Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Sunday, May 08, 2016

குழந்தைகளுக்கான குறுந்தொடர் - 37

                                            
                அச்சுப்பிச்சு அப்புமணி !
ஆட்டோ ஓட்டியபடியே முன்பக்கக் கண்ணாடியில், பின் ஸீட்டில் இருக்கும் இருவரையும் கண்காணித்தபடி இருந்தார் ஆட்டோ டிரைவர். இருவர் முகத்திலும் ஒரு வித  படபடப்பு, பயம் இருப்பதுதெரிந்தது.
உடனே வண்டியை போலீஸ் கமிஷனர் ஆபீஸ் இருக்கும்  திசையில்   ஓட்ட ஆரம்பித்தார்.
இந்தக் குழந்தைங்க கையில் பை எதுவும் இல்லே. இறங்கினதும் பணம் குடுப்பாங்களா இல்லாட்டா நமக்கு டாட்டா காட்டிவிட்டு ஓடிடுவாங்களா? எதுக்கும் கொஞ்சம் உஷாரா இருக்கணும் என்று தனக்குள் சொல்லிக் கொண்டார் டிரைவர்.
இதே நேரம் ஆஸ்பத்திரியில் நிலை கொள்ளாமல் தவித்துக் கொண்டு இருந்தான் சேகர். 
"யார் இவர்?. எனக்கும் இவருக்கும் அப்படி  என்ன சம்பந்தம். அவருக்கு ஒண்ணுன்னா எனக்கு உடம்பு பதறுதே ஏன் ? என் சொந்த சகோதரன் போல கிட்டத்தட்ட இவரைப் பத்து வருஷமா என்னோடு வச்சுப் பாது காக்கிறேனே. அது ஏன் ? தண்ணீரில் தத்தளிக்கும் ஒருவன் தனது கையில் ஒரு பாம்பு மாட்டினால் கூட அதைக் கயிறுன்னு நினைச்சுக் கெட்டியாப் பிடிச்சுகிட்டு கரையேற முயற்சி பண்ணுவானே.அதுமாதிரி இல்லாத உறவுகளுக்காக ஏங்கிய நான் இவரைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டேனா ? எனக்கு உறவாக நினைக்க ஆரம்பிச்சிட்டேனா ?"  என்பது போன்ற கேள்விகள் அவனுக்குள் ஓடிக் கொண்டிருந்தது.
"தம்பி" என்ற குரல் அவனை சுய நினைவுக்குக் கொண்டு வந்தது.
"ஏன் தம்பி ... எத்தனைவாட்டிக் கூப்பிடறேன். எந்தக் கோட்டையைப் பிடிக்க  இப்பிடியொரு சிந்தனை? வா ... டாக்டர் உன்னைக் கூப்பிடறார் " என்று சொன்னாள்  தனம் 
உடனே டாக்டர் இருக்குமிடத்துக்கு ஓடிய சேகர் , "ஸார் ... அவருக்குப் பயப்படும்படி எதுவும் இல்லைதானே ?" என்று படபடப்பாகக் கேட்டான்.
"முதலில் உட்காருங்க.. இவரைப் பத்தின டீடைல்ஸ் சொல்லுங்க " என்றார் டாக்டர்.
அதைக் கேட்டு கொஞ்சம் தடுமாறிப் போனான் சேகர்.
அதைக் கவனித்த டாக்டர், "அதை சொல்ல ஏன் இத்தனை டென்ஷன் ?" என்று கேட்டார்.
"அவரைப் பத்தி எதுவும் எனக்குத் தெரியாது .... அதான் ..."
"தெரியாத ஒருத்தரயா நீங்க கொண்டு வந்து அட்மிட் பண்ணுனீங்க ? இவர் எங்காவது நடுவழியில் விழுந்து கிடந்தாரா ?"
"ஆமாம ஸார் ... கிட்டத் தட்ட ஒன்பது இல்லே பத்து வருஷம் முன்னே ஆந்திராவில் ஆள் நடமாட்டம் இல்லாத ரோட்டில் மயங்கிக் கிடந்தார். ரத்த வெள்ளத்தில் சுய நினைவு இல்லாமல் கிடந்தார். வழிலே போன வண்டி ஏதோ ஒண்ணு இவரை அடிச்சுப்போட்டுட்டு திரும்பிப்பார்க்காமே போயிட்டுது   போல. அவரை அப்படியே விட்டுட எனக்கு மனசு வரலே. அவர் பக்கத்தில் ஒரு பையில் பணம் இருந்துச்சு. அந்த பணத்தை வச்சே அவருக்கு நான் வைத்தியம் பார்த்தேன். அப்போ இவருக்கு ட்ரீட்மென்ட் குடுத்த டாக்டர், "இவருக்கு தலையில் பட்ட அடியாலே ஞாபக சக்தி போயிட்டுது. அவர் பேசறதும் கூட முடியாத ஒண்ணுதான். பின்னாலே ஏதாது மிராக்கிள் நடந்து ரெண்டுமே திரும்ப கிடைக்கலாம். அது எப்போ எப்படின்னு சொல்ல முடியாது"னு  சொல்லி இருந்தார். இவர் கடைசியா பேசினது "கங்கு"னு மட்டுந்தான்." என்று சொல்லி முடித்தான்.
"பரவாயில்லே ஸார்... வீட்டில் இருக்கிறவங்களையே பாரமா நினைக்கிற மனுஷங்க இருக்கிற இந்தக்காலத்தில் யாரோ ஒருத்தரை வச்சுப் பாது காக்கிறது ரொம்பப் பெரியவிஷயம் ஸார்.. இப்போ கொஞ்சம் முன்னாலே இவர் கண் திறந்து பார்த்தார்.  வயல் வெளி, கங்கு... கங்குனு சொன்னார். கொஞ்சநேரத்தில் மயக்கமாயிட்டார். நீங்க சொல்றத வச்சுப் பார்த்தா அவருக்குப் பழையநினைவுகள் திரும்ப வந்துட்டுனு நினைக்கிறேன்."
"தேங்க்ஸ் ஸார் ...நீங்க கடவுள் மாதிரி ... இவர் யார்னு தெரிஞ்சு இவரை அவங்க குடும்பத்தில் கொண்டு போய்ச் சேர்க்கணும். பாவம் அந்தக் குடும்பம் எப்படித் தவிச்சுதோ தெரியலே. நான்தான் அநாதையா நடை பிணமாவாழ்ந்திட்டேன்.எனக்கு யாருமில்லே.ஆனா இருக்கிற ஒருத்தரை இழந்துட்டு எந்தக் குடும்பமும் தவிக்கக் கூடாது. "
"சரி .. ரெண்டு நாள் அப்சர்வேஷனில் வச்சுப் பார்ப்போம். கண்டிப்பா ஒரு இம்ப்ரூவ்மெண்ட் இருக்கும். நீங்க எங்கே வொர்க் பண்றீங்க ?"என்று டாக்டர் கேட்க, அதைக் கேட்டுத் திகைத்துப் போன சேகர் அமைதியாக இருந்தான் 
"என்ன ஸார் ? அமைதியாயிட்டீங்க .. நீங்க எங்கே வொர்க் பண்றீங்கனு தானே கேட்டேன் "
சேகர் அமைதியாக இருப்பதைப் பார்த்த தனம், "தம்பி எந்த வேலை கிடைச்சாலும் செய்யும்... இதுஅதுனு எதையும் பிரிச்சுப் பார்க்காது. யாராவது சொல்ற வேலையை செய்யணும். அப்புட்டுத்தான் " என்று சொல்லிச் சமாளித்தாள்.
"ஆம்" என்பது போல தலையாட்டினான் சேகர். "இப்போ நான் அவரைப்    பார்க்கலாமா ? " என்று கேட்டான். 
"பார்க்கலாம்... அவருக்கு எந்தத் தொந்தரவும் இல்லாமே பார்க்கலாம் .. போங்க" என்று டாக்டர் சொல்ல அங்கிருந்து வேகமாக வெளியில் வந்தான் சேகர்.
அதே சமயம், போலீஸ் கமிஷனர் ஆபீசுக்குள் ஆட்டோ நுழையும்போது ஒரு ஜீப்பிலிருந்து குதித்து இறங்கி அசிஸ்டன்ட் கமிஷனர் நடந்து செல்ல அதைப்பார்த்த அப்புமணி, "சின்னப் போலீஸ்" என்று கத்தியபடி ஆட்டோ நிற்கும் முன்பாகவே ஆட்டோவில் இருந்து கீழே குதித்து ஓட, அவனைத் தொடர்ந்து நிவேதிதா ஓட, இவர்களை இருவரையும் துரத்தியபடி "டேய் .. பசங்களா காசு குடுத்துட்டுப் போங்க" என்று சொல்லியபடி ஆட்டோ டிரைவர் ஓடி வந்தார்.  
அப்புமணியின் குரலைக் கேட்டு போலீஸ் அதிகாரி திரும்பிப் பார்க்க, அவரருகில் ஓடிவந்த அப்புமணி, "சின்னப் போலீஸ்..சின்னப் போலீஸ்.. நான் ஒரு கொலை பண்ணிட்டேன்" என்று சத்தமாகக் கத்த, அதைக் கேட்டு ஆபீசரும் ஆட்டோ டிரைவரும் அதிர்ந்து நிற்க, நிவேதிதா தனக்குள் சிரித்துக் கொண்டாள்.
---------------------------------------------------------------  தொடரும் -------------------------------------  

No comments:

Post a Comment