Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Sunday, May 29, 2016

குழந்தைகளுக்கான குறுந்தொடர் - 40

                                   
                          அச்சுப்பிச்சு அப்புமணி !
நிவேதிதா பேசுவதைக் கண்ணீருடன் கேட்டுக் கொண்டிருந்த தாத்தாவை பார்த்த காவல்துறை அதிகாரி,"ஸார், கண்ட்ரோல் யுவர் ஸெல்ப். உங்க பேத்திதான் நல்லபடியா வந்து சேர்ந்துட்டாளே " என்றார்.
"எங்க பேமிலி மெம்பெர்ஸ்ம் சரி, நேபர்ஸ்ம் சரி .... நிவேதிதாவை பற்றி பேசும்போதெல்லாம் அவளோடவயசுக்கு மீறிய அறிவையும் பேச்சையும் ரொம்பவே பாராட்டுவாங்க. என்னோட  சன், "டாடி, அவ எனக்கு டாட்டர் மாதிரிலே பிஹெவ்  பண்ணலே. என்னோட க்ரண்ட் மா மாதிரி பேசறா" னு சொல்வார். யாருமே எதிர்கொள்ளத் தயங்குகிற ஒரு விஷயத்தை ரொம்ப பொறுமையா ஹேண்டில் பண்ணி இருக்கிறா. அதை நினைச்சு ஆனந்தக் கண்ணீர் விடறேன் " என்றார் தாத்தா.
"இந்தக் குழந்தைங்க ரெண்டு பேரும் கடைசியா எங்கே இருந்தாங்கன்னு கேட்டு பர்தெரா என்கொயரி பண்ணினா அந்தக் கும்பல் மாட்டிடும். அதற்கான ஏற்பாட்டை நாங்க செஞ்சிட்டோம் " என்றார் அதிகாரி.
அதைக் கேட்டு பதறிப் போனான் அப்புமணி. அதைக் கண்ட நிவேதிதா, "இது...இதுக்காகத்தான் தாத்தா வந்ததும் நான் பேசுவேன்னு சொன்னேன். தாத்தா நாங்க எங்கே இருந்து வந்தோமோ அவங்கதான் எங்களுக்கு சேப் கார்டா இருந்தாங்க. எந்தக் காரணம் கொண்டும் அவங்களை யாரும் தொந்தரவு பண்ணக் கூடாது. நான் கடத்தப்பட்டதா யாரும் கம்ப்ளைன்ட் தராதப்ப இவங்க ஏன் மற்றவங்களை தொந்தரவு பண்ணனும். தாத்தா .. உங்க பவரை யூஸ் பண்ணி நீங்க இதைத் தடுத்து நிறுத்தணும் " என்றாள். சிறிது நேரம் யோசனையில் இருந்த தாத்தா, "தப்பு பண்ணினவனை கைது செய்ய எத்தனையோ சந்தர்ப்பங்கள் கிடைக்கும். இப்போதைக்கு அவங்க மேலே   எந்த நடவடிக்கையும் வேண்டாம் ஸார் " என்றார் ரிக்வெஸ்டாக. 
"அந்த கிரிமினல் சேகரைக் கொண்டு வர அப்பவே ஆள் போயாச்சு. நாங்க என்ன முட்டாளா?" என்று கோபத்துடன் அதிகாரி கேட்க,"ஸார் .. அந்தப் பையன் மேலே ஏதாது தேசத் துரோக வழக்கு இருக்கா ?" என்று கேட்டார் தாத்தா. 
உடனே,அப்புமணிக்கு நண்பனான காவல்துறைஅதிகாரி,"அந்த அளவுக்கு சீரியஸ் கேஸ் எதுவும் இல்லை"  என்றார்.
"அப்படின்னா இப்போதைக்கு அவங்களை விட்டுடுங்க. திருந்த ஒரு சான்ஸ் குடுப்போம். நான் தேவையான பணஉதவி பண்ணி அவனை ஏதாவது ஒரு பிசினெஸ் பண்ண வைக்கிறேன் " என்று தாத்தா  சொல்ல, அதைக் கேட்டு அப்புமணி பூரித்துப் போனான்.
அப்போது அங்கு வந்து நின்ற கான்ஸ்டபில் ஒருவர், ரகசியக் குரலில் அதிகாரியுடன் பேசினார். "அப்படியா!" என்று வியப்புடன் கேட்ட அவர் , 'ஸார்..அந்தப்பையன் சேகர் இதுவரை யாரோ ஒருத்தரை அவனோட பொறுப்பில் வச்சிருந்தானாம். அவருக்கு ஏதோ ஒரு விபத்தில் ஞாபக சக்தி போயிருந்ததாம். இப்போ நினைவு திரும்பி, தான் இன்னார் என்பதை சொல்லிட்டாராம். அவரை அழைச்சிட்டு அந்தப் பையன் வயல்வெளி கிராமத்துக்குப் போயிட்டானாம். அது அப்புமணியோட அப்பாதான்னு அங்கே இருந்த ஒரு லேடி... பேரு தனம்... அவ சொன்னாளாம். " என்றார். அதைக் கேட்டதும் "சின்ன போலீஸ்", "சார் நானும் ஒரு சமயம்  அந்த கிராமத்துக்குப் போயிருந்தேன். அங்கே இருந்த ஒரு வேலைக்காரன் அப்புமணி அப்பா காணாமல் போயிட்டார்னு சொன்னான். எல்லாத்தை யும் கூட்டிக் கழிச்சுப் பார்த்தா, அந்த லேடி சொல்றது சரின்னுதான் தோணுது"என்றவர்,அப்புமணியின் முதுகில் தட்டிக்கொடுத்து உலகத்தை சுத்திப் பார்க்க வந்த நீ, உங்க அப்பா கிடைச்ச சந்தோசத்தோடு உன் ஊருக்குப் போகலாம்" என்றார்.
"அப்படின்னா பொம்மை ராஜாதான் எங்க அப்பாவா?" என்று சந்தோஷ மாகவும், "இனிமே நான் உலகத்தை சுத்திப் பார்க்க வேண்டாமா ?" என்று சோகமாகவும்  கேட்டான் அப்புமணி.
"முட்டாள் மாதிரி பேசாதே. அப்பாவே கிடைச்சாச்சு. அப்புறம் என்னடா உலகம்..பொல்லாத உலகம் வேண்டிக்கிடக்கு? எதற்கும் ஒரு காலம் நேரம் இருக்குது. முதலில் உன்வீட்டுக்குப் போ. நல்லா படி.அப்பாஅம்மாவோடு சந்தோசமா இரு. உனக்கு பாஸ் போர்ட் வாங்க நான் ஏற்பாடு பண்றேன். விசா எல்லாம் ரெடி பண்ணிட்டு நானே உன்னை எங்க வீட்டுக்குக் கூட்டிட்டுப் போவேன்.." என்று அப்புவிடம் சொன்ன நிவேதிதா, "தாத்தா ... நான் சொல்றது சரிதானே ?" என்று கேட்டாள்.
"நீ எது செய்தாலும் அது ரொம்ப சரியாக இருக்கும்" என்று அவளிடம் சொன்ன தாத்தா, 'ஸார் ... நாங்க வர்றோம். உங்களுக்கு ரொம்ப தேங்க்ஸ்  " என்றார் அதிகாரிகளிடம்.
"தாத்தா ... நாம அப்புவை அவன் வீட்டில் கொண்டு போய் விட்டுட்டு அப்புறமா நம்ம வீட்டுக்குப் போகலாம்.. தாத்தா, வயல்வெளி கிராமத்தில் உள்ள லோக்கல் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போன் பண்ணி அப்புமணி பத்திரமா இருக்கிறான்னு அவங்க அம்மாவுக்கு உடனே இன்பார்ம் பண்ண சொல்லுங்க தாத்தா" என்றாள் 
"சுட்டிப் பொண்ணு... நீ சொல்றதுக்கு முன்னேயே ஒவ்வொண்ணும் சரியா நடந்துகிட்டே இருக்குது" என்ற அதிகாரி, "என்ன தத்துப்பித்து.. இனிமே உலகத்தை சுத்திப் பார்க்க தனியா கிளம்பி வரக்கூடாது. அப்பா அம்மா வோடுதான் வரணும்"  என்று சொல்ல "சரி " என்று தலையசைத்தான் அப்புமணி. அடுத்த நொடியே அவர்கள் வயல்வெளி கிராமத்தை நோக்கிப் பறந்தார்கள். அதற்கு முன்பாகவே அப்புமணியும் அவனது அப்பாவும் வருகின்ற  விஷயம் வயல்வெளி கிராமத்துக்கு சென்றடைந்தது.
வழி நெடுக "பொம்மை ராஜாதான் எங்க அப்பாவா! சேகர் அண்ணா ராஜாவை நல்லாபார்த்துக்கிட்டார்தானே?" என்றுநிவேதிதாவிடம் கேட்டு கொண்டே வந்தான்.
திடீரென்று "தாத்தா, சேகர்அண்ணா,அவரோட போகிற அப்புவோட அப்பா அடையாளங்களை சொல்லி ஏதாவது ஒரு செக் போஸ்ட்டில் அவங்களை நிறுத்தி வைக்கச் சொல்லுங்களேன்" என்றாள் நிவேதிதா.
"ஏன்மா ?"
"வயல்வெளி கிராமத்துக்குள் நுழையறப்ப எல்லாரும் சேர்ந்து ஒண்ணா அப்பு வீட்டுக்குப் போகலாம்"
"நல்ல ஐடியா" என்ற தாத்தா, அதற்கான ஏற்பாட்டை செய்தார்.   
வயல்வெளி கிராமமே திருவிழா கோலம் கொண்டிருந்தது. ஒருவரைப் பார்த்து மற்றொருவர், "அப்பு வரப் போறானாமே !" என்று சந்தோஷமாக சொல்லிக் கொண்டார்கள். அப்புவின் நண்பர்களும், ஊரிலுள்ள மற்ற சிறுவர்களும்  "இனிமே நாம அவனைக் கிண்டலோ கேலியோ பண்ணக் கூடாது. அதனாலே தான் அவன் ஊரை விட்டுப் போனான். அவனை நாம் ரொம்பநல்லபடியா பார்த்துக்கணும்" என்று சபதமே எடுத்துக் கொண்டனர் .
பத்து நாட்களுக்கும் மேலாகப் படுக்கையில் இருந்த அம்மா, அப்புவும் அவனது அப்பாவும் வரும் செய்தி கேட்டு, படுக்கையிலிருந்து எழும்பி சிறு பெண் போல ஓடியாடி வேலை செய்ய ஆரம்பித்து விட்டாள். எல்லோரது விழிகளும் பட்டணத்திலிருந்து கிராமத்துக்குள் வரும் பாதை மீதே பதிந்திருந்தது.  
சற்று நேரத்தில் "வந்தாச்சு .... வந்தாச்சு " என்று சந்தோசக் கூச்சல்.
கார் வந்து நின்றதுமே குதித்து இறங்கிய அப்புமணி, "அம்மா" என்று கத்தியபடி ஓடி வந்து அம்மாவைக் கட்டிப்பிடித்தான். அம்மாவோ கதறி விட்டாள்.
"அப்பா.. வெளிநாட்டில் இருக்கிறதா சொன்னீங்க... அவர் சேகர் அண்ணா வோட பொம்மை ராஜாவா இருந்தார் " என்று அப்புமணி சொல்ல, எதுவும் புரியாமல் திகைத்த அம்மாவுக்கு கண்ஜாடை காட்டி "நான் விளக்கமா அப்புறம் சொல்றேன் " என்றாள் நிவேதிதா.
அம்மாவின்கண்கள் அப்புமணியின் அப்பாவை தேடின.காருக்குள்ளிருந்து அவரைக் கைத்தாங்கலாக அழைத்து வந்த சேகர்,"அம்மா உங்க கணவரை உங்ககிட்டே பத்திரமா சேர்த்துட்டேன்" என்றான். 
அந்தஇடம் ரொம்பஅமைதியாக இருந்தது. பேசவேமுடியாத மௌனத்தில் அம்மா அப்பா இருவருமே இருந்தார்கள். பத்துவருடக்கதைகளை பார்வை யிலேயே பேசி முடித்தார்கள். 
கூட்டத்தில் இருந்த ஒரு பெரியவர், 'இத்தனை வருஷம் கழிச்சு ஒரு மனுஷன் திரும்பி வந்திருக்கிறார். முதலில் அவங்க வீட்டுக்கு அவர் போகட்டும்"என்றுசொன்னதும்ஒருசிலர்அங்கிருந்துகிளம்பிப்போனார்கள்.
அப்புமணியின் நண்பர்கள் ஓடிவந்து அவனை அரவணைத்துக் கொண்டார் கள். எல்லோரும் அப்புமணியின் வீட்டுக்குவந்தனர்.
அம்மாவின் உடல்நலன் கருதி அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள், வந்திருந்த அனைவருக்கும் விருந்து படைப்பதில் மும்முரமாக இருந்தார்கள்.  
விசாரிப்பு, விருந்து   எல்லாம் முடிந்து நிவேதிதா தாத்தாவுடன் கிளம்ப தயாரானாள். அதற்கு முன்பாக, "சேகர் அண்ணா.. உங்களுக்கு தாத்தா ஹெல்ப் பண்ணுவார். நீங்க ஏதாவது ஒரு பிசினெஸ் பண்ணி நல்ல நிலைக்கு வரணும் " என்றாள்.
"ஊஹும் .. அண்ணா என்னோடதான் இருப்பார். எங்க அப்பாவோடு சேர்ந்து விவசாய வேலையை பார்த்துப்பார். அப்படிதானே அண்ணா " என்று அப்புமணி கேட்க, கண்களில் கண்ணீர் வர "ஆமாம்" என்று தலையாட்டினான் சேகர். 
"ஓகே..அப்பு.... உன் அண்ணா உன்னோடயே இருக்கட்டும். நாங்க கிளம்ப றோம்.  கூடிய சீக்கிரம் உன்னை எங்க நாட்டுக்கு கூட்டிட்டுப் போய் அதை சுத்திக் காட்டுவேன்... இப்போ பை " என்றாள் நிவேதிதா.
"நீயும் இப்பவே போணுமா ? இங்கேயே இருந்துடேன் "
"என்னோட அப்பா அம்மா என்னைத் தேடுவாங்கதானே. நான் இப்போ போறேன்...அப்புறமா வருவேன்" என்று சொல்லிய நிவேதிதா காரில் ஏறிக் கொள்ள, கார் சென்னை நோக்கிப் பறந்தது.
என்னவென்று சொல்லத்தெரியாத வருத்தம் மனதுக்குள் இருந்தாலும் அதை யாரிடமும் சொல்லாமல், சேகர் அண்ணா, பொம்மை ராஜாவின் கைகளைப் பிடித்தபடி வீட்டுக்குள் வந்தான் அப்புமணி.  இனி அந்த வீட்டில் சந்தோசம் சந்தோஷம் சந்தோசம் மட்டுமே இருக்கும். 
  --------------------------------------- நிறைவுற்றது ----------------------------------------------------                

Sunday, May 22, 2016

குழந்தைகளுக்கான குறுந்தொடர் - 39

அச்சுப்பிச்சு அப்புமணி !
மேலதிகாரியுடன் அறைக்குள் வந்த "சின்ன போலீஷை"ப் பார்த்ததும் அப்புமணி எழும்பி நின்று "நான் .... நான்..." என்றான்.
"நீ தத்துப்பித்துங்கிறதை நான் சொல்லிட் டேன். நீ உட்கார்"என்றார் அப்புமணிக்கு நண்பனாகிப் போன காவல்துறை அதிகாரி.
"ஹாய் ... பேபி... உன்னோட தாத்தா வந்துட்டே இருக்கிறதா தகவல் வந்துது. ஹௌ டூ யூ பீல்? தாத்தா வந்ததும் தான் எதுவும் பேசுவேன்னு சொன்னியாமே ..."என்று சிரித்துக் கொண்டே கேட்டார் அதிகாரி.
பின்பு, "அந்தப் பையன் ஏதோ கொலை செஞ்சதா அவனே  சொல்றான்னு சொன்னீங்களே. அதைப்பத்தி டீடைல்டா விசாரிங்க "அவர் சொல்லும் போதே. "நோ...ஸார்..பரண் மேலே இருந்த ஒரு புக் எடுக்கும்போது அங்கே இருந்த பெட்டி கீழே விழுந்தது. அதனாலே அந்த இடத்தில் படுத்திருந்தவர் தலையில் லேசா காயம். தட்ஸ் ஆல். நொவ் ஹி இஸ் இன் ஆஸ்பிடல் . நோ ப்ராப்ளெம் ஸார். அந்த இடத்தை விட்டு வெளியே வர்றதுக்கு நான் 'அதுஇது'னு சொல்லி அப்புவை கன்ப்யூஸ் பண்ணினேன்" என்று பதில் சொன்னாள் நிவேதிதா.  
"குழந்தைங்க சொல்றது  இருக்கட்டும். அது என்னனு விசாரியுங்க " என்று சொல்லிவிட்டு அங்கிருந்து போனார் மேலதிகாரி.
அதேசமயம் ஆஸ்பத்திரியில் படுக்கையில் இருந்தவரை கொஞ்சமும்  சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தான் சேகர்.
"நான் எங்கே இருக்கிறேன் ? என்னை ஏன் இங்கே படுக்க வச்சிருக்கீங்க  ? என் கங்கு எங்கே? இப்பவே நான் பார்க்கணும்" என்று சொல்லிக் கொண்டு இருந்தார் காயம் பட்டவர்.
"இதோ டாக்டர் வந்துடுவார். அவர்கிட்டே கேட்டுட்டு உடனே உங்களை வயல்வெளி கிராமத்துக்குக் கூட்டிட்டுப் போறேன்" என்று சொன்ன சேகர் டாக்டரைப் பார்க்க அவர் அறைக்கு ஓடினான். சேகர் சொல்வதைக் கேட்ட டாக்டர் வேறு வழியின்றி  பெர்மிஷன் கொடுக்க, திரும்பவும் அறைக்குத் திரும்பி வந்த சேகர், "அண்ணே ... டாக்டர் போக சொல்லிட்டார்.  கால்- டாக்ஸி வர சொல்றேன். உங்க உடம்பு இருக்கிற நிலையில் பஸ் பிரயாணம் சரிப்பட்டு வராது" என்றான்.
'என்னை ப்ளைட்டில் வேணும்னாலும் கூட்டிட்டுப் போ. என்ன செலவானா லும் சரி. நான் குடுத்திடுவேன் "  
"இப்போ அதுவா பிரச்சினை ? உங்க உடல்நிலை ... "
"அதெல்லாம் எதுவுமில்லை. நான் கங்குவைப் பார்க்கணும். என்னோட குழந்தையைப் பார்க்கணும்"என்று பிடிவாதமாக சொல்ல, "இதோ டாக்ஸி கொண்டு வர்றேன்" என்று வெளியில் ஓடிவந்த சேகர், தனத்துக்குப் போன் பண்ணி, "தனம் எங்கிருக்கிறே ?" என்றான்.
"உன் வீட்டாண்டைதான் இருக்கிறேன். இந்தப் பசங்களைக் காணும்ப்பா.. எல்லா இடத்திலும் தேடித்தேடிப் பார்த்துட்டேன். எங்கியும் இல்லேப்பா .. ரெண்டு பசங்க ஆட்டோலே ஏறிப் போனதைப் பார்த்ததா பெட்டிக்கடைக் காரர் சொல்றார்ப்பா" என்று அழும் குரலில் சொன்னாள் தனம்.
"ஓ ... கடவுளே... அப்பு ஒரு அறியாப் பையனாச்சே. அவனை தனியா விட்டது என் தப்புதான். இங்கே அண்ணனுக்கு நினைவு திரும்பிட்டுது. அவர்சொல்ற ஊருபேரு இதையெல்லாம் வச்சுப் பார்க்கிறப்போ அண்ணன் தான் அப்புவோட அப்பாவோன்னு எனக்கொரு டவுட். இப்பப் பார்த்து இந்தப் பையன் எங்கே போனான். சரி ... பிரவீனை விட்டு அவனைத் தேட சொல்றேன்.இப்போ நான் அண்ணனைக் கூட்டிட்டு வயல்வெளி போறேன். அப்பு வந்தால் அவனை பிரவீனோடு சேர்த்து அங்கே அனுப்பு. இப்போ நான் கிளம்பறேன்" என்றான்.
"அந்தப் பொண்ணுப்பா ?" என்று தனம் கேட்க, அப்பு கிடைச்சா அதும் கிடைச்சிடும்" என்று படபடப்பான குரலில் சொல்லிவிட்டு போனைக் கட் பண்ணினான் சேகர். 
கமிஷனர் அலுவலகம் ஒருவித பரபரப்புடன் காணப்பட்டது. கடத்தப்பட்ட தாக சொல்லப்பட்ட பெண், வீட்டில் பத்திரமாக இருப்பதாக செய்தி வந்தது. இப்போது ஒரு சிறுமி வந்து தான்தான் அந்தக் கடத்தப்பட்ட பெண் என்று சொன்னது எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தாத்தா வந்த பிறகு தான் எதையும் பேசுவேன் என்று  நிவேதிதா பிடிவாதமாக இருந்ததால் அங்கிருந்த அனைவருமே அவரின் வருகைக்காகக் காத்திருந்தார்கள். 
அதோ .... இதோ .... என்று அனைவருமே ஒருவித பரபரப்பில் இருக்க நேரம் ஓடிக் கொண்டிருந்தது.
அப்போது, "வந்துட்டார்" என்று காவலர் ஒருவர் ஓடி வந்து செய்தி சொல்ல, அதைக் கேட்டதும் வாசலுக்கு ஓடி வந்த நிவேதிதா, தாத்தாவை கண்டதும் ஓடிப்போய் அவர்கழுத்தைக்கட்டிக்கொண்டு அழ ஆரம்பித்தாள் . அதுவரை அவள் அடக்கி வைத்திருந்த மனஉணர்வுகள் அழுகையாக வெளிப்பட ஆரம்பித்தது. அவள் மனம் விட்டு அழட்டும் என்று நினைத்த தாத்தா அவளது முதுகை மெதுவாக வருடி, 'நீ எப்பேர்ப் பட்ட தைரியமான பொண்ணு. நீ அழலாமா? என் பேத்தி ரொம்பவும் தைரியசாலி, எதையும் துணிச்சலா சந்திக்கும் சாமர்த்தியம் அவளுக்கு உண்டுன்னு நான் எல்லார்கிட்டேயும் சொல்லிட்டு இருக்கிறேன். நீ அழறே?  இதை நான் உன்கிட்டே எதிர்பார்க்கலையே" என்று சிரித்துக் கொண்டே கேட்டார். 
அங்கு வந்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட அதிகாரி, "வாங்க ஸார்.." என்று வரவேற்று உள்ளே அழைத்து வந்தனர்.
அறைக்குள் சென்று அனைவரும் அமர்ந்ததும், "உங்க பேத்தி இங்கே இருக்கிறப்ப, அவ உங்க வீட்டில் இருக்கிறதா சொன்னதுக்கு ஏதாவது காரணம் உண்டா ?" என்று கேட்டார் அதிகாரி.
"நிவேதுவை யாரோ கடத்திட்டுப் போனதா என் சன்னோட பிரெண்ட்ஸ் சொன்னதும்  ரொம்ப அதிர்ச்சியா இருந்துச்சு. தேட ஆரம்பித்தோம். எங்களுக்கு இந்த நாட்டிலும் சரி .. நாங்க இருக்கிற இடத்திலும் சரி, பகையோ எதிரியோ கிடையாது. ஒருவேளை யாராவது பணத்துக்காகக்  கடத்தியிருந்தால் கடத்தல்காரங்க கிட்டே இருந்து ஏதாவது டிமான்ட்ஸ் வந்திருக்கும். அப்படி எதுவும் வரலே. இதற்கிடையிலே மினிஸ்டர் பொண்ணு கடத்தல்னு ஒரு நியூஸ்ம், அது தப்பான நியூஸ்னும் செய்தி வந்துச்சு. அதுக்கும் என் பேத்தி காணாமல் போனதுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமோனு கணக்குப் போட்டுப் பார்த்தேன். யாராவது திட்டம் போட்டுக் கடத்தி இருந்தால் அவங்க குழம்பி போகட்டும்னு நானே ஒரு திட்டம் போட்டு என் பேத்தி எங்க வீட்டில் இருக்கிறதா சொல்லி நியூஸ் குடுத்திட்டு நான் ரகசியமா தேட ஆரம்பிச்சேன். ஒவ்வொரு இடமா தேடி  எங்களுக்குக் கிடைச்ச ஆதாரங்களை வச்சு ஆந்திராவுக்கு வந்தோம். அப்பத்தான் நிவேது அனுப்பின மெயில்  பார்த்தேன். உடனே ஓடி வந்தேன்" என்று விளக்கினார்.
அவர் சொல்வதை அனைவரும் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தனர். "மற்ற விஷயங்களை உங்க பேத்திதான் சொல்லணும். ஆனால் நீங்கள் வந்தபிறகுதான் சொல்வேன்னு அவ பிடிவாதமா இருக்கிறா" என்று போலீஸ் அதிகாரி சொல்ல, "அப்படியா ?" என்பதுபோல தாத்தா, பேத்தியைப் பார்க்க, அவள் அப்புமணியின் முகத்தில் தெரிந்த தவிப்பைப் பார்த்துக் கொண்டிருந்தாள். பின் மெதுவாக தலையசைத்தாள்.அந்தத் தலை அசைப்புக்குள், "உன்னோட அண்ணனை நான் காட்டிக் குடுக்க மாட்டேன்" என்ற உறுதிமொழி இருந்ததை அப்புமணி உணர்ந்தான். 
"பேசும்மா .... நிவேது என்ன நடந்ததுன்னு சொல்லு " என்றார் தாத்தா.
"என்ன தாத்தா நடந்துச்சு ... இராமாயணக் கதைதான் நடந்துச்சு " என்று பதில் சொன்னாள் நிவேதிதா பெரிய மனுஷி போன்ற தோரணையில்.
"புரியலைம்மா ... புரியும்படி சொல்லு "
"தாத்தா நீங்க எனக்கு அடிக்கடி இராமாயணக்கதை சொல்வீங்களே .. அதில் ராமனுக்கு உரிய பதவியை கைகேயி வஞ்சகமா வாங்கி தன்னோட மகன் பரதனுக்குக் குடுக்க நினைச்சா. சில ட்ராமாஸ் அங்கே நடந்துச்சு. ராமன் காட்டுக்குப் போயிட்டார். பின்னாடியே லட்சுமணன் போனான். எந்த மகனுக்காக ஒரு அம்மா ஆட்சியைப் பிடிச்சுக் குடுத்தாளோ அந்த அம்மாவும் வேண்டாம் ஆட்சியும்வேண்டாம்னுட்டு பரதன் போயிட்டான்.  நீங்க எல்லாரும் வேண்டாம்னு தூக்கிப் போட்டதைப் பிடிக்க நான் என்ன மடையனா, எனக்கும் ஆட்சி வேண்டாம்ங்கிற மாதிரி சத்ருக்கனன் போயிட்டான். எனக்குஉனக்கு என்கிற நிலைமாறி, யாருக்கும் வேண்டாம் கிற நிலைமை வந்து கடைசியில் ஒரு பாதுகைதான் அரியாசனத்தில் இருந்துது. அதே மாதிரி மினிஸ்டர் பொண்ணுன்னு நினைச்சு என்னைக் கடத்திட்டு அது நான் இல்லேன்னு தெரிஞ்சதும், தனக்கு நான் தேவை இல்லைன்னு ஒருத்தன் என்னை வேறொருத்தன் கிட்டே விட்டுட்டுப் போயிட்டான். நான் மெண்டல் மாதிரி  ஆக்ட் குடுக்கவும் அவன் என்னை வேறொருத்தன் தலையில் கட்டிட்டான், உனக்கு யூஸ் ஆகும்னா நீ வச்சுக்கோ என்கிற மாதிரி.. இப்படி ஒவ்வொரு இடமா மாறி கடைசியா நான் சென்னை வந்துட்டேன். தாத்தா ... நீங்க அடிக்கடி சொல்வீங்களே, எந்தவொரு நல்லவன் கிட்டேயும் எதோ ஒரு கெட்ட குணம் இருக்கும். மிருகங்கள் கிட்டே கூட எதோ ஒரு நல்ல குணம் இருக்கும்னு . அது உண்மைன்னு நான் தெரிஞ்சுகிட்டேன் தாத்தா. அவங்க என்னை நடத்தியே பல இடத்துக்கு  கூட்டிட்டுப் போனாங்க.. ஆனா ஒருவேளை சாப்பாடாவது போட்டாங்க. பேப்பர்ல என்னென்னவோ நியூஸ் படிக்கிறோம்.  நான் தனியா மாட்டி கிட்டப்ப கூட அவங்க எந்த ராங்க் ஆக்ட்டும்  பண்ணலே தாத்தா " என்று நிவேதிதா சொல்ல, தனது கண்களில் வடிந்த நீரைக் கட்டுப்படுத்தக் கூட முடியாத நிலையில் தாத்தா உட்கார்ந்திருந்தார்.        
----------------------------------------------------------  தொடரும் --------------------------------------       

Wednesday, May 18, 2016

DEAR VIEWERS,

                                       
மரமே.... ஓ ...... மனமே.....!!
அந்தக்காலத்தில் சிறு குழந்தைகளுக்கு தாத்தா பாட்டிக்கள் கதையாக சொல்லும்   விஷயங்களில் ஒன்று, கேட்டதை எல்லாம்     கொடுக்கின்ற  மரம்! (அதென்ன அந்தக் காலத்தில்னு ஒரு ஆரம்பம்னு கேட்கிறீங்களா? இந்தக் காலத்தில் எத்தனை வீடுகளில் தாத்தா பாட்டி இருக்கிறார்கள்? எந்தெந்த ஹோமில் இருக்கிறார்களோ? எந்த தனிக் குடித்தனத்தில் வாடுகிறார்களோ. எல்லோரும் அறிந்த ஒன்றுதானே இது பராபரமே! அப்படியே தாத்தாபாட்டிங்க பேரக்குழந்தைங்களோடு நம்மவீட்டிலேயே இருந்தாலும் அவர்களுக்கு  டீவி சீரியல் பார்க்கவே பொழுது சரியா இருக்கிறப்ப, கதையாவது, அவங்க சொல்றதாவது? அவங்க கதையே பெருங்கதையா இருக்கிறப்போ நாம டிஸ்டர்ப் பண்ணக்கூடாது. அட அதை விடுங்க.. இப்போ உள்ள குழந்தைகள்ல எத்தனை பேருக்கு அதையெல்லாம் கேட்க ஆர்வம் நேரம் இருக்குது. அதுங்க பண்ணின தப்பைக் கண்டுபிடிச்சு, ‘இதை ஏன் பண்ணினே‘னு அவங்க கிட்டே கேளுங்க... நீங்க கற்பனையில் கூட நினைச்சுப் பார்த்திருக்காத லெவலுக்கு புதுப்புதுக் கதைகளை அவங்க உங்களுக்குச் சொல்வாங்க.)
எங்களுடைய சிறு வயதில் எங்கள் வீட்டுக்கு அருகிலிருந்த ஒரு அம்மா தினமும் கதை சொல்லுவாங்க. என்னதான் அவசர வேலை இருந்தால் கூட அதையெல்லாம் கொஞ்ச நேரத்துக்கு ஒத்தி வச்சிட்டு அக்கம்பக்கத்து வீட்டுப் பெரியவங்களே கூட அவங்க சொல்ற கதைகளை உட்கார்ந்து கேட்பாங்க. அவங்க சொன்ன கதைகளில் அடிக்கடி மரங்கள் வரும். அந்த மரங்கள்  பேசும். பாடும். கேட்டதையெல்லாம் தரும். தண்டிக்கும். பயம் காட்டும். அதைக் கேட்டுக்கேட்டு மரங்கள் என்றால் எனக்குரொம்பப் பிடிக்கும். ரொம்பவே  பிடிக்கும். (வேறென்ன பிடிக்கும்னு கேட்கிறீங்களா? மொட்டைமாடியில் பாய் விரித்துப் படுத்துக் கொண்டோ ஈசி சேரில் சாய்ந்து கொண்டோ முழு நிலவைப் பார்த்துக் கொண்டிருப்பது பிடிக்கும். கடல் அலையில் விளையாடப் பிடிக்கும். மணிக்கணக்கில் அருவி நீரில், ஆற்று நீரில் குளிக்கப் பிடிக்கும். மழையில் நனைவது ரொம்ப ரொம்பப் பிடிக்கும். ( ஆனால் உடம்புக்கு கொஞ்சமும் ஒத்துக் கொள்ளாத விஷயம் அது.) அதுவும் மழையில் நனைந்தபடி டூ வீலர் ஓட்டுவது பிடிக்கும். யானைன்னா பிடிக்கும். ஏனென்று தெரியவில்லை, இப்போதெல்லாம் யானையை டீவீயில் பார்த்தால்கூட எதோ ஒரு இனந் தெரியாத பயம் மனதுக்குள் வருகிறது. ஆள் நடமாட்டமில்லாத வனாந்திரப்பகுதியில் ரயில் போவதை, ஏதாவது ஒரு உயரமான இடத்தில் நின்று கொண்டு பார்ப்பது பிடிக்கும். முழுநிலவு நாளில் ஜன்னலோர ஸீட்டில் ரயில், பஸ்ஸில் அமர்ந்து கொண்டு இரவு முழுக்க நிலவைப் பார்த்தபடி பயணிப்பது பிடிக்கும். குழந்தைகளோடு விளையாடுவது, காற்றில் மிதந்து வரும் பாடலை ரசிப்பது .... இதெல்லாமே பிடிக்கும். இப்போ நாம பேசப் போறது மரத்தைப் பற்றி மட்டுந்தான்.)
மரங்கள் நிறைய விஷயங்களைப் பேசுவது போல சிறு வயதிலிருந்தே என் மனதுக்குள் ஒரு பீலிங்க் உண்டு. ஏதோ ஒரு கால கட்டத்தில் நாம் வசித்த இடங்களுக்குப் பிறகொரு நாளில் போகும் சந்தர்ப்பம் வரும் போது அங்குள்ள மரநிழலில் உட்கார்ந்திருந்த,விளையாடிய சம்பவங்கள் தான் அன்றைய  பொழுதுகள்தான் மனதை அதிகம் ஆட்கொள்ளும். நிறைய எழுத்தாளர்கள் அவர்கள் ரசித்த மரங்களைப் பற்றி கவிதை கதைகளாக புத்தகங்களில் பதிவு செய்ததை படிக்கும் போதெல்லாம், "ஓஹோ...இவங்க நம்மகேஸ்" என்று  நினைத்துக் கொள்வேன்.
நான் ஸ்கூல் பைனல் படித்த காலத்தில், ஸ்கூல் தொடங்கி ஆறுமாத காலத்துக்குள் எல்லா  போர்ஷனையும் விரைவாக முடித்து விடுவார்கள் . நாங்கள்  தினமும் ஸ்கூல்க்கு வந்து அட்டெண்டென்ஸ் கொடுத்து விட்டு ஸ்கூல்கேம்பசுக்குள்ளேயே  எல்லாரும் தனித்தனியாக எங்கு உட்கார்ந்து வேண்டுமானாலும் படிக்கலாம்.நானும் எனது நட்புவட்டங்களும் ஸ்கூல் ப்ளே கிரவுண்டில்  உள்ள  மரத்தடி நிழலில்தான் இருப்போம். 
ஆரம்பத்தில் ஒரு அரசு அலுவலகத்தில் நான்  temporary  வொர்க் பண்ணின காலத்தில் நானும் எனது தோழியும் அங்குள்ள மர நிழலில் உட்கார்ந்து தான் சாப்பிடுவோம். அந்த வழியாகப் போகிறவர்கள் வருகிறவர்கள் எல்லோரும், "என்னங்க ... இது... கேண்டீன் இருக்குது. அங்கே போய் சாப்பிடலாம். இல்லாட்டா உங்க ஸீட்டில் உட்கார்ந்து சாப்பிடலாம். என்ன இது மரத்தடி நிழலில் ?" என்று கேட்பார்கள்.
"எங்களுக்குப் பிடிச்சிருக்குது. நாங்கள் இருக்கிறோம் " என்போம்.
ரயிலில் பயணிக்கும்போது மரங்கள் நம்மோடு சேர்ந்து ஓடிவருவதைப் பார்க்கப் பிடிக்கும்.
வெளியூர்களுக்குப் போகும் போது ஊரை, கோவிலை சுற்றிப் பார்த்தபின் அங்கு தென்படும் மர நிழலில் 'அப்பாடா " என்று உட்காருவது பிடிக்கும்.
உங்களில் எத்தனை பேர் கவனிச்சிருப்பீங்கனு தெரியலே. கிராமப்புற எல்லா ரயில் நிலையங்களிலும், நகர்ப் புறங்களில் சில  ரயில் நிலையங் களிலும், பிளாட் பார்மில் வரிசையாக மரங்கள் இருக்கும். அங்கு ஒரு சிமெண்ட் பெஞ்சு இருக்கும். அதில் வயதான ஒரு சிலர் உட்கார்ந்து காற்று வாங்கியபடி அருகில் இருப்பவரிடம் பேசிக்கொண்டிருப்பார்கள். கிராமப் புறவாசிகள் பலருக்கும் ரயில்வே ஸ்டேசன் தான் பொழுது போக்குக்கான இடம். சாயங்காலம் காற்று வாங்க  ரயில்வே ஸ்டேஷனை நோக்கி வந்து விடுவார்கள். அதை ஒட்டிய பகுதிகளில் அதிக பில்டிங்க்ஸ் இல்லாமல் வெட்ட வெளியாக இருப்பதால் அங்கே வீசும் காற்று நம் மனதை வருடிக் கொடுப்பது போல இருக்கும். இப்போதும் நான் தினமும் ரசிப்பது லயிப்பது - கோடம்பாக்கம் ஸ்டேஷனில் ரயில்வே ட்ராக்கை ஒட்டி சில மரங்கள் இருக்கும். ட்ரைனை விட்டு இறங்கி ஸ்டேர் கேஸ் நோக்கி நடக்கும்போது அந்த மரங்களைப் பார்ப்பது, அதிலிருந்து வீசும் காற்றை சுவாசிப்பது, அந்த மரத்திலுள்ள சில பறவைகள் குரல் கொடுப்பதை ரசிப்பது எனது தினசரி நடவடிக்கை.  அதிலிருந்து வரும் காற்று என் மீது படும்போது ஒரு புத்துணர்ச்சியை உணர்வேன். 
திருவிளையாடல் புராணத்தில் வன்னி மரம் சாட்சி சொன்னதாக ஒரு கதை உண்டு.
அந்தமான் போயிருந்தபோது அங்குள்ள ஜெயிலில் ஒளியும் ஒலியும் என்ற நிகழ்ச்சி பார்த்தோம். சுதந்திரப் போராட்டத்தின் போது  கைதான வீரர்கள் பட்ட கஷ்டங்களை ஒளிஒலி நிகழ்ச்சியாக சொல்கிறார்கள். அதைக் கேட்கும் போது பார்க்கும்போது மனதுக்குள் இனந் தெரியாத ஒரு பாரம் ஏறும். நமக்கு அந்தமான் வந்த சந்தோசமே போயிடும். போராட்ட வீரர்கள் பட்ட கஷ்டங்களை அங்கிருந்த ஒரு மரம் சொல்வது போல காட்சியை அமைத்திருக்கிறார்கள். இங்கு நடந்த எல்லா சம்பவங்களை நேரில் பார்த்த ஒரே சாட்சி நான் என்று அந்த மரம் சொல்வது போல காட்சியை முடித்தார்கள்.அதைப்பார்த்துவிட்டு வந்தபின் நிறைய நாட்கள் தூக்கமில்லாமல் தவித்திருக்கிறேன். தனிமையில் அழுதிருக்கிறேன். அந்த அளவுக்கு உணர்ச்சி பூர்வமாக அதை அமைத்திருந்தார்கள்.
இப்போதுங்கூட வெளியூர்ப் பயணங்களின் போது வழியில் தென்படும் மரங்களில் ஊஞ்சல் கட்டி ஆடும் குழந்தைகளைப் பார்க்கும்போது எனக்கு ரொம்பப் பொறாமையாக இருக்கும். 
உங்களுக்கு இந்த மாதிரி அனுபவங்கள் ஆசைகள் உண்டா ? இதுவரை இல்லையா.. பரவாயில்லை. இனிமேல் மரங்களோடு மனம் விட்டுப் பேசிப் பொழுதை இனிதாக்குங்கள்!
( உலகத்தில் உள்ள அத்தனை உயிரினங்களுக்கும் தெரிந்த, ஆனால் இதுவரை அகராதி எழுதப்படாத மொழி எதுன்னு சொல்ல முடியுமா ? அது என்னனு யோசிச்சிட்டே இருங்க. விரைவில்  அதைப் பத்தி பேசுவோம்.)

Sunday, May 15, 2016

குழந்தைகளுக்கான குறுந்தொடர் - 38

                                                 
அச்சுப்பிச்சு அப்புமணி !
ஆட்டோவிலிருந்து குதித்து ஓடி வந்து, "சின்ன போலீஸ் ... நான் ஒரு கொலை பண்ணிட்டேன்" என்று பயத்துடன் சொன்ன அப்புமணியைப் பார்த்து திகைத்துப் போய் நின்றார் அதிகாரி .
"என்ன ... தத்துப்பித்து .... நீ என்ன சொல்றே ?...... நீ கொலை செஞ்சியா!  யாரை? எங்கே ?" என்று அதிர்ந்து போய்க் கேட்டார்.
"ஸார் ... ஐ வில் எக்ஸ்ப்ளைன் ... அதுக்கு முன்னாடி இந்த ஆட்டோ டிரைவருக்குப் பணம் கொடுக்கணும். அவர் கேட்கிறதைக் கொடுங்க.. எங்க தாத்தா வந்ததும் நான் அதை திருப்பித் தந்திடுவேன்" என்றாள் நிவேதிதா .
அப்போதுதான் நிவேதிதாவைக் கவனித்த அவர், "நீ யாரும்மா ?" என்று கேட்டார்.
"அதையெல்லாம் சொல்லத்தான் நான் இங்கே வந்தேன். அப்புமணி என்னோட ப்ரெண்ட்" என்று நிவேதிதா சொல்ல, "அப்படியா ?" என்று கேட்பது போல அப்புமணியைப் பார்த்தார் அதிகாரி.
"ஆம் " என்று தலையசைத்தான் அப்புமணி.
"என்னப்பா... டிரைவர் ... எவ்வளவு தரணும் ?" என்று ஆட்டோக்காரரை அவர்கேட்க, "சாதாரணமா நான் நூத்து ஐம்பது வாங்குவேன். அய்யாவுக் குத் தெரிஞ்ச பசங்கங்கிறதாலே நூறு ரூபா கொடுத்தா போதும் " என்றார் டிரைவர்.
நூறு ரூபாயை எடுத்து ஆட்டோ டிரைவரிடம் நீட்டிய அவர், "வாங்க பசங்களா" என்று இருவரின் தோளின் மீதும் கை போட்டு அணைத்தபடி அலுவலகத்துக்குள் காலியாக இருந்த ஒரு ரூமுக்குள் அவர்களை அழைத்துக் கொண்டு  போனார்.
சல்யூட் செய்து நின்ற காவலரிடம், "மூணு கூல் ட்ரிங்க் வாங்கிட்டு வாப்பா " என்றார். சரி என்று சொல்லி அங்கிருந்து நகர்ந்தார் காவலர்.
"சின்ன போலீஸ்... நான் பொம்மை ராஜாவை கொலை பண்ணிட்டேன்" என்று நடுங்கும் குரலில் சொன்னான் அப்புமணி.
"அப்படியா? அதை பிறகு பேசலாம். முதலில் கூல் ட்ரிங்க் வரட்டும். அதைக் குடிச்சிட்டு அப்புறமா பேசலாம். அதோ அந்த ரூமில் வாஷ் பேசின் இருக்குது. போய் முகம் அலம்பிட்டு ப்ரெஷா வா பார்க்கலாம் " என்றார் அவர்.
அப்புமணி அசையாமல் உட்கார்ந்திருக்க, "எழும்பிப் போ" என்று சைகை செய்தாள் நிவேதிதா. அப்போதும் அவன் மௌனமாக இருக்க, அவன் கைகளைப் பிடித்து இழுத்துக் கொண்டு தண்ணீர்க் குழாய் இருக்கும் இடத்துக்குப் போனாள்.
அப்புமணியின் முகத்தைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது   அவளுக்கு.
"அசடு .... நீ ஒண்ணும் கொலை பண்ணலே ...அடிபட்ட அவருக்கு எதுவும் ஆகிஇருக்காது.உன்னோட அண்ணன்அவரை அழைச்சிட்டு ஆஸ்பத்திரி க்குப் போயிருக்கிறார் தானே ... பிறகு ஏன் பயப்படறே ?" என்று கேட்டாள்.
"அப்படின்னா நான் நிஜமாவே கொலை பண்ணலையா ?"
"நீ எதுவும் பண்ணலே "
"அப்படின்னா நீ ஏன் என்னைப் போலீஸ் கிட்டே போக சொன்னே ?" என்று நடுங்கும் குரலில் கேட்டான் அப்புமணி.
"எல்லாம் நான் தப்பிக்கத்தான் !" என்று கேஷுவலாக பதில் சொன்னாள்  நிவேதிதா.
"என்ன சொல்றே நீ? நீ ஏன் தப்பிக்கணும்? யாருட்டே இருந்து தப்பிக்கணும் ?"
"எல்லாம் உன்னோட அண்ணன் கிட்டே இருந்து தப்பிக்கத்தான். நான் எங்க வீட்டுக்குப் போகணுமுன்னு சொன்னா உங்க அண்ணன் என்னைப் போக விட்டுடுவாரா? அங்கே இருந்து வெளியேற உன்னோட ஹெல்ப் எனக்குத் தேவைப்பட்டுது. கிடைச்ச சந்தர்ப்பத்தை நான் யூஸ் பண்ணிக் கிட்டேன். இனிமே உங்க அண்ணன் வந்தாலும் சரி ... ஆட்டுக்குட்டி வந்தாலும் சரி ... எனக்குப் பயம் கிடையாது "
"அப்படின்னா நீ அண்ணனைப் பத்தி போலீஸ் கிட்டே போட்டுக் குடுப்பியா .  தண்டனை வாங்கிக் குடுப்பியா ?"
"இல்லே... உங்க அண்ணனுக்கு மெடல் வாங்கி தர்றேன்...போதுமா ?" என்றுநிவேதிதாசொல்லிக்கொண்டிருக்கும்போதே,"பசங்களா.. இவ்வளவு நேரம் இங்கே என்ன பண்றீங்க ? ஐயா உங்களை கூப்பிடறார் ... வாங்க" என்று சொல்லியபடி அங்கே வந்தார் கான்ஸ்டபில் ஒருவர்.
"வா ... அப்பு .." என்றபடி அங்கிருந்து ரூமுக்குள் வந்தாள் நிவேதிதா.
"வா ... தத்துப்பித்து... கூல் ட்ரிங்க்  எடுத்துக்கோ ... இந்தாம்மா .... பொண்ணு நீயும் எடுத்துக்கோ... உன் பேர் என்னம்மா ?"
"நிவேதிதா ... ஐ அம்  ப்ரம் அமெரிக்கா "
"இசிட் ... முதலில் குடிங்க...அப்புறம் பேசலாம்." என்றார் அதிகாரி.
கூல்  ட்ரிங்க்கைக் கையில் எடுத்த நிவேதிதா அதை ரசித்து ருசித்துக் குடிப்பதையும், வாயில் வைத்திருந்த கூல் ட்ரிங்க்கை விழுங்கவும் முடியாமல்  துப்பவும் முடியாமல் அப்புமணி தவிப்பதையும் கவனித்தார். ஒருவழியாக அவன் அதைக் குடித்து முடிந்ததும், "இப்போ சொல்லுங்க.. என்ன நடந்தது?" என்று கேட்டு அப்புமணியைக் கூர்ந்து கவனித்தார் அவர்.
"நான் கொலை பண்ணினேனா இல்லையானு எனக்கே தெரியலை" என்று குழப்பமான குரலில் சொன்னான் அப்புமணி.
'நீ சொல்லும்மா..  அமெரிக்காவிலிருந்து வந்திருக்கிறதா சொல்றே ? யாரோட வந்தே? உனக்கு அப்புமணியை எப்படித் தெரியும்.?"
"சில நாட்களுக்கு முன்னாலே ஒரு மினிஸ்டர் மகளைக் கடத்திட்டதா சொல்லி நியூஸ் வந்தது .. அப்புறம் ஒரு வெளிநாட்டு சிறுமி கடத்தப் பட்டதா நியூஸ் வந்துதுதானே ?"
"நியூஸ் வந்தது ... ஆனால் தன்னோட மகள் பத்திரமா இருக்கிறதா மினிஸ்டர் சொல்லிட்டார்.. வெளிநாட்டு சிறுமி தன்னோட பேரண்ட்ஸ் கூட பத்திரமா இருக்கிறதாக மறுப்பு செய்தியும் வந்துச்சே."
"அந்த  வெளிநாட்டு சிறுமி நான்தான் !" என்று நிவேதிதா அமைதியாக சொல்ல அதைக் கேட்டு அதிர்ந்து போனார் அதிகாரி ..
"என்னம்மா....சின்னப்பொண்ணு..அப்புமணிகூட சேர்ந்துகிட்டு எங்கிட்டே காமெடி கீமெடி பண்ணலே தானே  ?" என்று சீரியஸான குரலில் கேட்டார். 
"இல்லே ... ஸார் .. நான் சொல்றது நிஜம். எங்க தாத்தா கூட நான் இந்தியா வந்தேன். திரும்பிப் போயிருந்தா அவரோடுதான் போயிருப்பேன். அப்படி இருக்க நான் வீட்டில்   இருக்கிறதா தாத்தா ஏன் பொய் சொன்னார்ங்கிறது எனக்குப் புரியலே. ஆனா அதுக்குக் கண்டிப்பா ஒரு காரணம் இருக்கும். நான் எங்க தாத்தாவை  உடனே காண்டாக்ட் பண்ணனும் "
"ஓகே.நம்பர் சொல்லும்மா..."
"ஏதாவது முக்கியமான வேலையா இருந்தா தாத்தா போனை ஆப் பண்ணிடுவார். மெயில் அனுப்பினா அவரோட அசிஸ்டன்ட்ஸ் அதை  உடனே பார்ப்பாங்க. தாத்தாவுக்கு இன்பார்ம் பண்ணுவாங்க"
"அப்படியா?' என்று கேட்ட அதிகாரி அவர்களை கம்ப்யூட்டர் ரூமுக்கு அழைத்துச் சென்றார்.
"தேங்க்ஸ்" என்ற நிவேதிதா கம்ப்யூட்டர் முன்பாக உட்கார்ந்து கொண்டு கம்போஸ் பண்ண ஆரம்பித்தாள்.
பிறகு, "ஸார்.. இங்கேயே வெயிட் பண்றேன்... எப்படியும் ரிப்ளை வந்துடும் " என்றாள் நிவேதிதா 
"ஓகே" என்றபடி அங்கிருந்த சேரில் அமர்ந்து கொண்டார் அதிகாரி.
அடுத்த ஐந்து நிமிடங்களுக்குள் ரிப்ளை வந்தது. படித்துப் பார்த்த நிவேதிதா, "எங்க தாத்தா ஆந்திராவில் இருக்கிறாராம். உடனே வர்றதா சொல்லியிருக்கிறார் " என்றாள் சந்தோஷமான குரலில்.
அவளது ஒவ்வொரு அசைவையும் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான் அப்புமணி. "இவ கொஞ்சம் கூட எதுக்கும் பயப்படாமே எவ்வளவு தைரியமா இருக்கிறா " என்று தனக்குள் சொல்லிக் கொண்டான்.
அவர்களைத் தன் ரூமுக்குத் திரும்பவும் அழைத்து வந்த அதிகாரி, "ம் ... சொல்லும்மா ... இவ்வளவு நாளும் எங்கே இருந்தே ?" என்று கேட்டார். அதைக்கேட்டு அப்புமணிக்கு  உள்ளுக்குள் உதறல் எடுத்தது. அண்ணனை காட்டிக் கொடுத்து விடுவாளோ என்ற பயமும் இருந்தது.  உடனே ஓடிப் போய் அண்ணனைக் காப்பாத்தணும்" என்ற நினைப்பில் தவிப்புடன் இருந்தான். இதை நிவேதிதா புரிந்து கொண்டாள்.
"ஸார் .. உங்களோட நான் கோ-ஆப்ரேட் பண்ணலைன்னு நினைக்காதீங்க. எங்க தாத்தா வரட்டும். அவர் வந்ததும் அவர்கிட்டே பேசிட்டு நான் உங்க கிட்டே பேசறேன் " என்றாள் நிவேதிதா.
அவள் சொன்னதைக் கேட்டு, சின்னப் பெண்ணாக இருந்தாலும் இந்தப் பெண் என்ன ஒரு மெச்சூர்டாக இருக்குது என்று மனதுக்குள் வியந்து கொண்ட அதிகாரி, "ஓகே . அவர் வர்ற வரை எங்க வீட்டில் வந்து ரெண்டு பேரும்  இருக்கீங்களா .... இல்லே கெஸ்ட் ரூமில் இருக்கீங்களா?" என்று கேட்டார். 
"நாங்க இங்கேயே இருக்கிறோம் " என்று நிவேதிதா சொல்ல, "குழந்தை ங்களைப்   பத்திரமா பார்த்துக் கொள்ளணும். அவங்க கேட்கிறதை செஞ்சு குடுங்க" என்று காவலர்களிடம் சொல்லிவிட்டு தன்னுடைய   மேலதிகாரி இருக்கும் அறைக்குச் சென்றார் அவர் .  
--------------------------------------------------- தொடரும்--------------------------------------------------

Sunday, May 08, 2016

குழந்தைகளுக்கான குறுந்தொடர் - 37

                                            
                அச்சுப்பிச்சு அப்புமணி !
ஆட்டோ ஓட்டியபடியே முன்பக்கக் கண்ணாடியில், பின் ஸீட்டில் இருக்கும் இருவரையும் கண்காணித்தபடி இருந்தார் ஆட்டோ டிரைவர். இருவர் முகத்திலும் ஒரு வித  படபடப்பு, பயம் இருப்பதுதெரிந்தது.
உடனே வண்டியை போலீஸ் கமிஷனர் ஆபீஸ் இருக்கும்  திசையில்   ஓட்ட ஆரம்பித்தார்.
இந்தக் குழந்தைங்க கையில் பை எதுவும் இல்லே. இறங்கினதும் பணம் குடுப்பாங்களா இல்லாட்டா நமக்கு டாட்டா காட்டிவிட்டு ஓடிடுவாங்களா? எதுக்கும் கொஞ்சம் உஷாரா இருக்கணும் என்று தனக்குள் சொல்லிக் கொண்டார் டிரைவர்.
இதே நேரம் ஆஸ்பத்திரியில் நிலை கொள்ளாமல் தவித்துக் கொண்டு இருந்தான் சேகர். 
"யார் இவர்?. எனக்கும் இவருக்கும் அப்படி  என்ன சம்பந்தம். அவருக்கு ஒண்ணுன்னா எனக்கு உடம்பு பதறுதே ஏன் ? என் சொந்த சகோதரன் போல கிட்டத்தட்ட இவரைப் பத்து வருஷமா என்னோடு வச்சுப் பாது காக்கிறேனே. அது ஏன் ? தண்ணீரில் தத்தளிக்கும் ஒருவன் தனது கையில் ஒரு பாம்பு மாட்டினால் கூட அதைக் கயிறுன்னு நினைச்சுக் கெட்டியாப் பிடிச்சுகிட்டு கரையேற முயற்சி பண்ணுவானே.அதுமாதிரி இல்லாத உறவுகளுக்காக ஏங்கிய நான் இவரைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டேனா ? எனக்கு உறவாக நினைக்க ஆரம்பிச்சிட்டேனா ?"  என்பது போன்ற கேள்விகள் அவனுக்குள் ஓடிக் கொண்டிருந்தது.
"தம்பி" என்ற குரல் அவனை சுய நினைவுக்குக் கொண்டு வந்தது.
"ஏன் தம்பி ... எத்தனைவாட்டிக் கூப்பிடறேன். எந்தக் கோட்டையைப் பிடிக்க  இப்பிடியொரு சிந்தனை? வா ... டாக்டர் உன்னைக் கூப்பிடறார் " என்று சொன்னாள்  தனம் 
உடனே டாக்டர் இருக்குமிடத்துக்கு ஓடிய சேகர் , "ஸார் ... அவருக்குப் பயப்படும்படி எதுவும் இல்லைதானே ?" என்று படபடப்பாகக் கேட்டான்.
"முதலில் உட்காருங்க.. இவரைப் பத்தின டீடைல்ஸ் சொல்லுங்க " என்றார் டாக்டர்.
அதைக் கேட்டு கொஞ்சம் தடுமாறிப் போனான் சேகர்.
அதைக் கவனித்த டாக்டர், "அதை சொல்ல ஏன் இத்தனை டென்ஷன் ?" என்று கேட்டார்.
"அவரைப் பத்தி எதுவும் எனக்குத் தெரியாது .... அதான் ..."
"தெரியாத ஒருத்தரயா நீங்க கொண்டு வந்து அட்மிட் பண்ணுனீங்க ? இவர் எங்காவது நடுவழியில் விழுந்து கிடந்தாரா ?"
"ஆமாம ஸார் ... கிட்டத் தட்ட ஒன்பது இல்லே பத்து வருஷம் முன்னே ஆந்திராவில் ஆள் நடமாட்டம் இல்லாத ரோட்டில் மயங்கிக் கிடந்தார். ரத்த வெள்ளத்தில் சுய நினைவு இல்லாமல் கிடந்தார். வழிலே போன வண்டி ஏதோ ஒண்ணு இவரை அடிச்சுப்போட்டுட்டு திரும்பிப்பார்க்காமே போயிட்டுது   போல. அவரை அப்படியே விட்டுட எனக்கு மனசு வரலே. அவர் பக்கத்தில் ஒரு பையில் பணம் இருந்துச்சு. அந்த பணத்தை வச்சே அவருக்கு நான் வைத்தியம் பார்த்தேன். அப்போ இவருக்கு ட்ரீட்மென்ட் குடுத்த டாக்டர், "இவருக்கு தலையில் பட்ட அடியாலே ஞாபக சக்தி போயிட்டுது. அவர் பேசறதும் கூட முடியாத ஒண்ணுதான். பின்னாலே ஏதாது மிராக்கிள் நடந்து ரெண்டுமே திரும்ப கிடைக்கலாம். அது எப்போ எப்படின்னு சொல்ல முடியாது"னு  சொல்லி இருந்தார். இவர் கடைசியா பேசினது "கங்கு"னு மட்டுந்தான்." என்று சொல்லி முடித்தான்.
"பரவாயில்லே ஸார்... வீட்டில் இருக்கிறவங்களையே பாரமா நினைக்கிற மனுஷங்க இருக்கிற இந்தக்காலத்தில் யாரோ ஒருத்தரை வச்சுப் பாது காக்கிறது ரொம்பப் பெரியவிஷயம் ஸார்.. இப்போ கொஞ்சம் முன்னாலே இவர் கண் திறந்து பார்த்தார்.  வயல் வெளி, கங்கு... கங்குனு சொன்னார். கொஞ்சநேரத்தில் மயக்கமாயிட்டார். நீங்க சொல்றத வச்சுப் பார்த்தா அவருக்குப் பழையநினைவுகள் திரும்ப வந்துட்டுனு நினைக்கிறேன்."
"தேங்க்ஸ் ஸார் ...நீங்க கடவுள் மாதிரி ... இவர் யார்னு தெரிஞ்சு இவரை அவங்க குடும்பத்தில் கொண்டு போய்ச் சேர்க்கணும். பாவம் அந்தக் குடும்பம் எப்படித் தவிச்சுதோ தெரியலே. நான்தான் அநாதையா நடை பிணமாவாழ்ந்திட்டேன்.எனக்கு யாருமில்லே.ஆனா இருக்கிற ஒருத்தரை இழந்துட்டு எந்தக் குடும்பமும் தவிக்கக் கூடாது. "
"சரி .. ரெண்டு நாள் அப்சர்வேஷனில் வச்சுப் பார்ப்போம். கண்டிப்பா ஒரு இம்ப்ரூவ்மெண்ட் இருக்கும். நீங்க எங்கே வொர்க் பண்றீங்க ?"என்று டாக்டர் கேட்க, அதைக் கேட்டுத் திகைத்துப் போன சேகர் அமைதியாக இருந்தான் 
"என்ன ஸார் ? அமைதியாயிட்டீங்க .. நீங்க எங்கே வொர்க் பண்றீங்கனு தானே கேட்டேன் "
சேகர் அமைதியாக இருப்பதைப் பார்த்த தனம், "தம்பி எந்த வேலை கிடைச்சாலும் செய்யும்... இதுஅதுனு எதையும் பிரிச்சுப் பார்க்காது. யாராவது சொல்ற வேலையை செய்யணும். அப்புட்டுத்தான் " என்று சொல்லிச் சமாளித்தாள்.
"ஆம்" என்பது போல தலையாட்டினான் சேகர். "இப்போ நான் அவரைப்    பார்க்கலாமா ? " என்று கேட்டான். 
"பார்க்கலாம்... அவருக்கு எந்தத் தொந்தரவும் இல்லாமே பார்க்கலாம் .. போங்க" என்று டாக்டர் சொல்ல அங்கிருந்து வேகமாக வெளியில் வந்தான் சேகர்.
அதே சமயம், போலீஸ் கமிஷனர் ஆபீசுக்குள் ஆட்டோ நுழையும்போது ஒரு ஜீப்பிலிருந்து குதித்து இறங்கி அசிஸ்டன்ட் கமிஷனர் நடந்து செல்ல அதைப்பார்த்த அப்புமணி, "சின்னப் போலீஸ்" என்று கத்தியபடி ஆட்டோ நிற்கும் முன்பாகவே ஆட்டோவில் இருந்து கீழே குதித்து ஓட, அவனைத் தொடர்ந்து நிவேதிதா ஓட, இவர்களை இருவரையும் துரத்தியபடி "டேய் .. பசங்களா காசு குடுத்துட்டுப் போங்க" என்று சொல்லியபடி ஆட்டோ டிரைவர் ஓடி வந்தார்.  
அப்புமணியின் குரலைக் கேட்டு போலீஸ் அதிகாரி திரும்பிப் பார்க்க, அவரருகில் ஓடிவந்த அப்புமணி, "சின்னப் போலீஸ்..சின்னப் போலீஸ்.. நான் ஒரு கொலை பண்ணிட்டேன்" என்று சத்தமாகக் கத்த, அதைக் கேட்டு ஆபீசரும் ஆட்டோ டிரைவரும் அதிர்ந்து நிற்க, நிவேதிதா தனக்குள் சிரித்துக் கொண்டாள்.
---------------------------------------------------------------  தொடரும் -------------------------------------  

Friday, May 06, 2016

ஒண்ணுமே புரியலே உலகத்திலே !

எனக்கு ஒரு விஷயம் புரியலீங்க !. ( மத்த எல்லாம் புரிஞ்சிருக்கானு தயவுசெய்து யாரும் கேட்காதீங்க.   "உன்னைப் போல ஒரு முட்டாள் ஜென்மத்தை உலகத்திலே எங்கும் பார்க்கமுடியாது!". இது எங்கம்மா எனக்கு அடிக்கடி தருகிற சர்டிபிகேட்  ) 
ஒரு குடும்பம் ஆகட்டும்,ஸ்கூல் ஆகட்டும், சங்கம் ஆகட்டும் .. எதுவாக இருந்தாலும் அங்கே தலைமைப் பொறுப்பில் ஒருத்தங்க இருப்பாங்க. (குடும்பம்னா அப்பா அல்லது அம்மா, ஸ்கூல்னா தலைமையாசிரியர் , சங்கம் என்றால் அங்கே ஒரு தலைவர்) 
இது நாமாக ஏற்படுத்திக் கொண்ட ஒரு சமூக அமைப்பு. தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன்னு ஆடக் கூடாது. ஒரு கட்டுக் கோப்புக்குள் நாம் எல்லாரும் இணைந்து இருக்கவேணும்கிறதுக்காக நாமே ஏற்படுத்திக் கொண்ட அமைப்பு.
தலைமைப் பொறுப்பில் இருப்பவரின் பேச்சைக் கேட்டு அடங்கி நடக்க வேண்டிய அவசியம் மத்தவங்களுக்கு இருக்கிற மாதிரி, தலைமைப் பொறுப்பில் இருக்கிறவங்களுக்குத் தன்னை சார்ந்து நிக்கிறவங்களோட நலனில் அக்கறை காட்ட வேண்டிய பொறுப்பும் இருக்கிறது. நேரம் காலம் தேவை அறிந்து செயல்பட வேண்டிய கட்டாயம் அவங்களுக்கு உண்டு.
அந்தக் காலத்தில் ராஜா தன்னோட பொறுப்பை பலர் கிட்டேயும் பகிர்ந்து கொடுத்திருப்பார். அதே நடைமுறைதான் இப்பவும் இருக்குது ஒருசில மாற்றங்களுடன்.
ஒரு குடும்பத்தின்  தலைமைப்பொறுப்பில் உள்ள அப்பாவோ அம்மாவோ, "உங்களுக்கு நான் அதை செய்தேன்..இதை செய்தேன்" என்று தங்கள் குழந்தைகளிடம்  லிஸ்ட் போட ஆரம்பித்தால் அது மிகப் பெரிய காமெடி. (செய்ய வேண்டியது தன்னோட கடமை என்று அறியாத  ஜென்மங்களை என்னவென்று சொல்வது ?) 
அந்தக் காலத்து  ராஜாவுக்குப் பதிலாக, இந்தக் காலத்தில் மந்திரிகளை நாமதான்  பொறுப்பில் அமர்த்துகிறோம். அந்தப் பொறுப்பை உணர்ந்து இந்த சமுதாயத்துக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து , வேண்டியதை செய்யவேண்டியது இவங்க கடமை.அதுக்காகத்தானே நாம இவங்களைத் தலைமைப் பொறுப்பில் உட்கார வைக்கிறோம். எல்லாவிதத்திலும் முதல் மரியாதையும் சலுகையும் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.
இந்த சமுதாயத்துக்கு அவர்கள் செய்கிற சேவை எல்லாமே நாம கொடுக்கிற வரிப்பணத்தை வச்சுதான். யாரும் அவங்க கைக்காசைப் போட்டு எதுவும் செய்றதில்லே. (நாம குடுத்ததை அவங்க சுருட்டினதுக்கு நிறையவே ஆதாரம் மீடியா வசம் இருக்குது.)
ஆனா, "நான் அதை செய்தேன்.. இதை செய்தேன்"னு ஒவ்வொருத்தரும் போடுகிற லிஸ்டைப் பார்த்தால், "அதையெல்லாம் செய்யவேண்டியது உன்னோட கடமை. அதுக்குத்தான் உன்னைத் தலைமைப் பொறுப்பில் அமர்த்தினோம். அதுக்கான செலவை ஒட்டு மொத்த சமுதாயமே பகிர்ந்து கொள்கிறது " என்ற பதிலை யாருமே முன் வைக்கலியே........அது ஏனுங்க  ?  
(படத்தில் இருக்கிறாப்லே ஆயிரம் கனவுகளோடு இருக்கிறோம்... ஹூம்... என்ன நடக்குதுன்னு பார்ப்போம் )

Sunday, May 01, 2016

குழந்தைகளுக்கான குறுந்தொடர் - 36

   
                                             
 அச்சுப்பிச்சு அப்புமணி !
"என்ன அப்பு, உன்னை புக்ஸ் தானே எடுக்கச் சொன்னேன். பெட்டியை ஏன் இழுத்தே?" என்று கடிந்து கொண்ட சேகர்,"தனம்...தனம்...." எங்கே போய் தொலைஞ்சே?" என்று வாசல் வரை ஓடி வந்து குரல் கொடுத்தான்.
தெரு முனையிலிருந்தபடியே அதைக் கவனித்து விட்ட தனம், "என்னப்பா ... ரேஷன் வாங்கப் போனேன். அங்கே ஒரே கூட்டம். கொஞ்சம் லேட் ஆயிட்டுது..ஏன்.. அப்பு ஏதாது குறும்பு பண்ணினா ?"  என்று கேட்டபடியே ஓடி வந்தாள்.
"ஏதாது ஆட்டோவைக் கூட்டிட்டு வா... ஆஸ்பத்திரிக்குப் போணும் " என்று பரபரப்புடன் சொன்னான் சேகர் 
"என்னப்பா .... யாருக்கு என்ன ?" என்று கேட்டாள் தனம்.
"கேள்வி கேட்காமே சொன்னதை செய் " என்றான் சேகர் கோபமாக. 
அதைக் கண்டு பயந்து போய்"இதோப்பா " என்று சொல்லி கையில் இருந்த பையை வாசலில் வீசிவிட்டு, ஆட்டோ கூட்டிக் கொண்டு வர ஓடினாள்.
அப்புமணியும், நிவேதிதாவும் பயத்தில் உறைந்து போய் ஒரு மூலையில் அடங்கி ஒடுங்கி நின்றார்கள்.
அதைப் பார்க்கும்போது சேகருக்கே மனதை என்னவோ செய்ததது.
அப்புமணி அருகில் வந்து அவன் தலையைத் தடவிக் கொடுத்தபடி, "ஸாரி கண்ணு .... அண்ணனுக்கு அடி பட்டதும் பதறிப் போயிட்டேன். இப்போ அவரை ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போறேன். எல்லாம் சரியாயிடும். நீ பயப்படாதே. அந்தப் பொண்ணு பத்திரம். அதுக்கு  தமிழ் தெரியாது. எங்காவது போயிடாமே பார்த்துக்கோ"என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே, "தம்பி ... ஆட்டோ " என்று வாசலில் நின்று குரல் கொடுத்தாள் தனம்.
"ஆட்டோக்காரரையும் கூட்டிட்டு நீயும் உள்ளே வா. ஆளுக்கொரு பக்கமா  இவரைத் தூக்கினாதான் ஆட்டோவில் ஏத்த முடியும் "
"சரி "
ஒரு வழியாக மூவரும் சேர்ந்து அடிபட்டவரை அழைத்துக் கொண்டு ஆஸ்பத்திரிக்குக் கிளம்பினார்கள்.
ஆட்டோ புறப்படும் சமயத்தில் கூட ,"அப்பு பத்திரம். நீ பயப்படாதே. நாங்க இப்போ வந்துடுவோம்.. நாங்க வர நேரம் ஆயிட்டா நீ சாப்பிடு . அந்தப் பொண்ணுக்கும் என்ன வேணும்னு கேட்டுக்கோ " என்றான் பரபரப்புடன்.
அந்த நல்ல குணம் நிவேதிதாவை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.   
அவர்கள் கிளம்பிப் போய் சில நிமிட நேரம் ஆகியும் எதுவும் பேசாமல் இருவரும் அமைதியாக இருந்தார்கள். 
மௌனத்தைக் கலைக்க நினைத்த நிவேதிதா, "என்ன அப்பு ? பயந்துட்டியா ? அவருக்கு தலையில் லேசா காயம் .... அவ்வளவுதான் ... நீ பயப்படாதே. எல்லாத்தையும் டாக்டர்ஸ் சரி பண்ணிடுவாங்க " என்றாள்.
"பொம்மை ராஜாவுக்கு எதுவும் ஆகாதுதானே ?" என்று நடுங்கிய குரலில் கேட்டான்  அப்புமணி 
"எதுவும் ஆகாது " என்று தைரியம் சொன்னாள் நிவேதிதா 
"அவருக்கு ஏதாது ஆனா, நாந்தான் கொலை பண்ணினேன்னு போலீஸ் என்னை ஜெயிலில் போட்டுடுமா ?" என்று அப்பாவித்தனமாகக் கேட்டான் அப்புமணி.  
அந்த கேள்வி சிரிப்பை வரவழைத்தாலும்,ஒரு நொடிப்பொழுது நேரத்தில் யோசித்துப் பார்த்த நிவேதிதா,"ஒருவேளை போலீஸ் வந்தாலும் வரலாம் " என்றாள் 
"அய்யய்யோ ... அப்படின்னா நான் உலகத்தை எப்படி சுத்திப் பார்க்கிறது ?" என்று கவலையுடன் கேட்டான் 
"போடா ... மண்டு ... அப்போ கூட உலகத்தை  சுத்திப் பார்க்கிறது எப்படினு கவலைப்படறே ... உங்க அம்மாவை நினைச்சு கவலைப்படலே அப்படித் தானே ?"
"ஏய்...போலீஸ் இங்கே வர்றதுக்கு முன்னாடி நாம எங்காது ஓடிப் போயிட லாமா ?"
"எங்கே போறது ? நீயே சொல்லு .... உன் கையில் பணம் இருக்கா ? நாம எங்கே போக முடியும் ?"
"எங்கிட்டே பணம் இல்லே. தனம் வச்சிருப்பா.. எடுத்துக்கலாம் "
"திருட போறியா ?"
"இப்போ நமக்கு காசு வேணும். எடுத்துக்குவோம். அண்ணன் வரவும் சொல்லிடலாம் "
"அண்ணன் வர்றதுக்குள் போலீஸ் வந்துட்டா....?" என்று கேட்டு அப்புமணி முகத்தைப் பார்த்தாள்  நிவேதிதா.
அவன் முகத்தில் பயம் தெரிந்தது. இதைப் பயன்படுத்திக் கொள் என்று நிவேதிதாவின் மைண்ட் வாய்ஸ் சொன்னது.
"அப்பு எனக்கொரு யோசனை "
"சொல்லு "
"போலீஸ் இங்கே வர்றதுக்கு முன்னாடி நாம அங்கே போயிட்டா என்ன ?" என்று நிவேதிதா கேட்க அவளைக் குழப்பத்துடன் பார்த்தான் அப்புமணி.
இவனை இன்னும் குழப்ப வேண்டும் என்று நினைத்த நிவேதிதா, "யெஸ் அப்பு..போலீஸ் இங்கே வந்த பிறகு நாம என்ன சொன்னாலும் அவங்க நம்ப மாட்டாங்க. அதனாலே அவங்க இங்கே வர்றதுக்கு முன்னாடி நாம அங்கே போய் உண்மையை சொல்லிடலாம். வா ... நாம உடனே  போலீஸ் ஸ்டேஷனுக்குப் போகலாம்" என்று சொன்னாள் நிவேதிதா 
"எந்த போலீஸ் கிட்டே ?"
"அதெல்லாம் போற வழியில் பார்த்துக்கலாம் "
சிறிதுநேரம் யோசித்த அப்புமணி,"நாம சின்னபோலீஸ்கிட்டே போலாமா  ?" என்று கேட்டான்.
அவரைப் பற்றி ஏற்கனவே அப்புமணி பேச்சுவாக்கில் நிவேதிதாவிடம் சொல்லி இருந்ததால், "அப்படின்னா உடனே கிளம்பு ... உங்க அண்ணன் வர்றதுக்குள் நாம  இங்கிருந்து போயிடலாம்"என்றுஅவசரப் படுத்தினாள்.
"அண்ணன் வர்றதுக்கு முன்னாடியா ....?" என்று அப்புமணி யோசிக்க, இவனை ரொம்பவும் யோசிக்க விடக்கூடாது என்று முடிவு செய்த நிவேதிதா,"அவர் இங்கே வரும்போதே போலீஷோட வந்துட்டார்னா நாம தப்பிக்கவே முடியாது " என்றாள்.
"சின்ன போலீஷைப் பார்க்க நடந்து போக முடியாது. அது அங்கே  இருக்குது " என்று எங்கோ ஒரு பக்கம் கையைக் காட்டினான் அப்புமணி.
"சரி ... நாம ஆட்டோ பிடிச்சு போயிடலாம் "
"அதுக்குக் காசு "
"அதெல்லாம் வேண்டாம். நாம காசில்லாமே போயிடலாம் "
"நீயென்ன லூஸா ? காசில்லாம ஆட்டோ ஓசியில் வருமா ?"
"அப்பு ... முதலில் நாம் இங்கிருந்து போயிடலாம்.."
"ஆமா... காசில்லாமே போனோம்னா ஆட்டோக்காரன் அதுக்காக நம்மள வேறே போலீஸ் கிட்டே பிடிச்சுக் குடுப்பான்  "
"அப்படி எதுவும் நடக்காது. முதலில் நாம் வெளியே போவோம். ஆட்டோ பிடிப்போம் ... சின்ன போலீஷைப் போய்ப் பார்ப்போம். ஓகேவா?" என்று நிவேதிதா கேட்க அரைகுறை மனதுடன் தலை ஆட்டினான் அப்புமணி .
"அப்பு ... இந்த இடத்தை விட்டு வாசலுக்குப் போன பிறகு, எது நடந்தாலும் அதுக்கு நான் கேரண்டி... நீ பயப்படாமல் வா " என்று தைரியம் சொல்லி   அவனை அங்கிருந்து கிளப்பினாள் நிவேதிதா. இவர்கள் வாசலுக்கு வரவும் அந்தப் பக்கமாக ஒரு ஆட்டோ வரவும் சரியாக இருந்தது
ஆட்டோவை கைகாட்டி நிறுத்திய நிவேதிதா, முதலில் அப்புமணியை வண்டிக்குள் ஏற்றி விட்டாள். அவன் அருகில் உட்கார்ந்து கொண்டு, "போலீஸ் கமிஷனர் ஆபீசுக்குப் போங்க " என்றாள் 
"ஐயோ ..லூஸு ... அவர் சின்ன போலீஸ் " என்று அப்புமணி சொல்ல, "அப்பு .. வில் யூ கீப் கொயெட் .. வாயை மூட்டிட்டு வரணும்... நான் சொல்ற வரை வாயைத் திறக்கக் கூடாது " என்று கடுமையான குரலில் நிவேதிதா சொல்ல, அதைக் கேட்டு அப்புமணி பயந்து போனாலும்,"உனக்கென்ன... ஆட்டோவில் ஏறினதும் பேய்  பிடிச்சிட்டா ... வீட்டுக்குள் நல்லாதானே இருந்தே?" என்று பயந்த குரலில் கேட்டான்.
"நோ மை ஸ்வீட் பாய் ... எனக்கு எதுவும் ஆகலே. வெய்ட் அண்ட் சீ " என்று சொல்ல, "எல்லாரும் என்னைத்தான் லூஸுன்னு சொல்வாங்க. நீ என்னைவிட முழு லூஸா இருக்கிறே" என்று அப்புமணி சொல்ல, அவர்கள் பேசுவதைக் கேட்ட ஆட்டோக்காரர், "என்ன பிள்ளைங்களா ? வீட்டில் பெரியவங்க யாரும் இல்லையா ? தனியா கிளம்பி வந்துருக்கீங்க கையில் காசு பணம் இருக்கா ? என்று கேட்க, "இல்லை "என்று சொல்ல வாயைத்திறந்த அப்புமணியின் வாயைக் கைகளால் மூடினாள் நிவேதிதா .அதை முன்பக்கக் கண்ணாடி வழியே ஆட்டோக்காரரும் பார்த்தார். "ரெண்டு லூசுங்க கிட்டே வந்து மாட்டிக் கிட்டோமோ " என்று அவர் நினைத்தாலும், "சரி.. பக்கத்தில் இருக்கிற அசிஸ்டன்ட் கமிஷனர் ஆபீசுக்குப் போகலாம். அங்கே போய்  என்னதான் நடக்குதுன்னு பார்ப்போம்" என்ற முடிவுடன் வண்டியை அசிஸ்டன்ட்கமிஷனர் ஆபீஸ் இருக்கும் இடத்துக்கு  ஓட்டினார்.
----------------------------------------------------- தொடரும் ---------------------------------------------