Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Tuesday, December 31, 2019

மார்கழித் திங்கள் - 16






திருப்பாவை - 16
நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய
கோயில் காப்பானே  கொடி தோன்றும் தோரண
வாயில் காப்பானே. மணிக் கதவம் தாள் திறவாய்
ஆயர் சிறுமியரோமுக்கு அறை பறை
மாயன் மணி வண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயில் எழப் பாடுவான்
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா. நீ
நேய நிலைக் கதவம் நீக்கேலோர் எம்பாவாய்

திருவெம்பாவை - 16
முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்துடையாள்
என்னத் திகழ்ந்தெம்மை ஆளுடையாள் இட்டிடையின்
மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேற்
பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம்
என்ன  சிலைக்குலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு
முன்னி அவள்நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்

Monday, December 30, 2019

மார்கழித் திங்கள் - 15


திருப்பாவை - 15


எல்லே. இளம் கிளியே இன்னம் உறங்குதியோ
சில் என்று அழையேன் மின் நங்கையீர் போதருகின்றேன்
வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும்
வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக
ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்து எண்ணிக்கொள்
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்

திருவெம்பாவை - 15


ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்
சீரொருகால் வாயோவாள் சித்தங் களிகூர
நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்பப்
பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத் தான்பணியாள்
பேரரையர்க் கிங்ஙனே பித்தொருவர் ஆமாறும்
ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர்தாள்
வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
ஏருருவப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்

Sunday, December 29, 2019

மார்கழித் திங்கள் - 14


திருப்பாவை - 14


உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுனீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
செங்கற் பொடிக் கூரை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்.

திருவெம்பாவை - 14


காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாமாடச்
சீதப் புனலாடிச் சிற்றம்பலம் பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருளாம் ஆம்பாடிச்
சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதி திறம்பாடி அந்தமாம்  ஆம்பாடிப்
பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்
பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்

Saturday, December 28, 2019

மார்கழித் திங்கள் - 13


திருப்பாவை - 13


புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப் போய்ப்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ. பாவாய். நீ நன் நாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.

திருவெம்பாவை - 13


பைங்குவளைக் கார்மலராற் செங்கமலப் பைம்போதால்
அங்கம் குருகினத்தார் பின்னும் அரவத்தால்
தங்கள் மலம் கழுவுவார் வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த
பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்து நஞ்
சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக்
கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்
பங்கயப் பூம்புனல் பாய்ந்தாடேலோர் எம்பாவாய்

Friday, December 27, 2019

மார்கழித் திங்கள் - 12



திருப்பாவை - 12
கனைத்து இளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி 
நினைத்து முலை வழியே நின்று பால் சோர
நனைத்து இல்லம் சேறாக்கும் நற் செல்வன் நங்காய்
பனித் தலை வீழ நின் வாசற் கடை பற்றிச்
சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய் திறவாய்
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேர் உறக்கம்
அனைத்து இல்லத்தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்

திருவெம்பாவை - 12


ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்தாடும்
தீர்த்தன் நற்றில்லை சிற்றம்பலத்தே தீயாடும்
கூத்தன் இவ்வானும் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவம் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்ப
பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனை நீராடேலோர் எம்பாவாய்

DEAR VIEWERS,


எல்லாம் வல்ல இறைவா போற்றி..
தமிழ்நாட்டில் என்னைப் பிறக்க வைத்தமைக்காக போற்றி போற்றி ..
தினசரி நாளேடுகளைப் பிரித்தாலோ, செய்தித் தொலைக்காட்சிகளில் பார்வையை ஓட விட்டாலோ கண்ணில் படுவதெல்லாம் கொலை, கொள்ளை, வன்முறை, போராட்டம் போன்ற செய்திகள்தான்.
இப்படியெல்லாம் கூட ஜனங்களை ஏமாற்ற முடியுமா என்று வியக்கும் அளவுக்கு நூதன மோசடிகள்.
கேடுகெட்ட  ஈனப்பிறவிகள் சிறு குழந்தையையும் விட்டு வைப்பதில்லை; கிழவிகளையும் விட்டு வைப்பதில்லை 
இதையெல்லாம் படிக்கும்போது "நெஞ்சு பொறுக்குதில்லையே .. நெஞ்சு பொறுக்குதில்லையே ..இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால்" என்று பாரதியின் கவிதையைப் பாடத்தான் முடிகிறதே தவிர வேறு எதுவும் செய்ய முடியாத கையாலாகாத நிலைமை.
அரசாங்கம் வழங்கும் இலவசப் பொருட்கள் கிடைக்காவிட்டால் ஆர்த்தெழும் இந்த சாதாரண பொதுஜனம், மற்ற எந்த கிரிமினல் வேலைகளைப் பற்றியும் கவலையே படாது. ஏனென்றால் அவர்கள் இதைவிட பயங்கரமான கிரிமினல் காட்சிகளை சீரியலில் "லைவ்" ஆகப் பார்க்கிறார்கள்.  எனவே நாட்டு நடப்பு அவர்களுக்கு சிறு தூசு.. ஜூ ஜூ பி ..
நேற்றைய டீவி செய்தியில் தமிழ்நாடு "ஒருவிஷயத்தில்" முதல் இடத்தில் இருப்பதாகப் பார்த்தேன்.
"ஒருவிஷயத்தில்" கடைசியாக இடம்பிடித்த மாநிலத்தின் நிலைமை, மக்களின் நிலைமை எப்படி இருக்கும் என்று நினைக்கும்போதே தலை சுற்றுகிறது.
அப்படியொரு இந்திய மாநிலத்தில் நான் பிறக்காமல் இருந்தமைக்காக 
எல்லாம் வல்ல இறைவா போற்றி..
தமிழ்நாட்டில் என்னைப் பிறக்க வைத்தமைக்காக போற்றி போற்றி ..

Thursday, December 26, 2019

மார்கழித் திங்கள் - 11


திருப்பாவை - 11


கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து
செற்றார் திறலழியச் சென்று செருச் செய்யும்
குற்றம் ஒன்றில்லாத கோவலர்த்தம் பொற்கொடியே
புற்று அரவு அல்குல் புனமயிலே போதராய்
சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்து நின் 
முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர் பாட
சிற்றாதே பேசாதே செல்வப்  பெண்டாட்டி நீ 
எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்

திருவெம்பாவை - 11
மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக்
கையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடி
ஐயா வழியடியோம் வாழ்ந்தோங்காண் ஆரழல்போற்
செய்யாவெண் ணீறாடி செல்வா சிறுமருங்குல்
மையார் தடங்கண் மடந்தை மணவாளா
ஐயாநீ ஆட்கொண் டருளும் விளையாட்டின்
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உயர்ந்தொழிந்தோம்
எய்யாமற் காப்பாய் எமைஏலோர் எம்பாவாய்

Wednesday, December 25, 2019

மார்கழித் திங்கள் - 10


திருப்பாவை - 10


நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்! 
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்?
நாற்றத் துழாய்முடி நாராயணன்நம்மால்
போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கரணனும்
தோற்றம் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ?
ஆற்றல்  அனந்தல் உடையாய்! அருங்கலமே!
தேற்றமாய் வந்து திறவேலா ரெம்பாவாய்.

திருவெம்பாவை - 10


பாதாளம் ஏழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடிவும் எல்லாப் பொருள்முடிவே
பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணுந் துதித்தாலும்
ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன்
கோதில் குலத்தரன் தன் கோயிற் பிணாப்பிள்ளைகாள்
ஏதவன் ஊர் ஏதவன் பேர் ஆர் உற்றார் ஆர் அயலார்
ஏதவனைப் பாடும் பரிசேலார் எம்பாவாய்

DEAR VIEWERS,

கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் !


Tuesday, December 24, 2019

மார்கழித் திங்கள் - 09




திருப்பாவை - 09
தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய,
தூபங் கமழத் துயிலணைமேல் கண்வளரும்
மாமான் மகளே! மணிக்கதவம் தாழ்திறவாய்;
மாமீர்! அவளை எழுப்பீரோ? உம்மகள்தான்
ஊமையோ? அன்றிச் செவிடோ அனந்தலோ?
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?
மாமாயன், மாதவன், வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்.
திருவெம்பாவை - 09
முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற் றியனே
உன்னைப் பிரானாகப் பெற்றவுன் சீரடியோம்
உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எங்கணவர் ஆவார் அவர் உகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்
இன்ன வகையே எமக்கெங்கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோமேலோர் எம்பாவாய்

Monday, December 23, 2019

மார்கழித் திங்கள் - 08


திருப்பாவை - 08


கீழ்வானம் வெள்ளென்று, எருமைச்  சிறுவீடு 
மேய்வான் பரந்தனகாண்; மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரைப் போகாமல் காத்துன்னைக்
கூவுவான் வந்து நின்றோம், கோதுகலமுடைய
பாவாய்! எழுந்திராய்; பாடிப் பறைகொண்டு
மாவாய் பிளந்தானை, மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால்
ஆவாவென் றாராய்ந் தருளேலோ ரெம்பாவாய்.

திருவெம்பாவை - 08


கோழி சிலம்பச் சிலம்புங் குருகெங்கும்
ஏழில் இயம்ப இயம்பும் வெண் சங்கெங்கும்
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோங் கேட்டிலையோ
வாழியீ தென்ன உறக்கமோ வாய்திறவாய்
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழைப் பங்காளனையே பாடேலோர் எம்பாவாய்

மார்கழித் திங்கள் - 07


திருப்பாவை - 07


கீசுகீ சென்றெங்கும் ஆனைச்சாத் தன்கலந்து 
பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே!
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்தத் தயிரரவம் கேட்டிலையோ?
நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும்நீ கேட்டே கிடத்தியோ?
தேசமுடையாய்! திறவேலோ ரெம்பாவாய்.

திருவெம்பாவை - 07

அன்னே இவையுஞ் சிலவோ பல அமரர்
உன்னற் கரியான் ஒருவன் இருஞ்சீரான்
சின்னங்கள் கேட்பச் சிவன் என்றே வாய்திறப்பாய்
தென்னாஎன் னாமுன்னம் தீசேர் மெழுகொப்பாய்
என்னானை என்அரையன் இன்னமுதென் றெல்லோமுஞ்
சொன்னோங்கேள்  வெவ்வேறாய் இன்னந் துயிலுதியோ
வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்

Saturday, December 21, 2019

மார்கழித் திங்கள் - 06


திருப்பாவை - 06
புள்ளும் சிலம்பினகாண்; புள்ளரையன் கோயிலில் 
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய்! எழுந்திராய், பேய்முலை நஞ்சுண்டு,
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி,
வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை,
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்
உள்ளம்புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்.

திருவெம்பாவை - 06
மானேநீ நென்னலை நாளை வந்துங்களை
நானே எழுப்புவன் என்றலும் நாணாமே
போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே அறிவரியான்
தானே வந்தெம்மைத் தலையளித்தாட் கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய்திறவாய்
ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்
ஏனோர்க்குந் தங்கோனைப் பாடேலோர் எம்பாவாய்

மேலே உள்ளது போன்ற (Light Effect கொடுத்து வடிவமைக்கப் பெற்ற) மேலும் பல கோலங்களை எனது மற்றொரு தளமான 

https://ARUNA S. SHANMUGAM.BLOGGER என்பதில் காணலாம். அதில் display ஆகும்   Art Weaven kolams, Deepam and Light Effect, Nelivu kolam, rangoli, Sangu kolam   என்ற வார்த்தைகளில் click செய்தால் கோலங்களைக் காணமுடியும்.

  • A

Friday, December 20, 2019

மார்கழித் திங்கள் - 05




திருப்பாவை - 05


மாயனை மன்னு வடமதுரை மைந்தனை, 
தூய பெருநீர் யமுனைத் துறைவனை,
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை,
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை,
தூயோமாய் வந்துநாம் தூமலர் தூவித்தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசுஆகும் செப்பேலோ ரெம்பாவாய்.

திருவெம்பாவை - 05

மாலறியா நான்முகனும் காணா மலையினைநாம்
போலறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும்
பாலூறு தேன்வாய்ப் படிறு  கடைதிறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்
கோலமும் நம்மை ஆட் கொண்டருளி கோதாட்டுஞ்
சீலமும் பாடிச் சிவனே சிவனேஎன்று
ஓலம் இடினும் உணராய் உணராய்காண்
ஏலக் குழலி பரிசேலோர் எம்பாவாய்

Thursday, December 19, 2019

மார்கழித் திங்கள் - 04


திருப்பாவை - 04
ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்து கொடார்த்தேறி,
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
பாழியம் தோளுடைய  பற்பநாபன் கையில்
ஆழிபோல் மின்னி, வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய், நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.

திருவெம்பாவை - 04 
ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளிமொழியார் எல்லோரும் வந்தாரோ
எண்ணிக்கொ டுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளைக்
கண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ளம்
உள் நெக்கு நின்றுருக யாமாட்டோம் நீயேவந்து
எண்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய்

Wednesday, December 18, 2019

மார்கழித் திங்கள் - 03


திருப்பாவை - 03
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றிநீர் ஆடினால்,
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும் மாரிபெய்து
ஓங்கு பெருஞ்செந்நெல்லூடு கயல் உகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப,
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்

திருவெம்பாவை - 03


முத்தன்ன வெண்நகையாய் முன்வந் தெதிர் எழுந்தென்
அத்தன் ஆனந்தன் அமுதன் என் றள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்
பத்துடையீர் ஈசன் பழவடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மைதீர்த் தாட்கொண்டாற் பொல்லாதோ
எத்தோநின் அன்புடைமை எல்லோம் அறியோமோ
சித்தம் அழகியார் பாடாரோ நம்சிவனை

இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய்

Tuesday, December 17, 2019

மார்கழித் திங்கள் - 02


திருப்பாவை - 02
வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்
     செய்யும் கிரிசைகள் கேளீரோ, பாற்கடலுள்
பையத் துயின்ற பரமனடி பாடி
     நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
     செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்று ஓதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
     உய்யுமாறெண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.


திருவெம்பாவை - 02
பாசம் பரஞ்சோதிக் கென்பாய் இராப்பகல்நாம்
பேசும்போ தெப்போதிப் போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சீசி இவையுஞ் சிலவோ விளையாடி
ஏசும் இடமீதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசு மலர்ப்பாதந் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்துள்
ஈசனார்க் கன்பார்யாம் ஆரேலோர் எம்பாவாய்

(குறிப்பு: மேலே உள்ளது போல கம்ப்யூட்டரில் டிஸைன் செய்யப்பட்ட (15 - 8 புள்ளிகள்) 1008 கோலங்களை எனது www.chennai.1colony.com ல் பார்க்கலாம். அத்தனையும் கம்ப்யூட்டரில் உள்ள paint software கொண்டு டிஸைன் செய்யப்பட்டவை. அந்தக்கால பொங்கல் கொண்டாட்டம் எப்படி இருந்திருக்கும் என்று அறிந்து கொள்ள விரும்புபவர்கள் இதே தளத்தில் "அன்று பொங்கிய பொங்கல் " என்ற தலைப்பில் காணலாம்.)

காணவில்லை ... கண்டுபிடித்துத் தரவும் ...!




நாடு எங்கே போகிறது? இது நாடா இல்லே வெறும் காடா என்கிற கேள்விக்குறி எல்லார் மனதிலும் எதிரொலிக்க ஆரம்பித்து விட்டது.
இந்தியா என்றாலே உலக நாடுகளின் மத்தியில்  நல்லதொரு மதிப்பு மரியாதை இருந்தது. காரணம்:- இந்தியா என்றாலே அன்பு! இந்தியா என்றாலே பொறுமை! இந்தியா என்றாலே சகிப்புத்தன்மை ! இந்தியா என்றாலே மதசார்பின்மை !
நடக்கும் சம்பவங்களைப் பார்த்தால் இதில் எதுவுமே இப்போது இல்லை
விவேகானந்தர் அவரது அயல்நாட்டுப் பயணம் ஒன்றில் உலக நாடுகளின் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியதாக நான் படித்த ஒரு செய்தி:
"இந்தியா மிகப்பெரிய ஆலமரம். அந்த ஆலமர நிழலில் யார் வேண்டுமானாலும் வந்து தங்கி இளைப்பாறலாம். தங்கி, தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ளலாம். இன்னார்தான் வந்து தங்க வேண்டும் என்று ஆலமரம் ஒரு போதும் சொன்னதில்லை. யுகங்கள் பலவானாலும் வேர்கள் விழுதுகள் தாங்கி நிற்க ஆலமரம் என்றென்றும் நிலைத்திருக்கும். தானும் வாழும்; மற்றவர்களையும் வாழவைக்கும்!"
இந்த டயலாக்கை இப்போது சொன்னால் இது இந்தியாவுக்கு மிகப்பெரிய காமெடியாக இருக்கும்.
சமீபகால நிகழ்வுகள் வன்முறைக்கு, அதன்  எதிரொலிப்புக்கு எண்ணெய் வார்க்கிறது. அதனால் எரிகிற வீட்டில் பிடுங்கினவரை லாபம் என்று குளிர்காயும் சுயநலக்கிருமிகள் காட்டில் மழைதான்.
15.12.2019 அன்று சன் நியூஸ் சேனலில் ஒளிபரப்பான விவாத மேடை சிலரை சிந்திக்க வைத்திருக்கிறது என்பதை காதில் விழுந்த சம்பாஷணைகள் மூலம் தெரிந்து கொண்டேன்.   அந்த சம்பாஷணைகளில் ஒரு சில அங்க லாய்ப்புகளுக்காவது உங்கள் வசம் பதில் இருந்தால் அதை எனக்குச் சொல்லுங்கள்.
(பட்டிமன்றம் / விவாத மேடைகளைப் பார்க்கும் பழக்கம் எனக்குக் கிடையாது. எல்லாருக்கும் மிக நன்றாகத் தெரிந்த விஷயங்களை நாட்டு நடப்பை மேடையில் இருக்கும் சிலர், பத்திரிக்கைகளில் எற்கனவே வந்த மொக்கை ஜோக்குடன் பிளந்து கட்டிக் கொண்டிருப்பார்கள். இதைக் கேட்டு ஒரு சிலர் கைகொட்டிச் சிரிக்க, பல சமயங்களில் ஒரு கூட்டம் கண்ணீர் விட அதையே திரும்பத் திரும்ப  ஒளிபரப்பிக் கொண்டிருப்பார்கள் சேனல் புண்ணியவான்கள். (உனக்கு   இதெல்லாம் பார்க்கும் பழக்கம் கிடையாது . பிறகு எப்படி இதெல்லாம் தெரியும் என்ற கேள்வி எழுகிறதுதானே ? பட்டிமன்றம் என்றால் என் சகோதரி தன்னை மறந்து டீவி முன் உட்கார்ந்திருப்பாள் . அவளைக் காண கீழே வரும்போது காதில் விழும் விஷயங்களை வைத்து, "எல்லாருக்கும் தெரிஞ்ச ஒரு செய்தியை ரொம்பவும் அறிவுஜீவி மாதிரி பேசிட்டு இருக்கிறான். இதை எப்படி உன்னாலே பொறுமையா பார்க்க முடியுது" என்று கேட்பேன். உனக்கு தெரிஞ்சா எல்லாருக்கும் தெரியும்னு அர்த்தமா என்று எதிர்க்கேள்வி கேட்பாள். அத்தோடு அங்கிருந்து இடத்தைக் காலி செய்து விடுவேன்.)
சம்பாஷணை எண் - 01: எல்லா சினிமாவிலும் கேட்டுக்கேட்டு அலுத்துப் போன வசனம்தான் இது. அவரவர் இஷ்டத்துக்கு பொதுஜனம் சட்டத்தைக் கையில் எடுக்கக் கூடாதாம்.. அது தன்னோட கடமையை சரியா செஞ்சா ஏன் மத்தவங்க அதில் தலையிடறாங்க? இருக்கிற வேலைவெட்டியை விட்டுட்டு அதை ஏன் மத்தவங்க கையில் எடுக்கப் போறாங்க. ரோட்டை சரிபண்ண எங்களுக்கு துப்பு கிடையாது. அதனால் வாகனத்தில் போறவங்க பாதிக்கப்படாமல் இருக்க இதை எல்லாம் கண்டிப்பா கையோடு கொண்டு போகணும். தெருவில் ஓடும் சாக்கடையை சுத்தம் பண்ணத் துப்பு கிடையாது. அதே சாக்கடை உன் வீட்டுப் பக்கம் தேங்கி நின்னா அதுக்கு அபராதம் கட்டணும்னு சட்டம் போடற அறிவுஜீவிகள் இருக்கிற நாடு இது.. இப்படியொரு நாட்டாமைத் தீர்ப்பை சொல்லவா அத்தனை வருஷம் விழுந்து விழுந்து படிச்சிட்டு வாறீங்க ?
சம்பாஷணை எண் - 02: காவல் துறையினரே வாகனத்தை எரித்து விட்டு சட்டம் ஒழுங்கை காப்பாற்ற சுட்டதாக சொல்ற அவலம் இந்த நாட்டைத் தவிர வேறு எங்காவது நடக்குமா?
சம்பாஷணை எண் -03:   ஒரு சில பெரும்புள்ளிகளைக்  காப்பாற்ற தெலுங்கானாவில் அப்பாவிங்க நாலு பேரை சுட்டதா புலம்புறானுக. அப்படி யாராவது இருந்தால், அவர்களை யாராவது போட்டுத் தள்ளினால் அவனைப் பாராட்டி, ஒட்டுமொத்த நாடும் சேர்ந்துதான் அவங்களை போட்டுத் தள்ளினோம்னு சொன்னால், முன்னாடி போய் நின்னால் இவனுக எத்தனை பேருக்குத்தான் தண்டனை கொடுப்பாங்கிறதையும் பார்த்துடுவோமே. 
சம்பாஷணை எண் - 04 : வயித்துப் பொழைப்புக்காக ஒருத்தன் திருடினா, அதில் பங்கு கேட்கிற, திருட்டு நகையில் பங்கு கேட்கிற ஈனப்பிறவிகள் இருக்கிற நாடு முன்னேறுமா? அப்பாவி ஜனங்களை கொன்னு குவிக்கிற இந்த தீவிரவாதக் கும்பல் பொறுப்பான பதவியில் இருந்து கிட்டு அயோக்கியத்தனம் பண்ணும் அத்தனை பேரையும் தண்டிச்சா அப்புறம் ஊர் உலகம் இவங்களை தெய்வமா கை எடுத்துக் கும்பிடுவாங்களே. . ரமணா படத்தில் செஞ்ச மாதிரி செய்யணும். அவனுக நேர்மையா நடந்துக்கிட்டா ஜனங்க அவனுக பின்னாடி போவாங்களே.
நாலாவது விஷயம் ரொம்பவும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.   நாட்டில் நடக்கும் எல்லா குற்றங்களுக்கும் வறுமைதான் தாயகம். அது ஒழிக்கப் படாமல் விஞ்ஞானம் டெவெலப் ஆகி எந்த பயனும் இல்லை.
முன்பொருமுறை படித்த ஒரு சிறுகதை. விகடனில் வெளியாகி இருந்ததாக ஞாபகம். ஒரு வாலிபன். வறுமையிலும் நேர்மை தவறாத தன்மை. ஆனால் படித்துமுடித்து விட்டு வேலை தேடிப்போன இடத்திலெல்லாம் அவனுக்குக் கிடைத்தது ஏமாற்றமும் அவமதிப்பும்தான். வாழ வழியில்லாமல் தீவிர வாதிகளின் கூடாரத்தை தஞ்சமடைந்து அவர்களுக்காக உழைக்க ஆரம்பித்து விடுவான்.
இப்போது அடிக்கடி செய்தி சேனல்களில், தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்திருக்கும் இளைஞர்கள் பற்றி பார்க்கிறோம். அவர்கள் பின்னணியை ஆராய்ந்தால் அதற்கும் ஒரு நியாயமான காரணம் இருக்கும். உழைக்கும் நோக்குடன் வேலை தேடிக் களைத்த எல்லா இளைஞர்களும் இப்படியொரு முடிவுக்கு வந்துவிட்டால்  வருங்காலம் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது. 
நாட்டோரே, நல்லோரே, ப்ளீஸ் .. ஆங்காங்கே ஒருசில இடங்களில் எரியும் நெருப்பு அனைத்து இடங்களையும் அழிக்கும் முன்பாக உடனடித் தீர்வு ஒன்றை கொண்டு வாருங்களேன்.  
இந்தியா என்றாலே அன்பு! இந்தியா என்றாலே பொறுமை! இந்தியா என்றாலே சகிப்புத்தன்மை ! இந்தியா என்றாலே மதசார்பின்மை !  - என்கிற நிலை மாறி, மனிதன் என்ற போர்வையில் விலங்குகள் வாழும் நாடு அது  என்று வருங்காலம் சொல்லாமலிருந்தால் அது மிகப் பெரிய வரம். 

Monday, December 16, 2019

மார்கழித் திங்கள் - 01


திருப்பாவை - 01

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளாம் ; 
நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்! 
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்! 
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்,
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம், 
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான் 
நாராயணனே, நமக்கே பறைதருவான், 
பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்.

திருவெம்பாவை - 01
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டிங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என் னேஎன்னே
ஈதே எந்தோழி பரிசேலோர் எம்பாவாய்

(குறிப்பு: மேலே உள்ளது போல கம்ப்யூட்டரில் டிஸைன் செய்யப்பட்ட (15 - 8 புள்ளிகள்) 1008 கோலங்களை எனது www.chennai.1colony.com ல் பார்க்கலாம். அத்தனையும் கம்ப்யூட்டரில் உள்ள paint software கொண்டு டிஸைன் செய்யப்பட்டவை. அந்தக்கால பொங்கல் கொண்டாட்டம் எப்படி இருந்திருக்கும் என்று அறிந்து கொள்ள விரும்புபவர்கள் இதே தளத்தில் "அன்று பொங்கிய பொங்கல் " என்ற தலைப்பில் காணலாம்.)