Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Wednesday, August 30, 2017

வேண்டாமே வேறு பவித்ரா ...(29)

Image result for cartoon of tamilnadu man and girl under a tree in a cot
புக்ஸ் வாங்கப்  போவதாக  சொல்லி. பவித்ரா கிளம்பி செல்ல, வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான் பிரபு. 
இந்தக் குடிலில் பவித்ரா தனியாக இருப்பது ஏன் என்பதைத் தெரிந்து கொள்ளா விட்டால் தலை வெடித்து விடும் போலிருந்தது.
சில விஷயங்களைப்பற்றி பவித்ரா பேசவிரும்பவில்லை என்பதும், பேச்சை திசை திருப்புவதையும் அல்லது எங்காவது வெளியில் கிளம்பிச் சென்று விடுவதும் பிரபுக்கு புரியத்தான் செய்தது.
ஒருவர் சொல்ல விரும்பாத தனிப்பட்ட விஷயங்களைத் தூண்டித் துருவிக் கேட்பது அநாகரீகம் என்று தெரிந்தாலும், ஏதோ ஒரு பிரச்னைதான் ராம்குமார் அண்ணன்  வீட்டிலிருந்து அவளை வெளியேற்றி இருக்கிறது. அதை சரிசெய்து விட்டுத்தான் இங்கிருந்து கிளம்பிப் போகவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தான்.  
 இவளோட பிரச்னை என்னவாக இருக்கும்?
இவளாக சொல்கிற வழியைக் காணோம்.
வள்ளியிடம் கேட்கலாமா ?
நாம நல்ல எண்ணத்தோடு கேட்கப்போய் அவள்  தப்பாகப் புரிந்து  கொண்டால் என்ன செய்வது ?
இதுதான் விஷயம்..இதுக்காகத்தான் கேட்கிறேன்னு சொல்லியே வள்ளியிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாமா ?
இதுதான் சரி.. வள்ளியும் எதையும் வெளிப்படையாகவே பேசற  டைப் தான்.  அவங்க கண்டிப்பா டீடைல்ஸ் சொல்லுவாங்க என்ற எண்ணத்துடன், வள்ளி யைத் தேடி அவள் வீட்டுக்கு வந்தான்.
"என்னங்க .. உள்ளே வேலையா இருக்கீங்களா ?"
"வாங்கய்யா . என்ன இம்புட்டு தூரம்? அங்கிட்டிருந்து ஒரு குரல் குடுத்தா  நான்  ஓடி வந்திருப்பேனே "
"உங்க மாமோய் இல்லையா ?"
"இல்லீங்களே ஐயா .. களத்துமேட்டுலே வேலைவெட்டி ஏதும் இல்லாட்டா அதுபாட்டுக்கு  அங்கிட்டு இங்கிட்டுனு ஊர் சுத்தக் கிளம்பிடும்.. சித்தன் போக்கு சிவன் போக்குக்குங்கிறாப்லே.. என்னசெய்யணும்,என்ன வேணும்னு  சொல்லு ங்கய்யா.. செஞ்சு தாரேன்"
"ஒரு சிகரெட்டும், மாட்ச் பாக்ஸும் வேணும் "
"அம்புட்டுதானே.. இப்பவே ஓடிப்போய் நாடார் கடையில் வாங்கியாந்துடுதேன்  ..வேறே ஏதாச்சும் ?"
"ஏங்க.. சும்மா கிண்டலுக்கா ஒரு வார்த்தை சொன்னா, நீங்க உடனே வீட்டைப் பூட்டிட்டு வாங்கக் கிளம்பிடுவீங்களா ?"
"அய்யா .. நீங்க விருந்தாளி. உங்களுக்கு தேவையானதை செஞ்சு தரணும்னு குமார் அய்யா உத்தரவு.."
"அப்படியா? அந்த உத்தரவை மனசில் வச்சுக்கிட்டு நான் கேட்கிற எல்லாத்து க்கும் பதில் சொல்லணும். பவித்ரா பண்ற மாதிரி பேச்சை திசை திருப்ப கூடாது. "
"புரியுதய்யா..அந்தப்பொண்ணுசொல்லாததை எங்கிட்டே கேட்டுத் தெரிஞ்சுக்க ஆசைப்படுத்தீக .. அம்புட்டுதானே?"
"அம்புட்டேதான்..வாங்க .. உங்க கயித்துக் கட்டிலைக் கொண்டாந்து வெளியில் மரத்தடியில் போடுங்க..  அங்கே உட்க்கார்ந்து  பேசலாம் "
"நீங்க சொன்னா சரிதான்.. அந்தப் பொண்ணு எப்படி இருக்கிறா. இப்பத்தைக்கு அவ என் கண்ணிலேயே படலே" என்று சொல்லியபடியே கயிற்றுக் கட்டிலை இழுத்து மரநிழலில் போட்டாள் வள்ளி.
"நல்லா இருக்கு நீங்க அவங்களுக்கு காவல் இருக்கிற லட்சணம்.. உங்களை நம்பித்தானே அண்ணன் அவங்களை இங்கேகொண்டுவந்து   விட்டிருக்காங்க. நீங்க என்னடான்னா அவ என் கண்ணிலேயே படலேனு சர்வ சாதாரணமா சொல்றீங்க. காவல் சரியில்லைனு அண்ணன்கிட்டே சொல்லணும் ".
பதிலேதும் சொல்லாமல் அமைதியாக இருந்தாள் வள்ளி.
"நான் சும்மா ஒரு பேச்சுக்கு கேட்டேன்.. டேக் இட் ஈஸி.. எனக்கு ரெண்டு விஷயம் க்ளியர் ஆகணும். பவித்ராவுக்கு என்னால் முடிஞ்ச நல்லதை செய்ய நினைச்சு இதை கேட்கிறேன்.. மறைக்காமே சில விஷயங்களை மனம்விட்டுப் பேசணும். இப்பவும் உங்களை  ஒரு அக்கா ஸ்தானத்தில் வச்சுப் பார்க்கிறேன். நீங்க எனக்கு சாப்பாடு பரிமாறும்போது உங்களை என்னோட அம்மாவாகவே நினைக்கிறேன். அந்த உறவுமுறைக்கு மதிப்பு கொடுக்கணும் நீங்க !"
"முஸ்தீபு எல்லாம் பெரிசா இருக்கிறதைப் பார்த்தால் என்னை ஏதோ வம்பில் மாட்டிவிடப் போறீகளோனு பயமா இருக்கே "
"நோ.. நோ.. எந்த வம்பும் இதில் இல்லே. நான் அந்த மாதிரி ஆளும் இல்லே "
"சும்மாவாச்சும் ஒருபேச்சுக்கு சொன்னேன் தம்பி. என்ன கேக்கணும்னு நீங்க பிரியப்படுதிகளோ அதைக் கேளுங்க. எனக்கு என்ன தெரியுமோ அதை ஒளிவு மறைவு இல்லாமே சொல்லுதேன்."
"குட். பவித்ராவோட டில்லி வாழ்க்கை பத்தி எனக்குத் தெரியும். உங்களுக்கும் உங்க  ஃபிரெண்ட்பத்தி நல்லாவே தெரியும். பவித்ரா எங்கிட்டே கொடுத்த அந்த டைரியை நீங்களும் படிச்சிருக்கீங்க."
"அது சொல்லுச்சா ?"
"ஆமாம்.. சொல்லுச்சு..அவங்க இங்கே வந்து கிட்டத்தட்ட எட்டுவருஷம் ஆகப் போகுதுதானே ?"
"ஆமாங்க அய்யா "
"இந்த எட்டு வருஷத்துக்குள்ளே அவங்க ஒரு தடவைகூட அவங்க அக்காவை பார்க்க டில்லி போகலே "
"ஆமாங்க அய்யா "
"அவங்க அக்கா இவங்க மேலே அவ்வளவு பாசம் வச்சிருக்காங்க. அவங்களை பார்க்க ஒரு தடவைகூட டில்லி போகலே. போக முடியாதபடி இங்கே எந்த கலெக்டர் உத்தியோகமும் பாழ் போகலே. போகாமே, பார்க்காமே  இருக்கிறது தப்புனு  உங்க பிரெண்ட்க்கு நீங்க சொல்லலியா ?"
"குமார் அய்யாவும் ஷோபா அம்மாவும் சொல்லியே கேட்காத பொண்ணு நான் சொன்னா மட்டும் கேட்குமா என்ன ?"
"அண்ணனும் அண்ணியும் சொல்றப்ப இவங்க என்ன பதில் சொல்லுவாங்க."
"எங்க அக்கா மனசுமாறி நல்லபடியா  கல்யாணம் பண்ணனும்னா இதுதான் சரியான வழி. என்னைப் பார்க்கணும்ங்கிற ஆசையில் சுமி மேரேஜுக்கு யெஸ்  சொல்லுவானு அவங்க கிட்டே சொல்லுச்சு."
"தங்கைக்காக எவ்வளவோ தியாகம் பண்ணின அக்கா, தனக்காக இல்லாட்டா லும் தங்கைக்காகவாவது மேரேஜ் பண்ணிக்கலாமே "
"அவங்க இந்தப்பொண்ணுக்காக எதுவும்செய்ய ரெடிதான். இந்த பொண்ணை ஒருத்தன் கையில்பிடிச்சு குடுத்தபிறகுதான் நான் கல்யாணம் பண்ணிக்கு வேன்னு அவங்க பிடிவாதமா இருக்காங்க "
"ஆஹா..அலைஓய்ஞ்ச பிறகுதான் ஸ்நானம்பண்ற கதைனு சொல்லுங்க. அலையும்  ஓயப்போறதில்லே. ஸ்நானம் பண்ணப்போறதும் இல்லே.  ஆமா.. அவங்க இப்படியொரு முடிவில் இருக்கிறதா யார் சொன்னது ?"
"குமார் அய்யாதான்.. அந்தப்பொண்ணோட அக்காவும் எங்கிட்டேயும் இதையே தான் சொல்லுச்சு."
"உங்ககிட்டே சொன்னாங்களா ? நீங்க எப்போ டில்லி போனீங்க ?"
"நான் போகலே.. அவங்க இங்கிட்டு வந்தப்ப சொன்னாக "
"இங்கே வந்தாங்களா? டீலை பிரேக் பண்ணிட்டதா சொல்லி பவித்ரா சண்டை போடலியா ?"
"அவக அடிக்கடி இங்கிட்டு வந்துட்டுப் போவாக "
"என்னங்க சொல்றீங்க ?"
"ஆமாம் தம்பி. அவக வர்றதும் போறதும் இந்த பொண்ணுக்கு தெரியாது."
"அது எப்படிங்க ?"
"பவிம்மா அடிக்கடி டவுனுக்கு போயிட்டு வரும்.. புக்ஸ் வாங்க.. பேங்கில் பணம் எடுக்கணும்னு.. சுமிம்மா முன்னாடியே வந்து பேங்கில இல்லாட்டா புஸ்தகக்கடையில் வந்து மறைவா உக்காந்துக்குவாங்க.. எல்லாமே குமார் அய்யாவோட  ஏற்பாடு.. வந்து பார்த்துட்டு ரெண்டாம் பேருக்குத் தெரியாமே கிளம்பிப் போயிடும். கையோடு எதையாவது கொண்டாந்து பேங்கில் வச்சிட்டு போயிடும். நான் அங்கிட்டுபோய் அதை வாங்கிட்டு வந்து 'அவக குடுத்தாக.. இவக குடுத்தாக'னு சொல்லி இதுக்கிட்டே குடுப்பேன்."
"வாவ்.. வந்து வந்து போயிட்டுதான் இருக்காங்களா ! "
"ஆமாம்யா"
"பவித்ராவுக்கு ...?"
"இந்த விஷயம் இன்னிக்குவரை தெரியாது"
"ஒரு தங்கைக்காக அக்கா இவ்வளவு தூரம் அல்லாடுறாங்க. அக்காவுக்காக பவித்ரா  மேரேஜ் பண்ணிக்கிட்டு லைபில் செட்டில் ஆயிடலாந்தானே. இது பத்தி அவங்க ஏதாவது பேசினங்களா? ஏதாவது ஸ்டெப்ஸ் எடுத்தாங்களா ?"
"சுமி அம்மாக்கு ஜோஸ்யத்தில் நம்பிக்கை இருக்குது "
"அதுக்கும் இவங்க கல்யாணத்துக்கும் என்னங்க சம்பந்தம் ?"
"அதெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனா பவிம்மாவுக்கு இருபத்து மூணு வயசு ஆரம்பம் ஆகும்போதுதான் கல்யாண பேச்சை எடுக்கணும்னு அவங்க உறுதியா இருக்காங்க "
"ஓ !"
"பவிம்மா பிறக்கும் முன்னாடியே அவங்க குடும்ப ஜோஸ்யர், 'ஒரு உயிர்தான் தங்கும்'னு  சொன்னாராம்.  இது பெறந்த அன்னிக்கே பெத்தவ இறந்துட்டாங்க. இந்தப் பொண்ணுக்கு பதினைஞ்சு வயசு வரும்போது ஒரு கண்டம் இருக்குனு அதே ஜோஸ்யர் சொல்லி இருந்தாகளாம்.. அது நடந்துச்சாம்.   இருபத்து மூணு வயசு ஆரம்பமாகிறதுக்கு முன்னாலே ஒரு கண்டம் இருக்குது. அதோட எல்லாம் முடிஞ்சிடும்னு அவக சொல்லி இருக்காகலாம். அதனாலே அந்த நாளோடே எல்லா பிரச்னையும் தீர்ந்திடுமே. அதுக்குப்பிறகு எந்தவொரு கவலையும் கண்டமும் இருக்காதுனு நினைச்சு பவிம்மாவுக்கு  இருபத்து மூணு வயசு ஆகிறவரை கல்யாண பேச்சை தள்ளிப்போடலாம்னு நினைக்குது. இதை எங்கிட்டேயும் சொன்னாங்க.. குமார் அய்யா இவங்க கல்யாணம் பத்திப் பேசினப்பவும்அதையேதான் சொல்லி இருக்காக. இப்போ இந்தப்பொண்ணுக்கு இருபத்திரெண்டு வயசு முடியப்போகுது. அதான் குமார் அய்யாவும், பவியோட அக்காவும்  கல்யாண ஏற்பாட்டை பண்ணிட்டு இருக்காங்க "
"அப்படியா ! என்ன ஏற்பாடு?"
"உங்க அருமை அண்ணன் அதையெல்லாம் எங்கிட்டே சொல்வாரா என்ன ?" என்று கேட்டு குறும்பு சிரிப்புடன் கேட்டாள்  வள்ளி.

                                                                                 ---------------------தொடரும் ----------------------

   

No comments:

Post a Comment