Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, April 24, 2015

Scanning of inner - heart ( Scan Report Number - 145 )

                                                                           தாய் மனசு !!
"அஞ்சலி, சுவாமியை நல்லா வேண்டிக்கோ. நல்லபடியா படிப்பை முடிச்சு நல்லபடியா வீட்டுக்கு வந்து சேர்வேன். அதுக்கு நீ துணை இருக்கணும்னு அம்பாளை வேண்டிக்கோ "
"அம்மா நான் என்ன வெளிநாட்டுக்கா போகப் போறேன். இதோ இங்கே இருக்கிற கோயம்புத்தூர். நாலே நாலு வருஷப் படிப்பு. ஹாலிடேஸில் வீட்டுக்கு வந்துடப் போறேன். இதுக்குப்போய் இவ்வளவு பில்ட் அப் குடுக்கிறே"
"உனக்கு எல்லாமே விளையாட்டுதான்.காலங் கெட்டுக் கிடக்கு. உன்னை வெளியூர் அனுப்பிட்டு நான் வயித்திலே நெருப்பைக் கட்டிட்டு இருக்க ணும்."
"அம்மா .. காலம் எப்பத்தான் நல்லா இருந்துச்சு. அறுபது வருஷத்துக்கு முன்னாடி வந்த தமிழ் சினிமாப் படத்தைப் பார்த்தால் , அதிலும் இதே டைலாக் தான் ஓடுது. சரி எழும்பு. நாம கிளம்பலாம். கோவிலுக்கு வந்துட்டா உனக்கு வீட்டுக்கு வர மனசு வராதே . எழும்பு .. க்விக் "
"உன் பிடுங்கல் தாங்காமத் தானே நான் கோவிலுக்கே வர்றேன்."
"நீ இதுவும் சொல்லுவே.. இதுக்கு மேலேயும் சொல்லுவே.  நாலு வருஷத்துக்கு என்னோட தொந்தரவு இருக்காது.  என்ஜாய் யுவர் ஸெல்ப் . இப்போ போனாதான் உனக்கு சீரியல் பார்க்க டைம் சரியா இருக்கும் " என்று  அஞ்சலி சொல்ல , "ஈஸ்வரி .. இந்தப் பொண்ணுக்கு நீதாண்டி துணை" என்று முணுமுணுத்தபடி எழுந்த பார்வதி, வழக்கம்போல கொடி மரத்தின் பக்கம் கண்களை ஓட விட்டாள். கண்ணில் வழிந்தோடும் நீரைத் துடைத்தபடி கொடிமரத்தை ஏறிட்டுப் பார்த்தபடி இருந்தாள் அந்தப் பெண்.
"அஞ்சலி .. ஒரு நிமிஷம் நில்லு.  அதோ பாரு .. அந்த லேடி அழறா " என்று கொடிமரத்தின் பக்கம் கைகாட்டினாள் பார்வதி.
"யாரும்மா அவங்க ? உனக்கு தெரிஞ்சவங்களா ? கிட்டத்தில் போய் என்ன ஏதுன்னு கேளேன் "
"இல்லேடி. அவங்க யாருன்னு தெரியாது. நான் பார்க்கிறப்ப எல்லாம் கொடிமரத்தின் கீழே கண்ணை மூடி கையைக் குவிச்சு  மணிக்கணக்கா உட்கார்ந்திருப்பாங்க . யாருக்கு என்ன கஷ்டமோ தெரியலே. இன்னிக்கு அழறாங்க. எங்காவது வேலை பார்க்கிறாங்கன்னு நினைக்கிறேன். டூட்டி முடிச்சு நேரே இங்கே வர்றாங்கனு நினைக்கிறேன்."
"உன் நினைப்பை மூட்டை கட்டி வை. வா . .. பக்கத்தில் போய் என்னனு நாம விசாரிக்கலாம்."
"ஏதாவது தப்பா நினைச்சுட்டாங்கன்னா "
"அதையும்தான் கேட்டுப் பார்த்துடலாமே "
தனதருகில் நிழலாடுவதைக் கண்டு அந்தப் பெண் நிமிர்ந்து பார்த்தாள்.
"நான் அடிக்கடி உங்களை இந்த இடத்தில் பார்க்கிறேன். நீங்க அழற மாதிரி இருந்துச்சு.  என்ன கஷ்டம்னு விசாரிச்சிட்டுப் போகலாம்னு என் பொண்ணு சொன்னா. வாழ்க்கை ஒரு விசித்திரமான கணக்கு. சந்தோசத் தைப் பகிர்ந்துகிட்டா அந்த சந்தோசம் ரெட்டிப்பாகும். சங்கடத்தைப் பகிர்ந்துகிட்டா அது பாதியாக் குறையும்னு சொல்வாங்க, உங்களுக்கு என்ன சங்கடம். சொல்லலாம்னு நினைச்சா சொல்லுங்க." என்றாள் பார்வதி.
"வாங்கம்மா.. அப்படி சுவரோரமா   போய் உட்கார்ந்து பேசலாம் " என்ற படி எழுந்து வந்து சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்து கொண்ட அந்தப் பெண், "அம்மா .. பெத்த தாய் போல பரிவோட பேசறீங்க.. நானும் இந்த தெய்வத்து முன்னாலே என்  பாரத்தை இறக்கி வச்சுட்டுத்தான் போறேன். இருந்தாலும் சில சமயம் மனசு பாரம் தாங்காமே அழுதிடுதேன்" என்றாள் 
"உனக்கு என்னம்மா பிரச்சினை ?"
"என் பேர் பிரேமா. ஸ்கூலில் டீச்சரா வொர்க் பண்றேன். எனக்கு வாழ்க்கையே ஒரு பிரச்சினைதான். மனுஷத்தனமே இல்லாத ஒரு மிருகத்துக்கு வாழ்க்கைப்பட்டு இருபத்தஞ்சு வருஷத்தை ஓட்டிட்டேன்" என்று அவள் சொல்லும்போது "ஆன்ட்டி...மனுஷத்தனம் இல்லாதவங்க ளை  மிருகத்தோட ஒப்பிடாதீங்க. மிருகங்கள் அதது குடும்பத்தை பாது காக்கத்தான் செய்யுது. "அம்மா"ன்னு கன்னுக்குட்டி கத்தினா போதும். எங்கிருந்தாலும் அந்தக்குரல் கேட்டு அங்கே தாய்ப்பசு ஓடி வந்துடுது. எந்தவொரு உடல் பலமும் இல்லாத கோழி கூட, கழுகைக் கண்டதும் குஞ்சுகளை  ரெக்கைகளுக்குள் வச்சு பாதுகாக்குது " என்ற அஞ்சலியை, "ஏய் . வாயாடி ...கொஞ்ச நேரம் சும்மா இருக்க மாட்டியா ?" என்று கடிந்து கொண்டாள் பார்வதி 
"அவளைக் கோபிக்காதீங்க .. அவ சொல்றது நியாயந்தான்.எனக்கு வாய்ச்சவர், மனைவி குழந்தை என்று எந்தவொரு பாசமும் இல்லாத மனுஷஜென்மம். பறவை மிருகம் எல்லாமே அதது பெத்த குழந்தை களுக்காக இரை தேடியலையும்.என் புருஷனுக்குப் பயந்து குழந்தைக்கு பால் வாங்குகிற காசைக் கூட நான் ஒளித்துத்தான் வைக்கணும். காசு கண்ணில் பட்டால் அது   சாராயக் கடைக்குப் போயிடும் "
"வேலை வெட்டி எதுவும் பார்க்கலையா ? இந்த மாதிரி ஒரு ஆளுக்கு உங்க வீட்டில் உன்னை எப்படிக் கட்டிக் குடுத்தாங்க?"
"கல்யாணம் பண்றப்ப வேலையில் இருந்தார். சகவாசதோஷம் . குடிப் பழக்கத்துக்கு அடிமையாயிட்டார். குடிக்க கையில் காசில்லாதபோது ஆபீஸ் பணத்தில் கை வச்சிருக்கிறார். மாட்டிகிட்டார் . என் மேலே என் குழந்தை மேலே பரிதாபப்பட்டு ஆபீசில் எந்த ஆக்சனும் எடுக்காமே வார்ன் பண்ணி வேலையிலிருந்து தூக்கிட்டாங்க. அதுக்குப் பிறகு எங்கே யாவது வேலைக்குப் போகணும் என்கிற எண்ணமே அவருக்கு வரலே ".
"ஏன் ஆன்ட்டி, இவ்வளவு கஷ்டப்பட்டுகிட்டு நீங்க அவரோட சேர்ந்து வாழணும். டைவர்ஸ் வாங்கிட்டு வெளியில் வந்திருக்கலாமே " என்று அஞ்சலி கேட்க , அந்தக் கேள்வியை மௌனமாக ரசித்தாள் பார்வதி .
"நீ சின்னப் பொண்ணும்மா. பிரச்சினை, அதுக்கான தீர்வு பத்தி மட்டுமே யோசிக்கிறே. புருஷனை விட்டு விலகி வந்துட்ட பெண்ணுக்கு சமுதாயத்தில் எந்தப் பாதுகாப்பும் கிடையாது. அவளுடைய நெருங்கிய உறவுகளே அவளைக் கிண்டல்  பண்ணும். தனியா இருக்கிற பெண்ணை வளைச்சுப் போட அலைகிற மனுஷ மிருகங்கள் இந்த பூமியில் இருக்குது. அதுங்ககிட்டே இருந்து தன்னைப் பாதுக்காத்துக்கிற சாமர்த்தி யம் எல்லாப் பெண்களுக்கும் வந்துடாது. அதுவுமில்லாமே எனக்குப் பிறந்தது பெண் குழந்தை. அது வளர்ந்து கல்யாணம் காட்சின்னு வரும்போது பொண்ணோட அப்பா எங்கேனு ஒரு கேள்வி வருமே. நான் சொல்ற உண்மையை ஏத்துக்கிற மனப் பக்குவம் எத்தனை பேருக்கு வரும். இதைப்பத்தி எல்லாம் அப்போ ரொம்ப யோசிச்சேன். சாட்சிக் காரனை விட சண்டைக்காரனே மேல்னு அவரோடு சமாளிச்சிட்டுப் போக என்னை நானே தயார் படுத்திகிட்டேன்."
"இப்போ உனக்கு என்னம்மா பிரச்சினை ?" என்று கனிவான குரலில் கேட்டாள் பார்வதி.
"கடனை வாங்கி படாதபாடு பட்டு என் பொண்ணை என்ஜீனியரிங் படிக்க வச்சிட்டேன்.அவளுக்கு கேம்பஸ் இண்டர்வியூவில் செலெக்ட் ஆயிடுச்சு . கூடிய சீக்கிரம் வேலைக்குப் போயிடுவா "
"நல்லவிஷயம்.சந்தோசப்பட வேண்டிய விஷயம்.உன்னோட கஷ்டத்து க்கு ஒரு முடிவு வரப் போகுது" என்று பார்வதி சொல்ல, "இல்லே இனிமே அது அதிகமாகிடும்.பொண்ணு படிச்சு வேலைக்கு போனதும் கைநிறைய காசு வரும். அதை எடுத்துகிட்டு பாரில் போய்க் குடிக்கலாம்ன்னு என் புருஷன் கணக்குப் போட்டுட்டு இருக்கிறார். அவளோட கல்யாணத்தைப் பத்தி நினைக்கவே மாட்டார். நான் முயற்சி பண்ணினாலும் அதை நடக்க விடாமே என்னென்ன தடங்கல் பண்ணணுமோ அத்தனையும் செய்வார். இந்தப் பெண்ணாக யாரோடாவது ஓடிப் போனால்தான் உண்டு "
இதைக் கேட்டு அதிர்ந்த பார்வதி " என்னம்மா சொல்றே ?" என்று கேட்டாள்.
"பெத்த தாயே இப்படி சொல்றேன்னா நான் என்ன மாதிரி சூழ்நிலையில் இருப்பேன்னு நீங்க கொஞ்சம் கற்பனைப் பண்ணிப் பாருங்க. யாராவது ஒரு நல்ல பையனை அவ கண் முன்னால் காட்டு. அவனைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு அவ போயிடட்டும். அப்படி வர்ற பையன் அவளைக் கண் கலங்காமே காப்பாத்தறவனாவும், இவரை கிட்டேயே சேர்க்காத அளவு க்கு தைரியமான ஆளாகவும் இருக்கணும். என் பொண்ணோட சம்பாத்தி யத்தில் சல்லிக்காசு கூட எனக்கு வேண்டாம். அந்தப் பணம் அந்தப் பையனோட குடும்பத்துக்கே போகட்டும். அப்படி ஒரு நல்ல மனுஷனை என் பொண்ணு முன்னாலே காட்டுனுதான் தினமும் பகவானை வேண்டிக் கிறேன் " என்று விம்மலிடையே அவள் சொல்ல, அதைக் கேட்டு அஞ்சலி, பார்வதியின் கண்களும் கலங்கின 

Tuesday, April 14, 2015

கேள்வி இங்கே இருக்கிறது ! பதில் யாரிடம் இருக்கிறது ?

அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !!
கேள்வி எண் : 3
தமிழ் எழுத்துக்கள் தொடர்பான எனது சந்தேகம் ஒன்று.. இது இன்று வந்த சந்தேகமல்ல. படிக்கத் தொடங்கிய காலத்திலிருந்தே என்னைத் துரத்தும் கேள்வி இது. தமிழில் - க, ச, ப என்ற எழுத்துக்கள்  உச்சரிப்பு சம்பந்தமான   சந்தேகம் இது.
ஆங்கிலம், ஹிந்தி மொழிகளில் இதை உச்சரிக்க தனிதனி எழுத்துக்கள் உண்டு .
" க " என்பதை ஆங்கிலத்தில் ka kha ga gha என்று எழுதுவதைக் கொண்டு மாறுபட்ட உச்சரிப்பை பயன்படுத்த முடியும்.  
" க " என்பதை ஹிந்தியில்    खा  घ என்று எழுதுவதைக் கொண்டு 
மாறுபட்ட உச்சரிப்பை பயன்படுத்த முடியும்.
இதே போல  ச , ப போன்ற எழுத்துக்களுக்கு உச்சரிப்புக்கேற்ற  வடிவம் உண்டு. 
இந்த தமிழ்  எழுத்துக்களின் - அதாவது க, ச, ப  என்ற எழுத்துகளைக் கொண்டு வருகின்ற வார்த்தைகளுக்கான சரியான உச்சரிப்பு நிறைய பேருக்குத் தெரியாது .
பல்லி, பம்பரம் என்ற வார்த்தைகளை நான் PALLI, PAMBARAM என்று உச்சரிப்பேன் . எனது தோழி BALLI,  BAMBARAM என்று உச்சரிப்பாள். இருவரும் ஒருவரை மற்றவர் கேலி செய்வோம், சொல்லின் உச்சரிப்பு குறித்து. சரியான உச்சரிப்பு எது என்பது இரண்டு பேருக்குமே தெரியாது . 
ல ள ழ  என்ற தமிழ் எழுத்துக்களில் " ழ " என்பதை ஆங்கிலத்தில் " zha " என்று எழுதுகிறோம்.
மற்றபடி ல, ள என்பதைப் பொதுவாக " LA " என்றே எழுதுகிறோம்.இதை வேறுபடுத்திக் காட்டுவது எப்படி என்பது யாருக்காவது தெரியுமா ?
விஷயம் தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.
பதில் தெரிந்தவர்கள் மெயில் அனுப்பலாம்



Friday, April 10, 2015

Scanning of inner - heart ( Scan Report Number - 144 )

                                           அடப் பாவி மனுஷா !!
"ஏண்டீ, ராகுகாலம் , நீ பெத்த எமகண்டம் 
இன்னும் தூங்குதே - எழுப்ப மனம் வரலியா ?"
இத்தனை அன்பாகக் கேட்டது எனக்குத் 
தாலி கட்டிய தர்மராஜா !
(ஹூம் எல்லாருக்கும் பிள்ளை பெத்துக்க 
ஒரு பொம்பளை வேணும் .. பிறக்கிறது 
பெண்ணானால் - பிறந்தது ஒரு எமகண்டம் )

அறிவு கெட்ட முண்டமே - காப்பி 
கொண்டு வரும்போதே கையோடு 
காலைப் பேப்பரை எடுத்து வருவதற்கென்ன கேடு ?
காப்பியை விட சூடாக இருக்கும் கணவரிடம் 
பதிலுக்கு 
"உங்கள் வேலையை மட்டுமாவது நீங்களே 
பார்த்துக் கொள்ளக் கூடாதா ?" - என்றொரு வார்த்தை 
கேட்டு விட முடியுமா ? கேட்ட பின்பு 
தலையில் தவறாது சூட்டப் படும் -
"திமிர் பிடித்த கழுதை " எனும் பட்டம்.
அய்யா, பாரதி - உன் வாக்கு என்னமாய்ப் பலிக்கிறது !!
இங்கு 
பெண்கள் பட்டங்கள் ஆளுகிறோமையா .
"என் பூட்ஸைப் பாலீஸ் பண்ணவே இல்லையா !
வீட்டில் என்னதான் செய்கிறாய் மம்மீ " என்று 
இளக்காரமாய் கேட்டு 
என்னை வறுத்தெடுக்கும் என் இளஞ்சிட்டு 
அப்பனுக்குப்  பிள்ளை தப்பாமே  பிறந்திருக்கு - எனும் 
பழமொழியை மெய்ப்பிக்கும் .
இதற்கிடையில் ஏக்கமாய் எனைப் பார்க்கும் 
எனக்காக நான் கலந்த காப்பி டம்ப்ளர் 
அரக்கப் பறக்க ஓடி ஆடி 
அனைத்து வேலையும் முடித்துவிட்டு 
நாலு பேர் மதிப்பதற்காக நன்றாய் 
உடை உடுத்தும் போது 
பண்ணி வைத்த காலை டிபனை 
சாப்பிட்டு விட்டுப் போகலாமா 
அல்லது 
ஒரேயடியா மதியான வேளையில் 
பார்த்துக்கலாமா 
என்று மனதுக்குள் பட்டிமன்றம் நடக்கும் .
அதில் மனத்தின் மானசீக தீர்ப்பு "மதியத்துக்கு !"
அப்புறமென்ன ...
வீட்டை விட்டு வேகமாய்ப் படியிறங்கும் போது 
"அடுத்த வீட்டு மாமிகிட்டே இருந்து 
மங்கையர் மலரை வாங்கிக் கொடுத்துட்டுப் போ "
என்று அன்புக் கட்டளையிடும்  மாமியாரிடம் 
"நீங்களே கேட்டு வாங்கிக்க கூடாதா " என்று 
சொல்லி விட்டாலோ - அன்பு வம்பாகிப் போகும்.
மறுத்து சொன்னால்  
நான் வீடு திரும்பி வருவதற்கு முன்பாகவே 
குடும்பக்  கோர்ட்டில் என் மணாளனிடம் 
என் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல்  செய்யப் பட்டிருக்கும்
அங்கு - மனமறிந்தே  தீர்ப்புகள் 
ஒருதலைப் பட்சமாய் வழங்கப் படும்.
பஸ் ஸ்டாப்பில் நிற்கும் கூட்டத்தை பார்த்தாலே 
வயிறு கலங்கும் ... இந்தக் கும்பலில் 
எப்படி பஸ் ஏறப் போகிறோமென்று !
ஏறி இடம்பிடித்தாலும் 
"இடி மன்னர்களின் இம்சை "
தள்ளி நிற்க சொன்னால் ..
"மகளிர்க்கென்று பஸ் விட்டாலும் 
அத்தனையையும் விட்டுவிட்டு - இதில் 
ஏறி என்னை ஏன் முறைக்கிறே ?" என்று 
இதயமற்றுக் கேட்கும் இளங் கன்றுகள் .
"உங்களோடு சேர்ந்து வரவேண்டுமென்ற 
நேர்த்திக் கடன் ... அதனால்தான் 
மகளிர் பஸ்ஸை விட்டு மகான்களின் 
பஸ்ஸில் ஏறினேன் " என்று சொல்ல நினைத்தாலும் 
ஓட்டுக்குள் தலையை உள் இழுத்துக் கொள்ளும் 
ஆமை போல நாக்கை உள்ளிழுத்து 
உதடுகள் மூடிக் கொள்ளும் .
அடிப் பெண்ணே .. சொல்லடி படுவதும் 
அடங்கிப் போவதும் உனக்குப் புதிதா என்ன ?
"எந்தப் பொம்பளை இந்தக் காலத்தில் 
அடங்கி ஒடுங்கி இருக்கிறா ? எல்லாம் தறி கெட்டு 
ஓடுதுக !" என்று 
சக பயணிகளுக்குள் ஏதோ ஒரு சம்பாஷணை 
காதில் விழும்போது சிரிப்பு வருகிறது ... அய்யா 
உன் வீட்டுப் பொம்பளைகளை வச்சு எல்லா வீட்டுப் 
பொம்பளைகளையும் எடை போடாதேன்னு 
சொல்லவா முடியும் ?
பஸ்ஸில் ஏறுவது ஒரு சாதனை !
இறங்குவதற்குள் எத்தனை எத்தனை வேதனை ?
"தங்க மங்கை " போல தாவி நான் ஓடி 
அலுவலக வாசலை அடையும்போது 
"என்னம்மா .. எழும்பினது லேட்டா ... இல்லே 
உங்க வீட்டுக்காரர் டிபன் பண்ணிக் குடுத்தது லேட்டா ?"
என்று கிண்டலாய் வரவேற்க்கும் அலுவலக அதிகாரி 
அலுவலக அல்லலுக்கு இது ஒரு 
பிள்ளையார் சுழி .. அவ்வளவுதான்..
வீடு ... பஸ் .. ஆபீஸ் .. இதைத் தவிர 
வேறு எதையுமே பார்க்கவில்லையே நான் என்று 
அவ்வப்போது நினைத்துப் பார்க்கும் மனசை 
"உனக்கும் கீழே உள்ளவர் கோடி 
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு " 
தட்டிக் கொடுத்தே தூங்க வைத்து விட்ட நான் ...
சில சமயம் நான் சிரிக்கிறேன் .. என்னை நினைத்தே !!
"மாதராய்ப் பிறப்பதற்கே நல்ல 
மாதவம் புரிந்திட வேண்டுமம்மா !" -
பக்கத்து டீக்கடை ரேடியோவில் 
பாரதியின் பாட்டு !
பிரச்சினைகள் வாழ்க்கையில் உண்டு !
பிரச்சினைகளையே வாழ்வாய்க் கொண்டோருமுண்டு ! 
ஏன் பிறந்தோம் என்று என்னை நானே 
நொந்து கொண்டிருக்க  
அய்யா .. பாரதி ... அடப் பாவி மனுஷா 
முண்டாசுக் கவியே ....
எந்தப் பெண்ணைப் பார்த்த பிறகு நீ பாடினாய் 
மாதராய்ப் பிறப்பதற்கே நல்ல 
மாதவம் புரிந்திட வேண்டுமம்மா என்று !