Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, January 31, 2014

Scanning of inner - heart ( Scan Report Number - 100 )

                                   பயிர் வளர்ப்போம் !!
நவகிரகங்களை சுற்றிக் கொண்டிருந்த லலிதாவின் கண்களில் பட்டாள் பாகீரதி. " என்ன இது, மாமி உட்கார்ந்திருக்கிற தோரணையே சரி யில்லையே . இப்படி ஒரு நாளும் கோவில் நடைப் படியில் உட்கார மாட்டாளே. என்னவாக இருக்கும் ?" என்று லலிதாவின் மனம் பரபரத்தாலும், " ஆச்சு. இன்னும் ரெண்டே ரெண்டு சுற்று. அதை முடிச்சிட்டுப் போய் விசாரிக்கலாம் " என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள்.
சுற்றி முடித்ததும், பாகீரதி அருகில் போய் " என்ன மாமி, உடம்புக்கு முடியலையா ? நீங்க இப்படி உட்கார்ந்திருந்து நான் பார்த்ததே இல்லையே " என்று அவள் தோளைத் தொட்டுச் சொல்லி, அவளருகில் போய் அமர்ந்தாள்.
"பெத்து வச்சிருக்கிறேனே ஒரு பிள்ளையை, அவனை நினைச்சுதான் கவலை லலிதா "
" என்ன பண்றான்? வேலைக்குப் போகிறான்தானே ? பொண்டாட்டி கூட சண்டை சச்சரவு எதுவும் இல்லாமே நல்லா வச்சிருக்கிறாந்தானே ? " என்று லலிதா ஆதங்கத்துடன் கேட்க " எல்லாம் நாங்க செஞ்ச பாவம் !" என்றபடி தலையைக் கவிழ்த்தாள். அது அழுகையை மறைப்பதற்காக என்பதை லலிதா புரிந்து கொண்டாள். அவளையும் மீறி சிரிப்பு வந்தது. அதை பாகீரதி கவனித்து விட்டாள் என்பதும் லலிதாவிற்க்குப் புரிந்தது.
"சிரிக்கிறேன்னு தப்பா நெனச்சுக்காதீங்க மாமி "
"தப்பு ஒண்ணும் இல்லேடி .. என் பொளைப்புதான் சிரிப்பா சிரிச்சுக் கிடக்குதே "
"இப்போ " எல்லாம் நாங்க செஞ்ச பாவம் !" ன்னு சொல்ற நீங்க கிட்டத்தட்ட் இருபத்தேழு வருஷத்துக்கு முன்னே என்ன சொல்லி யிருப்பீ ங்கனு நினைச்சுப் பார்த்தேன். அதான் சிரிப்பு வந்தது " என்று லலிதா சொன்னதும் " என்ன சொல்லியிருப்பேன் ? " என்று வாய் விட்டுக் கேட்ட பாகீரதி யோசனையில் ஆழ்ந்தாள்.
"பிறந்தது ஆண் குழந்தைன்னு தெரிஞ்சதும், உலகத்தையே ஜெயிச்ச மாதிரி ஒரு கர்வம் வந்திருக்கும். நீங்க ரொம்பவும் புண்ணியம் பண்ணி யிருக்கிறதா  மனசு சொல்லியிருக்கும். அந்தப் பிள்ளை வளர்ந்து தனக்கு ஒரு வாழ்க்கையை அமைச்சுக்கிறப்போ, அது தன்னை சங்கடப் படுத்தும். அழ வைக்கும்னு நினைச்சுக்கூட பார்த்திருக்க மாட்டீங்க. என் பிள்ளை என்னிக்கும் எங்க பிள்ளையாய் இருப்பான்னு  நம்பிக்கையில் இருக்க வைத்திருக்கும் . அப்படித்தானே  ? "
"அப்படி சந்தோசப் பட்டது தப்புன்னு சொல்ல வர்றியா ? "
"அய்யய்யோ, இல்லே மாமீ  சந்தோசப் பட்டது தப்புன்னு சொல்ல வரலே.  நம்ம எதிர் பார்ப்புகளை நம்ம குழந்தைங்க மேலே வைக்கிறதுதான் தப்பு " 
"உங்கிட்டே ஒண்ணு கேட்கணும். ஒரு ஆம்பிளைப் பிள்ளையைப் பெத்து வச்சுகிட்டு  நான் அல்லாடிகிட்டு இருக்கிறேன் . மூணு பிள்ளைகளை வச்சிருக்கிற நீ எப்படி சந்தோசமா இருக்கிறே  ? "
"மாமி, நான் உங்களை ஒண்ணு கேட்டா கோபப்பட மாட்டீங்கதானே. நேத்து உங்க வீட்டில் ஒரு சச்சரவு. அது பணம் விஷயமாக ... போனமாதம் வரை சம்பளப்  பில் பேப்பரை உங்ககிட்டே காட்டினான். இந்த தடவை பொண்டாட்டி கிட்டே காட்டினான். அதை நீங்க இன்சல்ட்டா நினைக்கிறீங்க... இது ... இதுதானே உங்க மனசிலே நடக்கிற போராட்டம் " என்று கேட்டு பாகீரதியை பார்த்தாள் லலிதா 
"என்னடி இது ! எல்லாத்தையும் பக்கத்தில் இருந்து பார்த்தாப்லே சொல்றே ? " என்று வியந்து போனாள் பாகீரதி 
"மாமி ஒரு சம்பவம் ... அது சோகமாக இருக்கலாம் .. அல்லது சந்தோசமான சம்பவமாவும் இருக்கலாம். எதைப் பார்க்கிறோமோ அந்த பீலிங்க் தான் எல்லோருக்கும் இருக்கும். இப்போ ஒரு வீட்டில் , ஒரு பையன் வெளியிலிருந்து வந்ததும்  தன்னுடைய கையிலுள்ள பொருளை மனைவியிடம் கொடுப்பதை ரெண்டு பொம்பளைங்க பார்த்தாங்கன்னு வச்சுக்கோங்க, அதைப் பார்த்து ஒருத்தி சந்தோசப்படுவா .. அது பொண்ணைப் பெத்தவ."ஆஹா நம்ம பொண்ணை, நம்ம மாப்பிள்ளை ரொம்பவும் மதிப்பும் மரியாதையுமா வச்சிருக்கிறானேன்னு நினைப்பா . இன்னொருத்தி வருத்தப்படுவா " நேத்து வரை நம்மளைக் கூப்பிட்டு கிட்டு வீட்டுக்குள் நுழைஞ்ச  பிள்ளை , எதையும் நம்ம கையில் கொண்டு வந்து கொடுத்த பிள்ளை , இன்னிக்கு வேறொருத்தி கையில் கொண்டு போய்க்கொடுக்கிறானே " என்று நினைத்து . இது மனுஷ சுபாவம் . உலக வழக்கம். இதுக்கு யார் மேலேயும் குத்தம் சொல்ல முடியாது . கூடாது." என்று லலிதா சொல்லும்போதே " போடி இவளே ! நீ அப்படித்தான் இருக்கிறியா ? " என்று கேட்டாள் பாகீரதி. 
"இருக்கிறதுக்கு என்னைப் பழக்கி வச்சிருக்கிறேன். நான் கல்யாணமாகி மாமியார் வீட்டுக்குப் போனப்போ எனக்கும் என் மாமியாருக்கும் சின்ன சின்ன சண்டைகள் வரும். அப்பல்லாம் எங்க மாமனார் " இதோ பாரு சீதா நீ தேவையில்லாமே அவ விஷயத்தில் தலையிடாதே. யாராவது உங்கிட்டே வந்து யோசனை கேட்டா மட்டும் நீ பேசு. நம்ம குழந்தையை பல கஷ்டங்களுக்கு நடுவில் படிக்க வச்சு  ஆளாக்கி வேலை வாங்கிக் கொடுத்தோம். ஆனால் முழு பலனை   நாம அனுபவிக்காமே நேத்து வந்த யாரோ ஒருத்தி அனுபவிக்கிறானு நீ நினைக்காதே. நம்ம சந்தோசத்துக்கு நாம கல்யாணம் பண்ணிண்டோம். குழந்தையைப் பெத்து வளர்த்து ஆளாக்கினோம் . இன்னிக்கு அவன் வேறொரு குடும்பத்தை தயார் பண்ண  உழைக்கிறான் ... அதில் முழு கவனமும் வச்சிருக்கிறான்னு நீ நினைச்சுப் பாரு. நினைக்கப் பழகிக்கோ . அப்புறம் உன் மனசில் வருத்தம் சஞ்சலம் எதுவும் இருக்காது"ன்னு என்னோட மாமியார் கிட்டே சொல்வார். எனக்கு அடுத்தடுத்து மூணு ஆண் குழந்தைங்க பிறந்ததும், எங்க மாமனார் என்னோட மாமியார்க்கு சொன்னதை எனக்கு சொன்னதாக நினைச்சுகிட்டேன் . மனசிலே எந்தவொரு எதிர்பார்ப்பும் வைக்காமே குழந்தைகளை வளர்த்து ஆளாக்க வேண்டியது நம்ம டூட்டி. அதை நாம் சரியா செஞ்சா போதும்னு எனக்கு நானே சொல்லிக்கிட்டு என்னைப் பக்குவப்படுத்தி கிட்டேன். அதே சமயம் எங்க முதுமைக்குனு ஒரு சேமிப்பை நான் அப்பவே சேர்க்க ஆரம்பிச்சிட்டேன். இப்போ என் பிள்ளைங்க என்னை நல்லாத்தான் வச்சிருக்காங்க. ஆனா வண்டி கடைசி வரை இப்படியே ஒரே சீரா ஓடும்னு யாராலும் சொல்லமுடியாது. அதனாலே அவங்களை, அவங்க கையை எதிர் பார்க்காதபடி என்னை நானே மாத்தி அமைச்சுகிட்டேன். ஒரு குடும்பத்திலோ அல்லது தனி மனுசனிடமோ கோபமோ விரக்தியோவர என்ன காரணம்னு  யோசிச்சுப் பாருங்க ... " நினைச்சது நடக்கலே .. எதிர் பார்த்தது கிடைக்கலே " என்ற பதில்தான் கிடைக்கும்.  எதிர்பார்ப்புக்கும் ஏமாற்றத்துக்கும் இடையில் நடக்கிறதுதான் வாழ்க்கைன்னு நினைச்சு நம்மை நாமே பக்குவப் படுத்தி கிட்டா, எந்த சம்பவமும் எந்த சூழ்நிலையும் நம்மளை எதுவும் செய்யாது. முக்கியமான ஒண்ணு, குழந்தைகளை வளர்க்கும்போது, ஒரு மரம் அல்லது செடியை நட்டு பராமரிக்கிற மாதிரி நினைச்சுக்கணும் . பலன் நமக்குக் கிடைச்சா சந்தோசம் . மத்தவங்களுக்கு கிடைச்சாலும் சந்தோசம் . தரிசா போகாமே இருந்தால் சரின்னு நினைச்சுக்கணும்   " என்று சொல்லிக் கொண்டிருந்த லலிதாவை ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்த  பாகீரதி, " கீதை சொன்ன கண்ணன் மாதிரி, கோவிலில் வச்சு எனக்கு நம்பிக்கை டானிக் தந்திருக்கிறே. முயற்சி பண்ணிப் பார்க்கிறேன். வேலைக்குப் போயிருக்கிற ரெண்டு பேரும் திரும்பி வர்றதுக்குள் வீட்டுக்குப் போய் சூடா ஏதாவது பண்ணிக் கொடுக்கிறேன் " என்றபடி அங்கிருந்து கிளம்பிய பாகீரதி, "வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம்"னு அரசாங்கம் விளம்பரப் படுத்துவது இதைத்தானா ? " என்று கேலியும் கிண்டலும் நிறைந்த குரலில் கேட்டாள்.

Friday, January 24, 2014

Scanning of inner - heart ( Scan Report Number - 099 )

                                காலமெல்லாம் காதல் வாழ்க !
" மேடம் " என்ற குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்தாள், மேஜை மீது கை வைத்து அதில் தலையை சாய்த்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்த மீரா.
" வாம்மா .சோபி ... சாப்பிட்டாச்சா ? "
" ஆச்சு . இன்னிக்கு என் ப்ரெண்ட் நீலு ஆபீஸ் வரலே. தனியா உட்கார்ந்து சாப்பிட்டதாலே சீக்கிரமாவே லஞ்ச்சை முடிச்சிட்டேன்.போரடிச்சுது . அதான் உங்களைத் தேடி வந்தேன். நீங்க ரெஸ்ட் எடுக்கும்போது டிஸ்டர்ப் பண்ணிட்டேன் போலிருக்கு " என்றாள் சோபியா தயக்கத்துடன் 
"அதெல்லாம் ஒண்ணுமில்லே .. உட்கார் " என்றபடி அருகிலிருந்த ஸ்டூலை இழுத்துப் போட்டு சோபியை உட்கார சொன்னாள் மீரா 
"மேடம் , இந்த ஆபீசில் புதுசா ஜாயின் பண்ணியிருக்கிற எங்க நாலு பேருக்கும் ஒரே ஆதரவு நீங்கதான். இந்த ஆபீசில் எல்லோரும் எங்களை ஏதோ ஒரு ஜந்துவைப் பார்க்கிற மாதிரி பார்க்கிறாங்க. இன்னிக்கு இவங்க எல்லாரும் இருபது வருஷம் முப்பது வருஷம் சர்வீஸ் போட்டிருந்தாக் கூட, இவங்களும் ஒரு காலத்தில் " புதுமுகமாக " இருந்தவங்க தானே. ஏதோ டவுட் கேட்டாக்கூட ஒரு புழு பூச்சியைப் பார்க்கிற மாதிரி பார்க்கிறாங்க. ரொம்ப கஷ்டமா இருக்குது. இந்த ஆபீசிலேயே நீங்க ஒருத்தங்கதான் எங்க முகத்தைப் பார்த்து பேசறீங்க. எங்களைப் பார்த்து சிரிக்கிறீங்க. நாங்க வந்ததால் இவங்களுக்கு வர வேண்டிய பெனிபிட் ஏதாவது வாராமல் போயிட்டுதா என்ன ? ஏன் எல்லோரும் ஒரே மாதிரி இருக்கிறாங்க ? இந்த ஆபீசிலியே நீங்க ஒருத்தங்கதான் வித்தியாசமான ஆளா இருக்கிறீங்க  " என்றுசொன்ன  சோபியின் குரலில் ஒரு ஆதங்கம் தொனித்தது 
"சீனியர்ஸ் ஒரு பந்தாவில் இருப்பாங்க. அதை பெரிசு பண்ணக் கூடாது. உன் கவனம் பூரா நல்லா உழைப்பதிலும் அவங்க கிட்டேயிருந்து வேலை கத்துக்கிறதிலும்  நல்ல பேர் வாங்கிறதிலும்தான் இருக்கணும் "
"உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு மேடம் .. நீங்க எங்க வீட்டுக்கு ஒரு முறை வரணும் "
"ஒரே ஒரு முறை மட்டுந்தானா ?"
"அய்யய்யோ .. என்ன அப்படிக் கேட்டுட்டீங்க. நீங்க என் கூடவே இருந்தால் ரொம்ப சந்தோசப் படுவேன் .. உங்க வீடு எங்கே இருக்கு ? யார் யார் இருக்கிறீங்க  "
" நான் மட்டுந்தான் "
"வேறு யாருமே இல்லையா ? "
"இல்லை "
"எப்படி மேடம் ! தனியா இருக்க பயமா இல்லையா ?"
"மனுஷங்க கூட சேர்ந்து வாழும் போது தான் பயந்து பயந்து வாழணும். எப்போ என்ன மாதிரி ரீயாக்ட் பண்ணுவாங்கனு யாராலும் கண்டு பிடிக்க முடியாது. தனியா இருக்கும்போது எந்த பிரச்சினையும் இல்லே "
"மேடம்,  நான் கேட்கிறேன்னு தப்பா நினைக்கக் கூடாது ... நீங்க ஏன் இன்னும்  கல்யாணம் பண்ணிக்கலே ? "
"தேவைன்னு தோணலே . அதான் பண்ணிக்கலே "
"உங்க அப்பா அம்மா உங்களைக் கட்டாயப் படுத்தலியா ?"
"சொல்லிப் பார்த்தாங்க . ஆனால் நான் கேட்கிற நிலையில் அப்பவும் இல்லே. இப்பவும் இல்லே "
"மேடம்,  இப்பவும் நான் கேட்கிறேன்னு தப்பா நினைக்கக் கூடாது.. நீங்க யாரையாவது லவ் பண்ணுணீங்களா  ? லவ் பெய்லியரா ?"
"லவ் பண்ணினேன் .. லவ் பண்றேன் .. லவ் சக்ஸஸ் தான் .  ஆனால்  நாங்க  கல்யாணம் பண்ணிக்கலே "
"ஐயோடா .. ரொம்ப இன்ட்ரெஸ்டிங்க் மேட்டரா இருக்கு ..ப்ளீஸ்  மேலே சொல்லுங்க. லவ் சக்ஸஸ் ன்னா அப்போ கல்யாணத்தில் முடிஞ்சிருக்க ணுமே   "
"நாங்க என்றைக்குமே காதலிக்கணும்னு நினைச்சோம் "
"குழப்பறீங்க மேடம் "
"ஒரு பாட்டு .. சினிமாப் பாட்டு ... அதில், காதல் என்பது எதுவரை என்ற கேள்வி வரும் . கல்யாணக் காலம் வரும்வரை என்ற பதிலும் வரும். எங்க அண்ணா சொல்வார், " வெற்றி பெற்ற காதலை விட தோல்வியுறும் காதலுக்குத் தான் மதிப்பு அதிகம். அம்பிகாவதி அமராவதி, ரோமியோ ஜூலியட் . ;லைலா மஜ்னு இவங்க காதல் தோல்வியில் சோகத்தில் முடிஞ்சதால்தான் இன்னிக்கு வரை அவங்களைப் பத்தி பேசறோம். வெற்றி பெற்றவங்க பத்தி பேசவா செய்றோம்" என்று . அது உண்மைதான் . ஒரு  காதல் ஆரம்பித்து கல்யாணத்தில் முடிஞ்சதுமே வழக்கமான குடும்ப பிரச்சினை .. சண்டை சச்சரவு .. தெரியாத்தனமா உன்னைப் போய்க் கல்யாணம் பண்ணி கிட்டேனே .. எங்க அப்பா அம்மா பார்த்து வச்ச வரனை வேண்டாம்னு சொல்லிட்டு .. என் புத்தியை செருப்பால் அடிக்கணும் என்று ஒருவர் மீது ஒருவர் பரஸ்பர குற்றச்சாட்டு.. இது .. இதுதானே  ஒரு குடும்பத்தின் இலக்கணம் " என்று மீரா சொல்லிக் கொண்டிருந்த போதே " போங்க மேடம் , சண்டைக்குப் பயந்துதான் கல்யாணம் பண்ணிக்கலையா " என்று கேட்டாள்  சோபி 
"எல்லாக் காதலர்களுக்கும் இருக்கும் எதிர்ப்பு போலே எங்களுக்கும் எதிர்ப்பு இருந்தது. பிறகு ஒருத்தர் குடும்பத்தை மற்றவங்க புரிஞ்சுகிட்டு சமரசம் ஆகிட்டாங்க . இன்னும் சிலநாளில் நிச்சய தார்த்தம் என்ற நிலையில் நானும் அவரும் ஒரு கோவிலுக்குப் போனோம் அங்கு நடைப் படியில் தடுக்கி விழுந்த என்னை அவர் கைத்தாங்கலா அழைச்சுகிட்டு வெளியில் வந்தார் . அந்த நிலையில்  எங்களைப் பார்த்த  ஒரு குடும்பத்தினர் .. அவங்க யாரு என்ன என்கிற தெல்லாம் தெரியாது .. எங்களைப் பார்த்து " வீட்டுக்குத் தெரியாமே வந்த ஜோடி போலிருக்கு. ஜோடி சேர்த்துக் கொண்டு சுத்தறது.. பிறகு ஏமாத்திட்டுப் போயிட்டான் அப்படிப் பண்ணிட்டான் இப்படிப் பண்ணிட்டான்னு தெருவில் உட்கார்ந்து  தர்ணா பண்ண வேண்டியது. காதல்ங்கிற பேரில் உடம்பு கொழுப்பெடுத்து அலைகிற ஜென்மங்கள். கோவிலில் வந்தும் என்னவொரு கீழ்த்தரமான புத்தி . இதுகளையெல்லாம் நிக்க வச்சு சுடணும் "ன்னு எங்கள் காதிலே விழற மாதிரி பேசினாங்க. அந்த வார்த்தை எங்களை ரொம்பவும் சிந்திக்க வச்சுது. ரெண்டு மனங்களின் ஒட்டுதலை எதனால் இரண்டு உடல்களின் ஒட்டுதலுடன் முடிக்கணும்னு நினைச்சோம். ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் தொடாமல், இறக்கும் வரை காதலர்களாக இருக்க ஆசைப் பட்டோம். எங்க கல்யாணத்துக்கு ஆரம்பத்தில் இருந்த எதிர்ப்பைவிட எங்களது இந்த முடிவுக்கு அதிக எதிர்ப்பு.. ஆனாலும்  வழக்கம் போல எங்க பிடிவாதம்தான் ஜெயிச்சுது  ...."
" மேடம் அவர் எங்கே இருக்கிறார் ?"
" இதே ஆபீசில், தர்ட் ப்ளோரில் இருக்கிற மாதவன் "
"வாவ் "
"இன்றைக்கும் நாங்க சேர்ந்து வெளியில் போவோம் .. நாள் கிழமை என்றால் அவர் வீட்டுக்கு நான் போவேன் .. எங்க வீட்டுக்கு அவர் வருவார்  இதிலே ஒரு ஆச்சரியமான விஷயம் என்னன்னா, எங்களைப் பத்தி இந்த ஆபீசிலும் சரி ...  வெளியிலும் சரி யாரும் தப்பாகப் பேசலே " என்று சொல்லி விட்டு சிரித்தாள் மீரா 
"மேடம் உங்க மேலே எனக்கு ரொம்பவும் மரியாதை வந்திருக்கு. நீங்க எல்லா விஷயத்திலுமே வித்தியாசமா இருக்கிறீங்க  .. உங்க செயல்கள் எல்லாமே ரொம்ப வித்தியாசமா இருக்கு? இந்த முடிவுக்கு வந்த எதிர்ப்பை எப்படி சமாளிச்சீங்க ?"
"இது எங்க வாழ்க்கை .. இதை எப்படி வேண்டுமானாலும் வாழும் உரிமை எங்களுக்கு உண்டு. இந்த முடிவால் ரெண்டு குடும்பத்தின் கௌரவத்துக்கு ஏதாவது களங்கம் வரும்னா சொல்லுங்க .. எங்க முடிவை நாங்க மாத்திக்கிறோம்  சொன்னோம் " என்றாள் மீரா கேசுவலாக.
"ஒரு சிலர் வித்தியாசமாக சிந்திக்கிறார்கள் செயல் படுகிறார்கள். வேறு சிலரின் சிந்தனையும் செய்கையுமே மிகவும்  வித்தியாசமாக வழக்கத்தை விட்டு வேறுபட்டு மாறு பட்டு இருக்கிறது  என்ற வரிகளை ஒரு புத்தகத்தில் படித்தேன். இப்போ அதுதான் நினைவுக்கு வருது. ஓகே மேடம் .. லஞ்ச் டைம் முடிஞ்சுது . நான்  என்னோட ஸீட்டுக்கு போறேன். அதுக்கு முன்னாடி  யார் அந்த  தர்ட் ப்ளோரில் இருக்கிற மாதவன் ஸார் என்கிறதையும் பார்த்துட்டுப் போயிடறேன்  " என்று சொல்லிக் கிளம்பி னாள் சோபி.

Friday, January 17, 2014

Scanning of inner - heart ( Scan Report Number - 098 )

                            சிந்தனை செய் மனமே !!
"என்ன மனோகர், ஏன் இவ்வளவு டல்லா இருக்கிறே ? "
"எல்லாம் என்னோட பையனைப் பத்தின கவலைதான் !"
"நீ கவலைப் படும்படி அப்படி என்னதான் பண்றான் ?"
"குணா, அவனை நினைச்சா எனக்கு ரொம்பவும் கவலையா இருக்குடா. அவன் பேச்சு வார்த்தை செயல் எதுவும் ஏழு வயசுப் பையன் பண்ற மாதிரி இல்லாமே ஏதோ வாழ்ந்து முடிச்சவங்க செய்ற , சொல்லுற விஷயம் மாதிரி இருக்கு. அவனைக் குழந்தையாகவும் ட்ரீட் பண்ண முடியலே பைத்தியக்கார லிஸ்டிலும் சேர்க்க முடியலே. எப்பவும் டீவீ தான் . அவனோட பேச ஆரம்பிச்சா நான் மென்டல் ஆயிடுவேன் போலிருக்கு " என்றான் மனோகர் விரக்தியாக.
"ச்சே. என்னடா இது .. சின்னக் குழந்தைங்க விஷயத்தை ரொம்ப சீரியஸா திங்க் பண்ணிட்டு இருக்கிறே "
"ஸ்கூலுக்குப் போக மாட்டேங்கிறான் "
"இப்போ வீட்டில்தான் இருக்கிறானா ? "
" ஆமாம் "
"உன் வொய்ப் ?"
"வேலைக்குப் போய்ட்டா. வீட்டில் ராகவ் மட்டுந்தான் இருக்கிறான் "
"துணைக்கு யாருமில்லாமே குழந்தையை நம்பி வீட்டை விட்டுட்டுப் போறதா ?"
"வேறே என்ன பண்ணலாம்கிறே ?"
"நான் போய் அவனோட பேசிப் பார்க்கட்டுமா ?"
"டேய் .. உன்னை அவன் புலம்ப வச்சிடுவான்டா "
"அதையுந்தான் பார்க்கலாம் .. நான் போயிட்டு வந்திடறேன் "
"இப்பவா ?"
"டூ வீலரில் போனால் , உன் வீட்டுக்குப் பத்து நிமிஷத்தில் போயிட்டு வந்திடலாம். யாராவது கேட்டால் 'தலைவலின்னு சொன்னான் . மெடிக்கல் ஷாப் வரை போயிருப்பான்'னு  சொல்லி சமாளி. நான் எப்படியும் ஒரு ஒரு மணி நேரத்தில் வந்திடுவேன் " என்ற குணா அடுத்த நொடி அங்கிருந்து பறந்தான் 
காலிங் பெல்லை அழுத்திய அடுத்த நொடியே கதவு திறக்கப் பட்டது.
குணாவைப் பார்த்ததுமே, " ஹாய் .. அங்க்கிள் .. டாடி ஆபீஸ் போயிட்டாங்களே..  நீங்க போகலியா ? " என்றான் ராகவ் 
"ஆபீஸ் வேலையா ஒரு இடத்துக்குப் போனேன். திரும்பி வர்றச்சே லேசா தலை சுத்தறமாதிரி இருந்தது. உங்க வீடு பக்கத்திலேயே இருக்கிறது ஞாபகம் வந்துச்சுது  .. அதான் .. ஒரு அஞ்சு நிமிஷம் ரெஸ்ட் எடுத்துட்டுப் போகலாம்னு வந்தேன்  "
"அங்க்கிள் ..தலை சுத்தறப்போ உங்க பேக் சைடை நீங்க பார்க்கலாம் தானே ? செமே ஜாலிதானே ?"
"ஆஹா .. அட்டாக் ஆரம்பிச்சிடுச்சு போலிருக்கே " என்று மனதுக்குள் நினைத்துக் கொண்ட குணா, " ஆமா ...இந்த நேரத்தில் நீ வீட்டிலிருக்கிறே. ஸ்கூல் போகலியா ?" என்றான் 
"நான் இருப்பேன்னு தெரிஞ்சுதானே இங்கே வந்து காலிங் பெல்லை பிரஸ் பண்ணுனீங்க !"
"இல்லே ..  உங்க டாடி .. அதான் மனோ இருப்பான்னு நினைச்சேன் "
"நாளைக்கு நான் லீவு . நான் வீட்டிலிருப்பேன்னு நேத்து எங்க டாடி சொன்னாரா என்ன  ?"
"ஆஹா .. அடுத்த அட்டாக் " என்று நினைத்துக் கொண்ட குணா , " ராகவ், நீ போய்  எனக்கு கொஞ்சம் ஐஸ் வாட்டர் கொண்டு வாயேன் " என்றான்.
அடுத்த நொடியே ஐஸ் வாட்டர் பாட்டில் அவன் முன்பாக வந்தது 
"நீ ஸ்கூல் போகலியா ... இன்னிக்கு லீவா என்ன ?"
"அதெல்லாம் ஒண்ணுமில்லே .. நான் லீவு .. அவ்வளவுதான் "
"உன் இஷ்டத்துக்கு அப்படியெல்லாம் நீ லீவு போட முடியுமா என்ன ?"
"எனக்கு போகவே பிடிக்கலே "
"என்னடா இப்படி சொல்றே ? ஸ்கூலுக்குப் போகணும் . நல்லாப் படிக்கணும் . படிச்சு பெரிய ஆளா வரணும் "
"படிக்காமே பெரிய ஆளா வர முடியாதா?"
"முடியாது "
"காம்ப்ளான் குடிச்சா பெரிசா வளரலாம்னு டீவீ யிலே சொல்றதெல்லாம் பொய்யா ?"
"அது விளம்பரம் ... நான் சொல்ற " பெரிய ஆள் " வேறே ... அதாவது ... படிச்சு வேலைக்குப் போய் நாலு மனுஷங்க மதிக்கிற மாதிரி வாழ்வதை சொன்னேன் "
"ஆமாம் .... வேலை ....பெரிய வேலை ...."
"என்னப்பா இப்படி சொல்றே. பறவைகள் கூட இறை தேடி கூட்டை விட்டு வெளியே போகிறது. அதைப் பொறுத்த வரை அதுக்கு அதுவும் ஒரு வேலைதான். ஆடுமாடுங்க மேய்ச்சலுக்குப் போகுது ..குதிரையை வண்டியிலே பூட்டி ஓட்டறாங்க. வண்டியை இழுக்கிறது அதோட வேலை . .. சரி ... பறவைங்க .. ஆடுமாடுகளை விட்டுத் தள்ளு. காலையில் பால் கொண்டு வந்து கொடுப்பது , பேப்பர் போடறது .. காய்கறி, தண்ணீர் கொண்டு வந்து கொடுக்கிறதுன்னு ஒவ்வொருத்தரும் தனக்குத் தெரிஞ்ச வேலையை செய்துட்டு தானே இருக்கிறாங்க. பத்து கம்பெனியை வச்சு ஒருத்தர் நிர்வாகம் பண்ணிட்டு இருப்பார். அது அவரோட வேலை.. இப்படி ஏழைங்க  முதல் பணக்காரங்க வரை ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு வேலையை செஞ்சுட்டு இருக்கிறாங்களே. நாளைக்கு நாம என்னவா வரணும்னு இன்னிக்கே நாம ஒரு ப்ளான் பண்ணிக்கணும். எதிலும் ஒரு தொலை நோக்குப் பார்வை இருக்கணும். அதுக்குத் தகுந்த படி   இப்போ நம்மை நாமே தயார் பண்ணிக்கணும் "
"நான் அதைத் தானே செய்றேன் அங்க்கிள் " என்றான் ராகவ் 
"அப்படியா என்ன செய்றே ? உன்னோட தொலை நோக்குப் பார்வை என்னனு சொல்லு  "
"அங்க்கிள் நீங்க டீவீ பார்ப்பீங்களா ?"
"அதுக்கெல்லாம் ஏது நேரம் ? எப்பவாவது பார்ப்பேன் "
"பேப்பர் படிப்பீங்களா, இல்லே அதுக்கும் நேரமில்லையா ?"
"எங்க வீட்டில் பேப்பர் வாங்கறதே கிடையாதுப்பா "
"டீவீ யும் பார்க்காமே பேப்பரும்  படிக்காததாலே உங்களுக்கு, அரௌண்ட் தி வேர்ல்ட்  என்ன நடக்குதுன்னே தெரியலை..  ஸ்கூல் போகறப்போ சின்னக் குழந்தைங்களைக் கடத்திட்டுப் போயிடறாங்க... பெரியவனாகி காலேஜ் போனா அங்கேயும் ராகிங் அது இதுன்னு ஏகப் பட்ட தகராறு. வேலை பார்க்கிற இடத்தில் மட்டும் பிரச்சினை இல்லையா என்ன?  நாம எந்தத் தப்பும் பண்ணாட்டாலும்  எவனெவனோ பண்றதில் நாம மாட்டிக்க சான்ஸ் இருக்கு . வேலைக்குப் போயிட்டு மிட் நைட் வீடு திரும்பினா திருட்டுப் பசங்க அடிச்சுப் போட்டுட்டு போயிடுவாங்களோ என்கிற பயம் . வெளிநாடு போனாக்கூட பயந்து பயந்துதான் வாழணும். ஏதாவது வம்பில் மாட்டிக்காமே  இருக்கணுமே .. வேலை முடிஞ்சு போச்சு .. உன் நாட்டுக்குப் போன்னு சொல்லாமே இருக்கணுமேன்னு தினமும் பயந்து பயந்து சாகணும். வேலை கிடைச்சா உடனே கல்யாணம்தான். நாம யாரையாவது லவ் பண்ணினாலும் சாகடிப்பாங்க .. நாம கல்யாணம் பண்ணின பொண்ணு வேறே யாரையாவது லவ் பண்ணியிருந்தாலும் அதுக்கும் நம்மளத்தான் சாகடிப்பாங்க.. இதெல்லாம் எதனாலே வருது . நாம படிச்சு வேலை பார்த்து கல்யாணம் பண்ணிக்கிறதாலேதானே. இது வராமே, நடக்காமே இருக்க என்ன வழின்னு யோசியுங்க ... எங்கயும் போகாமே நாம உண்டு நம்ம வீடு உண்டுன்னு நம்ம வீட்டில் இருக்கிறது தான்  சேப் அங்க்கிள்.. அதைத்தான் நான் இப்போ செய்றேன் " என்று மூச்சு விடாமல் சொன்னான் ராகவ்  
கொஞ்ச நேரம் யோசித்த குணா, " சரி தம்பி .. நான் கிளம்பறேன் .. வீட்டை நல்லா லாக் பண்ணிக்கோ . எவனாவது திருட்டுப் பசங்க நுழைஞ்சிடப் போறாங்க .. நான் வர்றேன் " என்று சொல்லிக் கிளம்பினான் 
குணாவின் வருகைக்காக காத்திருந்த மனோகர், அவனது டூ வீலர் கண்ணில் பட்டதுமே   ஷெட்டுக்கு ஓடிப் போனான். வண்டியை ஸ்டான்ட் போட்டு நிறுத்திக் கொண்டிருந்த குணாவிடம்  " என்னப்பா ஆச்சு ?" என்றான் ஆவலுடன்  
"எனக்கு ஏதாவது ஆகாமல் இருந்ததுக்காக நான் சந்தோசப்படறேன் . உன் பையனோட தொலை நோக்குப் பார்வை  ராக்கெட் வேகத்தை விட வேகமானது . எனக்கு நெஜமாவே தலை சுத்தற மாதிரி இருக்கு. என்னை ஒரு நல்ல டாக்டர் கிட்டே கூட்டிட்டுப் போயேன் " என்றான் 

Friday, January 10, 2014

Scanning of inner - heart ( Scan Report Number - 097 )

           நிரந்தரம் .... மாற்றம் மட்டுமே !

"என்னால் நம்பவே முடியலியே . நெஜமாத்தான் சொல்றீங்களா ? " என்று வியந்து போய்க் கேட்டாள் வசுமதி 
"என்னாலும் நம்ப முடியலே. ஆனால் சொல்றது ராஜு ஸார். அதுவும் அவர் பிள்ளைகளைப் பத்தி. பிள்ளைங்க விஷயத்தில் யாராவது பொய் சொல்வாங்களா ? " என்றார் சாரங்கபாணி 
"ஸாரோட  மனைவி எப்படி இருக்கிறாங்களாம் ? பாவம் அந்த அம்மா ஒரு வாயில்லாப் பூச்சி . அப்பவே பிள்ளைகளுக்குக்காகப் பேசறதா இல்லை புருசனுக்காகப் பேசறதான்னு அல்லாடிகிட்டு நிப்பாங்க. இப்போ எப்படி இருக்காங்களாம், கேட்டீங்களா ? "
"யாரோடயும் பேசறதே கிடையாதாம். சாப்பாட்டைக் கொண்டு போய் முன்னாலே வச்சா சாப்பிடுவாங்களாம். மத்த நேரம் பூரா பூஜை ரூமும் படுக்கையும்தான் அவங்களுக்குக் கதியாம் "
"பாவங்க .. ஸார் எப்படி இருக்கிறார் ? "
"பொம்பளைங்க துக்கத்தையும் சந்தோசத்தையும் உடனே ரிஆக்ட் பண்ணிடுவீங்க. ஜென்ட்ஸ் எதையும் வெளியே காட்டிக்க மாட்டங்க. அது தான் அவர் நிலைமையும் "
"ஆணோ பெண்ணோ, அந்தந்த வயசிலே அவங்கவங்களுக்கு செய்ய வேண்டியதை வீட்டிலுள்ள பெரியவங்க உடனே பார்த்து செய்யணும். மேலே மேலே படிக்கட்டும். உத்யோகம் பார்க்கட்டும். உத்யோகத்திலே சேர்ந்ததும் வீடு வாங்கட்டும். அதுக்குப் பிறகு வரன் பார்க்கலாம்னு நம்ம வசதிக்காக நாளைத் தள்ளிப் போட்டுட்டே வந்தா இப்படித்தான். குழந்தைங்க மனசறிஞ்சு பெரியவங்க நடக்க வேண்டாமா "
"நேத்து பஸ்சுக்காகக் காத்திட்டுருந்தேன் . கூடவே எங்க ஆபீஸ் பியூன் ரங்கசாமியும் நின்னுட்டு இருந்தான். பக்கத்திலேயே சில பொம்பளைப் பசங்க நின்னுட்டு இருந்துச்சு. அதுங்களை சைட் அடிச்சுகிட்டு சில விடலைப் பசங்க கூட்டம். அவனுக பேசறதைக் கேட்டு ஒரு பொண்ணு செருப்பை சைகை காட்டி, அதாலே அடிப்பேன்னு சைகை காட்டுச்சு. அதைக் கேட்டு அந்த விடலைப் பசங்க சிரிச்சாங்க. அப்பத்தான் ரங்கசாமி சொன்னான், " ஸார், அந்தக் கூட்டத்திலே தலைவனா நிக்கிறது நம்ம ஆபீஸ் கோபாலோட தம்பி. வீட்டில் வரன் பார்க்கிறாங்க. டிமாண்ட் என்ன தெரியுமா ? இந்தத் தறுதலைக்கு 100 பவுன் நகை வேணுமாம், பவுன் 23000 க்கு விக்கிற இந்தக் காலத்தில். கல்யாணம் பண்ணி வைக்கணும். வண்டி வேணும். லொட்டு லொசுக்குனு ஏகப்பட்ட டிமாண்ட்ஸ். செருப்படி வாங்கினாலும் பரவாயில்லைன்னு பொண்ணுக பின்னாலே போக இவன் தயாரா இருக்கிறான் "னு"
"அட வயசுப் பசங்க... நல்லது எது கெட்டது  எதுன்னு தெரியாத இரண்டுங் கெட்டான்  வயசு ..இப்போ நீங்க சொன்னீங்களே நம்ம ராஜு ஸாரோட   பிள்ளை கோபியைப் பத்தி.. அதைத் தான் என்னாலே நம்ப முடியலே. ஆனந்தாவது சரியாப் படிக்க மாட்டான். அவ்வளவு சின்ன வயசிலேயே கெட்ட சகவாசம். ஆனா இந்தப் பையன் அப்படியில்லையே. தான் உண்டு ..படிப்பு உண்டுன்னு இருப்பான். அவன் குரல் எப்படி இருக்குங்கிறது கூட அக்கம் பக்கத்துக்குத் தெரியாது. அப்படிப் பட்ட பிள்ளை இப்படி  கெட்ட   சகவாசம், செயின் பறிப்புன்னு மாறிட்டான்னு சொல்றதை என்னாலே நம்ப முடியலே .. அதுவும் பணத்துக்கு தேவையே இல்லாதப்ப ..."
"பணத் தேவைக்காக இல்லே . பிரெண்ட்ஸ் கிட்டே சாலெஞ்ச் பண்ணி அவனோட திறமையை நிரூபிக்கிறதுக்காகவாம். அதுமட்டுமில்லே .. ஒரு பொண்ணு .. அதுவும் வேறே ஜாதிப் பொண்ணு பின்னாலே சுத்தி அலைஞ்சு ஒரே ஜாதி சண்டையாம் . கலவரமாம் . ஏண்டா இப்படி செய்றேன்னு கேட்டால் " பொண்ணுங்க விஷயத்தில் என் திறமையை நிரூபிக்கத் தான் ரொம்ப அசால்ட்டா பதில் சொல்றானாம் . இதை சொல்லிட்டு ராஜு ஸார் அழுதப்போ என்னாலேயே தாங்க முடியலே  " என்று நெகிழ்ந்த குரலில் சொன்னார் சாரங்க பாணி 
"கரும சண்டாளம் .. திறமையை நிரூபிக்க வேறே வழியா இல்லே . இப்போ ஒரு சீரியலில் வருது... யாராவது பெட் கட்டினாப் போதும் . அதுக்காக  ஒரு பைத்தியக்காரன் என்ன வேணும்னாலும் செய்வான் . அந்தக் கதையாக இருக்குதே கோபி விவகாரம் "
"அப்போ ..  நாம ஸாரோட பக்கத்து வீட்டில் குடியிருந்தப்போ .. அவரோட பெரிய பிள்ளை  ஆனந்த் கூட , சாரங்கபாணி ஸார் மல்லுக்கு நிற்கும் போதெல்லாம் ' இவ்வளவு சின்ன வயசில் இந்தப் பையன் இவ்வளவு அடாவடியா இருக்கிறானே . இவன் வளர்ந்து வாலிபனாகி என்னென்ன தில்லுமுல்லு பண்ணப் போறானோன்னு    நினைப்பேன். நாமே பார்த்தது ஒண்ணு . அதை வச்சு நினைச்சது ஒண்ணு .  எவ்வளவு மாற்றம் பாருங்க .. உலகத்தில் நிரந்தரம்னு எதுவுமே கிடையாதா  ? "
" ஏன் கிடையாது ? ஒண்ணே ஒண்ணு இருக்குதே "
" என்னங்க அது ? " என்றாள் வசுமதி ஆவலாக 
"உலகத்தில் பொன் பொருள் மனிதர்கள் கட்டிடங்கள் எதுவுமே நிலையில்லை  ... நிரந்தரம் இல்லை ... மாற்றங்கள் மட்டுமே நிரந்தரம் .. அதில் எந்த மாற்றமும் கிடையாது  " என்றார் சாரங்கபாணி அமைதியாக .

Friday, January 03, 2014

Scanning of inner - heart ( Scan Report Number - 096 )

                                          சூட்சுமம் ? !!

ஆபீஸ் நோட்டிஸ் போர்டில் சல்லடை போட்டுத் தேடித் பார்த்தான் ராகுல் . ஊஹும் . இந்த வருஷமும் யாரோ அந்த காண்ட்ராக்டை தட்டிக் கொண்டு போய்விட்டார்கள். தனக்குக் கிடைக்கவில்லை. எதனால் இந்த காண்ட்ராக்ட் தனக்குக் கிடைக்காமல் போகிறது என்கிற ஆதங்கம் ஒரு புறம் கவலை ஒருபுறம் என்று  இரண்டும் சேர்ந்த   குழப்பத்துடனேயே டூ வீலரில் பறந்து கொண்டிருந்தான் ராகுல், கவெர்ன்மெண்ட் ஆபீஸ் காண்டீன். இடம் ப்ரீயாகக் கிடைக்கும். ஓரளவு டீசெண்ட் ஆட்களாக வந்து போகும் இடமென்பதால் பிரச்சினை எதுவும் இருக்காது. என்னதான் மூன்று வருஷ  காண்ட்ராக்ட் என்றாலும் மூணு வருஷம் எந்தப் பிரச்சி னையும் இல்லாமல் காலையில் ஆறு மணிக்கு வேலையை ஆரம்பிச் சோம் சாயங்காலம் ஆறு மணிக்கு அடைச்சு மூடினோம்னு நிம்மதியாப் பொழுதைக் கழிக்கலாம். அங்கு வரும் கஸ்டமர்ஸ் பழக்கத்தை வச்சு ஏதாவது விசேஷங்களுக்குக் கூட கேட்டரிங் ஆர்டர் பிடிக்கலாம்னு பார்த்தால் அதுக்கும் வழியில்லாமல் போச்சே என்று நொந்து போனான். திடீரென்னு  ஒருவிதத் தள்ளாட்டத்துடன் வண்டி நின்று விட்டது . ச்சே சனியன். இருக்கிற தலைவலி போதாதுன்னு இது வேறு வழியில் நின்று விட்டதே என்ற சலிப்புடன் வண்டியை தள்ளிக் கொண்டு வந்து ஓரங்கட்டினான். பெட்ரோல் புல் என்பதை இண்டிகேட்டர் காட்டினாலுங் கூட தனது திருப்திக்காக பெட்ரோல் டேங்கை திறந்து பார்த்தான். தனக்குத் தெரிந்த கை வைத்தியமெல்லாம் செய்து பார்த்தேன். உன்னால் முடிஞ்சதைப் பாரு. நான் இந்த இடத்தை விட்டு நகர மாட்டேன் என்று அடம் பிடித்தது வண்டி.
வாழ்க்கையும் சரி; வண்டியும் சரி ; ஸ்மூத்தாக ஓடிக் கொண்டிருக்கும் வரைதான் சௌகரியம் ; சந்தோசமெல்லாம். எங்காவது ஒரு இடத்தில் நின்று கொண்டு நகர மறுத்தால், சந்தோஷமெல்லாம் கை சொடுக்கும் நேரத்துக்குள் காணாமல் போய்விடும் என்று தனக்குள் சொல்லிக் கொண்டான். இந்த சங்கடத்திலும் ஆறுதலான ஒரே ஒரு விஷயம் ஒதுங்கி நிற்க ஒரு மரநிழல் கிடைத்ததுதான். மரத்தை ஏறிட்டுப் பார்த்தான். புளியங்காய்கள் கொத்துக் கொத்தாக தொங்கிக் கொண்டிருந் தன. பள்ளிப் பருவத்தில் கல் வீசி புளியங்காய் பறித்து, வீதி வழி சென்று கொண்டிருந்த பால்காரர் மண்டையை உடைத்து, முதுகு பழுக்கும் அளவு வாங்கிக் கட்டிக் கொண்டது ஞாபகம் வந்தது.
"என்ன ஸார், வெஹிகில் ப்ராப்ளமா ?" என்று அக்கறையாக விசாரித் தார் அந்த வழியாக வந்து கொண்டிருந்த மற்றொரு டூ வீலர்.
கவெர்ன்மெண்ட் ஆபீஸ் கான்டீன் காண்ட்ராக்ட் மட்டும் இந்நேரம் எனக்குக் கிடைத்திருந்தால்  நீ கேட்ட கேள்விக்கு "  வெஹிகிளில்  எந்த ப்ராப்ளெம்  எதுவும் இல்லே. புளியங்காய் சாப்பிடணும்னு ஆசை  வந்துச்சுது. அதான் வண்டியை ஓரங்கட்டிட்டு புளியங்காய் பறிச்சுச் சாப்பிடறேன்னு உனக்குப்  பதில் சொல்லியிருப்பேன். மவனே கேள்வியா கேட்கிறே? " என்று மனதுக்குள் கோபப்பட்டாலும், இத்தனை பேர் பறந்து கொண்டிருக்கிற  பாதையில் இவன் ஒருத்தனாவது அக்கறையாகக் கேட்கிறானே என்ற  நன்றி உணர்ச்சியில்,  " நல்லாத் தான் வந்துட்டு இருந்தது. என்னனு தெரியலே. சடனா நின்னு போச்சு. இப்போ கிளம்ப மாட்டேன்னு அடம் பிடிக்குது  " என்றான் ராகுல் 
தனது வண்டியை ஓரங்கட்டிய அந்த " திருவாளர் பொதுஜனம் ", ராகுலின் வண்டியை  பல்ஸ் பிடித்துப் பார்த்து விட்டு, " என்னனு தெரியலையே " என்று அலுத்துக் கொண்டார். இதற்குள் அந்த வழியாக வந்து கொண்டிருந் த   இரண்டு ஆட்டோ ரிக் ஷா  ட்ரரைவர்ஸ், அவர்கள் வேலையை விட்டு விட்டு  ராகுலின் உதவிக்கு வந்தார்கள். " உனக்காச்சா எனக்காச்சா "ன்னு பார்த்துடலாம்  என்கிற தோரணையில் வண்டி அசைய மறுத்தது.
"ஸார், வண்டியை நகர்த்தக் கூட முடியலே. நீங்க எப்படி இதை மெக்கானிக் ஷாப் வரை கொண்டு போய்ச் சேர்ப்பீங்க. இங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில்  ஒரு மெக்கானிக் ஷாப் இருக்குது. வேணும் னா நான் அவங்களை வரச் சொல்லட்டுமா ? " என்று கேட்டார் ஆட்டோ டிரைவர்.
"சரி " என்று ராகுல் தலையசைக்க, " ஸார், அவங்க வர்ற வரை நீங்க பொறுமையா நில்லுங்க. எங்கேயும் போயிடாதீங்க. நான் அவங்களை வரச் சொல்லிட்டுப் போக, நீங்க பாட்டுக்குக் கிளம்பிப் போயிட்டா என் கதை கந்தலாயிடும். எனக்கு ரொம்பவும் தெரிஞ்ச கடை அது " என்று சொல்லியபடி   ஆட்டோ டிரைவர் கிளம்பிப் போனார்.
கிட்டத் தட்ட ஒன்றரை மணி நேரம் கழித்து ஒரு மெக்கானிக் வந்து சேர்ந்தான், " ஸாரி ஸார். உடனே கிளம்பி வர முடியலே. போலீஸ் இன்ஸ்பெக்டர் வண்டி ஒண்ணு செர்வீசுக்கு வந்துச்சு. அதைப் பார்த்துட்டு இருந்தேன் . அதான் லேட் " என்றபடி.
"நல்லா ஓடிட்டு இருந்துச்சு. திடீர்னு ஒரு சத்தம் வந்து நின்னுச்சுது. பிறகு கிளம்பவே மாட்டேங்குது " என்றான் ராகுல் 
" பார்த்துடலாம் " என்றபடி வண்டி அருகில் மண்டியிட்டு உட்கார்ந்த  மெக்கானிக் ஒரு ட்யுபைக் கழற்றி மாட்டி, ஒரு ஸ்க்ருவை டைட்  செய்ய அடுத்த நொடி வண்டி ஸ்டார்ட் ஆக, " அம்மாடீ " என்ற நிம்மதிப் பெருமூச்சு வெளிப்பட்டது ராகுலிடமிருந்து.
" எவ்வளவுப்பா ? "
" நூறு குடுங்க ஸார் "
" ஏம்ப்பா அங்கிருந்து வந்ததுக்கும் சேர்த்து ரேட் போடுறியா ? "
"அதெல்லாம் இல்லை ஸார் . அந்த சைடு போற வண்டியில் லிப்ட் கேட்டு வந்தேன். இப்போ உங்களோடு சேர்ந்து வந்து கடையாண்டை இறங்கிடப் போறேன். வண்டியை சரி பண்ணினதுக்குத் தான் நூறு ரூபா  ".
"அநியாயமா இருக்கே . வந்து ஒரு ஸ்க்ருவை டைட் பண்ணினதுக்கு இந்த ரேட்டா  ?" என்று வாய் பிளந்தான் ராகுல் 
" ஸார் நீங்க எவ்வளவு நேரமா இங்கே நிற்கிறீங்க ? "
"என்ன .. ஒரு ரெண்டு இல்லாட்டி ரெண்டரை மணி நேரம் இருக்கும் "
"உங்க வண்டி ... உங்க வண்டியிலுள்ள ஸ்பார் பார்ட்ஸ். நான் டைட் பண்ணினது வெறும் ஸ்க்ரூ தான் . ஆனால் அதுகூடத் தெரியாமேத் தானே இவ்வளவு நேரம் நிற்கிறீங்க . அதில் எதை டைட் பண்ணினா வண்டி ஓடுங்கிறது உங்களுக்குத் தெரியலே. நான் தெரிஞ்சு வச்சிருக்கிறேன். அந்த சூட்சுமத்துக்குத் தான் காசே தவிர செய்த வேலைக்கு இல்லே "
யாரோ நெற்றிப் பொட்டில் அறைந்தது போலிருந்தது ராகுலுக்கு. பர்சைத் திறந்து  இரண்டு நூறு ரூபாய் நோட்டை எடுத்து அவனிடம் நீட்டினான்.
"ஸார் நான் கேட்டது நூறுதான் "
"நான் கேட்காமலே  ஒரு தொழில் ரகசியத்தை எனக்கு நீ சொல்லிக் குடுத்திருக்கே; இப்போ சொன்னே பாரு, எதை டைட் பண்ணினா வண்டி சரியாகும்னு தெரிஞ்சு வச்சிருக்கிறதுக்குத் தான் காசுன்னு. அது நூத்திலே ஒரு வார்த்தை. எந்த ஒரு விஷயத்திலும் இலக்கை கண்டு பிடிச்சு  முயற்சி பண்ணினா நிச்சயம் ஜெயிக்க முடியும்னு உங்கிட்டே யிருந்து நான் கத்துக் கிட்டேன். அதுக்கான ட்யூசன்   பீஸ் தான் இது "
"நீங்க என்னென்னவோ சொல்றீங்க . எனக்கு எதுவும் புரியலே . இருந்தா லும் வந்த வரைக்கும் லாபம். போற வழியில் என் கடையாண்டே என்னை டிராப் பண்ணிடுங்க ஸார் " என்று சொல்லிக் கிளம்பத் தயாரானான் மெக்கானிக்.