04.10.2023 அன்று Sun News தொலைக்காட்சியில் பூணூல் பற்றிய சர்ச்சை ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.
அது பற்றி எனக்கொரு சந்தேகம். அதை கீழே விவரிக்கிறேன். விவரம் தெரிந்தவர்கள் அதை எனக்குத் தெரிவிக்கலாம்.
"பூணூல் அணியாதவர்கள் இழிவானவர்கள் என்று ஆளுநர் நினைக்கிறாரா?" என்ற கேள்வி அதில் வந்தது.
அந்த ஒன்றுதான் இந்த பதிவுக்கு வழி வகுத்தது.
பல வருடங்களுக்கு முன்பு நான் படித்த ஒரு கட்டுரைத் தொகுப்பில் இது இடம் பெற்றிருந்தது.
ஒரு ஆள் கோவிலுக்குள் போக விரும்புகிறான். (இழிஜாதி என்று அந்தக் காலத்தில் ஒதுக்கி வைக்கப்பட்ட ஒருவன்)
அவன் கீழ்ஜாதிக்காரன் என்று சொல்லி கோவிலுக்குள் விட மறுக்கிறார்கள். இதைக் கண்ட ஒருவர், "உருவ அமைப்பு என்பது மனித குலம் அனைத்துக்கும் ஒன்றுதான். என்ன, அவன் பூணூல் போட்டிருக்கிறான். நீ போடவில்லை. அவ்வளவுதானே?." என்று சொல்லி ஒரு நூலை எடுத்து அவன் கழுத்தில் போட்டு, "இப்போது உன் உடம்பிலும் பூணூல். நீ தாராளமாக கோவிலுக்குள் செல்லலாம்." என்று சொல்லி விட்டு செல்வார். எதிர்த்தவர்கள் அசந்து போய் நிற்பார்கள்.
இதை செய்ததும் ஒரு மகான்தான். அவர் பெயர் என்ன என்பது நினைவில் இல்லை. கிட்டத்தட்ட 55 வருடங்களுக்கு முன்பு நான் படித்த செய்தி. இதை பற்றி அப்போதே எங்கள் பிரண்ட்ஸ் circle ல் விவாதம் பண்ணி இருக்கிறோம்.
"நூலைப்போட்டால் போதுமா? வேத சாஸ்திரங்களுக்கு விளக்கம் அர்த்தம் சொல்லத் தெரிந்திருக்க வேண்டாமா ?" என்று விவாதம் செய்திருக்கிறோம்.
கற்றவனுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பார்கள். ஆரியர்கள் கல்வி கேள்விகளில் தலை சிறந்து விளங்கினார்கள். நல்லது கெட்டதை மக்களுக்கு எடுத்து சொன்னார்கள். அவர்கள் அறிவாற்றலைக்கண்டு வியந்த அந்தக்கால மக்கள், தங்களுக்கு அது இல்லையே என்ற தாழ்வுணர்ச்சியால் தங்களைத் தாங்களே தாழ்த்திக் கொண்டார்கள். அவர்கள் எதிரே நின்று பேசக்கூட தயங்கினார்கள்.
எத்தனையோ தலைமுறைகளைத் தாண்டி நாம் வந்துவிட்டோம். கல்வி இப்போது எல்லோருக்கும் கிடைக்கக்கூடிய ஒன்று. இருந்தாலும் நம்மை விட ஒருவன் ரொம்பவும் புத்திசாலித் தனமாக செயல் படுவதைக் கண்டால் நம்மை அறியாமலே ஒரு தாழ்வுணர்ச்சி உண்டாகிறது என்பதை உங்களால் மறுக்க முடியுமா?
வெளித்தோற்றத்தை வைத்துதான் உயர்ந்தவன் தாழ்ந்தவன் நிர்ணயிக்கப் படுகிறான் என்றால் அதற்கு இதுதான் பதில் என்று "அந்த மகான்" செய்தது போல ஆளுநரும் நினைத்து, அந்த மனிதனுக்கு பூணூல் அணிவித்திருக்கலாம் அல்லவா?
நான் இப்படி யோசித்தேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?