Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Thursday, July 20, 2017

நாட்டோரே, நல்லோரே உங்களிடம் ஒரு பணிவான வேண்டுகோள்!

Image result for image of dance around fire
இங்கு பதிவு செய்யப்படுவது எனது வேண்டுகோள்தானே தவிர பாலிடிக்ஸ் அல்ல.
பற்றி எரியும் நெருப்பை தண்ணீர்தான் அணைக்குமே தவிர எண்ணெய் அல்ல.
தண்ணீர் ஊற்றுவதற்குப் பதில் ஒவ்வொருவரும் அவரவர் பங்குக்கு எண்ணெயும் நெய்யும் வார்த்திருக்க வேண்டாம்.
ஒரு குடும்பத்தில் நாலு பேர் இருப்பார்கள். அந்த நாலுபேரின் குணாதிசயம், பழக்கவழக்கம் வெளியில் எப்படி இருக்கும் என்று அவர்களை பெற்றவர்களால் கூட சொல்ல முடியாது.
ஆப்டர் ஆல் நாற்பது பேர் உள்ள ஒரு அலுவலகத்தில் கூட யார் யார் என்ன செய்கிறார்கள் என்பதை தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களால் கண்டு பிடிக்க முடியாது.
காரணம் எல்லோருமே நல்லவர்கள் வேடத்தை அணிந்து கொள்வதால்.
ஊரறிந்த நாடறிந்த உலக அளவில் புகழும் பெயரும் கொண்ட ஒருவர் ஒரு விமரிசனத்தை முன் வைக்கும்போது, "என்னதான் கண்காணிப்பு இருந்தாலும் விதிமீறல்கள் சில சமயம் நடந்து விடுகிறது. இப்படி ஒரு தவறை எங்கள் கவனத்துக்கு கொண்டு வந்ததற்கு நன்றி. அடுத்த நடவடிக்கை என்ன என்பதை நாங்கள் முடிவு செய்கிறோம்"  என்று பொறுப்பான பதவியில் இருப்பவர்கள் சொல்லி இருந்தால் பிரச்னை அன்றே முடிந்திருக்கும்.
ஆளாளுக்கு  ஊதி ஊதி பிரச்னை பெரிதானதுதான் மிச்சம்.
இந்திய அரசியலமைப்பு சட்டம் என்ன என்பதை முழுநேர அரசியலில் இருப்பவர்களே நினைவில்கொள்ளாமல் ஆளாளுக்கு  அறிக்கை விடுவது காமெடியாக இருக்கிறது.
அரசியல் ஒரு சிலருக்கு தொழில். அவர்கள் முழுக்கவனமும் அதில் இருக்கும். அதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை. ஒரு சிலருக்கு அரசியல் ஒரு பொழுது போக்கு. அரசியல் என்றால் என்ன என்பதே தெரியாத அரசியல் பற்றிய ஆர்வம் எதுவும் இல்லாதவர்கள் அநேகர் உண்டு. 
இவர்களுக்கு அரசியல் ஆர்வம்தான் இல்லையே தவிர நாட்டு நடப்பு மீது நாட்டு மக்கள் மீது மிகுந்த அக்கறை இருக்கும். ஆனால் எதுவும் செய்ய இயலாத வகையில் / நிலையில் இருப்பார்கள். 
நாடு நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு எப்போதும் உண்டு. 
நாடு என்றால் இந்தியா மட்டுமல்ல; நம்மை விட்டுப் பிரிந்து சென்ற பாகிஸ்தான், உலகிலுள்ள அத்தனை பேரும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பேன்.
சொன்னால் நம்புவதற்கு கடினம்; ஆனால் உண்மை அதுதான். தினமும் காலையில் எழும்போதும் இரவில் படுக்கும் முன்பாகவும், "கடவுளே , உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் சரி; எல்லாருக்கும் நல்ல புத்தியை நல்ல சிந்தனையைக் கொடு. அடுத்தவரைக் கெடுத்து வாழும் புத்தியைக் கொடுக்காதே " என்றுதான் வேண்டிக் கொள்வேன்.  
Now I remark a branch story here.
சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யின் முன்னோரின்  மூச்சு காற்று எங்கள் சுவாசத்தில் கலந்துள்ளது. 
(எங்கள் அம்மா வழியில் அவர் பிறந்து வளர்ந்த குடும்பம் எங்களுக்கு உறவுமுறை என்பது மட்டும் தெரியும். அம்மாவிடம் கேட்டால், எங்கள் அப்பாவும்  அந்த ஆச்சி வீட்டு தாத்தாவும் பங்காளிகள் என்று பதில் சொல்வாள்.  
சிரிக்காதீங்க. எனக்கு உறவுமுறைபற்றி அதிகம் தெரியாது. 'ஒண்ணு விட்ட / உடன்பிறந்த' என்று ஒருசிலர் உறவுமுறை சொல்லும்போதே. 'போதும் .  புரிஞ்சுக்கிட்டேன் ' என்று சொல்லிவிடுவேன்.
என்னுடைய மாமா அத்தை சித்தி சித்தப்பா வழி உறவுகளைக்கூட எங்கள் வீட்டுகுழந்தைகளுக்கு சரியாக தெரியாது. அந்த அளவுக்கு உலக அறிவில் வளர்ந்து உறவு அறிமுகங்களில் சுருங்கி வளர்க்கப்பட்டு விட்டார்கள். 
We shall continue the main topic now.
கல்வி / அரசியல் போன்ற பொது விஷயங்கள் ஒரு நீரோடை மாதிரிதானே.
விருப்பமுள்ளவர்கள் கைகளால் அள்ளிப் பருகலாம். அதில் நீராடலாம். நான்தான் குடிக்கணும். நீ குடிக்கக்கூடாது என்று சொல்லும் உரிமை யாருக்கும் கிடையாதுதானே. குதர்க்க புத்தி உள்ளவர்கள் பாழ் படுத்தலாம். அது அவர்கள் வாழ்வுரிமை. அவர்களை தண்டித்தால் அவர்களுக்கு வக்காலத்து வாங்கவும் சிலர் வருவார்கள். 
ஒருவருடைய உண்மையான தரம் என்னவென்று தெரிய வேண்டு மென்றால் அவன் மற்றவர்களோடு  தகராறு / தர்க்கம் செய்யும் நேரத்தில் கூர்ந்து கவனியுங்கள் என்பது பெரியவர்களின் வாக்கு.
ஊரறிந்த உலகறிந்த ஒரு நபரை 'இவரெல்லாம் ஒரு ஆளா ?" என்று சிலர் கேட்கிறார்கள். 
அரசியல் என்ற போர்வை இவர்களிடம் இல்லாவிட்டால் இவர்கள் யார் என்பது தமிழ்நாட்டினருக்கே தெரியாதே.
இந்த வேலை இவர்க்கு என்று எந்த முத்திரையும் கிடையாதே. அப்படியிருக்க  இவன் அதை செய்தானா இதை செய்தானா என்ற வீண் தர்க்கம் எதற்கு.
அப்பாடா காந்திஜி உயிரோடு இல்லை. இருந்திருந்தால் தென்னாப்பிரிக்காவுக்கு படிக்கப்போன நீ அதை விட்டு விட்டு இங்கே ஏன் வந்தே  என்று யாராவது கேட்டிருந்தால்கூட ஆச்சரியப்பட ஏதுமில்லை.
படிக்கப்போன அவர் இந்தியர் நிலை கண்டு அதை விட்டுவிட்டு இந்தியா திரும்பினார்.
ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு சூழ்நிலையில் ஒவ்வொரு வயதில் ஏதாவது ஒன்றின் மீது ஈர்ப்பு ஏற்படும்.  அது நீ பிறந்த அன்றைக்கு ஏன் வரலே என்று நாம் கேட்டால் - அதை பார்ப்பவர்கள் / கேட்பவர்கள் யாரை தரக்குறைவாக எடை போடுவார்கள் ? சிந்தித்து பார்ப்போம்.
ஒரு சினிமாக்காரன் ஒரு இடத்துக்கு வந்திருக்கிறானென்றால் யாரும் அழைக்காமல் அந்த இடத்தில் கூட்டம் சேரும். 
அரசியல் மீட்டிங் நடக்கும் இடத்திற்கு கூட்டம் சேர்ப்பதற்காக சினிமாக்காரர்களை காசு கொடுத்து அழைத்து வரும் நிலையில் ஒரு சிலர் இருப்பதை மறக்கக்கூடாதுதானே.
சினிமா மூலம் கிடைக்கும் வருமானம் என்ன ? அதை நம்பி சினிமா தொழிலுக்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத லட்சக்கணக்கான குடும்பங்கள் பிழைக்கின்றன என்பதையெல்லாம் கணக்கு போட்டு பார்க்காமல் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று பேசி ஒருவரை ஒருவர் ஏன் தாக்கிக் கொள்ளவேண்டும். 
எத்தனையோ குற்றசாட்டுகள் இருந்தாலும் பெருவாரியான நாட்டு மக்களின் வாக்குகள், மீண்டும் உங்களுக்கு ஒரு வாய்ப்பை மக்கள் பணி செய்வதற்காக கொடுத்திருக்கும்போது, அதை கவனியாமல் ஒருவர் மீது ஒருவர் சேற்றை அள்ளி  வீசுவதில் ஏன் காலத்தை விரயம் செய்ய வேண்டும் ?
சிறு வயதில் நான் படித்த ஒரு கதை : ஒரு அரசன் தன்னைப் பற்றி குறை சொல்லுபவர்கள் வாக்கை வேத வாக்காக எடுத்துக் கொள்வானாம். அதை கண்ட மந்திரிகள் அரசனுக்கு புத்தி சொல்லும் போதெல்லாம், "என்னைவிட என் நாட்டு மக்கள் மீது அதிக அக்கறை கொண்டவர்கள் அவர்கள். அதனால் நான் கவனியாமல் விட்ட வேலைகளை எனக்கு நினைவு படுத்துகிறார்கள். நானாக எதையும் தவறாக செய்யவில்லை. என்னுடைய  கவனக்குறைவால் சில தவறுகள் நடக்கின்றன. அதை சுட்டி க்காட்டும் அவர்களுக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்"என்பானாம்.
இரண்டுநாட்களுக்கு முன் ஊழல்களை பட்டியலிடுங்கள் ஒருவர் சொல்ல , இன்றைய தொலைகாட்சி செய்தியில் இரண்டு அமைச்சர்களின் பெயரை சொல்லி அவர்கள் மீது என்ன நடவடிக்கை  என்று  பொதுமக்கள் கேட்கிறார்கள்.
ஒன்றை மட்டும் உறுதியாக சொல்வேன். அரசு அலுவலகங்களில் ஊழல் லஞ்சம் உள்ளது என்ற கருத்தும் நடைமுறையும் பரவலாக உள்ளது. ஆனால்  அதற்கு அரசு ஊழியர்கள் மட்டும் காரணம் அல்ல. ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு கட்சியினர் பின்னணியில் இருக்கிறார்கள் என்பதை மறந்துவிடக்கூடாது.  (நான் முப்பத்து இரண்டு  வருடம் அரசுப்பணியில் (மத்திய அரசு) இருந்தபின் 2013ல் ரிட்டையர் ஆனேன்.  யாரிடமும் கைநீட்டி ஒரு காசு கூட வாங்கியது கிடையாது. என்னைப் போன்ற பலர் இன்னும் இருக்கிறார்கள். )
இனிமேலாவது ஆக்கபூர்வமான வேலைகளில் நமது முழுக்கவனத்தை செலுத்துவோம்.


Tuesday, July 18, 2017

Dear Friends,

Image result for image of kamarajar
இங்கு சில விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பி எனது எண்ணங்களை பதிவு செய்கிறேன். உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது ரிலாக்ஸ்டா உட்கார்ந்து படித்தால் போதும்.
வாய் நிறைய, "கண்ணம்மா .. கண்ணம்மா" என்று என்னை அழைக்கும் அலுவலக தோழிக்கும் எனக்கும் இடையில்   அடிக்கடி நடக்கும் வாக்கு வாதம் இது. 
தோழி  சொல்லும் டயலாக் : 
"கண்ணம்மா .. நாம பிறந்ததே வேஸ்ட்தான்"
"இப்பதான் தெரிஞ்சுதா? எனக்கு எப்பவோ தெரியும். நிறைய விஷயங்களைப் படைச்சதால் கை வலித்து, மனசு சோர்ந்துபோன நேரத்தில் கடவுள் நம்மைப் படைச்சிருப்பார். இல்லாட்டா நம்ம தலையெழுத்தை அவர் எழுதும்போது அவர் பேனாவில் இங்க் தீர்ந்து போயிருக்கணும். அதனால் எதையோ கன்னாபின்னானு கிறுக்கி வச்சிட்டார். அதை விடுங்க. அது முடிஞ்சு போன விஷயம். இப்ப என்ன பிரச்னை ?"
"ஒவ்வொருத்தர் இருந்த இடத்தில் இருந்தபடியே எது எதையோ சாதிச்சிடறாங்க. நாம நினைக்கிற சின்ன சின்ன விஷயம் கூட நிறைவேற மாட்டேங்குது.  ஒண்ணுமில்லே கண்ணம்மா.. ஒருநாளும் கேன்டீன் பக்கமே போகாத எனக்கு இன்னிக்கு எதையாவது சாப்பிடணும் போல இருந்துச்சு. வடை சாப்பிடலாம்னு நினைச்சு கேன்டீன் போனேன். வடை இல்லே. தீர்ந்துட்டுனு சொல்லிட்டான்.   ஆப்டர் ஆல் ஒரு வடை. அதை சாப்பிடற லக் கூட இல்லையே  "
"தினமும் போகிற பழக்கம் இருந்திருந்தால் நீங்க வருவீங்கன்னு எடுத்து வச்சிருப்பான். எப்பவாவது போனால் இப்படித்தான். நீங்க வருவீங்கன்னு அவனுக்கு பல்லி சொல்லியிருக்குமா என்ன ?"
"அம்மா .. தாயே. உங்ககிட்டே போய் சொல்ல வந்தேனே. என்னை.. என்னை .." என்றபடி அங்கிருந்து போய்விடுவார்கள்.
தோழி வழக்கமாக சொல்லும்  "ஒவ்வொருத்தர் இருந்த இடத்தில் இருந்தபடி எது எதையோ சாதிச்சிடறாங்க. நாம நினைக்கிற சின்னவிஷயம் கூட நிறைவேற மாட்டேங்குது" என்ற டயலாக்கை  மூன்று நாட்களுக்கு முன்பாக (அதாவது 15.07.2017  அன்று ) பலமுறை சொல்லிக் கொண்டேன்.
கடந்த சில நாட்களாகவே வசந்த் டீவியில். "கர்மவீரர் காமராஜருடன் நீங்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம் இருந்தால் அது குறித்த விவரங்களை எங்களுக்கு   புகைப்படத்துடன் எழுதி அனுப்புங்கள்" என்ற அறிவிப்பு திரையில் ஓடிக் கொண்டிருந்தது.
போட்டோ எடுக்கணும்கிற அறிவுதான் இல்லாமே போச்சு. காமராஜர் பற்றிய நினைவலைகளை நம்ம பிளாக்கில் 15 ந் தேதியன்று பதிவு செய்யலாம் என்று நினைத்திருந்தேன்.
ஆனால் 15 ந் தேதி அதிகாலையிலேயே எங்கள் அம்மா இறந்து விட்டதால் எனது வருத்தம் இரட்டிப்பானது. (அம்மாவின் மறைவு ஒருபுறம். கர்மவீரரின் பிறந்தநாள் அன்று அவர் குறித்த நினைவுகளை பதிவு செய்ய முடியாமல் போய்விட்டதே என்ற வருத்தம் மறுபுறம்.)
எங்கள் குடும்பத்தினரின் பெருமதிப்பிற்குரிய தலைவர் இந்த படிக்காத மேதை. இவர் பற்றி எங்கள் அப்பா அடிக்கடி சொல்லும் ஒரு வார்த்தை "இந்த மனுஷன் மட்டும் இலவசக் கல்வினு ஒண்ணைக் கொண்டு வந்திருக்காட்டா நானோ .. நீங்களோ பள்ளிக்கூடம் பக்கமே போயிருக்க முடியாது. வசதியான வீட்டுப் பிள்ளைங்க மட்டுமே படிக்க முடியுங்கிற நிலைமையை மாத்தி எல்லாரும் படிக்க வழி பண்ணின புண்ணியவாளன். அதுமட்டும் இல்லே. பள்ளிக்கூடத்தில் மதிய உணவு திட்டத்தைக் கொண்டு வந்தவரும் இவர்தான்."
எனது தாத்தா இறந்தபோது என் அப்பா கண்கலங்கினாரே தவிர, அவர் அழுது நான் பார்க்கவில்லை. ஆனால் திரு. காமராஜின் மறைவு செய்தி கேட்டு வாய்விட்டு கதறி அழுதார்.
கடவுள் என் முன்னால் தோன்றி "இறந்து போன யாராவது இருவரை இப்போது உயிர்ப்பித்துக் கொடுக்கிறேன். யார் வேண்டும் சொல்" என்று கேட்டால், காமராஜரும் இந்திராகாந்தியும் திரும்பவும் வர வேண்டும் என்பேன். (அம்மா அப்பாவைக் கேட்கமாட்டியா என்று நீங்கள் கேட்கலாம். அவர்களால் எங்கள் வீடு முன்னேறும். இவர்களால் நாடு முன்னேறும். இவர்கள் திரும்பவும் பிறந்து வந்தால் அதை பார்த்து அப்பா ஆனந்தப்படுவார்.)
நாங்கள்  பள்ளிக்கூடத்தில் படித்த நாட்களில் அங்கு கொடுக்கப்படும் மதிய உணவை சாப்பிட்டிருக்கிறோம். (ஏழைக்குழந்தைகள்தான் சாப்பிட வேண்டும்  என்று இல்லாமல் பள்ளியில் படிக்கும் யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம். எதோ ஒன்றை செஞ்சு போட்டோம்னு இல்லாமே ரொம்ப சுவையா செஞ்சிருப்பாங்க. ஆனா அது எவ்வளவுதான் டேஸ்டா இருந்தாலும் நாங்க மூணுபேரும் வீட்டுக்கு ஓடிவந்து அம்மா செஞ்சு வச்சிருக்கிற சாப்பாட்டில் ஒரு பிடி சாப்பிட்டு விட்டுத்தான் க்ளாஸுக்கு ஓடுவோம். அப்பா எப்போதும் ஸ்கூலுக்கு அருகில்தான் வீடு பார்ப்பார். அதுவும் ஸ்கூல் பெல் அடித்தால் அது எங்கள் வீட்டுக்கு கேட்கும் டிஸ்டன்ஸில்தான் வீடு பார்ப்பார். நாங்கள் படித்த அதே ஸ்கூலில் எங்கள் சித்தி டீச்சர் ஆக இருந்தார்கள். மதிய உணவு வழங்குவதை மேற்பார்வை செய்யும் பொறுப்பு அவர்களுக்கு. ஸ்கூலில் சாப்பிட்டுவிட்டு வீட்டுக்கு நாங்கள் போவதையும் வீட்டில் சாப்பிடுவதையும் தெரிந்துகொண்ட சித்தி எங்களைக் கூப்பிட்டு "வயிறு நிறைய வேணுங்கிறதை இங்கேயே சாப்பிடலாமே.. ஏன் வீட்டுக்கு போறீங்க?" என்று கேட்பார்கள்.
"அம்மா செய்றதுதான் எங்களுக்குப் பிடிக்கும் " என்போம்.
(இப்பல்லாம் சின்ன குழந்தைங்க கூட கிச்சனில் போய் அவங்களுக்கு தேவை யான சாப்பாட்டை செய்து சாப்பிடறாங்க. எனது சகோதரிகள், அவர்களின்   கல்யாணத்துக்கு முன்புவரை சமையலறைபக்கமே போனது கிடையாது. 2001ல்தான்   நான் சமைக்கவே பழகினேன். வீட்டுவேலை அத்தனையையும் நாங்கள் செய்வோம் சமைப்பதைத்தவிர. அதுமட்டுமல்ல. எந்த கல்யாண   விருந்துக்கு போய் விதவிதமான உணவுகளை ருசி பார்த்திருந்தாலுங்கூட வீட்டுக்கு வந்து எங்கள் வீட்டு சாப்பாட்டை ஒரு பிடி வாயில் போட்டால்தான் எங்களுக்கு திருப்தியாக இருக்கும். இந்தப் பழக்கம் இன்றுவரை எனக்கும் என் சகோதரிக்கும் உண்டு.)
ஸ்கூலில்  மதியஉணவில் புளியோதரை கொடுப்பாங்க. சூப்பரா இருக்கும்.
காமராஜரின் 63வது பிறந்த தினத்தன்று அவர் பாளையங்கோட்டைக்கு (திருநெல்வேலி) வந்திருந்தார். அவரை வரவேற்க எங்கள் பள்ளியின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நான் படித்த ஸ்கூலில் நான்தான் ஸ்கூல் பீப்பிள் லீடர். அதனால் என்கையில் மலர்மாலை மற்றும் பூச்செண்டு ஒன்றை கொடுத்து மற்ற அறுபத்து இரண்டு பெண்கள் கையில் ஆளுக்கொரு மலர் செண்டு கொடுத்து அவர் வரும் இடத்துக்கு அழைத்து சென்றார்கள். அவர் வந்ததும் அவருக்கு நான் மாலை அணிவித்து, அவருடைய கையில் பூச்செண்டு கொடுத்தேன், மற்ற மாணவிகள் அவருடைய கைகளில் மலர் செண்டை கொடுத்தார்கள். அத்தனையையும் பொறுமையாக நின்று பெற்றுக் கொண்டார். அப்போது நான் பள்ளிக்கூட மாணவி. அவரின் அருமை பெருமை எதுவும் எனக்கு தெரியாது. ஸ்கூலில் சொன்னார்கள் செய்தேன். அவ்வளவு தான்.
அந்தசமயத்தில் எங்கள் அப்பா காட்பாடியில் வேலை செய்து கொண்டிருந்தார். நெல்லைக்கு காமராஜர் வரும் விஷயம் அப்பாவுக்கு தெரியாது. (இப்போ எந்தவொரு செய்தியையும் நொடிப்பொழுதில் SMS அனுப்பிடலாம். அப்போ போன்கூட கிடையாது). எங்களைப் பார்க்க லீவில் அப்பா நெல்லைக்கு வந்ததும் நடந்த விஷயத்தை அவரிடம் ஒப்பித்தோம். உடனே அப்பா கேட்ட கேள்வி "போட்டோ எடுத்தாங்களா?" என்பதுதான்.
"தெருவில் வச்சு எடுக்கலே. முனிசிபல் ஆபீசில் அவங்க மீட்டிங்கில் பேசினாங்க. அப்ப அவரை  போட்டோ எடுத்தாங்க" என்றேன்.
அப்பாவுக்கு வந்த கோபத்தைப் பார்க்க வேண்டுமே. "முட்டாள் ஜென்மமே. ஒரு போட்டோகிராபர் கிட்டே சொல்லி போட்டோ எடுக்கணுங்கிற அறிவு கூட இல்லையா?" என்றார். அப்போ அதை நான் சீரியஸ் விஷயமாக எடுத்துக் கொள்ளவில்லை.   பின்னாளில் அவரது அருமை தெரிந்தபின் ஒரு போட்டோ எடுக்காமல் விட்டுட்டோமே என்று வருத்தப்பட்டேன். இன்றும் அதை நினைத்து  வருந்துகிறேன். (போட்டோ எடுக்கணும்ங்கிற சாதாரண விஷயம் கூட அப்போதைய தலைமுறைக்கு தெரியாது. இன்றைக்கும் எனக்கு நிறைய விஷயங்கள் தெரியாது. TAB ஆப்ரேட் பண்ண தெரியாது. இரண்டு வருடங்களுக்கு முன்பு எனது பிறந்த நாள் பரிசாக எனது தம்பி  காஸ்ட்லீ TAB ஒன்றை எனக்கு கொடுத்தான். என்ன செய்யணும்னு சொல்லியும் கொடுத்தான். அவன் கொடுக்கும்போது மண்டையை ஆட்டி எல்லாம் புரிஞ்ச மாதிரி கேட்டுக் கொண்டேன். ஆனால் எனக்கு அதை ஹேண்டில் பண்ண தெரியவில்லை.  எங்கள் வீட்டுக் குழந்தைகள் சொல்லியும் தந்தார்கள்.எனக்கு மண்டையில் ஏறவில்லை. ஏதாவது போன் வந்தால் அதை அட்டென்ட் பண்றதா நினைச்சு ஆப் பண்ணிக் கொண்டிருந்தேன்.  போன் பண்ணினவர்கள் வீட்டிலுள்ள மற்ற நபர்களுக்கு போன் பண்ணி  எதனால் நான் போன்காலை அவாய்ட் பண்றேன் என்று விசாரிக்க ஆரம்பித்து விட்டார்கள். இது நமக்கு சரிப்படாது என்று அதுக்கு டாட்டா சொல்லிட்டேன். இன்றைக்கு எங்கள் வீட்டு மூன்றுவயசுக் குழந்தை அதுவாகவே TABல் rhymes கேட்கிறது. கார்ட்டூன் படங்கள் பார்க்கிறது)  ஹூம்.. கலிகாலம்.
இனி மெய்ன் பிக்ஸருக்கு வருவோம்.
பெருந்தலைவர் காமராஜர் மாதிரி இனியொரு தலைவர் பிறந்து வருவார்களா ?
தலைவர்கள் உருவாகுவதில்லை .. பிறக்கிறார்கள்.
எல்லாருமே மற்றவர்கள் செய்யும் தவறுகளை சொல்லி சொல்லியே பதவிக்கு வருகிறார்கள். பதவிக்கு வந்ததும் அவர்கள் செய்யும் நல்ல காரியம் - யாரை இவர்கள் குறை சொன்னார்களோ அவரை "ரொம்ப நல்லவர்" ஆக்குவதுதான்.
மக்களுக்காக மக்களுக்காக என்று சிலர் சொல்வதெல்லாம் அவர்கள் பெற்ற மக்களுக்காகத்தான் என்பதை நாடு ரொம்பவும் தாமதமாகப் புரிந்து கொள்கிறது.
யாராவது ஒரு நபரின் பெயரை சொல்லி "அவர் மாதிரி வருமா!" என்று சொல்லிப் பாருங்கள். அவர் செய்த தகிடு தத்தங்களை அவருடைய நிழலாக இருந்தவர்களே லிஸ்ட் போட்டு சொல்வார்கள்.
அதைக் கேட்கும்போது நான் யோசிக்கும் ஒரு விஷயம் ஒரு நல்ல தலைவனை அடையாளம் கண்டுகொள்வது எப்படி என்பதுதான். நான் கண்டு பிடித்த விடை - ஒரு நபர் கையில் பொறுப்பை கொடுக்கணும். அடுத்த தேர்தல் வரும்போது  "இவர் நிற்கும் தொகுதியில் நாங்கள் யாரும் போட்டியிட மாட்டோம். இவரே மறுபடி ஜெயித்து வரணும்" என்று எதிர் கட்சியினர் சொல்ல வேண்டும். அப்படி ஒரு நபர் பிறந்து வருவாரா? பொறுத்திருந்து பார்ப்போம்.
தனிப்பட்ட முறையில் எனக்கு திரு. ஸ்டாலின் மீது மிகுந்த மரியாதை உண்டு.
ஒரு பொதுத் தேர்தலின் போது Polling Officer ஆக பணி புரியும் வாய்ப்பு கிடைத்தது.  அதுதான் எனது முதல் அனுபவம் என்பதால் வகுப்பில் கொடுத்த இன்ஸ்ட்ரக்ஸன் எல்லாவற்றையும் மனப்பாடம் செய்து அதை அப்படியே நடைமுறைப்படுத்திக் கொண்டிருந்தேன். என்னுடன் பணிபுரிந்தவர்கள் எனக்கு  அவர்கள் ஒத்துழைப்பை நல்ல முறையில் தந்தார்கள். அந்த இடத்தில் இருந்த கட்சிக்காரர்கள் (AGENTS) அனைவரிடமும் பாரபட்சம் பார்க்காமல் ரொம்பவும் கெடுபிடியாக நடந்து கொண்டேன்.
வாக்குப் பதிவு நடைபெறும் இடத்துக்கு திரு. ஸ்டாலின் வந்தார். அவரைத் தொடர்ந்து நிறைய பேர் அவர் பின்னால் வந்தார்கள்.
அதை பார்த்த நான் வாசலில் நின்று கொண்டு, "அவர் உள்ளே வரலாம் .. மற்ற யாரும் வர அனுமதி இல்லை" என்றேன்.
என் கைகளைத் தட்டி விட்டு விட்டு ஒரு கும்பல் உள்ளே நுழைந்தது. நான் தடுத்ததையும் மற்றவர்கள்  என் கைகளைத்தட்டி விட்டு விட்டு உள்ளே வந்ததையும்  பார்த்த ஸ்டாலின் கண் ஜாடை காட்டி அத்தனை பேரையும் வெளியே போக சொன்னார்.
அங்கிருந்த ஏஜெண்ட்ஸ் கிட்டே பேசிய அவர், என் அருகில் வந்து கைகுவித்து "ரொம்ப நன்றிம்மா !" என்று சொல்லிவிட்டு சென்றார்.
அந்தவொரு செயல் அவர்மீது எனக்கு மரியாதையை ஏற்படுத்தியது. அவர் நினைத்திருந்தால் "எல்லாம் எங்களுக்கு தெரியும் உன் வேலையைப் பாரும்மா" என்று சொல்லி இருந்திருக்க முடியும். ரூல்ஸ்ஸை நான் மதிப்பது தெரிந்து அவரும் அதற்கு மதிப்பு கொடுத்து நடந்து கொண்ட செயல் அவர் மீது எனக்கு மிகப் பெரிய மரியாதையை ஏற்படுத்தியது.
தனிப்பட்ட முறையில் இன்றும் அவரை நான் மதிக்கிறேன்.
நம்முடைய சொந்தவேலை ஒருபுறமிருக்கட்டும். நல்லதொரு தலைவனை தேடும் முயற்சியில் நாம் இறங்கலாம்.

Monday, July 17, 2017

படிக்க ஒரு நிமிடம் / ஒரு நொடி போதும். யோசிக்க ?.. (28)

Image result for cartoon of two old persons of tamilnadu
"என்னப்பா .. பார்த்தும் பார்க்காதது போலே போறே ?"
"இப்பல்லாம் யாரையும் பார்க்கவோ பேசவோ பயமா இருக்குது ?"
"ஏன்ப்பா .. இவ்வளவு விரக்தி.?"
"சாதாரணமா சொல்ற வார்த்தைகள்கூட சண்டையில் முடியுமோன்னு பயமா இருக்குது ?"
"புரியும்படி சொல்லு. பொடி வேண்டாம்."
"வயதான யாராவது ஒருத்தர் இளமையா சுறுசுறுப்பா இருந்தா நமக்கு ஏற்படுற சந்தோஷத்தில் அவங்க மனசு குளிருறாப்லே 'அப்படி இருக்கீங்க..', 'இப்படி இருக்கீங்க..'னு வாய் விட்டே சொல்லுவோம். அவங்களுக்கு இன்னும் ரெண்டு வயசு கொறஞ்ச மாதிரி அவங்களும் அதைக்கேட்டு சந்தோச ப்படுவாங்க. இது காலங் காலமா இருக்கிற விஷயம். அந்தமாதிரி பேச்சு பாலியல் ரீதியான பேச்சாம். எனக்கு தலையை பிச்சுக்கலாம் போலிருக்கு . லஞ்சம் பெருகி போச்சுன்னு ஒருத்தர் சொல்ல மத்தவங்க இல்லேனு சொல்லி சண்டை போடறாங்க. ஹவுசிங் போர்டில் என் சேல் டீட்டை வாங்க, நாலு வருஷம் அலைஞ்சு பார்த்துட்டு, போன வருஷம் 35000 ரூபா மொய் எழுதினேன். உடனே சேல் டீட் கிடைச்சுது. ஜாதி சான்று வாங்கவும் மொய் .. பிறப்பு இறப்பு சான்று வாங்கவும் மொய் எழுத வேண்டி இருக்குது. செத்தவனுக்கு போடற வாய்க்கரிசியைவிட இவங்களுக்கு போடற அரிசிதான் அதிகமா இருக்குது. இதை எங்கே சொல்லி முட்டிக்கிறது.?"
"இதுக்கு ஏன் நீ முட்டிக்கணும். கடந்த ரெண்டு வருஷத்தில் யார் யார் எந்தெந்த வேலைக்கு எந்தெந்த ஆட்களுக்கு எவ்வளவு மொய் எழுதினீங்க என்கிறதை இந்த அட்ரஸ்க்கு எழுதுங்கனு ஒரு அறிக்கை விட சொல்லுவோம். அதை யாராவது ஒரு பொது குழுவை வச்சு பரிசீலிக்க சொல்லுவோம். அந்த முடிவு வெளியானதும் அவனவன் முட்டிகிட்டும். அதை விட்டுட்டு நீ ஏன் முட்டிக்கணும். ஆமா ... நீ எங்கே போறே ?"
" ஒரு சர்டிபிகேட் வாங்கத்தான்."
"கையில் பணம் இருக்குதானே? வேலையை முடிச்சிட்டு வா. நிதானமா உட்கார்ந்து பேசலாம்."

Tuesday, July 11, 2017

படிக்க ஒரு நிமிடம் / ஒரு நொடி போதும். யோசிக்க ?.. (27)

Image result for cartoon of two friends
"இதோ பாரு ரத்னம், நானும் உனக்கு எத்தனையோ முறை சொல்லிட்டேன். உன் பிரச்னையை எப்பவும் வெளியே சொல்லிட்டு திரியாதேனு. கேட்க மாட்டேங்கிறே. யாருக்கு இல்லை பிரச்னை. பணம் இல்லாதவனுக்கு அது இல்லையேனு கவலை. இருக்கிறவனுக்கு அதைக் காப்பாத்தணுமேங்கிற கவலை. பிள்ளை இல்லாதவனுக்கு வாரிசு வேணுமேனு பிரார்த்தனை. இருக்கிறவனுக்கு இப்படி ஒண்ணை பெத்து தொலைச்சிட்டோமே. ஈஸ்வரா . இதை எப்படி கறை  சேர்க்கிறதுங்கிற தீராத தலைவலி. நம்ம மனபாரத்தைக் குறைக்க நம்ம கவலையை மத்தவங்ககிட்டே சொல்லி புலம்பறோம். அதில் நூத்தில் ஒருத்தனுக்குத்தான் அதைக்கேட்கிறதிலேயும் நம்ம பிரச்னை சால்வ் ஆகணுமேங்கிறதிலேயும் ஒரு ஃபீலிங் இருக்கும். நம்ம பிரச்னையாலே தனக்கு ஏதாவது  ஆதாயம் கிடைக்குமான்னு கணக்கு  போடுறவன் ஒன்பது பேர். இவங்க ரொம்பவும் டேஞ்சரெஸ் ஃபெல்லோஸ். இவங்க எல்லாரும் கலங்கின குட்டையில் மீன் பிடிக்கிற ரகம். எரிகிற வீட்டில் பிடிங்கினமட்டும் லாபம்னு நினைக்கிற ரகம். மீதி உள்ள தொண்ணூறு பேர் நம்ம கஷ்டத்தைக் கண்டு மனசுக்குள் ஆனந்தக் கூத்தாடுகிற வக்கிர புத்தி ஜென்மங்கள். அடுத்தவங்க கஷ்டப்பட்டால் இவங்களுக்குப் பரமானந்தம்.. பேரானந்தம் .. ஆனா டைம் பாஸ் பண்ண நாம சொல்றதை ரொம்பவும் சின்சியரா கேட்பாங்க. புரிஞ்சுக்கோ "
"புரிஞ்சுக்கிட்டேன் சத்யா.. மத்தவங்களுக்கு காசு பணம் கொடுத்து உதவுற நிலையில் நானில்லை. மற்றவர்களை சந்தோஷப்படுத்த என்னாலே எதுவும் செய்யமுடியாது. ஆனா  என் கஷ்டத்தைக்கேட்டு தொண்ணூறு பேர் சந்தோசப் படுவாங்கன்னா நயாபைசா செலவில்லாமல் அவங்களை எப்பவும் சந்தோசப் படுத்த நான் தயார். சரி.. நான் கிளம்பட்டுமா !"
"சரி. நம்ம ஏரியாவில் நல்ல ஒரு இரும்புத்தூண் எங்கேயாவது இருந்தால் சொல்லேன்."
"எதுக்கு ?"
"எனக்கு இதுவும் வேணும் .. இன்னமும் வேணும்னு சொல்லி அதில் நச்சு நச்சுன்னு முட்டிக்குவேன் " என்று சொல்லி தலையில் அடித்துக் கொண்டான் சத்யா.

Sunday, July 09, 2017

Scanning of inner - heart ( Scan Report Number - 155)

  Image result for cartoon of two friends talking                          
                                கொஞ்சம் ஓவர்தான் !
"என்ன கோபி .. இப்போ திருப்தியா ?" என்று ராஜசேகர் கேட்டதுதான் தாமதம், அவனது இரு கைகளையும் பற்றிக்கொண்ட கோபி "உங்களுக்கு ரொம்பவும் பெரிய மனசு !" என்றான்.
"ச்சே .. என்னடா இது.. ரொம்பவும் மரியாதை குடுத்து பேசறே. நான் இன்னிக்கும் உன்னோட அதே ராஜாதான். ஒரு சினிமா பாட்டில் சிவாஜியிடம் சுந்தர்ராஜன் சொல்வாரே. பள்ளியை  விட்டதும் பாதைகள் மாறினோம். கடமையும்   வந்தது ..கவலையும் வந்ததுனு.. அந்த மாதிரி ஆரம்ப பள்ளி படிப்பு முடிஞ்சதும்  நாங்க அந்த ஊரை விட்டு  வெளியேறி வந்துட்டோம். நம்ம பாதை மாறிப்போச்சு. மற்ற பிரெண்ட்ஸ் எல்லாரையும் அடிக்கடி பார்ப்பேன். ம் .. உன்னைப் பார்க்கிற சந்தர்ப்பம்தாம் கிடைக்கவே இல்லை. இத்தனை வருஷத்துக்குப் பிறகு உன்னைப் பார்ப்பேன்னு நான் நினைக்கவே இல்லை." என்று நெகிழ்ச்சியுடன் சொன்னான் ராஜசேகர் 
"யானை மாதிரி உங்களுக்கும் ஞாபக சக்தி அதிகம்.  நீங்க என்கிட்டே வந்து பேசற வரை எனக்கு உங்களை அடையாளமே தெரியலை. ரொம்ப மாறி இருக்கீங்க"
"இந்த நீங்க.. நாங்க .. இதையெல்லாம் விட்டுட்டு என்னை ராஜான்னு கூப்பிடு "
"முடியலீங்க..ஏதோ ஒண்ணு தடுக்குது. அதை விடுங்க. நான் கேட்டதுமே கொஞ்சமும் மறுக்காமே பெரிய மனுஷங்களை நீங்க பேட்டி எடுத்ததை நான் பார்க்க அனுமதிச்சீங்களே.. இதை ஊருக்குப் போனதும் எல்லாருக்கும் டமாரம் அடிச்சு சொல்வேன்.. நானே பேட்டி எடுத்த மாதிரி..  "
இதைக் கேட்டதும் பதிலேதும் சொல்லாமல் சிரித்த ராஜசேகர், "இப்போ சொல்லு ... நம்ம கிராமத்தைப்பத்தி..உன்னைப் பார்த்த சந்தோஷத்தில் .. பேட்டி மும்முரத்தில் அதைப் பத்தி  கேட்க முடியாமே போச்சு...சொல்லு.. என்னென்ன மாற்றம்  வந்திருக்குது ?"
"இருபத்துஅஞ்சு வருஷத்துக்கு முந்தி அங்கே அஞ்சாம் வகுப்பு வரை மட்டுமே படிக்கிற வசதி இருந்துச்சு. ஆறாம் வகுப்பில் சேர பக்கத்தில் உள்ள டவுண் பள்ளிக்கூடத்துக்குப் போகணும். இப்பவும் அதே கதைதான். இன்னும் இருபத்து அஞ்சு வருஷம் கழிச்சு கேட்டாலும் இதே பதிலைத்தான் சொல்ல வேண்டி இருக்கும்னு நினைக்கிறேன். மாறாத விஷயம்னு சிலது இருக்குமே. அதில் நம்ம கிராமமும் ஒண்ணு..  ஆங்க் .. ஒரு ஆஸ்பத்திரி இருக்குது. அங்கே போவார் யாரும் கிடையாது. டாக்டர் நல்ல மனுஷன். யாரை பார்த்தாலும் 'எப்பவும் சுறுசுறுப்பா இருக்கணும். சோம்பலுக்கு இடம் குடுக்கக்கூடாது சாப்பாட்டில் நிறைய காய்கறி சேர்த்துக்கணும். தாகம் எடுத்தால்தான் தண்ணீர் குடிக்கணுங்கிறது இல்லாமே தினமும் தண்ணீர் நிறைய குடிக்கணும்னு சொல்வார். வேறே வேலைவெட்டி எதுவும் இல்லாமே இதை ஏன் இவர் சொல்லிக்கிட்டு திரியுறார்னு நினைப்பேன். எனக்கு அஞ்சாம் கிளாஸ்லேயே  படிப்பு மண்டையில் ஏறலே. டவுண் பள்ளிக்கூடத்துக்கு வேறே தெண்டம் அழ வேண்டாம்னு எங்க அப்பா என் படிப்பை நிப்பாட்டிட்டு என்னை மாடு  மேய்க்க அனுப்பினார். அப்போ பிடிச்ச மாட்டு கயிறை இன்னும் நான் விடலே கடவுள் புண்ணியத்தில் சாப்பாட்டுக்கு எந்த குறைச்சலும் இல்லே. வண்டி ஓடுது. ஆனா பிள்ளைகளைப் படிக்க வைக்கிறேன்.  உங்களைப்பத்தி சொல்லுங்க. பிள்ளை எத்தனை ? குட்டி எத்தனை ?"
"ரெண்டுமே ஒண்ணொண்ணுதான் .. நீ எப்படி ?"
"படிப்பில்தான் நான் உங்களை விட குறைச்சல். இந்த விஷயத்தில் உங்களை விட மூணுமடங்கு அதிகம்." என்று சொல்லும்போதே கோபிக்கு சிரிப்பு வந்தது.
"இன்னிக்கு என் வீட்டில் தங்கி இரு.  சென்னையை நல்லா சுத்திப்பார்த்துட்டு அப்புறம் ஊருக்குப் போகலாம்"
இதைக்கேட்டதும், "அய்யய்யோ" என்ற பதற்றத்துடன் ,"நம்ம ஊர் தலைவர் என்னைக்கூப்பிட்டு, 'பட்டணத்தில் ஒரு அவசர வேலை இருக்குது. நான் போயே ஆகணும். ஒருவாரமாவே உடம்புக்கு நல்லா இல்லே. தனியா நான் மட்டும் போறத வீட துணைக்கு யாராச்சும் வந்தா நல்லா இருக்கும். என் செலவுலே கூட்டிட்டு போறேன். ஓட்டல்லே ரூம் போடுவேன். நீ அங்கே இரு. கோட்டையிலே என் வேலையை முடிச்சிட்டு ஓட்டலுக்கு வந்து உன்னை பார்க்கிறேன். ரெண்டு பேரும் அன்னிக்கு ராத்திரியே  நம்ம ஊருக்கு திரும்பிற லாம்'னு  சொன்னாக. அடடா. பெரியமனுஷன் கேட்டாங்களேன்னு துணைக்கு வந்தேன். ஓட்டல் வாசலில் என்னை அடையாளம் தெரிஞ்சுக்கிட்டு நீங்க கூப்பிட்டு பேசுனீங்க. இந்த சந்தோசம் போதும். இன்னொருவாட்டி வர்றப்ப வீட்டுக்கு வாரேன்" என்றான் கோபி.    
"சரி. உன்னோட சூழ்நிலை அதுன்னா நான் கம்பெல் பண்ண மாட்டேன். இதோ என் விசிட்டிங் கார்ட்  இதில் என் வீட்டு அட்ரெஸ், ஃ போன் நம்பர் எல்லாமே இருக்குது. நினைச்சப்ப வரலாம்.. பேசலாம் " 
"எனக்கு ஒரு சந்தேகம் ரொம்ப நாளா இருந்துச்சு. இன்னிக்கு அது தீர்ந்து போச்சு.?"
"அப்படியா? எப்படி ? எனக்குத் தெரியாமே அதை தீர்ச்சு வைச்சது யார் ? "
"நீங்க முதல்லே ஒருத்தரை பேட்டி எடுத்தப்ப அவர், 'ரசாயன உரம், ரசாயன கழிவுகளால் நிலம் மிகவும் கெட்டு அதோட சுய தன்மையை இழந்துட்டுது. விளைஞ்ச பயிரைக்காக்க பூச்சிமருந்து அடிக்கிறோம். அந்த மருந்தோட வீரியம் விளையற   பொருளிலும் கண்டிப்பா இருக்கும். அது நம்ம உடலுக்கு கேடு செய்யுது. நோயைக் கொண்டு வருது. மனுஷன் தண்ணீரையும் விட்டு வைக்கலே. அதை சுத்தம் பண்றதா சொல்லி கெமிக்கல்ஸ் கலக்கிறான். மனுஷங்களுக்கு நோயைக் கொண்டு வர்றதே நாம சாப்பிடற சாப்பாடு, காய்கறி, பழம், தண்ணீர் .. இதெல்லாம்தான் 'னு சொன்னார்"
"பேஷ்.. அவர் ஒரேயொரு தரம் சொன்னதை இவ்வளவு அழகா மனப்பாடமா சொல்றே."
"நீங்க அடுத்தாப்லே ஒரு டாக்டரை பேட்டி எடுத்தீங்க. அப்போ அவர், "எல்லாரும் நிறைய காய்கறியை உணவில் சேர்த்துக்கணும். தண்ணீர் நிறைய குடிக்கணும்னு சொன்னார். ரெண்டுபேர் பேச்சையும் யோசிச்சு பார்க்கிறப்ப தான் எனக்கு நம்ம ஊர் டாக்டர் எதுக்காக எல்லார்கிட்டயும் காய்கறி நிறைய சாப்பிடுங்க.. தண்ணீர் நிறைய குடிங்கனு சொல்றார்ங்கிறது புரிஞ்சுது. " என்று கண்களை சிமிட்டி குறும்பு சிரிப்புடன் சொன்னான் கோபி.
இதைக்கேட்டு ஒருநிமிட நேரம் அசந்து போனாலும், "எனக்கும் இன்னிக்கு ஒரு சந்தேகம் தீர்ந்துச்சு" என்றான்.
"அப்படியா ?"
"ஆமாம். எங்க தாத்தா எப்பவோ ஒருக்கத்தான் எங்க வீட்டுக்கு வருவார். ஆனா அவர் பேச்சில்  'கிராமத்து குசும்பு'ங்கிற வார்த்தையை அடிக்கடி சொல்வார். அது என்னனு அவர் போனபிறகு யோசிச்சு பார்ப்பேன். அவரைப் பார்க்கிறச்சே அதை கேட்க மாட்டேன். ஆனா இன்னிக்கு புரிஞ்சு போச்சு " என்று கண்களை சிமிட்டி குறும்பு சிரிப்புடன் சொன்னான் ராஜசேகர்.

Wednesday, July 05, 2017

பார்த்தேன்.. ரசித்தேன் .. (01)


இது ஒரு புதிய பகுதி ..திரையில் பார்த்து ரசித்த காட்சிகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். 
இசையால் வசமாகாத இதயந்தான் எது ?
அடம்பிடித்தோ அல்லது பசியினாலோ அழும் குழந்தைகூட ஒரு இசையைக் கேட்டதும் ( அது instrumental  ஆகட்டும் அல்லது vocal ஆகட்டும்.தனது அழுகையை ஒருநொடி நேரம் நிறுத்திவிட்டு அந்த ஒலியை உற்றுக் கேட்கின்றன.)
அந்தக்கால தத்துவப்பாடல்களைக் கேட்டு இன்றும் நாம் உருகுகிறோம்; இன்றைய இளந்தலை முறையினர் உட்பட.
அந்த பாடல்களின் வரிசையை பட்டியலிட ஆரம்பித்தால் அது நாட்கணக்கில் நீடிக்கும்.
உதாரணத்துக்கு ஒன்றிரெண்டு மட்டும்.
"மயக்கமா கலக்கமா "
"நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே "
"மனிதன் எல்லாம் தெரிந்து கொண்டான். வாழும்வகை புரிந்து கொண்டான் "
- இது போன்ற பாடல்களை ஒரு பேப்பரில் எழுதி, இந்தப் பாடல்களை இதற்கு முன்பாக கேட்டிராத நபர்களிடம் கொடுத்து படித்துப் பார்க்க சொல்லுங்க.
நூற்றுக்கு தொண்ணூறு பேரிடம் பெரிதாக எந்தவொரு reaction ம் இராது.
அதே பாடல்களை இசைவடிவில் கேட்க சொல்லுங்கள். உருகிப் போவார்கள். எந்தவொரு வார்த்தைக்கும் உயிரூட்டுவது இசைதான்.
அந்தக்கால .. பழைய தமிழ்ப்பாடல்கள் அத்தனையும் தேன்சொட்டுதான்.
சில பாடல்கள் விதிவிலக்காக இருக்கலாம்.
எங்கள் வீட்டில் பழைய தமிழ்ப்பாடல்கள்தான் ஒலித்துக் கொண்டிருக்கும். எப்போதாவது இப்போதைய பாடல்கள் டீவீயில் ஓடிக்கொண்டிருக்கும். அது எனது கஸின் கண்ணில் பட்டுவிட்டால் போதும் .. அவள் கேட்கும் முதல் கேள்வியே ; "உன்னாலே இதை எப்படி சகிச்சுக்க முடியுது. பாட்டுன்னா ஒரு இனிமை வேணும்  டான்ஸுன்னா இதில் நளினம் இருக்கணும். பேய்பிடிச்சு ஆடுற மாதிரி அத்தனையும் ஆடுது. கழைக்கூத்தாடிங்க .. ஜிம்னாஸ்டிக் பண்ற மாதிரி  வித்தை காட்டுதுங்க. நீ பார்த்துட்டு இருக்கிறதை பார்க்க எனக்கு சகிக்கலே. இப்போ இதை நீ ஆஃ ப்  பண்ணு. நான் இங்கிருந்து கிளம்பியதும் இதைப் போட்டு ரசிச்சு பாரு " என்பதுதான்.
சொல்லாத சொல்லுக்கு .. வார்த்தைகளுக்கு மதிப்பு அதிகம்.
திரையில் பக்கம் பக்கமாக வசனம் பேசி நடித்த நடிகர் நடிகையர் அநேகர்.
ஆனால் அவை எல்லாமே நம் மனசில் நிற்குமென்று சொல்லமுடியாது. ஆனால் ஏதோ ஒரு பாடல் காட்சியில் அவர்கள் காட்டி இருக்கும் முகபாவம் இன்றும் நம் மனதில் நிற்கும்.
அப்படி நான் ரசித்த காட்சிகள் இந்த பகுதியில் இடம்பெறும். நேரம் கிடைக்கும் போது நீங்களும் பாருங்கள்.
(இப்போ நினைச்ச நேரத்தில் விரும்பின பாடலை பார்க்கும் டெக்னோலஜி வசதி இருக்கிறதாலே நாம கொஞ்சம் rewind ல் old days - golden days க்கு பயணித்துவிட்டு வரலாம்தானே.)
முதலாவதாக நீங்கள் பார்க்கப் போவது - பாவை விளக்கு படத்தில் இடம் பெற்ற "காவியமா நெஞ்சில் ஓவியமா " என்ற பாடல்.
நடிகர் திலகம் MN ராஜம் அந்த காட்சியில் வலம் வருவார்கள்.
தாஜ்மஹாலை சுற்றிப்பார்க்க செல்லும் இருவரும் தங்களை ஷாஷகான் மும்தாஜாக கற்பனை செய்து கொண்டு தாஜ்மஹாலை வலம் வருவது போல   காட்சி வரும்.
எனக்கு MN ராஜம் மீது அப்படியொன்றும் பிரேமை கிடையாது. எனக்கு சரோஜா தேவி என்றால் உயிர்.
ஆனால்  "காவியமா நெஞ்சில் ஓவியமா " பாடலைப் பார்க்கும்போது இவர் எனது கனவுக்கன்னியை சற்றே பின்னுக்கு தள்ளி விட்டு விடுவார்.
முஸ்லீம் மன்னர்கள், ராணிகளுக்குரிய உடை நகைகளுடன் எந்தவொரு ஆர்ப்பாட்டமும் இல்லாமல்  நடந்து வருவார்கள் இருவரும்.
சிவாஜியின் வர்ணனையைக் கேட்டு ராஜம் தன்னுடைய முகத்தில் அப்படி யொரு வெட்கத்தைக் காட்டுவார்.
சிவாஜியின் கம்பீர நடைக்கு ஈடு கொடுத்து ராஜம் நாணத்துடன் கைகோர்த்து நடப்பார்.
ஷாஷகானும் மும்தாஜும் இப்படித்தான் உப்பரிகையிலும் தோட்டத்திலும் கை கோர்த்தபடி நடந்து சென்றிருப்பார்களோ என்று நினைக்கும் வண்ணம் அவர்கள் காலத்துக்கே நாம் சென்று விடுவோம்.
பாடல்வரிகளும் இசையும் காட்சி அமைப்பும் நம்மை அசையவிடாதபடி அங்கேயே கட்டிப்போட்டு விடும். அடுப்பில் பால் தீய்ந்த வாசனை கூட உங்களை அசைக்காது.
கே.வி.மகாதேவன் இசையில் திருச்சி லோகநாதன் மற்றும் சுசிலா பாடிய அருமையான பாடல்
பாடல் முழுக்க ஒரே ஒரு இடத்தில் மட்டுமே பதிவு செய்யப்பட்டிருக்கும். ஒரு வரிக்கு ஒரு காடு .. ஒரு மலை... ஒரு நதி.. அரைகுறை உடை என்று எந்த சமாச்சாரமும் கிடையாது
சுப்ரபாதம் கேட்கிறமாதிரி தினமும் நான் போட்டுப்பார்க்கும் பாடல்களில் இது முதல் இடத்தில் இருக்கிறது.
நீங்களும் பாருங்க... யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம். பாடல் வரிகள் கீழே ....

காவியமா நெஞ்சின் ஓவியமா
அதன் ஜீவியமா தெய்வீக காதல் சின்னமா

முகலாய சாம்ராஜ்ய தீபமே
சிரித்த முகத்தோடு நினைவில் கொஞ்சும் ரூபமே

மும்தாஜ்ஜே முத்தே என் பேகமே
பேசும் முழு மதியே என் இதய கீதமே

என்றும் இன்பமே பொங்கும் வண்ணமே
என்னை சொந்தம் கொண்ட தெய்வமே

அன்பின் அமுதமே அழகின் சிகரமே
ஆசை வடிவமே உலகின் அதிசயமே
என்னாளும் அழியாத நிலையிலே
காதல் ஒன்றை தான்வாழும் இந்த உலகிலே

கண்முன்னே தோன்றும் அந்த கனவிலே...
உள்ளம் கலந்திடுதே ஆனந்த உணர்விலே

கனியில் ஊறிடும் சுவையை மீறிடும்
இனிமை தருவதுண்மை காதலே

காலம் மாறினும் தேகம் அழியினும்
கதையில் கவிதையில் கலந்தே வாழுவோம்
காவியமா நெஞ்சின் ஓவியமா
அதன் ஜீவியமா தெய்வீக காதல் சின்னமா

Tuesday, July 04, 2017

படிக்க ஒரு நிமிடம் / ஒரு நொடி போதும். யோசிக்க ?.. (26)

Image result for cartoon of two friends talking
"எனக்கொரு டவுட் மச்சி "
"சொல்லித்தொலை "
"என்னவொரு பிரச்னைனாலும் கஷ்டம்னாலும்  நம்ம வீட்டு பெரிசுக கொஞ்ச நாள் போனா எல்லாம் சரியாயிடும்னு சொல்றாங்களே. கொஞ்சநாள்லே சரி பண்ற பிரச்னையை இப்பவே சரி பண்ண முடியாதா ?"
"அடே வாத்து... பிரச்னை ஏதும் சால்வ் ஆகாது.  ஆனா அது நமக்கு பழகிப் போயிடும். அதைப்பத்தி கேர் பண்ணாம இருந்திடுவோம். இப்போ உனக்கு ஏன் இந்த டவுட் "
"காலேஜ் போயிட்டு வர வண்டி வேணும். வாங்கித் தாங்கனு வீட்டில் கேட்டேன். ஆஸ்டல்ல தங்கிக்கோனு சொன்னாங்க.. அது எனக்கு சரிப்படாதுனு சொன்னேன். கொஞ்ச நாள் ஆனா சரியாய் போயிடும்னாங்க. அது எப்படினு ஃபீல் பண்ணிட்டு இருந்தேன். நீ சொன்னப்பறம்தானே மேட்டர் புரியுது."

Sunday, July 02, 2017

Scanning of inner - heart ( Scan Report Number - 154)

Image result for cartoon of  two old  persons of tamilnadu
      சிந்திச்சு பார்த்து செய்கையை மாத்தணும்.!
"குமாரநாதா " என்ற குரல் கேட்டதுமே வாசலுக்கு விரைந்து வந்தவர், "ஏம்ப்பா ரங்கா  .. உள்ளே வர்றதுதானே!" என்று கேட்டபடியே கதவைத் திறந்தார். 
"வீட்டில் வேலை எதுவும் இல்லாமே சும்மா இருந்தால் கிளம்பி வாயேன். அப்படியே பார்க் வரை வாக்கிங் போயிட்டு வரலாம்"
மனுஷன் ஏதோ பிரச்னையில் இருக்கிறார் என்பதை நொடியில் புரிந்து கொண்ட குமரன், "நம்மளப் போல பென்சன் கேஸுங்க எல்லாருமே இருபத்து நாலுமணி நேரமும் வீட்டில் சும்மா இருக்கிறவங்கதானே. அதைக் குத்திக் காட்டிதானே வீட்டிலுள்ள நண்டு நசுக்கு கூட நம்மை கலாய்க்குதுங்க. வா. எனக்கும் பொழுது போகணுந்தானே. வா. பார்க் பெஞ்சில் கொஞ்ச நேரம் உட்கார்ந்துட்டு அப்படியே கோயிலுக்கும் போயிட்டு வரலாம். இன்னிக்கு பிரதோஷம் ஆச்சே !"
"நானே ஒரு  தோஷம். எனக்கு  பிரதோஷம் ஒரு கேடா ?"
"என்னப்பா ஆச்சு.   ரொம்பவும் நொந்து  போயிருக்கே போலிருக்கு. வீட்டுக்குள் வராமல் வாசலில் நின்னு நீ குரல்  குடுத்தப்பவே நீ ஏதோ அப்செட் ஆகி இருக்கிறதை புரிஞ்சுக்கிட்டேன். என்ன விஷயம் ?"
"எனக்கு வீட்டில் இருக்கிறது பிடிக்கலே "
"ஏன்?.. வீடு என்ன பண்ணுச்சு. ?"
"எனக்கு வீட்டில் இருக்கிறது பிடிக்கலேனு சொல்றதைவிட நான் வீட்டில் இருக்கிறது மத்தவங்களுக்குப் பிடிக்கலேன்னு சொல்றதுதான் பொருத்தமா இருக்கும்."
"மருமக ஏதாவது சொன்னாளா ?"
"அவ எதுவும் சொல்லலே. என் பிள்ளைதான் இன்னிக்கு வெளிப்படையாவே சொல்லிட்டான். உங்களுக்கு வேலை வெட்டி இல்லேங்கிறதுக்காக அரசியல் பேசி வீட்டிலுள்ளவங்க நிம்மதியைக் கெடுக்காதீங்க. வேலை வெட்டி எதுவும் இல்லாதவங்ககிட்டே உங்க உதவாக்கரை தத்துவத்தை எல்லாம்  சொல்லுங்க எங்க நிம்மதியைக் கெடுக்காதீங்கனு சொல்லிட்டான்."
"நீ வீட்டில் அரசியல் பேசினியா? உனக்கு அதில் இன்ட்ரெஸ்ட் கிடையாது அது எனக்கு நல்லாவே தெரியும்.  என்னதான் நடந்துச்சு.?"
"நாம ஹை ஸ்கூலில் படிக்கிறப்ப நமக்கு ஹிந்தி பாடம் உண்டுதானே.?"
"ஆமாம்..1967 ல் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் வந்தப்ப அந்த பாட வகுப்பு நின்னு போச்சு."
"நமக்கு ஹிந்தி கிளாஸ் எடுத்த ஜார்ஜ் ஸார், "நான் வாங்கிற சம்பளத்துக்கு விசுவாசமா உங்க முன்னாடி நின்னு ஒரு நாப்பது நிமிஷம் நான் குரைச்சிட்டு போயிடறேன் கேக்கிறதும் கேக்காததும் உங்க இஷ்டம்னு சொல்வார். அதைக் கேட்டு ஒட்டு மொத்த க்ளாஸும் சிரிக்கும். மறக்கவே முடியாத நாட்கள் .."
"அப்போ நமக்கு ஹிந்தி கிளாஸ் இருந்துச்சு. டெஸ்ட் இருந்துச்சு . பாஸோ ஃபெயிலோ அதைப் பத்தி எல்லாம் யாருக்கும் பிரச்னை கிடையாது.அதில் வாங்கிற மார்க்கை அடுத்த நிலைக்குப் போறதுக்கான தகுதியாக அப்போ இருக்கலே. கத்துக்கொடுக்கிறோம்.. படிச்சா படி. வேண்டாட்டா எக்கேடோ கெட்டுப் போ என்ற நிலைமைதான் இருந்துச்சு .."
"இன்னொரு முக்கியமான விஷயம் இருக்கே. "ஆராதனா"னு ஒரு ஹிந்திப் படம் தமிழ் நாட்டில் சக்கை போடு போட்டுச்சு. மொழி தெரியாமல் அதை ரசிச்சு பார்த்தவங்க ஏராளம். அந்தப் படத்தை பார்த்தப்ப "ஜார்ஜ் ஸார் ஹிந்தி கத்துக் குடுத்தப்ப ஒழுங்கா கத்து தெரிஞ்சிட்டு இருந்தா இன்னிக்கு இந்தப் படத்தோட வசனத்தை நாம நல்ல ரசிச்சிருக்க முடியும்னு அப்போ நாம புலம்பு வோம்தானே. "
"ஆமாம்டா.. அதெல்லாம் கோல்டன் டேஸ்"
"அப்புறம் நாம வேலையில்  சேர்ந்தப்ப ஆபீஸிலிருந்து நம்மள ஹிந்தி கிளாஸ் அனுப்பினாங்க. ஆபீஸ் செலவிலே .. ஆபீஸ் நேரத்திலே. பாஸ் பண்ணினா ஒரு இன்கிரிமெண்ட் உண்டு.  ஆனா பெயிலான எந்தவொரு பனிஷ்மெண்டும் கிடையாது. ஹிந்தியில்தான் ஆபீஸ் வேலை நடக்கணும்னு நம்மள யாரும் கட்டாயப்படுத்தலே..ஆமா.. இதுக்கும் உன் பிரச்னைக்கும் என்னடா சம்பந்தம்." என்று வியப்புடன் கேட்டார் குமாரநாதன்.
"இன்னிக்கு காலையில் வீட்டில் ஹிந்தி பத்தி ஏதோ பேச்சு வந்துச்சு. அப்போ நான் "வெளிநாட்டு மொழியை காசு குடுத்து கத்துக்கிறாங்க. ஹிந்தி இந்திய மொழியில் ஒண்ணுதானே. ஸ்கூல் நேரத்தில், அதுவும் எந்தவொரு எக்ஸ்ட்ரா செலவும் இல்லாமல் ஒரு மொழியைக் கத்துக்குடுக்கிறப்ப அதை கத்து தெரிஞ்சுக்கிறதை விட்டுட்டு ஏன் சண்டை போடணும். "கத்துக் குடு . கத்துக்கிறோம். ஆனா அதை அடுத்த நிலைக்கான தகுதித் தேர்வாக கட்டாயப் படுத்தக் கூடாது. அதில்தான் எல்லா பேச்சு வார்த்தையும் இருக்கணும்னு கண்டிஷன் போடக்கூடாதுனு எல்லாரும் சேர்ந்து ஒருகண்டிஷன் போட்டுட்டு பைசா செலவில்லாமல் ஒரு மொழியை கத்துக்கிற  படிக்கிற சான்ஸை ஏன் நழுவ விடணும்னு கேட்டேன். நாம படிக்கிற காலத்தில் வீம்புக்காக படிக்காமே இருந்துட்டு பின்னாலே அதை நினைச்சு நான் வருத்தப்பட்டதை எடுத்து சொன்னேன். அது என் பிள்ளைக்கு பிடிக்கலே. வீட்டுக்குள்ளே நான்  அரசியல் பண்றதா வாயில் வந்தபடி பேசிட்டான். இதுக்கு மேலே ஒருத்தர் முகத்தை ஒருத்தர்  பார்க்காமே அங்கே இருக்கிறது எனக்குப் பிடிக்கலே. அதான் ஏதாவது ஒரு ஹோமில் அட்மிஷன் கேட்கலாம்னு இருக்கிறேன். உனக்குத் தெரிஞ்ச நல்ல ஹோம் ஏதாவது இருந்தால் சொல்லேன் !"
"காலம் கலிகாலம். கடனை வாங்கியாவது லீவுநாளில் கூட பிள்ளைகளை 'அந்த கிளாஸ் போ .. இந்த க்ளாஸ் போ'னு படுத்துறங்க. விட்டுத் தள்ளுடா.. நம்ம காலம் முடியப் போகுது. யாரோ எக்கேடோ கெட்டுப் போகட்டும்." என்று வெறுப்புடன் சொன்னார் குமரன்