Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Thursday, August 31, 2017

வேண்டாமே வேறு பவித்ரா ...(30)

Image result for cartoon of tamilnadu village man working in paddy field
"சரிதான்.. அண்ணன் உங்ககிட்டே எதையும் சொல்லலே.. நான் ஒத்துக்கிறேன். அண்ணன் பவியை அவர் வீட்டில்தானே தங்கி இருக்கச்சொன்னார். ஆனா பவி எங்கோ ஒருமூலையில் ஒருகுடிலை போட்டுக்கிட்டு சந்நியாசி மாதிரி தனியா  இருக்கிறதுக்கு என்ன காரணம் ?"
"......................."
"ஏங்க.. உங்களைத்தான் கேக்கிறேன் .. என்ன காரணம் ?"
"...................."
"இதோ பாருங்க.. நீங்க பதில்சொல்லாமே அமைதியா இருக்கிறதைவச்சே இது பத்தின  விவரம் உங்களுக்குத் தெரியுங்கிறது எனக்கு தெரிஞ்சு போச்சு. இந்த விஷயம்...ஐ மீன்...பவித்ரா இங்கே தங்கி இல்லைங்கிறதாவது அண்ணனுக்கு தெரியுமா ?"
"தெரியாது "
இதைக் கேட்டதும் பிரபுவின் கோபம் எல்லை மீறியது.
"வாட் நான்சென்ஸ் .. உங்களை நம்பி ஒருத்தர் ஒரு பொருளை உங்ககிட்டே கொடுத்திருக்கிறார். அது உங்க கையை விட்டுப்போயிடுச்சு. ஆனா அதை நீங்க சம்பந்தப்பட்டவங்க கிட்டே சொல்லலே. இதை இப்பவே அண்ணனுக்கு போன் பண்ணி சொல்லுட்டுமா நான் ?"
"தம்பி .. அந்தப்பொண்ணு தனியா பிரிஞ்சு போனதுக்கு எங்க வீட்டு சண்டாளன் தான் காரணம் "
"யாரு? முருகய்யனா? அந்தராஸ்கல் என்ன பண்ணினான் அவங்க இங்கிருந்து கிளம்பிப் போகிற அளவுக்கு ?"
"தம்பி.. நடந்த எதையும் யாரிட்டயும் சொல்லக்கூடாது.. அப்படி சொல்லி, அது விஷயமா யாராவது ஏதாவது எங்கிட்டே கேட்டால் நான் இங்கிருந்து கிளம்பிப் போயிடுவேன். எங்கே போறேன்னு யாரிட்டயும் சொல்லமாட்டேன்னு அந்தப்  பொண்ணு சொல்லி இருக்குது தம்பி "   
"அதையெல்லாம் நான் பாத்துக்கிறேன்.. என்ன நடந்ததுங்கிறதை மட்டும் நீங்க இப்போ சொல்லுங்க.. டில்லியிலிருந்து வந்து பவித்ரா இங்கேதானே தங்கி இருந்தாங்க. அதிலிருந்து விவரமா சொல்லுங்க..."
"கிட்டத்தட்ட ஏழு எட்டு வருஷத்துக்கு முன்னால் ஒருநாள் ஷோபா அம்மா இந்த பவித்ராவைக் கூட்டிட்டு இங்கே வந்தாக. அப்போ இந்த பொண்ணுக்கு பதினாலு இல்லாட்டா பதினஞ்சு வயசு இருக்கும்யா.. ஆனா வயசுக்கு மீறின வளர்ச்சியா பார்க்கிறதுக்கு ரொம்ப அழகா நல்லா தளதளன்னு இருக்கும்யா . அதை  பா ர்த்துப்புட்டு  இங்கிட்டு இருக்கிற ஜனம் மொத்தமும் மூக்கு மேலே விரலை வச்சுது , இம்புட்டு அழகானு !"
"..................!"
"ஷோபா அம்மா ஒரேயொரு நாள்மட்டும் இங்கிட்டு தங்கி இருந்தாக. என்னையும் மாமாவையும் கூப்பிட்டு 'இது எங்க வீட்டுப்பொண்ணு.. கொஞ்ச நாளைக்குபட்டணத்தைவிட்டு ஒதுங்கிஇருக்கணும்னு நினைக்குதுனு ஷோபா அம்மா சொன்னாக. 
உடனே மாமாகூட 'ஏம்மா அப்படி?'னு கேட்டாக.
"இந்தப் பொண்ணோட அப்பா திடீர்னு இறந்து போயிட்டார். அதைத் தாங்கிக்க முடியாமே தற்கொலை பண்ணிக்கப்போறேன்னு சொல்லிட்டு என்னென்ன முட்டாள்தனம் உண்டோ அதையெல்லாம் செய்ய ஆரம்பிச்சிட்டா. இப்போ இவளுக்கு தேவை நல்ல ரெஸ்ட்தான். எந்த தொந்தரவும் இல்லாமே இயற்கை யான சூழ்நிலையில் கொஞ்சநாள் இருந்தாலே போதும்.. எல்லாம் சரியாயிடும் கவனமா பார்த்துக்கணும்னு டாக்டர் சொல்லி இருக்கார். அதனால்தான் உங்க குமார் அய்யா இவளை இங்கே கொண்டுபோய் விட்டுட்டு வந்திடுனு சொல்லி என்னை அனுப்பினார்  பொண்ணு ரொம்பவும் பெரியஇடம். ரொம்ப ஜாக்கிரதை யா பார்த்துக்கணும். இந்தப்பொண்ணுக்கு இங்கே ஏதாவது பிரச்னைனு எங்க காதுக்கு கம்பளைண்ட்னு  வந்தா நீங்க ரெண்டுபேரும் தொலைஞ்சீங்க. அதை மட்டும் ரெண்டுபேரும் நல்லா நினைவில் வச்சுக்கோங்கன்னு சொன்னாங்க. இதை எல்லாம் நீங்க சொல்லணுமா அம்மா.. நீங்களே கூட்டிட்டு வந்திருக்கி றத வச்சேஇந்தப்பொண்ணு உங்களுக்கு எம்புட்டு வேண்டியவகனு எங்களுக்கு தெரியாதா என்ன.. எங்க கண்ணுக்குள்ளே வச்சு பாதுகாப்போம்னு சொல்லி அவகளை வழியனுப்பி வச்சோம்"
"ரொம்ப நல்லா பாதுகாத்தீங்க" என்று சிரித்துக் கொண்டே சொன்னான் பிரபு .
"தம்பி..ஒரு சைடை மட்டும் பார்த்துட்டு எங்க மேலே பழி சொல்லக்கூடாதுங்க சாமி சத்தியமா எனக்குத்தெரிஞ்ச எல்லாவிவரத்தையும்  சொல்லிப்புடுதேன்   நான். அதுக்கு பிறகு எங்கே தப்பு, யார் மேலே தப்புனு நீங்களே சொல்லுங்க "
"சரி.. நீங்க சொல்லி முடிங்க.. நான் உங்களை ரொம்பவும் நம்பறேன் " 
"பவிம்மா மொதமொதலா இந்த ஊருக்கு   வந்தப்ப நாங்க எல்லாருமே அவகள தள்ளியே நின்னுதான் வேடிக்கை பார்ப்போம்.  ரொம்ப அழகானபொண்ணு.. அதுவும் பெரிய   இடத்துப்பொண்ணு  .. நம்மள கிள்ளுக்கீரையா நினைக்கும்னு நினைச்சு நாங்க தள்ளியே நிப்போம். ஆனா அதுக்கு கொஞ்சம் கூட கர்வம் கிடையாது..  "
"................!!"
"ஆனா அதுவே வலியவந்து எல்லாரிட்டேயும் பேசும். பழகும். தலைக்கனம் கொஞ்சங்கூட கிடையாது. எல்லாரிட்டேயும் தாயா பிள்ளையா பழக ஆரம்பி எல்லாரையும் அது பேச்சை கேக்கும்படி வச்சிட்டுது.  செலவு செய்ய அஞ்சவே செய்யாது. யாருக்கு என்னென்ன தேவைன்னு கேட்டு அதுவே வாங்கியாந்து தரும். சமையல் குறிப்பு புஸ்தகத்தை வாங்கிட்டு வந்து எங்க எல்லாருக்கும் எதையாவது செஞ்சு தரும் .. அது வந்ததுக்குப் பொறகு வந்ததுதான் இந்த கேஸ் அடுப்பு.. அதுக்கு முன்னாடி வரை இப்படியெல்லாம் அடுப்பை யாரும் இங்கே கொண்டாறலே. ஷோபா அம்மா, குமார் ஐயா வரும்போதெல்லாம் என்னோட சமையல்தான் .. குளிக்க அருவிக்கரைக்கு காரை எடுத்துட்டுப் போயிடுவாங்க ரெண்டு பேரும் . குடிக்க வெந்நீர் வச்சு தர்றது, சமைக்கிறது, பால் காய்ச்சி குடுக்கிறது எல்லாமே என் வீட்டில் விறகு அடுப்பில்தான்"      
"ஓஹோ.. நல்லா சமையல் பண்ணுவாங்களா ?"
இதைக்கேட்டதும் வள்ளி சிரித்தாள்.
"நான் கேட்ட கேள்விக்கு பதிலை சொல்லிட்டு சிரிச்சா நல்லா இருக்கும்!" என்றான் பிரபு.
"புஸ்தகத்தைகையில்வச்சுக்கிட்டு 'இதை படிச்சுப்பார்த்துட்டு இன்னிக்கு உங்க எல்லாருக்கும் மைசூர்பாகு பண்ணித்தர்றேன்னு' சொல்லும். உடனே மாமா, 'நான் இப்பவே போய் மருந்துக்கடைக்குப்போய் பேதி மாத்திரை வாங்கி கை இருப்பில வச்சிடுதேன்'னு கிண்டலா சொல்லுவாக. கொஞ்சநேரம் கழிச்சு கையில் ரெண்டு டம்ளரும் ஸ்பூனுமா வரும்.. இதை சாப்பிட்டு பார்த்துட்டு எப்படி இருக்குனு சொல்லுங்கன்னு சொல்லும். 
'என்னம்மா .. மைசூர்பாகு பண்ணித்தர்றேன்னு சொன்னீக.. உங்க டில்லியில் மைசூர்பாகை டம்ளரில் போட்டுதான் ஸ்பூனால் சாப்பிடுவார்களா?'னு மாமா கேட்பாக. 
கொஞ்சம் வாட்டர் அதிகமாயிடுச்சு. அதான் மைசூர்பாகு, பாயாசமா ஆயிட்ட மாதிரி தெரியுது...  ப்ளீஸ் சாப்பிடுங்க அங்கிள்னு கெஞ்சும்.  அப்புறம் கொஞ்ச நாள்லே ரொம்ப நல்லா சமைக்க கத்துக்கிட்டுது.. விதம்விதமா பலகாரம் பண்ணி அதை எடுத்துக்கிட்டு களத்துமேட்டுக்கு கொண்டு போகும். அங்கே வேலை பண்ணிட்டு இருக்கிறவங்களைக் கூப்பிட்டு நீங்க சாப்பிடுங்கனு உபசரிக்கும். அதுக்கு கைவஞ்சனை கிடையாது. எது பண்ணினாலும் அதை அங்கிட்டு இருக்கிற அத்தனை பேருக்கும் குடுத்திட்டுதான் இது வாயிலே வைக்கும்.  
அய்யா .. அது வீட்டிலே அது சமையல்கட்டு பக்கம் போனதே கிடையாதாம். எல்லாத்துக்கும் வேலைக்கு ஆளுங்க  இருக்கிறாகளாம். இங்கிட்டு வந்த பிறகு தான்  அது அடுப்படின்னா என்னனு தெரிஞ்சுகிட்டுது. நான் விறகு அடுப்பில் சமையல் செய்றத பார்த்துட்டு விழுந்து விழுந்து சிரிக்கும். 
'ஏன் சிரிக்கீங்கம்மா'னு கேட்பேன். ரெண்டு ஸ்டிக்கை வச்சு நெருப்பை வச்சு அது மேலே பானையை வைக்கிறீங்க. ஆனா மீல்ஸ் ரெடி ஆயிடுது. ரொம்ப ஆச்சரியமா இருக்குதுனு சொல்லும்..இப்போ என்னடான்னா அது பண்ற சமையலை மிஞ்ச இங்கிட்டு யாருமில்லே. ரெண்டுமூணு வருஷத்துக்கு முன்னே குமார் ஐயா ஷோபாம்மா, அவங்க குழந்தை எல்லாரும் இந்த வீட்டுக்கு வந்து பத்துநாள் தங்கி இருந்தாங்க. பத்துநாளும் பவிம்மா விதம் விதமா சமையல் செய்து குடுத்தாங்க. அதைப்பார்த்துட்டு ரெண்டுபேரும் அசந்து போயிட்டாங்க..'வாயாடி பவித்ராவுக்கு கையும் நல்லாவே சமையலில் விளையாடுது'னு சொல்லிட்டு ஷோபாம்மா அப்படியே அதைக்கட்டிப்பிடிச்சு முத்தம்  குடுத்தாங்க .
அட இம்புட்டு ஏன் ! யார் எது குடுத்தாலும் அதுக்கு ஆயிரம் குத்தம் சொல்லுத என் மாமனே, 'பவிம்மா... இன்னிக்கு என்ன பண்ணினே?'னு கேட்டு வாங்கி சாப்பிடுவாகன்னா பார்த்துக்கோங்களேன்.
"உங்க மாமாவுக்கு பவியைப் பிடிக்குமா ?"
"என்னய்யாஇப்படிக்கேட்டுட்டீக.. பெத்த பொண்ணாட்டம் அத  பார்த்துக்குவாக மாமா. இவக வீட்டுக்கு வர்றப்ப அந்தப்புள்ளை வீட்டில் இல்லாட்டா, 'எங்கிட்டு போச்சு,னு கேட்டு வீடு முழுக்க தேட ஆரம்பிச்சிடுவாக. புஸ்தகம் வாங்கப் போறேன்.. சாமான்செட்டு வாங்கப்போறேன்னு சொல்லிட்டு அதுபாட்டுக்கு வெளிலே கிளம்பிப்போயிரும். வர்றதுக்கு கொஞ்சம் தாமதமாயிட்டுன்னா, 'எங்கே..எங்கே'னு கேட்டு என்மாமன் என்னைப்பாடாய்படுத்தி   எடுத்துடுவாக.   அப்படி உசிருக்குஉசிரா நேசிச்ச மனுஷன் திடீர்னு மாறிப் போயிட்டாக அதை த்தான் என்னாலே தாங்கமுடியலே" என்று வள்ளி சொல்லும்போதே அவளை யும் அறியாமல் அவள் கண்கள் கலங்கி முகம் சிவந்து போனது.
அவள் அழுகிறாள் என்பதைப் புரிந்து கொண்டு, அந்த தாக்கத்திலிருந்து அவள் மீண்டு வெளியில் வரட்டும் என்று அமைதி காத்தான் பிரபு .

                                                                                  ---------------------தொடரும்----------------------    


Wednesday, August 30, 2017

வேண்டாமே வேறு பவித்ரா ...(29)

Image result for cartoon of tamilnadu man and girl under a tree in a cot
புக்ஸ் வாங்கப்  போவதாக  சொல்லி. பவித்ரா கிளம்பி செல்ல, வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான் பிரபு. 
இந்தக் குடிலில் பவித்ரா தனியாக இருப்பது ஏன் என்பதைத் தெரிந்து கொள்ளா விட்டால் தலை வெடித்து விடும் போலிருந்தது.
சில விஷயங்களைப்பற்றி பவித்ரா பேசவிரும்பவில்லை என்பதும், பேச்சை திசை திருப்புவதையும் அல்லது எங்காவது வெளியில் கிளம்பிச் சென்று விடுவதும் பிரபுக்கு புரியத்தான் செய்தது.
ஒருவர் சொல்ல விரும்பாத தனிப்பட்ட விஷயங்களைத் தூண்டித் துருவிக் கேட்பது அநாகரீகம் என்று தெரிந்தாலும், ஏதோ ஒரு பிரச்னைதான் ராம்குமார் அண்ணன்  வீட்டிலிருந்து அவளை வெளியேற்றி இருக்கிறது. அதை சரிசெய்து விட்டுத்தான் இங்கிருந்து கிளம்பிப் போகவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தான்.  
 இவளோட பிரச்னை என்னவாக இருக்கும்?
இவளாக சொல்கிற வழியைக் காணோம்.
வள்ளியிடம் கேட்கலாமா ?
நாம நல்ல எண்ணத்தோடு கேட்கப்போய் அவள்  தப்பாகப் புரிந்து  கொண்டால் என்ன செய்வது ?
இதுதான் விஷயம்..இதுக்காகத்தான் கேட்கிறேன்னு சொல்லியே வள்ளியிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாமா ?
இதுதான் சரி.. வள்ளியும் எதையும் வெளிப்படையாகவே பேசற  டைப் தான்.  அவங்க கண்டிப்பா டீடைல்ஸ் சொல்லுவாங்க என்ற எண்ணத்துடன், வள்ளி யைத் தேடி அவள் வீட்டுக்கு வந்தான்.
"என்னங்க .. உள்ளே வேலையா இருக்கீங்களா ?"
"வாங்கய்யா . என்ன இம்புட்டு தூரம்? அங்கிட்டிருந்து ஒரு குரல் குடுத்தா  நான்  ஓடி வந்திருப்பேனே "
"உங்க மாமோய் இல்லையா ?"
"இல்லீங்களே ஐயா .. களத்துமேட்டுலே வேலைவெட்டி ஏதும் இல்லாட்டா அதுபாட்டுக்கு  அங்கிட்டு இங்கிட்டுனு ஊர் சுத்தக் கிளம்பிடும்.. சித்தன் போக்கு சிவன் போக்குக்குங்கிறாப்லே.. என்னசெய்யணும்,என்ன வேணும்னு  சொல்லு ங்கய்யா.. செஞ்சு தாரேன்"
"ஒரு சிகரெட்டும், மாட்ச் பாக்ஸும் வேணும் "
"அம்புட்டுதானே.. இப்பவே ஓடிப்போய் நாடார் கடையில் வாங்கியாந்துடுதேன்  ..வேறே ஏதாச்சும் ?"
"ஏங்க.. சும்மா கிண்டலுக்கா ஒரு வார்த்தை சொன்னா, நீங்க உடனே வீட்டைப் பூட்டிட்டு வாங்கக் கிளம்பிடுவீங்களா ?"
"அய்யா .. நீங்க விருந்தாளி. உங்களுக்கு தேவையானதை செஞ்சு தரணும்னு குமார் அய்யா உத்தரவு.."
"அப்படியா? அந்த உத்தரவை மனசில் வச்சுக்கிட்டு நான் கேட்கிற எல்லாத்து க்கும் பதில் சொல்லணும். பவித்ரா பண்ற மாதிரி பேச்சை திசை திருப்ப கூடாது. "
"புரியுதய்யா..அந்தப்பொண்ணுசொல்லாததை எங்கிட்டே கேட்டுத் தெரிஞ்சுக்க ஆசைப்படுத்தீக .. அம்புட்டுதானே?"
"அம்புட்டேதான்..வாங்க .. உங்க கயித்துக் கட்டிலைக் கொண்டாந்து வெளியில் மரத்தடியில் போடுங்க..  அங்கே உட்க்கார்ந்து  பேசலாம் "
"நீங்க சொன்னா சரிதான்.. அந்தப் பொண்ணு எப்படி இருக்கிறா. இப்பத்தைக்கு அவ என் கண்ணிலேயே படலே" என்று சொல்லியபடியே கயிற்றுக் கட்டிலை இழுத்து மரநிழலில் போட்டாள் வள்ளி.
"நல்லா இருக்கு நீங்க அவங்களுக்கு காவல் இருக்கிற லட்சணம்.. உங்களை நம்பித்தானே அண்ணன் அவங்களை இங்கேகொண்டுவந்து   விட்டிருக்காங்க. நீங்க என்னடான்னா அவ என் கண்ணிலேயே படலேனு சர்வ சாதாரணமா சொல்றீங்க. காவல் சரியில்லைனு அண்ணன்கிட்டே சொல்லணும் ".
பதிலேதும் சொல்லாமல் அமைதியாக இருந்தாள் வள்ளி.
"நான் சும்மா ஒரு பேச்சுக்கு கேட்டேன்.. டேக் இட் ஈஸி.. எனக்கு ரெண்டு விஷயம் க்ளியர் ஆகணும். பவித்ராவுக்கு என்னால் முடிஞ்ச நல்லதை செய்ய நினைச்சு இதை கேட்கிறேன்.. மறைக்காமே சில விஷயங்களை மனம்விட்டுப் பேசணும். இப்பவும் உங்களை  ஒரு அக்கா ஸ்தானத்தில் வச்சுப் பார்க்கிறேன். நீங்க எனக்கு சாப்பாடு பரிமாறும்போது உங்களை என்னோட அம்மாவாகவே நினைக்கிறேன். அந்த உறவுமுறைக்கு மதிப்பு கொடுக்கணும் நீங்க !"
"முஸ்தீபு எல்லாம் பெரிசா இருக்கிறதைப் பார்த்தால் என்னை ஏதோ வம்பில் மாட்டிவிடப் போறீகளோனு பயமா இருக்கே "
"நோ.. நோ.. எந்த வம்பும் இதில் இல்லே. நான் அந்த மாதிரி ஆளும் இல்லே "
"சும்மாவாச்சும் ஒருபேச்சுக்கு சொன்னேன் தம்பி. என்ன கேக்கணும்னு நீங்க பிரியப்படுதிகளோ அதைக் கேளுங்க. எனக்கு என்ன தெரியுமோ அதை ஒளிவு மறைவு இல்லாமே சொல்லுதேன்."
"குட். பவித்ராவோட டில்லி வாழ்க்கை பத்தி எனக்குத் தெரியும். உங்களுக்கும் உங்க  ஃபிரெண்ட்பத்தி நல்லாவே தெரியும். பவித்ரா எங்கிட்டே கொடுத்த அந்த டைரியை நீங்களும் படிச்சிருக்கீங்க."
"அது சொல்லுச்சா ?"
"ஆமாம்.. சொல்லுச்சு..அவங்க இங்கே வந்து கிட்டத்தட்ட எட்டுவருஷம் ஆகப் போகுதுதானே ?"
"ஆமாங்க அய்யா "
"இந்த எட்டு வருஷத்துக்குள்ளே அவங்க ஒரு தடவைகூட அவங்க அக்காவை பார்க்க டில்லி போகலே "
"ஆமாங்க அய்யா "
"அவங்க அக்கா இவங்க மேலே அவ்வளவு பாசம் வச்சிருக்காங்க. அவங்களை பார்க்க ஒரு தடவைகூட டில்லி போகலே. போக முடியாதபடி இங்கே எந்த கலெக்டர் உத்தியோகமும் பாழ் போகலே. போகாமே, பார்க்காமே  இருக்கிறது தப்புனு  உங்க பிரெண்ட்க்கு நீங்க சொல்லலியா ?"
"குமார் அய்யாவும் ஷோபா அம்மாவும் சொல்லியே கேட்காத பொண்ணு நான் சொன்னா மட்டும் கேட்குமா என்ன ?"
"அண்ணனும் அண்ணியும் சொல்றப்ப இவங்க என்ன பதில் சொல்லுவாங்க."
"எங்க அக்கா மனசுமாறி நல்லபடியா  கல்யாணம் பண்ணனும்னா இதுதான் சரியான வழி. என்னைப் பார்க்கணும்ங்கிற ஆசையில் சுமி மேரேஜுக்கு யெஸ்  சொல்லுவானு அவங்க கிட்டே சொல்லுச்சு."
"தங்கைக்காக எவ்வளவோ தியாகம் பண்ணின அக்கா, தனக்காக இல்லாட்டா லும் தங்கைக்காகவாவது மேரேஜ் பண்ணிக்கலாமே "
"அவங்க இந்தப்பொண்ணுக்காக எதுவும்செய்ய ரெடிதான். இந்த பொண்ணை ஒருத்தன் கையில்பிடிச்சு குடுத்தபிறகுதான் நான் கல்யாணம் பண்ணிக்கு வேன்னு அவங்க பிடிவாதமா இருக்காங்க "
"ஆஹா..அலைஓய்ஞ்ச பிறகுதான் ஸ்நானம்பண்ற கதைனு சொல்லுங்க. அலையும்  ஓயப்போறதில்லே. ஸ்நானம் பண்ணப்போறதும் இல்லே.  ஆமா.. அவங்க இப்படியொரு முடிவில் இருக்கிறதா யார் சொன்னது ?"
"குமார் அய்யாதான்.. அந்தப்பொண்ணோட அக்காவும் எங்கிட்டேயும் இதையே தான் சொல்லுச்சு."
"உங்ககிட்டே சொன்னாங்களா ? நீங்க எப்போ டில்லி போனீங்க ?"
"நான் போகலே.. அவங்க இங்கிட்டு வந்தப்ப சொன்னாக "
"இங்கே வந்தாங்களா? டீலை பிரேக் பண்ணிட்டதா சொல்லி பவித்ரா சண்டை போடலியா ?"
"அவக அடிக்கடி இங்கிட்டு வந்துட்டுப் போவாக "
"என்னங்க சொல்றீங்க ?"
"ஆமாம் தம்பி. அவக வர்றதும் போறதும் இந்த பொண்ணுக்கு தெரியாது."
"அது எப்படிங்க ?"
"பவிம்மா அடிக்கடி டவுனுக்கு போயிட்டு வரும்.. புக்ஸ் வாங்க.. பேங்கில் பணம் எடுக்கணும்னு.. சுமிம்மா முன்னாடியே வந்து பேங்கில இல்லாட்டா புஸ்தகக்கடையில் வந்து மறைவா உக்காந்துக்குவாங்க.. எல்லாமே குமார் அய்யாவோட  ஏற்பாடு.. வந்து பார்த்துட்டு ரெண்டாம் பேருக்குத் தெரியாமே கிளம்பிப் போயிடும். கையோடு எதையாவது கொண்டாந்து பேங்கில் வச்சிட்டு போயிடும். நான் அங்கிட்டுபோய் அதை வாங்கிட்டு வந்து 'அவக குடுத்தாக.. இவக குடுத்தாக'னு சொல்லி இதுக்கிட்டே குடுப்பேன்."
"வாவ்.. வந்து வந்து போயிட்டுதான் இருக்காங்களா ! "
"ஆமாம்யா"
"பவித்ராவுக்கு ...?"
"இந்த விஷயம் இன்னிக்குவரை தெரியாது"
"ஒரு தங்கைக்காக அக்கா இவ்வளவு தூரம் அல்லாடுறாங்க. அக்காவுக்காக பவித்ரா  மேரேஜ் பண்ணிக்கிட்டு லைபில் செட்டில் ஆயிடலாந்தானே. இது பத்தி அவங்க ஏதாவது பேசினங்களா? ஏதாவது ஸ்டெப்ஸ் எடுத்தாங்களா ?"
"சுமி அம்மாக்கு ஜோஸ்யத்தில் நம்பிக்கை இருக்குது "
"அதுக்கும் இவங்க கல்யாணத்துக்கும் என்னங்க சம்பந்தம் ?"
"அதெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனா பவிம்மாவுக்கு இருபத்து மூணு வயசு ஆரம்பம் ஆகும்போதுதான் கல்யாண பேச்சை எடுக்கணும்னு அவங்க உறுதியா இருக்காங்க "
"ஓ !"
"பவிம்மா பிறக்கும் முன்னாடியே அவங்க குடும்ப ஜோஸ்யர், 'ஒரு உயிர்தான் தங்கும்'னு  சொன்னாராம்.  இது பெறந்த அன்னிக்கே பெத்தவ இறந்துட்டாங்க. இந்தப் பொண்ணுக்கு பதினைஞ்சு வயசு வரும்போது ஒரு கண்டம் இருக்குனு அதே ஜோஸ்யர் சொல்லி இருந்தாகளாம்.. அது நடந்துச்சாம்.   இருபத்து மூணு வயசு ஆரம்பமாகிறதுக்கு முன்னாலே ஒரு கண்டம் இருக்குது. அதோட எல்லாம் முடிஞ்சிடும்னு அவக சொல்லி இருக்காகலாம். அதனாலே அந்த நாளோடே எல்லா பிரச்னையும் தீர்ந்திடுமே. அதுக்குப்பிறகு எந்தவொரு கவலையும் கண்டமும் இருக்காதுனு நினைச்சு பவிம்மாவுக்கு  இருபத்து மூணு வயசு ஆகிறவரை கல்யாண பேச்சை தள்ளிப்போடலாம்னு நினைக்குது. இதை எங்கிட்டேயும் சொன்னாங்க.. குமார் அய்யா இவங்க கல்யாணம் பத்திப் பேசினப்பவும்அதையேதான் சொல்லி இருக்காக. இப்போ இந்தப்பொண்ணுக்கு இருபத்திரெண்டு வயசு முடியப்போகுது. அதான் குமார் அய்யாவும், பவியோட அக்காவும்  கல்யாண ஏற்பாட்டை பண்ணிட்டு இருக்காங்க "
"அப்படியா ! என்ன ஏற்பாடு?"
"உங்க அருமை அண்ணன் அதையெல்லாம் எங்கிட்டே சொல்வாரா என்ன ?" என்று கேட்டு குறும்பு சிரிப்புடன் கேட்டாள்  வள்ளி.

                                                                                 ---------------------தொடரும் ----------------------

   

Tuesday, August 29, 2017

வேண்டாமே வேறு பவித்ரா ...(28)

Image result for cartoon of tamilnadu village
பிரபு சொன்னதைக் கேட்டு சிரித்த பவித்ரா, "கவலையே படாதீங்க. உங்களை மென்டலாக்கிப் பார்க்கிற ஐடியா எதுவும் எனக்குக் கிடையாது !" என்றாள் 
"தேங்க் காட்!"
"சுமியோட மேரேஜ் என்னாலே நின்னு போச்சு. அது முடிஞ்ச கதைனு சொல்லி ட்டு அக்கா பிசினெஸை கவனிக்க ஆரம்பிச்சிட்டா.. என்னாலே அப்படி இருக்க முடியலே. யாராவது ஒரு நல்லவரை செலெக்ட் பண்ணி அவ  மேரேஜ் பண்ணி க்கணும்.. நீங்க மட்டும் அக்காவைவிட எல்டர் ஆக இருந்தா என்னோட சாய்ஸ் நீங்கதான். அக்காவுக்கு உங்களைத்தான் ரெகமெண்ட் பண்ணுவேன். உங்களைப் பார்க்கிறச்சேயே நீங்க யங்கர்னு தெரியுது .. அதனாலதான் ..."
"அதனாலே என்னங்க. உங்க சிஸ்டர்க்கு நான் சூட் ஆக மாட்டேன். உங்களுக்கு  மேட்ச் ஆவேன்தானே ?"
இதைக் கேட்டு அதிர்ந்து போன பவித்ரா அவனைக் குழப்பத்துடன் பார்த்தாள்.
"ஜஸ்ட் போர் பன் !"
"மன்னிச்சிட்டேன்... பிழைச்சுப்போங்க "
"சுமியோட மேரேஜுக்கும் நீங்க அவங்களை மீட் பண்ணாமே இருக்கிறதுக்கும்  என்னங்க சம்பந்தம் இருக்குது ?"
"இருக்குதே !"
"புதிர் வேண்டாம்.. உங்க மனசிலே என்ன ஓடுது .. அதை சொல்லுங்க "
"நான் திரும்பவும் டில்லிக்கு வருவேன்.. வரணும்னு  அக்கா எதிர்பார்க்கிறா. அப்படி நான் வரணும்னா அவ மேரேஜ் பண்ணிக்கணும். அதுதான் நான் போடற கண்டிஷன்."
"இதுக்குப்பேரு கண்டிசனா? எனக்கென்னவோ பிளாக்மெயில் மாதிரி தெரியுது "
"சரி .. அப்படியே இருந்திட்டுப் போகணும்.. இந்த டீலை அவங்ககிட்டே நீங்க சொன்னீங்களா? அவங்க என்ன சொன்னாங்க ? "
"சுமிகிட்டே நான் பேசவே இல்லை... இதைக்கேட்டதும் இன்னொரு டம்ளர் தண்ணீர் கேட்பீங்கதானே  ? "  
"என்னை நல்லா புரிஞ்சு வச்சிருக்கீங்க .. உங்க டீலை அவங்களுக்கு இன்பார்ம்  பண்ணாமே மனசுக்குள்ளேயே போட்டு வச்சிருந்தா எப்படிங்க ?"
"நானா சொல்லாட்டாலும் இது ஒரு டீல்னு அக்காவுக்கு தெரியும் !"
"ஹலோ..மேடம்..ப்ளீஸ் நீங்க அந்த தண்ணீர்ப்பானையை எடுத்திட்டு வந்து என் பக்கத்தில் கொண்டாந்து இப்படிவச்சிடுங்க. சிலவிஷயங்களை என்னாலே முழுங்க முடியாமே தவிக்கிறப்ப நானே எடுத்து குடிச்சிக்கிறேன். போய் எடுத்துட்டுவாங்க"என்று கிண்டலாக சொல்ல, அதை ரொம்பவும் சின்ஸியராக செய்தாள் பவித்ரா. 
"த்ரீ இயர்ஸ் பேக் ராம்குமார் ஸார் அவரோட பேமிலியோட இங்கே வந்து தங்கி இருந்தப்ப  எனக்கு சில விஷயங்களை புரிய வைச்சார்."
"இருங்க.. இருங்க.. இன்னொரு முக்கியமான டவுட் க்ளியர் பண்ணிக்கிறேன் "
"சொல்லுங்க "
"நீங்க அண்ணனோட கெஸ்ட்டாக இந்த ஊருக்கு வந்திருக்கீங்க.. அப்படின்னா அரண்மனை மாதிரி  இருக்கிற அந்த வீட்டில் தங்காமே, முனிவர்கள் ஆசிரமம் மாதிரி ஒரு பர்ணசாலையைப் போட்டுக்கிட்டு இங்கே ஏன் தங்கி இருக்கணும். ?"
"இந்தஊரில் ஸாரோட வீடு மட்டுந்தான் கல்கட்டிடம் ..மற்றதுங்க எல்லாமே குடிசைதான். ஊருடன் சேர்ந்து வாழ்னு ஒரு பழமொழி இருக்குதே. அதை நான் ரொம்பவும் மதிக்கிறேன். அதனாலேதான் இந்த ஊரில் இருக்கிற மத்தவங்க மாதிரி நானும் ஒரு குடிசை வீடு போட்டுக்கிறதுக்குப் பதிலா கொஞ்சம் கலை நயத்தோட பர்ணசாலை மாதிரி அமைச்சிருக்கிறேன். தட்ஸ் ஆல்.."
"ஹலோ..மேடம்..நான் கேட்டது என்னன்னா 'நீங்க அங்கே தங்கி இருக்காமே இங்கே வந்து தனியா இருக்கீங்க. அது ஏன்'னு தான்."
"நான் அங்கேதான் இருந்தேன். கிட்டத்தட்ட ஏழுவருஷம்.. இல்லே கொஞ்சம் கூடவேகூட இருக்கலாம்..  இங்கே வந்து கொஞ்சகாலந்தான் ஆகுது ?"
"ஏன்?"
"உங்களுக்குஎந்தக்கதை வேணும்? சுமியோட கல்யாண மேட்டரா இல்லாட்டா நான் இங்கே தனியா வந்த கதையா ?"
"ரெண்டுமேதான் "
"முதல்லே எதை சொல்ல ?"
"முதல்லே டில்லி  மேட்டரை முடிங்க. அப்புறம் தமிழ்நாட்டைப் பார்க்கலாம் "
"இதை நீங்க சொன்னதுந்தான் இன்னொரு முக்கியமான விஷயம் மைன்ட்டில் வந்து , அதை உங்ககிட்டே சொல்லுனு  சொல்லுது". 
"சொல்லிடுங்க!"
"இப்போ இங்கே நடக்கிற அரசியல் சண்டையில் ஒருத்தரைப் பத்தி மத்தவர் ஊழல் குற்றச்சாட்டு சொல்றப்ப, ஆதாரம் இருக்கானு கேட்டு ஒருத்தர் வாயை மத்தவங்க அடைச்சிடறாங்க"
"ஆமாம். நடக்கிற எல்லா அட்டூழியமும் சாட்சியை, ஆதாரத்தை பக்கத்தில் வச்சிட்டுதானே நடக்குது !"
"அதில்லேங்க.. நான் சொல்ல வந்தது என்னன்னா.. ஆதாரம் எங்கேன்னு பொது மக்களைப்பார்த்து சிலர் கேட்டுட்டு இருக்கிறப்ப,சட்டசபைக்குள்..ஒரு கட்சிக்கு ள் இருக்கிறவங்களே.. 'இவன் இதை செய்தான்.. அவன் அதை செய்தான்'னு சொல்ல ஆரம்பிச்சிட்டாங்களே...அதை கவனிச்சீங்களா? இதெல்லாம் ஆதாரம் இல்லையா ?"
"இதையெல்லாம் நீங்க எப்போ கவனிச்சீங்க?"
"வழக்கமா நான் டவுனுக்கு புக்ஸ் வாங்கப் போவேன். கடை ஓனர்  டீவீ யில் ஏதாவது ப்ரோக்ராம் பார்த்துட்டு இருப்பார். நான் கொஞ்சநேரம்அங்கே  நின்னு எட்டிப்பார்த்துட்டு வருவேன்"
"பரவாயில்லே. புக்ஸ் ஷாப்பில் டீவீ பார்க்க கூட அலவ் பண்றாங்களா " .  
"அட ..நீங்க ஒண்ணு .. ஓனர் அவரோட டைம் பாஸுக்கு அந்த கடையை ரன் பண்றார்..ஒருநாளைக்கு யாராவது ரெண்டுபேர் வந்து புக்ஸ் வாங்கினா அது அதிகம். இப்பல்லாம் புக்ஸை நம்பி யாரும் பிழைக்க முடியாது "
"ஏன் அப்படி சொல்றீங்க ?"
"இப்போ புக்ஸ் படிக்கிற பழக்கம் ரொம்பவும் குறைஞ்சு போச்சு. இன்னும் கொஞ்ச நாள்லே அந்த பழக்கம் இல்லாமலே போயிடும்னு நினைக்கிறேன்"
"நிஜந்தான்.. நானே ஒருகாலத்தில் எவ்வளவு புக்ஸ் படிப்பேன். இப்போ ரொம்ப ரேர் தான்"
"என்ன காரணம் ?"
"பெரிசா என்ன காரணம் ? டைம் இல்லே. இன்டெரெஸ்ட் இல்லே "
"நீங்க சொல்ற ரெண்டுமே ஒரு காரணம் இல்லே.. அப்போ நாம எல்லாரும் நியூஸ்பேப்பரை படிச்சுதான் ஊர் நிலவரத்தை தெரிஞ்சிட்டுஇருந்தோம். அதை லைவ் ஆக டீவீ கொடுக்கிறப்ப, பேப்பரைப் படிச்சு தெரிஞ்சுக்க யாருக்கும் இன்டெரெஸ்ட் இல்லே.. கதை .. சினிமா செய்தி.. ஜோக்ஸ்.. சமையல் குறிப்பு இதையெல்லாம் பத்திரிகையில் மட்டுமே அப்போ படிச்சு தெரிஞ்சிட்டு இருந்தாங்க..இப்போ எல்லாமே லைவ் ஆக கண்முன்னால் தெரியும்போது.."
"இப்பவும் பத்திரிக்கை வாங்கிறவங்க சிலர் இருக்காங்கதானே ?"
"நல்லவிஷயம்தான்..அந்த ஒருசிலருக்காக மட்டும் பலர் உட்கார்ந்து பத்திரி க்கை தொழிலைப் பார்க்க முடியுமா என்ன? ஒரு விளம்பரத்தில்.. நகைக்கடை விளம்பரம் அது.. அதில் நடிகர் பிரபு.. அவருக்கு தெரிஞ்சவங்க கிட்டே.. "உங்க அண்ணன் நான் சொல்றேன்.. இந்தக் கடையில் நகை வாங்குங்க. " உங்க தம்பி நான்சொல்றேன்.. இந்தக்கடையில் நகை வாங்குங்க"னு ரொம்பவும் கெஞ்சிச் சொல்வார். அந்தநிலைமை பத்திரிக்கைக்கு வந்துடும் போலிருக்குது. அப்போ இருந்த ஜனத்தொகைஎன்ன?பத்திரிக்கை விற்பனைஎன்னனு பாருங்க. இப்போ உள்ள ஜனத்தொகை என்ன? பத்திரிக்கை விற்பனை என்னனு ஒரு கணக்குப் போட்டுப் பாருங்க. ஜனத்தொகை பலமடங்கு எகிறி இருக்கும். பத்திரிக்கை படிக்கிறவங்க எண்ணிக்கை ரொம்பவும் டவுன் ஆகி இருக்கும்."
"அப்படின்னா பத்திரிக்கை இடத்தை டீவீ  பிடிச்சிட்டுனு சொல்றீங்களா?"
"அதிலே சந்தேகமா என்ன? உங்க அம்மாகிட்டே..பாட்டி இருந்தா பாட்டிகிட்டே கேட்டுப்பாருங்க.  ஒருகாலத்தில்  அவங்க ரேடியோ முன்னாலே தவமா தவம் கிடந்தாங்க..இப்போ எத்தனை வீட்டில் ரேடியோ இருக்குது? அப்புறம்  ரேடியோ இடத்தை டேப் ரெக்கார்டர் பிடிச்சுது. பின்னாலே வந்த மொபைல் ஐட்டம் எல்லாம்  டேப்ரெக்கார்டர்க்கு டாட்டா சொல்ல வச்சிட்டுது.. இன்னும் கொஞ்ச நாள்லே 'உங்க வீட்டுக்கு டீவீயே வேண்டாம்..உங்க உள்ளங்கையைப் பார்த்தா போதும். நாட்டுநடப்பு.. பொழுது போக்கு அம்சம் எல்லாம் அதிலேயே தெரியும். அதுக்கு நீங்க செய்ய வேண்டியது இந்த பட்டனை உங்ககையில் வச்சுக்கணும் 'னு சொல்றநிலைமை வந்தால்கூட ஆச்சரியப்பட அதில் எதுவும் இல்லை."
"எப்படிங்க இந்த அளவுக்கு யோசிக்கிறீங்க ?"
"நான் இங்கே வந்து இவ்வளவு நாள் ஆகுதே.. இங்கே எனக்கு என்ன வேலை இருக்குது செய்து முடிக்க ? பொழுதைப் போக்க புக்ஸ் படிப்பேன்..அதில் உள்ள விஷயங்களைப்பத்தி நானே ஒரு பட்டிமன்றம் என்னோட மனசுக்குள் நடத்து வேன். சிலசமயம் நானும் வள்ளியும் சேர்ந்து இப்படி எதையாவது பத்தி பேசிட்டு இருப்போம்.  இந்த ஊர் என்னை ரொம்பவும் மாத்தி இருக்குது. இப்போ சுமி என்னைப்  பார்த்தால் அசந்து போவா.."
"பார்த்தீங்களா.. சுமிகதையில் ஆரம்பிச்சு எங்கெங்கோ சுத்த ஆரம்பிச்சாச்சு. இனிமே நோ ஜோக்ஸ்.. நோ கிளைக்கதைகள். ஸ்ட்ரெய்ட்டா மெயின் ஸ்டோரிக்கு போறோம்."
"போகலாம். போகலாம்.. நாளைக்குப்போகலாம். நான் இப்போ புக்ஸ் பர்ச்சேஸ்  பண்ண போகணும். நீங்க கிளம்புங்க.. நானும் கிளம்பறேன் "
".............................."
"என்னங்க... உங்க உள்மனசு ஏதோ சொல்லுது போலே .. அதை வெளியில் சொல்லிடுங்க.. நான் தப்பா நினைச்சுக்க மாட்டேன் "
"அழகான ராட்சஸினு சொல்லுது !"
"தேங்க்ஸ்.. கிளம்பலாமா?"
"இப்போ போறேன்.. அப்புறமா வருவேன்.. நீங்க கதையை முடிக்காதவரை உங்களை நான் விடமாட்டேன் " என்று சொல்லி விடைபெற்றான் பிரபு.

                                                                    ----------------------தொடரும் -------------------------   

Monday, August 28, 2017

வேண்டாமே வேறு பவித்ரா ...(27)

Image result for cartoon of cock and hen eating wheat
கையில் டைரியுடன் பிரபு வீட்டைவிட்டுப் போனதை வள்ளி கவனித்தாலும் அதைப்பற்றி பிரபுவிடம் எதுவும் கேட்கவில்லை.
பவித்ராவின்குடிலின்முன்பாக நின்றுகொண்டு,"என்னங்க..உள்ளே வரலாமா?" என்று பிரபு கேட்டான்.
"வரலாமே!" என்று சொல்லியபடி வெளியில் வந்த பவித்ரா, பிரபுவின் கையில் டைரியைப் பார்த்ததும், "அடடே.. அதுக்குள்ளே படிச்சு முடிச்சாச்சா? செம பாஸ்ட்   ரீடிங் போலிருக்குது !" என்றாள்.
"அதைவிட வேறு வேலை என்ன இருக்குது? நீங்க  ப்ரீயா? உங்க கிட்டே நிறைய பேசணும் "
"ஓ..பேசலாமே.. உள்ளே வாங்க!" என்ற பவித்ரா அவன் முன்பாக நாற்காலியை இழுத்துப்போட்டாள்.
உள்ளேவந்து உட்கார்ந்த பிரபு, "என்ன தைரியத்தில் நீங்க  முன்பின் தெரியாத என்னை வீட்டுக்குள் அலவ் பண்றீங்க? என் மேலே அந்த அளவுக்கு நம்பிக்கை யா ?" என்று கேட்டான்.
"எனக்கு என் மேலே நம்பிக்கை இருக்கிறது "
"குட்.. அது இருந்தால்தான் லைபில் ஜெயிக்க முடியும் !"
"இன்னொரு முக்கியமான விஷயம், ராம்குமார் ஸார் அவ்வளவு சீக்கிரம் யாரையும் நம்பிவிடமாட்டார்.  ஒருசிலரை  முதல்முறையா பார்க்கும்போதே பிடித்துப்போயிடுமாம். அவங்களோட பிரெண்ட்ஷிப்பை இவரே தேடிப்போய்   ரினியூ  பண்ணிக்குவாராம். இதை அவரே சொல்லி இருக்கிறார். அவர் யாரை முழுமனசா நம்புறாரோ அவங்களைத்தான் வயல்வெளியில்.. அவர் வீட்டில் தங்கிறதுக்கு அலவ் பண்ணுவார்..   இங்கே வந்த சில நாளிலேயே  நான் அதை தெரிஞ்சுகிட்டேன். ஸாரே  உங்களை இங்கே அனுப்பி இருக்கிறதாலே எனக்கு உங்க மேலே குட் ஒபினியன் இருக்குது "
"ஓ .. காட் ..தேங்க்ஸ் எ  லாட் !"
"சரி.. என்ன சாப்பிடறீங்க ?"
"அதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்.. நீங்களும் உட்காருங்க.. நான் கேட்கிற கேள்விக்கு பதில் சொல்லுங்க "
"ஓஹோ.. ஸார் கதை எழுதற வேலையை விட்டுட்டு எப்போ பேட்டி  எடுக்கிற வேலையில் பிள்ளையார் சுழி போட்டார் ?"
"ஜஸ்ட் நவ் ! நீங்க இங்கே வந்து எவ்வளவு நாள் இருக்கும் ?"
"ஒரு சின்ன கரெக்சன் உங்க கேள்வியில் பண்ண வேண்டி இருக்குது !"
"அப்படியா? என்ன ?"
"எவ்வளவு நாள் இருக்கும்கிற உங்க கேள்வியைத் திருத்தி எத்தனை வருஷம் இருக்கும்னு கேளுங்க !"
"சரி.. நீங்க இங்கே வந்து எத்தனை வருஷம் இருக்கும் ?"
"எட்டுவருஷம் ஆகுது.. என்னோட பிப்டின்த் பெர்த்டே வந்தப்ப நான்  இங்கே வந்தேன்.  இப்போ எனக்கு டுவென்ட்டி தேர்ட் பெர்த்டே வரப்போகுது "
"அட்வான்ஸ் க்ரீட்டிங்ஸ்... ட்ரீட் உண்டுதானே ?"
"குடுத்திட்டா போச்சு."
"உங்க சிஸ்டர்க்கு உங்ககிட்டே ரொம்பவும் பாசம் போலிருக்குது ?"
"ஆமாம்.. எனக்காக அவ எவ்வளவோ தியாகம் பண்ணி இருக்கிறா "
"இங்கே வருவாங்களா ? நீங்க அவங்களைப்பார்க்க போறதுண்டா ?"
"ரெண்டும் இல்லே "
"என்னங்க இப்படி சொல்றீங்க ? அவங்களை கடைசியா எப்போ பார்த்தீங்க?"
"அதுவா? நான் ராம்குமார்ஸாரோடு சென்னைக்குவர ஏர்போர்ட்க்கு வந்தப்ப  எனக்கு  டாட்டா சொல்ல சுமி வந்தா "                   
"அதுக்குப்பிறகு நீங்க அவங்களைப் பார்க்கவே இல்லையா ?"
"இல்லை!"
சில நிமிடங்கள் மவுனத்தில் கரைந்தது.
"குடிக்க கொஞ்சம் தண்ணீர் தர்றீங்களா ?"
பவித்ரா கொண்டு வந்து கொடுத்த தண்ணீரை மடமடவென்று குடித்து முடித்த பிரபு, "நீங்க ரொம்பவும் கேஷுவலா இல்லைனு சொல்றீங்க. அதை என்னால் ஜீரணிக்க முடியலே.. அதான் தண்ணீரைக் குடித்து டைஜஸ்ட் பண்ணினேன் " என்றான்.
பேச்சை திசை திருப்புவதற்காக, "டில்லியில் விவசாயிகள் போராட்டம் பத்தி என்ன நினைக்கிறீங்க ?" என்று கேட்டாள் 
"டில்லிக்குப்போய்அத்தனைபேரையும்அள்ளிப்போட்டுக்கிட்டு தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்து சேர்க்கணும்  போலிருக்குது "
"ஏன் ?"
"தமிழ்நாட்டை காப்பாத்துவேன். தமிழ்நாட்டை முன்னேத்திவிட்டுதான் என் மூச்சையே நிறுத்துவேன்னு மேடைக்கு மேடை சீன் போட்டவங்க எல்லாரும் இப்போ வெள்ளையும் சொள்ளையுமா பதவிக்கும் பணத்துக்கும் குடுமிப்பிடி சண்டை போட்டுக்கிட்டு இருக்காங்க. அதை தவிர வேறு எதுவும் நடக்கலே. ஸ்கூல் பசங்க பிக்னிக் போன மாதிரி லைபை என்ஜாய் பண்ணிட்டு இருக்கி றாங்க. ரோம் பத்தி எறிஞ்சப்ப எவனோ பிடில் வாசிச்சானாம். அந்தக் கதையை பொறுப்பான பதவியில் இருக்கிறவங்க கொஞ்சமும் பொறுப்பில்லாமே செஞ்சிட்டு இருக்கிறாங்க. இந்த விவசாயிங்க பரதேசிக் கோலத்தில் ஒட்டு மொத்த ஜனங்களுக்கும் சேர்த்து குரல் கொடுத்து போராட்டம் நடத்திட்டு இருக்கிறாங்க.  பாவம்.. இந்த விவசாயிங்க ஏன் தன்னை வருத்திகிட்டு அங்கே போய் தவம் கிடைக்கணும்.  உங்களுக்கு இல்லாத அக்கறை எங்களுக்கு ஏன் ? பசியோபட்டினியோ..அதை மத்தவங்ககூட சேர்ந்து நாங்களும் அனுபவிச்சுக்கி றோம். தண்ணி கொண்டுவந்தா விவசாயம் பண்றோம்..இல்லாட்டா உங்ககூட சேர்ந்து நாங்களும் வானத்தை பார்த்துகிட்டு உக்காருறோம்னு கிளம்பி வந்திடணும் .. இவங்க உயிரைக் குடுத்து போராட்டம் நடத்தி ஜெயிச்சா, எங்க ஆட்சியில்தான் தண்ணீரைக் கொண்டுவர முடிஞ்சுதுனு அவனவன் மெடலை தனக்குத்தானே குத்திக்குவான். கோழி ஒண்ணு  கோதுமை விதைச்ச மாதிரி ஆயிடும்.  "    
"கோழி எப்போ கோதுமை விதைச்சது ? எங்கே விதைச்சது ?"
"அது ஒரு கதையிலே.. நான் சின்ன வயசில் ஸ்கூலில் கேட்ட கதைங்க அது. உங்களுக்குக்கூட ஸ்கூலில் அந்தக்கதையை  சொல்லிக் கொடுத்திருப்பாங்க. நீங்க  மறந்துருக்கலாம்.    "
"அப்படியா? நான்அப்படி ஒரு கதையை படிக்கிறப்ப கேட்டதே இல்லை. ப்ளீஸ் சொல்லுங்க "
"இந்தக் கதையை ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மாதிரி சொல்லுவாங்க "
"ஒவ்வொரு மாதிரினா ? எனக்குப் புரியலே "
"அதாங்க... ஒருசிலர் கோதுமை விதைச்ச கதைனு சொல்லுவாங்க. கொஞ்ச பேர் கோழி கீரை விதைச்ச கதையா இருக்குதேனு சொல்லுவாங்க."
"ஓஹோ.. உங்களுக்கு தெரிஞ்ச கதையை சொல்லுங்க "
"எங்க மிஸ் எங்களுக்கு கோழி கோதுமை விதைச்சதா கதை சொன்னாங்க. விவசாயம், நெல்லறுக்கிறது, வேகவைக்கிறது, வெந்த நெல்லைக்கொண்டு போய் நடுரோட்டிலே இல்லாட்டா ஏதாவது மைதானமா இருக்கிற இடத்திலே காய வைக்கிறது எல்லாமே வில்லேஜ்ஜில் நடக்கிற சாதாரண விஷயம். அதே போலவீட்டுக்குவீடு கோழி வளர்க்கிறதும் சர்வசாதாரண விஷயம்.  வெயிலில் காய வச்சிருக்கிற நெல்லைக்கொத்தித்தின்ன அக்கம்பக்கத்துவீடுகள்ல  உள்ள கோழிங்க வரும். அந்தக்கோழிகளை அங்கே காவலுக்கிருக்கிறவங்க கல்லை எடுத்து எரிஞ்சு துரத்துவாங்க. இந்தக் கல்லடியை பட விரும்பாத ஒரு கோழி கொஞ்சம் மாத்தி யோசிச்சுது. "
"ஓ "
"இப்போ நீங்க நெல்லை மறந்துடுங்க. கோதுமைனு ஞாபகம் வச்சுக்கோங்க. மாத்தி யோசிச்ச அந்தக்கோழி  அதோட சொந்தபந்தங்கள் கிட்டேஇனிமே நம்ம தேவைக்கு நாமளே விதைச்சு அறுவடை பண்ணி சாப்பிடலாம்.. எதுக்காக நாம கல்லடி படணும். என்னோடு சேர்ந்து யாரெல்லாம் நிலத்தை உழுது கோதுமை விதைக்க  வாரீங்கனு கேட்டுச்சு. சொந்தபந்தங்கள்  எந்த பதிலும் சொல்லலே. அதனாலே இதுமட்டுமே தனியாளாக நின்னு நிலத்தைஉழுது கோதுமையை விதைச்சுது. கொஞ்சநாளிலே கோதுமைசெடி நல்லா வளந்துட்டுது. அதுக்கு தண்ணீர் ஊத்தவோ, வளர்ந்தசெடியை பாதுகாக்கவோ, சொந்தபந்தங்கள் எதுவும் துணைக்கு வரலே. ஆனா கோதுமையை அறுவடை பண்ணி வீட்டுக்கு எடுத்து வந்ததும் எல்லா சொந்தபந்தங்களும் இந்தகோழிகிட்டே அவங்களுக்கு கோதுமை வேணும்னு கேட்டதாம். கோதுமையை விதைக்கவோ, கோதுமை செடிக்கு தண்ணீர் ஊத்தவோ, விளைஞ்ச கதிரை அறுக்கவோ, அதைக் கட்டி எடுத்துட்டு வரவோ நீங்க யாருமே வரலை. இப்போ கோதுமை கேட்டு வந்து நிக்கிறீங்க.. பாடுபட்டவன் பலனை எதிர்பார்த்தால் அது நியாயம். எந்தவொரு வேலையும் செய்யாத உங்களுக்கு இதில் பங்கு கிடையாதுன்னு சொல்லி விரட்டுச்சாம் பாடுபட்ட கோழி... கோழி இருக்கட்டும். பேச்சை மாத்தாமே நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க.. டில்லியிலிருந்து இங்கே வந்தபிறகு நீங்க உங்க அக்காவை பார்க்கணும்னு கூட  நினைக்கலியா?"
"அதெப்படி நினைக்காமே இருக்கமுடியும்.ஓடிப்போய் அவளைக் கட்டிப்பிடிச்சு  'ஓ'னு  கதறி அழணும் போலிருக்குது."
"அப்படின்னா போய்ப்பார்த்துட்டு வர்ரதுதானே ?"
"நான் இங்கிருந்து திரும்பி வரமாட்டேன்னு அவகிட்டே சொல்லிட்டு வந்திரு க்கிறேன். "
"அப்படின்னா அவங்களை இங்கே வந்து கொஞ்சநாள் இருந்துட்டுப்போக சொல்றதுதானே ?"
"ரெண்டும் நடக்காது "
"ஏனுங்க..நீங்க உங்க பைத்தியக்காரத்தனத்தை நிறுத்தவே மாட்டீங்களா ? அதுக்கு ஒரு லிமிட்டே கிடையாதா?"
"இது ஒண்ணுதான் நான் எடுத்த புத்திசாலித்தனமான முடிவு "
"உங்க மேலே உயிரையே வச்சிருக்கிற ஒரு ஜீவனை நீங்க பார்க்கப் போகாமே இருப்பதும், அவங்களை இங்கேவரவிடாமே தடுப்பதும் ரொம்பவும் புத்திசாலி த்தனம்னு உங்களுக்கு சொன்ன அதிமேதாவி யாருங்க? நீங்க பண்றது சரின்னு உங்க மனச்சாட்சியைத் தொட்டு சொல்லுங்க பார்க்கலாம். பாசம்னா என்னனு தெரியாத ஜென்மமா இருக்கீங்களே"  என்று கோபமாக சொன்னான் பிரபு.
"அக்காகிட்ட இருக்கிற அளவுகடந்த பாசத்தால்தான்  இப்படியொரு முடிவில்  இருக்கிறேன் "
"நீங்க என்னை ஒரு மென்டல் பேஷண்டா, மென்டலி  டிஸ் ஆர்டர்டு பெர்சனா மாத்திதான் ஊருக்கு அனுப்புவீங்கன்னு நினைக்கிறேன். இன்னொரு டம்ளர் தண்ணீர் கொடுங்க " என்று கோபமாக சொன்னான் பிரபு.

                                                                           ------------------------- தொடரும் --------------------

Sunday, August 27, 2017

வேண்டாமே வேறு பவித்ரா ...(26)


Image result for cartoon of young man talking in mobile
"என்னது, ரமேஷைப் பத்தி நீதான் ராங் இன்பர்மேஷன் கொடுத்தியா ?"
"ஆமாம் "
"யார் உன்னை மீட் பண்ணினாங்க ? எப்போ மீட் பண்ணினாங்க ? எங்கே வந்து மீட் பண்ணினாங்க ?"
"என்னை யாரும் மீட் பண்ணலே ?"
"யாரையும்பார்த்துப்பேசாமேஎப்படி அப்படியொரு ஸ்டேட்மென்ட் கொடுத்தே ?"
"இன்டெர்காமில் பேசினேன்."
"புரியும்படி சொல்லு..  இன்டெர்காமில் நீ யாரோடு  பேசினே?"
"தெரியாது "
"பவி..நானே ரொம்ப குழம்பிப்போய் இருக்கிறேன். நீ வேறே  என்னை டென்சன் பண்ணாதே. நீ பேசினதா சொல்றியே.. அதை எப்போ.. எங்கேனு எனக்கு டீடைலா சொல்லு.. கொஞ்சம் சூடா பால் கொண்டு வர சொல்லட்டுமா?"
"வேண்டாம் "
"வேறு ஏதாச்சும் சாப்பிடுறியா ?"
"வேண்டாம்"
"சரி.. கண்ணைத் துடைச்சுக்கோ. தலையணையை பின்னாலே நகர்த்தி நல்லா சாய்ஞ்சு உட்கார்ந்துக்கோ "
பவி பெட்டில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டாள்.
"இந்தப்பாரு.. எந்த அவசரமும் இல்லை. நல்லா ஞாபகப்படுத்தி அன்னிக்கு நடந்ததை ஒவ்வொண்ணா சொல்லு... நீ இன்டெர்காமில் யாரிட்டே பேசினே ? நம்ம வீட்டிலேயா? இல்லாட்டா ஆபீஸிலேயா ?'
"ஆபீஸில்தான் "
"ஆபீஸிலா ? அப்போ அங்கே நானோ டாடியோ இல்லையா ?"
"ஐயோ.. சுமி நீதான் ஆடிட்டர் ஆபீசுக்குப் போறதா சொல்லிட்டு, டாடியை அழைச்சிட்டு க்ளினிக் போயிட்டியே.. நான் மட்டுந்தானே அன்னிக்கி ஆபீசில் இருந்தேன். "
பவி சொன்ன அந்த டேட்டுக்கு ஞாபகத்தை ரிவைண்ட் பண்ணி, ஒவ்வொரு நிகழ்ச்சியாக யோசித்தபோது....
டாடியை வீட்டில் விட்டுவிட்டு டூ வீலரில் பவியைக் கூப்பிட வந்தேன்... வந்தேனா.. ஹார்ன் கொடுத்ததும் செக்யூரிடி வந்து கதவைத் திறந்தார்.. திறந்தாரா.. திறந்தவர் என்னைக் கண்டதும் ஷாக் ஆனதுபோல், "மேடம். மேலே"னு  சொல்லவும்,  "மேலே சின்ன மேடம் இருப்பாங்க"னு சொல்லிட்டு, பவித்ராவைக் கூட்டிட்டு உடனே கிளம்பிட்டேன். அப்படின்னா அதுக்கு கொஞ்சம் முன்னாடிதான் யாராவது வந்து போயிருக்கணும்.
"இன்டெர்காமில் நீ என்ன பேசினே?"
"செக்யூரிட்டி இன்டெர்காமில், ரமேஷைப்பத்தி விசாரிக்க ஒருத்தர் வந்திரு க்கார்.. மேலே அனுப்பவானு கேட்டார்"
"எதைப்பத்தி விசாரிக்க ?"
"அவர் மேரேஜ் விஷயமா ?"
"நீ என்ன சொன்னே ?"
"அவரை அனுப்ப வேண்டாம். இன்டெர்க்காமை அவர் கையில் குடுங்கன்னு சொன்னேன்.  அவர்  "மேடம் உங்க கம்பெனியில் ஒர்க் பண்ற ரமேஷுக்கு பெண் குடுக்கிறவங்க அவரைப்பதி விசாரிச்சு சொல்ல சொன்னாங்க. ஆள் எப்படி"னு கேட்டார்.
"அதுக்கு நீ என்ன சொன்னே ?"
"அவன் ஒண்ணாம் நம்பர் அயோக்கியனாச்சே.. அவனுக்குப் பொண்ணைக் குடுக்கிறதுக்குப் பதில் ஏதாவது ஒரு கிணத்தில் கொண்டுபோய் தள்ளலாம். அது உங்க பொண்ணுக்கு நீங்க செய்ற உபகாரமா இருக்கும்"னு சொன்னேன்.
"வேறே ஏதாவது கேட்டாரா ?"
"அவர் கேட்கிறதுக்கு முன்னமே நானே அவர்கிட்டே, " அவன் ரொம்ப நல்ல பையன்னு அவன் வீட்டு ஆளுங்க சொல்லி இருப்பாங்க. எல்லாவனும் நல்லவன் வேஷத்தைப்போட்டிருக்கிறான்.நல்லவன்யாரு கெட்டவன்யாருனு கண்டுபிடிக்கிற மிஷின் ஒண்ணை யாராவது கண்டுபிடிச்சா அவனுக்கு கோவிலே கட்டலாம்"னு சொல்லிட்டு உடனே  லைனை கட் பண்ணிட்டேன்."
"அன்னிக்கு சொன்னது உனக்கு இன்னும் அப்படியே மனப்பாடமா இருக்குது போலிருக்குது ?"
"ஆமாம்.. ஷூட்டிங்கில் இந்த டயலாக் தான் பேசினாங்க "
"ஷூட்டிங்கா ?"
"ஆமாம் "
"நீ எங்கே போய் ஷூட்டிங் பார்த்தே? யாரோடே போனே?"
"யாரோடேயும் போகலே. அன்னிக்கு எங்க மேத்தமேட்டிக் மிஸ் என்னை கிளாஸை விட்டு வெளியே அனுப்பிட்டாங்க. ஸ்கூல் முடியற டைம் வரை வெளியில் நின்னேன். அப்போ ஸ்கூல் காம்பவுண்ட் வால் பக்கத்திலேயே டீவீ சீரியலுக்கு ஷூட் பண்ணிட்டு இருந்தாங்க.. நான் இப்போ சொன்னேனே .. இதே டயலாக்தான்.. இதை ஆப் அன் ஹவருக்கு மேலே ஷூட் பண்ணிட்டு இருந்தாங்க. அதை  நான் பார்த்திட்டே இருந்தேனா? அது எனக்கு மைன்ட்டில் அப்படியே  ரெக்கார்ட் ஆயிட்டது. இன்டெர்காமில் சேம் மேட்டர் பத்தி அந்த ஆள் கேட்கவும் நான் ஷூட்டிங்கில் கேட்ட டயலாக்கை அப்படியே சொல்லி ட்டேன் "
"முட்டாள்..முட்டாள்.. எப்பேர்ப்பட்ட மடத்தனத்தை நீ  பண்ணி இருக்கிறேனு தெரியுமா  உனக்கு ?"
"ஸாரிக்கா .. நான் வேணும்னு சொல்லலே "
"நீ பிளான் பண்ணி வேணும்னு சொல்லலே.. அதோட எபெக்ட் உன்னை .. நம்ம குடும்ப கவுரவத்தை , டாடியை எங்கே கொண்டு போய் விட்டுட்டு பார்த்தியா ? ச்சே .. நடந்தது என்னனு தெரியாமே நான் வேறே அந்த ரமேஷை திட்டித் தீர்த்துட்டேன். பள்ளிக்கூடம் போகாத, படிப்பு வாசனையே இல்லாத, படிக்காத முட்டாள் கூட இப்படி ஒரு காரியத்தை செய்யாது... நீ செஞ்சிருக்கே...உன்னை  .. ஐயோ உன்னை என்ன பண்றதுனே தெரியலியே "
இதைக்கேட்டதும் பவித்ரா கதறி அழஆரம்பித்துவிட்டாள். அவளை சமாதான   படுத்துவதற்குள்  போதும் போதுமென்று ஆகிவிட்டது.
"சரி ... நீ ரெஸ்ட் எடுத்துக்கோ.. எதைப் பத்தியும் வொரி பண்ணிக்காதே. நாம எல்லாத்தையும் சரி பண்ணிடலாம். நான் கேண்டினுக்குப் போயிட்டு வர்றேன். உனக்கு ஏதாவது வேணுமா?"
"வேண்டாம் "
பவித்ராவை சமாதானப்படுத்திவிட்டு வெளியில் வந்து ராம்குமாரை போனில் தொடர்பு கொண்டு விஷயத்தை சொன்னதும் சில வினாடிகள்வரை அவரிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.
"இந்தப்பொண்ணு ஏன் இப்படியொரு மடத்தனத்தைப் பண்ணுச்சு.. ரெண்டுங்  கெட்டான்  வயசுங்கிறது சரியாத்தான் இருக்குது.  பின்விளைவுகளைப் பத்தி யோசிச்சுப் பார்க்கிற பக்குவமே இந்தக் குழந்தைங்களுக்கு இருக்கிறதில்லே.. நிதானிக்காமே எதையாவது செய்யவேண்டியது.. பிறகு நிதானமா பீல் பண்ண வேண்டியது.  சரி.. பவி இப்போ எப்படி இருக்கிறா ?"
"நவ் ஷீ இஸ் ஆல்ரைட். நடந்த எல்லாத்தையும் சொல்லிட்டு ஒரே அழுகை. அவளை சமாதானப் படுத்தறதுக்குள் போதும் போதும்னு ஆயிட்டுது .. ஸார் .. நான் ஏன் உங்களை காண்டாக்ட் பண்ணினேன்னா, தப்பு எங்க சைடில் இருக்குது. அந்த ரமேஷை வார்ன் பண்ணி விட்டுடலாமா ?"
"என்ன மேடம் ! வாட் நான்சென்ஸ்.. அவனை சும்மா விடறதா? தூக்கில் போட்டால்கூட தப்பே இல்லை.  தப்பு உங்க சைடில் இருக்கிறதாவே வச்சுக்கு வோம்.  இதை சொன்னது நீங்கதானா. அதனாலே எனக்கு இந்தமாதிரி நஷ்டம் என் லைஃபில் எல்லாத்தையும் இழந்துட்டேனேன்னு நேருக்கு நேரா நின்னு சொல்லி இருந்தா... கேட்டிருந்தா .. அந்த சம்பவத்துக்கு நஷ்ட ஈடா நீங்களே ஒரு பிசினெஸை ஏற்பாடு பண்ணி குடுத்திருப்பீங்கதானே.. நடந்த சம்பவ த்தால் அவனுக்கு பொருள் நஷ்டம். இவன் பண்ணின காரியத்தால் உங்க சைடில் நீங்க இழந்ததை கணக்குப்போட்டுப்பாருங்க. ஒரு நல்ல குடும்பத்தில்.. ஒரு நல்ல தாய்க்கு மகனா பிறந்த ஒருத்தன் இதையெல்லாம் நினைச்சுப் பார்க்கக்கூட கூசுவான். இவன் எந்த உறுத்தலும் இல்லாமே என்ன ஒரு டிராமா கிரியேட் பண்ணி இருக்கிறான்.. இந்த சாக்கடையை நினைச்சு நீங்க  பீல் பண்ணாதீங்க.. கொறஞ்சது ஒரு ஏழு வருஷமாவது உள்ளே இருந்துட்டு வரட்டும்.. நீங்க பவியை மட்டும் ரெடியா இருக்க சொல்லுங்க. நான் நாளைக்கு வந்து பிக்கப் பண்ணிக்கிறேன். நாளைக்குப் பாப்போம்"னு சொல்லி லைனை கட் பண்ணினார்.
அன்றே பவித்ராவை கிளினிக்லிருந்து  வீட்டுக்கு அழைத்துச் சென்று, மறுநாள் பிரயாணத்துக்கான ஏற்பாடுகளை செய்வதில் அன்றைய இரவு கழிந்தது. அன்று இரவு முழுக்க இருவருமே தூங்கவில்லை.
மறுநாள் பவித்ரா ராம்குமாரை பின்தொடர்ந்து வீட்டை விட்டு வெளியேறி னாள்.  
-----------------------------------------------------------------------------    இது...இதுதான் நடந்து முடிந்த சம்பவங்கள்... வீட்டை விட்டுக் கிளம்பும் முன்பாக  "அக்கா.. எனக்கு என்ன நடக்குது.. என்னைச் சுற்றி என்ன நடக்குதுன்னே எனக்குப் புரியலே. ஏதோ கனவு மாதிரி இருக்குது.. இப்போ நான் வீட்டைவிட்டு வெளியே போறேனே .. அதுகூட ஏதோ ட்ரீம் போலத்தான் இருக்குது" னு நீ சொன்னே. எதையும் யோசித்து செய்யணும்.. நடந்த தவறிலிருந்து நீ விடுபட்டு வெளியே வரணும்.. உன்னை சுற்றி நடந்தது என்ன? நீ வளர்ந்த விதம் என்ன என்கிறதை உனக்குப் புரிய வைக்கணும்கிற எண்ணத்தில் நம் வீட்டில் நடந்த சம்பவ ங்களை ஒரு கதைபோல எழுதி உனக்கு அனுப்புகிறேன். எந்தவொரு இடத்திலும் "நீ இப்படி பண்ணினே ..நீ இப்படி செஞ்சே"னு எழுதாமே பவித்ரா.. பவித்ரா என்று சொல்லி இருக்கிறேன். "நீ" என்று குறிப்பிட்டு எழுதினால் அது உனக்குள் ஒரு குற்ற உணர்ச்சியைத் தூண்டும். அதனால் தான். இப்போது என்னைப் பிரிந்து நீ சென்றுவிட்டாலும் என்னிடம் திரும்பி வருவாய் என்ற நம்பிக்கை இருக்கிறது .. நல்லதே நடக்கும்...
காலம் ஒருநாள் மாறும்.. நம் கவலைகள் யாவும் தீரும் ! என்ற வாசகத்துடன்  அந்த டைரி முடிவு பெற்றிருந்தது.
டைரியைப் படித்து முடித்த பிரபு, இதுக்குப்பிறகு என்ன நடந்ததுனு பவித்ரா கிட்டே  கேட்டுத் தெரிஞ்சுக்கலாம் என்ற முடிவுடன் அவளது குடிலை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

                                                                               --------------------- தொடரும்---------------------

Saturday, August 26, 2017

வேண்டாமே வேறு பவித்ரா ...(25)

Image result for cartoon of young girl speaking in mobail
"இல்லே மேடம்.. நடந்தது இதுதான்னு நாளைக்கு எல்லா பேப்பரிலும் மீடியா விலும் நியூஸ் வர ஏற்பாடு பண்ணிடறேன்.. அதையெல்லாம் செய்ய எனக்கு நிறைய பிரெண்ட்ஸ் சர்க்கிள்.. இன்ப்ளுயன்ஸ் இருக்குது . நான் நாளைக்கு கிளம்பலாம்னு இருக்கிறேன்"
"பார்த்தீங்களா.. வெளியே நிக்க வச்சே பேசிட்டு இருக்கிறேன். வரவர என்ன செய்றேன்..எதை செய்றேன்னே எனக்கு புரியலே.."
"அந்த அளவுக்கு அப்செட் ஆகி இருக்கீங்க "
"உங்க ரிலேஷன் எப்படி இருக்கிறார் ?"
"அவர் நேற்றே டிஸ்சார்ஜ் ஆயிட்டார்.. உங்க மேட்டருக்காக நான் அதிகமா ஒருநாள் தங்கும்படி ஆயிடுச்சு.. பவித்ராவை எங்க வில்லேஜுக்கு அனுப்ப அப்ஜெக்சன் எதுவும் இல்லையே ?"
"எப்போ போவோம்னு அவ துடிச்சிட்டு இருக்கிறா "
"அவளுக்கு தேவையானதை ரெடி பண்ணுங்க.. நான் நாளைக்கு பிளைட்டில் கிளம்பறேன்.  என்னோட அழைச்சிட்டுப் போறேன். சென்னையில் ரெண்டுநாள் இருக்கட்டும். என் வொய்ப் ஷோபா.. ரீசெண்டா மேரேஜ் ஆச்சு. அவங்களை வெளியே அழைச்சிட்டுப் போகக்கூட நேரமில்லே. நான் அடுத்த படத்துக்கான வேலையில் பிஸி. அன்-எக்ஸ்பெட்டடா டில்லியில் அதிகநாள் தங்கும்படி ஆயிடுச்சு. சென்னைக்குப் போனதும் நிற்கக்கூட நேரமில்லாமே ஓட வேண்டி யிருக்கும். என் வொய்ப் ஷோபா, பவித்ராவை வள்ளிகிட்டே  ஹேண்ட்  ஓவர் பண்ணிடுவாங்க. அவளோட சேப்டி பத்தி நீங்க வொரி பண்ண வேண்டாம். உங்கவீட்டைவிடவும் ரொம்பபாதுகாப்பான இடம் அது. வேணும்னா நீங்க கூட எங்களோடு சேர்ந்து வந்து அந்த இடத்தையெல்லாம் பார்த்துட்டு வரலாம். "
"வர நான் ரெடிதான் ஸார் .. டீலை பிரேக் பண்ணிட்டதா சொல்லி பவித்ரா கோவிச்சிட்டு வேறே எங்காவது போயிடப்போறா.."
"அதுவும் சரிதான்.. அப்போ நாங்க நாளைக்குக் கிளம்பறோம் "
ராம்குமார் அங்கிருந்து கிளம்பிப்போனதும், பவியைப் பார்க்க ஓடவேண்டிய தாயிற்று .
மனமும் அறிவும் ஒரு நிலையில் இல்லை.
இந்த  ரமேஷ் மேலே எவ்வளவு நம்பிக்கை வச்சிருந்தேன். எல்லாவற்றையும் ஒரு நொடியில் கலைத்து விட்டானே.
ச்சே .. மனிதர்களுக்குள் இந்த அளவுக்கு வெறித்தன்மை புதைந்து கிடக்கிறதா ?
பார்க்க எவ்வளவு சாதுவாக, நல்லவனாக இருந்தான்.. அவனா இப்படி ?
ஒருவேளை எல்லாமே வேஷந்தானோ ?
இவன் வக்கிரபுத்திக்கு என்மேலே பழிபோடுகிறான்.  ராஸ்கல்.
இவ்வளவு அயோக்கியத்தனத்தையும் பண்றதுக்கு முன்னாடி எங்கிட்டே ஒரு வார்த்தை...ஒரேயொரு வார்த்தை கேட்டிருக்கலாமே.. உங்ககிட்டே  என்னைப் பத்தி விசாரிக்க வந்தவங்ககிட்டே ஏன் அப்படி சொன்னீங்கனு ? கேட்டிருந்தால் அன்னிக்கே பிரச்னை சால்வ் ஆகி இருக்குமே.
எங்களால் நீ பாதிக்கப்பட்டிருந்தால், நாங்களே உனக்கொரு பெண்ணைப் பார்த்து திருமண ஏற்பாடு செய்திருப்போம். உன்னோட பிசினெஸ் பண்ற ஆசையை நிறைவேத்தி வச்சிருப்போமே..
அமைதியா இருந்து, ரொம்ப நல்லவன் வேஷம் போட்டே எங்க கழுத்தை அறுத்திட்டியே பாவி..
இப்படியெல்லாம் பண்ணி நீ எதை அடைஞ்சிட்டே ? என்னத்தை பெரிசா சாதிச்சிட்டே... ஒண்ணுமே இல்லையடா பாவி..கடைசியில் கம்பியைத்தானே எண்ணப்  போறே ?
உனக்கெல்லாம் நல்ல சாவு கிடைக்காது..
"மேடம் !"
"உம் ?"
"க்ளினிக் வந்திடுச்சு "
"ஸாரி .. ஏதோ யோசனையில் இருந்திட்டேன்."
பவித்ரா இருந்த அறைக்கு வந்தபோது அவள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தாள்.
நான் சொன்னதா இந்தப்பாவி அடிச்சு சொல்றானே... ஒருவேளை ஏதாவது ஒர்க் டென்ஷனில் நானே சொல்லி இருப்பேனோ?
ஊஹூம்.. கண்டிப்பா இருக்காது.. ஒரே குழப்பமா இருக்குதே.
இவனும் அந்த சண்டைக்கோழி ரமேஷும் ஒண்ணாச்சேர்ந்துதானே ஊர் சுத்துவாங்க. ஒரே ஊர்க்காரங்க வேறே .. அவரைக் கேட்டால் என்ன? அதுதான் சரி.  ஏதாவது விவரம் கிடைக்குமானு பார்க்கலாம்.
"ஹல்லோ.. மேனேஜர் ஸார் "
"சொல்லுங்க மேடம் "
"ரமேஷ் இருக்கிறாரா ?'
"அவரைப்பத்திதான் எந்த தகவலும் இல்லையே மேடம் !"
"இன்னொரு ரமேஷை .. எப்பவும் சண்டைக்கு ரெடியா இருப்பாரே! அவர்..?"
"கொஞ்சம் முன்னாடி அவரை கேன்டீனில் பார்த்தேன்."
"அவர்கிட்டே என்னை உடனே காண்டாக்ட் பண்ணனும்னு சொல்லுங்க."
"ஓகே மேடம். உடனே சொல்றேன் "
பவித்ரா படுக்கையில் உருண்டுகொண்டிருந்தாள். அவள் கீழேவிழுந்து விடாத படி அவளை நகர்த்தி படுக்க வைத்துவிட்டு பெட்டின் விளிம்பில் உட்கார்ந்து கொண்டு போனை எதிர்பார்த்து காத்திருந்தபோது, மேனேஜருக்கு இன்பார்ம் பண்ணி ஐந்து நிமிஷம்கூட ஆகலே.. ஆனால் பலமணி நேரம் காத்திருப்பது போல பிரமை.
ரமேஷை தேடிப்பிடிச்சு அவருக்கு இன்பார்ம் பண்ண மேனேஜருக்கு டைம் வேணும்தானே என்று மனசுக்கு சமாதானம் சொல்லிக் கொண்டிருந்தபோது மொபைல் ஒலித்தது.
"ரமேஷ் ?"
"யெஸ் மேடம்... பேச சொன்னீங்களாம் !"
"ஆமாம்..  உங்க பிரென்ட் ரமேஷுக்கு என்ன ஆச்சு ? ஆளையே காணலே !"
"தெரியலே மேடம் "
"நீங்கதானே நம்ம ஆபீஸிலேயே அவருக்கு நெருங்கின சிநேகிதம். நீங்க ரெண்டுபேரும் ஒரே அறையில்தானே  தங்கி இருக்கீங்க.  ஒரே ஊர்க்காரங்க வேறு! இவ்வளவு சர்வ சாதாரணமா தெரியலைனு சொல்றீங்க.. கல்யாண வேலையில் மும்முரமா இருக்கிறாரா? அதை நமக்கு இன்பார்ம் பண்ண மறந்துட்டாரா ?"
"அப்படி எதுவும்இல்லை மேடம்.. அந்த அலையன்ஸ் விஷயத்தில் ரொம்பவும் ஹோப் வச்சிருந்தான்.. அது சரிவரலே போலிருக்குது "
"ஏன் ?"
"என்ன மேடம் இப்படிக் கேக்கறீங்க? அவரைப் பத்தி விசாரிக்க பொண்ணு வீட்டுக்காரங்க வந்தப்ப,அவங்களுக்கு திருப்தியான பதிலை நீங்க சொல்லலே. பொண்ணு வீட்டுக்காரங்க  வேறே இடம் பார்த்துக்கறோம்னு சொல்லிட்டாங்க. அந்த இடம் அமைஞ்சிருந்தா இவனுக்கு பிசினெஸ் பண்ண ஏற்பாடு பண்ணிக் கொடுத்திருப்பாங்க.  அது முடியாமே போனதிலே  இவன் ரொம்பவும் அப்செட். ராத்திரி முழுக்க தூங்காமே சிகரெட்டை ஊதித்தள்ளிட்டு இருந்தான். நான் எவ்வளவோ சமாதானம் சொன்னேன். நாளைக்கு நாம ரெண்டு பேரும் போய் மேடத்தைப்பார்த்து பேசுவோம்னு சொன்னேன். சரினு சொல்லிட்டு படுத்தான். மறுநாள் காலையில் நான் எழுந்திருக்கிறதுக்கு முன்னாடியே எழுந்துட்டான் போலிருக்கு.. அவன் படுக்கை அப்படியே விரிச்சாப்லயே இருந்துது. அதை சுருட்டி வைக்கக்கூட உனக்கு ஒரு ஆள் வேணுமானு நான் சொல்லிட்டே சுத்தி மடக்கி வச்சேன். எங்காவது வெளியில் போயிருப்பான். வந்திருவான்னு நினைச்சிட்டு நான் வேலைக்கு கிளம்பி வந்திட்டேன். வேலை மும்முரத்தில் எனக்கு இவன் மேட்டர் மறந்தே போச்சு. ஆபீசில் அவனை பார்க்க முடியலே. ரூமில் இருப்பான்னு நினைச்சு அங்கே போய்ப்பார்த்தேன். அங்கேயுமில்லை. அவன் திங்க்ஸ் எதுவும்இல்லை..சரி..ஊருக்குப்போய் இருப்பான், பொண்ணு வீட்டுக்காரங்களை சமாதானப்படுத்தறதுக்குனு நான் நினைச்சேன்.   அப்புறமா ஒருநாள் மேனேஜர் எங்கிட்டே அவனைப்பத்தி விசாரிச்சார். அதுக்கப்பறந்தா ன் மேடம் அவன் யாருக்கும் தகவல் சொல்லாமே போயிருக்கிறது எனக்கு தெரிஞ்சுது "
"அவரை காண்டாக்ட் பண்ண நீங்க ட்ரை பண்ணலையா ?"
"போன் பண்ணினேன். எந்த ரெஸ்பான்ஸும் இல்லே. கோபத்தில் இருப்பான் . இல்லாட்டா வருத்தத்தில்இருப்பான். ரெண்டுந்தணிஞ்சா போனமாதிரி திரும்ப இங்கே வந்துருவான்னு எதிர்பார்த்துட்டு இருக்கிறேன் மேடம்."
"ஓஹோ ?..நான் அப்படி சொல்லி இருப்பேன்னு நீங்க நினைக்கிறீங்களா ?"
"யார் மனசில் என்னமாதிரி எண்ணம் எப்படி ஓடும்னு யாராலே சொல்ல முடியும் மேடம் ?"
"சரிப்பா.. நான் சொன்னதா அவர் நம்பி இருந்தா, அதை எங்கிட்டே கேட்டு க்ளியர் பண்ணி இருக்கலாமே ?"
"........."
"என்ன ரமேஷ்.. பதிலைக் காணும் ?"
'உங்க கேள்விக்கு அவன்தான் பதில் சொல்லணும்..மேடம் இப்படி துரோகம் பண்ணிட்டாங்களே. அவங்க மேலே எவ்வளவு மதிப்பு, மரியாதை வச்சிருந்து உண்மையா உழைச்சேன். அந்த உழைப்புக்கு கிடைச்ச பரிசு இது. மேடம் இப்படி பண்ணிட்டாங்களேன்னு திரும்பத்திரும்ப சொல்லிட்டே இருந்தான் மேடம். "
"இப்போ உங்க பிரென்ட் எங்கே இருக்கிறார்னு தெரியுமா?"
"தெரியாது மேடம் !"
"போலீஸ் கஸ்டடியில் இருக்கிறார்.. அன்னிக்கு நடந்த பவித்ரா மேட்டர் இவனோட செட்டப்.. ராஸ்கல் பிளான் போட்டு பண்ணி இருக்கிறான் "
"மேடம்.. என்ன சொல்றீங்க ? என்ன சொல்றீங்க மேடம்? நிஜமாவா ?"
பதிலேதும் சொல்லாமல் போனை கட் பண்ணினபோது, "சுமி.. அன்னிக்கு ரமேஷ் பத்தி அப்படி சொன்னது நான்தான் !" என்று சொல்லிவிட்டு மடியில் படுத்து விசும்பியபோது, வானம் பூமி எல்லாமே சேர்ந்து சுற்றுவது போல் இருந்தது.

                                                                       ----------------------  தொடரும் -------------------------

Friday, August 25, 2017

வேண்டாமே வேறு பவித்ரா ...(24)

Image result for cartoon of a young lady and police man
ராம்குமாரிடம் இருந்து போனை எதிர்பார்த்துக் காத்திருந்ததுதான் மிச்சம். அன்றும் போன் எதுவும் வரவில்லை. மறுநாளும் வரவில்லை.
அவருடைய போன் நம்பரைக் கேட்டு வாங்காதது அப்போதுதான் நினைவுக்கு வந்தது. என்னோட நம்பரை அவர் கேட்டு வாங்கும்போது, உங்களோட காண்டாக்ட் நம்பர் என்னனு கேட்கக்கூட புத்தியில்லாத, முட்டாள் ஜென்மமா    இருந்திருக்கிறேனே! 
அவரோட ரிலேஷன்ஸ் யாரோ இங்கே அட்மிட் ஆயிருக்கிறதா சொன்னார் ? அவர் யார் ? என்ன ப்ராப்ளம்? எந்த வார்டில் இருக்கிறார்ங்கிற டீடைல்ஸ் கூட வாங்காமே விட்டுட்டோமே.
நடந்து முடிந்த.. நடக்கின்ற சம்பவங்களால் எதையும் யோசிக்கிற நிலையில் மனமும் அறிவும் இல்லை என்பதுதான் நிஜம்.
அவராகக் கூப்பிட்டு பேசாதவரை, காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை.
பவித்ரா வேறு, "சுமி.. நான் எப்போ வயல்வெளிக்கு கிளம்பணும்னு பிரதரைக் கேட்டு சொல்"  என்று துளைத்தெடுத்துக் கொண்டிருந்தாள். 
"நான் டாக்டரைப் பார்த்து உன்னை எப்போ டிஸ்சார்ஜ் பண்றாங்கனு கேட்டுட்டு வரேன்" என்று வெளியில் வந்தபோது மொபைல் ஒலித்தது.
போன் அட்டென்ட் பண்ணினதும், "சுமி மேடம்.. குட் நியூஸ்.. அந்த ராஸ்கல் மாட்டிக்கிட்டான். பவித்ரா மொபைலில் இருந்த போன் நம்பரை வச்சு இவனை பிடிச்சிட்டோம். ஒரு லாட்ஜ்ஜோட லேன்ட்லைன் நம்பர் அது. நடந்து முடிந்தது எல்லாமே ஒரு நாடகம்தான். அன்னிக்கு நடந்தது நிஜமான ரெய்ட் இல்லை. அவனுக யாரும் நிஜமான போலீஸ் இல்லே. அதான் உங்க பேமிலி பிரென்ட் ராமானுஜம்ஸார் அவனுக கிட்டே, "நான் சி.எம்.க்கு போன் பண்ணப் போறதா" சொன்னதும் அங்கிருந்து ஓடிட்டாங்க. இவங்களே எல்லாம் செட் பண்ணி, மொபைலில்வீடியோ எடுத்து அதை டீவீ  சேனலுக்கு கொடுத்திருக்காங்க. எந்தவிஷயத்தையும் அவங்கதான் முந்திக்குடுக்கணுங்கிற ஆர்வக் கோளாறு அவங்களுக்கு. அந்த  இன்சிடென்ட் பொய்யா நிஜமானு தெரியாமே சேனல் அதை அப்படியே டெலிகாஸ்ட்  பண்ணிட்டாங்க .."
"ஓ .. காட் ! ஒரு டிராமா பண்ண அப்படி என்ன பகை அவங்களுக்கு பவித்ரா மேலே.?"
"அவங்க கோபம் பவித்ரா மேலே இல்லை. உங்க மேலேதான். உங்களைப் பழி  வாங்க அவளை பகடைக்காயா யூஸ் பண்ணி இருக்காங்க.. அவ்வளவுதான்."
"அந்த ராஸ்கலை நான் பார்க்கணும்.  எங்கே வரணும் ?"
"நீங்க எங்கேயும் வரவேண்டாம். உங்க வீட்டில் போய் வெயிட் பண்ணுங்க. அந்த ராஸ்கலையும்  என்னோட பிரென்ட்.. போலீஸ் அபீஷியல் ஒருத்தரை யும் அழைச்சிட்டு அங்கே வந்துடறேன். உங்க அட்ரஸ்ஸை இதே நம்பருக்கு எஸ்.எம்.எஸ் பண்ணுங்க. இந்த கிரிமினல் கிட்டே அட்ரஸ் கேட்டா எங்களை வேறே எங்காவது கூட்டிட்டுப் போனால்கூட ஆச்சரியப்பட எதுவுமில்லை. லாட்ஜ் மேனேஜர்கிட்டே டீவீ சீரியல் ஷூட்டிங்னு சொல்லி பணம் குடுத்திரு க்கிறான். நிஜம்னு நம்பி பணத்தை வாங்கிட்டு அவர் தன்னோட பெர்சனல் ஒர்க்கை கவனிக்க வெளியில் போயிட்டார். லாட்ஜ் ஸ்டாப்புங்க யாருக்கும் எந்த விஷயமும் தெரியலே. மேனேஜர் சொல்லித்தானே ஷூட் பண்றாங்கனு கண்டுக்காமே விட்டுட்டாங்க. ராஸ்கல் முதலில் என்னமா துள்ளினான். வாங்கின அடியில் உண்மையை ஒத்துக்கிட்டான். மேடம்.  அவன் டார்கெட்  நீங்கதான். பவித்ரா இல்லே.. நேரில் வந்து பேசறேன் !".    
ராம்குமார் சொன்னதைக்கேட்டு தலைசுற்றியது. மயக்கம்வருவது போல் இருந்தது.  அங்கிருந்த சேரில் சிறிது நேரம் உட்கார்ந்திருந்தவள், பரபரப்புடன் எழுந்து, "பவி .. நான் ஒரு அர்ஜென்ட் வேலையா வெளியில் போறேன். நீ சமர்த்தா சாப்பிட்டு, மெடிசின் போட்டுட்டு படுத்துக்கணும். நாளைக்கே நீ வயல்வெளி போகலாம்... ஓகே ?"
"டபுள் ஓகே !" - பவியின் குரலில் உற்சாகம் வழிந்தோடியது.
வீட்டுக்கு வந்த பின்னும் பரபரப்பு அடங்கவில்லை.
இந்த அளவுக்கு பகை வர என்ன காரணம்? மத்தவங்க மனசு நோகிறாப்லே பேசினது கூட கிடையாதே.
சரி.. ஸார் வந்ததும் தெரிஞ்சிடப் போகுது.
இன்றைக்கு என்னவோ டைம் ஆமை வேகத்தில் நகருதே .  ச்சே .. யாரோட வேலை இது?
வாசலில் கார் ஹார்ன் கேட்டதும் ஓடிச்சென்று செக்யூரிட்டி கதவைத் திறந்தார்.
வந்தவர்கள் வீட்டுக்குள் வரும்வரை கூட காத்திருக்கப் பொறுமையில்லை.
காரின் அருகில் ஓடிச்சென்று பார்த்தபோது, ராம்குமார் முதலில் இறங்க அவரைத் தொடர்ந்து ரமேஷ் இறங்கினான்.
அந்த ராஸ்கல் யார் என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆவலில் காருக்குள் எட்டிப்பார்த்தபடியே, "என்ன ரமேஷ் ! என்ன ஆச்சு உங்களுக்கு.? ஆபீஸ்க்கு வரலே.. லீவ் பற்றி இன்பார்ம் பண்ணலே. வீட்டுக்கு லெட்டர் அனுப்பினா, ஆள் இல்லேனு லெட்டர் திரும்பி வருது! எங்கே போயிருந்தீங்க ? என்ன விஷயம் ?" என்று விசாரித்தபோது, "மேடம் கேக்கிறாங்க...பதில் சொல்லு!"னு  ரமேஷிடம் சொன்ன ராம்குமார், "சுமி மேடம்.. நடந்து முடிஞ்சது எல்லாமே ஸாரோட திருவிளையாடல்தான். பக்காவா பிளான் பண்ணி செஞ்சிருக்கிறான்.. பிறவி க்கிரிமினல் கூட இவன்கிட்டே ட்ரைனிங் எடுக்கணும்"
"என்ன சொல்றீங்க ? என்ன சொல்றீங்க ஸார் ? இவர் எங்க கம்பெனியில் ஒர்க் பண்றார். நல்லவர். எந்த வம்பு தும்புக்கும் போகாத சாப்ட்  டைப்!"
"சுமி மேடம்.. போதும் உங்க சர்டிபிகேட்.. எல்லா அயோக்கியத்தனத்தையும் பக்காவா பிளான் பண்ணி செஞ்சது இந்த கிரிமினல்தான்!"
"என்னாலே நம்ப முடியலே.. ரமேஷ் .. நீங்களா இவ்வளவும் செஞ்சது ! ஏன்?"
"என் கல்யாணம் உன்னாலே நின்னு போச்சு. உன் கல்யாணம் நடக்க விடாமே பண்ணத்தான் அப்படி செஞ்சேன் "
"என்ன ஒரு திமிரா பேசறான் பாருங்க" என்று சொல்லி அவன் தலையில் தட்டினார் அருகில் நின்ற போலீஸ் ஆபீஸர்.
யாருமே எதிர்பார்க்காத வகையில், அவன் சட்டைக்காலரைப் பிடிச்சு, "ஏன்.. ஏண்டா அப்படி பண்ணினே. உன் கல்யாணத்தை நான் நிறுத்தினேனா ?"னு அவன் கன்னத்தில் அறைந்து உலுக்கிக் கேட்டபோது ராம்குமார்தான் தடுத்து நிறுத்தினார்.
"முதலாளி வர்க்கம் நீங்க என்னிக்கும் சுகமா பல்லாக்கிலே சவாரி பண்ணனும்.. நாங்க காலமெல்லாம் உங்களுக்கு பல்லாக்கு தூக்கணும். அதுதானே உங்க எண்ணம். ஒருத்தன் முன்னேறணும்னு நினைச்சா உடனே அவன் மண்டையில் அடிச்சு உக்கார வச்சிடுவீங்களே !"னு குதர்க்கமான குரலில் கேட்டான் ரமேஷ்.
"அந்த அயோக்கியன் நிழல்கூட உங்க மேலே படக்கூடாது. நானும்... இதோ நிக்கிறாரே  என் பிரென்ட்.. இவருமா சேர்ந்து எவ்வளவோ கேட்டுப் பார்த்து ட்டோம். என் கல்யாணம் நின்னு, சொந்த பிசினெஸ் ஆரம்பிக்க நான் கண்ட கனவில் மண்ணை அள்ளிப் போட்டது மேடம்தான்.. அதான் அவங்க கல்யாண ஏற்பாட்டை நான்  தடுத்து நிறுத்தினேன்னு சொல்றான். "
"எனக்குப் புரியலே "
"என்னைப்பத்தி விசாரிக்கவந்த பொண்ணுவீட்டுக்காரங்ககிட்டே நீ என்னைப் பத்தி என்ன சொன்னே? எனக்குப் பெண் குடுக்கிறதுக்குப் பதிலா கிணத்தில் தள்ளலாம்னுதானே சொன்னே.. கல்யாண ஏற்பாடு நின்னு அதனாலே வர்ற வலி என்னனு நீ தெரிஞ்சுக்கணும்..அதுக்குதான் இதை பண்ணினேன். உனக்கு எவ்வளவு விசுவாசமா உழைச்சேன். உன்னை எவ்வளவு நம்பினேன். நம்ப வச்சு கழுத்தை அறுத்திட்டியே "
"முட்டாள்..முட்டாள்..யாருமேவிசாரிக்க வரலியே..பிறகு எப்படிடா  உன்னைப்  பத்தி சொல்லி இருப்பேன்  ?"
'பொய்.. பொய்...உடம்பெல்லாம் பொய்..பணக்கார வர்க்கத்துக்கே உள்ள பொய் ..செய்றதையும் செஞ்சிட்டு நடிக்கிறியா?"
"சீ .. நாயே.. உன் வஞ்சத்தைத் தீர்க்க இப்படியா சீப்பா ஒரு டிராமா போடுவே  ?"
"வேறே வழி ? இந்தபொம்பள வேண்டாம்னு சொன்னா உனக்குப் புருஷனா வர இருந்தவன் கேட்பானா ? இல்லே அவனைப் பெத்தவன்தான் கேட்பானா ? இப்ப பார்த்தியா ? ஒரு பிலிம் பார்த்ததுமே உன்னைத் தலைமுழுகிட்டு ஓடிட்டான். இது... இது.. இதுதான் எனக்கு வேணும்."
"நான் சொல்றத நம்ப நீ தயார் இல்லே. அது உன் இஷ்டம்.. பவித்ரா ஒரு குழந்தை மாதிரிடா. அவ மேலே சேத்தை வாரி இறைச்சிட்டியே.. எங்க டாடி உன் விளையாட்டுக்கு பலியாகிட்டாரேடா .. அப்படி என்ன வர்மம் உனக்கு எங்க மீது ? இதுக்கு நீ என்னைக் கொலை பண்ணி இருக்கலாமே ?"
"கொலை பண்ணினா?... நீ செத்துப் போயிடுவே.. நான் ஜெயிலுக்குப் போவேன். அவ்வளவு சீக்கிரம் உன்னோட துடிப்பு அடங்கக்கூடாது. நீ தினம் தினம் துடிக்கணும்." என்று வெறிபிடித்தவன் போல கத்திய ரமேஷ், "எங்கே அடிச்சா... யாரை அடிச்சா உனக்கு வலிக்கும்னு தெரிஞ்சு அடிச்சேன் "னு சொல்லிவிட்டு வெறி பிடித்தவன் போல சிரித்தான்.
"இவனை விட்டா வசனம் பேசிட்டே இருப்பான்.. இவ்வளவு சம்பவத்துக்கும் யார் காரணம்னு இப்போ தெரிஞ்சிட்டுதானே? மைனர் பொண்ணை கடத்தியது, பொய்யாக டிராமா பண்ணி அவ வாழ்க்கையை நாசம் பண்ணினது,  அவளைத் தற்கொலைக்கு தூண்டினது.. உங்க டாடி சாவுக்கு இவன்தான் காரணம்னு ஏகப்பட்ட கேஸ். நீங்க ஒரு பார்மல் லெட்டர் எழுதிக் கொடுங்க நான் சொல்ற மாதிரி.. மீதியை நாங்க பார்த்துக்கிறோம்" என்ற போலீஸ்ஆபீஸர் ராம்குமார் ஸாரிடம் விடை பெற்றபின் ரமேஷை அங்கே இருந்து தள்ளிச்சென்றார்.
"ஸார்..இவன்.. இவனா இப்படி ! இவன் இவ்வளவு செய்வான்னு நான் கற்பனை பண்ணிக்கூட பார்த்ததில்லையே. பைத்தியக்காரன் மாதிரி நான்தான் இவன் கல்யாணத்தை நிறுத்தினதா சொன்னதையே திரும்பத்திரும்ப சொல்றான். அது என்னனு எனக்குப் புரியலே. "
"விட்டுத் தள்ளுங்க.. இவன் பண்ணின கிரிமினல் வேலைக்கு இப்படியொரு சப்பைக் கட்டு .. கதை.. ராஸ்கல் வெளியே வரமுடியாதபடி அவர் பார்த்துக்கு வார். நீங்க நிம்மதியா இருங்க "
"எப்படி ஸார் ? எப்படி ? நடந்த எதையுமே சரி பண்ண முடியாதே. டாடி திரும்ப வருவாரா ? போனமானம் திரும்ப வருமா? பவித்ரா எந்த அளவுக்கு மனரீதியா பாதிக்கப்பட்டு இருக்கிறானு பார்த்தீங்கதானே !"
"ஒரு சம்பவம் உண்மையா பொய்யானு கூட தெரியாமே ஒரு சேனல் அதை டெலிகாஸ்ட் பண்ணி இருக்குது? அவங்க மேலேயும் கேஸ் பைல் பண்ணி  அவனுகளை  உண்டுஇல்லைனு பண்ணனும்."
"எதுவுமே எங்க டாடியைக் கொண்டு வந்து சேர்க்காதே.. யாருமே இல்லாத இடத்துக்குப் போறேன்னு சொல்லி கிளம்பி நிக்கிற பவித்ரா முடிவை மாத்த முடியாதே. விட்டுத்தள்ளுங்க ஸார் .. விழுந்தால் திரும்ப எழும்பவே முடியாத படி இந்த நாய்ங்களை ஆண்டவனாகப் பார்த்து அடிக்கிற நேரம் வரும். எங்க வயிற்றெரிச்சல் வீண் போகாது.."னு சொல்லிவிட்டு அழுவதைத் தவிர வேறு எதுவும் தெரியவில்லை.

                                                                        ----------------------  தொடரும்-----------------------

Thursday, August 24, 2017

வேண்டாமே வேறு பவித்ரா ...(23)

Image result for cartoon of young girl and man talking  in canteen
பவித்ரா கண்ணில் பட்டுவிடாதபடி மெதுவாக  வெளியில் வந்து ராம்குமாரைப் பார்த்தபோது ஓவென்று கதறி அழவேண்டும் போல இருந்தது.
"ப்ளீஸ் மேடம்.. கண்ட்ரோல் யுவர் ஸெல்ப். வாங்க கான்டீன்க்குப் போய் டிஸ்கஸ்  பண்ணலாம்."
பதிலேதும் சொல்லாமல் அவரைப் பின்தொடர்ந்து செல்லத்தான் முடிந்தது.
"என்ன சாப்பிடலாம் ?"
"காபி போதும்"
கவுண்டரில் பணம் கட்டி டோக்கன் வாங்கி, கையோடு காபி கப்பை ஏந்தி வந்த ராம்குமார்ஸாரைப் பார்க்கும்போது, "இதெல்லாம்செய்யணும்னு இவருக்கு தலைவிதியா? பாதையில் கண்ணெதிரில்அடிபட்டுக்கீழேகிடப்பவனைக்கூட கண்டுகொள்ளாமல் ஒதுங்கிச்செல்கிற ஜனசமுத்திரத்தில் இப்படியும் சில நல்ல  உள்ளங்கள்..ஓ காட்.. மனிதநேயம் இன்னும் செத்துவிடவில்லை .
"சாப்பிடுங்க.. காபி ஆறுது !"
இதைக் கேட்டதும் சிரிப்பு வந்தது. 
"நான் ஏதாவது தப்பா சொல்லிட்டேனா ? சிரிக்கிறீங்களே ?"
"இதே வார்த்தையை ... ஐ மீன் .. "சாப்பிடுங்க.. காபி ஆறுது"னு பவித்ரா கிட்டே சொல்லி இருந்தா, "காபியை குடிக்கத்தான் முடியும்.. சாப்பிட முடியுமா?"னு கேட்டிருப்பா"
"பாவம்... அன்புக்காக ஏங்குகிற ஜீவன். இன்னும் குழந்தைத்தனம் போகலே "
"அதனால்தான் எங்க டாடி அவளை வெளியே அனுப்பவே பயந்தார். அவர் கஸ்டடியில் எப்பவும் வச்சிருக்கணும்னு நினைச்சார். ஸ்கூல் விட்டால் கூட அவ கம்பெனிக்குத்தான் வரணுமே தவிர வீட்டில் தனியா இருக்கக்கூடாதுனு ஸ்ட்ரிக்ட்டா சொல்லுவார் "
"வீட்டிலிருந்த ஒரு பொண்ணு காணாமே போய், அவளைப்பத்தி டீவீயில நியூஸ் வர்ற வரை அவளை யாரும் கேர் எடுத்துப்  பார்க்கலையா ?"
"வீட்டில் பங்க்சன் நடக்கற நேரத்தில் நேரங்காலம் தெரியாமே இவ ஏதாவது விஷமத்தனம் பண்ணிட்டு இருப்பாளேனு டாடி அவளை 'உன்னோட ரூமில் இருக்கணும். பங்க்சன் நடக்கறப்பத்தான்  ஹாலுக்கு வரணும்"னு  சொல்லி இருந்தார். அதனாலே அவ ரூமுக்குள் இருக்கிறதா நினைச்சோமே தவிர அவ வீட்டை விட்டு வெளியில் போனதை யாருமே கவனிக்கலே "
"இதையெல்லாம் யார் செஞ்சாங்க ?"   
"அதை வற்புறுத்திக் கேட்கப்போய்த்தான் இந்தப்பொண்ணு கையை கத்தியால் வெட்டிக்கிட்டு பெட்டில் அட்மிட் ஆகியிருக்கிறா !"
"உங்களுக்கு சொந்தபந்தத்தில் விரோதிங்கனு ..."
"நாங்க டில்லியில் செட்டில் ஆகி ரொம்ப வருஷம் ஆச்சு. எங்களோட  சொந்த பந்தங்களை நாங்க சந்திக்கிறதே ரொம்பவும் ரேர். ரொம்ப வருஷத்துக்குப் பிறகு எங்க வீடு சொந்தபந்தங்களாலே மூச்சுத்திணறிப்போய் இருந்துச்சு. அந்த சந்தோசம் அதிகநேரம் நிலைக்கலே.. யாரையும் பார்க்கக்கூடாதுங்கிறது எங்க எண்ணம் இல்லை.  படிப்பு, பிசினெஸ்.. அதுஇதுனு வேறே எதையும் சிந்திக்க முடியாதபடி ஒரு ஓட்டப்பந்தயத்தில் நாங்க ஓடிட்டு இருந்தோம்."
"தொழில் முறையில் ஏதாவது....?"
"இதுவரை எந்த பிரச்னையும் இல்லே. லேபர்ஸ் அப்பப்போ முட்டிக்குவாங்க. கொஞ்சநேரம் கழிச்சுப் பார்த்தா கேண்டினில் நின்னு கைகோர்த்து பேசிட்டு இருப்பாங்க. அதனால் அவங்களுக்குள் நடக்கிற சின்ன சின்ன சண்டைகளில் நிர்வாகம் தலையிடறது கிடையாது. "
"இவ்வளவு பெரிய விஷயம் நடந்திருக்குது.. சம்பந்தப்பட்ட டீவீ சேனல் கிட்டே வீடியோ எப்படி கிடைச்சது.. அந்த ஏரியா எங்கே இருக்குது? செஞ்சது யார்னு விசாரிச்சீங்களா ?"
"ஸார் .. இதுமாதிரி விஷயங்களில் எனக்கு எந்த அனுபவமும் கிடையாது.. காலேஜ் ஸ்டடி முடிஞ்சதும் டாடிக்கு ஹெல்ப் பண்ண ரெண்டு மூணு வருஷமா கம்பெனி கணக்கு, நிர்வாகத்தை பார்த்துக்கறேன். அவ்வளவுதான்.. இது எல்லாம் எங்க குடும்பத்துக்கு கொஞ்சமும் தெரியாத ஒண்ணு. பங்க்சன் நடக்கறடைமில்..ஈவினிங் 5.30க்கு போன் வருது..டீவீயை பார்க்க சொல்றாங்க ..அதில் பவித்ரா. அதைப் பார்த்ததும் டாடி கீழே சாய்ஞ்சிட்டார். நரேன் பேமிலி மெம்பர்ஸ் நாங்க இப்பவே கிளம்பறோம்னு நிக்கிறாங்க.. அவங்களை அனுப்பி வச்சிட்டு டாடியை ஆஸ்பிடலுக்கு தூக்கிட்டு ஓடினோம்.  உயிர் போய் ரொம்ப நேரமாச்சுன்னு அவங்க சொன்னபிறகும்கூட ஏதாது செய்து காப்பாத்துங்கனு சொல்லி அழுது புலம்பினோம்..அன்றைக்கு  நைட் முழுவதும் அங்கேதான் இருந்தோம். மறுநாள் பாடியோட வீட்டுக்கு வந்தோம். கொஞ்ச நேரத்தில் எங்க க்ளையண்ட் ராமானுஜம் ஸார் பவித்ராவை அழைச்சிட்டு வந்தார். ஆனாலும் அவருக்கு எந்த விவரமும் தெரியலே. அவளை சேப் ஆக கொண்டு வந்து சேர்த்தார். டாடியோட காரியங்கள் முடியறச்சே இந்த முட்டாள் ஸுஸைட்னு ஒரு பைத்தியக்காரத்தனத்தை பண்ணிட்டுது. இங்கே கொண்டுவந்து அட்மிட் பண்ணினேன்..அடுத்தாப்லே மொட்டைமாடிக்குஓடறா  ஸுஸைட் பண்ணிக்க .. இவளை நான் எப்படி காப்பாத்தப்போறேன்னு தெரியலே. என்னோட மேரேஜ் நின்னுபோனதை நினைச்சு நானே கவலைப்படலே .. இவ ஏன் வொரி பண்ணி க்கணும் ?"
"ரொம்ப ஈஸியா சொல்லிட்டீங்க... இதுதான் பாசங்கிறது .. இந்தப்பாசம்தான் நிறைய வீடுகளில்  பேமிலி மெம்பர்ஸ்ஸை கட்டிப்போட்டு வச்சிருக்குது."
"அந்த கட்டை அறுத்துட்டுப்போக இவ ட்ரை பண்றா.. இவளுக்கு என்ன சொல்லி புரிய வைக்கிறதுங்கிறது  எனக்குப் புரிய மாட்டேங்குது."
"உங்களை நினைச்சா எனக்கு ரொம்ப பெருமையா இருக்கும்மா. இப்படியொரு அக்கா கிடைக்க பவித்ரா ரொம்பவும் லக்கிதான். ரூமுக்குள் பவித்ரா கிட்டே நான் பேசினதை கேட்டீங்கதானே. எங்க வில்லேஜுக்கு அவளை அனுப்பறதில்  உங்களுக்கு எந்த அப்ஜெக்சனும் கிடையாதுதானே.?" 
"அந்த இடம்  சேப்டியா இருக்குமா ?"
"ஹண்ட்ரேட் பெர்சென்ட்  சேப்டி பிளேஸ் .. அங்கே முருகய்யன் இருக்கிறார். அவரைத் தாண்டி ஈ .. காக்கா கூட அங்கே பறக்க முடியாது.. கொஞ்சநாள் அங்கே இருக்கட்டும். அவ சொன்ன டீலை நாம மதிப்போம். அப்புறம்கொஞ்சம் கொஞ்சமா அவளை நம்ம வழிக்கு கொண்டு வரலாம். நீங்க என்ன நினைக்கி றீங்க ?'
"அவ எங்கேயாவது நல்லா இருந்தா சரி.. அவளோட எல்லா செலவுக்கும் நான் பணம் கொடுத்துடுவேன்."
'அட.. பணம் என்னம்மா பணம் ? நினைச்சா அதை எப்போ வேணும்னாலும் எப்படி வேணும்னாலும் சம்பாதிக்கலாம். போனால் வராதது உயிர் ஒண்ணு தான்."
"எனக்கு சகோதரன்னு ஒருத்தர்  இருந்திருந்தாகூட அவங்க இந்த அளவுக்கு தோள் கொடுத்து துணைக்கு நிப்பாங்களாங்கிறது  சந்தேகந்தான். உங்களை கையெடுத்துக் கும்பிட்டு நன்றி சொல்றேன்.. உங்ககிட்ட அவளோட லைஃபை ஒப்படைக்கிறேன்."  
"பவித்ராவோட மொபைலை கொண்டுவந்து தரமுடியுமா ?"
"கண்டிப்பா.. டிரைவர்கிட்டே சொன்னா இன்னும் அரைமணி நேரத்தில் கொண்டு வந்து தந்திடுவார்"னு சொல்லிட்டு, கவிதாவுக்கு போன் பண்ணி, "பவி ரூமுக்குப்போய் அவ மொபைலை எடுத்து சார்ஜரில் போடு. ட்ரைவரை அனுப்பறேன். இன்னும் பைவ் மினிட்ஸ்ஸில் அவர் அங்கே வந்திடுவார். ட்ரைவரிடம் கொடுத்தனுப்பணும். கொடுத்திட்டேன்னு நீ சொல்றவரை நான் லைனில்தான் இருப்பேன்"னு சொல்லிக்கொண்டிருக்கும்போது, ராம்குமார் தனது மொபைலில் யாருடனோ காரசாரமான  விவாதத்தில் இருந்தார். 
சிறிது நேரத்தில் ட்ரைவர் மொபைலைக் கொண்டுவந்து தந்தார்.   
மொபைலில் ரிஸீவ்ட் கால் லிஸ்டைப் பார்த்த ராம்குமார், அதிலிருந்த முதல் நம்பரைக்காட்டி "இது உங்க கம்பெனி லேன்ட் லைன் நம்பர்தானா?"னு கேட்டார்.
"இல்லை ஸார் " 
"அதுக்குக்கீழே இருக்கிற நம்பர்ஸ் ?"
"அது எல்லாமே என்னுடைய மொபைல் நம்பர் "
"அப்படின்னா அந்த ஒரேயொரு கால் மட்டும் அன்னோன் பெர்சன் கிட்டே இருந்து வந்திருக்குது. அது யார்னு கண்டுபிடிச்சிட்டா எல்லா விஷயமும் க்ளியர் ஆயிடும்.. உங்க அனுமதியோடு இந்த மொபைலை எடுத்துட்டு நான் வெளியில் போறேன்" னு சொல்லி கிளம்பிச்  சென்றார் ராம்குமார்.  
அவர் அங்கிருந்து கிளம்பிச் சென்றதும் பவித்ரா இருக்கும் அறைக்குப் போய் அவளருகில் உட்கார்ந்தபோது, தலையணையில் முகம் புதைத்துக் கொண்டு "உன்னோட லவ்வை நானே ஸ்பாயில் பண்ணிட்டேன். என்னாலேதான் உன்னோட என்கேஜ்மென்ட் நின்னு போச்சு.. உன்னைப் பார்க்கிறப்ப எனக்கு செத்துப்போகணும்னு தோணுது.. எல்லாத்துக்கும் நான்தான் காரணம் .. எல்லாமே முடிஞ்சு போச்சு." என்று கதற ஆரம்பித்தாள்.
"அடி அசடே.. முடிவு என்று எதுவும் கிடையாது. ஒன்றின் முடிவிலிருந்து மற்றது, வேறொன்று ஆரம்பிக்கிறது. எதையும் முடிவுன்னு நினைக்காதே. அதுதான் ஸ்டார்டிங் பாயிண்ட்னு நினைச்சுக்கோ.. விமான ஓடுதளம் முடியும் இடத்தில்தான் விமானம் பறக்கவே ஆரம்பிக்கிறது. இன்றுதான் புதிதாக பிறந்ததாக எண்ணிக்கொள். உன் வாழ்வைத் தொடங்கு!" னு சொன்ன வார்த்தைகளுக்குப் பலன் இருக்கத்தான் செய்தது.
"நான் வயல்வெளி வில்லேஜ் போறேன் "
"போ "
"நான் மட்டும்.. நீ வரக்கூடாது "
"வரலே "
"எப்பவுமே.. என்னிக்குமே வரக்கூடாது "
"நீயா மனசுமாறி "என்னைப்பார்க்க வா"னு  நீ கூப்பிடறவரை நான் அந்தப் பக்கமே வரமாட்டேன். "
"ப்ரோமிஸ் ?"
"யெஸ் !"

                                                                  ------------------------- தொடரும் ---------------------------

Wednesday, August 23, 2017

வேண்டாமே வேறு பவித்ரா ...(22)

Image result for cartoon of young girl in hospital bed speaking with a man
"என்ன பேபி சொல்றே? உங்க கம்பெனியில் வெடிகுண்டு வைச்சிருக்கிறதா போன் வந்ததுன்னு செக்யூரிட்டி போன் பண்ணி சொன்னா அதைக் கேட்டு உனக்கு சந்தோஷமா இருந்துச்சா ?"
"ஆமாம் .. பிரதர் "
"ப்ளீஸ் .. என்னைக் குழப்பாதேம்மா.. நான் முடிக்க வேண்டிய வேலைகள் அரைகுறையா  நிறைய இருக்குது..நீ சொல்றதைக் கேட்டா நான் மென்டல் ஆயிடுவேன் போலிருக்கே! குண்டுவச்சிருக்காங்கனு தெரிஞ்சா அதை  கேட்டு பதற வேண்டாமா ? நீ என்னவோ சந்தோசப்பட்டதா சொல்றே ?"
"ஐயோ பிரதர் ! குண்டு வச்சதை நினைச்சு நான் சந்தோஷப்படலே. அந்த விஷயத்தை டாடி கிட்டே, சுமி கிட்டே சொல்லாமே எனக்கு இம்போர்ட்டன்ஸ் குடுத்து சொல்றாங்களேன்னு சந்தோஷமா இருந்துச்சு. டாடியும் சரி ;  சுமியும் சரி; கம்பெனி பத்தி என்னிட்டே பேசவே மாட்டாங்க. நான் எப்பவாவது ஏதாது கேட்டா கூட "உனக்கு ஒண்ணும் புரியாது; படிக்கிறது மட்டுந்தான் உன்னோட டியூட்டி"னு சொல்வாங்க. என்னையும் மதிச்சு கம்பெனி மேட்டர் சொல்லவும் என்னாலே எதையும் நம்பமுடியலே !"
"அப்பாடா..விஷயம் இதுதானா?" என்று பெருமூச்சுவிட்ட ராம்குமார், "அப்புறம் என்ன ஆச்சு?"னு கேட்டார்.
"நான் என்ன செய்யணும்"னு  கேட்டேன். "வாசலுக்கு வந்துடுங்க. அங்கே நம்ம லேபர் ஒருத்தர் வண்டியோடு நிப்பார். நீங்க வந்திடுங்க"னு சொல்லவும் நான் வாசலுக்குப் போனேன். அங்கே ஒரு கார் வந்துச்சு. அதிலிருந்த ஒரு அண்ணா , "வாங்க பேபிம்மா"னு சொன்னதும் நான் காரில் ஏறினேன். கார் கம்பெனி பக்கம் போகாமே வேறே டைரக்சனில் போச்சு.. எங்கே போறீங்க. கம்பெனிக்கு ரூட் இது இல்லையேன்னு சொன்னேன். "உஷ்..நாங்க இறக்கி விடற இடத்தில் நீ இறங்கணும். வாயைத் திறந்தே உங்க டாடியை போட்டுத் தள்ளிடுவோம். சுமி மேடத்தை மேலே அனுப்பிடுவோம்"னு  சொன்னாங்க" என்று சொல்லி விட்டு விசும்பி அழ  ஆரம்பித்தாள்  பவித்ரா.
"ஓகே.. கூல் டவ்ன் .. இப்போ நீ பத்திரமா இருக்கிறே ? ஏன் அழறே ? சூடா ஒரு கப் பால் கொண்டு வரச்சொல்லட்டுமா ?"
"நோ ..ஐ டோன்ட் வான்ட் "
"சரி.. அப்புறம் ?"
"ஆம் ஐ டெல்லிங் எ ஸ்டோரி ?"
"நோ. பேபி. யூ ஆர் டிஸ்க்ரைப்ப்பிங் தி இன்சிடெண்ட்ஸ் .. தட்ஸ் ஆல்.  கன்டினியூ  "
"ஒருஇடத்தில் நிறைய கேர்ள்ஸ் நின்னுட்டு இருந்தாங்க. என்னையும் அவங்க கூட சேர்ந்து நிக்க சொன்னாங்க. அப்போ உடனே ஒரு போலீஸ் வேன் வந்துச்சு. எல்லாரையும் ஏறுங்க ஏறுங்கனு சொன்னாங்க. வேன் வரவும், என்னை ஏற சொன்னதும் நான் பயந்து அழ ஆரம்பிச்சிட்டேன். அப்போ அங்கே ராமானுஜம் அங்கிள் நிக்கிறது தெரிஞ்சுது. நான் அங்கிள்னு கத்தினேன். அவர் என்னைப் பார்த்திட்டார். ஒரே கும்பல். வேன்  கிளம்ப முடியாமே ரொம்ப ரஷ் . கொஞ்சநேரம் கழிச்சு  ராமானுஜம்அங்கிள் வந்து "நீ இறங்கி வாம்மா  பவித்ரா . இறங்கி வா"னு சொன்னதும் நான் கீழே இறங்கிட்டேன். அங்கிள் என்னை எங்க வீட்டுக்கு அழைச்சிட்டு வந்தார்."
"உடனேயே வீட்டுக்கு வந்திட்டீங்களா ?"
"இல்லை. சில ரௌடீஸ் எங்களை சுத்திசுத்தி வந்திட்டு இருந்தாங்க. அங்கிள் எங்கவீட்டுக்கு போன் பண்ணினார். யாரும் போன் அட்டென்ட் பண்ணலே . அங்கிளோட வெஹிகிள் ப்ரோப்லம்  சால்வ் ஆகவே ரொம்ப நேரம் ஆயிடுச்சு . இப்போ சூழ்நிலை சரியில்லே. இந்த மிட்நைட்டில் நாம  முப்பது கிலோ மீட்டர் டிராவல் பண்றது சேஃப்ட்டி இல்லே. என்னோடவீடு ரெண்டு கிலோ மீட்டர் டிஸ்டன்ஸில்தான். இன்னிக்கு அங்கே தங்கிட்டு நாளைக்கு காலையில் உங்க வீட்டுக்குப் போயிடலாம்னு சொன்னார். நான் சரினு சொன்னேன். அந்த அங்கிள் வீட்டு ஆன்டி ரொம்ப நல்லவங்க. என்னை ரொம்ப பாசமா பார்த்து க்கிட்டாங்க. அவங்க வீட்டில் ட்வின்ஸ் இருந்தாங்க .. பேர் ராம் லக்ஷ்மண்  . அவங்க என்கிட்டே ரொம்பவும் அன்பா பேசினாங்க. எனக்கு அந்த பேமிலியை ரொம்ப பிடிச்சிருந்துச்சு. அவங்க எல்லாரும் சாப்பிட்டு முடிச்சப்பறம் ரொம்ப நேரம் ஒண்ணா உக்கார்ந்து பேசிட்டு இருந்தாங்க  ரொம்ப ஜாலி !"
"உங்க வீட்டில் அப்படிப் பேச மாட்டீங்களா ?"
"ஊஹூம்.. தினமும்  நான் ஸ்கூல் முடிஞ்சு நேரே கம்பெனிக்குப்போய் அப்பா கண்ணெதிரில் உட்கார்ந்து படிக்கணும். ஹோம் ஒர்க் பண்ணனும். நைட் ஆனதும் மூணு பேரும் வீட்டுக்குப் போவோம். கவிதா அக்கா டிபன் பண்ணி வச்சிருப்பாங்க. டாடி அவர் ரூமில் உட்கார்ந்து சாப்பிடுவார். அக்கா, "எனக்கு பசிக்கலே. நீ சாப்பிட்டுட்டு தூங்கு"னு சொல்லிடுவா. நான் மட்டுந்தான் தனியா உட்கார்ந்து சாப்பிடுவேன். அதான் எனக்கு அங்கிள் வீடு ரொம்பவும் பிடிச்சுது . அங்கேயே இருக்கனும்போல இருந்துச்சு " என்று பவித்ரா சொன்னதை கனத்த இதயத்தோடு கேட்டுக் கொண்டிருந்தார் ராம்குமார்.
"பாவம்..அன்புக்காக ஏங்குகிற ஜீவன்!" என்று தனக்குள் சொல்லிக் கொண்டார். "சரி அதெல்லாம் போகட்டும். உங்க டாடி இறந்துட்டார். உன்னோட அக்கா உன் மேலே அவ்வளவு உயிரா இருக்காங்க. அவங்களைப் பிரிஞ்சு போக உனக்கு எப்படி மனசு வந்துச்சு. நீ இல்லாட்டா அவங்க தவிச்சுப் போயிடுவாங்கனு நீ நினைச்சுக்கூடப் பார்க்கலே. அப்படித்தானே? நினைச்சிருந்தா தற்கொலை பண்ண நீ முடிவெடுத்திருக்க மாட்டே"
"என்னாலேதான் அக்காவோட எங்கேஜ்மெண்ட் நின்னு போச்சு. என்னால்தான் டாடி இறந்து போனார். நான் கில்டியா பீல் பண்றேன். இன்னிக்கு இல்லாட்டா நாளைக்கு நான் செத்துப் போயிடுவேன்."
"நோ.. பேபி... நோ.. முட்டாள்தனமா முடிவெடுக்கக்கூடாது. அடுத்தவேளை சோத்துக்கு இல்லாதவன்கூட வாழமுடியுங்கிற நம்பிக்கையில் இருக்கிறான். உனக்கு என்ன குறை? "
"சுமி ஆசை என்னாலே ஸ்பாயில் ஆயிடுச்சு. அவளைப் பார்க்கிறப்ப எனக்கு செத்துப் போகணும் போல இருக்குது "
"சரி.. அவங்கள பார்க்க வேண்டாம். நீ எங்க வீட்டுக்கு வர்றியா ?"
"நான் யாரையும் பார்க்க விரும்பல. மனுஷங்க இல்லாத இடத்தில் நான் போய் இருக்கணும். இல்லாட்டா செத்துப்போயிடணும். இங்கிருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்குப்போகக் கூட எனக்கு விருப்பமில்லே. வீட்டுக்குப் போறச்சே காரில் இருந்து குதிச்சிடலாமான்னு யோசிக்கிறேன்.  "
"நோ பேபி. அப்படில்லாம் பண்ணக்கூடாது. மனுஷங்க இல்லாத இடத்துக்கு உன்னை அனுப்பி வைக்கட்டுமா ?"
"எங்கே பிரதர் ? செவ்வாய் கிரகத்துக்கா ?"
"இல்லே.. எங்க கிராமத்துக்கு "
"அது எங்கே இருக்குது? அங்கே ஆளுங்களே இல்லையா ?"
"திருநெல்வேலியிலிருந்து கொஞ்ச தூரத்தில் இருக்குது. அங்கே விவசாய வேலை செய்ற ஜனங்க மட்டும்தான். அந்த ஊரில் எனக்கொரு வீடு இருக்குது. வீட்டைப்பார்த்துக்க வள்ளி, அவளோட மாமா அங்கே இருக்கிறாங்க. நீ அங்கே போய் கொஞ்சநாள் இரு..அப்பப்போ வந்து உங்க அக்காவைப் பார்த்துட்டுப் போ. அக்கா உன்னைப் பார்க்க அங்கே வருவாங்க "
"இந்த டீலுக்கு நான் ரெடி இல்லே !"
"ஏன்?"
"அங்கே ஒன்ஸ் போயிட்டா நான் திரும்பி இங்கே வரமாட்டேன். இங்கிருந்து யாரும் என்னைப் பார்க்க வரக்கூடாது. இந்த டீலுக்கு ஓகேன்னா நான் அங்கே போய் இருக்கிறேன். டீலை மீறி யாராவது என்னை பார்க்க வந்தா ... பார்க்க வந்தா.. "
" பார்க்க வந்தா என்ன செய்வே ?"
"நான்  வேறேஎங்கேயாவது போயிடுவேன்.. எங்கேனு உங்க யாருக்கும்  நான்  சொல்ல மாட்டேன்.  "
"டீலை யாரும் பிரேக் பண்ண மாட்டோம். நீ எப்போ எங்க கிராமத்துக்குப் போறேனு சொல்லு.. நான் முருகய்யனுக்கு இன்பார்ம் பண்ணிடறேன்."
"இங்கிருந்தே நான் ஸ்ட்ரைட்டா அங்கே போயிடறேன் "
"இது கொஞ்சம் ஓவரா தெரியுதே பேபி .. சுமி பாவந்தானே.. போனாப்போகுது . அவங்ககூட ஒரு மூணுநாள் இருந்துட்டுப் போகலாந்தானே ..நம்ம சுமி.. பாவம் சுமி "
"ஓகே.. ஆனா அவ எங்கிட்டே தொணதொணன்னு எதுவும் பேசக்கூடாது. கேட்கக் கூடாது "
"பேச மாட்டாங்க... கேட்க மாட்டாங்க.."
"பேசினா ?"
"நான் எதுக்கு இருக்கிறேன். டீலை மீறினா ரெண்டுலே ஒண்ணு பார்த்திட  மாட்டேனா?  சிவியரா பனிஷ் பண்ணுவேன் "
"குட்..நான் உங்க வில்லேஜுக்கு போறேன் "
"பேபி.. அங்கே உன்னோட பேச பழக உன்னோட ஏஜ் குரூப் கேர்ள்ஸ் யாரும் கிடையாது. முக்கியமா அங்கே கரெண்ட் கிடையாது... உனக்காக வேணும்னா டவுனில் வீடு ஏற்பாடு பண்ண  சொல்லட்டுமா ?"
"நோ..பிரதர்..கரெண்ட் இல்லாட்டா பரவாயில்லே.. ஐ கேன் மேனேஜ் "
"ம்.. இதுதான் சமர்த்துப்பொண்ணுக்கு அடையாளம்..நீ நாளைக்கே டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்குப் போறே.. பாவம் சுமி.. சுமிகூட மூணுநாள் இருக்கிறே..அப்புறம்  எங்க வில்லேஜ் வயல்வெளிக்கு போறே. ஓகே ?"
"ஓகே!"
"அப்படின்னா நான் இப்போ கிளம்பறேன்.. நாளைக்கு வந்து உன்னை மீட் பண்றேன். "
'ஓகே பிரதர் "
"உன்கிட்டே மொபைல் இருக்குதா ?"
"ஓ..இருக்குதே..ஆனா வீட்டில் இருக்குது. சுமி எங்கேஜ்மெண்ட் அன்னிக்கு போன் வந்தப்ப, போன் அட்டென்ட் பண்ணிட்டு நான் வெளியில் போனேன் தானே..அதுக்கப்பறம் எனக்கு போன் எதுவுமே  வரலே.  என்னோட ரூமில்தான் போன் இருக்கணும்."
"சரி..அதை அப்புறமா தேடிக்கலாம்"னு   சொல்லிவிட்டு ராம்குமார் அறையை விட்டு வெளியேறினார்.
பவித்ரா பார்க்காத வண்ணம். எனக்கு சைகை செய்து என்னை வெளியில்வரச் சொன்னார்.

                                                                                ------------------தொடரும் ---------------------

Tuesday, August 22, 2017

வேண்டாமே வேறு பவித்ரா ...(21)

Image result for cartoon of young girl in hospital bed

"பிடியுங்க..பிடியுங்க" என்று கூச்சலுடன் ஆஸ்பிடல் ஸ்டாப்ஸ் பின்னால் ஓடி வர யாருடைய கையிலும் அகப்படாமல் மாடிப்படிகளில் தாவித்தாவி ஏறி ஓடிக்கொண்டிருந்த பவித்ராவை தடுத்து நிறுத்திய கைகளையும் மீறிக் கொண்டு பவித்ரா ஓட முயன்றாள்.
"ஹாய்.. பேபி.. இந்த ஓட்டத்தை ..ஸ்பீடை ஏதாவது ஸ்போர்ட்ஸ் இல்லாட்டா டோர்னமெண்டில் காட்டியிருந்தால் நீதான் சாம்பியன்.. உன்னை ஜெயிக்க ஆளே இல்லாமல் போயிருக்கும் " என்று சிரித்துக்கொண்டே சொன்னவரின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தாள் பவித்ரா.
அதற்குள் ஆஸ்பிடல் ஸ்டாப்ஸ் வந்து அவளைப் பிடித்துக் கொண்டார்கள். அவளை ஆளுக்கொரு பக்கமாக பிடித்துக்கொண்டு வலுக்கட்டாயமாக அவளது அறைக்கு அழைத்துச் செல்ல, அவர்களில் ஒருவனைக் கூப்பிட்டு விவரம் கேட்டார் பவித்ராவைப் பிடித்துக் கொடுத்தவர்.
"என்னப்பா விஷயம். அந்த கேர்ள் ஏன் மாடிக்கு ஓடறா ?"
"தற்கொலை பண்ணிக்க "
"என்னது ?"
"ஏற்கனவே கத்தியாலே கைநரம்பை கட் பண்ணிட்டுது  இந்த பொண்ணு. இத   ஸுஸைட் அட்டெம்ப்ட் கேஸில் வார்டில் அட்மிட் பண்ணி இருக்கிறாங்க. அட்டெம்ப்ட் பெயில்ங்கிறதாலே திரும்பவும் மொட்டைமாடிக்கு ஓடுது அங்கி ருந்து குதிக்கிறதுக்காக."
"என்ன விஷயம்.?"
"பெரிய இடத்து விவகாரம்.. உங்களுக்கு டீடைல்ஸ் வேணும்னா அவங்களை கேளுங்க. செகண்ட்  ப்ளோர் .. ரூம் நம்பர் செவன். பேர் பவித்ரா  " 
"தேங்க்ஸ் ஸார் " என்று அவர் சொல்லும்போது அவருடைய மொபைல் குரல் கொடுக்கவே, போனில் பேசியபடியே அங்கிருந்து நகர்ந்தார்.
"ச்சே..கொஞ்சநேரத்தில் இந்தப்பொண்ணு என்னென்ன கலாட்டா பண்ணி இருக்குது. பெரிய இடங்கிறதாலே ஆஸ்பிடல் ரூல்ஸ்ஸை ரிலாக்ஸ்ட் பண்ணினது தப்பா போச்சு. இன்னிக்கு முதல்வேலையா யூனிபார்ம் கொடுத்து, நீ ஒரு பேஷண்ட்.. எங்க கஸ்டடியில்தான் நீ இருக்கணுங்கிறதை ஞாபகப் படுத்தணும் என்று சொல்லிக் கொண்டிருந்தாள் நர்ஸ்.
"வீட்டுக்கு இன்பார்ம் பண்ணியாச்சா ?"
"வந்துட்டே இருக்கிறாங்களாம்"
அரைமணிநேரம் கழிந்திருக்கும். ரூம்கதவை மிகமெலிதாக யாரோதட்டுவது தெரிந்தது.
கதவைத் திறந்தவுடன், "இங்கே பவித்ரானு ஒரு கேர்ள்..." என்று சொல்லிக் கொண்டு இருக்கும்போதே, "மேம்...  உங்க சிஸ்டரை காப்பாத்தினது இவர்தான் .  இவர்மட்டும் தடுத்துப் பிடிச்சிருக்காட்டா, உங்க சிஸ்டர் ஓடின ஓட்டத்துக்கு அவங்களை கிரவுண்ட் ப்ளோரில் பார்த்திருக்க முடியும்" என்று விளக்கினாள் நர்ஸ்.
"வாங்க.. ஸார் ... நீங்க பண்ணின உதவிக்கு ரொம்ப நன்றி. ஏதோ தெய்வமாகப் பார்த்து உங்களை அந்த இடத்தில் நிறுத்தி இருக்கிறது இவளைத் தடுத்த நிறுத்த "
"என் பேர் ராம்குமார்..  சினிமா டைரக்டர்.."
"உங்களோட படம் பார்த்திருக்கிறேன்.. ஆனா உங்களைப்பத்தி அதிக விவரம் தெரியாது"
"என்னோட க்ளோஸ் ரிலேஷன் ஒருத்தர் இங்கே அட்மிட் ஆகி இருக்கிறார்.. அவரைப் பார்த்துட்டு கீழே இறங்கி வர்றப்பதான் இந்த கேர்ள் ஓடி மாடி ஏறிட்டு இருந்தா.. வழக்கமா இந்தமாதிரி நிறைய ப்ளோர் இருக்கிற இடத்தில் ஏற இறங்க நான் லிஃப்ட்தான் யூஸ் பண்ணுவேன்.. இன்னிக்கு என்னவோ மாடிப்படி இறங்கணும்போல ஒரு ஃபீலிங் வந்துச்சு..  உங்க சிஸ்டர் தூங்கிட்டு இருக்கிறாங்க போலிருக்கு !"
"தூக்கத்துக்கு இன்ஜெக்சன் போட்டிருக்காங்க."
"ஏன் இப்படியொரு விபரீத முடிவு ? படிப்பில் ஏதாவது சப்ஜெக்டில்  பெயிலா அல்லது லவ் மேட்டரா ?"
"ரெண்டுமே இல்லை..அவ வாயைத் திறந்து எந்த விஷயமும் சொல்லலே.. நீங்க என்னோட தங்கை உயிரைக் காப்பாத்தி இருக்கீங்க..  உங்ககிட்டே  ஓபன் ஆக பேசியே ஆகணும்.."
பவித்ரா பிறந்ததிலிருந்து அன்றுவரை நடந்த அனைத்தையும் சொன்ன போது "சில சமயங்களில் ரியல் ஸ்டோரீஸ் ரீல் ஸ்டோரீஸ்ஸை மிஞ்சிடுது. வொரி பண்ணாதீங்க. ஏன் அங்கே போனாங்கிறதை கேட்டு தெரிஞ்சுக்கிட்டு நாம மேல் கொண்டு என்ன செய்யலாம்னு பார்க்கலாம். நான் எப்படியும் இன்னும் ஓன் வீக் டில்லியில்தான் இருப்பேன். உங்க ஸிஸ்டர் நார்மல் ஹெல்த்துக்கு வந்ததும் எனக்கு ரிங்க் பண்ணுங்க.." என்றார்.
"ஸார் .. இன்னிக்கே இவளை இங்கிருந்து அழைச்சிட்டு போயிடலாம்னு திங்க்  பண்றேன் "
"அப்படியா  ?"
"நீங்க பேசிப்பார்க்கிறதா சொல்றீங்களே.."
"எனக்காக இன்னும் ஒரேஒரு நாள் மட்டும் இங்கே வச்சிருங்க. அதற்குள் அவங்ககிட்டே இருந்து விஷயத்தை வாங்கிடுவேன். நான் பேசறப்ப அவங்க கண்ணில்படாமே மறைவா இருங்க. அவங்க சொல்றதை கவனமா மைண்ட்ல ரிக்கார்ட் பண்ணிக்கோங்க. அப்பத்தான் எனக்கு டவுட் வர்றப்ப உங்ககிட்டே கேட்டு க்ளியர் பண்ணிக்க வசதியா இருக்கும். ராத்திரி மணி பன்னிரெண்டா இருந்தாலும் பரவாயில்லை. அவங்க  கண்ணைத் திறந்ததும் எனக்கு போன் பண்ணுங்க.. நான் போர்த்  ப்ளோர்ல இருக்கிறேன்."
"ஓகே ஸார் "
பவித்ரா கண்ணைத் திறந்தபோது இரவு மணி எட்டைத் தாண்டி இருந்தது.
பாலை ஊற்றிக் கொடுக்கும்படி ரூம் அட்டெண்டர்க்கு சிக்னல் கொடுத்துவிட்டு வெளியில் வந்து ராம்குமார் ஸாருக்கு போன் செய்து விஷயத்தை சொல்லி விட்டு ரூமுக்குள் வந்து மறைவாக உட்கார்ந்து கொண்டு அங்கு நடப்பதை கவனிக்க தயாரானேன்.
அறைக்குள்வந்த  ராம்குமார் "ஹாய் பேபி! எப்படி இருக்கிறே?"னு   கேட்டார்.
அவரைக்கூர்ந்து கவனித்த பவித்ரா, "நீங்கதானே என்னை ஓடவிடாமே பிடிச்சு கொடுத்தீங்க?" என்று கோபமாக கேட்டாள் பவித்ரா.
"தப்புதான்.. தோப்புக்கரணம் வேணும்னா போடட்டுமா ?"னு கேட்டபடி காதுகள் இரண்டையும் பிடித்தபடி தோப்புக்கரணம் போட ஆரம்பித்தபோது பவித்ரா சிரிப்பை அடக்க மிகவும் கஷ்டப்பட்டாள் .
"போதும்... போதும்... மன்னிச்சிட்டேன்.. நீங்க ஏன் என்னை தடுத்தீங்க ?"
"நீ ஏன் அப்படியொரு முடிவுக்கு வந்தே ?"
"என்னாலே எல்லாருக்கும் கஷ்டம் !"
"கஷ்டம் ? அப்படினு யார் சொன்னது ?"
"யாரும் சொல்லலே.. எனக்கே தெரியும் "
"உனக்கு பிரதர்ஸ் இருக்கிறாங்களா ?"
"இல்லே "
"இனிமே நான்தான் உனக்கு பிரதர்.. நீ என்னோட பாசமலர்.. செல்ல தங்கை. நீ இந்த அண்ணன்கிட்டே எதையும் ஓப்பனா பேசணும் . ஓகே ?"
"ஓகே பிரதர் "
"அன்னிக்கு உங்க வீட்டில் என்ன விசேஷம் ?"
"சுமிக்கு மேரேஜ் எங்கேஜ்மென்ட் "
"அக்காவுக்கு  எங்கேஜ்மென்ட்ன்னா உனக்கு சந்தோஷந்தானே ?"
"யெஸ் .. ஸ்சுயர்!"
"கெஸ்ட், ப்ரெண்ட்ஸ்..மாப்பிள்ளைவீட்டுஆளுங்கனு நிறையபேர்வந்திருப்பா  ங்க தானே ?
"ஆமாம் "
"எல்லாரும் உங்கவீட்டுக்கு, உங்க அக்காவோட மேரேஜ் எங்கேஜ்மென்ட்க்கு வந்திருக்கிறப்ப அவங்களை நல்லா கவனிக்கவேண்டிய ரெஸ்பான்சிபிலிட்டி  உனக்கு  இருக்குதானே ?"
"ஆமா "
"உன்னோட டியூட்டியை  நீ கரெக்ட்டா பண்ணினியா ?"
இதைக்கேட்டதும் தலையைக் குனிந்தபடி  அமைதியாக இருந்தாள்  பவித்ரா,
"பதில் சொல்லாமே அமைதியா இருந்தா எப்படி? உன்னோட டியூட்டியை  நீ கரெக்ட்டா பண்ணினியா ?"
"இல்லை"
"ஏன் ?
"நான் வீட்டை விட்டு வெளியில் வந்தேன்."
"எதுக்காக ?"
"எனக்கு ஒரு போன் வந்துச்சு .. அதைக் கேட்டதும் நான் ஷாக் ஆயிட்டேன் "
"போனில் யார் பேசினாங்க ? என்ன சொன்னாங்க?"
"நான் போனை எடுத்து ஹலோ சொன்னதும் "செக்யூரிட்டி பேசறேன்"னு சொன்னதும் "இருங்க..  நான் டாடிகிட்டே போனை குடுக்கிறேன். டாடிக்கு இல்லாட்டா அக்காவுக்கு போன் பண்றதுதானே?"னு கேட்டேன்.
"வேண்டாம்மா.. ரொம்ப முக்கியமான விஷயம். டாடி ஹார்ட் பேஷண்ட். மேடம் இப்போ அங்கே இருந்தே ஆகணும். நம்ம கம்பெனியில் வெடிகுண்டு வச்சிருக்கிறதா ஒரு போன் வந்துச்சு. நீங்க உடனே கிளம்பி வந்தால்  அதுபத்தி மேற்கொண்டு என்ன செய்றதுன்னு பார்க்கலாம்"னு சொன்னார்.
"அதைக்கேட்டதும் உனக்கு எப்படி இருந்தது? என்ன தோணுச்சு ?"
"எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு!"
இதைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்து போனார் ராம்குமார்.

                                                                            -----------------------தொடரும் -------------------------

     

Monday, August 21, 2017

வேண்டாமே வேறு பவித்ரா ...(20)


Image result for cartoon of running girl and chasing persons in staircase
இனிப்பு பதார்த்தங்களை வாயில் வைத்து அசைபோட்டுக் கொண்டிருக்கலாம். அதை விழுங்கியபின்பும் கூட கடைவாய்பற்களில் அதன் ஓரங்களில்   ஒட்டி யிருக்கும் இந்த இனிப்பை நாவு ருசி பார்த்துக்கொண்டிருக்கும்.
ஆனால் கசப்பான ஒன்றை விழுங்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும்போது அதை வாயில்வைத்து, நாவில், பல்லில் படாதபடி நொடிப் பொழுதில் விழுங்கி விடுவோம். 
கசப்பை அசைபோட யாரும் விரும்புவதில்லை. அதனால்தான் அன்று - "எங்க சுமிக்கு கல்யாண நிச்சயதார்த்தம்"  என்று குதூகலத்துடன் குழந்தைபோல டாடி சொல்லிக் கொண்டிருந்த அன்று - நடந்த நிகழ்வுகளுக்கு வர்ணனை வேண்டாம். அது காயத்தை ஆழப்படுத்தும்; மருந்திடாது.  அன்று நடந்த நிகழ்வுகளை  கதைச்சுருக்கம் போல சொல்கிறேன் என் அசட்டுப்பெண்ணே பவித்ரா.
"காட்சிகள் மாறும் நாடகம் போலே காலமும் மாறாதோ"னு கதாநாயகி வேண்டிக்கொள்வாள் ஒரு பாடல் காட்சியில்..
நாம் யாருமே வேண்டிக்கொள்ளாமல் விறுவிறுப்பாக வாழ்க்கைக்காட்சிகள் மாறும் என்றுகனவில்கூட நினைத்துப் பார்த்ததில்லையே. அதை யார்தான் எதிர்பார்த்தார்கள் ? 
ஒரு விஷயம் நடந்து முடிந்தபிறகு, அதைப் பற்றி நினைத்துப்பார்க்கும்போது நடந்ததெல்லாம் கனவா நனவா என்ற சந்தேகம் வந்துவிடும் . அதை ஜீரணிக்க சற்றுநேரம் பிடிக்கும். அந்த சற்றுநேரம் என்பது வருடக்கணக்கா அல்லது வாழ்க்கை முழுவதுமேவா என்பது ஆண்டவன் கையில்தான் இருக்கிறது.
நரேனின் அப்பா எங்கள் திருமணத்துக்கு இவ்வளவு எளிதில் சம்மதம் தந்துவிடுவார் என்று யார்தான் எதிர்பார்த்தார்கள்!
திரைப்படம் ஆரம்பிக்கும்போது, சினிமா டைட்டில் போடுவதற்கு முன்பாக பிறக்கிற ஒரு குழந்தை, டைட்டில் போட்டு முடிந்ததும் ஒரு வாலிபனாகவோ அல்லது அழகான இளம்பெண்ணாகவோ வளர்ந்துவிட்டது போன்ற சீன் வரும்.
ஒரேயொரு பாடல்காட்சியிலேயே ஒரு தொழிலாளி முதலாளியாக மாறி இருப்பான் . அல்லது ஒரு முதலாளி நடுத்தெருவுக்கு வந்திருப்பான்.
அதுபோலத்தானே நம் வாழ்க்கைப்படகும் திசைமாறி பயணிக்க ஆரம்பித்தது.  
நிச்சயதார்த்தவேலைகள் நடந்து கொண்டு இருந்த மும்முரம் என்ன !! வெளியூர்களில் இருந்து உறவினர்கள், நண்பர்கள் வருகை என்று வீட்டில் இருந்த மகிழ்ச்சி வெள்ளந்தான் என்ன என்ன !! இந்த இரண்டுக்கும் நடுவே டாடியின் உடல்நலம் என்ற பரபரப்பு.. எல்லாமே சேர்ந்து பவித்ராவின் மீதிருந்த பாதுகாப்புப் பார்வையை சற்றே விலக்கி வைத்துவிட்டது.
பவித்ரா வீட்டில் இல்லை என்பதே தொலைக்காட்சி மூலம்தானே  தெரிந்தது.
ஆயிரமாயிரம் திருமணக் கனவுகளில் நானும் நரேனும் மிதந்து கொண்டிருக்க திருமண நிச்சயதார்த்தப் பத்திரிக்கை வாசிக்கப்படுவதற்கு முன்பாக நரேன் அப்பாவின்  போன் அலறியது.
போனை எடுத்து காதில் வைத்துப் பேசியவர், "டீவீயை ஆன்.. நியூஸ் சேனலைப் போடுங்க " பண்ணுங்க என்று பரபரத்தார்.
அதில் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த காட்சி.. என் அருமை செல்லம் போலீஸ் வேனில் ஏற்றப்படுகிறாள்.. விபசாரத்தில் ஈடுபட்டதால் கைது என்று கீழே பிளாஷ் நியூஸ்.
"நம்ம பவித்ரா ... நம்ம பவித்ராவா?" என்று உறவினர்களின் அலறலும்.. பரிகாசமும்..
"வீட்டுநிலைமை என்னனு தெரியாதஅளவுக்கு குழந்தைகளை ரொம்பவும் செல்லம் கொடுத்து வளர்த்திடறாங்க. பெரியஇடத்துப்பிள்ளைகள் போல வாழ வேண்டும் என்று ஆசைப்படும் குழந்தைகள் தங்கள் ஆடம்பரசெலவுக்கு கையில் காசில்லாதபோது இதுபோன்ற தொழிலுக்கு ரகசியமாக வந்து போகிறார்கள் என்று ஒருவர் சொல்லிக் கொண்டிருந்தார்.
அதைக் கேட்ட நொடியிலேயே "அம்மா"னு சொல்லி அலறிக் கீழே விழுந்த அப்பா அதன் பின் எழும்பவே இல்லையே 
சற்று நேரம் கழித்து போன்,  செல்போன்  மாறிமாறி அலறிக் கொண்டிருந்தது. அதை எடுத்துப் பேசும் மனநிலையில் யாரும் இல்லை.
நொடிப்பொழுதில் மணவீடு மரணவீடானது.
"எனக்கும் கொஞ்சம் மனுஷத் தன்மை உண்டு.  என் மகன் ஆசைப்பட்டு கேட்டதை வாங்கிக்கொடுக்கும் அப்பாவாகத்தான் நான் இன்னும் இருக்கிறேன். இப்பவும் உன்னை எங்க வீட்டு மருமகளா நான் ஏத்துக்க ரெடி. கட்டினபுடவையோடு நீ வந்தால் போதும். ஆனா உன் வீட்டு காற்றுகூட என் வீட்டு பக்கம் வரக்கூடாது" என்று நரேனின் அப்பா சொன்னபோது, அவரைக் கையெடுத்துக் கும்பிட்டு.."காற்று மட்டும் இல்லை.. நானும் வர தயாராக இல்லை.. அதற்கான தகுதி எனக்கு இல்லை. உங்க அன்புக்கு நன்றி." என்று சொல்லி வழியனுப்பி வைக்கத்தான் முடிந்தது. இது அவசர முடிவு எல்லாருந்தான் சொன்னார்கள்.
என்னைப்பொறுத்தவரை இதுதான் சரியான முடிவு.. 
"இளமை துள்ளி எழுந்து நின்று காதல் என்றது
 குடும்ப நிலைமை எதிரில் நின்று கடமை என்றது
 காதல் என்னும் பூ உலர்ந்து கடமை வென்றது
 என்றும் மேடு பள்ளம் உள்ளதுதான் வாழ்க்கை என்பது"
வாழ்க்கைச் சக்கரத்தின் சுழற்சியில் எது வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நடக்கும். அதை எதிர் கொள்ளும் பக்குவம் தான் நமக்கு வேண்டும்.
அசட்டுப்பெண்ணே, வீட்டைவிட்டு வெளியில் போகும் முன்பாக இந்த காரணத்துக்காக போகிறேன் என்று ஒரேயொரு வார்த்தை சொல்லி இருந்தால் நம் வாழ்க்கைப்படகு தடுமாறும் நிலை வந்தே இருக்காதே!
"அக்கா.. இந்த ட்ரெஸ்க்கு இந்த ரிப்பன் மேட்ச் ஆகுதா ?"
"பூ வச்சா நல்லா இருக்குமா? ஹேர்பின் போட்டா நல்லா இருக்குமா ?"
"போட்டோ எடுக்கிறப்ப ஜடையை முன்னால் விட்டுக்கவா இல்லே பின்பக்கம் போட்டுக்கவா ?"
"சுமி.. ஏ ஸி போட்டுக்கலாமா இல்லே பேன் போதுமா?"னு நிக்கிறதுக்கும் நடக்கிறதுக்கும் ஒவ்வொண்ணுக்கும்  யோசனை கேட்பியேடி. அன்றைக்கு மட்டும் உன் புத்தி ஏன் அதுவாகவே .முடிவெடுத்தது ?
மறுநாள் காலையில் ராமானுஜம் அங்கிள் பின்பாக பதுங்கியபடி நீ  மெல்ல மெல்ல அடியெடுத்துவைத்தபோது "எங்கே போனே?" என்று டாடி கத்துவார்னு நீ எதிர்பார்த்தே. ஆனால் அவர் மூச்சு முதல்நாள் மாலையே அடங்கி விட்டது உனக்கு அப்போதுதான் தெரிந்தது.  
"பவி பத்திரமா இருக்கிறானு இன்பர்மேஷன் கொடுக்க எத்தனை தரம் ஒவ்வொரு நம்பருக்கும் மாறிமாறி போன் போட்டுட்டே இருந்தேன். யாரும் போனை எடுக்கலே !" என்று  அங்கலாய்த்தார் ராமானுஜம் .
"என்ன ஸார் .. எதையும் முழுசா தெரிஞ்சுக்கு முன்னாலே இப்படி அநியாயமா உயிரை விட்டுட்டீங்களே"னு பதறித்துடித்தார்.
எல்லாமே முடிந்தபின் யாரை சொல்வது? எதை சொல்வது?
என்ன நடந்தது ? எப்போ வெளியில் போனே என்று எத்தனை முறை எத்தனை பேர் துருவித் துருவி கேட்டோம். எதற்குமே பதில் சொல்லவில்லையே.
"நான் பிசினெஸ் விஷயமா க்ளையண்ட் ஒருத்தரைப் பார்க்கப் போனேன். வழியில் கார் பிரச்னை பண்ணிட்டுது. அது ஸ்லம் ஏரியா. மெக்கானிக் யாராது கிடைப்பாங்களானு தேடி அலையறச்சே ஒரு தெருவில் ஏகப்பட்ட கும்பல். நான் அங்கேபோய் என்னனு எட்டிப்பார்த்தேன். பிராத்தல் கேஸில் சிலரை பிடிச்சதா சொல்லி போலீஸ்வேனில் ஏத்திட்டு இருந்தாங்க. அதில் நம்ம பவித்ராவும் இருந்தா.. என்னால் நம்பமுடியலே. நம்ம வீட்டுக்குழந்தையா இல்லாட்டா நம்ம வீட்டுக்குழந்தை சாயலில் வேறு யாராவதாங்கிற குழப்பம் இருந்துச்சு. என்னைப்பார்த்துட்டு அங்கிள்னு இவ கத்தவுந்தான் இது நம்ம வீட்டுக்குழந்தைதாங்கிறது எனக்கு கன்பார்ம் ஆச்சு. அங்கிருந்த போலீஸ் அபீஷியல்ஸ் கிட்டே பேசினேன். அவங்க ரொம்பவும் ஆர்க்யூ பண்ணினாங்க. இதோ இப்பவே சி. எம்.க்கு போன் போடறேனு சொன்னேன். அடுத்த நிமிஷமே பவித்ராவை விட்டுவிட்டு அந்த வேன் அங்கேருந்து காத்து வேகத்தில் பறந்திட்டுது. இவ எது கேட்டாலும் பதில் சொல்ல மாட்டேங்கிறா. இதுக்குப் பின்னாலே ஏதோ ஒரு அண்டர் கிரவுண்ட் ஒர்க் இருக்குது.. அதை மட்டும் என்னாலே சொல்ல முடியும்." என்று தீர்மானமாக சொன்னார் ராமானுஜம்.
யாருக்காகவும் எதற்காகவும் காலமும் நேரமும் நிற்பதில்லை.
"அம்மா.. ஓடி வாங்கம்மா.." என்று கவிதா போட்ட அலறலில் தெருவில் நின்று கொண்டிருந்தவர்கள்,அந்தவழியாக போய்க்கொண்டிருந்தவர்கள் எல்லோரும் வீட்டுக்குள் ஓடி வந்தார்கள்.
"பாருங்கம்மா .. பவி அம்மா அறைக்குள்ளிருந்து ரத்தம் வருது "
என்ன நடந்திருக்கும் என்பதை அறிந்து கொள்ள அதிக நேரம் பிடிக்கவில்லை. உன்னுடைய அசட்டுத் தனத்துக்கு உன்னைப் பலிகொடுக்க நீ துணிந்து விட்டாய்..
முட்டாள் பெண்ணே.. உனக்காக என்னுடைய காதலை... கல்யாணத்தை தூக்கி எறிந்தேனே.. என்னைத்தூக்கி எறிந்துவிட்டுப்போக உனக்கு எப்படி மனம் வந்தது  ?
கடவுளுக்கு என்மீது இன்னும் சிறிது கருணை இருக்கிறதென்று நினைத்து மனத்தைத் தேற்றிக் கொண்டேன்.
உயிருக்கு எந்த ஆபத்தும்இல்லை என்று  சொன்ன  டாக்டர் எனக்கு கடவுளாக தெரிந்தார்.
அந்த சந்தோஷம் கூட அதிகநாள் நிலைக்காதபடி நீ முட்டாள்தனமாக ஒரு முடிவெடுத்தாயே.
எனக்கு மருந்தும் வேண்டாம் ஒண்ணும் வேண்டாம். நான் தற்கொலை பண்ணிக்கப் போறேன்னு சொல்லி, நீ அறையைவிட்டு ஓடிவர, உன்னைத் தடுக்க முயன்றவர்களை தள்ளி விட்டுவிட்டு நீ மொட்டைமாடிக்கு ஓடினது புயல்வேகம்என்றால்,  மேல்மாடியிலிருந்து கீழே இறங்கி வந்து கொண்டிருந்த  ஒருவர் உன்னைத் தடுத்து நிறுத்தி தாங்கிப்பிடித்தது அசுர வேகம்.

                                                                       -------------------------  தொடரும் -----------------------