Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Tuesday, April 28, 2020

அட .. என்னடா பொல்லாத வாழ்க்கை??!!!


உண்மையிலேயே எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும். அதற்குக் காரணம் இன்று காலையில் என் காதில் விழுந்த ஒரு சொல்.
வாசலில் காய் விற்பவன் சத்தம் கேட்டது. வெளியில் வந்தேன். அதற்குள் அவன் அங்கிருந்து நகர்ந்துவிட, காய்கறி வண்டியின் பின்னால் ஓடினேன்.
அப்போது ஒரு அம்மா, "கண்ணுக்கு தெரியாதாம். அப்படின்னா அதை எப்படி படமாக வரைகிறான் . டீவியில் காட்டறான்" என்று போனில் பேசியபடி போனார்கள்.
"ஆஹா.. கேட்டாங்களே ஒரு கேள்வி.." என்று மனதுக்குள் சபாஷ் சொன்னேன். ஏனென்றால் இந்த கேள்வியை பல நாட்களாக என்னுள் கேட்டுக் கொண்டே  இருக்கிறேன்.
"இந்த வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை" என்று சொல்கிறார்கள். 
இரண்டு நாட்கள் அல்லது ஒருவாரத்தில், "ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு  இருந்தவர்கள் குணமடைந்து வீட்டுக்கு அனுப்பப் பட்டார்கள்." என்கிறார்கள். மருந்தில்லா நோய் குணமானது எப்படி ?
சேனல் புண்ணியவான்கள் மூலைமுடுக்கில் உள்ளவர்களை எல்லாம் தூசி தட்டி கேமிரா முன்னால் நிறுத்துகிறார்கள். அவர்கள் தங்கள் சொந்த சரக்கை தத்துவங்களாக உதிர்த்து விட்டுப் போகிறார்கள். அவர்கள் கூற்றில் எத்தனை சதவிகிதம் சரி என்று அறிந்து கொள்ள தலைமுடியைப் பிய்த்துக் கொள்ள வேண்டி இருக்கிறது.
இன்று என்னிடம் போனில் தொடர்பு கொண்ட தோழியிடம் இதுபற்றி பேசிய போது, "அருணா.. தயவு செஞ்சு டீவியே பார்க்காதீங்க. பேப்பர் படிக்காதீங்க. ஒவ்வொண்ணையும் பார்க்கப் பார்க்க, கேட்கக் கேட்க, நாம மென்டல் ஆயிடுவோம் போலிருக்குது." என்றார்கள்.
அவங்களோட இந்த ஒரே ஒரு வார்த்தை, " ஒரு விஷயத்தை பத்தி முழுமையான,  சரியான விவரம் எதுவும் தெரியாமலே எல்லோரும் தாங்களும் குழம்பிக் கொண்டு மற்றவர்களையும் குழப்புகிறார்களோ?" என்று நினைக்க வைத்தது. 
இந்த நினைப்பு வர ஒரு முக்கிய காரணம் உண்டு.
கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விஷயம் பீதியைக் கிளப்பியது உலகம் முழுக்க.
ஒரு நாடு (அமெரிக்கா என்று ஞாபகம். நாட்டின் பெயர் சரியாக நினைவில் இல்லை) அனுப்பியஒரு  ஸ்கைலாப், (அது ராக்கெட்டா அல்லது  செயற்கைக்கோளா என்பது எனக்கு  தெரியாது).  தனது பாதை  யை விட்டு விலகி பூமியை நோக்கி நகர்ந்து வந்து கொண்டிருக்கிறது என்று செய்தி வெளியிட்டது. பூமியை வந்து சேர இத்தனை நாட்கள் ஆகும் என்றும் சொல்லி விட்டது (30 நாட்களா அல்லது மூன்று மாதமா என்பது நினைவில் இல்லை.)
அந்த செய்தியை அந்த நாடு வெளியிட்ட தினத்திலிருந்து தினமும் புது புது செய்திகள் பத்திரிகைகளில் வந்த வண்ணம் இருந்தது.
அந்த நாடோ, " ஸ்கைலாப் , பூமிக்கு மிக அருகில் வரும்போதே, அதை வெடிக்க வைத்து கடலில் விழும்படி செய்து விடுவோம்" என்றது.
கடலில்தான் விழும் என்பதற்கு என்ன உத்திரவாதம்? கடலில் விழும் போது கப்பல்கள் படகுகள் பாதிக்கப்படாதா என்ற கேள்விகள் பத்திரிக்கை வாயிலாக வெளிவந்தன.
இப்போது திரும்பின பக்கமெல்லாம் கொரோனா பேச்சு மாதிரி, அன்றைய தினம் ஸ்கைலாப் பற்றித்தான் எங்கும் பேச்சு. பேச வேறே சப்ஜெக்டே கிடையாது.
பூமிக்கு அருகில் வந்தால் கண்டிப்பாக வெடிக்கும். பூமத்திய ரேகையின் இந்த சுற்றில் வந்தால் தமிழ் நாட்டில் இந்த ஊர்கள் அழிந்து விடும். அந்த சுற்றில் வந்தால் தமிழ்நாட்டில் அந்த ஊர்கள் அழிந்து விடும் என்று ஒரு பெரிய லிஸ்ட் போட்டு வரைபடத்துடன் செய்திகள் வெளியாகின. அது வெடிக்கும் போது பார்ப்பவர்கள், கண்பார்வை பறி போய்விடும்  என்றெல்லாம் பத்திரிகைகளில் செய்தி வெளியானது.
யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லாமல் அதை டிஸ்போஸ் பண்ணிடுவோம் என்று அந்த நாடு சொன்னதை யாரும் நம்பவில்லை. "அவன் அப்படித்தான் சொல்லுவான். எல்லாம் முடிஞ்சபிறகு, 'நாங்க எவ்வளவோ முயற்சி பண்ணினோம்.. முடியவில்லை. அழிவுக்கு மன்னிப்பு கேட்கிறோம்னு அறிக்கை விட்டுட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போயிடுவான். சீரழியப் போறது நாமதானே என்று வெளிப்படையாக மக்கள் பேச ஆரம்பித்தார்கள். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பயந்தார்கள். ஸ்கைலாப் வெடிப்பதற்கு இரண்டு நாட்கள் முன்பு வரை எல்லோரும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டிருந்தோம்.
கடைசியாக "அது வெடித்து விட்டது" என்ற செய்தி ரேடியோவில் வந்த போதுதான் நிம்மதிப் பெருமூச்சு விட்டோம்.  அப்போ இந்த அளவுக்கு சேனல்கள் இல்லை. ரேடியோ, பத்திரிகை ஒன்றுதான் கதி. சேனல்கள் இருந்திருந்தால், அவர்கள் பத்திரிக்கைகாரர்களே பயப்படும் அளவுக்கு படக்காட்சிகளை வைரலாக விட்டுக்கொண்டு இருந்திருப்பார்கள்.
சொன்னபடியே அந்த நாடு, அந்த ஸ்கைலாப் பூமியை நெருங்கும் போதே  வெடிக்க வைத்தது. அது வெடிப்பதைப் பார்த்தால் கண்பார்வை போய்விடும் என்று இங்குள்ளவர்கள் ஜோஸ்யம் சொல்லிக் கொண்டிருந்தார்கள். 
ஆனால் அது வெடித்து சிதறியது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது என்று ஒரு நாட்டிலுள்ள பழங்குடி மக்கள் (காட்டுவாசிகள்)  சொன்னதாக செய்தி வெளியானது. (அந்த நாட்டின் பெயர் நினைவில் இல்லை). அப்படி ஒரு வர்ண ஜாலத்தை இதற்கு முன்பு நாங்கள் பார்த்ததே கிடையாது. என்ன அழகான வாணவேடிக்கை   என்றார்கள் 
வெடித்து சிதறிய கோளின் பாகங்கள் யாரிடாமாவது கிடைத்தால் அதை எங்களிடம் கொடுக்கவும்.. அதற்கு சன்மானம் தருவோம் ஸ்கைலாப் அனுப்பிய நாடு அறிவித்தது.
அதன்பின்,  ஸ்கைலாப்பின் வெடித்து சிதறிய பாகங்கள் எங்காவது கண்ணில் படுகிறதா என்று ஒவ்வொரு நாட்டிலும்  பலர் காடுமேடு தேடி அலைந்த கதை தனிக்கதை.
இங்குள்ள நம்ம ஆளுங்க, "ஆயிரம் சொல்லு. அனுப்பினவன்  கெட்டிக் காரன்தான். சொன்னமாதிரி செஞ்சுட்டான். அவன் சாமத்தியம் யாருக்கு வரும்.  அடடா.. நம்ம ஊர் பக்கம் வெடிக்காமே எங்கியோ போய் வெடிச்சிட்டே. சனியன்.. சனியன்.." என்று அங்கலாய்த்தார்கள்.
இந்த கதை மாதிரிதான் கொரோனா கதையும் இருக்குமோ என்று ஒரு சந்தேகம் வருது. இத்தனை உயிர்கள் பலியாகி இருக்கிறதே.. இதை எப்படி நம்பாமல் இருக்க முடியும் என்ற பயமும் வருகிறது.
இறைவன் அருளால் அது சீக்கிரம் போய்த்தொலைந்தால் சரிதான்.
கொரோனாவைவிட முக்கியமான கவலை ஒன்று எனக்கு இருக்குது. காஃபி பொடி இன்னும் இரண்டு நாட்களுக்குத்தான் வரும். அதன் பிறகு காஃபிக்கு என்ன செய்றது? காஃபி பொடி தேடி கடைகடையாக அலைந்தால், சொல்லி வைத்த மாதிரி அத்தனை பேரும் சொல்லும் ஒரே பதில்  "எல்லா இடமும் மூடி சீல் வச்சாச்சே.. கடை திறந்து, ஆளுங்களும் வேலைக்கு வந்து காஃபிக்கொட்டை அரைச்சு, பாக்கெட் போட்டு, ஒவ்வொரு இடத்துக்கும் அனுப்பினால்தானே கடையில் இருக்கும்?" 
சாப்பாடு இல்லாமல் என்னால் மூன்று நாள் தாக்குப் பிடிக்க முடியும். ஆனால் எனக்கு ஒருநாளைக்கு கொறஞ்சது ஏழு முறை காஃபி  குடிச்சே ஆகணும். முன்னெல்லாம் பத்து காஃபிக்கு குறையாமல் குடிப்பேன். தோழி ரொம்பவும் அட்வைஸ் பண்ணியதால் அதை ஏழாக குறைத்து விட்டேன். வீட்டில் இருக்கிற பொடி வியாழக்கிழமை மட்டுந்தான் கைகொடுக்கும்.  வெள்ளிக்கிழமை காஃபி எப்படி குடிக்கிறது என்பது தான் இப்போது எனது கவலை. கொரோனாவாவது கிரோனாவாவது.  காஃபி பொடி எந்த கடையில் கிடைக்கும்னு சொல்லுங்க. சீக்கிரம் சமையலை முடிச்சிட்டு நான் வந்து க்யூவில் நிக்கிறேன்.

No comments:

Post a Comment