Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, June 28, 2019

Answer of Meaningful Two Words in One Word Puzzles (21 - 25)

விடை  எண் - 21 :  கரும்புகை மாறிவிடும் - கரும்பு  கை   மாறி விடும்  

விடை  எண் - 22 : விழாத்தலைவர்   - விழாத் தலைவர்

விடை எண் - 23 :  பல கைகள் - பலகைகள்

விடை எண் - 24 :  அச்சாணி - அச் சாணி

விடை எண் - 25 :  சிரஞ்சீவி  - சிரஞ் சீவி

Wednesday, June 26, 2019

பலவான் யார் ? மழையா வெயிலா ??


சூரியன் - மழை : இந்த இரண்டில், பவர் ஃபுல் எதுன்னு கேட்டால், நாம் எல்லாருமே கொஞ்சமும் தயங்காமே சொல்ற பதில் : சூரியன்.
போன வாரத்திலிருந்து சென்னையில் மழை பெய்து கொண்டிருக்கிறது தானே?
ஆட்டோவில் பயணித்துக் கொண்டிருந்தேன். சிறு தூறல் விழவும், சாலையில் வண்டியில் பயணித்துக் கொண்டிருந்தவர்கள் ஓரம் கட்டினார்கள். பாதசாரிகள், வியாபாரிகள், மற்றவர்கள், ஷெல்டர் தேடி ஓடினார்கள்.
அதைக்கண்ட ஆட்டோ ட்ரைவர், "மாசக்கணக்கா வெயில் சுட்டெரிச்சு கிட்டு இருக்குது. அதை பெரிசா நினைக்காமே "உஸ் உஸ்"னு சொல்லிக்கிட்டு ஜனங்க அவங்கவங்க வேலையைப் பார்க்க ஓடிட்டே இருந்தாங்க. இரண்டு தூறல் விழவும், ஜனங்க நாலு பக்கமும் சிதறி ஓடறாங்க " என்றார்.
அவர் சொல்வது சரி என்று பட்டதால், நானும் அதைப்பற்றி யோசித்தபடி இருந்தேன். 
சூரியன் - மழை : இந்த இரண்டில், பவர் ஃபுல் எதுன்னு மனசுக்குள் ஒரு பட்டி மன்றமே நடந்து கொண்டிருந்தது.
இதற்குள் நான் இறங்கும் இடம் வந்து விட்டது. மழை தூறிக் கொண்டுதான் இருந்தது.
வீட்டை நோக்கி விரைந்து நடக்க ஆரம்பித்தேன்.
எனக்குள் ஒரு கேள்விஎழுந்தது. சுட்டெரிக்கிற வெயிலைப் பற்றிக் கவலைப்படாமல் வெளியிடங்களுக்குப்  போய் வந்திருக்கிறேன். இந்த ரெண்டு சொட்டு தண்ணீரைப் பார்த்து ஏன் ஓடுகிறேன் என்று என்னை நானே கேட்டுக் கொண்டேன். 
கிடைத்த பதில்: ஹாண்ட் பேக்கில் உள்ள பொருட்கள் நனைந்து விடக் கூடாது. dress நனைந்து விடக்கூடாது.
ஆக மொத்தம் சுட்டெரிக்கும் வெயிலைக்கண்டு அஞ்சாத மனித இனம், சிறு தூறலைக் கண்டு ஓடுகிறதென்றால் அது உடை / உடைமை மீதுள்ள அக்கறையால்தான் என்பது தெரிந்து விட்டது. 
இதை அந்த ஆட்டோ ட்ரைவர் கிட்டே சொல்லணும்னு நினைக்கிறேன். ஆனால் அவர் முகம் நினைவில் இல்லை.
மனித மனம் ஒன்றுதான். அது ஒரு சமயம் ஒவ்வொரு ஜீவராசி, தாவரங்களும் உயிர் வாழ தண்ணீர் தேவை என்று போராடுகிறது. மற்றொரு சமயம் மழை வரும்போது தன்னைக் காப்பாற்றிக் கொள்ள ஓடுகிறது. 
விந்தை உலகம்; வேடிக்கை மனிதர்கள் !

Saturday, June 22, 2019

Dear Viewers,

Face Book ல் படித்ததில் பிடித்தது உங்கள் பார்வைக்கும்.

ஒரு பெண்ணை வீழ்த்த முடியாதபோது ஆண் எடுக்கும் அடுத்த ஆயூதம் அவள் நடத்தையை விமர்சிப்பதுதான்...


ஒரு பெண்ணை வீழ்த்த முடியாதபோது ஆண் எடுக்கும் அடுத்த ஆயூதம் அவள் நடத்தையை விமர்சிப்பதுதான்...

Friday, June 21, 2019

Meaningful Two Words in One Word Puzzles ( 21 - 25)

புதிர் எண் - 21

"வாருங்கள் மகா ஜனங்களே.. இன்னும் இரண்டு நாளில் போகிப்பண்டிகை. வீட்டில் உள்ள வேண்டாத பொருளை எல்லாரும் வாசலில் போட்டு கொளுத்துவாங்க. எங்கே பார்த்தாலும் கறுப்பு நிறத்தில் புகைதான். இதோ இந்த பவுடரை எரியும் நெருப்பில் தூவினால் "  - - - - - - - - - - " என்று பிளாட் ஃபார்ம் ஓரத்தில் நின்று ஒருவர் கூவிக் கொண்டிருக்க, "அது எப்படிடா?"    என்று ஆச்சரியமாகக் கேட்டான் ஷங்கர்.
"அதெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால் காசு கொடுத்தால்   
- - - -   -   - - - - - " என்று அருகில் கரும்பு வியாபாரம் செய்து கொண்டிருந்தவரை சுட்டிக் காட்டினான் பாபு.

புதிர் எண் - 22

"சீஃப் கெஸ்ட் வயதானவராக இருக்கிறார். திறப்பு விழான்னு சொல்லி அவரை மாடிக்கு இழுத்தடிக்கிறாங்க. டெக்னாலஜி எவ்வளவோ முன்னேறிட்டுது. ஒரு ரிமோட்டை அவரிடம் கொடுத்து இங்கிருந்தே திறந்து வைக்க சொல்லலாமே" என்று உண்மையான கவலையுடன் ஒருவர் கேட்டார்.
" - - - - - - - " விழுந்திடுவாரோன்னு வருத்தப்படறீங்களா? நீங்க இதுக்கு முன்னே இவரைப்பத்தி கேள்விப்பட்டதில்லே போலிருக்கு. அவர் உடலும் உள்ளமும் ரொம்பவும் ஸ்ட்ராங்.. எங்கும், எதிலும், எந்த சதியிலும், எந்த சூழ்நிலையிலும்   " - - -    - - - - " அவர். தெரிஞ்சுக்கோங்க." என்று பதில் வந்தது மற்றொருவரிடமிருந்து .

புதிர் எண் - 23

"மாணவர்களே, தனிமரம் என்றுமே தோப்பாகாது. அதே போல தனியொரு மனிதனால், தனியொரு கையால் எந்த மாற்றமும் நிகழ்த்தி விடமுடியாது.
" - -   - - -" இணைய வேண்டும். ஒன்றுபட்டால் மட்டுமே இந்த சமுதாயம் முன்னேறும் " என்று வகுப்பு ஆசிரியர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, 
பியூன் வந்து அவரை அழைக்க, ஆசிரியர் வெளியேறினார். அந்த சமயம்  மாணவர்கள் ரொம்ப சீரியஸ் ஆக டிஸ்கஸ் பண்ணி ஒரு முடிவுக்கு வந்தார்கள். 
ஆசிரியர் வகுப்பறைக்குள் நுழைந்ததும் "நாங்கள் அதை இன்றைக்கே ஆரம்பிச்சிடுவோம். அதை பார்த்து நாளைக்கு நீங்க அசந்து போயிடுவீங்க" என்று கோரஸாக சொன்னார்கள்.
மறுநாள் வகுப்பறைக்குள் நுழைந்த ஆசிரியரிடம், அந்த அறையின் மூலையை சுட்டிக் காட்டினார்கள்.
"என்னடா.. இது கட்டிட வேலைக்கான மரச்சாமான்கள் ?" என்று ஆசிரியர் வியந்து போய்க் கேட்க, " நீங்கள்தானே  - - - - -" இணைய வேண்டும்னு சொன்னீங்க. பொருள் வந்தாச்சு. இணைக்க வேண்டியதுதான் பாக்கி " என்று மாணவர் தலைவன் சொல்ல, "எனக்கு தலைசுத்துது. போய் ஒரு டம்ளர் தண்ணீர் கொண்டு வா " என்று சொன்ன ஆசிரியர், அங்கேயே அமர்ந்து விட்டார். 


புதிர் எண் - 24


"டேய் .. எனக்கு சந்தைக்கு நேரமாச்சுடா.. நேரங்காலம் தெரியாமல் வம்பு பண்ணாதே. " - - - - " இல்லாமல் மாட்டு வண்டி ஓடாதுடா " என்று அப்பா கெஞ்சலான குரலில் கேட்க. "அப்படின்னா.. நான் கேட்டதை வாங்கிட்டு வருவீர்களா?" என்றான் சேது.
"சரி.."
"அதோ "- -   - - " குவியலுக்குள்" என்று அம்மா வறட்டி தட்டிக் கொண்டிருந்த இடத்தை சுட்டிக் காட்டினான் சேது. 

புதிர் எண் - 25

"அந்த சாமியாரைப் பார்க்க தினமும் இவ்வளவு கும்பல் வருகிறதே. அவர் சொல்றது நடக்குமா?" 
"ஓ .. இரண்டு வருஷம் முன்பு என்னோட பிறந்த நாளுக்கு ஆசீர்வாதம் வாங்கப் போனேன். "நீ "- - - - - " ஆக வாழ்வாய்"னு வாழ்த்தினார். நான் இப்போ "- - -   - - " ஆக இருக்கிறேன். திருப்பதியில் பக்தர்களின் முடிவெட்டும் வேலை பார்க்கிறேன்.

Wednesday, June 19, 2019

Answer of Meaningful Two Words in One Word ( 16 - 20 )

புதிர் எண் 16 ன் விடை : மந்திரம்  - மந்தி ரம்

புதிர் எண் 17 ன் விடை : வா ராது போகலாம் - வாராது போகலாம்

புதிர் எண் 18 ன் விடை :  லக்னோ  - லக் னோ

புதிர் எண் 19 ன் விடை : கல்லாவில் - கல்லா வில்

புதிர் எண் 2ன் விடை :  கோமாஸ்டேஜில்   - கோமா  ஸ்டேஜில் 

Saturday, June 15, 2019

Meaningful Two Words in One Word Puzzles ( 16 - 20 )

புதிர் எண் 16


வெறித்தனமாக அந்த குரங்கு ஆடுவதை வைத்த கண் வாங்காமல் அத்தனை பேரும் பார்த்துக் கொண்டிருந்தனர்.
"என் ஆயுளில் ஒரு குரங்கு இந்த ஆட்டம் போட்டு நான் பார்த்ததே இல்லை." என்று பலரும் சொன்னார்கள்.
"பேய் பிடிச்ச மாதிரி ஆடுதே இந்த குரங்கு. ஒருவேளை அந்த குரங்காட்டி  இந்த குரங்குக்கு ஏதாவது   - - - - -  போட்டிருப்பானோ ?"
"ஊஹூம் இருக்காது. குரங்காட்டி தோளில் கிடக்கிற பையில் என்ன இருக்குதுனு பார்த்தியா. அந்த  - - -   - - போட்டுட்டு ஆடுது "

புதிர் எண் 17

நேரம் போவது தெரியாமல், ஃபேன்சி ஸ்டோரில் ஒவ்வொரு ஐயிட்டமாக ராதா தேடிக் கொண்டிருக்க, "வா .. ராது .. நேரம் போகுது .. சீக்கிரம் ஆகட்டும்" என்று அவசரப் படுத்தினாள், வானம் இருட்டிக் கொண்டிருப்பதை பார்த்த அம்மா, " மழை வரும் போல இருக்குது. -   - -   - - - -  "என்றாள் 
"அம்மா சும்மா தொணதொணக்காதே. மழை வரலாம்.  இல்லாட்டா 
 - - -  - - - - .  நீ என்னை நிம்மதியா பர்சேஸ் பண்ண விடு"

புதிர் எண் 18

"ஹாய் குமார்.. என்னோட கஸினுக்கு கல்யாணம். ஃபேமிலி மெம்பர்ஸ் எல்லாரும்   உத்திரப்பிரதேசத்தின் தலைநகர் " - - -  " க்கு போறோம். நீயும் வர்றியா ? ஜாலியா என்ஜாய் பண்ணலாம்".
"இல்லே.. ஃபேமிலியில் சில பிரச்னை .. அதை சால்வ் பண்ண  நான் இங்கே இருந்தே ஆகணும். உன்னோடு சேர்ந்து வர எனக்கு "- -  -" ஸாரி .    

புதிர் எண் 19

"ஹாய் குருசரண், உன்னோட அண்ணன் ரெண்டு நாளா பார்க் பக்கமே வரக் காணும். என்ன மேட்டர்?"
"அப்பா, வடமாநில யாத்திரையில் இருக்கிறார். அதான் ஹோட்டலில் பில் பணத்தை வாங்க அண்ணன் " - - - - - " உட்கார்ந்திருக்கிறார்."
"ஓஹோ..அது என்ன ! உன் கையில் வில்லும் அம்பும்.. இந்த வித்தையை யார்கிட்டே கத்துக்கிறே ?"
"யார்கிட்டேயும் இல்லேண்ணா .. சுய முயற்சிதான்.. இது நான் "  - - -   - - " வித்தை"
"அப்படின்னா சபாஷ்டா தம்பி". 

புதிர் எண் 20

இசை நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு வந்த கலாவதி அங்கு தனியாக உட்கார்ந்திருந்த சிறுவனிடம்  "நீ கோமதி தம்பிதானே ? " என்று கேட்டாள்.
சிறிது யோசித்த சிறுவன் "ஆமாம்.. நான் கோமா அக்காவோட தம்பிதான் "
என்றான்.
"எங்கே உன்னோட அக்கா ?"
- -  - - - -  "  இருக்காங்க "
"என்னது? - - - - - -  " இருக்காங்களா ? என்னாச்சு அவங்களுக்கு ?" என்று கலாவதி பதறவும், "அய்யோ .. அய்யோ .. " என்றபடி  விழா மேடையை சுட்டிக் காட்டினான்.
"அப்பாடா" என்று பெருமூச்சு விட்டாள் கலாவதி  

Thursday, June 13, 2019

Answer of Meaningful two words in one word puzzles ( 11 - 15)

புதிர் எண் 11 ன் விடை : அம் மாப்பிள்ளை - அம்மாப் பிள்ளை
புதிர் எண் 12 ன்  விடை : அத் தை மகளை   - அத்தைமகளை
புதிர் எண் 13 ன் விடை : சரியாதப்பா - சரியா தப்பா 
புதிர் எண் 14 ன்  விடை :  எண்ணிக்கை  -  எண்ணிக் கை
புதிர் எண் 15 ன் விடை: போதாது பொருள்  - போ தாது பொருள்

Tuesday, June 11, 2019

அது ஒரு அழகிய நிலாக்காலம் ! (02)


பத்திரிகைகள், டீவி சேனல்களில் "ஹிந்தி மொழி திணிப்பு" பற்றிய செய்திகளைப் படிக்கும்போது, விவாதங்களைப் பார்க்கும்போது அந்தநாள் ஞாபகங்கள் மனதில்  அலையடிக்கிறது.  
இன்றைய காலகட்டத்தில் மூன்று வயதுக்கு முன்பாகவே குழந்தைகளை  கொண்டு போய் ஸ்கூலில் தள்ளி விடுகிறோம். தள்ளப்பட்ட அந்த நாளிலிருந்தே தனக்கு சம்பந்தமில்லாத ஒரு மொழியை குழந்தை கற்றுக் கொள்ள ஆரம்பித்து விடுகிறது. 
ஆனால் A B C D என்கிற ஆங்கில எழுத்துக்களையே நாங்கள் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதுதான் கற்றுக்கொண்டோம். TABLE, CHAIR, WINDOW, DOOR போன்ற  வார்த்தைகளை அதன்பின் கற்றுக் கொண்டோம்.
நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது ஹிந்தி பீரியட் வாரத்தில் மூன்று நாட்கள் மட்டும் உண்டு. நானும் எனது நட்பு வட்டங்களும் அதைக் கற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டினோம். மற்ற பாடங்களைக் காட்டிலும் ஹிந்தியில் அதிக மார்க் வாங்குவோம்.
1967 ம் வருடம் என்று நினைக்கிறேன். அந்த காலகட்டத்தில் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் வந்தது. தமிழுக்காக சிலர் தீக்குளித்தார்கள். போராட்டத்தில் நாங்கள் ஆர்வம் காட்டினோம். அது தமிழ் மீது உள்ள மிகப் பெரிய அக்கறையாலோ ஹிந்தி மீது உள்ள வெறுப்பினாலோ அல்ல. "போராட்டம் நடந்தால் ஸ்கூல்க்கு லீவு விடுவாங்க". அது மட்டுந் தான் எங்களுக்குத் தெரியும்.
அதே பள்ளியில் அக்கம்பக்கத்து ஊர்களில் இருந்து வந்து, ஹாஸ்டலில் தங்கிப் படித்த மாணவிகள் உண்டு. மிகவும் கஷ்டப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த அவர்களது பெற்றோர் பலர் கூலித் தொழிலாளர்கள். கிறிஸ்துவ மிஸ்ஸன்ஸ் உதவியால் கட்டணமின்றி ஹாஸ்டலில் தங்கி கல்வியும் கற்றுக் கொண்டிருந்தார்கள். ஆனால் அந்த வயதில் அவர்களுக்கு குடும்ப சூழ்நிலையோ வீட்டுக் கஷ்டமோ தெரியாது. அந்த பக்குவம் அந்த வயதில் அவர்களுக்கு / எங்களுக்கு இல்லை என்பதுதான் உண்மை.. எப்படா லீவு விடுவாங்க. வீட்டைப் பார்த்து ஓடலாம் என்கிற மனோநிலையில் இருப்பவர்கள்.
ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் வரும். ஸ்கூல் லீவு விடுவாங்க. சில நாட்கள் கழித்து பள்ளி திறக்கப்படும்.  அன்றைய தினமே அடுத்தாப்ல ஸ்ட்ரைக் எப்ப வரும் என்றுதான் பள்ளி முழுக்க பேச்சு இருக்கும். 
என்னுடன் படித்த சில மாணவிகள், "அடுத்த ஸ்ட்ரைக் எப்ப வரும். உங்க வீட்டுப் பக்கம் காலேஜ் பிள்ளைங்க இருந்தா கேட்டு சொல்லேன். நம்ம ஸ்கூல் முன்னாடி வந்து நின்னு போராட்டம் நடத்த சொல்லேன்" என்பார்கள். இதே போல வேறு சில மாணவிகளிடமும் ஹாஸ்டல் ஸ்டூடெண்ட்ஸ் கேட்ட விஷயம் எங்கள் க்ளாஸ் டீச்சர் காதுக்குப் போய்விட்டது.
அந்த மாணவிகளைக் கூப்பிட்டு, "உங்க அப்பா அம்மா இங்கே வந்து ஹெச்.எம் காலில் விழாத குறையாக அவங்க கஷ்டத்தை சொல்லி உங்களை ஹாஸ்டலில் சேர்த்து விட்டுட்டுப் போயிருக்காங்க. எங்க பொழைப்புதான் கூலித் தொழிலா போச்சு. என் பிள்ளையாவது படிச்சு நல்ல நிலைமைக்கு வரட்டும்னு அழுது புலம்பிட்டுப் போயிருக்காங்க. அவங்க நம்பிக்கையைக் காப்பாத்தணும்னு நினைக்கவே இல்லை. லீவுதான் பெரிசா போச்சு. உட்கார்ந்து சாப்பிட சொத்து இருந்தால் எந்த மொழியும் தேவை இல்லை. உழைச்சாதான் சோறுங்கிற நிலைமையில் நாம் இருக்கிறோம். படிச்சு முடிச்சாலும், தமிழ் நாட்டிலே பிறந்து படிச்சு முடிச்ச அத்தனை பேருக்கும் தமிழ் நாட்டிலேயே வேலை கிடைச்சிடாது பொழைப்புக்காக எங்கெங்கு போகப் போகிறோம்னு யாருக்கும் தெரியாது. பள்ளிக்கூட நேரத்தில், பைசா செலவில்லாமல் ஒரு மொழி யை கத்துக்கோங்கன்னு சொன்னா, அது எவ்வளவு பெரிய வரம்னு தெரியாமே ... முட்டாள்களே. ஹிந்தி படிக்கிறோம். அதில் பாஸ் ஆகணும்னு சொல்லாதே. பாஸ் ஆகியிருந்தாதான்  வேலை வாய்ப்புனு  கண்டிஷன் போடாதேனு போராடுங்க.. அதுவும்  இந்திய மொழிதான். எந்த கண்டிஷனும் இல்லாமே எத்தனை மொழியை வேணும்னாலும் பள்ளி நேரத்தில் கத்துக்  குடு. படிச்சு தெரிஞ்சுக்கிறோம்னு போராடுங்க ." என்று சொல்ல, அவங்க முன்னாடி அமைதியாக கைகட்டி நின்றுவிட்டு,  பிரெண்ட்ஸ் சர்க்கிளில் வந்து அவங்களைப் போலவே பேசி நடித்துக் காட்டினார்கள். நாங்கள் கைதட்டி ரசித்தோம்.
பள்ளியில் படித்த போது ஹிந்தி எழுத்துக்களை எழுதப் படிக்க எனக்குத் தெரியும். ஆனால் எல்லா வார்த்தைக்கும் அர்த்தம் தெரியாது.  பள்ளிப் படிப்பு முடிந்து வீட்டிலிருந்த நாட்களில் ஆராதனா, பாபி, யாதோங்கி பாரத் போன்ற ஹிந்திப் படங்களை பார்த்தபோது தான், காட்சியை ரசித்த நம்மால் கதை வசனத்தை, பாடல்களை ரசிக்க முடிய வில்லையே என்கிற ஆதங்கம் வந்தது.  என் பக்கத்து வீட்டிற்கு , டில்லியில் வளர்ந்த ஒருபெண் மருமகளாக வந்தாள்  அவங்க கிட்டே கேட்டு சில ஹிந்தி  வார்த்தைகளைக் கற்றுக் கொண்டேன்.  அதன் பின் தொலைக் காட்சி யில் (DD = 2) சனிக்கிழமை தோறும் ஒலிபரப்பாகும் ஹிந்திப் படங்களை பார்ப்பேன். அன்றைய தினம் என்னதான் தலை போகிற வேலை இருந்தாலும் அதெல்லாம் இரண்டாம் பட்சம்தான்.
சென்னை வந்து மத்திய அரசுப் பணியில் சேர்ந்த பின் ஹிந்தி கற்றுக் கொள்ள வாய்ப்புக் கிடைத்தது.  ஆபீஸ் நேரத்தில், ஆபீஸ் செலவில் ஹிந்தி க்ளாஸ் சென்று வரலாம். பாஸ் ஆனால் அவார்ட், ஒரு இன்கிரிமெண்ட் உண்டு. ஃபெயில் ஆனால் பனிஷ்மென்ட் எதுவும் கிடையாது. 
நான்  ஹிந்தியில்  PRABODH, PRAVEEN, PRAGYA  என்ற மூன்று  லெவல் எக்ஸாமும் எழுதினேன். பாஸ் ஆனேன்.  அவார்ட் வாங்கினேன்.    ஒரு  இன்கிரிமெண்ட் வாங்கினேன்.
ஒரு சூழ்நிலையில்  என் சகோதரியின் பையன் பெண்ணுடன் சேர்ந்து டில்லிக்கு போக வேண்டிய கட்டாயம். அவர்கள் இரண்டு பேரும் ஹிந்தி என்றால் அது கிலோ என்ன விலை என்று கேட்கிற ரகம்.
குடும்ப நண்பர் வீட்டில் டில்லியில் தங்கினோம். எங்களை பிர்லா மந்திர்,  ரெட் ஃபோர்ட்  என்று அழைத்துச் சென்றார்கள்.
மறுநாள் அவர்களிடம், "நீங்க யாரும் என்னோடு வரக்கூடாது. நான் மட்டும் தனியாகப் போய் ஷாப்பிங் பண்ணிட்டு வருவேன்" என்று சொல்லி விட்டுக் கிளம்பினேன்.
நேராக Monday Market போனேன். பேரம் பேசி சில பொருட்கள் வாங்கினேன். மொழிதெரியாமல் சிலசமயம் தவித்தபோது,"அங்கிரேஜி மேம் போலோ; முஜே ஹிந்தி  நஹீம் மாலும்" என்பேன். அவர்களும் புரிந்து கொண்டு அங்கிருந்த தமிழரை அழைத்து எனக்கு பதில் சொல்ல சொன்னார்கள். இப்படியாக பர்சேஸ் முடிந்தது. வீட்டுக்கு வரும் பாதை மறந்து விட்டது. அரைகுறை ஹிந்தியில் குடும்ப நண்பரின் வீட்டின் அங்க அடையாளம் சொல்லி வீடு வந்து சேர்ந்தேன்.
நான் வீடு போய் சேரும்வரை அவங்க மனநிலை அவர்கள் வசம் இல்லை. என் தலையைக் கண்டதும், "அஞ்சு .. இப்பதான் எங்களுக்கு உயிரே வந்துச்சு" என்றார்கள் .   
ஹிந்தி எக்ஸாம் எழுதி அவார்ட் வாங்கினதெல்லாம் இந்த டில்லி டூருக்குப் பின்தான்.
இப்பவும் என்னாலே ஹிந்தி எழுதப் படிக்க முடியும். ஆனால் நிறைய வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியாது 
ஹிந்திப் படங்கள் பார்த்து எவ்வளவோ காலம் ஆகிறது. ஹூம்.. அது ஒரு காலம்..

Thursday, June 06, 2019

Meaningful Two words in one word puzzles (11 - 15)

( குறிப்பு : ஒவ்வொரு புதிரிலும்  கோடிட்ட இடங்கள் இரண்டு உள்ளன. இரண்டிலும் வர வேண்டியது ஒரே ஒரு வார்த்தைதான். ஆனால் பிரித்து எழுதும்போது இரண்டு விதமான அர்த்தங்களைத் தரும்.)
புதிர் எண் 11

" இதோ பாரும்மா.. எம்மாம் மாப்பிள்ளை ... ஐ மீன் .. எத்தனை மாப்பிள்ளை  போட்டோ கொண்டு வந்திருக்கிறேன்னு. உனக்கு எம்மாப்பிள்ளை பிடிச்சிருக்குனு சொல்லு " என்று கல்யாண தரகர்  டீப்பாய் மீது  போட்டோக்களைப் பரப்ப, தள்ளி நின்றே அனைத்தையும் பார்த்த வித்யா "எனக்கு "- -  - - - - -" பிடிச்சிருக்கு " என்றாள் குறும்புச் சிரிப்புடன்  .
அவள் காட்டிய போட்டோவை கையில் எடுத்த அம்மா, "இந்த வரனா ? இவன் வேண்டவே வேண்டாம். என் ஃப்ரெண்ட்  ஜானகியோட பொண்ணுக்கு   இந்த வரன் வந்துச்சு. விசாரிச்சு பார்த்துட்டு வேண்டாம்னு சொல்லிட்டா.. நமக்கும் வேண்டாம் " என்றாள். 
"ஏன்?"
"அதான் நீ கொஞ்சம் முன்னே சொன்னியே..அதுமாதிரி இவன் " - - - -   - - - ". எந்தவொரு விஷயத்திலும் சுயமா முடிவு எடுக்கத் தெரியாத பக்கி" என்றாள் அம்மா.   

புதிர் எண் 12

"ரமேஷ்,  நாளைக்கு டெல்லியிலிருந்து என் அக்கா பொண்ணு ரம்யா ஒரு இன்டெர்வியூ  அட்டென்ட் பண்ண சென்னைக்கு வர்றா. எனக்கு ஆபீசில் வேலை அதிகம்.. சீக்கிரம் வேறு போகணும். அதனாலே அவளை ரிஸீவ் பண்றது, அவ சொல்ற இடத்துக்கு அழைச்சிட்டு போறது வருவது எல்லாமே உன்னோட பொறுப்பு " என்றார் அப்பா.
இந்த விஷயத்தை உடனேயே ராகவ் காதில் போடாவிட்டால் தலையே வெடித்து விடும் போலிருந்தது ரமேஷுக்கு .
போனில் நண்பனை தொடர்பு கொண்டு, " என்ன ..பிஸியா?  ஃப்ரீயா?" என்றான்.
"இன்னியோடு மார்கழி மாசம் முடிஞ்சு நாளைக்கு தை மாசம்  பிறக்கப்போகுதே. "தை" தமிழர்களின் செல்லப்பெண் அல்லவா " - -   -  - - - " வரவேற்க வீட்டை டெக்கரேட் பண்றதில் மும்முரமா இருக்கிறேன்... நீ ..?"
"நானும் " - - - - - - "   வரவேற்க ரொம்ப பிஸியா இருக்கிறேன் " என்றான் ரமேஷ்,

புதிர் எண் 13


டீ குடித்துவிட்டு கம்பெனிக்குள் வேகமாக வந்த வேன் டிரைவர், வேனில் அளவுக்கு அதிகமாக ஏற்றப்பட்டிருந்த பிளாஸ்டிக் பாத்திரங்கள் சரிந்து கீழே விழுந்துவிடுமோ என்கிற பயத்தில், வேனை சுற்றிச்சுற்றி வந்து  மூட்டைகளை தட்டித் தடவிப் பார்த்துக் கொண்டிருந்தான். 
அவன் எண்ணத்தைப் புரிந்து கொண்ட சூப்பர்வைஸர், "தம்பி.. நீங்க வேலைக்கு புதுசு. அதான் பயப்படறீங்க. என் செர்வீசில் இதைப் போல எத்தனை லோட் கட்டி அனுப்பி இருக்கிறேன். கொண்டு போங்கப்பா..   இதிலே எதுவும்    "- - - - - - " என்றார்.
அவரருகில் நின்று கொண்டிருந்த மற்றொருவரிடம் இவர் சொல்றது  "- - -   - - - "  என்று டிரைவர்  கேட்க, "எல்லாம் சரிதான்; நீ வண்டியை எடு " என்றார் அவர்.

புதிர் எண் 14

"என்னப்பா .. உன்னை நம்பி பணத்தைக் கொடுத்துட்டு, சரக்கை எடுத்து வைனு சொல்லிட்டுப் போயிட்டேன். இருநூறு தேங்காய்.. நீயும் மூட்டை கட்டி வச்சிட்டே. " - - - - -  " சரியா இருக்குந்தானே ?". 
"தலைமுறை தலைமுறையா வியாபாரம் செய்றோம். ஜனங்க வாங்கிட்டுப் போறாங்க. உங்களுக்கு சந்தேகம் இருந்தா சொல்லுங்க  ஸார்,  தேங்காயை  - - - -   -" யிலே தர்றேன். நீங்க உங்க கையாலேயே கட்டி எடுத்துட்டுப் போங்க ஸார் " என்றார் தேங்காய் வியாபாரி. 

புதிர் எண் 15

"அப்பா சொன்னாரேன்னு வந்தேன். ஆனா இந்த சாமியார் பேராசை பேர்வழி போலிருக்கு" தனக்குத்தானே சாரதி சொல்லிக் கொண்டிருந்தது  பக்கத்திலிருப்பவருக்கு துல்லியமாக கேட்டிருக்கும் போல. 
"சாமியார் அந்த மாதிரி பேராசை பிடிச்ச ஆள் இல்லே" என்றார் அவர்.
"பின்னே என்ன ஸார் .. அப்பா சொன்னாரேன்னு புதுசா தொழில் தொடங்கும் முன்னே இவர்கிட்டே ஆசீர்வாதம் வாங்க வந்தேன். பழத்தட்டில் பத்தாயிரம் ரூபா வச்சிருக்கிறேன். நான் யார், என்ன தொழில் செய்யப்போறேன்னதும் அவர் இன்னும்  அதிகமாக எதிர் பார்க்கிறார் போலிருக்குது .  - - - - - - கொண்டு வானு  சொல்றார் "
"எதை வச்சு அப்படி சொல்றீங்க .. என்ன தொழில் பண்ணப்போறீங்க ?"
"தாதுப் பொருள் விற்கிற , வாங்கிற தொழில் பண்ணப்போறேன்."
"தம்பி ... அவர் உங்க கிட்டே   " -  - -   - - - " கொண்டு வான்னு சொல்லி இருக்கிறார். " 
 "அது எதுக்கு இவருக்கு?"
"அதை அவர் கையால் ஆசீர்வாதம் பண்ணித் தரத்தான் " என்று இவர் விளக்கவும்,வெட்கத்தால் தலை குனிந்தான் சாரதி.


Wednesday, June 05, 2019

Answer of Meaningful two words in one word puzzles (06 - 10)

புதிர் எண் - 06 முதல் 10 க்கான விடை கீழே உள்ளது. உங்கள் விடையுடன் சரி பார்த்துக் கொள்ளவும்.


விடை-06: பிள்ளை யாருக்கு -   பிள்ளையாருக்கு
விடை -07  :  அந்த மான்   - அந்தமான் 
விடை - 8 :  சிறு மை   -  சிறுமை
விடை - 9 : பெருங் காயம்  -  பெருங்காயம்
விடை - 10 : அவரைக்காய்  -  அவரைக் காய்


Sunday, June 02, 2019

Meaningful Two words in one word puzzles (06 - 10)

( குறிப்பு : ஒவ்வொரு புதிரிலும்  கோடிட்ட இடங்கள் இரண்டு உள்ளன. இரண்டிலும் வர வேண்டியது ஒரே ஒரு வார்த்தைதான். ஆனால் பிரித்து எழுதும்போது இரண்டு விதமான அர்த்தங்களைத் தரும்.)
புதிர் எண் 06

" ச்சே .. இந்த சாலை மறியலால் சரியான சமயத்துக்கு கோவிலுக்கு வரமுடியலே. கோவில் நடை மூடியாகிவிட்டது. வெளிப்பிரகார கதவு மட்டும் திறந்திருக்குது" என்று மனதுக்குள் நினைத்த அப்பா "சேகர். நீ அந்த மர நிழலில் நின்னுக்கோ. நான் போய் ஆர்டர் பண்ணின "பெர்த் டே கேக்" வாங்கிட்டு வந்துடறேன். யாராவது கண்ணில் பட்டால் அந்த கொழுக்கட்டையை எடுத்துக் கொடு. நான் ஐந்து நிமிடத்தில் வந்திடுவேன் " என்று சொல்லிச் சென்றவர் சிறிது நேரத்தில் கையில் பார்சலோடு வந்து சேர்ந்தார். மூடியில்லாத காலிப் பாத்திரத்தை கையில் வைத்து ஆட்டியபடி சேகர் நின்று கொண்டிருந்தான்." மூடி எங்கே ? கொழுக்கட்டை எங்கே?" என்று கேட்டவரிடம் அரசமரத்தை சுட்டிக் காட்டி "அவர்தான் கண்ணில் பட்டார். கொடுத்தேன் " என்றான் சேகர். அரச மர  நிழலில் இருந்த விநாயகர் முன்பு கொழுக்கட்டை படைக்கப் பட்டிருந்தது.
"சீக்கிரமா தரிசனம் முடிச்சிட்டு வெளி வாசலில் வந்து நின்னு, தரிசனம் பண்ணிட்டு வர்றவங்களுக்கு நம்ம பிள்ளை கையால் பிரசாதம் கொடுக்க சொல்லுங்க. நமக்கும் கொஞ்சம் கொண்டு வாருங்க " என்று வீட்டை விட்டுக் கிளம்பும்போது மனைவி சொன்னது நினைவுக்கு வந்தது.
இவர்கள் வரவுக்காக வாசலில் காத்திருந்த அம்மா, " ஏன் இவ்வளவு லேட்...பாத்திர மூடி எங்கே? நமக்கு பிரசாதம் எங்கே? கொண்டு போன அத்தனையையும் நம்ம  " - - -    - - - - " கொடுத்தான்?" என்று கேட்க, அதை " - - - - - - - " கொடுத்தான் என்று அமைதியான குரலில் சொன்னார் அப்பா.        


புதிர் எண் 07

கொலுப் பொம்மைகளை  ஆழ்ந்து ரசித்துக்  கொண்டிருந்த தோழியின் அருகில் வந்த சாரதா, "உனக்கு எந்த பொம்மை ரொம்ப பிடிச்சிருக்குது ?" என்று கேட்க, "வனவாசத்தின்போது  சீதை ஸ்ரீராமனிடம் கேட்ட " - - -    - - " பொம்மைதான் ரொம்ப பிடிச்சிருக்கு .. அதை எங்கே வாங்கினே ?" என்று தோழி கேட்க, " - - - - - " தீவுக்கு டூர் போயிருந்தப்ப வாங்கினேன்" என்றாள்  சாரதா 

புதிர் எண் 08

வீட்டில் அப்படியொன்றும் வசதி வாய்ப்பு இல்லாவிட்டாலும்,   ஒரே பிள்ளை என்று செல்லம் கொடுத்து பிரகாஷ்  கேட்டதையெல்லாம் கடன் பட்டாவது வாங்கிக் கொடுத்து பழக்கப்படுத்தி வைத்ததன் விளைவு  - பிரகாஷ் ஒரு "பந்தா பேர்வழி" ஆனதுதான். வீட்டிலும் வெளியிலும் அடிக்கும் லூட்டிக்கு ஒரு அளவே கிடையாது.
நண்பனை சந்திக்கச் செல்வதற்காக பீரோவை திறந்து ட்ரெஸ்ஸை எடுத்தவன், ஷர்ட்டின் ஓரத்தில் இருந்த கறையைப் பார்த்துவிட்டு " அம்மா ..என்ன இது ?" என்று அலற, ஓடிவந்த அம்மா,    ஷர்ட்டை கையில் வாங்கிப் பார்த்து விட்டு, " பேனா இங்க் கறை மாதிரி தெரியுது. ரொம்ப சின்ன கறை .. கண்ணுக்கு தெரியாமே துளியூண்டு இருக்கு. இப்போ போட்டுக்கோ. நாளைக்கு சுத்தம் பண்ணிடறேன் " என்றாள்.
"நோ .. மம்மி.. உனக்கு இது " - -  - " கறையா தெரியலாம். இதைப் போட்டுட்டு நான் வெளியில் போனால் அது எனக்கு " - - -". வேறே நல்லா ட்ரெஸ்ஸா எடுத்துக் கொடுங்க "என்றான்.    

புதிர் எண் 09

" சீரகம் சாப்பிடுவது உடம்புக்கு ரொம்ப நல்லது. அகத்துக்குள்  அதாவது உடம்புக்குள் உள்ள உறுப்புகளை சீர் படுத்தும். அதனாலேயே அதை சீரகம்னு சொல்றதுண்டு" என்று நாட்டு மருத்துவர் சொல்ல, "அய்யா .. அப்படின்னா உடம்பில் ஏதாவது அடி பெரிய அளவில்  பட்டால், 
- - -   - - - " குணமாக " - - - - - - " சாப்பிட்டால் போதுமா ?" என்று கிண்டலாகக் கேட்டது அருகில் நின்று கொண்டிருந்த இளவட்டம் ஒன்று.

புதிர் எண் 10

"டேய் கண்ணா.. அப்பா வாசலில் நிற்கிறாரான்னு பாரு..  சமையலுக்கு  " - - - - - - " வாங்கிட்டு வர சொல்லு " என்று அம்மா சொல்ல, "என்ன காய்னு சொல்லாமே வெறுமே " - - - -   - - " வாங்கிட்டு வர சொல்றியே" என்று அலுத்துக் கொண்டான் மகன்.
அம்மா சொன்னது என்ன ? மகன் புரிந்து கொண்டது என்ன என்பது உங்களுக்கு புரியும்தானே ?

Saturday, June 01, 2019

Answer of Meaningful Two words in one word puzzles (01 - 05)

சென்ற வாரம் பதிவாகியிருந்த புதிருக்கான விடைகள். ஒவ்வொரு புதிரிலும் உள்ள கோடிட்ட இடங்களில் விடையைப் பொருத்திப் பாருங்கள். உங்கள் விடையோடு ஒத்துப் போகிறதா என்று சரி பார்த்துக் கொள்ளுங்கள். அடுத்த 5 புதிர்கள் நாளைய பதிவில்.


விடை -  01 :  சாதாரணம்  - சாதா ரணம் 
            
விடை -  02 : சமரசம் - சம ரசம்

விடை  - 03 :   நகைச்சுவை  -  நகைச்சு  வை 

விடை - 04  : கத்திச் சண்டை  -  கத்திச்சண்டை

விடை - 05 : தங்க  வீடு  - தங்கவீடு