Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, November 14, 2014

Scanning of inner - heart ( Scan Report Number - 133 )

                                          நீ நல்லவனா ? கெட்டவனா ?
"என்ன ராஜு நீ இன்னும் கிளம்பலே "
"போலாம்ப்பா. வீட்டில் யாரும் இருக்க மாட்டாங்க . அங்கே போய் போரடிச்சுட்டு இருக்கிறதுக்கு ஆபீஸ் பெட்டர்னு தோணுச்சு. அதான் எழும்ப மனசு வரலே. அப்புறமா எல்லாரும் சேர்ந்து போலாம். டூர் இப்போ வேண்டாம்னு சொன்னால் கேட்டால் தானே. போயே ஆகணும்னு அடம் பிடிக்கிறா  ".
"விடுப்பா .. நாமதான் அவங்களை எங்கேயும் கூட்டிட்டுப் போறது கிடையாது. ஆபீஸ், வேலைன்னு இங்கே தவம் கிடக்கிறோம். ஏதோ அவங்களாக போறேன்னு சொல்றப்போ ஏன் தடுக்கிறே? உன் வொய்ப் மட்டும் தனியாகவா போயிருக்கிறாங்க? எங்க வீட்டிலிருந்தும் நாலு டிக்கெட் கிளம்பிப் போயிருக்காங்க.உன் வொய்ப்பை காக்கா தூக்கிட்டுப் போயிடாதபடி பத்திரமா அழைச்சிட்டு வந்து உன் வீட்டில்  கொண்டு வந்து சேர்த்துடுவாங்க. போதுமா ?"
"அதுக்கில்லே கிருஷ்ணா ...."
"போதும் ... பைலை மூட்டை கட்டி வச்சிட்டு கிளம்பு .. இன்னிக்கு என் வீட்டில் ஸ்டே பண்ணு "
"இல்லே ராஜு ... இன்னிக்கு நைட்டுக்கு டிபன், நாளை காலைக்கு சாப்பாடு எல்லாம் ரெடி பண்ணி வச்சிட்டுப் போறதா சொன்னா.. அது வீணாப் போகுமே.  அதுவுமில்லாமே கிளம்பற அவசரத்தில் அப்படி அப்படியே போட்டுட்டுப் போயிருப்பா. நான் போய் கிளீன் பண்ணி வைக்கலாம்னு நினைக்கிறேன் ...வேணும்னா ஒண்ணு பண்ணலாம் . என் வீட்டுப் பக்கம் நல்ல மெஸ்ஸோ ஹோட்டலோ இல்லை .. நாளைக்கு மத்தியானம் உன் வீட்டுக்கு வர்றேன் . ரெண்டு பேரும் வெளியில் போய் சாப்பிடலாம்"
"நான் அடிக்கடி சொல்வேனே, எங்கள் ப்ளாக்கில் குடியிருக்கிற ஒரு பிரம்மகத்தி பத்தி... நீ கூட அந்த ஆளை பார்க்கணும் போல ஆசையா இருக்குனு சொல்வியே. இன்னிக்கு என்னோட வந்து என் வீட்டில் தங்கினால் அதைக் கண்டு நீ ரசிக்கலாம். என் வீட்டிலும் யாரும் இல்லாததாலே நீ ப்ரீயாப்   பீல் பண்ணலாம்" 
"ஓகே .. சினிமா தியேட்டர் பக்கம் போயே ரொம்ப நாளாச்சு. ஏதாவது படத்துக்குப் போயிட்டு வீட்டுக்குப் போலாமா? " என்று  ராஜு கேட்க மறுப்பேதும் சொல்லாமல் கிளம்பினான் கிருஷ்ணா.
படம் முடிந்து, இரவு  சாப்பாட்டை முடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பும் போது  மணி பதினொன்றைத் தாண்டியிருந்தது. வீட்டுக்கு சற்று தொலைவிலேயே வண்டியை நிறுத்திஎன்ஜினை ஆப் செய்து விட்டு  டூ வீலரைத் தள்ளிக் கொண்டு நடக்க ஆரம்பித்தான் கிருஷ்ணா. " ஏன் ? " என்று ஆச்சரியக்குறியை வீசிய ராஜுவிடம், "நம்ம வண்டி சத்தம் மத்தவங்க தூக்கத்துக்கு இடைஞ்சலா இருக்கக் கூடாது . அதான் " என்று காரணம் சொன்னான் கிருஷ்ணா.
வீட்டுக் கதவை கிருஷ்ணா திறந்து கொண்டிருந்தபோது, " சாயங்காலம் ஆறு மணிக்கே பொது லைட்டைப் போட்டுட வேண்டியது. ராத்திரி பன்னிரண்டு மணியானாக்கூட அதை ஆப் பண்றது கிடையாது " என்று சொல்வது இருவர் காதிலும் விழுந்தது. அதை தொடர்ந்து "நீங்க ஏன் ராத் தூக்கத்தைக் கெடுத்துகிட்டு அதைப் பத்தி கவலைப் படறீங்க . கரெண்ட் சார்ஜ் பொதுதானே !" என்று பெண் குரல் சொல்வதும், அந்தக் குரலை இடை மறித்து " கரெண்ட் கட் என்கிற ஒரே ஒரு காரணத்தாலே நாட்டில் நிறைய இடங்கள்லே வேலை நடக்காமே இருக்குது. அதைக் காரணம் காட்டி வேலையாட்களை வீட்டுக்கு அனுப்பிடறாங்க. அவனவன் அடுத்த வேளை  சாப்பாட்டுக்கு என்ன வழிங்கிற கவலையில் இருக்கிறான். இங்கே தேவையே இல்லாமல் கரெண்ட் வீணாப் போகுது. பசி பட்டினி நியூஸ்சை  டீவீயில் பார்த்துட்டு "உச்" கொட்டுறதுக்குப் பதிலா நம்மாலே முடிஞ்ச அளவுக்கு கரெண்டை சேவ் பண்ணலாம்தானே?" என்று பதில் சொல்வதும், " ஆமா ... அப்படில்லாம் நாம சேவ் பண்ணிக் குடுத்தா மீட்டிங் அது இதுனு விடிய விடிய விளக்கைப் போட்டுட்டு ஆர்ப்பாட்டம்  பண்ணிட்டு இருப்பானுக..பேசாமல் படுங்க" என்று பெண் குரல் பதில்    சொல்வதும் கேட்டது .    
"நான் சொல்வேனே ஒரு  பிரம்மகத்தி பத்தி ... அதுக்கு இன்னும் தூக்கம் வரலே . பேசறது அதுவும் அதோட வொய்ப்பும்  " என்று ரகசியக் குரலில் சொன்னான் கிருஷ்ணா .
"ரொம்ப இன்ட்ரஸ்டிங்கான கேரக்டரா இருப்பார் போல தெரியுது . இந்த நடு ராத்திரி வேளையில் கூட நாட்டைப் பத்திக் கவலைப் படறாரே " என்று வியப்புடன் சொன்னான் ராஜு.
மறுநாள் காலையில் வீட்டின் முன்பக்கம் ஏதோ சந்தடி கேட்க , ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தான் ராஜு.
வாசலில் இருந்த குழாயில் இரண்டு பெண்களும் ஒரு வயதான பெரியவரும் தண்ணீர் பிடித்துக் கொண்டிருக்கஒருவர் இரைந்து கொண்டு  இருந்தார், "ச்சே .. என்ன சொன்னாலும் புரியாத ஜென்மங்கள் ... நாலு பேர் நடக்கிற பாதையில் தண்ணீரைக் கொட்டி வச்சிருக்கோமே. யாராவது வழுக்கி விழுந்துட்டா என்ன ஆகும் என்கிற ஸ்மரனையே   இல்லாத ஜென்மங்கள். பாத்திரத்தைக் கழுவி தண்ணீ பிடிக்கிறது நல்ல விஷயந் தான் .. அதை உங்க வீட்டிலேயே செய்யலாமே. குழாயடியில் வந்தா செய்யணும் . இதோ வயசான பெரியவர்  நிக்கிறார் ... நடக்கிறச்சே விழுந்துட்டா அந்த வலியும் வேதனையும்  சம்பந்தப் பட்டவங்களுக்குத் தானே தெரியும் . ஒரே ஒரு வார்த்தையில் சாரின்னு சொல்லிட்டு நீங்க போயிடுவீங்க . அட அவரை விட்டுத் தள்ளுங்க. நீங்க ஊத்தின தண்ணியில் நீங்க விழுந்தால் உங்களுக்கும் கஷ்டம்தானே? குழந்தைங்க பெரியவங்க நடமாடுற பொது இடம் இதுங்கிற நினைப்பு எல்லாருக்கும் வரணும்" என்று !
"நீங்க உங்க வேலையை மட்டும் பாருங்க " என்று சொல்லிவிட்டு தண்ணீர்க் குடத்துடன் அங்கிருந்து  போனார்கள் பெண்கள் இருவரும்.
"கத்துதே, அதுதான் நான் சொன்ன ஆள் .. எப்ப பாரு எதிலாவது மூக்கை நுழைச்சு கிட்டு. தண்ணீர் மேட்டர் தான் பிள்ளையார் சுழி. இன்னைக்குப் பூரா நடக்கிற கூத்தை வாட்ச் பண்ணு " என்றான் கிருஷ்ணா.
"நீ இந்த வீட்டை வாங்கி ஒரு வருஷத்துக்கும் மேலே இருக்குமே ?"
"ஆமாம் .. ஆனால் அவர் குடி வந்து ரெண்டு மாசம்தான் ஆகுது . முதலில் அந்த வீட்டை வாங்கியவர் பைனான்ஸ் பிரச்சினையில் வந்த விலைக்கு இந்த வீட்டை விற்று விட்டுப் போயிட்டார். கத்துச்சே, அது ரிடயர் ஆன கேஸ். செட்டில்மெண்ட் பணத்தில் வீட்டை வாங்கிட்டுது .. இப்போ எல்லார் கழுத்தையும் அறுக்குது.  அவரோட யாரும் பேசறது கிடையாது . பஞ்சாயத்துத் தீர்ப்புபடி ஒரு சில குடும்பங்களை ஒரு சில கிராமத்தில் தள்ளி வைப்பாங்களே அந்த மாதிரிதான் இவரை இங்கே வச்சிருக்காங்க . இருந்தாலும் எல்லா விஷயத்திலும் மூக்கை நுழைப்பார்"
"முதலில் குடியிருந்த வீடு எல்லா வசதியோடும் இருந்துச்சே. நீ அங்கே இருந்துட்டு இதை வாடகைக்கு விட்டுருக்கலாமே  ?"
"அதை ஏன் கேட்கிறே ? அங்கே ஒரு ரௌடி குடி வந்து ஆட்டம் போட்டுட்டு இருந்தான். ஏதோ ஒரு அரசியல்வாதிக்கு வேண்டியவனாம் அவன் பேரை சொல்லி இவன் அடிச்ச லூட்டி தாங்க முடியலே . எப்பவும் புல் லோடுதான். வீட்டில் இருக்கிறவங்க வெளியிலே வரவே பயந்தாங்க .அதான்  ஊருக்கு ஒதுக்குப்புறம்னாலும் பரவாயில்லைன்னு இங்கே மாறி வந்துட்டேன் "
இவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போது " மீனு .. மீனு " என்று குரல் கொடுத்தபடி அங்கு கூடையுடன்  மீன் விற்பவர் வந்தார்.
"இப்போ ஒரு சீன்  நடக்கும் பாரு " என்று சொல்லி கதவைத் திறந்து விட்டு வாசலில் வந்து நின்றான் கிருஷ்ணா.
குழாயடியில் கத்திய அதே நபர் வேகமாக வந்து, "ஏய் ...உனக்கு எத்தனை தடவை சொல்லியிருக்கிறேன், வாசலில் நின்னு குரல் கொடுக்கணும் . ஒவ்வொரு வீட்டுக் கதவையும் தட்டி உன்னோட மீன் கூடையை அவங்க மூஞ்சிக்கு நேரா நீட்டக்கூடாதுனு. இங்கே கவுச்சி சாப்பிடாதவங்களும் இருக்காங்க .. ஏன் .. சாப்பிடறவங்களே  கூட ஒருநாள் கிழமைனா அதைக் கையால் தொட மாட்டாங்க. தூக்கு ... கூடையைத் தூக்கிட்டு வாசலுக்கு வா. எனக்கு ஒரு கால் கிலோ குடு " என்றார்.
மீன்காரர் வெளியில் செல்ல, வாசல் கதவை அடைத்து விட்டு உள்ளே வந்தார்கள் இருவரும்.
"இவர் சொல்றதை யாரும் காதிலேயே வாங்கிறது கிடையாது . இது அவருக்குமே நல்லா தெரியும்.  இருந்தும் இந்த மனுஷன் ஏன் இப்படிப் பிராணனை விடறார்னு எனக்குத் தெரியலே "
"கிருஷ்ணா ... நான் ஒண்ணு சொன்னா கோபப்பட மாட்டேதானே ? ராத்திரி நேரத்தில் உன்னோட வண்டி சத்தம் மத்தவங்களை டிஸ்டர்ப் பண்ணக் கூடாதுன்னு வண்டியை ஆப் பண்ணிட்டு அதைத் தள்ளிட்டு வந்து செட்டில் சேர்த்தே நீ. அந்த மனுஷன் மத்தவங்க நல்லதுக்குத் தானே ஒவ்வொண்ணையும் சொல்றார் . ஒருவேளை ரொம்பவும் நல்லவங்களா இருக்கிறது கூட தப்போன்னு தோணுது. ஒருத்தன் கெட்டவனா இருந்தால்தான் மத்தவங்க ஒதுங்கிப் போவாங்கனு இல்லே. ரொம்ப நல்லவனா இருந்தாலும் அவனோடு யாருக்கும் ஒத்துப் போறதில்லே. முன்னே இருந்த இடத்தில் ஒருத்தன் கெட்டவன்னு சொல்லி நீங்க ஒதுங்கிப் போனீங்க. இங்கே நல்ல விஷயங்களை சொல்ற ஒருத்தரை  நீங்க ஒதுக்கி வைக்கிறீங்க .. அவர் சொல்ற விதம் வேணும்னா தப்பா இருக்கலாம் .. அவரோட லாங்குஏஜ் தப்பா இருக்கலாம் ... ஆனால் அவர் சொல்ற எல்லாமே நியாயம்னு எனக்குப் படுது.. நீ என்ன நினைக்கிறே ? " என்று கேட்டபடி கிருஷ்ணாவின் முகத்தைப் பார்த்தான்.
அந்த முகத்தில் ஒரு இனம் புரியாத அமைதி தெரிந்தது. கிருஷ்ணா யோசிக்க ஆரம்பித்து விட்டான் என்பது ராஜுவுக்குப் புரிந்தது .    

No comments:

Post a Comment