Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, January 15, 2016

குழந்தைகளுக்கான குறுந்தொடர் - 23

                           
             அச்சுப்பிச்சு அப்புமணி !
அப்புமணியை அழைத்துக் கொண்டு ராஜு, ரமேஷைத் தேடி அவன் ரூமுக்கு வந்தான். அவனுக்கு முன்பாகவே ரமேஷ் அங்கு வந்து விட்டான். கூடவே சேகரும் இருக்கிறான் என்பதை வாசல் வரை கேட்கும்  பேச்சுக்  குரலை வைத்துத் தெரிந்து கொண்டான். ராஜு. 
"தம்பி உன் பேரு என்னவோ சொன்னியே " என்று ராஜு யோசிக்கும் போதே "அச்சுப்பிச்சு அப்புமணி " என்று சொன்னான் அப்புமணி.
"பேர் ரொம்ப சின்னதா இருக்குதே. இன்னும் கொஞ்சம் பெரிசா வச்சிருக்கலாமே " என்று கிண்டலான குரலில் ராஜு கேட்க, "உலகத்தை சுத்திப் பார்க்க வந்திருக்கும் அச்சுப்பிச்சு அப்புமணினு வச்சுக்கலாமா  " என்று கேட்டான் அப்புமணி. 
"இந்தப் பேரும் ரொம்பவும் சின்னதா இருக்குது. அப்புறமா உக்காந்து யோசனை பண்ணி வேறே பேர் வைக்கலாம். நீ இங்கேயே நிக்கணும். நான் உன் பேரை சொல்லி கூப்பிடறப்போ நீ உள்ளே வரணும் " என்று ராஜு சொல்ல, "சரி" என்பதுபோல தலையை ஆட்டினான் அப்புமணி.
ரூமுக்குள் நுழைந்தவன் அங்கிருந்த ரமேஷைப் பார்த்து டென்ஷனாகி, " உன்னை அப்படியே ரெண்டு அப்பு அப்பினா தெரியும் சேதி. ஏன்டா .. ஏர் போர்ட்டுக்கு உடனே  கிளம்பி வா. நான் வாசலில் நிக்கிறேன்னு நீ தானே கூப்பிட்டே.உன் பேச்சை நம்பி நான் அங்கேவந்தால்,உன்னை எங்கேயும்  காணலே. ஏன்... என்னைப் பார்த்தால் கேணக் கிறுக்கனாட்டம் தெரியுதா ? " என்று கோபமாகக் கேட்டான் ரமேஷ் 
"போச்சுடா...  நீ எப்படின்னு உனக்கே சந்தேகம் வந்துடுச்சா ... சரி .. விடு .. மாமூ .. நம்ம அக்பர் இல்லே .... அதான் பெங்களூரு பார்ட்டி.  அவன் போன் பண்ணி இருந்தான்.வெளிநாட்டிலிருந்து ஒரு சின்ன சாக்லேட் சென்னை வந்திருக்குது. அதைத் தூக்கினால் லம்பாத் தேறும்.  பாலோ பண்ணி தகவல் குடுன்னு. அதான் உன்னை அங்கே வர சொன்னேன். நான் போறதுக்கு முன்னாடியே சாக்லேட் ப்ளைட்டில் பறந்துடுச்சு. அதை அக்பருக்கு சொல்லிட்டு நான் கிளம்பி வந்துட்டேன்."
"அதை எனக்கு சொல்லி இருக்கலாந்தானே. தேவையே யில்லாமே நான் அங்கே நின்னு  தேவு காக்கிறேன்."
"இல்லேடா ராஜு .... நாய் ஒண்ணு என்னை முறைக்கிற மாதிரி பட்டுச்சு. அதான் அங்கேருந்து உடனே கெளம்பிட்டேன். ஸாரி .. மாமூ " என்று விளக்கம் சொன்னான் ரமேஷ். 
"சரி ... சரி .." என்ற ராஜு , சேகரிடம் , "சின்னப் பையன் வேணும்னு சொல்லிட்டுருந்தோம்தானே. மீனம்பாக்கத்தில் ஒரு பொடிசு மாட்டுச்சு. அள்ளிப் போட்டுட்டு வந்துருக்கிறேன் " என்று சொல்லி விட்டு வாசல் பக்கம் பார்த்து "டேய் தம்பி " என்று குரல் கொடுக்கவும் அப்புமணி அந்த அறைக்குள் நுழைந்தான்.
அப்புமணியைப் பார்த்ததுமே அசந்துபோன சேகர் , "நீ அச்சுப் பிச்சுதானே ?" என்று ஆச்சரியமாகக் கேட்டான்.
"ஆமாம்.. என் பேரு உங்களுக்கு எப்படித் தெரியும் ?" என்று அப்புமணி கேட்டான்.
"என்னைஉனக்குஅடையாளந் தெரியலியா?...அன்னிக்கு ஒரு கிராமத்தில்  .... அது என்ன கிராமம் ...? அடடா ... அந்தக் கிராமத்தோட பேர் மறந்து போச்சே ... நீ கூட எனக்கு சாப்பாடு , ஸ்நாக்ஸ் எல்லாந் தந்தியே " என்று சேகர் சொல்ல ..."நான் யார் கேட்டாலும் சாப்பாடு தருவேன். " என்று அப்புமணி சொல்ல , " நான் ரோட்டோரம் மயங்கிக் கிடந்தேன்.. நீ .." என்று சேகர் சொல்லும்போதே, "ஓ அந்த அண்ணாவா ? அப்போ தாடி இருந்துச்சே "என்று அப்புமணி சொல்ல, "அந்த அண்ணனே தான்.  ஆமாம் .. நீ எப்படி இங்கே ?" என்று அப்புமணியைப் பார்த்துக் கேட்கும்போதே அவனது கண்கள் ராஜுவை சந்தேகப் பார்வை பார்த்தது.
"என்னை ஏண்டா அப்படிப் பார்க்கிறே ? நான் இங்கேருந்து கிளம்பிப் போய் ரெண்டு மணி நேரந்தான் ஆகுது. அந்த டைமுக்குள் ஒரு கிராமத்து க்குப்போய் தூக்கிட்டு வந்திட முடியுமான்னு  கணக்குப் போட்டுப் பாரு. ஏர்போர்ட் வாசலில் சுத்திட்டு இருந்தான். அள்ளிப் போட்டுட்டு வந்தேன். இந்தப் பையனை உனக்கு முன்னமே தெரியுமா " என்று கேட்டான் ராஜு 
"தெரியும்னு சாதாரணமா சொல்லிட முடியாது. அன்னிக்கு மட்டும் இந்தப் பையன் எனக்கு தண்ணியும் சாப்பாடும் தந்திருக்காட்டா என் கதை அங்கேயே முடிஞ்சு போயிருக்கும்" என்று சொல்லி விட்டு, "அச்சுப்பிச்சு .. நீ யாரோட வந்தே ? எங்கே வந்தே ?" என்று கேட்டான் சேகர்.
"நான் உலகத்தை சுத்திப் பார்க்க வந்தேன் " என்று அப்புமணி சொல்ல அதைக்கேட்ட ரமேஷும் சேகரும் வாய்விட்டு சத்தம்போட்டு சிரித்தனர்.
'இதை... இதைதான்...இந்த லூஸு அப்பவே பிடிச்சு சொல்லிட்டு இருக்குது. உலகத்தை சுத்திப் பார்க்க வந்தேன்னு சொல்லிட்டு ஏர்  போர்ட் பக்கம் சுத்திட்டு இருந்துது. ஒருவேளை ஏர் போர்ட்டைதான் உலகம்னு நினைச்சிட்டு இருக்குதோ என்னவோ " என்று கிண்டலான குரலில் சொன்னான் ராஜு .
"சும்மா இரு " என்று அவனை அடக்கிய சேகர், " அச்சு . உன்னோடு  யார் வந்திருக்காங்க ? " என்று கேட்டான்.
"நான் மட்டுந்தான் .."
"உங்க அம்மா உன்னை எப்படித் தனியா அனுப்பினாங்க ?"
"உருப்படாத ராஜகுமாரன் மாதிரி நானும் உலகத்தை சுத்திப் பார்த்துட்டு பெரிய ஆளா வந்தால் எங்க அம்மா சிரிப்பாங்கதானே ?"
"இப்போ உன்னைப் பார்க்காமே அழ மாட்டாங்களா ?"
"அழுவாங்க ... அப்புறம் கண்ணைத் தொடச்சுக்குவாங்க"
"தப்பு தம்பி ... நீ இப்பவே ஊருக்குக்  கிளம்பு. அம்மா பாவந்தானே ?"
"பாவம் பார்த்தால் நான் எப்ப பெரிய ஆளா வர்றது ?" என்று எதிர்க் கேள்வி கேட்டான் அப்புமணி 
"ராஜு.. இவன் நம்ம வேலைக்கு வேண்டாம்." என்று சேகர் சொல்ல , "அண்ணா .. நான் உங்களைக் காப்பாத்தினதா இப்பத்தானே சொன்னீங்க. உதவி செஞ்ச எனக்கு ஒரு வேலை தர மாட்டீங்களா ?"  என்று கேட்டான் அப்புமணி .
"வேண்டாம் ... தம்பி .. அந்த வேலை எங்களோட இருக்கட்டும். உனக்கு வேண்டாம் " என்றான் சேகர்.
"அப்படின்னா நான் இங்கேருந்து போயிடுவேன் "
"போ ... உங்க ஊருக்கு ... உன்னோட வீட்டுக்குப் போ "
"ஊஹூம்..மாட்டேன். நான் உலகத்தை சுத்திப் பார்த்துட்டுதான் எங்க  வீட்டுக்குப் போவேன்  " என்று பிடிவாதமான குரலில் அப்புமணி சொல்ல ,இந்த மனநிலையில் இவனை வீட்டுக்குப் போ என்று சொன்னால் , அவன்  வீட்டுக்குப் போகாமல் வேறெங்காவது போய்விடுவான் என்று நினைத்த  சேகர், அதற்கு இடம் கொடுக்கக் கூடாது என்ற தீர்மானத்துடன், "சரி ... நீ .. இங்கே இரு.. வேலை பாரு .. இப்போ என்னோட வீட்டுக்குப் போகலாம் " என்று சொன்ன சேகர் , "ராஜு ... நாம அப்புறமா பேசலாம். இப்போ இவனை நான் கூட்டிட்டுப் போறேன் " என்று சொல்ல, சரி என்று தலையசைத்தான் ராஜு. 
-------------------------------------------- தொடரும் --------------------------------------------------------





No comments:

Post a Comment