Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, November 15, 2013

Scanning of inner - heart ( Scan Report Number - 093 )

                            கனவுகள் நினைவாகும் !!
" இன்னிக்கு ஐயா செம ஜாலி மூடில் இருக்கிற மாதிரி தெரியுதே " என்று கிண்டலான குரலில் கேட்டாள் ராதா
"எதை வச்சு சொல்றே? " என்ற எதிர்க் கேள்வி கணேஷிடமிருந்து வந்தது.
"வீட்டுக்குள் நுழையும்போதே 'செருப்பு ஏன் வழியில் கிடக்குது? ஸ்கூல் விட்டு வந்து யூனிபார்ம் மாற்றினா அதை எடுத்து பாத் ரூமில் போடக் கூடாதா? நியூஸ் பேப்பர் எல்லாம் ஏன் இறைஞ்சு கிடக்கு?'ன்னு வழக்கமா பாடற பல்லவி எதுவும் இல்லாமே அமைதியா, அதுவும்  சிரிச்சமுகத்தோ டு   வர்றீங்களே, அதை   வச்சுதான் கேட்டேன் "
"அப்படின்னா வீடு தினமும் இந்த அழகில்தான் இருக்குனு நீயே ஒத்துக்கிறே ? அப்படித்தானே ? "
"ஐயா சாமி, நான் வேலை வெட்டிக்குப் போகாமே வீட்டில் இருந்தா நீங்க எதிர்பார்க்கிறபடி அது அதை அது அது இடத்தில் வச்சிட்டு இருக்க முடியும். நானும் உங்களைப் போல காலையிலே ரன்னிங் ரேஸ் போயிட்டு சாயங்காலம்தான் வர்றேன். வீட்டுக்குள் நுழையும்போது நீங்க என்னைக் கேள்வி கேட்க முடியும். நான் யாரிட்டே போய்க் கேள்வி கேட்க முடியும் ? எங்கே போய்  முட்டிக்க முடியும் ? "
" உன் புராணத்தைப் பாடி  மூடைக் கெடுத்துடாதே "
"இல்லே சாமி. உங்க  குஷிக்கு என்ன காரணம் ? அடியேன் தெரிஞ்சுக்க லாமா ? "
"இத்தனை வருஷத்துக்குப் பிறகு இன்னிக்கு நம்ம மகாதேவன் ஸார் போன் பண்ணினார் ? "
"என்னங்க சொல்றீங்க ? சேலத்தில் நம்ம வீட்டுக்குப் பக்கத்தில் இருந்தா ரே, அவரா ? இப்போ எங்கே இருக்கிறாங்களாம் ? அவங்க அம்மா எப்படி இருக்கிறாங்களாம் ?    நமக்கும் அவங்களுக்கும் டச் விட்டுப் போய் பத்து வருஷமாகப் போகுது. மலேஷியா போறோம்னு சொல்லிக் கிளம்பிப் போனவங்க .. அப்புறம் ஒரு தகவலுமே இல்லை. நமக்குக் கல்யாணம் ஆன புதுசில் அவங்க செய்ஞ்ச உதவியையெல்லாம் மறக்கவே முடியாது . எனக்கு அம்மா இல்லாத குறையே தெரியாதபடி என்னோட டெலிவரி டைமில்  கவனிச்சுக்கிட்டாங்க ஸாரோட அம்மா. அந்த மனசு யாருக்கு வரும்  ? " என்று மூச்சு விடாமல் பேசினாள் ராதா.
" தங்கமான மனுஷங்க " என்றான் கணேஷ் 
" என்ன விஷயமா வர்றாராம்  ? "
"நேரில் வந்து பேசறதா சொன்னார். சேலம் ஆபீஸ் போன் நம்பரைக் கண்டு பிடிச்சு அங்கே போன் பண்ணியிருக்கிறார். நான் சென்னைக்கு மாற்றலாகி வந்த விஷயத்தை சொல்லி இங்குள்ள போன் நம்பரைக் குடுத்திருக்காங்க. இந்தியா வந்து மூன்று நாள் ஆகுதாம். இப்போ மும்பையில் இருக்கிறாராம். நாளைக்கு நம்ம வீட்டுக்கு வருவாங்க. நீ வீட்டை சுத்தம் பண்ணி அவங்க தங்கிறதுக்கு வேண்டிய வசதியை செய்து கொடு  "
" ஏங்க, இதை நீங்க சொல்லணுமா ? நானே செய்ய மாட்டேனா என்ன ? அவங்க பொண்ணு மீனுக் குட்டி எப்படி இருக்கிறாளாம்  ? "
"அதை எல்லாம் ஆபீஸ் போனில் விசாரிச்சிட்டு இருக்க முடியுமா ? அவரே நேரில் வந்து எல்லாம் சொல்றேன்னு சொல்றப்போ நான் துருவித் துருவிக் கேட்க முடியுமா  ? "
இவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த வித்யாவும் மாதவனும் " அம்மா நீங்க என்ன பேசிக்கிறீங்க ? நம்ம வீட்டுக்கு யார்  போறாங்க ? " என்று கேட்டார்கள்  
"நாம சேலத்தில் இருந்தப்போ நம்ம வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் இருந்தாங்க. நீங்க ரெண்டு பேரும் அவங்க பார்த்து வளர்ந்த குழந்தைங்க . அவங்க வீட்டில் ஒரு பாட்டி இருந்தாங்க, அவங்க உங்க ரெண்டு பேரையும் தரையிலே விடாமே எப்பவும் தூக்கியே வச்சிருப்பாங்க. அவங்க வீட்டில் மீனுக் குட்டின்னு ஒரு குட்டிப் பாப்பா இருந்தா. அப்போ அவளுக்கு ஆறு வயசுதான் இருக்கும். இப்போ அவளுக்கு பதினாறு வயசு ஆகியிருக்கும். ரொம்ப சமத்துப் பாப்பா. இப்போ நாங்க உங்களை பாட்டு கத்துக்கணும், ஹிந்தி கத்துக்கணும்னு சொன்னா," மாட்டவே மாட்டோம்  "ன்னு பிடிவாதம் பிடிக்கிறீங்களே, அந்த மீனுக் குட்டி பாப்பா அப்படி எந்த அடமும் பிடிக்க மாட்டா. அந்த வயசிலேயே  டான்ஸ் பாட்டு ஹிந்தி, இப்படி ஒவ்வொரு கிளாசுக்கும் அனுப்புவாங்க. சமர்த்தா போயிட்டு வருவா" என்று குழந்தைகளிடம் சொல்லிக் கொண்டிருந்த ராதா, கணேஷிடம் " ரொம்ப நல்ல பொண்ணுங்க அது. மகாதேவன் சாருக்கு அந்தப் பொண்ணை கலெக்டர் ஆக்கிப் பார்க்க ஆசை. அவரோட மனைவி " என் பொண்ணு டாக்டரா வருவா. எல்லாருக்கும் கொறஞ்ச செலவில் வைத்தியம் பண்ணுவா "ன்னு சொல்வாங்க. மகாதேவன் ஸாரோட அம்மா  " என் பேத்தி ஒரு டீச்சரா வருவா "ன்னு சொல்வாங்க. ஸாரோட அப்பா "என் பேத்தி இந்தியாவில் நம்பர் ஒன் லாயரா வருவா"ன்னு சொல்லிட்டுருந்தார். அவங்கவங்க நினைக்கிற பீல்டில் அந்த பொண்ணு நல்லா வரணும்னு அந்த சின்ன வயசிலேயே ட்ரைனிங் அது இதுன்னு அந்தப் பொண்ணைப்  பாடாப் படுத்துவாங்க. இப்போ அந்தப் பொண்ணு ஸ்கூல் முடிச்சு காலேஜுக்கு ரெடியாயிட்டு இருக்கும்னு நினைக்கிறேன் . அதனால்தான் இங்கே வர்றாங்களோ என்னவோ " என்றாள்.
"நீயே ஏன் தலையைப் பிச்சுக்கிறே? நாளைக்கு அவங்க வந்து நேரிலே யே  நம்ம கிட்டே சொல்லப்    போறாங்க " என்று கணேஷ் வெளிப்படை யாகப் பேசினாலும், இத்தனை வருஷம் கழித்து இங்கே ஏன் வர்றாங்க என்ற கேள்வி மனதுக்குள் ஓடிக்கொண்டுதான் இருந்தது.
அன்று இரவு முழுதும் ராதா தூங்கவே இல்லை. மீனுக்குட்டியைப் பற்றி கதைகதையாக சொல்லிக் கொண்டிருந்தாள்  குழந்தைகளுக்கு.
மறுநாள் மதியம் மூன்று மணியளவில் மகாதேவன் அவர் மனைவி மகள் மீனு மூன்று பேரும்  வந்தார்கள். மீனுவை வாரி அணைத்துக் கொண்டாள் ராதா. அவர்களிடம் " எங்க அம்மா எப்படி இருக்கிறாங்க ? " என்று கேட்டாள் ராதா.
"நீங்க 'எங்க அம்மா'ன்னு உரிமையோடு சொல்ற மாதிரி ,அம்மா அப்பா ரெண்டு பேருமே உங்களை அவங்க பொண்ணுன்னு தான் சொல்லிட்டு இருக்கிறாங்க. கூடிய சீக்கிரம் எல்லாரும் சென்னையில் செட்டில் ஆயிடுவோம். சேலத்தில் இருக்கிற நிலத்தை விற்பது விஷயமாப் பேசத் தான் நான் உங்களுக்கு போன் பண்ணினேன் , நீங்க அங்கே இருக்கிறதா நினைச்சுகிட்டு. பிறகுதான் தெரிஞ்சுது நீங்க சென்னையில் செட்டில் ஆன விஷயம். அதுவும் நல்லதுக்குதான். எங்களுக்கு இங்கே யாரிடமும் பழக்கம் கிடையாது.  நாங்க தங்கிறதுக்கு உடனடியா ஒரு வீடு தேவை . அதை நீங்கதான் பார்த்து தரணும் " என்றார் மகாதேவன் 
" நம்ம வீடுதான் இருக்குதே.இங்கேயே தங்கலாம் " என்றான் கணேஷ் 
"நாங்க பர்மனெண்ட் ஆகத் தங்க வீடு வேணும். கொஞ்சம் ரிச் ஆக இருந்தாலும் பரவாயில்லை "
"மீனுவை இங்கு படிக்க வைக்கிற ஐடியாவா ? என்ன கோர்ஸ் சேர உத்தேசம்  ?"
" படிக்கிற ஐடியா இல்லை. சினிமாவில் நடிக்கப் போறா. கலை நிகழ்ச்சி நடந்த வந்த தமிழ் சினிமா  தயாரிப்பாளர் ஒருவர் மீனுவைப் பார்த்துட்டு அவர் எடுக்கப் போற மூணு மொழிப் படத்துக்கும் இவளை புக் பண்ணி இருக்கிறார். இனிமேல் இங்கு செட்டிலாகிற எண்ணத்தில் இருக்கிறோம் " என்றார் மகாதேவன் 
" வாவ் " என்ற ராதா, உங்க வீட்டில் எல்லோரும் அவளை ஒரு டாக்டரா , டீச்சரா , லாயரா, கலெக்டரா பார்க்க ஆசைப் பட்டீங்க " என்றாள் ராதா.
"யெஸ் ஆன்ட்டி. நிஜ வாழ்க்கையில் ஏதாவது ஒரு பீல்டில் தான் ஒருத்தன் ஷைன் பண்ண முடியும். ஆஸ் எ ஆக்ட்ரெஸ், இந்த எல்லா காரெக்டரையும் நான் சினிமாவில் பண்ணிக் காட்ட முடியும் " என்றாள் மீனு வெகு அசால்டாக. ராதாவும் கணேஷும் வாயடைத்து போய் நின்று கொண்டிருந்தார்கள் .