Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, July 05, 2013

Scanning of inner - heart ( Scan Report Number - 77 )

                                              ஜடம் ? !

ச்சே. சாப்பிட்டும் சாப்பிடாமலும் காலையில் ஏழு மணிக்கே வீட்டை விட்டுக் கிளம்பி ஓடி வந்தாலும் சரியான நேரத்துக்கு ஆபீஸ் வந்து சேர முடியறதில்லையே. தினமும் காலையில் 9.45 க்கு வந்து நின்றால் கூட அந்தக் கிழப் பெருச்சாளி, கண்ணாடியை நெற்றிக்கு மேலே தூக்கி விட்டுக் கொண்டு,  இல்லாத நெற்றிக் கண்ணால்  சுட்டு எரிக்கும். இப்போது மணி 10.20. இன்றைக்கென்று சொல்லி வச்ச மாதிரி ட்ரைன், பஸ், ஷேர் ஆட்டோ எல்லாமே காலை வாரி விட்டு விட்டதே. கடவுளே , நான் போகிற சமயத்தில் " கிழம் " சீட்டில் இருக்கக் கூடாது என்று மனதுக்குள் பிரார்த்தித்தபடியே அரக்கப் பறக்க அலுவலகத்தில் நுழைந்த பத்மினி, மாடிப்  படிக்கட்டுகளை இரெண்டிரண்டாகத் தாவி தாவி ஏறிக் கொண்டிருந்தாள்.
" மேடம் நம்ம ஆபீசில் லிப்ட் ன்னு ஒண்ணு இருக்குது " என்றான் எதிரே வந்த பியூன் சந்தோஷ் 
" எல்லாந்தான் இருக்கு . எது சரியா வேலை செய்யுது ? " என்று எரிச்சலுடன் கேட்டாள் பத்மினி.
" நம்ம காத்து அதுக்கும் அடிச்சிட்டு போலிருக்கு. அதெல்லாம் நம்மளைப் பார்த்து பழகிகிட்டுது " என்ற சந்தோஷை முறைத்துப் பார்த்த பத்மினி " திமிரா ? " என்றாள் 
" சும்மா ஜோக் மேடம். உடம்பு எடை போடாமே இருக்கணும்னு நான் மாடிப் படி ஏறி இறங்கிறேன். நீங்க ஏன் இப்படி .. "
" ட்ராபிக்கில் நாய் படாத பாடு பட்டு  ஓடி வர்றோம். நம்ம அவஸ்தை யாருக்குப் புரிகிறது ? லேட்டாக வந்து நிற்கிறதுதானே தெரிகிறது. போதும்டா சாமி நாய்ப் பொழைப்பு " என்றாள், படிக்கட்டுகளில் ஏறுவதை நிறுத்திவிட்டு மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க.
" அதுக்காக இரண்டு இரண்டு படியாக தாவித் தாவி ஓடுறதா ? வழுக்கி விழுந்தால் அவஸ்தைப் படப் போறது நீங்கதான் மேடம்  , ஆபீஸ் இல்லே. மெதுவாப் போங்க . அட்டெண்டன்ஸ் ரிஜிஸ்டர் இன்னும் சூப்பிரண்ட் சார் டேபிளில் தான் கிடக்குது . MD ரூமுக்குப் போகலே " என்று சொல்லி விட்டு அங்கிருந்து நகர்ந்தான் சந்தோஷ் 
" அப்பாடா " என்று பெருமூச்சு விட்டபடி ஹாலுக்குள் நுழைந்த பத்மினி,  அட்டெண்டன்ஸ் ரிஜிஸ்டரில் தன்னுடைய வரவைப் பதிவு செய்து விட்டு  நிமிர்ந்தாள். ஹால் வெறிச்சோடிக் கிடந்தது. எங்கும் ஒரு மயான அமைதி. என்ன இது , மணி 10.30 . இன்னும் யாரும் வரலியா ? எங்காவது சாலை மறியலா ? அதான் இந்நேரம் வரை அட்டெண்டன்ஸ் ரிஜிஸ்டர் இந்த டேபிளில் கிடக்கிறதா  என்ற நினைப்புடன் அடுத்த அறைக்குள் நுழைந்தாள். டெஸ்பாட்ச் கிளார்க் தியாகராஜன் தனது சீட்டில் இருந்தார் எதையோ வெட்டி ஒட்டியபடி. எந்த ராஜா எந்த பட்டினம் போனால் எனக்கென்ன . என் கவலை எனக்கு என்ற பாலிஸி உள்ளவராச்சே. சரி இவர்கிட்டே கேட்போம் என்ற நினைப்பில்  " என்ன தியாகு ஸார், யாரையும் காணோம் ? " என்று  கேட்ட பத்மினிக்கு, தனது ஆட்காட்டி விரலை அடுத்த அறைக்கு நீட்டிக் காட்டினார் தியாகராஜன் 
" ஹும். வாயைத் திறந்து பதில் சொன்னால் வாயிலிருக்கிற முத்து கீழே கொட்டிவிடுமா என்ன ? இவனுக்கு இந்த ஆபீசில் " ஜடம் " ன்னு சரியாத் தான் பேர் வச்சிருக்கிறாங்க . பேர் வச்ச புண்ணியவாளனுக்கு ஆபீஸ் வாசலிலியே ஒரு சிலை வைக்கணும். தனக்கு இப்படியொரு பேர் இருப்பது பற்றி தெரிந்தும் அதைப் பற்றியெல்லாம் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாத மகானுபாவான் " என்று தனக்குள் நினைத்துக் கொண்டு அடுத்த அறைக்கு ஓடினாள் 
அஹமது டேபிளை சுற்றி அத்தனை ஸ்டாப் மெம்பர்ஸ்ம் நின்று கொண்டி ருந்தார்கள். அருகில் சென்ற பத்மினி அங்கு நின்ற வாசுகியின் தோளைத் தொட்டுத் திருப்பி " என்ன ? " என்பதுபோல் பார்வையாலேயே கொக்கி போட்டாள்.
" அஹ்மத் ஸார் வந்த பஸ்சில் ஒரு லேடி கிட்டே எவனோ செயின் ச்நாட்ச்சிங் பண்ணி யிருக்கிறான் . அந்த லேடி அதை லேட்டாத் தான் கவனிச்சு சத்தம் போட்டிருக்கிறா. பஸ் ரன்னிங்கில் இருந்திருக்கு.  பஸ்சை போலீஸ் ஸ்டேஷனுக்கு திருப்ப சொல்லி எல்லாரும் சத்தம் போட்டிருக்காங்க . தான் மாட்டிக்கிடுவோம்னு தெரிஞ்சதும், அந்தத் திருடன், செயினை நம்ம அஹ்மத் ஸார் ஹாண்ட் பாக்கில் போட்டி ருக்கிறான் . போலீஸ் ஸ்டேஷன் போகிறவரை சாருக்கே இது தெரியலே  செக்கிங்கில் நம்ம ஸார் மாட்டி இருக்கிறார். என்குயரி அதுஇதுன்னு ஏகப் பட்ட பார்மாலிடீஸ். நம்ம ஆபீஸ் அட்ரஸ் குடுத்துவிட்டு, ஆபீஸ்க்கு இன்பார்ம் பண்ணிட்டு வர்றேன்னு சொல்லிட்டு ஸார் வந்திருக்கிறார் " என்று விளக்கம் சொன்னாள்  வாசுகி
" திருடினவனும் எப்படியும் அந்த கும்பலில்தானே இருந்திருக்கணும் . அவனைக் கண்டு பிடிச்சு  நாலு மொத்து  மொத்தறது தானே?" என்றாள் பத்மினி கோபமாக. 
" அவன் யார்னு எப்படி கண்டு பிடிக்கிறது ? அதானே பிரச்சினை " என்று சேகர் சொல்ல, அவரவர்களுக்கு தெரிந்த விஷயங்களை, சம்பவங்களை பரிமாறிக் கொண்டார்கள்
"யப்பா, நீ  இன்னைக்கு என்ன நேரத்தில் வீட்டை விட்டுக் கிளம்பினியோ தெரியலே " என்றபடி சூபிரண்ட் அங்கிருந்து நகர, ஒவ்வொருவராக அந்த இடத்தை விட்டு  நகர்ந்தார்கள்.
தனது இருக்கைக்குத் திரும்பிய பத்மினி, ஆசுவாசப் பெருமூச்சு ஒன்றை உதிர்த்து விட்டு  பைல்களைப் புரட்ட ஆரம்பித்தாள். தற்செயலாக கண்கள் தியாகராஜன் இருந்த திசையை நோக்கின. அவர் தன்னுடைய வேலையில் மும்முரமாக இருந்தார். ச்சே, என்ன மனுஷன் இவர். தன்னோட வேலை பார்க்கிற ஒருத்தருக்கு இந்த மாதிரி ஆகிவிட்டதே என்ற உணர்வுகூட இல்லாமல் ஜடம் மாதிரி ..... ஆஹா ...ஜடம்கிற பேர் இவருக்குப் பொருத்தமான பேர்தான்.  இன்னைக்கு இவனை நறுக்குன்னு நாலு கேட்டால்தான் மனசு ஆறும்  என்று எழ, " இதோ பார், நீ வேலையில்  சேர்ந்து இன்னும் ஆறு மாசம் கூட முழுசா ஆகலே. யார் எக்கேடு கேட்டுப் போனால் உனக்கென்ன ? உன் வேலைப் பார் " என்று அறிவு,  புத்திமதி சொல்லியது. அதைத் தட்டிக் கொடுத்து தூங்க வைத்தாள் 
" ஸார், நீங்க என்னைப் பற்றி என்ன நினைச்சாலும் சரி . இல்லாட்டா என்னைப் பத்தி நீங்க யார்கிட்டே போய்க்  கம்ப்ளைண்ட்  பண்ணினாலும் சரி . அதைப் பத்தி நான் கவலைப் படப் போறதில்லே. நம்ம கூட வொர்க் பண்ற ஸ்டாப்க்கு இப்படியொரு  கஷ்டம்.  எல்லாரும் அதைப் பத்தி பேசிட்டு இருக்கிறோம். நீங்க எதைப் பத்தியும் கவலைப் படாமே ஜடம் ....."
" சொல்லும்மா . சொல்ல வந்ததை சொல்லி முடி. " ஜடம் மாதிரி ஏன் உட்கார்ந்திருந்தேன்னு கேளு .." என்றார் தியாகராஜன் அமைதியாக.
" சார் .. நம்மோட வொர்க் பண்ற .... "
" இருக்கட்டும். நம்மோட வொர்க் பண்றவருக்கு ஒரு பிரச்சினை. அதைப் பத்தி எல்லாரும் பேசுனீங்க. அதை எப்படி எப்படியெல்லாம் ஹாண்டில் பண்ணியிருக்கலாம்னு டிஸ்கஸ் பண்ணினீங்க. அதுதானே இவ்வளவு நேரமும் நடந்தது . நான் ஒன்னு கேட்கிறேன் பதில் சொல்லும்மா . ஒருத்தன் கஷ்டத்தைக் கேட்கிற உங்களுக்கே  அதை இப்படி இப்படி யெல்லாம் சமாளித்திருக்கலாம்னு யோசனை தோணுகிற  போது, கஷ்டத்தில் இருக்கிற ஒருத்தன்  அதையெல்லாம் செய்து பாராமலா  இருந்திருப்பான். ஒரு பழமொழி சொல்லுவாங்க, ஒரு கப்பல் கவிழ்ந்த பிறகு அதை எந்தெந்த வழிகளிலெல்லாம் காப்பாற்றியிருக்க முடியும்னு யோசனை சொல்ல எல்லாராலும் முடியும்னு. கப்பல் கவிழ்ந்தது பற்றி கேள்விப் படற நாமளே என்னென்னவோ யோசிக்கும்போது,  கப்பலில் உயிருக்குப் போராடுகிற ஒருத்தன், கப்பலைக் காப்பாற்ற நினைக்கிற ஒருத்தன்  அத்தனை முயற்சியையும் செய்து பாராமலா இருந்திருப்பான். ஆள் ஆளுக்கு யோசனை சொல்லி அஹ்மத் சாரை நீங்க குழப்பி விட்டது தான் மிச்சம். நேரம் போனதுதான் மிச்சம். அதைத் தவிர வேறு என்ன நடந்தது? என் காதுக்கு விஷயம் வந்ததுமே  என்னோட கசின்க்கு போன் பண்ணி நடந்த  விஷயத்தை சொன்னேன். நம்ம அஹ்மத் பத்தி சொன்னேன். என்னோட கசின் போலீஸ் டிப்பார்ட்மெண்டில் அசிஸ்டன்ட் கமிஷனர். "இனிமே  இதுபத்தி உங்க ஸ்டாப்பை எங்க டிப்பார்ட்மெண்ட்  தொந்தரவு பண்ணாமே பார்த்துக்கிறேன்னு சொல்லிட்டார். இதை விட பெட்டர் சலூசன் இருந்தால் சொல்லுங்க, ட்ரை பண்ணிப் பார்க்கலாம் " என்றார் தியாகு வெரி கேஷுவலாக.
" ஸாரி ஸார் " என்று சொல்ல பத்மினி நினைத்தாள். ஆனால் வார்த்தைகள் வெளி வரவில்லை. கண்ணிலிருந்து கண்ணீர் முத்துக்கள் திரண்டு கன்னங்களில் வழிந்தோடியது.
" அட என்னம்மா இது ? நீ சின்னப் பொண்ணு . இந்த ஆபீசில் நீ பார்க்க வேண்டிய விஷயம் இன்னும் எவ்வளவோ இருக்குது ! இதுக்கெல்லாம் அலட்டிக்கலாமா? " என்று கேட்டார் தியாகராஜன் சிறிதும் அலட்டிக் கொள்ளாமல் 
  

No comments:

Post a Comment