Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, July 26, 2013

Scanning of inner - heart ( Scan Report Number - 80 )

    இவர்கள் மாறுபட்டவர்கள் / வேறுபட்டவர்கள் !

" ஹேமா, நம்ம வசந்தி வந்திருக்கிறா. மெயின் கேட் பக்கம் நிற்க்கிறா. கூடவே அவளோட கெஸ்ட்ம் வந்திருக்கிறாங்களாம். அவங்களைப் பார்க்க நம்மள கீழே வரச் சொல்றா. வாடீ, அந்தக் குட்டீஸைப் பார்த்துட்டு வந்துடலாம் " என்று பரபரத்தாள் பிரியா 
" மேலே வர சொல்றதுதானே "
" அவ கீழே வரச்சொல்றா. நீ வர்றியா , இல்லே நான் போகட்டுமா ? "
" இல்லேடி, இந்த ஸ்டேட் மெண்ட் இப்பவே பிரிண்ட் எடுத்தாகணும். அதான் யோசிக்கிறேன். ஒரு ரெண்டு நிமிஷம்  .. சரி.. வா ஓடிப் போயிட்டு வந்துடலாம் " என்றாள் ஹேமா 
இருவரும் மெயின் கேட் அருகில் வந்தார்கள். வசந்தியுடன், கிட்டத் தட்ட பத்து வயதில் இரண்டு சிறுமிகள் நின்று கொண்டிருந்தார்கள் 
" ஹாய் வசந்த், ஒரு வாரமா ஒரே கொண்டாட்டம், கும்மாளம்  தானா ? " என்றாள் பிரியா 
"ஆமாண்டி,இந்த  ஒரு வாரமா மகாபலிபுரம், வண்டலூர்,மெரினா அது இதுன்னு ஒரே ரௌண்ட்ஸ்தான். பீட்ஸா,சாட் ஐட்டெம், பைவ் ஸ்டார் ஹோட்டல் மீல்ஸ் என்று திணற அடிச்சிட்டேன் " என்றாள் வசந்தி 
"ஹாய் குட்டீஸ்" என்று சிறுமிகளின் கன்னத்தைக் கிள்ளிய ஹேமா, " டீ வசந்தி, மேலே அர்ஜெண்ட் வொர்க் இருக்கு நான் போறேன். உன்னோட கெஸ்ட்டைப் பார்க்க ஓடி வந்தேன். நான் மேலே போறேன் " என்றாள்
" ஓடி வந்தேன்னு நீ சொன்னதும் எனக்கு டிவியில் வரும் ஒரு விளம்பரம் தான் ஞாபகத்துக்கு வருது . அந்த ஆட் ரொம்ப நல்ல இருக்குடி. PERK BAR ஆட் அது. லவர்ஸ் ரெண்டு பேர் பேசிக்கிறாங்க . அந்த கேர்ள், நாம ஓடிப் போய் கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொல்ல, அந்த பாய், அதை கற்பனை பண்ணிப் பார்க்கிறான். பேண்ட் வாசிக்கிறவங்க, சாஸ்திரிகள், கோமகுண்டம் எல்லாம் காரில் வர . இவங்க ரெண்டு பேர் மட்டும் கல்யாண ட்ரஸில் ஓடியே வர்றாங்க. கல்யாணம் பண்ணிக்கிறாங்க. அந்த ஆட் ரொம்ப நல்லா இருக்கு. மிஸ் பண்ணிடாமே பாருங்க . நம்ம பிரண்ட்ஸ் சர்கிளுக்கும் சொல்லுங்க " என்றாள் வசந்தி 
" நீ ஆபீஸ்க்கு எப்ப வர்றதா ஐடியா ? "
" இந்த கேர்ள்சை அவங்க வீட்டில் கொண்டு போய்  சேர்த்துட்டு உடனே கிளம்பி வந்துடுவேன். இங்கே வந்ததும் ஒரு நாள் ரெஸ்ட் . அப்புறம் வழக்கம் போல ஆபீஸ், ப்ராஜெக்ட் , வீடு, அவ்வளவுதான் "
" சென்னையைப் பத்தி குட்டீஸ் என்ன சொல்றாங்க ?" என்று ஹேமா கேட்க " ஒரு வாரமா அவங்களுக்கு நான் ராயல் ட்ரீட் கொடுத்தேன்   " 
என்றாள் வசந்தி 
" வசந்தி நீ கிரேட் கண்ணு. உன்னோட திங்கிங்க்ஸ் எப்பவுமே ரொம்பவும் வித்தியாசமா இருக்கு. நாங்களும் எவ்வளவோ விஷயங்களைப் பார்க்கிறோம். கேட்கிறோம் . ஆனால் எதையும் செய்து பார்க்கணும்னு தோணறதில்லே. எந்த ஒரு வசதியுமே இல்லாத ஒரு கிராமத்தை தேடிக் கண்டு பிடிச்சு  ......"
"ஏய், ஸ்டாப், ஸ்டாப் .. என்ன நீ சொல்றே ? எந்த ஒரு வசதியுமே இல்லாத ஒரு கிராமத்தை தேடிக் கண்டு பிடிக்கனும்கிற அவசியமே இல்லே. நம்ம சென்னையிலேயே அந்த வசதி இல்லே, இந்த வசதி இல்லேன்னு சாலை மறியல் நடத்தறதை தினமும் டீவி நியூஸ்லே பார்க்கிறோம்தானே ? " என்று ஹேமா கேட்க , " இந்தா , உனக்கு அர்ஜென்ட் வொர்க் இருக்குனு சொன்னேதானே , பிறகு ஏன் நிற்கிறே? ஓடுடி " என்று துரத்தினாள் பிரியா  " ஏதோ சொல்ல வந்தியேடீ , சொல்லி முடிச்சுடுடீ  , அதைக் கேட்டுட்டே போறேன், இல்லாட்டி எனக்கு வேலை ஓடாது  " என்றாள் ஹேமா.
"கிராமத்திலிருந்து ரெண்டு குழந்தைகளை சென்னைக்கு  அழைச்சிட்டு வந்து அவங்களுக்கு  வேண்டிய வசதியை செய்து கொடுத்து, அவங்க சந்தோசத்தைப் பார்த்து நீ சந்தோசப் படறே. ரியலி யூ ..." என்று சொல்ல வந்த பிரியாவை ஹேமாவின் குரல் தடுத்து நிறுத்தியது 
" ஏய், குழந்தைங்க எப்படி பீல் பண்றாங்கன்னு அவங்ககிட்டே கேளுடீ"
"ஓகே... குட்டீஸ், நல்லா என்ஜாய் பண்ணுணீங்களா ?  சென்னையை விட்டுப் போறோமேன்னு பீல் பண்றீங்களா  " என்று ஹேமா கேட்க சிறுமிகள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்  
"கமான் பேபீஸ், என்ன தயக்கம்?உங்க மனசில் என்ன  நினைக்கிறீங்க ? எதுவானாலும் நீங்க ரெண்டு பேரும் தைரியமா சொல்லலாம்" என்று உற்சாகப் படுத்தினாள் வசந்தி 
" அக்கா, உங்களையெல்லாம் பார்க்கப் பாவமா இருக்கு அக்கா " என்ற குரல் கோரஸாகவெளிப் பட்டது  
" ஏனம்மா? "
" பிறகு என்னக்கா, வீட்டில் கூட ஒருத்தங்க முகத்த ஒருத்தங்க பார்த்துப் பேச முடியாத படிக்கு ஒரே ஓட்டமும் நடையுமா இருக்கீக. காத்தைக் காசு குடுத்து வாங்குதீக. குடிக்கிற தண்ணியை காசு கொடுத்து வாங்குதீக. ஒரு வாரத்துக்கு சேர்த்து  காய் வாங்கி அதை ஐஸ் பெட்டியில் வைக்கீக. மறுநா எடுத்துப் பார்க்கிறப்போ அது விரைச்சுபோய் நிக்குது. ரெண்டு மூணு நேரத்துக்கு சேர்த்து சமையலைப்  பண்ணி ஐஸ் பெட்டிக்குள்ளே வைக்கீக. காய்ஞ்சு போன ரொட்டித் துண்டை எங்க ஊரில் நாய்க்கும் காக்கைக்கும் தூக்கிப் போடுவோம். அந்த ரொட்டித் துண்டை  ஓட்டல்லே போய் ரசிச்சு வேறு சாப்பிடுதீக. ஒரு வாளித் தண்ணிய மொண்டு மொண்டு குளிக்கீக. அக்கா , நீங்க எல்லாரும் எங்க ஊருக்கு ஒருவாட்டி வரணும்க்கா. மத்தியான சாப்பாட்டுக்கு நமக்கு வேணும்கிற காய்கறி யை நாம அன்னன்னிக்கு தோட்டத்துக்குப் போய் வாங்கியாறலாம். பம்ப் செட்டில் போய்க் குளிக்கலாம். ஆத்தங்கரைக்குப் போய் முங்கிக் குளிக்கலாம். வேலை வெட்டிக்குப் போனவக பள்ளிக்கூடம் போனவக எல்லாருமே சாயங் காலம் வந்துடுவாங்க. வீட்டுத் திண்ணையிலோ இல்லாட்டி மரத்தடியிலோ உட்கார்ந்து நாம ஊர்க் கதை பேசலாம். சினிமாப் பாட்டுப் படிக்கலாம்  விடுகதை போட்டு விளையாடலாம் பௌர்ணமி யன்னிக்கு நிலாவைப் பார்த்துகிட்டே கோரைப் பாயில் படுத்துத் தூங்கிறது எம்புட்டு நல்லா இருக்கும் தெரியுமா ? அக்கா உங்களுக்கெல்லாம் நம்ம வீட்டு வாசலைத் தேடி வர்ற  நிலாவைப் பார்க்கிறதுக்காவது நேரமிருக்கா? அக்கா நீங்க வசதியை அனுபவி க்கிறீங்க. இயற்கையான வாழ்க்கையை இழந்து நிக்கிறீங்க. நிரந்தரமா இல்லாட்டியும், ஒரு மாத்தத்துக்காகவாவது   நீங்க எங்கஎல்லாரும்  ஊருக்கு வரணும் . வந்து ஒரு வாரம் சந்தோசமா இருந்துட்டுப் போகணும் "என்று சொல்லிக் கொண்டே போக , தோழியர் மூவரும் வாயடைத்துப் போய் நின்றார்கள்  

Friday, July 19, 2013

Scanning of inner - heart ( Scan Report Number - 79 )

                                சமாளி- FICATION ? !
" டேய், ராஜேஷ் " என்று கத்திய படியே அறைக்குள் நுழையப்போன விசுவை ஒரே சமயத்தில் நாலு கரங்கள் வெளியே இழுத்து வந்தன
" டேய் என்னடா இது ? " என்றபடி தன் மீது விழுந்த கரங்களிலிருந்து தன்னை  விலக்கிக் கொண்டு கோபமாகப் பார்த்தான் விசு 
" மச்சி,  " தலை " இப்போ செம கடுப்பிலே இருக்கு. இப்போ போய் நீ மாட்டினே, மவனே நீ பொணம்தான் "
" அவனுக்கு என்னடா இப்போ பிரச்சினை ? எல்லாம் நல்லாப் போயிட்டு இருக்குதானே ? "
" புதுசா ஒரு பிரச்சினை முளைச்சிருக்குடா ? "
" என்ன ? " என்று பதறிப் போய்க் கேட்டான் விசு 
" நம்ம ஏரியா மெயின் ரோட்டில், லெப்ட் சைடில் பாதாள சாக்கடைக்கு குழி தோண்டற வேலை இப்போ ஆரம்பிச்சிருக்குடா "
" நல்ல விஷயம்தானே ! அதுக்கு இவன் ஏன் டென்சன் ஆகணும் ? "
" சொல்றதை முழுசும் கேளு. இடையிலே வாயைத் திறந்தே, மவனே நீ காலிதான் "
" சரி சொல்லு .... இதை சொல்ல வாயைத் திறக்கலாம்தானே ? "
"குழி வெட்டற வேலை ஆரம்பிசிட்டதாலே, விழாத்தலைவர் வர்ற வண்டி நம்ம ஏரியா உள்ளே வர முடியாது. வண்டியை ஓரம் கட்டிட்டு மெயின் ரோட்டிலிருந்து நடந்துதான் உள்ளே வரணும். நம்ம ஏரியா லட்சணம் நமக்கு தெரிஞ்சதுதானே, ஒரே குப்பையும் கூளமும், மேடும் பள்ளமும். அதை சரி பண்ணணும்னு  சம்பந்தப்பட்ட ஆபீசரைப் பார்த்தால் சரியான ரெஸ்பான்ஸ் இல்லே. சரி , நாமளே யாராவது ஆளை வச்சு சரி பண்ணலாம்னு பார்த்தா, ரெண்டு தெருவை சுத்தம் பண்ண நாலாயிரம் ரூபா கேட்கிறானுக, கொஞ்சம் கூட மன சாட்சியே இல்லாமல் " என்று பாலு சொல்ல, " நமக்கு தேவைங்கிறப்போ பணத்தைப் பார்த்தா முடியுமா ? " என்று கோபமாகக் கேட்டான் விசு 
" யப்பா , தர்ம தொரை , நீ இப்போ தர்ம அடி வாங்கப் போறே "
" ஏன்டா ? "
"நமக்கு கலெக்சன் என்னன்னு உனக்கு தெரியுமா? எவ்வளவு செலவுன்னு தெரியுமா ? "
"டேய் , அதைப் பத்தி பங்க்க்ஷன் முடிஞ்சப்பறம் பேசிக்கலாமே "
" மச்சி, நாம முதல் முறையா இந்தக் கபடிப் போட்டியை நம்ம ஏரியாவில் நடத்தறோம். இந்தமாதிரி விழாவுக்கு ஏற்பாடு பண்றதில் யாருக்கும் எந்த அனுபவமும் கிடையாது. ஏதோ ஆசைப் பட்டோம், ஆரம்பிச்சோம். அதில் என்னென்ன மாதிரி ரிஸ்க் இருக்குனு இப்போதானே நமக்கு  பிராக்டிகலா தெரியுது. இப்போ நம்ம கையிருப்பு வெறும் எழுநூத்து அம்பது ரூபா. இப்போ தெருசுத்தம் பண்ண திடீர்னு நாலாயிரம் ரூபாய்க்கு எங்கேடா  போறது.  நம்ம ஏரியா ஆளுங்க , நம்ம வீட்டு ஆளுங்கன்னு ஒருத்தர் பாக்கி இல்லாமே எல்லார் கிட்டே இருந்தும்  டொனேசன் வாங்கியாச்சு. இனிமே கழுத்திலே கத்தி வச்சு கேட்டாக்கூட எவனும் சல்லிக் காசு தர மாட்டான். இவ்வளவு ஏற்பாடும் பண்ணிட்டு தலைவரை இந்தக் குப்பைக்குள் நடத்திக் கூட்டிட்டு வர முடியுமான்னு ராஜேஷ் பீல் பண்றான் " என்று விளக்கினான் தாஸ்
சற்றுநேரம் யோசனையில் ஆழ்ந்தான் விசு 
" டேய், கையிருப்பு எவ்வளவுன்னு சொன்னே ? "
" 750 ரூபா "
" அதைக் குடுங்கடா "
" எதுக்குடா ? "
" கேள்வி கேட்காமே பணத்தைக் குடுங்கடா. நாளைக்கு தலைவர் வர்றப்போ நம்ம ரோடு கெட் - அப்பே மாறியிருக்கும் "
" என்னடா செய்யப் போறே ? "
"அதெல்லாம் உனக்கெதுக்கு ? நாளைக்கு நீங்க எதிர் பார்க்கிறபடி சுத்தமா இருக்கும் ரோடு "
" டேய் , எங்காவது தலைமறைவாயிட மாட்டியே ? "
"என்னடா பேசறே ? " என்று தாஸை அடக்கிய ரமேஷ், " டேவிட், கையிருப்பு பணத்தை விசுகிட்டே கொடுடா"என்று சொல்ல " இனிமே நம்ம  ரோடு மெயிண்டனன்ஸ் என் பொறுப்பு " என்று சொல்லிய விசு பணத்துடன் அங்கிருந்து பறந்தான்
இந்த பணத்தை வைத்துக் கொண்டு இவன் என்ன பண்ணப் போகிறான் என்ற கேள்வி எல்லார் மனதிலும் இருந்தாலும், எப்படியோ காரியம்  ஆனால் சரி என்ற எதிர் பார்ப்பும் இருந்தது
மறுநாள் காலை ...... நண்பர்கள் குழாம் விழா ஏற்பாட்டில் மும்முரமாக இருக்க, தெரு சுத்தம் செய்யும் வேலை ஒரு புறம் மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. " எப்படிடா ? " என்று நண்பர்கள் குழாம் கண்களாலேயே கேள்வி கேட்டுக் கொண்டாலும், அதைப் பற்றி நின்று விசாரிக்க யாருக்கும் நேரமும் பொறுமையும் இல்லை
சிறிது நேரத்தில் அந்த ஏரியா பரபரப்படைந்தது. விழாத் தலைவரை மெயின் ரோட்டிலிருந்து அழைத்து வந்து கொண்டிருந்தது விழா ஏற்பாடுக் கமிட்டி. வண்ணப் பூக்களை அள்ளி வீசியது போல தெரு முழுக்க வியாபித்திருந்த கலர்க் கோலங்களைக் கண்டு பிரமித்துப் போனார் தலைவர். "பார்த்து வாங்கப்பா . கஷ்டப்பட்டு போட்டிருக்காங்க. யாரும் அதுமேலே ஏறி நடந்துடாதீங்க" என்று தன்னுடன் வந்தவர் களுக்கு எச்சரிக்கை செய்தபடி, தன்னுடைய வேஷ்டி முனை பட்டு கோலம் கலைந்திடாதபடி வேஷ்டியைத் தூக்கிப் பிடித்தபடி நடந்து வந்தார் தலைவர் 
தலைவர் மேடையேறிய சிறிது நேரத்திலேயே கையில்  ஜிகுஜிகு பேப்பர் சுற்றிய கிப்ட் பாகெட்டுகளை தூக்கிக் கொண்டு ஓடி வந்தான் விசு 
" என்னடா இது ? எப்படிடா இதெல்லாம் ? " - வியந்து நின்றது விழா ஏற்பாட்டுக் குழு 
"முதல், இரண்டு , மூன்றாம் பரிசுன்னு மூன்று பரிசுகள் இந்த பாக்கெட்டில் இருக்கு. யார் யாருக்கு கொடுக்கணும்கிற விவரம் இதில் இருக்கு. விழா முடிந்து நன்றி சொல்லுவதற்கு முன்னாடி இந்த மூன்று லேடீஸ்ஸைக் கூப்பிட்டு தலைவர் கையாலேயே இந்த பரிசை அவங்க கிட்டே கொடுக்க சொல்லுங்க. நீங்க கொடுத்த 750 ரூபாயில், பேலன்ஸ் 150 இதோ இருக்கு, பிடியுங்க " என்றான் விசு 
" எப்படிடா இதெல்லாம் ? "
"ரொம்ப சிம்பிள்டா, இங்கிருந்து போனதும் எங்க அம்மா, தங்கைங்க கிட்டே,"நாளைக்கு ஒரு கோலப் போட்டி நடக்கப்போகுது. ஆனா, அதைப்  போட்டின்னு வெளியில் சொல்லாமல் ரொம்ப சஸ்பென்ஸ்ஸா நாங்க வச்சிருக்கோம். எந்த வீட்டு வாசல் சுத்தமா தெளிச்சி கிளிச்சு, கோலம் போட்டு ரொம்ப அழகா இருக்கோ, அந்த வீட்டுக்கு ப்ரைஸ் உண்டுன்னு ஒரு கதை விட்டேன். இந்த விஷயத்தை யாருக்கும் சொல்ல வேண்டாம் , ரகசியமா இருக்கட்டும்னு என் தங்கைகிட்டே சொன்னேன். அவகிட்டே ஒரு ரகசியம் சொன்னா , அது தினத்தந்தி ஹெட் லைன் நியூஸ் மாதிரி. அவ வீக்னெஸ் எனக்கு தெரியும்.  அதான் அப்படி சொன்னேன். நான் எதிர்பார்த்தபடி வேலை முடிஞ்சு போச்சு. அவங்க எதிர்பார்ப்புபடி பரிசு கொடுத்திடப் போறோம் "  என்று விசு, கேஷுவலாக சொல்ல " கேடிடா மாப்பிள்ளை நீ " என்று அவன் முதுகை தட்டிக் கொடுத்தன சில கரங்கள்.
" மச்சி, பாக்கெட் உள்ளே ஏதாவது இருக்குதானே ? " என்று சந்தேகக் கேள்விக் கணை தொடுத்தான் தாஸ் 
" இருக்குடா, 300, 200, 100 ன்னு மூன்று பிளாஸ்டிக் பான்சி ஐட்டம் இருக்கு. நாளைக்கு என் செலவில் கோலம் போட்ட எல்லாருக்கும் 5 ஸ்டார் சாக்கலேட் ஒன்னு குடுத்துடுவேன் " என்று விசு சொல்ல, அவனை கட்டி அனைத்துக் கொண்டு திக்கு முக்காட வைத்தது விழா ஏற்பாட்டுக் குழு. 


Friday, July 12, 2013

Scanning of inner - heart ( Scan Report Number - 78 )

                ஆறுதலா ஒரு நாலு வார்த்தை ...

" என்னங்க இது ! டூர் முடிஞ்சு 20 நாள் கழிச்சு வீட்டுக்குள் நுழையறீங்க. உங்களைப் பார்க்காமே குழந்தைங்க ஏங்கிப் போய் இருக்காங்க. இப்ப அவங்க ஸ்கூல் விட்டு வர்ற நேரம். வீட்டுக்குள் வந்ததுமே வெளியில் போயிட்டு வரேன்னு காலில் சக்கரத்தைக் கட்டிக்கிட்டு பறக்கறீங்க. மொதல்லே நீங்க போய் கைகால் அலம்பிட்டு வேறே டிரஸ் மாத்துங்க. குழந்தைங்க வீட்டுக்கு வரும் போது இப்படி கசங்கின ட்ரஸ்ஸும் கலைஞ்ச தலையுமா நிக்காதீங்க " என்று கடிந்து கொண்டாள் பார்வதி.
"இல்லேடி, நம்ம வீட்டுக்கு வருவாரே என்னோட வேலை பார்க்கிற ராஜா ராம். அவருக்கு திடீர்னு உடம்புக்கு முடியாமேப் போய், உடனடியா ஓபன் ஹார்ட் சர்ஜெரி பண்ற அளவுக்கு ஆயிடுச்சாம் ? " என்றார் கேசவன்.
" எப்போங்க ? " என்று பதறிப் போய்க் கேட்டாள்   பார்வதி 
"நான் இங்கிருந்து கிளம்பிப் போன மறுநாள் இப்படி ஆகியிருக்கு. சுப்பு மணி  எனக்கு போன் பண்ணி விஷயத்தை சொன்னார். ராஜாராம் சார் இந்த ஏரியாவிலிருந்து வீடு மாற்றி வில்லி வாக்கம் பக்கம் போயிட்டாரே. அது ஒரு மூலை. நம்ம வீடு ஒரு மூலை. அவர்  ராமச்ச்சந்ராவிலே   அட்மிட் ஆகியிருக்காராம்.இதுன்னா நமக்கு ரொம்பப் பக்கமாப் போயிடும். அதான் நான் ஆஸ்பத்திரிக்குப் போய் அவரைப் பார்த்திட்டு ஆறுதலா   ஒரு நாலு வார்த்தை பேசிட்டு வந்திடறேன். போயிட்டு வந்து ட்ரஸ் மாத்திக்கிறேன் " என்று சொல்லிவிட்டு டூர் வீலரில் பறந்தார் கேசவன்.

ஆஸ்பத்திரியில் 

" சிஸ்டர், என்னை நாளைக்கு வீட்டுக்கு அனுப்பிடுவீங்கதானே ? " என்று மெல்லிய குரலில் கேட்டார் ராஜாராம் 
" விசிட்டர்ஸ் ஹவர்ஸ் முடிஞ்சதும் டாக்டர் வருவார். உங்களை செக் பண்ணிட்டு நீங்க எப்போ போகலாம்னு சொல்வார். ஏன் ஸார், இங்கே உங்களுக்கு ஏதாவது அசௌகரியம் இருக்கா ? "
"நோ, சிஸ்டர்  நோ,  நாட் அட் ஆல்.  சிஸ்டர், எனக்கு ரொம்பவும் சின்ன  வயசில்  இருந்தே ஆஸ்பத்திரி, மருந்து மாத்திரைன்னா ரொம்ப பயம். வேறு யார் கையிலாவது ஊசி ஏற்றிக் கொண்டிருந்தாலும் சரி, அதை நான் பார்க்க மாட்டேன் . அந்த இடத்தை விட்டே ஓடிடுவேன். பயம் காரணமாகவே எனக்கிருந்த பிரச்சினையை வெளியில் சொல்லாமல் எனக்குள்ளேயே அனுபவிச்சிட்டு இருந்தேன்.டாக்டர்ஸ், நீங்கள்லாம் குடுத்த தைரியத்தில் தான் நான் ஆபரேசனுக்கு சம்மதிச்சேன். இப்போ என்னோட பயம் ஓரளவு குறைஞ்சு போயிடுச்சு " என்று சிறு குழந்தை போல் சொல்லி சிரித்தார்.
அவரருகில் வந்து BP, பல்ஸ் செக் பண்ணிய நர்ஸ், " எல்லாம் நார்மலா இருக்கு. ஆனா கொஞ்ச நாளைக்கு உடல் ஆரோக்கிய விஷயத்தில் ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். எதற்குமே  டென்சன் ஆகாதீங்க. கேர்புல்லா இருக்கணும். இப்போ ரௌண்ட்ஸ் வரும் டாக்டர் எல்லாத்தையும் விளக்கமா சொல்வார். அவர் சொல்ற தேதியில் கண்டிப்பா செக் - அப்க்கு வரணும். இப்போ நீங்க மெதுவா வாக் போகலாம் ரூமுக்குள்ளேயே " என்று சொல்லியபடி சிஸ்டர் அங்கிருந்து நகர்ந்த சிறிது நேரத்திலேயே கேசவன் வந்து சேர்ந்தார்.
"என்ன ராஜா ஸார், எப்படி இருக்கீங்க ? நான் இப்பத்தான் டூர் முடிஞ்சு வந்தேன். லக்கேஜை வீட்டில் வீசிட்டு நேரா இங்கேதான் ஓடி வர்றேன். உங்களைப் பார்த்து ஆறுதலா நாலு வார்த்தைப் பேசிட்டுப் போனாதான் எனக்கு ஆறுதலா இருக்கும் " என்றார் கேசவன் 
"இப்போ பரவாயில்லை ஸார் . காலில் நரம்பு எடுத்த இடத்தில் கொஞ்சம் அதிகமாவே  பெயின் இருக்கத்தான் செய்யுது. அதுக்கு மருந்து மாத்திரை குடுக்கிறாங்க. போகப் போக சரியாகிடும்னு சொல்றாங்க " என்றார் ராஜாராம் 
" அவங்க சொல்றாங்கன்னு நீங்க அலட்சியமா இருந்திடக் கூடாது ஸார். இப்போ வீட்டுக்குக் கிளம்பிப் போறீங்க, அங்கே போன பிறகு இந்த வலி  தாங்க முடியாத அளவுக்கு அதிகம் ஆனா, அதுவும் மிட் நைட்டில் அதிகமானா  என்ன பண்ண முடியும் . உங்க வீடு ஒரு மூலை. ஆஸ்பத்திரி ஒரு மூலை. வந்து சேர்றதுக்குள் ஏடா கூடமா ஏதாவது ஆயிட்டா ? டாக்டர்ஸ் அப்படித்தான் சொல்வாங்க. ஒரு நாளைக்கு குறைஞ்சது அம்பது நூறு கேஸ் பார்க்கிறவங்களுக்கு, பொழுது மொத்தத்தையும் நோயாளிங்க கூட கழிக்கிறவங்களுக்கு  இது எல்லாமே சர்வ சாதாரணம் தான்.  நாமதான் எச்சரிக்கையா இருக்கணும்." என்று கேசவன் சொல்ல, 
" சரி " என்றார் ராஜாராம் மெல்லிய குரலில்.
"எங்க சொந்தக்காரப் பையன் ஒருத்தனுக்கு இதே மாதிரிதான் ஹார்ட் ஆபரேசன் நடந்துச்சு. அந்தப்  பையனை அவங்க வீட்டுக்கு  அனுப்பறச்சே எல்லாமே நார்மல்.இனி  பயப்பட ஒண்ணுமில்லேன்னு சொல்லி அனுப்பி னாங்க. அப்புறம் பாருங்க , தையல் போட்ட இடத்திலே நீர் கோர்த்து, பிறகு சலம் கட்டி என்னென்னவோ அமர்க்களம் ஆச்சு. பிறகுதான் தெரிய வந்துச்சு, இவங்க தையல் போடறச்சே எதோ நரம்பை உள்ளே வச்சு தைச்சுட்டாங்கனு. அப்புறம் திரும்ப ஒரு சர்ஜெரி. அதுக்குப் பணம் செலவு . பணம் போறது ஒரு பக்கம் இருக்கட்டும். அவஸ்தையை யார் அனுபவி க்கிறது . அந்த மாதிரி உங்க கேசில் எதுவும் ஆயிடலைதானே  ? " என்று மிகுந்த அக்கரையுடன் கேசவன் கேட்க யோசனையில் ஆழ்ந்தார் ராஜா ராம்.
" இன்னொரு கேஸ் பார்த்தீங்கன்னா, எங்க வீட்டுக்கு மேல் போர்ஷனில் குடியிருக்கிற ஒருத்தர், ஹார்ட்டுக்காகத்தான்  ட்ரீட்மென்ட் எடுத்தார் . ஆஞ்சியோவோ என்ன எழவோ சொல்றாங்களே , அது பேர்கூட  என் வாய்க்குள் நுழைய மாட்டேங்குது. அதை அவருக்குப் பண்ணினாங்க. ஆஸ்பத்திரியிலிருந்து நல்லாத்தான் வெளியில் வந்தார்.வீட்டுக்கு வந்து  ஒரே  ஒரு வருஷம்  நல்லாத்தான் நார்மலாத்தான் இருந்தார். அன்னைக்கு அவர் பேரனுக்குப் பிறந்த நாள். முதல் நாள் கேக் வெட்டறது, மறுநாள் மொட்டை போடறது காது குத்தறதுன்னு  எல்லா ஏற்பாடும் செய்து வச்சிருந்தார். கேக் வெட்டி முடிஞ்சதும் குழந்தையை கையில் வாங்கி கொஞ்சினவர், " இதைப் பிடி" ன்னு பக்கத்தில் நின்னுகிட்டிருந்தவங்க கிட்டே குழந்தையைக் கொடுத்து விட்டு கீழே சாஞ்சவர் சாய்ந்ததுதான். பொட்டுனு உயிர் போயிட்டுது. வலி, உயிர் போறதுக்கான சிம்பல் எதுவுமே இல்லாமே எல்லாமே சடனா முடிஞ்சு போச்சு. பிறந்த நாளைக்குன்னு  சந்தோசமா  வந்த உறவுக்காரக் கும்பல் இவருக்குப் பால் ஊத்திட்டுப் போனதுதான் மிச்சம். இதை ஏன் சொல்றேன்னா, நமக்கு இப்போ  பெய்ன் எதுவும் இல்லே, நாம நல்லா யிட்டோம்னு  நினைச்சு நீங்க அசால்ட்டா இருந்துடக் கூடாது. எப்பவும் அலர்ட்டா இருக்கணும். எந்த நேரம் எது நடக்கும்னு தெரியாதுங்கிற ஒரு எச்சரிக்கை உணர்வோடு இருக்கணும் " என்றார் கேசவன்.
இவர் சொன்னதற்கு ராஜாராமிடமிருந்து எந்த ரியாக்ஸனும் இல்லாத தால்  அருகில் சென்று பார்த்தார். கண்கள் மூடியிருந்தது. " சரிதான் . இவர் தூங்க ஏதாவது மருந்து மாத்திரை கொடுத்திருப்பாங்க போலிருக்கு. அதான்  பேசிட்டு இருக்கிறப்பவே தூங்கிட்டார் போலிருக்கு.  சரி . இப்போ தூங்கிறவரை நாம டிஸ்டர்ப் பண்ண வேண்டாம் " என்று மனதுக்குள் நினைத்தபடி அங்கிருந்து  வெளியில் வந்தார். அவர் வீட்டு ஆட்களி டமோ அல்லது ஆஸ்பத்திரி ஸ்டாப்ங்க யாரிடமாவதோ  'போயிட்டு வரேன்'னு சொல்லி விட்டுப் போகலாம்னு நினைத்து சுற்று முற்றும் பார்த்தார். ஆனால் அவரது மொபைலில் அழைப்பு வர, மொபைலை கையில்  எடுத்து, " சொல்லு சரவணா. டூர் முடிஞ்சு வந்திட்டேன் . நம்ம ராஜாராம் சாரைப் பார்த்து ஆறுதலா ஒரு நாலு வார்த்தைப் பேசிட்டு வரலாம்னு நான் ஆஸ்பத்திரிக்கு வந்து அவரைப் பார்த்துட்டு , அவருக்கு நாலு வார்த்தை  தைரியம் சொல்லிட்டு வெளியில் வர்றேன்,நீயும் ரிங் பண்றே. இப்போ நான் எங்க  வீட்டுக்குப் போறேன் . வீட்டுக்குப் போய் குழந்தைகளைப் பார்த்திட்டு, ஆஸ்பத்திரி மருந்து நெடியைக் குளிச்சு சுத்தம் பண்ணிட்டு கோவிலில் வந்து உன்னை பார்க்கிறேன். நீ வழக்கமா நாம உட்கார்ற இடத்தில் வெய்ட் பண்ணு " என்று சொல்லியபடி ஆஸ்பத்திரியிலிருந்து வெளியேறிக் கொண்டிருந்தார் கேசவன்.
ஆறு மணிக்குப் பிறகு அங்கு வந்த டியூட்டி நர்ஸ்  ராஜாராம் அருகில் சென்று " சார். இந்த மாத்திரையைப் போட்டுக்கோங்க " என்றாள் . எந்த அசைவும் அவரிடம் இல்லாததால் " டாக்டர் " என்று குரல் கொடுத்தபடி வெளியில் ஓடி வந்தார் நர்ஸ் .     








Saturday, July 06, 2013

படிக்க வேண்டும் கணக்குப் பாடம் !!

ஹாய் குட்டீஸ் ,  

நீங்க எல்லாரும் கை விரல்களிலேயே 9 - ம் வாய்ப்பாடை கணக்குப் பண்ணி இருப்பீங்கன்னு நினைக்கிறேன். உங்க எல்லாருக்கும் ஒரு பெரிய O ( ஓ )

இன்றைக்கு என்ன கணக்குன்னு கேட்கிறீங்களா ? குழப்பத்தானே....  ஸாரி... ஸாரி ... சொல்லத்தானே நான் இருக்கிறேன் 

அப்பா எப்போது வீட்டிற்கு வருவாரென்று,  ஸ்கூல் விட்டு வந்ததிலிருந்து  வீட்டு வாசலைப் பார்த்துக் கொண்டிருந்த குருசரண், அப்பாவின் டூ வீலர் காம்பவுண்ட்டுக்குள் நுழைந்ததுமே, ஓடி சென்று " அப்பா எனக்கு ட்ரிபில் பைவ் வேண்டும் " என்றான் 
திகைத்துப் போன அப்பா " என்னடா , triple five  ஆ ? " என்று அதிர்ந்து போய்க் கேட்டார்
" எங்க ஸ்கூலில் இருந்து எங்களை  டூர் அழைச்சிட்டுப் போகப் போறாங்க.  அதுக்கு எல்லாரும் ஆளுக்கு  555 ரூபாய் கொண்டு வந்து கொடுக்கணும்னு எங்க மிஸ் சொன்னாங்க " என்று குருசரண் சொன்னதும் " அவ்வளவுதானா ? " என்று நிம்மதிப் பெருமூச்சு விட்ட அப்பா " வா . வீட்டுக்குள் போய்ப் பேசலாம் " என்றார் 
வீட்டுக்குள் வந்ததும் கைகால்முகம் சுத்தம் செய்து கொண்டு சோபாவில் வந்து உட்கார்ந்த அப்பா , காப்பியை குடித்தபடியே, " குரு, உனக்கு 555 ரூபாய் தானே வேணும். அதை நான் தரமாட்டேன் " என்று சொல்ல " அப்பா, என்ன இது ? " அலறினான் குருசரண்.
" முழுசும் சொல்ல விடு . 555 ரூபாயை நான் தர மாட்டேன் . நீயாகப் போய் எடுத்துக் கொள்ளணும் " என்றார் அப்பா 
" அட, இதுதானா ? " என்றான் குரு  அலட்சியமாக 
" இரு கண்ணு. என்னோட டேபிள் டிராவை திறந்து பார். அதில் 100 ரூபாய், 50 ரூபாய் , 20 ரூபாய், 10 ரூபாய் நோட்டு, 5 ரூபாய் நோட்டு ,  10 ரூபாய் 5 ரூபாய் காயின்ஸ், 50 பைசா, 2 ரூபாய், 1 ரூபாய் காயின்ஸ் எல்லாமே இருக்கும் . அதிலிருந்து நீ 555 ரூபாயை மட்டும் எடுக்க வேண்டும். ஆனால் ஒரே ஒரு கண்டிசன், நீ எந்த ரூபாயை எடுக்கிறாயோ,அந்த ரூபாய் மதிப்புக்கு தக்க படி நோட்டு எண்ணிக்கை இருக்கணும் " என்றார் அப்பா 
" நீங்க சொல்றது புரியலே " என்று குரு சொல்ல , " அதாவது, நீ 50 ரூபாயை எடுத்தால், 50 நோட்டுக்கள் அதிலிருந்து எடுக்கணும் . அப்படி எடுத்தால் அதன் மதிப்பு 2500 ரூபாய் ஆகி விடும். ஆனால் நீ கேட்பது 555 ரூபாய்தான். இந்த சாம்பிளை மட்டும் மனசில் வைச்சுக்கோ. நான் சொல்ற கண்டிசன்படி 555 ரூபாயை எடுத்துட்டு வந்து காட்டு " என்றார் அப்பா 
அப்பாவின் அறைக்குள் சென்ற குருசரண் 5 நிமிடங்களில் திரும்பிவந்து தான் எடுத்து வந்த 555 ரூபாயைக் காட்டினான். கண்டிசனை மீறாமல் குரு பணம் எடுத்து வந்ததைக் கண்ட அப்பா அவனைப் பாராட்டி, மேலும் 10 ரூபாய் நோட்டு 10 கொடுத்தார்.
இப்போ கேள்வி என்னன்னா , எந்த வரிசைப்படி பணத்தை குருசரண் எடுத்து வந்திருப்பான் ?

எடுங்க பேப்பர் பென்சிலை. போடுங்க கணக்கை !




Friday, July 05, 2013

Scanning of inner - heart ( Scan Report Number - 77 )

                                              ஜடம் ? !

ச்சே. சாப்பிட்டும் சாப்பிடாமலும் காலையில் ஏழு மணிக்கே வீட்டை விட்டுக் கிளம்பி ஓடி வந்தாலும் சரியான நேரத்துக்கு ஆபீஸ் வந்து சேர முடியறதில்லையே. தினமும் காலையில் 9.45 க்கு வந்து நின்றால் கூட அந்தக் கிழப் பெருச்சாளி, கண்ணாடியை நெற்றிக்கு மேலே தூக்கி விட்டுக் கொண்டு,  இல்லாத நெற்றிக் கண்ணால்  சுட்டு எரிக்கும். இப்போது மணி 10.20. இன்றைக்கென்று சொல்லி வச்ச மாதிரி ட்ரைன், பஸ், ஷேர் ஆட்டோ எல்லாமே காலை வாரி விட்டு விட்டதே. கடவுளே , நான் போகிற சமயத்தில் " கிழம் " சீட்டில் இருக்கக் கூடாது என்று மனதுக்குள் பிரார்த்தித்தபடியே அரக்கப் பறக்க அலுவலகத்தில் நுழைந்த பத்மினி, மாடிப்  படிக்கட்டுகளை இரெண்டிரண்டாகத் தாவி தாவி ஏறிக் கொண்டிருந்தாள்.
" மேடம் நம்ம ஆபீசில் லிப்ட் ன்னு ஒண்ணு இருக்குது " என்றான் எதிரே வந்த பியூன் சந்தோஷ் 
" எல்லாந்தான் இருக்கு . எது சரியா வேலை செய்யுது ? " என்று எரிச்சலுடன் கேட்டாள் பத்மினி.
" நம்ம காத்து அதுக்கும் அடிச்சிட்டு போலிருக்கு. அதெல்லாம் நம்மளைப் பார்த்து பழகிகிட்டுது " என்ற சந்தோஷை முறைத்துப் பார்த்த பத்மினி " திமிரா ? " என்றாள் 
" சும்மா ஜோக் மேடம். உடம்பு எடை போடாமே இருக்கணும்னு நான் மாடிப் படி ஏறி இறங்கிறேன். நீங்க ஏன் இப்படி .. "
" ட்ராபிக்கில் நாய் படாத பாடு பட்டு  ஓடி வர்றோம். நம்ம அவஸ்தை யாருக்குப் புரிகிறது ? லேட்டாக வந்து நிற்கிறதுதானே தெரிகிறது. போதும்டா சாமி நாய்ப் பொழைப்பு " என்றாள், படிக்கட்டுகளில் ஏறுவதை நிறுத்திவிட்டு மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க.
" அதுக்காக இரண்டு இரண்டு படியாக தாவித் தாவி ஓடுறதா ? வழுக்கி விழுந்தால் அவஸ்தைப் படப் போறது நீங்கதான் மேடம்  , ஆபீஸ் இல்லே. மெதுவாப் போங்க . அட்டெண்டன்ஸ் ரிஜிஸ்டர் இன்னும் சூப்பிரண்ட் சார் டேபிளில் தான் கிடக்குது . MD ரூமுக்குப் போகலே " என்று சொல்லி விட்டு அங்கிருந்து நகர்ந்தான் சந்தோஷ் 
" அப்பாடா " என்று பெருமூச்சு விட்டபடி ஹாலுக்குள் நுழைந்த பத்மினி,  அட்டெண்டன்ஸ் ரிஜிஸ்டரில் தன்னுடைய வரவைப் பதிவு செய்து விட்டு  நிமிர்ந்தாள். ஹால் வெறிச்சோடிக் கிடந்தது. எங்கும் ஒரு மயான அமைதி. என்ன இது , மணி 10.30 . இன்னும் யாரும் வரலியா ? எங்காவது சாலை மறியலா ? அதான் இந்நேரம் வரை அட்டெண்டன்ஸ் ரிஜிஸ்டர் இந்த டேபிளில் கிடக்கிறதா  என்ற நினைப்புடன் அடுத்த அறைக்குள் நுழைந்தாள். டெஸ்பாட்ச் கிளார்க் தியாகராஜன் தனது சீட்டில் இருந்தார் எதையோ வெட்டி ஒட்டியபடி. எந்த ராஜா எந்த பட்டினம் போனால் எனக்கென்ன . என் கவலை எனக்கு என்ற பாலிஸி உள்ளவராச்சே. சரி இவர்கிட்டே கேட்போம் என்ற நினைப்பில்  " என்ன தியாகு ஸார், யாரையும் காணோம் ? " என்று  கேட்ட பத்மினிக்கு, தனது ஆட்காட்டி விரலை அடுத்த அறைக்கு நீட்டிக் காட்டினார் தியாகராஜன் 
" ஹும். வாயைத் திறந்து பதில் சொன்னால் வாயிலிருக்கிற முத்து கீழே கொட்டிவிடுமா என்ன ? இவனுக்கு இந்த ஆபீசில் " ஜடம் " ன்னு சரியாத் தான் பேர் வச்சிருக்கிறாங்க . பேர் வச்ச புண்ணியவாளனுக்கு ஆபீஸ் வாசலிலியே ஒரு சிலை வைக்கணும். தனக்கு இப்படியொரு பேர் இருப்பது பற்றி தெரிந்தும் அதைப் பற்றியெல்லாம் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாத மகானுபாவான் " என்று தனக்குள் நினைத்துக் கொண்டு அடுத்த அறைக்கு ஓடினாள் 
அஹமது டேபிளை சுற்றி அத்தனை ஸ்டாப் மெம்பர்ஸ்ம் நின்று கொண்டி ருந்தார்கள். அருகில் சென்ற பத்மினி அங்கு நின்ற வாசுகியின் தோளைத் தொட்டுத் திருப்பி " என்ன ? " என்பதுபோல் பார்வையாலேயே கொக்கி போட்டாள்.
" அஹ்மத் ஸார் வந்த பஸ்சில் ஒரு லேடி கிட்டே எவனோ செயின் ச்நாட்ச்சிங் பண்ணி யிருக்கிறான் . அந்த லேடி அதை லேட்டாத் தான் கவனிச்சு சத்தம் போட்டிருக்கிறா. பஸ் ரன்னிங்கில் இருந்திருக்கு.  பஸ்சை போலீஸ் ஸ்டேஷனுக்கு திருப்ப சொல்லி எல்லாரும் சத்தம் போட்டிருக்காங்க . தான் மாட்டிக்கிடுவோம்னு தெரிஞ்சதும், அந்தத் திருடன், செயினை நம்ம அஹ்மத் ஸார் ஹாண்ட் பாக்கில் போட்டி ருக்கிறான் . போலீஸ் ஸ்டேஷன் போகிறவரை சாருக்கே இது தெரியலே  செக்கிங்கில் நம்ம ஸார் மாட்டி இருக்கிறார். என்குயரி அதுஇதுன்னு ஏகப் பட்ட பார்மாலிடீஸ். நம்ம ஆபீஸ் அட்ரஸ் குடுத்துவிட்டு, ஆபீஸ்க்கு இன்பார்ம் பண்ணிட்டு வர்றேன்னு சொல்லிட்டு ஸார் வந்திருக்கிறார் " என்று விளக்கம் சொன்னாள்  வாசுகி
" திருடினவனும் எப்படியும் அந்த கும்பலில்தானே இருந்திருக்கணும் . அவனைக் கண்டு பிடிச்சு  நாலு மொத்து  மொத்தறது தானே?" என்றாள் பத்மினி கோபமாக. 
" அவன் யார்னு எப்படி கண்டு பிடிக்கிறது ? அதானே பிரச்சினை " என்று சேகர் சொல்ல, அவரவர்களுக்கு தெரிந்த விஷயங்களை, சம்பவங்களை பரிமாறிக் கொண்டார்கள்
"யப்பா, நீ  இன்னைக்கு என்ன நேரத்தில் வீட்டை விட்டுக் கிளம்பினியோ தெரியலே " என்றபடி சூபிரண்ட் அங்கிருந்து நகர, ஒவ்வொருவராக அந்த இடத்தை விட்டு  நகர்ந்தார்கள்.
தனது இருக்கைக்குத் திரும்பிய பத்மினி, ஆசுவாசப் பெருமூச்சு ஒன்றை உதிர்த்து விட்டு  பைல்களைப் புரட்ட ஆரம்பித்தாள். தற்செயலாக கண்கள் தியாகராஜன் இருந்த திசையை நோக்கின. அவர் தன்னுடைய வேலையில் மும்முரமாக இருந்தார். ச்சே, என்ன மனுஷன் இவர். தன்னோட வேலை பார்க்கிற ஒருத்தருக்கு இந்த மாதிரி ஆகிவிட்டதே என்ற உணர்வுகூட இல்லாமல் ஜடம் மாதிரி ..... ஆஹா ...ஜடம்கிற பேர் இவருக்குப் பொருத்தமான பேர்தான்.  இன்னைக்கு இவனை நறுக்குன்னு நாலு கேட்டால்தான் மனசு ஆறும்  என்று எழ, " இதோ பார், நீ வேலையில்  சேர்ந்து இன்னும் ஆறு மாசம் கூட முழுசா ஆகலே. யார் எக்கேடு கேட்டுப் போனால் உனக்கென்ன ? உன் வேலைப் பார் " என்று அறிவு,  புத்திமதி சொல்லியது. அதைத் தட்டிக் கொடுத்து தூங்க வைத்தாள் 
" ஸார், நீங்க என்னைப் பற்றி என்ன நினைச்சாலும் சரி . இல்லாட்டா என்னைப் பத்தி நீங்க யார்கிட்டே போய்க்  கம்ப்ளைண்ட்  பண்ணினாலும் சரி . அதைப் பத்தி நான் கவலைப் படப் போறதில்லே. நம்ம கூட வொர்க் பண்ற ஸ்டாப்க்கு இப்படியொரு  கஷ்டம்.  எல்லாரும் அதைப் பத்தி பேசிட்டு இருக்கிறோம். நீங்க எதைப் பத்தியும் கவலைப் படாமே ஜடம் ....."
" சொல்லும்மா . சொல்ல வந்ததை சொல்லி முடி. " ஜடம் மாதிரி ஏன் உட்கார்ந்திருந்தேன்னு கேளு .." என்றார் தியாகராஜன் அமைதியாக.
" சார் .. நம்மோட வொர்க் பண்ற .... "
" இருக்கட்டும். நம்மோட வொர்க் பண்றவருக்கு ஒரு பிரச்சினை. அதைப் பத்தி எல்லாரும் பேசுனீங்க. அதை எப்படி எப்படியெல்லாம் ஹாண்டில் பண்ணியிருக்கலாம்னு டிஸ்கஸ் பண்ணினீங்க. அதுதானே இவ்வளவு நேரமும் நடந்தது . நான் ஒன்னு கேட்கிறேன் பதில் சொல்லும்மா . ஒருத்தன் கஷ்டத்தைக் கேட்கிற உங்களுக்கே  அதை இப்படி இப்படி யெல்லாம் சமாளித்திருக்கலாம்னு யோசனை தோணுகிற  போது, கஷ்டத்தில் இருக்கிற ஒருத்தன்  அதையெல்லாம் செய்து பாராமலா  இருந்திருப்பான். ஒரு பழமொழி சொல்லுவாங்க, ஒரு கப்பல் கவிழ்ந்த பிறகு அதை எந்தெந்த வழிகளிலெல்லாம் காப்பாற்றியிருக்க முடியும்னு யோசனை சொல்ல எல்லாராலும் முடியும்னு. கப்பல் கவிழ்ந்தது பற்றி கேள்விப் படற நாமளே என்னென்னவோ யோசிக்கும்போது,  கப்பலில் உயிருக்குப் போராடுகிற ஒருத்தன், கப்பலைக் காப்பாற்ற நினைக்கிற ஒருத்தன்  அத்தனை முயற்சியையும் செய்து பாராமலா இருந்திருப்பான். ஆள் ஆளுக்கு யோசனை சொல்லி அஹ்மத் சாரை நீங்க குழப்பி விட்டது தான் மிச்சம். நேரம் போனதுதான் மிச்சம். அதைத் தவிர வேறு என்ன நடந்தது? என் காதுக்கு விஷயம் வந்ததுமே  என்னோட கசின்க்கு போன் பண்ணி நடந்த  விஷயத்தை சொன்னேன். நம்ம அஹ்மத் பத்தி சொன்னேன். என்னோட கசின் போலீஸ் டிப்பார்ட்மெண்டில் அசிஸ்டன்ட் கமிஷனர். "இனிமே  இதுபத்தி உங்க ஸ்டாப்பை எங்க டிப்பார்ட்மெண்ட்  தொந்தரவு பண்ணாமே பார்த்துக்கிறேன்னு சொல்லிட்டார். இதை விட பெட்டர் சலூசன் இருந்தால் சொல்லுங்க, ட்ரை பண்ணிப் பார்க்கலாம் " என்றார் தியாகு வெரி கேஷுவலாக.
" ஸாரி ஸார் " என்று சொல்ல பத்மினி நினைத்தாள். ஆனால் வார்த்தைகள் வெளி வரவில்லை. கண்ணிலிருந்து கண்ணீர் முத்துக்கள் திரண்டு கன்னங்களில் வழிந்தோடியது.
" அட என்னம்மா இது ? நீ சின்னப் பொண்ணு . இந்த ஆபீசில் நீ பார்க்க வேண்டிய விஷயம் இன்னும் எவ்வளவோ இருக்குது ! இதுக்கெல்லாம் அலட்டிக்கலாமா? " என்று கேட்டார் தியாகராஜன் சிறிதும் அலட்டிக் கொள்ளாமல்