Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, November 28, 2014

Scanning of inner - heart ( Scan Report Number - 134 )

                                               அடே நண்பா ? அடடே நண்பா !
"அம்மா, என்ன பண்றே ?" என்ற குரல் கேட்டு திரும்பிப் பார்த்த வத்சலா, "என்னடா இது ஷூவைக் கூட கழற்றாமல் கிட்சன் உள்ளே வர்றே " என்றாள்.
"ஸாரிம்மா" என்று சொல்லிவிட்டு ஷூவைக் கழற்றி வாசலில் வீசிவிட்டு வந்த சத்யா, " அம்மா, என்னோட டௌட்டை கிளியர் பண்ணு " என்றான்.
"ஒரு அஞ்சே அஞ்சு நிமிஷம் நீ ஹாலில் போய் உட்காரு. ஸ்டவ்வில் பால் இருக்கு. அதை இறக்கி வச்சிட்டு வந்துடறேன் "
"அதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம் " என்று சொல்லி ஸ்டவ்வை ஆப் செய்த சத்யா, வத்சலாவின் தோள்களைப் பிடித்துத் தள்ளியபடி அவளை ஹாலுக்கு அழைத்து வந்து சோபாவில் உட்கார வைத்தான்.
"என்னடா இது குழந்தைத்தனம் !" என்று வெளிப்படையாகக் கடிந்து கொண்டாலும் அவனது செய்கையை மனதுக்குள் ரசித்தாள் வத்சலா.
"அம்மா. இன்னிக்கு லஞ்ச் டைமில் ஒரு டாபிக் டிஸ்கசனுக்கு வந்துச்சு. அதை நீ கிளியர் பண்ணனும் "
"என்னடா இது ஆச்சரியம்! ஒரு ஐ.டி கம்பெனி ஸ்டாப்க்கு வந்த டௌட்டை  நான் கிளியர் பண்ணனுமா  ?" என்று வியந்து போய்க் கேட்டாள் வத்சலா 
"அம்மா .. இது ஆபீஸ் மேட்டர் இல்லே ... குடும்ப .... கோயில் விஷயம் "
"அப்படின்னா ஓகே .. என்ன டௌட் ?"
"எல்லா குடும்பத்துக்கும் குலதெய்வம்னு ஒண்ணு  இருக்குமாமே .. அந்த குலதெய்வம் இருக்கிற கோயில் ஏதாவது ஒரு காட்டுக்குள்  இல்லாட்டா ஏதோ ஒரு கிராமத்தில் இருக்குமாமே, அது நிஜமா ? அப்படி ஒண்ணு உண்டுங்கிற  விஷயம் எனக்குத் தெரியாதுன்னு சொன்னால் என்னோட பிரெண்ட்ஸ் என்னைக் கிண்டல் பண்றாங்க  "
"நீ அவங்க கிட்டே 'ஐயா சாமி .. நான் வீட்டில் இருந்த நாட்களை விட ஹாஸ்டலில் இருந்த நாட்கள்தான் அதிகம். சின்ன வயசில் ஊட்டி கான்வென்ட், காலேஜ் படிப்பு வெளிநாட்டில்னு சுத்திட்டு இருந்தேன் .. வேலை பார்க்கிறது சென்னையில் .. அதுவும் இப்போ ஆறு மாசமாத்தான் .. எப்போ எங்கே கிளம்புவேன்னு எனக்குத் தெரியாது. என் வீட்டையே எனக்கு சரியாகத் தெரியாது, பிறகு எங்கே கோயிலைப் பத்தித் தெரிஞ்சுக் கிறதுன்னு நீ சொல்றதுதானே "
"இதுதானே வேண்டாங்கிறது .. ஆஸ்பிடலில் பிறந்ததுமே நானே போய் ஹாஸ்டலில்  சேர்ந்துட்டேனா?. என்னை வீட்டிலேயே  இருக்கவிடாமல் துரத்தி துரத்தி அடிச்சது நீங்கதானே!"
"கோச்சுக்காதே குழந்தே .. உங்க அப்பா அவரோட சின்ன வயசில் கான்வென்டில் சேர்ந்து படிக்க ஆசைப்பட்டாராம். ஆனால் கவெர்ன் மெண்ட் ஸ்கூலில் தான் படிக்க முடிஞ்சுது. காலேஜ் படிப்பை நினைச்சுக் கூடப் பார்க்க முடியாதபடிக்கு அவரோட  குடும்ப சூழ்நிலை. என்னைக் கல்யாணம் பண்ணினப்போ எங்க அப்பா குடுத்த நகை, பணத்தை பிஸினெஸ்ஸில் இன்வெஸ்ட் பண்ணினார். ஓகோன்னு வந்தார். தான் எதுக்கெல்லாம் ஆசைப்பட்டு ஏமாந்தோமோ அது அத்தனையையும் தன்னோட பிள்ளைக்குக் கொடுக்கணும்னு ஆசைப் பட்டார். இன்னிக்கு உன்னை ஒரு நல்ல பொசிசனுக்குக் கொண்டு வந்துட்டார். அந்த நல்ல மனசைப் புரிஞ்சுக்காமே உன்னைத் துரத்தி அடிச்சதா சொல்றியேடா ".
"போம்மா .. நான் சும்மா ஒரு ஜோக் சொன்னா அதைப் போய் சீரியஸா எடுத்துகிட்டு .. லீவ் இட் ... இதை அப்புறமா டிஸ்கஸ் பண்ணலாம். முதலில் குலதெய்வம் மேட்டருக்கு வாம்மா"
"உன்னை நினைச்சா எனக்குப் பெருமையா இருக்கு "
"ஓ .. எந்த விஷயத்தில் ?"
"கான்வென்ட் ... வெளிநாடுன்னு சுத்தி திரிஞ்சு படிச்சுட்டு வந்தாலும் இன்னும் எங்களை நீ " அம்மா , அப்பா "னுதான் கூப்பிடறே. மம்மி டாடி கல்சருக்கு நீ போகலே .. நிறைய  குழந்தைங்க டாடியை "டாட்" ன்னு செல்லமா கூப்பிடறாங்க.. ஒரு சில குழந்தைங்க அதை உச்சரிக்கிறது "டேய்"ன்னு பேட்டை ரௌடி சொல்றாப்லே இருக்கு. லஞ்ச் டைமில் நடந்த ஒரு விஷயத்துக்கு ... அதுவும் கோயில் விஷயத்துக்கு முக்கியத் துவம் குடுத்து  என்கிட்டே அதைப் பத்தி டீடைல்ஸ் கேட்கறே .. ரோம் நகரில் இருக்கிறப்போ ஒரு ரோமானியனைப்  போல நடந்துக்கணும்னு சொல்வாங்க. ஆனால் நீ எங்கே இருந்தாலும் நீயொரு  தமிழ் நாட்டுக் குழந்தைதான்னு ப்ரூப் பண்றே "
"விடும்மா ... நமக்கு குலதெய்வம் இருக்குதா ? எந்த ஊரில் இருக்குது ?"
"தூத்துக்குடிக்குப் பக்கத்தில் ஒரு கிராமத்தில் நம்ம குலதெய்வம் கோயில் இருக்குடா "
"நீங்க ஒவ்வொரு வருஷமும் போவீங்களா? "
"இல்லேப்பா .. எங்களுக்குக் கல்யாணம் ஆன புதுசில் ஒரே ஒரு தடவை போனோம். அவ்வளவுதான் "
"அப்புறம் ஏன் போகலே "
"அந்த ஊரில் உங்க அப்பாவோட ப்ரெண்ட் ரமணன் இருக்கிறார் ... அதான் போகலே "
"ப்ரெண்ட் தானே ! எனிமி இல்லையே ... பிறகு ஏன் போகலே ... வெரி இன்ட்ரஸ்டிங் மேட்டர் ... சொல்லுங்கம்மா "
"இப்போ நீ  ஒரு விஷயத்தில் ரொம்பவும்  நம்பிக்கை வச்சு ஒரு செயலை செய்றப்போ அதைப் பைத்தியக்காரத்தனம்னு சொல்லி   இன்னொருத்தன் கிண்டலடிச்சா  உனக்கு  எப்படி இருக்கும் ?"
"என்னைவிட பலம் குறைஞ்ச ஆள்னா ரெண்டு தட்டு தட்டி எடுத்து  சொல்லிப் புரிய வைப்பேன். என்னாலே எதிர்த்துப் பேச முடியாதுன்னா அவன் இருக்கிற பக்கமே போகாமே விலகி வந்துடுவேன். வீணா தர்க்கம் பண்ணி இருக்கிற நட்பைக் கெடுத்துக்கிட வேண்டாம்னு நினைச்சா அந்த விஷயத்தையே மறக்க முயற்சி பண்ணுவேன்  "
"உங்க அப்பாவும் அப்படிதான் விலகி வந்துட்டார். நாங்க குலதெய்வம் கோயிலுக்குப் போய் ரொம்பவும்  நம்பிக்கையோடு  ஒவ்வொரு சடங்கு சாஸ்திரம் எல்லாம் பண்ணினோம். எல்லாத்தையும் கூடவே இருந்து பார்த்துட்டு இருந்த உங்க அப்பாவோட நண்பர் , "என்னடா விச்சு ... காலம் மாறினாலும் நீ மாறமாட்டே போலிருக்கு. என் தலையில் பாலைக் கொட்டு .  தயிரைக் கொட்டு .. பழத்தை பிழிஞ்சு மூஞ்சி முழுக்க தடவுன்னு சாமி உங்கிட்டே கேட்டாரா? இப்போ சிலைக்கு ஊத்தின பாலை நாலு குழந்தைகளுக்குக் குடுக்கலாமே.அதுங்க பசியாறினா கடவுள் பசியாறின மாதிரி தானே! உங்களோட முட்டாள்தனம் மூடநம்பிக்கைக்கு ஒரு அளவே இல்லையா"ன்னு கேட்டார். அவர் அப்படி சொன்னதில் உங்க அப்பாவுக்கு வருத்தம்தான். ஆனால் அதை வெளிக் காட்டிக்காமே " எனக்கும் தெரியும் ரமணா ... சாமி நம்மகிட்டே எதையும் கேட்கலே . கேட்கவும் மாட்டார். எப்பவுமே அவர் கை குடுக்கிற கையாவும் நம்ம கை வாங்கிற கையாவுந்தான் இருக்குது. ஆனால் இந்த பூ ..தயிர்.. பால் பழத்தை கோவில் வாசலில் நின்னு வித்து சில  குடும்பங்கள் பொழைப்பு நடத்துறாங்கதானே.. அவங்க பொழைப்புக்கு பக்திங்கிற பேரில் கடவுள் ஒரு வழி காட்டறார் . அவங்களுக்காகத்தான் இதை செய்றேன். ஏதாவது ஒண்ணை   நாம நேரா கொண்டு போய்க் குடுத்தா அதை 'பிச்சை'ன்னு அவங்க நினைக்கலாம். ஆனால் ஒரு பொருளை அவங்க கிட்டே இருந்து வாங்கிட்டு பணத்தைக் குடுத்தா அதை அவங்க எவ்வளவு கௌரவமா  ஏத்துக்கிறாங்க.. இந்த கோயில் ..வழிபாடு ... பூஜை .. அதுக்கான சாமான் எல்லாமே இந்த நோக்கத்தில் வந்ததுதான்னு நான் நினைக்கிறேன்"ன்னு சொல்லிட்டு வந்தார். அதற்க்கு அடுத்த வருஷம் "நம்மோட குலதெய்வம் கோயிலுக்கு நாம போக வேண்டாமா"ன்னு உங்க அப்பா கிட்டே  நான் கேட்டப்போ, "அங்கே போய் வரதுன்னா என்ன செலவாகுமோ அதை ஏதாவது ஒரு ஏழைக் குடும்பத்துக்குக் கொடுத்துடலாம்னு சொன்னார். இன்னிக்கு வரை அதைக் குடுத்துட்டும்  வர்றார்"
"போம்மா ... மூட்டைப் பூச்சிக்குப் பயந்து வீட்டை விட்டு ஓடின மாதிரி .. அவர் ப்ரெண்டை நினைச்சு ஏன் போகாமே இருக்கணும். கோயிலுக்கு மட்டும் போயிட்டு அந்த ப்ரெண்ட் இருக்கிற திசைப் பக்கமே போகாமே வந்துடலாமே"
"ஈசியா சொல்லிட்டே. நீ சொல்றதைக் கேட்க நல்லாத்தான் இருக்கு. நம்மளைப் போல பட்டணத்தில் இருக்கிறவங்களுக்கு  அடுத்த வீட்டில் யார் இருக்கிறாங்க என்பதே தெரியாது. ஆனால் கிராமத்தில் அப்படி இல்லே . ஒவ்வொருத்தர் வீட்டு ஜாதகமும் ஒவ்வொருவர் கையிலும் இருக்கும். புதுசா ஒரு நாய் அந்தத் தெருவில் எட்டிப் பார்த்தாலும் அது யார் வீட்டு நாய். எங்கிருந்து வருது.. ஏன் வருதுன்னு அதோட ஜாதகத்தை நோண்டிப் பார்க்க ஆரம்பிச்சுடுவாங்க. அந்த ஊருக்குப் போயிட்டு நாம வந்த சுவடு தெரியாமே திரும்பறது சாத்தியமே இல்லை. ப்ரெண்டைப் போய்ப் பார்த்தால் உங்க அப்பாவுக்கு மனசுக்குக் கஷ்டம். நாம அவரைப் பார்க்காமல் திரும்பிட்டோம் என்கிற விஷயம் அவர் காதுக்குப் போகும் போது அது அவருக்கு மனக்கஷ்டம். யாருக்கும் எந்தவிதமான  கஷ்டமும் வேண்டாம்னு வீட்டில் இருக்கிற சாமியை வீட்டில் இருந்து கிட்டே கும்பிடப் பழகிக் கிட்டோம்."
"அம்மா ... எனக்கு அந்த ஊருக்குப் போகணும் போல இருக்கு "
"ஊருக்குப் போய் சாமி கும்பிட ஆசையா ? இல்லே  உங்க அப்பாவோட ப்ரெண்டைப் பார்க்க ஆசையா ? "  
"ரெண்டுந்தான் !"
"உன்னைத் தெரியாதா எனக்கு! குலதெய்வம் கோவிலுக்குப் போகாமே இருக்கோமேங்கிற வருத்தம் எனக்கும் இருந்துட்டே இருக்குடா . உங்க அப்பாகிட்டே இதை சொன்னால் வேண்டாம்னுதான்  சொல்வார்.ஒண்ணு பண்ணுவோமா .. உங்க அப்பா பிஸினெஸ் முடிஞ்சு வர இன்னும் ஒரு வாரம் ஆகும். அதற்குள் நாம போயிட்டு வந்துடலாம். ப்ளைட்டில் புக் பண்ணினால் ஒரே நாளில் போயிட்டு வந்துடலாம் "
"குட் ஐடியா .. இப்பவே ஏற்பாடு பண்றேன் "
அடுத்த இரண்டாம் நாளில் இருவரும் தூத்துக்குடியில் இருந்தார்கள். ஆண்டுகள் பலவானாலும் அப்பாவின் நண்பரைக் கண்டு பிடிப்பதில் எந்த சிரமமும் இல்லை. முதலில் அவரை சந்தித்துவிட்டு கோவிலுக்குக் கிளம்பும் போது "நானும் வர்றேன் " என்று கிளம்பினார் அவர்.
"சொல்றேன்னு தப்பா நினைச்சுக்க வேண்டாம் .. நாங்க போயிட்டு வந்துடுவோம். எங்களுக்காக நீங்க உங்க விருப்பத்தை மாத்திக்க வேண்டாம்..அதான்...உங்களுக்கு இந்த பூஜை புனஸ்காரம் இதிலெல்லாம் நம்பிக்கை கிடையாதே" என்று தயக்கத்துடன் சொன்னாள் வத்சலா  
"அதெல்லாம் அப்போ .. எப்போ அவனும் நீயும் இந்த கோவிலுக்கு வந்துட்டுப் போனீங்களோ அந்த நாளிலிருந்து இன்னிக்கு வரை நான் தினமும் கோவிலுக்குப் போறேன். அப்போ விச்சு சொன்ன விஷயம் என்னை யோசிக்க வச்சுது ... கடவுள் இருக்கிறார் இல்லைங்கிறது வேறு விஷயம். குலதெய்வம் இருக்கிற இடந்தான்னு இல்லே . எந்தக் கடவுளா இருந்தால் என்ன?. அந்த கடவுள் இருக்கிற இடம்... கோவில் ... கொஞ்ச பேருக்குப் பிழைப்புக்கு ஆதாரமா இருக்குதே.. கற்பூரம் ஒரு அம்பது பைசா சமாசாரம் ... அது ஒரு குடும்பத்துக்கு சோறு போடுதே .. இப்படி எத்தனை குடும்பங்கள் பொழைக்குது.. அதையெல்லாம் நான்  யோசிச்சுப் பார்த்தேன். தினமும் பத்து பைசாவுக்கு கற்பூரம் வாங்குவேன் .. மாதம் ஒரு முறை அர்ச்சனை .. வருஷம் ஒரு முறை அபிஷேகம் அலங்காரம்னு செய்றேன். தினமும் செய்யலாம்தான்.. ஆனால் எனக்கும் கட்டுபடியாக ணுமே "
"அங்கிள் .. ஒரு விஷயத்தைப் பத்தி ஒரே மாதிரி சிந்திக்கிறவங்களுக்கு மட்டுந்தான் நட்பு கைவந்த கலைன்னு என் ப்ரெண்ட் சொல்வான். அதை நீங்க ரெண்டு பேரும் பொய்யாக்கிட்டீங்க. ஒரு விஷயத்தைப் பத்தி நீங்களும் அப்பாவும் நேர்மாறா யோசிக்கிறீங்க. ஒருத்தர் சொல்வதி லுள்ள நியாயத்தை இன்னொருத்தர் புரிஞ்சுக்கிறீங்க. நீங்க சொன்ன வார்த்தையை வேதவாக்கா எடுத்துகிட்டு கோயிலுக்கு செய்றதா நினைச்சு அப்பா கஷ்டப்படறவங்களுக்கு தன்னாலே முடிஞ்ச உதவியை செய்றார். கடவுளுக்கு செய்றதா நினைச்சு ஒண்ணை வாங்கி அதைக் கோயிலில் கொண்டு போய் சேர்த்தாலும் அது ஒரு குடும்பத்துக்கு பிழைப்புக்கு வழிகாட்டுதுன்னு  நீங்க புரிஞ்சுகிட்டீங்க .. உங்க ரெண்டு பேரையும் நான் ரொம்பவும் மதிக்கிறேன்" என்று சத்யா சொல்ல " அட போப்பா !" என்று வெட்கத்துடன் சொன்னார் நண்பர் ரமணன் .    

Friday, November 14, 2014

Scanning of inner - heart ( Scan Report Number - 133 )

                                          நீ நல்லவனா ? கெட்டவனா ?
"என்ன ராஜு நீ இன்னும் கிளம்பலே "
"போலாம்ப்பா. வீட்டில் யாரும் இருக்க மாட்டாங்க . அங்கே போய் போரடிச்சுட்டு இருக்கிறதுக்கு ஆபீஸ் பெட்டர்னு தோணுச்சு. அதான் எழும்ப மனசு வரலே. அப்புறமா எல்லாரும் சேர்ந்து போலாம். டூர் இப்போ வேண்டாம்னு சொன்னால் கேட்டால் தானே. போயே ஆகணும்னு அடம் பிடிக்கிறா  ".
"விடுப்பா .. நாமதான் அவங்களை எங்கேயும் கூட்டிட்டுப் போறது கிடையாது. ஆபீஸ், வேலைன்னு இங்கே தவம் கிடக்கிறோம். ஏதோ அவங்களாக போறேன்னு சொல்றப்போ ஏன் தடுக்கிறே? உன் வொய்ப் மட்டும் தனியாகவா போயிருக்கிறாங்க? எங்க வீட்டிலிருந்தும் நாலு டிக்கெட் கிளம்பிப் போயிருக்காங்க.உன் வொய்ப்பை காக்கா தூக்கிட்டுப் போயிடாதபடி பத்திரமா அழைச்சிட்டு வந்து உன் வீட்டில்  கொண்டு வந்து சேர்த்துடுவாங்க. போதுமா ?"
"அதுக்கில்லே கிருஷ்ணா ...."
"போதும் ... பைலை மூட்டை கட்டி வச்சிட்டு கிளம்பு .. இன்னிக்கு என் வீட்டில் ஸ்டே பண்ணு "
"இல்லே ராஜு ... இன்னிக்கு நைட்டுக்கு டிபன், நாளை காலைக்கு சாப்பாடு எல்லாம் ரெடி பண்ணி வச்சிட்டுப் போறதா சொன்னா.. அது வீணாப் போகுமே.  அதுவுமில்லாமே கிளம்பற அவசரத்தில் அப்படி அப்படியே போட்டுட்டுப் போயிருப்பா. நான் போய் கிளீன் பண்ணி வைக்கலாம்னு நினைக்கிறேன் ...வேணும்னா ஒண்ணு பண்ணலாம் . என் வீட்டுப் பக்கம் நல்ல மெஸ்ஸோ ஹோட்டலோ இல்லை .. நாளைக்கு மத்தியானம் உன் வீட்டுக்கு வர்றேன் . ரெண்டு பேரும் வெளியில் போய் சாப்பிடலாம்"
"நான் அடிக்கடி சொல்வேனே, எங்கள் ப்ளாக்கில் குடியிருக்கிற ஒரு பிரம்மகத்தி பத்தி... நீ கூட அந்த ஆளை பார்க்கணும் போல ஆசையா இருக்குனு சொல்வியே. இன்னிக்கு என்னோட வந்து என் வீட்டில் தங்கினால் அதைக் கண்டு நீ ரசிக்கலாம். என் வீட்டிலும் யாரும் இல்லாததாலே நீ ப்ரீயாப்   பீல் பண்ணலாம்" 
"ஓகே .. சினிமா தியேட்டர் பக்கம் போயே ரொம்ப நாளாச்சு. ஏதாவது படத்துக்குப் போயிட்டு வீட்டுக்குப் போலாமா? " என்று  ராஜு கேட்க மறுப்பேதும் சொல்லாமல் கிளம்பினான் கிருஷ்ணா.
படம் முடிந்து, இரவு  சாப்பாட்டை முடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பும் போது  மணி பதினொன்றைத் தாண்டியிருந்தது. வீட்டுக்கு சற்று தொலைவிலேயே வண்டியை நிறுத்திஎன்ஜினை ஆப் செய்து விட்டு  டூ வீலரைத் தள்ளிக் கொண்டு நடக்க ஆரம்பித்தான் கிருஷ்ணா. " ஏன் ? " என்று ஆச்சரியக்குறியை வீசிய ராஜுவிடம், "நம்ம வண்டி சத்தம் மத்தவங்க தூக்கத்துக்கு இடைஞ்சலா இருக்கக் கூடாது . அதான் " என்று காரணம் சொன்னான் கிருஷ்ணா.
வீட்டுக் கதவை கிருஷ்ணா திறந்து கொண்டிருந்தபோது, " சாயங்காலம் ஆறு மணிக்கே பொது லைட்டைப் போட்டுட வேண்டியது. ராத்திரி பன்னிரண்டு மணியானாக்கூட அதை ஆப் பண்றது கிடையாது " என்று சொல்வது இருவர் காதிலும் விழுந்தது. அதை தொடர்ந்து "நீங்க ஏன் ராத் தூக்கத்தைக் கெடுத்துகிட்டு அதைப் பத்தி கவலைப் படறீங்க . கரெண்ட் சார்ஜ் பொதுதானே !" என்று பெண் குரல் சொல்வதும், அந்தக் குரலை இடை மறித்து " கரெண்ட் கட் என்கிற ஒரே ஒரு காரணத்தாலே நாட்டில் நிறைய இடங்கள்லே வேலை நடக்காமே இருக்குது. அதைக் காரணம் காட்டி வேலையாட்களை வீட்டுக்கு அனுப்பிடறாங்க. அவனவன் அடுத்த வேளை  சாப்பாட்டுக்கு என்ன வழிங்கிற கவலையில் இருக்கிறான். இங்கே தேவையே இல்லாமல் கரெண்ட் வீணாப் போகுது. பசி பட்டினி நியூஸ்சை  டீவீயில் பார்த்துட்டு "உச்" கொட்டுறதுக்குப் பதிலா நம்மாலே முடிஞ்ச அளவுக்கு கரெண்டை சேவ் பண்ணலாம்தானே?" என்று பதில் சொல்வதும், " ஆமா ... அப்படில்லாம் நாம சேவ் பண்ணிக் குடுத்தா மீட்டிங் அது இதுனு விடிய விடிய விளக்கைப் போட்டுட்டு ஆர்ப்பாட்டம்  பண்ணிட்டு இருப்பானுக..பேசாமல் படுங்க" என்று பெண் குரல் பதில்    சொல்வதும் கேட்டது .    
"நான் சொல்வேனே ஒரு  பிரம்மகத்தி பத்தி ... அதுக்கு இன்னும் தூக்கம் வரலே . பேசறது அதுவும் அதோட வொய்ப்பும்  " என்று ரகசியக் குரலில் சொன்னான் கிருஷ்ணா .
"ரொம்ப இன்ட்ரஸ்டிங்கான கேரக்டரா இருப்பார் போல தெரியுது . இந்த நடு ராத்திரி வேளையில் கூட நாட்டைப் பத்திக் கவலைப் படறாரே " என்று வியப்புடன் சொன்னான் ராஜு.
மறுநாள் காலையில் வீட்டின் முன்பக்கம் ஏதோ சந்தடி கேட்க , ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தான் ராஜு.
வாசலில் இருந்த குழாயில் இரண்டு பெண்களும் ஒரு வயதான பெரியவரும் தண்ணீர் பிடித்துக் கொண்டிருக்கஒருவர் இரைந்து கொண்டு  இருந்தார், "ச்சே .. என்ன சொன்னாலும் புரியாத ஜென்மங்கள் ... நாலு பேர் நடக்கிற பாதையில் தண்ணீரைக் கொட்டி வச்சிருக்கோமே. யாராவது வழுக்கி விழுந்துட்டா என்ன ஆகும் என்கிற ஸ்மரனையே   இல்லாத ஜென்மங்கள். பாத்திரத்தைக் கழுவி தண்ணீ பிடிக்கிறது நல்ல விஷயந் தான் .. அதை உங்க வீட்டிலேயே செய்யலாமே. குழாயடியில் வந்தா செய்யணும் . இதோ வயசான பெரியவர்  நிக்கிறார் ... நடக்கிறச்சே விழுந்துட்டா அந்த வலியும் வேதனையும்  சம்பந்தப் பட்டவங்களுக்குத் தானே தெரியும் . ஒரே ஒரு வார்த்தையில் சாரின்னு சொல்லிட்டு நீங்க போயிடுவீங்க . அட அவரை விட்டுத் தள்ளுங்க. நீங்க ஊத்தின தண்ணியில் நீங்க விழுந்தால் உங்களுக்கும் கஷ்டம்தானே? குழந்தைங்க பெரியவங்க நடமாடுற பொது இடம் இதுங்கிற நினைப்பு எல்லாருக்கும் வரணும்" என்று !
"நீங்க உங்க வேலையை மட்டும் பாருங்க " என்று சொல்லிவிட்டு தண்ணீர்க் குடத்துடன் அங்கிருந்து  போனார்கள் பெண்கள் இருவரும்.
"கத்துதே, அதுதான் நான் சொன்ன ஆள் .. எப்ப பாரு எதிலாவது மூக்கை நுழைச்சு கிட்டு. தண்ணீர் மேட்டர் தான் பிள்ளையார் சுழி. இன்னைக்குப் பூரா நடக்கிற கூத்தை வாட்ச் பண்ணு " என்றான் கிருஷ்ணா.
"நீ இந்த வீட்டை வாங்கி ஒரு வருஷத்துக்கும் மேலே இருக்குமே ?"
"ஆமாம் .. ஆனால் அவர் குடி வந்து ரெண்டு மாசம்தான் ஆகுது . முதலில் அந்த வீட்டை வாங்கியவர் பைனான்ஸ் பிரச்சினையில் வந்த விலைக்கு இந்த வீட்டை விற்று விட்டுப் போயிட்டார். கத்துச்சே, அது ரிடயர் ஆன கேஸ். செட்டில்மெண்ட் பணத்தில் வீட்டை வாங்கிட்டுது .. இப்போ எல்லார் கழுத்தையும் அறுக்குது.  அவரோட யாரும் பேசறது கிடையாது . பஞ்சாயத்துத் தீர்ப்புபடி ஒரு சில குடும்பங்களை ஒரு சில கிராமத்தில் தள்ளி வைப்பாங்களே அந்த மாதிரிதான் இவரை இங்கே வச்சிருக்காங்க . இருந்தாலும் எல்லா விஷயத்திலும் மூக்கை நுழைப்பார்"
"முதலில் குடியிருந்த வீடு எல்லா வசதியோடும் இருந்துச்சே. நீ அங்கே இருந்துட்டு இதை வாடகைக்கு விட்டுருக்கலாமே  ?"
"அதை ஏன் கேட்கிறே ? அங்கே ஒரு ரௌடி குடி வந்து ஆட்டம் போட்டுட்டு இருந்தான். ஏதோ ஒரு அரசியல்வாதிக்கு வேண்டியவனாம் அவன் பேரை சொல்லி இவன் அடிச்ச லூட்டி தாங்க முடியலே . எப்பவும் புல் லோடுதான். வீட்டில் இருக்கிறவங்க வெளியிலே வரவே பயந்தாங்க .அதான்  ஊருக்கு ஒதுக்குப்புறம்னாலும் பரவாயில்லைன்னு இங்கே மாறி வந்துட்டேன் "
இவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போது " மீனு .. மீனு " என்று குரல் கொடுத்தபடி அங்கு கூடையுடன்  மீன் விற்பவர் வந்தார்.
"இப்போ ஒரு சீன்  நடக்கும் பாரு " என்று சொல்லி கதவைத் திறந்து விட்டு வாசலில் வந்து நின்றான் கிருஷ்ணா.
குழாயடியில் கத்திய அதே நபர் வேகமாக வந்து, "ஏய் ...உனக்கு எத்தனை தடவை சொல்லியிருக்கிறேன், வாசலில் நின்னு குரல் கொடுக்கணும் . ஒவ்வொரு வீட்டுக் கதவையும் தட்டி உன்னோட மீன் கூடையை அவங்க மூஞ்சிக்கு நேரா நீட்டக்கூடாதுனு. இங்கே கவுச்சி சாப்பிடாதவங்களும் இருக்காங்க .. ஏன் .. சாப்பிடறவங்களே  கூட ஒருநாள் கிழமைனா அதைக் கையால் தொட மாட்டாங்க. தூக்கு ... கூடையைத் தூக்கிட்டு வாசலுக்கு வா. எனக்கு ஒரு கால் கிலோ குடு " என்றார்.
மீன்காரர் வெளியில் செல்ல, வாசல் கதவை அடைத்து விட்டு உள்ளே வந்தார்கள் இருவரும்.
"இவர் சொல்றதை யாரும் காதிலேயே வாங்கிறது கிடையாது . இது அவருக்குமே நல்லா தெரியும்.  இருந்தும் இந்த மனுஷன் ஏன் இப்படிப் பிராணனை விடறார்னு எனக்குத் தெரியலே "
"கிருஷ்ணா ... நான் ஒண்ணு சொன்னா கோபப்பட மாட்டேதானே ? ராத்திரி நேரத்தில் உன்னோட வண்டி சத்தம் மத்தவங்களை டிஸ்டர்ப் பண்ணக் கூடாதுன்னு வண்டியை ஆப் பண்ணிட்டு அதைத் தள்ளிட்டு வந்து செட்டில் சேர்த்தே நீ. அந்த மனுஷன் மத்தவங்க நல்லதுக்குத் தானே ஒவ்வொண்ணையும் சொல்றார் . ஒருவேளை ரொம்பவும் நல்லவங்களா இருக்கிறது கூட தப்போன்னு தோணுது. ஒருத்தன் கெட்டவனா இருந்தால்தான் மத்தவங்க ஒதுங்கிப் போவாங்கனு இல்லே. ரொம்ப நல்லவனா இருந்தாலும் அவனோடு யாருக்கும் ஒத்துப் போறதில்லே. முன்னே இருந்த இடத்தில் ஒருத்தன் கெட்டவன்னு சொல்லி நீங்க ஒதுங்கிப் போனீங்க. இங்கே நல்ல விஷயங்களை சொல்ற ஒருத்தரை  நீங்க ஒதுக்கி வைக்கிறீங்க .. அவர் சொல்ற விதம் வேணும்னா தப்பா இருக்கலாம் .. அவரோட லாங்குஏஜ் தப்பா இருக்கலாம் ... ஆனால் அவர் சொல்ற எல்லாமே நியாயம்னு எனக்குப் படுது.. நீ என்ன நினைக்கிறே ? " என்று கேட்டபடி கிருஷ்ணாவின் முகத்தைப் பார்த்தான்.
அந்த முகத்தில் ஒரு இனம் புரியாத அமைதி தெரிந்தது. கிருஷ்ணா யோசிக்க ஆரம்பித்து விட்டான் என்பது ராஜுவுக்குப் புரிந்தது .