Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, January 16, 2015

Scanning of inner - heart ( Scan Report Number - 138 )

                                                        இம்சை அரசன் !?
நண்பனின் தங்கையின் கல்யாணத்துக்கு வந்திருந்த பரந்தாமனின் மனம் கல்யாண நிகழ்ச்சிகளின் பரபரப்பில்  லயிக்கவில்லை.  அதற்க்கு மாறாக வந்திருக்கும் இந்த நபர் யார் என்பதை அறிந்து கொள்ளும் ஆவலில்தான் அவனது முழுக் கவனமும் இருந்தது. யார் இந்த V I P . இவரை எந்தவொரு சினிமாவிலோ அல்லது அரசியல் மேடையிலோ, அவ்வளவு ஏன், வால் போஸ்டரில்கூட பார்த்தது இல்லையே. ஒரு வேளை கல்யாணத்துக்கு ஏதாவது பைனான்ஸ் விஷயத்தில் உதவி செய்திருப்பாரோ ? கல்யாணத்துக்கு வந்திருந்த அத்தனைபேரும் மேடை முன்பாக வரிசைப் படுத்தப்பட்ட இடத்தில் உட்கார்ந்திருக்க, வந்திருந்த அந்த நபரும் பத்தோடு பதினொன்றாக அங்கே உட்கார முயற்சிக்க, சடங்கு சம்பிரதாய விஷயங்களில் ஈடுபட்டிருந்த கோகுலின் அப்பா, மேடையை விட்டு இறங்கி வேகமாக ஓடி வந்து, " நீங்க அங்கே நம்ம வீட்டு ஆளுங்க பக்கத்திலேயே இருங்க " என்று சொல்லி கையைப் பிடித்து இழுக்காத குறையாக அழைத்து சென்றார். இன்று அதிகாலை யில் தன்னோடு சுவாரஸ்யமாக பேசிக் கொண்டிருந்த கோகுல், அந்த நபர் காரில் வந்து கல்யாண மண்டப வாசலில் இறங்கும்போது, பேச்சை பாதியில் நிறுத்திவிட்டு ஓடிப் போய் அவரை அழைத்து வந்ததையும்  அங்கு நின்றிருந்த மற்ற உறவுகளிடம் அவர் பேச முயற்சி செய்த போது அதைப் பற்றிக் கவலைப் படாமல்  "நீங்க வாங்க .. வீட்டில் எல்லோரும் உங்களுக்காக வெயிட்டிங்.  நேற்று ரிசெப்சனுக்கு நீங்க வருவீங்கன்னு அப்பா எதிர் பார்த்தார்" என்று சொல்லி அவரை தனி அறைக்கு அழைத்து சென்றதையும் இப்போது நினைவுபடுத்திப் பார்த்தான்.  கோகுலை அதன் பின் தனியாக சந்திக்கும்  சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. அவர் பின்னாலே சென்று ஓடி ஓடி உபசரித்துக் கொண்டிருந்தான். அவன் ஏதாவது அவசர வேலையாக அங்கே இங்கே நகரும் போது  கோகுலின் குடும்பத்தினர் ஒருவர் மாற்றி ஒருவர் அவருடன் ஏதாவது பேசிக் கொண்டிருப்பதையும் பரந்தாமன் கவனிக்கத் தவறவில்லை. அவர் யார் என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆவல் அதிகமானதற்கு காரணம், கோகுல் வீட்டினர் ஒருவர் மாற்றி ஒருவர் அவருக்கு பாடி கார்ட் மாதிரி இருந்து கவனித்துக் கொண்டதுதான்.
முகூர்த்தம் முடிந்து, கல்யாண சாப்பாட்டை ஒரு பிடி பிடித்துவிட்டு "குட் பை" சொல்வதற்காக கோகுலைத் தேடிய பரந்தாமன், கடைசியில் மாடியில் ஒரு தனியறையில்  அவனைக் கண்டுபிடித்தான். கூடவே அந்த நபரும் இருந்தார். சைகை காட்டி அறைக்கு வெளியில் கோகுலை அழைத்து வந்த பரந்தாமன் , " யாருடா அந்த V I P . ஒட்டு மொத்த பேமிலியும்  அவரை விழுந்து விழுந்து தாங்கறீங்க ! உங்க டென்சனைப் பார்க்கப் பார்க்க அவர் யார் என்கிறதைத் தெரிஞ்சுக்க ஆசையா இருக்கு " என்றான்.
"அடடா .. இதற்கா ஆசைப் பட்டாய் பரந்தாமா .. அவரைப் பத்தி அனுபவ பூர்வமா தெரிஞ்சுக்கோ. அவர் என்ன கேட்டாலும் ராங்க் இன்பர்மெசன் குடு  " என்று சொல்லி அறைக்குள் அழைத்து சென்ற கோகுல், "சித்தப்பா இவன் என்னோட ப்ரெண்ட். நீங்க பேசிட்டு இருங்க . இதோ வந்துடறேன் " என்று சொல்லி சென்றான்.
"வாங்க தம்பி உட்காருங்க .. கோகுலோட வேலை பார்க்கிறாப்லேயா ?" என்றார்.    
அவர் என்ன கேட்டாலும் ராங்க் இன்பர்மெசன் குடு என்று கோகுல் சொன்னது நினைவுக்கு வர, " வேலை தேடிட்டு இருக்கிறேன் " என்றான்.
"அடடா.. எவனாவது கட்சிக்காரன் மூலமா ட்ரை பண்றதுதானே, கவெர்ன் மெண்ட் ஜாப்க்கு .. பணம் போகுதேன்னு வருத்தப்படக்கூடாது. போட்ட முதலை ஈசியா வட்டியும் முதலுமா திருப்பி எடுத்துடலாம்" என்று சொல்லிவிட்டு பெரிதாக வாய் விட்டு சிரித்தார் அவர்  
"அப்பா அதற்கு பிரியப் படமாட்டார் " என்றான் பரந்தாமன் 
"சினி பீல்டுக்கு ட்ரை பண்றதுதானே "
"எனக்கு நடிக்க வராது "
"ஆமாம் .. அதெல்லாம் தெரிஞ்சா எல்லாரும் அந்த பீல்டில் இருக்கிறாங்க போன வாரம் ஒரு படம் பார்த்தேன் .. படம் பேர் என்ன எழவோ ... அது ஞாபகம் வரலே. அதிலே ஹீரோயின் அழறா குலுங்கி குலுங்கி..  அதைப் பார்த்துட்டு தியேட்டரில் எல்லாரும் குலுங்கி குலுங்கி சிரிக்கிறாங்க செமே காமெடி. யாரையாவது பிடிச்சு சினிமா சான்ஸ் வாங்கிடு .. ஏதாவது ஒரு குரூப் டான்ஸில் ஒரு ஓரமா தலை காட்டினால் கூட போதும். அதுக்குப் பிறகு ஏதாவது ஒரு மெகா சீரியலுக்கு ஹீரோ ஆயிடலாம். நடிக்கப் பிடிக்கலேனா கோரஸ் பாடக் கத்துக்கோ . பாடு .. ஏதாவது  ப்ரொக்ராமுக்கு நடுவரா போயிடலாம் .. சினி பீல்டில் எதையும் கிழிக்க முடியாட்டா மேடையில் நடுவர் .. ஒரு விஷயம் என்னன்னா மேடையில் உட்கார்ந்திருக்கிற  நடுவர்கள் முகத்தையும் உடம்பையும் அஷ்ட கோணல் பண்ணிக்கிட்டு அவங்களையும் கஷ்டப் படுத்திட்டு நம்மளையும் கஷ்டப்படுத்தி பாடற ஒரு பாடலை, குழந்தைங்க ரொம்ப அசால்ட்டா பாடிட்டுப்  போயிடறாங்க . சினிமா நல்ல தொழில்தான் தம்பி. எத்தனை பேருக்கு சாப்பாடு போடுது ! " என்று அவர் சிரித்துக் கொண்டே சொல்ல  அமைதியாக தலையாட்டினான் பரந்தாமன். 
"ஏற்கனவே படிச்சுப் போட்டு பிள்ளைக வேலையில்லாமே இருக்காங்க. வேலையில் இருக்கிறவங்களையும் ஏதாவது ஒரு காரணம் சொல்லி திடீர்னு நிறுத்திடறாங்க .. இந்த மாதிரி சூழ்நிலை வந்தா என்ன நடக்கும்? " என்று அவர் கேட்க, " என்ன நடக்கும் ?" என்று கிளிப்பிள்ளை மாதிரி கேட்டான் பரந்தாமன்.
"எங்கள் இயக்கத்துக்கு ஆட்கள் தேவை"னு சொல்லி தீவிரவாதிங்க பேப்பரில் விளம்பரம் கொடுத்தாலோ, அதில் சேர "நான் நீ"னு  சொல்லி ஆணும் பொண்ணும்  போட்டி போட்டுட்டு போனாலோ ஆச்சரியப்பட எதுவுமே இல்லே .. நீ எப்போ வேலையில் சேர்ந்து எப்போ கல்யாணம் பண்ணிக்கிறது? இப்போ இந்தக் கல்யாணப் பொண்ணுக்கு என்ன கொறச்சல்? மூக்கும் முழியுமா நல்லாத்தானே இருக்கிறா. இருந்தாலும் எத்தனை வரன் தட்டிப் போச்சு தெரியுமா? என்ன காரணம்? படிச்சிருக்கி றா .. ஆனால் வேலையில் இல்லை.. அந்த ஒரே ஒரு டிஸ்குவாலிபி கேசனில்  நிறைய இடம் தட்டிப் போச்சு .. என் சொந்தக்காரன் ஒருத்தன். இப்போகூட இந்தக்கல்யாணத்துக்கு வந்திருக்கிறான். அவனோட பொண்ணுக்கு எத்தனை டிமாண்ட் தெரியுமா? ஆள் எப்படி இருப்பாங்கிறே ? கத்திரிக்காய்க்கு கைகால் முளைச்சாப்லே இருப்பா. அவ பக்கத்தில் காக்கா வந்து நின்னா, காக்காதான் வெள்ளைக்காரன் மாதிரி சிவப்பா தெரியும். அவளை பொண்ணு கேட்டு எத்தனை பேர் வரிசையில் நின்னான் தெரியுமா ? ஆனா வெளிநாட்டில் வேலை பார்க்கிற வரன்தான் வேணும்னு அவ சொல்லிட்டா .. லோக்கல் மாப்பிள்ளையை கல்யாணம் பண்ணிட்டு  மாமியார் வீட்டில் யார் லோல் படறது?. வெளிநாட்டுக்கு போயிட்டு வருஷம் ஒருமுறை தாய் வீட்டுக்கு வரணும். வரும்போது ரெண்டு சாக்லேட்டை வாங்கிட்டு வந்து மாமியார் வீட்டில் குடுத்துட்டா அவங்க வாய் திறக்காமே சாக்லேட்டை சப்பிட்டு இருப்பாங்க. நமக்கு எந்த ப்ராப்ளமும் இருக்காதுன்னு சொல்றா. இப்போ பொண்ணுங்க ரொம்பவும்  விவரமா இருக்கிறாங்க. வேலை தேடறதை விட்டுட்டு எங்காவது வீட்டோட மாப்பிள்ளையா  போக ட்ரை பண்றதுதானே  ?" என்று கேட்டு விட்டு அவன் முகத்தைக் கூர்ந்து பார்த்தார்  அவர். 
"ட்ரை பண்ணிப் பார்க்கிறேன் "
"எதுவுமே ஒத்து வராட்டா கட்சியில் சேர்ந்துடு ... எந்த குவாலிபிகேசனும் வேண்டாம் ... அடிதடி அராஜகம் பண்ணத் தெரியணும் .."
"அதுக்கெல்லாம் என் மனசாட்சி இடம் குடுக்காது "
"விவரமில்லாத பிள்ளையா இருக்கிறேயே . அதைத் தட்டிக் குடுத்து தூங்க வச்சிடு. அரசியலில் பெரிய ஆளாகி ஜெயிச்சு வந்துட்டேனு வச்சுக்கோ அப்புறம் உன் காட்டில் மழைதான். நாம எதிர்க்கட்சியில் இருக்கும்போது எதையெல்லாம் குறைன்னு நாம  சொன்னோமோ அது எல்லாம் எங்கேயும் உள்ளதுதான்னு நாம ஆளும் கட்சிக்கு வந்ததும் சொல்லணும். மற்ற இடங்களில் கம்பேர் பண்றப்போ இங்கே குறைவு தான்னு அடிச்சுப் பேச தெரியணும். ஜமாய்ச்சுடலாம் " என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போது "டேய் கோகுல் எங்கேடா இருக்கிறே  ? என்னைக் காப்பாத்துடா " என்று பரந்தாமன் மனதுக்குள் அலறிக் கொண்டிருந்தான்.
கோகுல் வரும் அறிகுறியே இல்லை .
"ஸார் .. போன் வைப்ரேசன் வருது .. அட்டெண்ட் பண்ணிட்டு வர்றேன் " என்று பொய் சொல்லி விட்டு அங்கிருந்து நகர்ந்த பரந்தாமன்  கோகுலை தேடிக் கண்டுபிடித்தான்.
இவனைப் பார்த்ததுமே, " அடப் பாவி.. நீ இருக்கிற தைரியத்தில்தானே அவரைத் தனியா விட்டுட்டு வந்தேன் ..ஏன்டா கிளம்பி வந்தே ?" என்று பரபரத்தான் கோகுல் 
"அடப்பாவி .. என்னைப் பழி வாங்க எத்தனை நாளாக் காத்திருந்தே .. என்னை ஏன் அவர் கிட்டே மாட்டி விட்டே  ?"
"அவரைத் தனியா விடாமே ஓடி ஓடி உபசரிச்ச காரணம் என்னனு  இப்போ உனக்குப் புரிஞ்சுதுதானே? சொந்தத்தில் முக்கியமான ஆள். கல்யாணத்துக்கு   அவரைக் கூப்பிடாமலும்  இருக்க முடியாது . ஆனால் அவர்  இருக்கிற இடத்தில் ஒரு கலகம் வராமல் இருக்காது .  மனுஷன் சகட்டு மேனிக்கு பேசி வம்பை விலைக்கு வாங்குவார்.அவர் பேசறதில் ஹன்றெட் பெர்செண்ட் நியாயம் இருக்கலாம். ஆனால்  அதை யோசிக்கிற மனோபக்குவம் நமக்குக் கிடையாதே .. ஆத்திரத்தில் கோபப்பட்டுட்டு நிதானமா உட்கார்ந்துதானே வருத்தப்படுவோம் . எது சரி எது தப்புன்னு பிறகுதானே யோசிப்போம்.  இந்த மாதிரி எந்த வொரு பிரச்சினையும் வரக் கூடாதுனுதான் அவரை முழுக்க முழுக்க எங்க கஸ்டடியில் வச்சிருக்கோம் .. அவர் யாரிடமாவது  பேசப்     போயிடாமே இருக்கணும். நீ தாம்பூலம் வாங்கிட்டுக் கிளம்பு .. நான் அவருக்கு செக்யூரிடியா போறேன்" என்று சொல்லியபடியே கோகுல் மாடிக்கு ஓட, "இதுவும் வேண்டுமடா  .. எனக்கு இன்னமும் வேண்டுமடா " என்று மனதுக்குள் பாடியபடி மண்டபத்தை விட்டு வெளியேறினான் பரந்தாமன் 

Friday, January 09, 2015

Scanning of inner - heart ( Scan Report Number - 137 )

                    ஏடு கொண்டலவாடா உனக்கே வெளிச்சம் !                          
"ஸ்ரீதர், வெளியே எங்கேயாவது கிளம்பறியா ?"
"ஏம்மா, என்னைப் பார்த்தா உனக்கு எப்படி தெரியுது ?. இப்படி டீக்கா டிரஸ் பண்ணிட்டு படுத்துத் தூங்கவா போகமுடியும் ?"
"இந்த நக்கல் பேச்செல்லாம் வேண்டாம் . உன்கிட்டே கொஞ்சம் பேசணும் "
"ஓ .. பேசலாமே ... சாயங்காலம் ..."
"எனக்கு இப்போ பேசியாகணும் "
"எனக்காக பிரெண்ட்ஸ் வெயிட் பண்ணுவாங்க "
"அதைப் பத்திதான் பேசணும் "
"இப்போ என்னதான் பிரச்சினை உங்களுக்கு ?" என்றான் ஸ்ரீதர் கடுப்பான குரலில்.
"நீதான் .. உன்னோட நடவடிக்கைகள்தான் இப்போ பிரச்சினை எனக்கு "
"என்ன சொல்றீங்க ?"
"முன்னெல்லாம் உனக்கு ஆபீஸ் இல்லாத நாட்களில்தான் உன்னோட பிரெண்ட்ஸ்களைப் பார்க்கப் போவே... இப்போ நீ ஆபீஸுக்கு லீவ் போட்டுட்டு பிரெண்ட்ஸ்களைப் பார்க்கப் போறே ... ராத்திரி நேரங் கெட்ட நேரத்தில் மணிக்கணக்கா போனில் யாரோடோ பேசறே. எப்பப் பார்த்தாலும் ஏதோ டென்சனில் இருக்கிறே .. காபி வேணுமான்னு கேட்டால் கூட சிடுசிடுன்னு எரிஞ்சு விழறே.. ஆபீஸில் ஏதாவது பிரச்சினையா ? இல்லே வேறு ஏதாவது விவகாரமா ?" என்று கேட்டாள் பார்வதி.
பதிலேதும் சொல்லாமல் அமைதியாக நின்றான் ஸ்ரீதர் .
"சொல்லு ... என்ன விஷயம் ?"
"ஒண்ணுமில்லே " 
"ஒண்ணுமில்லேங்கிற இந்த ஒரு வார்த்தையில் எத்தனையோ விஷயம் இருக்கு. எதுவா இருந்தாலும் மனம் விட்டுப் பேசு " 
சிறிது நேர மௌனத்துக்குப் பிறகு, "கொஞ்சம் வருஷம் முன்னாடி நம்ம ஊர்  ராமசாமியோட  பொண்ணாலே ஊரில் பெரிய பிரச்சினை வந்துச்சே  ஞாபகமிருக்கா ?"
"அந்தப் பொண்ணு அவ வீட்டு வேலைக்காரனோட ஓடிப் போச்சு "
"ஓடிப் போனவங்களைக் காட்டிக் குடுத்தது யாரு ? வெளிநாட்டில் இருந்த ராமசாமியோட சொந்தக் காரன்தானே !"
"வீட்டை விட்டு ஓடிப்போன கழுதைங்க, வெளிநாட்டில் இருக்கிற அவளோட சொந்தக்காரன் உதவி பண்ணுவான்னு நினைச்சு அவனுக்குப் போன் பண்ணி பேசியிருக்குதுங்க. அவன் உதவி பண்ணாமே இதுக இருக்கிற இடத்தைக் காட்டிக் குடுத்துட்டான். ராமசாமி போய் அதுகளை இழுத்துட்டு வந்து கட்டி வச்சு அடிக்க, அந்தப் புதுமாப்பிள்ளையோட ஜாதி சனம் ஆட்களைக் கூட்டிட்டு வந்து இவங்களை அடிக்க   ஊரே ரெண்டு பட்டுப் போச்சு. தெருவில் போனவன் வந்தவனுக்கெல்லாம் அடிஉதை. எத்தனை வீடு தீயில் வெந்து போச்சு.. எத்தனை உசிர் போச்சு.  அதை யெல்லாம் அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியுமா. அதுக்குப் பிறகு ராமசாமி வீட்டைக் காலி பண்ணிட்டு வேறே ஊருக்குப் போயிட்டாரே  ?" என்ற பார்வதி, "அதை நினைச்சா இப்போ நீ கவலைப் படறே ?" என்றாள்.
"அந்த வெளிநாட்டுக்காரன்   ராமசாமியைப் பார்க்க அடுத்த வாரம் அவன் வீட்டுக்கு வர்றானாம். ராமசாமி இப்போ இருக்கிற ஊரில்தான் அவன் குலதெய்வம் கோவில் இருக்குதாம்"
"உனக்கெப்படி இது தெரியும் ?"
"பிரெண்ட்ஸ் சொன்னாங்க ... அதுமட்டுமில்லே ... அங்கே வர்ற அவனுக்கு அவன் மறக்கவே முடியாதபடி ஒரு பாடம் கத்துக் குடுக்கணும்  . அவனை சும்மா விடக் கூடாது.  கோவில் பக்கமே அவன் வரக்கூடாது ".
"இதோ பாரு ஸ்ரீதர் .. கோவிலுக்கு நாயும் வரும் .. நரியும் வரும் .. அதைத் தடுக்க நீ யார் ? எப்பேர்ப்பட்ட அயோக்கியனாக இருந்தாலும் கடவுளைக் கையெடுத்துக் கும்பிடும்போது 'எனக்கு நல்ல நினைப்பைக் குடு .. நல்ல வாழ்க்கையைக் குடுன்னுதான்   கும்பிடுவான் .. அப்படி அவன் வந்து கும்பிட்டுட்டுப் போகட்டுமே .. அந்த சாமி அவனுக்கு நல்ல புத்தியை குடுக்கட்டுமே "
"கிண்டலா ? அவன் மூச்சுக் காற்றே இந்தப் பக்கம்படக் கூடாது. அதான் அவனை எப்படித் தடுக்கணும்னு யோசனை பண்றோம். கறுப்புக் கொடி காட்டலாமா  ...."
"ஓ .. நீ கறுப்புக் கொடி காட்டினால் ... அய்யய்யோ மானம் போச்சேன்னு அவன் அப்படியே போயிடுவானா  .. அசடு ... கறுப்புதான் எனக்குப் பிடிச்ச கலர்னு சொல்லி உங்க கையிலிருக்கிற துணியை வாங்கிட்டுப் போயிடுவானுக"
"அவன் வர்றது தெரிஞ்சா நாம போய் தகராறு பண்ணுவோம்னு ராமசாமிக்கு நல்லா தெரியும்.. நம்ம ஊர் பிரச்சினைக்கு காரணம் அவன்தானே .. நாம வெறியில் இருக்கிறோம் என்கிறதும் அவனுக்குத் தெரியும். அதனாலே அவன் மேலே தூசு கூட படமுடியாதபடி பாதுகாப்பு ஏற்பாடு செய்றானாம் "
"ஆமாம் ... நீங்க போய் வந்தவனை அடிப்பீங்க .. அடி அவன் மேலே மட்டுமா விழும்? அதை வச்சு தேவை இல்லாமே எத்தனை பிரச்சினை வரும்? அந்த ஊரில் பிறந்து வளர்ந்தவங்க இப்போ அவன் இருக்கிற நாட்டில்  இருக்கிறாங்க.. நீ இவனை அடிச்சா .. இந்த சண்டைக்குக் கொஞ்சமும் சம்பந்தம் இல்லாதவங்க பாதிக்கப் படுவாங்க. அந்த பாதிப்பு இங்கே பிரதிபலிக்கும் .. இதையெலாம் யோசிச்சுதான் ராமசாமி அப்படியொரு முடிவெடுத்திருக்கணும். அவன் இங்கே வாங்கின அடி அவனுக்கு இன்னும் மறந்திருக்காது .. இப்பவாவது அவனுக்குப் புத்தி வந்ததேன்னு நினைச்சு சந்தோசப்படாமே  முடிஞ்சுபோன ஒரு விசயத்து க்கு இப்போ ஏன் பிள்ளையார் சுழி போடறே  ?"
"என்னம்மா நீங்க ! கொஞ்சம் கூட மனித நேயமே இல்லாமல் .."
"அட ச்சே .. மூடுடா வாயை .. மனித நேயம்னு நினைச்சு நீ செய்ற ஒரு காரியம் மனுஷங்களுக்கு சந்தோசத்தைத் தரணும்.  ஒரு கலகத்துக்குத் தீர்வு இன்னொரு கலகம்னு உனக்கு யார் சொன்னது ? வந்தவங்களை வாழ வச்சுதான் எங்களுக்குப் பழக்கம்னு அவனுக்குப் புரிய வைக்கணும் . அதை விட்டுட்டு மனித நேயம்கிற  பேரில் புதுசா ஒரு கலகமா ? தேவையில்லாத வார்த்தைகளை பேசாமல் இருந்தாலே நிறைய விஷயங்க பிரச்சனைங்க  முடிவுக்கு வந்துடும்.  கொஞ்ச நாள் முன்னாடி விஜய் டீவீயில் வேலைக்குப் போகிற பெண்கள் பிரச்சினை பத்தி நிறைய பேர் நீயா நானாவில் பேசினாங்க.  எல்லாரும் அவங்கவங்க பிரச்சினை  கவலை சந்தோசம் பத்திப் பேசினாங்க .. ஒரே ஒரு லேடி மட்டும் ... அவங்க கால் டாக்ஸி டிரைவராம் ... அவங்க சொன்னாங்க ... கடைகளில் வேலை செய்கிறவங்க பன்னிரண்டு மணி நேரம் நின்னுட்டே வேலை பார்க்கிறாங்க. பெண்களுக்கு சில நாட்களில் இது மிகப் பெரிய அசௌகரியம் .. இதுக்கு ஒரு நல்ல முடிவு வரணும்னு ஒரு கோரிக்கையை வச்சாங்க .. அதுதான் மனித நேயம் ...நான் கூட புடவை எடுக்கப் போறப்போ நோட் பண்ணியிருக்கிறேன் . அங்கே வொர்க் பண்ற ஒரு சில லேடீஸ் ரெஸ்ட் ரூமில் .... ஈரத் தரையில் உட்கார்ந்திருப்பாங்க  . மொதல் முறையா அதைப் பார்த்தப்போ " என்னம்மா இது ?'னு கேட்டேன் ."எல்லாம் எங்க தலை விதி"ன்னு சொன்ன அந்தப் பொண்ணு ,"கஸ்டமர்ஸ் வர்ற இடத்தில் உட்காரக் கூடாது . அதான் இங்கே வந்து கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்குவோம்"னு சொன்னா. சிலசமயம் உங்க அப்பாவோடு சேர்ந்து சினிமாவுக்குப் போயிட்டு பஸ்ஸில்   வர்றப்போ பின்பக்க ஸீட்டில் ஜென்ட்ஸ் உட்கார்ந்திருப்பதைப் பார்த்திருக்கிறேன். இடம் கேட்டு உட்கார்னு உங்க அப்பா சைகை பண்ணுவார் .பொழுதுக்கும் நின்னுகிட்டே வேலை செஞ்சுட்டு வர்றவங்களா இருக்கலாம் . அவங்களை ஏன் எழுப்பணும்னு நினைச்சுகிட்டு நான் நின்னுட்டே வருவேன். அவங்க நின்னுட்டே வேலை பார்க்கிறதை நினைச்சு பச்சாதாபப் பட முடிந்தது. வேறு எதுவும் செய்ய முடியலே . ஆனால் நீயா நானாவில் அந்த லேடி அந்த டாபிக் பத்தி சொன்னப்போ மனசுக்கு நிறைவா இருந்துச்சு.ஒரு பிரச்சினைனு இருந்தால் அந்தப் பிரச்சினைக்கு சுமுக முடிவு சொல்லணும். அது மனுஷ நேயம்.    பிரச்சினையை மேலும் மேலும் வளர்க்கிறதுக்குப் பேர் ....  என் வாயால் எதையும் சொல்ல வைக்காதே .. தேவையில்லாமே இன்னொரு கலகத்துக்கு பிள்ளையார் சுழி போடாதே.. பிறகு உன் இஷ்டம்  " என்று சொல்லி விட்டு அங்கிருந்து நகர்ந்தாள் பார்வதி .
தனது அறைக்குள் நுழைந்த ஸ்ரீதர் லுங்கிக்குள் தன்னை இணைத்துக் கொண்டு கையில் ரிமோட்டுடன் டீவீ முன்பாக உட்கார்ந்தான் .