Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, February 27, 2015

Scanning of inner - heart ( Scan Report Number - 141 )

                                           இதை யார் மாற்றுவார் ?
"வாங்க  சுந்தர்.... எல்லாம் நம்ம வீடுதான் ..." என்று வற்புறுத்தி சத்யா அழைக்க, சிறிது தயக்கத்துடன் வீட்டுக்குள் வந்தான் சுந்தர்.
சத்யாவின் குரல் கேட்டு, ஈரக் கையை புடவைத் தலைப்பில் துடைத்தபடி வந்த லீலாவிடம் " அம்மா, இவர் பேர் சுந்தர்.. இவரும் நான் அட்டெண்ட் பண்ணின செமினாரில் ஒரு கேண்டிடேட்.  இன்னிக்கு செமினார்  பைனல் டேங்கிறதால் செமினார் முடிய ரொம்ப லேட் ஆயிடுச்சு. இவர் புக் பண்ணின ட்ரைனை பிடிக்க சான்ஸ் இல்லே.ஏதாவது ஹோட்டலில் தங்கிட்டு நாளைக்குப் போறேன்னு சொன்னார். நான்தான் வற்புறுத்தி நம்ம வீட்டுக்கு அழைச்சிட்டு வந்தேன் " என்று சொன்ன சத்யா, " சுந்தர், இவங்க என்னோட அம்மா"என்று சொல்ல,பவ்யமாக கைகூப்பி நின்றான் சுந்தர்.
"தாத்தா எங்கே ? பெரிய தாத்தா எங்கே ? அப்பா இன்னும் வரலியா ?"
"அப்பா இன்னும் வரலே.அடுத்த வாரம் அவங்க ஆபீஸில் ஆடிட் வருதாம்.வேலை நிறைய இருக்குது, இன்னிக்கு ஆபீசில் தங்கிடுவேன்னு சொல்லிட்டுப் போனார். தாத்தா கோவிலுக்குப் போனார். பெரிய தாத்தா மொட்டை மாடிக்குப் போனார் "
"சுந்தர் , ஏன் இன்னும் லக்கேஜை சுமந்துட்டு நிக்கிறீங்க. பீல் ப்ரீ .. உங்க வீடு மாதிரி நினைச்சுக்கோங்க. என்னோட பிரெண்ட்ஸ் இங்கே வர்றதும் இங்கே தங்கறதும் எங்க வீட்டில் வழக்கமா நடக்கிற ஒரு விஷயந்தான். வீடு எப்பவும் கலகலப்பா நாலு பேர் நடமாட்டத்தோட சிரிப்போட  இருக்கிறதைத்தான் இந்த வீட்டில் இருக்கிற எல்லாரும் லைக் பண்ணு வோம். பேக்கை வச்சுட்டு வாங்க.  தாத்தாவை இன்ட்ரடுயூஸ் பண்றேன்" என்று சொல்லி மாடிக்கு சுந்தரை அழைத்து சென்ற சத்யா , "தாத்தா இவர் என்னோட ப்ரெண்ட். பூர்விகம் மாயவரம். இப்போதைக்கு இவர் டெல்லி வாலா...கூடிய சீக்கிரம் சென்னை வந்துடுவார்.ஸார் பயங்கர முன் ஜாக்கிரதைப் பேர்வழி. செமினார் முடிய லேட் ஆயிடுச்சு. ட்ரைனை பிடிக்க முடியாதுங்கிறது தெரிந்து அங்கிருந்தவங்க கிட்டே இவர் பட்ஜெட்க்கு தகுந்த மாதிரி ஹோட்டல் வேண்டும். டீசென்ட் இடமா இருக்கணும் . ரெய்ட்ங்கிற பேரில் மிட் நைட்டில் ரூம் கதவைத் தட்டி செக் பண்ணாத இடமா இருக்கணும். போலீஸ்காரங்க யாராவது கதவைத் தட்டி நான் எட்டிப் பார்க்க, அதை யாராவது மீடியாவில் போட்டுட்டா என்னோட இமேஜ் டேமெஜ் ஆயிடும். குடும்ப கௌரவம் போயிடுங்கிற ரேஞ்சுக்கு விசாரிச்சிட்டு இருந்தார். இந்த மாதிரி எந்த பயமும் இல்லாமே எங்க வீட்டில் வந்து தங்குங்கன்னு சொல்லி நான் அழைச்சிட்டு வந்தேன். இன்னிக்கு இவர் நம்ம வீட்டில் தங்கறார்"என்று தாத்தா விடம் சொல்லிவிட்டு , "சுந்தர், இவங்க என்னோட அப்பாவோட தாத்தா. ஐ மீன் என்னோட கொள்ளுத் தாத்தா. என்னோட தாத்தாவை "தாத்தா"ன்னும் அப்பாவோட தாத்தாவை "பெரிய தாத்தா"ன்னும் கூப்பிடுவேன்." என்று அறிமுகப் படுத்தினான் சத்யா.
"தம்பிக்கு ரொம்பவும் தொலை நோக்குப் பார்வை உண்டு போலிருக்கு. போலீஸ் செக் பண்ற இடத்தில் இருந்தால்கூட தனக்குக் கௌரவக் குறைச்சல்னு நினைக்கிறாரே" என்று தாத்தா சொல்ல, "பெரிய தாத்தா சுதந்திரப் போராட்ட தியாகி.. கவெர்ன்மெண்ட் இவருக்கு தியாகிகளுக் கான விருது, பென்ஷன் குடுக்க ரெடியா இருந்துச்சு.  ஆனா தாத்தா ரெப்யூஸ் பண்ணிட்டார்.  நீங்க இவரோட பேசிட்டு இருங்க. நான் கீழே போய் லஞ்ச் ரெடி பண்ண அம்மாவுக்கு  ஹெல்ப் வேணுமான்னு கேட்டு, அதை முடிச்சுட்டு வர்றேன்" என்றபடி அங்கிருந்து நகர்ந்தான்.
"எல்லா வசதியும் இருக்கிறவங்க கூட கவெர்ன்மெண்ட் அனௌன்ஸ் பண்ற காம்ப்ளிமென்ட் பொருளை வாங்க க்யூவில் மணிக்கணக்கா காத்து நிக்கிறாங்க. அது கிடைக்காட்டா சாலை மறியல் பண்றாங்க . ஆனா அரசாங்கமே உங்களைத் தேடி வந்து ஒரு கௌரவத்தை தரும் போது நீங்க அதை  வாங்க மறுத்துறுக்கீங்க.. ரொம்ப ஆச்சரியமா இருக்கு! ஏன் அப்படி ?" என்று ஆச்சரியத்துடன் கேட்டான் சுந்தர் .
"என்னைவிடவும் உயர்ந்த தியாகிகள் எங்க குடும்பத்தில் இருந்தாங்க. அந்த விருது அந்த கௌரவம் அவங்களுக்குக் கிடைச்சிருந்தால் நான் கண்டிப்பா பெருமைப் பட்டிருப்பேன். அதை அரசாங்கம் அவங்களுக்குத் தராதுன்னு எனக்கு நல்லா தெரியும். மனச்சாட்சிக்கு விரோதமா எதையும் வாங்க நான் விரும்பலே" என்றார் தாத்தா குரல் தழுதழுக்க.
"அவங்களும் உங்களோட சேர்ந்து போராட்டத்தில் கலந்தவங்கன்னா அவங்களுக்கும் விருது குடுக்கிறதுதானே நியாயம் ?"
"அவங்க வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு கிடந்தாங்க "
இதைக் கேட்டு ஆச்சரியப்பட்ட சுந்தர்,"வீட்டில் இருக்கிறவங்க அத்தனை பேருக்கும் விருது கிடைக்கணும்னு நினைக்கிறது எந்த வகையில் ஸார் நியாயம் ?" என்றான் 
"தம்பி, என்னை விடவும்  பெரிய தியாகிகள் அவங்கதான். அவங்களுக்கு கிடைக்க முடியாத ஒண்ணு  எனக்கும் வேண்டாம்னு சொன்னேன் . அவ்வளவுதான் "
"எனக்கு எதுவும் புரியலே "
"தம்பி, சுதந்திரப் போராட்டம் பற்றி நீங்க பாடப் புத்தகத்தில் மட்டுந்தான் படிச்சிருப்பீங்க. அதை அனுபவப் பாடமாகப் படிச்சவன் நான். இந்தியா பாகிஸ்தானில் உள்ள அத்தனை பேருமே இந்திய சுதந்திரத்துக்காகப் பாடுபட்டிருக்காங்க . சுதந்திரம் கிடைச்ச பிறகுதானே பாகிஸ்தான் தனி நாடாகப்  பிரிஞ்சு போச்சு . அதுக்கு முன்னே வரை எல்லாருமே  ஒரு தாய் மக்கள்ங்கிற உணர்வுதானே இருந்துச்சு. ஆட்சியில் இருந்தவங்களோட  மிரட்டலுக்குப் பணிஞ்சோ இல்லாட்டா  சுய லாபத்துக்கு ஆசைப்பட்டோ படிச்சவங்க, சிற்றரசர்கள், நிலசுவான்தார்கள், பிரபுக்கள் ஜமீன்தார்கள்னு ஆங்கிலேயர் விரிச்ச வலையில் விழுந்தவங்க நிறைய பேர் . எந்த வலையிலும் சிக்காமல் மக்களுக்காக பாடுபட்டவங்க லிஸ்ட் ஒண்ணு உண்டு  ... நேரு, காந்தி, நம்ம வ உ சிதம்பரம் பிள்ளை .. இவங்களைப் போல கொஞ்ச பேரை அந்த லிஸ்ட்டில் சேர்க்கலாம். இவங்க எல்லாரும் நல்ல வசதி வாய்ப்புள்ள குடும்பத்தில் பிறந்தவங்களா   இருந்தாலும், மக்களுக்காக "கஷ்டசுமை"யை தங்களோட தலையில் தூக்கி சுமந்தாங்க . அவங்க நினைச்சிருந்தா வெள்ளைக்காரங்களுக்கு சிங்கி அடிச்சுகிட்டு ராஜ போக வாழ்வை அனுபவிச்சிருக்கலாம். ஆனால் அப்படி செய்யலே. அதனாலே தான் அவங்களை இன்னிக்கும் நாம நினைச்சுப் பார்க்கிறோம். கொஞ்ச வருஷம் முன்னே சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு மரியாதை செய்றோம்னு சொல்லி  ஒவ்வொரு ஊரிலிருந்தும் மண் எடுத்துட்டுப் போனாங்க .. தில்லையாடி .. எட்டயபுரம்..  அங்கே இங்கே இருந்தெல்லாம் மண் போச்சு . ஆனால் எனக்கு அதில் உடன்பாடு இல்லே . அதில் நான் கலந்துக்கலே . ஏன் தெரியுமா ?"
"சொல்லுங்க .. தெரிஞ்சுக்கறேன் "
"தெற்க்கே கன்னியாகுமரியிலிருந்து பாகிஸ்தானின் கடைசி பார்டர் வரை ஒவ்வொரு  துளி மண்ணும் போராட்டக்காரர்களின் வியர்வை யிலோ  இல்லாட்டா இரத்தத்திலோ நனைஞ்சிருக்கு.. அப்படியிருக்க ஒரு  சில இடத்தை மட்டும் தேர்வு செய்றதில் எனக்கு விருப்பமில்லே " என்று தாத்தா சொல்ல, அதையெல்லாம் கேட்க ஆர்வமில்லாத சுந்தர் "உங்க வீட்டிலுள்ள போராட்டக்காரங்க பற்றி சொல்லுங்க .. அவங்க என்ன செய்தாங்க ?" என்றான்.
"வீட்டை விட்டு வெளியே வராமல்  வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்து   அவங்களோட வாழ்நாளை முடிச்சுகிட்டாங்க "
" என்ன சொல்றீங்க ?"
"தம்பி .. இப்போ எல்லாருமே நல்லா படிச்சு ஓரளவு நாட்டு நடப்பு உலக விவகாரம் தெரிஞ்சவங்களா இருக்கிறாங்க. இருந்தாலும் ஏதோ ஒரு காரணத்தாலே ஒரு  வீட்டுக்கு  போலீஸ் ஜீப் , இல்லாட்டா வேறு ஏதாது ஒரு விவகாரம் வந்துட்டா அந்தப் பக்கமே தலை வச்சுப் படுக்கப் பயப் படறாங்க. உங்களையே எடுத்துக்கோங்க . போலீஸ் ரெய்ட் ஒரு ஹோட்டலுக்கு வந்தால் அது அங்கே தங்கிஇருக்கிறவங்க இமேஜை ஸ்பாயில் பண்ணும்னு நினைக்கிறீங்க.  நாடு அடிமைப் பட்டு கிடந்த நேரத்தில் மக்களின் மனோநிலை எப்படி இருந்திருக்கும்னு கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க.. கூட்டம் போராட்டம் என்று நடத்தி விட்டு ஜெயிலுக்குப் போனவன் வீட்டுக்குப் போக நெருங்கிய சொந்தக்காரங்க கூட பயப்பட்ட காலம் அது.பார்க்கப் பயப்பட்டாங்க. பேசப் பயப்பட்டாங்க. இவங்களை ஏதோ கொலை குற்றம் செய்தவங்க மாதிரி நடத்தி இருக்காங்க. இன்னைக்கு தியாகின்னு சொல்ற எங்களை அந்தக் காலத்தில் கலகக்காரர்கள்னு வெள்ளைக் காரங்க முத்திரை குத்தி வச்சிருந்தாங்க. அந்த முத்திரைக்குப் பயந்து ஊர் என்னோட அம்மா அப்பா  எங்க குடும்பம்ன்னு எல்லாத்தையும் பிரிச்சு தான் வச்சிருந்தது. போராட்டக்காரங்களோட குடும்பத்துக்குள் எப்போ போலீஸ் வரும் . எப்போ அடிச்சு இழுத்துட்டுப் போகும்னு சொல்ல முடியாத நிலைமை . எங்க குடும்பத்துக்குப் பெண் குடுக்கப் பயப்பட்டாங்க. எங்க குடும்பத் திலிருந்து  பெண் எடுக்கப் பயப்பட்டாங்க. அத்தனை அவமானத்தையும் தாங்கி கிட்டு , வெளியில் தலை காட்டமுடியாமல் வீட்டுக்குள் முடங்கிக் கிடந்துச்சு எங்க குடும்பம். ஒரு நல்லது கெட்டதைப் பார்க்கலே.நல்லது   கெட்டதில் கலந்துக்கலே. ஒவ்வொரு முறை நான் ஜெயிலுக்குப் போயிட்டு  வரும் போதும் வீட்டுக்குள்ளேயே செத்து செத்து பிழைச்சிட்டு இருந்துச்சு எங்க குடும்பம். போராட்டம் பண்ணினோம் தண்டனை அனுபவிச்சோம். அது நியாயம்.. ஆனால்  அந்த அடி எங்க வீட்டு ஆளுங்க மேலேயும் விழுந்திருக்கு. இன்னிக்கு எங்களை தியாகிகள்னு சொல்ற இதே மண்ணு ஒருகாலத்தில் எங்களை "கருங்காலிப்பயலுக", "விடலை ப்பயலுக"ன்னு தள்ளி வச்சிருந்துச்சு. எந்த குற்றமும் செய்யாட்டாலும் , என்னை அந்தக் குடும்பத்தில் ஒருத்தனாக வச்சிருந்ததுக்கு  தண்டனை அனுபவிச்சாங்க என்னைப் பெத்தவங்க ... என்னோட கூடப் பிறந்தவங்க . அதனாலே அவங்கதான் உண்மையான தியாகிங்க"
"அப்போ நடந்த  உங்க போராட்டம்  பத்தி இப்போ என்ன பீல் பண்றீங்க ?"
"வெளியிடத்திலிருந்து நம்ம நாட்டுக்கு வந்து நம்மளை சுரண்டினவனை சூறையாடியவனை போராடி விரட்டினோம். இந்த மண்ணில் பிறந்து சொந்த  மண்ணை சுரண்டி சூறையாட்டிட்டு இருக்கிறவங்களை எதுவும் செய்ய முடியாமல்,அதையெல்லாம் டீவீயில் ஒரு செய்தியாகப் பார்த்து ட்டு வெட்டியா இருக்கிறதை நினைச்சு வேதனைபட்டுகிட்டு வாழ் நாளைக் கடத்திட்டு இருக்கிறேன் தம்பி . எப்போ மேலேயிருந்து அழைப்பு வருமோ தெரியலே!" என்று பெருமூச்சுடன் சொன்னார் பெரிய தாத்தா.  
"அது வர்றப்போ வரட்டும் . இப்போ கீழேயிருந்து அழைப்பு வருது . சாப்பாடு ரெடி .  சாப்பிட வரலாம் " என்றபடி அங்கு வந்தான் சத்யா .

No comments:

Post a Comment