Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Tuesday, November 15, 2011

Stories told by GRAND-MA ( Story number - 3 )

                             மரணத்தின் பிறப்பு !

 (நான் எழுதிய இச்சிறுகதை தினமணி சுடர் 28 .11 .1992 ல் வெளியாகியுள்ளது )


பள்ளி விடுமுறையில் பாட்டியின் கிராமத்திற்கு வந்திருந்த பிரபு மனோவிற்கு, கிராமத்தின் அன்றாட நிகழ்வுகளான ஏற்றம் இறைப்பது, நாற்று நடுவது எல்லாமே புதுமையாக இருந்தன. அதுமட்டுமல்ல அங்கிருந்த வீட்டு சுவரில் - முன் வராந்தாவில், சிறிய பொந்து போன்ற ஒரு பள்ளம் இருப்பதைக் கண்டதும் "அது என்ன பாட்டி? என்றான் பிரபு.
" அதுதான்டா  குழந்தே மாடப்பிறை " என்ற  பாட்டி" இப்படி  மாடப்பிறை வைத்து அந்தக்காலத்தில் வீடு கட்டினதுக்கு ஒரு காரணம் உண்டு " என்றாள்.
"என்ன பாட்டி அது?" என்றனர் இருவரும் ஆர்வமாக!
பாட்டி கதை சொல்ல ஆரம்பித்தாள்.  
"இந்தக்கதையை என்னோட பாட்டி எனக்கு சொன்னாள், நான் உங்களைப் போல சின்னவளா இருக்கிறப்போ.  உலகம் தொடங்கி கொஞ்ச காலத்திற்கு மரணம் என்பதே இல்லாமலிருந்தாம். அதனால் பூமியில் பிறந்தவர்கள்  நூற்றைம்பது, இருநூறு வருசங்களில் கூனிக்குறுகி , சிறுத்து , சிறிய பொம்மை அளவில்  ஆகிவிடுவார்களாம். அப்படி கூனிக்குறுகி , சிறுத்து போனவர்கள் மற்றவர்கள் காலில் மிதிபட்டு விடக்கூடாது என்பதற்காக  மாடப்பிறைகளில் பத்திரமாக வைத்து விடுவார்களாம். அவர்களுக்கு உணவு  தண்ணீர்   எதுவுமே தேவையிருக்காதாம். ஆனால் சுவாசம் மட்டும் வந்து கொண்டே இருக்குமாம். இருட்டிய பிறகு சிறு அகல் விளக்குகளை ஏற்றி அந்த மாடப்பிறைகளில் வைத்து அவர்கள் பத்திரமாக இருக்கிறார்களா என்பதை சரிபார்ப்பார்களாம். "இருக்கிறீங்களா ?" என்று கேட்டால் "இருக்கிறேன்மா இருக்கிறேன் !" என்று பதில் வருமாம். ஆனால் அதிலும் பல அசௌகரியங்கள் இருந்ததாம்."
"என்ன பாட்டி அசௌகரியம்?" என்றான் பிரபு 
"சில சமயம் அவர்களை பூனையோ எலியோ தூக்கிக்கொண்டு போய் விடுமாம்.
என்ன செய்வதென்று தெரியாமல் ஜனங்கள் முழிக்க , அவர்கள் பிரட்சனைக்கு ஒரு வழி பண்ணனும்னு கடவுள் நினைத்து , ஒரு தூதனை அழைத்து "நீ பூலோகத்துக்கு சென்று, "பூ மலர, பூ மலர, பூ மலர்ந்து பிஞ்சு வர, பிஞ்சு முற்றி காய் செழிக்க, காய்  செழித்து கனிகள் கனிய, கனிந்த கனி உதிரட்டும், உதிரட்டும், உதிரட்டும்னு பறையடித்துவிட்டு  வா " என்றார்.
"அதுக்கு என்ன பாட்டி அர்த்தம்?  '
"பூமியில் குழந்தைகள் பிறந்து வளர்ந்து வாழ்க்கையை அனுபவிசிட்டு வயதானதும் இறக்கட்டும்னு அர்த்தம்.  அந்த தூதனும் கடவுள் சொன்ன படியே பறையடிசிட்டு வந்தான், அவனோட தோற்றம் ரொம்பவும் வித்தியாசமாவும் விநோதமாவும் அங்கிருந்தவர்களுக்கு தெரிஞ்சது. அவனை எல்லாரும் வேடிக்கை பார்த்தார்கள். தெருவில் விளையாடிக்கொண்டிருந்த சில குறும்புக்கார குழந்தைகள் அவன் மேலே கல் கட்டை எல்லாத்தையும் வீசி எறிஞ்சாங்க.வலி தாங்க முடியாத அவன் வாய் குளறி, "பூ உதிர, பிஞ்சு உதிர, காய் உதிர, கனி உதிர , எல்லாம் உதிரட்டும்னு பறையடிசிட்டு போயிட்டான். அதன் பிறகு மனிதர்களின் மரணத்துக்கு இந்த வயது,  இந்த வேளை என்பதே இல்லாமல் போயிட்டுது. சில குழந்தைகள் கருவிலேயே இறந்துவிட்டார்கள். இதைக்கண்டு அந்த தூதன் ரொம்பவும் வருந்தினான்.  அவன்தான் எமன். தனது தப்புக்காக வருந்திய எமன்,  கடவுள்கிட்டே போய் தன்னோட கவலையை சொன்னான். அவனை சமாதானபடுத்திய கடவுள் "நீ வருத்தப்படாதே. எந்தவொரு  துர் மரணத்துக்குமே நீ பொறுப்பாளியாக மாட்டாய். எந்தவொரு பழி பாவமும் உன்னை சேராது. நீ கவலைப்படாதே. போய் வா " என்று சொல்லி அனுப்பிவைத்தாராம். 
"அதனால்தான் இன்றுவரைக்கும் நாம், 'அவன் லாரி மோதி இறந்தான். இவன் தீப்பிடிட்சு  செத்தான்னு ஒவ்வொருத்தர் சாவுக்கும் ஒரு காரணத்தை  சொல்கிறோமே தவிர, எமன் கொண்டு போயிட்டான்னு சொல்றதில்லே." என்று கதையை முடித்தாள் பாட்டி,
"பரவாயில்லே பாட்டி. நல்லாவே  ரீல் சுத்தறே. நம்பறமாதிரி இல்லாட்டாலும் ரசிக்கிற மாதிரி இருந்திச்சு.அடுத்த ரீல் என்ன பாட்டி ?" என்று மனோ கேட்க "படவா குழந்தைகளா ! இந்நேரம் வரை வாயிலே கொசு போறதுகூட தெரியாமே தலையை ஆட்டி ஆட்டி கதை கேட்டுட்டு இப்போ கிண்டலா பண்றீங்க ? என்ன பண்றேன்னு பாருங்க உங்களை !" என்று பொய் கோபம் காட்டி கையை ஓங்க, பாட்டியின் கைகளில் சிக்காமல் மூலைக்கொருவராக ஓடி ஒளிந்தனர் இருவரும்.

No comments:

Post a Comment