Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Tuesday, November 29, 2011

நம்மவங்க சொன்னதுதாங்க ! இப்ப நான் சொல்றேன் உங்களுக்கு ! - 02




அதிர்ஷ்டம் கெட்ட காலத்தில் கைத்தடியும் பாம்பாகும்.





அடிமை போல் உழைக்கணும். அரசன் போல் 
   உட்கார்ந்து     சாப்பிடணும்





அதிகம் யோசிப்பவன் சொற்பமாகத்தான்
   செய்து    முடிப்பான்.




அறுபதடி கம்பத்தில் ஏறி வித்தை காட்டினாலும்,
   தரைக்கு   வந்துதான்  தட்டு ஏந்தியாகணும்.





அடுப்பு புகையுமிடத்தில் பிச்சைக்காரனுக்கும்
    ஒரு பங்கு   இருக்கத்தான் செய்கிறது





அரண்மனை வாசற்படி அதிகம் வழுக்கும்.







அழகாபுரி கொள்ளையானாலும் அதிர்ஷ்டம்
    இல்லாதவனுக்கு  ஒன்றும் கிடைக்காது





அதிர்ஷ்டம் இல்லாதவனுக்கு  ஆழாக்கு பால்
    கிடைத்தாலும்  அதையும் பூனை குடிக்குமாம்






அடுக்குகிற அருமை உடைக்கிற நாய்க்கு தெரியாது.





அண்டத்தை சுமக்கிறவனுக்கு சுண்டைக்காய் ஒரு  
    பாரமா?

Saturday, November 26, 2011

Stories told by Grand -Ma ( Story number - 00)

                               
  யோசிக்காமல் எவரையும்  ஏளனம் நீ செய்வதேன் ?

( பாட்டி சொன்ன கதைகள் வரிசையில் இந்த கதைதான் முதலில் பிரசுரம் ஆகியிருக்க வேண்டும். sorryவரிசை மாறி பிரசுரம் ஆகிவிட்டது )

"பாட்டி  ரொம்ப போரடிக்குது பாட்டி ? என்றனர் பிரபுவும் மனோவும்.
"என்னடா இது! உங்க அப்பா உங்களைக்கொண்டுவந்து விட்டுட்டு போய் இன்னும் அரை மணி நேரம் கூட ஆகவில்லை. அதற்குள் போரடிக்கிறதா?"
என்று ஆச்சரியமாக கேட்டாள் பாட்டி.
"இங்கே கம்ப்யூட்டர் இல்லே டிவி இல்லே.அப்புறம் என்னத்துக்காக எங்க ரெண்டு பேரையும் இங்கே அனுப்ப சொல்லி லெட்டர் போட்டே ?"
"உங்க ரெண்டு பேரையும் பார்க்கணும் போல இருந்துச்சு. நீங்க ரெண்டுபேரும் இதுவரை இந்த ஊருக்கு வந்ததில்லையே. ஒரு பத்து நாளாவது கம்ப்யூட்டர் 
டி வி  எல்லாத்துக்கும் டாட்டா சொல்லிட்டு, நிம்மதியா தூங்கி எழுந்து, நல்லா சாப்பிட்டு,  மனசு மூளைக்கு ஓய்வு குடுத்து, ரிலாக்ஸ்டா இருக்கட்டும்னு உங்க
டாடி நீங்க இங்கே இருக்க சம்மதிச்சார். உங்க அம்மாக்கு நீங்க ரெண்டு பேரும் இங்கே வர்றதில் துளிக்கூட விருப்பமில்லே, ஏன்னா நீங்க ரெண்டு பேரும் எப்பவும் சண்டை போட்டுகிட்டே இருப்பீங்களாமே ! அப்படியா?" என்று கேட்டாள் பாட்டி.
"போ பாட்டி போரடிக்குது பாட்டி "
"உங்க கூட பேசி விளையாட இங்கே நிறைய குழந்தைங்க இருக்காங்க. இப்போ கூப்பிடறேன் "
"போ பாட்டி. கிராமத்து பசங்ககிட்டே நாங்க என்ன பேசி விளையாட முடியும்"
"அப்படியா ? இப்ப பாரு " என்று சொல்லி வாசலுக்கு சென்ற பாட்டி "ஏ குழந்தைகளா, எல்லாரும் இங்கே வாருங்க. வந்து யார் வந்திருக்கிறாங்கனு பாருங்க " என்று குரல் கொடுத்ததுமே  ஒரு சிறுவர் பட்டாளமே பாட்டி வீட்டுக்குள் படை எடுத்து வந்தது.
"யார் வந்திருக்கிறாங்க பாட்டி" என்று எல்லோரும் ஆவலாக கேட்க 
" என்னோட பேரனும் பேத்தியும் சென்னையிலிருந்து  வந்திருக்காங்க ஸ்கூல் லீவில். ஒரு பத்து நாள் இங்கேதான் இருப்பாங்க." என்றாள் பாட்டி.
"நான் பிரபு. செவன்த் படிக்கிறேன் ."
"நான் மனோ. பிப்த் படிக்கிறேன் " - என்று இருவரும் தங்களை தாங்களே அறிமுகபடுத்திகொள்ள, மற்ற குழந்தைகளும் தங்கள் பெயரை வரிசையாக சொல்ல ஆரம்பித்தார்கள். 
அவர்கள் சொல்லி முடித்ததுமே " ஒ. சிவா, சத்யா, ராதா, அப்பு, ஜெயந்தி, புவி, ரேகா, விச்சு, நிவேதிதா, லாவண்யா, கல்யாணி," என்று அவர்கள் பெயரை வரிசையாக இருவரும் சொல்ல, மற்ற குழந்தைகள் முகத்தில் ஒரே ஆனந்தம். 
"சத்யா நீ வழக்கமா ஒரு பாட்டு வரி சொல்வியே. அதை இந்த தம்பிக்கு சொல்லு" என்று பாட்டி சொல்ல, சத்யா  சிறிதும் தயங்காமல் " இட்டிது பட்டானால்  விச்செது வாட்டென்ன ?" என்றான். 
"என்னப்பா பட்டணத்து குழந்தைகளா, அவன் என்ன சொன்னான்கிறது புரியுதா?" என்று கேட்டாள் பாட்டி.
வெகு நேரம் யோசித்து பார்த்த பின்பு "தெரியலே பாட்டி" என்றனர் இருவரும்.
"நீயே சொல்லு சத்யா" என்று பாட்டி சொன்னதும் விளக்க ஆரம்பித்தான் சத்யா.
"it - இது , but - ஆனால்,  which - எது, what - என்ன, இப்போ எல்லாத்தையும் சேர்த்து சொல்லு - இட்டிது பட்டானால் விச்செது வாட்டென்ன " என்று சத்யா முடிக்க
"ஆஹா, ஓஹோ, பேஷ் பேஷ் " என்றான் பிரபு.
"இப்போ நான் ஒரு புதிர் கதைசொல்றேன்" என்று பாட்டி சொன்னதும் எல்லா குழந்தைகளும் பாட்டியை சுற்றி உட்கார்ந்து கொண்டார்கள் .
"கதை முடிஞ்சதும் கேள்வி கேட்பேன். ஆனா குழந்தைகளா, அந்த கேள்விக்கான பதிலை பிரபு மனோ மட்டும்தான் சொல்லணும். நீங்க யாரும் சொல்லித் தரக்கூடாது. நான் உங்க கிட்டே கேட்டால் மட்டும்தான் பதில் சொல்லவேண்டும் " என்று கண்டிஷன் போட்ட பாட்டி கதை சொல்ல ஆரம்பித்தாள். 
"ஒரு ஊரில் ஒரு தாத்தா இருந்தார். எல்லா குழந்தைகளுக்கும் எப்பவும் கதை சொல்வார். புதிர் போடுவார். குழந்தைகளுக்கு அவரை ரொம்பவும் பிடிக்கும். எப்பவும் அவரை சுற்றி ஒரு கூட்டம் இருக்கும். அன்றைக்கு தீபாவளி. பகல் முழுக்க பட்டாசு வெடித்து ஓய்ந்த குழந்தைகள், இரவானதும் ,'தாத்தா, கதை'
என்றதும் ' நிலா வெளிச்சம் அருமையா இருக்கு. வாங்க,மொட்டை மாடியில் உட்கார்ந்து பேசலாம்' என்று சொல்லி எல்லாரையும் மொட்டை மாடிக்கு அழைத்து சென்ற தாத்தா, ஒரு பையனிடம், 'நீ இன்னும் தீபாவளி டிரெஸ்ஸை மாத்தலையாடா'னு கேட்க, அவன், "தீபாவளி டிரெஸ்ஸை அவுத்து வச்சிட்டேன் . இது போன மாதம் கார்த்திகை தீபத்துக்கு வாங்கின டிரஸ்' என்றான்.  இன்னொரு பையனிடம் "டேய் சுப்பா, உங்க அப்பனை எங்கேடா? ஆளையே பார்க்க முடியலே'னு தாத்தா கேட்க,  "எங்க வீட்டு காளை மாட்டிலே பால் கறந்திட்டு இருக்கிறப்போ அவரை வண்டு கடிச்சிட்டுது .  விஷம் இறக்க டவுனுக்கு போயிருக்காக. ஆடி பதினெட்டுக்கு இந்த வருஷம் ஆறு மாச பயிர் போட்டாக. நல்ல விளைச்சல். அதுதான் அறுப்பெடுத்திட்டு போயிருக்காக. அதை வித்து காசாக்கிட்டுதான் வருவாக. அதுதான் தீபாவளிக்கு கூட வீட்டில் இல்லை " என்று  சுப்பன் சொன்னான். 
(பாட்டி கதை சொல்லும்போது மற்ற குழந்தைகள் ஜாடை மாடையாக சிரிப்பதை பிரபுவும் மனோவும் கவனித்தார்கள்.கோபம் வந்தது, இருந்தாலும் முதல் நாளே வம்பு வேண்டாம் என்று அமைதியாக இருந்தார்கள். இதை பாட்டியும்  கவனிக்கத்தான் செய்தாள்.)
தாத்தா, இன்னிக்கு கதை கிடையாது. புதிர்தான் போடுவேன். சரியான பதிலை சொல்றவங்களுக்கு அம்பது ரூபா பணம் உண்டுன்னு சொல்லி புதிர் போட ஆரம்பித்தார். "ஒரு ஊரில் அண்ட புளுகன், அபார புளுகன், ஆகாச புளுகன்னு மூணு பேர் இருந்தாங்க"
("புளுகன்னா யார் பாட்டி" என்று மனோ கேட்க "பொய் சொல்கிறவங்க" என்று விளக்கினாள் பாட்டி. )
அண்ட புளுகன் சொன்னான், 'நான் கடல் மண்ணை கயிறா திரிச்சேன்னு. அபார புளுகன் சொன்னான், 'அதில் நான் துணி காய போட்டேன்'னு. ஆகாச புளுகன் சொன்னான் 'அதை நான் பார்த்தேன்'னு. இந்த மூணு பேரில் யார் சொன்னது  
ரொம்பவும் பெரிய பொய்னு தாத்தா கேட்டார் என்று சொன்ன பாட்டி
"சரி பிரபு. தாத்தா மத்த குழந்தைக கிட்டே கேட்டது இருக்கட்டும். உன்கிட்டே நான் கேட்கிறேன். இந்த மூணு பேரில் யார் சொன்ன பொய் அப்பட்டமான   பொய் " என்று பாட்டி கேட்க "மணலை கயிறா திரிச்சேன்னு சொன்னது அப்பட்டமான பொய்"னு  பிரபு சொல்ல, "இல்லே ரெண்டாவது ஆள் சொன்னது அப்பட்டமான பொய்'ன்னு மனோ சொல்ல, "ரெண்டுமே இல்லே. செய்யவே முடியாத ஒரு காரியத்தை செய்து முடிச்சதா ரெண்டு பேர் சொல்ல, அதை தன் கண்ணாலே பார்த்ததா மூணாவது ஆள் சொன்னான் பாரு அதுதான் அப்பட்டமான பொய் என்று " சொல்லி முடித்த பாட்டி, "நான் தாத்தா பத்தி சொல்ல ஆரம்பிக்கும் போது, தாத்தா ஒரு பையனிடம் அவன் டிரஸ் பத்தி விசாரிச்சார். இன்னொரு பையனிடம் அவனோட அப்பா பத்தி விசாரிச்சார். அவங்களும் பதில் சொன்னாங்க. அதில் ஏதாவது தப்பு   இருந்ததா?" என்று கேட்க, "எந்த தப்பும் இல்லை" என்றார்கள் இருவரும். 
"அப்படியா ? தாத்தா பத்தி நான் சொன்ன கதையில் எத்தனை தப்புன்னு இவங்க சொல்வாங்க பாரு. நான் கதை சொல்லும்போதே அது தப்புன்னு இவங்க கண்டு பிடிச்சிட்டாங்க. அதனாலேதான் சிரிச்சாங்க. அது தெரியாமே நீங்க கோப பட்டது உண்மைதானே ?" என்று பாட்டி சொல்ல, "என்ன தப்புன்னு சொல்ல சொல்லு பாட்டி" என்றார்கள் இருவரும்.
"சிவா நீ சொல்லு " என்று பாட்டி சொல்ல, " தீபாவளி அமாவாசை அன்னிக்குத்தான் வரும். அன்னிக்கு நிலா வராது. அதனாலே மொட்டை மாடியில் நிலா வெளிச்சத்தில் உட்கார்ந்ததா சொன்னது ஒரு தப்பு. தீபாவளி முடிந்த மறு மாதம்தான் கார்த்திகை தீபம் வரும். அப்படியிருக்க 'போன மாசம் கார்த்திகை தீபத்துக்கு வாங்கின டிரஸ் இதுன்னு அந்த பையன் சொன்னதா சொன்னது அடுத்த தப்பு. காளை மாடுங்கிறது ஆண் மாடு. பசு மாடுதான் பால் தரும். காளை மாடு பால் தராது. அதில் சுப்பனோட அப்பா பால் கரந்ததா சொன்னது தப்பு. ஆடியிலே போட்ட ஆறு மாச பயிரை பொங்கலுக்கு முன்னாடிதான் அறுப்பாங்க. தீபாவளி சமயத்தில் அறுக்க முடியாது" என்று வரிசையாக அடுக்கிகொண்டே போக, "அடேயப்பா. இதில் இவ்வளவு விஷயம் இருக்கா? இதெல்லாம் எங்களுக்கு தெரியாது!" என்று வெளிப்படையாக ஒத்துக்கொண்டான் பிரபு.
"நாங்க கிளம்பறோம் பாட்டி" என்று எல்லோரும் கிளம்பிப்போன பின்பு,
"கிராமத்து குழந்தைகளுக்கு எதுவும் தெரியாதுன்னு நீ நினைசிட்டிருந்தே. உன் எண்ணம் தப்புன்னு புரிய வைக்கிறதுக்காகதான் நான் ஒரு கதை சொன்னேன்.
 அவங்கவங்க பிறந்து வளர்ந்து வாழ்கிற சூழ்நிலைமைக்கு தகுந்தாப்லே ஒவ்வொரு விசயத்தை தெரிஞ்சு வச்சிருப்பாங்க..அதை ஒவ்வொருத்தரும் மத்தவங்க கிட்டே பகிர்ந்துகிட்டு அவங்க வளர்ச்சிக்கு பயன் படுத்திக்கிடணும் , தன்னை தவிர மற்றவங்க எல்லாரும் எதுவும் தெரியாதவங்க என்ற நினைப்பு என்றைக்குமே வரக்கூடாது. இங்கேயும் ஸ்கூல் இருக்கு. குழந்தைங்க ஸ்கூலில் போய் படிக்கிறாங்க. அதனாலே உன் எண்ணத்தை மாத்திகிட்டு எப்பவும் அவங்களோடு சேர்ந்து விளையாடு. உனக்கு போரடிக்காது" என்று பாட்டி சொல்ல, "ஐயோ, தெரியாமே சொல்லிட்டேன். நான் சொன்னதையே சொல்லி சொல்லி போரடிக்காதே பாட்டி " என்று பிரபு சொல்ல, "டபுள் ஓகே " என்றாள் பாட்டி.

Thursday, November 24, 2011

நம்மவங்க சொன்னதுதாங்க ! இப்ப நான் சொல்றேன் உங்களுக்கு ! - 01

* அற்பப்புத்திகாரன் கைகளில் அதிகாரம்
   வந்தால் அண்டை வீட்டுக்கார்களுக்கு
   இரைச்சல்தான் மிச்சம்.

அரைக்காசுக்கு தோணியும் வேண்டும் ; 
   அது ஆற்றை  கிழிச்சிகிட்டு பாயவும் 
   வேண்டும் !


* அன்ன நடை நடக்கபோய் காகம் தன்
   சொந்த நடையை    இழந்ததாம்.




அணில் தள்ளி தென்னை சாயுமா ?





அன்பற்ற மாமிக்கு கும்பிடும் ஒரு குற்றமே !




அமாவாசை இருட்டில் பெருச்சாளி 
    போனதெல்லாம் வழிதான் !




அறுக்கதெரியாதவன் இடுப்பில் 
    ஐம்பத்தெட்டு அரிவாள் !



அறுவடை காலத்தில் எலிக்கும் 
அஞ்சு  பெஞ்சாதி.



அறப்படித்தவன் அங்காடி போனால் 
    விற்கவும் மாட்டான்;  வாங்கவும்
   மாட்டான்.

அங்காடிகாரியை சங்கீதம் பாட 
    சொன்னால் வெங்காயம்,  கறிவேப்பிலை
    என்பாள்.

Tuesday, November 15, 2011

Stories told by GRAND-MA ( Story number - 3 )

                             மரணத்தின் பிறப்பு !

 (நான் எழுதிய இச்சிறுகதை தினமணி சுடர் 28 .11 .1992 ல் வெளியாகியுள்ளது )


பள்ளி விடுமுறையில் பாட்டியின் கிராமத்திற்கு வந்திருந்த பிரபு மனோவிற்கு, கிராமத்தின் அன்றாட நிகழ்வுகளான ஏற்றம் இறைப்பது, நாற்று நடுவது எல்லாமே புதுமையாக இருந்தன. அதுமட்டுமல்ல அங்கிருந்த வீட்டு சுவரில் - முன் வராந்தாவில், சிறிய பொந்து போன்ற ஒரு பள்ளம் இருப்பதைக் கண்டதும் "அது என்ன பாட்டி? என்றான் பிரபு.
" அதுதான்டா  குழந்தே மாடப்பிறை " என்ற  பாட்டி" இப்படி  மாடப்பிறை வைத்து அந்தக்காலத்தில் வீடு கட்டினதுக்கு ஒரு காரணம் உண்டு " என்றாள்.
"என்ன பாட்டி அது?" என்றனர் இருவரும் ஆர்வமாக!
பாட்டி கதை சொல்ல ஆரம்பித்தாள்.  
"இந்தக்கதையை என்னோட பாட்டி எனக்கு சொன்னாள், நான் உங்களைப் போல சின்னவளா இருக்கிறப்போ.  உலகம் தொடங்கி கொஞ்ச காலத்திற்கு மரணம் என்பதே இல்லாமலிருந்தாம். அதனால் பூமியில் பிறந்தவர்கள்  நூற்றைம்பது, இருநூறு வருசங்களில் கூனிக்குறுகி , சிறுத்து , சிறிய பொம்மை அளவில்  ஆகிவிடுவார்களாம். அப்படி கூனிக்குறுகி , சிறுத்து போனவர்கள் மற்றவர்கள் காலில் மிதிபட்டு விடக்கூடாது என்பதற்காக  மாடப்பிறைகளில் பத்திரமாக வைத்து விடுவார்களாம். அவர்களுக்கு உணவு  தண்ணீர்   எதுவுமே தேவையிருக்காதாம். ஆனால் சுவாசம் மட்டும் வந்து கொண்டே இருக்குமாம். இருட்டிய பிறகு சிறு அகல் விளக்குகளை ஏற்றி அந்த மாடப்பிறைகளில் வைத்து அவர்கள் பத்திரமாக இருக்கிறார்களா என்பதை சரிபார்ப்பார்களாம். "இருக்கிறீங்களா ?" என்று கேட்டால் "இருக்கிறேன்மா இருக்கிறேன் !" என்று பதில் வருமாம். ஆனால் அதிலும் பல அசௌகரியங்கள் இருந்ததாம்."
"என்ன பாட்டி அசௌகரியம்?" என்றான் பிரபு 
"சில சமயம் அவர்களை பூனையோ எலியோ தூக்கிக்கொண்டு போய் விடுமாம்.
என்ன செய்வதென்று தெரியாமல் ஜனங்கள் முழிக்க , அவர்கள் பிரட்சனைக்கு ஒரு வழி பண்ணனும்னு கடவுள் நினைத்து , ஒரு தூதனை அழைத்து "நீ பூலோகத்துக்கு சென்று, "பூ மலர, பூ மலர, பூ மலர்ந்து பிஞ்சு வர, பிஞ்சு முற்றி காய் செழிக்க, காய்  செழித்து கனிகள் கனிய, கனிந்த கனி உதிரட்டும், உதிரட்டும், உதிரட்டும்னு பறையடித்துவிட்டு  வா " என்றார்.
"அதுக்கு என்ன பாட்டி அர்த்தம்?  '
"பூமியில் குழந்தைகள் பிறந்து வளர்ந்து வாழ்க்கையை அனுபவிசிட்டு வயதானதும் இறக்கட்டும்னு அர்த்தம்.  அந்த தூதனும் கடவுள் சொன்ன படியே பறையடிசிட்டு வந்தான், அவனோட தோற்றம் ரொம்பவும் வித்தியாசமாவும் விநோதமாவும் அங்கிருந்தவர்களுக்கு தெரிஞ்சது. அவனை எல்லாரும் வேடிக்கை பார்த்தார்கள். தெருவில் விளையாடிக்கொண்டிருந்த சில குறும்புக்கார குழந்தைகள் அவன் மேலே கல் கட்டை எல்லாத்தையும் வீசி எறிஞ்சாங்க.வலி தாங்க முடியாத அவன் வாய் குளறி, "பூ உதிர, பிஞ்சு உதிர, காய் உதிர, கனி உதிர , எல்லாம் உதிரட்டும்னு பறையடிசிட்டு போயிட்டான். அதன் பிறகு மனிதர்களின் மரணத்துக்கு இந்த வயது,  இந்த வேளை என்பதே இல்லாமல் போயிட்டுது. சில குழந்தைகள் கருவிலேயே இறந்துவிட்டார்கள். இதைக்கண்டு அந்த தூதன் ரொம்பவும் வருந்தினான்.  அவன்தான் எமன். தனது தப்புக்காக வருந்திய எமன்,  கடவுள்கிட்டே போய் தன்னோட கவலையை சொன்னான். அவனை சமாதானபடுத்திய கடவுள் "நீ வருத்தப்படாதே. எந்தவொரு  துர் மரணத்துக்குமே நீ பொறுப்பாளியாக மாட்டாய். எந்தவொரு பழி பாவமும் உன்னை சேராது. நீ கவலைப்படாதே. போய் வா " என்று சொல்லி அனுப்பிவைத்தாராம். 
"அதனால்தான் இன்றுவரைக்கும் நாம், 'அவன் லாரி மோதி இறந்தான். இவன் தீப்பிடிட்சு  செத்தான்னு ஒவ்வொருத்தர் சாவுக்கும் ஒரு காரணத்தை  சொல்கிறோமே தவிர, எமன் கொண்டு போயிட்டான்னு சொல்றதில்லே." என்று கதையை முடித்தாள் பாட்டி,
"பரவாயில்லே பாட்டி. நல்லாவே  ரீல் சுத்தறே. நம்பறமாதிரி இல்லாட்டாலும் ரசிக்கிற மாதிரி இருந்திச்சு.அடுத்த ரீல் என்ன பாட்டி ?" என்று மனோ கேட்க "படவா குழந்தைகளா ! இந்நேரம் வரை வாயிலே கொசு போறதுகூட தெரியாமே தலையை ஆட்டி ஆட்டி கதை கேட்டுட்டு இப்போ கிண்டலா பண்றீங்க ? என்ன பண்றேன்னு பாருங்க உங்களை !" என்று பொய் கோபம் காட்டி கையை ஓங்க, பாட்டியின் கைகளில் சிக்காமல் மூலைக்கொருவராக ஓடி ஒளிந்தனர் இருவரும்.

Saturday, November 05, 2011

Stories told by GRAND-MA ( Story number - 2 )


               
உயிர்களிடத்து அன்பு வேண்டும் !
                                                            
"பாட்டி எங்கே இருக்கீங்க? உங்க பேரனை நாய் கடிச்சிட்டுது " என்ற கூக்குரல் கேட்டு கிணற்றடியில் துணி துவைத்துக் கொண்டிருந்த பாட்டி அரக்கப் பறக்க ஓடி வந்தாள். வீட்டு வாசலில் ஊரே கூடி நின்று கொண்டிருந்தது. "ஏன் பிராணனை வாங்கிறே? வாசலில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்திட்டுரு. துணித் துவைசிட்டு அஞ்சு நிமிசத்திலே வந்திடறேனு சொல்லிட்டுதானே போனேன். அதற்குள் இப்படி நாய்கிட்டே போய் கடி வாங்கிட்டு வந்திருக்கிறே? இப்படி ஏதாவது பண்ணுவீங்கனுதானே உங்க அம்மா உங்களை எங்கேயுமே அனுப்பறதில்லே. ஸ்கூலுக்கு லீவுதானே. பத்து நாளைக்கு கிராமத்திலே வந்து இருக்கட்டும்னு கெஞ்சி கூத்தாடி உங்களை இங்கே அழைசிட்டு வந்தேன். நாய்ட்ட கடி வாங்கிட்டு வந்திருக்கியேடா. உங்க அம்மா அப்பாக்கு நான் என்ன பதில் சொல்றது ? தங்கச்சியை பாரு எவ்வளவு சமர்த்தா இருக்கிறா. " என்று பரிதவிப்புடன் கேட்டாள் பாட்டி.
"கவலைப்படாதீங்க பாட்டி. வைத்தியரை கூட்டிட்டு வர மணி சைக்கிளை  எடுத்துட்டு போயிருக்காப்லே " என்று ஒருவர் சொல்ல "அப்ப இப்ப வந்தாப்லே"   என்று பிரபு சொல்ல " படவா ராஸ்கல். இப்பக்கூட உனக்கு குறும்பு  பேச்சு போகலியாடா? "  என்றாள் பாட்டி. திடீரென்று கூட்டத்தில் சலசலப்பு." பாட்டி வைத்தியரய்யா  வந்தாசுது  "  என்று சொல்லி அனைவரும் வைத்தியருக்கு வழி விட்டு நின்றனர். 
நாய் கடித்த இடத்தை பரிசோதித்த வைத்தியர் " பயப்பட எதுவுமே இல்லே பாட்டிம்மா. நாய் கவ்வி இருக்கே தவிர கடிக்கலே. நாயோட பல்லு எங்கேயும் படலே. இந்த குளிகையை ரெண்டு வேளை சாப்பிட்டாலே போதும்" என்று சொல்லி சென்றதும் "அப்பாடா" என்ற பெருமூச்சுடன் கூட்டமும்  கலைந்து சென்றது. எல்லாவற்றையும் ஒரு ஓரமாக நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்த மனோ " இன்னிக்கு வம்புக்கு யாருமே கிடைக்கலேன்னு  நாய்கிட்டே வம்புக்கு போனியாடா பிரபு ?" என்று கேட்டாள்.
"ஒய்! எதாவது வாலாட்டினே உன்னை நான் கடிச்சிடுவேன் " என்றான் பிரபு 
"சரிதான் போடா நாய்ட்ட கடி வாங்கிட்டு வந்து வீட்டுக்குள் வந்து வீரம் பேசுறியா?"
"ஆரம்பிசுட்டீங்களா உங்க சண்டையை? இந்தாடா ஹார்லிக்ஸ் சூடா இருக்கு. குடிசிட்டு வைத்தியர் குடுத்த மருந்தை வாயில் போட்டுக்கோ. சண்டை போடாமே சமர்த்தா இருங்கோ.  நான் போய் துணியை துவைட்சு  காயபோட்டுட்டு  வந்திடறேன் "  என்றாள் பாட்டி. வேலையை முடித்துவிட்டு வாசலுக்கு வந்த பாட்டி, கயிற்று கட்டிலில் படுத்தபடி ஏதோ யோசனையில் பிரபு இருப்பதைக்கண்டு  " என்னடா குழந்தை ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் இருக்கியே  என்ன விஷயம்?" என்றாள் 
"ப்ச்" என்று அலட்சியமாக உதட்டை சுளித்தான் பிரபு.
"என்னனு கேளு பாட்டி" என்று கண் ஜாடை காட்டினாள் மனோ.
"அது என்னனு தெரியாட்டா உனக்கு தலை வெடிசுடுமே" என்ற பாட்டி "என்னடா குழந்தை அப்படி என்னதான் யோசனைன்னு சொல்லேன். நாங்களும் தெரிஞ்சுக்கிறோம் " என்றாள். 
"பாட்டி நீ கேட்கிறதாலேதான் சொல்றேன். இந்த மனோ கழுதைக்காக சொல்லலே. பாட்டி விச்சு வீட்டு நாய் ஏன் என்னை கடிட்சுது."
"எனக்கு எப்படிடா தெரியும். நீ ஏதாவது வம்பு பண்ணி இருப்பே. அது வாலை பிடித்து இழுத்திருப்பே. அது வலி தாங்காமே கடித்சிருக்கும்  "
"இல்லே பாட்டி. அந்த நாய்தான் குரைக்குதே. பிறகு ஏன் கடிச்சுது ?"
"என்னடா சொல்லறே? "
"குரைக்கிற நாய் கடிக்காதுன்னு சொல்வாங்களே. அந்த நாய் எப்பவும் குரைட்சுகிட்டே  இருக்குதே. பிறகு ஏன் கடிச்சுது?"
இதை கேட்டு பாட்டி சிரிக்க கோபமாக பார்த்தான் பிரபு.
"கோப படாதே குழந்தே !. கடிக்காத நாய்னு ஒன்னு உண்டா என்ன? கோபம் வந்தா எல்லா நாயும் கடிக்கத்தான் செய்யும். அது நாயோட பிறவி குணம்"
"பிறகு ஏன் பாட்டி குரைக்கிற நாய் கடிக்காதுன்னு சொல்றாங்க? "
"ஓ அதுவா ? நாய் குரைக்கிறபோது அதாலே எதையும் கடிக்க முடியாது. அது எதையாவது கடிக்கும்  போது  அதாலே  குரைக்க முடியாது. இந்த பழமொழிக்கு இதுதான் அர்த்தம். இது தெரியாமே, அது குரைக்கிற நாய் ஆச்சே. கடிக்காதுன்னு நினைத்து அது வாயிலே கையை குடுத்தியா ? "என்று பாட்டி கேட்க சிரிப்பை அடக்க முடியாமல் வாய் விட்டு சிரித்தாள் மனோ. 
"பாட்டி இப்போ நான் இவளை கடிக்க போறேன். அப்புறம் இவளுக்கு உள்ளூர்  வைத்தியர் மருந்தெல்லாம் வேலை செய்யாது. i c u தான் சரிப்பட்டு வரும். சொல்லி வை " என்றான் கோபமாக.
"சரிதான் போடா.  நாய்ட்ட என்ன வம்பு பண்ணினே அதை சொல்லு முதல்லே ., இப்ப என்ன யோசனையில் இருக்கிறே அதையும் சொல்லு"
"போடி புண்ணாக்கு பாட்டி கேட்டால் மட்டும்தான் சொல்வேன்."
"ஐயோ கேளேன் பாட்டி."
"பாட்டி நான் விச்சு வீட்டு நாய்க்கு பிஸ்கட் எடுத்துட்டு போனேன். அவங்க அம்மா, " நாய்க்கு பேதி ஆகுது.  அதனாலே எதுவும் குடுக்க வேண்டாம்'னு சொன்னாங்க. அதனாலே அதுக்கு பிஸ்கட் குடுக்காமே அது முன்னாலே  பிஸ்கெட்டை காட்டி மறைத்சு  விளையாடினேன். அதுக்கு போய் அந்த நாய் கடிசிட்டுது  பாட்டி " என்றான் பரிதாபமாக!
"நீ செஞ்சது தப்புதானே. நீ பசியா இருக்கும்போது  உன்னோட கண் முன்னாலே சாப்பாட்டை காட்டிட்டு மறைசா உனக்கு எவ்வளவு கோபம் வரும்.ஒவ்வொரு மிருகமும் கோபத்தையும் சந்தோசத்தையும் ஒவ்வொரு விதமா காட்டும். ஆனால் நான் பசியாயிருக்கேன்னு சொல்ல எந்த மிருகத்துக்கும் தெரியாதே. அதனோட தேவையறிஞ்சு நாம்தானே கொடுக்கணும். நீ அதை செய்யாமே பசியா இருக்கும் நாய் முன்னாலே பிஸ்கட் பாக்கெட்டை காட்டி மறைச்சா அதுக்கு கோபம் வரத்தானே செய்யும். வாயில்லா ஜீவன் கிட்டே அன்பு காட்டறதை விட்டுட்டு வம்பு பண்ணலாமா அசடு ?" என்று கேட்டு பாட்டி சிரிக்க  " ஸாரி பாட்டி. என்னோட தப்பு எனக்கு புரியுது. இனிமே அப்படி செய்ய மாட்டேன் ?" என்று பிரபு சொல்ல " போடா. கடைசிலே ஒரு நாய்கிட்டே நீ பாடம் கத்துக்கும்படி உன் நிலைமை ஆயிட்டேன்னு நினைசா மனசு வலிக்கத்தான் செய்யுது" என்று மனோ சொல்ல " மனசு என்னடி பெரிய மனசு? இப்போ நீ வாங்கப்போற உதையில் உடம்பு பூராவுமே வலிக்க போகுது" என்றபடி பிரபு எழும்பி வர. "பாட்டி காப்பாத்து பாட்டி!"  என்றபடி பாட்டியின்  பக்கம் ஓடி ஒளிந்தாள் மனோ.