Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Saturday, November 28, 2015

DEAR VIEWERS,

                              விமரிசனங்கள் வரவேற்கப் படுகின்றன !

தொலைக் காட்சித் தொடர்களின் முடிவிலும், சில பத்திரிக்கைகளில் வெளியாகும் கட்டுரைகளின் கடைசி வரியிலும்  வெகு சாதாரணமாக நாம் பார்க்கக் கூடிய வார்த்தைகள் இவை. என்னுடைய நெருங்கிய தோழி ஒருத்தி என்னுடன் பேசிக் கொண்டிருக்கும்போது டீவீ சீரியல் பற்றிய பேச்சு எங்களுக்குள் வந்தது. "சீரியலை ஒளிபரப்பி முடிச்சிட்டான். இதுக்குப் பிறகு விமரிசனத்தை படிச்சுப் பார்த்து என்ன செய்யப் போறாங்க . முடிஞ்சது முடிஞ்சதுதானே ?" என்றாள்.
தோழிக்குக் கொடுத்த விளக்கத்தை இங்கும் பதிவு செய்கிறேன்.
"நாம ஒரு வேலையை ரொம்பவும் சிரத்தையா செஞ்சிட்டு இருப்போம். அப்போ அதில் இருக்கிற சிறு சிறு குறைகள் நம்ம கவனத்துக்கு வராது. ஆனால் அந்தக் குறைகள் எல்லாம் , நாம செய்ற வேலையை ஒரு ஓரமா உட்கார்ந்து வேடிக்கை பார்த்துட்டு இருக்கிறவங்களுக்கு உடனேயே கண்ணில் படும். அவர்கள் அதை சுட்டிக் காட்டினால் ஒரு சிலர் அதை சந்தோசமாக ஏற்றுக் கொள்வார்கள். அந்தத் தப்பைத் திருத்திக் கொள்வார்கள். நானே நிறைய விமரிசனம் எழுதி அனுப்பி யிருக்கிறேன். மொத்தத்தில் விமரிசனம் என்பது நடந்து முடிந்து விட்ட தவறுகளை சரி செய்வதற்கான சரியான வாய்ப்பு. தருணம் " என்று சொல்ல, "அதை அவங்க படிச்சுப் பார்ப்பாங்களா?" என்று எதிர்க் கேள்வி கேட்டாள் தோழி.
அந்தக் கேள்விக்குப் பதில் சொல்லும் விதமாக நான் ஒரு லிஸ்டே அவங்க கிட்டே கொடுத்தேன். 
1. முன்னே "கிருஷ்ண தாசி"ன்னு ஒரு சீரியல் சன் டீவீ யில் வந்துது. ஜெமினி கணேஷ், நளினி, ரஞ்சிதா எல்லாரும் நடிச்சாங்க. அந்தக் கதையில் ஜெமினி  ஒரு கோபக்கார ஆள். கிராமத்தில் வசிப்பவர். அவருக்கு அந்த கிராமமே நடுங்கும். ஆனால் அந்த வீட்டில் உள்ள ஒரு ஆள் வேண்டாத வேலையெல்லாம் செய்வார். அந்த அக்கிரமத்தை செய்றது இவன்தான்கிறது  எல்லாருக்கும் தெரியும். ஆனால் ஜெமினிக்கு மட்டுந் தெரியாது என்பது போல காட்சிகள் வெளியாகின. அதைப் பார்த்த நான், "கிராமத்தில் எந்த ஒரு சிறு விஷயம் நடந்தாலும் அது உடனே எல்லாருக்கும் தெரிந்துவிடும். ஊருக்கே பெரிய மனுஷன் ஜெமினி. எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம் அவருக்கு மட்டும் எப்படித் தெரியாமே போச்சு ?' என்று கேட்டு லெட்டர் அனுப்பினேன். அந்தக் கேள்விக்கு பதில் சொல்லும் விதமாக ஒரு காட்சி, நான் லெட்டெர் அனுப்பின மறு வாரமே வெளியானது. அதில் ஒருவர் சொல்லுவார், "ஊருக்கே தெரிஞ்ச விஷயம் உங்க அப்பாவுக்குத் தெரியாமல் இருக்குமா? எல்லாம் தெரிஞ்சிண்டுதான் எதுவுமே தெரியாத மாதிரி இருக்கிறார்"என்று. இந்த வார்த்தையை அவர்கள் போட்டு விட்டதால் சீரியல் பார்ப்பவர்களுக்கு ஜெமினியின் செய்கை ஒரு குறையாகத் தெரியாது.  
2. ஒரு சீரியல். அது "அரசி"யா அல்லது "அண்ணாமலை"யா என்பது நினைவில் இல்லை. அந்த சீரியலில் வரும் சம்பவங்கள் கிராமத்தில் நடப்பது போல வரும். ஆனால் ஒரு சீனில் டபுள் டெக்கர் பஸ் போவதை சீரியல் பார்க்கும்போது நான் கவனித்தேன். சென்னையைத் தவிர வேறு எந்த ஊரிலும் அந்த சமயத்தில் டபுள் டெக்கர் பஸ் செர்விஸ் கிடையாது . இன்னொரு சீனில், கதை பிளாஷ் பேக்கில் காட்டப் படும். அப்போது ரேடியோவில், "சென்னை வானொலி நிலையம், செய்திகள் " என்று சொல்வது போல ஒரு காட்சி வந்தது. கதையில் வரும் அந்த கால கட்டத்தில், "ஆகாஷ் வாணி, மத்ராஸ் வானொலி நிலையம்" என்றுதான் ரேடியோவில் சொல்வார்கள் . அதை அவர்கள் கவனத்துக்குக் கொண்டு வர விரும்பி RADAN MEDIA க்கு போன் செய்தேன். போனை எடுத்த ஒருவர், என்ன விஷயம் என்று விசாரித்தார். விஷயத்தை நான் சொன்னதும், "இந்த போனை டைரெக்டர்ட்டே கொடுக்கிறேன். நீங்களே இதை சொல்லுங்க" என்று சொல்லி போனை அவரிடம் கொடுத்தார் . (C.J. பாஸ்கர்தான் அந்த தொடரின் டைரெக்டர்). நான் சொல்வதைப் பொறுமை யாகக் கேட்ட அவர்  "தேங்க்ஸ். இது மாதிரி விஷயங்கள் உங்கள் கண்களில் படும்போது அதை எங்களுக்கு மறக்காமல் சொல்லுங்கள்" என்றார்.
3. கோலங்கள் சீரியல் ஒளிபரப்பான போது , அது பற்றி கருத்து தெரிவிக்க விகடன்டெலிவிஸ்டாஸ்க்கு போன் செய்தேன்.அங்கு போன் அட்டெண்ட் பண்ணின ஒருவர்  "இப்போ director இங்கே இருக்கிறார். நீங்களே சொல்லலாம்"என்றார். எனது கருத்தை திருச்செல்வத்திடம் சொன்ன போது  "அப்படிங்களா ? சரிங்க ... சரிங்க ... செஞ்சுடறோம் " என்று மட்டும் சொன்னார். (அவரிடம் நான் கேட்ட கேள்வி "அப்பாவையே அடிக்கத் துடிக்கிற, அழிக்கத் துடிக்கிற ஒருவன், எந்தவித பணபலமோ படை பலமோ இல்லாத ஒரு எளிய குடும்பத்துப் பெண்ணை நொடிப் பொழுது நேரத்தில் அடையாளம் இல்லாமல் பண்ணிவிடலாமே. அதை விட்டு விட்டு ஏன் மல்லுக்கு நிற்கவேண்டும்?"). அந்த வாரத்தில் சீரியல் மூலம் கிடைத்த பதில், "அந்த அபி அவ்வளவு சீக்கிரம் அழியக் கூடாது. என் கையால் கொஞ்சம் கொஞ்சமாகத் தான் அழியணும்).
4. சில வருடங்களுக்கு முன்பு "நிஜம் " என்ற நிகழ்ச்சியை சன் டீவீயில் இரவு பத்து மணிக்கு மேல் ஒளிபரப்பினார்கள். அதை நான் பார்ப்பேன். மறுநாளே அதை பற்றி அவர்களிடம் பேசுவேன். போன் அட்டெண்ட் பண்ணுவது யார் என்பதெல்லாம் தெரியாது. சொல்ல நினைப்பதை சொல்லி விடுவேன். "அடிக்கடி பேய்கள்  பத்தியே காட்டறீங்க. எனக்கும் ரொம்ப நாளா ஒரு ஆசை , எங்கள் வீட்டில் ஒரு பேய் வளர்க்கணும்னு . நீங்கள் பேய் பத்தின நிகழ்ச்சிகளை ஷூட் பண்றச்சே பேய் கிடைச்சா ஒரு பேயை கூட்டிட்டு வந்து என்கிட்டே கொடுங்களேன்" என்றேன். "இதெல்லாம் ஒரு விஷயமா ? நாட்டில் நிறைய ஆண்கள் அதுகூட குடித்தனமே நடத்தறாங்க " என்று பதில் வந்தது எதிர் முனையிலிருந்து .ஒரேஒரு முறை மட்டும் "நான் யாரோடு பேசறேன்னு தெரிஞ்சுக்கலாமா ?" என்று கேட்டேன். ஜெய ராணி என்று பதில் வந்தது. அவர்கள் முகம் அப்போது தெரியாது. சில வாரங்களுக்கு முன்பு விஜய் டீவீ யின்  "நீயா நானா " பகுதியில் guest ஆக வந்திருப்பவர் ஜெய ராணி என்று சொல்லி அவர் குறித்த விவரம் சொன்னார்கள். அப்போது எனக்கு நினைவில் வந்த விஷயம் நான் இவங்க கூட போனில் பேசியிருக்கிறேன்  என்பதுதான்.
5.விஜய் டீவீ யின்  "நீயா நானா " பகுதி ஒளி பரப்பாகும்போது எனது மனதில் தோன்றும் கருத்துக்களை கோபி ஸார்க்கு  sms பண்ணுவேன். (இப்போது அப்படி செய்வதில்லை. என்னுடைய மொபைலில் என்ன பிரச்சினை என்பது தெரியாது. நான் அனுப்பும் sms, எனக்கு வரும் smsக்கு நான் அனுப்பும்   பதில்கள் எல்லாம் என்னோட inbox க்கு திரும்பி வந்துடுது. அதனால் நான் சொல்ல நினைத்த விஷயத்தை போனில் சொல்லலாம் என்று நினைத்து கோபி ஸாரை போனில் தொடர்பு கொண்டேன்."நான் ரொம்பவும் முக்கியமான வேலையில் இருக்கிறேன். ஒரு அரைமணி நேரம் கழித்து தொடர்பு கொள்ளுங்களேன்" என்றார்.
இதற்கிடையில் எங்களது லஞ்ச் ப்ரேக் நேரம் வந்தது. அப்போது எனது தோழி, "நாமளே ஆபீசுக்குக் கிளம்பற அவசரத்தில் இருக்கிறோம். நேரம் காலம் தெரியாமே போன் பண்ணி நம்ம கழுத்தை அறுப்பாங்க.பாத் ரூமில் குளிச்சிட்டு இருப்போம். போன் உயிர் போற மாதிரி அலறும். ஓடி வந்து எடுப்போம்."ஒண்ணுமில்லே.. சும்மாத்தான் போன் பண்ணினேன். எப்படி இருக்கீங்க?'னு அவங்க கேட்கிறப்போ ஒரு பக்கம் சந்தோசமும் ஒரு பக்கம் அவங்க கழுத்தை அப்படியே நெரிக்கலாம் போல ஆத்திரமும் வருது. இன்னிக்குக் காலம் கார்த்தாலே ஒரு போன். அடுப்பில் வச்சிருந்த குழம்பு வத்தி துவையல் மாதிரி கட்டியா ஆகிப்போச்சு. இதை நீங்களும் சாப்பிட்டே ஆகணும் " என்ற படி அதை எனது தட்டிலும் வைத்தாள். தோழி சொன்ன விஷயம் என்னை சிந்திக்க வைத்தது.
"நாம பாட்டுக்கு இதைப் பத்தி  கருத்து சொல்றோம் ...அதைப் பத்தி   கருத்து சொல்றோம் அதுஇதுன்னு ஒவ்வொருத்தரையும் கூப்பிட்டு பேசிட்டு இருக்கிறோம். அவங்க என்ன அவசர வேலையில் இருக்கிறார் களோ என்பதை நாம நினைச்சு கூடப் பார்க்காமல், முட்டாள் மாதிரி யார் யார் நேரத்தைஎல்லாமோ வீணடிச்சிருக்கோமே" என்று என்னை நானே கேட்டுக் கொண்டேன். அதன் பிறகு போனில் கருத்து சொல்வது sms ல் கருத்து சொல்வது என்று எல்லா விஷயத்தையும் நிறுத்தி விட்டேன். இப்போ நான் sms அனுப்பினாலும் அது வெளியில் போகாது என்பது தனிப் பட்ட விஷயம். எனது நெருங்கிய உறவுகளிடம் கூட மிகவும்  அவசியம் ஏற்பட்டால் மட்டுமே போனில் பேசுவேன்.  அதுவும் அவர்கள் கார் ஓட்டுகிறவர்கள்  டூ வீலரில் போகிறவர்கள் என்றால் போன் பண்ணும் முன்னாலே ஒருமுறைக்கு பலமுறை யோசித்த பிறகே போன் பண்ணுவேன். 
விளம்பரம், சைடு பிக்சர் எல்லாம் முடிஞ்சுது. இனி மெயின் பிக்சருக்கு வருவோம்.   
விமரிசனம் என்பது ஒரு தனிப்பட்ட மனிதருடைய வளர்ச்சிக்கோ அல்லது நிறுவனங்களுக்கோ மிகமிக தேவையான ஒன்று. ஆனால் விமரிசனங்கள் நேர்மையாக இருக்க வேண்டும். அதை ஏற்றுக் கொண்டு தன்னைத் திருத்திக் கொள்ளும் ஆரோக்கியமான மனப் பக்குவம் எல்லோருக்கும் வேண்டும். இதுபத்தி இங்கே ரொம்ப ரொம்ப விரிவாகவே பேசலாம். அதனாலே அடுப்படி வேலை, ஆபீஸ் வேலை இதை எல்லாம் முடிச்சிட்டு உங்களுக்கு நேரம் இருக்கிறப்போ கதை கேட்க உட்காருங்க. 
முதலில் ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். வளர நினைப்பவர்கள் தங்களைப் பற்றிய விமரிசனங்களைக் காது கொடுத்து கேட்க வேண்டும். சுய சிந்தனை ஆரோக்கியமான சிந்தனை உள்ள எவனும் தனக்கு ஜால்ரா அடிப்பவனின்  தாளத்தை கேட்க மாட்டான். தன்னுடைய பாட்டுக்கு எதிர்ப் பாட்டு பாடுகிறவன் பக்கமே அவனது முழுக் கவனமும் இருக்கும். எதிர்ப் பாட்டில் சொல்லப் படும் சூசக வார்த்தைகளைப் புரிந்து கொண்டு அது திரும்ப நேராதபடி பார்த்துக் கொள்வான். அது வெற்றிக்கு முதல்படி.
இந்தக் காலத்தில்  மீடியாக்கள் உலகில் நடக்கும் பலபல  விஷயங்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வருகிறது . இவை எதுவுமே இல்லாத அந்தக்   காலத்தில் ராஜாக்கள் இரவு நேரத்தில் மாறுவேடத்தில் வலம்வந்து மக்களின் கருத்துக்களைத் தெரிந்து கொண்டு அதற்குத் தகுந்தபடி தன்னை மாற்றிக் கொண்டார்கள். நியாயமான ஒன்றைக் கூட தனக்கு எதிராக நின்று சொல்வதற்கு தனிமனிதன் தயங்குவான். அவனவன் இருக்கும் இடத்தில் அவர்கள் கருத்துக்களைப் பகிரங்கமாக பகிர்ந்து கொள்வார்கள் என்பதை  உணர்ந்துதான் அந்தக் கால அரசர்கள் மாறு வேடத்தில்நகர்வலம் வந்தார்கள். அரசனைப்பற்றிய மக்களின் விமரிசன த்தை  அவர்கள் தெரிந்து கொண்டார்கள். தங்களைத் தாங்களே திருத்திக் கொண்டார்கள் . 
பத்திரிக்கைகளில் நாம் படிக்கும் ஒரு சில விமரிசனங்கள் காலத்துக்கும் அழியாமல் நமது நினைவில் நிற்கும். இப்போதெல்லாம் ஒரு நாளைக்கு ஒரு சினிமா வெளியாகிறது. கிட்டத் தட்ட 50 வருடங்களுக்கு முன்பு ஒரு வருடத்தில் பன்னிரண்டு படம் வெளியானால் அதுவே பெரிய விஷயம். வெளியாகும் எல்லாப் படங்களையும் பார்த்துவிடுவோம். அந்தப் படம் குறித்து பத்திரிக்கைகளில் வெளியாகும் விமரிசனங்களைத் தெரிந்து கொள்ள ஆவலாக இருப்போம். நிறைய வீடுகளில், ஒரு சினிமாப் படம் பற்றி நல்ல விதமாக விமரிசனங்கள் வந்தால் மட்டுமே அந்தப் படங்களுக்குத் தங்கள் வீட்டுக்குழந்தைகளை அழைத்து செல்வார்கள் . பல வருடங்களுக்கு முன்பு "சிவந்தமண்" என்ற திரைப்படம் வெளி வந்தது. படம் வெளியாகும் முன்பே அனைவரின் ஆர்வத்தையும் தூண்டிய படம் அது. ஸ்ரீதர் டைரெக்ஷனில் வெளிநாடுகளில்  படமாக்கப் பட்ட சிவாஜி நடித்த படம்.  படம் வெளியான பிறகு  நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு அது இல்லை என்பதை நாங்கள் உணர்ந்தோம். வெளிநாட்டுப் படப்பிடிப்பைத் தவிர அதில் வித்தியாசமாக எதுவுமில்லை. வழக்கமான சிவாஜி படமாகவே தோன்றியது. இந்த படத்துக்கான சினிமா விமரிசனம் குமுதம்  பத்திரிக்கையில் வெளியான போது, "நாங்கள் இன்னும் அதிகம் எதிர்பார்த்தோம்" என்று comment கொடுத்திருந்தார்கள். அதற்க்கு வாசகர் ஒருவர் "நீங்கள் எவ்வளவு எதிர் பார்த்தீர்கள்? அவங்க எவ்வளவு குடுத்தாங்க?" என்று கேள்வி கேட்டிருந்தார். அது வாசகர் கடிதம் பக்கத்தில் வெளியானது. அதைப் படித்த நாங்கள் எல்லோருமே, அவன்தான் அப்படிக் கேட்டான் என்றால் இவங்க துளிக்கூட வெட்கமில்லாமல் அதை பிரசுரம் பண்ணி இருக்காங்களே என்று சொல்லிக் கொண்டோம். 
நான் எழுதிய கதைகள் பத்திரிக்கைகளில் வெளியாகும் போதெல்லாம் என்னிடம்  பாராட்டுத் தெரிவித்தவர்களின் வார்த்தைகளுக்கு அளித்த மதிப்பை விட, அதிலுள்ள குறைகளை சுட்டிக் காட்டியவர்களின் வார்த்தைகளுக்கு அதிகம் மதிப்புக் கொடுத்து அந்தத் தவறு திரும்ப வராதபடி பார்த்துக் கொண்டேன். பொது வாழ்க்கையில் ஈடுபட நினைத்தால் அதற்க்கு நமது செய்கைகள் பற்றிய விமரிசனம் வேண்டும் என்பதையும், அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் எனக்கு வேண்டும் என்பதையும் நான் எனக்குள்ளே நடைமுறைப் படுத்தி வைத்திருந்தேன்.
விமரிசனங்கள் ஜோதிடங்கள் எல்லாமே ட்ராபிக் சிக்னல் மாதிரிதான். முன்பின் தெரியாத ஒரு இடத்துக்கு வாகனத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் போது  அங்கங்கு காணப்படும்  ட்ராபிக் வார்னிங்களைப் புரிந்து கொண்டு நமது ட்ரைவிங்கை நமது கண்ட்ரோலில் வைத்திருந்தால் நாம் பார்க்க விரும்பியவர்களை நாம் நேரடியாக சென்று பார்க்கலாம். இது எல்லாம் வேலை வெட்டி இல்லாதவன் செய்றவன் வேலை. நாம் எல்லாந் தெரிந்த மேதாவி என்ற நினைப்பில் வண்டி ஓட்டினால் அப்புறம் மற்றவங்கள் வந்து நம்மைப் பார்க்கிற நிலைமை வந்து விடும். (இங்கு  TRAFFIC WARNING  என்று நான் சொல்வது, "இங்கு குறுகிய வளைவு உள்ளது ", "இங்கு ஆறு ஒன்று குறுக்கே ஓடுகிறது ", "அடுத்த பெட்ரோல் பங்க் இன்னும் பத்து கிலோ மீட்டர் தள்ளி இருக்கிறது" என்பது போன்ற எச்சரிக்கைக் குறிப்புகளைத்தான். 

ரொம்ப போரடிச்சிட்டோனோ. இதோ நிறுத்திட்டேன். இது பற்றிய உங்கள் விமரிசனங்களை நீங்கள் பதிவு செய்யலாம். யாரோட விமரிசனம் என்னைக் கோபப் படுத்துகிறதோ அது என்னை சிந்திக்கவும் வைக்கும். 
ஏதோ ஒரு கதையில் எப்போதோ படித்த வரிகள் : உங்களை யாராவது விமரிசனம் செய்தால் உங்களுக்குக் கோபம் வருகிறதா ? அப்படியானால் அது மிகச்சரியான விமரிசனந்தான்.!

Friday, November 27, 2015

குழந்தைகளுக்கான குறுந்தொடர் - 17

                           
          அச்சுப்பிச்சு அப்புமணி !
அமெரிக்கக் கனவுகளோடு தூங்கி எழுந்த அப்புமணி மறுநாள் காலையில் மிகவும் உற்சாகமாகத்தான் பள்ளிக்குக் கிளம்பிப் போனான். ஆனால் வீடு திரும்பும்போது அவன் முகத்தில் ஒரு கவலை இருந்தது. அதை அம்மாவும் கவனித்தாள்.
"அப்பு ... என்ன ... ஏன் டல்லா இருக்கிறே ?"
"நம்ம நாட்டாமை தாத்தா வீட்டுக்கு  ஒரு குண்டு அண்ணன் வருவான் தானே. பார்க்கிறதுக்கு சினைப் பன்னி மாதிரி இருப்பானே. அவன் ... அவன் ... என்னை திட்டினான். கையை ஓங்கிக்கிட்டு அடிக்க வந்தான்" என்று அழுகிற குரலில் சொன்னான் அப்புமணி.
"உனக்கு அந்தப் பக்கம் எந்த வேலையும் இல்லையே. பிறகு ஏன் அங்கே போனே ?"
"ஸ்கூலுக்கு வழக்கமா போற பாதையில் தண்ணி தேங்கி நின்னுச்சு.
அசுத்த தண்ணியிலே சேத்துத் தண்ணியிலே, காலை வைக்கக் கூடாதுனு நீங்க எப்பவும் எங்கிட்டே சொல்லுவீங்கதானே .அதான் ரெண்டு தெரு சுத்தி நாட்டாமை   தாத்தா வீட்டு வழியா ஸ்கூல் போகலாம்னு நினைச்சு போனேன் "
"அதுக்காகவா அவன் உன்னைத் திட்டினான். அடிக்க வந்தான்?" என்று கோபமாகக் கேட்டாள் அம்மா. 
"நான் அவன் கிட்டே 'அன்னிக்கு டவுண் மீட்டிங்கில் கங்கையையும் காவிரியையும் ஒண்ணு சேர்க்கணும்னு கையிலே கொடி பிடிச்சிட்டு கத்துனீங்கதானே. ரெண்டு நாளைக்கு முன்னே பெய்ஞ்ச மழையில் ஊரெல்லாம் தண்ணி வெள்ளமா ஓடுச்சே  .. இப்போ அந்த வெள்ளத்தைக் காணலையே. அதை எந்த ஆத்திலே கொண்டு போய் சேர்த்தீங்கனு கேட்டேன். அதுக்குதான் அவன் அடிக்க வந்தான். என்னை 'உதவாக் கரை, நீயெல்லாம் கேள்வி கேட்கிற அளவுக்கு நான் இறங்கிப் போயிட்டேனா?' அப்படின்னு  கேட்டான். நாட்டாமை தாத்தா வந்து அவனை திட்டினார். 'நீ ஸ்கூலுக்கு போடா கண்ணா'ன்னு எங்கிட்டே சொன்னார்." என்றான் அப்புமணி. 
"உள்ளதை சொன்னா எவனுக்கும் கோபம் வரத்தானே செய்யும். அவன் கிடக்கிறான் கழிசடை.  உனக்கு சுடசுட அடை தோசை சுட்டுத் தர்றேன். நீ சாப்பிடு.  அப்புறமா நாம கோவிலுக்குப் போயிட்டு வரலாம் " என்று அப்புமணியை சமாதானப் படுத்தினாள் அம்மா . 
வெள்ளித் தட்டில் சுட சுட அடைதோசையை அப்புமணி முன்பாக வைத்து விட்டு  "சாப்பிடு .. அம்மா காபி கலந்துட்டு வர்றேன் " என்ற சொல்லி சமையலறைக்கு சென்ற அம்மா சிறிது நேரத்தில் காபி டம்பளருடன் அங்கு வந்தாள். அப்புமணி முன்பாக வைத்த அடைதோசை அப்படியே இருந்தது .
"ஏன் கண்ணு சாப்பிடலே ?" என்று அம்மா கேட்க, "அம்மா, நீ எனக்கு உருப்படாத ராஜகுமாரன் கதை சொல்லி இருக்கிறேதானே ?" என்று கேட்டான் அப்புமணி  
"ஆமாம் .. அதுக்கு என்ன இப்போ ?"
"அந்தக் கதையில் வர்ற ராஜகுமாரனை யாருக்குமே பிடிக்காது. அவனை எல்லாருமே  'உருப்படாதவன்', 'உதவாக்கரை'னுதான் சொல்லுவாங்க. உடனே அவனோட அம்மா அந்த ராஜகுமாரனைக் கூப்பிட்டு, ' நீ இந்த அரண்மனையை விட்டுப் போய் ஊர் உலகமெல்லாம் சுத்திப் பார்த்து நாலு நல்லது கெட்டதை தெரிஞ்சுகிட்டு முழு மனுஷனாத் திரும்பி வா' அப்படின்னு சொல்லியிருப்பாங்க. அவனும் அதைக் கேட்டு ஊர் உலக மெல்லாம் சுத்திட்டு ரொம்பவும் அனுபவஸ்தனா அந்த நாட்டுக்குத் திரும்பி வருவான். அதுக்குப் பிறகு அவனை எல்லோருக்கும் பிடிக்கும் " என்று அப்புமணி சொல்லிக்கொண்டிருக்கும் போதே,"ஆமாம் .. அதுக்கு என்ன இப்போ? அடை ஆறுது .. சீக்கிரம் சாப்பிடு " என்றாள் அம்மா.
"எனக்கு சாப்பாடு வேண்டாம். நானும் அந்த உருப்படாத ராஜகுமாரன் மாதிரி வீட்டை விட்டுப் போகப் போறேன்" என்று அப்புமணி சொல்ல அதைக் கேட்டு பதறிப் போனாள் அம்மா, 
"உன்னை யார் வேணும்னாலும் என்ன வேணும்னாலும் சொல்லட்டும். அதைப்பத்தி எனக்கு எந்தக் கவலையும் இல்லே. நீ அந்த மாதிரி பேச்சைக் காதிலேயே வாங்காதே. எனக்குப் பிள்ளையா நீ இந்த வீட்டில் இருந்தால் அதுவே போதும். என் உடம்பில் உயிர் இருக்கிறவரை உனக்கு அந்த நினைப்பே வரக்கூடாது. அம்மா இன்னும் இந்த உலகத்தில்  உயிரோடு இருக்கிறேன்னு சொன்னால் அது உனக்காக மட்டுந்தான். நீ எங்கேயும் போகக் கூடாது. அந்த நினைப்பு கூட உனக்கு வரக் கூடாது " என்று அழுது கொண்டே சொன்னாள்  அம்மா.
"அம்மா ... நான் உலகத்தைப் பத்தி தெரிஞ்சுக்க வேண்டாமா ?"
"அப்பு ... உனக்கு யாரைத் தெரியும் ? என்ன தெரியும் ? நீ எங்கே போவே ?"
"அதெல்லாம் எனக்குத் தெரியாது. நானும் உருப்படாத ராஜகுமாரன் மாதிரி கால் போன போக்கில் போவேன்"
"வேண்டாம் கண்ணு. நீ குழந்தைடா ... இந்த உலகம் ரொம்பப் பொல்லாத உலகம்டா. அதை புரிஞ்சுக்கிற பக்குவம் உனக்குக் கிடையாது கண்ணு ".
"அரண்மனையை விட்டு உலகத்தை சுத்திப் பார்க்கக் கிளம்பின ராஜ குமாரனை அவங்க அம்மா, அதான் அந்த நாட்டு ராணி  எவ்வளவு சந்தோசமா வாழ்த்தி வழியனுப்பி வச்சாங்க. நீ மட்டும் ஏன் அழறே ?"
"அது கதைடா.. இது நிஜ வாழ்க்கை ... கதையில் நடக்கிறதெல்லாம் நிஜ வாழ்க்கையில் அவ்வளவு சீக்கிரத்தில் நடந்துடாது "
"என்னைப் போகக் கூடாதுன்னு நீங்க சொன்னா உங்களுக்குத் தெரியாமே நான் வீட்டை விட்டு ஓடிப் போயிடுவேன்"
"நீ எங்கே போவே ? உனக்குப் பசி எடுக்கும் போது  உனக்கு யார் சாப்பாடு போடுவாங்க ?  எங்கே தங்குவே ?"என்று அம்மா கேட்க,"அதெல்லாம் எனக்குத் தெரியாது. எங்கியோ போவேன். என்னத்தையோ செய்வேன். அது பத்தி எனக்கே தெரியாது. ஆனால் போவேன். நீங்க வேண்டாம்னு சொன்னால் நீங்க தூங்கிட்டு இருக்கிறப்போ ஓடிப் போயிடுவேன்   " என்று பிடிவாதமாக சொன்னான் அப்புமணி. 
சிறிது நேரம் யோசனையில் இருந்த அம்மா, "ரெண்டு செட் டிரஸ் எடுத்து வச்சுக்கோ. அம்மா உனக்கு நூறு ரூபா தர்றேன். அதை பத்திரமா வச்சுக்கோ. பணம் செலவாகிப் போயிட்டா மேற்கொண்டு பணத்துக்காக  நீ திருடக் கூடாது. பிச்சை எடுக்கக் கூடாது. அம்மா உனக்கொரு லெட்டர் தருவேன். அதைப் பத்திரமா கையில் வச்சுக்கோ. பணம் செலவழிஞ்சு போய் வீட்டுக்குத் திரும்ப முடியாத நிலைமையில் நீ இருந்தால் அந்த இடத்துக்குப் பக்கத்தில் இருக்கிற போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய்  இந்த லெட்டரைக் காட்டு ." என்று அம்மா சொல்லும்போதே "ஏன்? அதில் என்ன எழுதுவே ?" என்று கேட்டான் அப்புமணி.
"அந்த கடிதத்தில் 'இந்தப் பையன் விளையாட்டுத்தனமாக வீட்டை விட்டுக் கிளம்பி வந்திருக்கிறான். கீழ்க்கண்ட விலாசத்துக்கு தகுந்த துணையோடு இந்தப் பையனை அனுப்பி வைக்கவும். அதற்க்கான செலவை நான் தந்து விடுகிறேன்'னு எழுதுவேன். அதைப் படிச்சிட்டு அவங்க உன்னை இங்கே கொண்டாந்து விட்டுடுவாங்க" என்று விளக்கினாள் அம்மா  
மனசுக்குள் ஆயிரமாயிரம் கவலையும் பயமும் இருந்தாலும், யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு ஓடி விடக் கூடாதே என்ற பயத்தில்தான் அம்மா இந்த ஏற்பாட்டை செய்தாள். அப்புமணி ஈ எறும்புக்குக் கூட தீங்கு பண்ண மாட்டான். அவனுக்குத் தெய்வம் காவலாக இருக்கும். அதுவும் இல்லாமல் வெளியூர் போகிற அளவுக்கெல்லாம் அவனுக்குத் துளியும் தைரியமோ சாமர்த்தியமோ கிடையாது. பஸ் ஸ்டாண்ட் வரை போவான். தூக்கம் வந்தால் வீட்டைப் பார்த்து ஓடி வந்து விடுவான் என்று தனது மனதுக்குள் அம்மா ஒரு கணக்குப் போட்டு வைத்திருக்க,  "விதி" வேறு விதமாக கணக்குப் போட்டுள்ளதை அம்மா அறிந்திருக்கவில்லை ..
-----------------------------------------------------   தொடரும் -----------------------------------------------------

Friday, November 20, 2015

குழந்தைகளுக்கான குறுந்தொடர் - 16

                             
          அச்சுப்பிச்சு அப்புமணி !
திருடன் வந்ததைப் பார்த்த பிறகும் அப்புமணி அதைக் கண்டு கொள்ளாமல் இருந்ததால் அவனைத் திட்டித் தீர்த்த அம்மா அதற்காக வருத்தமும் பட்டாள்.
அன்று இரவு தற்செயலாக படுக்கையில் புரண்டு படுத்த அம்மா , அப்புமணிதூங்காமல் படுக்கையில் எழுந்து உட்கார்ந்திருப்பதைப் பார்த்து "என்னடா கண்ணு... தூக்கம் வரலியா ? அம்மா திட்டிட்டேன்னு நெனைச்சு வருத்தத்தில் இருக்கிறியா ? " என்று அவனது தலை முடியைக் கையால் கோதி விட்டபடி கேட்டாள்.
"இல்லேம்மா ... நான் அமெரிக்காவைப் பார்க்கத்தான் தூங்காமல் முழிச்சிட்டு இருக்கிறேன் " என்று பதில் சொன்னான் அப்புமணி. 
"என்னது !அமெரிக்காவைப் பார்க்க போறியா ?" என்று அதிர்ந்து போய்க் கேட்டாள் அம்மா 
"எங்க டீச்சர் பாடம் நடத்தறப்போ, 'பூமி சூரியனை தினந்தினம் சுத்தி வருது.இந்தியாவில் இரவாக இருக்கிறப்பஅமெரிக்காவில் பகல் நேரமாக இருக்கும்'னு சொன்னாங்க. நாம முழிச்சு கிட்டே இருந்தால், இந்த பூமி சுத்தறப்போ நாம எல்லாரும்  அமெரிக்காவுக்குப் போயிடுவோம் தானே? அதான் அமெரிக்காவைப்  பார்க்கிறதுக்காக நான் தூங்காமல் முழிச்சிட்டு இருக்கிறேன்" என்று பதில் சொன்னான் அப்புமணி.
இப்படியொரு முட்டாளாக இருக்கிறானே. இவனுக்கு என்ன சொல்லி புரிய வைப்பது என்பது புரியாமல் திகைத்துப் போன அம்மா, சற்று நேர யோசனைக்குப் பின்," நீ தேவையில்லாமே முழிச்சிட்டு இருக்காதே. பூமி சுத்தறப்போ, ராத்திரி நேரத்தில் நாம அமெரிக்கா போறப்ப,  அமெரிக்கா இங்கே வந்துடும். அங்கே இருக்கிறவங்களும் இந்தியா வந்திடுவாங்க தானே ! " என்றாள்.
"அப்படின்னா நாம இப்படியே மாறிமாறி சுத்திட்டே இருக்க வேண்டியது தானா?அமெரிக்காவை பார்க்க முடியாதா?"என்றுகேட்டான் அப்புமணி.  
"அது ஏன் உனக்கு அமெரிக்கா மேலே அப்படியொரு ஆசை ?"
"எல்லாரும் அமெரிக்கா அமெரிக்கான்னு சொல்றாங்களேன்னு நானும் சொன்னேன். அவ்வளவுதான் " என்றான் அப்புமணி 
"அவ்வளவுதானா? நானும் என்னவோ ஏதோன்னு நினைச்சு தடுமாறித் தான் போயிட்டேன். நீ நல்லா படிச்சு பெரிய ஆளாகி எல்லா நாட்டுக்கும் போயிட்டு வா" என்று அம்மா சொன்னதுமே, "அம்மா ... எனக்கு அந்தக் கால கதைகளை சொல்லேன் " என்றான் அப்புமணி 
"அந்தக் காலக் கதைகள்ன்னா ?"
"ம் .... அதாது சாமிக் கதைகள் ! ம் .... புராணக் கதைகள் "
"அது ஏன் ?"
"புராண காலத்து புஷ்பக விமானம், மந்திரக்கண்ணாடி, வில் அம்பு இதை யெல்லாம் பார்த்து பார்த்துதானே இந்தக் காலத்தில் ஏரோப்ளேன், டீவீ, அணுகுண்டு எல்லாம் கண்டு பிடிச்சிருக்காங்க"என்று அப்புமணி சொல்ல வியந்து போன அம்மா, "இதையெல்லாம் உனக்கு சொன்னது யாருடா ?" என்று கேட்டாள்.
"புராணக் கதைகள் பத்தின சினிமா பார்க்கும் போது நாம பார்த்திருக் கோமே, யாராவது ஒரு அசுரன் ஒரு தேவரையோ இல்லாட்டி பொம்பள சாமியையோ புஷ்பக விமானத்தில் கடத்திட்டு போவான் தானே. அது இப்ப ஏரோப்ளேனா மாறிப்போச்சு. தேவாதி தேவர்கள்   இல்லாட்டா ஏதோ அசுரர்கள்  மந்திரவாதிங்க ஒரு மந்திரகண்ணாடி முன்னால் நின்னு கிட்டு ஒரு கோலை ஆட்டுவாங்க .. உடனே எங்கெங்கு என்னென்ன நடக்கிறதுங்கிறது அந்த கண்ணாடியில் தெரியும். அது மாதிரி நாம இப்போ டீவீ முன்னாலே உட்கார்ந்துட்டு ரிமோட்டை அழுத்துறோம். உலகத்தில் எங்கெங்கே என்ன நடக்கிறதுங்கிறது தெரியுதுதானே. தேவர்கள்  அசுரர்களுக்கு நடுவிலே சண்டை நடக்கும். அப்போ அசுரர்கள் ஒரு ஆயுதத்தை விடுவாங்க. உடனே சாமி வீசுற ஆயுதம் அதைப் போய்த் தடுக்கும். அந்த மாதிரிதானே  இப்போ எல்லா நாட்டிலேயும் ராக்கெட், குண்டு எல்லாம் வீசி தாக்குறாங்க . நீயும் நிறைய புராணக் கதைகள் சொன்னால் அதை வச்சு புதுசு புதுசா எது எதையோ நான் கண்டு பிடிப்பேன். அப்படி நான் கண்டு பிடிச்சா என்னை ஒபாமா அமெரிக்கா வுக்கு வர சொல்லி கூப்பிடுவார்தானே?" என்று அப்பாவித் தனமாகக் கேட்டான் அப்புமணி.
அந்தப் பதிலை சற்றும் எதிர்பார்த்திராத,அந்த பதிலைக் கேட்டு திகைத்து போன அம்மா, "கண்டிப்பா கூப்பிடுவார். அவரே இங்கே வந்து உன்னை அமெரிக்காவுக்கு கூட்டிட்டுப் போவார் . உனக்கு ஏன் அமெரிக்கா மேலே,  ஒபாமா மேலே  அப்படி யொரு ஆசை ? " என்று கேட்டாள் .
"எனக்கு அவர் நடக்கிறது ரொம்பப் பிடிக்கும் ?" என்றான் அப்புமணி 
"நடக்கிறதுன்னா ?"
"அவர் நடந்து போறதை சொல்றேன் "
"என்னடா இது .. எல்லாருக்கும் இருக்கிற மாதிரி அவருக்கும் ரெண்டு காலுதான்.. எல்லாரையும் மாதிரிதான் அவரும் நடக்கிறார் "
"நீ பார்த்த லட்சணம் அவ்வளவுதான் ....டீவீயில் எத்தனையோ நாடுகளை எத்தனையோ தலைவர்களைக் காட்டறாங்க..அதில் நிறைய பேர் அவங்க என்னவோ ஏதோ ஒரு சவஊர்வலத்தில் போற மாதிரி உடம்பை அசைக்க முடியாமே அசைச்சு அவஸ்தைப் பட்டுகிட்டுதானே நடந்து போறாங்க. ஆனா ஒபாமா நடையில் ஒரு துள்ளல் இருக்குது. துள்ளி துள்ளி என்னமா நடந்து போறார் அரேபியக் குதிரை மாதிரி. நம்ம காந்திஜி நடையில் ஒரு வேகம் இருக்கும். இந்திரா காந்தியும் அப்படித்தான் நடப்பாங்க ...அவங்க நடையில் ஒரு கம்பீரம் இருக்கும்.  இந்திராகாந்தி நடைக்கு ஈடு குடுத்து யாராலும் நடக்க முடியாது. இந்திராகாந்தி நடந்து போனால், அவங்க  பின்னாலே போற செக்யூரிட்டி எல்லாரும் அவங்க பின்னாலே ஓடி ஓடித்தான் போவாங்க. அந்த நடையை அவங்களுக்குப் பின்னாலே இந்தியாவிலே வேறு யாரிட்டேயுமே பார்க்க முடியலே. MGR நடையில் ஒரு சுறுசுறுப்பு இருக்கும். " என்று அப்புமணி சொல்ல, "அப்பு .. இது நீயா பேசுற விஷயம் இல்லே.  இந்த மாதிரி பேச யார் சொல்லித் தந்தாங்க ?" என்று அம்மா கேட்டாள். 
"ஹிஹி " என்று அசடு வழிந்த அப்புமணி, "அன்னிக்கு நாங்க ஸ்கூல் போயிட்டு வரும்போது  டவுனில் ஒரு மீட்டிங் நடக்க இருந்துச்சு. அங்கே என்ன நடக்குன்னு பார்க்க நாங்க போனோம்.  ரொம்ப நேரம் ஆகியும் மீட்டிங் ஆரம்பிக்கவே இல்லே. அப்போ எங்க பக்கத்திலே ரெண்டு தாத்தா நின்னுட்டு இருந்தாங்க. அவங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருக்கிறப்போ ஒரு தாத்தா பேசினது ரொம்ப வேடிக்கையா இருந்துச்சு.. கையைக் கையை ஆட்டி கண்ணை உருட்டிஉருட்டி பேசினார். அதை வேடிக்கை பார்த்துட்டே இருந்தேனா ... அப்போ அவங்க பேசினது என் காதில் விழுந்துச்சு ..  அதைத்தான் அப்படியே மனப்பாடம் பண்ணி இப்போ உன்கிட்டே அவுத்து விட்டேன். எப்படி இருக்கு நம்ம சரக்கு. சிங்காரி சரக்கு நல்ல சரக்கு. இந்த அப்புமணி சரக்கு ரொம்ப அசத்தற சரக்கு " என்று சிரிப்புடன் பாடினான் அப்புமணி .
"அதானே பார்த்தேன் ... என் பிள்ளையாவது இவ்வளவு விவரமா பேசறதாவது?எல்லா வீட்டிலேயும் எல்லாரும் தூங்கிட்டு இருக்காங்க தானே. நீயும் தூங்கு" என்று அம்மா சொன்னதும் அப்புமணியின் முகம் வாடிப் போனது.
"அப்படின்னா எனக்கு எதுவுமே தெரியாதா ?"  என்று கேட்டான் .
"உனக்கு எல்லாம் தெரியும். அதைத் தெரிஞ்சிக்கிற அளவுக்கு எனக்கு மூளை இல்லை .... போதுமா ?" என்று கேட்டாள் அம்மா 
"ஊம் ... அப்படி வாங்க வழிக்கு.... இப்போ நான் தூங்கப் போறேன்" என்று சொல்லி படுக்கையில் சுருண்டு படுத்தான் அப்புமணி. 
"கடவுளே ... இந்தப் பிள்ளையை எப்படிக் கரை சேர்க்கப் போறேனோ தெரியலையே " என்று கவலையுடன் சொன்ன அம்மா, அப்புமணியை அணைத்தபடி தூங்க ஆரம்பித்தாள்.
--------------------------------------          தொடரும் ----------------------------------

      

Wednesday, November 18, 2015

DEAR VIEWERS,

சினிமாக்களிலும் நாடகங்களிலும் நொடிப் பொழுதில் காட்சிகள் மாறுவது போல நிஜ வாழ்விலும் காட்சிகள் நொடிப் பொழுதில் மாறித் தான்  போகின்றன. கிட்டத்தட்ட ஏழு நாட்களுக்கு முன் கடலூர் பகுதியின் வெள்ள நிலவரத்தை டீவீயில் பார்த்துக் கொண்டிருந்த நான், அப்போது கொஞ்சங் கூட நினைத்துப்  பார்த்திருக்கவில்லை எங்கள் பகுதிக்கும் இப்படியொரு நிலைமை வருமென்று.
இந்த வாரம் பெய்த மழையால் வீட்டை சுற்றி இடுப்பளவு தண்ணீர். வீட்டுக்குள் முழங்கால் அளவு தண்ணீர். எல்லோரும் முன்னெச்சரிக்கை யாக மாடியில் இருந்தோம். மூன்று நாட்களாக கரெண்ட் கிடையாது. (இப்போதுதான் பவர் சப்ளை ஆனது.). வீட்டுக்குள் மழைநீர் நின்றாலும் வீட்டில் குடிக்கத் தண்ணீர் கிடையாது. மழைநீரைப் பிடித்துக் குடித்தோம். ஹெலிகாப்டரில் ரவுண்ட் வந்து உணவுப் பொட்டலங்களை எங்கள் பகுதி யிலிருந்து  சற்றுத் தள்ளி இருந்த இடங்களில்  வீசினார்கள். ஹெலி காப்டர் கண்ணில் பட்ட போதெல்லாம் "தண்ணீர் தண்ணீர் " என்று நாங்கள் மொட்டை மாடியில் நின்று கொண்டு சைகை காட்டினோம். அவர்கள் எங்களை கண்டு கொள்ளவே இல்லை. பக்கத்து வீட்டு மொட்டை மாடியிலிருந்த ஒருவர் " நீங்க தண்ணீர் என்று சைகை செய்வதை அவர்கள் "சாப்பாடு " என்று நினைத்து அந்த பாக்கெட்டை இங்கே போட்டுவிடப் போகிறார்கள். தண்ணீர் பாட்டிலை கையில் வைத்துக் கொண்டு தூக்கி காட்டுங்கள்" என்று யோசனை சொல்ல அப்படியும் செய்து பார்த்தோம். ஊஹூம் ..... ஹெலிகாப்டர் எங்களை கண்டு கொள்ளவே இல்லை.அவர்கள் யாரையும் நான் குற்றம் சொல்ல வில்லை. அவர்கள் தங்கள் பணியை செய்து கொண்டு தான் இருந்தார்கள். ஒரே நேரத்தில் ஒட்டு மொத்தபகுதியும் பாதிக்கப்படும்போது யாரை யென்று அவர்கள் கவனிக்க முடியும். பால் வண்டி வர முடியாததால் பால் தயிர் கிடையாது. நான் என்னைப் பற்றி என்றுமே கவலைப்பட்டது கிடையாது. வீட்டில் 90 வயதைத் தொட்டுக் கொண்டிருக்கும் அம்மா, வீட்டில் எத்தனை விதமான உணவு வகை இருந்தாலும் இட்லி தோசைக்கும் சாதத்துக்கும் தயிரை மட்டுமே கேட்கும் அம்மா, நிலைமையைப் புரிந்து கொண்டு "எனக்கு தயிர் வேண்டாம். குளிராக இருக்கிறதே. இட்லி மிளகாய்ப் பொடிக்கு எண்ணையே போதும் " என்று சொன்னபோது மனதில் ஒரு வலி. பக்கத்து தெருவில் சிறு குழந்தையின் அழுகுரல். பெரிய குழந்தை என்றால் வீட்டிலுள்ள சாப்பிடும் பொருளைக் கொடுக்க முடியும். பச்சிளங் குழந்தைக்கு கொடுக்க எதுவும் கிடையாது. இரவு வெகுநேரத்துக்குப் பின் படகு வந்து அவர்களை  அழைத்து சென்றது.
சென்னையில் சுனாமி  பாதிப்பு ஏற்பட்ட போது  நானும் என் சகோதரியும், அக்கம் பக்கத்து வீடுகளிலிருந்து போர்வை புடவை துணிமணிகளை கலெக்ட் பண்ணிக்கொண்டு  குறைந்தது நூறு பிஸ்கட் பாக்கெட், பன் என்று வாங்கிக்கொண்டு பாதிக்கப் பட்டவர்கள் எங்கெங்கு இருக்கிறார் கள் என்று கேட்டுத் தெரிந்து கொண்டு அங்கு போய்க் கொடுத்து விட்டு வந்தோம். கொடுக்கத்தான் வருகிறார்கள்  என்பதைத் தெரிந்து கொண்டு நாங்கள் ஆட்டோவிலிருந்து இறங்கும் முன்பாகவே சிலர் ஓடி வந்து எங்கள் கையிலிருந்த துணிகளை பறித்து சென்றார்கள். அவர்கள் நிலையை நினைத்து மனம் அழுதது. இவ்வளவுக்கும் அவர்கள் நேற்று வரை நல்ல நிலையில் இருந்து இயற்கையின் சீற்றத்தால் பாதிக்கப் பட்டு இன்று இந்த நிலையில் இருக்கிறார்களே என்று நினைக்கும்  போது மனதுக்குள் ஒரு வலி தோன்றியது.
சிலசமயம் டீவீ நியூஸ்ல் புயல் சூழ்ந்த பகுதியில் மீட்டுக் குழுவினர் உணவுப் பொட்டலங்களை வீச மற்றவர்கள் அதை ஓடி ஓடிப் பிடிக்கும் போது, "எப்பேர்ப்பட்ட வசதி உள்ளவர்களையும் ஒரு நொடிப் பொழுதில் பிச்சைக்காரகள் ஆக்கி ஆண்டவன் வேடிக்கை பார்க்கிறான் " என்று நினைப்பேன்.
ஒரு சில விஷயங்களை நாம் கற்பனை செய்துகூட பார்த்திருக்க மாட்டோம். ஆனால் அது நிஜ வாழ்வில் நடந்து விடுகிறது. எங்கள் பகுதிக்கு படகு வந்து அங்கிருந்து வெளியேற விருப்பப் பட்டவர்களை வெளியிடத்துக்கு கூட்டி சென்றது.. அவர்களைப் பார்க்கும்போது பரிதாபமாக இருந்தது. அந்த உணர்ச்சியில் குறைந்தது 10 பேரையாவது என் வீட்டில் வைத்துப் பராமரிக்க என்னால் முடியும்.. நாங்களே மாடிக்கு எப்போது தண்ணீர் வருமோ தெரியலையே என்ற பயத்தில் இருக்கும் போது எதை நம்பி அவர்களை வீட்டுக்குள் அழைக்கமுடியும்.  ஏதாவது முகாமுக்குப் போனால் இவர்களுக்கு சாப்பாட்டை ஏதோ ஒரு வகையில் யாரோ ஏற்ப்பாடு செய்வார்கள். இங்கே வந்து நம்மோடு சேர்ந்து தண்ணீர் இல்லாமல் இவர்களும் ஏன் தவிக்க வேண்டும்  என்று எனக்கு நானே சமாதானம் சொல்லிக் கொண்டேன்.
எங்கள் பகுதிக்குள் வந்த படகுக்காரர்களிடம் பால் பாக்கெட்டும் தண்ணீர் பாக்கெட்டும் கொண்டு வந்து கொடுத்தால் என்ன பணம் கேட்டாலும் அதை தந்து விடுகிறோம் என்று சொல்லிப் பார்த்தார்கள். "கடை எதுவுமே திறந்திருக்கவில்லையே. நாங்கள் எங்கே போய் வாங்க முடியும்?"   என்றார்கள் படகில் வந்தவர்கள். அவர்கள் சொல்வதும் வாஸ்தவந்தான்.  
நான், என்னுடைய நெருங்கிய தோழிகளோடு சேர்ந்து  வெளியிடங்களில் சாப்பிடும் வேளைகளில் அவர்கள் எல்லாருமே என்னிடம் மட்டும் "அது வேண்டுமா  ? இது வேண்டுமா ?" என்று விழுந்து விழுந்து உபசரிப்பார்கள். அதைப் பார்க்கும் சிலர்,"அது என்ன அவங்களுக்கு மட்டும் என்ன ஸ்பெஷல் உபசரிப்பு?" என்று கேட்கும்போது, "நாம நமக்கு வேணுங்கிற தை கேட்டு வாங்கி சாப்பிடுவோம். அவங்க கேட்க மாட்டாங்க . கூச்சப் படுவாங்க" என்று தோழிகள் பதில் சொல்வார்கள்.  ஹெலிகாப்டரைப் பார்த்து நான் "தண்ணீர்" என்று கேட்டு சைகை செய்தபோது, "அய்யோ .. இந்தக் கண்கொள்ளாக் காட்சியைக் காண நம்ம நட்பு வட்டங்கள் பக்கத்தில் இல்லாமல் போயிட்டாங்களே" என்று வருத்தப்பட்டேன். தாகத்தை அடக்கிக் கொள்ள என்னால் முடியும். அது முடியாதபோது கையில் கிடைக்கிற எந்த நீரும் எனது வாய்க்குள் போய்விடும். அதை யெல்லாம் அம்மாவுக்குக் கொடுக்க முடியாதே என்ற வருத்தம் தான் அதிகம் இருந்தது. இரண்டு நாட்கள் மழைத்தண்ணீர் குடித்து, அதில் சமைத்தோம்.  
இரண்டு நாட்கள் பால் இல்லாத காப்பியை அம்மாவுக்கு கொடுத்தாகி விட்டது. இன்றைக்கும் அதே நிலை என்றால் அம்மா தாங்க மாட்டாள் என்ற நினைப்பில் அக்கம் பக்கத்து வீட்டு ஆண்களிடம் "யாராவது வெளியில் போனால் ஒரு பால் பாக்கெட் மட்டும் வாங்கி வாருங்கள்' என்று சொல்லிக் கொண்டிருந்தேன். எனது குரல் கடவுளின் காதில் விழுந்து விட்டது போலும். இன்று ஒரு லாரியில் "ஆரோக்கியா" பால் பாக்கெட்டுகளை எங்கள் பகுதில் இலவசமாக சப்ளை செய்தார்கள். பால் பாக்கெட் கொடுத்த அவர்கள் சாப்பாடு வேண்டுமா என்று கேட்டார்கள். சாப்பாடு வேண்டாம். தண்ணீர் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று நான் சொல்ல, அடுத்த வேனில் அதைக் கொண்டு வருகிறோம் என்றார்கள். எனக்கு இரண்டு பாக்கெட் பால் கிடைத்தபோது, என் கையில் யாரோ கோடி கோடியாகக் காசுகளை கொட்டியது போல இருந்தது. அவர்கள் யார் என்ன என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. கையில் பால் கிடைத்ததும் மற்ற விஷயங்களை கேட்க தோன்றவில்லை. அவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு ஆண்டவன் அருள் பரிபூரணமாகக் கிடைக்கட்டும்.  சற்று நேரத்திலேயே கரெண்ட் வந்தது. தொட்டிக்கு தண்ணீரை ஏற்றி விட்டோம்.அதை purify பண்ணி குடிக்கவும் ஆரம்பித்து விட்டோம். 
எல்லா இடத்து பாதிப்புகளையும் டீவீ செய்தியில் பார்த்த நான் எங்கள் பகுதி வெள்ள நிலை டீவீயில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்ததை பார்க்க முடியவில்லை. வெளியூர் உறவுகள், உள்ளூர் நட்பு வட்டங்கள் டீவீ நியூஸ் பார்த்துவிட்டு என்னை மொபைலில் தொடர்பு கொண்டு அத்தனை பேரும் கேட்ட முதல் கேள்வி "இப்பத்தான் டீவீயில் பார்த்தோம். நீங்க எல்லாரும் எப்படி இருக்கீங்க .. சாப்பிட்டீங்களா ? " என்பதுதான். இந்த அன்புக்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேன் என்பது தெரிய வில்லை. அத்தனை பேருக்கும் நான் சொன்ன ஒரே பதில், "ருசியாக செய்து சாப்பிட வழியில்லை என்றாலும் பசிக்கு சாப்பிட தேவையான பொருள் இருக்கிறது. காய்கறி இல்லை . ஆனால் அப்பளம்  இருக்கிறது. உங்களால் முடிந்தால், மின்சாரம், தண்ணீர், பால் இந்த மூன்றுக்கும் ஏதாவது ஏற்பாடு பண்ணுங்க " என்பதுதான்.   
மழை வெள்ளத்தால் பாதிக்கப்படுவது எனக்கொன்றும் புதிதல்ல. அடைமழை பெய்யும்போதும் கூட டூ வீலரில் ஆபீஸுக்குக் கிளம்பிப் போய்விட்டு இரவில்  அதைத் தள்ளியபடி வீடு வந்து சேர்ந்திருக்கிறேன். நான் எழுதி இருந்த  எனது புயல்மழை அனுபவம் ஏற்கனவே சுபவரம் பத்திரிக்கையில் வெளியாகி உள்ளது. 
ஆனால் நம்மை நம்பி  நம்மோடு இருப்பவர்களுக்குத் தேவையானதைக் கொடுக்கவழியில்லாத நிலையில் நாம் இருக்கிறோம் என்று நினைக்கும் போது தான் மழையை  சபிக்கத் தோன்றுகிறது.
என்னுடைய well wisher ஒருவர் அடிக்கடி சொல்லும் வார்த்தை, "ஒருத்தருக்கு ஒரு கஷ்டம் வர வேண்டும் என்ற விதி இருந்தால் அது வந்தே தீரும்.அதை யாராலும் மாற்ற முடியாது" என்பார். அது உண்மை தான் என்பதை பல முறை அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறேன். 
மூன்று உதாரணம் சொல்கிறேன். 1  ஒரு ராஜாவின் மகனுக்கு அதாவது ஒரு இளவரசனுக்கு பன்றியால்தான் மரணம் நேரும் என்று ஜோதிடர் சொல்ல, என் மகன் பன்றி இருக்கிற இடத்துக்குப் போக வாய்ப்பே இல்லை. பிறகு எப்படி மரணம் நேரும் என்று கேட்டு கோபப் பட்ட ராஜா அந்த ஜோதிடரை தூக்கில் போடவேண்டுமென்று சொல்ல, அதற்க்கு ஜோதிடர், "நான் குறிப்பிடும் அந்த வயதில் அவர் பன்றியால் மரணமடை யாமல் உயிரோடு இருந்தால்  அதன் பிறகு என்னை தண்டியுங்கள்" என்று சொல்ல, ராஜாவும் சம்மதித்து ஜோதிடரை சிறையில் வைத்தார். முடிவில் ஜோதிடர் சொன்னது நடந்தது. அந்த நாட்டுக் கொடியில் உள்ள சின்னம் பன்றி. காற்றில் கொடிக்கம்பு  உடைந்து, அரண்மனை மாடியில் விளையாடிக் கொண்டிருந்த இளவரசர் மீது விழ, கொடியிலிருந்த  தங்கப் பன்றி இளவரசன் நெஞ்சில் குத்தி அவன் இறந்து போனான்.
2 முன்பொரு முறை புயலால் தனுஷ்கோடி என்ற இடமே அழிந்தது. அந்த சமயம் (மறைந்த ) நடிகர் ஜெமினி கணேஷ்  அவர் மனைவி சாவித்திரி மகள் (விஜய சாமுண்டீஸ்வரி என்று பெயர் என்று நினைக்கிறேன்) மூவரும் ராமேஸ்வரம் கோவிலுக்குள் மாட்டிக் கொண்டு வெளியில் வர முடியாத நிலையில் இருந்தார்கள்.அது பற்றி ஒரு பேட்டியில் ஜெமினி கணேஷ், "எங்கள் வீட்டில் எத்தனையோ பேருக்கு தினம் தினம் சாப்பாடு கிடைக்கும். நாங்கள் அன்னம் தண்ணீர் இல்லாமல் தவிக்கும் நாள் ஒன்று வரும் என்று நான் நினைத்தும் பார்த்ததில்லை" என்று சொல்லி யிருந்தார்.
3. விகடன் நிறுவன அதிபர் திரு S S  வாசனிடம் யாராவது "உங்கள் மகன் ஒரு நாள் ஜெயிலுக்குப் போவார் " என்று சொல்லியிருந்தால் அப்படி சொன்னவர் ஒரு பைத்தியம் என்று வாசன் முடிவு கட்டியிருப்பார். ஆனால் ஒன்றுமே இல்லாத .... உப்பு சப்பில்லாத ஒரு விஷயத்துக்காக (அட்டைப்பட கார்ட்டூன் விஷயமாக) திரு.பாலசுப்ரமணியன் கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப் பட்டார். அவர் எந்த தவறும் செய்ய வில்லை. ஆனால் அவர் சிறை வாசம் அனுபவிக்க வேண்டும் என்ற விதி இருந்திருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன்.
எந்த ஒரு காரணமும் இல்லாமல் ஏதோ ஒரு வகையில் நான் கஷ்டப் படும் போதெல்லாம்  "அருணா ... நீ இதை அனுபவிக்கவேண்டும் என்பது தெய்வத்தின் கணக்கு . மனதை தளர விடாதே " என்று எனக்கு நானே தைரியம் சொல்லிக் கொள்வேன். 
வானத்தில் பறக்கும் ஹெலி காப்டரைப் பார்த்துக் கை காட்டி தண்ணீர் பிச்சை கேட்க வேண்டும் என்ற ஒரு கணக்கை ஆண்டவன் எப்போதோ போட்டு வைத்திருக்கிறான் போலும்  என்று நினைக்கும்போது, "இந்த நிலைக்கே நாம சுய பச்சாதாபம் அடைகிறோமே. எல்லாம் இருந்தும் ஏதோ ஒரு காரணத்துக்காக  அகதிகளாக வேறோர் இடத்தில் தஞ்சம் அடைபவர்கள் மனநிலை எப்படி இருக்கும் என்பதை நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லையே" என்று எனக்குள் நொந்து கொள்கிறேன். 

Saturday, November 14, 2015

DEAR VIEWERS,

FACE BOOK ல் நான் படித்த ஒரு செய்தியும், அதற்க்கு நான் எழுதிய comment ம் உங்கள் பார்வைக்காக இங்கே பதிவு செய்யப் படுகிறது. என்னுடைய எண்ணம் தவறு என்று நினைப்பவர்கள் அவர்கள் தரப்பு வாதங்களை இங்கே பதிவு செய்யலாம்.
வெளிநாட்டு வாழ்க்கை வேதனையே! இல்லை சாதனை
தினார்கும் ரியாலுக்கும் வாழ்க்கையை அடகு வைத்து விட்டு மீட்க முடியாமல் நீரிலேயே மூழ்கிக் கிடக்கும் மீன் குஞ்சுகள் நாங்கள்......
பண்டிகை நாட்களில் குடும்பத்தோடு குதூகளிக்க முடியாமல் தங்களின் வாழ்த்துக்களை மனம் முழுக்க சோகத்தோடு கைப்பேசியில் கூக்குரலிட்டு கொஞ்சி மகிழ நேரில் இல்லாத காற்றலைகள் நாங்கள்......
இங்கே கண்ணே கனியமுதே என்றெல்லாம் தன் பெற்றக்குழந்தையை நெஞ்சுருகக் கட்டித்தழுவ முடியாதொருதுர்பாக்கியசாலிகள் நாங்கள்...
கொம்பியூட்டர், ஸ்கைப். போனிலும் சொந்த பந்தங்களின் குரல் கேட்டு கேட்டு எங்கள் பாசம் கூட இங்கு கமர்ஷியல் ஆகிப்போனது... தொலைதூர பாசம் செய்தே/காட்டியே தொலைந்து போனவர்கள் நாங்கள்...
நான் இங்கே நல்லா இருக்கேன். என்று எப்போதும் சொல்லும் இயற்கை நிலை குரலுக்கு சொந்தக்காரர்கள் நாங்கள்...
வியர்வையில் நாங்கள் வேலை செய்து துவண்டாலும் விடுமுறையில் ஊருக்கு போகும் முன் சென்ட் வாசனை திரவியங்கள் வாங்க மறப்பதில்லை நாங்கள்...(எங்கள் வியர்வையின் வாசம் வீட்டில் உள்ளோர் அறியாமல் இருக்க...)
உனக்கென்ன! விமானப்பயணம், வெளிநாட்டு ராஜ வாழ்க்கை என்று ஊருக்கு போனதும் உள்ளூர் வாசிகள் எங்களை பார்த்து விடும் பெருமூச்சு வளைகுடா நாட்டின் அரபி நாட்டு வெப்பத்தை விட சற்று அதிகமாகவே சுடுகிறது!
(இவர்கள் பேச்சி) வெளிநாட்டு மூட்டை பூஜ்ஜி கடியை விட இவர்கள் கடியைதான் தாங்க முடியவில்லை கம்ப்யிட்டர்க்குள் அகப்பட்டுக்கொண்ட எலிகள், நாங்கள் கலப்பை பிடிக்கவில்லை ஆனால் நாங்களும் களைத்துத்தான் போகிறோம்...
எண்ணெய் கிணற்று தவளைகள் நாங்கள்... வாயுக்குழாயில் சிக்கிக்கொண்ட வாயில்லா பூச்சிகள் நாங்கள்... திரைகடலோடி திரவியம் தேடும் திசைமாறிய பறவைகள் நாங்கள்... ஆரம்பத்தில் முதலீடில்லா தொழில் இது என்று பெருமிதப்பட்டோம் எங்களுக்கே தெரியாமல் எங்கள் இளமையை அல்லவா முதலீடு செய்திருக்கின்றோம்...
இப்போதுதான் புரியத்துவங்கியது சேர்ந்தே நரைக்கவும் துவங்கியது... நாங்கள் முதலீடு செய்தது எங்கள் வாழ்க்கையை! வாலிபத்தை!! இழப்பீடு கிடைக்காத இழப்பு இது , நஷ்ட்டஈடு கிடைக்காத நஷ்ட்டம் இது... , அப்பாவின் அன்பு, குழந்தையின் மழலை, நண்பர்களுடன் அரட்டை இப்படி வீட்டு சாப்பாட்டுக்கு ஏங்கி தவிக்கும் எங்கள் நாக்கு இங்க உள்ள பர்கர், பீசா, சன்விஜ், சாப்பிட்டு சாபிட்டு எங்கள் நக்கும் செத்து போச்சி பசி கொடுமைக்காக சாப்பிடுக்றோம்.
ஏதோ எங்கள் உடம்பில் கொஞ்சம் ஓட்டி கொண்டு இருக்கும் ரெத்தத்தை கூட மூட்டை பூச்சி குடித்து விடுகிறது . எத்தனையோ இழந்தோம்..... எல்லாவற்றையும் இழந்த நாங்கள் இன்னும் இங்கே ஏன் இருக்கின்றோம்... இழப்பதற்கு ஒன்றுமில்லை என்பதாலா? இல்லை இழப்பிலும் சுகம் கண்டுகொண்டதாலா?"
சொந்த மண்ணில் சொந்தங்களோடு சோறு திண்பவன் ......யாரடா ? இருந்தால் அவனே சொர்க்கம் கண்டவனடா! உங்கள் விரல் தொடும் தூரத்தில் நான் இல்லை என்றாலும் !' உங்கள் மனம் தொடும் தூரத்தில் நான் இருப்பேன் ! நீங்கள் இருப்பது தொலைவில் தான் ஆனால் என் இதயம் மட்டும் உங்களுடன் பேசிக்கொண்டிருகின்றது...!
எழுச்சியும், வீழ்ச்சியும்ஆரம்பம்

இந்த புலம்பலுக்கு என்னுடைய பதில் கீழே உள்ளது.
வெளிநாட்டு கரன்ஸி, ஆடம்பரம், பகட்டு வாழ்க்கைக்கு ஆசைப் பட்டு, ( ஒரு நாட்டுக்கு செல்ல தேவையான தகுதிகள் என்று வரைமுறைப் படுத்தி வைத்திருக்கும் விஷயங்களையெல்லாம் "எலும்புத் துண்டுகளை" வீசி எரிந்து தங்கள் காரியத்தை சாதித்துக் கொள்ள வேண்டியது). அந்த வாழ்க்கை அலுத்துப் போனதும், சொந்த நாட்டிலிருந்து இவர்களை  யாரோ நாடு கடத்தி விட்டதுபோல அழுது புலம்ப வேண்டியது. இது போன்ற எத்தனை அழுகைகளை நாம் காலங்காலமாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். எல்லாம் தெரிந்தும் ஏன் மூட்டை கட்டிக் கொண்டு ஏதோ கோட்டையைப் பிடிக்கப் போறவன் போல ஓடணும் ? பிறகு ஏன் ஒரு ஓரமாக உட்கார்ந்து புலம்பணும். கூழோ கஞ்சியோ சொந்த மண்ணில் சொந்த பந்தங்களோடு சேர்ந்து குடித்து சந்தோசமாக இருக்கலாந்தானே. ( ஒரு சிலரை அவர்கள் வேலையில் இருக்கும் நிறுவனம் கட்டாயத்தின் பேரில் அனுப்புகிறது. அவர்களுக்காக நாம் வருத்தப்படலாம்.) சொர்க்கத்தைத்  தேடித் போறேன் என்று சொல்லி சொந்த நாடு, சொந்த பந்தங்களை உதறி விட்டுப் போகிறவர்கள் புலம்பலை காதிலேயே வாங்கிக் கொள்ளக் கூடாது. ஏன், இவர்கள் போக மாட்டேன் என்று சொன்னால் சொந்த நாட்டில் தூக்குத் தண்டனை கொடுத்து விடுவார்களா என்ன ? இங்கிருந்தால் ஏழ்மையை நினைத்து பணக் கஷ்டம். அங்கு போனால் உறவுகளை நினைத்து மனக்கஷ்டம். ஏதோ ஒரு வகையில் கஷ்டத்தை அனுபவித்தே ஆக வேண்டும் என்ற நிலை இருக்கும்போது  "நிம்மதி நிம்மதி உங்கள் சாய்ஸ்" என்பதை ஏன் மறந்து விடுகிறீர்கள் ?

Friday, November 13, 2015

குழந்தைகளுக்கான குறுந்தொடர் - 15

                                       
அச்சுப்பிச்சுஅப்புமணி !
மனதிலுள்ள வலி தீரும் வரை வாய் விட்டு அழுத மாரியம்மா, " வா.  ராசா .. நாம போகலாம் " என்று சொல்லியபடி வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
அப்புமணியின்  வீட்டு வாசலில் நின்று கொண்ட மாரி , "அம்மா ... அம்மா ... செட்டியார் ஐயா குடுத்த துட்டு தம்பி ட்ரவுசர் பையில் இருக்கு. வாங்கிக் கோங்க.. நான் போறேன் " என்று குரல் கொடுத்தாள் .
"நில்லு... என்ன அவசரம் மாரி? இவ்வளவு சீக்கிரத்தில் முட்டை வியாபார த்தை முடிச்சிட்டியா?" என்று கேட்டபடி வெளி வாசலுக்கு வந்த அம்மா, "என்ன மாரி, உன் முகமெல்லாம் வீங்கிப் போயிருக்கு.. அழுதியா என்ன?" என்று கேட்டாள் 
சந்தையில் நடந்த சம்பவத்தை மாரியம்மா சொன்னாள்.
"அப்புமணி ... உன் பையில் இருக்கிற பணத்தை எடு " என்று அம்மா சொன்னதும் பணத்தை எடுத்து அம்மாவிடம் கொடுத்தான் அப்புமணி. அதை மாரியம்மா கையில் கொடுத்த அம்மா , "அழாதே .. மாரி .. இந்தப் பணத்தை வச்சுக்கோ ... உன் பிள்ளைகளுக்கு வேணுங்கிறதை வாங்கிக் கொடு. இவனை உன்னோட அனுப்பினது என்னோட தப்புதான்" என்றாள் 
"அய்யய்யோ ... இவ்வளவு பணமா ? வேண்டாம்ம்மா " என்று மாரியம்மா சொல்ல, " இதில் ஒரு பங்கு உன்னோட முட்டைக்கான காசு.. இன்னொரு பங்கு உன் பிள்ளைகளுக்கு நான் குடுக்கிற பண்டிகைப் பரிசு. இன்னொரு பங்கு என் பிள்ளை பண்ணின தப்புக்கு நான் குடுக்கிற அபராதம்.. எந்த கேள்வியும் கேட்காமல் பணத்தை வாங்கிக்கிட்டு நீ போய்க்கிட்டே இரு  " என்று அம்மா சொல்ல, பணத்தை வாங்கிக் கொண்டு அங்கிருந்து கிளம்பி ப்  போனாள் மாரியம்மா. 
அவள் போனதும், "ஏண்டா .. அவ புருசன்தான் குடிகாரனாச்சே . அவன் கிட்டே இவ கையில் பணமிருக்கிற விஷயத்தை சொல்லலாமா ?" என்று அம்மா கேட்டாள்.
"மாரியக்கா அவ கையில் பணத்தை வச்சுகிட்டே பணம் இல்லேன்னு பொய் சொன்னா .. அரிசந்திர மகாராஜா மாதிரி எப்பவும் உண்மை பேசணும்னு நீ தானே சொன்னே ...அதான் அவ புருஷன் கிட்டே நான் உண்மையை சொன்னேன்"
"அடக் கடவுளே .... கடவுளே !" என்று தலையில் அடித்துக் கொண்ட அம்மா  "உன்னை கொன்னால் கூட பாவமே கிடையாது .. போதும் நீ உண்மை பேசின லட்சணம். இனிமே நீ எதைப் பார்த்தாலும் எதுவும் சொல்ல வேண்டாம். உன் திரு வாயை மூடிட்டு இருந்தாலே போதும். ஹூம்  .. மாரியம்மா ஓடி ஓடி  நாயா உழைக்கிற காசை அவ புருஷன் குடிச்சே அழிச்சிடுதான்.. என்னிக்குதான் இந்தக் குடி ஓயுமோ ?" என்று வருத்தத்துடன் சொன்னாள் 
"அதுக்குதானே கடையை மூடணும்னு சொல்றாங்க " என்றான் அப்புமணி  
"கடையை மூடிட்டா அவனவன் குடிக்கிறதை நிறுத்திடுவானா ? எந்த ஊரில் கடை திறந்திருக்கோ அங்கே போய்க் குடிப்பான்" என்றாள் அம்மா . 
"எப்புடிம்மா ?"
"தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் காபி குடிச்சு பழக்கப்பட்டவன் எதோ ஒரு நாள்  காபி வர கொஞ்சம் லேட் ஆயிட்டா பயங்கரமா டென்ஷன் ஆயிடுவான்.  நிதானம் இல்லாமே தவிப்பான். எந்த வேலையும் ஓடாது . அந்த ஒரே ஒரு வாய்க் காபி வயித்துக்குள்ளே இறங்கிட்டா நார்மல் ஆயிடுவான். காபி குடிக்கிறவனுக்கே அந்தக் கதின்னா ... போதைக்குப் பழக்கப்பட்டவன் என்ன மாதிரி நிலையில் இருப்பான்னு யோசிச்சுப் பார்க்கணும்.. எவனும் குடிக்கிற பழக்கத்துக்கு ஆளாகாமே பார்த்துக் கணும். அதுதான் பெரிய விஷயம் .. அது நடக்கக் கூடிய காரியமா ?" என்று கவலையுடன் சொன்ன அம்மா, "நான் கோவிலுக்குப் போயிட்டு வர்றேன் . அரை மணி நேரத்தில் வந்துடுவேன் " என்றாள். 
"அம்மா .... நானும் ..." என்று அப்புமணி ஆரம்பிக்க, "வாயைத் திறந்தால்  கொன்னுடுவேன். பக்கத்து வீட்டில் யாரும் இல்லே. ஊருக்குப் போயிட்டு வர இன்னும் ரெண்டு நாள் ஆகும். நீ அவங்க வீட்டைப் பார்த்திட்டு இரு  " என்று கோபமாக சொல்ல ," சரி .. சரி ... நீங்களே போய்க்கோங்க " என்று சொன்ன அப்புமணி சிறிது நேரம் கழித்து வீட்டின் பின் பக்கமுள்ள தோட்டத்துக்குப் போனான். அப்போது பக்கத்து வீட்டின் பின் பக்கமிருந்து தோளில்  ஒரு மூட்டையை சுமந்தபடி ஒருவன் போனதை அப்புமணி கவனித்தான். அவன் ஒரு திருடன் என்பதையும் புரிந்து கொண்டான் .
"அப்பப்பா .... இன்னிக்கு கோவிலில் ஒரே கூட்டம். சாமி தரிசனம் முடிச்சிட்டு வெளியில் வர்றதுக்குள் போதும் போதும்னு ஆயிட்டுது. நீ சமர்த்தா இருக்கிறே தானே?" என்று கேட்டபடி வீட்டுக்குள் வந்தாள் அம்மா. 
"அம்மா ... பக்கத்து வீட்டு மாமா அத்தை எல்லாரும் எப்போ அவங்க வீட்டுக்கு வருவாங்க ?" என்று கேட்டான் அப்புமணி 
"ஏன்  கேட்கிறே ?"
"இப்போ அவங்க வீட்டில் நிறைய சாமான் இருக்காது "
"என்னடா சொல்றே ?"
"நீ கோவிலுக்குப் போனியா ... அப்ப ஒரு ஆள் அந்த வீட்டிலிருந்த சாமானை மூட்டை கட்டி எடுத்துட்டுப் போயிட்டான்  "
"அடப் பாவி ... அதை நீ வேடிக்கை பார்த்திட்டா இருந்தே ? சத்தம் போட்டு ஊரைக் கூட்டி இருக்க வேண்டாமா? அவங்க நம்மள நம்பிதானே வீட்டை விட்டுட்டு போயிருக்காங்க  " என்று கோபத்துடன் கேட்டாள் அம்மா 
"நம்மள நம்பாட்டா, அனுமார் சஞ்சீவி மலையை தோளில் தூக்கிட்டு வந்த மாதிரி அத்தையும் மாமாவும் அவங்க  வீட்டை தோளில் தூக்கிட்டுப் போயிருப்பாங்களா ? நீங்கதானே சொன்னீங்க, நான் எதைப் பார்த்தாலும் வாயைத் திறக்க வேண்டாம் ... வாயை மூடிட்டு இருந்தாலே போதும்னு " என்று அப்புமணி நிதானமாக சொல்ல, "முட்டாளே ... உன்னை சொல்லிக் குத்தமில்லே .. என் புத்தியை செருப்பாலே அடிச்சுக்கணும்  " என்று சொல்லிவிட்டு வாசலுக்கு ஓடி வந்த அம்மா, அங்கிருந்தவர்களிடம் திருடன் வந்து போன விஷயத்தை சொல்ல, ஆளுக்கொரு பக்கமாக ஓடி திருடனைக் கண்டு பிடித்து சாமான்களை மீட்டு வந்தார்கள். அதன் பிறகுதான் அம்மா முகத்தில் சந்தோசம் வந்தது..   
---------------------------------------               தொடரும் ---------------------------------------        

Saturday, November 07, 2015

வார்த்தை விளையாட்டுப் புதிர்

வார்த்தை விளையாட்டுப் புதிர் என்ற தலைப்பில் இதுவரை 25 புதிர்கள் வெளியாகியுள்ளன . புதிர் எண் - 25 க்கான விடை இன்று வெளியாகி யுள்ளது . நான் தொகுத்த இந்த 25 புதிர்களும் சில / பல வருடங்களுக்கு முன்பே தினமணி - சிறுவர் மணியில் வெளியாகியுள்ளது . இது போன்ற நூற்றுக் கணக்கான புதிர்களை உங்களுக்கு தொகுத்துத் தர என்னால் முடியும். ஆனால் அதை ON-LINE ல் SOLVE பண்ணும்படி அளிக்கும் ஆசை இருப்பதால் இத்தோடு இந்தப் பகுதி தற்காலிகமாக நிறுத்தப் படுகிறது.
பார்வையாளர்கள் ON-LINE ல் SOLVE பண்ணும்படி இந்தப் பகுதியை அமைத்துத் தர தெரிந்தவர்கள் யாராவது இருந்தால் இது விஷயத்தில் எனக்கு உதவவும். நான் ஏற்கனவே எனது நட்பு வட்டங்களிடம் சொல்லி வைத்துள்ளேன். அவர்கள் முயற்சி செய்கிறார்கள். ஆனால் எதிர்பார்க்கும் ரிசல்ட்  கிடைக்க வில்லை.
நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன் எனக்கு computer knowledge ரொம்பவும் குறைவு என்று. எங்கள் வீட்டுக் குழந்தைகளிடம் சில விஷயங்களைக் கற்றுக் கொண்டு எனது எண்ணங்களை பதிவு செய்கிறேன்.  அவர்களும் அவங்களுக்கு mood இருந்தால்தான் எனது கேள்விகளுக்கு சந்தேகங்களுக்கு பதில் சொல்வார்கள். மூட் இல்லையென்றால் நான் என்ன கேட்டாலும் பதில் வராது.
www.chennai.1colony.com என்ற சைட்டில் கம்ப்யூட்டரில் வடிவமைக்கப் பட்ட 1000 க்கும் மேலான கோலங்களைப் பதிவு செய்துள்ளேன். அவை அனைத்தும் paint software ல் அமைக்கப் பட்டவை. கோலம் முழுதும் எனது கைவண்ணத்தில் உருவானவை . ஆனால் இணைய தளத்தில் பதிவு செய்தது எனது அலுவலக நண்பர் .  இப்போது அந்தப் பகுதியில் மேலும் சில விஷயங்களைப் பதிவு செய்ய விரும்புகிறேன். ஆனால் pass word தெரியவில்லை / மறந்து விட்டது. இது போன்ற சின்ன சின்ன விஷயங்களால் நான் கொடுக்க நினைக்கும் செய்திகளை புதிர்களை முழுமையாகக் கொடுக்க முடியவில்லை.  இது போன்ற விஷயங்களில் எனக்கு guidance கொடுக்க விருப்பமுள்ளவர்கள்  arunasshanmugam@gmail.com ல் தொடர்பு கொள்ளலாம். நன்றி.

Friday, November 06, 2015

குழந்தைகளுக்கான குறுந்தொடர் - 14

                                       
      அச்சுப்பிச்சு அப்புமணி ! 
"அரிசந்திர மகாராஜன் கதையை நான் சரியாத்தானே சொன்னேன். பிறகு ஏன் இப்படிக் கோபமா பார்க்கறீங்க ?" என்று கேட்டான் அப்புமணி .
"உனக்கு சரியாத்தான் பேர் வச்சிருக்காங்க அச்சுப்பிச்சுன்னு. ஒரு கதை யோட அர்த்தத்தை அனர்த்தம் பண்றே ?" என்றாள் அம்மா 
"அனர்த்தம்னா என்ன ?"
"ஒரு விஷயத்தில் உள்ள கருத்தைத் தப்பாப் புரிஞ்சுக்கிறது. உயிரே போகிற நிலைமை வந்தால் கூட பொய் சொல்லகூடாது, உண்மைதான் பேசணும்னு ஒரு கதையை சொன்னால், நீ அதை புரிஞ்சுக்கிறதை விட்டுட்டு, உண்மையை சொன்னால் கஷ்டம் வரும். அதனால் பொய் பேசலாம்னு சொல்றே ?" என்று கேட்டாள் அம்மா. "இனிமேல் நானும் அரிசந்திர மஹராஜா மாதிரி உண்மைதான் பேசுவேன்" என்றான் அப்புமணி 
அப்போது வாசல் பக்கமிருந்து " அம்மா ... அப்பும்மா ... நான் மாரியம்மா வந்திருக்கேன். இன்னிக்கு உங்க பிள்ளையை என்னோடு சேர்த்து சந்தைக்கு அனுப்பி வைக்கிறதா சொன்னீகளே " என்று குரல் கேட்டு வாசலுக்கு வந்த அம்மா, "இதோ அனுப்பி வைக்கிறேன் " என்று அந்தப் பெண்ணிடம் சொல்லிவிட்டு, "அப்புமணி, நீ மாரியம்மா கூட சேர்ந்து சந்தைக்குப் போ. போன வாரம் நெல்லு வாங்கிட்டுப்போன செட்டியார் அதோட விலையை இந்த வாரம் தர்றதா சொன்னார். நீ மாரியம்மா கூட போனால் போதும். மத்ததை அவ பேசிக்குவா. செட்டியார் குடுக்கிற பணத்தை மட்டும் நீ பத்திரமா  வாங்கிட்டு வந்துடு. வழக்கமா இந்த மாதிரி வேலையை  சாமிக்கண்ணு பார்ப்பார். கீழே விழுந்து காலில் அடிபட்டு நடக்க முடியாமே படுத்துட்டார் . மாரியம்மாவை நம்பி செட்டியார் பணம் தர மாட்டார். உன்னைப் பார்த்தால்தான், உன்னை நம்பி பணத்தைக் குடுப்பார்" என்று அம்மா சொன்ன அடுத்த நொடியே சந்தோஷமாக சந்தைக்குக் கிளம்பினான் அப்புமணி.
"அக்கா .. உன் தலை மேலே கூடை வச்சிருக்கியே. அதில் என்ன இருக்குது  ?" என்று கேட்டான் அப்புமணி 
"முட்டை வச்சிருக்கேன் கண்ணு. இன்னிக்கு சந்தை கூடுற நாளாச்சே. நல்லா வியாபாரம் ஆகும். பிள்ளைகளுக்கு கறியும் சோறும் ஆக்கிப் போட்டு ரொம்ப நாளாச்சு.இன்னிக்கு வர்ற வரும்படியில் பிள்ளைகளுக்கு பிடிச்சதை எல்லாம் வாங்கிட்டுப் போகணும் " என்று உற்சாகமாக சொன்னாள்  மாரியம்மா.
"உன்னோட சேர்ந்து நானும் முட்டை விற்கட்டுமா ?"
"உனக்கு ஏன் ராசா அந்தத் தலைஎழுத்து ? கூட்டம் இருக்கிற இடமா பார்த்து கூடையை இறக்கி வச்சா ஒரு மணி நேரத்தில் கொண்டு வந்த எல்லாத்தையும் வித்துட்டுப் போயிடலாம். யாராது மொத்தமா கேட்டாக் கூட குடுத்துட்டு நாம வீட்டுக்கு நடையைக் கட்டலாம்"
"செட்டியார் எப்ப பணம் தருவார் ?"
"இதோ ... இப்ப போற வழியிலேயே அந்த வேலையை முதலில் முடிச்சிட்டு போவோம் " என்ற மாரியம்மா செட்டியார் கடையை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
"செட்டியாரய்யா ..  வயல்வெளி அம்மா அவக புள்ளையை அனுப்பி இருக்காங்க. போன வாரம் வாங்கின நெல்லு மூட்டைக்கான துட்டை நீங்க இன்னிக்கு தர்றதா சொல்லி இருந்தீகளாமே. காசை எடுத்துக் குடுங்க. நான் போய் கடையைப் போடணும்"என்று மாரியம்மா சொன்ன அடுத்த நிமிடமே  பணத்தை எண்ணி ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு அப்புமணியிடம் கொடுத்தார் செட்டியார்.
"அப்பு .. பணத்தை பத்திரமா டவுசர் பையில் வச்சுக்கோ.  வா ... நான் அங்கே கொஞ்சம் தள்ளிப் போய் கடை போடறேன். நீ அந்த மர  நிழலில் உட்கார்ந்திரு" என்று சொல்ல , மரநிழலில் உட்கார்ந்து கொண்டு அங்கு நடப்பதை  வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் அப்புமணி. அவ்வப் போது மாரியம்மா முட்டை வியாபாரம் செய்வதையும் கவனித்துக் கொண்டு இருந்தான். வியாபாரத்தை முடித்த மாரியம்மா, பணத்தை ஒரு அழுக்குத் துணியில் கட்டி அதை  இடுப்பில் மறைத்து வைப்பதையும் கவனித்தான்.
அப்புமணி அருகில் வந்த மாரியம்மா, "வாங்க ... ராசா ... இப்பிடியே போய்க் கறிக்கடையில் கறி வாங்கிட்டு, பிள்ளைகளுக்கு திங்கிறதுக்கு ஏதாது வாங்கிட்டுப் போயிடலாம்" என்று சொல்லியபடி வேகமாக நடக்க ஆரம்பித்தாள்.
அப்போது .. "மாரியக்கா ... அங்கே போறது யாருன்னு பாருங்க.  உங்க புருசன்தான் " என்று சத்தமாக சொல்ல, அதைக் கேட்டு மாரியம்மாவின் கணவன் குடிகார ராசு அவர்களை நோக்கி வந்தான் 
"நீ இங்கேதான் இருக்கிறியா கண்ணு.. உன்னை எங்கெல்லாம் தேடறது ? கையில் இருக்கிற காசை எடு  " என்று மாரியம்மாவிடம் கேட்டான் 
"நான் இன்னிக்கு வியாபாரத்துக்கு வரலே. தெரிஞ்ச ஆளுங்க யாராச்சும் கண்ணில் பட்டால் புள்ளைகளுக்கு ஆக்கிப் போட துட்டைக் கடனா வாங்கிட்டுப் போலாம்னுதான் இங்கே சுத்திட்டு இருக்கேன்" என்றாள் மாரியம்மா 
"மாரியக்கா ... நீ பொய்தானே சொல்றே ? முட்டை வித்த காசை முடிச்சு போட்டு இடுப்பில் வச்சிருக்கே தானே ! உயிரே போற நிலைமை வந்தாக் கூட பொய் சொல்லக்கூடாது " என்று அப்புமணி சொல்ல , "அட .. பாருடா ... இங்கே ... இடுப்பு எப்ப பேங்கா மாறிச்சு ?" என்று கேட்டபடி மாரியம்மா  ஒளித்து வைத்திருந்த பணத்தை பிடுங்கிக் கொண்டு   மதுக் கடையை நோக்கி நடக்க ஆரம்பித்தான் ராசு.
"அடப் பாவி .. இன்னிக்கு வாய்க்கு ருசியா புள்ளைகளுக்கு ஆக்கிப் போட நினைச்சேன். அந்த நினைப்பில் மண்ணள்ளிப் போட்டுட்டியே " என்று கத்திக் கதறி மாரியம்மா அழ ஆரம்பிக்க, அதை அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் அப்புமணி .
--------------------------------------------   தொடரும் ------------------------------    

Tuesday, November 03, 2015

Dear viewers, ARUNA S SHANMUGAM.BLOGGER ல் 
இதுவரை A யிலிருந்து Z வரையிலான  எழுத்துக்களில் தொடங்கும் விதத்தில் 26 புதிர்கள் ( ON-LINE CROSS WORD PUZZLES IN ENGLISH ) வெளியாகியுள்ளன. ஒரு சிலருக்கு இந்தப் புதிர்களை விடுவிப்பது கடினமான முயற்சியாக இருந்திருக்கலாம். நான் ஏற்கனவே சொல்லி யிருக்கிறேன், நான் எழுதும் அனைத்து புதிர்களும் ஏதாவது ஒரு குறிப்பிட்ட சப்ஜெக்டில் அனைத்து கட்டங்களும் நிரம்பும் விதமாக அமைந்துள்ளன என்று.
மேற்சொன்ன 26 புதிர்களும் அமைந்துள்ள விதம் பற்றி விளக்கம் சொல்கிறேன்.: வழக்கமாக ஒரு சொல்லைக் கொடுத்து அதனுடைய அர்த்தம் அல்லது விளக்கம் கேட்பார்கள். எனது புதிர்களில் ஒரு சொல் / வார்த்தைக்கான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. விளக்கத்தைக் கொண்டு அது குறிப்பிடும் சொல்லைக் கண்டுபிடிக்க வேண்டும். இதைப் புரிந்து கொண்டு கட்டங்களை நிரப்ப முயற்சித்தால் புதிர்களை விடுவிப்பது சுலபமாக இருக்கும்.
மீண்டும் முயற்சிக்கவும்