Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Tuesday, April 28, 2020

அட .. என்னடா பொல்லாத வாழ்க்கை??!!!


உண்மையிலேயே எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும். அதற்குக் காரணம் இன்று காலையில் என் காதில் விழுந்த ஒரு சொல்.
வாசலில் காய் விற்பவன் சத்தம் கேட்டது. வெளியில் வந்தேன். அதற்குள் அவன் அங்கிருந்து நகர்ந்துவிட, காய்கறி வண்டியின் பின்னால் ஓடினேன்.
அப்போது ஒரு அம்மா, "கண்ணுக்கு தெரியாதாம். அப்படின்னா அதை எப்படி படமாக வரைகிறான் . டீவியில் காட்டறான்" என்று போனில் பேசியபடி போனார்கள்.
"ஆஹா.. கேட்டாங்களே ஒரு கேள்வி.." என்று மனதுக்குள் சபாஷ் சொன்னேன். ஏனென்றால் இந்த கேள்வியை பல நாட்களாக என்னுள் கேட்டுக் கொண்டே  இருக்கிறேன்.
"இந்த வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை" என்று சொல்கிறார்கள். 
இரண்டு நாட்கள் அல்லது ஒருவாரத்தில், "ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு  இருந்தவர்கள் குணமடைந்து வீட்டுக்கு அனுப்பப் பட்டார்கள்." என்கிறார்கள். மருந்தில்லா நோய் குணமானது எப்படி ?
சேனல் புண்ணியவான்கள் மூலைமுடுக்கில் உள்ளவர்களை எல்லாம் தூசி தட்டி கேமிரா முன்னால் நிறுத்துகிறார்கள். அவர்கள் தங்கள் சொந்த சரக்கை தத்துவங்களாக உதிர்த்து விட்டுப் போகிறார்கள். அவர்கள் கூற்றில் எத்தனை சதவிகிதம் சரி என்று அறிந்து கொள்ள தலைமுடியைப் பிய்த்துக் கொள்ள வேண்டி இருக்கிறது.
இன்று என்னிடம் போனில் தொடர்பு கொண்ட தோழியிடம் இதுபற்றி பேசிய போது, "அருணா.. தயவு செஞ்சு டீவியே பார்க்காதீங்க. பேப்பர் படிக்காதீங்க. ஒவ்வொண்ணையும் பார்க்கப் பார்க்க, கேட்கக் கேட்க, நாம மென்டல் ஆயிடுவோம் போலிருக்குது." என்றார்கள்.
அவங்களோட இந்த ஒரே ஒரு வார்த்தை, " ஒரு விஷயத்தை பத்தி முழுமையான,  சரியான விவரம் எதுவும் தெரியாமலே எல்லோரும் தாங்களும் குழம்பிக் கொண்டு மற்றவர்களையும் குழப்புகிறார்களோ?" என்று நினைக்க வைத்தது. 
இந்த நினைப்பு வர ஒரு முக்கிய காரணம் உண்டு.
கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விஷயம் பீதியைக் கிளப்பியது உலகம் முழுக்க.
ஒரு நாடு (அமெரிக்கா என்று ஞாபகம். நாட்டின் பெயர் சரியாக நினைவில் இல்லை) அனுப்பியஒரு  ஸ்கைலாப், (அது ராக்கெட்டா அல்லது  செயற்கைக்கோளா என்பது எனக்கு  தெரியாது).  தனது பாதை  யை விட்டு விலகி பூமியை நோக்கி நகர்ந்து வந்து கொண்டிருக்கிறது என்று செய்தி வெளியிட்டது. பூமியை வந்து சேர இத்தனை நாட்கள் ஆகும் என்றும் சொல்லி விட்டது (30 நாட்களா அல்லது மூன்று மாதமா என்பது நினைவில் இல்லை.)
அந்த செய்தியை அந்த நாடு வெளியிட்ட தினத்திலிருந்து தினமும் புது புது செய்திகள் பத்திரிகைகளில் வந்த வண்ணம் இருந்தது.
அந்த நாடோ, " ஸ்கைலாப் , பூமிக்கு மிக அருகில் வரும்போதே, அதை வெடிக்க வைத்து கடலில் விழும்படி செய்து விடுவோம்" என்றது.
கடலில்தான் விழும் என்பதற்கு என்ன உத்திரவாதம்? கடலில் விழும் போது கப்பல்கள் படகுகள் பாதிக்கப்படாதா என்ற கேள்விகள் பத்திரிக்கை வாயிலாக வெளிவந்தன.
இப்போது திரும்பின பக்கமெல்லாம் கொரோனா பேச்சு மாதிரி, அன்றைய தினம் ஸ்கைலாப் பற்றித்தான் எங்கும் பேச்சு. பேச வேறே சப்ஜெக்டே கிடையாது.
பூமிக்கு அருகில் வந்தால் கண்டிப்பாக வெடிக்கும். பூமத்திய ரேகையின் இந்த சுற்றில் வந்தால் தமிழ் நாட்டில் இந்த ஊர்கள் அழிந்து விடும். அந்த சுற்றில் வந்தால் தமிழ்நாட்டில் அந்த ஊர்கள் அழிந்து விடும் என்று ஒரு பெரிய லிஸ்ட் போட்டு வரைபடத்துடன் செய்திகள் வெளியாகின. அது வெடிக்கும் போது பார்ப்பவர்கள், கண்பார்வை பறி போய்விடும்  என்றெல்லாம் பத்திரிகைகளில் செய்தி வெளியானது.
யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லாமல் அதை டிஸ்போஸ் பண்ணிடுவோம் என்று அந்த நாடு சொன்னதை யாரும் நம்பவில்லை. "அவன் அப்படித்தான் சொல்லுவான். எல்லாம் முடிஞ்சபிறகு, 'நாங்க எவ்வளவோ முயற்சி பண்ணினோம்.. முடியவில்லை. அழிவுக்கு மன்னிப்பு கேட்கிறோம்னு அறிக்கை விட்டுட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போயிடுவான். சீரழியப் போறது நாமதானே என்று வெளிப்படையாக மக்கள் பேச ஆரம்பித்தார்கள். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பயந்தார்கள். ஸ்கைலாப் வெடிப்பதற்கு இரண்டு நாட்கள் முன்பு வரை எல்லோரும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டிருந்தோம்.
கடைசியாக "அது வெடித்து விட்டது" என்ற செய்தி ரேடியோவில் வந்த போதுதான் நிம்மதிப் பெருமூச்சு விட்டோம்.  அப்போ இந்த அளவுக்கு சேனல்கள் இல்லை. ரேடியோ, பத்திரிகை ஒன்றுதான் கதி. சேனல்கள் இருந்திருந்தால், அவர்கள் பத்திரிக்கைகாரர்களே பயப்படும் அளவுக்கு படக்காட்சிகளை வைரலாக விட்டுக்கொண்டு இருந்திருப்பார்கள்.
சொன்னபடியே அந்த நாடு, அந்த ஸ்கைலாப் பூமியை நெருங்கும் போதே  வெடிக்க வைத்தது. அது வெடிப்பதைப் பார்த்தால் கண்பார்வை போய்விடும் என்று இங்குள்ளவர்கள் ஜோஸ்யம் சொல்லிக் கொண்டிருந்தார்கள். 
ஆனால் அது வெடித்து சிதறியது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது என்று ஒரு நாட்டிலுள்ள பழங்குடி மக்கள் (காட்டுவாசிகள்)  சொன்னதாக செய்தி வெளியானது. (அந்த நாட்டின் பெயர் நினைவில் இல்லை). அப்படி ஒரு வர்ண ஜாலத்தை இதற்கு முன்பு நாங்கள் பார்த்ததே கிடையாது. என்ன அழகான வாணவேடிக்கை   என்றார்கள் 
வெடித்து சிதறிய கோளின் பாகங்கள் யாரிடாமாவது கிடைத்தால் அதை எங்களிடம் கொடுக்கவும்.. அதற்கு சன்மானம் தருவோம் ஸ்கைலாப் அனுப்பிய நாடு அறிவித்தது.
அதன்பின்,  ஸ்கைலாப்பின் வெடித்து சிதறிய பாகங்கள் எங்காவது கண்ணில் படுகிறதா என்று ஒவ்வொரு நாட்டிலும்  பலர் காடுமேடு தேடி அலைந்த கதை தனிக்கதை.
இங்குள்ள நம்ம ஆளுங்க, "ஆயிரம் சொல்லு. அனுப்பினவன்  கெட்டிக் காரன்தான். சொன்னமாதிரி செஞ்சுட்டான். அவன் சாமத்தியம் யாருக்கு வரும்.  அடடா.. நம்ம ஊர் பக்கம் வெடிக்காமே எங்கியோ போய் வெடிச்சிட்டே. சனியன்.. சனியன்.." என்று அங்கலாய்த்தார்கள்.
இந்த கதை மாதிரிதான் கொரோனா கதையும் இருக்குமோ என்று ஒரு சந்தேகம் வருது. இத்தனை உயிர்கள் பலியாகி இருக்கிறதே.. இதை எப்படி நம்பாமல் இருக்க முடியும் என்ற பயமும் வருகிறது.
இறைவன் அருளால் அது சீக்கிரம் போய்த்தொலைந்தால் சரிதான்.
கொரோனாவைவிட முக்கியமான கவலை ஒன்று எனக்கு இருக்குது. காஃபி பொடி இன்னும் இரண்டு நாட்களுக்குத்தான் வரும். அதன் பிறகு காஃபிக்கு என்ன செய்றது? காஃபி பொடி தேடி கடைகடையாக அலைந்தால், சொல்லி வைத்த மாதிரி அத்தனை பேரும் சொல்லும் ஒரே பதில்  "எல்லா இடமும் மூடி சீல் வச்சாச்சே.. கடை திறந்து, ஆளுங்களும் வேலைக்கு வந்து காஃபிக்கொட்டை அரைச்சு, பாக்கெட் போட்டு, ஒவ்வொரு இடத்துக்கும் அனுப்பினால்தானே கடையில் இருக்கும்?" 
சாப்பாடு இல்லாமல் என்னால் மூன்று நாள் தாக்குப் பிடிக்க முடியும். ஆனால் எனக்கு ஒருநாளைக்கு கொறஞ்சது ஏழு முறை காஃபி  குடிச்சே ஆகணும். முன்னெல்லாம் பத்து காஃபிக்கு குறையாமல் குடிப்பேன். தோழி ரொம்பவும் அட்வைஸ் பண்ணியதால் அதை ஏழாக குறைத்து விட்டேன். வீட்டில் இருக்கிற பொடி வியாழக்கிழமை மட்டுந்தான் கைகொடுக்கும்.  வெள்ளிக்கிழமை காஃபி எப்படி குடிக்கிறது என்பது தான் இப்போது எனது கவலை. கொரோனாவாவது கிரோனாவாவது.  காஃபி பொடி எந்த கடையில் கிடைக்கும்னு சொல்லுங்க. சீக்கிரம் சமையலை முடிச்சிட்டு நான் வந்து க்யூவில் நிக்கிறேன்.

Saturday, April 25, 2020

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்..


நடிகை ஜோதிகாவின் பேச்சு சர்ச்சையை கிளப்பிக் கொண்டிருக்கிறது. அவர் பேச்சின் முழு விவரமும் எனக்குத் தெரியாது. அங்கங்கு முகநூலில் தென்படும் கமெண்டுகளை வைத்து "இதுவாகத்தான் இருக்கும்" என்று புரிந்து கொண்டேன். (அதாவது கோவிலுக்கு செலவிடும் பணத்தை ஏழைகளுக்கு உதவலாம் என்று சொல்லி இருப்பார் என்று நினைக்கிறேன்) 
நான் ஒரு இந்து. ஆனால் எல்லா மதத்தின் மீதும் மதிப்பும் மரியாதையும் உண்டு. வேளாங்கண்ணி தேவாலயத்திற்கும் போயிருக்கிறேன். நாகூர் தர்க்காவும் போயிருக்கிறேன்.
அடிப்படையில் இந்து.. இறை நம்பிக்கை அதிகம் .. இப்படி பல என்னிடம் இருந்தாலும், சில இந்துமத சடங்கு சம்பிரதாயத்தில் எனக்கு உடன்பாடு கிடையாது. அதற்காக நான் இந்துமத துவேஷி அல்ல.
கோவில்களில் பால் அபிஷேகம் நடக்கும் போது, "எத்தனை வயிறுகள் பசி பட்டினியில் இருக்கின்றன.. அவர்களுக்கு இதைக் கொடுத்தால் வயிறு குளிராதா என்று யோசிப்பேன். யாகத்தீயில் பட்டு வஸ்திரங்களைப் போடும்போது, மாற்றுத்துணிக்கு வழியில்லாமல் எத்தனை ஜீவன்கள் இருக்கின்றன. இந்தக்காசில் நிறைய புடவைகளை வாங்கி அவர்களுக்குக் கொடுத்தால் ஸ்வாமி கோவிச்சுக்குவாரா" என்று யோசிப்பேன்.
இன்றுவரை கூட கோவில்களுக்குப் போகும்போது உண்டியலில் பணம் போட்டது கிடையாது (நான் கோவிலுக்குப் போவது தெரிந்து மற்றவர்கள் தரும் காணிக்கை காசை மட்டும் உண்டியலில் போடுவேன்.) என்னுடைய பணத்தை கோவில் வாசலில் நிற்கும் கண் பார்வை இல்லாதவர்கள், உடல் ஊனமுற்றவர்கள், வயதானவர்களுக்கு கொடுப்பேன்.
எனது தந்தை இறந்து போய் 39 வருடம் ஆகிறது. முதல் திவசத்தை மட்டும் சம்பிரதாயப்படி செய்தேன். அதன் பின் இன்றுவரை அவர் இறந்த தின நாளில் ஒரு குறிப்பிட்ட தொகையை யாராவது ஏழைகளுக்கோ, உடல் ஊனமுற்ற குழந்தைகளுக்கோ கொடுக்க சொல்லி தம்பியிடம் கொடுத்தனுப்புவேன்.
அம்மா இறந்து இரண்டு வருடம் முடிந்து விட்டது. நினைவு தினத்தன்று இதே விதிமுறைதான்.  சில வருடங்களுக்கு முன்பு "கோவில் கட்டுவதைவிட கழிவறைகள் கட்டுவது முக்கியம்" என்று ஒருவர் பேச, அது சர்ச்சையைக் கிளப்ப, அது சரியான கருத்து என்று இதே பிளாக்கில் பதிவு செய்துள்ளேன். வெளியூர்களுக்குப் போகும்போது, அநேக ஊர்களில் (மிகப் பெரிய நகரங்களில் கூட ), பஸ்ஸ்டாப்பை விட்டு வெளியே வரும்வரை மூக்கை மூடிக்கொண்டுதான் வரவேண்டும். அந்த அளவுக்கு மூத்திர நாற்றம் குமட்டும். தெருவுக்குத் தெரு ஒரு ஸ்வாமி சிலையை வைத்துவிட்டு, அதன் முன்னாலே வெற்றிலை எச்சில் துப்புவது, சாப்பிட்ட கையை சுவரில் துடைப்பது போன்ற அவலங்களும் நடக்கத்தானே  செய்கிறது. ஒரு  கோவில் முன்னாலே வியாபாரம் செய்துவிட்டு குப்பை கூளங்களை அப்படி அப்படியே வீசி விட்டுப் போவது சர்வ சாதாரணமான நிகழ்வாக இருக்கிறது. இதைப் பற்றி எல்லாம் யாரும் கவலைப்பட்டதாகவே தெரிவில்லை. (கவலை பட்டிருந்தால் இதற்கு ஒரு முடிவு காட்டாமல் விடுவார்களா என்ன?) செய்தித்தாளில், "இந்த கோவில் ஸ்வாமிக்கு இத்தனை டன் தங்க நகைகள் இருக்கிறது. நிலவறையில் பாதுகாக்கப்படுகிறது என்ற செய்தியைப் படிக்கும்போது, "எனக்கு நகை வேணும்னு சாமி இவங்க கிட்டே கேட்டாரா? நிலவறையில் அடுக்கி, கூர்க்கா போட்டு பாதுகாப்பதைவிட  அதை ஒரு தொழிலில் மூலதனமாகப் போட்டு தொழில் தொடங்கினால்  நிறைய பேருக்கு வேலை கிடைக்குமே " என்றுதான் இந்த நிமிடம் வரை நினைக்கிறேன்.  
நமது அன்பை, இறைவன் நமக்குத் தந்த நல்ல விஷயங்கள், நல்ல வாழ்க்கைக்காக நம் நன்றியைக் காட்ட, ஏதாவது செய்ய நினைக்கிறோம். அதை இறைவன் பெயரால், உதவிக்கரம் தேவையான நிலையில் இருப்பவர்களுக்குச் செய்தால் கடவுள் நம்மைத் தண்டிப்பாரா என்ன ?  இதேபோல எனக்கு இன்னொரு விஷயத்திலும் உடன்பாடு கிடையாது. பள்ளிகளில் யூனிஃபார்ம் கொண்டு வரப்பட்டதன் நோக்கம், அவரவர் அணிந்திருக்கும் உடையை வைத்து குழந்தைகளுக்கு  "  நான் வசதியானவன் . நீ ஏழை வீட்டுப்பிள்ளை " என்ற பாகுபாடு, அகந்தை வரக்கூடாது என்ற எண்ணத்தினால்தான். நாங்கள் படிக்கிற காலத்தில் காட்டன் துணியில் மட்டும் சீருடை இருக்கும். அதில் எந்த ஆடம்பரமும் இருக்காது. என்றாவது ஒரு நல்ல நாள், கிழமையில் யூனிஃபார்ம் இல்லாமல் வர அனுமதி உண்டு. வசதியான வீட்டுக் குழந்தைகள் அவர்கள் செழிப்பை ட்ரெஸ்ஸில் காட்டுவார்கள்.  ஓரளவு கூட சுமாரான ட்ரெஸ் இல்லாத பிள்ளைகள் அன்றைய தினத்திலும்  யூனிஃபார்ம்மில் தான் வருவார்கள். செருப்பு கூட கட்டாயம் இல்லை
ஆனால் இன்றைய தினத்திலோ பள்ளி  யூனிஃபார்மில் கூட எத்தனை ஆடம்பரம். அதுவும் வாரத்துக்கு இரண்டு விதமாக.. விதவிதமாக ஷூ..
இப்படி இருந்தால், பள்ளிகளில் சீருடை கொண்டுவந்ததே அர்த்தமற்ற விஷயமாகி விடுகிறதே.
மேலே உள்ளவை எனது அபிப்ராயம். தனிப்பட்ட கருத்து. இதை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் சொல்லவில்லை.  மனதுக்குள் அசை போட்டுப்பாருங்கள். சரிதான் என்ற முடிவுக்கு வந்தால், நீங்கள் உங்கள் பாதையை மாற்றிப்  பயணியுங்கள். அவ்வளவே.
ஏழையின்  சிரிப்பில் இறைவனைக் காண்போம்.. அதற்காக துயரப்படு வோருக்கு கை  கொடுப்போம். எவ்வளவு உழைத்தாலும் அடிப்படை வசதி கூட நிறைவேற வழியின்றி இருப்போருக்கு உதவுவோம். உதவி என்ற பெயரால், உழைக்காமல் உடம்பு வளர்க்கும் சோம்பேறிக்கூட்டங்கள் உருவாகாமல் பார்த்துக் கொள்வோம்.அது ரொம்பவும் முக்கியம்.
"பாத்திரம் அறிந்து பிச்சையிடு" என்பது முன்னோர் வாக்கு. அதை ஒரு சிலர் "அவன் கையில் இருக்கிறது ஈய பாத்திரமா, எவர்சில்வரானு பார்த்து  அதுக்கு தகுந்த பிச்சை போடணுமா?" என்று கிண்டல் செய்வதுண்டு. 
பாத்திரம் என்றால் தராதரம், தகுதி என்றுதான் அர்த்தம் கொள்ள வேண்டும்.
நடிகர்கள் ஏற்று நடிக்கும் வேடத்தை "கதாபாத்திரம் " என்றுதானே சொல்கிறோம்.
மனதை உறுத்தும் இன்னொரு விஷயம்.  கோவில் இருக்கும் தெருவிலோ சுற்று வட்டாரத்திலோ யாராவது இறந்து விட்டால், முக்கியமான குடும்ப உறுப்பினர் வரும் வரை பிணத்தை வைத்திருக்க சுற்று வட்டாரம் அனுமதிப்பதில்லை. 
"பிணத்தை இப்பவே எடுத்தாகணும். ஸ்வாமிக்கு செய்ய வேண்டிய பூஜை  நடந்தே ஆகணும். ஸ்வாமி பட்டினி கிடப்பதா? பூஜை   இல்லா விட்டால் வானமே இடிந்து விடும். பூமி இரண்டாக பிளந்துவிடும்" என்று ஒரு கூட்டம் வந்து ரகளை பண்ணும். (அது எங்கள் அப்பாவின் சாவு  நிகழ்வில் கூட நடந்துள்ளது. அப்பாவின் அண்ணன், அக்காமார் வரும் வரை அப்பாவை வைத்திருக்க அருகிலுள்ள கோவில் நிர்வாகம் அனுமதிக்க வில்லை.)
அந்தக்காலத்தில் மலைமேல், நதியோரம் ஆலயம் அமைத்தார்கள். அதனால் சமுதாய நிகழ்வுகள் கோவில் நடைமுறையை பாதிக்காமல் தங்கு தடையின்றி நடை பெற்றது.
இன்றோ, ஒரு தெருவில் 25 குடித்தனங்கள் வந்துவிட்டால் போதும். உடனே  ஒரு கோவில் முளைத்துவிடும். அதை வைத்து சிலர் சம்பாதிக்க, சிலர் அடிதடியில்  இறங்க, "சபாஷ்.. சரியான போட்டி .." என்று சொல்லத் தோன்றுகிறது.
ஆகமவிதிப்படி அமைந்த பழங்கால கோவில்களில் சிறு கீறல் கூட விழாமல் பாதுகாப்போம். அது நமது கடமை.  ஆனால் நமது வசதிக்கு நமது குடியிருப்பில் இறைவனை கொண்டு வந்து வைத்து   சங்கடப் படுத்த  வேண்டாம் என்பது எனது கோரிக்கை.
என் ஆசை எல்லாம் அந்த கூட்டத்தை இன்று சந்திக்க வேண்டும். "என்னய்யா .. மாசக்கணக்கில் கோவில் மூடிக்கிடக்கிறதே. சாப்பாடு இல்லாமல் சாமி பட்டினி கிடக்கிறார்னு நீங்களும் பட்டினி கிடக்கிறீர்களா?" என்று கேட்கவேண்டும். 
அந்தக்கூட்டத்தில் இன்று எத்தனை உயிரோடு இருக்கிறதோ எத்தனை போய்சேர்ந்து விட்டதோ தெரியவில்லை. 

Monday, April 13, 2020

கனவு கண்டேன் நான் கனவு கண்டேன்...

இன்னிக்கு காலங்கார்த்தாலே எனக்கு ஒரு கனவு. தூக்கத்திலிருந்து விடுபட்டதும் கனவில்  வந்தது நினைவில் வந்தது. கனவை நினைத்து சிரிப்பும் சிந்தனையும் சேர்ந்தே வந்தது.
பொதுவாக நாம் எதை நினைத்துக் கொண்டு படுக்கிறோமோ அதுதான் கனவில் வரும் என்பார்கள். கடந்த சில மாதங்களாக நம் கண்ணில் படுவது காதில் கேட்பது எல்லாமே "கொரோனா" என்கிற ஒற்றைச் சொல்தானே. அதனால் அது கனவில் வந்தது பெரிய விஷயமோ அதிசயமோ இல்லை. ஆனால் கனவில் கண்ட காட்சியை நினைத்து வியந்து போகிறேன். கனவு பற்றிய விளக்கம்.
கையில் கூடையை எடுத்துக்கொண்டு கடைக்கு சென்று கொண்டிருக்கிறேன். வழியில் பெரிய  ஜனக்கும்பல். எட்டிப் பார்க்கிறேன். அது ஒரு பொதுக் கூட்டம் என்பது புரிகிறது. 
எங்கிருந்தோ ஓடிவரும் ஒருவர் என் கைகளைப் பிடித்து இழுத்துக்கொண்டு மேடைக்கு அருகில் கொண்டு செல்கிறார்.
"நீங்கள் பேசுங்க .." என்கிறார்.
"பேசறதா? என்னய்யா கிண்டலா ?" என்கிறேன்.
"பேசுங்க.. பேசுங்க .." என்று ஒரே கூச்சல்.
வேறு வழியில்லாமல் மேடை ஏறுகிறேன்.
பார்வையாளர்களைப் பார்க்கிறேன்.
அங்கே காமராஜர், ராஜாஜி, கென்னடி, கக்கன் என்று பெரிய தலைவர்கள் எல்லாம் இருக்கிறார்கள்  இவங்க எல்லாரும் செத்துப் போயிட்டாங்களே..  இப்போ இங்கே எப்படி ? ஒருவேளை நாமதான் வழி தவறி செத்துப் போனவங்க இருக்கிற இடத்துக்கு வந்துட்டோமா என்று யோசிக்கும் போதே   "பேசுங்க.. பேசுங்க .." என்று ஒரே கூச்சல். 
உடனே சிறிதும் தயங்காமல் தொண்டையை  சரிசெய்தபடி ஹைபிட்சில் பேச ஆரம்பிக்கிறே ன்.
"முட்டாள் ஜனங்கள்.. சிந்திக்கும் அடிப்படை அறிவு கூட இல்லாத வடிகட்டின முட்டாள்கள். எங்காவது ஒரு கிருமியால், அதுவும் காற்றில் பரவாத ஒரு கிருமியால்  ஒரே சமயத்தில் உலகம் முழுக்க பாதிப்பை ஏற்படுத்த முடியுமா? 
எவனோ அனுப்பின ராக்கெட், செயற்கைக் கோள் ஒன்று, ஏற்கனவே இருந்த இயற்கையான  ஒரு கோள், கிரகத்தின் மீது மோதி கதிர் வீச்சை உண்டு பண்ணிக் கொண்டிருக்கிறது. அது, எது என்பதைக் கண்டு பிடித்து அதை சரி செய்யுங்க.. அதை ..." என்று நான் சொல்லிக் கொண்டிருக்கும்போதே  "ஏய்!" என்று பெரிய சத்தம்.. சத்தம் வந்த திசையை பார்க்கிறேன். நவநாகரிக உடை அணிந்த மேல்நாட்டினர்  மேடையை நோக்கி ஓடி வருகிறார்கள்.  அந்த கூட்டத்தில் ட்ரம்ப் , மோடி, ஜெயலலிதா இருக்கிறார்கள்.  இந்த அம்மா செத்துப்போய் ரொம்ப நாளாச்சே.. இவங்க செத்தவங்க கூட சேர்ந்து பொதுக்கூட்டத்தில் உட்காராமே ,  உயிரோடு இருக்கிறவங்க கூட எப்படி சேர்ந்தாங்க என்று  நினைத்தபடி மேடையை விட்டு இறங்கி ஓடுகிறேன். அவர்கள் என்னைத் துரத்திக் கொண்டு வருகிறார்கள். ஒரு இடத்தில் புடவை தடுக்கி நான் கீழே விழுகிறேன். 
அப்படி விழும்போதே என்னையும் அறியாமல் என் உடம்பு தூக்கிப்போடுகிறது.  படுத்திருக்கும் கட்டிலின் விளிம்புவரை வந்து எழுந்து உட்கார்ந்தேன். நல்ல வேளை .. கீழே விழலே. வீட்டில்தான் இருக்கிறோம். வந்தது கனவுதான் என்று நிம்மதிப் பெருமூச்சு வருகிறது.
நினைக்கும்போது சிரிப்பு வந்தது. எல்லாருமே ஒரு சீரியஸ் மூடில் இருக்கிறோம். இதை சொல்லி உங்களையும் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணலாம்னு நினைச்சுதான் இதை பதிவு பண்ணுகிறேன்.
எப்படி கனவு?

Sunday, April 12, 2020

அவரவர் கவலை அவரவருக்கு ....

பழைய திரைப்படமொன்றில் (மதுரை வீரன் என்று நினைக்கிறேன்) நடிகை பத்மினி வெறுப்பான  மனநிலையில் தோழியிடம் பேசும் வசனம் : "சாக விட மாட்டாய் நீ.. வாழ விட மாட்டான் உன் மன்னன்..." நல்ல நாடு.. நல்ல மன்னன்..."
அதையே கொஞ்சம் மாத்தி இன்றைய சூழலுக்கு: -
1.
வாழ விட மாட்டாய் நீ


                                                                 சாகவும் விடாது நாடு.


2 
ஜனங்க எல்லாரும் இப்படி கை கழுவினால், கையில் ரேகை இருக்குமா?  அது தெளிவா தெரியுமா ? இந்த கொரோனா நம்ம பொழப்புக்கு ஆப்பு வச்சுடும் போலிருக்கே... இனிமே கிளியை நம்பித்தான் பொழைப்பை நடத்தணும் போலிருக்கே .. 
3
ஒன்பதாம் வகுப்பு வரை  தேர்வு இல்லாமல் ஆல் பாஸ் போட்ட மாதிரி  10 ம் க்ளாஸ் படிக்கிற எங்களுக்கும் ஆல் பாஸ் போடணும் தேர்வு வைக்காமலே.. அதுவரை "அது" இருக்கணும்.
4 
இந்த சாக்கில் நிம்மதியா வீட்டில் இருந்தாச்சு. லாக் அவுட் முடிஞ்சிட்டா  ஆபீஸுக்கும் வீட்டுக்கும் லோலோனு நாய் மாதிரி அலையணும். அதுக்கு முன்னாடி வீட்டில் எல்லாம் ரெடி பண்ணி ஆகணும். 10 கை இருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும்..


இந்த முக கவசம் உலகம் முழுக்க எத்தனை நாளம்மா ? இன்னும் எத்தனை நாளம்மா ??

ஹாய் பிரெண்ட்ஸ், 
இன்னிக்கு புதுசா ஏதாவது பேசுவோமே.சேனல்கள் பழைய காட்சிகளையே ஒளிபரப்பி போரடிக்க செய்கின்றன. அதனால் எங்கள் வீட்டு டீவிக்கு .ஒளியடங்கு உத்தரவு போட்டு விட்டேன்.
மறைந்த திரை இசைக் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் பாடல் வரிகளுக்கு நான் அடிமை. (நான் மட்டும் ஒரு நாட்டின் அரசியாக இருந்தால், அவர் கவிதைத்திறனுக்கு ஒரு ஊரையே பரிசாகக் கொடுத்திருப்பேன். ஹூம்....)
ஒரு சில பாடல் வரிகளை, காட்சிகளை ஒரு சில காலம் மட்டுந்தான் ரசிக்க முடியும்.  ஒரு சில காலத்துக்கும் நிலைத்து நின்று, அந்தந்த காலத்துக்கு ஏற்றபடி இருக்கும் .. சிந்திக்க வைக்கும். அப்படி ஒரு சில பாடல் வரிகள்..
1.  விதவிதமா பொருட்கள் இருக்கு விலையைக் கேட்டால் நடுக்கம் வருது.
(அவர் பாடல் வரி  : விதவிதமா துணிகள் இருக்கு. அதை நான்  விதவிதமா பொருட்கள் இருக்கு என்று பதிவு செய்துள்ளேன்.)
எதை எதையோ வாங்கணுமின்னு எண்ணமிருக்கு  வழியில்லே 
அதை எண்ணாமலிருக்கவும் முடியல்லே 
(ஆயிரம் ரூபா ) கையிலே வாங்கினேன் பையிலே போடலே 
காசு போன இடம் தெரியலே.

2. இந்த மாநிலத்தைப் பாராய் மகனே 
உந்தன் வாழ்க்கை தன்னை உணர்வாய் மகனே 
இளம் மனதில் வலிமை தன்னை ஏற்றடா 
முக வாட்டமதை உழைப்பால் மாற்றடா 
துயர் தன்னைக் கண்டே பயந்து விடாதே 
சோர்வை வென்றாலே துன்பமில்லை 
உயர்ந்திடவே நீ உன்னையே நம்பிடுவாய் 
உதவி செய்வார் இங்கு யாருமில்லை.


Thursday, April 09, 2020

ஒண்ணுமே புரியலே உலகத்திலே..


ஹாய் பிரெண்ட்ஸ்,
முதலில் ஒரு விஷயத்தை சொல்லியே ஆகணும். உலகின் மிகப் பெரும் பணக்காரர்கள் லிஸ்ட்டில் இன்று நான் சேர்ந்து விட்டேன். ஆமாம். நெஜந்தாங்க. இன்னிக்கு நான் உளுந்தம் பருப்பு, ஜீனி ரெண்டுமே வாங்கிட்டேன். ஒன்றல்ல இரண்டல்ல.. மூன்று கிலோ...ஹையா .. நான் ஜெயிச்சிட்டேன்.
இனி மத்த விஷயங்களைப் பேசுவோம். சுகந்தன்னே .. சௌக்கியமாகட்டும்... 
ஒவ்வொருவர் மனதில் ஒவ்வொரு விதமான கவலை.
தோழி ஒருத்தியின் புலம்பல்.. "நாம எல்லாரும் வீட்டில் ஒண்ணு சேர்ந்து இருக்கிறதே பெரிய விஷயம். நாள் கிழமைன்னா கூட எல்லாரும் வீட்டில் இருக்கிறது ரொம்பவுமே அபூர்வம். ஒண்ணு இன்னிக்கு டே ஷிஃப்ட்னு சொல்லிட்டு வேலைக்கு கிளம்பிடும். இன்னொன்னு பிரெண்ட்ஸ் கூட வெளியில் போறேன்னு கிளம்பிடும்.  15 நாளைக்கும் மேலே எல்லாரும் வீட்டில் இருக்கிறோம். ஆனால் விதம்விதமா எதையும் செஞ்சு கொடுக்கத்தான் முடியலே.. இது இருந்தா அது இல்லே.. அது இருந்தா இது இல்லே கதைதான். இந்த கொரோனா கூத்து எப்பதான் ஓயும்னு தெரியலே.. இதை வீட்டில் புலம்பினா உடனே என் பையன் "அம்மா.. நிறைய முக கவசம் தைச்சு ஸ்டாக் பண்ணிட்டாங்க. இப்போ கொரோனா போயிட்டா அதை யாரும் ஏறெடுத்தும் பார்க்கப் போறதில்லே.. ஸ்டாக்கில் இருக்கிற சரக்கு வித்து தீர்ந்ததும் கொரோனா போயிட்டுன்னு அனௌன்ஸ் பண்ணிடுவாங்க"னு சொல்றான்.
இன்னொரு விஷயம் கவனிச்சீங்களா அருணா.. பொதுவாகவே வீட்டில் ப்ளீச்சிங் பவுடர், மற்ற லோஷன் போட்டு கழுவினாலே  நமக்கு தும்மல் இருமல் வரும். ஊர் முழுக்க லாரி லாரியா கிருமி நாசினி தெளிக்கிறாங்க.. அந்த ஸ்மெல் கூட தும்மல் இருமலை உண்டு பண்ணுது. உடனே கொரனோ தொற்றுன்னு ஊரை சீல் வச்சிடறாங்க. சுகாதார துறை ஏதாவது மருந்து சொல்லும்னு பார்த்தா, ஒரு லேடி வந்து அரை மணிக்கு ஒருதரம், இத்தனை பேர் போயிட்டாங்க. இத்தனை பேர் போகப்போறாங்கனு சொல்றதோட சரி. உருப்படியா ஒண்ணும் காணோம். என்ன பண்றதுன்னே தெரியலே ..! இது கூட பரவாயில்லே.. ஊரடங்கு முடிஞ்சு எல்லாரும் ஸ்கூல், ஆபீஸ்னு கிளம்பியாகணும். நாம எல்லாரும் எலெக்ட்ரிக் ட்ரைனை நம்பி இருக்கிற கேஸுங்க.. லட்சக்கணக்கான பேர்.. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு டேட்டில் சீஸன்  முடிஞ்சிருக்கும். தடை நீங்கின நாளில் அத்தனை பேரும் சீஸன் டிக்கெட் வாங்க அலை மோதுவாங்க .. மொபைலில் லோட் பண்ண எத்தனை பேருக்குத் தெரியும்..  என் மொபைலில் அதுக்கான வசதி கிடையாது. சீஸன் டிக்கெட் வாங்க க்யூவில் நிக்கணுமேனு நெனச்சா கதி கலக்குது .. ஒண்ணுமே புரியலே.."
"உன் கதைதான்  என் கதையும்.. ஒண்ணுமே புரியலே உலகத்திலே.. என்னவோ நடக்குது.. மர்மமா இருக்குது .." என்று மட்டுமே என்னால் சொல்ல முடிந்தது.  
பிரெண்ட்ஸ், எனக்கொரு சந்தேகம். உங்களாலே க்ளியர் பண்ண முடியுமா?
கடைகள் எப்பவும் திறந்திருக்கும் சமயங்களில் கூட்டம் சேர்வது கிடையாது. யாருக்கு எப்போ வசதிப்படுதோ அந்த நேரத்தில் போய்  வாங்குவோம். டைம் லிமிட் வைக்கப்போய்தான், அந்த நேரத்துக்குள் வாங்கணுமேன்னு மக்கள் கூட்டம்  அலை பாயுது. அந்த நேரத்தை இன்னும் குறைத்தால்,  எல்லாரும் அந்த நேரத்தை கணக்குப்பண்ணி அடித்துப் பிடித்துக் கொண்டு படை எடுப்பார்கள்.  இதனால் இன்னும் பிரச்னைனு என் மரமண்டை யோசிக்குது.. இது சரியா தப்பான்னு நீங்கதான் சொல்லணும்.. 
அனைவரும் வாழ்க நலமுடன்...

Saturday, April 04, 2020

கொல்லாதே இது போலே

               

நினைப்புக்கும் நடப்புக்கும் இடைப்பட்டதுதான் வாழ்க்கை என்பது எல்லோரும் அறிந்த ஒன்று.
ஆனால் எப்போ என்ன நடக்கும் என்பது எவருமே அறியாத ஒன்று.
கண்ணுக்குத் தெரியாத ஒரு கிருமி  ஒட்டு மொத்த உலகையே ஆட்டிப் படைக்கிறதென்றால்  அது சாதாரண விஷயமில்லை.
ஆனால் இப்படி ஏதாவது ஒரு பேரிடர் வரும்போதுதான் மனிதர்கள் ஒன்று படுகிறார்கள்.
அது என்ன கிருமி ? எங்கிருந்து உருவானது ? அதை எப்படி அழிக்கலாம் என்ற முழு விவரம் அறிந்தவர்கள் இதுவரை யாரும் இல்லை என்பது எனது தனிப்பட்ட அபிப்ராயம். அவரவருக்கு தெரிந்ததை பகிர்ந்து கொள்கிறார்கள். எத்தை தின்னால் பித்தம் தெளியும் அதைத்    தின்போம்  என்கிற  நிலைக்கு ஒட்டு மொத்த உலகமும் தள்ளப்பட்டு விட்டது
எனக்குத் தெரிந்து வல்லரசு நாடுகளைக் கூட நடுங்க வைத்த ஒரே ஒரு விஷயம் இதுதான்.
ஆனால் நடக்கிற சில சம்பவங்களைப் பார்த்தால், ஒரு சிலர் சொல்வது போல் போகிற உயிர் எங்கிருந்தாலும் போகும்; எவ்வளவு பாதுகாப்பாக இருந்தாலும் போகும் என்பதை நம்பத்தான் வேண்டியதிருக்கிறது.
ஊரடங்கு உத்தரவு; ஒருசில வாகனங்கள் தவிர வேறு எவருக்கும் அனுமதி இல்லை. அப்படியொரு சூழ்நிலையில் கூட ஒரு வாகனம், தெருவில் நடந்து சென்ற மூதாட்டி மீது மோதி சாகடித்ததென்றால் இதை என்னவென்று சொல்வது?
ஊரடங்கு உத்தரவு; பையனை ஆம்புலன்ஸில் அழைத்து சென்ற தந்தை, வாகன விபத்தில் மரணம்!
ஊரடங்கு வேளையில் ஒரு வாகனம் ராங்க் ஸைடில் போய் விபத்தை ஏற்படுத்தி விட்டு, சரியான  பாதையில் வந்த வாகன ஓட்டி மீது வழக்கு பதிவு செய்கிறது. இதற்கு சேனல்கள் சாட்சி.
விதி எப்படியெல்லாம் விளையாடுகிறது ?
இவ்வளவு கூத்துக்கும் நடுவில் இணையத்தில் பதிவு செய்யப்படும் காமெடிக்கும் எல்லையே இல்லை. இவர்கள் எல்லோரும் துன்பம் வரும் வேளையிலும் சிரிக்கிற பிரிவினர்.
இன்று தெருவில் கேட்ட உரையாடல்  "ராத்திரி விளக்கை எல்லாம் அணைக்கணும்னு சொல்றாங்களே. விளக்கை அணைச்சிட்டா அதுக்கு கண்ணு தெரியாதா? வேறே எங்காச்சும் போயிடுமா?"
ஆண்டவன் நினைச்சா கோடீஸ்வரனைக் கூட கண் இமைக்கிற நேரத்தில் தெருவுக்கு கொண்டு வந்துடுவான் என்று எனது அலுவலக நண்பர் சொன்னதை அடிக்கடி நினைத்துப் பார்க்கிறேன்.
"மளிகை சாமானுக்காக நீ கடை கடையா சுத்துவே"னு யாராவது எனக்கு போன மாதம் ஜோஸ்யம் சொல்லி இருந்தால் அவர்களை பைத்தியக்கார ர்கள் லிஸ்ட்டில் சேர்த்திருப்பேன்.
ஆனால் ஒரே ஒரு கிலோ உளுத்தம்பருப்பு வாங்க கொளுத்தும் வெயிலில் தெருத்தெருவாக அலைந்தேன். கிடைக்கவில்லை.
இன்று, சற்று முன்பு கூட ஒரு சில மளிகை சாமான் வாங்க வெயிலில் அரைமணி நேரத்துக்கும் மேலாக க்யூவில் நின்று, நான் தேடிப்போன பொருள் கிடைக்காமல் வெறுங்கையோடு திரும்பினேன். 
கடையில் ஏற்கனவே இருந்த பொருட்களின் மேல் புதிய விலையை / ஸ்டிக்கரை ஒட்டும்   பணி ஜோராக நடந்து கொண்டிருந்தது.
கைக்குள் அடங்கக்கூடிய ஒரே ஒரு சவ்சவ்வின் விலை 18 ரூபாய். நல்ல வேளை. எங்க அம்மா இரண்டு வருஷம் முன்னாடியே இறந்து போயிட்டாங்க. அவங்க உயிரோடு இருந்து இந்த விலைவாசி அவங்க  காதில் விழுந்தால் தினமும் செத்து செத்து பிழைப்பாங்க. அவங்க காலணா அரையணா காலத்து ஆளு.
அரசாங்கம் தரும் எந்தவொரு இலவச பொருளுக்காகவும் வரிசையில் நான் காத்துக்  கிடந்தது கிடையாது ("ஆமா.. அது என்ன நம்மளாலே காசு குடுத்து வாங்க முடியாத பொருளா என்ன ?" என்று யோசிப்பேன்)
ஆனால் கையில் காசு இருக்கிறது. வரிசையில் நின்றாலும் நாம் எதிர் பார்த்து போகும் பொருள் கிடைப்பதில்லை.
என் அப்பாவின் சம்பாத்தியத்தில் எங்கள் குடும்ப உறுப்பினர் மொத்தம் ஏழு பேர் சாப்பிட்டோம். அப்போதுகூட நாளைக்கு சாப்பாட்டிற்கு என்ன செய்வது என்று யோசிக்க அவசியம் வந்ததில்லை.
மாதக்கடைசியில் காய்கறி வாங்க பணம் தட்டுப்பாடாக இருக்கும் நிலையில் கூட "அம்மா.. ரெண்டு நாளைக்கு காய் இல்லாட்டா பரவாயில்லை. வெள்ளிக்கிழமை விகடன் புஸ்தகம் வாங்கணும். ஞாயிற்றுக்கிழமை குமுதம் வாங்கணும். அதுக்கு காசு எடுத்து வை " என்று கோரஸாக சொல்வோம். இவ்வளவுக்கும் அந்த பத்திரிக்கைகளின் விலை 25 நயாபைசாதான். 
ஆனால் இந்த கொரோனா ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் பயத்தை கவலையை உண்டு பண்ணிவிட்டது.
பழைய திரைப்படப் பாடல் ஒன்றில் " கொல்லாதே இது போல." என்றொரு வார்த்தை வரும். சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட சண்டைக்காரன் காலில் விழுவது மேல். 
அதனால் ...
கண்ணுக்குத் தெரியா கிருமியே ...  எங்களைக் 
கொல்லாதே இது போலே .
(ஆனால் என்னோட கவலை எல்லாம் வீட்டில் பருப்பு இல்லை ; மிளகு இல்லை. காய் வாங்க க்யூவில் காத்துக் கிடக்க வேண்டி இருக்கு. இன்னும் பத்து நாட்களை எப்படி சமாளிப்பது என்பதுதான்.)
ஹூம்.. இதுவும் கடந்து போகும்னு நம்புவோம். நம்பிக்கைதானே வாழ்க்கை !