Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Sunday, January 31, 2016

குழந்தைகளுக்கான குறுந் தொடர் - 25

                                         அச்சுப்பிச்சு அப்புமணி !

மொபைலில் யாருடனோ வெகு நேரம் பேசிக்  கொண்டிருந்த  சேகர், "ச்சே .. எப்பவும் ஏதாவது பிரச்சினை பண்றதே இவனுக்கு வேலையாப் போச்சு " என்றபடி மொபைலை ஸ்விச் ஆப் செய்தான்.
"என்ன .. என்ன விஷயம் ?" என்று ராஜு கேட்க, சேகர் பதில் சொல்வதற்கு முன்பாக ,   "பிரச்சினைஎங்கேதான்இல்லே. சீனாவிலே   கூடத்தான் பிரச்சினை இருக்குது" என்றான் அப்புமணி ரொம்ப கேஷுவலாக. அதைக் கேட்டு அதிர்ந்த ராஜு, இரண்டு கைகளாலும் நெஞ்சைப் பிடித்தபடி, "சேகர் ... எனக்கு என்னவோ பண்ணுதே . இந்த லூஸு உலகத்தைச் சுத்திப் பார்க்க வந்திருக்கேன்னு சொல்லிச்சு. எதையும் சுத்திப் பார்க்காமே இந்த ரூமை மட்டும் சுத்திச்சுத்தி வந்துச்சு. இப்ப உலக விஷயத்தைப் பேசுது. என்னாலே தாங்க முடியலே. என்னனு கேட்டு சொல்லு சீக்கிரம்.... ஐயோ ... எனக்கு நெஞ்சு வெடிச்சிடும் போலிருக்கே " என்று ஆக்ட் கொடுத்தான்.
"ஏய் .. அச்சு .. என்ன சொல்றே ? சீனாவில் என்ன பிரச்னை? அதை உனக்கு சொன்னது யாரு ?" என்று கேட்டான் சேகர்.
"என்னோட படிக்கிற பிள்ளைங்கதான் சொன்னாங்க "
"எப்போ?"
"முன்னயே "
"ஏய் .. எங்களைத் தாளிக்காமே விஷயத்தை சொல்லுடா  .."
"சொல்றேன்... கேட்டுக்கோங்க .. ரெண்டாம் வாட்டி கேட்டா சொல்ல மாட்டேன் " என்ற பீடிகையுடன், தொண்டையை சரி செய்தபடி குரலை செருமிக் கொள்வதைப் பார்த்த ராஜு தலையில் அடித்துக் கொண்டான். அதைப் பற்றிக் கவலைப்படாத அப்புமணி, "ஜனத்தொகை நிறைந்த   சைனாவில் ஒரு பிரச்சினை. இறந்து போன ஒருவனை எரிப்பதா அல்லது புதைப்பதா என்ற பிரச்சினை. எரித்து விட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.புதைத்து விட்டால் இரண்டு பிரச்சினை. அந்த இடத்தில் புல் முளைக்குமா முளைக்காதா என்பதுதான் அது. புல் முளைக்கா விட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை. புல் முளைத்து விட்டால் இரண்டு பிரச்சினை. அந்தப் புல்லை மாடு தின்னுமா தின்னாதா ? அந்தப் புல்லை மாடு தின்னாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை. அந்தப் புல்லை மாடு தின்று விட்டால் இரண்டு பிரச்சினை. அந்தப் புல்லைத்  தின்ற மாட்டுக்கு பால் சுரக்குமா சுரக்காதா? பால் சுரக்கா விட்டால் எந்தப் பிரச்சினையுமில்லை. பால் சுரந்து விட்டால் இரண்டு பிரச்சினை. சுரக்கும் அந்தப் பாலைக் கறக்கலாமா கறக்ககூடாதா?  பால் கறக்கா விட்டால் எந்தப்  பிரச்சினையும் இல்லை.  பால் கறந்து விட்டால் இரண்டு பிரச்சினை. அந்தப் பாலை மனிதர்கள் குடிக்கலாமா கூடாதா? அந்தப் பாலை மனிதர்கள் குடிக்காவிட்டால் எந்தப் பிரச்சினையுமில்லை. அந்தப் பாலை மனிதர்கள் குடித்தால்  இரண்டு பிரச்சினை. பாலைக் குடித்த அவர்கள் உயிரோடு இருப்பார்களா மாட்டார்களா ? அவர்கள் உயிரோடு இருந்து விட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை. இறந்து விட்டால் இரண்டு பிரச்சினை! இறந்து போனவர்களை எரிப்பதா புதைப்பதா? " என்று மூச்சைப் பிடித்தபடி சொல்லி முடித்தான் அப்புமணி. பிறகு "நாங்க இதை எங்க ஸ்கூலில் தினமும் சொல்லுவோம்." என்றான்.
இந்த நேரத்தில் வேலைக்காரி தனம் அங்கே வர , "அக்கா ... தனம் அக்கா .. இந்த ஏரியாவில் ரொம்பவும் பாழடைஞ்ச கிணறு எங்கே இருக்குதுக்க?" என்று பரிதாபமாகக் கேட்டான் ராஜு .
"ஏன் தம்பி கேக்குறீங்க ?" என்று ஒன்றும் புரியாதவளாகக் கேட்டாள் தனம். 
"அய்யய்யோ எனக்குத் தாங்க முடியலேக்கா . உடனே ஏதாவது ஒரு கிணத்துலே குதிக்கணும் போல இருக்குதுக்கா" என்று ராஜு சொல்ல, அவனை முறைத்துப் பார்த்த சேகர், "குழந்தைப் பையன்.. விளையாட்டா அப்பாவித்தனமா ஏதோ சொன்னா அதை ரசிக்காமே சீரியஸா பார்க்கிறே ?" என்றான் கடுப்புடன்.
"நீயும் உன் ரசனையும். எனக்குக் கொலை வெறி கொலை வெறி போல வருதே" என்று பாடினான் ராஜு .
"வா .. அச்சு ...நாம வெளியே போயிட்டு வரலாம் " என்று அப்புமணியுடன் சேகர் வெளியில் வந்தான். 
"அச்சு .. நீ பீச் பார்த்திருக்க மாட்டே தானே ?" என்று கேட்டான் சேகர்.
"நான் ராஜகுமாரியோட சேர்ந்து மகாபலிபுரம் பீச் பார்த்திருக்கேன் "
"அது யாரு ராஜகுமாரி ?"
"அவ பேரு.... பேரு ..."என்று அப்புமணி தலையை சொரிய , "சரி விட்டுத் தள்ளு. வா .. பீச் போகலாம் " என்றவன் ஒரு ஆட்டோவை கைதட்டிக் கூப்பிட்டான். அங்கிருந்து இருவரும் மெரினா போனார்கள் .
கடலைப் பார்த்ததும் அப்புமணி குஷியாகி விட்டான்.
"அப்பப்பா ... எவ்ளோ தண்ணீ .. வெளியே வருது.. உள்ளே ஓடுது. ஏன் சேகர் அண்ணா ?"
"அது இயற்கையோட அமைப்பு. கடவுளோட கட்டளை. அதுக்குக் கீழ்ப் படிஞ்சு நிக்குது ."
"நமக்கு கடவுள் எந்தக் கட்டளையும் போடலையா ?"
"நிறைய போட்டிருக்கார். ஆனா அதை நாம கேட்க மாட்டோம் "
"ஏன்?"
"ஏன்னா .. நாம மனுஷங்க .. நம்ம இஷ்டப்படிதான் நடப்போம்."
"எனக்கு ஒண்ணும் புரியலே "
"சரி .. விடு.. சுண்டல் சாப்பிடறியா ?"
"நான் மனசுக்குள் நினைச்சேன். நீங்க உடனேயே எங்கிட்டே வேணுமா ன்னு கேட்டுட்டீங்க  "
"உனக்கு வேணுங்கிறதை கேட்டு வாங்கிக்கோ. ஏன் வெட்கப் படறே ?"
"யாருட்டேயும் எதுவும் கேட்டு வாங்கி சாப்பிடக் கூடாதுன்னு எங்கம்மா சொல்லி இருக்காங்க."
"நான் உன்னோட அண்ணா தானே ?"
"அது எங்க அம்மாவுக்கு தெரியாதுதானே " என்றான் அப்புமணி 
சுண்டல் விற்பவரைக் கூப்பிட்டு "இந்தப் பையன் கையில் சுண்டலும் ரெண்டு முறுக்கும் கொடுங்க " என்றான் சேகர் 
"முறுக்கு வேணும்னு நான் நினைக்கவே இல்லை. இருந்தாலும்  வாங்கிக் குடுத்துட்டீங்க . நீங்க ரொம்ப நல்ல அண்ணா "
"பாராட்டெல்லாம் போதும். சிந்தாமே சாப்பிடு " என்றான் சேகர்.
அதன்பின் கேள்வி எதுவும் கேட்காமல் மௌனமாக சாப்பிட்ட அப்புமணி "அண்ணா ... நான் கை அலம்பிட்டு கொஞ்ச நேரம் அலையில் விளையாடிட்டு வர்றேன்  " என்று சொல்லிவிட்டு கடலை நோக்கி ஓட ஆரம்பித்தான். 
அதே சமயம் அங்கு வந்த இரண்டு போலீஸ் கான்ஸ்டபிளில் ஒருவர், "ஸார் ... அங்கே பாருங்க .... அவனைப் பார்த்தால் காசிமேடு குண்டு வெடிப்பில் நாம தேடற ஆள் மாதிரி இல்லே ?" என்று சந்தேகம் கேட்டார்.
"உனக்கு முன்னயே  நான் வாட்ச் பண்ணிக்கின்னுதான் இருக்கிறேன் .." என்று சொன்ன மற்றொரு கான்ஸ்டபிள், சேகரை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.
அவர் வருவதைக் கவனித்து சுதாரித்துக் கொண்ட சேகர், வேகமாக எழுந்துஅங்கிருந்த ஜனக் கூட்டத்துக்குள் தன்னை ஒளித்துக் கொண்டான். சிறிது நேரம் இங்கும் அங்கும் சுற்றி அலைந்த  இருவரும் கடலை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள்.
"பெரிய மீன்   தப்பினா என்ன ! சின்ன மீன் இருக்கே. அதைப் பிடிச்சு வறுத்தா பெரிய மீன் இருக்கிற இடம் தெரிஞ்சிடப் போகுது" என்று சொல்லியபடி,கடலலையில் விளையாடிக்கொண்டிருந்த அப்புமணியின் கைகளை உடும்புப் பிடியாகப் பிடித்தார்கள்.
தன்னை சுற்றி நடப்பது என்ன என்பதே தெரியாமல் அப்புமணி நிற்க, அதை சேகர் கவனிக்கத் தவற வில்லை. 
---------------------------------------------------------------- தொடரும் -----------------------------------------------  

Sunday, January 24, 2016

குழந்தைகளுக்கான குறுந்தொடர் - 24

                               
    அச்சுப்பிச்சு அப்புமணி !
அப்புமணியுடன் வெளியேறிய சேகர், "அச்சுப்பிச்சு ... நீ ஊருக்குப் போக மாட்டேன்னு சொல்றே. உங்க அம்மாவுக்குப் போன் பண்ணிப்  பேசினியா ?" என்று கேட்டான்.
"போனா ?" என்று ஆச்சரியத்துடன் கேட்டான் அப்புமணி.
"ஆமாம் .. போன்தான் .. போன் நம்பர் தெரியுந் தானே ?"
"எங்க வீட்டில் போன் இல்லியே !" என்று அப்புமணிசொல்ல."என்ன..போன்இல்லையா ?"  என்று ஆச்சரியத்துடன் கேட்டான் சேகர்.
"ஆமாம் ... இல்லை "
"குழப்பாதே . ஆமாம்கிறே .. இல்லேங்கிறே .. இதில் எது சரி? " என்று சேகர் கேட்க, எ ..ங் ..க ..ள் ... எங்கள் ... வீ ... ட் .. டி .. ல் ..  ...வீ ட்டில் ... போ ..ன்..போன் ...இ ...ல் ... லை .... இல்லை.... இவ்வளவு தெளிவு போதுமா ?" என்று கேட்டான் அப்புமணி .
"என்னடா .. இது ? .. உலக மகா அதிசயம் ... போன் இல்லாமே ஒரு வீடா ? அதுவும் அப்புமணி வீடா ? அடுத்தவேளை சாப்பாட்டுக்கு வழியில்லாத பஞ்சப் பரதேசி கூட கையில் மொபைலோட திரியறான். நீ என்னடான்னா உங்க வீட்டில் போன் இல்லேன்னு சொல்றே ... சரி வா ... பக்கத்தில்தான் போஸ்ட் ஆபீஸ். ஒரு போஸ்ட் கார்ட் வாங்கி எழுதிப் போட்டுட்டுப் போயிடலாம்" என்று சொல்லி  போஸ்ட் ஆபீசுக்குப் போய் ஒரு போஸ்ட் கார்ட் வாங்கிக் கொண்டு வெளியில் வந்த சேகர், "உங்க அம்மாவுக்கு என்ன எழுதலாம்? நீ நல்லா இருக்கிறதா எழுதலாமா?" என்று கேட்க , "எங்க அம்மாக்கு நாந்தான் எழுதுவேன் " என்று குதித்தபடி சொன்னான் அப்புமணி 
"சரி ... உங்க அம்மாவுக்கு நீயே எழுது ..எழுதிட்டு இங்கேயே இருக்கணும். நான் ஒரு ப்ரெண்டைப்பார்த்துட்டு இதோ வந்துடறேன்" என்று சொல்லிச் சென்ற  சேகர், அரை மணி நேரம் கழித்துத் திரும்பி வந்தான்.
"என்ன அச்சு ! எழுதினியா ? கார்டைக் காட்டு .. என்ன எழுதினேனு பார்க்கலாம் " என்றான் சேகர் 
"கார்டை நான் பெட்டிக்குள்ளே போட்டுட்டேன் " என்றான் அப்புமணி. 
"எந்தப் பெட்டிக்குள் ?" என்று அதிர்ந்து போய் சேகர் கேட்க, "அதோ .. அங்கே இருக்குதே ஒரு சிவப்புப் பெட்டி ... அதில்தான் போட்டேன் " என்று பதில் வந்தது அப்புமணியிடமிருந்து .
"நல்ல வேளை .. அதையாவது சரியா செஞ்சியே .. ஆமா ... உங்க அம்மாவுக்கு என்ன எழுதினே ?"
"அதெல்லாம் சொல்ல மாட்டேன்."
"எழுதினேதானே ?"
"ஆமாம் " என்று உறுதியாக சொன்னான் அப்புமணி.
இது முடிந்த இரண்டாம் நாள் ;;;----
அப்புமணியின் வீட்டில் அவனது அம்மா, உடல் நலம் மனநலம் பாதிக்கப் பட்டு படுத்த படுக்கையில் இருந்தாள். அம்மாவை சாப்பிட வைக்கவும் தூங்க வைக்கவும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ரொம்பவும் சிரமப் பட்டார்கள். இந்தப் பையன் வீட்டை விட்டுப்போய் இத்தனை நாளாகியும் ஒரு தகவலும் தெரியலையே என்று மிகவும் வருத்ததுடன் சொல்லிக்  கொண்டார்கள் .
"அவன்தான் அறியாப்பிள்ளை, வீட்டை விட்டுப் போறேன்னு சொன்னா, நீயும் அப்பிடியே விட்டுடுவியா ! ரெண்டு தட்டு தட்டி வீட்டுக்குள் போட்டுப் பூட்டி வைக்க வேண்டாமா ?" என்று ஆதங்கப் பட்டார் பக்கத்து வீட்டுத் தாத்தா.
"போகக் கூடாதுன்னு நான் தடுத்தால், எனக்குத் தெரியாமே வீட்டை விட்டு ஓடிப் போயிடுவேன்னு சொன்னான்" என்று முனகிய குரலில் சொன்னாள் அம்மா.
அப்போது, "போஸ்ட் " என்ற குரல் வாசல் பக்கமிருந்து கேட்டது .
வயதான காலத்திலும் "குடுகுடு வென்று" ஓடிப் போய் அதை வாங்கி வந்த தாத்தா ... "உன் புள்ளைதான் கார்ட் போட்டிருக்கான் " என்றார்.
அதைக் கேட்டு படுக்கையிலிருந்து துள்ளி எழுந்த அம்மா, " என்ன எழுதி இருக்கான் ?  எங்கே இருக்கானாம் ? எப்படி இருக்கானாம் ?" என்று படபடப்புடன் கேட்டாள் 
அந்தக் கேள்விக்குப் பதில் சொல்லாமல் மௌனமாக இருந்தார் தாத்தா.
பொறுமையிழந்த அம்மா,வேகமாக எழுந்து வந்து அவரது கையிலிருந்த கார்டை வாங்கிப் படித்தாள்.. படித்து விட்டு "ஓ " என்று அழ ஆரம்பித்தாள்.
அம்மாவை சுற்றி நின்றவர்கள் ... "என்னம்மா ... என்ன எழுதி இருக்கிறான் ...நல்லாதானே இருக்கான் ?" என்று பதறிப் போய்க் கேட்க, "எத்தனை உலகத்தை சுத்தினாலும் இவனுக்குப் புத்தியே வராது... உருப்படியா ஏதாது எழுதி இருக்கானா ? 'அம்மா ... நான் அப்புமணி'னு மட்டும் எழுதி இருக்கான். இப்படி ஒரு அசடைப் பெத்து வளர்த்துட்டேனே ... எல்லாம் நான் செய்த பாவம். கட்டின புருஷன் இருக்கிற இடம் தெரியாமே தவிக்கிறது போதாதுன்னு பெத்த பிள்ளை என்ன ஆனான்னு தெரியாமத் தவிக்கிற நிலையை எனக்குக் குடுத்திட்டியே சாமீ ...நான் அப்படி என்ன தான் பாவம் பண்ணினேன்.  அதையாது சொல்லேன் " என்று தலையில் அடித்துக் கொண்டு அழ, அழும் அம்மாவை எப்படித் தேற்றுவது என்பது தெரியாமல் அங்கிருந்தவர்கள்  ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்தபடி நின்று கொண்டிருந்தார்கள் .
"அம்மா ... அந்தக் கார்டைக் குடு ... எங்கேருந்து வந்திருக்குன்னு பார்க்கலாம் " என்று சொல்லிக் கார்டை கையில் வாங்கிப் போஸ்ட் கார்ட் மீதிருந்த முத்திரையைப் பார்த்தார். அது தெளிவே இல்லாமல் மங்கிப் போயிருந்தது.
"அவன்தான் இருக்கிற இடம் பத்தி எழுதலே.  முத்திரையை வச்சுக் கண்டு பிடிக்கலாம்னு பார்த்தா ... அது இவ்வளவு மோசமா இருக்கே .. என்னதான் உத்தியோகம் பார்க்கிறானுகளோ தெரியலே " என்று கோபத்துடன் சொன்னார்.
அதைக் கேட்ட அம்மா, மேலும் அழ ஆரம்பிக்க, "அழாதேம்மா ... லட்டர் போடணுங்கிற அளவுக்கு உன் புள்ளைக்கு ஒரு முதிர்ச்சி வந்திருக்கே. அதுவே பெரிய விஷயம்.  இப்போ அவன் எங்கியோ இருக்கிறாங்கிறது தெரிஞ்சு போச்சு. உன்னை விட்டுட்டு அவனாலே இருக்க முடியாது. கூடிய சீக்கிரம் வந்துடுவான்..நீ சூடா ஒரு வாய் பாலாவது குடிம்மா " என்று தாத்தா சொல்ல, "சரி " என்று தலையசைத்த அம்மா, மெதுவாக எழுந்து சாமி ரூமுக்குப் போய் அப்புமணி எழுதிய கார்டை விளக்கின் அடியில் வைத்துவிட்டு,"என் பிள்ளையை சீக்கிரம் என்னிடம் கொண்டு வந்து சேர்க்கணும் " என்று மனதுக்குள் வேண்டிக் கொண்டிருந்தாள்.
"கார்டைப் பார்த்ததுமே  அம்மாவுக்குத் தெம்பு வந்துட்டுது. அவங்களை யாரும் தொந்தரவு பண்ணாமே எல்லாரும் இங்கேருந்து கிளம்புங்க " என்று தாத்தா சொல்ல, எல்லோரும் அங்கிருந்து கிளம்பிப் போனார்கள் .
--------------------------------------- தொடரும் ------------------------------------------------------------------------- 

Friday, January 15, 2016

குழந்தைகளுக்கான குறுந்தொடர் - 23

                           
             அச்சுப்பிச்சு அப்புமணி !
அப்புமணியை அழைத்துக் கொண்டு ராஜு, ரமேஷைத் தேடி அவன் ரூமுக்கு வந்தான். அவனுக்கு முன்பாகவே ரமேஷ் அங்கு வந்து விட்டான். கூடவே சேகரும் இருக்கிறான் என்பதை வாசல் வரை கேட்கும்  பேச்சுக்  குரலை வைத்துத் தெரிந்து கொண்டான். ராஜு. 
"தம்பி உன் பேரு என்னவோ சொன்னியே " என்று ராஜு யோசிக்கும் போதே "அச்சுப்பிச்சு அப்புமணி " என்று சொன்னான் அப்புமணி.
"பேர் ரொம்ப சின்னதா இருக்குதே. இன்னும் கொஞ்சம் பெரிசா வச்சிருக்கலாமே " என்று கிண்டலான குரலில் ராஜு கேட்க, "உலகத்தை சுத்திப் பார்க்க வந்திருக்கும் அச்சுப்பிச்சு அப்புமணினு வச்சுக்கலாமா  " என்று கேட்டான் அப்புமணி. 
"இந்தப் பேரும் ரொம்பவும் சின்னதா இருக்குது. அப்புறமா உக்காந்து யோசனை பண்ணி வேறே பேர் வைக்கலாம். நீ இங்கேயே நிக்கணும். நான் உன் பேரை சொல்லி கூப்பிடறப்போ நீ உள்ளே வரணும் " என்று ராஜு சொல்ல, "சரி" என்பதுபோல தலையை ஆட்டினான் அப்புமணி.
ரூமுக்குள் நுழைந்தவன் அங்கிருந்த ரமேஷைப் பார்த்து டென்ஷனாகி, " உன்னை அப்படியே ரெண்டு அப்பு அப்பினா தெரியும் சேதி. ஏன்டா .. ஏர் போர்ட்டுக்கு உடனே  கிளம்பி வா. நான் வாசலில் நிக்கிறேன்னு நீ தானே கூப்பிட்டே.உன் பேச்சை நம்பி நான் அங்கேவந்தால்,உன்னை எங்கேயும்  காணலே. ஏன்... என்னைப் பார்த்தால் கேணக் கிறுக்கனாட்டம் தெரியுதா ? " என்று கோபமாகக் கேட்டான் ரமேஷ் 
"போச்சுடா...  நீ எப்படின்னு உனக்கே சந்தேகம் வந்துடுச்சா ... சரி .. விடு .. மாமூ .. நம்ம அக்பர் இல்லே .... அதான் பெங்களூரு பார்ட்டி.  அவன் போன் பண்ணி இருந்தான்.வெளிநாட்டிலிருந்து ஒரு சின்ன சாக்லேட் சென்னை வந்திருக்குது. அதைத் தூக்கினால் லம்பாத் தேறும்.  பாலோ பண்ணி தகவல் குடுன்னு. அதான் உன்னை அங்கே வர சொன்னேன். நான் போறதுக்கு முன்னாடியே சாக்லேட் ப்ளைட்டில் பறந்துடுச்சு. அதை அக்பருக்கு சொல்லிட்டு நான் கிளம்பி வந்துட்டேன்."
"அதை எனக்கு சொல்லி இருக்கலாந்தானே. தேவையே யில்லாமே நான் அங்கே நின்னு  தேவு காக்கிறேன்."
"இல்லேடா ராஜு .... நாய் ஒண்ணு என்னை முறைக்கிற மாதிரி பட்டுச்சு. அதான் அங்கேருந்து உடனே கெளம்பிட்டேன். ஸாரி .. மாமூ " என்று விளக்கம் சொன்னான் ரமேஷ். 
"சரி ... சரி .." என்ற ராஜு , சேகரிடம் , "சின்னப் பையன் வேணும்னு சொல்லிட்டுருந்தோம்தானே. மீனம்பாக்கத்தில் ஒரு பொடிசு மாட்டுச்சு. அள்ளிப் போட்டுட்டு வந்துருக்கிறேன் " என்று சொல்லி விட்டு வாசல் பக்கம் பார்த்து "டேய் தம்பி " என்று குரல் கொடுக்கவும் அப்புமணி அந்த அறைக்குள் நுழைந்தான்.
அப்புமணியைப் பார்த்ததுமே அசந்துபோன சேகர் , "நீ அச்சுப் பிச்சுதானே ?" என்று ஆச்சரியமாகக் கேட்டான்.
"ஆமாம்.. என் பேரு உங்களுக்கு எப்படித் தெரியும் ?" என்று அப்புமணி கேட்டான்.
"என்னைஉனக்குஅடையாளந் தெரியலியா?...அன்னிக்கு ஒரு கிராமத்தில்  .... அது என்ன கிராமம் ...? அடடா ... அந்தக் கிராமத்தோட பேர் மறந்து போச்சே ... நீ கூட எனக்கு சாப்பாடு , ஸ்நாக்ஸ் எல்லாந் தந்தியே " என்று சேகர் சொல்ல ..."நான் யார் கேட்டாலும் சாப்பாடு தருவேன். " என்று அப்புமணி சொல்ல , " நான் ரோட்டோரம் மயங்கிக் கிடந்தேன்.. நீ .." என்று சேகர் சொல்லும்போதே, "ஓ அந்த அண்ணாவா ? அப்போ தாடி இருந்துச்சே "என்று அப்புமணி சொல்ல, "அந்த அண்ணனே தான்.  ஆமாம் .. நீ எப்படி இங்கே ?" என்று அப்புமணியைப் பார்த்துக் கேட்கும்போதே அவனது கண்கள் ராஜுவை சந்தேகப் பார்வை பார்த்தது.
"என்னை ஏண்டா அப்படிப் பார்க்கிறே ? நான் இங்கேருந்து கிளம்பிப் போய் ரெண்டு மணி நேரந்தான் ஆகுது. அந்த டைமுக்குள் ஒரு கிராமத்து க்குப்போய் தூக்கிட்டு வந்திட முடியுமான்னு  கணக்குப் போட்டுப் பாரு. ஏர்போர்ட் வாசலில் சுத்திட்டு இருந்தான். அள்ளிப் போட்டுட்டு வந்தேன். இந்தப் பையனை உனக்கு முன்னமே தெரியுமா " என்று கேட்டான் ராஜு 
"தெரியும்னு சாதாரணமா சொல்லிட முடியாது. அன்னிக்கு மட்டும் இந்தப் பையன் எனக்கு தண்ணியும் சாப்பாடும் தந்திருக்காட்டா என் கதை அங்கேயே முடிஞ்சு போயிருக்கும்" என்று சொல்லி விட்டு, "அச்சுப்பிச்சு .. நீ யாரோட வந்தே ? எங்கே வந்தே ?" என்று கேட்டான் சேகர்.
"நான் உலகத்தை சுத்திப் பார்க்க வந்தேன் " என்று அப்புமணி சொல்ல அதைக்கேட்ட ரமேஷும் சேகரும் வாய்விட்டு சத்தம்போட்டு சிரித்தனர்.
'இதை... இதைதான்...இந்த லூஸு அப்பவே பிடிச்சு சொல்லிட்டு இருக்குது. உலகத்தை சுத்திப் பார்க்க வந்தேன்னு சொல்லிட்டு ஏர்  போர்ட் பக்கம் சுத்திட்டு இருந்துது. ஒருவேளை ஏர் போர்ட்டைதான் உலகம்னு நினைச்சிட்டு இருக்குதோ என்னவோ " என்று கிண்டலான குரலில் சொன்னான் ராஜு .
"சும்மா இரு " என்று அவனை அடக்கிய சேகர், " அச்சு . உன்னோடு  யார் வந்திருக்காங்க ? " என்று கேட்டான்.
"நான் மட்டுந்தான் .."
"உங்க அம்மா உன்னை எப்படித் தனியா அனுப்பினாங்க ?"
"உருப்படாத ராஜகுமாரன் மாதிரி நானும் உலகத்தை சுத்திப் பார்த்துட்டு பெரிய ஆளா வந்தால் எங்க அம்மா சிரிப்பாங்கதானே ?"
"இப்போ உன்னைப் பார்க்காமே அழ மாட்டாங்களா ?"
"அழுவாங்க ... அப்புறம் கண்ணைத் தொடச்சுக்குவாங்க"
"தப்பு தம்பி ... நீ இப்பவே ஊருக்குக்  கிளம்பு. அம்மா பாவந்தானே ?"
"பாவம் பார்த்தால் நான் எப்ப பெரிய ஆளா வர்றது ?" என்று எதிர்க் கேள்வி கேட்டான் அப்புமணி 
"ராஜு.. இவன் நம்ம வேலைக்கு வேண்டாம்." என்று சேகர் சொல்ல , "அண்ணா .. நான் உங்களைக் காப்பாத்தினதா இப்பத்தானே சொன்னீங்க. உதவி செஞ்ச எனக்கு ஒரு வேலை தர மாட்டீங்களா ?"  என்று கேட்டான் அப்புமணி .
"வேண்டாம் ... தம்பி .. அந்த வேலை எங்களோட இருக்கட்டும். உனக்கு வேண்டாம் " என்றான் சேகர்.
"அப்படின்னா நான் இங்கேருந்து போயிடுவேன் "
"போ ... உங்க ஊருக்கு ... உன்னோட வீட்டுக்குப் போ "
"ஊஹூம்..மாட்டேன். நான் உலகத்தை சுத்திப் பார்த்துட்டுதான் எங்க  வீட்டுக்குப் போவேன்  " என்று பிடிவாதமான குரலில் அப்புமணி சொல்ல ,இந்த மனநிலையில் இவனை வீட்டுக்குப் போ என்று சொன்னால் , அவன்  வீட்டுக்குப் போகாமல் வேறெங்காவது போய்விடுவான் என்று நினைத்த  சேகர், அதற்கு இடம் கொடுக்கக் கூடாது என்ற தீர்மானத்துடன், "சரி ... நீ .. இங்கே இரு.. வேலை பாரு .. இப்போ என்னோட வீட்டுக்குப் போகலாம் " என்று சொன்ன சேகர் , "ராஜு ... நாம அப்புறமா பேசலாம். இப்போ இவனை நான் கூட்டிட்டுப் போறேன் " என்று சொல்ல, சரி என்று தலையசைத்தான் ராஜு. 
-------------------------------------------- தொடரும் --------------------------------------------------------





Thursday, January 14, 2016

                   அனைவருக்கும் அன்பின் இனிய 
                      பொங்கல் நல்வாழ்த்துக்கள் !



Sunday, January 10, 2016

குழந்தைகளுக்கான குறுந் தொடர் - 22

                                 
              அச்சுப்பிச்சு அப்புமணி !
நிவேதிதாவுடன் சேர்ந்து கடற்கரையில் விளையாடிய அப்புமணி, "நாம இன்னும் உள்ளேபோய்ப்பார்க்கலாமா?" என்று கேட்டான்.
"இல்லே .. அப்பு ... நம்மள இவங்க அலவ் பண்ண  மாட்டாங்க "
"அப்படின்னா .... ?"
"நம்மள அங்கே போக விட மாட்டாங்க. நாம அஞ்சு ரதம் பார்த்தாச்சு. நிறைய சிலைகள் சிற்பங்கள் எல்லாம் பார்த்தாச்சு.கடற்கரை வரை கூட்டிட்டு வந்ததே பெரிய விஷயம். இப்பப் போய்க் கடலுக்கு உள்ளே போய்ப் பார்க்கப் போறோம்னு சொன்னா அவங்க விடவே மாட்டாங்க." என்று சொன்னாள் நிவேதிதா .
"அவங்க யாரு விடறதுக்கும், விடாததுக்கும்.  நாம போகலாம் வா " என்றான் அப்புமணி 
"நோ.  அப்பு. இப்ப நாம அவங்க கண்ட்ரோலில் இருக்கிறோம். உன்னை அவங்க அலவ் பண்ணினதே பெரிய விஷயம் ... இப்பப் போய் நாம அங்கே போறோம் இங்கே போறோம்னு சொன்னா, உடனே இவங்க அதை என்னோட தாத்தாவுக்கு இன்பார்ம் பண்ணிடுவாங்க.அப்புறம் தாத்தா என்னை எங்கேயும் போகவிட மாட்டார்." என்று விளக்கினாள் நிவேதிதா.
"ஹோட்டலில் போய் சாப்பிடலாமா?" என்று அப்புமணி கேட்டபோது, " இல்லே.. நமக்காக ஒரு இடத்தில் தனி மீல்ஸ் ரெடியா இருக்கும். அதைத்தான் சாப்பிடணும் " என்றாள் நிவேதிதா.
"அய்யய்யோ ... பெரிய இளவரசி மாதிரி நடந்து வர்றே. ஆனா  இவங்க கிட்டே கேட்டுட்டு தான் எதுவும் செய்யணும்னு சொல்றே .. உனக்கு போரடிக்கலே ?" என்று சந்தேகம் கேட்டான் அப்புமணி.
"நோ. அப்பு....நம்ம சேப்டிக்கை நினைச்சுதானே நம்மள இவங்க, அவங்க  கண்ட்ரோலில் வச்சிருக்காங்க "
"அட போப்பா ... இதெல்லாம் நமக்கு ஒத்து வராது. நான் உன்னோடே சேர்ந்து சாப்பிட வரலேப்பா ...அங்கே போய் உக்காந்துட்டு அதை சாப்பிடாதே  .. இதை சாப்பிடாதே.. அப்படி சாப்பிடு ... இப்படி சாப்பிடுன்னு நீ  சொல்வே. இதெல்லாம் எனக்கு சரிப்பட்டு வராது. நான் உலகத்தை சுத்திப் பார்க்க கிளம்பறேன் " என்றான் அப்புமணி 
"என்னடா அப்பு... நீ இவ்வளவு அசடா இருக்கிறே ?  உலகத்தை சுத்தி வர்றது அவ்வளவு லேசான விஷயமா என்ன ?"
"நான் போறேன் " என்று அப்புமணி சொல்ல, அங்கிருந்து கிளம்பி கார் நின்றிருந்த இடத்துக்கு அப்புமணியை அழைத்து சென்ற நிவேதிதா, ட்ரைவரை அழைத்து சில இன்ஸ்ட்ரக்க்ஷன் கொடுக்க, அடுத்த சில நிமிடங்களில்  ஒரு பையை சுமந்து வந்தார் டிரைவர்.
அதை அப்புமணி கையில் கொடுத்த நிவேதிதா,"இதிலே உனக்கு ப்ரூட்ஸ் பிஸ்கெட்ஸ், ஸ்நாக்ஸ் இருக்குது. பார்த்து... ஜாக்கிரதை... உலகத்தை சுத்திப் பார்க்க ரூட் தெரியலேன்னா, வீட்டுக்குக் கிளம்பிப் போயிடு" என்று  சிரித்துக் கொண்டே சொன்னாள்.
"சரி" என்று சொல்லி அப்புமணி கிளம்ப, அருகிலிருந்த செக்யூரிட்டி ஒருவரிடம்   பேசிவிட்டு வந்த நிவேதிதா .... "அப்பு... ஸ்டாப் .... நாங்க உன்னை சென்னையில் இறக்கி விட்டுடறோம்"என்றுசொல்ல அப்புமணி அதற்க்கு தலையசைத்து சம்மதம் தெரிவித்தான். 
அடுத்த சில மணி நேரங்களில் அப்புமணி நிவேதிதாவுடன் சேர்ந்து சென்னையை நோக்கிப் பயணித்தான். 
"அப்பு .. உன்னை எங்கே டிராப் பண்ணணும் ?" என்று நிவேதிதா கேட்க, அப்புமணி விழித்தான். அதைப் புரிந்து கொண்ட நிவேதிதா "உன்னை எங்கே இறக்கி விடணும்?" என்று கேட்டாள். 
"நீ எங்கே இறங்குவே ?"
"நான் சென்னை  ஏர்  போர்ட் போய் அங்கேருந்து டில்லி போயிடுவேன்."
"அப்படின்னா நீ இறங்கி உள்ளே போயிடு.. நான் வெளியே போயிடறேன் "என்று அப்புமணி சொல்ல, ஏர் போர்ட் வாசலில் காரை நிறுத்த சொன்ன நிவேதிதா "அப்புமணி.. இறங்கி ஜாக்கிரதையா போ. ரொம்ப சுத்தாமே வீட்டுக்குப் போயிடு. அம்மா தேடுவாங்கதானே? என்று சொல்லிக்  கை யசைத்து விடை கொடுக்க, " டாட்டா " என்று கைகளை அசைத்து விடை கொடுத்தான் அப்புமணி. அவனை இறக்கி விட்ட பின் நிவேதிதாவின் கார் சென்னை ஏர்  போர்ட்டுக்குள்  பறந்தது.
சென்னையில் சேகரின் அறைக்கு வந்த ராஜு , " நம்ம தொழிலுக்கு சின்னப் பசங்க யாராவது தேறுவாங்களானு பார்க்கணும்  " என்றான்.
"ஏன் ?"
"போலீஸ் கெடுபிடி அதிகமா இருக்குது. சின்னப் பசங்கன்னா ரொம்ப சந்தேகம் வராது " என்று சொன்னான் ராஜு 
"சரி . நம்ம சகா கிட்டே சொல்லி வைக்கிறேன் " என்று சேகர் சொல்லிக் கொண்டிருக்கும் போது ராஜுவின் மொபைல் ஒலித்தது.
எடுத்துப் பேசிய ராஜு  "சேகர் ஒரு அவசர வேலை ... நான் மீனம்பாக்கம் வரை போயிட்டு வந்திடறேன். வந்து விவரம் சொல்றேன்" என்று சொல்லி விட்டு அங்கிருந்து வேகமாகக் கிளம்பி மீனம்பாக்கம் வந்து ரமேஷின் வருகைக்காகக் காத்திருந்தான் .
அப்போது கையில் பையுடன் அங்குமிங்குமாக திரிந்து கொண்டிருந்த அப்புமணி அவன் கண்களில் பட்டான் 
'டேய் ... தம்பி இங்கே வாடா " என்று அதட்டலான குரலில் அழைக்க அவனருகில் வந்த அப்புமணி, " நான் தம்பி இல்லே. எங்க வீட்டில் நான் மட்டுந்தான். என் பேரு அச்சுப்பிச்சு அப்புமணி " என்றான்.
"இங்கேயும் அங்கேயுமா திரியறே. யார் நீ ? எங்கே வந்தே? அட்ரஸ் எதையாது தொலைச்சிட்டு தேடித் திரியறயா ?"
"இல்லே "
"உங்க வீடு எங்கே இருக்குது ?"
"ஊர்லே இருக்குது "
"இங்கே என்ன பண்றே?யார் வீட்டுக்கு வந்திருக்கிறே ?"
"நான் உருப்படாத ராஜகுமாரன் மாதிரி உலகத்தை சுத்திப் பார்க்க வந்திருக்கிறேன்  "
இதைக் கேட்டு அதிர்ந்துபோன ராஜு,"தம்பி, வேலை குடுத்தா செய்வியா ?" என்று கேட்டான்.
"திருடக் கூடாது.. பிச்சை எடுக்கக் கூடாதுன்னு தான் எங்க அம்மா சொல்லி இருக்காங்க. வேலை செய்யக் கூடாதுன்னு சொல்லலே ? எந்த ஆபீசில் வேலை  ?" என்று அப்பாவித் தனமாகக் கேட்டான் அப்புமணி .
"கலெக்டர் ஆபீசில் ...கலெக்டர் வேலை.... செய்வியா ?"
"சொல்லிக் குடுத்தா செய்வேன். ஆனா...கோட்டுசூட்டு..டை .. இதெல்லாம் வேணுமே "
"போற வழிலே வாங்கிக்கலாம் " என்று சொல்லிய ராஜு, ரமேஷைத் தேடிப் பார்த்தான். அவன் கண்ணில் தட்டுப்படாததால் அப்புமணியை அழைத்துக் கொண்டு சேகரைப் பார்க்கக் கிளம்பினான். 
---------------------------------- தொடரும் -------------------------------------------------------------------------------- 

Friday, January 01, 2016

குழந்தைகளுக்கான குறுந் தொடர் - 21

                                                                 
 அச்சுப்பிச்சு அப்புமணி !
பலவேறு பகுதிகளை சேர்ந்த மாணவர்களும், ஆசிரியர்களும் குழந்தை களும் அந்த சுற்றலா பயணத்தில் இருந்ததால்,அப்புமணியை அந்தக் கூட்டத்துக்குக் கொஞ்சமும்  சம்பந்தமில்லாத ஆளாக யாருமே நினைக்க வில்லை. 
குழந்தைகள் எல்லோரும் ஆடல் பாடல் என்று பஸ்ஸுக்குள் இருந்த அனைவரையும் உற்சாகப்படுத்திக் கொண்டிருந் தார்கள். அதை அப்புமணி மிகவும் ரசித்தான். அவர்களின் தன்னை  மறந்த சந்தோசம் அப்புமணியையும் தொற்றிக் கொண்டது. பஸ்ஸின் முன் ஸீட்டில் உட்கார்ந்திருந்த ஆசிரியர்கள் தாங்கள் வாங்கிக் கொண்டு வந்திருந்த பன், பிஸ்கட் பாக்கெட்டுகளைப் பிரித்து அடுத்தவரிடம் கொடுக்க அது ஒவ்வொரு கையாக மாறி, கடைசி இருக்கை வரை வந்து சேர்ந்தது. அதை அப்புமணி ரசித்து சாப்பிட்டான். அந்த சந்தோசம் சில மணி நேரங்கள்தான். இதற்குள் மஹாபலிபுரம் வந்து விடவே, பஸ்ஸை ஓரங்கட்டிய டிரைவர், எல்லாரும் இறங்கலாம் என்று குரல் கொடுத்தார்.
பஸ்ஸை விட்டு இறங்கிய மாணவர்கள் இரண்டு இரண்டு பேராக கை கோர்த்துக் கொள்ள, கடைசியாக இறங்கிய அப்புமணி மாணவர்களின் வரிசையில் நிற்காமல் தனது எதிரே தெரிந்த பாதையில் நடக்க ஆரம்பித்தான். "டேய்...இங்கேவா " என்று மாணவன் ஒருவன் கூப்பிட்டது அப்புமணியின்  காதுகளில் விழவே இல்லை. தன் போக்கில் நடந்து கொண்டிருந்தான். ஆசிரியர் ஒருவர் மாணவர்களின் எண்ணிக்கையை சரி பார்த்து  விட்டு, "எல்லாரும் ஒரு ஓரமாக நடக்க ஆரம்பிக்கலாம் " என்று குரல் கொடுத்ததும் மாணவர்களின் அணிவகுப்பு தொடங்கியது.
தெருவோரம் சிலை செதுக்கிக் கொண்டு இருந்தவர்களை வேடிக்கை பார்த்தபடி  அப்புமணி நடந்து கொண்டிருக்க, அவனருகில் வந்த ஒருவர் , "தம்பி, உலைக்கன்னேசுவரர் கோவிலுக்கு எப்படிப் போகணும் ?" என்று கேட்டார். 
"தெரியாது. நான் வேறே ஊர் ... இந்த ஊரில் இருக்கிறவங்களைக் கேட்டுப் பாருங்க  " என்றான் அப்புமணி.
"வேறே ஊர்னு சொல்றே ! தனியாக நடந்து வர்றே ... உன்னோடு சேர்ந்து யாரும் வரலியா?"
"வரலே "
"காலங் கெட்டுக் கிடக்குது. தனியா வந்தேன்னு சொல்றே .. உலகந் தெரியாதபிள்ளையா இருக்கிறியேப்பா" என்று கவலையுடன் சொன்னார் அவர். 
"அதைத் தெரிஞ்சுக்கத் தானே நான் வீட்டை விட்டு வந்திருக்கிறேன் " என்று அப்புமணி சொல்ல, அவனை விநோதமாகப் பார்த்தார் அவர்.
இதற்குள் அங்கு வந்த போலீஸ் காரர் ஒருவர்."ஏய் .. ஓரமா நின்னு கதை பேசு " என்று லத்தியை சுழற்றியபடி வந்தார். அப்புமணியிடம் பேசிக் கொண்டிருந்த அந்த நபர், "என்ன ஸார் போலீஸ் கெடுபிடி அதிகமா இருக்குது. யாராவது பெரிய மனுஷங்க வர்றாகளா ?" என்று கேட்டார்.
"பெரிய மனுஷன் வீட்டுப் பொண்ணு தான் இந்தக் காய்ஞ்ச பூமியையும்  பாறாங் கல்லையும் சுத்திப் பார்க்க வருது " என்று சலிப்புடன் சொன்னார் போலீஸ் காரர். 
"இந்த ஊரிலேயே இருக்கிற உங்களுக்கு இந்த இடமெல்லாம் தினமும் பார்த்துப் பார்த்து அலுத்துப் போன ஒண்ணு . எங்களைப் போல புதுசா வர்றவங்களுக்கு இது  ஆச்சரியமான ஒன்று .. எங்கே பார்த்தாலும் கற்சிலை .. என்னவொரு கலைவண்ணம் .. என்னவொரு ரசனை !" என்று அவர் சொல்ல, "அதை ஒரு ஓரமா நின்னு ரசிங்க " என்று கடுகடுத்தார் கான்ஸ்டபிள்.
அப்போது கப்பல் போன்ற பெரிய கார் ஒன்று வந்து நிற்க அதிலிருந்து தேவதை போல் இறங்கி வந்தாள் சிறுமி ஒருத்தி. அவள் பின்னாலேயே காவலர்கள் ஓடி வந்தார்கள். அப்போது ... யாருமே எதிர்பாராத விதத்தில் அவளருகில் ஓடி சென்ற அப்புமணி, "உன்னைப் பார்த்தால் கதையில் வர்ற தேவதை மாதிரி இருக்குது" என்றான்.
காவலர்களின் வலிய கரங்கள் அப்புமணியின் தோள்களை இறுக்கிப் பிடிக்க, "லீவ் ஹிம்.  நோ ப்ராப்ளெம் ... லெட் ஹிம் டு கம் வித் மீ " என்று அந்த சிறுமி சொல்ல, "மேம் " என்று அவர்கள் தயங்கினாலும் , அந்த சிறுமி சொன்னதால் அப்புமணியை செக் பண்ணி விட்டு அவர்களுடன் அப்புமணி சேர்ந்து வர அனுமதித்தார்கள் .
"உன் பேர் என்ன ?" என்று கேட்டாள் அந்த சிறுமி 
"ஹே .. அவங்க கிட்டே 'தஸ்ஸு புஸ்ஸு'ன்னு இங்கிலீஷில் பேசினே. என்கூட தமிழில் பேசறே ! உனக்கு தமிழ் தெரியுமா ? உங்க வீடு எங்கே இருக்குது ? என் பேரு அச்சுப்பிச்சு அப்புமணி. உன்னோட பேர் என்ன? " என்று அப்புமணி கேட்டான்.
"ஓ .. அச்சுப்பிச்சு ... ரொம்ப வித்தியாசமான பேரா இருக்குதே. இது யார் வச்ச பேர்.? நான் அமெரிக்காவிலிருந்து வர்றேன். என்னோட பேர் நிவேதிதா. எங்க தாத்தா ஒரு மீட்டிங் விஷயமா இந்தியா வந்தார். இந்தியாவைப் பார்க்கணும்னு எனக்கு ரொம்பவும் ஆசை "
"அச்சுப்பிச்சுங்கிற பேரை என்னோடு படிக்கிறவங்க என்னோட பிரெண்ட் வச்சாங்க.உனக்குஇந்தியாவைப் பார்க்க ஆசை..எனக்கு அமெரிக்காவைப் பார்க்க ஆசை. இப்போ நான் உலகத்தை சுத்திப் பார்க்கத்தான் எங்க வீட்டை விட்டு ஊரை விட்டு வந்திருக்கிறேன் " என்றான் அப்புமணி ரொம்பவும் கேஷுவலாக .
"வாவ் .. உலகத்தை சுத்திப் பார்க்கக் கிளம்பி வந்திருக்கியா ? நீ நார்மலாத் தானே இருக்கிறே ?  " என்று ஆச்சரியமாகக் கேட்டாள் நிவேதிதா 
"நீ கேக்கிறது ஒண்ணுமே புரியலே .. இங்கே கடல் இருக்குது . நாம கடல் தண்ணீரில் காலை நனைச்சு விளையாடலாமா? " என்று கேட்டான் அப்புமணி.
"உங்க வீட்டில் உன்னைத் தேட மாட்டாங்களா ?" என்று கேட்ட நிவேதிதாவிடம், "நான் எங்க அம்மா கிட்டே சொல்லிட்டு தானே வந்தேன். நீ கடல் பார்க்க வர்றியா இல்லையா ... முதலில் அதை சொல்லு " என்று கேட்டான் அப்புமணி . 
"செக்யூரிட்டி கார்ட்ஸ் கிட்டே சொல்லலாம். நாம இப்போ அவங்க கண்ட்ரோலில் தான் இருக்கிறோம். " என்று சொன்ன நிவேதிதா, தனது விருப்பத்தை அவர்களிடம் ஆங்கிலத்தில் சொல்ல, அதை ஆச்சரியமாகப் பார்த்தபடி அப்புமணி நின்று கொண்டிருந்தான்  
"திஸ் பாய் ..." என்று அவர்கள் சொல்லும்போதே, " ஹீ வில் கம் வித் அஸ்" என்று நிவேதிதா சொல்ல, அனைவரும் கடற்கரையை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள் .