Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Tuesday, July 18, 2017

Dear Friends,

Image result for image of kamarajar
இங்கு சில விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பி எனது எண்ணங்களை பதிவு செய்கிறேன். உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது ரிலாக்ஸ்டா உட்கார்ந்து படித்தால் போதும்.
வாய் நிறைய, "கண்ணம்மா .. கண்ணம்மா" என்று என்னை அழைக்கும் அலுவலக தோழிக்கும் எனக்கும் இடையில்   அடிக்கடி நடக்கும் வாக்கு வாதம் இது. 
தோழி  சொல்லும் டயலாக் : 
"கண்ணம்மா .. நாம பிறந்ததே வேஸ்ட்தான்"
"இப்பதான் தெரிஞ்சுதா? எனக்கு எப்பவோ தெரியும். நிறைய விஷயங்களைப் படைச்சதால் கை வலித்து, மனசு சோர்ந்துபோன நேரத்தில் கடவுள் நம்மைப் படைச்சிருப்பார். இல்லாட்டா நம்ம தலையெழுத்தை அவர் எழுதும்போது அவர் பேனாவில் இங்க் தீர்ந்து போயிருக்கணும். அதனால் எதையோ கன்னாபின்னானு கிறுக்கி வச்சிட்டார். அதை விடுங்க. அது முடிஞ்சு போன விஷயம். இப்ப என்ன பிரச்னை ?"
"ஒவ்வொருத்தர் இருந்த இடத்தில் இருந்தபடியே எது எதையோ சாதிச்சிடறாங்க. நாம நினைக்கிற சின்ன சின்ன விஷயம் கூட நிறைவேற மாட்டேங்குது.  ஒண்ணுமில்லே கண்ணம்மா.. ஒருநாளும் கேன்டீன் பக்கமே போகாத எனக்கு இன்னிக்கு எதையாவது சாப்பிடணும் போல இருந்துச்சு. வடை சாப்பிடலாம்னு நினைச்சு கேன்டீன் போனேன். வடை இல்லே. தீர்ந்துட்டுனு சொல்லிட்டான்.   ஆப்டர் ஆல் ஒரு வடை. அதை சாப்பிடற லக் கூட இல்லையே  "
"தினமும் போகிற பழக்கம் இருந்திருந்தால் நீங்க வருவீங்கன்னு எடுத்து வச்சிருப்பான். எப்பவாவது போனால் இப்படித்தான். நீங்க வருவீங்கன்னு அவனுக்கு பல்லி சொல்லியிருக்குமா என்ன ?"
"அம்மா .. தாயே. உங்ககிட்டே போய் சொல்ல வந்தேனே. என்னை.. என்னை .." என்றபடி அங்கிருந்து போய்விடுவார்கள்.
தோழி வழக்கமாக சொல்லும்  "ஒவ்வொருத்தர் இருந்த இடத்தில் இருந்தபடி எது எதையோ சாதிச்சிடறாங்க. நாம நினைக்கிற சின்னவிஷயம் கூட நிறைவேற மாட்டேங்குது" என்ற டயலாக்கை  மூன்று நாட்களுக்கு முன்பாக (அதாவது 15.07.2017  அன்று ) பலமுறை சொல்லிக் கொண்டேன்.
கடந்த சில நாட்களாகவே வசந்த் டீவியில். "கர்மவீரர் காமராஜருடன் நீங்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம் இருந்தால் அது குறித்த விவரங்களை எங்களுக்கு   புகைப்படத்துடன் எழுதி அனுப்புங்கள்" என்ற அறிவிப்பு திரையில் ஓடிக் கொண்டிருந்தது.
போட்டோ எடுக்கணும்கிற அறிவுதான் இல்லாமே போச்சு. காமராஜர் பற்றிய நினைவலைகளை நம்ம பிளாக்கில் 15 ந் தேதியன்று பதிவு செய்யலாம் என்று நினைத்திருந்தேன்.
ஆனால் 15 ந் தேதி அதிகாலையிலேயே எங்கள் அம்மா இறந்து விட்டதால் எனது வருத்தம் இரட்டிப்பானது. (அம்மாவின் மறைவு ஒருபுறம். கர்மவீரரின் பிறந்தநாள் அன்று அவர் குறித்த நினைவுகளை பதிவு செய்ய முடியாமல் போய்விட்டதே என்ற வருத்தம் மறுபுறம்.)
எங்கள் குடும்பத்தினரின் பெருமதிப்பிற்குரிய தலைவர் இந்த படிக்காத மேதை. இவர் பற்றி எங்கள் அப்பா அடிக்கடி சொல்லும் ஒரு வார்த்தை "இந்த மனுஷன் மட்டும் இலவசக் கல்வினு ஒண்ணைக் கொண்டு வந்திருக்காட்டா நானோ .. நீங்களோ பள்ளிக்கூடம் பக்கமே போயிருக்க முடியாது. வசதியான வீட்டுப் பிள்ளைங்க மட்டுமே படிக்க முடியுங்கிற நிலைமையை மாத்தி எல்லாரும் படிக்க வழி பண்ணின புண்ணியவாளன். அதுமட்டும் இல்லே. பள்ளிக்கூடத்தில் மதிய உணவு திட்டத்தைக் கொண்டு வந்தவரும் இவர்தான்."
எனது தாத்தா இறந்தபோது என் அப்பா கண்கலங்கினாரே தவிர, அவர் அழுது நான் பார்க்கவில்லை. ஆனால் திரு. காமராஜின் மறைவு செய்தி கேட்டு வாய்விட்டு கதறி அழுதார்.
கடவுள் என் முன்னால் தோன்றி "இறந்து போன யாராவது இருவரை இப்போது உயிர்ப்பித்துக் கொடுக்கிறேன். யார் வேண்டும் சொல்" என்று கேட்டால், காமராஜரும் இந்திராகாந்தியும் திரும்பவும் வர வேண்டும் என்பேன். (அம்மா அப்பாவைக் கேட்கமாட்டியா என்று நீங்கள் கேட்கலாம். அவர்களால் எங்கள் வீடு முன்னேறும். இவர்களால் நாடு முன்னேறும். இவர்கள் திரும்பவும் பிறந்து வந்தால் அதை பார்த்து அப்பா ஆனந்தப்படுவார்.)
நாங்கள்  பள்ளிக்கூடத்தில் படித்த நாட்களில் அங்கு கொடுக்கப்படும் மதிய உணவை சாப்பிட்டிருக்கிறோம். (ஏழைக்குழந்தைகள்தான் சாப்பிட வேண்டும்  என்று இல்லாமல் பள்ளியில் படிக்கும் யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம். எதோ ஒன்றை செஞ்சு போட்டோம்னு இல்லாமே ரொம்ப சுவையா செஞ்சிருப்பாங்க. ஆனா அது எவ்வளவுதான் டேஸ்டா இருந்தாலும் நாங்க மூணுபேரும் வீட்டுக்கு ஓடிவந்து அம்மா செஞ்சு வச்சிருக்கிற சாப்பாட்டில் ஒரு பிடி சாப்பிட்டு விட்டுத்தான் க்ளாஸுக்கு ஓடுவோம். அப்பா எப்போதும் ஸ்கூலுக்கு அருகில்தான் வீடு பார்ப்பார். அதுவும் ஸ்கூல் பெல் அடித்தால் அது எங்கள் வீட்டுக்கு கேட்கும் டிஸ்டன்ஸில்தான் வீடு பார்ப்பார். நாங்கள் படித்த அதே ஸ்கூலில் எங்கள் சித்தி டீச்சர் ஆக இருந்தார்கள். மதிய உணவு வழங்குவதை மேற்பார்வை செய்யும் பொறுப்பு அவர்களுக்கு. ஸ்கூலில் சாப்பிட்டுவிட்டு வீட்டுக்கு நாங்கள் போவதையும் வீட்டில் சாப்பிடுவதையும் தெரிந்துகொண்ட சித்தி எங்களைக் கூப்பிட்டு "வயிறு நிறைய வேணுங்கிறதை இங்கேயே சாப்பிடலாமே.. ஏன் வீட்டுக்கு போறீங்க?" என்று கேட்பார்கள்.
"அம்மா செய்றதுதான் எங்களுக்குப் பிடிக்கும் " என்போம்.
(இப்பல்லாம் சின்ன குழந்தைங்க கூட கிச்சனில் போய் அவங்களுக்கு தேவை யான சாப்பாட்டை செய்து சாப்பிடறாங்க. எனது சகோதரிகள், அவர்களின்   கல்யாணத்துக்கு முன்புவரை சமையலறைபக்கமே போனது கிடையாது. 2001ல்தான்   நான் சமைக்கவே பழகினேன். வீட்டுவேலை அத்தனையையும் நாங்கள் செய்வோம் சமைப்பதைத்தவிர. அதுமட்டுமல்ல. எந்த கல்யாண   விருந்துக்கு போய் விதவிதமான உணவுகளை ருசி பார்த்திருந்தாலுங்கூட வீட்டுக்கு வந்து எங்கள் வீட்டு சாப்பாட்டை ஒரு பிடி வாயில் போட்டால்தான் எங்களுக்கு திருப்தியாக இருக்கும். இந்தப் பழக்கம் இன்றுவரை எனக்கும் என் சகோதரிக்கும் உண்டு.)
ஸ்கூலில்  மதியஉணவில் புளியோதரை கொடுப்பாங்க. சூப்பரா இருக்கும்.
காமராஜரின் 63வது பிறந்த தினத்தன்று அவர் பாளையங்கோட்டைக்கு (திருநெல்வேலி) வந்திருந்தார். அவரை வரவேற்க எங்கள் பள்ளியின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நான் படித்த ஸ்கூலில் நான்தான் ஸ்கூல் பீப்பிள் லீடர். அதனால் என்கையில் மலர்மாலை மற்றும் பூச்செண்டு ஒன்றை கொடுத்து மற்ற அறுபத்து இரண்டு பெண்கள் கையில் ஆளுக்கொரு மலர் செண்டு கொடுத்து அவர் வரும் இடத்துக்கு அழைத்து சென்றார்கள். அவர் வந்ததும் அவருக்கு நான் மாலை அணிவித்து, அவருடைய கையில் பூச்செண்டு கொடுத்தேன், மற்ற மாணவிகள் அவருடைய கைகளில் மலர் செண்டை கொடுத்தார்கள். அத்தனையையும் பொறுமையாக நின்று பெற்றுக் கொண்டார். அப்போது நான் பள்ளிக்கூட மாணவி. அவரின் அருமை பெருமை எதுவும் எனக்கு தெரியாது. ஸ்கூலில் சொன்னார்கள் செய்தேன். அவ்வளவு தான்.
அந்தசமயத்தில் எங்கள் அப்பா காட்பாடியில் வேலை செய்து கொண்டிருந்தார். நெல்லைக்கு காமராஜர் வரும் விஷயம் அப்பாவுக்கு தெரியாது. (இப்போ எந்தவொரு செய்தியையும் நொடிப்பொழுதில் SMS அனுப்பிடலாம். அப்போ போன்கூட கிடையாது). எங்களைப் பார்க்க லீவில் அப்பா நெல்லைக்கு வந்ததும் நடந்த விஷயத்தை அவரிடம் ஒப்பித்தோம். உடனே அப்பா கேட்ட கேள்வி "போட்டோ எடுத்தாங்களா?" என்பதுதான்.
"தெருவில் வச்சு எடுக்கலே. முனிசிபல் ஆபீசில் அவங்க மீட்டிங்கில் பேசினாங்க. அப்ப அவரை  போட்டோ எடுத்தாங்க" என்றேன்.
அப்பாவுக்கு வந்த கோபத்தைப் பார்க்க வேண்டுமே. "முட்டாள் ஜென்மமே. ஒரு போட்டோகிராபர் கிட்டே சொல்லி போட்டோ எடுக்கணுங்கிற அறிவு கூட இல்லையா?" என்றார். அப்போ அதை நான் சீரியஸ் விஷயமாக எடுத்துக் கொள்ளவில்லை.   பின்னாளில் அவரது அருமை தெரிந்தபின் ஒரு போட்டோ எடுக்காமல் விட்டுட்டோமே என்று வருத்தப்பட்டேன். இன்றும் அதை நினைத்து  வருந்துகிறேன். (போட்டோ எடுக்கணும்ங்கிற சாதாரண விஷயம் கூட அப்போதைய தலைமுறைக்கு தெரியாது. இன்றைக்கும் எனக்கு நிறைய விஷயங்கள் தெரியாது. TAB ஆப்ரேட் பண்ண தெரியாது. இரண்டு வருடங்களுக்கு முன்பு எனது பிறந்த நாள் பரிசாக எனது தம்பி  காஸ்ட்லீ TAB ஒன்றை எனக்கு கொடுத்தான். என்ன செய்யணும்னு சொல்லியும் கொடுத்தான். அவன் கொடுக்கும்போது மண்டையை ஆட்டி எல்லாம் புரிஞ்ச மாதிரி கேட்டுக் கொண்டேன். ஆனால் எனக்கு அதை ஹேண்டில் பண்ண தெரியவில்லை.  எங்கள் வீட்டுக் குழந்தைகள் சொல்லியும் தந்தார்கள்.எனக்கு மண்டையில் ஏறவில்லை. ஏதாவது போன் வந்தால் அதை அட்டென்ட் பண்றதா நினைச்சு ஆப் பண்ணிக் கொண்டிருந்தேன்.  போன் பண்ணினவர்கள் வீட்டிலுள்ள மற்ற நபர்களுக்கு போன் பண்ணி  எதனால் நான் போன்காலை அவாய்ட் பண்றேன் என்று விசாரிக்க ஆரம்பித்து விட்டார்கள். இது நமக்கு சரிப்படாது என்று அதுக்கு டாட்டா சொல்லிட்டேன். இன்றைக்கு எங்கள் வீட்டு மூன்றுவயசுக் குழந்தை அதுவாகவே TABல் rhymes கேட்கிறது. கார்ட்டூன் படங்கள் பார்க்கிறது)  ஹூம்.. கலிகாலம்.
இனி மெய்ன் பிக்ஸருக்கு வருவோம்.
பெருந்தலைவர் காமராஜர் மாதிரி இனியொரு தலைவர் பிறந்து வருவார்களா ?
தலைவர்கள் உருவாகுவதில்லை .. பிறக்கிறார்கள்.
எல்லாருமே மற்றவர்கள் செய்யும் தவறுகளை சொல்லி சொல்லியே பதவிக்கு வருகிறார்கள். பதவிக்கு வந்ததும் அவர்கள் செய்யும் நல்ல காரியம் - யாரை இவர்கள் குறை சொன்னார்களோ அவரை "ரொம்ப நல்லவர்" ஆக்குவதுதான்.
மக்களுக்காக மக்களுக்காக என்று சிலர் சொல்வதெல்லாம் அவர்கள் பெற்ற மக்களுக்காகத்தான் என்பதை நாடு ரொம்பவும் தாமதமாகப் புரிந்து கொள்கிறது.
யாராவது ஒரு நபரின் பெயரை சொல்லி "அவர் மாதிரி வருமா!" என்று சொல்லிப் பாருங்கள். அவர் செய்த தகிடு தத்தங்களை அவருடைய நிழலாக இருந்தவர்களே லிஸ்ட் போட்டு சொல்வார்கள்.
அதைக் கேட்கும்போது நான் யோசிக்கும் ஒரு விஷயம் ஒரு நல்ல தலைவனை அடையாளம் கண்டுகொள்வது எப்படி என்பதுதான். நான் கண்டு பிடித்த விடை - ஒரு நபர் கையில் பொறுப்பை கொடுக்கணும். அடுத்த தேர்தல் வரும்போது  "இவர் நிற்கும் தொகுதியில் நாங்கள் யாரும் போட்டியிட மாட்டோம். இவரே மறுபடி ஜெயித்து வரணும்" என்று எதிர் கட்சியினர் சொல்ல வேண்டும். அப்படி ஒரு நபர் பிறந்து வருவாரா? பொறுத்திருந்து பார்ப்போம்.
தனிப்பட்ட முறையில் எனக்கு திரு. ஸ்டாலின் மீது மிகுந்த மரியாதை உண்டு.
ஒரு பொதுத் தேர்தலின் போது Polling Officer ஆக பணி புரியும் வாய்ப்பு கிடைத்தது.  அதுதான் எனது முதல் அனுபவம் என்பதால் வகுப்பில் கொடுத்த இன்ஸ்ட்ரக்ஸன் எல்லாவற்றையும் மனப்பாடம் செய்து அதை அப்படியே நடைமுறைப்படுத்திக் கொண்டிருந்தேன். என்னுடன் பணிபுரிந்தவர்கள் எனக்கு  அவர்கள் ஒத்துழைப்பை நல்ல முறையில் தந்தார்கள். அந்த இடத்தில் இருந்த கட்சிக்காரர்கள் (AGENTS) அனைவரிடமும் பாரபட்சம் பார்க்காமல் ரொம்பவும் கெடுபிடியாக நடந்து கொண்டேன்.
வாக்குப் பதிவு நடைபெறும் இடத்துக்கு திரு. ஸ்டாலின் வந்தார். அவரைத் தொடர்ந்து நிறைய பேர் அவர் பின்னால் வந்தார்கள்.
அதை பார்த்த நான் வாசலில் நின்று கொண்டு, "அவர் உள்ளே வரலாம் .. மற்ற யாரும் வர அனுமதி இல்லை" என்றேன்.
என் கைகளைத் தட்டி விட்டு விட்டு ஒரு கும்பல் உள்ளே நுழைந்தது. நான் தடுத்ததையும் மற்றவர்கள்  என் கைகளைத்தட்டி விட்டு விட்டு உள்ளே வந்ததையும்  பார்த்த ஸ்டாலின் கண் ஜாடை காட்டி அத்தனை பேரையும் வெளியே போக சொன்னார்.
அங்கிருந்த ஏஜெண்ட்ஸ் கிட்டே பேசிய அவர், என் அருகில் வந்து கைகுவித்து "ரொம்ப நன்றிம்மா !" என்று சொல்லிவிட்டு சென்றார்.
அந்தவொரு செயல் அவர்மீது எனக்கு மரியாதையை ஏற்படுத்தியது. அவர் நினைத்திருந்தால் "எல்லாம் எங்களுக்கு தெரியும் உன் வேலையைப் பாரும்மா" என்று சொல்லி இருந்திருக்க முடியும். ரூல்ஸ்ஸை நான் மதிப்பது தெரிந்து அவரும் அதற்கு மதிப்பு கொடுத்து நடந்து கொண்ட செயல் அவர் மீது எனக்கு மிகப் பெரிய மரியாதையை ஏற்படுத்தியது.
தனிப்பட்ட முறையில் இன்றும் அவரை நான் மதிக்கிறேன்.
நம்முடைய சொந்தவேலை ஒருபுறமிருக்கட்டும். நல்லதொரு தலைவனை தேடும் முயற்சியில் நாம் இறங்கலாம்.

No comments:

Post a Comment