கொண்ட பிறகு சந்திர வர்மன் கொண்டாடும் முதல் பிறந்த நாள் என்பதால் நாடே திருவிழா கோலம் பூண்டிருந்தது. நாடு முழுக்க கொண்டாட்டம் கும்மாளம்தான். ஒருநாளும் இல்லாத திருநாளாக, மன்னன் அன்று ராஜபவனி வர இருப்பதாக தெரிந்ததும் அலங்கார வளைவுகளுக்கும் ஆர்ப்பாட்டங்களுக்கும் கொஞ்சமும் குறைவில்லை. ஊர்வலம் வர இருக்கும் முக்கிய வீதிகள் மேடைகள் அமைத்து தங்கள் திறமையை காட்ட தயாராக இருக்கும் கலைஞர்கள் ஒருபுறமும், அங்கு நடக்க இருக்கும் வேடிக்கை விநோதங்களை காண்பதற்காக அக்கம் பக்கத்து ஊர்களிலிருந்து மட்டுமல்லாமல் அக்கம் பக்கத்துக்கு நாடுகளிலிருந்தும் மக்கள் வந்து குவிந்து விட்டதால்,  எங்கும் ஜன நெருக்கடிதான் தெரிந்தது.
வெகு நேரமாகியும் மன்னரின் ரதம் காணப்படாததால் மக்களின் ஆர்வம் படிப்படியாக குறைந்து, விரக்தியாக மாறி, வெறுப்பாக விஸ்வரூபம் எடுத்து உருமாறிக்கொண்டிருந்தது.  தாமதத்துக்கான காரணம் யாருக்கும் சரியாக தெரியவில்லை என்றாலும், அவரவர்களுக்கு மனதில் தோன்றிய காரணத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டிருந்தார்கள். கூட்டம் அதிகமாக இருந்ததால் போக்குவரத்து தடைப்பட்டது. அதனால் வீட்டுக்கு திரும்ப நினைத்தவர்கள்கூட, வேறு வழியில்லாமல் நின்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருந்தார்கள்.  நேரம் உச்சிப்பொழுதை நெருங்கிக்கொண்டிருந்தபோது பறையொலி  எழுந்து மன்னர் வந்து கொண்டிருக்கிறார் என்பதை அறிவித்ததும் "அப்பாடா" என்ற ஆயாச பெருமூச்சு அனைவரிடமிருந்தும் கிளம்பியது. மன்னரை வரவேற்க மக்கள் தயாரானார்கள்.  ரதத்தில்   மன்னரை பார்த்ததும் குலவையிட்டு தங்கள் சந்தோசத்தை தெரிவித்துக்  கொண்டாலும் , உடலளவிலும் மனதளவிலும் மக்கள் அனைவருமே சோர்ந்து போயிருந்தார்கள்.
வாழ்த்தொலிகளுக்கு நடுவே எழுந்த   " மன்னா ஒரு நிமிடம் " என்ற குரலைக் கேட்டு குரல் வந்த திசையில் தன் பார்வையை படரவிட்டான் சந்த்ரவர்மன்.
கூட்டத்திலிருந்து முண்டியடித்துக்கொண்டு வெளியில் வந்த வயதான முதியவர் ஒருவர் மன்னர் அருகில் வந்து, " மன்னா, இந்த ஏழை சொல்வதை சற்று காது கொடுத்து கேட்கவேண்டும்" என்றார் பணிவாக.
"சொல்லுங்கள் பெரியவரே!" என்றான் சந்திரவர்மன், அவரைவிடவும் பணிவாக.
"மன்னா, உனது பிறந்தநாள் எங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி தரக்கூடியதுதான். அதை நீ ஏதாவது ஒரு பொது இடத்திலோ அல்லது உனது அரண்மனையிலோ நீ கொண்டாடி இருக்கலாம். கடலளவு கூட்டம் வந்தாலும் தாங்கக்கூடியதல்லவா உனது அரண்மனை. நீயாக வந்து மக்களை சந்திப்பது நல்ல விசயந்தான். ஆனால் அதனால் ஏற்பட்ட ஜன நெரிசலை பார்த்தாயா?  வயலில் நாற்று நட்டு விட்டு வந்து குழந்தைகளுக்கு உணவளிக்கலாம் என்று நினைத்து வயல் வேலைக்கு கிளம்பி வந்த தாய்மார்கள் இன்னும் வயலுக்கே செல்லமுடியாமல் கூட்டத்தில் மாட்டிக்கொண்டிருக்கிரார்கள். இனி இவர்கள் எப்போது வயலுக்கு போவது? எப்போது வயல் வேலையை முடிப்பது ? எப்போது குழந்தைகளுக்கு உணவளிப்பது ? ஒரு சில வேலைகளை அந்தந்த நேரத்திலேயே செய்து முடிக்க வேண்டிய கட்டாயத்தில்  மக்கள் இருக்கிறார்கள் என்பது நீ அறியாத ஒன்றா ?  சரி எங்களை விடு. அதோ பார் அதிகாலையில் மேய்ச்சலுக்கு கிளம்பிய ஆடு மாடுகள் கூட மேய்ச்சல் நிலத்திற்கு போக முடியாமல் நிற்கின்றதே. மன்னா, எங்களுக்கு தெரியும், என்ன காரணத்தினால் பாதை தடை பட்டது என்பதும் இன்னும் சற்று நேரத்தில் அது சரியாகிவிடும் என்பதும். ஆனால் அந்த வாயற்ற ஜீவன்களுக்கு அது தெரியாதே மன்னா. உனது பிறந்த நாளில் வாயற்ற ஜீவன்கள் பட்டினி கிடப்பது உனக்கு அழகல்லவே. " என்றார் பெரியவர்.
"பெரியவரே. என்னுடைய தப்பை உணர்ந்தேன். அரண்மனையில் எனக்கு வாழ்த்து சொல்வதற்காக வந்த புலவர் பெருமக்களிடம் நான் உரையாடிக்கொண்டிருந்ததால் நேரம் போனது தெரியவில்லை. இதே போன்ற தவறு இனியொருமுறை நடக்காதபடி பார்த்துக்கொள்வது என்னுடைய கடமை. இனி என்னுடைய வருகையால், பாதைகள் அடைபட்டு போகாது. பெரியவரே. அரண்மனையில் எனது புகழ் பாட ஆயிரக்கணக்கானோர் இருக்கிறார்கள். ஆனால் எனது தவறை, என்னையறியாமலே நான் செய்யும் தவறை சுட்டிக்காட்ட யாருமே இல்லை. இனி அந்த பொறுப்பை தாங்கள்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும்" என்று மன்னன் சொல்ல, "மன்னா, உன் சித்தம் அதுவானால், அது என் பாக்கியம்" என்று பெரியவர் சொல்ல, "இப்படியொரு மன்னர் கிடைத்தது நாங்கள் செய்த பாக்கியந்தான் !" என்று மக்கள் உற்சாக குரல் எழுப்ப, அங்கே ஒரே கொண்டாட்டம் கும்மாளந்தான்.   

Saturday, December 24, 2011

Scanning of Inner- Heart ( மனதின் மறு பக்கம் ) - Scan Report No: 2

                         
              " வலி " என்பது பொதுவுடைமை !

தன்னைப்பிடித்து யாரோ உலுக்குவது போன்ற உணர்வு வந்ததும் சுயநிலைக்கு வந்த பாலா, தன் மீது ஆச்சரியகுறியை வீசியபடி நின்று கொண்டிருந்த சிறுவனைப் பார்த்ததும் "என்ன தம்பி ?" என்றான் .
"அங்கிள், சிகரெட் முழுக்க எரிஞ்சு போச்சே. உங்களுக்கு கை சுடவே இல்லையா ?"
அப்போதுதான் கையை கவனித்த பாலா, கை விரல்களை உதறியபடி, விரல் நுனியில் துகளாய் ஒட்டியிருந்த சாம்பலை துடைத்தான்,
"அங்கிள், பப்ளிக் பிளேசில் சிகரெட் பிடிக்ககூடாதுன்னு T .V யிலே சொன்னாங்களே ?"
 "சாரிப்பா. மறந்துட்டேன்.  உன் பேர் என்னப்பா ?"
" சரவணன்"
"இங்கே ... எப்படி ... யாரோடு வந்தே ?"
"அங்கிள், எனக்கு தங்கச்சி பாப்பா பிறக்க போகுது. அம்மா உள்ளே இருக்காங்க. அப்பாவுந்தான். என்னை சமர்த்தா மரத்தடியில் விளையாட்டிட்டு     இருக்கணும்னு  சொல்லி இருக்கார் அப்பா. தங்கச்சி பாப்பா அம்மா வயிதிலேயிருந்து வெளியே வந்து "அண்ணா எங்கேனு  கேட்குமாம். அப்பத்தான் நான் போய் பார்க்கணுமாம். அங்கிள் நீங்க இங்கே இருக்கீங்களே. உங்களுக்கும் தங்கச்சி பாப்பா வரப்போகுதா ?"
"தங்கச்சி பாப்பா இல்லே. குழந்தை பிறக்கபோகுது "
"அங்கிள் "
"இதோ பாரு தம்பி, தொந்தரவு பண்ணாமே சமர்த்தா அங்கே போய் விளையாடு' என்றான் பாலா எரிச்சலுடன்.
வேறொரு சமயமாக இருந்திருந்தால் அந்த சிறுவனை தூக்கி உச்சி முகர்ந்து முத்தமிட்டிருப்பான்.  அவன் கவலை எல்லாம் லேபர் வார்டுக்குள் போன மனைவி எப்படி இருக்கிறாளோ ? டெலிவரி ஆக இன்னும் எவ்வளவு நேரமாகுமோ தெரியலையே என்பதுதான்.  லேபர் வார்டு அருகிலேயே நிற்கும் மாமனார் மாமியாரை பார்க்கும்போது எரிச்சல் பற்றிக்கொண்டு வந்தது பாலாவிற்கு.  பிரைவேட் கிளினிக்கில் சேர்க்கலாம் என்று எவ்வளவோ சொல்லிப்பார்த்தான்.
" மாப்பிள்ளே, அழுதாலும் பிள்ளை அவள்தான் பெறணும். பிரைவேட் ஆஸ்பத்திரிலே  பணத்துக்கு ஆசைப்பட்டு நார்மல் டெலிவரியைக்கூட சிசேரியன்  ஆக்கிடுவாங்க. அதை சினிமா படத்திலே வேறு காட்டியிருக்காங்க.  இது தெரிஞ்சும் நாம அதுலே போய் விழணுமா என்ன ?  என்ன, கவர்மென்ட் ஆஸ்பத்திரியிலே சுத்தபத்தம் போதாது.  மூக்கை பிடிச்சிட்டு ஒரு மூணு நாளை ஓட்டிட்டு வந்திடோம்னா  பணம் மிச்சமாகுமே. பிரைவேட் ஆஸ்பத்திரியில் அழுற தண்ட செலவு  மிச்சமானா அந்த பணத்துக்கு சத்தான மருந்து மாத்திரை வாங்கி கொடுத்து என் பொண்ணோட உடம்பை மட்டுமில்லே,  உங்களுக்கு பிறக்க போகிற குழந்தை உடம்பையும் சேர்த்தே தேத்திடலாமே" என்று சொல்லி அவன் வாயை அடைத்து விட்டார்கள் இருவரும். வாயை மூடிக்கொண்டிருந்தது தன்னோட தப்புதானோ என்ற வருத்தம் ஏற்பட்டது பாலாவிற்கு.
பிரைவேட் கிளினிக்கில் கை நீட்டி வாங்குகிற பணத்துக்காகவாவது மனுசனை மனுசனா நினச்சு பதில் சொல்வாங்க. இங்கே மனுசங்க தவிப்பு புரியாமே, எதாவது கேட்டா நாயை  விரட்டுற மாதிரி விரட்டறாங்க. வார்டு பாய் கூட டாக்டர் மாதிரியான தோரணையில் பேசுகிறான்.  ச்சே. உள்ளே என்ன நடக்குதுனே தெரியலே. மஞ்சு எப்படி இருக்கிறாளோ தெரியலியே என்ற தவிப்பில் இருந்தான்.
விறுவிறுன்னு உள்ளே போய் எட்டி பார்த்துட்டு வந்திடலாமா ?  நான் உள்ளே போறதா பார்த்தா வாட்ச்மேன்  அடிக்க வருவான். அதிக பட்சம் போலீசில் ஹான்ட் ஓவர் பண்ணுவாங்க. அவ்வளவுதானே ? போய் பார்த்து விட்டு நிலைமை மோசமாக இருந்தால் பிரைவேட் கிளினிக்கில் அட்மிட் பண்ணிடலாமா  என்று மனம் யோசித்தது.
லேபர் வார்டில் பிரசவ வழியில் துடித்து கொண்டிருந்த மஞ்சு சுற்றுமுற்றும் பார்த்தாள். அறையில் யாருமே இல்லை. தலைச்சன் பிள்ளை, மெதுவாகத்தான் பிறக்கும் என்று சொல்லி இன்ஜெக்சன் போட்டு விட்டு போன நர்ஸ், அரைமணி நேரம் கழிந்த பிறகும்கூட அறைக்குள் வந்து எட்டிப் பார்க்கவில்லை.
கடவுளே பாலாவிற்கு தைரியம் கொடு என்று மனது பிரார்த்தித்தது.  வலியில் துடிதுடித்தே செத்து போய் விடுவோமோ என்ற பயம் மனதுக்குள் எழுந்தது.
ச்சே,  ச்சே, அப்படியெல்லாம் எதுவும் ஆகாது. இந்த உலகத்தின் ஜனத்தொகை கோடானு கோடி. அத்தனை பேரும் யாரோ ஒரு சிலரின் வலியில்தானே பிறந்திருக்கிறார்கள் என்று அறிவு தைரியம் சொன்னது.
அறைக்குள் யாரோ வரும் காலடி ஓசை கேட்டது. நெஞ்சு வரை வந்த  வலியை  பொறுத்துக்கொண்டு தலையை நிமிர்த்தி வாசலை பார்த்தாள். கையில் பேசினோடு ஆயா ஒருத்தி உள்ளே வந்தாள்.
"அம்மா இங்கே வாங்களேன்" என்று ஈனஸ்வரத்தில் முனகினாள்.
"பேசாமே படுத்திரும்மா. டாக்டரம்மா வந்து பார்ப்பாங்க . பொறுத்துக்கோ "
"அதில்லேம்மா " என்ற மஞ்சு , அருகில் வரும்படி ஆயாவை சைகை காட்டி அழைத்தாள்.
"என்னம்மா, சட்னு சொல்லு. டாக்டரம்மா வந்தா கன்னாபின்னான்னு கத்தும்." என்றபடி அருகில் வந்தாள் ஆயா.
"எனக்கொரு உதவி பண்ணனும்மா. வெளியே என் ஹஸ்பென்ட் நிற்பார். பேரு பாலா. அவர்ட்ட போய் எனக்கு இன்னும் பிரசவ  வலி வரலே. சும்மாதான் பெட்டில் படுத்திருக்கிறேன். வலி வர இன்னும் அஞ்சாறு மணி நேரம் ஆகும். நான் நல்லா இருக்கிறேன்னு சொல்லணும்." என்றாள் மஞ்சு மெல்லிய குரலில்.
"நல்ல பொண்ணும்மா நீ. உயிர் போற அவஸ்தையில் துடிச்சிட்டு இருக்கிறே. இன்னும் வலி வரலேன்னு போய் சொல்ல சொல்றே?" என்று வியந்தாள் ஆயா.
"அம்மா நான் பிரசவ வழியில் துடிச்சுகிட்டு இருக்கிறேன். நான் எப்படி இருக்கிறேனோ தெரியலியேனு என் ஹஸ்பென்ட் மனசுக்குள் துடிச்சு கிட்டு இருப்பார். நான் உடலில் அனுபவிக்கிற நரக வேதனையை என் ஹஸ்பென்ட் மனசுக்குள் அனுபவிச்சிட்டு இருப்பார்.  வலிங்கிறது ரெண்டு பேருக்கும் பொதுவானதுதானே. என் வலிக்கு மருந்து மாத்திரை இருக்கு. ஆனா என்னதான் தைரியம் சொன்னாலும் என்னையும் குழந்தையையும் கண்ணாலே பார்கிறவரை அவர் வேதனை பட்டுட்டு இருப்பார்.  எனக்கு இன்னும் வலியே வரலைன்னு தெரிஞ்சா கொஞ்ச நேரமாவது அமைதியா இருப்பார். அதற்குள் குழந்தை பிறந்திட்டா அந்த சேதியை அவரிடம் சொல்லிடலாம்.  கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்கம்மா " என்றாள் மஞ்சு திக்கி திணறியபடி.
"வயித்து சுமையோடு அவஸ்தை படும்போதுகூட உன்னை பத்தி கவலைபடாமே உன் புருசனைபத்தி கவலை படுதியே.  உன்னை கட்டிகிட்டவன் கொடுத்து வச்சவன்தான்",
"அம்மா இந்த சுமை பத்து மாச சுமைதான். இன்னும் கொஞ்ச நேரத்தில் இந்த பாரம் இறங்கிடும். ஆனா என்னையும் குழந்தையையும் காலம் பூராவும் சுமக்க போறவர் அவர்தானேம்மா!" என்று முனகிய குரலில் சொன்னாள் மஞ்சு.
"ஹும். பேறுகால நேரத்தில் புருஷனை ஏசுற பொம்பளைகளை பார்த்திருக்கிறேன். நீ என்னடான்னா அவன் மனசு படுற வேதனையை நினைச்சு வேதனை பட்டுட்டு இருக்கிறே. உன்னை போலவே எல்லா பொம்பளைகளும் இருந்துட்டா, வீட்டுக்குள் சண்டை சச்சரவு எதுவும் இருக்காது. வீடும் நாடும் நல்லா இருக்கும். அவன் பேர் என்னனு சொன்னே. பாலாதானே? நீ சொன்ன மாதிரியே சொல்லிடுதேன் கண்ணு. நீ தைரியமா இரு " என்று சொல்லிவிட்டு அறையை விட்டு வெளியேறிய ஆயாவை மனநிறைவோடு பார்த்தாள் மஞ்சு.


வாழ்ந்திட சொல்லுகிறேன். உங்களை வாழ்த்தியே சொல்லுகிறேன். இங்கு தாழ்வதும், தாழ்ந்து வீழ்வதும் உமக்கு தலையெழுத்தென்றால் உம்மை தாங்கிட நாதியுண்டோ ?


தெரியாத தேவதையை விட தெரிந்த பிசாசு எவ்வளவோ மேல் .

*  ஒரு கப்பல் கவிழ்ந்த பிறகு, அதை எந்தெந்த வழிகளிலெல்லாம் காப்பாற்றி இருக்க முடியுமென்று யோசனை சொல்ல எல்லோராலும் முடியும் !

பகைவனென்று யாரையும் ஒதுக்கிவிட வேண்டாம். நண்பனென்று யாரிடமும்  உங்களை  முழுமையாக ஒப்படைக்க வேண்டாம்.  கால போக்கில் பகைவன் நண்பனாகலாம். நண்பன் பகைவனாக மாறலாம்.







*  மனம் ஒரு நல்ல வேலைக்காரன் ; ஆனால் மோசமான எஜமான் !



*  தண்ணீரைக்கூட சல்லடையில் எடுத்துக் கொண்டு  வர முடியும். அது பனிக்கட்டியாக மாறும்வரை காத்திருக்கும் பொறுமை உங்களுக்கு இருக்குமானால் !!




*  சூதுக்கும் ஏமாளிதனத்துக்கும் நடுவில் நியாயத்தின் குரல்வளை நெரிக்கப்படுகிறது. 






*  செயல்பாட்டிற்கு முன்பே  வெற்றி வருவது ஆங்கில அகராதியில் மட்டுமே. 
( Victory  - Work  )





*  அறிஞர்கள், அலசி ஆராய அச்சப்படும் விஷயங்களில், முட்டாள்கள் முழுமூச்சுடன்  ஈடுபடுவார்கள்.  







*  இணைக்கும் பாலங்களை காட்டுங்கள். பிரிக்கும் மதிற்சுவர்களை கட்டாதீர்கள். 


யாரையாவது புகழ வேண்டுமானால் நாலு பேர் 
  முன்னிலையில் புகழுங்கள். கண்டிக்க வேண்டு  மானால்  தனியே அழைத்து கண்டியுங்கள்.  துரதிர்ஷ்ட வசமாக  நம்மில்  எல்லோருமே இதை தலை கீழாகத்தான்   செய்கிறோம்..   





நண்பனின் யோக்கியதையை நீண்ட பயணத்தில் அறியலாம்.!.
                         

Friday, December 23, 2011

Scanning of Inner- Heart ( மனதின் மறு பக்கம் ) - Scan Report No: 4

           


அழுக்கு வேஷ்டி சாமியாரும் துறவும் !

புள்ளைகளா, ராமாயாணம் படிச்சிருப்பீகதானே ? என்னளா இது, இப்படி திடுதிப்புன்னு கேட்குதாளே இந்த கோமதி ஆச்சி, இவ ரொம்ப குசும்பு பிடிச்சவளா இருப்பா போலிருக்கேன்னு நெனச்சிறாதீக.  நான் சொல்ல வந்த சங்கதிக்கும் ராமாயானதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லே. நானு அந்த காலத்து அஞ்சாம் கிளாஸ். எங்க வீட்டு ஐயா தமிழ் வாத்தியாரு. அவக போய் சேர்ந்து ரொம்ப காலம் ஆச்சு. சில நாளு, ராத்தூக்கம் பிடிக்காமே நானும் எங்க  வீட்டு ஐயாவும் விடியற வரை கொட்ட கொட்ட முழிசிட்டுருப்போம். பொழுது போய் தொலையனுமேனு எதையாவது பேசிகிட்டே இருப்போம். அப்பல்லாம் எங்க வீட்டு ஐயா ராமாயாணத்த பத்திதான் பேசிட்டே இருப்பாக.  பாதி கேட்டுட்டுருக்கும்போதே பாவி மக தூங்கி தொலைச்சிருவேன். வாய் மட்டும் "உம்" கொட்டிட்டே இருக்கும் . 
எதுக்கெடுத்தாலும் எங்க வீட்டு ஐயா ராமாயணம் கதையை உதாரணம் காமிச்சுதான் பேசுவாக. அந்த பழக்கம் என்கிட்டேயும் தொத்திகிட்டுது. 
நம்ம ராமன் காட்டுக்கு போறத பத்தி கம்பர் ஐயா என்ன சொல்லுதாகன்னு தெரியுமா? ராமன் போறத பத்தி சங்கடப்பட்டு கிளி அழுதுச்சு, பூ அழுதுச்சு, பூனை அழுதுச்சு. தாய் வயத்திலே, கருவிலே இருந்த புள்ளைகூட அழுதுசுனு ஒவ்வொன்னா வரிசையா பட்டியல் போட்டுருப்பாக. ஆனா, ராமன்,திரும்பவும் நாட்டுக்குள்ளே வர்றத பத்தி சொல்லும்போது, கிளி சிரிச்சிது, பூ சிரிச்சிது, பூனை சிரிச்சுது, புள்ளை சிரிசிதுன்னு சொல்லாமே, ராமன் காட்டுக்கு போறத நினச்சு யாருல்லாம் சங்கட பட்டாகளோ அவக எல்லோரும் சந்தோஷ பட்டாகணு ஒத்த வார்த்தையிலே முடிச்சிருப்பாக.
அந்தமாரி (அந்த மாதிரி ) "அழுக்கு வேஷ்டி சாமியார்" யாரு, எங்கிட்டுருந்து வந்தாக, அவகளுக்கு இங்கிட்டு என்ன ஜோலின்னு நினச்சு கொஞ்சமும் கவலைப்படாத இந்த ஊர் ஜனம் அத்தனை பேரும்,  சாமி ஏன் இப்படி எதுவுமே பேசாத மௌன சாமியா ஆயிட்டாகனு நினைச்சு மனசு சங்கட படுதாக. அவக சங்கடம் அம்புட்டு இம்புட்டுன்னு இல்லே; அதை சொல்ல வாய் வார்த்தையும் இல்லே.கொஞ்ச நாளைக்கு முன்னமே தான், சரியா சொல்லனும்னா, ஒரு ஏழெட்டு மாசம் முன்னே தான் சாமி இந்த ஊருக்கு வந்தாக. அவக தாடி மீசை, அழுக்கு வேஷ்டி இத எல்லாம் பார்த்துட்டு இந்த ஊர் பொம்பளைக  அவகளை கோட்டிக்கார பயனு நினச்சு பயந்து ஒதுங்கி போனாக,; அதுக்கு பிறகு ஜனம் அத்தனையும் அவகளை  "அழுக்கு வேஷ்டி சாமி"ன்னு அடைமொழி வச்சே சொல்ல ஆரம்பிச்சாக. ஆம்பிளைக யாரும் சாமிய ஒரு பெரிய விசயமாவே நினைக்கலே. அவக அவக மனசிலே ஆயிரத்தெட்டு கவலை. அதனாலே அவக யாரும் சாமிய பத்தி கவலை படலே. இந்த ஊரிலேருக்கிற ஒன்னு ரெண்டு துணிஞ்ச பொம்பளைகதான் சாமி கிட்டே போய், அவக யாரு, எவருனு விவரம் கேட்டாக.
"சொல்லுத அளவுக்கு எதுவுமே இல்லை. வடக்கே பூரா சுத்தி அலைஞ்சிட்டு இங்கிட்டு வந்திட்டதா சாமி சொன்னாக. இங்கிட்டுருக்கிற பொம்பளைக சாமிகிட்டே போய் பேசிறத பார்த்த இங்கிட்டுருக்கிற விடலை புள்ளைக, "ஊர் உலகத்திலே அழுக்கு வேஷ்டி கட்டிட்டு ஒருத்தன் வெளியே  நடமாடிடக்கூடாதே. உடனே அம்புட்டு பொம்பளைகளும் "சாமி'ன்னு சொல்லி அவன் கால்லே விழுந்துருவீகளே. உங்க காதிலே கழுத்திலே கிடக்கிறத அவன் அறுத்துட்டு ஓடறவரை "சாமி சாமி"ன்னு அவன் பின்னாலேதானே சுத்துவீக"னு  கேலி பேசுச்சுக;  "அழுக்கு வேஷ்டி சாமியார்"ன்னு அடைமொழி கொடுத்து பேசின விடலைகல்லாம்கூட நாளாக நாளாக சாமி பக்கம் வர ஆரம்பிசிட்டுக.  பொழுது போகாத நேரத்திலே சாமிகூட உக்கார்ந்து கதை பேச ஆரம்பிசுதுக.
பெரியவக சின்னவக, இருக்கிறவக இல்லாதவங்க என்கிற வேத்துமை இல்லாமே சாமி எல்லாரு கிட்டேயும் சரிசமமாதான் பேசி பழகினாக. குடுத்த வேலையை செஞ்சாக. போட்ட சோத்தை தின்னாக. நோய் கண்டவகளை கண்டுபிட்டா மருந்து சொன்னாக. சாமியை இங்கிட்டு எல்லாத்துக்குமே ரொம்பவுமே பிடிச்சு போச்சு. பௌர்ணமி நாள்லே ஆத்தோரம் உக்கார்ந்து கதை எல்லாம் சொன்னாக. சாமி எப்பவுமே கலகலப்பா இருக்கும். அதனாலேயே அவைகளை அம்புட்டு பேருக்கும் பிடிச்சு போச்சு. எங்க வீட்டு ஐயா மாதிரியே சாமியும் விஷயம் தெரிஞ்ச ஆளுதான்.  புராண கதையாகட்டும்; இன்னிக்கு நடக்கிற சினிமா கதையாகட்டும்; எல்லாத்தையுமே சாமி புட்டு புட்டு வச்சிடும். ஆனாலும்
எனக்கு அவக கிட்டே கொஞ்சம்கூட பிடிக்காத கேட்ட குணம் என்னன்னா சாமி எப்பவும் பொம்பளைகளை மட்டம் தட்டியே பேசும். அதனாலேதான் அவகளை ஆம்பிளைகளுக்கு ரொம்பவும் பிடிச்சு போச்சோ என்னவோ; ஆனா பொம்பளைக்க யாரும் இதை ஒரு விசயமாவே நினைக்கலே.
வீம்புக்குன்னே இங்கிட்டுருக்கிற விடலை புள்ளைக சாமிகிட்டே "ஆம்பிளை சாமியாருங்க ரொம்ப பேர் இருக்காக. ஆனாக்க பொம்பளை சாமியாரை என்கிட்டுமே காண்கலையே? அது ஏன் சாமி?ன்னு கேட்பானுக. உடனே அழுக்கு வேஷ்டி சாமிக்கு சிரிப்பாணி அள்ளிட்டு போகும். கொதப்பிகிட்டு இருக்கிற வெத்தலைய சுவத்தோரம் துப்பிட்டு வந்து, "பொம்பளையாலே அம்புட்டு சீக்கிரம் எதையும்  உட்டுட முடியாது.  பொம்பளைக்கு துறவு சரிப்பட்டு வராது"ன்னு சொல்லிப்பிட்டு சில்லறைய அள்ளி சிதறி விட்டாப்லே சிரிப்பாக. அத கேட்டுபிட்டு ஆம்பளைகளும் விழுந்து விழுந்து சிரிப்பாக. ஆனா அதை பொம்பளைக யாரும் சட்டை பண்ணவே இல்லை.
என் வீட்டிலே குடியிருக்காகளே தங்கராசும் அவன் பொஞ்சாதி பாப்புவும் 
(பாப்புங்கிறது நான் வச்ச பேருதான். அந்த புள்ளே பேர் வடக்கத்தி பேர் மாதிரி இருக்கும். அந்த சனியன் பிடிச்ச பேர் என் வாய்க்குள்ளேயே நுழையாது.  அந்த புள்ளையும் வடக்கத்தி புள்ளைதான். அது பேர் என் வாயிலே நுழையாததாலே நான் "பாப்பு" "பாப்ப்பு"ன்னு கூப்பிடுவேன். கடைசிலே பாப்புங்கிறதே  அதுக்கு பேரா ஆயிட்டுது. இம்புட்டு ஏன். ? நம்ம தங்கராசு பய கூட அவளை "பாப்பு"னே கூப்பிட ஆரம்பிச்சிட்டான்.  ஊருக்கு போயிருந்தவக போன பௌர்ணமிக்கு நாலு நா மின்னாடிதான் வீட்டுக்கு திரும்பி வந்தாக.  பாப்பு முழுகாமே இருந்தா. புள்ளை வயித்துக்குள்ளே நிலை  மாறி கிடக்குன்னு டாக்டரம்மா சொல்லிபுட்டா . நிக்கக்கூடாது , நடக்கக்கூடாதுன்னு வேறே சொல்லிபுட்டாளாம். நாங்கல்லாம் அந்த காலத்திலே மருந்தை கண்டோமா மாத்திரைய கண்டோமா. நானும் ஏழு பெத்தேன். நாளை எமன் கிட்டே வாரி குடுத்திட்டேன். மிச்ச மூணுலே ஒன்னு மதுரையிலே இருக்கு. மத்த ரெண்டு திண்டுகல்லிலே இருக்கு. ஆஸ்பத்திரின்னா என்னன்னு எங்களுக்கு தெரியாது. இப்போ புதுசு புதுசா எதை எதையோ கண்டு பிடிக்காக. நோவும் புதுசு புதுசாதான் வருது. டாக்டரம்மா சொன்னத கேட்டு இந்த தங்கராசு பய ரொம்பவுமே பயந்து போயிட்டான், பாப்புவை கொண்டு போய் அவன் அம்மை வீட்டிலே விட்டுட்டு வந்துட்டான். அங்கேயும் ஒன்னும் செழிப்பு கிடையாது. கஷ்ட ஜீவனம்தான். அதான் தங்கராசும் அந்த பக்கம் ஏதாது ஜோலி கிடைச்சா பார்க்கலாம்னுட்டு அம்மை  வீட்டுக்கே போய்ட்டான். ஒரு வழியா புள்ளை வயித்தை விட்டு கழிஞ்சு தாயும் புள்ளையும் நல்லாயிட்டாக. அதை கேட்ட பொறகுதான் எனக்கு போன உசிரு திரும்பி வந்தாப்லே இருந்துது.  தங்கராசு மட்டும் வந்து அப்பப்போ எட்டி பார்த்துட்டு போவான், இப்ப பொஞ்சாதி புள்ளைய கூடிட்டு வந்திட்டான். புள்ளை நல்லாதான் இருக்கிறான். தலைபுள்ளை, அதுவும் ஆம்பிளை புள்ளை . அப்படியே அம்மையை உரிச்சு வச்சிருக்கிறான். ஆம்பிளை பிள்ளை அம்மை மாதிரி இருந்தா அதிர்ஷ்டம்னு சொல்லுவாங்க. புள்ளை பெத்து எடுத்துட்டு    வீட்டுக்கு வந்ததுமே அழுக்கு வேஷ்டி சாமியாரை பத்தி கேள்விப்பட்டு சாமியை பௌர்ணமியன்னிக்கு வீட்டுக்கு சாப்பிட கூப்பிட்டிருந்தா பாப்பு. சாமியும் சாப்பிட வந்தாக. வந்ததுமே இந்த புள்ளைய பார்த்துட்டு அப்படியே மலைச்சு போய் நின்னுட்டாக.
பாப்பு வடையும் பாயாசமுமா வச்சிருந்தா. எனக்கும் கொண்டாந்து குடுத்தா. ஆனா எனக்குதான் திங்கவே விளங்கலே. எனக்குந்தான் வயசு எழுபத்தாறு முடிய போகுதே. எதையாவது "குடு" "குடு"ன்னு வாய் கேட்குது.  ஆனா வயிறுதான் எதையுமே ஏத்துக்க மாட்டேங்குது. சாப்பிட்டு முடிச்சதுமே சாமி என் வீட்டு  திண்ணையிலே வந்து உக்காந்தாக. " என்ன பெரியம்மா தூக்கம்மா?"ன்னு  விசாரிச்சாக,; எனக்கு அப்பவே பொறி தட்டுச்சு. சாமி நம்ம கிட்டே எதையோ பேச நினைக்காகனு புரிஞ்சு போச்சுது.
"இல்லே சாமி, வயசு ஏற ஏற தூக்கம் நம்மள விட்டு போயிடுதே. சாப்பிட்ட களைப்பு. அதான் சித்த நேரம் கண்ணசருவோம்னு தலையை கீழே
சாய்ச்சேன். என்ன சங்கதி' ன்னு கேட்டேன்.
" ஒண்ணுமில்லே. இந்த புள்ளை பாப்புவை பார்த்தா இந்த பக்கம் உள்ள புள்ளை மாதிரி தெரியலியே"னு சாமி கேட்டாக.  ஆமாம் சாமி, வடக்கே எங்கியோ தூரா தொலையிலே இருக்கிற ஊராம். இந்த புள்ளை அப்பன் அம்மையை எதிர்த்து பேசிட்டு நம்ம தங்கராசை கட்டிக்கிட்டு வந்திட்டுது. இந்த பய தங்கராசும் நல்லா படிச்ச பயதான். ஆனா எதோ சண்டையிலே படிச்சதுக்கான அத்தாச்சி எல்லாம் எரிஞ்சு போச்சாம். இந்த பக்கம் வந்து வயலு வேலையை பார்துட்டுக்கிறானு சொன்னேன். அந்த சமயம் பார்த்து தங்கராசு அந்த பக்கம் வந்தாப்லே . " என்னப்பா நீங்க ரெண்டு பேரும் சாப்பிட்டாச்சா"னு  சாமி கேட்க, "ஆமாம்"னான் தங்கராசு.
"அப்படின்னா இப்படி உக்காருப்பா"ன்னு சாமி சொல்ல, அவக பக்கத்திலே வந்து உக்கார்ந்தான் தங்கராசு. சரிதான், ஆம்பிள்ளைக  ரெண்டு பேரும் எதோ பேசப்போறாக போலிருக்கு. அங்கன நமக்கென்ன ஜோலின்னு நினச்சிட்டு நான் எந்திரிச்சு உள்ளே போயிட்டேன்.  இருந்தாலும் அவக ரெண்டு பேரும் பேசினது எனக்கு காதிலே விழத்தான் செஞ்சுது.
எடுத்த எடுப்பிலேயே சாமி " தம்பி, உன் பொஞ்சாதி பாப்பு சர்மா அய்யா வீட்டு  பொண்ணுதானேனு கேட்டாக.
"ஆமாம் சாமி. அவகளை உங்களுக்கு தெரியுமா"ன்னு தங்கராசு கேட்டான்.
"தெரியுமாவா ? தம்பி, ஒவ்வொரு பௌர்ணமிக்கும் சர்மா அய்யா ஹரிதுவாரிலே உள்ள பண்டாரம் பரதேசிகளுக்கு சாப்பாடு போடுவார். நானே எத்தினியோ தடவை அங்கே சாப்பிட்டுருக்கிறேன். இந்த புள்ளைதான் சாப்பாடு பரிமாறும். மூணு சுமங்கலி பொண்ணுகளுக்கு அய்யா தங்க காசு தருவார்.  உன் வீட்டம்மா பாப்பு பௌர்ணமியன்னிக்கு பிறந்தாளாம். கொள்ளை அழகாம். சாட்சாத் அம்பாளே வந்து பொண்ணா பிறந்திருக்கிறதா எல்லோரும் கொண்டாடினாங்களாம். இந்த புள்ளை பிறந்த பிறகுதான்  அய்யாவோட வியாபாரம் பெருகி கோடீஸ்வரன் ஆனாராம். அப்பேர்ப்பட்ட கோடீஸ்வரன் வீட்டு பொண்ணு இந்த மண் குடிசையில் ! எப்படியப்பா ?'ன்னு சாமி கேட்க," சாமி, என் குடும்பம் வசதி இல்லாத குடும்பம்தான். கடனை உடனை வாங்கி எங்க அப்பா என்னை நல்லா படிக்க வச்சார். டில்லியில் நல்ல வேலையும் கிடைச்சுது. வேலை விசயமா அடிக்கடி ஹரித்துவார் போவேன். அப்பத்தான் எனக்கும் இவளுக்கும் பழக்கம் வந்துச்சு.  இவ வீட்டுக்கு தெரிஞ்சு ஏக ரகளை. எல்லா எதிர்ப்பையும் மீறி இவ என்னை கல்யாணம் பண்ணிகிட்டா.  இவ அப்பா கோப பட்டார். இவ மனசை மாத்த முயற்சி செஞ்சார். இவ பிடிவாதத்தில் அவர் தோத்து போய் "எனக்கு பொண்ணே இல்லை. செத்து போயிட்டான்னு நினைசுகிறேனு  சொல்லிட்டு போயிட்டார். ஆனா இவளோட உறவுக்காரங்க எங்களை டில்லியில் இருக்க விடாமே பண்ணினாங்க. நான் பார்திட்டுருந்த வேலையிலிருந்து என்னை துரத்தி அடிச்சாங்க.  என்னோட சர்டிபிக்கேட்  எல்லாத்தையும் தேடி எடுத்து கொளுத்தினாங்க. டில்லியில் நான் கூலி வேலைகூட பார்க்க முடியாதபடி துரத்தி அடிச்சாங்க. உயிர் பிழைச்சா போதும்னு இங்கே வந்தோம். இங்கு வந்தும் வம்பு பண்ணினாங்க. இங்கே வயல் வேலைக்கு ஆள் கிடைப்பது குதிரை கொம்பா இருந்துச்சு. அதனாலே கிடைச்ச என்னை விட்டுடுட கூடாதுன்னு இந்த ஊர்க்காரங்க எல்லாரும் சேர்ந்து வந்தவங்களை துரத்தி அடிச்சிட்டாங்க.  இதுதான் பாதுகாப்பான இடமா தெரிஞ்சுது. நான் மட்டும் தனி ஆளா இருந்தா வந்தது வரட்டும்னு எதிர்த்து சண்டைக்கு போயிருப்பேன். ஆனால் என்னை நம்பி ஒருத்தி வந்துட்டா. அவளுக்கு நான் வேணுங்கிறத நினைச்சு இங்கேய தங்கிட்டேன். கஷ்ட ஜீவனம்தான். ஆனா பட்டினி கிடைக்கலே. எதோ வாழ்க்கை ஓடிட்டு இருக்கு. சாமி, பாப்பு அவ பிள்ளை கூட மல்லு கட்டிட்டுருப்பா. கூடமாட போய் ஏதாவது ஒத்தாசை பண்ணனும். நான் போறேன். நீங்க இந்த திண்ணையிலேயே படுத்து தூங்கலாம். கோமதி ஆச்சி ஒன்னும் சொல்ல மாட்டாங்கன்னு சொல்லிட்டு போய்ட்டான்.
வெளியிலே ஒரு சத்தத்தையும் காணோம். சரி, சாமி கெளம்பி போயிட்டாக போலிருக்குன்னு நினசிகிட்டு வாசலுக்கு வந்து மெதுவா எட்டி பார்த்தேன். எதையோ தொலைசிட்டமாரி  சாமி எதோ தடுமாத்ததிலிருந்தாக. தனக்கு தானே பேசிக்கிற மாரி இருந்துச்சு. பைய பூனை மாதிரி சன்னலோரமா போய் சாமி என்ன பேசுதாகனு கவனிச்சேன்.
அழுக்கு வேஷ்டி சாமி சொன்னதை ஒரு வார்த்தைகூட பிசகாமே அப்படியே உங்ககிட்டே சொல்லுதேன். சாமி சொல்லுச்சு, "சித்தி கொடுமை தாங்காமல் சிறு வயசில் வீட்டை விட்டு ஓடி போய், கால் போன போக்கிலே சுற்றி அலைஞ்சிட்டு, இமயமலை அடிவாரத்திலிருந்த சன்யாசிகளுக்கு எடுபிடி வேலை செஞ்சு வயித்தை கழுவிட்டு இருந்தேன். கால போக்கில் என்னையும் சாமின்னு எல்லாரும் சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க. துறக்க எதுவுமே இல்லாத என்னை துறவின்னு சொல்லி இந்த ஊர் கொண்டாடுது. கோடானுகோடி செல்வத்தை மனசுக்கு பிடிச்ச ஒருவனுக்காக இந்த பொண்ணு தூக்கி எறிஞ்சிட்டு வந்திருக்கிறா. இவதானே உண்மையான துறவி,  இவ மட்டும் என்ன ... ஊர் உலகத்தில் இருக்கிற அத்தனை பெண்களுமே  பிறந்து வளர்ந்த குடும்பத்தை பிரிஞ்சு, முழுசும் மாறுபட்ட சூழ்நிலைக்கு அவங்களை தயார் பண்ணிக்கிட்டு, அவங்க புகுந்த வீட்டு சூழ்நிலைக்கு தகுந்தாப்லே தங்களை மாத்திகிட்டு, அந்த குடும்பம் தழைக்க வாரிசுகளை உருவாக்கி அவர்களின் வளர்ச்சிக்காக தங்களை அர்ப்பணம் செய்கிறார்களே. அதுதானே உண்மையான துறவு.  இல்வாழ்க்கையை விட்டு வெளியேறுவது ஆண்களுக்கான துறவறம். பெண்களுக்கு துறவறம்னு ஒன்னு தனியா தேவை இல்லை. பொம்பளைகளை பொறுத்தவரை சம்சார வாழ்க்கைதான் அவங்களோட சன்யாச வாழ்க்கை. இது தெரியாமே பெண்களால் எதையும் உதற முடியாது. அவங்களுக்கு சன்யாசம் சரிப்பட்டு வராதுன்னு கோட்டிக்காரன் மாதிரி சித்தாந்தம் பேசிகிட்டு திரிஞ்சேனேன்னு குரல் கம்முறாப்லே பேசிக்கிறது கேட்டது. அழுக்கு வேஷ்டி சாமியார் பேசி , அதை கடைசியா கேட்ட ஒரே ஒரு ஆள் நான் மட்டும்தான்.  அதுக்கு பெறகு சாமி பேசவே இல்லை. வெறும் கையசைப்பு இல்லாட்டா தலையசைப்பு மட்டுந்தான்.  இத பார்த்துட்டுதான் இந்த ஊருலே இருக்கிற அம்புட்டு ஜனமும் சாமி ஏன் பேச  மாட்டேங்குதுன்னு தெரியலியேனு நினச்சு சங்கட பட்டுடுருக்காக.
எங்க வீட்டு ஐயா அடிக்கடி சொல்லுவாக, "அறிஞ்சவன் பேச மாட்டான். பேசுறவன் அறிய மாட்டான்"ன்னு. அது எம்புட்டு உண்மைன்னு எனக்கு தெரிஞ்சு போச்சு. எனக்கு தெரிஞ்சதை "இதுதான் காரணம்"ன்னு மத்தவங்களுக்கும் சொல்லலாம்தான். ஆனா இங்கே இருக்கிறவங்க ரொம்ப குசும்பு பிடிச்சவங்களாசே. நான் சொல்றதுக்கு கண்ணு காத்து மூக்கு வச்சு சாமி வாயை கிளற ஆரம்பிசிருவாக. எனக்கென்னவோ சாமி மௌன சாமியா இருக்கிறதுதான் எல்லாருக்கும் நல்லதுன்னு தோணுது.  அதனாலேதான் எனக்கு தெரிஞ்ச ரகசியத்தை நான் யாருக்குமே சொல்லலே. அப்படின்னா, எங்க கிட்டே மட்டும் எப்படி சொல்ல தோணுச்சுன்னு கேட்கீகளா ? அடி ஆத்தாடி உங்களுக்கு தெரியாததா என்ன பொம்பளை கிட்டே ரகசியம் தங்காது. அவகளுக்கு தெரிஞ்சதை நாலுபேர் கிட்டே சொல்லாட்டா அவக தலையே வெடிசிடும்னு. அதுவுமில்லாமே நீங்க இருக்கிற ஜோலியை எல்லாம் விட்டுபுட்டு எங்க ஊரை தேடி கண்டுபிடிச்சு வந்து இந்த விஷயத்தை போட்டு உடைசிடவா போறீக? உங்களை நம்பலாந்தானே ?


Saturday, December 17, 2011

நல்லதை சொல்லுகிறேன்; இங்கு நடந்ததை சொல்லுகிறேன்; என்னை நம்பவும் நம்பி அன்பினில் தோயவும் நம்பிக்கை இல்லையென்றால் எனக்கொரு தம்பிடி நஷ்டமுண்டோ ? !


பணிவாக இரு !  நீ கர்வப்படும்படி உன்னிடம் என்ன இருக்கிறது ?


வணங்க ஆரம்பிக்கும்போதே வளர ஆரம்பித்து விடுகிறோம்.




வீழ்வது வெட்கமானதல்ல !  வீழ்ந்தே கிடப்பதுதான் வெட்கப்படவேண்டிய விஷயம் !



அடைபட்டிருக்கும் கதவுகளின் அருகில் நின்று அழுது புலம்பிக்கொண்டு திறக்கப்பட்டிருக்கும் ஜன்னல்களை  கவனியாமல்  இருந்து விடாதே.



அடுத்தவனுடைய மெழுகுவர்த்தியை அணைக்கும் முயற்சியில் உன்னுடைய விரல்களை சுட்டுக் கொள்ளாதே!


எதுவுமே நேராததுபோல் நடந்து கொள்ளுங்கள் ; என்னதான் நடந்திருந்தாலும் சரி !




சண்டையில் முதலில் வாயை மூடுகிறவன் நல்ல குடும்பத்தில் பிறந்தவன் ? ! !




எல்லா உண்மையையும் நீங்கள் பேசவேண்டுமென்ற கட்டாயம் எதுவும் கிடையாது.  நீங்கள் பேசுவதெல்லாம் உண்மையாக இருக்கட்டும் !


முட்டாள்களோடு விவாதம் வேண்டாமே. பார்கிறவர்களுக்கு யார் முட்டாள் என்ற சந்தேகம் வந்து விடும். 




உங்களை யாராவது விமரிசனம் செய்தால் உங்களுக்கு கோபம் வருகிறதா ? அப்படியானால் அந்த விமரிசனம் மிக சரியானதுதான்.!.

Friday, December 16, 2011

Attention Please

 Dear  Viewers,

Kindly step into " Aruna S Shanmugam.blogger " in google search  to solve 
ON - LINE puzzles .

If any problem in viewing, contact me via arunasshanmugam@gmail.com.

Stories and Cross Word Puzzles, etc in tamil  will be published in "anjchumi.blogger" as usual.

You may view more than 1000 numbers of computer designed kolams in : "chennai.1colony.com"  and  " arunasshanmugam.blogger"

Stories told by Grand - Ma (Story Number - 5 )

 
                    கழுதை மேல் போன கதை !

"பாட்டி, பாட்டி, மம்மியும் டாடியும் ஏதாவது சீரியஸா பேசிட்டுருக்கிறப்போ 'கண்டவங்க பேச்சையும் கேட்டா கழுதை மேலே போன கதையாத்தான் முடியும்"னு சொல்லுவாங்க, அது என்ன பாட்டி கழுதை மேலே போன கதை ?" என்று கேட்டாள் மனோ.
'அதை உங்க டாடி மம்மி கிட்டே கேட்கிறதுதானே?" என்றாள் பாட்டி.
"போ பாட்டி எங்க டாடி மம்மி எப்பவும் பிசி. கதை சொல்றதுக்கெல்லாம் அவங்களுக்கு நேரம் கிடையாது. அதனாலே டியுசனுக்குனு தனியா ஒருடீட்சர
அப்பாயன்ட் பண்ணி இருக்காங்க . நீதான் நிறைய கதையெல்லாம் தெரிஞ்சு வச்சிருக்கிறியே. நீ சமர்த்து பாட்டியாச்சே. இன்னிக்கு கழுதை கதை சொல்லு பாட்டி ப்ளீஸ் பாட்டி " என்று பாட்டியின் கன்னத்தை கிள்ளி கொஞ்சினார்கள் இருவரும்.
"அத்சு. அத்சு". என்று தும்மிய பாட்டி " போதும்பா ஐஸ். ரொம்ப குளிருது" என்றாள்
"பாட்டி குளிருதுன்னு சொல்றாளே போ. போய் போர்வையை எடுத்துட்டு வா"
"போடி அசடு. பாட்டி தமாஷ் பண்றா."
:போடா லூசு. போர்வையை எடுத்துட்டு வானு நானும் சும்மா தமாஷுக்குத்தான் சொன்னேன்" என்றபடி வாசலுக்கு ஓடிய மனோ, " சத்யா, அப்பு, சிவா, ராதா, நிவேது, லாவண்யா எல்லாரும் ஓடி வாங்க.பாட்டி கதை சொல்லப்போறா " என்ற குரல் கொடுத்ததுமே, எல்லோரும் ஓடி வந்து பாட்டியை சுற்றி உட்கார்ந்து கொண்டனர்.
"கொஞ்சம் இருங்க" என்று எழுந்து சென்ற பாட்டி ஒரு தட்டு நிறைய கைமுறுக்கும், மா லாடும் எடுத்து வந்து அவர்கள் முன்பாக வைத்துவிட்டு "இதை சாப்பிட்டுகிட்டே கதை கேளுங்க" என்றாள்.
"பிரபு மனோ நீங்க ஊருக்கெல்லாம் போகாதீங்க. இங்கேயே இருங்க. நீங்க வந்த பிறகு எங்களுக்கும் தினம் தினமும் விதம் விதமா பலகாரமெல்லாம்
கிடைக்குது" என்றான் சிவா குஷியாக.
ஆளுக்கொரு முறுக்காக எடுத்து கடித்தபடி பாட்டியின் முகத்தை ஆவலுடன் பார்க்க பாட்டி கதை சொல்ல ஆரம்பித்தாள்.
"பாட்டி ஸ்டாப் பாட்டி. இன்னிக்கு நீ சொல்லப்போற கதையை தூய தமிழில் சொல்லணும்" என்றான் பிரபு
"ஏன்டா"
"ஏனென்ற கேள்வில்லாம் கூடாது. உனது தமிழ் புலமையை யாம் பரிசோதிக்க விரும்பி இக்கட்டளையை உங்கள் முன் சமர்ப்பித்தோம். அம்மணி போட்டிக்கு நீங்கள் தயார்தானே?" என்று அரசர்கள் பாணியில் பிரபு சொல்லவும் அங்கு பலத்த கை தட்டல் எழுந்தது.
"தங்கள் சித்தம் எனது பாக்கியம்" என்று பவ்யமாக சொன்ன பாட்டி கதை சொல்ல ஆரம்பித்தாள்.
அது ஒரு கடுமையான கோடைக்காலம். ஒரு தாத்தாவும் ஒரு பேரனும் ஒரு கழுதையை ஒட்டிக்கொண்டு பக்கத்து ஊருக்கு சென்று கொண்டிருந்தார்கள். அதாவது கழுதையை நடுவில் விட்டு, இரண்டு பேரும் இரண்டு பக்கமாக நடந்துகொண்டிருந்தார்கள். எதிரே வந்த ஒருவர் "கழுதையை ஏன் சும்மா நடத்தி கூட்டிட்டு போறீங்க? யாராவது ஒருத்தர் கழுதை மேலே உக்கார்ந்து போகலாமே ?" என்று சொல்லிவிட்டு போனார்,
உடனே தாத்தா, பேரனை கழுதை மேலே ஏறி உட்கார்ந்து வர சொன்னார்.
கொஞ்ச தூரம் போயிருப்பார்கள். எதிரே வந்த ஒருவர் " பாவம் வயதான கிழவன் நடந்து வருகிறான், வாலிப பையன் கழுதை மேலே சவாரி பண்ணிக்கொண்டு வருகிறான். காலம் கலி காலம் " என்று சொல்லி விட்டு போக, பேரன் கீழே இறங்கிக்கொண்டு தாத்தாவை கழுதை மேலே ஏறி கொள்ள சொன்னான்,. சிறிது தூரம் போயிருப்பார்கள். வழியில் வந்த ஒரு அம்மா, "பச்சை பிள்ளை நடந்து வருகிறான், கிழவனுக்கு கழுதை சவாரி வேண்டியதிருக்கிறதா? " என்று கேட்டு விட்டு போகவும், பேரனையும் கழுதை மேல் ஏறிக்கொள்ள சொன்னார் தாத்தா. கொஞ்ச தூரம் போயிருப்பார்கள். கழுதை மேல் இருவர் ஏறி வருவதைக்கண்ட திருவாளர் பொதுஜனம் ஒருவர் "வாயில்லா ஜீவன் மேலே கடா மாடு மாதிரி இரண்டு பேர் ஏறிட்டு போகிறார்களே? " என்றார்,
கழுதை மேலிருந்து இறங்கிய தாத்தாவும் பேரனும் நன்றாக யோசித்து ஒரு முடிவுக்கு வந்தார்கள். அதன்படி ஒரு பெரிய கம்பை எடுத்து அதில் கழுதையின் கால்களைக்கட்டி கம்பின் இரு முனையையும் ஆளுக்கொரு பக்கம் தூக்கிக்கொண்டு நடக்க ஆரம்பித்தார்கள், அதாவது கழுதை தலை கீழாக தொங்கிக்கொண்டிருக்க, கால்கள் இரண்டும் மேலே கம்புடன் சேர்த்து கட்டப்பட்டிருந்தது. இவர்கள் நடந்து செல்வதை ஊரே கூடி நின்று வேடிக்கை பார்த்தது. கூட்டத்திலிருந்த ஒருவர் "அட கிறுக்கு பயலுகளா, கழுதையை நடத்தி கூட்டிட்டு போகலாம். யாராவது ஒருத்தர் அது மேலே உட்கார்ந்து போகலாம். ஏன்? இரண்டு பேருமே கூட ஏறி உட்கார்ந்து போகலாம். கழுதை என்ன கூடாதுன்னா சொல்ல போகுது. இதையெல்லாம் விட்டுட்டு கழுதையை நீங்க சுமந்துட்டு போறீங்களே எதாவது நேர்த்தி கடனா?' என்று கேட்டார். பேரன் தாத்தாவை பார்த்தான். தாத்தா பேரனை பார்த்தார், இரண்டு பேரும் குனிந்து கீழே பார்த்தனர். அவர்கள் நடந்து  கொண்டிருந்தது ஒரு ஆற்று பாலத்தில். ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடிக்கொண்டிருந்தது. ஒரு நிமிட தயக்கத்துக்கு பிறகு கம்போடு சேர்த்து கழுதையையும் ஆற்றில் வீசிவிட்டு இருவரும் தலை தெறிக்க ஓட ஆரம்பித்தார்கள்.
'சரியான பத்தியக்காரனுகளாக இருப்பானுக போலிருக்கு" என்று ஒட்டு மொத்த கூட்டமும் இவர்களை விமரிசனம் பண்ணியது. யார் யார் என்ன சொன்னாலும் சரி. நமக்கு எது சரிப்பட்டு வரும் என்று யோசிக்கும் சுய சிந்தனை இல்லாமல் எல்லார் பேச்சையும் கேட்டு நடந்ததால் கண்ட பலன் என்ன? கழுதை கையை விட்டு போனதுதான்,! கழுதை மேலே ஏறி போன கதை இதுதான்" என்று முடித்த பாட்டி, "எப்படி என்னோட தமிழ் புலமை ?" என்று கேட்க, " மூதாட்டியே உனது தமிழ் புலமை கண்டு வியந்தோம். இப்போது உனது கை திறனை யாம் சோதிக்க விரும்புகிறோம். விரைந்து சென்று சுவையான உணவைக்கொண்டு வந்து எமது முன் வைப்பாயாக !" என்று பிரபு சொல்ல "ஒ" என்ற கூச்சல் அங்கு எழுந்தது..

Saturday, December 10, 2011

அட இதுதாங்க உலகம் ! இதுக்குப்போய் அலட்டிக்கலாமா ?


நதியை கடக்கும்வரை முதலைகளை  முறைத்துக்கொள்ள கூடாது !


இரண்டு யானைகள் மோதிக்கொள்ளும்போது குள்ள நரிகளின் பாடு கொண்டாட்டம். சிறு விலங்குகளின் பாடோ திண்டாட்டம்.



சிங்கம் இல்லாத இடத்தில் சிறு நரிகள் வெகு சுலபமாக சிம்மாசனம் ஏறி விடுகின்றன.




சேற்றில் விழுந்த யானையை, எறும்புகூட மிதித்துவிட்டுதான் செல்லும்.




நாயிடம் கடிபடுவதைவிட நாய்க்கு வழிவிட்டு ஒதுங்கி நிற்பது புத்திசாலித் தனம் !





ஒரு எலி, பூனையைப்பார்த்து சிரிக்கிறதென்றால், அது நிற்கும் இடத்துக்கு வெகு அருகிலேயே அதன் பொந்து இருக்கிறதென்று அர்த்தம்.




ஒருவனுக்கு நேரம் சரியில்லைஎன்றால், அவன் ஒட்டகத்து மேலே உட்கார்ந்து போனாலும், ஓடி வரும் நாய் அவன் காலை கடித்துவிட்டுதான் போகும்.




ஓநாய்கள் உள்ள இடத்தில் பறவைகள் பட்டினி கிடப்பதில்லை




சுண்டெலிக்கு தலையாய் இருப்பதைவிட சிங்கத்திற்கு வாலாய் இருப்பது எவ்வளவோ மேல்.





என்னதான் சிங்கம், காட்டிற்கு ராஜாவாக இருந்தாலும், அது நாட்டுக்குள் வந்தால் கூண்டுக்குள்தான் அடைபட்டு கிடக்கவேண்டும்.



My personal requestதயவு செய்து மிருகங்களை மனிதர்களோடு ஒப்பிட்டு பேசாதீர்கள். மிருகங்கள் மற்ற மிருகங்களை அடித்துப் பிழைக்கும். ஆனால் கெடுத்துப் பிழைப்பதில்லை..

Monday, December 05, 2011

Stories told by GRAND-MA ( Story number - 4 )

                                                          
                                                    
ராசி ?

வெளியில் சென்ற வேகத்திலேயே வீட்டிற்குள் பிரபு வருவதைக்கண்ட பாட்டி "என்னடா குழந்தே. வெளியில் போறேன். வர நேரமாகும்னு சொல்லிட்டு போனே. போன வேகத்திலேயே திரும்பி வர்றே. என்னடா விஷயம்  ?" என்று கேட்டாள் .
"போ பாட்டி. நான் போறச்சே அந்த சிவா குறுக்கே வந்தான். அவன் வந்தாலே எனக்கு ராசி கிடையாது. அன்னிக்கு அப்படித்தான். நான் வெளியே போறச்சே அவன் வந்தான். நான் சைக்கிளில் இருந்து விழுந்து எழும்பி வந்தேன். இன்னிக்கு அப்படி ஆயிடகூடாதேனுதான் நான் திரும்பி வந்துட்டேன்." என்று விளக்கம் சொன்னான் பிரபு.
"போடா புண்ணாக்கு! நீயே ஒரு அரைகுறை. சைக்கிள் ஓட்ட தெரியாமல் ஓட்டி நீ கீழே விழுந்தால் அதற்கு அவனா பொறுப்பு?" என்றாள் மனோ. 
"பாட்டி இந்த ஊரில் ஆம்புலன்ஸ் வசதி எல்லாம் உண்டா ?"
"ஏன்?"
"இப்போ ஒரு ஆள் ஆஸ்பிடலில் அட்மிட் ஆகபோகுது"
"பாட்டி அவன் என்னைத்தான் சொல்றான்"
"இதோ பாரு குழந்தே, நம்ம செயலுக்கு நாமதான் பொறுப்பு. இதிலே ராசி எங்கிருந்து வந்துசு ?. எல்லாத்துக்கும் நம்ம மனசுதான்  கண்ணு  காரணம்" என்றாள் பாட்டி.
"பாட்டி நீ அதற்கும் ஒரு கதை வச்சிருப்பியே . கொஞ்சம் எடுத்து விடறது" என்றனர் இருவரும் கோரசாக.
"ஒரு ராஜா நகர் வலம் வந்து கொண்டிருந்தார். ராஜா வருவதைக்கூட கவனிக்காமல் ஒரு கும்பல் கூடி நின்று ஒருவனை அடித்து துரத்திக் கொண்டிருந்தது.அங்கு போன ராஜா என்ன ஏதுன்னு விசாரித்தார்.ஒருத்தர் சொன்னார் - "ராஜாவே இதோ நிற்கிறானே இவன் ஒரு பிச்சைக்காரன். இவன் முகத்தில் முழிச்சா  அன்னிக்கு பூராவும் சாப்பாடே சாப்பிட முடியாமல் போயிடுது. அதனால்தான் இவனை இந்த இடத்தை விட்டு அடிச்சு விரட்டுறோம் னு "ஆச்சரியப்பட்ட ராஜா "அப்படி கூட ஒன்று இருக்கா என்ன ?" என்றார்.
"ஆமாம் " என்று எல்லோரும் அடித்து சொன்னார்கள். உடனே ராஜா சொன்னார்  "நீங்க சொல்றதவச்சு  மட்டும் இவனை வெளியே அனுப்பி விடமுடியாது. இவன் ராசியை நானும் சோதிக்கிறேன். அதன்பிறகு இவனை என்ன செய்வதென்று  யோசிக்கலாம்" என்றார். காவலரை அழைத்து அந்த பிச்சைக்காரனை அரண்மனைக்கு அழைத்து போக சொன்னார். மறுநாள் காலையில் அவன் முகத்தில் ராஜா முழிக்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டது. அதன் பிறகு ராஜா தன்னுடைய காலைக்கடனை முடிக்கப்போனார்."
"காலைக்கடன்னா என்ன பாட்டி?"
"போடி லூசு! பல் தேய்த்து குளித்து முடிக்கிறது"
"டவுட் கேட்டா அதுக்குப்போய் ஏன்டா லூசுன்னு சொல்றே?"
"நீங்க சண்டையை போட்டு முடிங்க. அதற்கு பிறகு நான் கதை சொல்றேன்" என்று எழுந்தாள் பாட்டி.
"இல்லே பாட்டி. சமாதானம் ஆயிடுச்சு. நீ கதையை  ஸ்டார்ட் பண்ணு"
"அப்போ மந்திரி வேகவேகமா வந்தார். " மன்னா பக்கத்து நாட்டு மன்னன் நம்ம நாட்டின் மீது படையெடுக்க ஆயத்தமா இருப்பதாக ஒற்றன் செய்தி கொண்டு வந்திருக்கிறான்.அரசசபையை கூட்டி உடனே ஆலோசனை நடத்தவேண்டும் " என்றார்.
ராஜா "அப்படியே ஆகட்டும்"னு சொல்லிட்டு பால் கூட குடிக்காமல் சபைக்கு கிளம்பிட்டார். விவாதம் மத்தியானம் வரை தொடர்ந்தது. ராஜா எதுவுமே சாப்பிடலே.
அதற்குள் ஒரு காவலன் ஓடி வந்து " மன்னா. நண்பர்களுடன் விளையாட சென்ற நம் இளவரசர் நீரோடையில் விழுந்து விட்டார்.அவரை தேடி காவலர்கள் போயிருக்கிறார்கள். உங்களுக்கு சேதி சொல்ல நான் வந்தேன்" என்றதும், ராஜா சபையை கலைத்து விட்டு மகனை தேடி சென்றார். ஒருவழியா இளவரசனை கண்டுபிடித்து அரண்மனைக்குள் வருவதற்குள் இரவு ஆகிவிட்டது. அவனுக்கு வைத்தியம் பண்ணி அவன் கண் திறந்து பார்த்ததும்தான் அரசர் அந்த இடத்தை விட்டு போனார்.
இதற்குள் நடுநிசி ஆகிவிட்டது. ரொம்பவும் களைப்பாகி படுக்கைக்கு போனார். அப்போதுதான் அவருக்கு, தான் காலையிலிருந்து எதுவுமே சாப்பிடவில்லை என்ற நினைப்பு வந்தது. அந்த பிச்சைக்காரன் நினைப்பும் அவனைப்பற்றி மக்கள் சொன்னதும் நினைவுக்கு வந்தது.
மறுநாள் முதல் வேலையா ராஜசபையை கூட்டினார்.கூடியிருந்த மக்களிடம் "நீங்க சொன்னது சரிதான்.நேற்று நான் இவன் முகத்தில்தான் முழித்தேன். அரசனான எனக்கே நேற்று பூராவும் உணவு கிடைக்கவில்லை. எல்லாம் இருந்தும் சாப்பிடமுடியாத நிலைமை. சாதாரண பொது ஜனங்களாகிய நீங்க என்ன செய்வீங்க? இவனை வேறு ஊருக்கு அடித்து துரத்தினாலும் அங்குள்ளவங்களுக்கு இதே நிலைமைதானே ஏற்படும். அதனாலே இவனுக்கு மரண தண்டனை விதிக்கிறே"னு சொன்னார்.
கூட்டத்தினர் கை தட்டி சந்தோசபட்டார்கள்.
அந்த பிச்சைக்காரனிடம் ராஜா கேட்டார் " நீ சாகறதுக்கு முன்னாடி என்ன சொல்ல விரும்பறேனு".
அதற்கு அவன், " என்னோட முகத்திலே நீங்க முழிச்ச  மாதிரி, நானும் உங்க முகத்திலே முதல் முறையா முழிச்சேன் . என்னோடோ முகத்திலே முழிச்சதாலே  உங்களுக்கு சாப்பாடுதான் கிடைக்கலே. ஆனால் உங்க முகத்திலே முழிச்ச  ராசி, என்னோட உயிரே போகப்போகுதே. இதற்கு என்ன சொல்றீங்க"னு கேட்க, தன்னோட தப்பை உணர்ந்த ராஜா மக்களிடம் ,
" ஒவ்வொருவருடைய நல்லது  கெட்டதுக்கும்அவங்கவங்க செய்கைதான் பொறுப்பே தவிர, மற்றவர்கள் பொறுப்பாக மாட்டார்கள்.இந்த பிச்சைக்காரனை துன்புறுத்துவது எந்த வகையிலும் நியாயமில்லை"னு சொல்லி  விட்டு அந்த பிச்சைகாரனுக்கு பணம் கொடுத்து "ஏதாவது தொழில் பண்ணி பிழைசுகோனு" அனுப்பிவச்சார். "இப்போ உனக்கு நான் சொல்றேன்,  நீ கீழே விழுந்ததுக்கும் சிவா எதிரே வந்ததுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாதுன்னு" என்று பாட்டி சொல்ல, " பாட்டி நான் இப்போ சிவா வீடு வரை போயிட்டு வந்திடறேன்" என்று கிளம்பினாள் மனோ.
"ஏன்டீ?"
"பிரபு போறப்போ சிவா வந்த மாதிரி, சிவா கிளம்பறப்போ பிரபு எதிரே போயிருக்கிறான். சிவாவுக்கு ஏதாவது ஆச்சுதான்னு கேட்டு தெரிஞ்சிட்டு வந்திடறேன்" என்று மனோ சொல்ல,
 " பாட்டி கிராமத்து வீட்டிலெல்லாம்  உலக்கைன்னு ஒன்னு இருக்குமே அது உன் வீட்டில் எங்கே வச்சிருக்கிறே?" என்றான் பிரபு
"உலக்கை எதுக்குடா இப்போ?"
"மனோ தலையில்  போடத்தான்!" என்று பிரபு சொல்ல, அங்கிருந்து ஓட்டம் எடுத்தாள் மனோ.

Saturday, December 03, 2011

அட இதுதாங்க உலகம் ! இதுதாங்க வாழ்க்கை ! நாம வாழ்ந்துதான் ஆகணும் !


கடலில் எத்தனை புயல்களை நீ சமாளித்தாய் என்பது பற்றி யாருக்கு என்ன கவலை ? கப்பலை பத்திரமாக கரை சேர்த்தாயா ? அதுதான் கேள்வி இப்போ !


உலகம் முழுவதும் அயோக்கியர்கள்தான் இருக்கிறார் களா? அதனாலென்ன, இருந்துவிட்டு போகட்டும். நீங்கள் ஒருவர் மட்டுமாவது யோக்கியராக இருந்து பாருங்களேன். உலகிலுள்ள அயோக்கியர்களின்  எண்ணிக்கையில் ஒன்று குறைந்து விடும் !


உலகம் ஒரு மோசமான அங்காடி.  இங்கு மோசடிக்காரர்கள் விற்கும் இலந்தை பழங்கள், திராட்ஷை விலைக்கு விற்பனையாகின்றது. நல்லவர்கள் விற்கும் திராட்ஷை பழங்கள் இலந்தைபழ விலைக்குகூட விலை போவதில்லை !

தப்பை தப்பென்று சொன்னால் அது தப்பு, தப்பு, தப்புங்க. தப்பு செஞ்சுட்டோமேன்னு நினைச்சு வருத்தப்படற வங் களை விட,  நாம செஞ்ச தப்பை கண்டு பிடிச்சிட்டாங் க ளேன்னு ஆத்திரப்  படுகிறவர் கள்தான் இங்கு அதிகம் !


இங்கு சாதனைகளை செய்பவர்கள் சிலர்அதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பவர்கள் பலர். ஆனால் என்ன நடக்கிறது என்பது தெரியாமலே இருப்பவர்கள் அநேகர் !



இங்கு நல்லவர்கள் என்று யாரும் இல்லை ! கெட்டவர்கள் என்று எவருமே இல்லை சந்தர்ப்ப சூழ்நிலைகள்தான்  ஒவ்வொரு வரையும்  நல்லவர்களாகவும் கெட்டவர் களாகவும் வாழ அனுமதிக்கின்றது .


பொய்யை மெய் என்று நம்பும்படியான வஞ்சகம் உலகமெங்கும் தலை விரித்தாடிக் கொண்டிருக்கிறது




உலகம் ரொம்பவும் சிறியதுதான் ! இங்கு சந்தித்தவர்களையே மீண்டும் மீண்டும் சந்தித்து கொண்டிருக்கிறோம். பார்த்தவைகளையே திரும்ப திரும்ப பார்த்துக்கொண்டிருக்கிறோம் !




அழுகை சிரிப்பு = வாழ்க்கை . நீங்கள் சிரித்தால் மற்றவர்கள் எரிச்சலில் அழுவார்கள். நீங்கள் அழுதால் கைகொட்டி சிரிப்பார்கள். வாழ்க்கை ஒரு விசித்ரமான கணக்குதான் . உலகம் எப்போதுமே நாம் பயணிக்கும்  திசைக்கு எதிர் திசையில்தான் சுழன்று கொண்டிருக்கிறது !


ச்சே !    என்ன உலகம் இது !!    ஒரே ஓட்டமும் நடையும் !  இங்கு நின்று நிதானிக்க யாருக்கு இருக்கிறது நேரம் ?