Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Tuesday, March 15, 2016

மழலையில் தெரிகிறது வாழ்க்கையின் தத்துவங்கள் !

           இறைவன் படைப்பில் மிக அற்புதமான, அழகான ஒன்று : குழந்தைகள். மனசில் என்னதான் கஷ்டம் இருந்தாலும் சரி ; ஒரு குழந்தை சிரிப்பதைக் கண்டால் அந்த உற்சாகம் நமக்குள்ளும் தொத்திக் கொள்ளும். நம்மையும் அறியாமல் நாமும் சிரிப்போம். சிறு குழந்தைகளின் கேள்விக்கு மிகப் பெரிய மேதைகளால் கூட பதில் சொல்ல முடியாது. யாரையும் நொடிப் பொழுதில் முட்டாளாக்கி விடுது  அவர்களுக்குக் கை வந்த கலை. கேள்வி  கேட்டு அசர வைக்கும் சாமர்த்தியம் குழந்தைகளுக்கு மட்டுமே உண்டு.
அடுத்து நான் சொல்லப் போவது ஒரு கதை. இதை நிறைய பேர் உபன் யாசகங்களிலும், மேடைப் பேச்சு களிலும் சொல்லியிருக்கிறார்கள். அதை நம்மில் நிறைய பேர் கேட்டிருப்போம். இருந்தாலும் அதை மீண்டும் இங்கே சொல்வதன் காரணம், கதையின் முடிவில் ஒரு கேள்வி தொக்கி நிற்கிறது, உங்களின் பதிலுக்காக.
கதையின் கரு: எந்தத் தொழில் செய்தாலும் அதில் தர்மம், நியாயம் இருக்க வேண்டும். தர்ம நெறி தவறியவன் வாழ்விலிருந்து கல்வியும் செல்வமும் விலகிப் போய்விடும்.
ஒரு அரசன். நீதிநெறி தவறாதவன். மக்கள் நலனைப் பெரிதாக நினைப்பவன். சில காலமாக அவனுக்குள் சில தேவை யற்ற குழப்பங்கள், சஞ்சலங்கள்.அமைதியின்றி தவித்தான். தூக்கம் வராது  உப்பரிகையிலும் அரண்மனைக்கு வெளியிலும் இரவு நேரங்களில் உலாவினான். அவனு க்குள் உள்ள பிரச்னை என்ன என்பதை அவனால் கண்டு கொள்ள முடிய வில்லை. அவனிடமிருந்த ஒன்று அவனை விட்டுப் போகப் போவதாக ஒரு அசரீரி அவனுக்கு சொல்லிக் கொண்டே இருந்தது. அது என்ன? அதை எப்படித் தடுத்து நிறுத்துவது என்பது போன்ற குழப்பத்தில் இருந்தான்.
அன்றைய இரவும் தூக்கம் வராமல்  நடந்து கொண்டே  இருந்தவன் அரண் மனையைத் தாண்டி கோட்டைச் சுவரையும் தாண்டி வெளி வாசலுக்கே வந்து விட்டான். அப்பொழுது கோட்டைக்குள்ளிருந்து ஒரு பெண் வெளி யேறுவதைக் கண்டான். அவளைத் தடுத்தி நிறுத்தி, ‘யாரம்மா... நீ.. எங்கே போகிறாய் இந்நேரத்தில்?’ என்று கேட்டான்.
‘நான் கலைமகள். கல்வி, கலைகளுக்கு அதிபதி. எனக்கு இங்கு இருக்கப் பிடிக்கவில்லை.அதனால் இங்கிருந்து வெளியேறுகிறேன்’என்றாள் அந்த பெண்.
‘உன்னோட முடிவு அதுவென்றால், உன்னைத் தடுத்து நிறுத்த நான் விரும்பவில்லை. உனக்கு எது விருப்பமோ அதை செய்யலாம்’ என்று சொல்லி அவளுக்கு வழி விட்டு விலகி நின்றான்.  
சிறிது நேரத்தில், கோட்டைக்குள்ளிருந்து மற்றொரு பெண் வெளியேறு வதைக் கண்டான். அவளைத் தடுத்தி நிறுத்தி, ‘யாரம்மா... நீ.. எங்கே போகிறாய்  இந்நேரத்தில்?’ என்று கேட்டான். 
‘நான் திருமகள். எல்லாச் செல்வங்களுக்கும் அதிபதி. எனக்கு இங்கு இருக்கப் பிடிக்கவில்லை. அதனால்   இங்கிருந்து வெளியேறுகிறேன் ’ என்றாள் அந்தப் பெண். ‘உன்னோட முடிவு அது என்றால், உன்னைத் தடுத்து நிறுத்த நான் விரும்பவில்லை. உனக்கு எது விருப்பமோ அதை செய்யலாம்’ என்று சொல்லி அவளுக்கு வழி விட்டு விலகி நின்றான் அரசன்.
சற்றுநேரத்தில், கோட்டைக்குள்ளிருந்து மற்றொரு பெண் வெளியேறுவ தைக் கண்ட அரசன், அவளைத் தடுத்தி நிறுத்தி, ‘யாரம்மா... நீ.. எங்கே போகிறாய் இந்நேரத்தில்?’ என்று கேட்டான். 
‘நான் தர்மதேவதை. நான் தர்மதேவதையாக இருந்தாலும், தர்ம நியாயத்துக்குக் கட்டுப்பட்டவள்..எனக்கு இங்கிருக்கப் பிடிக்கவில்லை. அதனால் இங்கிருந்து வெளியேறுகிறேன்’ என்றாள் அந்தப் பெண்.
அதைக் கேட்டதும் அவள் காலில் விழுந்த அரசன், ’அம்மா.. கல்வியறிவு இல்லாத நாடாக ஒருநாடு இருக்கலாம்...முயற்சி பண்ணி அந்த நிலை யை  மாற்றமுடியும். செல்வ வளமில்லாத நாடாக ஒரு நாடு இருக்கலாம். ஊர் கூடி தேர் இழுத்தால்.... மக்கள் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து பாடுபட்டால், செல்வவளம் வந்து சேரும்.ஆனால் தர்மம் நியாயம் தவறிய நாடு  ஒரு நாடே இல்லை. அது சுடுகாடு. சுடுகாட்டில் மனிதர்கள் விரும்பி போய் வாழ மாட்டார்கள். உனக்குப் பிடிக்காத எது இங்கு நடந்தது என்று சொல். அதை உடனே சரி செய்கிறேன். ஆனால் நீ மட்டும் இந்த இடத்தை விட்டு மட்டும் போயிடக் கூடாது.  நீ உள்ளே போகா விட்டால் நான் இங்கே என் உயிரை விடுவேன்’ என்று சொன்னதும் ‘சரி’ என்று சொல்லி, தர்மதேவதை மீண்டும் நாட்டுக்குள் சென்று விட்டாள். சற்றுநேரத்தில், முதலில் கிளம்பிப் போன இரண்டு பெண்களும் திரும்பி வந்தார்கள். தர்மம் நியாயம் இருக்கும் இடத்தில்தான் நாங்கள் குடியிருப்போம்’ என்று சொல்லியபடி! அதைக் கேட்டு மகிழ்ந்த அரசன் அன்று முதல் நிம்மதியாக உறங்கினான்.
அவ்வளவுதான்... கதை முடிந்தது. 
இதைப் படித்ததும் உங்கள் மனதில் என்ன தோன்றுகிறது?. முதல் முதலாக ஒரு மீட்டிங்கில் நான் இந்தக் கதையைக் கேட்டபோது, ’ நல்ல அரசன்’ என்ற நினைப்பைத் தவிர வேறு எதுவுமே தோன்றவில்லை. அறிவு என்னை எந்தவொரு  கேள்வியும்  கேட்கவில்லை.   இதே கதையை  என்னுடைய ஃப்ரண்ட்ஸுக்கும் சொல்லி இருக்கிறேன்.  எந்த ரியாக்ஷனும் இல்லாமல்  ‘அப்படியா'  என்று கதை கேட்டதோடு அவர்கள் பார்ட் ஓவர். 
சில வருடங்களுக்குப் பிறகு இதே கதையை எங்கள் வீட்டு செல்லத்துக்கு (5 வயது செல்லக்குட்டி) சொன்னபோது, கதையைக் கவனமாகக் கேட்ட அவள், ‘தர்மம் நியாயம் இருக்கும் இடத்தில்தான் நாங்க இருப்போம்னு சொல்லி, முதலில் கிளம்பிப் போன ரெண்டு பொம்பளைங்களும் திரும்ப அரண்மனைக்குள் வந்தாங்கனு சொல்றியே. தர்ம தேவதை கடைசியாத் தானே வெளியில் வந்தா.. அவ உள்ளே இருக்கிறப்ப, இவங்க ரெண்டு பேரும் அவளைவிட்டுட்டு ஏன் விலகி வெளியில்வந்தாங்க.அவ இருக்கிற இடத்தில் இவங்க இருந்திருக்கணுந்தானே. ஏன் வெளியில் வந்தாங்க?. அதைச்சொல்லு நீ முதலில்!’என்றொரு கேள்வியை,ஒரு அணு குண்டைத் தூக்கிப் போட்டது.  அதன் பிறகுதான் நானும் யோசிக்க ஆரம்பித்தேன். எனக்குப் பதில் தெரியவில்லை. இதே கேள்வியை நான் மற்றவர்களிடம் கேட்டுக் கொண்டிருக்கிறேன். உங்களில் யாருக்காவது இந்தக் கேள்விக்கான பதில் தெரிந்தால் அதை எனக்குத் தெரிவிக்கலாம்.
குழந்தைகள் எப்போதுமே சற்று வித்தியாசமான கோணத்தில்தான் சிந்திக்கிறார்கள். அவர்களிடமிருந்து  நாம் கற்றுக் கொள்ள வேண்டியது ஏராளம்.... ஏராளம் !

No comments:

Post a Comment