Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, October 31, 2014

Scanning of inner - heart ( Scan Report Number - 132 )

      புரியாது ... தெய்வத்தின் திருவுள்ளம் புரியாது !

"செல்வம் , உன்னோட டிரஸ், காஸ்மேடிக் ஐடெம் எல்லாமே எடுத்து வச்சாச்சு. மொபைல் சார்ஜெர் உன்னோட வாலெட்டில் இருக்கட்டும் "
"அதையும் என்னோட டிரஸ் இருக்கிற சூட் கேசில் வச்சிடலாமே. வாலெட்டில் எதையெல்லாம்தான் வைக்கிறது "
"போற இடத்தில் என்ன மாதிரியான வசதி இருக்கும்னு சொல்றதுக் கில்லே. ரூம்க்கு வரமுடியாமல் ஷூட்டிங் ஸ்பாட்டில் அதிக நேரம் அதிக நாள் தங்கும்படி ஆயிடுச்சுன்னா மொபைலில் சார்ஜ் போய் நீ டென்ஷன் ஆயிடுவே. அதான் .."
"கோயில் பிரசாதம் எப்பவும் உன்னோட பர்ஸில் இருக்கட்டும்"
"பிரசாதமா ? சுண்டல் சர்க்கரைப் பொங்கலா ? பர்சிலா ?" என்று அதிர்ந்து போய்க் கேட்டான் செல்வம்.  
"பிரசாதம்னா சாப்பிடற ஐட்டெம் மட்டுந்தானா ? நான் சொன்னது அம்பாள் குங்குமத்தை. எந்தக் காரியத்தைத் தொடங்கும் முன்னாலேயும் அதை நெத்தியில் இட்டுக்கோ. பிரச்சனைன்னு  வரும்போது அம்பாளை மனசில் நினைச்சுகிட்டு குங்கமத்தைத் தொட்டு பிரார்த்தனை பண்ணு. எல்லாம் நல்லபடியாக நடக்கும் " என்று சொன்ன தேவயானையின் வாய் "புரியாது ... புரியாது ... வாழ்க்கையின் ரகசியம் புரியாது ... புரிந்து கொண்டால் பின் வாழ்வேது " என்ற பாடல் வரிகளைப் பாடியது.
"நான் நினைக்கிறபடியே  எல்லாம் நல்லபடியாக நடந்து முடிந்தால் அம்பாளுக்கு அட்டிகை பண்ணிப் போடணும் "
"நல்லபடியாக நடக்கும் . நம்பிக்கையை மட்டும் விட்டுடாதே. இத்தனை வருஷம் நீ உழைத்த உழைப்பு. அலைந்த அலைச்சல் வீண் போகாது"
"உண்மைதான்ம்மா. அக்ரிமெண்டில் ஷைன் ஆகிறவரை இந்த ஆபர் எனக்குக் கிடைக்கும் என்கிற நம்பிக்கை எனக்குக் கொஞ்சமும் இல்லே. எவ்வளவு பெரிய கம்பெனி. என்னை நம்பி ஒரு பொறுப்பைக் கொடுத்திரு க்குது. அதை நினைச்சா   சந்தோஷமா இருக்குது . அதே சமயம் பயமும் இருக்குது"
"என்ன பயம் கண்ணா "
"கம்பெனி ஒனெர் ராகவன் ரொம்ப நல்லவர்தான். ஆனால் அவரோட அப்பா பேச்சை தட்ட மாட்டாராம் "
"நல்ல விஷயந்தானே "
"அவர் அப்பா சரியான பழைய பஞ்சாங்கமாம் "
"அப்படினா ?"
"எதுக்கும் சகுனம் பார்ப்பாராம். ஒரு விஷயத்தைத் தொடங்கறப்போ ஒரு சின்ன தடை வந்தாலும், தொடங்க நினைச்ச காரியத்தை அப்படியே மூட்டை கட்டி வச்சிடுவாராம். அதனாலே எத்தனை லட்சம் நஷ்டம் ஆனாலும் கவலைப்பட மாட்டாராம். பல கோடிகளை தொலைக்கிறதை விட சில லட்சம்களை இழப்பது கஷ்டமில்லேனு சொல்ற ஆளாம்.  அதை 
அப்படியே வேத வாக்காக எடுக்கிறவர் ராகவன். சில விஷயங்களில் அவருக்கு அப்படியொரு மூட நம்பிக்கை இல்லாட்டாலும், அப்பாவுக்காக தன்னோட முடிவை மாத்திக்குவாராம் "
"இதையெல்லாம் உனக்கு சொன்னது யார் ?"
"அந்த சினிமாக் கம்பெனி ப்ரொடக்சன் மானேஜர்தான். என்னை எப்பவும் எச்சரிக்கையாக இருக்க சொன்னார்"
"சரிப்பா . நீ பார்த்து கவனமா நடந்துக்கோ. எதுக்கும் கைவசம் மாத்திரை மருந்து வச்சுக்கோ"
"எனக்கு உடம்புக்கு ஒண்ணுமில்லே .. நல்லாத்தானே இருக்கிறேன் "
"இருக்கிறே சரி. நீ போறது எந்த வசதியுமே  இல்லாத, விவசாயத்தை மட்டுமே நம்பி இருக்கிற கிராமம்னு சொல்றே. ராத்திரி ... நேரங் கெட்ட நேரத்தில் ஒரு தலை வலி, வயிற்று வலின்னா என்ன செய்வே ?"
"அப்படி எதுவும் ஆகாதும்மா " என்று செல்வத்தின் வாய் வார்த்தைகள் வெளிப் பட்டாலும், 'எப்படியும் இருபது நாட்களுக்குள் படத்தை முடித்து விட வேண்டும். லொகேஷன் பார்த்துவிட்டு வந்த அலெக்ஸ், 'அங்கே குடிக்க தண்ணீ கிடைக்கிறதே கஷ்டம் போலிருக்குன்னு சொன்னான். அந்த மாதிரி இடந்தான் கதையமைப்புக்கு சூட் ஆகும். என்ன கஷ்டம் வந்தாலும் தாங்கிக் கொள்ள வேண்டும்.. அதைவிட முக்கியம் அங்கு நடக்கும் ஒவ்வொரு அசைவையும் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை கம்பெனிக்கு தெரிவித்துக் கொண்டே இருக்க வேண்டும். இது என்னோட முதல் அனுபவம் .. எனக்குக் கிடைத்த முதல் வாய்ப்பு .. இதைத் தக்க வச்சுக்கணும்" என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டான் செல்வம்.  
சற்று நேரத்தில் மலைக் கிராமத்துக்குப் பயணத்தைத் தொடங்கியது படப் பிடிப்புக் குழு.
மலைக் கிராமத்தில் .....
"சாமீ ... சாமி ..."
"யாரு ... பாவாடையா ? என்னப்பா ? என்ன சேதி ?" என்று கேட்டபடி தட்டுத் தடுமாறியபடி வெளியில் வந்தார் வயதான  பெரியவர் ஒருவர்.
"சாமிக்கு உடம்புக்கு எதாச்சும் நோவா ? இப்பத்தான் எழுந்திருச்சு வாராப்லே தோணுது "
"அதெல்லாம் ஒண்ணுமில்லே . இது வயிரம் பாய்ஞ்ச உடம்பு .. மழை தண்ணீ இல்லேங்கிற  கவலையில்  ராத் தூக்கம் போச்சு .. அதான் பகலில் கண் அயந்துடுதேன் "
"சாமி, நம்ம ஜனங்க எல்லாரும் வயக்காட்டுலே வரப்பு  மேட்டுலே இருக்காக. தலைவரையா நீங்க ... உங்களைத்தான் எதிர்பார்த்து அங்கே எல்லாரும் காத்துக் கிடக்காக .. சாமி .. வானத்தைப் பார்த்தீகளா ?" என்று பாவாடை கேட்க, வானத்தை ஏறிட்டுப் பார்த்த தலைவர், " ஓய் .. ஆத்தா கண்ணைத் தொறந்துட்டா" என்று பரவசத்துடன் கூறினார் 
"வானம் இருட்டிட்டு வருது ... மழைத்துளி மண்ணுலே விழலியே "
"விழும்.... மேகத்தைக் கொண்டு வந்தவ மழையைக் கொண்டுவர மாட்டாளா ? ஏழு போகம் வெள்ளாமை பொய்ச்சுப் போய் வாழவும் வழி இல்லாமே சாகவும் வழி தெரியாமே தவிச்ச தவிப்பு  ... அப்பப்பா... நம்ம எதிராளிக்குக் கூட வரக்கூடாது. வடிச்ச கண்ணீர் என்ன .. பண்ணின பூசை என்ன.. உயிர்ப் பலி கொடுத்தாதான் இந்தப் பூமியிலே மழைத்துளி விழும்னா அதைத் தர நான் தயார்னு  போட்டி போட்டுட்டு வந்த உசிர் எத்தனை எத்தனை ! ஒரு வழியா ஆத்தா மனசு இறங்கிட்டா.. அடியே .. செல்லாயி... நான் வரப்புக்குப் போறேன் . பூசை சாமானை எடுத்துட்டு சட்னு வந்து சேரு " என்று வரப்பை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள் தலைவரும் பாவாடையும்..
கிராமத்திலுள்ள ஒட்டு மொத்த உயிரும் அங்கே பரவசத்துடனும்  படபடப்புடனும்  வானத்தைப் பார்த்தபடி நின்று கொண்டிருந்தது. "அடடா. நண்டிலிருந்து நட்டுவாகாளி   வரை எல்லாரும் இங்கேதான் இருக்கீகளா?" என்று கேட்ட தலைவரின் குரலில் அவரது வயதையும் மீறின உற்சாகம் தோன்றியது.
இந்த சமயத்தில் படப் பிடிப்புக் குழு அந்த கிராமத்துக்குள் நுழைந்தது.
"செல்வம் ஸார். நாம வர்றதுக்கு முன்னாலேயே நாம வரப் போற விஷயம் இங்கே எல்லாருக்கும் தெரிஞ்சிட்டு போலிருக்கு" என்று உற்சாகக் குரல் கொடுத்தான் டிரைவர் அருகில் உட்கார்ந்திருந்த அலெக்ஸ்.
"எதை வச்சு சொல்றே ?"
"அங்கே பாருங்க ..  வரப்பு ஓரத்திலே .. ஊரே கூடி நிக்குது போலிருக்குது . எப்படி அதுக்குள்ளே நாம வர்ற விஷயம் இவங்களுக்குத் தெரிய வந்தது .அவங்களைக் குஷி படுத்துற மாதிரி அவங்களை வச்சு ரெண்டு ஷாட் இங்கே எடுத்துட்டுப் போலாமா ?"
"ஓகே .. டிரைவர் வண்டியை அந்த கும்பல் இருக்கிற இடத்திலே நிறுத்துங்க" என்றான் செல்வம் 
வண்டியிலிருந்தவர்கள் கிராமத்து மக்கள் அருகில் செல்ல, " தம்பிகளா .. நீங்க .." என்று தலைவர் தொடங்கும்போதே, "நாங்க படம் பிடிக்க வந்தோம் " என்றான் அலெக்ஸ்.
"அடப் பாருடா ... நம்ம கிராமத்திலே இன்னைக்கு நடக்கிற அதிசயம் வெளி ஊருக்கெல்லாம் தெரிஞ்சிட்டு போலிருக்கு ... படம் பிடிக்கவே வந்துட்டாகளே... ஆத்தாவோட கருணையே கருணை ... அவ மனசு வச்சா எதையும் செய்வா " என்று செல்லாயி சந்தோசக் குரலில் சொன்னாள்.
"மழை ..." என்று பெரியவர் சொல்ல வாயெடுக்கும் முன்னரே, " காரில் வர்றச்சே நாம வானத்தைக் கவனிக்கவே இல்லையே.  இந்தப் பாழாய்ப் போற மழை இப்பத்தானா வந்து தொலையணும்" என்று செல்வம் சொல்வதைக் கேட்டு அதிர்ந்து போன மக்கள், ஒரு சில நொடிகளிலேயே சுய நினைவுக்கு வந்து, கைகளில் கிடைத்த பொருட்களை எடுத்துக் கொண்டு குழுவைத் தாக்கத் தொடங்கினார்கள். இவர்கள் எதற்காகத் தங்களைத் தாக்குகிறார்கள் என்பது தெரியாத குழுவினர் உயிருக்குப் பயந்து ஓட்டம் பிடித்துக் கொண்டிருந்தனர். அந்த சூழ்நிலையிலும், கடமை தவறாத ஒரு ஊழியர், " ஸார் .. நாங்க மலைகிராமத்துக்கு வந்து சேர்ந்துட்டோம். வந்து சேருகிற வரை எந்த பிரச்சினையும் இல்லே .. ஆனா ஊருக்குள் நுழைறதுக்கு  முன்னாடியே ஒரு கும்பல் எங்களை அடிச்சு நொறுககுது. என்னத்துக்காக எங்களை துரத்துறாங்கன்னு எங்க யாருக்குமே தெரியலே .. ஸார் .. உயிர் சேதம் எதுவும் இல்லே ...ஆனா காமிரா .... காமிரா ... கார் ... வேன் ...." என்று கம்பெனிக்கு தகவல் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, "போதும்... எல்லாத்தையும் மூட்டை கட்டிட்டு நீங்க பஸ்ஸில் வந்து சேருங்க" என்ற செய்தியுடன் மறுமுனை யில் தொடர்பை  "கட் " செய்தது சினிமா ப்ரொடக்சன் கம்பெனி.   

No comments:

Post a Comment