சினிமாக்களிலும் நாடகங்களிலும் நொடிப் பொழுதில் காட்சிகள் மாறுவது போல நிஜ வாழ்விலும் காட்சிகள் நொடிப் பொழுதில் மாறித் தான் போகின்றன. கிட்டத்தட்ட ஏழு நாட்களுக்கு முன் கடலூர் பகுதியின் வெள்ள நிலவரத்தை டீவீயில் பார்த்துக் கொண்டிருந்த நான், அப்போது கொஞ்சங் கூட நினைத்துப் பார்த்திருக்கவில்லை எங்கள் பகுதிக்கும் இப்படியொரு நிலைமை வருமென்று.
இந்த வாரம் பெய்த மழையால் வீட்டை சுற்றி இடுப்பளவு தண்ணீர். வீட்டுக்குள் முழங்கால் அளவு தண்ணீர். எல்லோரும் முன்னெச்சரிக்கை யாக மாடியில் இருந்தோம். மூன்று நாட்களாக கரெண்ட் கிடையாது. (இப்போதுதான் பவர் சப்ளை ஆனது.). வீட்டுக்குள் மழைநீர் நின்றாலும் வீட்டில் குடிக்கத் தண்ணீர் கிடையாது. மழைநீரைப் பிடித்துக் குடித்தோம். ஹெலிகாப்டரில் ரவுண்ட் வந்து உணவுப் பொட்டலங்களை எங்கள் பகுதி யிலிருந்து சற்றுத் தள்ளி இருந்த இடங்களில் வீசினார்கள். ஹெலி காப்டர் கண்ணில் பட்ட போதெல்லாம் "தண்ணீர் தண்ணீர் " என்று நாங்கள் மொட்டை மாடியில் நின்று கொண்டு சைகை காட்டினோம். அவர்கள் எங்களை கண்டு கொள்ளவே இல்லை. பக்கத்து வீட்டு மொட்டை மாடியிலிருந்த ஒருவர் " நீங்க தண்ணீர் என்று சைகை செய்வதை அவர்கள் "சாப்பாடு " என்று நினைத்து அந்த பாக்கெட்டை இங்கே போட்டுவிடப் போகிறார்கள். தண்ணீர் பாட்டிலை கையில் வைத்துக் கொண்டு தூக்கி காட்டுங்கள்" என்று யோசனை சொல்ல அப்படியும் செய்து பார்த்தோம். ஊஹூம் ..... ஹெலிகாப்டர் எங்களை கண்டு கொள்ளவே இல்லை.அவர்கள் யாரையும் நான் குற்றம் சொல்ல வில்லை. அவர்கள் தங்கள் பணியை செய்து கொண்டு தான் இருந்தார்கள். ஒரே நேரத்தில் ஒட்டு மொத்தபகுதியும் பாதிக்கப்படும்போது யாரை யென்று அவர்கள் கவனிக்க முடியும். பால் வண்டி வர முடியாததால் பால் தயிர் கிடையாது. நான் என்னைப் பற்றி என்றுமே கவலைப்பட்டது கிடையாது. வீட்டில் 90 வயதைத் தொட்டுக் கொண்டிருக்கும் அம்மா, வீட்டில் எத்தனை விதமான உணவு வகை இருந்தாலும் இட்லி தோசைக்கும் சாதத்துக்கும் தயிரை மட்டுமே கேட்கும் அம்மா, நிலைமையைப் புரிந்து கொண்டு "எனக்கு தயிர் வேண்டாம். குளிராக இருக்கிறதே. இட்லி மிளகாய்ப் பொடிக்கு எண்ணையே போதும் " என்று சொன்னபோது மனதில் ஒரு வலி. பக்கத்து தெருவில் சிறு குழந்தையின் அழுகுரல். பெரிய குழந்தை என்றால் வீட்டிலுள்ள சாப்பிடும் பொருளைக் கொடுக்க முடியும். பச்சிளங் குழந்தைக்கு கொடுக்க எதுவும் கிடையாது. இரவு வெகுநேரத்துக்குப் பின் படகு வந்து அவர்களை அழைத்து சென்றது.
சென்னையில் சுனாமி பாதிப்பு ஏற்பட்ட போது நானும் என் சகோதரியும், அக்கம் பக்கத்து வீடுகளிலிருந்து போர்வை புடவை துணிமணிகளை கலெக்ட் பண்ணிக்கொண்டு குறைந்தது நூறு பிஸ்கட் பாக்கெட், பன் என்று வாங்கிக்கொண்டு பாதிக்கப் பட்டவர்கள் எங்கெங்கு இருக்கிறார் கள் என்று கேட்டுத் தெரிந்து கொண்டு அங்கு போய்க் கொடுத்து விட்டு வந்தோம். கொடுக்கத்தான் வருகிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்டு நாங்கள் ஆட்டோவிலிருந்து இறங்கும் முன்பாகவே சிலர் ஓடி வந்து எங்கள் கையிலிருந்த துணிகளை பறித்து சென்றார்கள். அவர்கள் நிலையை நினைத்து மனம் அழுதது. இவ்வளவுக்கும் அவர்கள் நேற்று வரை நல்ல நிலையில் இருந்து இயற்கையின் சீற்றத்தால் பாதிக்கப் பட்டு இன்று இந்த நிலையில் இருக்கிறார்களே என்று நினைக்கும் போது மனதுக்குள் ஒரு வலி தோன்றியது.
சிலசமயம் டீவீ நியூஸ்ல் புயல் சூழ்ந்த பகுதியில் மீட்டுக் குழுவினர் உணவுப் பொட்டலங்களை வீச மற்றவர்கள் அதை ஓடி ஓடிப் பிடிக்கும் போது, "எப்பேர்ப்பட்ட வசதி உள்ளவர்களையும் ஒரு நொடிப் பொழுதில் பிச்சைக்காரகள் ஆக்கி ஆண்டவன் வேடிக்கை பார்க்கிறான் " என்று நினைப்பேன்.
ஒரு சில விஷயங்களை நாம் கற்பனை செய்துகூட பார்த்திருக்க மாட்டோம். ஆனால் அது நிஜ வாழ்வில் நடந்து விடுகிறது. எங்கள் பகுதிக்கு படகு வந்து அங்கிருந்து வெளியேற விருப்பப் பட்டவர்களை வெளியிடத்துக்கு கூட்டி சென்றது.. அவர்களைப் பார்க்கும்போது பரிதாபமாக இருந்தது. அந்த உணர்ச்சியில் குறைந்தது 10 பேரையாவது என் வீட்டில் வைத்துப் பராமரிக்க என்னால் முடியும்.. நாங்களே மாடிக்கு எப்போது தண்ணீர் வருமோ தெரியலையே என்ற பயத்தில் இருக்கும் போது எதை நம்பி அவர்களை வீட்டுக்குள் அழைக்கமுடியும். ஏதாவது முகாமுக்குப் போனால் இவர்களுக்கு சாப்பாட்டை ஏதோ ஒரு வகையில் யாரோ ஏற்ப்பாடு செய்வார்கள். இங்கே வந்து நம்மோடு சேர்ந்து தண்ணீர் இல்லாமல் இவர்களும் ஏன் தவிக்க வேண்டும் என்று எனக்கு நானே சமாதானம் சொல்லிக் கொண்டேன்.
எங்கள் பகுதிக்குள் வந்த படகுக்காரர்களிடம் பால் பாக்கெட்டும் தண்ணீர் பாக்கெட்டும் கொண்டு வந்து கொடுத்தால் என்ன பணம் கேட்டாலும் அதை தந்து விடுகிறோம் என்று சொல்லிப் பார்த்தார்கள். "கடை எதுவுமே திறந்திருக்கவில்லையே. நாங்கள் எங்கே போய் வாங்க முடியும்?" என்றார்கள் படகில் வந்தவர்கள். அவர்கள் சொல்வதும் வாஸ்தவந்தான்.
நான், என்னுடைய நெருங்கிய தோழிகளோடு சேர்ந்து வெளியிடங்களில் சாப்பிடும் வேளைகளில் அவர்கள் எல்லாருமே என்னிடம் மட்டும் "அது வேண்டுமா ? இது வேண்டுமா ?" என்று விழுந்து விழுந்து உபசரிப்பார்கள். அதைப் பார்க்கும் சிலர்,"அது என்ன அவங்களுக்கு மட்டும் என்ன ஸ்பெஷல் உபசரிப்பு?" என்று கேட்கும்போது, "நாம நமக்கு வேணுங்கிற தை கேட்டு வாங்கி சாப்பிடுவோம். அவங்க கேட்க மாட்டாங்க . கூச்சப் படுவாங்க" என்று தோழிகள் பதில் சொல்வார்கள். ஹெலிகாப்டரைப் பார்த்து நான் "தண்ணீர்" என்று கேட்டு சைகை செய்தபோது, "அய்யோ .. இந்தக் கண்கொள்ளாக் காட்சியைக் காண நம்ம நட்பு வட்டங்கள் பக்கத்தில் இல்லாமல் போயிட்டாங்களே" என்று வருத்தப்பட்டேன். தாகத்தை அடக்கிக் கொள்ள என்னால் முடியும். அது முடியாதபோது கையில் கிடைக்கிற எந்த நீரும் எனது வாய்க்குள் போய்விடும். அதை யெல்லாம் அம்மாவுக்குக் கொடுக்க முடியாதே என்ற வருத்தம் தான் அதிகம் இருந்தது. இரண்டு நாட்கள் மழைத்தண்ணீர் குடித்து, அதில் சமைத்தோம்.
இரண்டு நாட்கள் பால் இல்லாத காப்பியை அம்மாவுக்கு கொடுத்தாகி விட்டது. இன்றைக்கும் அதே நிலை என்றால் அம்மா தாங்க மாட்டாள் என்ற நினைப்பில் அக்கம் பக்கத்து வீட்டு ஆண்களிடம் "யாராவது வெளியில் போனால் ஒரு பால் பாக்கெட் மட்டும் வாங்கி வாருங்கள்' என்று சொல்லிக் கொண்டிருந்தேன். எனது குரல் கடவுளின் காதில் விழுந்து விட்டது போலும். இன்று ஒரு லாரியில் "ஆரோக்கியா" பால் பாக்கெட்டுகளை எங்கள் பகுதில் இலவசமாக சப்ளை செய்தார்கள். பால் பாக்கெட் கொடுத்த அவர்கள் சாப்பாடு வேண்டுமா என்று கேட்டார்கள். சாப்பாடு வேண்டாம். தண்ணீர் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று நான் சொல்ல, அடுத்த வேனில் அதைக் கொண்டு வருகிறோம் என்றார்கள். எனக்கு இரண்டு பாக்கெட் பால் கிடைத்தபோது, என் கையில் யாரோ கோடி கோடியாகக் காசுகளை கொட்டியது போல இருந்தது. அவர்கள் யார் என்ன என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. கையில் பால் கிடைத்ததும் மற்ற விஷயங்களை கேட்க தோன்றவில்லை. அவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு ஆண்டவன் அருள் பரிபூரணமாகக் கிடைக்கட்டும். சற்று நேரத்திலேயே கரெண்ட் வந்தது. தொட்டிக்கு தண்ணீரை ஏற்றி விட்டோம்.அதை purify பண்ணி குடிக்கவும் ஆரம்பித்து விட்டோம்.
எல்லா இடத்து பாதிப்புகளையும் டீவீ செய்தியில் பார்த்த நான் எங்கள் பகுதி வெள்ள நிலை டீவீயில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்ததை பார்க்க முடியவில்லை. வெளியூர் உறவுகள், உள்ளூர் நட்பு வட்டங்கள் டீவீ நியூஸ் பார்த்துவிட்டு என்னை மொபைலில் தொடர்பு கொண்டு அத்தனை பேரும் கேட்ட முதல் கேள்வி "இப்பத்தான் டீவீயில் பார்த்தோம். நீங்க எல்லாரும் எப்படி இருக்கீங்க .. சாப்பிட்டீங்களா ? " என்பதுதான். இந்த அன்புக்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேன் என்பது தெரிய வில்லை. அத்தனை பேருக்கும் நான் சொன்ன ஒரே பதில், "ருசியாக செய்து சாப்பிட வழியில்லை என்றாலும் பசிக்கு சாப்பிட தேவையான பொருள் இருக்கிறது. காய்கறி இல்லை . ஆனால் அப்பளம் இருக்கிறது. உங்களால் முடிந்தால், மின்சாரம், தண்ணீர், பால் இந்த மூன்றுக்கும் ஏதாவது ஏற்பாடு பண்ணுங்க " என்பதுதான்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்படுவது எனக்கொன்றும் புதிதல்ல. அடைமழை பெய்யும்போதும் கூட டூ வீலரில் ஆபீஸுக்குக் கிளம்பிப் போய்விட்டு இரவில் அதைத் தள்ளியபடி வீடு வந்து சேர்ந்திருக்கிறேன். நான் எழுதி இருந்த எனது புயல்மழை அனுபவம் ஏற்கனவே சுபவரம் பத்திரிக்கையில் வெளியாகி உள்ளது.
ஆனால் நம்மை நம்பி நம்மோடு இருப்பவர்களுக்குத் தேவையானதைக் கொடுக்கவழியில்லாத நிலையில் நாம் இருக்கிறோம் என்று நினைக்கும் போது தான் மழையை சபிக்கத் தோன்றுகிறது.
என்னுடைய well wisher ஒருவர் அடிக்கடி சொல்லும் வார்த்தை, "ஒருத்தருக்கு ஒரு கஷ்டம் வர வேண்டும் என்ற விதி இருந்தால் அது வந்தே தீரும்.அதை யாராலும் மாற்ற முடியாது" என்பார். அது உண்மை தான் என்பதை பல முறை அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறேன்.
மூன்று உதாரணம் சொல்கிறேன். 1 ஒரு ராஜாவின் மகனுக்கு அதாவது ஒரு இளவரசனுக்கு பன்றியால்தான் மரணம் நேரும் என்று ஜோதிடர் சொல்ல, என் மகன் பன்றி இருக்கிற இடத்துக்குப் போக வாய்ப்பே இல்லை. பிறகு எப்படி மரணம் நேரும் என்று கேட்டு கோபப் பட்ட ராஜா அந்த ஜோதிடரை தூக்கில் போடவேண்டுமென்று சொல்ல, அதற்க்கு ஜோதிடர், "நான் குறிப்பிடும் அந்த வயதில் அவர் பன்றியால் மரணமடை யாமல் உயிரோடு இருந்தால் அதன் பிறகு என்னை தண்டியுங்கள்" என்று சொல்ல, ராஜாவும் சம்மதித்து ஜோதிடரை சிறையில் வைத்தார். முடிவில் ஜோதிடர் சொன்னது நடந்தது. அந்த நாட்டுக் கொடியில் உள்ள சின்னம் பன்றி. காற்றில் கொடிக்கம்பு உடைந்து, அரண்மனை மாடியில் விளையாடிக் கொண்டிருந்த இளவரசர் மீது விழ, கொடியிலிருந்த தங்கப் பன்றி இளவரசன் நெஞ்சில் குத்தி அவன் இறந்து போனான்.
2 முன்பொரு முறை புயலால் தனுஷ்கோடி என்ற இடமே அழிந்தது. அந்த சமயம் (மறைந்த ) நடிகர் ஜெமினி கணேஷ் அவர் மனைவி சாவித்திரி மகள் (விஜய சாமுண்டீஸ்வரி என்று பெயர் என்று நினைக்கிறேன்) மூவரும் ராமேஸ்வரம் கோவிலுக்குள் மாட்டிக் கொண்டு வெளியில் வர முடியாத நிலையில் இருந்தார்கள்.அது பற்றி ஒரு பேட்டியில் ஜெமினி கணேஷ், "எங்கள் வீட்டில் எத்தனையோ பேருக்கு தினம் தினம் சாப்பாடு கிடைக்கும். நாங்கள் அன்னம் தண்ணீர் இல்லாமல் தவிக்கும் நாள் ஒன்று வரும் என்று நான் நினைத்தும் பார்த்ததில்லை" என்று சொல்லி யிருந்தார்.
3. விகடன் நிறுவன அதிபர் திரு S S வாசனிடம் யாராவது "உங்கள் மகன் ஒரு நாள் ஜெயிலுக்குப் போவார் " என்று சொல்லியிருந்தால் அப்படி சொன்னவர் ஒரு பைத்தியம் என்று வாசன் முடிவு கட்டியிருப்பார். ஆனால் ஒன்றுமே இல்லாத .... உப்பு சப்பில்லாத ஒரு விஷயத்துக்காக (அட்டைப்பட கார்ட்டூன் விஷயமாக) திரு.பாலசுப்ரமணியன் கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப் பட்டார். அவர் எந்த தவறும் செய்ய வில்லை. ஆனால் அவர் சிறை வாசம் அனுபவிக்க வேண்டும் என்ற விதி இருந்திருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன்.
எந்த ஒரு காரணமும் இல்லாமல் ஏதோ ஒரு வகையில் நான் கஷ்டப் படும் போதெல்லாம் "அருணா ... நீ இதை அனுபவிக்கவேண்டும் என்பது தெய்வத்தின் கணக்கு . மனதை தளர விடாதே " என்று எனக்கு நானே தைரியம் சொல்லிக் கொள்வேன்.
வானத்தில் பறக்கும் ஹெலி காப்டரைப் பார்த்துக் கை காட்டி தண்ணீர் பிச்சை கேட்க வேண்டும் என்ற ஒரு கணக்கை ஆண்டவன் எப்போதோ போட்டு வைத்திருக்கிறான் போலும் என்று நினைக்கும்போது, "இந்த நிலைக்கே நாம சுய பச்சாதாபம் அடைகிறோமே. எல்லாம் இருந்தும் ஏதோ ஒரு காரணத்துக்காக அகதிகளாக வேறோர் இடத்தில் தஞ்சம் அடைபவர்கள் மனநிலை எப்படி இருக்கும் என்பதை நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லையே" என்று எனக்குள் நொந்து கொள்கிறேன்.
No comments:
Post a Comment