Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, February 27, 2015

Scanning of inner - heart ( Scan Report Number - 141 )

                                           இதை யார் மாற்றுவார் ?
"வாங்க  சுந்தர்.... எல்லாம் நம்ம வீடுதான் ..." என்று வற்புறுத்தி சத்யா அழைக்க, சிறிது தயக்கத்துடன் வீட்டுக்குள் வந்தான் சுந்தர்.
சத்யாவின் குரல் கேட்டு, ஈரக் கையை புடவைத் தலைப்பில் துடைத்தபடி வந்த லீலாவிடம் " அம்மா, இவர் பேர் சுந்தர்.. இவரும் நான் அட்டெண்ட் பண்ணின செமினாரில் ஒரு கேண்டிடேட்.  இன்னிக்கு செமினார்  பைனல் டேங்கிறதால் செமினார் முடிய ரொம்ப லேட் ஆயிடுச்சு. இவர் புக் பண்ணின ட்ரைனை பிடிக்க சான்ஸ் இல்லே.ஏதாவது ஹோட்டலில் தங்கிட்டு நாளைக்குப் போறேன்னு சொன்னார். நான்தான் வற்புறுத்தி நம்ம வீட்டுக்கு அழைச்சிட்டு வந்தேன் " என்று சொன்ன சத்யா, " சுந்தர், இவங்க என்னோட அம்மா"என்று சொல்ல,பவ்யமாக கைகூப்பி நின்றான் சுந்தர்.
"தாத்தா எங்கே ? பெரிய தாத்தா எங்கே ? அப்பா இன்னும் வரலியா ?"
"அப்பா இன்னும் வரலே.அடுத்த வாரம் அவங்க ஆபீஸில் ஆடிட் வருதாம்.வேலை நிறைய இருக்குது, இன்னிக்கு ஆபீசில் தங்கிடுவேன்னு சொல்லிட்டுப் போனார். தாத்தா கோவிலுக்குப் போனார். பெரிய தாத்தா மொட்டை மாடிக்குப் போனார் "
"சுந்தர் , ஏன் இன்னும் லக்கேஜை சுமந்துட்டு நிக்கிறீங்க. பீல் ப்ரீ .. உங்க வீடு மாதிரி நினைச்சுக்கோங்க. என்னோட பிரெண்ட்ஸ் இங்கே வர்றதும் இங்கே தங்கறதும் எங்க வீட்டில் வழக்கமா நடக்கிற ஒரு விஷயந்தான். வீடு எப்பவும் கலகலப்பா நாலு பேர் நடமாட்டத்தோட சிரிப்போட  இருக்கிறதைத்தான் இந்த வீட்டில் இருக்கிற எல்லாரும் லைக் பண்ணு வோம். பேக்கை வச்சுட்டு வாங்க.  தாத்தாவை இன்ட்ரடுயூஸ் பண்றேன்" என்று சொல்லி மாடிக்கு சுந்தரை அழைத்து சென்ற சத்யா , "தாத்தா இவர் என்னோட ப்ரெண்ட். பூர்விகம் மாயவரம். இப்போதைக்கு இவர் டெல்லி வாலா...கூடிய சீக்கிரம் சென்னை வந்துடுவார்.ஸார் பயங்கர முன் ஜாக்கிரதைப் பேர்வழி. செமினார் முடிய லேட் ஆயிடுச்சு. ட்ரைனை பிடிக்க முடியாதுங்கிறது தெரிந்து அங்கிருந்தவங்க கிட்டே இவர் பட்ஜெட்க்கு தகுந்த மாதிரி ஹோட்டல் வேண்டும். டீசென்ட் இடமா இருக்கணும் . ரெய்ட்ங்கிற பேரில் மிட் நைட்டில் ரூம் கதவைத் தட்டி செக் பண்ணாத இடமா இருக்கணும். போலீஸ்காரங்க யாராவது கதவைத் தட்டி நான் எட்டிப் பார்க்க, அதை யாராவது மீடியாவில் போட்டுட்டா என்னோட இமேஜ் டேமெஜ் ஆயிடும். குடும்ப கௌரவம் போயிடுங்கிற ரேஞ்சுக்கு விசாரிச்சிட்டு இருந்தார். இந்த மாதிரி எந்த பயமும் இல்லாமே எங்க வீட்டில் வந்து தங்குங்கன்னு சொல்லி நான் அழைச்சிட்டு வந்தேன். இன்னிக்கு இவர் நம்ம வீட்டில் தங்கறார்"என்று தாத்தா விடம் சொல்லிவிட்டு , "சுந்தர், இவங்க என்னோட அப்பாவோட தாத்தா. ஐ மீன் என்னோட கொள்ளுத் தாத்தா. என்னோட தாத்தாவை "தாத்தா"ன்னும் அப்பாவோட தாத்தாவை "பெரிய தாத்தா"ன்னும் கூப்பிடுவேன்." என்று அறிமுகப் படுத்தினான் சத்யா.
"தம்பிக்கு ரொம்பவும் தொலை நோக்குப் பார்வை உண்டு போலிருக்கு. போலீஸ் செக் பண்ற இடத்தில் இருந்தால்கூட தனக்குக் கௌரவக் குறைச்சல்னு நினைக்கிறாரே" என்று தாத்தா சொல்ல, "பெரிய தாத்தா சுதந்திரப் போராட்ட தியாகி.. கவெர்ன்மெண்ட் இவருக்கு தியாகிகளுக் கான விருது, பென்ஷன் குடுக்க ரெடியா இருந்துச்சு.  ஆனா தாத்தா ரெப்யூஸ் பண்ணிட்டார்.  நீங்க இவரோட பேசிட்டு இருங்க. நான் கீழே போய் லஞ்ச் ரெடி பண்ண அம்மாவுக்கு  ஹெல்ப் வேணுமான்னு கேட்டு, அதை முடிச்சுட்டு வர்றேன்" என்றபடி அங்கிருந்து நகர்ந்தான்.
"எல்லா வசதியும் இருக்கிறவங்க கூட கவெர்ன்மெண்ட் அனௌன்ஸ் பண்ற காம்ப்ளிமென்ட் பொருளை வாங்க க்யூவில் மணிக்கணக்கா காத்து நிக்கிறாங்க. அது கிடைக்காட்டா சாலை மறியல் பண்றாங்க . ஆனா அரசாங்கமே உங்களைத் தேடி வந்து ஒரு கௌரவத்தை தரும் போது நீங்க அதை  வாங்க மறுத்துறுக்கீங்க.. ரொம்ப ஆச்சரியமா இருக்கு! ஏன் அப்படி ?" என்று ஆச்சரியத்துடன் கேட்டான் சுந்தர் .
"என்னைவிடவும் உயர்ந்த தியாகிகள் எங்க குடும்பத்தில் இருந்தாங்க. அந்த விருது அந்த கௌரவம் அவங்களுக்குக் கிடைச்சிருந்தால் நான் கண்டிப்பா பெருமைப் பட்டிருப்பேன். அதை அரசாங்கம் அவங்களுக்குத் தராதுன்னு எனக்கு நல்லா தெரியும். மனச்சாட்சிக்கு விரோதமா எதையும் வாங்க நான் விரும்பலே" என்றார் தாத்தா குரல் தழுதழுக்க.
"அவங்களும் உங்களோட சேர்ந்து போராட்டத்தில் கலந்தவங்கன்னா அவங்களுக்கும் விருது குடுக்கிறதுதானே நியாயம் ?"
"அவங்க வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு கிடந்தாங்க "
இதைக் கேட்டு ஆச்சரியப்பட்ட சுந்தர்,"வீட்டில் இருக்கிறவங்க அத்தனை பேருக்கும் விருது கிடைக்கணும்னு நினைக்கிறது எந்த வகையில் ஸார் நியாயம் ?" என்றான் 
"தம்பி, என்னை விடவும்  பெரிய தியாகிகள் அவங்கதான். அவங்களுக்கு கிடைக்க முடியாத ஒண்ணு  எனக்கும் வேண்டாம்னு சொன்னேன் . அவ்வளவுதான் "
"எனக்கு எதுவும் புரியலே "
"தம்பி, சுதந்திரப் போராட்டம் பற்றி நீங்க பாடப் புத்தகத்தில் மட்டுந்தான் படிச்சிருப்பீங்க. அதை அனுபவப் பாடமாகப் படிச்சவன் நான். இந்தியா பாகிஸ்தானில் உள்ள அத்தனை பேருமே இந்திய சுதந்திரத்துக்காகப் பாடுபட்டிருக்காங்க . சுதந்திரம் கிடைச்ச பிறகுதானே பாகிஸ்தான் தனி நாடாகப்  பிரிஞ்சு போச்சு . அதுக்கு முன்னே வரை எல்லாருமே  ஒரு தாய் மக்கள்ங்கிற உணர்வுதானே இருந்துச்சு. ஆட்சியில் இருந்தவங்களோட  மிரட்டலுக்குப் பணிஞ்சோ இல்லாட்டா  சுய லாபத்துக்கு ஆசைப்பட்டோ படிச்சவங்க, சிற்றரசர்கள், நிலசுவான்தார்கள், பிரபுக்கள் ஜமீன்தார்கள்னு ஆங்கிலேயர் விரிச்ச வலையில் விழுந்தவங்க நிறைய பேர் . எந்த வலையிலும் சிக்காமல் மக்களுக்காக பாடுபட்டவங்க லிஸ்ட் ஒண்ணு உண்டு  ... நேரு, காந்தி, நம்ம வ உ சிதம்பரம் பிள்ளை .. இவங்களைப் போல கொஞ்ச பேரை அந்த லிஸ்ட்டில் சேர்க்கலாம். இவங்க எல்லாரும் நல்ல வசதி வாய்ப்புள்ள குடும்பத்தில் பிறந்தவங்களா   இருந்தாலும், மக்களுக்காக "கஷ்டசுமை"யை தங்களோட தலையில் தூக்கி சுமந்தாங்க . அவங்க நினைச்சிருந்தா வெள்ளைக்காரங்களுக்கு சிங்கி அடிச்சுகிட்டு ராஜ போக வாழ்வை அனுபவிச்சிருக்கலாம். ஆனால் அப்படி செய்யலே. அதனாலே தான் அவங்களை இன்னிக்கும் நாம நினைச்சுப் பார்க்கிறோம். கொஞ்ச வருஷம் முன்னே சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு மரியாதை செய்றோம்னு சொல்லி  ஒவ்வொரு ஊரிலிருந்தும் மண் எடுத்துட்டுப் போனாங்க .. தில்லையாடி .. எட்டயபுரம்..  அங்கே இங்கே இருந்தெல்லாம் மண் போச்சு . ஆனால் எனக்கு அதில் உடன்பாடு இல்லே . அதில் நான் கலந்துக்கலே . ஏன் தெரியுமா ?"
"சொல்லுங்க .. தெரிஞ்சுக்கறேன் "
"தெற்க்கே கன்னியாகுமரியிலிருந்து பாகிஸ்தானின் கடைசி பார்டர் வரை ஒவ்வொரு  துளி மண்ணும் போராட்டக்காரர்களின் வியர்வை யிலோ  இல்லாட்டா இரத்தத்திலோ நனைஞ்சிருக்கு.. அப்படியிருக்க ஒரு  சில இடத்தை மட்டும் தேர்வு செய்றதில் எனக்கு விருப்பமில்லே " என்று தாத்தா சொல்ல, அதையெல்லாம் கேட்க ஆர்வமில்லாத சுந்தர் "உங்க வீட்டிலுள்ள போராட்டக்காரங்க பற்றி சொல்லுங்க .. அவங்க என்ன செய்தாங்க ?" என்றான்.
"வீட்டை விட்டு வெளியே வராமல்  வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்து   அவங்களோட வாழ்நாளை முடிச்சுகிட்டாங்க "
" என்ன சொல்றீங்க ?"
"தம்பி .. இப்போ எல்லாருமே நல்லா படிச்சு ஓரளவு நாட்டு நடப்பு உலக விவகாரம் தெரிஞ்சவங்களா இருக்கிறாங்க. இருந்தாலும் ஏதோ ஒரு காரணத்தாலே ஒரு  வீட்டுக்கு  போலீஸ் ஜீப் , இல்லாட்டா வேறு ஏதாது ஒரு விவகாரம் வந்துட்டா அந்தப் பக்கமே தலை வச்சுப் படுக்கப் பயப் படறாங்க. உங்களையே எடுத்துக்கோங்க . போலீஸ் ரெய்ட் ஒரு ஹோட்டலுக்கு வந்தால் அது அங்கே தங்கிஇருக்கிறவங்க இமேஜை ஸ்பாயில் பண்ணும்னு நினைக்கிறீங்க.  நாடு அடிமைப் பட்டு கிடந்த நேரத்தில் மக்களின் மனோநிலை எப்படி இருந்திருக்கும்னு கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க.. கூட்டம் போராட்டம் என்று நடத்தி விட்டு ஜெயிலுக்குப் போனவன் வீட்டுக்குப் போக நெருங்கிய சொந்தக்காரங்க கூட பயப்பட்ட காலம் அது.பார்க்கப் பயப்பட்டாங்க. பேசப் பயப்பட்டாங்க. இவங்களை ஏதோ கொலை குற்றம் செய்தவங்க மாதிரி நடத்தி இருக்காங்க. இன்னைக்கு தியாகின்னு சொல்ற எங்களை அந்தக் காலத்தில் கலகக்காரர்கள்னு வெள்ளைக் காரங்க முத்திரை குத்தி வச்சிருந்தாங்க. அந்த முத்திரைக்குப் பயந்து ஊர் என்னோட அம்மா அப்பா  எங்க குடும்பம்ன்னு எல்லாத்தையும் பிரிச்சு தான் வச்சிருந்தது. போராட்டக்காரங்களோட குடும்பத்துக்குள் எப்போ போலீஸ் வரும் . எப்போ அடிச்சு இழுத்துட்டுப் போகும்னு சொல்ல முடியாத நிலைமை . எங்க குடும்பத்துக்குப் பெண் குடுக்கப் பயப்பட்டாங்க. எங்க குடும்பத் திலிருந்து  பெண் எடுக்கப் பயப்பட்டாங்க. அத்தனை அவமானத்தையும் தாங்கி கிட்டு , வெளியில் தலை காட்டமுடியாமல் வீட்டுக்குள் முடங்கிக் கிடந்துச்சு எங்க குடும்பம். ஒரு நல்லது கெட்டதைப் பார்க்கலே.நல்லது   கெட்டதில் கலந்துக்கலே. ஒவ்வொரு முறை நான் ஜெயிலுக்குப் போயிட்டு  வரும் போதும் வீட்டுக்குள்ளேயே செத்து செத்து பிழைச்சிட்டு இருந்துச்சு எங்க குடும்பம். போராட்டம் பண்ணினோம் தண்டனை அனுபவிச்சோம். அது நியாயம்.. ஆனால்  அந்த அடி எங்க வீட்டு ஆளுங்க மேலேயும் விழுந்திருக்கு. இன்னிக்கு எங்களை தியாகிகள்னு சொல்ற இதே மண்ணு ஒருகாலத்தில் எங்களை "கருங்காலிப்பயலுக", "விடலை ப்பயலுக"ன்னு தள்ளி வச்சிருந்துச்சு. எந்த குற்றமும் செய்யாட்டாலும் , என்னை அந்தக் குடும்பத்தில் ஒருத்தனாக வச்சிருந்ததுக்கு  தண்டனை அனுபவிச்சாங்க என்னைப் பெத்தவங்க ... என்னோட கூடப் பிறந்தவங்க . அதனாலே அவங்கதான் உண்மையான தியாகிங்க"
"அப்போ நடந்த  உங்க போராட்டம்  பத்தி இப்போ என்ன பீல் பண்றீங்க ?"
"வெளியிடத்திலிருந்து நம்ம நாட்டுக்கு வந்து நம்மளை சுரண்டினவனை சூறையாடியவனை போராடி விரட்டினோம். இந்த மண்ணில் பிறந்து சொந்த  மண்ணை சுரண்டி சூறையாட்டிட்டு இருக்கிறவங்களை எதுவும் செய்ய முடியாமல்,அதையெல்லாம் டீவீயில் ஒரு செய்தியாகப் பார்த்து ட்டு வெட்டியா இருக்கிறதை நினைச்சு வேதனைபட்டுகிட்டு வாழ் நாளைக் கடத்திட்டு இருக்கிறேன் தம்பி . எப்போ மேலேயிருந்து அழைப்பு வருமோ தெரியலே!" என்று பெருமூச்சுடன் சொன்னார் பெரிய தாத்தா.  
"அது வர்றப்போ வரட்டும் . இப்போ கீழேயிருந்து அழைப்பு வருது . சாப்பாடு ரெடி .  சாப்பிட வரலாம் " என்றபடி அங்கு வந்தான் சத்யா .

Tuesday, February 24, 2015

கேள்வி இங்கே இருக்கிறது ! பதில் யாரிடம் இருக்கிறது ?

கேள்வி எண் : 01
கடந்த வெள்ளிக்கிழமையன்று எங்கள் குடும்பத்தினருடன் திருச்சிக்கு பயணித்து கொண்டிருந்தேன். ரிசெர்வேசன் கம்பார்ட்மென்ட் என்றாலும் டே டைம் ட்ரைன் என்பதால் பயணிகள் இங்கும் அங்கும் நடப்பதும் பேசுவதும் இருந்ததால் சந்தைக்கடை மாதிரியான சூழ்நிலை எங்கும் இருந்தது. போதிய காற்றோட்டம் இல்லை. எங்கள் வீட்டுக் குழந்தையால் அந்த சூழ்நிலையை தாக்குப் பிடிக்க முடியவில்லை . ( பிறந்து பத்து மாதம் மட்டுமே ஆகிறது . குளிர்காலத்தில் கூட வீட்டில் அது தூங்கும் இடத்தில் ஏஸி, பேன், இரண்டுமே இருக்க வேண்டும்.) சில நேரம் விளையாடுவதும் சிலநேரம் அழுவதுமாக பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தது. ஒரு சந்தர்ப்பத்தில் அதன் அழுகை அதிகமாகிவிட்டது. நானும் என்னென்ன வோ சொல்லி வேடிக்கை காட்டுகிறேன், ஆனால் குழந்தை அழுகையை நிறுத்தவில்லை. அந்த கம்பார்ட்மெண்டில் இருந்த அனைவரும் அது அழுவதையும், "காக்கா , குருவி " என்று நான் வேடிக்கை காட்டுவதையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அந்த கம்பார்ட்மெண்டில் ஒரு முஸ்லிம் குடும்பமும் பயணித்தது. அந்தக் குடும்பத்தில் மூன்று வயது கூட நிரம்பாத குழந்தை ஒன்றும் இருந்தது. எங்கள் வீட்டுக் குழந்தை அழுவதை பார்த்த  அந்தக் குழந்தை, அதன் பெற்றோரிடமிருந்து ஒரு தாவு தாவி என்னருகில் வந்தது. வந்து குழந்தையின் கண்ணீரைத் துடைத்து விட ஆரம்பித்தது. "அழாதே பாப்பா" என்று சொல்லவில்லை . வேடிக்கை யாக எதையும் சொல்லவில்லை. செய்யவில்லை. ஆனால் இரண்டு கண்களில் இருந்தும் வடியும் நீரை மாறி மாறி துடைத்து விடுகிறது . அந்தக் குழந்தை அப்படி செய்வதை ஏதோ ஒரு விளையாட்டு என்று எங்கள் வீட்டுக் குழந்தை நினைத்ததோ என்னவோ உடனே அழுகையை நிறுத்தி விட்டு அதனோடு விளையாட ஆரம்பித்து விட்டது . அதன் பிறகு நாங்கள் திருச்சி வந்து சேரும் வரை எங்கள் வீட்டுக் குழந்தை அழவே இல்லை. அந்தக் குழந்தை கண்ணீரைத் துடைத்து விடுவதை கையில் காமிராவுடன் நின்றிருக்கும் யாராவது பார்த்திருந்தால் அதை ரிகார்ட் செய்து  face book ல் பதிவு செய்திருப்பார்கள். நானும் என்னுடைய face book ல் பதிவு செய்திருப்பேன்.  எங்கள் வீட்டுப் பிள்ளைகளிடமும் காமிரா செல் இருந்தது.  ஆனால் அந்த சம்பவம் நடந்தபோது அது on ல் இல்லை . காமிரா செட் பண்ணிவிட்டு திரும்ப ஒருதரம் அதே மாதிரி செய்ய சொன்னால் அது ரொம்பவும் நாடகத் தனமாக இருக்கும் என்பதால் அதை பதிவு பண்ணவில்லை .  
அந்தக் குழந்தையின் செயல் என்னை ரொம்பவும் சிந்திக்க வைத்தது .ஒரு குழந்தை அழுவதைப் பார்த்து விட்டு, யாரும் சொல்லாமலே இன்னொரு  குழந்தை ஓடி வந்து இந்தக் குழந்தையின்  கண்ணீர் நிற்கும் வரை கண்களைத் துடைத்து விடுகிறது. குழந்தையாக இருக்கும்போது எந்த வேற்றுமையும் யார் மனதிலும் தோன்றவில்லை. பள்ளியில் கல்லூரிகளில் படிக்கும் காலத்திலும் மனித வேற்றுமை பார்ப்பதில்லை. ஒற்றுமையாக இருக்கிறார்கள். ஓடி வந்து உதவுகிறார்கள். ஆனால் வளர்ந்து பெரியவர்களாகி விட்டவர்கள் எந்தவொரு காரணமும் இல்லா மல், எந்தவொரு செயலுக்கும் கொஞ்சம் கூட  சம்பந்தமே  இல்லாத வர்கள்  கண்களில் கண்ணீரை வரவழைத்து வேடிக்கை பார்ப்பது ஏன் ? இதனால் அவர்கள் அடைந்த லாபந்தான் என்ன  ?
இந்தக் கேள்விக்கான பதில் தெரிந்தவர்கள் அதை arunasshanmugam@gmail.com   ல் தெரிவிக்கலாம்.

Friday, February 13, 2015

Scanning of inner - heart ( Scan Report Number - 140 )

                                                மனுஷ சுபாவம் !!
" எதிர் வீட்டுத் தம்பிக்கு காபி கீபி ஏதாது வேணுமான்னு கேட்டியா சுபா? " என்று கரிசனத்துடன் விஸ்வநாதன் கேட்க, "எதிர் வீட்டு ராஸ்கல் எப்பத்திலிருந்து எதிர் வீட்டுத் தம்பியாக மாறினான் " என்ற கேள்விக் கணையை பார்வையாலேயே தாயின் மீது வீசினான் சுரேஷ் . 
"அதாண்டா எனக்கும் புரியலே " என்பது போல பதில் கணை சுபாவின் பார்வையில் வந்தது.
இந்த மாற்றத்துக்கான காரணத்தைத் தெரிந்து கொள்ளாவிட்டால் தலையே வெடித்து விடும் போலிருந்தது 
மடியிலிருந்த லாப் டாப்பை சோபாவில் வைத்துவிட்டு "என்னாலே நம்பவே முடியலே. அப்பாவுக்கு என்னம்மா ஆச்சு  " என்று  கிச்சனில் வேலையாக இருந்த சுபாவின் காதுகளில் கிசுகிசு குரலில் கேட்டான் சுரேஷ்.
"எனக்கும்தான் நம்ப முடியலே .. ரெண்டு மாசமா இந்த கரிசனம்தான். நீ ட்ரைனிங் பீரியட்னு நாலு மாசமா டூர் போயிட்டே. இன்னைக்குதான் வீட்டுக்கு வந்திருக்கே . அதனால்தான் உனக்கு இது புதுசா இருக்குது . எனக்கு இது பழகிப் போச்சு "
"அந்தப் பையனைக் கண்டாலே கரிச்சுக் கொட்டுவார். இவ்வளவுக்கும் அவன் நாம இருக்கிற திசைப் பக்கம் கூட வந்தது கிடையாது. அவனோட பேரெண்ட்ஸ் நார்த்தில் இருக்கிறாங்க. இவன் இங்கே வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருக்கிறான். தான் உண்டு தன்னோட வேலை உண்டுன்னு இருப்பான். மிட் நைட்டில் வந்து அவன் வீட்டுக் கதவை அவன் திறக்கிற சத்தத்தில் தன்னோட தூக்கம் கெட்டுப் போயிட்டதா புலம்பும் அப்பா அவனைத் திட்ட ஒரு காரணத்தை  தேடுவாரே. அப்பா அப்படி திட்டும்போதெல்லாம் நான் மனசுக்குள் என்ன நினைப்பேன் தெரியுமா ?" என்று தாயின் தோளில் முகம் சாய்த்துக் கொண்டு கேட்டான் சுரேஷ் .
"சொல்லு "
"நம்ம வீட்டில் நான் மட்டுந்தான். நல்லவேளை .. பெண் குழந்தைங்க யாரும் இல்லே.  வீட்டில் யங் ஏஜில் எனக்கொரு தங்கை இருந்திருந்தால் அதைக் காரணமா வச்சு அப்பா எப்படி எல்லாம் பயந்திருப்பார். எப்படி யெப்படி ரிஆக்ட் பண்ணி இருப்பார்னு கற்பனை பண்ணிப் பார்ப்பேன். மற்ற விஷயங்களில் தர்ம நியாயம் பேசற அப்பா இந்தப் பையன் விஷயத்தில் மட்டும் ஏன் இப்படி நடந்துக்கிறார்னு யோசிச்சுப் பார்ப்பேன்.  நல்ல பையன்மா .. ரொம்ப சாப்ட் நேச்சர். என்னை எதிரில் பார்த்தால் சிரிச்சுகிட்டே ஹலோ சொல்றதோடு சரி .. உங்க பேர் என்ன .. எங்கே வேலை பார்க்கிறீங்க ... இப்படி சாதாரணமாக் கூட பேசறது கிடையாது .. அவனைப் போய் அப்பா தேவையில்லாமே திட்டறாறேனு நினைச்சு வருத்தப் படுவேன் " என்றான் சுரேஷ். 
"அதெல்லாம் பழைய கதை .. இப்போ 'வாங்க தம்பி ..ஏதாது வேணும்னா கூச்சப்படாமே கேளுங்க தம்பி.. உங்க அப்பாவாட்டம் என்னை நினைச்சுக் கோங்க'னு சொல்லி குழையறது என்ன . வீட்டில் எது செய்தாலும் உடனே எடுத்துட்டுப் போய் குடுக்கிறதென்ன !"
"நல்ல மாற்றம் தான் .. இது எப்படின்னு சொல்லேன் "
"எனக்கு சத்தியமா தெரியாதுடா "
"அப்பாகிட்டே கேட்கிறதுதானே "
"உங்க அப்பா ரிடைர் ஆகி வந்ததிலிருந்து அவருக்கு மூட் சரியில்லேடா . என்னவோ நான்தான் அவரை ஆபீசிலிருந்து வெளியில் அனுப்பிட்ட மாதிரி என் மேலே எதற்க்கெடுத்தாலும் எரிஞ்சு விழறார். சாப்பிட வாங்க னு அவரைக் கூப்பிடுவதைக் கூட பயந்து பயந்து தான் செய்ய வேண்டி யிருக்குது. ஆனால் அந்த பையன் அவன் வீட்டுக் கதவைத் திறக்கிற சத்தம் கேட்டாலே இவர் நம்ம வீட்டு வாசலுக்கு ஓடறார் .. குசலம் விசாரிக்கிறார் . எனக்கு ஒண்ணுமே புரியலேடா "
"அப்பாகிட்டே கேட்போம் .. நீ என்ன சொல்றே ?"
"அவர் என்ன மூடில் இருக்கிறாரோ தெரியலியே .. இப்போ அமைதியா டீவீ பார்த்துட்டு இருக்கிறார்.  நீ எதையாது கேட்கப்போய் வேதாளம் முருங்கை மரத்திலே ஏறிடப் போகுது"
"அதெல்லாம் ஏதும் ஆகாதும்மா " என்று சொல்லியபடி ஹாலுக்கு வந்த சுரேஷ், விஸ்வநாதன் அருகில் சேரை இழுத்துப் போட்டுக்கொண்டு உட்கார்ந்தான். அவன் பின்னாலேயே சுபாவும் நின்றாள். என்ன என்பது போல இருவர் மீதும்  பார்வையை ஓட விட்டார் விஸ்வநாதன்.
"அப்பா .. இப்போ நீங்க ப்ரீ மூடில் இருக்கிறீங்க தானே ? உங்ககிட்டே கொஞ்சம் பேசணும்  "
"பேசணும்ங்கிற முடிவோட வந்துட்டீங்க .. என் மூட் எப்படியிருந்தால் என்ன ? நீ என்ன கேட்க வந்தியோ அதைக் கேளு "
"ஓகே .. உங்களுக்கும் அந்த எதிர் வீட்டு ராஸ்கலுக்கும் ... ஸாரி .. ஸாரி .. அந்த எதிர்வீட்டுப் பையனுக்கும் நல்ல அண்டர் ஸ்டாண்டிங் போலிருக்கு "
"அதுக்கென்ன ?"
"அவனைக் கண்டாலே உங்களுக்குக் கொலைவெறி வருமே .. அப்படி  யிருக்க எப்படியிப்படி சடனா மாறினீங்க .. நீங்க அவனைக் கரிச்சுக் கொட்டும் போதெல்லாம்  எதிர்வீட்டுக்கு குடித்தனக்காரங்க வந்துட்ட தாலே நம்ம ப்ரைவசி  போயிட்டதா நினைச்சு நீங்க அவனைக் கரிச்சுக் கொட்டறதா நினைச்சோம்.. இப்போ திடீர்னு அவன் மேலே பாசமழை பொழியறீங்க ?" என்று கேட்டுவிட்டு அவர் முகத்தைக் கூர்ந்து பார்த்தான் சுரேஷ். "கடவுளே ... இந்த மனுஷன் கோபத்தில் ருத்ர தாண்டவம் ஆடாமல் இருக்கணும்  .. சுரேஷ் மேலே இவர் பாயாமே இருக்கணுமே  " என்று மனதுக்குள் வேண்டிக் கொண்டிருந்தாள் சுபா.
"அந்தத் தம்பி பேரு ஈஸ்வர் .. ஐ டி கம்பெனியில் வேலை பார்த்துட்டு இருந்தானாம் . இப்போ வேலை போயிடுச்சாம் .. வேலை தேடித்தான் தினமும் அங்கே இங்கேன்னு அந்தத் தம்பி சுத்திட்டு வருது . அதை நினைச்சா மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குது "
வியப்பின் உச்சிக்கே சென்ற சுரேஷ் அருகில் நின்று கொண்டிருந்த சுபாவை ஏறிட்டுப் பார்த்தான்.
"சில மாசத்துக்கு முன்னே டீவீ யில் நியூஸ் பார்த்தேன் . அமெரிக்காவில் நிறைய பேர் வேலை இழக்கும் அபாயம் உள்ளதுன்னு சொன்னாங்க. அங்கேயே அப்படின்னா அவங்களை நம்பி இங்கே வேலை செய்றவங்க பொழைப்பு என்னாகும்னு நினைச்சேன்.  ஆனால் அப்போ  அதைப் பெரிசா எடுத்துக்கலே. சுரேஷ் எனக்கொரு சந்தேகம் .. "
"சொல்லுங்கப்பா ...   "
"அங்கே ஏதோ பிரச்சினை வந்ததால்தான் இங்குள்ளவங்களுக்கு வர வேண்டிய ஆர்டர் கைமாறிப் போய் இருக்கிறவங்களை வேலையை விட்டுத் தூக்குறாங்களோ ?"
"கம்பெனி விஷயம் ... நமக்குத் தெரிய வாய்ப்பில்லையே .. கண்டிப்பா ஒரு காரணம் இருக்கும் .. என்ன காரணம்னு   அவங்க சொன்னாதானே தெரியும்  "
"எனக்கொரு யோசனை "
"சொல்லுங்கப்பா "
"இன்னன்ன சூழ்நிலையாலே நாங்க இதை இதை செய்யப் போறோம் . எங்களால் குறைஞ்ச சம்பளமே  தரமுடியும். இஷ்டப்பட்டவங்க இங்கே இருங்க.மத்தவங்க போங்கனு சொல்லி, புதுசா வரபோறவங்களுக்குக் குடுக்கப் போற வாய்ப்பை இவங்களுக்குக் குடுத்திருக்கலாம் தானே " என்று சொல்லிவிட்டு அமைதியில் ஆழ்ந்தார் விஸ்வநாதன் 
"செய்திருக்கலாம் " என்று சொல்லி அவரது மௌனத்தைக் கலைத்தான் சுரேஷ் . 
"இந்த வேலையை நம்பி   இவங்க என்னென்ன ப்ளான் எல்லாம் வச்சிருந் திருப்பாங்க. அதையெல்லாம் நினைச்சுப் பார்க்கிறப்ப  மனசுக்கு ரொம்ப   வேதனையா இருக்குது    "
"அதெல்லாம் முடிஞ்சு போன விஷயம் ... அதை நினைச்சு நீங்க ஏன் பீல் பண்றீங்க ?"
"நான் ரெண்டு மாசம் முன்னே ரிடைர் ஆகி வீட்டுக்கு வரும்போது சும்மா வரலே . கையில் பதினைஞ்சு லட்சம் ரூபாய்க்கான செக்கோட வந்தேன் .  மாசாமாசம் பதினாறாயிரம் ரூபா பென்சன் வரும் என்கிற கேரண்டி இருக்குது . அப்படியிருந்துமே வேலையிலிருந்து ரிடைர் ஆகி  வெளியில் வந்துட்டதை நினைச்சு இன்னைக்கும் மனசுக்குள் அழுதுட்டுதான் இருக்கிறேன். அந்த தம்பி மாசம் ஐம்பதாயிரம் ரூபா சம்பளம் வாங்குச்சாம் .. திடீர்னு அது நின்னு போச்சு .. அந்தப் பிள்ளை மனநிலை எப்படி இருக்கும்னு என்னால் கற்பனை பண்ணிக்கூடப் பார்க்க முடியலே. அந்த தம்பி  இடத்தில் நான் இருந்திருந்தால் எனக்குப் பைத்தியமே பிடிச்சிருக்கும்  " என்று சொல்லும்போதே அவரது கண்கள் கலங்கின.
"இவ்வளவு இரக்க சிந்தனை உள்ள நீங்க எதுக்காக அந்தப் பையனைத் தேவையில்லாமே கரிச்சுக் கொட்டினீங்க  ?"
"முப்பத்திரண்டு வருஷம் சர்விஸ் போட்ட பிறகுதான் என்னாலே முழுசா நாற்பதாயிரம்  ரூபாய் சம்பளத்தையே கண்ணால் பார்க்க முடிஞ்சுது. ஆனால் இப்போ வேலையில் சேருகிற இதுங்க எல்லாம் ஸ்டார்ட்டிங்கிலேயே நாப்பது அம்பதுன்னு சம்பளம் வாங்குதுகளே என்கிற வயிற்தெரிச்சல் எனக்கு எப்பவும் உண்டு . எதிர் வீட்டு தம்பி ஐ டி  கம்பெனியில் வேலைன்னு சொன்னதும் எனக்கு எரிச்சல் அதிகமாச்சு. என்ன இருந்தாலும் நானும் ஒரு மனுஷப் பிறவிதானே. அந்தப் பிறவிக்கான குணத்தை அப்பவும் காட்டினேன் . இப்பவும் காட்டறேன் " என்று அவர் சொல்லும்போது அவரது கண்கள் கலங்கி இருந்தது.
சுரேஷ் மனதுக்குள் ஊமைக் கண்ணீர் வடித்தான். சுபா புடவைத் தலைப்பில் முகத்தைத் துடைத்து கொண்டாள் .
"அப்பா உங்க மனமாற்றம் நல்ல விஷயந்தான் . இந்த உலகத்தில் எதுவும் சும்மா கிடைக்காது. ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு செய்கைக் கும் ஒரு விலை உண்டுன்னு சொல்வாங்க. ஈஸ்வர் மேலே உங்களுக்கு நல்ல அபிப்ராயம் வர அவன் குடுத்திருக்கிற விலை ரொம்பவும் அதிகம்னு தோணுது ."
சிறிது நேர அமைதிக்குப் பின் "வாஸ்தவம் தான்.  ஆயிரம் சொல்லு .. கவெர்ன்மெண்ட் வேலை  குடுக்கிற பாதுகாப்பே அலாதிதான். அங்கே கிடைக்கிற சம்பளம் இலந்தைப்பழ சைஸுக்கு இருக்கலாம்.  ஆனால் அது நிரந்தரம். மத்த இடங்களில் கிடைக்கிறது பலாப்பழம் மாதிரி நமக்குத் தோணுது . அது எப்போ கைமாறிப் போகுங்கிறது யாருக்கும் தெரியாதே. சேமிக்கிற சாமர்த்தியம்  சந்தர்ப்பமும் உள்ளவன் பேலன்ஸ் பண்ணிக்குவான்.அந்த சாமர்த்தியம் எத்தனை பேருக்கு இருந்திருக்கும் ?" என்று கேட்டு விட்டு வாசலை நோக்கி நடந்தார் விஸ்வநாதன்.
அங்கு நிலவிய இறுக்கமான சூழ்நிலையைத் தவிர்க்கவே அங்கிருந்து அவர் நகர்ந்தார் என்பது இருவருக்குமே புரிந்தது.

Friday, February 06, 2015

Scanning of inner - heart ( Scan Report Number - 139 )

                                                            வீடு !
"வீடு எங்கே?"என்று இருந்த இடத்திலிருந்து வாசுதேவன் கேட்க "பேங்க்"  என்று ஒற்றை வார்த்தையில் பதில் வந்தது ரகுவிடமிருந்து.
"அப்படின்னா அந்த ஆனுவல் ரிபோர்ட் பைல்?"
"அதைப் பத்தி வீட்டுக்குத்தான் தெரியும் "
இதைக் கேட்டு தனக்குள் சிரித்துக் கொண்டாள் அர்ச்சனா. "எப்போ மேனேஜர் வந்து எப்போ எனக்கு சீட் அலாட் பண்றது ?" என்ற டென்சன் அவளுக்குள் ஓடிக் கொண்டிருந்தது.  எல்லாரும் பார்க்கும்படி இப்படி சென்டர் பிளேசில் ஒரே இடத்தில் மணிக்கணக்காக  உட்கார்ந்திருப்பது கஷ்டமாகத் தெரிந்தது அர்ச்சனாவிற்கு. ஆனால் அங்கிருந்தபடியே தன்னை சுற்றி நடக்கும் விஷயங்களைக் கவனிக்க முடிந்தது ஒரு வகையில் திருப்தி யாக இருந்தது அவளுக்கு.
நானும் வந்ததிலிருந்து பார்க்கிறேன். ஆளாளுக்கு "வீடு, வீடு" என்று வீட்டைப் பற்றியே பேசிக்கொண்டு இருக்கிறார்களே .. அது யாரோட வீடு என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டாள் 
சற்று முன்னால் வந்த ஒருவர், " வீட்டைக் காணலே .. வீட்டை நம்பித் தான் நான் டிபன் எடுத்துட்டு வரலே" என்று சொல்ல, " கவலையை விடு . லஞ்ச் டைமில் உன் டேபிளில் கொண்டு வந்து சேர்க்க வேண்டியது என்னோட பொறுப்பு .   நான் வீட்டை வெளியே அனுப்பி இருக்கிறேன்" என்று சொல்ல, " நீங்க கேரண்டி குடுத்தப்புறம் நான் ஏன் வொரி பண்ணப் போறேன்" என்றபடி அங்கிருந்து நகர்ந்தார் அவர்.  
கடிகார முள் அநியாயத்துக்கு ஸ்லோவாக நகர்வது போன்ற பிரம்மை. "மேடம்" என்ற குரல் கேட்டு திரும்பிய அர்ச்சனா "யெஸ்" என்றாள் பணிவாக.
"நான் இந்த ஆபீசில் அனலிஸ்ட் .  என்னோட பேர் அஹ்மத். மேனேஜர் ஆபீஸ் வேலையா வெளியே போனார். அது முடிய அதிக நேரம் ஆகுமாம். அதனாலே அதை முடிச்சுட்டு அப்படியே வீட்டுக்குப் போயிடுவேன். நாளைக்குதான் வருவேன்னு மெசேஜ் அனுப்பிட்டார். இன்னிக்கு மட்டும் உங்களை  அக்கௌன்ட்ஸ் செக்சனில் உட்கார வைக்க சொன்னார். அவர் வந்ததும் உங்களுக்கு சீட்டும் வொர்க்கும் அலாட் பண்ணுவார். என்னோட வாங்க .. உங்களை அக்கௌன்ட்ஸ் செக்சனில் கொண்டு போய் விடறேன்  " 
பதிலேதும் பேசாமல் அவர் பின்னால் நடந்தாள் அர்ச்சனா 
"நீங்க இந்த ஆபீசுக்கு மட்டும்தான் புதுசா இல்லே வேலைக்கே புதுசா ?"
"வேலைக்கே புதுசு "
"அதான் உங்க கிட்டே இப்படியொரு டென்ஷன் .. முகத்தில் பயக் களை! பயப்படாதீங்க.. இங்கே பெர்சனலா எல்லோரும் நல்லவங்க .  அபீசியலா ஒவ்வொருத்தரும் யமனுங்க. பார்த்து நடந்துக்க வேண்டியது உங்க சாமர்த்தியம். உங்களுக்குள் என்னதான் பயம் இருந்தாலும் அப்படி ஒண்ணு இருப்பதை வெளியில் காட்டிக்காதீங்க.. கையில் சாப்பாடு கொண்டு வந்துருக்கீங்க தானே? இங்கே கேண்டீன் வசதி கிடையாது "
"சாப்பாடு கொண்டு வந்திருக்கிறேன் "
"குட்"
"வொர்க்கில் என்ன சந்தேகம் வந்தாலும் ஒரு முறைக்கு ரெண்டு முறையா கேட்டுக்கோங்க. ரொம்ப  பொறுமையா சொல்லித் தருவாங்க.. ஒண்ணை  சொல்லித் தரும்போது எல்லாம் புரிஞ்ச மாதிரி தலையை பூம்பூம் மாடு மாதிரி ஆட்டிட்டு, பிறகு வேலையில் தப்பு பண்ணினா கோபப் படுவாங்க. பார்த்து நடந்துக்கணும்"
"சரி ... ஸார் ஒரு டௌட் ..."
"இன்னும் நீங்க ஸீட்டில் உட்காரவே இல்லை .. அதற்குள் டௌட்டா ?"
"நானும் வந்ததிலிருந்து கவனிக்கறேன் .. எல்லாரும் "வீடு வீடு "னு பேசிக்கிறாங்க..  அது யாரோட ...."
"ஓ" என்று சத்தமாக சிரித்த அஹமத் "உங்க ஸீட்டை உங்களுக்குக் காட்டுறதுக்கு முன்னாலே  முதலில் வீட்டைக் காட்டறேன் .. வாங்க " என்றான்  
பதிலேதும் பேசாமல் நின்றாள் அர்ச்சனா  
"வெளியில் போயிருந்த வீடு இப்பத்தான் சீட் பக்கம் போனதாக ஞாபகம். வீடு முன்னாலே கொண்டு போய் நிறுத்தறேன். விஷ் பண்ணுங்கோ . பேச்சை துவக்கி வச்சிட்டு நான் கிளம்பிடுவேன் .  அப்புறம் எஞ்சாய் யுவர் ஸெல்ப் "
மௌனமாக தலையாட்டினாள் அர்ச்சனா 
காலையிலிருந்து அவள் உட்கார்ந்திருந்த இடத்துக்கே திரும்பவும் அவளை  அழைத்து வந்த அஹமத், அந்த ஹாலின் கடைசிப் பகுதிக்கு அவளை அழைத்து சென்றான். ஹான்ட் பேக்கில் எதையோ தேடிக் கொண்டிருந்தவரிடம்  "ஸார். இவங்க   நம்ம ஆபீசுக்கு புது வரவு .. வீடுன்னா என்னனு கேட்டாங்க.. புரிய வையுங்க " என்று சொல்லிவிட்டு   அவள் பக்கம் திரும்பி "இந்த இடத்தை விட்டு நகரும் போது உங்க சந்தேகம் கண்டிப்பா காணாமே போயிடும்  " என்று குறும்பு சிரிப்புடன் சொல்லி விட்டு அங்கிருந்து நகர்ந்தான்.
"உட்காரும்மா .. உன் பேர் என்னம்மா ?"
"அர்ச்சனா "
"முதலில் ஒரு கேள்வி . நான் முதல் முதலா யாரை மீட் பண்ணினாலும் அவங்க கிட்டே நான் வழக்கமா கேட்கிற கேள்வி . இந்த பூமியில் எத்தனையோ இடங்கள் இருக்குது . எந்த இடத்துக்குப் போனாலும் அந்த இடத்துக்கு  சம்பந்தப் பட்டவங்களோட அனுமதி வேணும் ... அதுவும் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும்தான் உள்ளே அலொவ் பண்ணுவாங்க .. வெளியில் விடுவாங்க . சில சமயம்  உள்ளே போக டிக்கெட் எடுக்கணும் .. யாரோட அனுமதியும் இல்லாமே .. பாஸ் போர்ட் .. விசா .. லொட்டு லொசுக்குனு எந்த டிமாண்டும் இல்லாமே  நினைச்ச நேரத்தில் நாம போகக் கூடிய இடம் எது தெரியுமா ?" என்று கேட்டுவிட்டு அவளைக் கூர்ந்து நோக்கினார் அவர்.
இப்படியொரு கேள்வியை சற்றும் எதிர்பாராத அர்ச்சனா சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்தாள். "எந்த இடம் .. எந்த இடம் " என்ற கேள்வி மனதுக்குள் ஓடிக் கொண்டிருந்தது.
"தெரியலே " என்றாள் அசடு வழிய 
"வீடும்மா ... நம்ம வீடு "
"உனக்கு நாட்டுப் பற்று உண்டா .. அப்படியொரு சிந்தனையாவது உண்டா  ?"
சிறிதும் தயங்காமல் "அப்படியெல்லாம் நான் யோசித்துப் பார்த்ததே இல்லை " என்றாள் 
"உன்னோட உண்மையான பேச்சு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு "
"நாங்களும் நம்பர் ஒன் .. அப்படின்னு கொடி ஏத்தும்   போதெல்லாம் நாம பெருமை பேசிகிட்டாலும் நம்ம பிளஸ் மைனஸ் நமக்கு தெரியும் தானே?" 
"ஆமாம் "
"நாட்டோட மைனஸ் பாயிண்டை சரி பண்ணனும்னா அதுக்காக ஒட்டு மொத்த நாட்டையும்  குப்புறக் கவுத்தி சரி பார்க்கணும்கிற அவசியம் எதுவுமே இல்லே. ஒவ்வொருத்தரும் அவங்கவங்க வீட்டை சரி பண்ணினாலே போதும்.  அந்த வீட்டில் இருக்கிறவங்க சரியா நடந்து கிட்டாலே போதும் "
"எப்படி ஸார்?" என்ற கேள்வி ஆர்வத்துடன் வந்தது அர்ச்சனா விடமிருந்து.
"ஒவ்வொருத்தரும் அடுத்தவங்க விஷயத்தில் தலையிடாமே அவங்க அவங்க வீட்டு வேலையையும் மனுஷங்களையும் கவனிச்சு கிட்டாலே போதும்.. நிறைய பிரச்சினை சால்வ் ஆயிடும் "
"நீங்க சொல்றது புரியலே "
"என் வீடு சுத்தமாகத்தான் இருக்கும். அதே போல எங்களோட சுத்துப் புறமும் சுத்தமாத்தான் இருக்கும் .  எங்களுக்குப் பிடிச்ச விஷயங்களை எங்க வீட்டில் நாங்க செய்வோம் .. அடுத்த வீட்டுக்காரனுக்கு அது ஒரு நாளும் தொந்தரவா இருக்காது. யாராவது வந்து எங்ககிட்டே வந்து யோசனை கேட்டால் சொல்வோமே தவிர அடுத்தவங்க விவகாரங்களில் மூக்கை நுழைக்க மாட்டோம்ங்கிற வைராக்கியத்தில் இருந்தால் போதும்  யாருக்கும் எந்த பிரச்சினையும் வராது . பழைய தமிழ்ப் பாடல் ஒண்ணு உண்டு. ஸ்கூலில் நீ கூட படிச்சிருக்கலாம். ஒருவனைப் பலி குடுத்து ஒரு   குடும்பத்தைக் காப்பாற்றலாம். ஒரு குடும்பத்தை பலி குடுத்து ஒரு தெருவைக் காக்கலாம் .   ஒரு ஊரைக் காப்பாற்ற ஒரு தெருவைப் பலி கொடுக்கலாம். ஒரு நாட்டைக் காப்பாற்ற ஒரு ஊரை  பலி குடுக்கலாம் அதில் எந்த தப்பும் கிடையாது ன்னு அந்த பாடல் சொல்லும். இந்தப் பலிங்கிற வார்த்தைக்குப் பதிலா, சுயக் கட்டுப்பாடுங்கிற வார்த்தையைப் போட்டு அந்தப் பாடலைப் படிச்சுப் பாரு. ஒவ்வொரு வீடும்  அந்தக் குடும்பத்தினரின்  சுயக் கட்டுப் பாட்டில் இருந்தால்  போதும். அந்த வீடும் நிம்மதியா இருக்கும். அந்த  தெருவும்  நிம்மதியா இருக்கும். தெரு நிம்மதியா இருந்தா ஊர் நிம்மதியா இருக்கும். ஊர்கள் சேர்ந்ததுதானே நாடு . அதனால் நாடு நன்றாக இருக்கும். ஒரு நாடு நன்றாக இருக்க ஒரு வீடு அந்த வீட்டினர்  தன்னை அறிந்து நடந்துகிட்டாலே போதும். வீட்டை வெறும் வீடாகப் பார்க்காமல் ஒரு நாட்டோட அஸ்திவாரமா பார்க்கணும்னு நான் ஒவ்வொர்த்தர் கிட்டேயும் சொல்வேன் . எங்க அப்பா சுதந்திரப் போராட்ட தியாகி. அவர் விட்ட பணியை எப்போதும் நான் தொடருவேன். மத்தவங்க கேட்டாலும் கேட்காட்டாலும் என் கருத்தை அவங்க கிட்டே சொல்வேன்  "
"அதற்கு பலன் கிடைக்குதா ?" என்று ஆவலுடன் கேட்டாள் அர்ச்சனா 
"பலன்தானே ? பகவத் சிங் என்கிற என்னோட பேரை "வீடு"னு இந்த ஆபீசில் மாத்திட்டாங்க. அதை நான் பெரிசா எடுத்துக்கலே .. எப்படியோ வீடு நினைப்பில் இருந்தால் சரின்னு நினைச்சுக்குவேன் " என்றார் .
"மேடம் .. வீடு விவகாரம் புரிஞ்சுதா ? உங்க ஸீட்டுக்கு போகலாமா ?"
என்று குரல் கேட்டு திரும்பிய அர்ச்சனா "நீங்க இங்கேதான் இருந்தீங்களா  ?" என்று திகைப்புடன் கேட்க  பதிலேதும் சொல்லாமல் சிரித்த அஹ்மத், சிறிது நேரம் கழித்து "என்னதான் ராஜ உபசாரம் பண்ணி என்னை  ஒரு  ஸ்டார் ஹோட்டலில் தங்க வச்சாலும், அங்கெல்லாம் கிடைக்காத நிம்மதி, எந்தவொரு வசதியுமே இல்லாத எங்க வீட்டில்தான் கிடைக்கிறமாதிரி  எனக்கொரு பீலிங் .. வாடகை வீடு .. தண்ணீர் சரியாக வராது. காற்று கூட ரேஷனில் தான் வீசும் .. மழை காலத்தில் வீட்டுக்குள் தண்ணீர் வந்துடும். ஆனாலும் வீட்டுக்குள் நுழையறப்போ  கிடைக்கிற நிம்மதியே தனிதான். இந்த உலகத்திலே எனக்கு ரொம்ப பிடிச்ச இடம் எங்க வீடுதான். பிடிச்ச மனிதர் "வீடு " ஸார் தான் " என்றான் 
"எனக்கும் "வீடு" ரொம்ப பிடிச்சிருக்கு " என்றாள் அர்ச்சனா குதூகலத்துடன்