Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Sunday, March 27, 2016

குழந்தைகளுக்கான குறுந் தொடர் - 31


  அச்சுப்பிச்சு   அப்புமணி !              சேகருக்கு போன் பண்ணி சலித்துப் போன தனம், "தம்பி போனை ஆப் பண்ணி வச்சிருக்கே " என்று சொன்னவள், துணி துவைக்கக் கிளம்பிப் போய்விட்டாள்.
சற்று நேரத்தில், "இங்கே தனம்ங்கிறது ...!" என்று கேட்டபடியே ஒருவன் உள்ளே வர "நாந்தான் ... என்ன வேணும் ... உள்ளாற வா... குழாயண்டே இருக்கிறேன் " என்று குரல் கொடுத்தாள் தனம். 
ஒரு சிறுமியை அழைத்துக் கொண்டு உள்ளே வந்த அவன்,"பிரவீன் சொன்ன தனம்..." என்று சொல்லும்போதே, "அந்த தனம் நானே தான். ஒரு பொண்ணு வரும்னு தம்பி சொல்லிச்சு. இதுதான் அந்தப் பொண்ணா ?" என்று கேட்டாள் தனம்.
"நான் அக்பர் வந்துட்டுப் போனதா சொல்லுங்க. இந்த பாப்பா இங்கே இருக்கட்டும். மத்ததை நான் அவங்ககிட்டே பேசிக்கிறேன். பாப்பா பத்திரம் " என்று சொல்லிவிட்டு அங்கிருந்து வேகமாக நகர்ந்தான். 
அவன் சென்ற சில நொடியிலேயே சேகர் வேகமாக அங்கு வந்தான்.
"என்ன தனம் ... போன் பண்ணியிருக்கிறே போலிருக்கு. மிஸ்ட் காலில் பார்த்தேன் .அப்புமணி ஏதாவது அடம் பண்றானா ? உனக்கு  நான் போன் போட்டால் நீ எடுக்கவே இல்லை." என்றான் பரபரப்புடன்.
"கோவிச்சுக்காதே கண்ணு. துணி துவைக்க  வந்தேன். போனை வீட்டில் வச்சிட்டு வந்துட்டேன்..உன் அண்ணாத்தே அந்தப் பையனைப் பார்த்துட்டு ரொம்ப சந்தோசப்பட்டார். அவனைத் தொட்டு முத்தம் குடுத்தார். அதை சொல்லத்தான் போன் போட்டேன். நீ கொண்டு போய் சேர்த்தியே, அந்த ஆஸ்பத்திரி மருந்து நல்லாவே வேலை செய்யுது" என்றாள் தனம்.
"நல்ல சேதி சொல்லியிருக்கே.."என்ற சேகர், அப்போதுதான் அவளருகில் நின்று கொண்டிருந்த சிறுமியைக் கவனித்தான்.
"யார் இது ?" என்றான்.
"ஒருபொம்பளப்பிள்ளை வரும்னு பிரவீன் தம்பி சொல்லிட்டு இருந்துச்சே அதுதான் இது. இப்போ கொஞ்சம் முன்னேதான் அக்பர்னு ஒரு தம்பி கொண்டாந்து விட்டுச்சு  "
"சரி... சரி.. உள்ளே போய்ப் பேசிக்கலாம் " என்று சொல்லிவிட்டு, அந்த சிறுமியின் கைகளைப் பற்றி அழைத்துக் கொண்டு தனம் வருவதற்கு முன்பாகவே "அப்பு " என்று குரல் கொடுத்தபடி தனம் வீட்டுக்குள் நுழைந்தான் சேகர். 
"அண்ணா ... என்னை விட்டுட்டு நீங்க இருக்க மாட்டீங்கன்னு தெரியும் " என்றபடி ஓடிவந்த அப்புமணி,சேகர்அருகில்நின்ற சிறுமியைப் பார்த்ததும் "ஹாய்...ராஜகுமாரி"என்றுசந்தோசக்கூச்சலிட,"பேசாமலிரு"என்று கண் களால் ஜாடை செய்தாள் அவள்.
"இந்தப் பொண்ணை உனக்குத் தெரியுமா ?" என்று கேட்டான் சேகர் ஆச்சரியத்துடன்.
"ஊஹும் ... கதையில் வர்ற ராஜகுமாரி மாதிரி இருக்கிறான்னு சொல்ல வந்தேன்"என்று சொல்லிச்சமாளித்தான் அப்புமணி,வந்தஅந்த சிறுமியின் எச்சரிக்கையைப் புரிந்து கொண்டவனாக.  
"அப்புக்கண்ணா...உனக்குப் பொழுதுபோகலேன்னு என்னைப் படுத்தினே  . உன்னோட விளையாட ஒரு ஆள் வந்தாச்சு " என்றாள் தனம்.
"தும்கோ க்யா சாஹியே ? மைம் ஜானா சாஹியே " என்றாள் அந்த சிறுமி  "அண்ணா... இது என்ன சொல்லுது ?" என்று கேட்டான் அப்புமணி 
"அது இந்தியிலே பேசுது. உனக்கு என்ன வேணும் என்னைப் போக விடுன்னு சொல்லுது " என்று விளக்கினான் சேகர் 
"போறேன்னு சொன்னா... விட்டுட வேண்டியதுதானே " என்றான் அப்புமணி  
"உனக்கு ஒன்னும் தெரியாது. நீ பேசாமலிரு "
"ஏ ...க்யா ?"
"என்னண்ணா இது ! திடீர்னு க்யா க்யானு  கத்துது ?"
அதற்குப்பதில் சொல்லாத சேகர்,"அண்ணாஎங்கே?"என்றுஉள் அறைக்குள் எட்டிப் பார்த்தான். பிறகு, "தூங்கறார் ... எழுப்ப வேண்டாம் . ஒரு அவசர வேலை அப்புறமா வர்றேன். தனம்... உனக்கு இந்தி தெரியும் தானே. பத்திரமா பார்த்துக்கோ. வாசல் வரை வா. நான் குழந்தைகளுக்கு சாப்பாடு வாங்கிக் குடுத்துட்டுப் போயிடறேன் " என்று சொல்லிவிட்டு வேகமாக வெளியில் வர அவனைத் தொடர்ந்து தனமும் வந்தாள் 
"ஏம்ப்பா ... நான்.. சோறாக்கிப் போட மாட்டேனா ?"
"நீ எப்போ ஆக்கி அதுங்க எப்போ சாப்பிட ... இப்போ டிபன் வாங்கி தர்றேன். அப்புறமா சமைச்சுப் போடு ..."
"யாரும் பசின்னு சொல்லிட்டா உனக்குப் பொறுக்காதே !" என்றபடி வாசலில்  வந்து நின்ற  தனம், சேகரின் வருகைக்காக காத்திருந்தாள்.
உள்ளே .... தனத்தின் வீட்டினுள்.....
"ஏய் ... நீ ராஜகுமாரி.... இல்லே .... இல்லே....நிவேதிதா தானே ?" என்று அப்புமணி சத்தமாகக் கேட்க, விரைந்து வந்து அவன் வாயைக் கைகளால் பொத்திய நிவேதிதா"அசடு.. அசடு.. என்னைத் தெரிஞ்ச மாதிரி காட்டிக் காதே " என்றாள்
"ஏன் ?" என்று ரகசியக் குரலில் கேட்டான் அப்புமணி 
"உன்னைக் கடத்தி வச்சிருக்காங்களா ?" என்று பரபரப்புடன் கேட்டாள் நிவேதிதா  
"நான் உலகத்தை சுத்திப் பார்க்க வந்திருக்கிறது உனக்குத் தெரியும்தானே  பிறகு ஏன் இப்படிக் கேட்கிறே ?"
'என்னைக் கடத்திட்டு வந்திருக்காங்க. நாம் ரெண்டு பேரும் தனியா இருக்கும்போது மட்டும் பேசலாம். மத்தவங்க எதிரிலே என்னைத் தெரிஞ்சுக் கிட்ட மாதிரி காட்டிக்காதே... நீ எப்படி இங்கே வந்தே ?"
"சேகர் அண்ணா கூட வந்தேன் "
"அவர் உனக்கு அண்ணனா ?"
"ஆமாம் அவர் அண்ணன்... நீ அக்கா மாதிரி "என்று சொல்லிச் சிரித்தான் அப்புமணி  
"யாரோ வர்ற மாதிரி இருக்குது. நீ அங்கே போயிடு .. எதுவும் தெரியாத மாதிரி இரு  " என்று மீண்டும் எச்சரித்தாள் நிவேதிதா.
டிபன் பொட்டலங்களுடன் உள்ளே வந்த தனம், "கண்ணுங்களா .. சாப்பிட வாங்க  "என்று கூப்பிட்டாள் 
"நை... முஜே ....." என்று அவள் சொல்லும்போதே, "நீச்சே பைட்டோ ..காவோ " என்று தனம் சொல்ல "நை... நை..." என்றாள் நிவேதிதா.
"தனம் அக்கா... அந்தப் பொண்ணு நெய் கேட்குது " அப்புமணி சொல்ல, தனம் அதைக் கேட்டு பெருங்குரலில் சிரிக்க... நிவேதிதா சிரிப்பை அடக்க முடியாமல் தவித்தாள்.
"அது எதுவும் வேணா ங்கிறதை அப்படி சொல்லுது " என்றாள் தனம்.
"அது நைனு சின்ன வார்த்தை சொல்லுது. அதுக்கு இவ்வளவு பெரிய அர்த்தம் சொல்றே ?" என்று அப்புமணி கேட்க, சிரிப்பை அடக்கமுடியாமல் தவித்தாள் நிவேதிதா.
------------------------------------------------------- தொடரும் ----------------------------------------- 

Monday, March 21, 2016

நல்லாத்தான் கேக்குறாங்கய்யா கேள்வி !



இன்று train ல் பயணிக்கும்போது கேட்ட உரையாடல்.. பேசிக் கொண்டிருந்த அந்தப் பெண்கள் அனைவருமே படித்தவர்கள் வேலை பார்க்கிற வர்கள்தான். அவர்கள் பேச்சு - பறக்கும் படையின் பணம் பறிமுதல் பற்றியது. பேச்சு : 
விவரம்:


எந்த வேலையையாவது எவனாவது துட்டு வாங்காமே செய்து தர்றானா என்ன? அவன் அத்தனை கோடி சுருட்டினான் இவன் இத்தனை கோடி சுருட்டினான்னு தினமும் நியூஸ் வருது. சுருட்டின பணத்தை திரும்ப வாங்கினாங்களா ? வாங்கின பணத்தை என்ன செய்தாங்கனு ஏதாவது தகவல் வருதா ? அரசியல்வாதிங்க கையிலிருந்து பொது மக்களுக்குப் பணம் வர்றது அஞ்சு வருஷத்துக்கு ஒருக்கதான்.அதை ஏன் தடுக்கணும்? இதுதான் நேரம்னு அவனுக கிட்டேயிருந்து பணம் பறிக்கிறதை விட்டுட்டு வேண்டாத வேலை பார்க்கிறாங்க. அவனவன் கஷ்டப்பட்டு சம்பாதிச்ச பணத்தையா எடுத்துக் குடுக்கிறான்? வாங்கினதில் ஒரு துளியைத் தானே திருப்பிக் குடுக்கிறான் . குடுக்கட்டுமே. அப்படியாவது சுருட்டினதெல்லாம் வெளியே வரட்டும். அதுக்கு ஏன் ஆப்பு வைக்கணும்.? குடுக்க கொண்டு வர்ற பணத்தைப் பத்திரப் படுத்தி திரும்ப அவங்க கிட்டேயே கொண்டு போய் சேர்த்திடுவாங்களாமா ! எந்த ஊர் நியாயம் இது ?
இந்தக் கேள்விக்கு பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்களேன். விடையை தெரிந்து கொள்ள நானும் ஆவலாக இருக்கிறேன். 
(சின்னக் குழந்தைங்க கூட சிரிப்பா சிரிக்கிற அளவுக்கு எந்த கேள்விக்கும் பதில் தெரியாத மட ஜென்மமா நான் இருக்கிறேன்!)

Sunday, March 20, 2016

குழந்தைகளுக்கான குறுந்தொடர் - 30

      
      அச்சுப்பிச்சு அப்புமணி !
"டேய்... இதெல்லாம் தேவையா ? நாம இதுவரை இந்த கடத்தல் வேலை எதுவும் செஞ்சதில்லே ..இப்போ இது ரிஸ்க் மாதிரி தெரியுதேடா " என்று கவலையுடன் கேட்டான் சேகர்.
"அடப் போடா ... இவனே.... பயந்தா எப்போ பணக்காரன் ஆறது ? பாரின் காரில் ஊரை சுத்தி வர்றது."
"உள்ளதும் போச்சு நொள்ளைக் கண்ணாங்கிற மாதிரி ஆயிடபோகுது . எனக்கென்னவோ இதில் அவ்வளவு இன்ட்ரெஸ்ட் இல்லே "
"பாரு சேகர் ... லட்டு மாதிரி கையில் துட்டு வர்ற சான்ஸ் ... மிஸ் பண்ண வேண்டாம் "
"நீ சொல்றமாதிரியே வச்சுக்குவோம் .. லாபம் வர்ற மேட்டர்னா இதை அவங்க டீல் பண்ணாமே நம்ம கிட்டே ஏன் விட்டு வைக்கிறாங்க.?"
"போடா ... இவனே ... நம்மள யார் டீல் பண்ண சொன்னாங்க ? அந்த பொண்ணு நம்ம கஸ்டடியிலே இருக்கும்.அவ்வளவுதான். திரும்ப அவங்க கையிலே பத்திரமா சேர்க்கணும். அதுக்கு அவங்க நமக்கு ஒரு நாளைக்கு ஐந்தாயிரம் ரூபா காசு கைமேலே கிடைக்கும் "
"நெஜமாவா ?'
"அட ... ஆமாம்டா ... இந்நேரம் அது தனம் வீட்டுக்கு வந்து சேர்ந்திருக்கும். வா .. நாம போய்ப் பார்த்துட்டு வரலாம் "
"சரி ..அப்புமணி அலையிலே விளையாடிட்டு இருக்கிறான். அவனையும் கூட்டிட்டுப் போகலாம் "
"பூனையை மடியிலே கட்டிக்கிறதுங்கிறது இதுதான். பார்த்துட்டே இரு ... ஒருநாள் இல்லாட்டா ஒருநாள் அவன் நம்ம மொத்தப் பேருக்கும் ஆப்பு வைக்கப் போறான். லூஸு நம்மளை லூஸாக்கப் போகுது "
"இதோ பாரு... நீ தேவையில்லாமே பயப்படறே " என்று சேகர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே பிரவீன் கையிலிருந்த மொபைல் பளிச்சிட்டது 
மொபைலை எடுத்துப் பேசிய பிரவீன்,"அப்படியா ?"என்று சோகமான குரலில் கேட்டவன்  "சரி " என்று மொபைலை ஆப் பண்ணினான்.
 "என்னடா  ?" 
"பார்ட்டி வர கொஞ்சம் லேட் ஆகுமாம் "
"சரி வா. நாம அப்புமணியை தனத்தோட வீட்டில் விட்டுடலாம். பாவம். சின்னப் பையன். தனியா போரடிச்சிட்டு இருப்பான் "
"கவலையைப்பாரேன்...உன்னோட உடன்பிறவா அண்ணாத்தே வந்தாச்சா ?"
"ஆமாம் "
அங்கிருந்து கிளம்பி எல்லோரும் தனத்தின் வீட்டுக்கு வந்தார்கள். ஆனால் வழியிலேயே  தனம்  இவர்களை "வாங்க, வாங்க'னு புன்னகை யோடு அழைத்தாள். 
"உன்னை இங்கே நாங்க எதிர் பார்க்கலே.  நீ திரும்பி வர இன்னும் ரெண்டு நாளாகும்னு நினைச்சோம் "
"நீ உன் அண்ணனைக் கொண்டாந்து விட்டுட்டேனு தகவல் வந்துச்சு. பாவம் அந்த மனுஷன். பார்த்துக்க ஆள் வேணுமேன்னு சீக்கிரம் திரும்பி வந்துட்டேன்." 
"உனக்கு இன்னொரு வேலை இருக்குது. இந்தப் பையனை உன் வீட்டில் வச்சுக்கணும்."
"அட ... இதுதானா ? ஒண்ணு இல்லே ... ஒன்பது பையனை வேணும்னாலும் கொண்டாந்து விடு. காசை மட்டும் கணக்காக் குடுத்துடு. சொல்லிப் புட்டேன். காசு விஷயத்திலே மட்டும் நான் கணக்கா இருப்பேன்."
"உன்னை என்னிக்காவது ஏமாத்தி இருக்கிறோமா ?" என்று கோபமாகக் கேட்டான் சேகர் 
"சும்மா ஒரு பேச்சுக்குக் கேட்டா கோவிச்சுக்கிறியே கண்ணு" என்று சமாதானம் செய்வது போலக் கூறினாள் தனம் 
"இந்தப் பையனை உன் வீட்டில் வச்சு பத்திரமா பார்த்துக்கோ" என்று சேகர் சொன்னதைக் கேட்ட அப்புமணி, "ஊஹூம்..நான் உங்ககூட மட்டுந் தான் இருப்பேன்" என்றான்.
"அப்படியே ரெண்டு ஓங்கி விட்டேன்னா தெரியும் !" என்று கைகளை ஓங்கிய பிரவீனை முறைத்துப் பார்த்த சேகர், "வா ... அப்பு ... நாம நம்ம வீட்டுக்குப் போலாம்" என்று சொல்லி வந்த வழியே திரும்பி நடக்க ஆரம்பித்தான்.
"அந்தப் பையனைப் பத்தி யார் என்ன சொன்னாலும் சேகர் தம்பிக்கு கோபம் வரும்னு உனக்குத் தெரியாதா? நீ ஏன் அவனை சீண்டறே ?" என்று கேட்டாள்  தனம்.
பிறகு சேகர் அருகில் வந்து "உன் வெல்லக்கட்டி தம்பி கரைஞ்சு போயிடாமே நான் பார்த்துக்கறேன் " என்றவள், 'அப்புக் கண்ணு ... நீ எங்க வீட்டுக்கு வந்ததே இல்லியே.. எங்க வீட்டில் உன்னோட விளையாட ஒரு மாமா இருக்கிறார் " என்று சொல்லும்போதே, "ஆமா... மாமா அப்படியே கிளுகிளுனு  வாயைத் திறந்து பேசிட்டுதான் மறுவேலை பார்ப்பார் " என்று பிரவீன் கிண்டலாக சொல்ல, அவனைக் கோபத்தோடு பார்த்தான் சேகர்.
"கண்ணு .. நீ இன்னிக்கு ராப் பொழுது மட்டும் என் வீட்டில் இரு. உனக்கு பொழுது போகலேன்னா நாளைக்குக் காலையில் கிளம்பிப் போயிடு " என்று சொல்ல அரைகுறை மனதோடு சம்மதித்தான் அப்புமணி 
"போரடிச்சா கொண்டாந்து அண்ணாகிட்டே விடுவே தானே?" என்று கேட்ட அப்புமணியைப் பார்த்து தலையில் அடித்துக் கொண்டான் பிரவீன். நடக்கும் அத்தனை சம்பவங்களையும் வேடிக்கை பார்த்தபடி மௌனமாக வந்தான் ராஜு.
"நீ கவலைப்படாமே போ தம்பி.  வேறே எதோ ஒரு பொண்ணு வருதுன்னு சொன்னியே. அது வந்தால் ரெண்டும் சேர்ந்து விளையாட ஆரமிச்சுரும். இந்த தம்பி பொழுது போகலேன்னு சொல்லவே சொல்லாது" என்று சேகருக்கு தைரியம் சொன்ன தனம், அப்புமணியை அழைத்துக் கொண்டு தனது வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
வீட்டுக்கதவை தனம் திறக்கும்போதே,"தனம்அக்கா...எனக்கு போரடிக்கு . நான் சேகர் அண்ணாகூட   இருக்கப் போறேன்" என்றான் அப்புமணி 
"அடப் பாவி... வீட்டுக்குள்ளே வர முன்னாடியே உனக்கு போரடிக்குதா ?" என்று வியந்து போய்க் கேட்டாள் தனம் 
"ஆமாம்.. எனக்கு இங்கே ஒரு வேலையும் இல்லை. என்னோடு பேசக் கூட யாருமில்லே " என்று அழும் குரலில் சொன்னான் அப்புமணி 
"ஆமா ... இதுக்கு முன்னாடி துரை இருபத்து நாலு மணி நேரமும் வேலை பார்த்துட்டு தானே இருந்தீங்க ?"என்று கிண்டலாகக் கேட்ட தனம் , "இங்கே வந்து இந்த மாமாவைப் பாரேன் " என்றாள் 
"பார்த்தாச்சு. இவரை நீ உள்ளே வச்சுப் பூட்டிட்டு வந்தியா ? "
"ஆமாம். இவரோட உனக்குப் பொழுது போகும்"
"ஆமாம்... சும்மா பொம்மை ராஜா மாதிரி உக்காந்திருக்காரு ... இவரோட எனக்கு பொழுது போகுமா  ?" என்று கோபமாகக் கேட்டான் அப்புமணி 
"சீக்கிரமே உன்னோட விளையாட ஒரு அக்கா வரப் போறா "
"எப்போ ?"
"சீக்கிரமே...இப்போவந்துட்டே இருக்கிறா"என்றுதனம்சொல்ல, அப்புமணி  சமாதானம் ஆனான் 
"அக்கா ... இவர் யாரு?"
"யாருக்குத் தெரியும் ?"
"அப்புறம் ஏன் இங்கே இருக்காரு ?"
"உன்னைத் தூக்கி சுமக்கிற மாதிரி சேகர் தம்பி இவரையும் தூக்கி சுமக்குது" என்று தனம் சொல்ல, அவர்கள் இருவரையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டிருந்த அந்த மனிதர் அப்புமணி அருகில் வந்து தலைமுடி யைக் கைகளால் கோதியபடி கன்னத்தில் முத்தமிட்டார். அதைக் கண்டு அதிர்ந்து போய் நின்றாள் தனம்.
எந்த அசைவும் இல்லாமே பிடிச்சு வச்ச பிள்ளையார் மாதிரி உட்கார்ந்தே இருக்கிற இவருக்குள்ளும் இப்படியொரு பாச உணர்வா என்று பிரமித்துப் போனாள். இதை உடனேயே சேகரிடம் சொல்ல அவள் மனம் பரபரத்தது.
----------------------------------------------------------  தொடரும் ------------------------------------------ 
 
 

Tuesday, March 15, 2016

மழலையில் தெரிகிறது வாழ்க்கையின் தத்துவங்கள் !

           இறைவன் படைப்பில் மிக அற்புதமான, அழகான ஒன்று : குழந்தைகள். மனசில் என்னதான் கஷ்டம் இருந்தாலும் சரி ; ஒரு குழந்தை சிரிப்பதைக் கண்டால் அந்த உற்சாகம் நமக்குள்ளும் தொத்திக் கொள்ளும். நம்மையும் அறியாமல் நாமும் சிரிப்போம். சிறு குழந்தைகளின் கேள்விக்கு மிகப் பெரிய மேதைகளால் கூட பதில் சொல்ல முடியாது. யாரையும் நொடிப் பொழுதில் முட்டாளாக்கி விடுது  அவர்களுக்குக் கை வந்த கலை. கேள்வி  கேட்டு அசர வைக்கும் சாமர்த்தியம் குழந்தைகளுக்கு மட்டுமே உண்டு.
அடுத்து நான் சொல்லப் போவது ஒரு கதை. இதை நிறைய பேர் உபன் யாசகங்களிலும், மேடைப் பேச்சு களிலும் சொல்லியிருக்கிறார்கள். அதை நம்மில் நிறைய பேர் கேட்டிருப்போம். இருந்தாலும் அதை மீண்டும் இங்கே சொல்வதன் காரணம், கதையின் முடிவில் ஒரு கேள்வி தொக்கி நிற்கிறது, உங்களின் பதிலுக்காக.
கதையின் கரு: எந்தத் தொழில் செய்தாலும் அதில் தர்மம், நியாயம் இருக்க வேண்டும். தர்ம நெறி தவறியவன் வாழ்விலிருந்து கல்வியும் செல்வமும் விலகிப் போய்விடும்.
ஒரு அரசன். நீதிநெறி தவறாதவன். மக்கள் நலனைப் பெரிதாக நினைப்பவன். சில காலமாக அவனுக்குள் சில தேவை யற்ற குழப்பங்கள், சஞ்சலங்கள்.அமைதியின்றி தவித்தான். தூக்கம் வராது  உப்பரிகையிலும் அரண்மனைக்கு வெளியிலும் இரவு நேரங்களில் உலாவினான். அவனு க்குள் உள்ள பிரச்னை என்ன என்பதை அவனால் கண்டு கொள்ள முடிய வில்லை. அவனிடமிருந்த ஒன்று அவனை விட்டுப் போகப் போவதாக ஒரு அசரீரி அவனுக்கு சொல்லிக் கொண்டே இருந்தது. அது என்ன? அதை எப்படித் தடுத்து நிறுத்துவது என்பது போன்ற குழப்பத்தில் இருந்தான்.
அன்றைய இரவும் தூக்கம் வராமல்  நடந்து கொண்டே  இருந்தவன் அரண் மனையைத் தாண்டி கோட்டைச் சுவரையும் தாண்டி வெளி வாசலுக்கே வந்து விட்டான். அப்பொழுது கோட்டைக்குள்ளிருந்து ஒரு பெண் வெளி யேறுவதைக் கண்டான். அவளைத் தடுத்தி நிறுத்தி, ‘யாரம்மா... நீ.. எங்கே போகிறாய் இந்நேரத்தில்?’ என்று கேட்டான்.
‘நான் கலைமகள். கல்வி, கலைகளுக்கு அதிபதி. எனக்கு இங்கு இருக்கப் பிடிக்கவில்லை.அதனால் இங்கிருந்து வெளியேறுகிறேன்’என்றாள் அந்த பெண்.
‘உன்னோட முடிவு அதுவென்றால், உன்னைத் தடுத்து நிறுத்த நான் விரும்பவில்லை. உனக்கு எது விருப்பமோ அதை செய்யலாம்’ என்று சொல்லி அவளுக்கு வழி விட்டு விலகி நின்றான்.  
சிறிது நேரத்தில், கோட்டைக்குள்ளிருந்து மற்றொரு பெண் வெளியேறு வதைக் கண்டான். அவளைத் தடுத்தி நிறுத்தி, ‘யாரம்மா... நீ.. எங்கே போகிறாய்  இந்நேரத்தில்?’ என்று கேட்டான். 
‘நான் திருமகள். எல்லாச் செல்வங்களுக்கும் அதிபதி. எனக்கு இங்கு இருக்கப் பிடிக்கவில்லை. அதனால்   இங்கிருந்து வெளியேறுகிறேன் ’ என்றாள் அந்தப் பெண். ‘உன்னோட முடிவு அது என்றால், உன்னைத் தடுத்து நிறுத்த நான் விரும்பவில்லை. உனக்கு எது விருப்பமோ அதை செய்யலாம்’ என்று சொல்லி அவளுக்கு வழி விட்டு விலகி நின்றான் அரசன்.
சற்றுநேரத்தில், கோட்டைக்குள்ளிருந்து மற்றொரு பெண் வெளியேறுவ தைக் கண்ட அரசன், அவளைத் தடுத்தி நிறுத்தி, ‘யாரம்மா... நீ.. எங்கே போகிறாய் இந்நேரத்தில்?’ என்று கேட்டான். 
‘நான் தர்மதேவதை. நான் தர்மதேவதையாக இருந்தாலும், தர்ம நியாயத்துக்குக் கட்டுப்பட்டவள்..எனக்கு இங்கிருக்கப் பிடிக்கவில்லை. அதனால் இங்கிருந்து வெளியேறுகிறேன்’ என்றாள் அந்தப் பெண்.
அதைக் கேட்டதும் அவள் காலில் விழுந்த அரசன், ’அம்மா.. கல்வியறிவு இல்லாத நாடாக ஒருநாடு இருக்கலாம்...முயற்சி பண்ணி அந்த நிலை யை  மாற்றமுடியும். செல்வ வளமில்லாத நாடாக ஒரு நாடு இருக்கலாம். ஊர் கூடி தேர் இழுத்தால்.... மக்கள் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து பாடுபட்டால், செல்வவளம் வந்து சேரும்.ஆனால் தர்மம் நியாயம் தவறிய நாடு  ஒரு நாடே இல்லை. அது சுடுகாடு. சுடுகாட்டில் மனிதர்கள் விரும்பி போய் வாழ மாட்டார்கள். உனக்குப் பிடிக்காத எது இங்கு நடந்தது என்று சொல். அதை உடனே சரி செய்கிறேன். ஆனால் நீ மட்டும் இந்த இடத்தை விட்டு மட்டும் போயிடக் கூடாது.  நீ உள்ளே போகா விட்டால் நான் இங்கே என் உயிரை விடுவேன்’ என்று சொன்னதும் ‘சரி’ என்று சொல்லி, தர்மதேவதை மீண்டும் நாட்டுக்குள் சென்று விட்டாள். சற்றுநேரத்தில், முதலில் கிளம்பிப் போன இரண்டு பெண்களும் திரும்பி வந்தார்கள். தர்மம் நியாயம் இருக்கும் இடத்தில்தான் நாங்கள் குடியிருப்போம்’ என்று சொல்லியபடி! அதைக் கேட்டு மகிழ்ந்த அரசன் அன்று முதல் நிம்மதியாக உறங்கினான்.
அவ்வளவுதான்... கதை முடிந்தது. 
இதைப் படித்ததும் உங்கள் மனதில் என்ன தோன்றுகிறது?. முதல் முதலாக ஒரு மீட்டிங்கில் நான் இந்தக் கதையைக் கேட்டபோது, ’ நல்ல அரசன்’ என்ற நினைப்பைத் தவிர வேறு எதுவுமே தோன்றவில்லை. அறிவு என்னை எந்தவொரு  கேள்வியும்  கேட்கவில்லை.   இதே கதையை  என்னுடைய ஃப்ரண்ட்ஸுக்கும் சொல்லி இருக்கிறேன்.  எந்த ரியாக்ஷனும் இல்லாமல்  ‘அப்படியா'  என்று கதை கேட்டதோடு அவர்கள் பார்ட் ஓவர். 
சில வருடங்களுக்குப் பிறகு இதே கதையை எங்கள் வீட்டு செல்லத்துக்கு (5 வயது செல்லக்குட்டி) சொன்னபோது, கதையைக் கவனமாகக் கேட்ட அவள், ‘தர்மம் நியாயம் இருக்கும் இடத்தில்தான் நாங்க இருப்போம்னு சொல்லி, முதலில் கிளம்பிப் போன ரெண்டு பொம்பளைங்களும் திரும்ப அரண்மனைக்குள் வந்தாங்கனு சொல்றியே. தர்ம தேவதை கடைசியாத் தானே வெளியில் வந்தா.. அவ உள்ளே இருக்கிறப்ப, இவங்க ரெண்டு பேரும் அவளைவிட்டுட்டு ஏன் விலகி வெளியில்வந்தாங்க.அவ இருக்கிற இடத்தில் இவங்க இருந்திருக்கணுந்தானே. ஏன் வெளியில் வந்தாங்க?. அதைச்சொல்லு நீ முதலில்!’என்றொரு கேள்வியை,ஒரு அணு குண்டைத் தூக்கிப் போட்டது.  அதன் பிறகுதான் நானும் யோசிக்க ஆரம்பித்தேன். எனக்குப் பதில் தெரியவில்லை. இதே கேள்வியை நான் மற்றவர்களிடம் கேட்டுக் கொண்டிருக்கிறேன். உங்களில் யாருக்காவது இந்தக் கேள்விக்கான பதில் தெரிந்தால் அதை எனக்குத் தெரிவிக்கலாம்.
குழந்தைகள் எப்போதுமே சற்று வித்தியாசமான கோணத்தில்தான் சிந்திக்கிறார்கள். அவர்களிடமிருந்து  நாம் கற்றுக் கொள்ள வேண்டியது ஏராளம்.... ஏராளம் !

Sunday, March 13, 2016

DEAR VIEWERS

9 - ம் வாய்ப்பாட்டை, நமது இரு கை விரல்கள் மூலமே கற்றுக் கொள்ள முடியும் என்பதையும், 9-ம் எண் கொண்டு கணக்கு போடும் விவரத்தையும் பல வருடங்களுக்கு முன்பே நட்பு வட்டங்களுக்கு சொல்லி இருந்தேன். அது தினமணி- சிறுவர்மணியில் சில வருடங்களுக்கு முன்பே வெளியாகி இருந்தது. அதையே என்னுடைய ப்ளாக் "anjchumi.blogspot" லும் பதிவு செய்துள்ளேன். தற்போது அதை லைவ் ஆக facebook டைம்ஸ் வீடியோ's  video.ல் பார்ப்பது மகிழ்ச்சியைத் தருகிறது.
https://www.facebook.com/thetimesvideo/videos/971094319639622/

குழந்தைகளுக்கான குறுந் தொடர் - 29

                                         அச்சுப்பிச்சு   அப்புமணி!
அன்று  காலை அனைத்து     தினசரிப்   பத்திரிக்கைகளிலும் வெளிநாட்டு சிறுமி இந்திய மண்ணில் கடத்தப்பட்டார் என்ற பரபரப்பு செய்தி வெளியாகியிருந்தது. இந்தியாவை சுற்றிப்பார்க்க வந்திருந்த அமெரிக்க பிரபல த்தின் பேத்தி நிவேதிதா காஷ்மீரில் கடத்தப்பட்டார்.அமெரிக்கா வாழ் இந்தியரான திரு.ராகுல் பானர்ஜி இந்திய அரசியலுடன் எந்த விதத்திலும் தொடர்பில்லாதவர். தொழில்வர்த்தகம் சார்பாக அவர் இந்தியா வந்த போது அவருடைய  பேத்தி நிவேதிதாவும் உடன் வந்திருந்தார், இந்தியாவை சுற்றிப் பார்ப்பதற்காக. பானர்ஜி தொழில் தொடர்பாக சம்பந்தப்பட்ட வர்களுடன் பேச்சு வார்த்தை நடத்துவதில் மும்முரமாக இருக்க, பேத்தி நிவேதிதா அவரது பாதுகாவலர்களோடு   இந்தியாவின் சில பகுதிகளை சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தார். சமீபத்தில் அவர் மகாபலிபுரம் வந்து சென்றார்.அங்கிருந்து டெல்லி சென்றார். காஷ்மீரை அவர் சுற்றிப் பார்த்து கொண்டிருந்தபோது அவர் கடத்தப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.. மூன்று நாட்களுக்கு முன்பாகவே இவர் கடத்தப்பட்டிருக்கி றார்.  இந்த செய்தி ரகசியமாக வைக்கப்பட்டதன் பின்னணியோ  கடத்தலு க்கான காரணம் தெரியவில்லை என்ற செய்தி வெளியாகி இருந்தது. 
காலை பத்து மணி அளவில் சேகரைத் தேடி வந்த ராஜு, அப்புமணியைப் பார்த்ததும் "நீ இவனை இன்னும் டெஸ்பாட்ச் பண்ணலியா? இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இந்தக் கழுத்தறுப்பு கேஸை கூட வச்சிருக்கப் போறே?"னுகேட்டவன்,அப்புமணியிடம்,"சொல்லுங்கண்ணே சொல்லுங்க  .. நீங்க எந்தெந்த நாடு எல்லாம் சுத்திப் பார்த்தீங்க. இன்னும் எத்தனை நாட்டுக்குப் போய்  வரணும் . சொல்லுங்கண்ணே " என்றான்.
"ச்சே. என்னடா நீ. அவன் குழந்தைப் பையன்.  அவனிடம் போய் வம்பு வளர்த்துகிட்டு " என்று கடிந்து கொண்டான் சேகர்.
"குழந்தைப்பையனா? அவனைப் பார்த்தாலே எனக்குப் பத்திட்டு வருது ."
"அந்த அளவுக்கு அவன் அப்படி என்னடா பண்ணிட்டான்?"
"டேய் ... சமய சந்தர்ப்பம் தெரியாமே பேசறாண்டா .. எந்தக் காரணமுமே இல்லாமே யார் மேலேயாவது உனக்குப் பாசம் வர்ற மாதிரி எனக்கு யார் மேலேயாவது வெறுப்பு வரும்தானே. அது இவனைப் பார்க்கிறப்ப  எனக்கு வருதுடா"
"சரி ... கோபப்படாதே. இவனாலே நமக்குள்ளே சண்டை வேண்டாம். இவனை நான் தனம் வீட்டில் விட்டுடறேன். "
"அப்பாடா ... பொழச்சேன். 'உனக்கு விருப்பமில்லாட்டா நீ போ'ன்னு என்னைப் போக சொல்லிடுவியோன்னு நினைச்சேன்.ஆமா.உடன் பிறவா சகோதரன் எப்ப வர்றார் ."
"வந்துட்டார். தனம் வீட்டில் விட்டு வச்சிருக்கிறேன் "
"தனம் ஊரில் இல்லையேடா "
"அவ இல்லாட்டா என்ன. அவ வீடு அங்கேதானே இருக்கு "
"அவரை கவனிச்சுக்க யார் இருக்காங்க ?"
"அதுக்கு ஆளை ஏற்பாடு பண்ணிட்டேன்."
"பரவாயில்லே...வேலையெல்லாம் ரொம்ப ஜரூரா நடக்குது போலிருக்கு து  "
"ஆமாம்"
அப்போது வயதான முதியவர் ஒருவர், "இங்கே ராஜு .... சேகர்ங்கிறது யாரு  ?" என்று கேட்டபடி வந்தார் 
"வாங்க .. நாங்கதான் " என்றனர் இருவரும் ஒரே சமயத்தில் 
"ஒரு முக்கியமான விஷயம் பேசணும் "
"பேசலாமே "
"இங்கே ஒரு பொடியன் வேறே இருக்கிறானே "
"அவன் நம்ம ... எங்க பையன் தான் .. நீங்க சொல்ல வந்ததை சொல்லுங்க " என்றான் சேகர் 
அதைக் கேட்டு சத்தம் போட்டு சிரித்த அவர், "அட ... அசடுகளா ! என்னை அடையாளம் தெரியலியா ?" என்று கேட்டபடி வேஷத்தைக் கலைக்க, " ஏய் .. ராஸ்கல் நீயா ? என்னடா இது வேஷம் ?" என்று கேட்க, "எல்லாம் காரணம் இல்லாமலா?" என்று சொன்ன பிரவீன், "வாங்க .. பீச் பக்கம் போய் பேசலாம்... " என்றான்.
சரி என்று இருவரும் சொல்ல எல்லோரும் பீச்சை நோக்கி நடக்க ஆரம்பி த்தார்கள்.
கடற்கரை மண்ணில் உட்கார்ந்து சுண்டல் முறுக்கு வாங்கி சாப்பிட ஆரம்பித்தார்கள்.
"அண்ணா .. நான் கொஞ்ச நேரம் அலையிலே விளையாடிட்டு வர்றேன் " என்று அப்புமணி கெஞ்சலாக சொல்ல, "மவராசனா போயிட்டு வாடா என் செல்லம் " என்றான் ராஜு வயதான பாட்டி போன்ற குரலில். அடுத்த நிமிடமே கடல் அலையை நோக்கி ஓடினான் அப்புமணி .  
"டேய் ... சஸ்பென்ஸ் போதும்டா ... நீயா சொல்லுவேனு நினைச்சு நாங்க எவ்வளவு நேரந்தான் அமைதியா வர்றது ?" என்று கடுப்புடன் கேட்டான் சேகர். 
"பொறுடா ... பொறுமை கடலினும் பெரிது ...கடல் பக்கத்திலே உட்கார்ந்து கிட்டு பொறுமை இல்லாமே தவிக்கிறே " என்று சிரித்துக் கொண்டே கேட்டான் பிரவீன் 
"ஓங்கி ஒன்னு விட்டேன்னா தெரியும். சொல்லுடா "
"பாரின் சாக்லேட் ஒன்னு வரப் போகுது. இந்நேரம் அது தனம் வீட்டுக்கு  வந்திருக்கும் " என்றான் பிரவீன்.
"டேய் ... புதிர் போடாமே விஷயத்தை சொல்லு. இல்லாட்டா அடி வாங்கியே சாவே  "
"ஒரு சின்னப் பொண்ணைக் கடத்திட்டாங்கனு பேப்பர் நியூஸ் பார்த்திருப் பீங்கதானே?"
"இல்லேடா ... அந்த ஸ்டால் பக்கமே ஒரு வாரமா போகலே "
"படா தமாஷான விஷயம்டா. நம்ம சென்ட்ரல் மினிஸ்டர் ஒருத்தரோட பொண்ணு பேர் நிவேதிதா. அது ஸ்கூல் பசங்க கூட சேர்ந்து காஷ்மீர் போயிருக்குது. அந்த இடத்துக்கு அமெரிக்காலேருந்து வந்த ஒரு பொண் ணும் சுத்திப் பார்க்க வந்திருக்குது. மினிஸ்டர் பொண்ணுன்னு நினைச்சு இந்தப் பொண்ணைத் தூக்கிட்டாங்க. தூக்கிட்டு, மினிஸ்டர் கிட்டே " உன் பொண்ணு எங்க கஸ்டடிலே இருக்கிறா'னு  பேரம் பேச ஆரம்பிச்சிருக் காங்க. 'முட்டாள், அவ இப்போ என் பக்கத்திலேயேதான் இருக்கிறா'னு சொல்லி மினிஸ்டர் போனைக் கட் பண்ணிட்டார். பிறகுதான் தெரிஞ்சி ருக்குது ஆள் மாறிப் போன விஷயம். கடைசியில் பாரின் சாக்லேட் அங்கே இங்கேன்னு சுத்தி கடைசியிலே நம்ம கைக்கு வந்துட்டுது. தனம் வீட்டில் வச்சிடலாம் அதை " என்று சொன்னான்  பிரவீன் ரொம்ப கேஷுவலாக.
"அதை வச்சு நாம என்னடா பண்றது ?"
"நாம ஒன்னும் பண்ண வேண்டாம். தூக்கின பார்ட்டி, அந்தப் பொண்ணோட வீட்டில் பணம் டிமாண்ட் பண்ணும். பணம் அவங்க கைக்கு வந்ததும் நமக்கு ஒரு ஷேர் வரும். நம்ம பொறுப்பு அதை பத்திரமா வச்சி ருக்கிறதுதான்." என்று பிரவீன் சொல்ல மற்ற இருவரும் யோசனையில் இருந்தார்கள்.
------------------------------------------------- தொடரும் ------------------------------------------------- 

Wednesday, March 09, 2016

facebook ல் படித்ததில் ரொம்பப் பிடித்தது. ரொம்ப ஷோக்காத்தான் சொல்றாங்கையா ஜோக்கு.!
சும்மா சிரியுங்க.. காசா பணமா ? 

Sunday, March 06, 2016

அன்பு சகோதரிகளே,

                                                       மகளிர் தின நல்வாழ்த்துக்கள் !

" ஆணுக்குப் பெண் நிகரென்று கூறடி தங்கம் ! " - எப்போதோ கேட்ட பாடல் வரிகள். ஆனால் மனதில் இன்றும் பசுமையாக நிற்கிறது.


இங்கு சில விஷயங்களை நாம் மனம் விட்டுப் பேசியே ஆகவேண்டும். கசப்பான விஷயம் என்றாலும் சொல்ல வேண்டும் என்ற எண்ணம் அதிகம் இருக்கிறது. ஆணுக்கு நிகராக நம்மை மாற்றிக் கொள்வது நல்ல விஷயந்தான். ஆனால் அந்தப் போட்டி எல்லா விஷயங்களிலும் இருக்க வேண்டாம். சில விஷயங்களில் அதைத் தவிர்ப்பதே நல்லது. கசப்பான மன உணர்வோடு தான் இதை சொல்லுகிறேன்.
இரண்டு நாட்களுக்கு முன் நான் எலெக்ரிக் ட்ரெயினில் பயணித்துக் கொண்டிருந்தேன். அன்றைய தினம்  ட்ரெயினில்  அதிக  கூட்டமில்லை. எல்லாப் பெட்டிகளும் காலியாகவே இருந்தது. இரண்டு பெண்கள் பேசிக் கொண்டு வந்தார்கள். எனக்கு முன்பாகவே அவர்களிருவரும் எதோ ஒரு ஸ்டேஷனில் ஏறியிருந்ததால் அவர்கள் பேச்சு எனக்கு முழுமையாகப் புரியவில்லை. ஓரளவு நான் புரிந்து கொண்ட செய்தி : இரண்டு பேரில் ஒருத்தி எப்போதோ ஏதோ காரணமாக ஒரு கவர்ன்மெண்ட் ஆபீசுக்குப் போயிருந்திருக்கிறாள்.அங்குள்ள ஒரு லேடி இவளிடம் ஏதோ பணம் கேட்டிருக்கிறாள். அந்த விஷயத்தை இவள் மற்றவளுக்கு விவரித்து சொல்லிக் கொண்டிருந்தாள். அவர்கள் பேசிக் கொண்ட வார்த்தைகளை எழுத்தில் கொண்டு வர முடியாது. ஒரு சில வார்த்தைகள் நாசூக்காக இருந்ததால் அவை மட்டும். "பிச்சைக்காரன் கூட பணிவாக் கேட்பான். நீ அவனை விட கேடு கெட்டவ .. அதிகார தோரணை கேட்குதா உனக்கு. இந்த மானங் கெட்டப் பொழைப்பு பொழைக்கிறதுக்கு வேறே எங்காது போலாமே. நிறைய துட்டு கிடைக்குமே.  இந்த கேடு கெட்டவ என்னைப் புழுவைப் பார்க்கிற மாதிரி பார்க்கிறா...." (இது போன்ற வசனங்கள் காதில் விழுந்து கொண்டே இருந்தது.அவர்கள் பல்லாவரம் ஸ்டேஷனில் இறங்கி விட்டார்கள். அவர்களிருவரும் போனதும்  அடுத்து நடந்த உரையாடல் கடைசியில் வருகிறது. முதலில் இதை முடிச்சுட்டு பிறகு அதைப் பார்க்கலாம்.)  
அரசு அலுவலகங்களில் லஞ்சம் பற்றி மீடியாக்கள் வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்டிருக்கிறது. பெண்கள் கைது செய்யப்பட்டு, சிறைக்குக் கொண்டு செல்வதை படம் பிடித்துக் காட்டுகிறார்கள். அதைப் பார்க்கும் போதெல்லாம், என் மனதுக்குள் நான் சொல்லிக் கொள்ளும் டயலாக்: தப்பு பண்றப்ப இப்படிப் பண்றோமேன்னு வெட்கப்படலே. பிடிபட்டதும் வெட்கம் வந்துட்டுதா ?".
அவனவன் கோடிகோடியா கொள்ளையடிக்கிறான். என்னவோ ஆயிரம் இரண்டாயிரம் கைநீட்டி வாங்கினபோது பிடிபட்டதை எதோ அல்கொய்தா தீவிரவாதியைப் பிடித்தது போல, வீரதீரப் பிரதாபம் போலப் படம் பிடித்து காட்டுகிறார்களே என்றும் நினைப்பேன். அந்த நினைப்பு வரும்போதே மனதில் வேறொரு எண்ணமும் வரும். கோடிகோடியாக சுருட்டினவன்   வீட்டு நாய்க்குட்டியைப் பத்தி பேசக் கூட எவனுக்கும் தைரியம் வராது. வெளியில் எந்த நாய் எப்படி குரைத்தாலும் சரி ; அது மாளிகைவாசிகளின் காதில் விழாது. ஆனால் நாமிருப்பது ? நடுத்தர மக்கள் வாழும் நாற்றம் பிடித்த இடத்தில். அடுத்த வீட்டு விஷயம் மற்றவர்களுக்கு அல்வாதுண்டு சாப்பிடுவது போல.சமயம் கிடைக்கும் போது வார்த்தை ஊசிகளால் குத்தி குத்தி ரணமாக்குமே. பணம் வாங்கியாச்சு. பிடி பட்டாச்சு. அது ஒண்ணும் தூக்குத் தண்டனைக் குற்றம் இல்லே. வீட்டுக்கும் வந்தாச்சு. உங்கள் வீட்டு ஆட்களே உங்களைக் கேட்பார்களே, சும்மா ஒரு வறட்டுக் கெளரவத்துக் காகவாவது, "நீ இப்படி சம்பாதித்துக் கொண்டு வந்துதான் எங்களுக்குப் போட்டாயா" என்று. அப்போ நீங்கள்  நொறுங்கிப் போயிட மாட்டீங்களா ?
உங்கள்  வீட்டிலும் குழந்தைகள் இருக்கிறார்கள். வெளியில் விளையாடப் போவார்கள். விளையாட்டில் ஏதாவது ஒரு தகராறு வரும்போது, தகராறு பற்றிய விஷயம் அவர்களுக்கு மறந்து போய்விடும். "ஏய் ... உங்கம்மா பத்தித் தெரியாதாடா..பெரிய இவன் மாதிரி பேசவந்துட்டே" என்ற வசனம் வரும். அதை பிஞ்சு உள்ளங்கள்  ஜீரணிக்குமா என்று யோசனை பண்ணிப் பாருங்கள். அவர்களை விடுங்க .. நீங்களே ஏதாவதொரு நியாயத்தை அக்கம் பக்கத்திலோ, அலுவலகத்திலோ கேட்டு விட்டால், அடுத்து வரும் வசனம் : "நீயெல்லாம் நியாயம் கேட்க வந்துட்டியா ?" என்பதுதான். 
சமுதாயத்தில் கவுரவமா வாழணும்னுதானே  தூங்க நினைத்தால் கூட அந்த எண்ணத்தைக் கொன்று விட்டு, சாப்பிட்டும் சாப்பிடாமலும் அரக்கப் பறக்க ஓடி அலுவலகம் வர்றோம். கேவலம் ஒரு அஞ்சாயிரம் பத்தாயிரம் ரூபாய்க்கு அந்த கவுரவத்தை ஏன் இழக்க வேண்டும்?  
மிடில் கிளாஸ் ஜனங்க கஷ்டம் எல்லாருக்கும் தெரிஞ்சதுதான். வீட்டில் படிக்கிற குழந்தைகள் இருந்தால் சம்பளத்தில் பாதி அதுக்கே போயிடும். அவங்களுக்கு நல்ல சாப்பாடு கொடுக்கணும். நல்ல நிலைக்குக் கொண்டு வரணும். இப்படி ஆயிரம் பிரச்சினை இருக்குது. இதுக்கு நாம வாங்குகிற சம்பளம் போதாது. அதுவும் தெரியும். அதையெல்லாம் விட அவர்களை தலை நிமிர்ந்து வாழ வைக்கும் பொறுப்பும் நமக்கு இருக்குதே. 
நமது சமுதாயம் ஆண்களுக்கென  சில நியாயங்களை வைத்திருக்கிறது.  "அவன் ஆம்பிளை .. சேறு கண்ட இடத்தில் இறங்குவான். தண்ணி கண்ட இடத்திலே காலைக் கழுவுவான். நீ பொம்பளை உன்னாலே அப்படி முடியுமா?" என்று சொல்லிச்சொல்லிதானே காலங் காலமாக பெண்களை வளர்த்து வருகிறார்கள். ஆனால் இந்த "பிடிபடும்" விஷயத்தில் மட்டும் இந்த வார்த்தைகளை  ஏற்றுக் கொண்டுதானே ஆக வேண்டி இருக்கிறது.  
ஒரு பழமொழி சொல்வாங்க; "கால் காசுக்காக அழிந்த மானம் கதறி அழுதாலும் திரும்ப வருமா  ?" 
அந்தப் பழமொழியை யோசிப்போம். நம்முடைய வருமானத்துக்குள் நம்மால் எதை செய்ய முடிகிறதோ அதை செய்யப் பழகிக் கொள்வோம். நியாயமான வழியில் சம்பாதித்து நாம் கந்தலைக் கட்டிக்கொண்டு வெளி இடங்களுக்குப்  போனால் கூட அது நமக்குக் கௌரவமே. 
போனதெல்லாம் போகட்டும். இந்த மகளிர் தினத்தில் " வேலை செய்யும் இடத்தில் சட்டத்துக்குப் புறம்பான, எனக்கு இழிவைத் தேடித் தருகிற எந்தவொரு  விஷயத்தையும் செய்ய மாட்டோம்" என்று உறுதி எடுத்துக் கொள்வோமே .  
மற்றொரு விஷயம் என்னவென்று சொல்லிவிடுகிறேன் : அந்தப் பெண்களுக்குள் நடந்த உரையாடலை என்னருகில் இருந்த மற்றவர்களும் கேட்டுக் கொண்டிருந்திருக்கிறார்கள். அவர்கள் இறங்கிப் போனதும் என் அருகில் இருந்த பெண் சொன்னது."ஏனுங்க ... நமக்கும் ஒருசில வேலை ஆக வேண்டி இருக்குது. அவளுக அதைக் கொண்டா ...இதைக் கொண்டானு நாலு வாட்டி, இல்லே நாப்பது வாட்டினு அலைய வைப்பாளுக. ஒரு அஞ்சு பத்தை நாய்க்குத் தூக்கிப் போடுத மாதிரி தூக்கிப் போட்டுட்டா, வாலை ஆட்டிகிட்டு நம்ம வேலையை செஞ்சு தருவாளுக. போனோமா வேலை யை முடிச்சோமானு இல்லாமே எதுக்கு தினமும் அலையணும். " 
அரசு ஊழியர்கள் சும்மா இருந்தால் கூட பொதுஜனம் என்கிற பேரில் இருக்கிற திருவளத்தார்கள் அவர்களை சும்மா இருக்க விட மாட்டார்கள் என்பதைப் புரிந்து கொண்டேன்.  இந்த இரண்டுமே நமக்கு வேண்டாங்க. கொஞ்சம் யோசிப்போமே.  
மகளிர் தினத்தில் இதைப் பற்றி யோசிக்க வேண்டும். எங்கள் கௌரவம் எங்கள் கையில் என்ற எண்ணம் எல்லோருக்கும் வர வேண்டும் என்பதற்காகவே இது இரண்டு நாட்கள் முன்பாகவே இங்கு  பதிவு செய்யப் படுகிறது.
(நானும் ஒரு அரசு ஊழியராக இருந்து ரிடையர் ஆனவள் என்பதைப் பெருமையுடன் சொல்லிக் கொள்கிறேன். )

குழந்தைகளுக்கான குறுந்தொடர் - 28

                                         
 அச்சுப்பிச்சு அப்புமணி !
அப்புமணிஎன்னஆனானோஎன்ற  கவலையில் அன்று இரவு முழுவதும் சேகருக்கு தூக்கம் வரவில்லை.
ச்சே...தப்புப் பண்ணிட்டேனே. நான் ஒரு முட்டாள் என்று தன்னைத் தானே திட்டிக் கொண்டான். விடிகிற நேரத்தில்தான் சற்று கண்ணயர்ந்தான்.
"அண்ணா !" என்று அழைக்கும் குரல் கேட்டது. 
கண் விழித்துப் பார்த்தவன், அப்புமணியின் நினைவாகவேஇருப்பதால் உண்டான பிரமை யாக இருக்குமோ என்று நினைத்தபடி படுக்கை யில் உருண்டு படுத்தான்.மீண்டும் அதே குரல் கேட்கவும் எழுந்து போய்க் கதவைத் திறந்தவனுக்கு, நடப்பது கனவா நனவா என்ற சந்தேகம் வந்தது. ஓடிச்சென்று அவனை அணைத்துக் கொண்டான்.
"ச்சே .. நான் என்ன சின்ன பாப்பாவா ?" என்ற கேள்வி வந்ததும்தான், 'சந்தேகமே இல்லை, இது அப்புமணிதான், நடப்பது எல்லாமே நிஜந்தான்' என்று உறுதியாக நம்பினான் சேகர்..
இரண்டு கைகளாலும் அவன் தோளைப் பிடித்து உலுக்கி, "அப்பு .... அப்பு ... உனக்கு ஒண்ணும் ஆகலேதானே ?" என்று கேட்டான்.
"என்ன கேட்கிறீங்க அண்ணா ?"
"போலீஸ் உன்னை அடிச்சாங்களா?உன்னை எப்படி வெளியில் விட்டாங்க ? நேத்து ராத்திரி சாப்பிட்டியா? ஏதாவது வாங்கிக் குடுத்தாங்களா ?" என்று பரிதவிப்புடன் கேட்டான் சேகர் 
"என்னை யாரும் அடிக்கலே.எனக்குதான் சின்னபோலீஸ்,பெரிய போலீஸ்  - அதான் அந்த ஐநூத்தி ஒண்ணு எல்லாரையும் தெரியுமே "
"என்ன சொல்றே ? போலீஷை உனக்குத் தெரியுமா "
" ஓ ... தெரியுமே ... எங்க தோட்டத்துக்கு வந்திருக்காங்களே "
"எப்போ ?"
"நீங்க எங்க ஊருக்கு வந்துட்டுப் போனீங்கதானே. அப்போ !"
அப்புமணி சொன்னதைக் கேட்டதுமே,அந்த சூழ்நிலை என்ன என்பதை நினைவுபடுத்திக் கொண்ட சேகர், "ஆமாம். நேற்று நீ எங்கே இருந்தே?" என்று கேட்டான்.
"குண்டு போலீஷைப் பார்த்ததும் நீங்க என்னை விட்டுட்டு ஓடிட்டீங்க தானே ?"
"ஸாரிடா ... செல்லம் .."
"இதுக்கெல்லாம் ஸாரியா ? அவங்க என்னைக் கூட்டிட்டு ஒரு ஆபீசுக்குப் போனாங்க. உன்னை என்ன பண்றோம்னு பாருன்னு மிரட்டினாங்க. ஆனா சின்ன போலீஸ் வந்ததும் கப்சிப்னு ஆயிட்டாங்க. எனக்கு ஜூஸ் வாங்கிக் குடுத்தாங்க."
"உன்னை வேறு எதுவும் கேட்கலியா ?"
"கேட்டாங்களே ? ஏன் இங்கே வந்தே ? எங்கே தங்கி இருக்கே ? பீச்சுக்கு ஏன் தனியா வந்தே? உன்னோட யார் வந்தாங்கனு கேட்டாங்க.. அதுக்கு நான், "உருப்படாத ராஜகுமாரன் மாதிரி உலகத்தை சுத்திப்பார்க்க வந்த விஷயத்தை சொன்னேன். "அப்படின்னா சரி .. போ"னு நேத்தே என்னை போக சொல்லிட்டாங்க " 
"ராத்திரி பூரா எங்கே இருந்தே ?"
"என் பின்னாலேயே ஒரு குண்டு போலீஸ் வந்தாரு. நான் உடனே பஸ் நிக்கிற இடத்திலே நிறைய பெஞ்சு இருக்குமே. அங்கே போய் உட்கார்ந்து கிட்டேன். அதுக்குள்ளே ராத்திரி ஆயிடுச்சா.. நான் அங்கேயே தூங்கிப் போயிட்டேன். காலைலே எழுந்திருச்சு ஓடியாந்துட்டேன்."
"உனக்கு இங்கே வர வழி எப்படி தெரிஞ்சுது?"
"அங்கே ஒரு அண்ணா டூ வீலரில் வந்தார்..அவர் யார் கிட்டேயோ யாரை யோ பீச்சில் வந்து பார்க்கிறதா போனில் பேசிட்டிருந்தது எனக்கு கேட்டுது. அந்த அண்ணா கிட்டே  என்னை பீச்சில் இறக்கி விடுங்கன்னு கேட்டேன். விட்டாரு. அங்கேருந்து வரத்தான் எனக்கு வழி தெரியுமே. வந்துட்டேன் " என்று சொல்லி கலகலவென்று சிரித்தான் அப்புமணி.
"உன்னைப் பார்த்ததும்தான் எனக்குப் போன உயிரே திரும்பி வந்துச்சுது!" என்று பெருமூச்சுடன் சொன்னான் சேகர்.
"அண்ணா ... நீங்க  என்ன தப்பு பண்ணுனீங்க ? போலீஷைக் கண்டதும் ஏன் ஓடியாந்தீங்க ?"
"என்ன அப்பு கேட்கிறே ?"
"எனக்கு எல்லாம் தெரியும்."
"சரி இருக்கட்டும் ... என்னைப் பத்தி உன்கிட்டே ஏதாவது கேட்டாங்களா? அதை சொல்லு "
"குண்டு போலீஸ்தான் கேட்டார் .. சின்ன போலீஸ் எதுவும் கேட்கலே "
"கேட்டிருந்தா நீ என்ன சொல்லி இருப்பே ?"
"பொய் சொல்லி இருப்பேன் "
இதைக் கேட்டு அதிர்ந்து போன சேகர் "ஏன்?" என்றான்.
"நான் உண்மை பேசப் போய்த்தான் குடிகாரப் புருஷன் கிட்டே மாரியக்கா அடி வாங்கினாங்க. அப்போ எங்கம்மா சொன்னாங்க, "உண்மை பேசறதா லே யாருக்காவது  கஷ்டம் வரும்னு தெரிஞ்சா, அந்த மாதிரி சமயத்தில் எதுவும் பேசாமே இருந்திடணும்"னு. நீங்க நல்லவர் .. எனக்கு எந்தக் கெடுதலும் நீங்க பண்ணலே. அப்புறம் நான் ஏன் உங்களைப் பத்தி சொல்ல ணும் ?"
இதைக்கேட்டதும் அவனை  கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்தான்  சேகர்.
"அண்ணா நீங்க ஏன் தப்பு பண்றீங்க ?"
"நானா எதுவும் பண்ணலே. அந்த சூழ்நிலைக்கு என்னைக் கொண்டாந்துட் டாங்க "
"இப்போ தெரிஞ்சேதானே பண்றீங்க "
"உன்னைப்போல நான் சின்னப்பிள்ளையா இருக்கிறப்ப எனக்கு வீடு கிடையாது.ரோடுதான் எனக்கு வீடு. பசின்னா என்னனு உனக்கு தெரியாது . அதோட வலி சின்ன வயசிலிருந்தே எனக்குத் தெரியும். எனக்கு சாப்பாடு போட்டவங்க என்ன செய்ய சொல்றாங்களோ, அதை செய்வேன். "
"இப்போ நீங்க பெரிய அண்ணாதானே ... வேலை பார்க்கிறதுதானே "
"எனக்குத் தெரிஞ்ச ஒரே ஒரு வேலை இதுதான்ப்பா "
"நான் உலகத்தை சுத்திப் பார்த்துட்டு வந்து உங்களை எங்க வீட்டுக்குக் கூட்டிட்டுப் போறேன். நீங்க என்னோடேயே இருக்கலாம். எங்க வயல்லே நீங்க வேலை பார்க்கலாம்."
அதைக் கேட்டு மௌனமாக இருந்தான் சேகர். அவன் தலை குனித்து உட்கார்ந்திருந்தான் .
அவனருகில் வந்து அவன் முகத்தை நிமிர்த்தி, "எங்க ஊருக்கு வருவீங்க தானே?" என்று கேட்ட அப்புமணி, சேகரின் கண்களிலிருந்து அருவி போல வடியும் கண்ணீரைக் கண்டு பதறிப் போனான்.  
-----------------------------------------------------தொடரும் ---------------------------------------------- 

Saturday, March 05, 2016

DEAR VIEWERS,

டீவி நியூஸ் பார்ப்பதில் அம்மாவுக்கு ஆர்வம் உண்டு. (வயது கிட்டத்தட்ட 90). ஒருநாள், ஒருவர் (யார், எந்த டீவியில் என்பதெல்லாம் நினைவில் இல்லை) வாகனங்களிலிருந்து வெளிவரும் புகையும் ,மண்ணின்   மாசு படிந்த நிலையுமே இயற்கை சீற்றங்களுக்கும், உலக அழிவுக்கும் காரணம் என்ற செய்தியை சொல்ல, "கீழே உள்ள புகையும் தூசியும் மேலே போய் சீதோஷ்ணத்தை மாத்துதுன்னு இவன் சொல்லுதானே, அப்படின்னாமேலேஎத்தனைஎத்தனையோராக்கெட்,என்னென்னவோகோள் கீள் எல்லாம் விட்டுருக்காங்களே. அதனாலே எந்த பாதிப்பும் மண்ணுக்கு வராதா ?" என்று அம்மா கேட்டாள். 
அது என்னை சிந்திக்க வைத்தது. இன்றுவரை என்னைக் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறது. விவரம் அறிந்தவர்கள் அதை எனக்குத் தெரிவியுங்க  . ப்ளீஸ் .... ப்ளீஸ்ங்க ...
தொடர்புக்கு : arunasshanmugam@gmail.com

Thursday, March 03, 2016

DEAR VIEWERS

,

face book ல் வெளியான எனது படத்தில் இருக்கும் மற்ற இருவர் யார் என்று போனில் விசாரித்த நண்பர்களுக்கு எனது பதில்: (அது உங்கள் பார்வைக்கும்)ஓவியர் திரு. ஜெயராஜ் அவர்கள் தனது துணைவியாருடன். இந்தப் படம் 2014ல் TVS, சென்னையில் எடுக்கப்பட்டது. அங்கு நடந்த விழாவில் கோலப் போட்டிக்கு நடுவராக நானும், ஓவியப் போட்டிக்கு நடுவராக  ஓவியர் திரு. ஜெயராஜ் அவர்களும் கலந்து கொண்ட போது எடுத்தபடம். "எல்லாருக்குந்தான் விரல் இருக்குது. ஆனா  உங்களோட   விரல்கள் மட்டும் வித்தை காட்டுது. உங்கள் விரலில் உள்ள பவரில் இருந்து கொஞ்சத்தை நான் எடுத்துக்கப் போறேன், உங்க மனைவியோட சம்மதத்தோடு " என்று சொல்லி அவரின் ஆட்காட்டி விரலைத் தொட்டுத் தடவி, "இப்போ என்னோட விரலுக்கும் பவர் வந்துட்டுது "என்றேன். இதை அவரோட மனைவி மிகவும் ரசித்தார். மனம் விட்டுப் பேசினார். மறக்கவே முடியாத சந்திப்பு. பெண்களின் இடுப்பு வளைவை வரைவதில் அவருக்கு நிகர் அவர்தான். அந்தக் காலத்தில் (அவர் அறிமுகமான காலத்தில்) அவர் வரையும் ஓவியங்களை பெண்கள் (குறிப்பாக கல்லூரி மாணவிகள்) மிகவும் ரசித்தார்கள். எல்லாப் பத்திரிக்கையிலும் அவர் வரைந்த படங்கள் வெளியாகின. படங்களைப் பார்ப்பதற்காகவே பத்திரிக்கை வாங்கியவர்களும் உண்டு. இதை நான் அவரிடம் சொன்னபோது சங்கோசத்தோடு நெளிந்தார்.