Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Saturday, April 25, 2020

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்..


நடிகை ஜோதிகாவின் பேச்சு சர்ச்சையை கிளப்பிக் கொண்டிருக்கிறது. அவர் பேச்சின் முழு விவரமும் எனக்குத் தெரியாது. அங்கங்கு முகநூலில் தென்படும் கமெண்டுகளை வைத்து "இதுவாகத்தான் இருக்கும்" என்று புரிந்து கொண்டேன். (அதாவது கோவிலுக்கு செலவிடும் பணத்தை ஏழைகளுக்கு உதவலாம் என்று சொல்லி இருப்பார் என்று நினைக்கிறேன்) 
நான் ஒரு இந்து. ஆனால் எல்லா மதத்தின் மீதும் மதிப்பும் மரியாதையும் உண்டு. வேளாங்கண்ணி தேவாலயத்திற்கும் போயிருக்கிறேன். நாகூர் தர்க்காவும் போயிருக்கிறேன்.
அடிப்படையில் இந்து.. இறை நம்பிக்கை அதிகம் .. இப்படி பல என்னிடம் இருந்தாலும், சில இந்துமத சடங்கு சம்பிரதாயத்தில் எனக்கு உடன்பாடு கிடையாது. அதற்காக நான் இந்துமத துவேஷி அல்ல.
கோவில்களில் பால் அபிஷேகம் நடக்கும் போது, "எத்தனை வயிறுகள் பசி பட்டினியில் இருக்கின்றன.. அவர்களுக்கு இதைக் கொடுத்தால் வயிறு குளிராதா என்று யோசிப்பேன். யாகத்தீயில் பட்டு வஸ்திரங்களைப் போடும்போது, மாற்றுத்துணிக்கு வழியில்லாமல் எத்தனை ஜீவன்கள் இருக்கின்றன. இந்தக்காசில் நிறைய புடவைகளை வாங்கி அவர்களுக்குக் கொடுத்தால் ஸ்வாமி கோவிச்சுக்குவாரா" என்று யோசிப்பேன்.
இன்றுவரை கூட கோவில்களுக்குப் போகும்போது உண்டியலில் பணம் போட்டது கிடையாது (நான் கோவிலுக்குப் போவது தெரிந்து மற்றவர்கள் தரும் காணிக்கை காசை மட்டும் உண்டியலில் போடுவேன்.) என்னுடைய பணத்தை கோவில் வாசலில் நிற்கும் கண் பார்வை இல்லாதவர்கள், உடல் ஊனமுற்றவர்கள், வயதானவர்களுக்கு கொடுப்பேன்.
எனது தந்தை இறந்து போய் 39 வருடம் ஆகிறது. முதல் திவசத்தை மட்டும் சம்பிரதாயப்படி செய்தேன். அதன் பின் இன்றுவரை அவர் இறந்த தின நாளில் ஒரு குறிப்பிட்ட தொகையை யாராவது ஏழைகளுக்கோ, உடல் ஊனமுற்ற குழந்தைகளுக்கோ கொடுக்க சொல்லி தம்பியிடம் கொடுத்தனுப்புவேன்.
அம்மா இறந்து இரண்டு வருடம் முடிந்து விட்டது. நினைவு தினத்தன்று இதே விதிமுறைதான்.  சில வருடங்களுக்கு முன்பு "கோவில் கட்டுவதைவிட கழிவறைகள் கட்டுவது முக்கியம்" என்று ஒருவர் பேச, அது சர்ச்சையைக் கிளப்ப, அது சரியான கருத்து என்று இதே பிளாக்கில் பதிவு செய்துள்ளேன். வெளியூர்களுக்குப் போகும்போது, அநேக ஊர்களில் (மிகப் பெரிய நகரங்களில் கூட ), பஸ்ஸ்டாப்பை விட்டு வெளியே வரும்வரை மூக்கை மூடிக்கொண்டுதான் வரவேண்டும். அந்த அளவுக்கு மூத்திர நாற்றம் குமட்டும். தெருவுக்குத் தெரு ஒரு ஸ்வாமி சிலையை வைத்துவிட்டு, அதன் முன்னாலே வெற்றிலை எச்சில் துப்புவது, சாப்பிட்ட கையை சுவரில் துடைப்பது போன்ற அவலங்களும் நடக்கத்தானே  செய்கிறது. ஒரு  கோவில் முன்னாலே வியாபாரம் செய்துவிட்டு குப்பை கூளங்களை அப்படி அப்படியே வீசி விட்டுப் போவது சர்வ சாதாரணமான நிகழ்வாக இருக்கிறது. இதைப் பற்றி எல்லாம் யாரும் கவலைப்பட்டதாகவே தெரிவில்லை. (கவலை பட்டிருந்தால் இதற்கு ஒரு முடிவு காட்டாமல் விடுவார்களா என்ன?) செய்தித்தாளில், "இந்த கோவில் ஸ்வாமிக்கு இத்தனை டன் தங்க நகைகள் இருக்கிறது. நிலவறையில் பாதுகாக்கப்படுகிறது என்ற செய்தியைப் படிக்கும்போது, "எனக்கு நகை வேணும்னு சாமி இவங்க கிட்டே கேட்டாரா? நிலவறையில் அடுக்கி, கூர்க்கா போட்டு பாதுகாப்பதைவிட  அதை ஒரு தொழிலில் மூலதனமாகப் போட்டு தொழில் தொடங்கினால்  நிறைய பேருக்கு வேலை கிடைக்குமே " என்றுதான் இந்த நிமிடம் வரை நினைக்கிறேன்.  
நமது அன்பை, இறைவன் நமக்குத் தந்த நல்ல விஷயங்கள், நல்ல வாழ்க்கைக்காக நம் நன்றியைக் காட்ட, ஏதாவது செய்ய நினைக்கிறோம். அதை இறைவன் பெயரால், உதவிக்கரம் தேவையான நிலையில் இருப்பவர்களுக்குச் செய்தால் கடவுள் நம்மைத் தண்டிப்பாரா என்ன ?  இதேபோல எனக்கு இன்னொரு விஷயத்திலும் உடன்பாடு கிடையாது. பள்ளிகளில் யூனிஃபார்ம் கொண்டு வரப்பட்டதன் நோக்கம், அவரவர் அணிந்திருக்கும் உடையை வைத்து குழந்தைகளுக்கு  "  நான் வசதியானவன் . நீ ஏழை வீட்டுப்பிள்ளை " என்ற பாகுபாடு, அகந்தை வரக்கூடாது என்ற எண்ணத்தினால்தான். நாங்கள் படிக்கிற காலத்தில் காட்டன் துணியில் மட்டும் சீருடை இருக்கும். அதில் எந்த ஆடம்பரமும் இருக்காது. என்றாவது ஒரு நல்ல நாள், கிழமையில் யூனிஃபார்ம் இல்லாமல் வர அனுமதி உண்டு. வசதியான வீட்டுக் குழந்தைகள் அவர்கள் செழிப்பை ட்ரெஸ்ஸில் காட்டுவார்கள்.  ஓரளவு கூட சுமாரான ட்ரெஸ் இல்லாத பிள்ளைகள் அன்றைய தினத்திலும்  யூனிஃபார்ம்மில் தான் வருவார்கள். செருப்பு கூட கட்டாயம் இல்லை
ஆனால் இன்றைய தினத்திலோ பள்ளி  யூனிஃபார்மில் கூட எத்தனை ஆடம்பரம். அதுவும் வாரத்துக்கு இரண்டு விதமாக.. விதவிதமாக ஷூ..
இப்படி இருந்தால், பள்ளிகளில் சீருடை கொண்டுவந்ததே அர்த்தமற்ற விஷயமாகி விடுகிறதே.
மேலே உள்ளவை எனது அபிப்ராயம். தனிப்பட்ட கருத்து. இதை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் சொல்லவில்லை.  மனதுக்குள் அசை போட்டுப்பாருங்கள். சரிதான் என்ற முடிவுக்கு வந்தால், நீங்கள் உங்கள் பாதையை மாற்றிப்  பயணியுங்கள். அவ்வளவே.
ஏழையின்  சிரிப்பில் இறைவனைக் காண்போம்.. அதற்காக துயரப்படு வோருக்கு கை  கொடுப்போம். எவ்வளவு உழைத்தாலும் அடிப்படை வசதி கூட நிறைவேற வழியின்றி இருப்போருக்கு உதவுவோம். உதவி என்ற பெயரால், உழைக்காமல் உடம்பு வளர்க்கும் சோம்பேறிக்கூட்டங்கள் உருவாகாமல் பார்த்துக் கொள்வோம்.அது ரொம்பவும் முக்கியம்.
"பாத்திரம் அறிந்து பிச்சையிடு" என்பது முன்னோர் வாக்கு. அதை ஒரு சிலர் "அவன் கையில் இருக்கிறது ஈய பாத்திரமா, எவர்சில்வரானு பார்த்து  அதுக்கு தகுந்த பிச்சை போடணுமா?" என்று கிண்டல் செய்வதுண்டு. 
பாத்திரம் என்றால் தராதரம், தகுதி என்றுதான் அர்த்தம் கொள்ள வேண்டும்.
நடிகர்கள் ஏற்று நடிக்கும் வேடத்தை "கதாபாத்திரம் " என்றுதானே சொல்கிறோம்.
மனதை உறுத்தும் இன்னொரு விஷயம்.  கோவில் இருக்கும் தெருவிலோ சுற்று வட்டாரத்திலோ யாராவது இறந்து விட்டால், முக்கியமான குடும்ப உறுப்பினர் வரும் வரை பிணத்தை வைத்திருக்க சுற்று வட்டாரம் அனுமதிப்பதில்லை. 
"பிணத்தை இப்பவே எடுத்தாகணும். ஸ்வாமிக்கு செய்ய வேண்டிய பூஜை  நடந்தே ஆகணும். ஸ்வாமி பட்டினி கிடப்பதா? பூஜை   இல்லா விட்டால் வானமே இடிந்து விடும். பூமி இரண்டாக பிளந்துவிடும்" என்று ஒரு கூட்டம் வந்து ரகளை பண்ணும். (அது எங்கள் அப்பாவின் சாவு  நிகழ்வில் கூட நடந்துள்ளது. அப்பாவின் அண்ணன், அக்காமார் வரும் வரை அப்பாவை வைத்திருக்க அருகிலுள்ள கோவில் நிர்வாகம் அனுமதிக்க வில்லை.)
அந்தக்காலத்தில் மலைமேல், நதியோரம் ஆலயம் அமைத்தார்கள். அதனால் சமுதாய நிகழ்வுகள் கோவில் நடைமுறையை பாதிக்காமல் தங்கு தடையின்றி நடை பெற்றது.
இன்றோ, ஒரு தெருவில் 25 குடித்தனங்கள் வந்துவிட்டால் போதும். உடனே  ஒரு கோவில் முளைத்துவிடும். அதை வைத்து சிலர் சம்பாதிக்க, சிலர் அடிதடியில்  இறங்க, "சபாஷ்.. சரியான போட்டி .." என்று சொல்லத் தோன்றுகிறது.
ஆகமவிதிப்படி அமைந்த பழங்கால கோவில்களில் சிறு கீறல் கூட விழாமல் பாதுகாப்போம். அது நமது கடமை.  ஆனால் நமது வசதிக்கு நமது குடியிருப்பில் இறைவனை கொண்டு வந்து வைத்து   சங்கடப் படுத்த  வேண்டாம் என்பது எனது கோரிக்கை.
என் ஆசை எல்லாம் அந்த கூட்டத்தை இன்று சந்திக்க வேண்டும். "என்னய்யா .. மாசக்கணக்கில் கோவில் மூடிக்கிடக்கிறதே. சாப்பாடு இல்லாமல் சாமி பட்டினி கிடக்கிறார்னு நீங்களும் பட்டினி கிடக்கிறீர்களா?" என்று கேட்கவேண்டும். 
அந்தக்கூட்டத்தில் இன்று எத்தனை உயிரோடு இருக்கிறதோ எத்தனை போய்சேர்ந்து விட்டதோ தெரியவில்லை. 

No comments:

Post a Comment