Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Sunday, January 24, 2016

குழந்தைகளுக்கான குறுந்தொடர் - 24

                               
    அச்சுப்பிச்சு அப்புமணி !
அப்புமணியுடன் வெளியேறிய சேகர், "அச்சுப்பிச்சு ... நீ ஊருக்குப் போக மாட்டேன்னு சொல்றே. உங்க அம்மாவுக்குப் போன் பண்ணிப்  பேசினியா ?" என்று கேட்டான்.
"போனா ?" என்று ஆச்சரியத்துடன் கேட்டான் அப்புமணி.
"ஆமாம் .. போன்தான் .. போன் நம்பர் தெரியுந் தானே ?"
"எங்க வீட்டில் போன் இல்லியே !" என்று அப்புமணிசொல்ல."என்ன..போன்இல்லையா ?"  என்று ஆச்சரியத்துடன் கேட்டான் சேகர்.
"ஆமாம் ... இல்லை "
"குழப்பாதே . ஆமாம்கிறே .. இல்லேங்கிறே .. இதில் எது சரி? " என்று சேகர் கேட்க, எ ..ங் ..க ..ள் ... எங்கள் ... வீ ... ட் .. டி .. ல் ..  ...வீ ட்டில் ... போ ..ன்..போன் ...இ ...ல் ... லை .... இல்லை.... இவ்வளவு தெளிவு போதுமா ?" என்று கேட்டான் அப்புமணி .
"என்னடா .. இது ? .. உலக மகா அதிசயம் ... போன் இல்லாமே ஒரு வீடா ? அதுவும் அப்புமணி வீடா ? அடுத்தவேளை சாப்பாட்டுக்கு வழியில்லாத பஞ்சப் பரதேசி கூட கையில் மொபைலோட திரியறான். நீ என்னடான்னா உங்க வீட்டில் போன் இல்லேன்னு சொல்றே ... சரி வா ... பக்கத்தில்தான் போஸ்ட் ஆபீஸ். ஒரு போஸ்ட் கார்ட் வாங்கி எழுதிப் போட்டுட்டுப் போயிடலாம்" என்று சொல்லி  போஸ்ட் ஆபீசுக்குப் போய் ஒரு போஸ்ட் கார்ட் வாங்கிக் கொண்டு வெளியில் வந்த சேகர், "உங்க அம்மாவுக்கு என்ன எழுதலாம்? நீ நல்லா இருக்கிறதா எழுதலாமா?" என்று கேட்க , "எங்க அம்மாக்கு நாந்தான் எழுதுவேன் " என்று குதித்தபடி சொன்னான் அப்புமணி 
"சரி ... உங்க அம்மாவுக்கு நீயே எழுது ..எழுதிட்டு இங்கேயே இருக்கணும். நான் ஒரு ப்ரெண்டைப்பார்த்துட்டு இதோ வந்துடறேன்" என்று சொல்லிச் சென்ற  சேகர், அரை மணி நேரம் கழித்துத் திரும்பி வந்தான்.
"என்ன அச்சு ! எழுதினியா ? கார்டைக் காட்டு .. என்ன எழுதினேனு பார்க்கலாம் " என்றான் சேகர் 
"கார்டை நான் பெட்டிக்குள்ளே போட்டுட்டேன் " என்றான் அப்புமணி. 
"எந்தப் பெட்டிக்குள் ?" என்று அதிர்ந்து போய் சேகர் கேட்க, "அதோ .. அங்கே இருக்குதே ஒரு சிவப்புப் பெட்டி ... அதில்தான் போட்டேன் " என்று பதில் வந்தது அப்புமணியிடமிருந்து .
"நல்ல வேளை .. அதையாவது சரியா செஞ்சியே .. ஆமா ... உங்க அம்மாவுக்கு என்ன எழுதினே ?"
"அதெல்லாம் சொல்ல மாட்டேன்."
"எழுதினேதானே ?"
"ஆமாம் " என்று உறுதியாக சொன்னான் அப்புமணி.
இது முடிந்த இரண்டாம் நாள் ;;;----
அப்புமணியின் வீட்டில் அவனது அம்மா, உடல் நலம் மனநலம் பாதிக்கப் பட்டு படுத்த படுக்கையில் இருந்தாள். அம்மாவை சாப்பிட வைக்கவும் தூங்க வைக்கவும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ரொம்பவும் சிரமப் பட்டார்கள். இந்தப் பையன் வீட்டை விட்டுப்போய் இத்தனை நாளாகியும் ஒரு தகவலும் தெரியலையே என்று மிகவும் வருத்ததுடன் சொல்லிக்  கொண்டார்கள் .
"அவன்தான் அறியாப்பிள்ளை, வீட்டை விட்டுப் போறேன்னு சொன்னா, நீயும் அப்பிடியே விட்டுடுவியா ! ரெண்டு தட்டு தட்டி வீட்டுக்குள் போட்டுப் பூட்டி வைக்க வேண்டாமா ?" என்று ஆதங்கப் பட்டார் பக்கத்து வீட்டுத் தாத்தா.
"போகக் கூடாதுன்னு நான் தடுத்தால், எனக்குத் தெரியாமே வீட்டை விட்டு ஓடிப் போயிடுவேன்னு சொன்னான்" என்று முனகிய குரலில் சொன்னாள் அம்மா.
அப்போது, "போஸ்ட் " என்ற குரல் வாசல் பக்கமிருந்து கேட்டது .
வயதான காலத்திலும் "குடுகுடு வென்று" ஓடிப் போய் அதை வாங்கி வந்த தாத்தா ... "உன் புள்ளைதான் கார்ட் போட்டிருக்கான் " என்றார்.
அதைக் கேட்டு படுக்கையிலிருந்து துள்ளி எழுந்த அம்மா, " என்ன எழுதி இருக்கான் ?  எங்கே இருக்கானாம் ? எப்படி இருக்கானாம் ?" என்று படபடப்புடன் கேட்டாள் 
அந்தக் கேள்விக்குப் பதில் சொல்லாமல் மௌனமாக இருந்தார் தாத்தா.
பொறுமையிழந்த அம்மா,வேகமாக எழுந்து வந்து அவரது கையிலிருந்த கார்டை வாங்கிப் படித்தாள்.. படித்து விட்டு "ஓ " என்று அழ ஆரம்பித்தாள்.
அம்மாவை சுற்றி நின்றவர்கள் ... "என்னம்மா ... என்ன எழுதி இருக்கிறான் ...நல்லாதானே இருக்கான் ?" என்று பதறிப் போய்க் கேட்க, "எத்தனை உலகத்தை சுத்தினாலும் இவனுக்குப் புத்தியே வராது... உருப்படியா ஏதாது எழுதி இருக்கானா ? 'அம்மா ... நான் அப்புமணி'னு மட்டும் எழுதி இருக்கான். இப்படி ஒரு அசடைப் பெத்து வளர்த்துட்டேனே ... எல்லாம் நான் செய்த பாவம். கட்டின புருஷன் இருக்கிற இடம் தெரியாமே தவிக்கிறது போதாதுன்னு பெத்த பிள்ளை என்ன ஆனான்னு தெரியாமத் தவிக்கிற நிலையை எனக்குக் குடுத்திட்டியே சாமீ ...நான் அப்படி என்ன தான் பாவம் பண்ணினேன்.  அதையாது சொல்லேன் " என்று தலையில் அடித்துக் கொண்டு அழ, அழும் அம்மாவை எப்படித் தேற்றுவது என்பது தெரியாமல் அங்கிருந்தவர்கள்  ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்தபடி நின்று கொண்டிருந்தார்கள் .
"அம்மா ... அந்தக் கார்டைக் குடு ... எங்கேருந்து வந்திருக்குன்னு பார்க்கலாம் " என்று சொல்லிக் கார்டை கையில் வாங்கிப் போஸ்ட் கார்ட் மீதிருந்த முத்திரையைப் பார்த்தார். அது தெளிவே இல்லாமல் மங்கிப் போயிருந்தது.
"அவன்தான் இருக்கிற இடம் பத்தி எழுதலே.  முத்திரையை வச்சுக் கண்டு பிடிக்கலாம்னு பார்த்தா ... அது இவ்வளவு மோசமா இருக்கே .. என்னதான் உத்தியோகம் பார்க்கிறானுகளோ தெரியலே " என்று கோபத்துடன் சொன்னார்.
அதைக் கேட்ட அம்மா, மேலும் அழ ஆரம்பிக்க, "அழாதேம்மா ... லட்டர் போடணுங்கிற அளவுக்கு உன் புள்ளைக்கு ஒரு முதிர்ச்சி வந்திருக்கே. அதுவே பெரிய விஷயம்.  இப்போ அவன் எங்கியோ இருக்கிறாங்கிறது தெரிஞ்சு போச்சு. உன்னை விட்டுட்டு அவனாலே இருக்க முடியாது. கூடிய சீக்கிரம் வந்துடுவான்..நீ சூடா ஒரு வாய் பாலாவது குடிம்மா " என்று தாத்தா சொல்ல, "சரி " என்று தலையசைத்த அம்மா, மெதுவாக எழுந்து சாமி ரூமுக்குப் போய் அப்புமணி எழுதிய கார்டை விளக்கின் அடியில் வைத்துவிட்டு,"என் பிள்ளையை சீக்கிரம் என்னிடம் கொண்டு வந்து சேர்க்கணும் " என்று மனதுக்குள் வேண்டிக் கொண்டிருந்தாள்.
"கார்டைப் பார்த்ததுமே  அம்மாவுக்குத் தெம்பு வந்துட்டுது. அவங்களை யாரும் தொந்தரவு பண்ணாமே எல்லாரும் இங்கேருந்து கிளம்புங்க " என்று தாத்தா சொல்ல, எல்லோரும் அங்கிருந்து கிளம்பிப் போனார்கள் .
--------------------------------------- தொடரும் ------------------------------------------------------------------------- 

No comments:

Post a Comment