Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, January 24, 2014

Scanning of inner - heart ( Scan Report Number - 099 )

                                காலமெல்லாம் காதல் வாழ்க !
" மேடம் " என்ற குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்தாள், மேஜை மீது கை வைத்து அதில் தலையை சாய்த்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்த மீரா.
" வாம்மா .சோபி ... சாப்பிட்டாச்சா ? "
" ஆச்சு . இன்னிக்கு என் ப்ரெண்ட் நீலு ஆபீஸ் வரலே. தனியா உட்கார்ந்து சாப்பிட்டதாலே சீக்கிரமாவே லஞ்ச்சை முடிச்சிட்டேன்.போரடிச்சுது . அதான் உங்களைத் தேடி வந்தேன். நீங்க ரெஸ்ட் எடுக்கும்போது டிஸ்டர்ப் பண்ணிட்டேன் போலிருக்கு " என்றாள் சோபியா தயக்கத்துடன் 
"அதெல்லாம் ஒண்ணுமில்லே .. உட்கார் " என்றபடி அருகிலிருந்த ஸ்டூலை இழுத்துப் போட்டு சோபியை உட்கார சொன்னாள் மீரா 
"மேடம் , இந்த ஆபீசில் புதுசா ஜாயின் பண்ணியிருக்கிற எங்க நாலு பேருக்கும் ஒரே ஆதரவு நீங்கதான். இந்த ஆபீசில் எல்லோரும் எங்களை ஏதோ ஒரு ஜந்துவைப் பார்க்கிற மாதிரி பார்க்கிறாங்க. இன்னிக்கு இவங்க எல்லாரும் இருபது வருஷம் முப்பது வருஷம் சர்வீஸ் போட்டிருந்தாக் கூட, இவங்களும் ஒரு காலத்தில் " புதுமுகமாக " இருந்தவங்க தானே. ஏதோ டவுட் கேட்டாக்கூட ஒரு புழு பூச்சியைப் பார்க்கிற மாதிரி பார்க்கிறாங்க. ரொம்ப கஷ்டமா இருக்குது. இந்த ஆபீசிலேயே நீங்க ஒருத்தங்கதான் எங்க முகத்தைப் பார்த்து பேசறீங்க. எங்களைப் பார்த்து சிரிக்கிறீங்க. நாங்க வந்ததால் இவங்களுக்கு வர வேண்டிய பெனிபிட் ஏதாவது வாராமல் போயிட்டுதா என்ன ? ஏன் எல்லோரும் ஒரே மாதிரி இருக்கிறாங்க ? இந்த ஆபீசிலியே நீங்க ஒருத்தங்கதான் வித்தியாசமான ஆளா இருக்கிறீங்க  " என்றுசொன்ன  சோபியின் குரலில் ஒரு ஆதங்கம் தொனித்தது 
"சீனியர்ஸ் ஒரு பந்தாவில் இருப்பாங்க. அதை பெரிசு பண்ணக் கூடாது. உன் கவனம் பூரா நல்லா உழைப்பதிலும் அவங்க கிட்டேயிருந்து வேலை கத்துக்கிறதிலும்  நல்ல பேர் வாங்கிறதிலும்தான் இருக்கணும் "
"உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு மேடம் .. நீங்க எங்க வீட்டுக்கு ஒரு முறை வரணும் "
"ஒரே ஒரு முறை மட்டுந்தானா ?"
"அய்யய்யோ .. என்ன அப்படிக் கேட்டுட்டீங்க. நீங்க என் கூடவே இருந்தால் ரொம்ப சந்தோசப் படுவேன் .. உங்க வீடு எங்கே இருக்கு ? யார் யார் இருக்கிறீங்க  "
" நான் மட்டுந்தான் "
"வேறு யாருமே இல்லையா ? "
"இல்லை "
"எப்படி மேடம் ! தனியா இருக்க பயமா இல்லையா ?"
"மனுஷங்க கூட சேர்ந்து வாழும் போது தான் பயந்து பயந்து வாழணும். எப்போ என்ன மாதிரி ரீயாக்ட் பண்ணுவாங்கனு யாராலும் கண்டு பிடிக்க முடியாது. தனியா இருக்கும்போது எந்த பிரச்சினையும் இல்லே "
"மேடம்,  நான் கேட்கிறேன்னு தப்பா நினைக்கக் கூடாது ... நீங்க ஏன் இன்னும்  கல்யாணம் பண்ணிக்கலே ? "
"தேவைன்னு தோணலே . அதான் பண்ணிக்கலே "
"உங்க அப்பா அம்மா உங்களைக் கட்டாயப் படுத்தலியா ?"
"சொல்லிப் பார்த்தாங்க . ஆனால் நான் கேட்கிற நிலையில் அப்பவும் இல்லே. இப்பவும் இல்லே "
"மேடம்,  இப்பவும் நான் கேட்கிறேன்னு தப்பா நினைக்கக் கூடாது.. நீங்க யாரையாவது லவ் பண்ணுணீங்களா  ? லவ் பெய்லியரா ?"
"லவ் பண்ணினேன் .. லவ் பண்றேன் .. லவ் சக்ஸஸ் தான் .  ஆனால்  நாங்க  கல்யாணம் பண்ணிக்கலே "
"ஐயோடா .. ரொம்ப இன்ட்ரெஸ்டிங்க் மேட்டரா இருக்கு ..ப்ளீஸ்  மேலே சொல்லுங்க. லவ் சக்ஸஸ் ன்னா அப்போ கல்யாணத்தில் முடிஞ்சிருக்க ணுமே   "
"நாங்க என்றைக்குமே காதலிக்கணும்னு நினைச்சோம் "
"குழப்பறீங்க மேடம் "
"ஒரு பாட்டு .. சினிமாப் பாட்டு ... அதில், காதல் என்பது எதுவரை என்ற கேள்வி வரும் . கல்யாணக் காலம் வரும்வரை என்ற பதிலும் வரும். எங்க அண்ணா சொல்வார், " வெற்றி பெற்ற காதலை விட தோல்வியுறும் காதலுக்குத் தான் மதிப்பு அதிகம். அம்பிகாவதி அமராவதி, ரோமியோ ஜூலியட் . ;லைலா மஜ்னு இவங்க காதல் தோல்வியில் சோகத்தில் முடிஞ்சதால்தான் இன்னிக்கு வரை அவங்களைப் பத்தி பேசறோம். வெற்றி பெற்றவங்க பத்தி பேசவா செய்றோம்" என்று . அது உண்மைதான் . ஒரு  காதல் ஆரம்பித்து கல்யாணத்தில் முடிஞ்சதுமே வழக்கமான குடும்ப பிரச்சினை .. சண்டை சச்சரவு .. தெரியாத்தனமா உன்னைப் போய்க் கல்யாணம் பண்ணி கிட்டேனே .. எங்க அப்பா அம்மா பார்த்து வச்ச வரனை வேண்டாம்னு சொல்லிட்டு .. என் புத்தியை செருப்பால் அடிக்கணும் என்று ஒருவர் மீது ஒருவர் பரஸ்பர குற்றச்சாட்டு.. இது .. இதுதானே  ஒரு குடும்பத்தின் இலக்கணம் " என்று மீரா சொல்லிக் கொண்டிருந்த போதே " போங்க மேடம் , சண்டைக்குப் பயந்துதான் கல்யாணம் பண்ணிக்கலையா " என்று கேட்டாள்  சோபி 
"எல்லாக் காதலர்களுக்கும் இருக்கும் எதிர்ப்பு போலே எங்களுக்கும் எதிர்ப்பு இருந்தது. பிறகு ஒருத்தர் குடும்பத்தை மற்றவங்க புரிஞ்சுகிட்டு சமரசம் ஆகிட்டாங்க . இன்னும் சிலநாளில் நிச்சய தார்த்தம் என்ற நிலையில் நானும் அவரும் ஒரு கோவிலுக்குப் போனோம் அங்கு நடைப் படியில் தடுக்கி விழுந்த என்னை அவர் கைத்தாங்கலா அழைச்சுகிட்டு வெளியில் வந்தார் . அந்த நிலையில்  எங்களைப் பார்த்த  ஒரு குடும்பத்தினர் .. அவங்க யாரு என்ன என்கிற தெல்லாம் தெரியாது .. எங்களைப் பார்த்து " வீட்டுக்குத் தெரியாமே வந்த ஜோடி போலிருக்கு. ஜோடி சேர்த்துக் கொண்டு சுத்தறது.. பிறகு ஏமாத்திட்டுப் போயிட்டான் அப்படிப் பண்ணிட்டான் இப்படிப் பண்ணிட்டான்னு தெருவில் உட்கார்ந்து  தர்ணா பண்ண வேண்டியது. காதல்ங்கிற பேரில் உடம்பு கொழுப்பெடுத்து அலைகிற ஜென்மங்கள். கோவிலில் வந்தும் என்னவொரு கீழ்த்தரமான புத்தி . இதுகளையெல்லாம் நிக்க வச்சு சுடணும் "ன்னு எங்கள் காதிலே விழற மாதிரி பேசினாங்க. அந்த வார்த்தை எங்களை ரொம்பவும் சிந்திக்க வச்சுது. ரெண்டு மனங்களின் ஒட்டுதலை எதனால் இரண்டு உடல்களின் ஒட்டுதலுடன் முடிக்கணும்னு நினைச்சோம். ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் தொடாமல், இறக்கும் வரை காதலர்களாக இருக்க ஆசைப் பட்டோம். எங்க கல்யாணத்துக்கு ஆரம்பத்தில் இருந்த எதிர்ப்பைவிட எங்களது இந்த முடிவுக்கு அதிக எதிர்ப்பு.. ஆனாலும்  வழக்கம் போல எங்க பிடிவாதம்தான் ஜெயிச்சுது  ...."
" மேடம் அவர் எங்கே இருக்கிறார் ?"
" இதே ஆபீசில், தர்ட் ப்ளோரில் இருக்கிற மாதவன் "
"வாவ் "
"இன்றைக்கும் நாங்க சேர்ந்து வெளியில் போவோம் .. நாள் கிழமை என்றால் அவர் வீட்டுக்கு நான் போவேன் .. எங்க வீட்டுக்கு அவர் வருவார்  இதிலே ஒரு ஆச்சரியமான விஷயம் என்னன்னா, எங்களைப் பத்தி இந்த ஆபீசிலும் சரி ...  வெளியிலும் சரி யாரும் தப்பாகப் பேசலே " என்று சொல்லி விட்டு சிரித்தாள் மீரா 
"மேடம் உங்க மேலே எனக்கு ரொம்பவும் மரியாதை வந்திருக்கு. நீங்க எல்லா விஷயத்திலுமே வித்தியாசமா இருக்கிறீங்க  .. உங்க செயல்கள் எல்லாமே ரொம்ப வித்தியாசமா இருக்கு? இந்த முடிவுக்கு வந்த எதிர்ப்பை எப்படி சமாளிச்சீங்க ?"
"இது எங்க வாழ்க்கை .. இதை எப்படி வேண்டுமானாலும் வாழும் உரிமை எங்களுக்கு உண்டு. இந்த முடிவால் ரெண்டு குடும்பத்தின் கௌரவத்துக்கு ஏதாவது களங்கம் வரும்னா சொல்லுங்க .. எங்க முடிவை நாங்க மாத்திக்கிறோம்  சொன்னோம் " என்றாள் மீரா கேசுவலாக.
"ஒரு சிலர் வித்தியாசமாக சிந்திக்கிறார்கள் செயல் படுகிறார்கள். வேறு சிலரின் சிந்தனையும் செய்கையுமே மிகவும்  வித்தியாசமாக வழக்கத்தை விட்டு வேறுபட்டு மாறு பட்டு இருக்கிறது  என்ற வரிகளை ஒரு புத்தகத்தில் படித்தேன். இப்போ அதுதான் நினைவுக்கு வருது. ஓகே மேடம் .. லஞ்ச் டைம் முடிஞ்சுது . நான்  என்னோட ஸீட்டுக்கு போறேன். அதுக்கு முன்னாடி  யார் அந்த  தர்ட் ப்ளோரில் இருக்கிற மாதவன் ஸார் என்கிறதையும் பார்த்துட்டுப் போயிடறேன்  " என்று சொல்லிக் கிளம்பி னாள் சோபி.

No comments:

Post a Comment