Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Sunday, October 30, 2016

ஹாய் குட்டீஸ், ( PUZZLE - 09)

புதிர் எண் - 8ன் விடை = " உனது மொபைலை ஆன் பண்ணினால் அது எந்த ஏரியா என்பது டிஸ்ப்ளே ஆகும் " என்றார் அப்பா .
இனி இந்த வார புதிருக்கு விடை தேடுங்கள்.

புதிர் எண் - 9
Image result for images of 60th birthday balloons

தனது நண்பரின் தந்தைக்கு அறுபதாவது வயது கொண்டாட்டவிழா என்றுசொல்லி தனது மகள் லாவண்யாவை விழாவுக்கு அழைத்து சென்றார் பாலா. "போனமாதம் நியூ இயர் பார்ட்டிக்குப் பிறகு இப்பத்தான் மறுபடி பார்க்கிறோம்" என்று ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டார்கள். பிறந்த நாள் கொண்டாடும் நண்பர் அங்கு வந்திருந்தவர்களை வரவேற்று "எனது 15 வது பிறந்த தின விழாவுக்கு வந்த உங்கள் அனைவரையும் மகிழ்ச்சியுடன் நான் வரவேற்கிறேன்"என்றார்அதைக் கேட்டு லாவண்யாவைத் தவிர  அங்கு வந்திருந்த யாருமே குழப்பமோ அதிர்ச்சியோ அடையவில்லை. "என்னாப்பா .. அவருக்கு 60 வது  வயதுன்னு சொன்னீங்கஅந்தத் தாத்தாவோ அவரோட  15 வது பிறந்த தின விழா என்று சொல்கிறாரே  " என்று அப்பாவிடம் சந்தேகம் கேட்டாள் லாவண்யாநாம் எந்த மாதம் எந்த தேதியில் பிறந்தோமோ அதுதானே நமது பிறந்த தினம்அந்த வகையில் பார்த்தால் அறுபதாவது வயது, 15-வது பிறந்ததினம், இந்த இரண்டுமேசரிதான்" என்றார் பாலா  . இதைக் கேட்டு லாவண்யா இன்னும் குழப்பத்தில் இருக்கிறாள்இரண்டும் சரி என்பது எப்படி என்பதைப் புரிய வைக்க உங்களால் முடியுமா ?

Friday, October 28, 2016

DEAR VIEWERS,

Image result for images of diwali


அனைவருக்கும் அன்பின் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் !

Tuesday, October 25, 2016

DEAR VIEWERS,


நேற்று (24.10.2016 அன்று) நான் பதிவு செய்திருந்த சினிமா பற்றிய விஷயங்களைப் படித்த எனது நெருங்கிய தோழி என்னை போனில் தொடர்பு கொண்டு "குமுதம்  பத்திரிக்கையில் வரும் சினிமா விமரிசனம் ரொம்ப நேர்மையா இருக்கும்னு சொல்றீங்களே. அப்படின்னா மத்ததில் நேர்மை இருக்காதா ?" என்று ஒரு கொக்கி போட்டாள். இதே சந்தேகம் உங்களில் சிலருக்கு வந்திருக்கலாம்.அதனால் அவளுக்கு சொன்ன அதே பதிலை இங்கு பதிவு செய்கிறேன்.
"இப்போநான் சொல்லப்போறது  ஒரு உதாரணம்தான். ஒரு படம் வெளி வந்திடுச்சு. படத்தோட ஹீரோ இல்லாட்டா ஹீரோயின் தன்னோட ரோலை சொதப்பிட்டாங்கனு வச்சுக்கோங்க. அதற்கு இந்த இரண்டு பத்திரிக்கையின் விமரிசனமும் கீழே உள்ள மாதிரிதான் இருக்கும்.
1. விகடன்: எப்பேர்ப்பட்ட வாய்ப்பு. அதை சரியான முறையில் பயன் படுத்தி இருந்தால் திரையுலகில் இவருக்கென்று ஒரு நிரந்தர இடம் கிடைத்திருக்குமே !
2. குமுதம் : கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளத்  தெரியாத ஒரு நட்சத்திரம் !
இரண்டுபேர் நோக்கமும் ஒன்று - அந்த ஸ்டாரின் திறமைக்குறைவை சுட்டிக்காட்டுவதுதான்.  ஒருத்தர் கொஞ்சம் பாலிஷா வாழைப்பழத்தில் ஊசி ஏத்தற மாதிரி ஏத்துவார். அடுத்தவர் "வெட்டு ஒண்ணு ; துண்டு ரெண்டு " என்கிற ரீதியில் சொல்லியிருப்பார்.
தமிழ் சங்கப்பாடல் ஒன்றில் ஒரு இலக்கிய நயமிக்க ஒரு சில வரிகள் : தலைவனைப் பிரிந்து, தான்படும் கஷ்டங்களை எல்லாம் தலைவனுக்கு எடுத்துரைக்க விரும்பும் தலைவி, தனக்காக தூதாக செல்பவரிடம், " என் கஷ்டத்தை, அவர் மனசு கஷ்டப்படாத வகையில் அவருக்கு எடுத்து சொல்  !" என்பாள். இது ஒருவருடைய விமரிசன பாணி.
"இதைப் பாரு.. நெத்தியிலே மட்டுமில்லே; உனக்கு உடம்பு முழுக்கக் கூட கண்ணா இருந்துட்டுப்போகட்டும். அதைப்பத்தி எனக்கு எந்த கவலையும் இல்லே.  நீ உன்னை எரிச்சுக்கோ. இல்லாட்டி என்னை எரி. ஆனா நீ பண்ணினது எதுவும் சரியில்லே! "  - இது இரண்டாமவர் பாணி.
எல்லாருக்கும் புரியும்படி நான் சொல்லி இருக்கிறேனா? இனிமே இந்த சப்ஜெக்ட்க்கு ஒரு புல்ஸ்டாப் வச்சிட்டு அடுத்த டாபிக்கை தீபாவளிக்கு அப்புறமா பார்க்கலாம். ஓகே ?

Monday, October 24, 2016

அட ! இதெல்லாம் அம்பது வருஷத்துக்கு முன்னாடிங்க ...(01)

Image result for images of old tamil movie

எனது நட்பு வட்டத்தில் இருக்கும் ஒருவர், "அந்தக்கால நிகழ்வுகளை - சமுதாய வாழ்க்கை, நடைமுறை சம்பவங்களை உங்கள் பிளாக்கில் பதிவு செய்யுங்கள். இந்தத் தலைமுறையினர் தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக இருக்கும்" என்றார்.
"எழுதணும்னு நினைச்சா"நின்றது(வகுப்புக்குவெளியே),நடந்தது (காலில் செருப்பில்லாமல்)னு  எத்தனையோ விஷயங்களை எழுதலாம்.  ஆனால் நேரம் கிடைப்பதில்லை"னு சொன்னேன்.
(நல்லவேளையா,"நேரங்கிடைக்காத அளவுக்கு வீட்டில் அப்படி என்னத்த கிழிக்கிறீங்க? சொல்லுங்க..தெரிஞ்சுக்கிறேன்"னு அவர் சொல்லலே ).
இப்போ இங்கே பேசப்போற முதல்டாபிக் சினிமாவைப் பத்திதான். உலகம் முழுக்க ஒரு சர்வே எடுங்க. சினிமாங்கிற ஒன்றை  மீறி மக்கள் மனசிலே இருக்கிற எந்தவொரு  விஷயத்தையாவது  உங்களாலே "சட்"னு சொல்ல முடியுமா? முடியாதுதானே. அதிலிருந்தே அதன் பெருமையை தெரிஞ்சுக்கலாம். 
அப்போ சினிமாவுக்குனு ஒரு தனிமதிப்பும் மரியாதையும்  இருந்துச்சு. சினிமாவில் நடிக்க "இந்த மாதிரி தகுதிகள்" வேணும்னு ஒரு வரைமுறை  இருந்துச்சு.முக்கியமான தகுதி பெர்சனாலிட்டி. யாராவது அழகா இருந்தா போதும்.  உடனே "சினிமாக்காரங்க மாதிரி இருக்கிறா. ஹீரோ மாதிரி இருக்கிறான்..ஹீரோயின்மாதிரி இருக்கிறா. அடேயப்பா" னு சொல்வாங்க. 
அப்போ வருசத்துக்கு பன்னிரெண்டு படம் வந்தால் அதுவே அதிகம். சினிமா டிக்கெட் 25 பைசா, 66 பைசா, ஒரு ரூபா ஆறு பைசானு மூணு விதமா ரேட். நல்ல வசதியான வீட்டைச் சேர்ந்த  பெண்கள் கூட 25 பைசா, 66 பைசா டிக்கெட்டில்தான் படம் பார்ப்பார்கள். ஏன்னு கேட்டீங்கன்னா அதில்தான்  லேடீஸுக்கு தனி இட ஒதுக்கீடு இருக்கும். ஒரு ரூபா ஆறு பைசா டிக்கெட் கம்பைன்ட் ஸீட் . எவனாவது பக்கத்திலே வந்து உக்காந்து கிட்டு சிகரெட் புகையை மூஞ்சிக்கு நேரே ஊதி விட்டுகிட்டு இருப்பானுக . அதனாலே அந்த டிக்கெட்டில் போக யோசிப்போம்.
ரிலீஸ் ஆகிற எல்லா சினிமாவையும் பார்த்துடுவோம். பார்த்த சினிமா பத்தி பத்திரிகைகளில் என்னமாதிரி விமரிசனம் வந்திருக்குனு தெரிஞ்சு க்க ஆவலா இருப்போம். எங்க ரசனையோடு அந்தவிமரிசனம் ஒத்துப் போனா ரொம்பவும் சந்தோசப்படுவோம். நிறைய வீடுங்கள்ல ரிலீஸ் ஆன சினிமாவைப் பத்தி பத்திரிக்கை விமரிசனம் படித்த பிறகுதான் தங்கள் வீட்டுப்பெண்களை, அந்த வீட்டு 'ஆம்பிளைங்க" சினிமாவுக்கு கூட்டிட்டுப் போவாங்க. படம் பார்க்கப் போகணும்னு சொன்னாலே, உடனே "அந்தப் படத்தைப் பத்தி குமுதத்தில் என்ன எழுதி இருக்கிறான்?", "விகடனில் என்ன எழுதி இருக்கிறான்?"னுதான் கேட்பாங்க.  அதனால் ஒரு படம் வெளியாகும் முன்னாலேயே, "குமுதம், விகடன்காரங்க நல்லபடியா விமரிசனம் எழுதணும்"னு மனதுக்குள் வேண்டிக்கொள்ளும் பெண்கள் ஏராளம். சினிமா விமரிசனம் குமுதத்தில் மிகவும் நேர்மையாக இருக்கும் என்ற கருத்து எல்லோருக்குமே உண்டு. எங்கள் வீட்டில் இந்த மாதிரி கட்டுப்பாடு எதுவும் கிடையாது.  அப்போ எங்களுக்கிருந்த ஒரே ஒரு பொழுதுபோக்கு சினிமாமட்டும்தான். சிவாஜி நடித்த படம் என்றால் கதையும்  நடிப்பும் நன்றாக இருக்கும். M G R படங்கள் என்றால் பாட்டும் ஆட்டமும் நன்றாக இருக்கும் என்று படம் பார்க்கக் கிளம்பி விடுவோம். ஒருபடம் பார்த்துட்டு வந்தோம்னா அடுத்தபடம் பார்க்கும்வரை, இந்தப் படத்தையும் பாட்டையும் பற்றியே பேசிக் கொண்டிருப்போம். வீட்டு வாசலில்அல்லது மொட்டைமாடியில் பாய்விரித்து உட்கார்ந்து கொண்டு படத்தில் வந்த பாட்டுக்கள் வசனங்களை சொல்லி பொழுது போக்குவது எங்களது வாடிக்கை. 
இன்னிக்கு சூழ்நிலையிலே  நாம விரும்பின எந்தப் பாட்டையும் எந்த நேரத்திலேயும் கேட்க முடியும். அப்போ ரேடியோ தவிர வேறு எதுவும் கிடையாது. ரேடியோவில் பாடல் ஒலிபரப்புக்கு என்று தனிநேரம் உண்டு. அந்த நேரத்தில் நாங்கள் பார்த்த படத்தின் பாட்டு ஒலிபரப்பாகுமா என்று ரேடியோ முன்னால் தவம் கிடப்போம். இப்போ எத்தனை வீட்டில் ரேடியோ இருக்கிறது? எங்கள் வீட்டில் இப்போ ரேடியோ இல்லை. எங்க வீட்டுக்குழந்தைகளுக்கு ரேடியோ என்றால் என்னனு தெரியாது. இதுதான் உண்மை நிலவரம்.
ஹார்லிக்ஸ் விளம்பர நிகழ்ச்சி ஒன்று ரேடியோவில் ஒலிபரப்பாகும் சுசித்ராவின் குடும்பம் என்ற தலைப்பில். (50 வருசத்துக்கு முன்னாலே )
"இதுதான் ஹார்லிக்ஸ் குடும்பம் 
சுசித்ரா ஷங்கர் ராஜு ரவி சுஜாதா 
என்றும் சுறுசுறுப்புடனே 
ஆரோக்கியம் உள்ள நல்ல குடும்பம்
இது ஹார்லிக்ஸ் குடும்பம் !" என்ற விளம்பரப் பாடல் அன்றைய தினம் எல்லோருக்குமே மனப்பாடமான ஒன்று.       
இப்போ ஒரு படம் வெளியானால் அது வெளியாகும் முதல் நாளிலேயே  "வெற்றிகரமான" என்று விளம்பர வாக்கியம் சேர்க்கப்படுகிறது.
அப்போ ஒரு படம் வெளியாகி 25 மற்றும் 50 நாட்களைத் தாண்டி ஒரு தியேட்டரில் ஓடினால்தான் "வெற்றிகரமான 25வது நாள்", "வெற்றி கரமான  50வது நாள்"னு  போஸ்டர் ஒட்டுவார்கள். படம் 100 நாட்களைத் தாண்டி ஓடினால் அதில் நடிச்சவங்க அந்த படம் ஓடும் ஊருக்கு, தியேட்டருக்கு வருவாங்க. அவங்களைப் பார்க்க ஊரே காத்துக் கிடக்கும். களத்தூர் கண்ணம்மா என்ற சினிமா  - ஜெமினி, சாவித்திரி, கமல் நடித்த படம் . படத்தின் நூறாவது நாள் விழாவுக்கு இவர்கள் மூவரும் தூத்துக்குடி வந்திருந்தனர். அந்தப் படத்தில் ஜெமினி நடித்திருந்த ஒரு பாடல் காட்சியை (குழந்தை) கமல் நடித்துக்காட்டியது பற்றிய பேச்சு பல நாட்கள் வரை ஓடிக் கொண்டு இருந்தது.
அன்றைய படங்களில் நீளமான வசனங்கள் இருக்கும். அதை சொல்லி விளையாடுவோம் அல்லது மற்றவர்களை கடுப்பேத்துவோம். இப்போ சினிமாவில் யாராவது ரெண்டு வரி நீள டயலாக் பேசினா அதுவே பெரிய விஷயமா பேசப்படுது. அப்போ பாடலில்கூட உச்சரிப்பு அருமையா தெளிவா இருக்கும். இப்போ  கேட்கிற சில பாடலில் அவங்க என்ன சொல்றாங்கனே புரியமாட்டேங்குது. இந்தக் குழப்பத்தை தீர்க்கத்தான் ஒருசில  சேனல்களில் பாடல்காட்சி வர்றப்ப  அந்த பாட்டின் வரிகளை   டிஸ்பிளே பண்றாங்களோ என்னவோ. மத்த மொழிப்பாடல் ஒளி பரப்பாகும் போது  பாடல் வரிகளை தமிழில் ஒளிபரப்பினால் டபுள் ஓகே சொல்லலாம். இப்பல்லாம் தமிழ்ப்பாட்டுக்கே பாடல் வரிகளை தமிழில் டிஸ்பிளே பண்றாங்க. அட ! எஞ்சாமி பகவானே ! என்ன கொடுமை இது ?
நடிப்புங்கிறது லேசான விஷயம் இல்லே. ஒருத்தர் சந்தோச மூடில் செட்டுக்கு வந்திருப்பார். அன்னிக்கு அழுது நடிக்கிற நிர்பந்தம் இருக்கும். சுத்தி நிக்கிறவங்களைப் பத்தி கவலைப் படாமே வேண்டிய முகபாவனை தரணும். இது எல்லாமே எவ்வளவு கஷ்டம்னு நமக்கு எப்ப புரியும் தெரியுமா ? ஒரு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுக்கப்போயிட்டு அவன் - அதான் போட்டோ புடிக்கிறவன் 'இங்கே பார். தோள்பட்டை இன்னும் கொஞ்சம் தூக்கலா..முகம் கொஞ்சம் தணிவா இருக்கணும் .பார்வை இந்தப் பக்கம் இருக்கும்னு சொல்றப்ப நாம நமக்குத் தெரிஞ்ச கோணங்கித் தனம் அத்தனையையும் பண்ணுவோம். அப்பத்தான் "ச்ச்சே ... இந்த சினிமாவில் எப்படித்தான் வசனத்தையும் பேசிகிட்டு, மூஞ்சியிலே பாவத்தையும் காட்டிகிட்டு நடிக்கிறாங்களோனு தோணும்.
(இன்னொரு சங்கதி உங்களுக்கு மட்டும் சொல்லுதேன். அதை யாரிட்டயும் சொல்லிடாதீங்க: எங்க கணக்கு டீச்சர் என்னை எப்பவும் நீ "சினிமாவுல நடிக்கத்தான் லாயக்கு"னு ஏசுவாங்க. கணக்குப்பாடத்தில் நான் பாஸ் பண்ணினதா சரித்திரமே கிடையாது. மற்ற பாடங்களில் அதிக மார்க்கும் கணக்கில் பெயில் ஆவதையும் நினைத்து, அவங்க கிட்டே நான் வம்பு / அடம் பண்ணினதாக அவங்க நினைச்சாங்களே  தவிர எனக்கு கணக்கு மண்டையில் ஏறலை என்பதை அவங்க கடைசி வரை புரிஞ்சுக்கலே.  
ஆனா, கவர்ன்மெண்ட் சர்வீஸில் முதல் முதலாக  நான் அடியெடுத்து வைத்தது Senior Accounts Officeல் ( State Government). அதன் பின் மத்தியஅரசுப் பணியில் 33 வருட சர்வீஸ். அங்கும் Accounts and Establishment வேலைதான் பார்த்தேன். தினமும் லட்சக்கணக்கில் பணத்தின் வரவு செலவு கணக்குப் பார்க்கும் வேலை. ஒரு சின்ன தவறு கூட வந்தது இல்லை.
ஆனா, இன்னிக்கு வரை எனக்கு கணக்குப் பார்க்கத் தெரியாத ஒரு விஷயம் - கடைக்குப் போய் சாமான் வாங்கிட்டு பணம் குடுத்த பிறகு  மீதி பணத்தை எண்ணிப் பார்த்து வாங்கும் விஷயம். அவர்கள் கூடுதலாக பணத்தைக் கொடுக்கிறார்களா குறைஞ்சிருக்கானு   பார்க்க மாட்டேன். குடுக்கிற சில்லறையை வாங்கி பையில் போட்டுட்டு வந்துடுவேன்.) 
வீட்டிலிருந்தபடியே மலரும் நினைவுகளை அசைபோடும் போதெல்லாம் கணக்கு டீச்சர் சொன்ன மாதிரி சினிமாவில் நடிக்கப் போயிருந்தால் யார் அளவுக்குப் பேர் வாங்கி இருப்போம்னு நினைச்சுப் பார்க்கிறதுண்டு. 
அந்த நினைப்பு வருகிற சமயங்களிலெல்லாம் ஒரே ஒரு சினிமாவில் , ஒரே ஒரு சீரியலில், ஒரே ஒரு சீனில் மட்டும் தலை காட்ட வேண்டும் என்றும் நினைப்பேன்.  ஏன்னு கேட்க மாட்டீங்களா ? சரி நானே சொல்லிடுதேன். எதோ ஒரு வகையில் இந்த சமுதாயம் இந்த மக்கள் மேலே நமக்கு ஒரு ஆத்திரம் இருக்கும். அத்தனை பேரையும் ஒரே சமயத்தில் டார்ச்சர் பண்ணனும் போல ஒரு வெறி வரும். சினிமா, சீரியல் மூலமா ஒவ்வொரு வீட்டுக்குள்ளேயும் புகுந்து போதும் போதும்னு அவங்க சொல்ற அளவுக்கு நாம டார்ச்சர் பண்ணலாமே. என்னங்க ... நான் சொல்றது சரிதானே!
இன்னொரு முக்கியமான விஷயம். பழைய படங்கள் எல்லாமே பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷங்கள். அந்தக் காலத்தில் ஒரு குறிப்பிட்ட இடமோ ஊரோ எப்படி இருந்தது என்பதற்கான ஆதார சான்றுகள் சினிமாவில் நிறையவே உள்ளது.
உதாரணமாக : ஆண்டவன் கட்டளை படத்தில் வரும் "ஆறு மனமே ஆறு " என்ற பாடல் காட்சியையும், குமுதம் படத்தில் வரும் "கல்லிலே கலை வண்ணம் கண்டான்' என்ற பாடல்காட்சியைப் பார்த்துவிட்டு, திருச்செந்தூர், மகாபலிபுரம் போய் கடலைப் பாருங்கள். கடல் எந்த அளவுக்கு உள்வாங்கி  இருக்கிறதென்பது புரியும்.
(கச்சேரி இன்னிக்கு இம்புட்டுதான். மிச்சத்தை பொறகு வச்சுக்கலாம். செய்யவேண்டிய வேலை தலைக்கு மேலே இருக்குது. வேறே ஒண்ணும் இல்லே  தலைக்கு எண்ணெய் வச்சு ஜடை போட்டுக்கணும் ) 

Sunday, October 23, 2016

ஹாய் குட்டீஸ், ( PUZZLE - 08)

புதிர் எண் - 7க்கான விடை : ஒரு வேனிலிருந்த  பொருட்களை   மற்றொரு    வேனில் ஏற்றும்படி சூறாவளியிடம்  சொன்னான்.    சூறாவளி எதையாவது எடுத்துக் கொண்டு ஓடினால் அதைத்   தடுக்க வேண்டாம் . அவன் மறைக்க நினைக்கும் பொருளை வாங்கி 
திரும்பவும் வண்டிக்குள் ஏற்ற வேண்டாம் என்று  அடாவடியிடம்  
சொன்னான் ரமேஷ் . இனி புதிர் எண் - 8 க்கு விடை தேடுங்கள். 
Image result for images of train journey புதிர் எண் - 08 அப்பாவுடன் கன்னியாகுமரிக்கு ரயிலில் பயணித்துக் கொண்டிருந்த சிவகுமார், தூங்கப் பிடிக்காமல் ஜன்னலோரம் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, அப்பா அப்பர் பெர்த்தில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். சில  ஸ்டேசனில் போதிய விளக்கு வெளிச்சம் இல்லாததாலும், சில ஊர்களை ரயில் வேகமாகக் கடந்து சென்றதாலும் , அது எந்த ஊர் என்பதைத் தெரிந்த கொள்ள முடியாததால், அப்பாவிடம் சந்தேகம் கேட்டுக் கொண்டிருந்தான் சிவகுமார் . சில ஊர்களின் பெயரை சொல்லி, அடுத்து எந்த ஊர் வரும் என்பதையும் அப்பா  சொன்னார். சில ஊர்களின் பெயரை நியூ காலனி என்றார். 
மேலே படுத்திருக்கும் அப்பா , கீழே குனிந்து பார்க்காமலே ஊர்களின் பெயரை சொல்வது சிவகுமாருக்கு ஆச்சரியமாக இருந்தது. அப்பாவிடம் அதுபற்றி கேட்க, அப்பா பதில் சொல்ல , அந்த பதிலைக் கேட்ட சிவகுமார் " ப்பூ. இதுதானா விஷயம் ? " என்றான். இப்போது கேள்வி என்னவென்றால் " அப்பா என்ன சொன்னார் ? ".

Saturday, October 22, 2016

(எங்க) விகடன் தாத்தாவுக்கு வயசு 90!


Image result for image of S S Vasan
 விகடன் நிறுவனர் திரு S.S.வாசன்   
விகடனுக்கு வயது 90 என்ற செய்தியை தொலைக்காட்சி, பத்திரிக்கைகள் மூலமாகத் தெரிந்துகொண்டபோது மனதுக்குள் ஒரு இனம் புரியாத சந்தோசம். ஒரு "சீனியர் தாத்தா" பற்றி இங்கு பதிவு செய்யப்படுவது எனது மலரும் நினைவுகளும் ஆதங்கங்களுந்தான். மற்றபடி அவரைப்பற்றிக் கருத்து தெரிவிக்க எனக்கு எந்தத் தகுதியும் கிடையாது.  
விகடன் என்று சொன்னாலே நினைவுக்கு வருவது அதில் வெளியாகும் ஹாஸ்யங்கள்தான். (இப்போ "ஜோக் / காமெடி" என்று சொல்வதை அந்தக் காலத்தில் "தமாஷ் / ஹேஸ்யம்" என்றுதான் சொல்வார்கள்). அட்டையில் வெளியாகும் தமாஷ் எப்பேர்ப்பட்ட சிடுமூஞ்சியையும் சிரிக்க வைத்துவிடும் . காலமாற்றத்துக்குத் தகுந்தபடி விகடன் தன்னை மாற்றிக் கொண்டது. எதனாலோ அந்த மாற்றங்களை எங்களைப்போல ஒரு சிலரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அட்டைப்படக் காமெடியிலிருந்து  தனி நபர்களின் போட்டோவுக்கு மாறிய அந்த மாற்றத்தை, அதை ஏற்றுக் கொள்ள முடியாத எங்கள் மன நிலையை அப்போதே நாங்கள் விகடனுக்குத் தெரிவித்தோம்.   
அந்தக்காலத்தில் விகடனில் வெளியான கொத்தமங்கலம் சுப்புவின் "தில்லானா மோகனாம்பாள்", மணியனின் தொடர்கதைகள் காலங்கள் பல கடந்தும் என்றும் நினைவில் நிற்கும். அவரது கதையைப் படிக்கும்போது கதை படிக்கின்றோம் என்ற உணர்வைவிட அந்தக் கதையோடு சேர்ந்து நாமும் பயணிப்பது போன்ற உணர்வு வரும். அந்தக் கதையைப் படித்த தெக்கத்திக்காரங்களுக்கு "மெட்ராஸ்" என்பது ஒரு கனவு உலகம். இந்திரபுரி.  
14.09.1991ல் மாலைமுரசில் நான் எழுதிய முதல் சிறுகதை வெளியானது. கதைகள் எழுதுவதை காட்டிலும் குழந்தைகளுக்கான புதிர்கள் எழுதுவதில்தான் ஆர்வம் காட்டினேன். எப்போதாவதுதான் கதை எழுத உட்காருவேன். நிறைய கதைகள் எழுதணும். பக்கத்தை நிரப்பணும்னு நான் நினைச்சதில்லே. கதை எழுதணும்னு எப்போ தோணுதோ அப்போ எழுதுவேன். ஆனால் புதிர்களை இரவில் விழித்திருந்தாவது எழுதுவேன். அல்லது கோலம் போடுவேன். எனது படைப்புகள் பத்திரிகையில் வருமே தவிர அதை எழுதுவது நான் என்பது பக்கத்து வீட்டினருக்குக்கூடத் தெரியாது.  நான் எழுதிய மூன்று சிறுகதைகள் விகடனில் வெளியாகி பரிசு பெற்றது. விகடன் நடத்திய கதைப்போட்டியில் எனக்கு இரண்டு பரிசுகள் கிடைத்தது. விகடனில் எனது போட்டோவும் வெளியாகி இருந்தது. அதன்பின் பஸ்ஸுக்கு காத்திருப்ப வர்கள் கூட எனக்கு "ஹாய் " அல்லது "ஹலோ " சொல்வார்கள். அதே ரூட்டில் நான் வருஷக் கணக்கில் டூ வீலர் ஓட்டிக் கொண்டு போயிருக்கிறேன். என்னை யாரும் கண்டு கொண்டது இல்லை. ஆனால் விகடனில் நான் எழுதிய கதையைப் படித்த சிலர், நான் சிக்கனலுக்காக வெயிட் பண்ணிக் கொண்டிருக்கும்போது  பிரெண்ட்லி ஆகக் கை காட்டி, "படிச்சோம்.நல்லா இருந்துச்சு " என்று சைகை செய்வார்கள்.
ஒருநாள் வழியில் ஒருவர் கைகாட்டி என்னை நிறுத்தினார். லிப்ட் கேட்கிறார் என்று நினைத்து "நோ " என்றேன். "ஒரே ஒரு நிமிஷம்" என்று கத்தினார். வண்டியை நிறுத்தினேன். "என் மனசிலே பட்டதை சொல்லிடறேன். நானும் விகடன் வாசகன். சாப்பிடாமே இருந்தாலும் இருப்போம். விகடன் படிக்காமே இருக்க மாட்டோம். உங்களோட முதல் கதைக்கு முதல் பரிசு குடுக்காமே மூணாம் பரிசு குடுத்திருக்காங்களேன்னு ரொம்பவும் நாங்க வருத்தப் பட்டோம். இன்னொரு கதைக்கு முதல் பரிசு குடுத்ததும்தான்  எங்களுக்கு ஆறுதலா இருந்துச்சு. எனக்குத் தெரிஞ்சு விகடன் வைத்த ஒரு போட்டியில், இரண்டு பரிசு வாங்கின ஒரே ஒரு ஆளு நீங்களாத்தான் இருப்பீங்கனு நினைக்கிறன். விகடன் சரித்திரத்திலேயே இதுதான் முதல் தடவை" என்றார். என்னையும் அறியாமல் அழுதுவிட்டேன். அதை பார்த்ததும் "ஸாரி .. போங்கம்மா " என்றார் .
சத்தம் போட்டு சொல்வேன்-என்னையும் நாலு பேருக்குத் தெரியும்னா அது விகடன் மூலமாகத்தான். அவர்கள் எனக்குக் கொடுத்த சந்தர்ப்பங்கள் அநேகம். கோலங்கள் சீரியல் வெளியாகிக் கொண்டிருந்த காலத்தில், "அவள் விகடன்" கோலப்பகுதிக்கு கோலம் செலெக்ட் பண்ணும் பொறுப்பு தந்தார்கள். ஒன்றல்ல இரண்டல்ல கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் விகடன் அலுவலகம் சென்று வந்திருக்கிறேன். விகடன் அலுவலகம் செல்லும்போதெல்லாம் சொந்த சகோதரன் வீட்டில் காலடி எடுத்து வைப்பது போன்ற உணர்வில் நினைவில் மிதந்திருக்கிறேன். விகடன் குழுமம் நடத்திய விழாக்களில் நடுவராகப் பணி புரியும் பல சந்தர்ப்பங்களை எனக்கு அளித்ததை இன்றும் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன்.அண்ணா சாலையில் நடைபெற்றுக் கொண்டிருந்த மேம்பால வேலைகளினால் டிராஃபிக் ஜாம். அதனால் ரூட் மாறி இருந்தது. அந்த சிக்கல்களைச சமாளித்து போய்வருவது எனக்கு மிகவும் கஷ்டமான ஒன்றாகத் தோன்றியதால், மேற்கொண்டு கோலம் பார்க்கும் பணியைத் தொடர முடியாமல் போனது.   
இந்தியா, இந்துமதம் போல, விகடனும் ஒரு ஆலமரம்.. அந்த ஆலமரநிழலில் இளைப்பாறிய வர்கள், தங்களை வளர்த்துக் கொண்டவர்கள், காலூன்றி நின்றவர்கள்  அநேகர். அதில் நானும் ஒருத்தி என்பதை பெருமையுடன் மனமகிழ்வோடு சொல்லிக் கொள்கிறேன்.
யுகங்கள் மாறினாலும், வேர்கள் விழுதுகள் தாங்கி நிற்க ஆலமரம் என்றென்றும் நிலைத்திருக்கும். தன்னை நிலை நிறுத்திக் கொள்ளும். தன்னை அண்டி வந்தோருக்கு அடைக்கலம் / நிழல் தரும் என்பதில் எந்த ஐயமும் இல்லை 
விகடனின்  90-வது வயதுக்கு வணங்கி எனது சிரம் தாழ்த்தி மன மகிழ்வோடு விகடன்  தாள் பணிகிறேன், அவரது ஆசீர்வாதம் வேண்டி !

Thursday, October 20, 2016

DEAR VIEWERS,



குழந்தைகள் ரொம்பவும் கேஷுவலாக எதையாவது சொல்வார்கள். அல்லது கேள்வி கேட்டு நம்மை மடக்குவார்கள். அந்த நேரத்தோடு அது அவர்களுக்கு மறந்துவிடும். ஆனால் நமக்கோ அது சம்பந்தப்பட்ட ஏதாவது ஒன்றைப் பார்க்கும்போதோ, கேட்கும்போதோ, வருடங்கள் பல சென்றாலும்  அவர்கள் சொல்லிய அந்த சொல்தான் நினைவுக்கு வரும்.
சில வருடங்களுக்கு முன்பு, வெளியூர் போவதற்காக சென்னை, சென்ட்ரல் ஸ்டேஷனுக்குப் போனோம்.எந்தெந்த பிளாட்பார்மிலிருந்து எந்தெந்த ஊருக்கு ரயில் புறப்படும் என்பதற்கான அறிவிப்பு ஒலித்துக் கொண்டிருந்தது. 
ரயிலுக்காக வெயிட் பண்ணிக் கொண்டிருந்தோம். என் சகோதரியின் பையன், ‘ரயில்காரங்க ஏன் ராவணனைக் கும்பிடறாங்க. எப்பவும் ‘ராமா, ராமா’னு சொல்லணும்னு நீ சொல்வே. இவங்க ராவணன்னு சொல்றாங் களே’ என்று கேட்டான்.
எனக்கு எதுவும் புரியவில்லை. ‘அவங்க ராவணனைக் கும்பிடறதை நீ எப்ப பார்த்தே?" என்று கேட்டேன்.
அப்போது ரயில்வேயின் அறிவிப்பு வெளியாகிக் கொண்டிருந்தது. ‘இதோ நல்லா கேளு. இப்போ கூட ராவணன்னு சொல்றாங்க!’ என்றான். அப்புறம் நான் கவனித்தேன். எனக்கு சிரிப்பு வந்தது.
‘பதில் தெரியலைன்னா உடனே சிரிச்சே சமாளிப்பியே’ என்றான்.
‘அவங்க ராவணன்னு சொல்லலேடே. ‘ரவாணா ஹோகி’னு ஹிந்தியில் சொல்றாங்க. அப்படின்னா ‘புறப்படும்’னு அர்த்தம் என்று அவனுக்குப் புரிய வைத்தேன்.
இன்றைக்கும் சரி; நான் ரயில்வே ஸ்டேஷனில் நிற்கும்போது ‘ரவாணா ஹோகி’ என்கிற வார்த்தை காதில் விழும்போதெல்லாம். அன்று கேட்ட குழந்தைத்தனமான கேள்விதான் என் நினைவுக்கு வரும். (இன்றைக்கு அவன் ஐ.டி.கம்பெனியில் வேலையில் இருந்து கொண்டு, டெக்னாலஜி, சயன்ஸ் சம்பந்தப்பட்ட விஷயங்களைப் பேசுவதைக் கேட்கும் போதெல் லாம், அவனுடைய சிறுவயது சந்தேகக்கேள்விகள்தான் எனக்கு நினைவு வரும்.
திருநெல்வேலியிலிருந்து எனது கஸின், தனது பையனுடன் வந்திருந் தாள். இருவரையும் அழைத்துக்கொண்டு வள்ளுவர்கோட்டம் போயிருந் தேன்  .   திருவள்ளுவர் சிலையைக் காட்டி, "இவர்தான் திருவள்ளுவர்" என்றேன்.
’தெரியுமே. இவர் எங்க ஊரில் நிறைய பஸ் விட்டுருக்கிறார்!’ என்றான்.
‘என்னடா சொல்றே?’ என்று கேட்டேன் திகைப்புடன்.
‘எங்க ஊரிலே ஓடற எல்லா பஸ்ஸிலும் இவர் போட்டோதான் இருக்கும். அப்படின்னா அது எல்லாம் அவர் பஸ்தானே!’ என்றான்.
அவன் சொன்னதைக் கேட்டு அருகில் நின்றிருந்தவர்களும் சிரித்தார்கள். (இப்போ அவன் தன் மனைவி, மகளுடன் அமெரிக்காவில் இருக்கிறான்)

Wednesday, October 19, 2016

DEAR VIEWERS,




எனது  மற்றொரு பிளாக்கில் https://ARUNA S. SHANMUGAM.BLOGGER- ல் குழந்தைகள், பெரியவர்களுக்கான 500 க்கும் மேற்பட்ட - ON-LINE PUZZLES IN ENGLISH பதிவாகி உள்ளன. முயற்சி செய்யுங்கள் . உங்கள் கருத்தை பதிவு பண்ணுங்கள்.

Sunday, October 16, 2016

ஹாய் குட்டீஸ், ( PUZZLE - 07)

சென்ற வாரப் புதிர் எண் 6 க்கான விடை :   ஷங்கர் சொன்ன பதில் : நமது பாரம்பரிய உடை 

இனி இந்த வாரப் புதிருக்கு விடை தேடுங்கள் 

புதிர் எண் 7

Image result for nervous breakdown images
விமான பார்சல் நிலைய அலுவலகத்துக்கு மின்னல் வேகத்தில் வேனில் பறந்து கொண்டிருந்த ரமேஷின் வேகம்வேன் டயர் பஞ்சர் ஆனதால் தடைபட்டதுஇன்னும் ஒரு மணி நேரத்துக்குள் கொண்டு சேர்க்கா விட்டால்  வேலை போய் விடும்வழியில் வந்த வேனிடம் உதவி கேட்டான்உதவ நான் ரெடிஆனால் அந்த வண்டியிருந்து அத்தனை பொருளையும் இந்த வண்டியில் ஏற்ற இன்னும் இரண்டு பேர் வேண்டும் என்றான் அந்த வேன் டிரைவர் . உதவிக்கு ஆள் கேட்டுபக்கத்திலிருந்த கடையில் விசாரித்த  போது, "அதோ அந்த வீட்டில்  3 பேர் இருக்கிறாங்க. ஒருத்தன் சோம்பேறி ஒருமணி நேரத்தில்   செய்ய வேண்டிய வேலையை ஒரு நாள் பூரா   செய்வான் . அடுத்தவன் சூறாவளிஇரண்டு பேர் இரண்டு மணி நேரத்தில் செய்யும் வேலையை இவன் தனி ஆளாக அரை மணி நேரத்தில் செய்து 
முடிப்பான்ஆனால் அவனுக்குப் பிடித்த பொருளைக் கண்டால் அதை 
எடுத்துக் கொண்டு கண்ணிமைக்குள் நேரத்துக்குள் ஓடி விடுவான் . அடுத்தவன் அடாவடிவேலை படு சுத்தம் . ஆனால் நாம் எதை செய்ய 
சொல்கிறோமோ அதற்க்கு நேர் மாறாக எதையும் செய்வான்அவர்களை வைத்து வேலை வாங்குவது உங்கள் சாமர்த்தியம் என்றார் கடைக்காரர்.
இப்போது கேள்வி என்னவென்றால் இந்த 3 பேரில் யாரை வைத்து வேலைவாங்கிதனது பொருளைப் பறிகொடுக்காமல் சென்றிருப்பான் ரமேஷ் . 

Sunday, October 09, 2016

ஹாய் குட்டீஸ், ( PUZZLE - 06)

புதிர் எண் 5 ன்  விடை - கண்டம் 
இனி இந்த  வார புதிருக்குப் போவோமா ?

புதிர் எண் 6
Image result for images of school boys
அரசு உயர்நிலைப்பள்ளியில் பத்தாம்வகுப்புத்தேர்வு எழுதப் போகும் மாணவர்களுக்கான பிரிவு உபசார விழா மறுநாள் நடக்க இருந்தது
அந்த தினத்தில் யார் யார் என்ன / எந்த விதமான உடையில் வரப்  
போகிறார்கள் என்பது பற்றி பேச்சு வந்ததுஒவ்வொருவரும் ஒவ்வொரு 
உடை பற்றி சொல்லஷங்கர் மட்டும் அமைதியாக இருந்தான்உன் 
டிரஸ் பற்றி நீ எதுவும் சொல்ல வில்லையே என்று கேட்ட மற்ற 
மாணவர்களிடம் " அது சஸ்பென்ஸ் " ன்றான் ஷங்கர்மற்றவர்கள் வற்புறுத்திக் கேட்கவே , " சரி , க்ளு கொடுக்கிறேன்முடிந்தால் நீங்கள் கண்டுபிடியுங்கள் என் ஷங்கர்  " 11 " எழுத்தில்  அமைந்திருக்கும். முதல் எழுத்தும் 8 வது  எழுத்தும் சேர்ந்தால் தந்திரத்துக்குப் பெயர் 
பெற்ற ஒரு விலங்கு. 2 மற்றும் 3 வது எழுத்து " தேன் / போதை பானத்தை
குறிக்கும். 4, 5, 6 வது எழுத்துக்கள் சுமையைக் குறிக்கும். 7 வது 8 வது எழுத்து குதிரையைக் குறிக்கும் . 7 மற்றும் 9 வது எழுத்து  அச்சத்தைக் குறிப்பிடுவது 10 மற்றும் 11 நமது டாபிக் எதைப் பற்றி என்பதைக் குறிக்கும்யாராவது தைக் கஷ்டமா பீல் பண்ணினால் , 
ரிசையாக 11 கட்டங்களை வரைந்துகுறிப்புக்கு ஏற்றபடி கட்டங் களை நிரப்பலாம்என்றான் ஷங்கர்ஒரு சில மாணவர்கள் சிறிது தடுமாறினாலும் கட்டங்களுக்குள் எழுத்துக்களை  எழுதி சரியான விடையைக் கண்டுபிடித்து விட்டார்கள்.    நீங்க கண்டுபிடிச்ச விடையை 
சொல்லுங்க பார்க்கலாம்சரியாக சொன்னவங்களுக்கு ஒரு " சபாஷ் "

Sunday, October 02, 2016

ஹாய் குட்டீஸ், ( PUZZLE - 05)

புதிர் எண் 4 ன் விடை ="எல்லோருமே ஜைனர் கோவிலுக்குப் போகலாம் :
என் செல்லக் கண்ணுக்குட்டி லக்குமீ துள்ளல் போடாதே :
அவன் சாதுவான வில்லன் !
பப்படம் போட்ட பையை எங்கே வைத்தாய் ?
அடிக்கடி காரம் சாப்பிடாதே ."

மேஜை மீதுள்ள வானவில் படம் போட்ட கடிகாரம் )
இனி புதிர் எண் 5க்கான  விடையைக் கண்டுபிடியுங்கள் 

புதிர் எண் - 05
Image result for image of globe
" அடுத்த வாரம் தேர்வுகள் ஆரம்பிக்கப் போகுது. நீ எப்படி பீல் பண்றே ? " என்று ஷங்கர் கேட்க " செம ஜாலி. தேர்வு முடிஞ்சா லீவாச்சே" என்ற ரவி "ஆமாம் நீ எப்படி பீல் பண்றே?" என்று கேட்டான். அதை வாயால் சொல்லக்கூட எனக்குப் பயமாயிருக்குது. நான் சொல்றதை வச்சு நீயே கண்டுபிடி!" என்ற ஷங்கர், "முதல் இரண்டு எழுத்து பார்வைக்கு அடிப்படையான ஒன்றைக் குறிக்கும்.  1,3 மற்றும் 4ஆம் எழுத்து சேர்ந்தால் ஒரு இசைக் கருவியின் பெயர் வரும். இனிமே நீயே கண்டுபிடி " என்று சொல்ல, சிறிது நேரம் யோசித்த ரவி  " ஓஹோ.. ஆசியா, ஐரோப்பா, அண்டார்டிக்கா .. ரகமா ? " என்று கிண்டலாகக் கேட்டு சிரித்தான். ரவி கண்டு பிடித்த பதிலை நீங்கள் சொல்லுங்கள் பார்க்கலாம்