Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Sunday, October 27, 2019

DEAR VIEWERS

அன்பின் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் !
வளம் பல பெற்று நலமோடு வாழ்க !!

Wednesday, October 16, 2019

அது ஒரு அழகிய நிலாக்காலம் (03)

                                                                    மஹாபலிபுரம் 

சில நாட்களுக்கு முன்பு பரவலாக எல்லோராலும் பேசப்பட்ட, இன்னும் பல தலைமுறைகளுக்கு எல்லோராலும் பேசப்படுகின்ற ஊராக அமைந்து விட்ட ஒரு இடம். முன்னொரு காலத்தில் மிகவும் பிடித்த, ஆனால் இப்போது பிடிக்காத ஒரு ஊர் என்றால் அது மஹாபலிபுரம்தான்.
ஒருகாலத்தில் (கவனிக்க : ONCE UPON A TIME) அதாவது 30 வருடங்களுக்கு முன்பு நாங்கள் சென்னை - செங்கல்பட்டுக்கு இடையில் உள்ள மறைமலை நகரில் குடியிருந்தபோது எங்கள் வீட்டுக்கு வரும் உறவுகளை   மஹாபலி புரம் அழைத்துச் செல்வேன். திருக்கழுக்குன்றம் கோவிலுக்குச் சென்று, கழுகைக் காட்டிவிட்டு, அங்கிருந்து மஹாபலிபுரம் போவோம்.
இதில் ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் திருக்கழுக்குன்றம் கோவிலில் கழுகைப் பார்க்கக் காத்திருப்போர், "ரெண்டு நாளா வர்றோம். கழுகு வரவே இல்லை" என்று நொந்து போய் பேசிக் கொள்வார்கள். ஒவ்வொரு முறையும் நான் செல்லும் சில நிமிடங்களில் கழுகு வந்து விடும். மற்றவர்கள் கமெண்ட்டுக்கு என்னுடைய அனுபவத்தை நான் சொன்னால் என்னுடன் வருபவர்கள், "அப்போ நீ தான் உண்மையான கழுகு" என்று கிண்டலடிப்பார்கள்.
30 வருடங்களுக்கு முன்பு இருந்த இயற்கை அழகு மஹாபலிபுரத்தில் இல்லை என்பது வருத்தமான விஷயம்.
அதற்கு ஆதாரமாக சில விஷயங்களைக் கவனிக்க வேண்டும். குமுதம் திரைப்படத்தில் இடம்பெற்ற "கல்லிலே கலை வண்ணம் கண்டான்" என்ற பாடல்  காட்சியில் கடற்கரையை ஒட்டி, ஒரு கோவில் கோபுரம் அழகாகக் காட்சியளிக்கும். அதை நானே நேரில் பார்த்து ரசித்திருக்கிறேன். சில பாறைகளின் மேல் ஏறி அந்த கோவிலுக்குள் நுழைய வேண்டும். 
ஐந்து ரதங்கள் இருக்கும் இடம் திறந்த வெளியாக இருக்கும். பாறைகளில் செதுக்கப் பட்ட உருவங்கள் பிரமிக்க வைக்கும். 
ஒரு இடத்தில் ஒரு குரங்கு இன்னொரு குரங்குக்கு பேன் பார்க்கும் சிலை தத்ரூபமாக இருக்கும்.
உலைக்கண்ணேஸ்வரர் கோவிலின் சுற்றுப் புறத்தில் நின்று ஊரின் முழு அழகையும் ரசிக்கலாம்.
அதைவிட முக்கியமான விஷயம், அந்த ஊருக்குள் நுழையும்போதே உளியின் ஓசை காதுக்கு இனிமை சேர்க்கும்.  அதை மிகவும் ரசிப்பேன். கடற்கரை வரை வேறு கடைகளோ கட்டிடங்களோ கண்ணில் பட்டதாக நினைவில்லை. சிற்பங்கள் செதுக்கும் இடங்கள்தான் வரிசையாக இருக்கும். சிலசமயம் அங்குள்ளவர்களிடம் பேச்சுக் கொடுப்பேன். அவர்கள் ஸ்டூடெண்ட்ஸ் என்றும். சிலைவடிக்க கற்றுக் கொள்வதாகவும் சொல்வார்கள். ஒவ்வொரு இடங்களிலும் வெவ்வேறு வடிவில் சிலைகள் இருக்கும். அதை ரசித்தபடியே நடப்போம்.
(அப்போதெல்லாம் நான் மிகவும் ஆச்சரியப்படும் விஷயம் ஒன்று உண்டு. சர்வர் சுந்தரம் என்ற திரைப்படத்தில் "சிலை எடுத்தான் ஒரு சின்னப் பெண்ணுக்கு" என்றொரு பாடல் வரும். அந்த பாடலின் தொடக்கத்தில்   உளியின் ஓசை இசையாக வரும். ஒரு பாடல் மகாபலிபுரத்தில் படமாக்கப் படுவது தெரிந்து எந்த அளவுக்கு கலைரசனையோடு இசை அமைத்து இருக்கிறார்கள் என்று வியந்து போவேன்.)
கலங்கரை விளக்கம் படத்தில், "என்னை மறந்ததேன் தென்றலே" என்ற பாடல் காட்சியில் மஹாபலிபுரத்தின் கலை அழகை அற்புதமாகப் படம் பிடித்துக் காட்டி இருந்தார்கள். 
வா ராஜா வா என்ற திரைப்படம் மஹாபலிபுரக் காட்சிகளோடு இணைந்த ஒன்று.
அவ்வளவு இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில், பல வருடங்களுக்கு முன்பாக, இயற்கையாக அமைந்திருந்த கலையழகு மிளிரும் இடங்களைச் சுற்றி செயற்கையாக வேலி அமைத்து என்றைக்கு நுழைவுக் கட்டணம் வசூலிக்க ஆரம்பித்தார்களோ அப்போதே போய்விட்டது இயற்கை அழகு. கடைகளும் நிறைய வர ஆரம்பித்து விட்டது. அதன் பிறகு மஹாபலிபுரம் போகும் ஆசை போய்விட்டது. நாங்களும் சென்னையில் செட்டில் ஆகி விட்டோம். கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, எங்கள் வீட்டுக் குழந்தைக்கு மஹாபலிபுரம் காட்டலாம் என்று காரில் போனோம். அந்த ஊருக்குள் நுழைந்ததும், எந்த தெருவுக்குள் நுழைந்தாலும் காரை நிறுத்தி entrance ticket கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். "ஏன்ப்பா. ஏதாவது ஒரு இடத்தை சுற்றிப் பார்க்கப் போனால், அதற்கு entrance ticket கொடுத்தால் நியாயம். தெருவில் நுழைவதற்கே டிக்கெட் கொடுக்கிறே என்று ஆர்க்யூ பண்ணினோம். இப்போ இப்படித்தான் என்று அடாவடியாகப் பேசி பணம் வசூலித்தார்கள். அதன் பிறகு அந்த பக்கமே போகவில்லை. இயற்கை அழகை ரசிக்கத்தான் அவ்வளவு தூரம் ட்ராவல் பண்ணி அங்கே போகிறோம். நீ செயற்கையாக ஒரு பார்க்கை உருவாக்கி அதுக்கு பணவேட்டை நடத்தறே. எங்கள் ஊரில் இல்லாத பார்க்கா என்று நினைத்து அங்கு போவது நின்று போனது.
சமீபத்தில் மஹாபலிபுரக் காட்சிகளை டீவியில் பார்த்தபோது, பாறைகளின் மேல் வெள்ளையாக ஏதோ சுண்ணாம்பு போன்ற ஒன்றைக் கண்டு அதிர்ந்து போனேன்.
பல்லவர்கள், சோழர்கள் கலையழகு ரசனை கொண்டவர்கள். 
சாண்டில்யன், கல்கி எழுதின சரித்திர நாவல்களைப் படிக்கும்போது, அந்தக் கால கட்டத்தை கண்ணால் பார்க்க முடியவில்லையே என்று ஏங்குவேன். கல்கி எழுதின சரித்திர நாவல்களில், நான் படிக்க முயன்று, ஆனால் இன்று வரை முடியாமல் போன ஒரு நாவல் சிவகாமியின் சபதம். 
ஒருமுறை ஆஃபர் விலையில் பொன்னியின் செல்வன், பார்த்திபன் கனவு, அலை ஓசை, சிவகாமியின் சபதம் போன்ற நாவல்களை கல்கி நிறுவனம் வழங்கியது. பணம் கட்டி வாங்கினேன். ஆனால் சொல்லி வைத்த மாதிரி அந்த நாவல் மட்டும் யாரிடமோ மாட்டிக்கொண்டது. ஹூம் ..
நாட்டோரே .. நல்லோரே உங்கள் அனைவரிடமும் ஒரு விண்ணப்பம்.
பழங்கால நினைவுச் சின்னங்களை அப்படி அப்படியே இருக்க விடுங்கள். உங்கள் கலை ரசனையைக் காட்டி அற்புதமான ஒன்றை, குட்டிச்சுவராக்கி விடாதீர்கள். 

Wednesday, October 09, 2019

படிக்க ஒரு நிமிடம் / ஒரு நொடி போதும். யோசிக்க ?.. (41)

ப்ளீஸ் டோன்ட் ஸ்மைல் 

"ஒவ்வொருத்தனுக பண்ற பைத்தியக்காரத் தனத்துக்கு அளவே இல்லாமல் போயிடுச்சு.!" என்றான்  வாசு.
"விவரம் சொல்லுப்பா. இப்படி மொட்டையா சொன்னா எப்படி?"
"நெட்டில் வெளியாகிற விஷயம் எல்லாமே ஊரறிந்த விஷயம்தான். ஊர் உலகம் அறிந்து கொள்ளணும்னுதான் அதை  பதிவு செய்றாங்க. எனக்குத் தெரிந்த ஒரு அறிவு ஜீவி நெட்டில் படித்த விஷயம் ஒவ்வொண்ணையும் ஏதோ ராணுவ ரகசியத்தைக் கண்டுபிடிச்ச மாதிரி அதை பதிவு பண்றவங் களைத் தேடிக்கண்டுபிடிச்சு, தான் படிச்சதை சொல்லிக்கிட்டு திரியுது. காமெடியா இல்லே! அதைவிட ஜோக் யாரோட தளத்தை அது   பார்க்கிறது ங்கிறது மத்தவங்களுக்குத் தெரியக்கூடாதாம். அதனாலே ஐ.பி. அட்ரெஸ் ஸை மறைச்சு வச்சிட்டு பார்க்கும் "
"விட்டுத் தள்ளு, வேலை வெட்டி இல்லாத கேஸ். எதையோ பண்ணட்டும். நான் ஒரு ஜோக் சொல்றேன் கேளு. அதுக்கு முன்னே ஒரு கேள்வி. இந்தியாவின் மிகப்பெரிய அணைக்கட்டு எது?"
"படிக்கிற காலத்திலேயே இந்த மாதிரி கொஸ்டினை சாய்ஸில் அவாய்ட் பண்ணிடுவேன். இப்போ கேட்டால் எப்படி. பதிலை நீயே சொல்லு."
"தமிழ்நாடு!"
"என்ன சொல்றே ! இந்தியாவின் மிகப்பெரிய அணைக்கட்டு தமிழ் நாடா?  இல்லாட்டா தமிழ் நாட்டில் இருக்குன்னு சொல்றியா ?"
"தமிழ் நாடு" என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னான்  விஜயகுமார்.
நண்பன்  விழிப்பதைக் கண்டு, அதை மனதுக்குள் ரசித்தபடியே, " நண்பா, உபரி நீரை, தண்ணீரை சேமிக்கும் இடத்துக்குப் பேருதான் அணைக்கட்டு. கர்நாடகா மாநிலத்துக்கான அணைக்கட்டு தமிழ்நாடு. அங்கே வெள்ளம் வந்தால் உபரிநீர் எல்லாத்தையும் இங்கேதான் திசை திருப்பறாங்க."
"அட.. அப்படியாவது தண்ணி வந்தால் போதும்னு கையெடுத்துக் கும்பிடுவோமே."
"ஆமா.. கிழிச்சோம்.. அதை அப்படியே கடலில் கொண்டு போய்ச் சேர்த்துட்டு, தண்ணீரைத் தேடி அலைவோம்." என்று வேதனை தொனிக்கும் குரலில் சொன்னான்  விஜயகுமார்..
"இது உனக்கு ஜோக்கா ?" என்று முறைத்தான் வாசு.

Friday, October 04, 2019

DEAR VIEWERS,


Kindly step into
https://ARUNA S. SHANMUGAM.BLOGGER  to solve On-Line cross word puzzles in English and to view more than 1000 numbers of computer designed kolam.