Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, September 19, 2014

Scanning of inner - heart ( Scan Report Number - 128 )

                                          நாடு ரொம்ப கெட்டுப் போச்சு !!

தாயே ஈஸ்வரி. பராசக்தி, உன்னோட சோதனைக்கும் ஒரு அளவே இல்லையா ? தவமா தவமிருந்து கோயில் குளத்தையும் அரசமரத்தையும் சுத்தி சுத்தி வந்து ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுன்னு ஒண்ணைப் பெத்து எடுத்தேன் . பிறந்து அஞ்சு வருஷத்துக்குப் பிறகுதான் தெரிஞ்சுது அது முட்டாளிலும் சேர்க்க முடியாத புத்திசாலிகள் வரிசையிலும் சேர்க்க முடியாத ரெண்டுங் கெட்டான்னு. இருந்தாலும் மலடிங்கிற ஏச்சு பேச்சிலிருந்து என்னைக் காப்பாத்திக் கொண்டாந்துசேன்னு பொத்திப் பொத்தி வளர்த்தேன் . அதை நார்மல் குழந்தையா மாத்தியே தீருவேன் என்கிற வைராக்கியத்தில் தானே நான் பார்த்துட்டுருந்த வேலையை ரிசைன் பண்ணினேன்.
ராவும் பகலும் நான் பட்ட அவஸ்தை கொஞ்சமா நஞ்சமா ? இல்லாட்டா இதெல்லாம் நீ அறியாததா ? எவ்வளவு நம்பிக்கையா இருந்தேன், என்னோட விடாமுயற்சியில் பிடிவாதத்தில் வைராக்கியத்தில் நான் ஜெயிச்சுட்டேனு நினைச்சு ! இப்போ அத்தனையும் வீணாப் போயிடும் போலிருக்கே. எனக்கு ஏன் இந்த சோதனை ? நீயும் பெண்ணாச்சே ! தாய் மனம் அந்தக் கருணை மனம் உனக்கும் இருக்கும்தானே  ? பிறகு ஏன் என்னை இப்படி சோதிக்கிறே ? சாண்  ஏறினால்  முழம் சறுக்குகிற நிலை ஆயிடுச்சே. இவன் என்ன காரணத்துக்காக இப்படி இருக்கிறான்னு தெரியலையே. பிறப்பிலேயே இவன் நார்மல் சைல்ட் இல்லேன்னு தெரிஞ்சும் என்னோட விடாமுயற்சியில் தானே இந்த அளவுக்கு அவனை கொண்டு வந்தேன். 
வாசுவோடு  படிக்கிற பிள்ளைகளுக்குப் போன் பண்ணி விசாரிச்சாச்சு. சொல்லி வச்ச மாதிரி அத்தனை பேரும் ' ஆன்ட்டி அவன் நடவடிக்கை எங்களுக்குக் குழப்பமா இருக்குது. எங்களில் யாரைப் பார்த்தாலும் அவங்கவங்க பேரை சொல்லி "நீ, நீதானே? வேறு யாருமில்லியே'ன்னு கேட்கிறான். கிளாஸ்க்கு வந்த மேம் கிட்டே "நீங்க மேம் தானே ? மத்த யாரும் இல்லியே"ன்னு கேட்கிறான். இப்படியே போனால் அது வேறே மாதிரி பிரச்சினை ஆயிடும். எதுக்கும் அவனை 'சரி' பண்ணப் பாருங்க . அவனோட க்ளோஸ் பிரெண்ட்ஸ்ங்க கூட அவன் பக்கத்தில் போகவே பயப் படறோம்"ன்னு சொல்றாங்க .  நான் இதை எப்படி சால்வ் பண்ணப் போறேன். வீட்டை விட்டால் காலேஜ். காலேஜ் விட்டு வீட்டுக்கு வந்தால் டீவீ இல்லாட்டா கம்ப்யூட்டர்னு இருக்கிறவனாச்சே.ஏன் இப்படி மாறினா ன்னு தெரியலியே ! 
ஒரு மனுஷனுக்கு சோதனைக் காலம் வரும்போது எல்லாவிதத்திலும் கஷ்டம் கை கோர்த்துகிட்டு வரும்னு சொல்வாங்க. அது சரியாத்தான் இருக்குது. அவர் வீட்டில் இல்லை. வேலை மாற்றலாகி குஜராத் போய் ரெண்டு மாசம் ஆச்சு. அங்கே போய் குறைஞ்சது ஆறு மாசம் செர்விஸ் பண்ணின பிறகுதான் லீவுன்னு வாயைத் திறக்க முடியும் . அதனால் வீட்டில் என்ன பிரச்சினைனாலும் நீயே சமாளிக்க்சுக்கோ. முடியலன்னா கிளம்பி அங்கே வந்திடுன்னு சொல்லிட்டுப் போயிட்டாரு . பாஷை தெரியாத ஊரில் முன்னே பின்னே ஆட்கள் பழக்கமில்லாத இடத்தில் இவனை இந்த நிலையில் வச்சுகிட்டு  அங்கே போய் நான் என்ன பண்ண முடியும். இவன் குழந்தையா இருந்தப்பவும், அப்பப்போ பிரச்சினைன்னு போகும்போதும் எனக்கு ஆறுதலா இருந்து இவனுக்கு ட்ரீட்மென்ட் குடுத்த டாக்டரும் இப்போ ஊரில் இல்லை. மகன் பேரக்குழந்தைகளைப் பார்க்கிறதுக்காக வெளிநாடுபோயிட்டாராம்.இவனுக்கு என்ன பிரச்சனை ன்னு தெரியலையே. தாயே ... பராசக்தி ஒரு நல்ல வழியைக் காட்டு.
"அம்மா " என்று கூப்பிடும் குரல் கேட்டு கதவைத் திறந்து கொண்டு வெளியில் வந்தாள் கல்யாணி 
"கீரை நல்லா இருக்கு ..எப்படிப் பச்சைப் பசேல்னு இருக்கு பார்த்தியா . கீரைன்னா நீ ஆசையா வாங்குவியே. அதான் கதவைத் தட்டி உன்னைக் கூப்பிட்டேன்.  நீ கோச்சுக்காதே "
"இப்போ எதுவும் வேண்டாம் .. பையனுக்கு உடம்பு சரியில்லே .."
"முடியாட்டா டாக்டரண்டே போறதுதானே "
"போலாம் ... ஆனால் அவர் ஊரில் இல்லே "
"அட என்னம்மா நீ .. ஊர் உலகத்தில் அவர் ஒருத்தர் தான் டாக்டரா என்ன ? அந்த ஒரு ஆளு இல்லாட்டா குடியே முழுகிப் போயிடுமா என்ன ? கண்டதையும் நினைச்சு யோசனை பண்ணாமே யாராவது ஒரு டாக்டரை பார்த்து பிள்ளையைக் காட்டு தாயீ. நான் வியாபாரத்தைப் பார்க்கக் கிளம்புதேன் " என்று சொல்லிவிட்டு கூடையைத் தூக்கிக் கொண்டு நகர்ந்தாள் கீரைக் காரி.
சிறிது நேரம் யோசனையில் இருந்த கல்யாணி, "தெய்வம் காட்டும் ; ஊட்டாது"ன்னு ஒரு பழமொழி சொல்வாங்களே . என் பிரார்த்தனையைக் கேட்டுட்டு என் பரிதவிப்பைப் பார்த்துட்டு  என்னோட தாய் பராசக்தி தான் கீரைக்காரியா வந்து இப்படி ஒரு யோசனையை சொல்லிட்டுப் போனாளா ? இந்த சின்ன விஷயம் கூட மூளைக்கு எட்டாமே நானே ஒரு பைத்தியக்காரி மாதிரி அழுது புலம்பிட்டு இருந்தேனே என்று தன்னைத் தானே கடிந்து கொண்ட கல்யாணி, கம்ப்யூட்டர் முன்னால் உட்கார்ந்து இணையத்தில் இணைந்தாள். தேவையான விஷயங்களை குறித்துக் கொண்டு போனில் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிக் கொண்டாள். 24 மணி நேரமும் பிஸியா இருக்கிற டாக்டர்ஸ்  அப்பாயிண்ட்மெண்ட் இருந்தால் தான் பார்ப்பேன்னு சொன்னால் அதில் ஒரு நியாயம் இருக்குது. எந்த நேரமும் கிளினிக்கில் ஈ விரட்டிட்டு இருக்கிறவங்களும் இந்த டயலாக்கை சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க. நான் போய்ப் பார்க்கப் போகிற மகராஜன் எந்த ரகமோ தெரியலை என்று மனதுக்குள் நினைத்துக் கொண்ட கல்யாணி "வாசு .. என்ன ஏதுன்னு கேட்காமல் உடனே கிளம்பு . நாம இப்போ ஒரு இடத்துக்குப் போறோம் " என்றாள் 
"எங்கேம்மா ? ஆஸ்பிட்டல்க்கா ?"
"எப்படித் தெரிஞ்சுட்டே கண்ணா ?"
"உன்னோட ஆக்டிவிடீஸ் வச்சுதான் .. நீ ஒரு வாரமாவே நார்மலா இல்லே . என்ன ப்ராப்ளம் மம்மீ ?"
இவ்வளவு தெளிவா இருக்கிறானே என்று மனதுக்குள் நினைத்துக் கொண்ட கல்யாணி, "கேள்வி கேட்காமே கிளம்பு " என்று கடுகடுத்த தொனியில் சொல்ல அவளோடு கிளம்பினான் வாசு  
கிளினிக் உள்ளே நுழைந்ததுமே, "என்னோட டர்ன் வந்ததும் முதலில் நான் உள்ளே போய்  டாக்டரிடம் பேசிட்டு வந்துடறேன். அப்புறமா பையனை உள்ளே அனுப்புங்கோ.நான் உள்ளே இருக்கிறப்போ அவனைக் கொஞ்சம் கேர் எடுத்துப் பார்த்துக்கணும்" என்று கல்யாணி சொல்ல தலையை ஆட்டினாள் நர்ஸ் 
சிறிது நேரத்தில் நர்ஸ் வந்து "மேம் நீங்க போங்க " என்று சொல்ல, அவளுக்கு கண்களால் சமிக்ஞை கொடுத்து விட்டு டாக்டரைப் பார்க்கக் கிளம்பினாள் கல்யாணி. அவர் தோற்றத்தை வைத்தே 'நல்ல மனுஷனா தெரியறார்; அனுபவசாலி மாதிரியும் தெரியறார்' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்.
"பேஷண்ட் ..."
"என்னோட பையன் .. வெளியில் இருக்கிறான். இந்த பைல் அவனோட ட்ரீட்மென்ட் ஹிஸ்டரி.. வழக்கமா பார்க்கிற டாக்டர் இப்போ பாரின் போயிட்டார் " என்று கல்யாணி சொல்லிக் கொண்டிருக்க, பைலைப் புரட்டி அதிலிருந்து குறிப்புகளில் ஆழ்ந்தார் டாக்டர் 
"என் பிள்ளை எதையும் அபரிமிதமாக கற்பனை பண்ணிப் பார்ப்பான். ஒரு படத்தில் நாகேஷ் அப்படி ஒரு ரோல் பண்ணியிருப்பார். கல்யாண மேடையில் குத்து விளக்கு எரிவதைப் பார்த்துட்டு அந்த விளக்கிலுள்ள நெருப்புப் பொறி கல்யாணப் பெண் புடவையில் பற்றி அவள் எரிந்து போவது போல கற்பனை பண்ணிக்கிட்டு அழுவார். இவன் அதே ரகம்"
"புரியுது .. ரீசென்ட் ஆக என்ன நடந்தது ?"
"என்னைப் பார்த்து நீ நிஜமாவே மம்மி தானே ? வேறே யாருமில்லையே ன்னு  கேட்கிறான். அவனை சுற்றி இருக்கிற எல்லாரையும் பார்த்து இதே கேள்வியைத் தான் கேட்கிறான். எனக்கு எதுவுமே புரியலே. மற்றபடி நார்மலா இருக்கிறான் "
"பழக்கமில்லாத இடம் எங்காவது போயிட்டு வந்தானா? அறிமுகமில்லா  மனுஷங்க யாராவது ..."
"இல்லே ..  அவன் எப்பவும் வீடு காலேஜ்னு இருப்பான் . பிரெண்ட்ஸ்ங்க கூட எங்க வீட்டுக்கு வருவாங்களே தவிர இவன் எங்கேயும் போக மாட்டான். இவன் நார்மல் சைல்ட் இல்லேன்னு தெரிஞ்சு இவன் குழந்தையா இருக்கிறப்போ இவன் அங்கே இங்கேன்னு எங்கேயும்   போகாதபடிக்கு நாங்க  கண்ட்ரோலா வச்சிருந்தோம். பிறகு அதுவே இவனுக்குப் பழக்கமாயிட்டதாலே இவன் எங்கேயும் போறது கிடையாது யாரைப் பார்த்தாலும் சந்தேகப் படறான் .. அது ஏன்னு தெரியலே "
இண்டர்காமில் நர்சை அழைத்த டாக்டர் "இந்த அம்மாவோட பையனை உள்ளே அனுப்புங்க  " என்று சொல்ல, வாசுவை அழைத்து வந்து டாக்டர் அருகில் உட்கார வைத்து விட்டுப் போனாள் நர்ஸ் .
"ஹலோ வாசு ... குட் மார்னிங். எப்படி பீல் பண்றீங்க ?"
"நீங்க நிஜமாகவே டாக்டரா ?"
"ஆமாம் ?"
"மம்மி ... இவர் டாக்டரா ? உனக்கு கன்பார்ம்டா தெரியுமா ?"
"தெரியும் .. இது அவர் கிளினிக் .. அதோ நர்ஸ் .. எவ்வளவு பேர் வெயிட் பண்றாங்க பாரு "
"அப்படி நம்பி ஏமாந்துடாதே "
இதைக் கேட்டு அதிர்ந்த டாக்டர் "என் மேலே உனக்கு ஏன் இப்படியொரு சந்தேகம்  ?" என்றார் 
"யாரையும் நம்ப முடியறதில்லே .. நாம ஒரு இடத்துக்குப் போறோம். பழகறோம். நம்மளைப்  போல மனுஷங்கன்னு நினைச்சுதான் பேசறோம் பழகறோம். அப்புறம் திடீர்னு ஒருநாள் அவங்களை தீவிரவாதின்னு சொல்லி முத்திரை குத்தி அவங்களோட பேசினவங்க பழகினவங்க யார் யார்னு  லிஸ்ட் எடுக்க ஆரம்பிச்சிடுதாங்க. உளவுத் துறைக்கே சில விஷயங்கள் லேட்டாத் தான் தெரியுது. அப்படியிருக்க நம்மளப் போல சாதாரண மனுஷங்களுக்கு யார் யார் எப்படின்னு  எப்படித் தெரியும்? இவங்க அம்மான்னு சொல்றாங்க. ஏதோ ஒரு ப்ளானில் கூட இவங்க அம்மான்னு சொல்லி எங்க வீட்டில் வந்து இருக்கலாந்தானே ? நீங்க நிஜமாவே டாக்டரா ? உங்களை நான் எப்படி நம்பறது ? உங்க கிளினிக்கில் சீசீ டீவீ இருந்து அதில் நாங்க இங்கே வந்தது பதிவாகி யிருந்தால் ஏதோ ஒரு காலத்தில்  அது எங்களுக்கு தேவையில்லாத பிரச்சினைதானே" என்று வாசு சொல்லிக் கொண்டிருக்க தலையில் "மடேல் மடேல்" என்று அடித்துக் கொண்டிருந்தாள்  கல்யாணி.
"உங்க பையனுக்கு டீவீ பார்க்கிற பழக்கம் உண்டா ?"
"அதைத் தவிர வேறு பொழுது போக்கு அவனுக்கு கிடையாது . எப்பவும் கார்ட்டன் படங்களைப் பார்ப்பான் . அதில் வர்ற கேரக்டர்ஸ் மாதிரி குரல் குடுப்பான் . ஆக்ட் பண்ணுவான் . இப்போ கொஞ்ச நாளா .. கொஞ்ச நாளாத்தான் அவன் நியூஸ் பார்க்க ஆரம்பிச்சிருக்கிறான். அவன் வீட்டில் இருக்கிறப்போ ஒரு பாட்டு கேட்கவோ ஒரு சீரியல் பார்க்கவோ முடியாது "
"சமீபத்தில் அவன் பார்த்த கேட்ட செய்திகள் அவனைக் கொஞ்சம் குழப்பி இருக்கு. அவ்வளவுதான் . கவலைப் படாதீங்க . சரி பண்ணிடலாம் " என்று டாக்டர் சொல்ல, "தாயே பராசக்தி இந்த அளவுக்காவது கருணை காட்டினியே ..உனக்கு நெய் விளக்கு போடறேன் " என்று மானசீகமாக நன்றி தெரிவித்துக் கொண்டிருந்தாள் கல்யாணி  

Saturday, September 06, 2014

DEAR CHILDREN, ( PUZZLE NUMBER - 015 )

THIS IS A PUZZLE SPECIALLY FOR YOU.
THERE ARE TWO BOXES - A & B.
YOU MAY VIEW 10 WORDS IN BOX - A
COMPOSE ANOTHER WORD IN BOX - B, BY USING THE SAME 3 LETTERS OF BOX - A.
FOR EXAMPLE - " ABY " MAY BE COMPOSED AS " BAY ".
THIS TYPE OF PUZZLES WILL GROW YOUR VOCABULARY SKILL.

PUZZLE NUMBER - 015          



Box A
Box B
W
A
D
W
A
R
W
A
S
W
A
Y
W
E
D
W
E
E
W
E
N
W
H
O
W
O
N
W
O
T
W
O
T
Y
A
H
Y
A
M
Y
A
P
Y
A
W
Y
E
A

WEN means - harmless, usu. permanent, tumour on the scalp or other part of the body.

WOT means - (1st & 3rd p. sing. of an arch.vb.) know(s) : God wot

- queries / suggestions may be sent to
arunasshanmugam@gmail.com

My sincere heart felt thanks to : Shri Hari Balakrishnan

                                                  ( www.puthirmayam.com)
                                                  who have made the on-line facility


Friday, September 05, 2014

Scanning of inner - heart ( Scan Report Number - 127 )

 தத்துவமாக நான் சொல்லுவதெல்லாம் சத்தியம் !

FABLE STORIES OF FEEBLE HUMAN BEINGS பகுதியில் இதுவரை கதை வடிவில்  சில விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். ( கதை என்கிற லேபிளில் அது அமைந்திருந்தாலும், கதையின் முதலும் முடிவும், (சில) உரையாடலும்  கற்பனையாக வடிவமைக்கப்பட்டு இடைப் பகுதி நம்முடன் வாழும் சில மனிதர்களையும், நான் சந்தித்த மனிதர் களையும்  அவர்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் கொண்டு உருவாக ப் பட்டது என்பதுதான் உண்மை .)
இந்த வாரம் எனது மனதில் இந்த நிமிடம்வரை  ஓடிக் கொண்டிருக்கும் எண்ணங்களை / அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
டீவீயில் நேற்று நான் பார்த்த / படித்த HEAD LINE NEWS " 5 குழந்தைகள் பெற்றவருக்கு 1080 கோடி ரூபாய் பரிசு ". ( இந்தப் பரிசு அவருக்கு எந்த அளவுக்கு சந்தோஷம் தந்தது என்பது எனக்குத் தெரியாது . ஆனால் இந்த ஒற்றை வரி செய்தியைப் படித்ததும் நான் அடைந்த சந்தோசத்தை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. அவருக்கு பரிசு கிடைத்தால் அதில் உனக்கென்ன அத்தனை சந்தோஷம்னு அங்கே நீங்கள் முணு முணுப்பது இங்கே என் காதிலும் விழுகிறது. மேட்டர் பின்னாலேயே வருகிறது. ) இது எந்த நிறுவனத்தால் வழங்கப்படுகிறது? பரிசு பெறுவதற்கான விதிமுறைகள் என்ன ? ஏதோ ஒரு விஷயத்தில் எக்ஸ்பெர்ட் ஆக இருந்து பரிசு பெறும் இவருக்கு 5 குழந்தைகள் இருக்கிறார்களா ? ( அதைத்தான் நியூஸ்ல் அப்படி அறிவிக்கிறார்களா?) அல்லது 5 குழந்தை பெற்று வளர்க்கிறவர் என்ற காரணத்துக்காக இந்த பரிசு வழங்கப்படுகிறதா ---இது போன்ற விவரங்கள் எதுவும் எனக்குத் தெரியாது. நான் டீவீயில் பார்த்தது  " 5 குழந்தைகள் பெற்றவருக்கு 1080 கோடி ரூபாய் பரிசு " என்ற ஒரே ஒரு வரி செய்தியைத்தான். ஏதோ ஒரு நாட்டில் ஜனத்தொகையை அதிகப்படுத்து வதற்காக, மக்களை ஊக்கு விக்கும் நோக்கத்தில் அதிக குழந்தைகளுள்ள குடும்பத்துக்கு அந்நாட்டு அரசாங்கத்தால் பரிசுகள் வழங்கப்படுகிறது என்ற செய்தியை எங்கோ எப்போதோ படித்த ஞாபகம் இருக்கிறது .
சில வருடங்களுக்கு முன்பு " நாமிருவர் ! நமக்கு இருவர் !! " என்று விளம்பரம் செய்த அரசாங்கம், அதன் பின்பு " நான் நீ நம் குழந்தை " என்றும் " ஒன்றே பெறுவோம் ! அதை நன்றே வளர்ப்போம் " என்றும்  அறிவிப்புப் பலகையை அங்கங்கே நட்டி தனது கடமையை செய்தது. இது போன்ற விளம்பரங்களை அடிக்கடி பார்த்து, அதை மனதில் விதைத்து விட்ட நமது மக்கள், யாராவது தனக்கு இரண்டாவது குழந்தை பிறந்தி ருப்பதாக சொன்னால் அவர்களை ஆச்சரியமாகப் பார்க்க ஆரம்பித் தார்கள். இரண்டாவது பிறந்ததும் பெண் குழந்தை என்பது தெரிந்தால் ஏதோ அத்தோடு அவர்களது  வாழ்க்கையே முடிந்து விடுவது போல அனுதாபமும் ஆலோசனையும் சொல்ல ஆரம்பித்தார்கள்.ஆலோசனை யை விட அனுதாப அலைகளை வாரி வழங்கியவர்களே அதிகம் பேர். இதை அனுபவ பூர்வமாக அறிந்திருக்கும் அப்பாவிகள் அநேகம் பேர் உண்டு. இந்த லிஸ்டில் எனது சகோதரியின் மகளும் உண்டு. போன ஏப்ரல் மாதம் அவளுக்கு இரண்டாவது பெண் குழந்தை பிறந்ததும், " என்னது ?! ரெண்டாவதும் பெண்ணா ?! " என்று கேட்டு அதிர்ந்தவர்கள் அதிகம். ஆனால் எங்கள் வீட்டினருக்கு இது சிறிதும்  வருத்தத்தைத் தரவில்லை. ஏனென்றால் எங்கள் அப்பாவுக்கு நாங்கள் 5 பேர் பெண் குழந்தைகளாகப் பிறந்தோம். அது குறித்து உறவினர்களும் அக்கம்பக்கத்தினரும் " அடடா ! அஞ்சும் பொண்ணாப் போச்சே !" என்று வெளிப்படையாக வருத்தப் படுவார்கள்.ஆனால் அப்பா வருத்தப்பட்டதே கிடையாது."எந்தக் குழந்தை யாக இருந்தால் என்ன ? ஒரு குறிப்பிட்ட வயசு வரை அவங்களை வச்சு நாம பராமரிக்கப் போறோம். படிக்க வைக்கப் போறோம். அதுக்குப் பிறகு அதது வாழ்க்கையை அதது பார்த்துக்கும் " என்று சொல்வாரே தவிர வருத்தப் பட மாட்டார். அப்பாவிடம் வருத்தப் பட்டு சொல்கிறவர்களிடம் எனது சித்தி ( அம்மாவின் தங்கை ) " உங்கள் வீட்டில் உங்களுக்கு வேண்டாத பொம்பளைப் பிள்ளைங்க இருந்தால் அதை இங்கே கொண்டு வந்து விடுங்க.எங்க அத்தான் அவங்களை இந்த வீட்டு அஞ்சு   குழந்தை களோடு சேர்த்து வளர்ப்பார்" என்று சொல்வார்களாம். இவ்வளவுக்கும் அப்பாவுக்கு மாத சம்பளத்தைத் தவிர வேறு எந்த வருமானமும் கிடையாது. அரசாங்க வேலையில் இருந்தாலும் யாரிடமும் கை நீட்டிக் கால் காசு கூட அப்பா வாங்கியது கிடையாது. இதை அப்பாவின் அலுவலக ஊழியர்கள் எங்களிடம் பலமுறை சொல்லியிருக்கிறார்கள். நானும் மத்திய அரசு அலுவலகத்தில் 32 வருடம் பணி புரிந்து ஓய்வு பெற்று விட்டேன். என்னைப்பத்தி நான் பெருமையாக சொல்லிக் கொள்ளக் கூடிய ஒரே ஒரு விஷயம் நான் யாரிடமும் லஞ்சம் வாங்கியது கிடையாது. இவ்வளவுக்கும் நான் வேலை பார்த்த சீட்டில் நான் நினைத்திருந்தால் குறுக்கு வழியில் சம்பாதித்திருக்க முடியும். ஆனால் செய்தது கிடையாது. இதுபற்றி என் தோழி அடிக்கடி சொல்வது : யாரோ ஒருத்தருக்கு வேலை செய்து கொடுத்துவிட்டு அவன்கிட்டே கிம்பளமும் ஆபீசில் சம்பளமும் வாங்குகிறவங்களைப் பத்தி அவனவன் அங்கங்கே வாய் கிழிய பேசறானுக. ஒரு சில ஆபீசில், அந்த ஆபீசில் வேலை பார்க்கிறவங்க மெடிக்கல் பில்,ஹௌசிங்க் அட்வான்ஸ் இதுக்கெல்லாம் அப்ளை பண்ணினால், சம்பந்தப்பட்ட சீட் வொர்க் பார்க்கிறவனுக்கு பணத்தை வெட்டினால்தான் அந்த பேப்பரை கையிலேயே எடுப்பாங்க ளாம். இவங்களை எந்த லிஸ்டில் சேர்க்கிறது ? நல்ல வேளை நம்ம ஆபீசில் அப்படியொரு பழக்கம் இல்லை ! 
(கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு முன் ஒவ்வொரு வீட்டிலும் 10 குழந்தை இருப்பது கூட ஒரு சாதாரண விஷயமே . என் தங்கையின் மாமியாருக்கு 10 குழந்தைகள். என் தங்கையின் கணவர்தான் 10-வது குழந்தை. அவருக்கு தற்போது வயது 60. கவிஞர் கண்ணதாசன் வீட்டில் அவரையும் சேர்த்து அவர் அப்பாவுக்குக் குழந்தைகள் 14 பேர் என்று நியூஸ்  படித்த ஞாபகம் இருக்கிறது.) 
ஜனத்தொகை அதிகமானால் பூமியின் பாரம் தாங்காது.மக்கள் நிற்பதற்கு கூட இடம் இல்லாத வகையில் நெருக்கடி ஏற்படும் என்ற செய்தியை பல முறை படித்திருக்கிறேன். இயற்கையின் சீற்றம் பேரழிவு காட்டுத்தீ இது போன்ற செய்திகளையும் அது சம்பந்தப் பட்ட படங்களையும் பார்க்கும் போது "அடேயப்பா ... யாரும் யூஸ் பண்ணாமே இவ்வளவு இடம் இருக்குது. நிலவுக்குப் போறேன் .. செவ்வாய்க்குப் போறேன் ..  அங்கே மக்கள் வாழ முடியுமான்னு பார்க்கப் போறேன்னு சொல்றதை விட்டுட்டு, இந்த மாதிரி இடங்களில் மக்கள் வாழ வழி செய்து கொடுக்கலாமே. மேலே போய் வாழ நீ செலவழிக்கிற செலவில் கோடியில் ஒரு பங்கை நீ இங்கே போட்டால் போதும். மக்களுக்கும் ஒரு பெனிபிட் கிடைக்கும். ஒவ்வொரு நாட்டின் எல்லையோரங்களில் இது போன்று அதிக குடும்பங்கள் இருந்தால்  அது அந்தந்த  நாட்டுக்கும் பாதுகாப்பு அரணாக இருக்குமே என்று பலமுறை நினைத்துப் பார்த்திருக்கிறேன். அந்த எண்ணத்திலும் அடி விழுந்தது, தீவிர வாதிகளின் தாக்குதலுக்குப் பயந்து இந்திய எல்லையில் வாழும் மக்கள் இரவு நேரங்களில் பதுங்கு குழிகளில் தங்குகிறார்கள் என்ற செய்தியைப் படக்காட்சியாகப் பார்த்ததும்! ( காற்று, வெளிச்சம் எதுவும் சிறிது கூட இல்லாத நிலையில், ஒருவர் மட்டுமே கால் நீட்டிப் படுக்க முடிகின்ற இடத்தில் வயதானவர்கள்  குழந்தைகள் என்று 10க்கும் மேற்பட்டோர் அந்த குழியில் சுருண்டு படுத்துத் தூங்கு கிறார்கள் ( என்ன கொடுமையடா சாமி ! )
இது இப்படி இருக்கட்டும். நாம அடுத்த சப்ஜெட்டுக்குப் போவோம்.
"உங்களுக்கு அந்த லாட்டரியில் பணம் கிடைச்சிருக்குது. இந்த லாட்டரியில் பணம் கிடைச்சிருக்குது. வாரிசு இல்லாத ஒருவர் உங்க பேருக்கு தனது சொத்துக்களை எழுதி வச்சிருக்கிறார். நான் உங்க ப்ளாக் பாலொயர். உங்க எண்ணங்கள் எனக்குப் பிடிச்சிருக்குது. அதனால் உங்களுக்குப் பணம் கொடுக்க விரும்புகிறேன். உங்களோடு சேர்ந்து ப்ராஜெக்ட் பண்ண விரும்புகிறேன் " - இது போன்ற மெயில் எனக்கு அடிக்கடி வரும். சில விவரங்கள் அதில் கேட்கபட்டிருக்கும். நான் நல்ல மூடில் இருந்தால் உண்மையான தகவல்களைக் கொடுப்பேன். சில சமயம் உன்னோட போலி மெயிலுக்கு இந்த இன்பர்மெசன் போதும் என்பது போல தப்பான விவரங்களைக் கொடுப்பேன். அந்த மெயில்களைப் படிக்கும்போது  தவறான வழியில் பணம் சம்பாதிக்க மனுஷ மூளை எந்த அளவுக்கு  தன்னை வருத்திக் கொள்கிறது என்பது புரிகிறது. சில உதாரணம் மட்டும் சொல்றேன். யாராவது அதைப் படிக்கப் பிரியப் பட்டு அதை எனக்குத் தெரிவித்தால் அதை publish பண்ணுகிறேன்.
RESERVE BANK OF INDIA ல்  எனக்கான பரிசுப் பணம் இருப்பதாகத் தெரிவித்து இரண்டு பக்க கடிதம். இதில் ஜோக் என்னவென்றால் அந்த பேங்கில் உள்ள அத்தனை HIGHER AUTHORITY பேரும் எழுதப்பட்டு அவர்கள் கையெழுத்தும் அதில் இருக்கும். இது ஒரு வகையென்றால் இன்னொன்றில் பரிசுக்கான செக் இந்த பார்சலில் இருக்கிறது என்று குறிப்பிட்டு  அந்த பார்சலின் படம் ஒரு மெயிலில் வந்துள்ளது. பத்து அல்லது பதினைந்து நாட்களுக்கு முன்பு வந்த செய்தி விவரம் :" கோகோ கோலா நிறுவனம் எனக்கு பத்து கோடி கொடுத்திருக்கிறது. அதை எடுத்துக் கொண்டு  சம்பந்தப்பட்ட ஆள் வந்தாச்சு. அவர் வருமுன்னமே அவர் வரப் போற ப்ளைட்  டேட் டைம் பத்தின நியூஸ் எனக்கு வந்தாச்சு. மறுநாள் காலையில் போன். "ஒரு லட்சத்து அறுபதாயிரம் தரணும் " என்று. "தர்றேன் வா நீ இங்கே " என்றேன். இதைக் கேட்டதும் அவனுக்கு டௌட் வந்து விட்டது போலும். " நீங்க முதலில் 21,000 ரூபாய் கட்டனும் . அதைக் கொடுத்தால்தான் டில்லி ஏர் போர்ட்டை விட்டு நான் வெளியில் வர முடியும். அந்த கஸ்டம்ஸ் ஆபீசர் உங்க கிட்டே பேசுவார். அவர் கிட்டே போனைக் கொடுக்கிறேன் என்று அவன் சொன்ன அடுத்த நொடியே ஒரு லேடி,"கோகோகோலா செக் எடுத்துட்டு ஒருத்தர் இங்கே வந்திருக்கிறார். நீங்க உடனே பணம் கட்டணும்" என்று சொன்னாள். " நாயே உன்னை யெல்லாம் பலாத்காரம் செய்து கொன்றால் கூட அது பாவமே இல்லை "  மனசுக்குள் நினைத்துக் கொண்ட நான், அந்தப் பெண்ணிடம் " அந்த செக்கை எடுத்துகிட்டு அவன் திரும்பிப் பார்க்காமே ஓடணும்னு சொல்லு " என்றேன். அடுத்த நொடி போன் கட் ஆகிவிட்டது.
இதுவரை நாம் ரெண்டு விஷயம் பத்தி தனித் தனியாப் பார்த்தோம் . ஒண்ணு அதிக குழந்தைகள் பத்தி. அடுத்தது பரிசுப் பணம் பத்தி.  இப்போ ரெண்டையும் ஒண்ணு சேர்த்துப் பார்க்கலாம்.
பரிசு பற்றி வரும் செய்திகள் பொய் என்றாலும் அந்த செய்திகள் நினைவுகள் தரும் சந்தோசம் பொய்யில்லை. 1080 கோடிக்கு எத்தனை சைபர் போடணும்னு உங்களுக்குத் தெரியுமா ? சத்தியமா சொல்றேன், எனக்கு தெரியவே தெரியாது. கோடிப் பணத்தை உங்களில் எத்தனை பேர் கண்ணால் பார்த்திருக்கிறீர்கள். நெஜமா சொல்றேன், கோடிக் கணக்கான பணத்தை நான் சினிமாவில் மட்டுமே பார்த்திருக்கிறேன். அதுவும் அருணாசலம் படத்தில் மட்டுமே.
அடுத்தவன் காசுக்கு ஆசைப் படமாட்டோம். குறுக்கு வழியில் சம்பாதிக்க ஆசைப்பட மாட்டோம். அதெல்லாம் வேறு விஷயம். பரிசு என்று ஒன்று கிடைத்தால்  வேண்டாமென்று யாராவது சொல்வோமா ? நிச்சயமா நான் சொல்ல மாட்டேன். 1990 ம் ஆண்டு என்று நினைக்கிறேன். நான் எழுதிய முதல் சிறுகதை மாலைமுரசு பத்திரிக்கையில் வெளியாகி இருந்தது. அதற்கு பரிசு என்று சொல்லி அறுபது ரூபாய் அனுப்பி இருந்தார்கள். இதை போறவங்க வர்றவங்க கிட்டே எல்லாம் " எனக்கு மாலைமுரசு பத்திரிக்கை 60 ரூபாய் பரிசு கொடுத்திருக்கிறது" என்று சொல்லி  சொல்லி ஆனந்தப்பட்டேன். (அதன் பிறகு விகடன், குங்குமம் பத்திரிக்கை யிலிருந்தும் சிறந்த சிறுகதைக்கான பரிசு வாங்கினேன்). 60 ரூபாயை கையில் வைத்துக் கொண்டு நான் அடித்த லூட்டி சொல்லி மாளாது . நான் துள்ளிக் குதிப்பதைக் கண்ட எனது தோழிகள்  "அடிப் பாவி, மாசம் ஆறாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கறே. ஒரு 60 ரூபாயை வைத்துக் கொண்டு இந்தக் குதி குதிக்கிறே " என்றார்கள். ( 25 வருடங்களுக்கு முன்பு 6000 ரூபாய் என்பது பெரிய தொகைதான்.)  அதற்கு நான் " அந்த ஆறாயிரம் என் வேலைக்கான கூலி . இது என்னோட முயற்சிக்குக் கிடைச்ச பரிசு " என்றேன். கதை கட்டுரை கோலம் வரைதல் இப்படி எழுத்து மூலமாக எனக்குக் கிடைக்கும் பணத்தை என் சொந்த செலவுக்கு பயன் படுத்த மாட்டேன். பணத் தேவையிலுள்ள யாராவது   ஒருவருக்குக் கொடுத்து விடுவேன். அந்த சமயங்களில் நான் வாங்கின கடனுக்கு வட்டி கட்டிக் கொண்டிருப்பேன். என் சூழ்நிலை தெரிந்த தோழிகள் இதற்காக என்னைக் கண்டிப்பார்கள். ஆனால் நான் கேட்க மாட்டேன்.  
பரிசு கிடைத்திருப்பதாக மெயில் வரும் போதெல்லாம் அது அப்பட்ட மான  பொய் என்பது எனக்குத் தெரிந்தாலும், அப்படி ஒன்று நிஜமாக நடந்தால் என்னென்ன செய்யலாம் என்று கற்பனை செய்து பார்ப்பேன். நான் 1000 கோடிக்கெல்லாம் ஆசைப் பட்டது கிடையாது . ஏனென்றால் அதற்க்கு எத்தனை சைபர் என்று எனக்குத் தெரியாதே. என்னோட டார்கெட் வெறும் 10 கோடி மட்டுமே. அது மட்டும் கிடைத்தால் என்னென்ன செய்வேன்  என்பதிலுள்ள முதல் மூன்று விஷயங்கள் :
1. உடம்பில் தெம்பு இருக்கும்போதே நயாகரா நீர் வீழ்ச்சியைப் பார்த்து விட்டு வந்து விட வேண்டும். ( ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒவ்வொரு கனவு உண்டு : தினந்தோறும் உணவு - அது பகலில் தோன்றும் கனவு என்ற நிலையில் இருப்பவர்களுக்கும் வயிறுக்கு அடுத்தபடி ஒரு விஷயம் இருக்கத் தானே செய்யும். அரசியல்வாதிகளுக்கு " நாற்காலி" க் கனவு. சினிமா நட்சத்திரங்களுக்கு " ஆஸ்கார் அவார்ட் " கனவு. எழுத்தாளனுக்கு  " ஞானபீட விருது ". இது போல எனக்கு நயாகராவைப் பார்க்க வேண்டும் என்ற கனவு இருந்தது. போவோம் என்ற நம்பிக்கை இருந்தது. இப்போது அந்த நம்பிக்கையே ஒரு கனவு மாதிரி ஆகிவிட்டது. நான் பாஸ் போர்ட்டுக்கு அப்ளை  பண்ணும்போது என்னுடைய தோழி " நீ என்ன MNC ல் வொர்க் பண்றியா ?" என்று கேட்டு கிண்டல் பண்ணுவாள். அவளிடம் " by luck , நயாகரா பார்க்கிற chance கிடைத்தால், பாஸ் போர்ட் இல்லை என்கிற ஒரே ஒரு காரணத்துக்காக அது தட்டிப் போய்விடக் கூடாதே. அதுக்குதான் இந்த முன்னேற்பாடு " என்பேன்.
2. நான் வணங்கும் தெய்வம் விஷ்ணு . அதனால் உடம்பில் தெம்பு இருக்கும் போதே பெருமாளின் 108 திவ்ய தேசங்களைப் பார்த்து விட வேண்டும்.
3. இரண்டு குழந்தைகள் இருந்தாலே அதை வளர்த்து ஆளாக்குவதை ஒரு பாரமாக இந்த generation நினைக்கிறது. எந்தவொரு சப்போர்ட்டும் இல்லாமல் 5 பெண் குழந்தைகளை வளர்த்து ஆளாக்கி இருக்கிறார் நம் அப்பா. இந்த கால கட்டத்தில் 5 பெண் குழந்தைகள் உள்ள குடும்பம் எங்கே இருக்கிறது என்று தேடிக் கண்டு பிடிக்க வேண்டும். அதில் வருமான த்துக்கு அடிப்படை வசதி இல்லாத ஒரு குடும்பத்தை தேர்ந்தெடுத்து அவர்கள் வீட்டுக்குப்  போய், " இந்த 5 குழந்தைகளையும் வளர்த்து நான் ஆளாக்குகிறேன். அவங்க என்ன படிக்க விரும்புறாங்களோ, அதை என் செலவில் படிக்க வைப்பேன். அவர்கள் படித்து வேலைக்குப் போகும் வரை  அவர்களுக்கு ஆகும் செலவை நான் கொடுப்பேன் " என்று சொல்லி அந்தக் குடும்பத்துக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பேன்.
உடன் பிறப்புகளுக்கு உறவுகளுக்கு உதவுவது எல்லாம் வேறு விஷயம். எனக்கு  நகையின் மீதோ, பட்டாடை மீதோ, விதம் விதமான உணவுகள் மீதோ என்றுமே ஆசை இருந்ததில்லை. தோழிகள், அவர்கள்  இல்லத் திருமணத்தின் போது எனக்கும் புடவை எடுத்துக் கொடுப்பார்கள். நாலைந்து புடவைகளைக் காட்டி ஏதாவது ஒன்றை செலெக்ட் பண்ணிக்கோ என்பார்கள். இது எதுவும் வேண்டாம். சிம்பிளாக ஒரு புடவை தந்தால் போதும் என்பேன். நீங்கள் என்னதான் வெரைட்டியாக உணவு பரிமாறினாலும் என்னோட சாய்ஸ் ஒரே ஒரு தோசை ஒரு காப்பி. " பெரியம்மா உங்களுக்கு இதை விட்டால் வேறு எதுவும் தெரியாதா. மெனு கார்டைப் பாருங்க. ஆர்டர் பண்ணுங்க " என்பான் தங்கையின் பையன். அவனைப் பார்க்க மும்பை போயிருந்த போது, சாப்பிட ஹோட்டல் வாசலை மிதிக்கும்போதே " என்ன பெரிம்மா, ஒரு தோசை ஒரு காப்பி தானே " என்பான். என்னுடைய நட்பு வட்டங்கள் " எந்த ஆசையும் இல்லாமே உங்களால் எப்படி இருக்க முடிகிறது. இப்பத்தான் இப்படியா இல்லாட்டா  சிறு வயதிலும் இப்படித்தான் இருந்தீங்களா " என்று கேட்கும்போது " சிறு வயதிலேயே எனக்கு நகை உடை உணவின் மீது ஆசையோ ஆர்வமோ கிடையாது. ஊர் சுற்றிப் பார்க்க ஆசைப்படுவேன். டைப்பிங், டைலரிங், சைக்கிளிங், ஷார்ட் ஹான்ட், பாட்டு இதையெல்லாம் படிக்க ஆசைப்பட்டேன். கற்றுக் கொள்ளும் சந்தர்ப்பமும் அமைந்தது. வேலைக்குப் போக ஆசைப் பட்டேன் . இதெல்லாமே நடந்தது . என்னால் முடியாமல் போன ரெண்டு விஷயம் வீணை வாசிக்க கத்துக்கிறது, கார் ஓட்ட கத்துக்கிறது" என்பேன். இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா என்று இந்தத் தலைமுறை கேள்வி கேட்கலாம். ஆனால் எங்கள் அப்பா எங்களைப் படிக்க அனுப்பியது வேலைக்கு அனுப்பியது -  இந்த இரண்டுமே  நடந்தது, பெண் பிள்ளைகள் வீட்டை விட்டு படிப்பதற்காகக் கூட வெளியில் போகக் கூடாது என்ற பிடிவாத தனமிருந்த கால கட்டத்தில் !
எனக்கும் மூன்றாம் நம்பர் எண்ணுக்கும் ஏதோ ஒரு வகையில் பிரிக்க முடியாத தொடர்பு இருக்கிறது. அதில் நல்லதும் நடக்கும் ; கெட்டதும் நடக்கும். எனக்குள்ளிருக்கும் ஆசைகள் வரிசையில் மூன்றாவது இடத்தில் இருப்பது  5 பெண் குழந்தைகள்  கொண்ட குடும்பத்துக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துப் பார்க்க வேண்டும் என்பது ! அதனால்தான் டீவீ நியூஸ்சில் ஓடிய அந்த ஒரு வரி செய்தி என்னை சந்தோசத்தில் ஆழ்த்தியது. பரிசு பெற்றவருக்கு உள்ள 5 குழந்தைகளில் ஆண் எத்தனை பெண் எத்தனை என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனாலும் இந்த கால கட்டத்தில் 5 குழந்தைகள் கொண்ட குடும்பம் அது என்ற நினைவு மன நிறைவைத் தருகிறது.
ஒரு வேளை என்னுடைய எண்ண ஓட்டங்கள்  இதைப் படிக்கிற உங்களுக்கு பைத்தியக் காரத் தனமாகத் தெரியலாம். ஆனால் நான் படித்த செய்தி எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
உங்களை ஒன்று கேட்கிறேன் : இந்த மாதிரி செய்திகள் உங்களுக்கு மகிழ்வைத் தருகிறதா அல்லது அலுப்பைத் தருகிறதா. அதை எனக்குத் தெரிவித்தால்  (arunasshanmugam@gmail.com ) இது போன்ற செய்திகளை ( எனது சந்தேகங்கள் கோபங்கள் வருத்தங்களை)  உங்களுடன் பகிர்ந்து கொள்வது பற்றி முடிவு செய்வேன்.
இதைப் படிக்கிற உங்களுக்கு இது தேவையில்லாத தம்பட்டமாகக் கூட தோன்றலாம். சில விஷயங்களை நான் வெளிப்படையாக சொல்ல ஒரு காரணம் உண்டு. நான் வேலைக்கு சேர்ந்த புதிதில் என்னுடன் வேலை பார்த்த ஒருவர், சீனியர், " நான் சம்பளம் வாங்கினதும் மாதம் 100 ரூபாயை தர்ம காரியத்துக்காக ஒதுக்கி விடுவேன். என் கண்ணெதிரில் கஷ்டப் படுகிற யாரோ ஒருவருக்கு அதைக் கொடுத்து விடுவேன். அவர் யார் எவரென்று பார்க்க மாட்டேன் " என்றார்.
உடனே நான் " வலது கை கொடுப்பது இடது கைக்குக் கூடத் தெரியக் கூடாதுன்னு சொல்வாங்க. அதாவது ஒருத்தருக்கு ஒன்றைக் கொடுப்பது பற்றி தம்பட்டம் அடிக்கக் கூடாதுங்கிறதுக்காக. நீங்க கொடுக்கிறது நல்ல விஷயம். அதை ஏன் நீங்க  எனக்கு சொல்லணும்? " என்று கேட்டேன். 
"நாம பண்ணின பூர்வ ஜென்ம புண்ணியம் இன்னிக்கு நாம கவெர்ன்மெண்ட் செர்விசில் இருக்கிறோம். நாம இருந்தாலும் பணம். நாம செத்தாலும் நம்ம குடும்பத்துக்கு பணம் உண்டு. அடுத்த வேளை சாப்பாட்டுக்கு என்ன செய்றதுன்னு தெரியாமே எத்தனை பேர் இருக்கிறாங்க. எல்லாரையும் கரை சேர்க்க நம்மாலே முடியாது. யாராவது ஒருத்தருக்காவது ஒரு வாய் சாப்பாட்டுக்கு கொடுக்க முடியுமே. நீங்களும் அப்படி செய்யுங்கனு சொல்ல எனக்கு எந்த அதிகாரமும் கிடையாது. நான் செய்றேன்னு உங்ககிட்டே நான் சொன்னா, நாமளும் அந்த மாதிரி செஞ்சு பார்த்தா என்ன என்கிற நினைப்பு உங்களுக்கு வரும்தானே. அதனால்தான் சொன்னேன் " என்றார். அந்த நாளிலிருந்து அதாவது 1981 லிருந்து என்னால் முடிந்த தொகையை யாராவது ஒருவருக்குக் கொடுக்கும் பழக்கத்தை ஆரம்பித்தேன். 100 ரூபாயில் ஆரம்பித்த அந்தப் பழக்கம் இப்போது 1000 ரூபாயில் வந்துள்ளது. வாங்குகிறவர்களுக்கு அதைக் கொடுப்பது யார் என்று தெரியக் கூடாது என்பதற்காக என் தம்பி மூலமாக கொடுத்து அனுப்புவேன். " அக்கா, வேலை பார்க்கும்போது மாசம் 1000 ரூபா குடுத்தீங்க சரி. இப்போ ரிடயர் ஆகி, வருமானத்துக்கு வழியில்லாமல் இருக்கும்போது இதை நிறுத்தி விடலாமே " என்பான். ரிடைர் ஆனாலும் மூணு வேளை சாப்பிடறோம். அதை நிறுத்தாத போது இதை மட்டும் ஏன் நிறுத்தணும் என்பேன். ஜூலை 13 ந் தேதி " பூமி - நக்ஷத்ரா " அமைப்பு நடத்தும் விழாவுக்கு நடுவராகப் போயிருந்தேன். பல நூறு இளைஞர்கள் சேர்ந்து  ஏழை மற்றும் அநாதைக் குழந்தைகளுக்கு உதவும் தன்னார்வ தொண்டு நிறுவனம்  இந்த " பூமி ". வருடத்தில் ஒரு நாள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏழை / பள்ளிக் குழந்தைகளுக்கு கலை நிகழ்ச்சிகள் நடத்தி பரிசு கொடுத்து இரண்டு வேளை வயிறு நிறைய உணவு, மாலையில் காப்பி பிஸ்கட் கொடுத்து உபசரிக்கும் அமைப்பு அது. அவர்களுக்கு இலவசக் கல்வி . கம்ப்யூட்டர் பயிற்சி எல்லாம் கொடுக்கிறார்கள் ( உதவும் எண்ணமுள்ளவர்கள் அவர்களை அணுகலாம்) அன்றைய தினம் எனக்கு ஒத்தாசையாக  ஒரு இளைஞர் இருந்தார். அவருடன் பேசிக் கொண்டிருக்கும் போது மிக சமீபத்தில் தான் அவர் வேலையில் சேர்ந்த விஷயத்தை சொன்னார். அவரிடம் நான், " நான் வேலையில் சேர்ந்த நாளிலிருந்து என்னோட சம்பளத்திலிருந்து என்னால் முடிந்த தொகையை யாருக்காவது கொடுப்பேன். ஒரு கட்டத்தில் எனக்கு 4 லட்சம் ரூபாய் கடன் இருந்தது. வட்டி கட்டிக் கொண்டிருந்தேன். ஆனால் மாதம் 1000 ரூபாய் கொடுப்பதை நிறுத்தவில்லை. இப்போது ரிடைர் ஆகி விட்டேன். 14000 ரூபாய் பென்சன் வரும். 40,000 ரூபாய் சம்பளம் வாங்கும் போதும் 1000 ரூபாய் டொனேட் பண்ணினேன் . பென்சன் 14,000 ரூபாய். வீட்டில் என்ன பணத் தட்டுப் பாடு இருந்தாலும் அந்த ஆயிரத்தை மட்டும் நிறுத்தவில்லை" என்றேன். அந்தப் பையன் சிரித்துக் கொண்டே " கொடுக்கிறதை வெளியில் சொல்லக்கூடாதுன்னு சொல்வாங்க " என்றார்.
" மனித இயல்பு மனித சுபாவம் என்றெல்லாம் சொல்கிறார்களே. அது என்னனு தெரியுமா தம்பி " என்று கேட்டேன். 
"தெரியாது " என்ற பதில் வந்தது 
"எந்தவொரு விஷயத்தைப் பத்தி கேட்டாலும் சரி , ஒரு நிகழ்வைப் பார்த்தாலும் சரி, அது நல்லதோ கெட்டதோ, அதை நாமளும் செஞ்சா என்னனு மனுஷ மூளை நினைக்கும் .  அது மனித இயல்பு. இப்போ நாம பேசறதை ஏதோ கான்வேர்செஷன் மாதிரி நீ எடுத்துக் கிட்டாலும் , நீ தனியாக இருக்கும்போதோ தூங்கப் போவதற்கு முன்போ  இதைப் பத்தி கண்டிப்பா நினைச்சுப் பார்ப்பே. அந்த மேடம் மாதிரி நாமளும் கொடுத்தால் என்னனு நீ நினைச்சுப் பார்ப்பே. இன்னிக்கு இல்லாட்டாலும் என்னிக்காவது ஒரு நாள்  கண்டிப்பா கொடுக்க ஆரம்பிப்பே. உண்மையா  சொல்லணும்னா அப்படி ஒரு நாள் வரவே கூடாது. யாரோட தயவும் இல்லாமல் எல்லாரும் வாழும் நாள் வந்தால்தான் அது நல்ல நாள். அந்த நாடு சுபிக்க்ஷ நாடு. ஆனால் அதெல்லாம் நடக்க சாத்தியமே இல்லையே " என்றேன்.   
இதை நீங்க எப்படி எடுத்துக் கொண்டாலும் அதைப் பத்தி எனக்குக் கவலை இல்லை. எனது எண்ணங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். அவ்வளவுதான் !